S. Ramakrishnan's Blog, page 58

August 14, 2023

கடல் பிரார்த்தனை

ஆங்கிலப் பேராசிரியரான திலா வர்கீஸ் கனடாவில் வசிக்கிறார். தமிழிலிருந்து ஆங்கிலத்திற்கு மொழியாக்கம் செய்து வரும் சிறந்த மொழிபெயர்ப்பாளர். அவர் தற்போது காலித் ஹுசைனியின் கவிதைத் தொகுப்பை கடல் பிரார்த்தனை எனத் தமிழில் மொழியாக்கம் செய்துள்ளார்.

மத்தியதரைக்கடலில் மூழ்கி இறந்த மூன்று வயது சிரிய நாட்டு அகதியான ஆலன் குர்தி என்ற சிறுவனின் வாழ்வை மையமாக கொண்டு எழுதப்பட்டவை இந்தக் கவிதைகள்

தந்தை மகனுக்கு எழுதிய கடிதமாக விரியும் இக்கவிதைகள் சமகாலப் பிரச்சனையைத் தொட்டு அகதி வாழ்வின் துயரைப் பேசுகின்றன.

அழகிய வண்ண ஒவியங்களுடன் இதனை மிகநேர்த்தியாக எதிர்வெளியீடு பதிப்பித்துள்ளார்கள்.

கவிதைகளை மிக நுட்பமாகவும் நேர்த்தியாகவும் மொழியாக்கம் செய்துள்ள திலா வர்கீஸிற்கு எனது வாழ்த்துகள்

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on August 14, 2023 21:39

காந்தியின் சாட்சி

மலையாள எழுத்தாளர் எம்.என் காரசேரி எழுதியுள்ள காந்தியின் சாட்சி என்ற நூலின் வெளியிட்டு விழாவில் கலந்து கொள்கிறேன். இந்த நூலைத் தமிழில் மொழியாக்கம் செய்திருப்பவர் குமரி எஸ். நீலகண்டன்.


ஆல் இந்தியா ரேடியோவில் பணியாற்றும் நீலகண்டன் காந்தியை மையமாகக் கொண்டு ஆகஸ்ட் 15 என்ற நாவலை எழுதியுள்ளார்.

மதராஸ் கேரள சமாஜத்தில் நடைபெறும் புத்தக வெளியீட்டுவிழாவில் எம்.என். காரசேரி , கே.பி. சங்கரன், கே.சி. நாராயணன் உள்ளிட்ட பலரும் கலந்து கொள்கிறார்கள். இந்த இடம் தாசபிரகாஷ் அருகிலுள்ளது.

இன்று மாலை 4 மணிக்குக் கூட்டம் நடைபெறுகிறது.

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on August 14, 2023 21:24

கனவில் வந்தவர்கள்

ஒரு கனவிலிருந்து தான் இங்மர் பெர்க்மென் தன்னுடைய ‘க்ரைஸ் அன்ட் விஸ்பர்ஸ்’ (Cries and Whispers: Ingmar Bergman) திரைப்படத்தை உருவாக்கினார் என்கிறார்கள். அது சாத்தியமே. ஒரு சிவப்பு அறையில் வெள்ளை ஆடை அணிந்த நான்கு பெண்கள் ஒருவரோடொருவர் கிசுகிசுத்துக்கொண்டிருக்கும் தொடர் கனவு தான் இந்தப் படம் உருவாகக் காரணமாக இருந்திருக்கிறது

கனவில் தோன்றும் நிகழ்வுகள். காட்சிகள் விழித்தெழுந்த பின்பும் மறையாமல் நமக்குள் குமிழ் விட்டபடியே இருக்கின்றன படைப்பாளிகள் அதை உருமாற்றிப் புனைவாக்கிவிடுகிறார்கள். பெர்க்மென் திரைக்கதையாக எழுதியிருக்கிறார். பெர்க்மென் படங்களில் தலைப்புகள் வசீகரமானவை. குறிப்பாக இப்படத்தின் தலைப்பான Cries and Whispers பெர்க்மெனின் ஒட்டுமொத்த படைப்புலகிற்கே பொருந்தமான தலைப்பு என்பேன். வேதனை, இயலாமை, தனிமை எனும் முச்சரடுகளைக் கொண்டே அவர் தனது படைப்புகளை உருவாக்கியிருக்கிறார்.

கர்ப்பப் புற்றுநோய் பாதித்து மரணப் படுக்கையிலுள்ள ஆக்னஸ் ஒரு குறியீடே. அவளைச் சந்திக்க வரும் சகோதரிகள் காலத்தினுள் முன்பின்னாகப் பயணிக்கிறார்கள். ஒருவகையில் அவர்கள் கனவில் ஊடுருவிச் செல்கிறார்கள். வெறுப்பும் ஏக்கமும் வெளிப்படுத்த முடியாத துயரமும் கலந்த அவர்களின் இருப்பும் துயரமும் படத்தில் நுட்பமாக வெளிப்படுகின்றன.

ஆக்னசின் மரணத்துக்குப் பிறகு சகோதரிகளின் உலகம் சரிவு கொள்கிறது. மரணத்தின் அருகில் அமர்ந்து அதை விசாரணை செய்யும் பெர்க்மென் பெண் உடலின் குரலைக் கேட்க வைக்கிறார். அவர்களின் பழங்கால வீடு. அந்த அறைகள். அவர்களின் சந்திப்பு என யாவும் கனவில் நடப்பது போலவே இருக்கிறது. மூவரும் சலிப்பையும் கோபத்தையும் விரக்தியையும் கொண்டிருக்கிறார்கள். உடலால் சிறைப்பட்டவர்களாகத் தங்களை உணருகிறார்கள். ஆக்னசின் மரணம் அவர்களுக்கு தங்கள் வாழ்வைப் பரிசீலனை செய்து கொள்ளச் செய்கிறது.

உளவியல் நிபுணரைப் போல துயருற்ற பெண்களின் அகத்தை ஆராயும் பெர்க்மென் அதை மிகவும் உணர்வுப்பூர்வமாக திரையில் பதிவு செய்திருக்கிறார். தனது கேமிரா கோணங்கள். மற்றும் வண்ணங்களின் வழியே காட்சிகளை தீவிரமாக உணர வைக்கிறார் ஒளிப்பதிவாளர் ஸ்வென் நிக்விஸ்ட்

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on August 14, 2023 05:49

August 12, 2023

எழுத்தின் வழியான பயணம்

சுபாஷ் ஜெய்ரேத் ஆஸ்திரேலியாவில் வசிக்கும் இந்திய எழுத்தாளர். இவர் ஒன்பது ஆண்டுகள் ரஷ்யாவில் புவியியல் மற்றும் ரஷ்ய இலக்கியங்களைப் படித்திருக்கிறார். 1986 இல் அவர் ஆஸ்திரேலியாவுக்குக் குடிபெயர்ந்தார். ஹிந்தி, ஆங்கிலம் மற்றும் ரஷ்ய மொழிகளில் இவரது நூல்கள் வெளியாகியுள்ளன. அவரது நாவல் ஆஃப்டர் லவ் 2018 இல் ஸ்பெயினில் வெளியிடப்பட்டது.

இவரது Spinoza’s Overcoat, Travels with Writers and Poets சிறப்பான கட்டுரைத் தொகுப்பாகும். சுபாஷ் ஜெய்ரேத் ரஷ்ய இலக்கியங்களை ஆழ்ந்து கற்றவர் என்பதால் இந்தப் புத்தகத்தைத் தேர்வு செய்தேன். அத்தோடு எனக்கு விருப்பமான எழுத்தாளர்களில் பலரைப் பற்றிய கட்டுரைகள் உள்ள தொகுப்பு என்பதால் மிகவும் ஆசையாக வாசித்தேன்.

தனக்கு விருப்பமான எழுத்தாளரின் படைப்புகள் உருவான இடத்தைத் தேடிச் சென்று பார்த்து. அந்தப் படைப்பு எழுதப்பட்ட சூழல். அன்றைய இலக்கியச் சமூகத் தளங்கள் பற்றி ஆழ்ந்து ஆய்வு செய்து, அதைத் தனது சொந்த வாழ்க்கை அனுபவத்தோடு இணைத்துப் புனைவு மொழியில் கட்டுரைகளாக எழுதியிருக்கிறார் ஜெய்ரேத்.

இதில் Franz Kafka, Marina Tsvetaeva, Mikhail Bulgakov, Carson,, Lorca, Mandelshtam, Mayakovsky, Pasternak, Paul Celan, Hiromi Ito, Baruch Spinoza பற்றிய கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன.

பயணமும் வாசிப்புமே இந்தக் கட்டுரைகளின் முக்கியச் சரடுகள். சுபாஷ் கெய்ரேத்தின் பன்மொழி வாசிப்பும் விரிவான பயணமும் வியப்பளிக்கிறது.

