S. Ramakrishnan's Blog, page 62
May 21, 2023
குற்ற நாடகங்களின் நாயகன்
ஹாலிவுட் இயக்குநரான மார்ட்டின் ஸ்கோர்செசி தனது எண்பதாவது வயதில் Killers of the Flower Moon என்ற படத்தை இயக்கியுள்ளார். இரண்டு நாட்களுக்கு முன்பு கேன்ஸ் திரைப்படவிழாவில் இப்படம் திரையிடப்பட்டு மிகுந்த வரவேற்பு பெற்றுள்ளது.

மூன்றரை மணி நேரம் ஓடும் இந்தத் திரைப்படத்தை ஆப்பிள் டிவி தயாரித்துள்ளது. ஸ்கோர்செசியை விட ஒரு வயது குறைந்த ராபர்ட் டி நீரோ இதில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். லியோனார்டோ டிகாப்ரியோ, லில்லி கிளாட்ஸ்டோன் உள்ளிட்ட நட்சத்திரப் பட்டாளமே படத்தில் பணியாற்றியிருக்கிறார்கள்.
நியூயார்க் பல்கலைக கழகத்தின் திரைப்பள்ளியில் 1964ஆம் வருடம் திரைக்கலை பயின்றவர் ஸ்கோர்செசி. தனது குறும்படங்களின் வழியே கவனத்தைப் பெற்று 1967ல் தனது முதற்படத்தை இயக்கினார். ஐம்பத்தாறு ஆண்டுகள் ஹாலிவுட் சினிமாவில் தொடர்ந்து திரைப்படங்களை இயக்கிவரும் ஸ்கார்செசி இன்றும் அதே தீவிரத்துடன் தனித்துவமான பாணியில் படம் இயக்கியிருப்பது மிகுந்த பாராட்டிற்குரியது.

ஹாலிவுட் சினிமாவில் ஒரு இயக்குநர் இத்தனை ஆண்டுகள் தாக்குப்பிடிப்பது எளிதான விஷயமில்லை. அது ஒரு சந்தை வணிகர்களே அங்கே சினிமாவை நிர்ணயிக்கிறார்கள். ஆகவே கலையும் வணிகமும் இணைந்த திரைப்படத்தை உருவாக்குவது பெரும் சவாலானது. அதில் மார்ட்டின் ஸ்கோர்செசி தொடர்ந்து வெற்றி பெற்றிருக்கிறார். அவர் தேர்வு செய்யும் கதைகளும் அதைப் படமாக்கும் விதமும் வியப்பூட்டுகின்றன.
முதுமையில் பலரும் நினைவு அழிந்த நிலையில் செயலற்று முடங்கிவிடும் போது ஸ்கோர்செசி போன்ற கலைஞர்கள் தனது கலையாற்றலின் உச்சத்தை வெளிப்படுத்துகிறவராக இருக்கிறார்கள்

எது இவர்களை என்றும் இளமையாக வைத்திருக்கிறது. அவர்களின் உறுதியான ஈடுபாடு மற்றும் தொடர்ந்து கற்றுக்கொண்டு தன்னை மேம்படுத்தியபடியும் தனது துறையை மேம்படுத்தியபடியும் இருப்பதும் தான் இதற்கான காரணங்கள். ஸ்கோர்செசி வெறிபிடித்த சினிமா ரசிகர். அவர் பார்க்காத ஹாலிவுட் திரைப்படங்களே இல்லை என்கிறார்கள்.. மௌனப்படங்கள் வரை தேடித்தேடிப் பார்த்திருக்கிறார். திரைத்துறையில் ஏற்பட்ட அத்தனை மாற்றங்களையும் உள்வாங்கிக் கொண்டு வளர்ந்திருக்கிறார். நடிகர்களுடனான அவரது நட்பு மற்றும் உலகசினிமா மீது அவர் கொண்டுள்ள ஈடுபாடு நிகரில்லாதது. திரைக்கலை பயிலுகிற மாணவர்களுக்காக அவர் எடுத்த மாஸ்டர்கிளாஸ் இணையத்தில் காணக்கிடைக்கிறது. அதில் சினிமாவின் இலக்கணம் பற்றிப் பேசும் போது மௌன திரைப்பட யுகத்தில் டி.டபிள்யூ. கிரிஃபித் மற்றும் பேசும்படத்தில் ஆர்சன் வெல்ஸ் இருவருமே நமக்கான ஆசிரியர்கள் என்று சொல்கிறார். இவர்கள் புதிய காட்சிமொழியை உருவாக்கியவர்கள் என்று விவரிக்கிறார். பார்வையாளர்களுக்குச் சில உணர்வுகளைத் துல்லியமாக, தெரிவிக்க எடிட்டிங் புதிய வழியை உருவாக்கியுள்ளது என்பதையும் சுட்டிக்காட்டுகிறார்

Killers of the Flower Moon படத்தின் முன்னோட்டம் சமீபத்தில் வெளியாகியுள்ளது. அதைக் காணும் போது இன்றைய இளம் இயக்குநர்கள் எடுக்கும் படங்களுக்குப் போட்டியாக, அதைவிட நுட்பமாக, சிறப்பாகத் தன்னால் படம் எடுக்க முடியும் என்று ஸ்கோர்செசி காட்டியிருக்கிறார்.
ஹாலிவுட் சினிமா மட்டுமின்றி உலகச் சினிமா சாதனைகளையும் ஆழ்ந்து அவதானித்து அதன் சிறப்புகளைத் தொடர்ந்து பேசியும் எழுதியும் முன்னெடுத்தும் வருபவர் ஸ்கோர்செசி. கறுப்புவெள்ளை யுகத்தின் சிறந்த படங்களை இன்றைய 4K தரத்தில் உருமாற்றி வெளியிடும் போது அந்தப் படங்களின் சிறப்புகளை ஸ்கோர்செசியே விவரிக்கிறார். அவரது சினிமா நினைவுகள் சொல்லித் தீராதவை.
தனக்குப் பிடித்தமான நடிகரான ராபர்ட் டி நீரோவுடன் எத்தனை மாறுபட்ட குற்றநாடகப் படங்களை உருவாக்கியிருக்கிறார் என்பது வியப்பளிக்கிறது.

Killers of the Flower Moon என்ற தலைப்பில் டேவிட் கிரானின் எழுதிய புத்தகத்தை அடிப்படையாகக் கொண்டே இப்படம் உருவாக்கப்பட்டிருக்கிறது இந்தப் படத்திற்கான திரைக்கதையை எரிக் ரோத்துடன் இணைந்து எழுதியிருக்கிறார்.
1920களில் ஓக்லஹோமா பகுதியில் வசித்து வந்த ஓசேஜ் பழங்குடி மக்களின் வாழ்க்கையை மையமாகக் கொண்டது இப்படம். அந்தப் பகுதியில் எண்ணெய் வளங்கள் கண்டறியப்பட்டதால் நிலத்திற்கான உரிமத்தொகையாகக் கோடிக்கணக்கான டாலர்கள் ஓசேஜ் பழங்குடி மக்களுக்கு அளிக்கப்பட்டது. திடீரென அவர்கள் வசதியான ஆடம்பரமான வாழ்க்கையை வாழத் துவங்கினார்கள். இதனால் போட்டி பொறாமை. மற்றும் அதிகார சண்டைகள் உருவாகின. அதைத் தீர்த்து வைக்க அமெரிக்க அரசு புதிய நிர்வாகிகளை நியமித்தது. அவர்கள் ஓசேஜ் பழங்குடி மக்களைப் பாதுகாப்பதாகச் சொல்லி மோசடிகளில் ஈடுபட்டார்கள். ரகசியமான முறையில் ஓசேஜ் பழங்குடி மக்கள் கொல்லப்பட்டார்கள். யார் இவற்றைச் செய்கிறார்கள் என்று கண்டறிய ஏஜென்ட் டாம் வைட் தலைமையில் எஃப்.பி.ஐ விசாரணையில் ஈடுபட்டது பணத்தாசை காரணமாக அறுபதுக்கு மேற்பட்டவர்கள் கொல்லப்பட்ட நிகழ்வை முன்வைத்தே ஸ்கோர்செசி படத்தை உருவாக்கியுள்ளார்.
ஓசேஜ் பழங்குடி இனக் கதாபாத்திரங்களுக்கு ஏற்ற முகங்களைக் கண்டறிந்து நடிக்க வைத்திருக்கிறார்கள். ஓசேஜ் இனத்தின் தலைவரான ஜெஃப்ரி ஸ்டாண்டிங் பியர் படத்தின் ஆலோசகராகப் பணியாற்றியிருக்கிறார். அதே நிலப்பகுதியில் படத்தை எடுத்திருக்கிறார்கள்.
கொலை, துரோகம் மற்றும் பேராசை கொண்ட கதைகளையே ஸ்கோர்செசி தொடர்ந்து இயக்கி வந்திருக்கிறார். இந்த முறை அதில் இனவெறி, பழங்குடி மக்களின் வாழ்க்கை இணைந்து கொண்டிருக்கிறது. ஆகவே அவரது பாணி படமாகவே இப்படமும் உருவாக்கப்பட்டிருக்கும்.
புதிய தொழில்நுட்ப வளர்ச்சியைப் பயன்படுத்தித் தனது கலைத்திறனை முழுமையாக வெளிப்படுத்த முடியும் என்பதை ஸ்கோர்செசி நன்றாக உணர்ந்திருக்கிறார். அவரது துடிப்பான, தொடர்ச்சியான செயல்பாடு நம்மையும் உத்வேகப்படுத்துகிறது. வயதோ தொழில்நுட்ப வளர்ச்சியோ, காலமாற்றமோ எதுவும் தீவிரமாகச் செயல்படும் கலைஞனுக்குப் பொருட்டில்லை என்பதை ஸ்கோர்செசி நிரூபித்திருக்கிறார்.
கேன்ஸ் திரைப்படவிழாவில் படம் பார்த்தவர்கள் மிக மெதுவாகப் படம் நகர்கிறது, ஆனால் அசாத்தியமான உருவாக்கம் என்கிறார்கள். ஒன்றிரண்டு எதிர்மறையான விமர்சனங்களும் வெளியாகியிருக்கின்றன. ஆனால் ஸ்கோர்செசி கேன்ஸ் திரைப்படவிழாவில் கலந்து கொண்டு அளித்த பேட்டியும் அவரது எதிர்காலக் கனவுகளும் நம்மையும் தீவிரமாகச் செயல்படத் தூண்டுகின்றன என்பதே நிஜம்.
May 19, 2023
மறைந்திருக்கும் உண்மைகள்
சமகால ஐரோப்பியத் தத்துவவாதிகளில் முக்கியமானவர் ஸ்லாவாய் ஜிஜெக் (Slavoj Zizek) . லாகானிய உளவியல் பகுப்பாய்வுகள், சமகால வாழ்க்கையை வடிவமைக்கும் சித்தாந்தம், முதலாளித்துவம் மற்றும் கற்பனையின் தர்க்கங்கள் குறித்து ஆராய்ந்து எழுதி வருகிறார் ஜிஜெக். இவரது நகைச்சுவை உணர்வு அபாரமானது.

சினிமாவில் நாம் காணும் காட்சிகளுக்குள் என்னவெல்லாம் ஒளிந்திருக்கின்றன. எது போன்ற பிம்பங்களைச் சினிமா உருவாக்குகிறது என்பதைப் பற்றி இந்த ஆவணப்படத்தில் ஜிஜெக் விவரிக்கிறார். நகைச்சுவை நடிகர்களிடம் காணப்படும் உடல்மொழி போல அவரிடமும் அழகான உடல்மொழி வெளிப்படுகிறது.
படத்தின் துவக்கத்தில் தேவதை கதையில் வருவது போன்ற ஒரு நிகழ்ச்சி ஒன்றை ஜிஜெக் விவரிக்கிறார். அதுவும் ஒரு திரைப்படக்காட்சி தான். ஆனால் தான் சொல்லவந்த விஷயத்திற்குப் பொருத்தமான காட்சி என்பதால் அதிலிருந்து தனது சிந்தனையைத் தொடருகிறார்.
ஒரு மனிதன் கைவிடப்பட்ட பெட்டி ஒன்றில் கறுப்புக் கண்ணாடிகள் நிரம்பியிருப்பதைக் காணுகிறான். அதிலிருந்து ஒரு கண்ணாடியை எடுத்து அணிந்து கொள்கிறான். அந்தக் கண்ணாடி நாம் காணும் தோற்றத்தின் பின்னுள்ள உண்மையை அடையாளம் காட்டுகிறது,, அவன் ஒரு விளம்பரத்தைக் காணுகிறான். ஆனால் அதன் உண்மையான நோக்கம் அடிபணி என்பதாக உணர்ந்து கொள்கிறான். இப்படி உண்மையை உணரச் செய்யும் ஒரு கண்ணாடி போல நாம் காணும் திரைக்காட்சிகளுக்குள் மறைந்திருக்கும் உண்மைகளை ஜிஜெக் அடையாளப்படுத்துகிறார்

2012 ஆம் ஆண்டு வெளிவந்த இந்த ஆவணப்படத்தை இயக்கியிருப்பவர் சோஃபி ஃபியன்னெஸ். தத்துவார்த்த பார்வையை முன்வைக்கும் இந்த ஆவணப்படத்தினைச் சுவாரஸ்யமாக இயக்கியிருக்கிறார். குறிப்பாக எந்தக் காட்சிகளை ஜிஜெக் விமர்சனம் செய்கிறாரோ அது போன்ற ஒரு காட்சியினுள் அவரே பங்குபெறுவது சிறப்பாக உள்ளது. குறிப்பாக டைட்டானிக் பற்றிய விமர்சனத்தின் போது படகிலிருந்தபடியே ஜிஜெக் பேசுவது அழகான காட்சி.
திரைப்படங்களின் பின்னுள்ள உளவியலை, ஆராயும் ஜிஜெக் நாம் எதை நம்புகிறோம். எவ்வாறு அது நம் மனதில் ஆழமாகப் பதிந்து போகிறது என்பதைப் பல்வேறு ஹாலிவுட் படங்களின் மூலம் விவரிக்கிறார். குறிப்பாக டாக்சி டிரைவர். ஜாஸ், டைட்டானிக் போன்ற படங்களை இது போன்ற கோணத்தில் நாம் அறிந்திருந்திருக்கவில்லை.
சித்தாந்தங்கள் மீது ஏன் நமக்கு ஒவ்வாமை இருக்கிறது என்பதை விளக்கும் ஜிஜெக் சித்தாந்தங்கள் ஏன் தேவைப்படுகின்றன என்பதை கவனப்படுத்துகிறார். சினிமாவின் வழியே எது போன்ற சிந்தனைகள் முன்வைக்கப்படுகின்றன என ஆராயும் ஜிஜெக் அமெரிக்கச் சினிமா உலகம் முழுவதும் உருவாக்கிய தாக்கத்தைத் துல்லியமாகச் சுட்டிக்காட்டுகிறார்.
தி சவுண்ட் ஆஃப் மியூசிக் திரைப்படத்தினை ஆராயும் ஜிஜெக் அதில் ஆசைகளைப் பற்றிய வரையறை எவ்வாறு வழங்கப்படுகிறது என்பதைக் குறிப்பிடுகிறார்.

