S. Ramakrishnan's Blog, page 57
August 3, 2023
ருகெண்டாஸின் ஓவியங்கள்
An Episode in the Life of a Landscape Painter என்றொரு நாவலை அர்ஜென்டின எழுத்தாளர் செசர் ஐரா எழுதியிருக்கிறார். ஜெர்மானிய ஓவியரான ஜோஹன் மோரித் ருகெண்டாஸ் வாழ்க்கையினையும் செவ்விந்தியர்களைத் தேடி அவர் மேற்கொண்ட பயணத்தையும் முதன்மைப்படுத்தி எழுதப்பட்டது இந்த நாவல். ரொபெர்த்தோ பொலான்யோ இதற்கு முன்னுரை எழுதியிருக்கிறார். அதில் ஐராவை நிகரற்ற நாவலாசிரியர் என்று கொண்டாடுகிறார். அது உண்மை என்பதை நாவலை வாசித்து முடிக்கும் போது உணர்ந்தேன்

ருகெண்டாஸ் தனது உயிரையும் பொருட்படுத்தாமல் செவ்விந்தியர்களை தேடிச் சென்று படம் வரைந்திருக்கிறார். குதிரையில் செல்லும் போது மின்னல் தாக்கி விழுந்திருக்கிறார். யாரும் அறிந்திராத உலகை வரையச் சென்ற அவரது தேடல் விசித்திரமாக நாவலில் விவரிக்கபடுகிறது.
rather than isolating images and treating them as “emblems” of knowledge, his aim was to accumulate and coordinate them within a broad framework, for which landscape provided the model. என்கிறார் ஐரா.



ருகெண்டாஸின் ஓவியங்களை நேரிலே பார்த்திருக்கிறேன். பிரேசிலின் நிலக்காட்சிகள் மற்றும் பூர்வ குடிகளின் வாழ்க்கையை ருகெண்டாஸ் சிறப்பாகப் பதிவு செய்திருக்கிறார்.


1822 முதல் 1825 வரையிலான காலகட்டத்தில் பிரேசில் முழுவதும் பயணம் செய்து அங்குள்ள கறுப்பின மக்களையும் அவர்களின் பழக்கவழக்கங்களையும் வரைந்திருக்கிறார்.
ருகெண்டாஸின் நிலப்பரப்பு ஓவியங்களின் தனிச்சிறப்பு வண்ணங்களை அவர் பயன்படுத்தும் விதமாகும். பிரேசிலின் இயற்கைக் காட்சிகள் மர்மமான வசீகரத்துடன் தோற்றமளிக்கின்றன. திருவிழா, வேட்டை, நடனம் என அவர் பூர்வ குடிகளின் வாழ்க்கையைச் சிறப்பாக வரைந்திருக்கிறார்.

The Dance என்ற ஓவியத்தினை ஆழ்ந்து அவதானிக்கும் போது அந்த இசையை நம்மால் கேட்க முடியும்.
July 30, 2023
திரைப்படங்களை ஆவணப்படுத்துதல்
தமிழ் திரைப்படங்களை ஆவணப்படுத்துதல் குறித்தும் அழிந்தும் மறைந்தும் போன தமிழ் திரைப்படங்கள் குறித்து உருவாக்கபட்ட சிறந்த டாகுமெண்டரி. சுகீத் கிருஷ்ணமூர்த்தி இதனை இயக்கியுள்ளார்.
புதுக்கோட்டை புத்தகத் திருவிழாவில்
புதுக்கோட்டை புத்தகத் திருவிழாவில் தேசாந்திரி பதிப்பகம் அரங்கு அமைத்துள்ளது. கடை எண் 98
எனது அனைத்து நூல்களும் அங்கே கிடைக்கும்


28 மாலை புதுக்கோட்டை புத்தகத் திருவிழா அரங்கில் உரையாற்றினேன். திரளான கூட்டம். நிறைய இளைஞர்கள் வந்திருந்தார்கள்.