இத்தொகுப்பிலுள்ள காஃப்காவின் சகோதரி ஓட்லா பற்றிய கட்டுரை மிகச்சிறப்பானது. ஓட்லா யூதமுகாமில் கொல்லப்பட்டவர். பிராக்கிலிருந்த பல யூதர்க் குடும்பங்களைப் போலவே, ஓட்லா மற்றும் அவரது சகோதரிகளும் இரண்டாம் உலகப் போரின்போது நாஜிகளால் நாடு கடத்தப்பட்டார்கள். ஒட்லா தெரேசியன்ஸ்டாட்டில் உள்ள வதைமுகாமுக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கே விஷவாயு செலுத்தி ஒட்லா கொல்லப்பட்டார். இந்தக் கட்டுரையில் ஓட்லாவிற்கும் காஃப்காவிற்குமான அன்பை மிகவும் உணர்வுப்பூர்வமாக எழுதியிருக்கிறார்

இது போலவே புல்ககோவ் பற்றிய கட்டுரையில் அவரது எழுத்துகள் தடைசெய்யப்பட்ட சூழல் மற்றும்  அதிகாரத்தின் கெடுபிடி, மோலியர் நாடகத்தை வெளியிட முடியாத போது புல்ககோவ் அடைந்த துயரம் எனக் காலத்தின் திரைக்குப் பின்னே மறைந்து போன கலைஞனின் வாழ்வை அசலாகப் பதிவு செய்திருக்கிறார்.

பால் செலான், இடோ, லோர்கா, மாயகோவ்ஸ்கி, பாஸ்டெர்னாக் மற்றும் ஸ்வெதேவா எனச் சுபாஷின் விருப்பத்திற்குரிய கவிஞர்களையும் அவர்களின் முக்கியக் கவிதையினையும் பற்றிய கட்டுரைகள் அழகானவை. கவிதையின் வழியே கவிஞனின் மனதை ஆராயக்கூடியவை..

ஜப்பானியக் கவிஞரான இட்டோ ஹிரோமியின் ஃகில்லிங் கனோகோ பற்றிய அறிமுகம் முக்கியமானது.

சில புத்தகங்கள் வாசித்த முடிந்தபின்பு நம்மை விட்டு மறைந்துவிடுவதில்லை. அவை நம் மனதில் நிரந்தரமாகக் குடியேறிவிடுகின்றன. பல தருணங்களில் அதன் வரிகள் நமக்குள் எழுகின்றன. அந்தக் கதாபாத்திரங்களை நாம் நேசிக்கத் துவங்கிவிடுகிறோம். நல்ல நண்பரைப் போலப் புத்தகங்கள் உருமாறிவிடுகின்றன. காரின் பின்பக்கக் கண்ணாடியில் உலகம் பிரதிபலிப்பது போல், புத்தகங்கள் நாம் கடந்து வந்த பாதையைக் காட்டி நம்மோடு பயணிக்கின்றன என்கிறார் ஜெய்ரேத். அது உண்மையே.

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on August 12, 2023 01:10

புதுமைப்பித்தன் நாடகம்

இரண்டு மாதங்களுக்கு முன்பாக புதுமைப்பித்தன் வாழ்க்கை வரலாற்றை மையமாகக் கொண்டு நான் எழுதிய நாடகம் சென்னையில் மிகுந்த வரவேற்புடன் நிகழ்த்தப்பட்டது. நண்பர் கருணாபிரசாத் மற்றும் அவரது குழுவினர் இந்த நாடகத்தை எவ்வித பொருளாதார உதவியும் இன்றி தங்களின் சொந்தசெலவில் நடத்தினார்கள். அவர்களுக்குக் கூத்துப்பட்டறை பல்வேறு விதங்களில் துணை நின்றது.

புத்தகத் திருவிழா தோறும் இந்த நாடகம் நிகழ்த்தப்பட வேண்டும் . இன்றைய இளம் தலைமுறைக்கு புதுமைப்பித்தனின் வாழ்வும் படைப்புகளும் அறிமுகமாவதற்கு இது போன்ற முயற்சிகள் தேவை.

ஆனால் இது வரை தமிழ்நாட்டின் எந்தப் புத்தகக் கண்காட்சியிலும் இந்த நாடகம் நடத்த எவரும் முன்வரவில்லை.

தமிழ்நாட்டிலும், பிறமாநிலங்களிலும். அயல்நாடுகளிலும் எத்தனையோ தமிழ் சங்கங்கள், இலக்கிய அமைப்புகள் இருக்கின்றன. அவர்களில் ஒருவர் கூட இது போன்ற நாடகத்தை நிகழ்த்த அழைக்கவில்லை.

அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் மாதம் ஒருமுறை நவீன நாடகங்களை நூலகமே முன்வந்து நிகழ்த்தலாம்.

புதுமைப்பித்தனின் மகள் தினகரி சொக்கலிங்கம் இந்த நாடகத்தை திருநெல்வேலியில் நடத்த வேண்டும் என்று கோரிக்கை வைத்தார். திருநெல்வேலி புத்தகக் கண்காட்சியோ, அல்லது இலக்கிய அமைப்புகளோ முன்வந்தால் இது சாத்தியமாகும்.

தொடர்புக்கு :

கே.எஸ்.கருணாபிரசாத்

தொலைபேசி எண் : 9841450437

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on August 12, 2023 00:02

August 11, 2023

செகாவின் சகோதரி

விடிகாலையின் போது எல்லா ஊர்களும் தனது பெயர்களை இழந்து விடுகின்றன. இயக்கம் தான் ஊர்களின் பெயர்களை, அடையாளத்தை உருவாக்குகிறது. பனிமூட்டம் கலையாத விடிகாலையில் யால்டா வசீகரமான கனவுவெளியைப் போலிருக்கிறது என்று ஆன்டன் செகாவ் ஒரு குறிப்பை எழுதியிருக்கிறார்.

ஊரும் அதன் நினைவுகளும் அதற்குக் காரணமாக மனிதர்களுமே அவரது எழுத்தின் ஆதாரங்கள். ஆன்டன் செகாவ் தன்னை ஒரு போதும் மாநகரத்தின் மனிதராகக் கருதவில்லை. மாஸ்கோவின் தொலைவிலுள்ள சின்னஞ்சிறிய கிராமத்திலே தான் வாழ்ந்திருக்கிறார். தனது வீட்டிலே இலவச மருத்துவமனையும் சிறிய பள்ளிக்கூடம் ஒன்றையும் நடத்தியிருக்கிறார். அவரது உதவியால் அருகிலுள்ள ஊர்களில் இரண்டு பள்ளிகள் நடத்தப்பட்டிருக்கின்றன.

காலரா காலத்தில் கிராமம் கிராமமாகப் பயணம் செய்து இலவச மருத்துவச் சிகிச்சை அளித்திருக்கிறார். சைபீரியாவில் தண்டனை பெற்று வரும் கைதிகள் குறித்து ஆய்வு செய்வதற்காக ஆயிரக்கணக்கான மைல் பயணம் மேற்கொண்டிருக்கிறார்.

செகாவின் அறையில் ஒரு எழுதும் மேஜையும் சுவரில் டால்ஸ்டாயின் படமும் காணப்படுகிறது. மாப்பசானை விரும்பி படித்திருக்கிறார்.

செகாவின் கதையுலகில் மறக்கமுடியாத பெண் கதாபாத்திரங்கள் நிறையவே இருக்கிறார்கள். இரண்டு பக்கக் கதைக்குள் அவரால் பெண்ணின் மனதைத் துல்லியமாகச் சித்தரித்துவிட முடிந்திருக்கிறது.

செகாவின் நிழலாக இருந்தவர் என அவரது சகோதரி மரியாவைக் குறிப்பிடுகிறார்கள். காசநோயாளியாகச் செகாவ் அவதிப்பட்ட நாட்களில் தாயை போல அவரைக் கவனித்துக் கொண்டிருக்கிறார். பல நேரங்களில் செகாவின் கதைகளை அவர் சொல்லச் சொல்ல எழுதியிருக்கிறார். தனது கதைகள் மற்றும் கதாபாத்திரங்கள் குறித்துத் தங்கையிடம் நிறைய விவாதித்துள்ளதாகச் செகாவே குறிப்பிடுகிறார்

ஆன்டன் செகாவின் மறைவிற்குப் பிறகு அவரது எழுத்துக்களைப் பாதுகாத்து அவருக்கான அருங்காட்சியகத்தை உருவாக்கியவர் மரியா. அவரது அயராத முயற்சியின் காரணமாகவே யால்டாவில் செகாவ் அருங்காட்சியகம் சிறப்பாக உருவானது.

Chekhov’s Sister என்றொரு நாவலை W.D.வெதெரெல் எழுதியிருக்கிறார். இந்த நாவல் செகாவின் வாழ்க்கையினையும் செகாவ் நினைவகத்தைக் காப்பாற்றுவதற்கு மரியா எடுத்த முயற்சிகளையும் விரிவாகப் பதிவு செய்துள்ளது

செகாவ் தனது தங்கையின் மீது மிகுந்த அன்பு கொண்டிருந்தார். அதை அவரது குறிப்புகளிலும், கடிதங்களிலும் காணமுடிகிறது. செகாவின் புகைப்படங்கள், கடிதங்கள், கையெழுத்துப்பிரதிகளைத் தேடிச் சேகரித்து முறையாக ஆவணப்படுத்தியிருக்கிறார் மரியா.

தனது சகோதரனின் மகத்தான ஆளுமைக்குப் பின்னால் நிழல் போலத் தன்னை மறைத்துக் கொண்டிருக்கிறார் மரியா. இந்த நாவல் மரியாவின் மீது தனித்த வெளிச்சத்தைப் பரவவிடுகிறது.

