S. Ramakrishnan's Blog, page 61
June 4, 2023
மவுண்ட்பேட்டனின் கடைசிநாள்
லூயி பிரான்சிஸ் ஆல்பெர்ட் விக்டர் நிக்கோலஸ் ஜார்ஜ் மவுண்ட்பேட்டன் எனப்படும் மவுண்ட்பேட்டன் பிரபு இந்தியாவின் வைஸ்ராயாக இருந்தவர். சுதந்திரத்திற்குப் பிறகு இந்தியாவின் முதல் கவர்னர் ஜெனரலாகப் பதவி வகித்தவர். இந்தியப்பிரிவினைக்கு முக்கியக் காரணமாக இருந்தவர்,
இங்கிலாந்தின் அரச குடும்பத்தைச் சேர்ந்த மவுண்ட்பேட்டன் ஆங்கிலக் கடற்படைத் தளபதியாக இருந்து ஓய்வு பெற்றார். இவர் தனது குடும்பத்துடன் அயர்லாந்தின் முல்லாக்மோரிலுள்ள கிளாசிபான் கோட்டையில் விடுமுறையைக் கழித்த போது படுகொலை செய்யப்பட்டார்.

இந்த நிகழ்வின் நேரடி சாட்சிகள் மற்றும் அந்த நாளில் என்ன நடந்தது என்பது குறித்த அவரது குடும்பத்தினரின் நினைவுகளைப் பதிவு செய்துள்ளது பிபிசி தயாரிப்பில் உருவான The Day Mountbatten Died ஆவணப்படம்
ஆகஸ்ட் 27, 1979 அன்று மவுண்ட்பேட்டன் பயணம் செய்த படகில் குண்டை வெடிக்கவைத்துக் ஐரிஷ் குடியரசு இராணுவத்தினர் கொன்றார்கள். அவருடன் மூவர் இக்குண்டுவெடிப்பில் கொல்லப்பட்டனர்.
சுதந்திரத்திற்குப் பிறகும் இந்திய அரசியல் விவகாரங்களில் மவுண்ட்பேட்டன் தலையிட்டு வந்தார். 1964ல் நேருவின் இறுதிச்சடங்கிற்கு வருகை புரிந்த மவுண்ட்பேட்டன் அன்றைய குடியரசுத் தலைவர் ராதாகிருஷ்ணனைச் சந்தித்து உரையாடினார். இந்தியாவை யார் ஆள்வது என்பதைத் தீர்மானிப்பதில் மவுண்ட்பேட்டனுக்கு எப்போதும் விருப்பமிருந்தது. அது இந்திராகாந்தி பிரதமராகும் விவகாரத்திலும் வெளிப்பட்டது. இந்தியர்கள் நினைவில் மவுண்ட்பேட்டன் பெற்றுள்ள இடம் என்பது விநோதமானது.
வடக்கு அயர்லாந்தின் எல்லையிலிருந்து 17 மைல் தொலைவில் இருக்கும் முல்லாக்மோர் மிக அழகான கடற்கரைப்பகுதி. அங்கே ஓய்வில் மீன்பிடிப்பது குடும்பத்தினருடன் விளையாடிப் பொழுதைக் கழிப்பது மவுண்ட்பேட்டனின் வழக்கம்.

வடக்கு அயர்லாந்தில் பிரிட்டிஷ் ஆட்சியை முடிவுக்குக் கொண்டு வந்து அயர்லாந்து தீவை ஒன்றிணைக்க முயன்ற ஐஆர்ஏ என்ற அமைப்பு மவுண்ட்பேட்டனின் வருகைக்கு எதிர்ப்புத் தெரிவித்துப் போராட்டங்களை நடத்தியது.
அதை மவுண்டன்பேட்டன் பெரிதாகக் கண்டுகொள்ளவில்லை. அவர் மீது தாக்குதல் நடத்தப்படக்கூடும் என நினைத்துப் பாதுகாப்பை அதிகப்படுத்தியிருந்தார்கள். ஆனால் மவுண்ட்பேட்டன் தனது பாதுகாப்பை விரும்பவில்லை. ஆகவே சற்று தளர்வான பாதுகாப்பு வளையத்தில் இருந்தார்.
இந்த ஆவணப்படத்தில் அவர் தனது குடும்பத்துடன் விடுமுறையைச் சந்தோஷமாகக் கழிக்கும் காட்சிகள் இடம் பெற்றுள்ளன. அந்த நாளை பல்வேறு நினைவுகளின் வழியே மறுஉருவாக்கம் செய்கிறார்கள்.
ஆகஸ்ட் 27 திங்கள்கிழமை அவர் ஒரு படகில் பயணம் செய்தபோது இந்தக் குண்டுவெடிப்பு நிகழ்ந்தது. உயிருக்குப் போராடிய நிலையில் மீட்கப்பட்ட மவுண்ட்பேட்டன் மருத்துவமனைக்குக் கொண்டு செல்வதற்கு முன்பு உயிர் துறந்தார்
மவுண்ட்பேட்டனின் மகள் பாட்ரிசியா, அவரது கணவர் ஜான் மற்றும் அவர்களது மகன் திமோதி, நிக்கோலஸ் ஆகியோர் இந்த விபத்தில் காயமடைந்த போதும் உயிர் பிழைத்துவிட்டார்கள்.
மவுண்ட்பேட்டனின் இறுதி ஊர்வலம் மிகப்பிரம்மாண்டமாக நடைபெற்றது. முல்லாக்மோரில் மவுண்ட்பேட்டனுக்கான நினைவுசின்னம் உருவாக்கப்பட்டிருக்கிறது.

மன்னர் குடும்பம் பற்றிய ஆவணப்படங்களின் நோக்கம் அதன் பெருமைகளை நினைவூட்டுவதே. இப்படமும் அந்த வரிசையில் சேர்க்க வேண்டியதே.
மவுண்ட்பேட்டனின் மகள் பமீலா Daughter of Empire: Life as a Mountbatten என்ற புத்தகம் எழுதியிருக்கிறார். மவுண்ட்பேட்டன் வாழ்க்கையை மையமாகக் கொண்டு Viceroy’s House திரைப்படம் உருவாக்கபட்டுள்ளது. இவை யாவிலும் உண்மை மிகக் குறைவாகவே வெளிப்பட்டுள்ளது.
June 2, 2023
நீல்பாக் பள்ளி
ரிஷிவேலி அருகே அமைந்துள்ள நீல்பாக் பள்ளியை பற்றிய இந்த இந்த ஆவணப்படம் தனித்துவமான கற்றல் முறையினையும் பள்ளி சூழலையும் விவரிக்ககூடியது.
டேவிட் உருவாக்கியுள்ள இப் பள்ளியில் குழந்தைகள் ஐந்து மொழிகளைக் கற்றுக் கொள்கிறார்கள். சுதந்திரமாக செயல்படுகிறார்கள்.
இப்பள்ளி கிராமப்புற மாணவர்களின் கற்றல் திறனை வளர்க்க புதிய வழிமுறைகளை அறிமுகம் செய்துள்ளது.
நீல்பாக்கின் கதை கல்வியில் நாம் விரும்பும் மாற்றங்களை செயல்படுத்த முனைந்த டேவிட்டின் கனவாகவும் விரிகிறது.
June 1, 2023
கவிஞனும் கவிதையும் -4 சு துங் போவின் நிலவு
அமெரிக்கக் கவிஞர் W.S.மார்வின் பதினோறாம் நூற்றாண்டில் வாழ்ந்த சீனக்கவிஞர் சு துங் போ (Su Tung-Po) பற்றி ஒரு கவிதை எழுதியுள்ளார்.

சு துங் போவிற்கு ஒரு கடிதம் என்ற அந்தக் கவிதையில்
கிட்டத்தட்ட ஆயிரம் ஆண்டுகளுக்குப் பிறகு
நீங்கள் கேட்ட அதே கேள்விகளைத்தான்
நானும் கேட்கிறேன்
தொனியைத் தவிர வேறு எதுவும் மாறவில்லை
என்கிறார் மார்வின்
சு துங் போவை வாசித்தவர்களுக்குத் தெரியும். அவர் விடையில்லாத கேள்விகளை எழுப்பி அதன் வழியே இயற்கையின் மர்மத்தை, வாழ்வின் புதிர்களை அவிழ்க்க முயன்றவர். பல நேரங்களில் அவரது கவிதையின் முடிவில் அவர் எழுப்பிய கேள்வி மறைந்து வியப்பு மேலிடுவது வழக்கம்.
எதையும் கேள்வியின் மூலம் அறிந்துவிட முடியும் என நாம் நினைக்கிறோம். ஆனால் கால மாற்றத்தில் அதே கேள்விகள் வேறு வடிவில் தோன்றியபடியே இருக்கின்றன. பதில் கிடைத்தபாடில்லை. நம்மால் எந்த மர்மத்தையும் அனுமதிக்கமுடியாது. எல்லாவற்றிற்கும் உடனே விடையைத் தெரிந்து கொள்ள வேண்டும் என முயல்கிறோம். மர்மத்தை அவிழ்க்க இயலாத போது அதை முற்றிலும் விலக்கவே முயல்கிறோம். ஆனால் சு துங் போ போன்றவர்கள் இயற்கையின் மர்மத்தை ஆராதிக்கிறார்கள். அந்த மாய இருளை விரும்புகிறார்கள். ருசிக்கிறார்கள்.

சு துங் போ சீனா முழுவதும் நடந்து அலைந்திருக்கிறார். அரண்மனை வாழ்விலிருந்து எளிய குடிசை வாழ்க்கை வரை அனுபவித்திருக்கிறார். சு துங் போவை புரிந்து கொள்ள முடிந்தவர்களே அரசுப் பணிக்குத் தகுதியானவர்கள் என்ற நிலை இருந்திருக்கிறது. சிறந்த ஓவியராகவும் விளங்கியிருக்கிறார். தாவோவை ஆழ்ந்து கற்றவர் என்பதால் அதனை இலக்கியத்தில் வெளிப்படுத்த முயன்றிருக்கிறார்.
இன்னொரு கவிதையில் எவ்வளவு காலமாக இந்த நிலவு ஒளிர்ந்து கொண்டிருக்கிறது என்ற கேள்வியைச் சு துங் போ எழுப்புகிறார் அதற்கான பதிலை வானிடம் கேட்க மதுக்கோப்பையை உயர்த்துகிறார். அந்தக் கவிதையில் உறக்கமில்லாதவர் மீதும் நிலவு ஒளிர்கிறது. அது போலவே பிரிந்தவர்கள் மீது ஏன் அது முழுமையாக ஒளிர்கிறது என்ற கேள்வியினையும் எழுப்புகிறார். கவிதையின் முடிவில் நிலவொளியின் மந்திரத்தைப் பகிர்ந்து கொள்ள நீண்ட காலம் வாழ்வோம் ஆயிரம் மைல் தொலைவில் இருந்தாலும் என்கிறார்
சு துங் போவின் நிலவு என்பது மகிழ்ச்சியின் அடையாளம். நிலவை எதிர்கொள்ளும் போது பிரிவும் வீடும் நினைவில் வந்துவிடுகின்றன. பிரிந்தவர்கள் ஒரே நிலவைக் காணுகிறார்கள். நிலவின் தூய வெளிச்சம் அவர்களை இணைத்துவிடுகிறது. நிலவு எதையோ முணுமுணுக்கிறது. அதைச் சிலரே கேட்கிறார்கள். நிலவின் தனிமை உலகை அழகாக்குகிறது. தனது பயண வழியில் கண்ட நிலவினை பற்றி நிறையக் கவிதைகள் எழுதியிருக்கிறார்.