புத்தகக் கண்காட்சிக்கு உரையாற்ற வருபவர்களை எப்படி கவனித்துக் கொள்ளவேண்டும் என்பதற்கு புதுக்கோட்டை ஒரு முன்மாதிரி. தங்கும் அறை, உணவு, பயண ஏற்பாடு என அத்தனையும் சிறப்பாக செய்து கொடுத்தார்கள்.
புதுக்கோட்டை புத்தகத் திருவிழாவினை சிறப்பாக ஒருங்கிணைக்கும் நண்பர், கவிஞர் தங்கம் மூர்த்தி மற்றும் அவரது நண்பர்களுக்கு மனம் நிறைந்த பாராட்டுகள்
அரவான் – கல்லூரி பாடம்
தஞ்சாவூரில் இயங்கிவரும் குந்தவை நாச்சியார் அரசினர் மகளிர் கலைக்கல்லூரியில் அரவான் நாடகம் யூனிட் 3 பாடமாக வைக்கபட்டுள்ளது.

July 26, 2023
நினைவுச் சித்திரங்கள்
சசி எம் குமார் எழுதிய திண்ணை இருந்த வீடு சிறுகதைத் தொகுப்பைப் படித்தேன். 23 சின்னஞ்சிறு கதைகள். சந்தியா பதிப்பகம் வெளியிட்டுள்ளது.

தனது கிராமிய நினைவுகளையும் வாழ்வில் சந்தித்த மறக்கமுடியாத மனிதர்களையும் அழகான சிறுகதைகளாக எழுதியிருக்கிறார். மூன்று நான்கு பக்கங்களே உள்ள இந்தக் கதைகள் காட்சி ரூபமாகக் கண்முன்னே விரிகின்றன.
கதை என்று சொன்னாலும் இவை உண்மையான வாழ்க்கைப் பதிவுகள். இந்த மனிதர்களில் சிலரை நாம் அறிவோம். அவர்களுக்கு வேறு பெயர்கள் இருக்கக் கூடும். சசி இவர்களைத் தேர்ந்த ஓவியர் போல அழகான கோட்டுச் சித்திரமாக்கியிருக்கிறார்.
சித்திரமாடம் கதையில் வரும் ஓவியர் சேகர் மறக்கமுடியாத கதாபாத்திரம். கதையின் முடிவில் பரட்டை தலையுடன் அவர் ஆன்டன் செகாவ் சிறுகதைகள், மீராவின் கவிதைகள் மற்றும் அலுமினிய தட்டு டம்ளர் கொண்ட கிழிந்த பையோடு நிற்கும் கோலத்தைக் காணும் போது கண்ணீர் கசிகிறது. சேகர் போன்ற கலைஞர்களைக் காலம் இவ்வளவு இரக்கமின்றி விழச் செய்திருக்க வேண்டாம்.
அழியாத காதலைப் பேசும் கிருஷ்ணவேணியின் காதல் கடிதங்களில் ஆண்டுகள் கடந்தும் வெளிப்படும் காதல் பார்வை அழகானது. சசியின் கதைகளில் தஞ்சை நகரமும் காவிரி ஆறும் கிராமத்து மனிதர்களும் மிகுந்த அழகுடன் கலாபூர்வமாக வெளிப்படுகிறார்கள்.
எங்கிருந்தோ வந்து சேரும் லஜ்ஜாவின் கூடவே நாமும் நடக்கிறோம். வீடு பறிபோன துயரத்தில் பரதேசியாகிப் போன ஆர்கேபி, , சினிமா தியேட்டரில் வேலை செய்த ராஜா மணி, முருகேசன் மாமா லோகுமாமா என இவர் எழுதிக்காட்டியுள்ள மனிதர்கள் தஞ்சை மண்ணின் உண்மையான நாயகர்கள்.
வாழ்க்கை போராட்டத்தில் தோற்றுப் போன இந்த மனிதர்கள் தனது தீராத அன்பாலும் மனவுறுதியாலும் வெல்ல முடியாதவர்களாகிறார்கள். தன் மண்ணையும் மனிதர்களையும் கதைகளின் வழியே அழியா நினைவுச் சித்திரங்களாக்கியிருக்கிறார் சசி. அவருக்கு என் மனம் நிறைந்த பாராட்டுகள்
எனது ஆங்கிலச் சிறுகதைத் தொகுப்பு
தேர்வு செய்யப்பட்ட சிறுகதைகளின் ஆங்கிலத் தொகுப்பினை ஒரியண்ட் பிளாக்ஸ்வான் பதிப்பகம் வெளியிட்டுள்ளது. இதனை நீதிபதி பிரபாஸ்ரீதேவன் மொழிபெயர்ப்புச் செய்துள்ளார். இருநூறு பக்க அளவில் வெளியாகியுள்ளது