செகாவை விட மூன்று வயது இளையவர் மரியா, ஆறு குழந்தைகள் கொண்ட செகாவ் குடும்பத்தின் ஒரே பெண். பத்து வயதில் மரியா தாகன்ரோக் மரின்ஸ்கி மகளிர் பள்ளியில் கல்வி கற்றார். தந்தையின் கடன் காரணமாகக் குடும்பம் மோசமான சூழலை சந்தித்தது .ஆகவே இரண்டு ஆண்டுகளில் அவரது படிப்பு நின்று போனது

பின்பு மாஸ்கோவிற்கு இடம் மாறியபின்பு அங்கே தனியார் பள்ளி ஒன்றில் பயின்றார். 1882 இல் பட்டம் பெற்றார். பின்னர்ப் பெண்களுக்கான தனியார் பள்ளிக்கூடம் ஒன்றில் ஆசிரியராகப் பணியாற்றினார். இசையிலும் ஒவியத்திலும் தனித்திறமை இருந்தது. மாஷா வரைந்த ஓவியங்கள் இன்றும் செகாவ் மியூசியத்தில் காணக்கிடைக்கின்றன.

ரஷ்ய கிராமங்களில் கல்வி எவ்வளவு மோசமானது என்று தெரியுமா. இப்போதைய உடனடி தேவை படித்த திறமையான, நல்ல உள்ளம் கொண்ட ஆசிரியர்களே என்று கார்க்கிக்கு எழுதிய கடிதம் ஒன்றில் செகாவ் குறிப்பிடுகிறார். இந்த எண்ணம் தான் மாஷாவைப் பள்ளி ஆசிரியராக்கியது

மெலிகோவோவில் செகாவ் பண்ணைத்தோட்டம் வாங்கிய பிறகு மாஷா வீட்டைச் சுற்றி பெரிய பூந்தோட்டம் அமைத்தார். செகாவைக் காண வரும் நோயாளிகளுக்கு உதவி செய்வது, செகாவின் எழுத்துப்பணிக்கு உதவி செய்வது. குடும்ப நிர்வாகம். பதிப்பாளர்களுடன் கடித உறவு என அனைத்திலும் ஆர்வமாகத் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார்.

மாஷாவை தவிர வேறு எவராலும் செகாவிற்கு அறிவுரை சொல்ல இயலாது. ஆகவே செகாவின் காதல் விவகாரங்களில் அவரைக் கடிந்து கொண்டதோடு ஓல்காவை திருமணம் செய்ய வேண்டாம் என்றும் அறிவுரை சொன்னவர் மரியா.

ஹிட்லரின் துருப்புக்கள் யால்டா நகரத்தைக் கைப்பற்றிய போது, அங்குள்ள செகாவ் அருங்காட்சியகத்தை நாஜி முகாமாக மாற்ற முயன்றார்கள். மாஷா அதைத் தடுத்து நிறுத்தியதோடு அதை அழிவிலிருந்து பாதுகாத்திருக்கிறார்.

தனது வாழ்நாள் முழுவதையும் செகாவின் எழுத்துகளையும் நினைவுகளையும் முன்னெடுப்பதிலே மாஷா கழித்திருக்கிறார். திருமணமே செய்து கொள்ளாத அவர் தனது 94 வயதில் இறந்து போனார்

மாஷா இல்லையென்றால் இன்று செகாவ் மறக்கப்பட்டிருப்பார். செகாவின் நாடகங்களை அனுமதியின்றி மேடை ஏற்றுவதைத் தடுத்த மாஷா அதில் எந்தத் திருத்தமும் செய்யக்கூடாது என்பதற்கு நீதிமன்ற தடையும் வாங்கியிருக்கிறார். அது போலவே செகாவின் படைப்புகளை முறையாகத் தொகுத்து செம்பதிப்பாக 30 தொகுதிகளைக் கொண்டு வந்தவர் மாஷா. அத்தோடு செகாவின் வெளியிடப்படாத படைப்புகள், கடிதங்களையும் தொகுத்து ஆவணப்படுத்தியிருக்கிறார். மாஷாவின் முயற்சிகளுக்கு உடனிருந்து உதவியவர் வர்கா என்ற போலந்து பணிப்பெண்

1900 கோடையில் செகாவ் The Three Sisters நாடகத்தை எழுதத் தீர்மானித்தபோது ரஷ்ய நாடக உலகில் நட்சத்திரமாக விளங்கும் ஒல்கா நிப்பரை திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தார். ஆனால் அதைத் தனது வீட்டார் அறியாமல் ரகசியமாக வைத்திருந்தார். இந்தத் திருமணத்தில் ஓல்காவின் தாயிற்கு இஷ்டமில்லை.

மாஷாவிற்கு அண்ணனின் திருமணம் பற்றித் தாமதமாகவே தெரிய வந்தது. அவரால் அதை ஏற்க முடியவில்லை. செகாவை மாஸ்கோ செல்லவிடாமல் தடுப்பதில் கவனம் செலுத்தினார். இந்த நாட்களில் அண்ணன் தங்கைக்கு நடுவே ஏற்பட்ட கருத்துவேறுபாடுகளை மையமாகக் கொண்டு Chekhov and Maria என்றொரு திரைப்படம் 2007ல் வெளியாகியுள்ளது.

மருத்துவரான செகாவின் வருவாயில் தான் அவரது குடும்பம் நடந்து வந்தது. செகாவின் இரண்டு சகோதரர்களுக்கும் பெரிய வருவாய்க் கிடையாது. ஆகவே அவர்களும் மனைவி குழந்தைகளுடன் செகாவோடு ஒன்றாகவே வாழ்ந்து வந்தார்கள். இவ்வளவு பெரிய குடும்பத்தை மாஷா நிர்வாகம் செய்து வந்தார். ஆகவே ஓல்காவை திருமணம் செய்து கொண்டதும் குடும்ப வருவாய் நின்றுவிடுமோ என்ற பயம் அவருக்குள்ளிருந்தது. ஆனால் செகாவ் தனது வருவாய் தனது குடும்பத்திற்கானது மட்டுமே என்று உறுதியளித்தார்

செகோவின் மைத்துனர் கான்ஸ்டான்டின் நிப்பர் ரயில்வே துறையின் என்ஜினியராகப் பணியாற்றினார். அந்த நாட்களில் ரயில் பாதை விரிவாக்கம் முழு வேகத்தில் நடைபெற்றுவந்தது. ஆகவே அவருக்கு நிறைய வருவாய்க் கிடைத்தது. முக்கியப் பிரமுகராக வலம் வந்தார். அத்துடன் ஓல்கா புகழ்பெற்ற நடிகையாக இருந்தார் என்பதால் அவர்கள் குடும்பம் மிகவும் வசதியாக விளங்கியது.

அவரது கதைகளில் வருவது போலவே செகாவின் திருமண வாழ்க்கையும் ஏமாற்றத்திலே முடிந்தது. ஓல்காவின் மேல்தட்டு வாழ்க்கை செகாவிற்குப் பொருந்தவில்லை. ஓல்கா மாஸ்கோவில் வசித்தார். மாதத்தில் சில நாட்கள் தான் இருவரும் ஒன்றாக இருந்தார்கள். புகழ் இருவரையும் ஒன்று சேர்ந்த்து. ஆனால் மனம் பிரித்து வைத்தது. காசநோயால் அவதிப்பட்ட ஆன்டன் செகாவின் உடல்நிலை மோசமானதற்கு ஓல்கா முக்கியக் காரணம் என மாஷா நினைத்தார். அந்தக் கோபத்தை அண்ணனிடம் காட்டினார். ஆனால் செகாவ் ஒரு போதும் ஓல்காவை குற்றம் சொல்லவில்லை.

ஆன்டன் செகாவ் மூன்று சகோதரிகள் என்றொரு நாடகம் எழுதியிருக்கிறார். அந்த நாடகத்தில் வரும் ஓல்கா கதாபாத்திரம் மரியாவின் சாயலைக் கொண்டிருக்கிறது. அவள் ஒரு பள்ளி ஆசிரியை. திருமணம் செய்து கொள்ளாதவள். நாடகத்தில் வரும் மற்ற இரண்டு சகோதரிகளிடம் காணப்படும் குணங்களும் கூட மரியாவையே நினைவுபடுத்துகின்றன. இந்த நாடகத்தில் அன்றைய ரஷ்ய குடும்பத்தின் நிலையை, உறவிற்குள் நடைபெறும் அபத்தமான நிகழ்வுகளை, குடும்பச் சொத்திற்கான சண்டையைச் செகாவ் கடுமையாக விமர்சனம் செய்திருக்கிறார்.

குறிப்பாக நாடகத்தின் ஒரு காட்சியில் இன்றுள்ள வாழ்க்கையை முறை எவ்வளவு முட்டாள்தனமானது.போலியானது. அருவருப்பானது என்பதை நூறு இருநூறு வருஷங்களுக்குப் பின்பு தான் உணர்வார்கள். அன்று இவற்றை நினைத்துப் பார்க்கும் போது எவ்வளவு இழிவான வாழ்க்கையை மேற்கொண்டிருந்தோம் என்று தோன்றும் என்கிறார்.