மேற்குலகில் புத்திசாலித்தனம், விசுவாசம், அழகு, அன்பு போன்றவற்றுடன் நிலவு அடையாளப்படுத்தப்படுகிறது. ஆனால் சீனப்பண்பாட்டில் அது நித்தியத்துவம், வீடற்ற உணர்வு. பிரிவுத்துயர், காதலர் இணைதல். ஆகியவற்றைக் குறிக்கிறது.
பிரிவின் வலியை சு துங் போ எழுதிய இன்னொரு கவிதை அழகாக வெளிப்படுத்துகிறது
அன்றிரவு ஒரு அமைதியான கனவு
என்னை வீட்டிற்கு அழைத்துச் சென்றது
சிறிய ஜன்னலைப் பார்த்தபடி
நீ உன் நீண்ட சிகையைச் சீவிக்கொண்டிருந்தாய்
வார்த்தையின்றி ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டோம்
ஆயிரம் வரிகளில் கண்ணீர் வழிந்தது
••
மனித வாழ்க்கையை எதற்கு ஒப்பிடலாம் எனத் துவங்கும் சூ துங்போவின் கவிதையில் பனியில் தரையிறங்கும் காட்டுவாத்துகள் தனது காலடித்தடத்தை பதியவிட்டு எங்கே செல்கிறது என அறியாமல் மறைந்துவிடுவதைப் போன்றதே வாழ்க்கை என்கிறார்.
எதற்காகப் பறவைகள் பனியில் தரை இறங்கின. எங்கே செல்கின்றன என்பதை அறியமுடியாது. ஆனால் இந்தத் தற்செயல் நிகழ்வில் அபூர்வமான அழகு வெளிப்படுகிறது.
பனியில் தனது காலடித்தடங்களைப் பதிய வைக்க வேண்டும் என்பது பறவைகளின் நோக்கமில்லை. அது தன்னியல்பில் நடைபெறும் செயல்.. காலடித்தடம் என்பது நினைவின் வடிவம் தானா.
சு துங் போ இயற்கையை வியக்கவில்லை. மாறாக அது நிரந்தரமற்ற நிரந்தரம் என்பதைச் சுட்டிக்காட்டுகிறார்.
வானம் என்பது ஒரு பெரிய மேஜை
அதனடியில் நான் மறைந்திருக்கிறேன்
என அவரது இன்னொரு கவிதை துவங்குகிறது ‘
சு துங்போ வானைப் பெரிய மேஜையாகக் கருதியதில் வியப்பில்லை ஆனால் நான் அதனடியில் மறைந்திருக்கிறேன் என்பதில் மேஜையடியில் ஒளிந்த குழந்தைப் பருவம் வெளிப்படுகிறது. அது அவரது குழந்தைப்பருவம் மட்டுமில்லை. நமது குழந்தைப்பருவமும் தான். வான் குறித்த கற்பனையில்லாத சிறுவர்களே இல்லை.
பள்ளி வயதில் வானைப் பார்க்கும் போது ஏற்பட்ட கற்பனைகளைப் பெரியவர் ஆனதும் நாம் இழந்துவிடுகிறோம்.
பெரியவர்கள் வானை கைநீட்டி அழைப்பதுமில்லை. தன்னுடைய வீட்டிற்கு கூட்டிச் செல்வதுமில்லை. பத்துவயதில் வான் மீது கொண்ட விருப்பம் புதிரானது. .எந்த மேகம் யாருடையது என்று சிறார்களுக்குச் சண்டை வருவதைக் கண்டிருக்கிறேன். எல்லா ஊர்களுக்கும் சேர்ந்து ஒரு பொதுவான வானமிருப்பதை அந்த வயதில் ஏற்றுக் கொள்ளமுடியவில்லை. ஒவ்வொரு ஊருக்கும் ஒரு ஆகாசமிருக்கிறது. அதன் மேகக்கூட்டங்களும் ஒளிரும் நட்சத்திரங்கள் கொண்ட இரவும் அதற்கு மட்டுமே உரியது என நம்பியிருந்தேன். அது நிஜமில்லை என்று புரியவைக்கபட்டபோது வானம் மிகவும் தொலைவிற்கு சென்றுவிட்டிருந்தது.
நட்சத்திரங்களைப் பற்றி எப்போது பேசத் துவங்கினாலும் அது கவிதையை நோக்கியே திரும்பிவிடுகிறது. நட்சத்திரங்கள் தான் அதிகக் கற்பனையைத் தூண்டுகின்றன. அல்லது கவிதையில் ஒளிரும் நட்சத்திரங்கள் வானில் காணுவதை விடவும் அழகாக இருக்கின்றன.
கவிதையின் ஒரு வரி அல்லது ஒரு சொல் நம்மைக் காலத்தின் பின் அழைத்துச் சென்றுவிடுகிறது. அல்லது நாம் அப்படிச் செல்வதற்குக் கவிதையைச் சாதனமாக்கிக் கொள்கிறோம்.

சு துங்-போ‘ பதினோறாம் நூற்றாண்டில் வாழ்ந்தவர். அரசியல்வாதி, தத்துவவாதி, கவிஞர், ஓவியர், பொறியாளர், கட்டிடக் கலைஞர் நீதிபதி மற்றும் ஆட்சியாளர்களுக்கு ஆலோசகர் எனப் பன்முகத்தன்மை கொண்டிருந்திருக்கிறார். இவர் தான் சீனாவின் முதல் பொது மருத்துவமனையைத் தொடங்கியவர். அரசின் சீர்திருத்தங்களையும் தவறான கொள்கைகளையும் வெளிப்படையாகக் கண்டித்த சு துங் போ நீதிமன்றத்தைத் தவளைகள் கூச்சலிடும் இடம் என்று கேலி செய்து, எதிர்ப்புக் கவிதை எழுதினார்.. இதன் காரணமாகக் கைது செய்யப்பட்டதுடன் சொந்த மாகாணத்திலிருந்தும் வெளியேற்றப்பட்டார். பின்பு சு துங் போ பௌத்த தியானத்தில் அதிக ஈடுபாடு கொள்ளத் துவங்கினார். தன் வாழ்நாளில் சு துங் போ இரண்டாயிரத்துக்கும் அதிகமான கவிதைகள் எழுதியிருக்கிறார்
அரசியல் நெருக்கடிகளால் வெளியேற்றப்பட்ட சு துங் போ ஒரு கவிதை எழுதினார். அதில் தான் கனவில் துள்ளியோடும் மானாகவும் நிஜத்தில் கொதிக்கும் சட்டியில் போடக்காத்திருக்கும் கோழியாகவும் உணர்கிறேன் என்கிறார். இந்த மனநிலையின் நீட்சியாக தனது வீட்டில் அசைவ உணவுகள் சமைப்பதை நிறுத்தினார். தனக்குப் பிடித்தமான உணவைப் பற்றி நிறையக் கவிதைகள் எழுதியிருக்கிறார், லிச்சிப் பழங்களைப் புகழ்ந்து அவர் எழுதிய கவிதை சிறப்பானது.
அவரது கருணை விலங்குகளிடம் மட்டும் வெளிப்படவில்லை. ஹுவாங்சோவில், உள்ளூர் விவசாயிகள் வறுமையின் காரணமாகப் பச்சிளங் குழந்தைகளைக் கொல்கிறார்கள் என்பதை அறிந்தவுடன், குழந்தைகளைக் காப்பதற்காக நன்கொடைகளை ஏற்பாடு செய்தார், இதன் காரணமாக ஒரு வருடத்தில் சுமார் நூறு உயிர்களைக் காப்பாற்றியிருக்கிறார்.
தாவோ சிந்தனைகளை ஆழ்ந்து உள்வாங்கித் தனது கவிதைகளில் வெளிப்படுத்துகிறார் சு துங் போ. அவர் காணும் மலையும் நிலவும் மலர்களும் மீன்களும் தோற்றத்தைக் கடந்து வேறு உண்மையை அடையாளம் காட்டுகின்றன. வாழ்வின் இனிமையைப் பேசும் அதே வேளையில் நித்தியமின்மையைச் சுட்டிக்காட்டவும் செய்கிறார்.
ஆயிரம் வருஷங்கள் என்பது ஒரு கனவைப் போல சட்டெனக் கடந்துவிடக்கூடியது என்று ஒரு கவிதையில் சொல்கிறார். உண்மை. ஆனால் தனது கவிதையின் வழியே அவர் இன்றும் நம்முடன் உரையாடுகிறார். நெருக்கமாகிறார்.
நான் சேணத்தை விடவும் செருப்பையும் ஊன்று கோலையும் விரும்புகிறேன். சோர்ந்து வைக்கோல் போரில் உறங்க ஆசைப்படுகிறவன். மழையிலும் பனியிலும் அலைந்து திரிய விரும்புகிறவன் என்கிறார். அந்தப் பயணி காற்றைப் போலச் சஞ்சரிக்கிறான். நீரைப் போல அனைத்தையும் தழுவிக் கொள்கிறான். வாழ்வில் மட்டுமின்றிக் கவிதையிலும் சு துங் போ தனித்த பயணியே.
May 31, 2023
டோக்கியோ விசாரணை
இரண்டாம் உலகப்போரின் முடிவிற்குப் பின்பு ஹிட்லரின் போர்க்குற்றங்களையும் அதற்குக் காரணமாக இருந்த நாஜி ராணுவ அதிகாரிகள். அமைச்சர்கள், நீதிபதிகள் உள்ளிட்ட உயர்பதவி வகித்தவர்களையும் விசாரிக்க நூரென்பெர்க்கில் ஒரு விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது. நீதிமன்ற வரலாற்றில் நூரென்பெர்க் விசாரணை மிகவும் முக்கியமானது. இந்த விசாரணையை மையமாகக் கொண்டு 1961ம் ஆண்டு JUDGMENT AT NUREMBERG என்ற திரைப்படம் ஸ்டான்லி கிராமர் இயக்கத்தில் வெளியானது. தலைமை நீதிபதி டான் ஹேவுட்வாக ஸ்பென்சர் டிரேசி சிறப்பாக நடித்திருப்பார். அற்புதமான திரைப்படம்.

நூரென்பெர்க் விசாரணையைப் போலவே ஜப்பான் மீது ஒரு சர்வதேச விசாரணை நடைபெற்றது. இரண்டாம் உலகப்போரில் ஜப்பான் செய்த போர்க்குற்றங்கள் மற்றும் பியர்ல் ஹார்பர் தாக்குதல்,பல்வேறு நாடுகளில் ஜப்பானிய ராணுவம் செய்த கொடூரங்களை விசாரிக்க நேச நாடுகளின் தலைமை தளபதி டக்ளஸ் மெக்ஆர்தர் சிறப்புத் தீர்ப்பாயம் ஒன்றை ஏற்படுத்தினார்
1931 ஆம் ஆண்டு மஞ்சூரியா மீதான ஜப்பானிய படையெடுப்பிலிருந்து தொடங்கி ஜப்பான் சரணடைவது வரை நடந்த விஷயங்களை இந்த விசாரணையில் ஆராய்வதாக முடிவு செய்யப்பட்டது..