The Man Who Walked Backwards and Other Stories தொகுப்பில் 18 சிறுகதைகள் இடம்பெற்றுள்ளன.
வாசகர்கள், நண்பர்கள் இந்த நூலை வாங்கி ஆதரவு அளிக்க வேண்டுகிறேன்.
குறிப்பாகப் பிறமாநிலங்களிலும், அயல்நாட்டிலும் வசிக்கும் வாசகர்கள் இதனை வாங்கி நண்பர்களுக்கும் நூலகங்களுக்கும் பரிசாக அளிக்கலாம்.
நூலை வாங்குவதற்கான இணைப்பு.
July 25, 2023
பழிவாங்குதலின் பாதை
ஜான் ஃபோர்டின் The Searchers ஹாலிவுட் சினிமாவின் காவியங்களில் ஒன்றாகும்.

இது ஜான் ஃபோர்டின் நூற்றுப் பதினைந்தாவது திரைப்படம், சிறந்த இயக்குநருக்கான ஆஸ்கார் விருதை நான்கு முறை பெற்றிருக்கிறார் ஜான் ஃபோர்ட். அவரது மோசமான குடிப்பழக்கம் மிதமிஞ்சிய கோபம் காரணமாக அவரைக் கண்டு ஹாலிவுட் தயாரிப்பாளர்கள் பயந்தார்கள். திரையில் அவர் உருவாக்கிக் காட்டிய பிரம்மாண்டம் இன்றும் அதிசயமாகப் பேசப்படுகிறது.
இப்படம் ஃபிராங்க் எஸ். நுஜென்ட் எழுதிய திரைக்கதையை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. இவர் ஜான் ஃபோர்டின் 11 படங்களுக்குத் திரைக்கதை எழுதியிருக்கிறார்.

மேற்கு டெக்சாஸின் பரந்து விரிந்த நிலக்காட்சிகளின் நடுவே ஒற்றைக்குதிரையில் வரும் ஜான் வெய்னின் தோற்றம் மறக்க முடியாதது.
1868 இல் கதை நடக்கிறது. எட்டு ஆண்டுகளுக்குப் பின்பு, மேற்கு டெக்சாஸில் உள்ள தனது சகோதரர் ஆரோனின் வீட்டிற்கு ஈதன் எட்வர்ட்ஸ் வருகிறார். அவர் உள்நாட்டுப் போரில் சண்டையிட்டவர். இதற்காகப் பதக்கம் பெற்றிருக்கிறார். அவரது சேமிப்பில் நிறையத் தங்கக் காசுகள் இருக்கின்றன. படத்தின் ஆரம்பத்தில் ஒரு வீட்டின் கதவு திறந்து ஒரு பெண் வெளியே வருகிறாள். முடிவில்லாமல் விரிந்துள்ள நிலவெளியில் ஒரு குதிரை வருவதைக் காணுகிறாள். அவளது முகம் மலர்ச்சியடைகிறது. தொலைவில் ராணுவ உடுப்பு அணிந்து இடுப்பில் உடைவாளுடன் கறுப்பு தொப்பியோடு ஈதன் வருகிறார். மிக அழகான காட்சியது.