இந்த நாடகத்தில் வரும் மூன்று பெண்களும் திருமணம் என்ற ஒற்றைப் புள்ளியால் இணைக்கபடுகிறார்கள். மூத்தவள் திருமணத்திற்காக ஏங்குகிறாள். ஆனால் திருமணம் நடைபெறவில்லை. நடுவில் உள்ளவள் திருமணம் செய்து கொண்டிருக்கிறாள். ஆனால் அது சந்தோஷமாக இல்லை. மூன்றாவது சகோதரி மாஸ்கோ சென்று நல்ல மணமகனை தேடி மணக்க கனவு காணுகிறாள். செகாவின் குடும்பத்திற்குள் நடைபெற்ற சண்டைகள். பிரச்சனைகள் நாடகத்தில் வேறு வடிவில் வெளிப்படுகின்றன. அன்னை மனைவி சகோதரி என மூன்று பெண்கள் அவர் வாழ்விலும் எழுத்திலும் தொடர்ந்து இடம்பெறுகிறார்கள்.

எமிலி பிராண்டே சகோதரிகளின் வாழ்க்கை வரலாற்றை மையமாகக் கொண்டு இந்த நாடகத்தை எழுதியிருக்கக் கூடும் என்றும் விமர்சகர்கள் சொல்கிறார்கள்.

செகாவின் நண்பரும் ஓவியருமான ஐசக் லெவிடன் மரியாவை காதலித்தார். 1886ம் ஆண்டின் கோடைகாலத்தில் ஒரு நாள் மரியா எஸ்டேட்டிலிருந்து காட்டினை நோக்கி நடந்து கொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக ஓவியர் லெவிடனைச் சந்தித்தார். இருவரும் உரையாடியே நடந்தனர்.

லெவிடன் திடீரென்று ஒரு இடத்தில் அவளது முன்னால் மண்டியிட்டு தனது காதலைத் தெரிவித்தார். இதனால் வெட்கமடைந்த மரியா, எதுவும் பேசாமல், முகத்தைக் கைகளால் மூடிக்கொண்டு, வீட்டிற்குத் திரும்பி ஓடினாள். அன்று நாள் முழுவதும் தன் அறையில் அழுது கொண்டே இருந்தாள்.

வழக்கம் போல் லெவிடன் இரவு உணவிற்கு அவர்களின் வீட்டிற்கு வந்தார். ஆனால் மரியா தனது அறையை விட்டு வெளியே வரவில்லை. மரியா ஏன் சாப்பிட வரவில்லை என்று செகாவ் கேட்டபோது, அவரது சகோதரர் மைக்கேல் அவள் நாள் முழுவதும் அறையை மூடிக்கொண்டு அழுது கொண்டிருப்பதாகச் சொன்னார்.

ஏன் என்று புரியாத செகாவ் அவளது அறைக்கதவைத் தட்டினார். கண்ணீரை மறைத்துக் கொண்டு கதவைத் திறந்த மரியாவிடம் என்ன நடந்தது என்று கேட்டார். தன்னை லெவிடன் காதலிப்பதை பற்றிச் சொல்லிய மரியா தனக்கு என்ன பதில் சொல்வது எனத் தெரியவில்லை என்று வெளிப்படையாகப் பேசினார்

லெவிடனின் காதல் லீலைகளை அறிந்த செகாவ் அந்தக் காதலை ஏற்க மனமின்றி, உனக்கு லெவிடனைப் பற்றித் தெரியாது. அவனால் எந்தப் பெண்ணுடனும் கொஞ்ச காலத்திற்கு மேல் நெருக்கமாக இருக்க முடியாது. உதறிச் சென்றுவிடுவான். அத்தோடு அவனுக்கு வேசைகளுடன் பழக்கம் அதிகம் என உண்மையைச் சொல்லியிருக்கிறார்.

மரியா அதைப் புரிந்து கொண்டு லெவிடனை விட்டு விலகியிருக்கிறாள். செகாவ் போலவே லெவிடனும் இளவயதிலே நோயுற்றவர். இதயசிகிட்சைக்காக ஐரோப்பாவிற்குச் சென்று திரும்பிய லெவிடன் தனது இறுதி நாட்களில் மரியாவிடம் மனம் திறந்து பேசியிருக்கிறார்

ஒருவேளை நான் திருமணம் செய்து கொள்வது என்று முடிவு செய்திருந்தால் உன்னைத் தான் மணந்து கொண்டிருப்பேன் என்று கூறியிருக்கிறார்.

ஆன்டன் செக்கோவின் புகழ்பெற்ற உருவப்படம் ஒசிப் பிரேஸால் வரையப்பட்டதே. அந்த ஓவியம் வரைவதற்குச் செகாவை சம்மதித்து அமரச் செய்தவர் லெவிடனே. இருவரும் இணைபிரியாத நண்பர்களாக இருந்தார்கள்.

செகாவ் வாழ்ந்த நாட்களில் ரஷ்ய சமூகம் மாறிக் கொண்டிருந்தது. குறிப்பாகப் பிரெஞ்சு பண்பாட்டின் தாக்கம் மிக அதிகமாக இருந்தது. உயர்குடி மக்களின் விருந்து, நடனம், ரசனை என யாவும் மாறியிருந்தன. இன்னொரு பக்கம் மிகவும் மோசமான ஏழ்மை, வறுமை. வரிச்சுமை எனத் தேசம் தடுமாறிக் கொண்டிருந்தது.

அரசாங்க ஊழியர்களின் அதிகார துஷ்பிரயோகம். ஊழல் மற்றும் போலித்தனங்களைக் கண்டு மக்கள் கோபம் அடைந்தார்கள். அதைத் தான் செகாவ் தனது கதைகளில் வெளிப்படுத்தினார். குறிப்பாகத் தோல்வியுற்ற திருமணங்களே செகாவ் கதையின் முக்கியக் கருப்பொருள்.

செகாவின் The man in the case கதையில் வரும் பைலிகோவ் மாற்றங்களை விரும்பாத மனிதர். அவர் பள்ளியில் கிரேக்க ஆசிரியராகப் பணியாற்றுகிறார், அவர் விதிகள் மீறப்படுவதை ஏற்காதவர். தன்னைச் சுற்றி நடைபெறும் அனைத்து மாற்றங்களிலும் ஆழ்ந்த சந்தேகம் கொண்டவர், கடந்த காலத்தைப் பொற்காலம் என்று கொண்டாடக் கூடியவர். எந்த மாற்றமும் தன்னைப் பற்றிக் கொள்ளக்கூடாது என்பதில் கவனமாக இருப்பவர். இதற்காகத் தன்னைச் சுற்றி பாதுகாப்பு வளையம் போல உருவாக்கிக் கொண்டு அதற்குள் வாழ்ந்து வருகிறார். ஊரில் உள்ள அனைவரும் அவரை வெறுக்கிறார்கள். அந்தப் பள்ளியில் வேலை செய்யும் இளம்பெண் வரிங்கா மீதான ஈர்ப்பு அவரைக் குழப்பத்திற்குள்ளாக்குகிறது. அவர் காதலிப்பதாக வதந்தி பரவுகிறது. மற்றவர்கள் கேலி செய்கிறார்கள். அதில் நிலைகுலைந்து போகிறார். பள்ளிச்சுற்றுலாவின் போது அவரும் வரிங்காவும் சைக்கிளில் செல்கிறார்கள். அந்தப் பயணம் உள்நோக்கமுடையது என்று வதந்தி பரவுகிறது. இதனால் வேதனை அடைகிறார் பைலிகோவ். இலை உதிர்வது போல அவரது மரணம் எளிதாக நடந்தேறுகிறது.

தன்னைச் சுற்றிய உலகம் பைலிகோவ் போன்ற மனிதர்களால் நிரம்பியிருக்கிறது என்பதைச் செகாவ் நன்றாக உணர்ந்திருந்தார். இவர்கள் செகாவையும் போலித்தனமான வாழ்க்கையினுள் இழுத்தார்கள். இந்த நெருக்கடிகளால் அவர் மனச்சோர்வடையும் போது தனது இசை மற்றும் உரையாடல்களால் அவரை மீட்டவர் மரியா.

செகாவின் மறைவிற்குப் பிறகு அவரது வாழ்க்கை வரலாற்றை யாரை வைத்து எழுதுவது என்ற கேள்வி எழுந்தது. அப்போது மரியா அது இவான் புனினால் மட்டுமே முடியும். அவர் ஒருவரே ஆன்டன் செகாவை நன்கு அறிந்தவர் என்று பதில் அளித்தார். அத்தோடு இவான் புனினிற்கே ஒரு கடிதமும் எழுதினார். இவான் புனின் அதை ஏற்றுக் கொண்டு About Chekhov: The Unfinished Symphony என்ற நூலை எழுதியிருக்கிறார். அதை முழுமையாக முடிப்பதற்குள் புனின் இறந்துவிட்டார். என்றாலும் செகாவின் ஆளுமையைச் சிறப்பாக வெளிப்படுத்தும் விதமாக இதனைப் புனின் எழுதியிருக்கிறார்.