இயக்குநர் ஜான் போர்டின் The Searchers திரைப்படமும் டாக்சி டிரைவர் படமும் ஒரே கதைக்கருவைக் கொண்டது என எடுத்துக்காட்டி விளக்குவதும் இரண்டின் மைய சரடுகளையும் ஆராய்வதும் சிறப்பாக உள்ளது.
பொழுதுபோக்கு சினிமாவின் வழியே எவ்வாறு அரசியல் கருத்துகள். கலாச்சார பிம்பங்கள் உருவாக்கப்படுகின்றன. நுகர்வு கலாச்சாரத்தை எப்படிச் சினிமா தீர்மானிக்கிறது. வழிநடத்துகிறது என்பதை அறிந்து கொள்ள ஜிஜெக் வழிகாட்டுகிறார்.
May 16, 2023
அலைந்து திரிபவனின் உலகம்
ஹெர்மன் ஹெஸ்ஸே தனது இலக்கில்லாத நடைபயணங்களைப் பற்றி ஒரு புத்தகம் எழுதியிருக்கிறார். Wandering என்ற அந்தப் புத்தகத்தில் அவரது கவிதைகளும் கோட்டோவியங்களும் இடம்பெற்றுள்ளன. இயற்கையைப் பற்றிய அவரது புரிதலும் நெருக்கமும் வியப்பூட்டுகின்றன.

13 சின்னஞ்சிறிய கட்டுரைகள். ஒரு பதிவில் நாடோடி விவசாயிக்கு முற்பட்டவன். அவன் எதையும் தனக்கெனச் சொந்தம் கொண்டாடுவதில்லை. அவன் பாதையின் பாடலைக் கேட்டபடி நடந்து கொண்டிருக்கிறான். தானும் அவ்விதமான நாடோடியே என்கிறார் ஹெஸ்ஸே. அதே நேரம் நாடோடி சிற்றின்பத்தில், நாட்டம் கொண்டவன். எவரையும் பொய் சொல்லி எளிதாக நம்பவைத்து விடுபவன் என்றும் குறிப்பிடுகிறார்
அவரது தாத்தா கேரளாவில் மதப்பிரசங்கம் செய்தவர். மலையாள அகராதி உருவாக்கத்தில் பணியாற்றியிருக்கிறார். ஹெஸ்ஸேயின் தந்தையும் தாயும் இந்தியாவை நன்கு அறிந்தவர்கள். அவரது வீட்டு நூலகத்தில் நிறையச் சமஸ்கிருத நூல்கள் இருந்தன.

அவருக்குப் பௌத்தம் தொடர்பான நாட்டம் உருவான போது தனது நண்பருடன் இந்தியாவை நோக்கிய பயணம் ஒன்றைத் துவங்கினார். அந்தப் பயணத்தில் ஜாவா சுமத்ரா சென்றுவிட்டு இலங்கையில் சில நாட்கள் தங்கியிருக்கிறார். நிறையப் பௌத்த விகாரைகளைக் கண்டிருக்கிறார். உடல் நலக்குறைவு காரணமாக இந்தியா வரவில்லை. ஆனால் இந்தியாவை மையமாகக் கொண்டு சித்தார்த்தா என்ற நாவலை எழுதினார். அதில் வரும் காட்சிகள் இலங்கையில் அவர் கண்டதன் மறு உருவாக்கமாகும்.
இந்தியாவை நோக்கிய அவரது பயணத்திற்கு முன்பு அவரது குடும்ப வாழ்வில் பிரச்சனைகள் ஏற்பட்டன. தனது மனைவியை விவாகரத்துச் செய்திருந்தார். ஹெஸ்ஸேயால் வீட்டுப் பொறுப்புகளைக் கடைப்பிடிக்க முடியவில்லை ஆகவே கொதிப்பான தனது மனநிலையை ஆற்றுப்படுத்த வேண்டியே இந்தப் பயணத்தை மேற்கொண்டார்.

wandering தொகுப்பிலுள்ள ஹெஸ்ஸேயின் ஓவியங்கள் அவரது வேலைத்திறமையைக் காட்டுகின்றன. தெற்கு ஜெர்மனிக்கும் வடக்கு இத்தாலிக்கும் இடையே ஏற்பட்ட நடைப்பயணத்தின் எண்ணங்களை விவரிக்கின்றன –

அலைந்து திரிவது என்பது ஒரு வகைச் சுதந்திரம், நாட்டம். அது தன்னிலையின் ஆழமான வெளிப்பாடு , நிலையான மற்றும் தீவிரமான சமூக வாழ்க்கைக்கு எதிராகப் போராடுவதாகும் என்று ஹெஸ்ஸே காட்டுகிறார்.
இன்னொரு கட்டுரையில் அழகான கிராமப்புறமும் அதன் சாலைகள் ஏற்படுத்தும் உணர்வுகளும் கவித்துவமாகச் சித்தரிக்கப்படுகின்றன.
போரின் விளைவுகள் பற்றிய பிரதிபலிப்புகள் பாலம் என்ற அத்தியாயத்தில் வெளிப்படுத்துகிறார். அதே பாலத்தைப் போர்க்காலத்தில் கடந்த நினைவையும் இன்றுள்ள அதன் அமைதியினையும் விவரிக்கிறார்
மரங்கள் பற்றிய அத்தியாயம் மிகச்சிறப்பானது. அதில் மரம் துறவியைப் போன்றது என்கிறார். மரம் வெட்டப்படும் போது அதன் அடிவட்டில் காலம் வரைந்த கோடுகள் இருப்பதை உணர்த்துகிறார்.
மழையையும் மடாலயத்துறவினையும் தனிமை இரவுகளையும் தனது கவித்துவமான மொழியில் வெளிப்படுத்தியிருக்கிறார் ஹெஸ்ஸே. கவிதை, ஓவியம் சிறிய கட்டுரைகள் என மூன்று இணைந்த அழகான தொகுப்பாக உள்ளது.

பாஷோ துவங்கி முக்கியமான ஜென் கவிஞர்கள் இப்படி நீண்ட பயணத்தை மேற்கொண்டிருக்கிறார்கள். அவர்கள் பயணத்திற்கும் ஹெஸ்ஸேயின் பயணத்திற்குமான வேறுபாடாக நான் காணுவது அவர் இயற்கையை உணரும் விதமே. ஜென் கவிகள் இயற்கையை பிரித்துப் பார்ப்பதில்லை. தனித்து பெயர் சுட்டி புல், மரம் நிலவு குளம் என்று சொன்னாலும் உணர்வுரீதியாக ஒன்றாகவே நினைக்கிறார்கள். தண்ணீரில் உப்பு கரைந்து போய்விடுவதைப் போல இயற்கையோடு கரைந்துவிடுகிறார்கள். அதனால் தான் ஒரு நத்தை ஊர்ந்து செல்லும் சப்தம் கூட அவர்களுக்குக் கேட்கிறது. ஹெஸ்ஸே இயற்கையை விடுபடலின் புகலிடமாக நினைக்கிறார். பரபரப்பான நகர வாழ்க்கை மற்றும் பொருளாதார நெருக்கடிகளை விலக்கி தேவைகள் இல்லாத ஒருவனாக அலைய முற்படுகிறவனுக்கு இயற்கை அடைக்கலம் தருகிறது என நம்புகிறார். இயற்கையை பற்றிய அவரது பார்வையில் தான் வேறு என்ற நிலை துல்லியமாக வெளிப்படுகிறது.
சென்ற நூற்றாண்டில் கவிஞர்கள் ஒன்று கூடி நீண்ட தூரம் நடந்திருக்கிறார்கள். இரவு நடையை மேற்கொண்டிருக்கிறார்கள். கவிஞர் வேர்ட்ஸ்வொர்த் தனது நண்பர்களுடன் நடந்த சாலைகளை இடங்களைப் பதிவு செய்திருக்கிறார். பிரான்சின் புகழ்பெற்ற இலக்கியவாதிகள் அனைவரும் நடைப்பிரியர்களே.

இந்த நூலில் ஹெஸ்ஸே தனியே நடக்கிறார். கிறிஸ்துவ மடாலயத்தின் ஜன்னல் வழியே யாரோ தன்னை காணுகிறார்கள் என்று சொல்கிறார். பறவைகளும் மரங்களும் அவரை வசீகரிக்கின்றன. ஜென் கவிகளின் பயணத்தை வாசிக்கும் போது நாம் தண்ணீர் செல்வது போல அவர்கள் நடந்து போவதை உணருகிறோம். அந்த மௌனம். நிதானம். லயப்பு தனித்துவமானது. ஹெஸ்ஸேயிடம் இருபது வயது இளைஞனின் மனதே பிரதானமாக வெளிப்படுகிறது.
பயண வழியில் காணும் வீடு எதையெல்லாம் நினைவுபடுத்துகிறது என யோசிக்கும் ஹெஸ்ஸே ஒரு வீட்டிடமிருந்து எப்படி விடைபெறுவது என்று கேட்கிறார். அது கவிஞனின் பார்வை
கோட்டோவியங்கள் போல அழுத்தமாக, துல்லியமாக தனது பதிவுகளை செய்திருக்கிறார் ஹெஸ்ஸே
May 14, 2023
இவான் துர்கனேவின் மகள்
ரஷ்ய எழுத்தாளர் இவான் துர்கனேவ் தனது வாழ்நாளில் திருமணம் செய்து கொள்ளவில்லை. ஆனால் மூன்று குழந்தைகளின் தந்தையாக இருந்தார். இவர்கள் அவரது திருமணமற்ற காதல் உறவில் பிறந்தவர்கள். இதில் பெலகோயா எனப்படும் பாலினெட் அவரால் மகளாக ஏற்றுக் கொள்ளப்பட்டு அங்கீகரிக்கப்பட்டாள். மற்ற இரண்டு பிள்ளைகளையும் தனது வாரிசுகள் என்று டயரியில் குறிப்பிட்டிருக்கிறார். ஆனால் வெளிப்படையாக அறிவிக்கப்படவில்லை.

இவான் துர்கனேவ் அதிகம் காதலையும் சாகசங்களையும் எழுதியவர். வேட்டையில் கொண்டிருந்த ஆர்வத்திற்கு இணையாகக் காதலில் ஈடுபட்டவர். அவரை விட வயதில் அதிகமுள்ள பெண்களைக் காதலித்திருக்கிறார். விரும்பிய பெண்ணை அடைய முடியாது என்று அறிந்த போதும் அவளுக்காகவே கடைசிவரை வாழ்ந்திருக்கிறார். உண்மையில் அவரது அம்மாவிடமிருந்து பெறமுடியாத அன்பை வேறு பெண்களிடம் தேடியிருக்கிறார். கடைசி வரை அந்த அன்பு கிடைக்கவேயில்லை.
துர்கனேவின் கதைகள் துல்லியமான கோட்டுச்சித்திரங்கள் போன்றவை. குறிப்பாகக் கதாபாத்திரங்களின் மனவோட்டத்தை, புறச்சூழலை மிகத்துல்லியமாகச் சித்தரிக்கக்கூடியவர். படித்த, சுதந்திர எண்ணம் கொண்ட அன்றைய ரஷ்ய இளைஞர்களை அவரே தனது கதைகளில் சித்தரித்தார்.
முதற்காதல் அவரது மிகச்சிறந்த குறுநாவல். இதில் விவரிக்கபடுவது அவரது சொந்த வாழ்வில் நடந்த நிகழ்வுகளே. கதையை மிகவும் அழகாக எழுதியிருக்கிறார்.
நாற்பது வயதான விளாதிமிர் பெட்ரோவிச் தனது முதற்காதலின் நினைவுகளை விவரிப்பதாகக் கதை துவங்குகிறது
என்னால் கதைசொல்ல முடியாது. அதில் நான் தேர்ந்தவனில்லை. ஆனால் சுருக்கமாக, என் நினைவில் உள்ள அனைத்தையும் எழுதி வந்து உங்களுக்குப் படிக்கிறேன் என்று விளாதிமிர் பெட்ரோவிச் சொல்கிறார்.

தனது காதல் நினைவுகளை நேரில் சொல்வதை விடவும் எழுதுவதையே துர்கனேவ் விரும்புகிறார். கதையில் வரும் விளாதிமிர் பெட்ரோவிச் அவரது புனைவு வடிவமே.
நினைவுகளைச் சொல்வதற்கும் எழுதுவதற்கும் நிறைய வேறுபாடு இருக்கிறது. சொல்லும் போது நினைவின் பின்னுள்ள உணர்ச்சிகளை முழுமையாக வெளிப்படுத்த இயலாது. குறிப்பாகத் தவிப்பை, நிராகரிப்பின் வலியைப் பேச்சால் முழுமையாக விவரித்துவிட முடியாது. எழுதும்போது அதே நினைவுகள் துல்லியமடைவதோடு அந்த நினைவின் மகிழ்ச்சியும் துயரும் அசலாக வெளிப்படுகின்றன. அதிலும் குறிப்பாகக் காதல் நினைவுகள் எழுத்தில் தான் வலிமையடைகின்றன.
எழுத்தாளர்களுக்குத் தனது சொந்தவாழ்க்கையும் அதன் சுகதுக்கங்களும் ஆதாரமான கச்சாப்பொருளாகின்றன. சிலர் அதை மட்டுமே வாழ்நாள் முழுவதும் எழுதுகிறார்கள். பலர் தனது கற்பனையோடு சொந்த அனுபவத்தைச் சிறிது சேர்த்துப் படைக்கிறார்கள். துர்கனேவிடம் இந்த இரண்டு போக்குகளையும் காண முடிகிறது. அவரது புகழ்பெற்ற கதாநாயகன் பஸரோவ் இதற்குச் சிறந்த உதாரணம்.
டால்ஸ்டாய். தஸ்தாயெவ்ஸ்கியை விடவும் இவான் துர்கனேவ் தனது காலத்தில் மிகவும் புகழ்பெற்றிருந்தார். விருந்தில் அவரைச் சுற்றியே இளம்பெண்கள் வட்டமிட்டார்கள். இணைந்து நடனமாடினார்கள். தஸ்தாயெவ்ஸ்கி அப்படி ஒரு விருந்தினைப் பற்றி எழுதியிருக்கிறார். பத்திரிக்கைகள் துர்கனேவைக் கொண்டாடின. அவரது கதைகளுக்கு அதிகமான சன்மானம் வழங்கப்பட்டிருக்கிறது. டால்ஸ்டாயின் மனைவி சோபியாவிற்கு ஒருவகையில் துர்கனேவ் உறவினர். மருத்துவரான சோபியாவின் தந்தையும் துர்கனேவின் தாயும் குடும்ப நண்பர்கள்.
உலகின் சிறந்த காதல்கதைகளில் ஒன்றாகக் கருதப்படும் முதற்காதல் இப்படித்தான் துவங்குகிறது.
அப்போது எனக்கு வயது பதினாறு. இது 1833 கோடையில் நடந்தது. நான் என் பெற்றோருடன் மாஸ்கோவில் இருந்தேன்.