வீட்டிற்கு வரும் ஈதன் எட்டு வயதான சிறுமி டெபியை தலைக்கு மேல் தூக்கிக் கொஞ்சுகிறான். இரவு உணவிற்குப் பிறகு, ஈதன் தனியாக வெளியே அமர்ந்து கொண்டிருக்கிறான். ஈதனின் முகத்தில் விவரிக்க முடியாத சோகம் படிந்திருக்கிறது.
ஈதனின் கடந்த காலம் மர்மமானது; கடந்த சில ஆண்டுகளாக அவர் எங்கே இருந்தார் என யாருக்கும் தெரியாது. ஆகவே அவரிடம் ‘கலிபோர்னியா எப்படி இருக்கிறது எனச் சகோதர்ர் விசாரிக்கிறார். யாருக்கு தெரியும் என்கிறான் ஈதன். சட்டவிரோதமாக எதையோ செய்திருக்கிறார் போலும் என்ற எண்ணம் உருவாகிறது. அவரிடம் நிறையத் தங்கக் காசுகள் இருக்கின்றன. அது இந்தச் சந்தேகத்தை வலுப்பெற வைக்கிறது.

டெக்சாஸில் கால்நடைகள் திருடுபோவது வழக்கமாக நடந்து வருகிறது. இதைத் தடுக்கவும் கால்நடைகளை மீட்கவும் தனிக்காவல் படை செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் ஆரோனின் பக்கத்துப் பண்ணையிலுள்ள லார்ஸ் ஜோர்கென்சனுக்குச் சொந்தமான கால்நடைகள் திருடப்படுகின்றன. அந்தக் கால்நடைகளை மீட்கக் கேப்டன் சாமுவேல் கிளைட்டன் மற்றும் ஈதன் குழுவினர் புறப்படுகிறார்கள். உண்மையில் இது ஒரு சூழ்ச்சி என்பதும் ஆண்களை வெளியே அனுப்பிவைப்பதற்காகவே இந்தத் திருட்டு நடைபெற்றது எனவும் தெரிய வருகிறது.
மீட்புக்குழுவினர் திரும்பி வருவதற்குள் ஆரோன், அவரது மனைவி மார்த்தா மற்றும் மகன் பென் ஆகியோர் கொல்லப்பட்டிருக்கிறார்கள் டெபி மற்றும் அவரது மூத்த சகோதரி லூசி ஆகியோர் பூர்வகுடியினரான கொமாஞ்சியர்களால் கடத்தப்படுகிறார்கள்.

இறந்த உடல்களை அடக்கம் செய்யும் ஈதன் கடத்தப்பட்ட பெண்களை மீட்க தனது தேடுதல் வேட்டையைத் துவக்குகிறார். கொமாஞ்சியர் ஒரிடத்தில் அவர்களை மறைந்து தாக்குகிறார்கள். லூசி ஒரு பள்ளத்தாக்கில் கொடூரமாகக் கற்பழிக்கப்பட்டுக் கொலை செய்யப்பட்டிருப்பதை ஈதன் கண்டறிகிறார். பழிவாங்கும் வெறி அவருக்குள் அதிகமாகிறது.
அவர்கள் நினைத்தது போல டெபியை கண்டுபிடிப்பது எளிதாகயில்லை. குளிர்காலம் பிறக்கிறது. , ஈதனும் மார்ட்டினும் ஜோர்கென்சன் பண்ணைக்குத் திரும்புகிறார்கள். டெபியைப் பற்றிய தகவலைத் தேடிக் கொண்டேயிருக்கிறார் ஈதன்.
ஐந்து வருடங்களுக்குப் பிறகு நியூ மெக்சிகோவில், டெபியை காண்கிறார், இப்போது அவள் கொமாஞ்சி ஒருவரின் மனைவியாக வாழுகிறாள். கடத்தப்பட்ட பின்பு தப்பிக்க வழியின்றி அவர்களில் ஒருத்தியாகிவிட்டதாகக் கூறுகிறாள். அது தான் நிதர்சனம். அவளது இந்த வாழ்க்கையை ஈதனால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. அதிலிருந்து அவளை விடுவிக்க முயலுகிறார். அவள் அதை ஏற்கவில்லை