ஆன்டன் செகாவின் கதைகளைத் தேடி சேகரித்து ஆவணப்படுத்துவது எளிதான பணியில்லை. தனது கதைகளின் கையெழுத்துபிரதிகளை அவர் பாதுகாத்து வைக்கவில்லை. அவற்றைப் பதிப்பாளர்களிடம் கேட்டு வாங்கி வெளியான கதைகளுக்கும் அதற்குமான வேறுபாடுகளை ஆராய்ந்து தொகுத்திருக்கிறார் மரியா. அது போலவே செகாவ் தனது காதலிகளுக்கு எழுதிய கடிதங்களையும் கூடச் சேகரித்திருக்கிறார். ஆனாலும் நிறையக் கடிதங்கள் மற்றும் கையெழுத்துப்பிரதிகள் தொலைந்து போயிருக்கின்றன ஓல்கா நிப்பரிடமிருந்து செகாவிற்கு எழுதப்பட்ட காதல்கடிதங்கள் தந்திகளை அவர் மரியாவிடம் கொடுக்கவிரும்பவில்லை. தணிக்கை செய்து அதைத் தானே வெளியிட்டிருக்கிறார்.

ஆன்டன் செகாவின் புகழை விற்பனை பொருளாக மாற்ற முயன்ற சில பதிப்பாளர்கள் அவரது மறைவிற்குப் பின்பு செகாவ் பெயரில் வெளிவராத புதிய கதைகளை வெளியிட்டார்கள். அவர் எழுதாத கடிதங்களைத் தாங்களே உருவாக்கி பதிப்பித்தார்கள். சைபீரிய சிறை அதிகாரியிடமிருந்து கைப்பற்றப்பட்டதாக ஒரு குறுநாவல் ஆங்கிலத்தில் வெளியானது. இவை யாவும் போலி என்பதை மரியா நிரூபித்தார்.

இது போலவே செகாவ் தனது காதலிகளுக்கு எழுதிய கடிதங்களில் பல போலியானவை என்பதையும் அவர் சுட்டிக்காட்டியிருக்கிறார் செகாவின் சொந்தக் கடிதங்களில் 4,500 மட்டுமே எஞ்சியிருக்கிறது 10,000 க்கும் மேற்பட்டோர் அவருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் கடிதம் எழுதியிருக்கலாம் என்கிறார்கள்.

செகாவின் மரணத்திற்குப் பிறகு அவரது உயிலின் படி அனைத்து சொத்துகளும் மரியாவிடம் ஒப்படைக்கப்பட்டன. இதை ஓல்கா முழுமனதோடு ஏற்றுக் கொண்டார். செகாவிற்கு உரிமையான எந்தச் சொத்திற்கும் அவர் உரிமை கோரவில்லை.

செகாவின் சகோதரர்கள் மற்றும் ஓல்கா இணைந்து செகாவின் படைப்புகள். வங்கிச்சேமிப்பு, வீடு, நிலம் உள்ளிட்ட அனைத்து உரிமைகளையும் மாஷாவிற்குச் சட்டப்பூர்வமாக எழுதிக் கொடுத்தார்கள். இதனால் 80,000 ரூபிள் மாஷாவிற்குக் கிடைத்த்து. அந்தப் பணம் அவளைப் பணக்காரப் பெண்ணாக்கியது. மாஷா ஆசிரியர் வேலையைக் கைவிட்டு முழுமையாகச் செகாவ் நினைவகத்தை உருவாக்கும் பணியில் ஈடுபடத் துவங்கினார்

செகாவ் நினைவகத்தை நிர்வகிப்பது பெரும் சவலாக இருந்தது. புரட்சி, உள்நாட்டுப் போர், ஸ்டாலினின் பயங்கரவாதம் மற்றும் ஜெர்மன் ஆக்கிரமிப்பு என அத்தனையும் சமாளித்து மரியா நினைவகத்தைச் சிறப்பாகப் பாதுகாத்து வந்திருக்கிறார்.

இன்று அந்த நினைவகம் ரஷ்யாவின் புகழ்பெற்ற பண்பாட்டு மையங்களில் ஒன்றாக விளங்குகிறது. அங்கே செகாவின் கதைகளைக் கூடி வாசிப்பது. நாடகங்கள் நிகழ்த்துவது. இலக்கிய வெளியிடுகள். கருத்தரங்குகள் என ஆண்டுமுழுவதும் தொடர்நிகழ்வுகள் நடைபெறுகின்றன. அந்த நினைவகத்தில் மரியா வரைந்த ஒவியங்களும் அவள் இசைத்த ப்யானோவும் காட்சிக்கு வைக்கபட்டிருக்கின்றன.

டால்ஸ்டாய் இறந்தபிறகு அவரது இல்லத்தை நினைவகமாக மாற்றும் முயற்சியில் அலெக்சாண்ட்ரா(சாஷா) என்ற டால்ஸ்டாயின் மகள் ஈடுபட்டார். 1921ல் அவர் செகாவின் தங்கை மரியாவை மாஸ்கோவில் சந்தித்து ஆலோசனை கேட்டிருக்கிறார். அந்தச் சந்திப்பின் போது எப்படி நினைவகத்தை நிர்வகிப்பது என்பது குறித்து உரையாடியிருக்கிறார்கள். அரசின் தலையீடு அதிகமிருப்பது குறித்து அலெக்சாண்ட்ரா வருத்தம் தெரிவித்த போது மரியா அதைக் கண்டுகொள்ளாமல் நாம் பணியாற்ற வேண்டும் என்று ஆலோசனை தெரிவித்திருக்கிறார்.

டால்ஸ்டாயின் மகள் சாஷா. தஸ்தாயெவ்ஸ்கியின் மனைவி அன்னா. செகாவின் தங்கை மரியா ஆகிய மூவரும் மகத்தான படைப்பாளிகளின் புகழையும் நினைவுகளையும் உயர்த்திப் பிடித்திருக்கிறார்கள். அவர்களுக்கான நினைவகத்தை உருவாக்கி நடத்தியிருக்கிறார்கள். இன்று ரஷ்ய இலக்கிய மேதைகளை நாம் நினைவு கொள்கிறோம். கொண்டாடுகிறோம். ஆனால் அந்தச் சுடரை ஏற்றிய, தாங்கிப்பிடித்த பெண்களை மறந்துவிட்டோம்.

இந்த மூவரையும் இலக்கியத்தின் மூன்று தேவதைகள் என்று விமர்சகர் எம். துரோவ்ஸ்கயா குறிப்பிடுகிறார். உண்மையான வாசகமது. செகாவின் நினைவுகளுக்குள் ஒரு வானவில் போல மரியா என்றும் ஒளிர்ந்து கொண்டிருக்கிறார்.

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on August 11, 2023 04:15

August 7, 2023

இரண்டு சிகரங்கள்

லியோ டால்ஸ்டாயும் தஸ்தாயெவ்ஸ்கியும் நேரில் சந்தித்துக் கொண்டதில்லை. ஆனால் ஒருவர் மீது மற்றவர் பெருமதிப்பு கொண்டிருந்தனர். வீட்டை விட்டு வெளியேறிய டால்ஸ்டாய் தனது இறுதிப்பயணத்தின் போது தஸ்தாயெவ்ஸ்கியின் கரமசோவ் நாவலைக் கையில் வைத்திருந்தார்.

இன்றைய AI தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி டாக்டர் ஜி. கிருஷ்ண மூர்த்தி இருவர் சந்திப்பை அழகிய புகைப்படமாக்கியுள்ளார்.

ரஷ்ய இலக்கியங்களைக் கொண்டாடும் எனக்குப் பரிசாக இதனை அனுப்பி உள்ளார்.

அவருக்கு மனம் நிறைந்த நன்றி.

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on August 07, 2023 05:37

August 6, 2023

தோற்றம் சொல்லாத உண்மை

The Return of Martin Guerre 1982 ல் வெளியான பிரெஞ்சு திரைப்படம். இது டேனியல் விக்னே இயக்கியது, 16 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் தெற்குப் பிரான்சில் கதை நடக்கிறது.

சின்னஞ்சிறிய பிரெஞ்சு கிராமமும் அதன் எளிய மக்களும் கண்முன்னே விரிகிறார்கள். ஃப்ளெமிஷ் ஓவியர் பீட்டர் ப்ரூகலின் ஒவியங்களைப் போன்று ஒளிரும் காட்சிகள். அபாரமான ஒளிப்பதிவு. அந்தக் கால வீடுகள். மக்களின் உடை, அவர்களின் தோற்றம், வீடுகளில் உள்ள இருளும் ஒளியும் என நாம் காலத்தின் பின்னே நடமாடத் துவங்குகிறோம்

மார்ட்டின், தந்தையின் கண்டிப்பாலும், ஊராரின் கேலி பேச்சாலும் பாதிக்கப்பட்ட இளைஞன். பெர்ட்ராண்ட் டி ரோல்ஸ் என்ற இளம்பெண்ணை அவனுக்குத் திருமணம் செய்து வைக்கிறார்கள்.  மனைவியிடம் அவன் அன்பு காட்டுவதில்லை. எப்போதும் குழப்பமும் கவலையுமாக இருக்கிறான்.

 மார்ட்டினை அவளால் புரிந்து கொள்ள முடியவில்லை. அவனைச் சந்தோஷப்படுத்த பெர்ட்ராண்ட் புதிய உடை தைத்து தருகிறாள். உடை அளவு சரியாக இல்லை என்று மார்டின் கோவித்துக் கொள்கிறான். ஊரில் நடக்கும் தொல்சடங்கு ஒன்றில் அவன் மோசமாக அவமதிக்கபடுகிறான். அன்றிரவே மார்ட்டின் ஊரைவிட்டு ஒடிப்போய்விடுகிறான்.