தன்னைக் கவனிக்காத அம்மாவைப் பற்றியும் தனது தந்தையின் தோற்றம் மற்றும் செயல்களைப் பற்றியும் விளாதிமிர் பெட்ரோவிச் கதையில் குறிப்பிடுகிறார். துர்கனேவின் புனைவுலகில் இரண்டு வகையான பெண்கள் சித்தரிக்கபடுகிறார்கள். ஒருவகை அவரது அம்மாவைப் போல வசதியான, அதிகார திமிர் கொண்ட. அகம்பாவமான பெண்கள். ஆண்களை அடக்கி ஆள நினைப்பவர்கள். மற்றவர்கள் அவர் காதலித்த அழகிகளைப் போல வசீகரமானவர்கள். புரிந்து கொள்ள முடியாதவர்கள். வயதில் மூத்தவர்கள். காதலை ஏற்கவும் நிராகரிக்கவும் முடியாதவர்கள்.
முதற்காதல் கதையில் வரும் பதினாறு வயது பையன் புத்தக உலகில் சஞ்சரிக்கிறான். புத்தக வசனங்களை உரக்கச் சொல்கிறான். காதல்கனவுகள் கொண்டிருக்கிறான். தன்னைச் சுற்றிய உலகை ஆச்சரியத்துடன், கற்பனையுடன் எதிர்கொள்கிறான் காரணமில்லாத சோகத்தால் பீடிக்கபட்டிருக்கிறான். குதிரை சவாரியிலும் வேட்டையிலும் நாட்டம் கொண்டிருக்கிறான். இது தான் இளம் துர்கனேவின் உலகம்.
ஒரு நாள் அவனது பக்கத்துவீட்டு ஜன்னலில் புதிதாக ஒரு இளம்பெண்ணின் முகம் தோன்றுகிறது. அந்தப் பெண்ணால் வசீகரிக்கப்படுகிறான். அங்கே ஒரு இளவரசியின் குடும்பம் தங்கியிருப்பதை அறிந்து கொள்கிறான். அந்த இளவரசி ஜாசிகின் வசதி இழந்தவள். அதிகாரத்தை எப்படியாவது பெற வேண்டும் என்று துடிப்பவள். இதற்கான வழிதெரியாதவள். அவளது கணவர் இளவரசர் ஜாசிகின் நீண்டகாலம் பாரிஸில் வசித்தவர். அங்கே பெரும் பணக்காரராக இருந்தார், ஆனால் அவரது சொத்துக்கள் அனைத்தையும் சூதாடி இழந்து போனார். ஆகவே ஜாசிகின் குடும்பம் வறுமையில் வாடியது.
ஒரு நாள் தோட்டத்தில் உலவிக் கொண்டிருக்கும் போது புதிய குரல் கேட்டு விளாதிமிர் பெட்ரோவிச் திரும்புகிறான். அங்கே கோடு போட்ட இளஞ்சிவப்பு நிற உடையில், தலையில் வெள்ளை நிற கர்சீஃப் அணிந்த உயரமான, மெலிந்த உடல்கொண்ட இளம் பெண் நிற்பதைக் காணுகிறான். அவளுடன்; நான்கு இளைஞர்கள் சுற்றி நெருக்கமாக இருக்கிறார்கள், அவள் சிறிய சாம்பல் பூக்களால் அவர்களின் நெற்றியில் அடித்து விளையாடுகிறாள். அந்த நேர்த்தியான விரல்கள் தனது நெற்றியில் பட்டால் போதும் உலகில் உள்ள அனைத்தையும் அந்த இடத்திலேயே அவளுக்குக் கொடுத்துவிடுவேன் என்று மனதிற்குள் நினைத்துக் கொள்கிறான். அந்தப் பெண் ஒரு கணம் அவனைப் பார்த்துச் சிரிக்கிறாள். அவனது ரத்தம் சூடாகிறது.
அவளிடம் எப்படி அறிமுகமாவது என்பதைப் பற்றியே இரவெல்லாம் யோசித்துக் கொண்டிருக்கிறான். காலையில் மீண்டும் ஜன்னல் வழியே பக்கத்துவீட்டினைப் பார்க்கிறான். அவளைக் காணமுடியவில்லை. இதற்கிடையில். இளவரசி ஜாசிகின் அவனது அம்மாவிற்கு ஒரு கடிதம் எழுதுகிறாள். அதில் விளாதிமிர் பெட்ரோவிச் தனது வீட்டிற்கு வரும்படி அழைப்பு விடுக்கிறாள். அம்மாவின் அனுமதியோடு அந்த வீட்டிற்குச் செல்கிறான் விளாதிமிர்
முதல்நாள் தான் பார்த்த பெண் இளவரசியின் மகள் என்பதை அறிந்து கொள்கிறான். விளையாட்டுதனமிக்க அவளால் வசீகரிக்கபடுகிறான். மீதான காதலை வெளிப்படுத்த முடியவில்லை. அவளை விட்டு விலகிப் போகவும் முடியவில்லை. முதற்காதலின் இன்பத்தை, அவஸ்தைகளைத் துல்லியமான சித்தரிப்புடன் துர்கனேவ் எழுதியிருக்கிறார்.
அவள் தன்னுடைய கையில் ஒரு புத்தகம் வைத்திருந்தாள் . அவள் என்னைத் திரும்பிப் பார்த்தாள் , தனது வட்டமான வைக்கோல் தொப்பியின் அகலமான நீல நிற ரிப்பனை பின்னால் தள்ளி , என்னைப் பார்த்து , மெதுவாகச் சிரித்தாள் , மீண்டும் புத்தகத்தின் மீது கண்களைத் திருப்பினாள் . அவளுடன் என்னால் பேச இயலவில்லை . மாலை மற்றும் மறுநாள் முழுவதும் நான் ஒருவித மனச்சோர்வடைந்து தனிமையில் கழித்தேன் . என்னால் எதையும் வாசிக்க முடியவில்லை . பாடப்புத்தகத்தின் வரிகளும் பக்கங்களும் வெறுமனே என் கண்களுக்கு முன்னால் புரண்டு சென்றன . ஆத்திரத்துடன் புத்தகத்தை வீசி எறிந்தேன் .
இதை வாசிக்கும் போது காட்சிகள் திரையில் காணுவது போல நம் கண்முன்னே தோன்றிமறைகின்றன. இந்த நுட்பமான விவரிப்பும் உணர்ச்சி வெளிப்பாடும் தான் துர்கனேவினை இன்றும் நிகரற்ற படைப்பாளியாகக் கொண்டாடச் செய்கிறது
இக் கதையில் வரும் தந்தை இளம்பெண்ணால் ஈர்க்கப்படுகிறார். காதலிப்பதில் மகனுடன் போட்டியிடுகிறார் அந்தத் தந்தையின் தோற்றம் இயல்புகளை விளாதிமிர் வெறுக்கிறான். இந்தக் காட்சிகள் துர்கனேவ் வாழ்வில் உண்மையாக நடந்தேறியவை.

மத்திய ரஷ்ய மாகாணமான ஓரியோலில் ஸ்பாஸ்கோய்-லுடோவினோவோ என்ற மிகப்பெரிய பண்ணையைக் கொண்ட பிரபுவின் குடும்பத்தில் பிறந்தவர் இவான் துர்கனேவ். அவரது அம்மா வர்வாரா பெட்ரோவ்னா ஆடம்பரமான வாழ்க்கையை விரும்பியவள். அவளது உடைகள் மற்றும் அலங்காரத்திற்காக நிறையச் செலவு செய்தவள். அடிக்கடி உடைகள் வாங்குவதற்காகவே மாஸ்கோ சென்றுவரக் கூடியவள்.
அவர்களுக்குச் சொந்தமாக முப்பதாயிரம் ஏக்கர் நிலமும் 11 கிராமங்களும் இருந்தன. அந்தக் கிராமத்திலுள்ள வயல்கள் மட்டுமின்றி அங்கே பாடும் பறவைகளும் கூடத் தனக்குச் சொந்தமானவை என்று வர்வாரா குறிப்பிடுகிறாள்.
தன்னைவிட வயதில் குறைந்த. உறவினரான குதிரைப்படை அதிகாரி செர்ஜி நிகோலாவிச்சை மணந்து கொண்டாள். அவர்களிடம் 5000 பண்ணை அடிமைகள் வேலை செய்தார்கள். ஆறு குதிரைகள் கொண்ட கோச் வண்டிகள் இருந்தன. தனக்கெனச் சொந்தமாக ஒரு இசைக்குழுவை வைத்திருந்தாள். அதில் சிறந்த இசைக்கலைஞர்கள் இருந்தார்கள். இது போலவே மருத்துவர் , நாடக நடிகர்கள் மற்றும் தனி ஆசிரியர்களையும் வேலைக்கு வைத்திருந்தாள். அவளது தாத்தா காலத்தில் கட்டப்பட்ட சிறிய தேவாலயம் ஒன்றும் அந்தப் பண்ணையினுள் இருந்தது.
வர்வாரா பெட்ரோவ்னாவின் இரண்டாவது மகனாகப் பிறந்தவர் துர்கனேவ். வர்வாராவை விடவும் அவளது கணவன் செர்ஜி துர்கனேவ் வசதி குறைந்தவர். ஆகவே அவளது அதிகாரத்தை மீறித் தனித்துச் செயல்பட முடியவில்லை

துர்கனேவ் என்ன படிக்க வேண்டும் எங்கே படிக்க வேண்டும் என்பதில் வர்வாரா மிகவும் கண்டிப்புடன் இருந்தார். ஆரம்பக் கல்விக்காக மாஸ்கோ தனியார் உறைவிடப் பள்ளிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அவர்களது வீட்டில் பிரெஞ்சு மற்றும் ஜெர்மன் மொழியில் பேசுவது மட்டுமே அனுமதிக்கப்பட்டிருந்தது. ஜெர்மன் சென்று உயர்படிப்பு படித்த இவான் துர்கனேவ் தன்னை ஒரு ஐரோப்பியக் கனவான் போலவே உணர்ந்தார் வாழ்நாள் முழுவதும் அப்படியே நடந்து கொண்டார்.
அம்மாவின் கட்டுப்பாட்டில், ஆதிக்கத்தில் வளர்ந்தவர் என்பதால் அவரது கதையில் வரும் கதாநாயகிகளும் ஆதிக்கம் செலுத்துபவர்களாகவே சித்தரிக்கப்பட்டார்கள்.
ஐரோப்பாவிற்குச் சென்று கல்வி பெற்றவர் என்பதால் அவரது கண்ணோட்டத்திலும் செயல்களிலும் மேற்குலகின் பாதிப்பு அதிகமிருந்தது. பைரனின் கவிதைகளால் வசீகரிக்கப்பட்டு கவிதை நாடகம் எழுதுவதில் ஆசை கொண்டிருந்தார். பெலின்ஸ்கி மற்றும் லெர்மன்தேவ் படைப்புகள் மீது கொண்ட ஈடுபாடு அவரைப் புனைவெழுத்தை நோக்கித் திருப்பியது
1841 ஆம் ஆண்டில் தனது பண்ணைக்குத் திரும்பிய போது துர்கனேவின் வயது 20. அந்தப் பண்ணையில் தையல்காரியாக இருந்த இளம்பெண் துன்யாஷா எனும் அவ்தோயா மீது காதல் கொண்டார். அவளுடன் நெருங்கிப் பழகினார். இதனால் துன்யாஷா கர்ப்பமானாள். அவளையே திருமணம் செய்து கொள்ள விரும்பினார். ஆனால் அவரது அம்மா வர்வாரா பெட்ரோவ்னா இதனை ஏற்கவில்லை.

துர்கனேவை பண்ணையிலிருந்து பீட்டர்ஸ்பெர்க்கிற்கு அனுப்பி வைத்ததோடு துன்யாஷாவை உடனடியாகத் தனது ஸ்பாஸ்கோய் பண்ணையிலிருந்து வெளியேற்றி மாஸ்கோவிற்கு அனுப்பி வைத்தார். அங்கே துன்யாஷாவின் மகள் பெலகோயா ஏப்ரல் 26, 1842 இல் பிறந்தார். அதன்பிறகு துன்யாஷாவுக்கு வேறு ஒருவருடன் திருமணம் செய்து வைக்கப்பட்டது.
வர்வாரா பெட்ரோவ்னா அனுமதியின்றி அவளது பண்ணை அடிமைகள் யாரும் திருமணம் செய்து கொள்ள முடியாது: பலரும் அவளது அனுமதி பெற்றே திருமணம் செய்து கொண்டார்கள். பிள்ளை பெற்றுக் கொள்வதற்கும் அவளது அனுமதி அவசியம். அப்படி அனுமதி கேட்காமல் பெற்ற பெண்களைத் தனது பண்ணையிலிருந்து துரத்திவிடுவதே அவளது வழக்கம்.
அம்மாவை எதிர்த்து எதுவும் செய்யமுடியாத துர்கனேவ் தனது மகளை நேரில் சென்று காணவேயில்லை. பெலகோயாவிற்கு எட்டுவயதாகும் போது துர்கனேவ் அவளைக் காணச் சென்றார். தனது மகளாக அவளை ஏற்றுக் கொண்டு தன்னோடு பாரீஸ் அழைத்துச் சென்றார்
அங்கே தனது காதலியும் புகழ்பெற்ற பாடகியுமான பாலின் வியர்டோட்டின் வீட்டில் அவளது குழந்தைகளுடன் இணைந்து வளரும்படி செய்தார்
பிரெஞ்சு பண்பாட்டில் வளர்ந்த பெலகோயா எனும் பாலினெட்டிற்குச் சொந்த மொழி மறந்து போனது. அவள் பிரெஞ்சு பெண்ணாகவே வளர்ந்தாள். அவளுக்கும் பாலின் குடும்பத்திற்கும் இடையில் மோதல் ஏற்படவே அவளை உறைவிடப்பள்ளி ஒன்றில் சிலகாலம் தங்கிப் படிக்க வைத்தார். பாலினெட்டிற்குப் பதினாறு வயதாகும் போது தன்னுடன் அழைத்துத் தங்க வைத்துக் கொண்டார்.
அவளது 17வது வயதில் திருமணத்தை நடத்தி வைத்தார். இளம் தொழில்முனைவோரான காஸ்டன் ப்ரூவரை அவள் திருமணம் செய்து கொண்டாள். துர்கனேவ் அவளுக்காக நிறைய வரதட்சணையும் கொடுத்திருக்கிறார். சுவிட்சர்லாந்தில் வசித்த அவளது வாழ்க்கை நெருக்கடிகள் பற்றித் துர்கனேவ் தனது ஒரு கடிதத்தில் குறிப்பிடுகிறார். கணவருடன் கருத்துவேறுபாடு கொண்டு பிரிந்த பாலினெட் துர்கனேவின் ஆதரவில் வாழ்ந்து வந்தார். தன் தந்தையின் மீதான வெறுப்பையும், வளர்ப்புத் தாயின் மீதான வெறுப்பையும் தன் வாழ்நாள் முழுவதும் பாலினெட் கைவிடவில்லை. 1919ம் ஆண்டுத் தனது 77 வயதில் பாலினெட் இறந்து போனார்

