S. Ramakrishnan's Blog, page 59

August 4, 2023

வெயிலைக் கொண்டு வாருங்கள் / கற்பனையின் உச்சம்

கணேஷ்பாபு. சிங்கப்பூர்

குறுங்கதைகள், அதிகதைகள், மாய யதார்த்தக் கதைகளை அல்லது பொதுவாகப் பின்நவீனத்துவப் படைப்புகளை வாசிப்பதற்கு வாசகன் மனதளவில் சில தீர்மானங்களை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும். முதலில், முன்முடிவற்று இப்பிரதிகளை வாசிக்கப் பழக வேண்டும். ஆங்கிலத்தில் “Wilful suspension of disbelief” என்பார்கள். வாசகன் இவ்வகை அதிகதைகளை வாசிக்கையில் தனது நம்பிக்கையின்மையை அல்லது அவநம்பிக்கையை அல்லது தர்க்க அறிவை பிரக்ஞைபூர்வமாக ரத்து செய்துவிட்டு பிரதிக்குள் நுழைய வேண்டும். ஒரு விலங்கு எப்படிப் பேசும், குரங்கு எப்படிக் கடலைத் தாவும் என்று கேட்கும் வாசகனால் இலக்கிய அனுபவத்தை முழுக்கத் துய்க்க இயலாது. அவனது தர்க்க மனமே அவனது வாசிப்புக்கு வேகத் தடை போட்டு அவனைப் பிரதிக்குள் நுழையவொட்டாமல் செய்யும்.

பின்நவீனத்துவ ஆக்கங்களில் அதிகதைகள் அதன் அடுத்தக் கட்டத்திற்கு எடுத்துச்செல்லப்பட்டது. பின் நவீனத்துவக் கூறுமுறைகளான கட்டற்றுச் சொல்தல், நேர்க்கோடற்ற விவரணை, வடிவமற்ற வடிவம் போன்றவை அதிகதைகளில் ஏற்றப்பட்டு அடுத்தத் தளத்திற்கு அவை நகர்ந்தன.

தமிழில் எஸ். ராமகிருஷ்ணனின் “வெயிலைக் கொண்டு வாருங்கள்” சிறுகதைத் தொகுதி இத்தகைய நவீன அதிகதைகள் (Modern Fables) மட்டுமே உள்ளடங்கியது. ஏழு இறகுகள், அந்தரம், வடு, பத்ம விகாரை, வெயிலைக் கொண்டு வாருங்கள், சாக்கியனின் பல், நாளங்காடி பூதம், கானகப் புலியின் மனைவி போன்ற முக்கியமான கதைகள் நிறைந்த தொகுதி. நவீன மனத்தின் கொந்தளிப்புகளையும், சிடுக்குகளையும், தனிமைச் சிக்கலையும், புறக்கணிப்பையும் தனது நவீன அதிகதைகள் மூலம் காட்டிச் செல்கிறார் எஸ். ராமகிருஷ்ணன்.

சாக்கியனின் பல்லைத் தேடியலையும் விவசாயியின் மகன்கள், ஒற்றை மழைத்துளி தனது வீட்டின்மேல் அந்தரத்தில் நிலைகொண்டிருப்பதைப் பார்த்துக் கொண்டிருக்கும் விவசாயி, புலியை மணந்து கொண்டு காட்டுக்குச் செல்லும் பெண் கடைசியில் புலியின் சுபாவத்தைத் தான் பெற்றுக்கொண்டு தனது வீட்டிற்குள் சென்று மறைவது, கபில நிறத்தில் பெண் வாசனையைச் சுரக்கும் இரண்டு மலர்களுடைய செடி என இத்தொகுதி முழுக்க அவர் காட்டும் சித்திரங்கள் வாசகன் முன்னறியாதவை.

“நாளங்காடி பூதம்” என்ற கதையை நான் பல வருடங்களாகத் தொடர்ந்து வாசித்தபடியிருக்கிறேன். இக்கதையின் தளம், கதை சொல்லல் முறை, கதாபாத்திரங்கள், கதையின் முடிவு என யாவும் இன்றளவும் என்னை வசீகரித்தபடி இருக்கின்றன. தமிழின் முக்கியமான கதைகளில் ஒன்றாக இக்கதையைச் சந்தேகமில்லாமல் சுட்டிக் காட்டலாம். சிலப்பதிகாரத்தின் சதுக்கப் பூதத்தை நினைவுபடுத்துவது இக்கதை. ஆனாலும், சதுக்கப் பூதம் என்ற ஆழ்படிமத்தில் நவீன மனத்துக்குரிய சிக்கலை ஏற்றி, அதை நாளங்காடி பூதம் என்ற நவீன படிமமாக மாற்றியிருக்கிறார் எஸ்.ரா.