ஸ்பானிய ராணுவத்தில் பணியாற்றித் திரும்பியதாக எட்டு வருஷங்களுக்குப் பின்பு மார்ட்டின் வீடு திரும்புகிறான். கிராமமே அவனை வரவேற்கிறது. மார்ட்டினின் மாமா, அத்தை, சகோதரிகள், நண்பர்கள் என அனைவரையும் அடையாளம் கண்டு கொள்கிறான். பழைய நினைவுகளைப் பகிர்ந்து கொள்கிறான். மனைவி பெர்ட்ராண்ட் மட்டும் அவனைத் தேடி வரவில்லை. மார்ட்டின் அவளைத் தேடி துணி துவைக்கும் இடத்திற்கே போகிறான். வீட்டை விட்டு ஒடிப்போனதற்காக மன்னிப்புக் கேட்கிறான். மகனை அணைத்துக் கொள்கிறான்.

மார்ட்டின் வீடு திரும்பியதை ஊரே கொண்டாடுகிறது. முன்னை விட மார்ட்டின் நிறைய மாறியிருப்பதை அறிந்து கொள்கிறார்கள். இப்போது மார்ட்டின் எழுதப்படிக்கக் கற்றிருக்கிறான். தைரியமாகப் பேசுகிறான். மனைவியோடு அன்பாகப் பழகுகிறான். உறவினர்களுடன் இனிமையாக நடந்து கொள்கிறான். கடவுள் தான் அவனை ஊருக்கு திரும்ப அனுப்பி வைத்துள்ளதாகச் சொல்கிறார் பாதிரியார்.

மனைவி மகனுடன் சந்தோஷமாக வாழ்க்கையைத் துவங்குகிறான் மார்ட்டின். ஒரு நாள், தான் இல்லாத காலத்தில் நிலத்தில் விளைந்த விளைச்சலுக்கான பணத்தைத் தரும்படி மாமாவிடம் கேட்கிறான். அவர் தர மறுக்கிறார். இருவருக்கும் தகராறு ஏற்படுகிறது. மாமா அவனைத் தாக்குகிறார்.

இந்நிலையில் அந்த ஊருக்கு வரும் இரண்டு வழிப்போக்கர்கள் அவன் மார்ட்டின் இல்லை. அவனது பெயர் அர்னாட் டு டில், அருகிலுள்ள கிராமமான டில்ஹ்வைச் சேர்ந்தவன், உங்களை நடித்து ஏமாற்றுகிறான் என்கிறார்கள்.

இதைக் கேட்ட மாமா அவன் ஒரு போலி ஆசாமி என்று நிரூபிக்க ஊரைக் கூட்டுகிறார். ஆனால் மார்ட்டின் கடந்த காலத்தில் நடந்த அத்தனை நிகழ்வுகளையும் துல்லியமாகச் சொல்கிறான். பெர்ட்ராண்ட் அது தனது கணவன் தான் என்று உறுதியாகச் சொல்கிறாள். கண்தெரியாத பாட்டி அவனது முகத்தைத் தடவிப் பார்த்து அது மார்ட்டினே தான் என்று சத்தியம் செய்கிறாள்.

சந்தேகம் விலகாத மாமா அவனை அடிப்பதற்கு ஆட்களை ஏற்பாடு செய்கிறார்.. பெர்ட்ராண்ட் அவனைக் காப்பாற்றுகிறாள். மாமா தனது ஆட்களைக் கொண்டு அவனைக் கைது செய்து நீதிமன்றம் அழைத்துப் போகிறார். அங்கே நீதி விசாரணை நடைபெறுகிறது. அதில் அவன் மார்ட்டின் என விடுதலை செய்யப்படுகிறான்

ஊர் திரும்பும் மார்ட்டின் தன் மீது மாமா பொறாமை கொண்டு  கொல்ல முயலுவதாகக் குற்றம் சாட்டுகிறான். பெர்ட்ராண்ட் அவனைச் சமாதானம் செய்கிறாள். மறுநாள் மார்ட்டின் மீண்டும் கைது செய்யப்படுகிறான். இந்த முறை அவன் போலி எனப் புகார் கொடுத்தவர்களில் அவனது மனைவியும் ஒருத்தி என அறிந்து கொள்கிறான்

நீதிமன்றத்தில் நீண்ட விசாரணை நடைபெறுகிறது. குறுக்கு விசாரணைகள் அத்தனையிலும் மார்ட்டின் வெல்கிறான். தீர்ப்பு அவனுக்குச் சாதகமாக அமைய இருக்கும் போது எதிர்பாராத திருப்பம் ஏற்பட்டு உண்மை வெளிப்படுகிறது.

பிரெஞ்சு விவசாயிகளின் வாழ்க்கை மதநம்பிக்கைகள். திருமண முறை மற்றும் அவர்களின் உறவுநிலை மிகவும் துல்லியமாகப் படத்தில் சித்தரிக்கபட்டுள்ளது. அது போலவே 16ம் நூற்றாண்டின் குற்றவியல் நீதிமன்றங்களின் செயல்பாடுகள். நீதிகேட்டு வருகிறவர்கள் அங்கேயே தங்கி சமைத்து சாப்பிட்டு வாரக்கணக்கில் காத்திருப்பது, நீதிபதிகளின் வாதம், மார்ட்டின் முன்வைக்கும் வாதம் என சிறப்பாக படத்தை உருவாக்கியுள்ளார்கள்.

பெர்ட்ராண்ட் ஏன் யாரோ ஒருவனைக் கணவன் என ஏற்றுக் கொண்டாள். அந்தக் கேள்விக்கு அவள் தரும் பதில் சரியானது. அதை வார்த்தைகளை விடவும் மௌனத்தால் அவள் புரிய வைக்கும் விதம் அழகானது

நடிக்க வந்த மார்ட்டினை அவனது பையன் ஏற்றுக் கொள்கிறான். கடைசிவரை அவர் தான் தனது தந்தை என்று சொல்கிறான். காரணம் உண்மையான தந்தையை விடவும் மார்ட்டின் காட்டிய அன்பும், சொல்லிய கதைகளுமே. வீடு திரும்பும் மார்ட்டினாக ஜெரார்ட் டெபார்டியூ சிறப்பாக நடித்திருக்கிறார்.

மார்ட்டின் வீடு திரும்பிய பிறகு மனைவியிடம் ஏற்படும் மாற்றம் மிக நுட்பமான காட்சிகளாக விரிகின்றன. குறிப்பாக அவன் காட்டும் அன்பில் பெர்ட்ராண்ட் திளைப்பது, அவனுக்காக உறவினர்களிடம் சண்டை போடுவது. அவனுடன் கூடிக் கழிப்பது என நிஜவாழ்க்கைக்கு மிகவும் நெருக்கமாகத் திரைக்கதை எழுதப்பட்டிருக்கிறது.

Gérard Depardieu, Nathalie Baye, non identifié

படத்தின் ஒரு காட்சியில் மார்ட்டின் தனது மனைவிக்குக் கையெழுத்துப் போடக் கற்றுத் தருகிறான். அவள் தனது பெயரை எழுதிவிட்டு அதிசயத்துடன் பார்க்கிறாள். தன்னால் கையெழுத்துப் போட முடியும் என்று மகிழ்ச்சியோடு அவனை ஏறிட்டு பார்க்கிறாள். அழகான காட்சியது.

குற்றவுணர்விற்கும் அன்பு செலுத்துவதற்குமான இடைவெளியை படம் பேசுகிறது. மார்ட்டினை மையமாகக் கொண்டு படம் இயங்கினாலும் பெர்ட்ராண்ட் தான் கதையின் மையம். அவள் அன்பிற்காக ஏங்குகிறாள். அதைத் தருகிறவனே உண்மையான கணவன் என்று நம்புகிறாள். அதை வீடு திரும்பும் மார்ட்டின் தருகிறான். கடைசிக் காட்சியில் அவளது முகம் அவன் மீதான அன்பையே வெளிப்படுத்துகிறது

இதன் மறுபக்கம் போலவே மார்ட்டினும் அழகான மனைவி குடும்பத்திற்காக ஏங்குகிறான். அவர்களுடன் மகிழ்ச்சியாக வாழ விரும்புகிறான். அதற்காகவே நீதிமன்றத்தில் பொய் சொல்கிறான்

பொய் நிறைய முகங்களைக் கொண்டது. உண்மைக்கு ஒரேயொரு முகம் தான் என்றொரு வசனம் படத்தில் இருக்கிறது. அந்த உண்மையின் முகம் எது என்பதையே படம் விவரிக்கிறது.

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on August 06, 2023 07:27

August 4, 2023

சிறிய கண்டுபிடிப்பாளன்

புதிய சிறுகதை

அசோக் ராஜன் இன்றைக்கும் பத்திரிக்கையாளர்களை வரவழைத்திருந்தார்.

மாதம் ஒருமுறை ஏதாவது புதிய கண்டுபிடிப்புகளைப் பற்றிச் சொல்லி பத்திரிக்கையாளர்களின் கேலிக்கு ஆளாவது அவரது வழக்கம். ஆனால் அதனால் அவர் மனச்சோர்வடைவதில்லை. உற்சாகமாகப் புதிய கண்டுபிடிப்புகளை நோக்கி நகர்ந்துவிடுவதுண்டு.