பாடகி பாலின் வியர்டோட் மூலம் துர்கனேவிற்கு ஒரு பெண் மற்றும் ஒரு பையன் பிறந்தார்கள். அந்தக் குழந்தைகளை உலகம் அறிய அவர் அறிவிக்கவில்லை. காரணம் பாலின் வியர்டோட் திருமணமானவள். அவளது கணவன் லூயிஸ் வியர்டோட் நாடக அரங்கின் உரிமையாளர். நடிகர் மற்றும் ஒரு பயண எழுத்தாளர். அவன் துர்கனேவிற்கும் தனது மனைவிக்கும் உள்ள காதல் உறவை நன்கு அறிவான். ஆனாலும் அவன் பாலினை விட்டு விலகிப்போகவில்லை.
பாலின் தனது குழந்தைக்கு யார் தந்தை என்று உறுதியாகச் சொல்ல முடியாது என்றாள். ஆகவே அக் குழந்தைகளுக்குக் காட்பாதராகத் தான் இருக்க விரும்புவதாகத் துர்கனேவ் அறிவித்தார். அப்படியே ஏற்றுக் கொள்ளப்பட்டது. துர்கனேவ் தனது மகன் மற்றும் மகளுக்குத் தனது சொத்தில் பங்கு கொடுத்திருக்கிறார்.
இளமையில் தான் கொண்டிருந்த காதல் மற்றும் அந்தக் காதலிகள் மூலம் பெற்றெடுத்த பிள்ளைகளைப் பற்றிய உண்மைகளைத் துர்கனேவ் மறைக்கவில்லை. ஆனால் அன்றைய சமூகச்சூழல் அவரது குடும்பக் கௌரவம் இதனை வெளிப்படையாக அறிவிக்க முடியாமல் செய்திருக்கிறது.
டால்ஸ்டாயின் தங்கை மரியா துர்கனேவ் மீது காதல் கொண்டிருந்தாள். தனது கணவனை விடுத்து துர்கனேவுடன் சேர்ந்து வாழ விரும்பினாள். இதனை டால்ஸ்டாய் ஏற்கவில்லை. துர்கனேவ் தான் இதற்குக் காரணம் என்று அவர் மீது கோபம் கொண்டிருந்தார்
வேறு ஒரு தருணத்தில் துர்கனேவை சந்தித்த போது அவர் தனது மகளை உலகம் அறிய ஏற்க வேண்டும் என்று வற்புறுத்தினார். டால்ஸ்டாயிற்கும் இது போலக் கள்ள உறவில் பிறந்த பிள்ளைகள் இருந்தார்கள். அவரும் அவர்களை அங்கீகரிக்கவில்லை. ஆனால் துர்கனேவின் மகள் பெலகேயாவை சட்டப்பூர்வமாக ஏற்க வேண்டும் என்று சண்டையிட்டார்.

இதனால் ஆத்திரமான துர்கனேவ் டால்ஸ்டாயை டூயலுக்கு வரும்படி சவால்விட்டார். நேரடியாகத் துப்பாக்கியால் சுட்டுச் சண்டையிடும் இந்தச் சவாலின் மூலம் தனது கௌரவத்தைக் காப்பாற்றிக் கொள்வது அன்றைய வழக்கம், இது போன்ற டூயலில் தான் கவிஞர் புஷ்கின், எழுத்தாளர் லெர்மன்தேவ் இறந்து போனார்கள். துர்கனேவின் சவாலை டால்ஸ்டாய் ஏற்றுக் கொண்ட போதும் இந்தச் சண்டை நடக்கவில்லை. துர்கனேவ் மன்னிப்பு கேட்டு விலகிக் கொண்டார்.
1857 இல் டால்ஸ்டாய் பாரீஸுக்கு வந்த போது அங்குள்ள அருங்காட்சியகங்கள் மற்றும் பொழுதுபோக்கு இடங்களுக்குத் துர்கனேவ் அழைத்துச் சென்றார். பாரீஸ் நகரின் கேளிக்கைகளையும் கலையரங்குகளையும் அறிமுகம் செய்து வைத்தார். ஆனால் ரஷ்யா திரும்பிய டால்ஸ்டாய் துர்கனேவை தொல்லை கொடுப்பவர், திமிர்பிடித்தவர் என்றே எழுதியிருக்கிறார்
ஆரம்பம் முதலே தஸ்தாயெவ்ஸ்கியை துர்கனேவிற்குப் பிடிக்கவில்லை. அது போலவே துர்கனேவ் ருஷ்யாவிற்கு எதிராக எழுதுகிறார் என்ற எண்ணம் தஸ்தாயெவ்ஸ்கிக்கு இருந்தது. ஆகவே பரஸ்பரம் சண்டையிட்டுக் கொண்டார்கள்.
1867 இல் ஒரு நண்பருக்கு எழுதிய கடிதத்தில் தஸ்தாயெவ்ஸ்கி, “இந்தக் கேடுகெட்ட தாராளவாதிகள் ரஷ்யாவைத் துஷ்பிரயோகம் செய்வதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறார்கள்” என்று துர்கனேவைப் பற்றிக் குறிப்பிடுகிறார். அப்போது துர்கனேவ் பிரான்சில் வசித்து வந்தார், அத்தோடு “துர்கனேவ் நீங்கள் ஒரு தொலைநோக்கியை வாங்கிக் கொள்ளுங்கள் இல்லாவிட்டால் உண்மையான ரஷ்யாவைப் பார்க்க முடியாது” எனவும் எழுதியிருக்கிறார். அதே நேரம் துர்கனேவின் “A Nest of Gentlefolk” நாவலை உலகத்தரமான படைப்பு. அசாதாரண சாதனை என்றும் தனது டயரியில் தஸ்தாயெவ்ஸ்கி எழுதியிருக்கிறார்.
துர்கனேவ் “A Sportsman’s Sketches.” எனச் சிறுகதைகளின் தொகுப்பினை 1852ல் வெளியிட்டார். இதில் அரசு எதிர்ப்பு அதிகம் வெளிப்படுவதாகக் கருதிய தணிக்கை துறை அது குறித்து ஜார் மன்னருக்குக் கடிதம் எழுதியது. துர்கனேவை உடனே கைது செய்யும்படி உத்தரவு வந்தது. அதன்படி துர்கனேவ் கைது செய்யப்பட்டு வீட்டுச்சிறையில் அடைக்கப்பட்டார். அத்தோடு தொடர்ந்து பல மாதங்கள் காவல்துறையில் கண்காணிப்பிலும் வைக்கப்பட்டிருந்தார். அவரது பண்ணையிலிருந்து நாற்பது மைல்களுக்கு மேல் செல்ல அவர் அனுமதிக்கப்படவில்லை.

துர்கனேவ் எப்போதும் தனது கோட் பாக்கெட்டில் இரண்டு கடிகாரங்களை வைத்திருப்பார். இரண்டினையும் எடுத்துப் பார்த்துச் சரியான நேரத்தை அறிந்து கொள்ளுவார்.
டால்ஸ்டாய் வீட்டிற்குச் சென்றிருந்த போது அவரது பிள்ளைகளுக்கு ஜூல்ஸ் வெர்னைப் பற்றிய கதைகளைச் சொல்லியிருக்கிறார். அவர்களுடன் இணைந்து நடனமாடியும் உற்சாகப்படுத்தியிருக்கிறார். இதனை டால்ஸ்டாயின் மகள் தனது நினைவுக்குறிப்பில் பதிவு செய்துள்ளார்
வர்வாரா பெட்ரோவ்னா நடத்தும் விருந்துகள் மிகவும் ஆடம்பரமானவை. அதில் கலந்து கொள்ளப் பிரபுக்களும் ராணுவ அதிகாரிகளும் அழைக்கப்படுவது வழக்கம் இந்த விருந்திற்காக மாஸ்கோவிலிருந்து சமையற்காரர்கள் அழைக்கப்படுவார்கள். வர்வாரா வெளியூர் செல்லும் போது ஆறு வண்டிகளில் வேலைக்காரர்கள். சலவை செய்யும் பெண்கள், பட்லர்கள், குமாஸ்தாக்கள், பணிப்பெண்கள் உடன் செல்லுவது வழக்கம்.
பணக்கார குடும்பத்தில் வளரும் பிள்ளைகளின் தனிமை விநோதமானது. துர்கனேவ் அந்தத் தனிமையால் பீடிக்கப்பட்டிருந்தார். பண்ணை அடிமைகளுடன் நெருங்கிப் பழகுவதோ, உரையாடுவதோ கூடாது என்று அம்மாவால் தடுக்கப்பட்டிருந்தார். ஆனாலும் அவர் பண்ணை அடிமைகளின் துயர வாழ்க்கையை மிக நெருக்கமாக உணர்ந்திருந்தார். அவற்றைத் தனது கதைகளில் வெளிப்படுத்தியிருக்கிறார்.
ஜெர்மனியில் பயின்ற துர்கனேவ் தத்துவத்தில் தீவிரமான ஈடுபாடு கொண்டிருந்தார். ஜார் அரசின் உயரதிகாரியாகச் சில காலம் பணியாற்றியிருக்கிறார்
பீட்டர்ஸ்பெர்க்கில் நடந்த ஒபரா இசைநிகழ்ச்சியில் போது பாடகி பாலின் வியர்டோட் குரலால் வசீகரிக்கபட்டு அவள் மீது காதல் கொண்டார். அவளது இசைநிகழ்ச்சி நடக்கும் இடங்களுக்கெல்லாம் சென்றார். அவள் திருமணமானவள். இரண்டு குழந்தைகளின் தாய். தனது கணவனுடன் ரஷ்யா வந்திருக்கிறாள் எனத் துர்கனேவ் அறிந்த போதும் அவள் மீது கொண்ட காதலைக் கைவிடவில்லை.
அவளுடன் நெருங்கிப் பழகுவதற்காகவே பாரீஸ் சென்றார். சில காலம் பாரீஸிலும் பின்பு பாடன்பாடனிலும் வசித்தார். பணக்கார இசை ரசிகரான துர்கனேவை அவள் சரியாகப் பயன்படுத்திக் கொண்டாள். மணவாழ்க்கையில் சலிப்புற்றிருந்த அவளுக்குத் துர்கனேவின் காதல் தேவைப்பட்டது. ஆகவே அவருடன் நெருக்கமாகப் பழகினாள். ஆனால் விவாகரத்து பெற்றுக் கொண்டு அவரைத் திருமணம் செய்ய முன்வரவில்லை.
வியர்டோட் குடும்பத்தில் ஒருவர் போலவே துர்கனேவ் வாழ்ந்தார், அவள் குடியிருந்த வீதியிலே வாடகைக்கு வீடு எடுத்துத் தங்கிக் கொண்டார். லூயிஸ் வியர்டோட் தனது மனைவியின் காதல் உறவில் தலையிடவில்லை. பாலின் தனது வீட்டில் நடைபெறும் விருந்தில் இவர் எங்கள் ரஷ்ய நண்பர் துர்கனேவை அறிமுகம் செய்வது வழக்கம்
“என்னால் உன்னிடமிருந்து விலகி வாழ முடியாது, உனது நெருக்கத்தை நான் எப்போதும் உணர வேண்டும், வாழ்நாள் முழுவதும் அதை அனுபவிக்க வேண்டும். என்று அவர் பாலினுக்குக் கடிதம் எழுதியிருக்கிறார்.
பாலின் மீது கொண்ட தீவிரக்காதல் அவரது வாழ்வைப் புரட்டிப் போட்டது. முப்பது ஆண்டுகள் அவளுக்கு அருகிலே வசித்து வந்தார். ஆனால் கடைசி வரை அவள் துர்கனேவைத் திருமணம் செய்து கொள்ளவில்லை.

பாலின் வியர்டோட் விருப்பத்திற்கு ஏற்ப பெரிய மாளிகை ஒன்றை அவளுக்காகக் கட்டிக் கொடுத்திருக்கிறார். அவளது பிள்ளைகளுக்கு நிறையப் பணம் செலவு செய்திருக்கிறார். அவளது ஆலோசனையின் பெயரில் தனது குடும்பச் சொத்துகளைப் பிரித்துத் தரும்படி சகோதரனுடன் வழக்கு தொடுத்தார் துர்கனேவ். அவருக்குக் கிடைத்த பெரும்பங்கை தனக்கு எழுதித் தரும்படி மாற்றிக் கொண்டாள் பாலின். துர்கனேவ் மறைவிற்குப் பின்பு இந்த உரிமை குறித்து வழக்குத் தொடரப்பட்டது.
பாலின் அவரை ஏமாற்றிவிட்டாள் என்று ஒருமுறை கூடத் துர்கனேவ் நினைக்கவுமில்லை. எழுதவுமில்லை. இந்தக் காதலுறவினை துண்டித்துக் கொண்டு ரஷ்யா திரும்பி வாருங்கள் என்று நண்பர்கள் அழைத்த போதும் துர்கனேவ் வரவில்லை.
இந்தக் காதலை எப்படிப் புரிந்து கொள்வது என உலகிற்குத் தெரியவில்லை. அதை உலகிற்கு விளக்க வேண்டிய அவசியம் தனக்கில்லை என்று துர்கனேவ் உறுதியாக இருந்தார்.
பாலின் வியர்டோட் வேறு ஆண்களுடன் நெருங்கி பழகினாள். அது போலவே துர்கனேவ் மரியா என்ற நாடக நடிகையுடன் நெருக்கமாகப் பழகினார். ஆனாலும் அவருக்குப் பாலின் மீது கொண்டிருந்த காதல் குறையவில்லை.