நீதிமன்றத்தின் அமைப்பு, அதிகார வரம்பு, அதன் குற்ற விசாரணைக்கான நடைமுறைகளை நிறுவுவதற்கு ஒரு சாசனம் வரைவு செய்யப்பட்டது; நூரென்பெர்க் விசாரணையின் மாதிரியைக் கொண்டு இதனை உருவாக்கினார்கள்.
வில்லியம் வெப் தலைமையில் ஆஸ்திரேலியா, கனடா, சீனா, பிரான்ஸ், இந்தியா, நெதர்லாந்து, நியூசிலாந்து, பிலிப்பைன்ஸ், சோவியத் யூனியன், இங்கிலாந்து ஆகிய பதினொரு நாடுகளைச் சேர்ந்த நீதிபதிகள் இக் குழுவில் இடம்பெற்றிருந்தார்கள். ஜப்பானியப் பிரதமர், அமைச்சர்கள் உயரதிகாரிகள். ராணுவ தளபதி, கடற்படை தளபதி உள்ளிட்டோர் மீது விசாரணை நடத்தப்பட்டது.
2016ல் வெளியான Tokyo Trial நான்கு பகுதிகள் கொண்ட தொலைக்காட்சித் தொடர். இதனைத் தற்போது ஒரே திரைப்படமாக வெளியிட்டிருக்கிறார்கள். இந்த தொடரை பீட்டர் வெர்ஹோஃப்; ராப் டபிள்யூ. கிங் இணைந்து இயக்கியுள்ளார்கள்.
JUDGMENT AT NUREMBERG போலவே இப்படமும் நீதிபதிகளின் வருகையில் துவங்குகிறது. நீதி விசாரணை நடக்கும் இடம் தேர்வு செய்யப்படுகிறது. ஒரியண்டல் ஹோட்டலில் அவர்கள் தங்க வைக்கபடுகிறார்கள். நீதி விசாரணையை எப்படிக் கொண்டு செல்வது என்பதற்கான திட்டம் தயாராகிறது. பிரதமர் உள்ளிட்ட முக்கிய அமைச்சர்கள். ராணுவ தளபதி மற்றும் இருபத்தி எட்டு உயர்மட்ட தலைவர்கள் நீதிமன்றத்தால் விசாரிக்கப்பட்டார்கள்

பல்வேறு போர்க்குற்றங்கள் மற்றும் பொதுமக்களைக் கொன்று குவித்தது. போர் கைதிகளை மோசமாக நடத்தியது. பாலியல் குற்றங்கள் உள்ளிட்ட ஐம்பத்தைந்து குற்றச்சாட்டுகள் அவர்கள் மீது சுமத்தப்பட்டன.
இந்த விசாரணை மூன்று ஆண்டுகாலம் நடைபெற்றது. ஜப்பானிய அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் சார்பில் அமெரிக்க வழக்கறிஞர்களும் ஜப்பானிய வழக்கறிஞர்களும் வாதிட்டார்கள். இந்த நீதி விசாரணையை எப்படிக் கொண்டு செல்லவேண்டும் என்பதில் அமெரிக்காவின் தலையீடு மிக அதிகமாக இருந்தது.
டோக்கியோ நீதி விசாரணையிலிருந்து ஜப்பானியப் பேரரசர் ஹிரோஹிட்டோ மற்றும் அவரது குடும்பம் விதிவிலக்கு அளிக்கப்பட்டிருந்தார்கள். மன்னர் போரை விரும்பவில்லை. கட்டாயத்தின் பேரில் தான் சம்மதித்தார் என்று பிரதமர் நீதிமன்றத்தில் தெரிவித்தார். அத்தோடு போருக்கு பிந்திய ஜப்பானின் வளர்ச்சிக்கு மன்னரின் தயவு முக்கியம் என அமெரிக்கா கருதியது.
நீதிவிசாரணை நடைபெற்று வந்த போது ஜப்பானிய அதிகாரிகளில் இருவர் இறந்துவிட்டார்கள். ஒருவருக்கு மனநிலை பேதலித்துவிட்டது. ஆகவே அவர் விசாரணைக்குத் தகுதியற்றவராக விலக்கப்பட்டார்.

31 மாதங்களில் 800க்கும் மேற்பட்ட நீதிமன்ற அமர்வுகளுக்குப் பிறகு நீதி விசாரணை முடிவுக்கு வந்தது
1948 நவம்பர் 12 அன்று நீதிமன்றம் தனது தீர்ப்பை வழங்கியது. இதில், ஏழு பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது, 16 பேருக்கு ஆயுள் தண்டனை, ஒருவருக்கு 20 ஆண்டுக்கால சிறைவாசம், மற்றொருவருக்கு ஏழு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது
நீதிபதியான ராதாபினோத் பால் தனியே ஒரு தீர்ப்பினை வழங்கினார். பொது தீர்ப்பின் சில விஷயங்களில் டச்சு மற்றும் பிரெஞ்சு நீதிபதிகள் மாற்றுக் கருத்து தெரிவித்தார்கள்.
இந்த வரலாற்று ஆதாரங்களைக் கொண்டு Tokyo Trial திரைப்படம் சிறப்பாக உருவாக்கப்பட்டிருக்கிறது. நீதிபதிகளின் தோற்றம் மற்றும் நீதிமன்ற உரையாடல்கள். சாட்சிகள் விசாரிக்கப்படும் முறை, அன்றைய டோக்கியோவின் சித்தரிப்புகள் ஆகியவை துல்லியமாக காட்சிப்படுத்தபட்டிருக்கின்றன.

அரசியல் தலையீடு இல்லாமல் விசாரணை நடக்க வேண்டும் என்பதற்கான முயற்சிகளை வெப் மேற்கொள்கிறார் ஆனால் அது தோல்வியில் முடிகிறது. அமெரிக்காவிற்குச் சார்பாக. குழுவாகச் செயல்படும் சூழல் உருவாகிறது. ஜப்பானை எந்தச் சட்டத்தின் அடிப்படையில் விசாரிப்பது எனப் பால் எழுப்பும் கேள்வி. பாரிஸ் சாசனம் பற்றிய விவாதங்கள் எனப் பல்வேறு கோணங்களில் படம் நீதி விசாரணையை மிக அழுத்தமாக, சுவாரஸ்யமாகப் பதிவு செய்திருக்கிறது.
இப்படத்தில் இந்தியாவின் பிரதிநிதியாக இடம்பெற்ற ஜஸ்டிஸ் பால் தனித்துவமிக்கக் கதாபாத்திரமாக ஒளிருகிறார். ஜஸ்டிஸ் பாலாக இர்பான் கான் சிறப்பாக நடித்திருக்கிறார். குழுவிடம் தனது தரப்பை அவர் முன்னெடுத்து வைப்பது அழகான காட்சி. உறுதியான நிலைப்பாடுடன் அவர் தொடர்ந்து செயல்பட்டிருப்பதைக் காணமுடிகிறது.

ராதாபினோத் பால் கல்கத்தா பிரசிடென்சி கல்லூரியில் கணிதம் பயின்றவர் பின்பு கல்கத்தா பல்கலைக்கழகத்தின் சட்டக் கல்லூரியில் பயின்று வழக்கறிஞராகப் பணியாற்றியிருக்கிறார். இவரது திறமை காரணமாக. பிரிட்டிஷ் அரசாங்கம் 1927 ஆம் ஆண்டு பாலை சட்ட ஆலோசகராக நியமித்தது இந்திய வருமான வரிச் சட்டத்தை உருவாக்குவதில் பால் முக்கியமானவராக பணியாற்றினார்.
1923 முதல் 1936 வரை கல்கத்தா பல்கலைக்கழகத்தின் சட்டக் கல்லூரியில் பேராசிரியராகப் பணியாற்றினார். பின்பு 1941 இல் கல்கத்தா உயர் நீதிமன்றத்தின் நீதிபதியாகவும், பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராகவும் பதவி வகித்திருக்கிறார்.
டோக்கியோ விசாரணையின் துவக்கத்தில் இந்திய நீதிபதி சேர்க்கபடவில்லை. ஆனால் விசாரணை துவங்கிய பின்பு இந்தியாவின் தரப்பை வெளிப்படுத்த ஒரு நீதிபதியை பரிந்துரைக்கிறார்கள். அப்படியே பால் டோக்கியோ விசாரணையில் இடம்பெறுகிறார்,
டோக்கியோ விசாரணையின் போது ஹிரோஷிமா நாகசாகியில் அமெரிக்கா அணுகுண்டுவீசியது குற்றமில்லையா. அது ஏன் விசாரிக்கப்படவில்லை என்ற கேள்வியை ராதாபினோத் பால் எழுப்பினார். அதை மற்ற நீதிபதிகள் விரும்பவில்லை. அத்தோடு ஜப்பானைப் போருக்குள் தள்ளியது அமெரிக்கா தான் எனப் பால் நேரடியாகக் குற்றம் சாட்டினார்

குற்றவாளியாக நிறுத்தப்பட்டுள்ள ஜப்பானிய பிரதமர் உள்ளிட்ட தலைவர்கள் எவரையும் நாம் குற்றம் சொல்ல முடியாது. உண்மையில் ஜப்பானியர்கள் செய்த போர்க்குற்றங்கள் மற்றும் அட்டூழியங்களை வகுப்பு B மற்றும் C வகைகளின் கீழ் வகைப்படுத்தப்பட்டுத் தண்டிக்கப்பட வேண்டும் ஆனால் இது போன்ற சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்தி தண்டனை வழங்கத் தேவையில்லை என்பதே அவரது வாதம்.
1928 ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்ட பாரிஸ் அமைதி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட நாடுகள் எந்தச் சூழலிலும் போரை ஏற்படுத்த மாட்டோம் என்று உறுதியளித்தார்கள். உண்மையில் இந்தச் சாசனம் சட்டப்பூர்வமானதா எனப் பால் கேள்வி எழுப்புகிறார்
ஒரு தேசம் ஏன் போரில் ஈடுபடுகிறது என்பதை நாம் ஆராய வேண்டும். பிரிட்டிஷ் காலனித்துவம் மற்றும் மேற்குலகின் அதிகார வெறி எப்படி ஜப்பானின் இயல்பை மாற்றியது. ஜப்பானியர்களின் மௌனத்தைப் புரிந்து கொள்ளக் கீழைதேய நாடுகளின் பண்பாட்டினை புரிந்து கொள்ள வேண்டும் என்று நீதிபதி பால் வாதிட்டார்.
ஆரம்பம் முதலே பாலின் வாதங்களை மற்றவர்கள் ஏற்கவில்லை. அத்தோடு அமெரிக்காவிற்குச் சாதகமாக நடந்து கொள்ளவே முயன்றார்கள். இறுதிவரை பால் தனிநபராகவே செயல்பட்டிருக்கிறார். ஆகவே அவர் தனது தீர்ப்பினை தனியே எழுதி 25 ஜப்பானியர்களையும் நிரபராதிகள் என விடுதலை செய்தார். நீதிபதி பாலின் தீர்ப்பு 1,230 பக்கங்கள் கொண்டது.
இந்த விசாரணை வெற்றிபெற்றவர்களின் பழிவாங்கும் நடவடிக்கை மட்டுமே என்று பால் வெளிப்படையாகக் கருத்து தெரிவித்துள்ளார் .
நீதிபதி பால் வழங்கிய தனித்தீர்ப்பின் காரணமாகப் பின்னாளில் அவருக்கு ஜப்பானிய அரசின் உயரிய விருது வழங்கப்பட்டது. அவரது மறைவிற்குப் பின்பு அவரது சிலை ஒன்றை டோக்கியோவிலுள்ள ராணுவ கல்லறைத் தோட்டத்தில் அமைத்திருக்கிறார்கள்.
டச்சு நீதிபதி ரோலிங் முக்கியமான கதாபாத்திரம் அவர் சிறந்த வயலின் இசைக்கலைஞர். அவருக்கும் ஜெர்மானிய பியானோ இசைக்கலைஞர் எட்டா ஹரிச்-ஷ்னெய்டர்க்கும் இடையில் ஏற்படும் நட்பு. இணைந்து இசை வழங்குவது போன்றவை படத்தின் மையக்கதையை விட்டு விலகிப் போவதாக இருந்தாலும் முடிவில் அது கதையோடு பொருத்தமாக இணைக்கப்படுவது சிறப்பாக உள்ளது.