அன்றைய சந்திப்பிற்கு ஆறு பத்திரிக்கையாளர்கள் வந்திருந்தார்கள். அசோக் ராஜன் தானே தயாரித்த தேநீரை அவர்களுக்கு வழங்கினார். தேநீரை அருந்தியபடியே ஒரு பத்திரிக்கையாளர் “ஏன் இப்படி முட்டாள்தனமான வேலையைத் தொடர்ந்து செய்கிறீர்கள்“ என்று கேட்டார்

அதற்கு ராஜன் புன்சிரிப்போடு“ ஏற்றுக் கொள்ளப்படும்வரை எல்லாக் கண்டுபிடிப்புகளும் முட்டாள்தனமானவை தான். மின்சாரத்தில் சோறு சமைக்க முடியும் என்று என் பாட்டியிடம் சொல்லியிருந்தால் போடா முட்டாள் உளறாதே என்று தான் சொல்லியிருப்பாள். ஆனால் இன்று எலக்ட்ரிக் குக்கர் வந்துவிட்டதே“ என்றார்.

“இந்தப் பைத்தியக்காரத்தனம் உங்களுக்கு எப்போது துவங்கியது“ என்று ஆங்கிலத் தினசரியின் செய்தியாளர் மிருதுளா கேட்டாள்.

“பேனாவிற்கு மை ஊற்றத் தெரியாமல் சிந்திய நாளிலிருந்து. அதற்கு நானே ஒரு கருவியைக் கண்டுபிடித்தேன். அது பேனாவில் சரியான அளவிற்கு மை ஊற்றும். என் பள்ளி வாழ்க்கை முடியும் வரை அதை ரகசியமாக வைத்திருந்தேன் உலகிற்கு அந்தக் கண்டுபிடிப்பை அறிமுகம் செய்வதற்குள் மை ஊற்றும் பேனாக்களின் காலம் முடிந்துவிட்டது“. என்று சிரித்தபடியே சொன்னார் அசோக் ராஜன்

“இன்றைக்கு என்ன புதிய கண்டுபிடிப்பை உலகிற்கு அறிமுகம் செய்ய இருக்கிறீர்கள்“ என்று நக்கலாக கேட்டார் ஒரு பத்திரிக்கையாளர்

“கைதட்டும் கண்ணாடி“ என்று சொன்னார்

அதைப் பார்க்கப் பத்திரிக்கையாளர்கள் ஆர்வமாகக் காத்திருந்தார்கள். அவர்களைத் தனது அறையின் சுவரில் மாட்டப்பட்டிருந்த நிலைக்கண்ணாடி ஒன்றின் முன்பாக அழைத்துச் சென்றார்

“இந்தக் கண்ணாடி முன்னால் நின்றால் எவ்வளவு அழகாக இருக்கிறீர்கள் என்று மதிப்பீடு செய்யும். உங்களை அழகு படுத்திக் கொள்ள உதவிக்குறிப்புகள் வழங்கும். உங்கள் முகம் மிகவும் அழகாக இருந்தால் கைதட்டுகள் கிடைக்கும். இது கைதட்டும் கண்ணாடி.. எப்படி எனது கண்டுபிடிப்பு“.

“அபாரம்“ என்றபடி பாஸ்கரன் என்ற மூத்தபத்திரிக்கையாளர் கண்ணாடி முன்பு நின்றார். அதில் அவரது தோற்றத்தின் அருகே 18.2 சதவீதம் அழகானவர் என்ற கிராப் தோன்றியது. அவர் எவ்வளவு அழகு படுத்திக் கொண்டாலும் 28 விழுக்காட்டைத் தாண்ட முடியாது என்ற குறிப்பைக் கண்ணாடி சொன்னது. ஏமாற்றத்தை மறைத்துக் கொண்டு அவர் “வயசாகிருச்சில்லே“ என்று சமாதானம் சொல்லியபடி இருக்கையில் அமர்ந்தார்

மிருதுளா அந்தக் கண்ணாடி முன் போய் நின்றாள். அவளுக்குக் கண்ணாடி 32.4 சதவீதம் அழகு என்று காட்டியது. அதை அவளால் ஏற்க முடியவில்லை. கண்ணாடி பொய் சொல்கிறது என்று குற்றம் சாட்டினாள். பத்திரிக்கையாளர்கள் ஒருவருக்கும் கைதட்டு கிடைக்கவில்லை.

ஆனால் ஆச்சரியமாக அசோக் ராஜன் கண்ணாடி முன்பு நின்ற போது கைதட்டுகள் கிடைத்தன.

“சார் இது போங்காட்டம். உங்க முகம் மட்டும் அழகா. கண்ணாடி கைதட்டுதே “என்று கேட்டாள் மிருதுளா.

“அதான் எனக்கும் புரியலை. “ என்றபடியே அவர் மறுபடியும் கண்ணாடியின் முன்பு நின்றார். அது பலத்த சப்தமாகக் கைதட்டியது. அவரால் நம்ப முடியவில்லை. தான் உண்மையில் அழகன் தானா.ஆனால் பத்திரிக்கையாளர்களை ஏமாற்றம் அடையச் செய்த அந்தக் கண்டுபிடிப்பு மறுநாள் கேலி செய்தியாக வெளியாகியிருந்தது.

அந்த ஏமாற்றத்தை மறந்து அடுத்த கண்டுபிடிப்பை நோக்கி நகர்ந்திருந்தார். இந்த உலகில் பெரிய கண்டுபிடிப்புகளை நிகழ்த்துவதற்கு அறிவாளிகள். விஞ்ஞானிகள் இருக்கிறார்கள். ஆனால் அன்றாட வாழ்க்கையை மேம்படுத்தும் எளிய கண்டுபிடிப்புகளுக்குத் தான் ஆட்கள் குறைவு. யாரும் அவர்களைப் பொருட்படுத்துவதில்லை என்பதை அசோக் ராஜன் உணர்ந்திருந்தார்

தனது கண்டுபிடிப்புகள் பெரிதும் பெண்களுக்கானவை. அதுவும் குடும்பத் தலைவிகளுக்கானது என அவர் நம்பினார். உயரத்திலிருக்கும் மின்விசிறியில் படிந்துள்ள தூசியைத் துடைப்பதற்காக நீளமான செயற்கை கைகளை அவர் உருவாக்கினார். பற்பசையைக் கடைசி வரை பயன்படுத்தும் பிதுக்கும் கருவியைக் கண்டுபிடித்தார். பால்பாக்கெட்டை துளிப்பால் சிந்தாமல் துளையிடும் கருவியை உருவாக்கினார். வீட்டில் யாரும் தனக்குக் குட்மார்னிங் சொல்வதில்லையே எனக் குடும்பத் தலைவி படும் ஏக்கத்தைப் போக்கும் வகையில் குட் மார்னிங் சொல்லும் அடுப்பை உருவாக்கினார். பொட்டலம் கட்டி வரும் நூல்களைச் சேகரித்துப் பெரிய நூற்கண்டாக்கும் கருவியைக் கூடக் கண்டுபிடித்தார். ஆனால் எல்லாமும் தோல்வியில் தான் முடிந்தன. அதனால் என்ன கண்டுபிடிப்புகள் நமது தேவையை அடையாளம் காட்டுகிறதே எனச் சந்தோஷப்பட்டுக் கொண்டார்

தொடர் தோல்விகளுக்குப் பிறகு அசோக் ராஜன் ஆறு மாதங்களுக்கும் மேலாகப் பத்திரிக்கையாளர்களைத் தனது வீட்டிற்கு அழைக்கவேயில்லை.

திடீரென ஒரு நாள் காலை அவர்களைத் தனது வீட்டிற்கு அழைத்திருந்தார். அவரது முட்டாள்தனமான கண்டுபிடிப்புகளைப் பற்றி அறிந்து கொள்ளக் கொஞ்சம் வாசகர்கள் இருந்தார்கள் என்பதால் பத்திரிக்கையாளர்களும் அவரைத் தேடி வந்திருந்தார்கள்.

இந்த முறை அசோக் ராஜன் மிகுந்த உற்சாகத்துடனிருந்தார்

“என்ன சார் ரொம்ப சந்தோஷமா இருக்கீங்க. “

“நான் டைம் மெஷினை உருவாக்கியிருக்கேன்“ என்றார்

“H G வெல்ஸ் காலத்தில இருந்து சொல்லிகிட்டே இருக்காங்க. எதையும் நம்பமுடியலையே“ என்றார் சுதர்சன்

“நான் கண்டுபிடிச்சிருக்கிறது. பெரிய இயந்திரம்  ஒரு சாதாரண சைக்கிள்“

“காலசைக்கிளா“ என்று கேட்டார் பாஸ்கரன்

“கரெக்ட். என்னோட சைக்கிளை வச்சி ஒரு நாள் பின்னாடி போயிட்டு வர முடியும்“

“நேற்றைக்கும் இன்றைக்கும் என்ன பெரிய மாற்றம் வந்துருச்சி. திரும்பப் போய்ப் பாக்குறதுக்கு“

“இங்க தான் தப்பு பண்ணுறீங்க. நேத்து வாங்கின மாத்திரையை எங்கே வச்சேனு ஞாபகமில்லே. சிலர் இப்படி வீட்டுசாவியை, பர்ஸை தொலைச்சிடுறாங்க. ஏன் தயிருக்கு உறை ஊற்ற மறந்துட்டவங்களுக்கு ஒரு நாள் முன்னாடி போய் அதைச் சரி செய்ய முடிஞ்சா நல்லா இருக்கும்லே. “

“அதுவும் சரிதான்“. என்றார்  ஸ்டீபன்

அசோக் ராஜன் தனது சைக்கிளை அவர்களிடம் காட்டினார். இளஞ்சிவப்பு வண்ண சிறார் சைக்கிள் போலிருந்தது. அதில் ஐபேட் போல ஒரு கருவியைப் பொருத்தியிருந்தார். சற்றும் பொருத்தமில்லாத நீலநிறத்தில் அமரும் இருக்கை உருவாக்கப்பட்டிருந்தது.