ஜார்ஜ் சாண்ட், குஸ்தாவ் ஃப்ளாபெர்ட், மாப்பசான் , எமிலி ஜோலா, அல்போன்ஸ் டாடெட் மற்றும் ஹென்றி ஜேம்ஸ் என அன்று புகழ்பெற்றிருந்த எழுத்தாளர்கள் பலருடன் துர்கனேவ் நெருங்கிப் பழகியிருக்கிறார். 1878 இல் பாரிஸில் நடைபெற்ற சர்வதேச இலக்கிய மாநாட்டில் துணைத் தலைவராக நியமிக்கப்பட்டார். 1879 ஆம் ஆண்டில், ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் கௌரவ டாக்டர் பட்டம் வழங்கி அவரைச் சிறப்பித்தது
துர்கனேவின் பிற்காலப் படைப்புகள் அவர் எதிர்பார்த்த கவனத்தைப் பெறவில்லை. இதனால் மிகுந்த மனவருத்தம் அடைந்தார். தனது பழைய நண்பர்களை விட்டுபிரிந்தது தவறு என உணர்ந்து மீண்டும் அவர்களுடன் தொடர்பு கொண்டார். இறந்து போன தனது சகோதரனுக்காக வருந்தினார். அவரது கடைசி நாட்கள் வேதனையும் துயரநினைவுகளுமாக கழிந்தன.

செப்டம்பர் 3, 1883 இல், துர்கனேவ் முதுகுத் தண்டு புற்றுநோயால் பாதிக்கப்பட்டு இறந்தார். அவரது உடலை ரஷ்யா எடுத்துச் செல்வதா வேண்டாமா என்ற குழப்பம் ஏற்பட்டது.. பாலின் குடும்பத்தினர் துர்கனேவ் வசித்த பாடன்பாடனிலே அடக்கம் செய்ய வேண்டும் என்றார்கள். அது துர்கனேவ் குடும்பம் ஏற்கவில்லை. பாரீஸில் உள்ள ரஷ்யத் தேவாலயத்தில் துர்கனேவின் இறுதிச் சடங்கு நடைபெற்றது அதில் முக்கிய எழுத்தாளர்கள் கலைஞர்கள் என ஐநூறு பேர் கலந்து கொண்டார்கள். பின்பு அவரது உடல் ரயில் மூலம் செயின்ட் பீட்டர்ஸ்பெர்க்கிற்குக் கொண்டு செல்லப்பட்டது. அங்கே தேசிய மரியாதையுடன் வோல்கோவ்ஸ்கி கல்லறைத் தோட்டத்தில் அடக்கம் செய்யப்பட்டார்.
ஒரு மென்மையான நபர் ஒரு போதும் பழிவாங்குதலை நாடுவதில்லை; தீயவற்றுடன் சமரசம் செய்து கொள்ளவோ அல்லது தனது ஆன்மாவில் எந்தத் தார்மீக விட்டுக்கொடுப்பும் செய்யவோ முடியாமல் தனது வழியில் செல்கிறார். அவரது துயரங்கள் எளிதாக விவரிக்க முடியாதவை, ஆனால் இறுதியில் நீங்கள் அவற்றை உணர்ந்து கொள்வீர்கள், அவருடன் துன்பப்படுவீர்கள் என்று தஸ்தாயெவ்ஸ்கி தனது நாட்குறிப்பு ஒன்றில் எழுதியிருக்கிறார். இதுவே துர்கனேவ் பற்றிய சரியான மதிப்பீடாகும்.
••
உதவிய நூல்கள்
Turgenev: A Biography by Henri Troyat
Turgenev : His Life and Times- Leonard Schapiro
Turgenev: A Life – David Magarshack- 1954.
May 13, 2023
அரிய புகைப்படம்
தெலுங்கு எழுத்தாளர் புச்சிபாபு பற்றிய புகைப்படத்தொகுப்பில்1947ல் அவர் ஏற்பாடு செய்த இந்திய சுதந்திர தினக் கொண்டாட்ட நிகழ்வின் போது எடுக்கபட்ட ஒரு புகைப்படத்தைப் பார்த்தேன்.
அன்றைய புகழ்பெற்ற திரைநட்சத்திரங்களின் அரிய புகைப்படம்.
ரேடியோ நிலையத்தில் எடுக்கபட்டது போலிருக்கிறது
எவ்வளவு அழகான முகங்கள். எத்தனை விதமான பார்வைகள். எழுதப்படாத கதைகள் இதற்குள் ஒளிந்திருக்கின்றன.

May 10, 2023
ரஷ்ய நாவலின் உதயம்
பியோதர் தஸ்தாயெவ்ஸ்கி, லியோ டால்ஸ்டாய், இவான் துர்கனேவ் ஆகிய மூவரின் முக்கிய நாவல்களும் ரஷ்யன் ஹெரால்ட் பத்திரிக்கையில் தொடராக வெளிவந்திருக்கின்றன. இந்த நாவல்களை வெளியிடுவதற்குத் தேர்வு செய்ததோடு அவற்றை எடிட் செய்து வெளியிட்டு இலக்கிய அந்தஸ்து பெற்றுத் தந்தவர் ரஷ்யன் ஹெரால்ட் பத்திரிக்கையின் ஆசிரியர் மிகைல் நிகிஃபோரோவிச் கட்கோவ்

இவரது உறுதுணையில் தான் மூன்று படைப்பாளிகளும் தங்களுக்கான இலக்கிய இடத்தை உருவாக்கிக் கொண்டார்கள்.
கட்கோவோடு இவர்களுக்கு இருந்த நெருக்கம் மற்றும் மோதல்கள் பற்றி SUSANNE FUSSO எழுதிய EDITING TURGENEV, DOSTOEVSKY, AND TOLSTOY புத்தகம் விரிவாகப் பதிவு செய்துள்ளது.
ரஷ்யன் ஹெரால்ட் அல்லது ரஷ்யன் மெசஞ்சர் என அழைக்கப்படும் மாத இதழ் 1856ல் துவங்கப்பட்டது. ரஷ்யாவின் சமகால அரசியல் பொருளாதார, பண்பாட்டுப் பிரச்சனைகள் குறித்த கட்டுரைகள் மற்றும் விரிவான வாதங்களை முன்னெடுத்த இந்த இதழ் தொடர்ந்து இலக்கியத்தரமான நாவல்களைத் தொடராக வெளியிட்டு வந்தது.

இதன் காரணமாக ரஷ்யா முழுவதும் பெரிய வாசகப்பரப்பை கொண்டிருந்தது. தேசியவாதம் தலைதூக்கிவந்த காலமது. ஆகவே இளைஞர்கள் மற்றும் உயர் தட்டு மக்களிடம் அதிக வரவேற்பை பெற்றிருந்தது. இதில் விமர்சகர் பெலின்ஸ்கி தொடர்ந்து எழுதி வந்தார். லியோ டால்ஸ்டாய் இதழைச் சந்தா செலுத்திப் பெற்று வந்ததோடு அதில் நடைபெறும் வாதங்களில் தொடர்ந்து பங்கெடுத்து வந்திருக்கிறார்.

இது போலவே தஸ்தாயெவ்ஸ்கி தனது கதைகள் ரஷ்யன் ஹெரால்ட்டில் வர வேண்டும் என்பதற்காகத் தொடர்ந்து கட்கோவிற்குக் கடிதங்கள் எழுதியிருக்கிறார், அதிலும் குறிப்பாகச் சைபீரிய சிறைத்தண்டனையை முடித்துக் கொண்டு திரும்பிய தஸ்தாயெவ்ஸ்கிக்கு எழுத்துலகில் தனக்கான இடத்தை உருவாக்கிக் கொள்ள வேண்டும் என்ற தவிப்பிருந்தது. அதற்குக் கட்கோவ் பெரிதும் உதவினார். பொருளாதார ரீதியாகத் தஸ்தாயெவ்ஸ்கி மிகவும் சிரமப்பட்ட காலங்களில் தொடர்ந்து அவருக்கு முன்பணம் தந்து எழுத வைத்திருக்கிறார்
இதைப்பற்றி அன்னா தஸ்தாயெவ்ஸ்கி ஒரு குறிப்பு எழுதியிருக்கிறார்
தஸ்தாயெவ்ஸ்கியின் நான்கு நாவல்கள் ரஷ்யன் ஹெரால்டில் தொடராக வந்துள்ளன. அந்த நாட்களில் இரண்டு பக்கங்களுக்கு 125 ரூபிள் முதல் 250 ரூபிள் வரை ஊதியம் என முடிவு செய்யப்பட்டு அதற்கான முன்பணம் தொடர்ந்து அளிக்கப்பட்டு வந்தது. எங்கள் திருமணம் பற்றிக் கட்கோவிற்குத் தஸ்தாயெவ்ஸ்கி கடிதம் எழுதி பணஉதவி செய்யும் கேட்டிருந்தார். இரண்டாயிரம் ரூபிள் ( ஒரு ரூபிள் இன்றைய மதிப்பு இந்திய ரூபாயில் ஒன்று ) அனுப்பி வைத்ததோடு தனது வாழ்த்துகளையும் கட்கோவ் தெரிவித்திருந்தார். தொடர்ந்து கட்கோவ் செய்த பணஉதவி காரணமாகவே தஸ்தாயெவ்ஸ்கியால் வாழ முடிந்தது. அவரது புஷ்கின் உரையைத் தனது இதழில் வெளியிட்ட கட்கோவ் அதற்கும் தனியான தொகையை அனுப்பி வைத்தார் என்கிறார் அன்னா.
தி டெவில்ஸ் நாவல் தொடராக வந்து கொண்டிருந்த போது அதன் முக்கிய அத்தியாயத்தை தனக்கு ஏற்புடையதாக இல்லை என்று கட்கோவ் திருப்பி அனுப்பி வைத்தார். அதை ஏற்றுக் கொள்ள முடியாத தஸ்தாயெவ்ஸ்கி தொடரை வெளியிடுங்கள். வாசகர்கள் முடிவு செய்து கொள்ளட்டும் என்று பதில் எழுதினார்.
இதற்குக் கட்கோவ் வாசகர்களுக்கு எதைத் தர வேண்டும் என்று எனக்குத் தெரியும் ஆகவே மாற்றி எழுதினால் மட்டுமே வெளியிட முடியும் என்றார். தேவையான திருத்தங்களை நீங்களே செய்து கொள்ளவும் எனத் தஸ்தாயெவ்ஸ்கி பதில் எழுதியதால் கட்கோவின் திருத்தங்களுடன் தொடர் வெளியானது. நாவல் புத்தகமாக வெளியாகும் போது கட்கோவின் திருத்தங்கள் நீக்கப்பட்டன.
இதன்பிறகு புதிய நாவல் ஒன்றைத் தொடராக எழுத விரும்புவதாகத் தெரிவித்த தஸ்தாயெவ்ஸ்கி The Village of Stepanchikovo and Its Inhabitants குறுநாவலை அனுப்பி வைத்திருக்கிறார். இந்தக் குறுநாவலை வெளியிடத் தகுதியற்றது என்று நிராகரித்ததோடு இது போன்ற படைப்புகளை ரஷ்ய வாசகர்கள் ஏற்றுக் கொள்ளமாட்டார்கள் என்று கடுமையான கடிதம் ஒன்றை எழுதியிருந்தார் கட்கோவ்.

இதனால் ஆத்திரமடைந்த தஸ்தாயெவ்ஸ்கி வேறு இதழ்களில் தனது படைப்புகளை வெளியிட்டு வந்தார். பின்பு கட்கோவுடன் சமாதானம் ஏற்படவே மீண்டும் ரஷ்யன் ஹெரால்டில் தொடர்கதை எழுதத் துவங்கினார்.
குற்றமும் தண்டனையும் நாவலைத் தொடராக எழுதும் முன்பு அதன் கதைச்சுருக்கத்தை தஸ்தாயெவ்ஸ்கி விரிவாக எழுதி அனுப்பியிருக்கிறார். அந்தக் கடிதம் வியப்பூட்டுகிறது.
முழுநாவலையும் எழுதி முடித்தபிறகு அந்தக் குறிப்பை எழுதியிருப்பாரோ எனும் அளவிற்கு நாவலின் கட்டுமானம் கதைப்போக்கு, கதாபாத்திரங்களின் மனத்தவிப்புகள் உள்ளிட்ட அத்தனையும் அந்தச் சுருக்கத்தில் தஸ்தாயெவ்ஸ்கி எழுதியிருக்கிறார்
தனது ஸ்டெபான்சிகோவா போலின்றி இந்த நாவல் நிச்சயம் ரஷ்ய வாசகர்களுக்குப் பிடிக்கும் என்று அந்தக் கடிதத்தில் குறிப்பிடுகிறார்.
தஸ்தாயெவ்ஸ்கி பொருளாதார நெருக்கடிக்கு உள்ளாகும் போதெல்லாம் கட்காவிடம் முன்பணம் கேட்டுக் கடிதம் எழுதியிருக்கிறார். அந்தக் கடிதங்கள் இன்றும் பாதுகாக்கப்பட்டு வருகின்றன
சில கடிதங்களில் கட்கோவ் நீங்களும் ஒரு எழுத்தாளர். என்னைப் போலவே பணமில்லாத நெருக்கடியை அனுபவித்தவர். ஆகவே உடனடியாக எனக்கு முன்பணம் அனுப்பி வையுங்கள் என்று மன்றாடியிருக்கிறார்.
கட்கோவ் இளைஞராக ஜெர்மனியில் தத்துவம் படிக்கச் சென்ற நாட்களில் கையில் காசில்லாமல் நண்பர்கள் அறையில் தங்கிக் கொண்டு வாழ்ந்திருக்கிறார். அவர் மொழிபெயர்ப்பு செய்த புத்தகத்திற்கான பணத்தைப் பதிப்பாளர் தரவில்லை. ஆகவே நண்பர்களிடம் கடன்வாங்கிச் செலவு செய்திருக்கிறார். அதனால் தஸ்தாயெவ்ஸ்கியின் நெருக்கடியைப் புரிந்து கொள்ள முடிந்திருக்கிறது. நான்கு முக்கிய நாவல்களைத் தொடராக எழுதிய போதும் கட்கோவை ஒன்றிரண்டு முறை மட்டுமே தஸ்தாயெவ்ஸ்கி நேரில் சந்தித்திருக்கிறார். அந்தச் சந்திப்புகள் பெரிதும் பணத்தேவையை ஒட்டி நடந்தவையே.
தஸ்தாயெவ்ஸ்கியின் குற்றமும் தண்டனை தொடராக வெளிவந்த போது அதற்குப் பலத்த எதிர்ப்பு உருவானது. மட்டரகமான தொடர் கதையை உடனே நிறுத்தவேண்டும் எனப் பலரும் கடிதம் எழுதினார்கள், ஜி. இசட். எலிசீவ் என்ற விமர்சகர் கடுமையான எதிர்வினை கடிதம் ஒன்றை எழுதினார். ஆனால் கட்கோவ் எதற்கும் செவிசாய்க்கவில்லை. அவர் தஸ்தாயெவ்ஸ்கி உன்னதமான நாவலை எழுதிக் கொண்டிருக்கிறார் என்று பதில் எழுதினார். அந்த நம்பிக்கையின் வெளிப்பாடு போலவே இன்றும் உலகின் சிறந்த நாவல்களில் ஒன்றாகக் குற்றமும் தண்டனையும் கொண்டாடப்படுகிறது. இத்தொடர் வெளியான நாட்களில் இதைப்படிப்பதற்காகவே ஐநூறு புதிய வாசகர்கள் ஆண்டுச் சந்தா கட்டினார்கள். இந்த எண்ணிக்கை உயர்வு அதிசயமானது என்று கட்கோவ் எழுதியிருக்கிறார்.