படம் ஜஸ்டிஸ் பெர்ட் ரோலிங்கின் நினைவுகள் வழியாகவே விவரிக்கப்படுகிறது. குடும்பத்தைப் பிரிந்து வாழும் அவர் நீதிபதி பாலின் வாதங்களிலுள்ள உண்மையைப் புரிந்து கொள்கிறார். அவருக்கு ஆதரவு குரல் தருகிறார். ஆனால் பொதுக்கருத்தை அவரால் உருவாக்க முடியவில்லை.
ஆவணப்படம் போன்ற பாணியில் படத்தை உருவாக்கியிருக்கிறார்கள். இடைவெட்டாக வந்து செல்லும் கறுப்பு வெள்ளை நீதிமன்றக் காட்சிகள் நாம் காணுவது வெறும் கற்பனையில்லை என்பதைப் புரியவைக்கின்றன.
போர்க்குற்றத் தீர்ப்பாயத்தின் நடவடிக்கைகளுக்கு அடித்தளமாக இருக்கும் சட்டங்கள், தார்மீகக் கோட்பாடுகள் மற்றும் நெறிமுறை விதிகளைக் கேள்வி கேட்கிறது என்ற வகையில் இந்தப்படம் முக்கியமானதே.
May 30, 2023
தஸ்தாயெவ்ஸ்கி : மூன்று நாடகங்கள்
பியோதர் தஸ்தாயெவ்ஸ்கி பற்றி இதுவரை மூன்று நாடகங்கள் எழுதியிருக்கிறேன். மூன்றும் அரங்கில் நிகழ்த்தப்பட்டிருக்கின்றன
தஸ்தாயெவ்ஸ்கியின் நிழல்கள் என்ற நாடகம் அவரது வாழ்க்கை வரலாற்றை விவரிக்ககூடியது
‘தியேட்டர் லேப்’ ஜெயராவ் தனது குழுவினர்களுடன் இதனை ஒரு மணி நேர நாடகமாக நிகழ்த்திக்காட்டினார். சிறப்பான வரவேற்பைப் பெற்றது.

••
தஸ்தாயெவ்ஸ்கியின் சங்கீதம் என்பது அவருக்கும் அன்னாவிற்குமான காதலை மையமாகக் கொண்டது
இந்த நாடகம் மூன்று முறை மேடையேற்றப்பட்டுள்ளது.
••

மரணவீட்டின் குறிப்புகள் தஸ்தாயெவ்ஸ்கி சைபீரிய சிறையிலிருந்த அனுபவங்களை மையமாகக் கொண்டது.
இந்த நாடகம் நான்கு முறை மேடையேற்றப்பட்டுள்ளது
••
இந்த மூன்று நாடகங்களையும் தொகுத்து ஒரே நூலாக வெளியிட இருக்கிறேன். டிசம்பர் மாதம் தேசாந்திரி பதிப்பகம் இதனை வெளியிடுகிறது
May 28, 2023
ஹரியின் குறும்படம்
எனது மகன் ஹரிபிரசாத் புதிய குறும்படம் ஒன்றை இயக்குகிறான்.

இதற்கு முன்பாக இரண்டு குறும்படங்களை இயக்கியுள்ளான்.
அதில் மைடியர் செகாவ் என்ற குறும்படம் திரைப்படவிழாக்களில் பரிசு பெற்றுள்ளது.
அண்ணா பல்கலைகழகத்தில் ஐந்து ஆண்டுகள் மீடியா சயின்ஸ் பயின்றுள்ள ஹரிபிரசாத் தற்போது WHITE KNIGHTS என்ற CREATIVE AGENCY நடத்திவருகிறான்.

May 26, 2023
டிக்கன்ஸின் தேவை
Armando’s Tale of Charles Dickens என்ற ஆவணப்படத்தைப் பார்த்தேன்

தொலைக்காட்சி தயாரிப்பாளர் மற்றும் இலக்கிய ஆர்வலரான அர்மாந்தோ யெனூச்சி சார்லஸ் டிக்கன்ஸின் தீவிர வாசகர். அவர் பிபிசிக்காக இந்த ஆவணப்படத்தை உருவாக்கியிருக்கிறார்
டிக்கன்ஸ் பிறந்து இருநூறு ஆண்டுகள் ஆகின்றன. அவரது நாவல்கள் பல்வேறு நாடுகளில் திரைப்படமாக்கப்பட்டுள்ளன. நாடகமாகவும் தொலைக்காட்சித் தொடராகவும் இன்றும் உருவாக்கப்படுகின்றன.
டிக்கன்ஸின் டேவிட் காப்பர்ஃபீல்டு, ஆலிவர் டுவிஸ்ட் போன்ற நாவல்களை இன்றைய தலைமுறை விரும்பிப் படிக்கிறார்களா. அல்லது அவர் வெறும் கலாச்சாரப் பிம்பம் மட்டும் தானா என்ற கேள்வியை முன்வைத்து தனது ஆவணப்படத்தை உருவாக்கியுள்ளார்
குறிப்பாக டேவிட் காப்பர்ஃபீல்டை முன்வைத்து டிக்கன்ஸின் மொழி மற்றும் கதாபாத்திரங்களின் தனித்துவம், நாவல் உருவான விதம் குறித்து விரிவாகப் பேசியிருக்கிறார்.

ஆண்டுதோறும் டிக்கன்ஸ் பற்றிப் புதிது புதிதாகப் புத்தகங்கள் வந்தபடியே இருக்கின்றன. அவர் குறித்த விசேசக் கண்காட்சிகளும் நடைபெறுகின்றன. ரஷ்ய இலக்கியமேதைகளான டால்ஸ்டாய், தஸ்தாயெவ்ஸ்கி இருவரும் டிக்கன்ஸை விரும்பிப் படித்திருக்கிறார்கள். அவரை ஆதர்சமாகக் கொண்டு நாவல் எழுதியிருக்கிறார்கள். தஸ்தாயெவ்ஸ்கி தனது அறையில் டிக்கன்ஸ் ஒவியம் ஒன்றை மாட்டி வைத்திருந்தார். ஐரோப்பாவின் முக்கிய எழுத்தாளர்கள் பலரும் டிக்கன்ஸைக் கொண்டாடினார்கள். ஆனால் இன்று அந்த அலை ஒய்ந்துவிட்டது. சிறிய வட்டத்தினர் மட்டுமே டிக்கன்ஸை வாசிக்கிறார்கள்.
டிக்கன்ஸின் வாழ்க்கை அவரது ரகசிய காதல் மற்றும் குடும்ப வாழ்க்கை பற்றிய கட்டுரை தொகுப்புகள் வந்துள்ளன. டிக்கன்ஸின் பயணங்கள் குறித்து தனிப் புத்தகம் வெளியாகியுள்ளது. டிக்கன்ஸ் எவ்வாறு மக்கள் முன்பாக கதை படிப்பார் என்பதைப் பற்றி ஆய்வு நூல் வெளியாகியிருக்கிறது. இவற்றைப் படிக்க இன்றைய வாசகர்கள் விரும்புகிறார்கள். ஆனால் ஆயிரம் பக்கங்கள் கொண்ட டிக்கன்ஸ் நாவலை வாசிக்க பொறுமையும் விருப்பமும் இல்லை.
டேவிட் காப்பர்ஃபீல்டைத். திரைப்படமாகப் பார்த்திருந்தாலும் நாவலாகப் படிப்பதில் உள்ள சுகம் இணையற்றது, தலைசிறந்த கதைசொல்லியின் ஆற்றலை வாசிக்கும் போது தான் உணர முடிகிறது. குறிப்பாக டிக்கன்ஸின் நகைச்சுவை மற்றும் புத்திசாலித்தனமான ஒன்-லைனர்கள் வியப்பூட்டுகின்றன என்கிறார் யெனூச்சி
விக்டோரியன் யுகத்தினைத் துல்லியமாகத் தனது எழுத்தில் சித்தரித்தவர், குழந்தை தொழிலாளர்கள் மற்றும் அடித்தட்டுமக்களின் வாழ்க்கை அவலங்களை நுட்பமாக எழுதியவர் என்ற முறையில் டிக்கன்ஸ் இன்றும் கொண்டாடப்படுகிறார்,
டிக்கன்ஸை ஒரு இலக்கிய பிம்பமாக மாற்றியதன் மூலம் இன்று அவரை வாசிக்க மறந்துவிட்டார்கள். அவரை மீள்வாசிப்பு செய்யவும் டிக்கன்ஸின் மேதமையை எடுத்துச் சொல்லவுமே இந்த ஆவணப்படத்தை உருவாக்கியுள்ளேன் என்கிறார் யெனூச்சி.
“I believe that the true Dickensian world is our world. Dickens speaks to us now.” என்கிறார் யெனூச்சி. அது உண்மையே. டிக்கன்ஸ் பேசிய விஷயங்கள் சுட்டிக்காட்டிய பிரச்சனைகள் இன்றும் தொடர்கின்றன. இதயமற்ற மனிதனின் குரூரச் செயல்களை ஒடுக்குமுறைகளை டிக்கன்ஸ் நுணுக்கமாக எழுதியிருக்கிறார். அந்த வாழ்க்கை மறைந்துவிடவில்லை. உருமாறியிருக்கிறது.
இலக்கியவாசிப்பை பரவலாக்க இது போன்ற ஆவணப்படங்கள் அவசியமானவை. அர்மாந்தோ யெனூச்சி அதைச் சிறப்பாகவே செய்திருக்கிறார்
••
May 24, 2023
பனிக்கரடியின் கனவு
புதிய சிறுகதை. மே 2023.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட டெல்டா பகுதிகளைப் பார்வையிட டெல்லியிலிருந்து மத்திய குழுவினர் வருகிறார்கள் என்ற தகவல் கிடைத்த நாளிலிருந்து அந்த அலுவலகம் மிகவும் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்தது.