“இன்னைக்குக் காலையில இந்தக் காலசைக்கிள்ல பின்னாடி போய் டிரையல் பார்த்தேன். நம்ப முடியாத அனுபவமா இருந்தது. என்றபடியே அவர் தனது சைக்கிளை ஒட்டி வைத்திருந்த பிளாஸ்டிக் கூடையை அவர்கள் முன் நகர்த்தினார். அதில் சில பொருட்கள், துணிகள் கிடந்தன. ஒரு டிபன் பாக்ஸினை திறந்து காட்டி சொன்னார்

“பாஸ்கரன் சார் இது உங்க வீட்டில நேற்று செய்த பூரி. சென்னா மசாலா. நான் சொல்றது சரிதானானு டேஸ்ட் பண்ணி சொல்லுங்க“

அசோக் ராஜன் சொல்வது உண்மை. பாஸ்கரன் வீட்டில் நேற்றிரவு பூரி தான் செய்தார்கள். அவர் டிபன் பாக்ஸில் இருந்த பூரி சென்னா மசாலாவை சாப்பிட்டுவிட்டு“ எங்க வீட்டு பூரியே தான்“ என்றார்

இது போல மிருதுளா வீட்டில் அவள் நேற்று புதிதாக வாங்கிய ஹேண்ட்பேக் அவரது கூடையில் இருந்தது. இது போல நேற்று அணிந்திருந்த சட்டை, கோவிலில் வாங்கிய குங்கும பொட்டலம், நேற்று பார்த்த சினிமா டிக்கெட் என ஒவ்வொன்றாக அவர்களிடம் எடுத்துக் காட்டினார்

“சார். இது எல்லாம் உங்க கிட்ட எப்படி வந்துச்சி. எங்களாலே நம்பவே முடியலை“

“அது தான் டைம் டிராவல்“

“இது மாதிரி சினிமாவில தான் பாத்துருக்கோம். காலத்தின் பின்னாடி போறது நிஜம் தானா“

“நிஜமே தான். இனிமே இந்தச் சைக்கிளை வீட்டுக்கு ஒண்ணு வாங்கி வச்சிகிட வேண்டியது தான். “

“உங்க சைக்கிள்ல நாங்க போய்ப் பாக்கலாமா“

“அதுக்குத் தானே வரவச்சிருகேன். அந்த அதிர்ஷ்டசாலி யாருனு நீங்களே முடிவு பண்ணுங்க“

“உங்களை நம்பவே நம்பாதவர் சிதம்பரம் தான். அவரே போயிட்டு வரட்டும்“

“என்ன சிதம்பரம். டைம் டிராவல் பண்ண ரெடியா“

“அதெல்லாம் வேணாம் சார். நேத்தைக்கும் இன்னைக்கும் லைப்ல ஒரு வித்தியாசமில்லை. அதே கடன்காரன். வீட்ல அதே இம்சை. “

“எங்களுக்காக ஒரு ட்ரிப் போயிட்டு வாங்க சார்“ என அனைவரும் ஒன்றாகக் குரல் கொடுத்தார்கள்.

“ டைம் மெஷின்ல போயிட்டு வர எவ்வளவு நேரமாகும்“

“முப்பது நிமிஷம்“ என்றார் அசோக் ராஜன்

சைக்கிளை வீட்டின் முன்னால் கொண்டு போய் நிறுத்தினார் அசோக் ராஜன். சிதம்பரம் வேண்டாவெறுப்புடன் சைக்கிளில் ஏறி அமர்ந்தார். ராஜன் சைக்கிளின் இயந்திரத்தை இயக்கியபடி சொன்னார்

“சார் இதை ஆபரேட் பண்ணுறது ரொம்பச் சிம்பிள். ரெட் பட்டனை தொட்டா பின்னாடி போகும். இந்த யெல்லோ பட்டனை தொட்டா இன்னைக்கு திரும்ப வந்துடலாம்

சைக்கிள் நகரவேயில்லை. அசோக் ராஜன் ஏமாற்றத்துடன் தனது கருவியைச் சரி செய்தார். சைக்கிள் லேசாகச் சுழலத் துவங்கியது. கடற்கரையில் சைக்கிள் விடும் முதியவரைப் போல மிக மெதுவாகச் சைக்கிள் ஒட்டிக் கொண்டு போனார் சிதம்பரம். நூறடி போவதற்குள் சைக்கிள் காற்றில் மறைந்து போனது. அவர்களால் நம்ப முடியவில்லை. பலமாகக் கைதட்டி பாராட்டுக்களைத் தெரிவித்தார்கள்

சிதம்பரம் திரும்பி வருவதற்காகக் காத்திருந்த நேரத்தில் அசோக் ராஜன் காலம் பற்றிய தனது விசித்திர எண்ணங்களை அவர்களுடன் பகிர்ந்து கொண்டார். அரைமணி நேரத்தில் திரும்ப வேண்டிய சிதம்பரம் இரண்டு மணி நேரமாகியும் திரும்பவில்லை

“நேற்று டிராபிக் ரொம்ப இருந்துச்சில்லே அதான்“ என்றார் பாஸ்கரன்

ஆனால் சிதம்பரம் அன்றிரவாகியும் திரும்பிவரவில்லை. காலசைக்கிளில் மறைந்து போன பத்திரிக்கையாளர் என மறுநாள் செய்தித்தாளில் வெளியாகியிருந்தது. அசோக் ராஜன் காவல்துறையால் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

காலச் சைக்கிள் வேலை செய்யவில்லையா.

சிதம்பரத்திற்கு என்ன நடந்தது.

அசோக் ராஜனால் எதையும் கண்டறிய முடியவில்லை. உண்மையில் கால இயந்திரத்தைப் பயன்படுத்திச் சிதம்பரம் தனது கடன்காரர்களிடமிருந்து தப்பி மறைந்து வாழுகிறார் என்றொரு வதந்தியும் பரவியிருந்தது. எது உண்மை எனத் தெரியவில்லை

அசோக் ராஜன் கைது செய்யப்பட்டுச் சிறையில் அடைக்கப்பட்டார்.

அங்கே படிப்பறில்லாதவர்கள் புத்தகம் படிப்பதற்கான மூக்குக்கண்ணாடி ஒன்றை உருவாக்கியிருக்கிறார் என்றும் அந்தக் கண்ணாடியை அணிந்து கொண்டால் புத்தகத்திலுள்ளதை வாசித்துச் சொல்கிறது என்றும் பேசிக் கொண்டார்கள்.

இது உண்மை என்பதற்குச் சாட்சியமாக சிறை நூலகத்தில் பலரும் மூக்குகண்ணாடி அணிந்து கொண்டு படிக்கும் புகைப்படம் நாளிதழில் வெளியாகியிருந்தது.

உங்களால் இதை நம்ப முடியவில்லை என்றால், படிக்கும் போதே அந்தக் காட்சியைப் பார்க்கவும் கூடிய புதிய கருவி ஒன்றைக் கண்டுபிடிக்க அசோக் ராஜனிடம் தான் சொல்ல வேண்டும்

•••

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on August 04, 2023 23:30

விழித்திருப்பவனின் இரவு

ஹாரிஸ்

வாசிப்பின்/மீள் வாசிப்பின் போது எந்த ஒரு புத்தகம் எத்தனை வருடங்கள் சென்ற பின்னும் புதிய அனுபவத்தை அல்லது அன்றைய நிகழ்வுகளை படிப்பது போல் உணர வைக்கிறத்தோ அதுவே சிறந்த புத்தகம் என்பது எனது அபிப்பிராயம்.  எஸ் ராமகிருஷ்ணனின் ஒவ்வொரு கட்டுரை தொகுப்புகளும்  அவ்வகையானவையே….

விழித்திருப்பவனின் இரவு தொகுப்பை (மீள்)வாசித்து கொண்டிருக்கின்றேன்.  Dracula பற்றிய கட்டுரை – இப்போது கூட Dracula untold என்று ஒரு படம் வந்துள்ளது… எத்தனை வருடங்கள் கடந்தாலும் சிறந்த புத்தகங்கள் obsolete ஆவதில்லை என்பதற்கு ஒரு சிறிய உதாரணம் இது.

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on August 04, 2023 19:25

S. Ramakrishnan's Blog

S. Ramakrishnan
S. Ramakrishnan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow S. Ramakrishnan's blog with rss.