1860 களில், ரஷ்யாவில் குற்றவாளிகளின் உண்மைக்கதைகளை அறிந்து கொள்வதில் பெரிய ஆர்வம் உருவாகியிருந்தது. ஜார் அலெக்சாண்டர் II ஆட்சியின் போது செய்யப்பட்ட சீர்திருத்தங்களில் அடிமைத்தனத்தை ஒழிப்பது, குற்றவியல் நீதி அமைப்பு மாற்றம் மற்றும் பத்திரிகைகளுக்குக் கூடுதல் சுதந்திரம் வழங்குவது ஆகியவை அடங்கும்.
நீதிமன்றத்தில் புதிதாக ஜூரி அமைப்பினை உருவாக்கி அதன் மூலம் மக்களும் நீதித்துறையும் இணைந்து தீர்ப்பு வழங்கலாம் என்ற நடைமுறை அறிமுகமானது.
இதனால் குற்றவியல் விசாரணைகளை ஒரு புதிய வகையான வாசிப்புப் பிரதியாக உருமாறின. செய்தித்தாள்களில் இதற்கெனச் சிறப்புப் பக்கங்கள் ஒதுக்கப்பட்டன. நீதிமன்ற ஸ்டெனோகிராஃபர்களின் அறிக்கைகளை அப்படியே அச்சிட்டு மக்கள் வாசித்து மகிழ்ந்தார்கள்.
நூறு ஆண்டுகளுக்கு முன்பு தமிழ்நாட்டிலும் நீதிமன்ற நடவடிக்கைகளை மக்கள் அறிந்து கொள்ளும்விதமாகக் கொலைசிந்துகள் பாடப்பட்டிருக்கின்றன. மாலை செய்திதாட்களில் கொலைவழக்கு விசாரணைகள் சிறப்புப் பகுதியாக வெளியிடப்பட்டிருக்கின்றன.
ரஷ்யாவில் வெளியிடப்பட்ட குற்றவாளிகளின் உண்மை கதைகள் நாவலகளை விட உயர்ந்தவையாகக் கருதப்பட்டன. 1860 களில், ரஷ்யாவில் ஒரு பத்திரிகையின் பக்கங்களைப் புரட்டினால், உங்கள் கைகளில் இரத்தம் படிந்துவிடும் என்கிறார் விமர்சகர் கான்ஸ்டான்டின் மொசுல்ஸ்கி
செப்டம்பர் 1865 இல், தஸ்தாயெவ்ஸ்கி ஜெர்மனின் சுகவாச ஸ்தலமான பேடன் பேடனில் தங்கியிருந்தார். அங்கே சூதாடி கையிலிருந்த பணம் முழுவதையும் இழந்திருந்தார். அவரால் அவரால் ஹோட்டல் கட்டணத்தைச் செலுத்த முடியவில்லை, மேலும் அவருக்கு வழங்கப்பட்ட இரவு உணவை கொண்டு நிறுத்துமாறு ஊழியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.
இதனால் இரவு சாப்பாட்டினை கைவிடுவது என முடிவு செய்தார், இந்நிலையில் அவர் செய்தித்தாளில் ஒரு மனிதன் கோடாரியால் சமையல்காரர் மற்றும் சலவை செய்யும் பெண்மணியை வெட்டிக் கொன்ற செய்தியை படித்தார். அந்த மனிதன், ரஷ்யன் ஆர்த்தடாக்ஸ் சர்ச்சின் சீர்திருத்தங்களை நிராகரித்தவன் என்று செய்தித்தாள் கூறியது.
இந்த மனிதனின் கதையைத் தான் குற்றமும் தண்டனையும் நாவலுக்கான விதையாகக் கொண்டிருந்தார் தஸ்தாயெவ்ஸ்கி. அதே நேரம் மாஸ்கோ பல்கலைக்கழக மாணவர் ஒரு தபால்காரரைக் கொல்லத் தீர்மானித்ததைப் பற்றிய இன்னொரு செய்தியை கேள்விப்பட்டார். இரண்டினையும் தனது நாவலில் இணைத்துக் கொண்டுவிட்டார்.
தஸ்தாயெவ்ஸ்கி முதலில் 90 பக்க கதையை உருவாக்கினார். தொடராக வெளியான போது ஒரு முழு நாவலாக விரிவடைந்தது என்கிறார் இலக்கிய விமர்சகர் ஜெனிபர் வில்சன

கட்கோவ் ரஷ்யன் ஹெரால்ட் பத்திரிக்கையின் ஆசிரியராக வந்தபின்பு தான் புஷ்கின் ரஷ்யாவின் தேசிய கவியாக முன்னிறுத்தப்பட்டார். புஷ்கின் கவிதைகள் பற்றிய புதிய பார்வைகளைக் கட்கோவ் தனது இதழின் வழியே உருவாக்கினார். அதே நேரம் புஷ்கினின் உரைநடை அவ்வளவு சிறப்பானதில்லை. அந்த இடத்தைத் தஸ்தாயெவ்ஸ்கி நிரப்புகிறார் என்றும் கட்கோவ் குறிப்பிடுகிறார்
இவான் துர்கனேவ் எழுத வந்த நாட்களில் அவரது தந்தையும் தனயர்களும் நாவலைத் தொடராக வெளியிட்ட கட்கோவ் துர்கனேவை ரஷ்ய இலக்கியத்தின் நிகரற்ற நாவலாசிரியராக்க கொண்டாடினார்.

இந்த நாவலை அவரே புத்தகமாக வெளியிட்டார். அத்தோடு இரண்டு விரிவான விமர்சனக்கட்டுரைகளையும் எழுதியிருக்கிறார். அந்தக் கட்டுரைகளைத் துர்கனேவ் பாராட்டி எழுதியதோடு இரண்டாம் பகுதி எப்போது வெளியாகும் எனக் காத்துக் கொண்டிருந்து படித்தேன் என்றும் குறிப்பிடுகிறார்.
இவான் துர்கனேவை ரஷ்யாவின் சிறந்த எழுத்தாளராக மாற்றியதில் கட்காவிற்குப் பெரிய பங்கிருக்கிறது
ஆனால் இந்த நட்புறவு நீடிக்கவில்லை. துர்கனேவ் தனது அடுத்த நாவலை ரஷ்யன் ஹெரால்டில் தொடராக எழுதுவார் என்று கட்கோவ் அறிவிப்பு கொடுத்தார். ஆனால் துர்கனேவ் அதை எழுதவில்லை.
அத்தோடு கட்கோவிற்கு எதிராக வேறு இலக்கிய இதழில் எழுதப்பட்ட கட்டுரை ஒன்றை ஆதரித்துத் துர்கனேவ் கடிதம் எழுதினார். இந்தக் கோபம் கட்கோவிற்கும் அவருக்குமான உறவைத் தற்காலிகமாகத் துண்டிக்கச் செய்தது. காலமாற்றத்தில் மீண்டும் நட்பு உருவானது. On the Eve என்ற நாவலை புதிய தொடர்கதையாக ரஷ்யன் ஹெரால்ட் இதழில் துர்கனேவ் எழுத ஆரம்பித்தார். இந்தத் தொடர் வாசகர்களிடம் வரவேற்பு பெறவில்லை. அதில் துர்கனேவ் மன வருத்தம் அடைந்தார்.
அந்த நாவலை ஏற்காதவர்களைக் கடுமையாக விமர்சனம் செய்து எழுதினார் துர்கனேவ். இதை விரும்பாத கட்கோவ் இந்த நாவல் ஏன் தோல்வியுற்றது என விரிவான கட்டுரை எழுதினார். இந்த மோதலில் கட்கோவின் இலக்கிய ரசனை மிகவும் மட்டமானது எனத் துர்கனேவ் கடுமையாகத் தாக்கி எழுதினார். இந்தச் சர்ச்சை மீண்டும் பிரிவை உருவாக்கியது
மிகைல் நிகிஃபோரோவிச் கட்கோவ் எழுத்தாளராக விரும்பியவர். மாஸ்கோ பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகப் பணியாற்றியவர். ஜெர்மன் சென்று தத்துவம் படித்திருக்கிறார். ஆங்கிலப் பிரெஞ்சு ஜெர்மானிய இலக்கியங்களில் நல்ல புலமை கொண்டிருந்தார்.
ரஷ்யாவில் தேசியவாதம் தலையெடுத்த காலத்தில் அதனை வழிநடத்தியவர் கட்கோவ். அவர் தனது இதழில் வெளியாகும் இலக்கியப்படைப்புகளை மிகக் கவனமாக எடிட் செய்ததோடு தேவையற்ற பகுதியாகக் கருதியவற்றை நீக்கவும் செய்தார். இதை டால்ஸ்டாய். தஸ்தாயெவ்ஸ்கி துர்கனேவ் என எவரும் விரும்பவில்லை . ஆகவே கட்கோவோடு சண்டையிட்டுத் தங்கள் படைப்புகளை நிறுத்திக் கொண்டிருக்கிறார்கள்

புகழ்பெற்ற அன்னாகரீனினா நாவலை 13 பகுதிகள் கொண்ட தொடராக இரண்டரை ஆண்டுகள் வெளியிட்டார் கட்கோவ். ,இந்தத் தொடரின் இறுதி அத்தியாயத்தை வெளியிடத் தகுதியற்றது என மறுத்துத் திரும்பி அனுப்பினார் கட்கோவ். இதனால் ஆத்திரமான டால்ஸ்டாய் தொடரை அப்படியே நிறுத்திக் கொள்வதாக அறிவித்தார். இந்த மோதல் காரணமாகத் தொடர் நின்று போனது.
கடைசி அத்தியாயத்தைச் சிலவெளியீடாகத் தனியே டால்ஸ்டாய் வெளியிட்டார். நாவலாகப் பதிப்பிக்கப்பட்ட போது அது மீண்டும் ஒன்று சேர்க்கப்பட்டது.
அந்த நாட்களில் இரண்டு பக்கங்களுக்கு 500 ரூபிள் ஊதியம் என டால்ஸ்டாயும் 350 ரூபிள் ஊதியம் எனத் துர்கனேவும் பெற்றுவந்தார்கள். இந்தச் சம்பளம் தஸ்தாயெவ்ஸ்கிக்கு வழங்கப்படவில்லை. அவர் அதிகபட்சமாக 300 ரூபிள் பெற்றிருக்கிறார். இதைப் பற்றி வருத்தமாகத் தஸ்தாயெவ்ஸ்கி ஒரு கடிதம் எழுதியிருக்கிறார்
கட்கோவின் இலக்கிய மற்றும் அரசியல் நிலைப்பாடுகளை எழுத்தாளர்கள் விரும்பவில்லை. ஆகவே அவர்களுக்குள் அடிக்கடி கருத்து மோதல்கள் உருவானது. ஆனாலும் இலக்கியவாதிகளை ஊக்கப்படுத்தித் தொடர்ந்து அவர்களின் படைப்புகளை வெளியிட வேண்டும் என்பதில் கட்கோவ் கவனமாக இருந்தார்
டால்ஸ்டாய் அவருக்கு எழுதிய கடிதங்களில் கட்கோவை புகழும் ஒரு வரி கூடக் காணமுடியாது. கறாராக, எழுத வேண்டிய விஷயங்களை மட்டுமே எழுதியிருக்கிறார் கட்கோவ் தனது நாவலைத் தணிக்கை செய்த போது அதைக் கண்டித்து உடனடியாகத் தனது படைப்பினை நிறுத்திக் கொண்டிருக்கிறார்.
அவரது போரும் அமைதியும் நாவல் தொடராக வெளிவந்து கொண்டிருந்த அதே காலத்தில் தஸ்தாயெவ்ஸ்கியின் நாவலும் தொடராக வந்திருக்கிறது. தஸ்தாயெவ்ஸ்கியை பாராட்டி ஒரு வரி கூட டால்ஸ்டாய் எழுதவில்லை. ஆனால் டால்ஸ்டாயின் நாவலைத் தொடராக வாசித்த தஸ்தாயெவ்ஸ்கி வியந்து பாராட்டி தனது டயரியில் எழுதியிருக்கிறார்.
பண்ணையடிமை முறை ஒழிப்பது குறித்தும், பெண்கல்வி அவசியம் என்பது குறித்தும் கட்கோவ் நிறைய எழுதியிருக்கிறார். டால்ஸ்டாய் தனது பண்ணையில் ஆரம்பித்த பள்ளிக்கூடத்தைப் பாராட்டி எழுதியதோடு அதற்குத் தேவையான எல்லா உதவிகளையும் தான் செய்யக் காத்திருப்பதாக எழுதியிருக்கிறார்
கட்கோவ் தனது அரசியல் நிலைப்பாட்டிற்காகவே இன்றும் அதிகம் அறியப்படுகிறார். அவர் இறந்த போதும் அரசியல் விமர்சகராகவே மேற்குலகம் அவரைக் கொண்டாடியது. உண்மையில் அவர் சிறந்த இலக்கிய ஆசிரியராகச் செயல்பட்டிருக்கிறார். நல்ல நாவல்களைத் தொடராவ வெளியிட்டு ரஷ்ய நாவல்களின் உதயத்திற்குக் காரணமாக விளங்கியிருக்கிறார்.
தனது சமகாலத்தில் இங்கிலாந்திலும் பிரான்சிலும் நடைபெற்றுவந்த புதிய இலக்கியப்போக்குகளை ஆழ்ந்து அவதானித்து அதற்கு இணையாக ரஷ்ய இலக்கியம் செல்ல வேண்டும் என்று கட்கோவ் முயன்றிருக்கிறார். இங்கிலாந்தில் ஜேன் ஆஸ்டின் புகழ்பெற்ற காலமது. அப்படி ஒரு பெண் எழுத்தாளர் ரஷ்யாவில் உருவாக வேண்டும் என்று கட்கோவ் ஆசைப்பட்டார். அதற்காகச் சில பெண் எழுத்தாளர்களின் படைப்புகளை வேண்டிக் கேட்டு தனது இதழில் வெளியிட்டிருக்கிறார்.
டால்ஸ்டாயின். தஸ்தாயெவ்ஸ்கியின் நாவல்களைக் கையெழுத்துப்பிரதியிலே படித்து மகிழ்ந்திருக்கிறார் என்பது கட்காவிற்குக் கிடைத்த அபூர்வ வாய்ப்பு. அவர் வழியாக உருவான படைப்பாளிகள் அவரை நன்றியோடு நினைவு கொண்டிருக்கிறார்கள். ஆனாலும் கட்கோவ் மீதான விமர்சனங்கள் இன்றும் தொடரவே செய்கின்றன. கட்காவிற்குச் சிலை வைக்க வேண்டும். அவரது உருவத்தை ஓவியமாக வரைந்து வைக்க வேண்டும் என்று விரும்பிய சிலர் ரஷ்ய ஓவியர் இலியா ரெபினிடம் கேட்டபோது அவர் வரைய மறுத்துவிட்டார். அதற்குச் சொன்ன காரணம் டால்ஸ்டாயை வரைந்த கைகளால் கட்கோவை வரைய முடியாது
நூற்றாண்டினைக் கடந்து இன்றும் அன்னாகரீனினா, கரமசோவ் சகோதரர்கள். குற்றமும் தண்டனையும், தந்தையும் தனயர்களும் போன்ற ரஷ்ய நாவல்கள் உலக அரங்கில் கொண்டாடப்பட்டு வருகின்றன. இந்தப் பெருமைக்குள் கட்கோவின் பங்கு நிச்சயம் மறைந்தேயிருக்கிறது.
••
May 9, 2023
கரையும் உருவங்கள்
‘The Last Music Store’. என்ற ஆவணப்படத்தைப் பார்த்தேன். மேகா ராமசாமி இயக்கியுள்ளார்