மாறிமாறி தொலைபேசி அழைப்புகள். உயரதிகாரிகளின் அவசர உத்தரவுகள், இதன் காரணமாக வருவாய்க் கோட்டாட்சியராகப் பணியாற்றிய தயாபரன் பதற்றமாகியிருந்தார். அவரது ரத்த அழுத்தம் மிகவும் அதிகமாகி பின் மண்டை மற்றும் புருவங்கள் வலிக்க ஆரம்பித்திருந்தன. வழக்கமாகச் சாப்பிடும் பிரஷர் மாத்திரையை வாயிலிட்டுத் தண்ணீர் குடித்துக் கொண்டார்.
ஐம்பது வயதைக் கடந்த தயாபரன், கறுப்பு அல்லது சாம்பல் நிற பேண்ட் அதற்குப் பொருத்தமாக வெளிர் நிறங்களில் முழுக்கைச் சட்டை அணிவது வழக்கம். ஸ்டார் முத்திரையுள்ள லெதர் பெல்ட் போட்டிருப்பார். கையில் ஒரு செல்போன். சட்டைப்பையில் ஒரு செல்போன். நாலாக மடித்த காகிதங்கள். முருகன் படம், கையெழுத்துப் போடுவதற்கான பச்சை மற்றும் கறுப்புப் பேனாக்கள் வைத்திருப்பார்.
அவர் சட்டைப் பையிலுள்ள ஐபோன் உயரதிகாரிகள் தொடர்பு கொள்வதற்கானது. அந்த அலைபேசியை இரவிலும் அணைத்து வைப்பதில்லை.
இந்த இரண்டு அலைபேசிகளைத் தவிர அலுவலக மேஜையிலும் வீட்டிலும் லேண்ட்லைன் தொலைபேசி இருந்தது. ஒரு நாளின் பெரும்பகுதி தொலைபேசியிலும் வாட்ஸ் அப் அனுப்பி வைப்பதிலும் கழிந்துவிடுவதாக உணர்ந்தார். அப்படியும் அலுவலக நெருக்கடியைச் சமாளிக்க முடியவில்லை.
பெரும்பான்மை நாட்கள் மதியம் ஹோட்டல் சாப்பாடு தான். கலெக்டர் அலுவலகக் கூட்டம் நடக்கிற நாட்களில் சாப்பிடுவதற்கு மூன்று மணிக்கு மேலாகிவிடும். இந்த நடைமுறை அவருக்குப் பழகிப் போய்விட்டிருந்தது.
இதனை ஈடுகட்டுவதற்காக ஞாயிற்றுக்கிழமைகளில் மதியம் பனிரெண்டு மணிக்கே சாப்பிட்டுவிடுவார். அதுவும் ஆட்டுக்கறி, கோழி, மீன், நண்டு, காடை என அசைவ வகைகள் அத்தனையும் சமைக்க வேண்டும். உணவு காரம் அதிகமாகவும் சூடாகவும் இருக்க வேண்டும். லுங்கி கட்டிக் கொண்டு சட்டை போடாத வெற்றுடம்புடன் தான் சாப்பிட அமர்வார். வேகமாக அள்ளி சாப்பிடும் போது அவருக்கு வியர்த்து வழியும். அதற்காகப் பேன் போடுவதற்கு அனுமதிக்க மாட்டார். சாப்பிட்ட பத்தாவது நிமிஷம் மாடி அறைக்குத் தூங்கச் சென்றுவிடுவார். விழித்து எழுந்து கொள்ளும் போது இரவு பத்து மணிக்கு மேலாகிவிடும். பின்பு குளித்துவிட்டு ரத்னா லாட்ஜிற்குச் செல்வார். அங்கே நண்பர்களுடன் கூடி குடித்துவிட்டுப் பின்னிரவில் தான் வீடு திரும்புவார்.
மத்தியக்குழு எந்த ஊர்களைப் பார்வையிடுகிறார்கள். அவர்கள் எங்கே மதிய உணவு சாப்பிடுகிறார்கள். அவர்கள் தங்குகிற விருந்தினர் விடுதியில் குளியல் அறை எப்படியிருக்கிறது. அவர்கள் சந்திக்கவுள்ள விவசாயிகள் யார் யார். எந்தப் பாதை வழியாகச் செல்கிறார்கள் என்பதைப் பற்றிய முழுமையான விபரங்களை அவர் அனுப்பி வைத்திருந்தார். ஆனாலும் ஒரு நாளில் பத்துமுறைக்கும் மேலாகக் கலெக்டர் அலுவலகத்தில் இருந்து போன் வந்தது. இதற்கிடையில் மத்தியக்குழுவினர்களுடன் பத்திரிக்கையாளர்கள் பயணம் செய்யத் தனி ஏற்பாடு செய்யவேண்டியிருந்தது. தேர்தல் காலங்களில் இது போன்ற பணிகளைச் செய்திருக்கிறார் என்பதாலும் சிறப்பாகச் செயல்படும் அதிகாரி என்பதாலும் அவரது முழுப்பொறுப்பில் விட்டுவிட்டார்கள்.
மத்தியக்குழு பார்வையிடவுள்ள பகுதிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் நிர்மல் வர்மா பார்வையிடுவதற்காக வந்திருந்தார். அவருடன் இணைந்து பயணம் செல்ல வேண்டியிருந்தது.
தயாபரன் ஆட்சித்தலைவரை அனுப்பிவிட்டு மதியம் மூன்று மணிக்கு மேலாக அலுவலகம் திரும்பியிருந்தார். பசியும் களைப்பும் ஒன்றுசேரக் கண்ணைக் கட்டிக் கொண்டு வந்தது. தனது அறையிலிருந்த ஏர்கூலரை மிகவும் குளிர்ச்சியாக வைத்துவிட்டு “தான் கொஞ்சம் கண் அயர்வதாக“ கிளார்க் லதாவிடம் தெரிவித்தார்.
“போனை ஆ பண்ணி வச்சிட்டு ரெஸ்ட் எடுங்க சார். நாங்கள் பாத்துகிடுறோம்“ என்று சொல்லியபடியே லதா இருக்கைக்குத் திரும்பினார்.
ஐந்துமணியை நெருங்கும் போது கலெக்டர் அலுவலகத்திலிருந்து தயாபரனை போனில் அழைத்தார்கள்.
லதா அவரை எழுப்புவதற்காகச் சென்றபோது அறை மிகவும் ஜில்லென்றிருந்தது. தயாபரன் ஒரு பனிக்கரடியாக மாறியிருந்தார்.
அதைக் கண்டு குழம்பிய லதா எப்படி இது நடந்தது எனப் புரியாமல், இயந்திரகதியில் “கலெக்டர் ஆபீஸிலிருந்து உங்களைப் பேச சொல்றாங்க சார்“ என்றாள்.
பனிக்கரடி உருவத்திலிருந்த தயாபரன் “நான் பேசிகிடுறேன்“ என்று மனிதக்குரலில் சொன்னார்.
“ஆள் உருவம் மாறியிருக்கிறது ஆனால் குரல் மாறவில்லையே“ என்று எண்ணிக் கொண்ட லதா “உங்களுக்கு டீ சொல்லவா சார்“ என்று கேட்டாள்
“டீ வேண்டாம். ஜில்லுனு ஏதாவது சொல்லும்மா“ என்றபடியே தனது செல்போனைத் தேடினார். மேஜைக்குக் கீழே அவரது உடைகள் கிழிந்த நிலையில் கிடந்தன. இரண்டு செல்போன்களும் மேஜை மீதிருந்தன. ஐபோனை எடுத்து கலெக்டர் அலுவலகத்தைத் தொடர்பு கொண்டார்.
“பயணத்திட்டத்தில் மாறுதல் ஏற்பட்டிருக்கிறது. பனிரெண்டாம் தேதிக்கு பதிலாகப் பதிநான்காம் தேதி வருகிறார்கள். அதே ஊர்களைப் பார்வையிடுகிறார்கள்“ என்று சொன்னார்கள்
“எல்லாம் ரெடி சார். எப்பவும் அவங்க வரலாம்“ என்று சொன்னார் தயாபரன்.
நிறைய ஐஸ் போட்டு கண்ணாடி டம்ளரில் கரும்புஜுஸ் கொண்டு வந்த பையன் அறையில் ஒரு பனிக்கரடி அமர்ந்திருப்பதைப் பார்த்து வேடிக்கையாகக் கேட்டான்
“ஒரு ஜுஸ் போதுமா சார்“.
அவனை முறைத்தபடியே அகன்ற கைகளை நீட்டி கரும்புஜுஸை கடகடவென வாயில் ஊற்றிக் குடித்தது பனிக்கரடி
“என்ன சார் ஆச்சு. இப்படி இருக்கீங்க“ என்று கேட்டான் கடைப்பையன்
“உன் வேலையைப் பாத்துட்டு போடா“ என்று திட்டினார் தயாபரன். கண்ணாடி டம்ளரைக் கையில் எடுத்தபடியே அவன் வெளியேறிச் சென்றான்.