இந்தப் பகுதி தான் படத்தின் மையம். யாரை இத்தனை ஆண்டுகள் தேடிக் கொண்டிருந்தாரோ அவள் இப்போது எதிரியின் குடும்பத்தில் ஒருத்தியாகிவிட்டாள். அதை ஈதனால் தாங்க முடியவில்லை. ‘இப்படி ஒரு வாழ்க்கைக்குப் பதில் அவள் செத்துப்போயிருக்கலாம் என நினைக்கிறார். அவளைக் கொல்லவும் துணிகிறார். மார்டின் குறுக்கிட்டு அவளைக் காப்பாற்றுகிறான். டெபியின் காரணமாக இப்போது ஈதனும் கோமாஞ்சியர்களின் உறவே. அதை ஈதனால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. அவரது பழிவாங்குதலின் பாதை திசைமாறுகிறது.
படம் வெளியான போது ஜான் ஃபோர்ட் இனவெறியுடன் ஈதன் கதாபாத்திரத்தை உருவாக்கியிருக்கிறார் எனக் கடுமையான விமர்சனம் வெளியானது.

ஈதனின் வீடு திரும்புதலில் துவங்கிய படம் யாருமற்ற தனிமையில் பயணிப்பதுடன் முடிவடைகிறது. ஈதனின் கடந்தகாலம் போலவே அவனது எதிர்காலமும் மர்மமானதே.
கொமாஞ்சியர்களைத் தேடிச் செல்லும் காட்சிகளும் அவர்களுடன் நடக்கும் பரபரப்பான குதிரைச் சண்டையும். இரவுக்காட்சிகளும் சிறப்பாகப் படமாக்கப்பட்டுள்ளன.
காலமும் வெளியும் தான் படத்தின் உண்மையான கதாநாயகர்கள். இந்த இரண்டும் இணைந்து திரையில் உருவாக்கும் மாயம் நிகரில்லாதது
ஓப்பன் ஹைமர்
யூஜி.அருண் பிரசாத். தூத்துக்குடி.
எஸ்.ராமகிருஷ்ணன் எழுதிய நிலம் கேட்டது கடல் சொன்னது புத்தகத்தில் ஹிரோஷிமா நாகசாகியில் அணுகுண்டு வீசப்பட்டது குறித்து விரிவாக எழுதியிருக்கிறார்.