மும்பையின் புகழ்பெற்ற மியூசிக் ஸ்டோரான ரிதம் ஹவுஸ் பற்றிய இந்த ஆவணப்படம் அதன் கடந்தகாலத்தையும் இசைக்கலைஞர்கள் மற்றும் இசை ரசிகர்களையும் பற்றியது.
ரிதம் ஹவுஸ் பற்றிய ஆவணப்படத்தைக் காணும் போது என் மனதில் லேண்ட்மார்க் புத்தகக்கடை மூடப்பட்ட கடைசிநாளில் அங்கே சென்று புத்தகங்கள் வாங்கியது தோன்றி மறைந்தது
ரிதம் என்ற பெயர் கடைக்கு வைக்கப்பட்டதற்கான காரணம், அந்தக் கடைக்கு வருகை தந்த புகழ்பெற்ற நடிகர்கள் இசைக்கலைஞர்கள். அதன் நிரந்தர வாடிக்கையாளர்கள். காலமாற்றத்தில் சந்தித்த பிரச்சனைகளைப் பற்றிப் படம் சிறப்பாக ஆவணப்படுத்தியுள்ளது
ஒருவகையில் இப்படம் நாம் கடந்த வந்த இசையுலகின் வரலாற்றுச் சாட்சியம்.
கடந்த ஐம்பது ஆண்டுகளில் இசைத்துறையில் ஏற்பட்ட மாற்றங்கள். இசைத்தட்டுகள், ஆடியோ கேசட்., சிடி, எம்பி3 ஆன்லைன் இசை ஒலிபரப்புகள் என இசை கேட்பதில் ஏற்பட்ட மாற்றங்களையும் அது ஏற்படுத்திய தாக்கத்தையும் படம் உண்மையாகப் பதிவு செய்துள்ளது. குறிப்பாக இசையின் காப்புரிமை மற்றும் பைரசி குறித்த கேள்விகளைப் படம் எழுப்புகிறது

ரிதம் ஹவுஸ் வெறும் இசைவிற்பனையகம் மட்டுமில்லை. அது மும்பையின் இசைக்கலாச்சாரத்தை உருவாக்கிய அடையாளம். புகழ்பெற்ற மேற்கத்திய இசைக்கலைஞர்களின் இசைத்தட்டுகள். இந்திய இசைமேதைகளின் இசைத்தட்டுகள். ஹிஸ்துஸ்தானி இசை, கர்நாடக இசை ராப், பாப், ப்யூசன் எனப் பல்வேறு விதமான இசைத்தட்டுகளையும் திரைப்படக் குறுந்தகடுகளையும் விற்பனையும் தயாரிப்பும் செய்த நிறுவனம் பொருளாதார நெருக்கடி காரணமாக மார்ச் 1 ம் தேதியோடு கடையை மூடப்போவதாக அறிவித்தது
ரிதம் ஹவுஸின் கடைசி நாளையே படம் பதிவு செய்திருக்கிறது. முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக அங்கு பணியாற்றிய ஊழியர்கள் உணர்ச்சிப்பூர்வமாகத் தங்களின் நினைவுகளைப் பகிர்ந்து கொள்கிறார்கள்.

சிலர் கேமிரா முன்னால் பேசமுடியாமல் கண்ணீர் சிந்துகிறார்கள். கடை உரிமையாளரும் அது போலவே பாதிப் பேசிக் கொண்டிருக்கும் போது உடைந்து அழுகிறார். இந்தக் கடையின் நினைவுகளுக்குள் ஐம்பது ஆண்டுகால இசைஉலகின் வரலாறு மறைந்திருக்கிறது. மக்களின் ரசனையில் ஏற்பட்ட மாற்றம். சினிமா இசையில் ஏற்பட்ட மாற்றம். புகழ்பெற்ற இசைக்கலைஞர்களின் வாழ்க்கை, மற்றும் தீவிர இசை ரசிகர்களின் வாழ்க்கை எனக் காலத்தால் அழியாத நினைவுகளைப் படம் விவரிக்கிறது
கடை ஊழியரான ஆங்கிலோ இந்தியர் தனது நேர்காணலில் இந்தி சினிமா பாடல்கள் ஏற்படுத்திய தாக்கத்தை மிகவும் உண்மையாக, கண்ணீர் ததும்பப் பதிவு செய்திருக்கிறார்.
ஒவ்வொரு நாளையும் இசையோடு வாழ்ந்துவிட்டு இனி எந்த வேலைக்குச் செல்வது என்ற ஊழியர்களின் கேள்வி மனதில் ஒலித்தபடியே இருக்கிறது.
உண்மையில் இது ரிதம் ஹவுசின் கதை மட்டுமில்லை. மதுரை, சென்னை, கோவை, சேலம் ,திருச்சி எனத் தமிழகத்தின் பல்வேறு நகரங்களிலும் செயல்பட்டு வந்த புகழ்பெற்ற ம்யூசிக் ஸ்டோர்கள் காலமாற்றத்தில் மூடப்பட்டதைப் பற்றியதும் கூட.
என்னிடம் இப்போதும் நிறைய ஆடியோ கேசட்டுகள். திரைப்பட டிவிடிகள் இருக்கின்றன. அவற்றைப் பயன்படுத்துவதேயில்லை. அதே நேரம் அவற்றைத் தூக்கி எறிந்துவிட மனமில்லை. பொருளின் மீது நம் நினைவுகள் படிந்துவிடும் போது அதன் இயல்பும் மதிப்பும் மாறிவிடுகிறது.
தொழில்நுட்பம் இசையின் தரத்தை மிகவும் உயர்த்தியிருக்கிறது. அதே நேரம் இசை விற்பனையில் மிகப்பெரிய சரிவை ஏற்படுத்தியிருக்கிறது என்பதே நிஜம்
படத்தின் கடைசிக்காட்சியில் கடையை இழுத்து மூடுகிறார்கள். ஊழியர்கள் வீடு செல்ல மனமில்லாமல் கவலையோடு அமர்ந்திருக்கிறார்கள். உரிமையாளர் செய்வதறியாமல் அமர்ந்திருக்கிறார். அவர்களின் மௌனம் நம்மையும் கவ்விக் கொள்கிறது
கால மாற்றம் என்ற சிறுசொல் தங்களை இவ்வளவு கிழே தள்ளிக் கெக்கலிக்கும் என்பதை அவர்களால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.
May 8, 2023
இரண்டு பார்வைகள்
சமீபத்தில் வெளியான எனது சிறுகதைகள் முகமது அலியின் கையெழுத்து, இரவுக்காவலாளியின் தனிமை குறித்து வெளியான விமர்சனக்குறிப்புகள்
•••
முகமது அலியின் கையெழுத்து
கோ.புண்ணியவான்
(மலேசியத் தமிழ் எழுத்தாளர் கோ.புண்ணியவான் எனது சிறுகதை குறித்து எழுதியுள்ள விமர்சனக்குறிப்பு)
••

வாசிப்பின்பத்தை நல்கிய நல்ல சிறுகதை. முகம்மது அலியின் கையெழுத்து. உள்ளபடியே பிழைப்புவாதிகள் தங்கள் வயிற்றுப் பிழைப்பைப் பற்றியே கவலைப்பட்டு வாழ்க்கையை வாழ்ந்து கழித்துவிடுவார்கள்.. கலையின் மகத்துவம் பற்றியோ ரசிகர்களை ஆர்வத்தோடு வைத்திருக்கும் விளையாட்டு வீரர்கள் பற்றியோ சராசரி மனிதர்களுக்கு எந்தவித அக்கறையும் கிடையாது. முகமது அலியின் கையெழுத்தை விற்க வந்த அந்த ஆளையும் சேர்த்துத்தான் சொல்கிறேன்,
முகம்மது அலியிடம் கையெழுத்து வாங்கிய அவருடைய அப்பா இருந்திருந்தால் அதனைக் கிடைத்தற்கரிய பொக்கிஷம்போலப் பாதுகாப்பாக வைத்திருந்திருப்பார். ஆனால் அவர் மகனுக்கோ வயிற்றுக்காக மட்டும் ஓடும் சாதாரண மனிதர்களுக் கோ , உலகப் பிரசித்தி பெற்ற நட்சத்திரங்கள் பற்றியோ கிஞ்சிற்றும் அக்கறை இல்லை என்பதைக் கதை சொல்லிச்செல்கிறது..
கலைக்கும் அதே நிலைதான். , முகம்மது அலியை ஒரு கலைஞனாகப் பார்க்கத் தவறிய இந்த மனிதர்கள் வாழும் வாழ்க்கையைப் பற்றி நினைக்கும்போது கொஞ்சம் வெட்கமாகத்தான் இருக்கிறது. இவ்வாறான மனிதர்களால்தான் எல்லாவிதக் கலைகளும் மதிப்பிழந்து நிற்கிறது. முகம்மது அலியின் கையெழுத்து மேலை நாடுகளில் என்ன விலைக்குப் போயிருக்கும் என்று நினைத்துப் பார்க்கிறேன்.
கீழை தேச மனிதர்களுக்கு அந்தச் சாதனையை மதிக்கத்தெரியவில்லை என்று நினைக்கும்போது வலிக்கத்தான் செய்கிறது. இங்கே வாழ்க்கை என்பதே வயிற்றுப்பாடுதான் என்ற குறுகிய மனப்பான்மை இருக்கும் வரை சாதனையை / கலையைக் காலுக்குக் கீழேதான் வைத்திருப்பார்கள். சாதனையாளரை எந்த அளவுக்கு மதிக்கிறது என்பதை ஒப்பீட்டளவில் வைத்துப் பார்க்கிறேன். இதில் மேலை தேசத்தவர் கலையை/ விளையாட்டை ஆராதிக்கும் போக்கு நமக்கு எப்போது கைவரும் என்றும் தெரியவில்லை.
•••
“இரவுக்காவலாளியின் தனிமை” சிறுகதையினை முன்வைத்து…
ந. பிரியா சபாபதி
‘இரவு’ என்பது, அனைவருக்கும் நிசப்தமானது அல்ல. அது பலருக்கும் பலவிதமான உள்ளோசைகளை எழுதிப்பிக்கொண்டே இருப்பதாகும். இரவு காவலாளிக்கு இரவானது இரவல்ல. அவர்களுக்குப் பரிதியின் நிழல் படாத மற்றொரு இடமாகும்.
இந்தச் சிறுகதை நிகழும் களம் தேவாலயம். எழுத்தாளர் தமது எழுத்துத் தூரிகையால் வாசகர் நேரில் தேவாலயத்துக்குள் சென்று பார்த்து போன்ற உணர்வை ஏற்படுத்தியுள்ளார்.
ஆழ்கடல் அதிசயம் என்பார்களே அது போல் மனிதர்களின் மனமானது பல அதிசயங்களை உடையது. அது மட்டும் அல்ல, பல இரகசியங்களையும் அது உள்ளடக்கியதாகும்.
நாம் நம் ஆழ் மனத்தில் உள்ளவற்றை உரியவர்களிடம் பகிர்ந்தாலும் யாருக்கும் சொல்லாத புதையல் ஒன்று நம் மனத்தின் அடியில் புதைந்து வளர்ந்து கொண்டே இருக்கும். அதை வளர விடாமல் பக்குவமாய்ப் பார்த்துக் கொண்டிருப்போம். இதனை எழுத்தாளர், “ஆணும் பெண்ணும் சில ரகசியங்களைக் குடும்பம் அறியாமல் கடைசிவரை ஒளித்துக் கொள்கிறார்கள். அந்த ரகசிய செடி இரவில் மட்டுமே மலர்கிறது” என்கிறார்.
இரவு காவலர்களின் இரவு வாழ்க்கையையும் அவர்களுக்குள் ஊசலாடிக் கொண்டிருக்கும் நட்பு, காதல், துயரம் எனப் பலவற்றையும் இந்தச் சிறுகதையில் நுண்சித்திரங்களாக எழுத்தில் வடித்துள்ளார் எஸ்.ரா.
‘ஆண்கள் அழக் கூடாது. துணிவுடன் வாழ வேண்டும்’…. இன்ன பிறவற்றையும் இச்சமுதாயம் பெரிய சாக்குப் பைகளில் கட்டி அவர்களின் தலையில் சுமத்தியுள்ளது. ஆண்கள் அதைச் சுமந்தே தீரவேண்டிய நிலையில் உள்ளனர்.
‘அவர்கள் இந்தச் சுமையை இறக்கி வைக்கவும் கூடாது, சுமையைத் தூக்கிச் சுமக்க முடியவில்லையே என்று நினைக்கவும் கூடாது. வருந்தி அழவும் கூடாது.’ என்று சமுதாயத்தால் வலியுறுத்தப்படுகின்றனர். ஆண்களின் வாழ்வானது எளிதானதல்ல.
ஆண்கள் தனித்திருக்கிறார்கள். தங்களை விலக்கியும் அவர்கள் தனித்த தனிமையில் இருக்கிறார்கள். அவர்கள் யாருக்கும் தெரியாமல் அழத்தான் செய்கிறார்கள். ஆணின் கண்ணீரைப் பார்க்கும் பெண் நிச்சயமாக அந்த ஆணின் ஆழ்மனத்தில் குடியிருப்பவளாகத்தான் இருப்பாள். இந்த உண்மையை மறைமுகமாக, “ஆண்களும் அழ விரும்புகிறார்கள். ஆனால் யார் முன்பு எதற்காக என்பதில் தான் மாறுபாடு இருக்கிறது” என்று சுட்டியுள்ளார் எஸ்.ரா. துயரங்களின் நினைவுப் பயணமாகவே இக்கதை எழுதப்பட்டிருக்கிறது.
••
May 6, 2023
கவிஞனும் கவிதையும் 2 இரண்டு புகார்கள்
ஐம்பது ஆண்டுகளில் எழுதப்பட்ட ஸ்பானியக் கவிதைகள் தொகுப்பில் ஏஞ்சல் கோன்சலஸின் (Ángel González) கவிதை ஒன்றை வாசித்தேன். கரப்பான்பூச்சி பற்றிய வியப்பூட்டும் கவிதையது.