அலுவலகத்திலிருந்த ஊழியர்கள் அனைவரும் தயாபரன் பனிக்கரடியாக மாறிவிட்டதை அறிந்தார்கள். அதிகாரிகள் எந்த உருவமும் எடுப்பார்கள் என்று உணர்ந்தவர்கள் போல அதனை இயல்பாகவே எடுத்துக் கொண்டார்கள்
தன்னைக் கண்ணாடியில் பார்த்துக் கொண்ட தயாபரனும் அதிர்ச்சி அடைவதற்குப் பதிலாகக் குழப்பமானார். அவரது குரல் அப்படியே இருந்தது. ஞாபகம் அப்படியே இருந்தது. அதே அரசு வேலை, அதிகாரம். எதுவும் மாறவில்லை. பின்பு பனிக்கரடியாக மாறியதால் என்ன பிரச்சனை என்று தோன்றியது. தனது அகலமான கைகளையும் பருத்த உடலையும் விநோதமாகப் பார்த்துக் கொண்டார்.
அலுவலகம் முடிந்து வீடு திரும்புவதற்காகக் கிளம்பியபோது அவரைக் காண காத்திருந்த பெண்மணி மட்டும் குழப்பத்துடன் கரடி எதற்காக இந்த அலுவலகத்திற்கு வந்திருக்கிறது என்று வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தாள்.
“சுந்தரம் ஜீப் எடு“ என்று அவர் உத்தரவிட்டதும் டிரைவர் சுந்தரம் ஜீப்பை எடுத்தார். அவருக்கும் ஒரு பனிக்கரடி தனது ஜீப்பில் ஏறுகிறதே என்று குழப்பம் ஏற்பட்ட போதும் அதைக் காட்டிக் கொள்ளவில்லை. அதிகாரி கரடியாக இருந்தாலும் உத்தரவிற்கு அடிபணிய வேண்டும் என்று அவருக்குக் கற்பிக்கப்பட்டிருந்தது
பனிக்கரடி ஜீப்பிற்குள் ஏறுவதற்குச் சிரமப்பட்டது. பின்பு கஷ்டப்பட்டுத் தனது கனத்த உடலை ஜீப்பிற்குள் திணித்துக் கொண்டு “போகலாம் “என்றது
சுந்தரம் ஜீப்பை ஒட்டத்துவங்கினார். நகரவீதிகளில் அந்த ஜீப் சென்ற போது பொதுமக்களில் சிலர் பனிக்கரடியை வியப்போடு பார்த்தார்கள்.
ஏதாவது விழாவிற்குக் கொண்டு போகிறார்கள் போலும் என நினைத்துக் கொண்டார்கள்.
அவர் தனது வீடு போய்ச் சேர்ந்த போது கிரிக்கெட் விளையாட கிளம்பிக் கொண்டிருந்த அவரது மகன் விஸ்வா சப்தமாகச் சொன்னான்
“அம்மா வெளியே வந்து பாரு“
தயாபரனின் மனைவி வெளியே வந்த போது பனிக்கரடி தனது பெரிய பாதங்களை எடுத்து வைத்து முன்கேட்டை தள்ளி நுழைந்தது
அவள் ஏதோ கேட்க முற்படுவதற்குள் அவரது கோபமான குரல் வெளிப்பட்டது
“அப்படி என்னத்தைப் பாக்குறே. உள்ளே போடி“
அவள் திகைப்புடன் “என்னாச்சி. ஏன் இப்படி வந்து நிக்குறீங்க“ எனக்கேட்டாள். போதை உச்சமாகி சட்டையைத் தலைகீழாகப் போட்டு வந்து நின்ற நள்ளிரவில் இதே கேள்வியைக் கேட்டிருக்கிறாள்.
“ஒண்ணும் ஆகலை. இப்பவும் நான் உன் புருஷன் தான் போதுமா“ என்றது பனிக்கரடி.
அவள் தனக்குதானே முணுமுணுத்தபடியே “குளிச்சிட்டு வாங்க“ என்றபடியே சமையல் அறைக்குள் சென்றாள்
ஒரு மணி நேரத்திற்கும் மேலாகக் குளியல் அறையில் ஷவரைத் திறந்து விட்டுக் குளித்துக் கொண்டேயிருந்தது பனிக்கரடி. பின்பு ஈரத்துடன் நடந்து ஹாலை நோக்கி வந்த போது “வீடெல்லாம் ஈரமாக்காதீங்க“ என்று மனைவி கோவித்துக் கொண்டாள்
பனிக்கரடி அமர்வதற்கான பெரிய நாற்காலி எதுவும் அவர்களிடமில்லை. ஆகவே அவள் “அப்படி உட்காருங்க“ எனத் தரையைக் காட்டினாள்.
“நான் வெளியே போயிட்டு வர்றேன்“ என்று வெளியே கிளம்பியது பனிக்கரடி.
“கார்த்திகா வீட்டு ரிசப்சன் இருக்கு. நாம போக வேண்டாமா“ என்று கேட்டாள் மனைவி
“எட்டு மணிக்கு மேலே போவோம்“ என்றபடியே பனிக்கரடி வெளியே செல்ல ஆரம்பித்தது
அண்டைவீட்டார் மற்றும் தெருவில் விளையாடிக் கொண்டிருந்த சிறார்கள் பனிக்கரடியை வேடிக்கை பார்த்தார்கள்
“விஸ்வாவோட அப்பாடா“ என்று ஒரு பையன் கேலியாகச் சொன்னான்
மற்றவர்கள் சிரிக்கும் சப்தம் பனிக்கரடிக்கு நன்றாகவே கேட்டது. அவர் ஜீப்பில் ஏறிக் கொண்டார். நகைக்கடையில் அவருக்குச் சிறிய வேலை இருந்தது. மோதிரம் ஒன்றை சரிசெய்யக் கொடுத்திருந்தார். அதற்காகப் பஜாரில் இறங்கி நடந்த போது கடைவீதியிலிருந்தவர்கள் ஆச்சரியத்துடன் பார்த்தார்கள். சாவகாசமாக நடந்து தனது நகைக்கடையை நோக்கி வரும் பனிக்கரடியை எப்படி வரவேற்பது எனப்புரியாத முதலாளி மஸ்தான் பொதுவான புன்சிரிப்புடன் “வாங்க“ என வரவேற்றார்.
“மோதிரம் சரிசெய்யக் கொடுத்திருந்தேன்“ என்று சொன்னது கரடி. அந்தக் குரல் தயாபரனுடையது என்பதை அடையாளம் கண்டுகொண்ட மஸ்தான் “இன்னும் ரெடியாகிவரலை சார். வேற ஏதாவது காட்டவா“ என்றார். “வேண்டாம்“ எனக் கரடி தலையசைத்தது.
“புதுசா நாலு வடம் செயின் வந்துருக்கு. உங்க கழுத்துக்கு நல்லா இருக்கும்“ என்றார் மஸ்தான்
“இப்போ வேண்டாம்“ என்றபடியே வெளியேறியது பனிக்கரடி. இந்த வேடிக்கையைக் கடைப்பையன்கள் ரசித்தார்கள். பனிக்கரடி வெளியேறி போனபிறகு மஸ்தான் சொன்னார்
“கரடி ஒண்ணு தான் நம்ம கடைக்கு வராம இருந்துச்சி. அதுவும் இப்போ வந்துருச்சி“
அதைக்கேட்டு அனைவரும் சிரித்தார்கள்.

அன்றிரவு அவரும் மனைவியும் கல்யாண ரிசப்சனுக்குப் போயிருந்த போது விபத்தில் கால் முறிந்தவரை விசாரிப்பது போலப் பலரும் ஏன் கரடியாகிவிட்டார் என மனைவியிடம் விசாரித்தார்கள். கரடியாக இருந்தாலும் அதிகாரி என்பதால் ஒரு வேறுபாட்டினையும் காட்டவில்லை. மணமக்களுடன் பனிக்கரடி புகைப்படம் எடுத்துக் கொண்டது. சில இளம்பெண்கள் ஆசையாக அருகில் வந்து புகைப்படம் எடுத்துக் கொண்டது பனிக்கரடிக்கு பெருமையாகவே இருந்தது. ஆனால் அதைத் தயாபரனின் மனைவி விரும்பவில்லை.
அவர்களைச் சாப்பிடுவதற்காக மேல்தளத்திற்கு அழைத்துக் கொண்டு போகையில் மாப்பிள்ளையின் சித்தப்பா அவரிடம் “கரடியாகிட்டா புது டிரஸ் எடுக்க வேண்டிய தேவையில்லை“ என்று அசட்டு நகைச்சுவையைப் பகிர்ந்து கொண்டார்
பனிக்கரடியாக இருந்த தயாபரன் இலையில் வைக்கபட்ட உணவுவகைகளைப் பிசைந்து அள்ளி சாப்பிடுவதை முகம்சுழித்தபடியே பார்த்துக் கொண்டிருந்தாள் அவரது மனைவி.
அவர்கள் வீடு திரும்பும் போது “சாப்பிட்ட எச்சில்கையை நீங்கள் கழுவவேயில்லை“ என்று மனைவி கோவித்துக் கொண்டாள்
அந்த ஒரு நாளைக்குப் பிறகு அவர் பனிக்கரடியாக உருவெடுத்தது பற்றி எவரும் கவலைப்படவில்லை. வியப்படையவும் இல்லை. அவரது அலுவலகத்திலோ, அல்லது வீதியிலோ கூட யாரும் அதைப்பற்றிப் பேசிக் கொள்ளவில்லை. அவரது கையிலிருந்து சொட்டும் தண்ணீரால் அலுவலகக் காகிதங்கள் நனைந்துவிடுவதை மட்டும் ஊழியர்கள் குறையாகச் சொன்னார்கள். உத்தரவுகளைச் சரியாக நிறைவேற்றும்வரை அதிகாரி பனிக்கரடியாக இருந்தாலும் அரசாங்கம் கவலைப்படாது என்பது உண்மையானது.
பருத்த உடலோடு படுக்கை முழுவதையும் அவரே நிரப்பிக் கொண்டதால் மனைவி தரையில் பாயை விரித்துப் படுக்கும் நிலை உருவானது. பனிக்கரடியாக இருந்த போதும் அவர் தவறால் டிவியில் ஒளிபரப்பாகும் செய்திகளைப் பார்த்தார். பழைய சினிமா பாடல்களை கேட்டார். உயரதிகாரிகளின் உத்தரவுகளை நிறைவேற்ற பதற்றமாகச் செயல்பட்டார். எப்போதும் போலவே இரவில் நண்பர்களுடன் குடிப்பதற்குச் சென்றார். பின்னிரவில் வீடு திரும்பினார். பனிக்கரடியாக மாறியதால் வாரம் முந்நூறு ரூபாய்க்கு அவரது உடைகளை அயர்ன் பண்ணி வாங்குவது மட்டும் மிச்சம் என்று மனைவி சந்தோஷப்பட்டுக் கொண்டாள்.
சில இரவுகளில் அவர் மொட்டைமாடியில் நின்றபடியே வானத்து நட்சத்திரங்களை ஏன் வெறித்துப் பார்த்துக் கொண்டிருக்கிறார் என்பது மட்டும் அவர்களுக்குப் புரியவில்லை. ஒருநாள் தனது மனைவியிடம் இப்போதெல்லாம் எனக்கு கனவுகளே வருவதில்லை. ஏன் இப்படி ஆனது எனக் கேட்டார். அவளுக்கு என்ன பதில் சொல்வது எனத் தெரியவில்லை.
திட்டமிட்டபடியே மத்தியக்குழு வருகை புரிந்த நாளில் கூடப் பனிக்கரடியாக இருந்த அவர் தனது ஜீப்பில் பின்தொடர்ந்தார். அந்தக் குழுவில் இருந்தவர்கள் அலுவலக நெருக்கடியால் தயாபரன் பனிக்கரடியாக மாறிவிட்டார் என்பதைச் சிறந்த வேடிக்கையாகக் கருதினார்கள். வெள்ளபாதிப்புகள் குறித்து அவர் பணிவான குரலில் விபரங்கள் தருவதை ரசித்தார்கள். மறுநாள் பத்திரிக்கையில் வெளியான புகைப்படத்தில் பனிக்கரடி ஒன்று ஒரமாக நிற்பதை பொதுமக்கள் பார்த்தபோதும் ஒருவரும் ஆச்சரியம் அடையவேயில்லை.
ஒரு ஞாயிறுகாலையில் அவர் வீட்டிற்கு வருகை தந்த மாலினியின் நான்கு வயது மகள் ஸ்வேதா “அங்கிள் எனக்குப் பனிக்கரடி முதுகில் ஏறணும்னு ஆசை. நான் உங்க முதுகில ஏறிக்கிடவா“ என்று கேட்டாள். சரியெனத் தலையாட்டினார். அவரது முதுகில் ஏறி அமர்ந்து கொண்டு தலையைத் தடவிக் கொடுத்து “முன்னாடி போ“ என்று உத்தரவிட்டாள். பருத்த உடலோடு அவர் முன்நகர்ந்தார். அந்த நிமிஷத்தில் மட்டுமே அவர் தான் ஒரு பனிக்கரடி என்பதை முழுமையாக உணர்ந்தார். முதன்முறையாக அவரது கண்களில் ஈரம் கசிந்தது.
பனிக்கரடியாக மாறியதால் அவரது அலுவலக இருக்கை பெரிதாக மாற்றப்பட்டது. நாளில் நான்குமுறை குளிக்கிறார் என்பதால் புதிய குளியல் அறையை உருவாக்கினார்கள். ஜீப்பில் ஏறுவது சிரமம் என்பதால் அலுவலகத்திற்கு நடந்து போய்வரத் துவங்கினார். செல்போனில் முன்பு போலவே பொறுமையாகப் பலருக்கும் பதில் சொல்லிக் கொண்டிருந்தார். உத்தரவுகளில் தயாபரன் என அழகாகக் கையெழுத்திட்டார். வணக்கம் சொல்பவர்களுக்குத் தனது பருத்த கையை உயர்த்தி வணக்கம் வைத்தார். அதிகாரி கரடியாக மாறியதால் ஏற்பட்ட இந்த மாற்றத்தை அலுவலக ஊழியர்கள் ரசித்தார்கள்.
தனியே இருக்கும் நேரங்களில் அவரது முகம் சோகமடைந்து காணப்பட்டது. மனைவி பிள்ளைகளிடம் உரையாடுவதைக் குறைத்துக் கொண்டார். பின்பு ஒருநாள் காலையில் தொட்டிசெடியில் பூத்திருந்த மஞ்சள் ரோஜாவை வியப்போடு பார்த்தபடியே இருந்தார். அதைப் பறிக்கும் போது அவரது கை நடுங்கியது.
ஆரம்பத்தில் பனிக்கரடியை கண்டு விடாது குலைத்த தெருநாய்கள் இப்போது வாலாட்டியபடியே பின்தொடர்ந்தன. சிறுவர்களும் கேலி செய்வதை மறந்தார்கள். பனிக்கரடியாக இருந்த தயாபரன் பின்னொரு நாள் அலுவலகம் விட்டு வீடு திரும்பாமல் நெடுஞ்சாலையை நோக்கி நடக்க ஆரம்பித்தார். எங்கே போனார். என்ன ஆனார் என்று எவருக்கும் தெரியவில்லை.
குடும்பத்தினர் அவரை ஊர் ஊராகத் தேடினார்கள். இமயமலைக்குப் போய்ச் சாமியார் ஆகிவிட்டார் என்றார் ஒரு ஜோதிடர். மற்றவர் இது அவருக்கு ஏற்பட்ட சாபம். அதற்கான விமோசனம் தேடி போயிருக்கிறார் என்றார். அலுவலகப் பொறுப்பைக் கைவிட்டு போனதற்காக அரசாங்கம் மெமோ அனுப்பியது. அவர் வீடு திரும்பவேயில்லை. காணாமல் போனது ஒரு மனிதனா அல்லது பனிக்கரடியா என்பதை அரசாங்கத்தால் முடிவு செய்ய முடியவில்லை. அதன் காரணமாக அவருக்கு வரவேண்டிய சேமிப்புநிதி மற்றும் பிறதொகைகள் நிறுத்திவைக்கபட்டன.
சில ஆண்டுகளுக்குப் பின்பு ஒரு இரவு தொலைக்காட்சியில் காட்டப்பட்ட துருவப்பிரதேசத்தில் பனிக்கரடி ஒன்று தனியே நடந்து கொண்டிருந்தது. அதைக் கண்ட தயாபரனின் மனைவி அக்கரடி தனது கணவன் என்றே நினைத்துக் கொண்டாள். அவளை அறியாமல் கண்ணீர் வந்தது. பாவம் அந்தக் கரடி எனத் தோன்றியது.
அத்தோடு தன்னையும் கூட அழைத்துக் கொண்டு போயிருந்தால் வேளாவேளைக்குச் சமைத்துப் போட்டிருப்போமே என்றும் அவளுக்குத் தோன்றியது
••
கவிஞனும் கவிதையும் 3 கவிதையின் ரசாயனக்கூடம்
மிரோஸ்லாவ் ஹோலுப் செக்கோஸ்லோவாகியாவின் புகழ்பெற்ற கவிஞர். தி.ஜானகிராமன் பாரீஸ் சென்ற போது ஹோலுப்பை சந்தித்து உரையாடியிருக்கிறார். விஞ்ஞானத்தையும் கவிதையினையும் எவ்வாறு ஒன்றிணைப்பது என்பதைப் பற்றி ஹோலுப் பேசியதை ஜானகிராமன் நினைவுகொண்டு எழுதியிருக்கிறார்.