இன்றைய ஹிரோஷிமா எப்படி இருக்கிறது என்பதில் துவங்கி வரலாற்றில் ஜப்பான் எப்படி இருந்தது , ஏன் ஹிரோஷிமா நாகசாகி என்ற இரு ஜப்பானிய நகரங்கள் மீது அணுகுண்டு வீசப்பட்டது என்பது வரை தனது விரிவான பயண அனுபவங்களைச் சிறப்பாகப் பதிவு செய்திருக்கிறார் எஸ்.ரா. இதை வாசிக்கும் போது நாமும் அவருடன் இணைந்து ஜப்பானில் பயணம் செய்கிறோம்.
OPPENHEIMER திரைப்படம் பார்க்கும் முன் இந்தப் புத்தகம் வாசித்தேன். இதற்கு முக்கியக் காரணம்
கிறிஸ்தபர் நோலன் திரைப்படங்கள் அவ்வளவு எளிதாக எனக்குப் புரிந்ததில்லை. எனவே இந்த முறை ஹிரோஷிமா நாகசாகி மீது போடப்பட்ட அணுகுண்டை உருவாக்கிய இயற்பியலாளர் ஓப்பன் ஹைமர் பற்றிய திரைப்படம் என்பதை அறிந்து முதலிலே இக்கட்டுரையை வாசித்த பின் திரையரங்கு சென்றேன். ஆகவே படம் நன்றாகப் புரிந்தது.
அதுமட்டுமல்லாமல் அணுகுண்டு போடப்பட்ட காட்சி திரைப்படத்தில் வரும் நேரத்தில், புத்தகம் படித்த போது எனக்குள் தோன்றிய காட்சிகளையே படத்திலும் கற்பனை செய்து கொண்டேன் , ஏனென்றால் எதிர்பார்த்தது போலவே அக்காட்சி திரையில் வரவில்லை.
அப்போது தான் எழுத்தின் வலிமையை உணர்ந்து கொண்டேன்.
இதற்கு முன்பாக எஸ்.ராமகிருஷ்ணன் வலைப் பக்கத்தில் “காட்சிகளின் புதிர் பாதை” என்ற தலைப்பில் நோலனின் “inception” திரைப்படம் பற்றிய விமர்சனம் ஒன்றையும் வாசித்து இருந்தேன், அருமையான கட்டுரை. உலகச் சினிமா பற்றிய அவரது கட்டுரைகளை வாசிக்கையில் மிகவும் வியப்பாக இருக்கிறது. புரிந்து கொள்ள முடியாத கிறிஸ்தபர் நோலன் படத்தை எளிதாகப் புரிந்து கொள்ள வைத்த எஸ்ரா அவர்களுக்கு நன்றி
July 24, 2023
கோவையில்
கோவை புத்தகக் கண்காட்சியில் இரண்டு நாட்களும் நிறைய வாசகர்களைச் சந்தித்தேன். இனிமையான அனுபவமாக இருந்தது.








வாசிக்க வேண்டிய புத்தகங்கள், அரிய ஒவியங்கள், உலகசினிமா, மற்றும் எழுதும் கலை குறித்து அறிந்து கொள்வதில் இளம்வாசகர்கள் அதிக ஆர்வம் காட்டுகிறார்கள்.
தேசாந்திரி சார்பில் இதற்கென சிறப்பு நிகழ்வுகளை நடத்தலாம் என்று முடிவு செய்திருக்கிறேன். நாள் மற்றும் நேரம் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும்.

சனிக்கிழமை மாலை மாதம்பட்டி ரங்கராஜ் அவர்களின் முன்னெடுப்பில் நடைபெற்ற கோல்டன் லீப் அவார்ட் நிகழ்ச்சியில் கலந்து கொண்டேன்
உணவுக் கலையில் அர்த்தமுள்ள பங்களிப்பைச் செய்துவரும் ஒன்பது பேருக்கு இந்த விருது வழங்கப்பட்டது.
திருப்பூர் ”சாய் கிருபா சிறப்புப் பள்ளி”நடத்தி வருபவர் திருமதி. கவின் திருமுருகனுக்கு விருது அளித்துப் பாராட்டினேன்.
இரண்டு நாட்களும் உடனிருந்து உபசரித்த மூர்த்திக்கு மனம் நிறைந்த நன்றி. டாக்டர் சந்திரமௌலி நேற்றிரவு சிறந்த விருந்து அளித்தார். நண்பர் வசந்த் காலையில் விமானநிலையம் வரை வந்து வழியனுப்பி வைத்தார்.
July 21, 2023
கோவையில் இரண்டு நாட்கள்
புத்தகத்திருவிழாவில் கலந்து கொள்ள நாளை கோவை வருகிறேன்.

22 .07.23 சனிக்கிழமை மற்றும் 23.07.23 ஞாயிறு ஆகிய இரண்டு தினங்கள் கோவையில் இருப்பேன்.
புத்தகத்திருவிழாவில் தேசாந்தரி பதிப்பகம் அரங்கு அமைத்துள்ளது. அரங்கு எண் 17. அங்கே என்னைச் சந்திக்கலாம்.

சனிக்கிழமை மாலையும், ஞாயிறு காலை 11 மணி முதல் இரவு 8 மணி வரை தேசாந்திரி அரங்கில் இருப்பேன்.
S. Ramakrishnan's Blog
- S. Ramakrishnan's profile
- 657 followers