என் வீட்டிலுள்ள கரப்பான் பூச்சிகள் புகார் செய்கின்றன
நான் இரவில் படிப்பதால் ஏற்படும் வெளிச்சம்
மறைவிடங்களை விட்டு அவர்களை வெளியேற தூண்டுவதில்லை.
அறையைச் சுற்றிவரும் வாய்ப்பை இழக்கிறார்கள்
என அக்கவிதை நீள்கிறது. அதில் கரப்பான்பூச்சி இந்தத் தொந்தரவு குறித்து ஜனாதிபதியிடம் புகார் அளிக்க இருப்பதாகவும் உண்மையில் இந்தக் கரப்பான்பூச்சிகள் எந்தத் தேசத்தில் வாழ்கின்றன. இவை செய்தித்தாள்களைப் படிப்பதில்லை என்றும் கவிதை நீள்கிறது.
நம் வீடென்பது நம்முடைய வீடு மட்டுமில்லை. அதில் சில கரப்பான்பூச்சிகள். நூற்றுக்கணக்கான எறும்புகள். ஒன்றிரண்டு எலிகள் பல்லிகள். பத்து பதினைந்து ஈக்கள். எண்ணிக்கையற்ற கொசுக்களுக்கும் அது வீடாக இருக்கிறது. நம் வீட்டுக்கரப்பான்பூச்சிகள் நமது நடமாட்டத்தால் தொந்தரவு அடைகின்றன என்பது உண்மையே.
கவிதை கரப்பான்பூச்சியைப் பற்றியதாகத் தோன்றினாலும் அது நம் உலகம் எது என்பதைப் பற்றியதாகவே நீளுகிறது. நம் உலகம் என்பது நாம் மட்டுமே வாழும் உலகில்லை. கரப்பான்பூச்சிகள் புத்தகம் படிப்பவரைப் பற்றி ஜனாதிபதியிடம் புகார் செய்ய இருக்கின்றன என்ற வரியில் கரப்பான்பூச்சி குறியீடாகிவிடுகிறது. உண்மையில் புத்தகம் படிக்கும் மனிதர் பற்றிய யாரோ புகார் சொல்லிக் கொண்டே தானிருக்கிறார்கள். வெளிச்சம் இக்கவிதையில் தொந்தரவு தருவதாக மாறியிருக்கிறது. இருளுக்குள் நடமாட விரும்புகிறவர்களுக்கு வெளிச்சம் தொந்தரவாகத் தானே இருக்கும்.
கரப்பான்பூச்சிகள் செய்திதாட்களைப் படிப்பதில்லை என்ற வரியின் மூலம் அவை நாட்டுநடப்பு அறியாத ஜீவிகள் என்று புரிகிறது. கவிதைசொல்லி சில வேளைகளில் தான் கரப்பான்பூச்சிகளை விரும்புவதாகவும் அதற்குக் காரணம் தெளிவாக அறியமுடியவில்லை என்றும் சொல்கிறார். நமது அன்றாடத்தில் இப்படி இரண்டு தளங்கள் மட்டுமில்லை. ஆறேழு தளங்கள் இயங்குகின்றன. கரப்பான்பூச்சிகள் என்றாலே என் மனதில் பதற்றம் மற்றும் அவசரம் என்றே பதிவாகியிருக்கிறது. நிதானமான கரப்பான்பூச்சியைக் காண முடியாது. தனது மீசையால் ஒரு பயனும் கிடையாது என்றபோதும் கரப்பான்பூச்சிகள் நீளமான மீசையைக் கொண்டிருக்கின்றன. அதைக் காணும் போது மனதில் ஓவியர் டாலியின் நினைவு வந்து போகிறது

ஏஞ்சல் கோன்சலஸின் கவிதைகள் இது போன்று அன்றாட வாழ்க்கையில் நாம் காணும் காட்சிகளைப் புரட்டிப் போடுகின்றன. அவற்றைக் கேலியோடு எதிர்கொள்கின்றன. தனது அடையாளம் குறித்த கேள்வியைப் பல்வேறு நிகழ்வுகள் மற்றும் பொருட்களின் மீது எதிரொலித்து விடைதேடுகின்றன. ஸ்பானிய கவிதையின் தனிக்குரலாக இவரது கவிதைகளைக் குறிப்பிட வேண்டும்.
இறந்தவர்களைப் பற்றிய புகாராக நீளும் அவரது இன்னொரு கவிதை மிக அழகானது. அதில்
இறந்தவர்கள் சுயநலமானவர்கள்:
அவர்கள் நம்மை அழவைக்கிறார்கள்.
அதைப்பற்றிக் கவலைப்படுவதில்லை,
என்ற வரிகள் மரணத்தைப் பற்றி நாம் கொண்டிருந்த இறுக்கத்தைக் கலைத்துப் போடுகிறது. நம்மை அறியாமல் நகைக்க வைக்கிறது. அதே நேரம் இறந்து போனவர்களின் பிடிவாதத்தை அழகாக வெளிப்படுத்துகிறது
நாம் அவர்களைக் குழந்தைகள் போலச் சுமக்க வேண்டும்
கல்லறைக்கு
என்ற வரியில் அவர்கள் மீது நாம் கொண்டுள்ள வாஞ்சை வெளிப்படுகிறது. உண்மையில் இறந்தவர்களை நாம் தான் குளிக்க வைக்க வேண்டும். உடை மாற்றிவிட வேண்டும். தூக்கிச் சுமக்க வேண்டும். அவர்கள் குழந்தை போலத் தான் நடந்து கொள்கிறார்கள்.
அவர்களின் முகங்களில்
நம்மைக் குற்றம் சாட்டுவது
அல்லது எச்சரிப்பது போல
வழக்கத்திற்கு மாறான விறைப்பு
என்ற வரிகளின் வழியே அவர்கள் எதையோ நமக்கு உணர்த்த விரும்புவது புலப்படுகிறது. இறந்தவரின் முகம் எதையோ பறிகொடுத்தது போலாகிவிடுவது எதனால்.
இறந்தவர்களைப் பற்றிய மோசமான விஷயம்
நீங்கள் அவர்களைக் கொல்ல எந்த வழியும் கிடையாது
என்ற வரி தருவது வெறும் அபத்தம் மட்டுமில்லை. இறந்தவர்களில் சிலர் காலத்தால் மன்னிக்கப்படாதவர்கள். அவர்கள் மரணத்தின் வழியே தப்பித்துக் கொண்டுவிடுகிறார்கள்.
அவர்கள் என்ன செய்கிறார்கள் என்பதை
அவர்கள் உணரவேயில்லை.
என்பதன் மூலம் கவிஞர் சாவு குறித்து நமக்குள் இருந்த பயத்தைக் கலைத்துவிடுகிறார். மரணம் பற்றிய புதிய புரிதலை ஏற்படுத்தும் இக்கவிதை வாழ்வு எப்படிப்பட்டது என்பதன் வரைபடத்தையே உருவாக்குகிறது.
ஏஞ்சல் கோன்சலஸ் மிக முக்கியமான ஸ்பானிய கவிஞர். சிறந்த இசை விமர்சகர். வழக்கறிஞராகப் பணியாற்றியவர். ஏழு தொகுதிகளாக இவரது கவிதைகள் ஆங்கிலத்தில் வெளியாகியுள்ளன. தனது 82 வது வயதில் உடல்நலக்குறைவால் ஏஞ்சல் கோன்சாலஸ் இறந்தார்.
இரண்டு கவிதைகளும் நாம் அறிந்த காட்சிகளை நிகழ்வுகளை அறியாத விதத்தில் வெளிப்படுத்துகின்றன. குறிப்பாகக் கவிதையின் குரல் மற்றும் வெளிப்படுத்து விதம் அபாரமாக உள்ளது. மேஜிக் செய்பவன் தனது கையில் சீட்டுக்கட்டினை வைத்து மாயவிளையாட்டுக்காட்டுவது போலச் சொற்களின் வழியே பரவசத்தை ஏற்படுத்துகிறார் ஏஞ்சல் கோன்சலஸ்
May 4, 2023
கடைசி விலங்கு
புதிய குறுங்கதை
மதராஸ் பயத்தால் பீடிக்கபட்டிருந்தது.
ஜப்பானியர்களின் ராணுவம் தாக்குதலுக்கு நெருங்கி வருவதாகவும் நகரின் மீது குண்டுவீசப்போவதாகவும் அறிந்த கவர்னர் ஹோப் மதராஸைக் காலி செய்ய உத்தரவிட்டிருந்தார்.

அரசு அலுவலகங்களில் பாதி மதனப்பள்ளிக்கு மாற்றப்பட்டது. உயர் அலுவலகங்களில் சில ஊட்டிக்கு இடம்பெயர்ந்தன. நீதிமன்றம் கோவைக்கு மாற்றலானது. மருத்துவமனையிலிருந்த நோயாளிகளை வேலூருக்கு மாற்றினார்கள்.. இரண்டு லட்சத்திற்கும் மேலான மக்கள் நகரைக் காலி செய்து சொந்த ஊரை நோக்கி போயிருந்தார்கள். எல்லாக் கடைகளும் அடைக்கபட்டிருந்தன. முழுமையாக மின்சாரம் துண்டிக்கபட்டது.
லண்டனை விடவும் உயரியதாகக் கருதப்பட்ட மதராஸ் மிருக காட்சி சாலையில் இருந்த அனைத்து ஆபத்தான விலங்குகளையும் உடனடியாகக் கொல்லும்படியாfக கவர்னர் ஹோப்பின் ஆலோசகர் உத்தரவு பிறப்பித்தார். இதனை நிறைவேற்ற வேண்டிய மதராஸ் கார்ப்பரேஷன் கமிஷனர் ஓ புல்லா ரெட்டி, விலங்குகளைக் கொல்வதற்குப் பதிலாக ரயிலில் ஏற்றி ஈரோடிற்குக் கொண்டு செல்வது எனத் தீர்மானித்தார்
ஆனால் ரயில் பெட்டிகளை ஏற்பாடு செய்வதில் சிக்கல் உருவானது. அத்தோடு வழியில் ஏதேனும் பிரச்சனை ஏற்பட்டு விலங்குகள் தப்பிபோய்விட்டால் என்ன செய்வது என்ற பயமும் உருவானது.

மிருககாட்சி சாலையை நோக்கி அதிகாலையில் மலபார் போலீஸ் படை பிரிவு சென்றது.
சில நாட்களாகவே நகரில் கடைகள் அடைக்கபட்டிருந்த காரணத்தால் விலங்குகளுக்கு உணவு வழங்கப்படவில்லை. அவை பசியோடு நாளெல்லாம் சப்தமிட்டபடியே இருந்தன. ஆகவே கூண்டினை நோக்கி வந்த மலபார் போலீஸ் படையினரை தங்களுக்கு உணவு வழங்க வந்தவர்களாக நினைத்துக் கொண்டன .
தங்கள் உத்தரவுகளை நிறைவேற்ற அவர்கள் துப்பாக்கியை உயர்த்தினார்கள்.
நிமிஷத்தில் அவர்கள் கொன்றுகுவித்த சிங்கம், புலி, சிறுத்தை, மலைப்பாம்பு, பனிக்கரடி போன்ற விலங்குகள் குருதிபெருக மண்ணில் விழுந்து கிடந்தன. யானையைக் கொன்றால் புதைக்க எடுத்துச் செல்வது சிரமம் எனக்கருதி அதை மட்டும் உயிரோடு விட்டார்கள். அசைவற்று நின்றிருந்த யானை திடீரெனப் பிளிறியது.
கூண்டின் கதவைத் திறந்து தன்னை நோக்கி வந்த காவலருக்கு வேடிக்கை காட்டுவது போல கரடி கைகளை உயர்த்தி அசைத்துக் காட்டியது. சிறுவர்கள் முன்னால் இப்படி கையசைத்து விளையாடியிருக்கிறது. காவலரின் இறுகிய முகம் அந்த கையசைப்பை ஏற்கவில்லை. தன் முன்னே நீட்டப்பட்ட துப்பாக்கியை பச்சைக்கேரட் என நினைத்துக் கொண்டு கரடி ஆசையாகக் கடிக்க முயன்றது.
காவலர் தனது துப்பாக்கியால் கரடியின் திறந்த வாயினுள் சுட்டார். தாடையைத் துளைத்துச் சென்றது குண்டு.
கரடி காற்றில் கைகளை அசைத்தபடியே வலியோடு துடித்து விழுந்தது.. அடுத்த குண்டு அதன் நெற்றியை நோக்கிப் பாய்ந்தது.
இனிதே பணி முடிந்ததெனக் காவலர்கள் கொல்லப்பட்ட விலங்குகளின் உடல்களை இழுத்துக் கொண்டு நடந்தனர். கொல்லப்பட்ட விலங்குகளின் மதிப்பு ரூபாய் 4,538 என நோட்புக்கில் குறித்துக் கொண்டார் உயரதிகாரி.
துப்பாக்கியை ஏன் தன்னால் தின்ன முடியவில்லை என்ற குழப்பத்துடன் இறந்து போனது அக் கரடி.
S. Ramakrishnan's Blog
- S. Ramakrishnan's profile
- 657 followers