ஹோலுப் தலைசிறந்த விஞ்ஞானி. நோய்குறியியல் துறையில் பணியாற்றியவர். அவரது கவிதைகளில் அறிவியல் சிந்தனைகள் வெளிப்படுகின்றன. கவிதையும் ஒரு சோதனைக்கூடம் தான் அங்கே சொற்கள் மூலகங்களாகப் பயன்படுத்தப்படுகின்றன. அறிவியல் சிந்தனைகளே என்னை வாழ்வின் மீது நம்பிக்கை கொள்ளச் செய்கின்றன என்கிறார் ஹோலுப்

ஹோலுப் சொல்வது உண்மையே. கவிதையும் கண்டுபிடிப்பைத் தான் முதன்மைப்படுத்துகிறது. ஒவ்வொரு கவிஞனும் குறிப்பிட்ட சில பொருட்கள். இயற்கைக் காட்சிகள், பறவைகள் அல்லது விலங்குகள் மீதே தொடர்ந்து எதிர்வினை செய்து வருகிறான். அவற்றை உண்மையில் ஆழ்ந்து ஆராய்கிறான். அறிவு வரையறை செய்துள்ள புரிதலைத் தாண்டி அவற்றைப் புரிந்து கொள்ள முயலுகிறான். கவிதையில் வெளிப்படுத்துகிறான். கவிதையில் பறக்கும் பறவை என்பது வெறும் பறவை மட்டுமில்லை. அது ஒரு குறியீடு. அடையாளம். நிலையின்மை. மற்றும் நகர்ந்து செல்லும் மௌனம்.
தொடர் கேள்விகளின் வழியே அறிவியல் தன்னை விரித்துக் கொள்வது போலவே கவிதையும் கேள்விகளை முதன்மைப்படுத்துகிறது. அறிவியலைப் போலவே கவிதையும் தனக்கெனப் பிரத்யேக பயன்பாட்டினைக் கொண்டிருக்கிறது. அந்தப் பயன்பாடு எது என்பதை வரையறை செய்வதில் நிறைய மாற்றுக்கருத்துகள் இருக்கின்றன. ஆனால் கவிதையை நேசிக்காத சமூகமேயில்லை. வணிகர்களே அதிகம் கவிதைகளை நாடுகிறார்கள். கவிஞர்களை ஆதரிக்கிறார்கள். இது விநோதமான முரண்.
தேவதச்சனின் கவிதைகளில் அறிவியல் புதிய வடிவத்தில் வெளிப்படுவதைக் காணமுடிகிறது. அவர் அறிவியல் சிந்தனைகளை அன்றாட வாழ்வின் காட்சிகளுடன் இணைத்து ரசவாதம் செய்கிறார்.

மிரோஸ்லாவ் ஹோலுப் கவிதைகளை வாசிக்கும் போது வேதியல் கூடத்தில் இருப்பதைப் போலவே உணருகிறோம். சில நேரம் ஒரு விஞ்ஞானியின் உரையைக் கேட்பது போலவும் உணருகிறோம். அவரது கவிதைகள் வாசிக்கக் கடினமானவை. கணித சூத்திரங்களைப் போலிருக்கின்றன. காரணம் அவர் கவிதை இதுவரை செல்லாத இடங்களுக்கு அழைத்துச் செல்கிறார். இயற்கையைப் பிரதானமாகக் கொண்ட கவிகள் அதனை ஆராதிப்பது போல அறிவியலை ஆராதிக்கிறார். மீதேனும் பால்வீதியும் நோய்கிருமிகளும் கிரேக்க தொன்மங்களும் கொண்ட இவரது கவிதையை மரபான வாசிப்பின் மூலம் புரிந்து கொள்ள முடியாது. இக்கவிதைகள் தனித்துவமான வாசிப்பை வேண்டுகின்றன.
போய்க் கதவைத் திற
ஒருவேளை வெளியே ஒரு மரம் இருக்கலாம்
அல்லது ஒரு காடு
ஒரு தோட்டம்
அல்லது ஒரு மாயநகரம்
எனத் துவங்கும் அவரது புகழ்பெற்ற கதவு கவிதையைப் புரிந்து கொள்ள நாம் ஷேக்ஸ்பியரின் மேக்பெத்தை வாசித்திருக்க வேண்டும். காரணம் மேக்பெத்தில் மரங்கள் நடந்து வருகின்றன. அது ஒரு முன்னறிவிப்பாகச் சொல்லப்படுகிறது.
கதவை திற என்பது ஆலோசனையா அல்லது உத்தரவா என நாம் யோசிக்கிறோம். எதிர்பாராமையைச் சந்திக்கக் கதவை திறக்க வேண்டியிருக்கிறது. இதனால் ஏற்படும் மாற்றத்தை சந்திக்க வேண்டியிருக்கிறது. எந்தக் கதவு நம்மையும் உலகையும் பிரித்து வைத்திருக்கிறது. அதை எப்போது எப்படித் திறக்க போகிறோம் என்பதைப் பற்றியே ஹாலுப் பேசுகிறார். அதே நேரம் செக் நாட்டின் அன்றைய அரசியல் சூழலை விமர்சிப்பதாகவும் இக்கவிதை உள்ளது..
மிரோஸ்லாவ் ஹோலுப் கவிதைகளை வாசிக்கும் போது வேதியல் கூடத்தில் இருப்பதைப் போலவே உணருகிறோம். சில நேரம் ஒரு விஞ்ஞானியின் உரையைக் கேட்பது போலவும் உணருகிறோம்.
அவரது கவிதைகள் வாசிக்கக் கடினமானவை. கணித சூத்திரங்களைப் போலிருக்கின்றன. காரணம் அவர் கவிதை இதுவரை செல்லாத இடங்களுக்கு அழைத்துச் செல்கிறார். இயற்கையைப் பிரதானமாகக் கொண்ட கவிகள் அதனை ஆராதிப்பது போல அறிவியலை ஆராதிக்கிறார். மீதேனும் பால்வீதியும் நோய்கிருமிகளும் கிரேக்க தொன்மங்களும் கொண்ட இவரது கவிதையை மரபான வாசிப்பின் மூலம் புரிந்து கொள்ள முடியாது. இக்கவிதைகள் தனித்துவமான வாசிப்பை வேண்டுகின்றன.

போய்க் கதவைத் திற
ஒருவேளை வெளியே ஒரு மரம் இருக்கலாம்
அல்லது ஒரு காடு
ஒரு தோட்டம்
அல்லது ஒரு மாயநகரம்
எனத் துவங்கும் அவரது புகழ்பெற்ற கதவு கவிதையைப் புரிந்து கொள்ள நாம் ஷேக்ஸ்பியரின் மேக்பெத்தை வாசித்திருக்க வேண்டும். காரணம் மேக்பெத்தில் மரங்கள் நடந்து வருகின்றன. அது ஒரு முன்னறிவிப்பாகச் சொல்லப்படுகிறது.
கதவை திற என்பது ஆலோசனையா அல்லது உத்தரவா என நாம் யோசிக்கிறோம். எதிர்பாராமையைச் சந்திக்கக் கதவை திறக்க வேண்டியிருக்கிறது. இதனால் ஏற்படும் மாற்றத்தை சந்திக்க வேண்டியிருக்கிறது. எந்தக் கதவு நம்மையும் உலகையும் பிரித்து வைத்திருக்கிறது. அதை எப்போது எப்படித் திறக்க போகிறோம் என்பதைப் பற்றியே ஹாலுப் பேசுகிறார். அதே நேரம் செக் நாட்டின் அன்றைய அரசியல் சூழலை விமர்சிப்பதாகவும் இக்கவிதை உள்ளது..
கவிதையைப் பற்றிய வரையறைகளைத் தன்னால் ஏற்கமுடியாது எனக் கூறும் ஹாலுப் மகிழ்ச்சியான விளையாட்டினைப் போலவே தான் கவிதை எழுதுவதாகச் சொல்கிறார்.
கவிதை எழுதும் செயல்பாட்டினை விவரிக்க முற்படும் தேவதச்சன் அதனைக் குண்டு பல்ப்பின் ஒளியாக மாற்றுகிறார்.
கவிதை எழுதுவது
என்பது
ஒரு
குண்டு பல்பை
ஹோல்டரில் மாட்டுவது போல் இருக்கிறது
முழுமையானதின்
அமைதியை ஏந்தி
பல்ப்
ஒளி வீசத் தொடங்கியது
ஒரு
மெல்லிய இழை
நிசப்தத்தில்
எவ்வளவு
நீள
நன் கணம்
கவிதையும் அறிவியலும் இணைந்து படைப்பை உருவாக்க வேண்டும் என ஹோலுப் விரும்பியதன் அடையாளம் போல இக்கவிதை எழுதப்பட்டிருக்கிறது
முன் எப்போதும் கவிதை இப்படி வரையறை செய்யப்படவில்லை. பொதுவாகக் கவிதையை வரையறை செய்யும் போது சமயசிந்தனையின் பாதிப்பு ஏற்படுவதைக் கண்டிருக்கிறேன். புனிதமான, தெய்வீகமான, புரிந்து கொள்ள முடியாத செயலாகக் கவிதை வரையறைக்கபடுவதைத் தாண்டி இக்கவிதை குண்டுபல்பை ஹோல்டரில் மாட்டுவதை உதாரணம் சொல்கிறது.
ஒளியின் நிசப்தம் பற்றிக் கவிதை பேசுகிறது. தேவதச்சனுக்கு இயற்பியலில் நாட்டம் அதிகம். அறிவியல் கருதுகோள்களை அதன் பெயர்களைச் சுட்டாமலே பயன்படுத்தக்கூடியவர். நேரடியாகப் பெயர் சுட்டியே இதனைப் பாம்பாட்டி சித்தன் தனது கவிதைகளில் வெளிப்படுத்துகிறார்.அது வேறுவிதம். கவிதையைச் சில வேளைகளில ஒரு மைக்ராஸ்கோ போல பயன்படுத்துகிறார் ஹோலுப். சில வேளைகளில் டெஸ்ட் டியூப் போல மாற்றிவிடுகிறார்.
கவிதை என்பது வெறுமைக்கு எதிரான இருப்பு என நம்பும் ஹோலுப் வெறுமை இடைறாமல் கசிந்து ஒழுகுவதாகச் சொல்கிறார். அதை அன்றாட வாழ்வில் பல இடங்களில் காண முடிவதையும் சுட்டிக்காட்டுகிறார்.
கவிதை அதனை வாசிப்பவனின் ஞாபகத்தால் தான் அவிழ்க்கபடுகிறது. ஆகவே ஒவ்வொரு முறை வாசிக்கும் போது கவிதை வேறுவேறு நினைவுகளைத் தொட்டு விரிவதாகி விடுகிறது. தன்னைப் பொறுத்தவரை கவிதை என்பது ஒருவகை விளையாட்டு. சிறிய இயந்திரத்தை உருவாக்குவது போன்ற பணி. உலகை தனது டெஸ்ட்டியூப்பில் போட்டு ஆராய்ந்து கொண்டிருக்கிறது கவிதை. அதன் முடிவுகள் வியப்பானவை என்கிறார் ஹோலுப்.
The Poetry Pharmacy என்ற William Sieghart புத்தகத்தில் நமது உடல் மற்றும் மனம் நலமடைவதற்கான கவிதைகள் தொகுக்கபட்டிருக்கின்றன. எல்லா நோய்களுக்கும் மருந்தாகக் கவிதைகள் இருக்கின்றன.த னிமை, தைரியமின்மை, மனவேதனை, நம்பிக்கையின்மை, அல்லது அதிகப்படியான ஈகோ ஆகியவற்றால் அவதிப்படுகிறவர்களுக்குக் கவிதையை மருந்தாகத் தரமுடியும் அவற்றால் மனநிலையை மாற்றவும் குணப்படுத்தமுடியும் என்கிறார் வில்லியம் சீகார்ட். இந்தக் கவிதைத்தொடரை பிபிசி ரேடியோ ஒலிபரப்புச் செய்திருக்கிறது
வேதியல் பொருள் துளி அதிகமாகிவிட்டாலும் மாத்திரையின் இயல்பு மாறிவிடும். கவிஞர்கள் மருந்து தயாரிப்பவர் போலத் துல்லியமாகச் சொற்களைக் கையாளுகிறார்கள். ஆகவே கவிஞர்களைச் சிறந்த மருத்துவர்களாகக் கருதுகிறேன் என்கிறார் வில்லியம் சீகார்ட்
நாஜி படையெடுப்பு மற்றும் ரஷ்யர்கள் செக்கோஸ்லோவாக்கியாவை ஆக்கிரமித்ததது என இருபெரும் நிகழ்வுகளுக்குள் வாழ்ந்த ஹோலுப் வரலாற்றைக் கேள்வி கேட்கிறார். கேலி செய்கிறார்
அவரது சரித்திரப்பாடம் கவிதையில் நெப்போலியன் என்ற பெயரில் ஒரு வளர்ப்பு நாய் இடம் பெறுகிறது. அதைப் பற்றிய கதையைக் கேட்டு மாணவர்கள் வருந்துகிறார்கள். அவர்களுக்கு வரலாற்றில் அறியப்படும் நெப்போலியன் வெறும் தகவல் மட்டுமே.
உண்மையைச் சொல்ல வேண்டும் என்ற உந்துதல் மற்றும் ஒடுக்கப்பட்டவர்களுடன் தன்னை அடையாளம் காணுதல் இவையே தன்னை எழுத வைக்கின்றன என்கிறார் ஹோலுப்
ஹோலுப்பின் கவிதையில் வரும் கதவைப் போலவே அவரை வாசிக்கும் போது நாமும் எதிர்பாராமையைச் சந்திக்கிறோம். அதற்குள் ஆட்படுகிறோம். கவிதைக்கு வெளியே நடைபாதையில் காலடிச் சத்தங்களையும் கதவுகள் திறந்து மூடுவதையும் நாம் கேட்கிறோம். புற உலகம் கவிதையின் நீட்சியாகவே தோற்றம் தருவதை வியப்போடு பார்க்கிறோம். நமக்குள் கவிதையின் நிசப்தமான வெளிச்சம் நிரம்புகிறது..
.
May 23, 2023
மகிழ்ச்சியின் பெயர்
Borsch. The Secret Ingredient என்ற ஆவணப்படத்தைப் பார்த்தேன்.

யெவ்ஹென் க்ளோபோடென்கோ என்ற சமையற்கலைஞர் போர்ஷ் என்ற சூப்பின் ரெசிபிகளைக் கண்டறிய முயலும் பயணத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. ‘
இதில் உக்ரேனிய உணவுப்பண்பாட்டினையும் அதன் வரலாற்றையும் சிறப்பாகப் பதிவு செய்துள்ளார்கள்
இறைச்சி, உருளைக்கிழங்கு, தக்காளி மற்றும் பீட்ரூட் கொண்டு சமைக்கப்படும் போர்ஷ் சூப் உக்ரேனியர்களின் விருப்பத்திற்குரிய உணவு. எல்லா விசேசங்களிலும் அவர்கள் போர்ஷ் தயாரிக்கிறார்கள்.. உக்ரேனியர்களை ஒன்றிணைக்கும் இந்த சூப்பை பல்வேறு விதங்களில் சமைக்கிறார்கள். அதன் வரலாற்றையும் சமைக்கும் விதத்தையும், ரகசிய சேர்மானங்களையும் அறிந்து கொள்ள யெவ்கென் நீண்டதொரு பயணத்தை மேற்கொள்கிறார்,

தனது பயணத்தின் இறுதியில் உக்ரேனின் தேசிய அடையாளமாக போர்ஷ் எப்படி மாறியது என்பதை யெவ்ஹென் அறிந்து கொள்கிறார்.
தனது பயணத்தில் போர்ஷ் தயாரிப்பதில் தேர்ந்த சமையற்கலைஞர்களைச் சந்தித்து எவ்வாறு இதனைச் சமைக்கிறார்கள் என்பதைக் கண்டறிகிறார். சமையற்கூடங்கள் நவீனமாகியிருப்பதையும் உணவுக்கலன்கள் மாறியிருப்பதையும் படத்தில் பதிவு செய்திருக்கிறார்கள். பலரும் முதன்முதலாக போர்ஷ் சாப்பிட்ட நினைவுகளை பகிர்ந்து கொள்கிறார்கள்.
ஆற்று நீரில் சமைத்த போர்ஷ், மீன், பாலாடை, வாத்து இறைச்சி, மற்றும் விஸ்கி, தேன் ஆகியவற்றைக் கொண்டு தயாரிக்கப்பட்ட போர்ஷ் எனப் பல்வேறு விதமான போர்ஷ் சூப் தயாரிப்பினை படத்தில் ஆவணப்படுத்தியிருக்கிறார்கள்

ஷாட்ஸ்க் ஏரியின் அருகே பிளாக் போர்ஷ் என்று அழைக்கப்படும் சூப் தயாரிக்கப்படுகிறது. இதில் காட்டுப்பன்றியின் இரத்தத்தைச் சேர்த்துத் தயாரிக்கிறார்கள். டினிப்ரோ ஆற்றின் தெற்குக் கரையில், மீன், அல்லது மாட்டிறைச்சி அல்லது கோழி இறைச்சியினைக் கொண்டு போர்ஷ் தயாரிக்கப்படுவதைக் யெவ்ஹென் காணுகிறார்
துவக்க காலத்தில் பீட்ரூட் கொண்டு தயாரிக்கப்பட்ட இந்த சூப்பில் எதையெல்லாம் புதிதாகச் சேர்த்து புதிய சுவையை உருவாக்கியிருக்கிறார்கள் என்பதை யெவ்ஹென் அறிந்து கொள்கிறார்.
ஒரு காட்சியில் எந்த வகைப் பாத்திரத்தில் எந்த நிலவு நாளில் இதனைச் செய்ய வேண்டும் என்று ஒரு பெண் விளக்குகிறார்.
இன்னொரு காட்சியில் செர்னோபில் அணுஆயுத அழிவிற்குப் பின்பு அந்த நகரின் அழிந்த காட்சிகளையும் அங்கே செயல்படும் அணுமின் நிலைய உணவகத்தையும் பார்வையிடுகிறோம். அங்கே தொழிலாளர்களுக்காகப் போர்ஷ் சூப் தயாரிக்கப்படும் முறையினையும் அறிந்து கொள்கிறோம்

இத்தனை விதமாகச் சமைக்கப்படும் போர்ஷ்களில் எது உண்மையான உக்ரேனிய சூப்.
அனைவரும் சொல்லும் விஷயம். எப்படிச் சமைத்தாலும் போர்ஷ் சூப் சுவையாகவே இருக்கிறது. அதை உண்ணும் போது மகிழ்ச்சியாக உணருகிறோம். என்பதே

போர்ஷ் என்பது உணவின் பெயரில்லை. அது மகிழ்ச்சியின் பெயர் என்கிறார் யெவ்ஹென். பெரிய நகரங்களிலிருந்து சிறிய குடிசை வீடு வரை போர்ஷ் சூப் ஆசையாகத் தயாரிக்கப்படுவதைக் காணும் போது அது நிஜம் என்பதை உணருகிறோம்
உக்ரேனியர்கள் போரால் பிரிந்து கிடந்த போதும் ருசியால் ஒன்றிணைந்திருக்கிறார்கள் என்கிறார் யெவ்ஹென்.
சூப்பை தனித்துவமாக்கும் ரகசிய பொருட்களைக் கண்டறிய முயலும் யெவ்ஹென் உண்மையில் கண்டறிவது காலம் காலமாக மனிதர்கள் தொடர்ந்து வரும் சுவை மற்றும் விருப்பங்களையே.
S. Ramakrishnan's Blog
- S. Ramakrishnan's profile
- 657 followers