“நாளங்காடி பூதத்தினைப் பற்றி நான் சொற்பமே அறிந்திருந்தேன்” என்று துவங்கும் இக்கதை வாசகனை சட்டென உள்ளிழுத்துக் கொள்கிறது.அந்த நகரின் வணிகச் சந்தையைக் காவல் காக்கும் பொறுப்பை ஏற்றுக்கொண்டிருக்கிறதுபூதம். அதனைத் தவிர்த்து, சந்தையில் நிகழும் வியாபாரம் நாணயத்துடனும் நிகழ்கிறதா என்று கண்காணிப்பதும் பூதத்தின் பணிதான்.இவை யாவற்றையும் பூதம் தன்னுடைய புலன்களால்தான் நிகழ்த்துகிறது. வியாபாரத்தைத் தனது கண்களின் மூலமாகவும், தராசுகளின் அளவைகளைத் தனது நாவின் மூலமாகவும், வாசனைகளின் துல்லியத்தைத் தனது நாசியின் மூலமாகவும் பூதம் கண்காணிக்கிறது. சந்தைக்குள் வணிகம் செய்யும் வணிகர்களுக்குப் பூதத்தின் கூர்மையானதும் சமரசமற்றதுமான புலன்களின் மேல் தீராத பயம் இருப்பதால், அவர்கள் தங்கள் வணிகத்தில் நேர்மை தவறுவதில்லை.

விநோதமான பண்டங்களை விற்கும் இரட்டை ஸ்திரிகள் முதன்முதலாக அந்தச் சந்தைக்கு வருகிறார்கள்.ஒருவள் தனது சிரிப்பையும் மற்றவள் தனது அழுகையையும் விற்கத் துவங்குகிறார்கள். சிரிப்பை விற்பவள் தனது சிரிப்பை வெகு சொற்பமான விலைக்கு விற்கிறாள். அழுகையை விற்பவளோ தனது அழுகைக்கு விலை அதிகமாகச் சொல்கிறாள்.

சிரிப்பை விற்பவளிடம் கூட்டம் கூடுகிறது. மக்கள் அவளது சிரிப்பை வாங்கிச் சென்றபடி இருக்கிறார்கள். ஆனால் அழுகையை விற்பவளது முன் எவரும் வரவில்லை. துயரை எவரும் விலை கொடுத்து வாங்கிச் செல்ல விருப்பமற்றிருக்கிறார்கள். விசித்திரமாக அதன் பிந்தைய நாட்களில் அந்த இரட்டை ஸ்திரிகள் சந்தைக்கு வருவதை நிறுத்திக் கொண்டார்கள். ஆனால்,ஒவ்வொரு நாளும் சிரிப்பை வாங்க வந்தவர்கள் அந்த இரட்டை ஸ்திரிகளைக் காணாமல் சந்தைக்குள் சண்டையிடத் துவங்கினார்கள். வணிகம் சிதைகிறது. நாளங்காடி பூதத்தின் சமாதானத்தை எவரும் பொருட்படுத்தவில்லை. முதன்முறையாக நாளங்காடி பூதம் கவலைப்படுகிறது. அந்த இரட்டை ஸ்திரிகளைக் கண்டுபிடித்து மீண்டும் அவர்களைச் சந்தைக்குள் வருமாறு அழைப்பு விடுக்கிறது. அவர்களில் அழுகையை விற்பவள், தான் போகும் எந்தச் சந்தையிலும் தன் அழுகையை எவரும் வாங்கிக்கொள்ள மறுக்கிறார்கள், தனது அழுகையை வாங்க முன்வராத இந்த நகரத்தில் வெறுமை சூடிக்கொள்ளட்டும் என்று சாபமிடுகிறாள். பூதம் அவளது அழுகையைத் தான் வாங்கிக் கொள்ள முன்வருகிறது. அவளது அழுகையின் விலை மிக அதிகம் என்பதால் தன்னுடைய ஒரே சொத்தான தனது புலன்களை அவளது அழுகைக்கு ஈடாகத் தந்து விடுகிறது.

அதன் பிறகான நாட்களில் நகரமும் சந்தையும் இயல்பு நிலைக்குத் திரும்பி விடுகின்றன. ஆனால், அதன்பின் நாளங்காடி பூதத்தை ஒருவரும் பார்க்கவேயில்லை. தான் வாங்கிய கண்ணீர்த் துளியை பூதம் தன் கைகளில் ஏந்தியதும் அதன் கனம் தாங்காமல் பூதம் சரிந்து விடுகிறது. அந்த வீடும் இடிந்து விடுகிறது. ஈரம் உலராத அந்த அழுகைத் துளி மட்டும் கண்ணாடித் துகளென அந்த வீட்டில் எஞ்சிவிடுகிறது. நெடுநாட்கள் கழித்து ஒரு காலையில் இடிபாடுகளில் விளையாட வந்த ஒரு சிறுமி இந்தக் கண்ணீர் துளியை எடுத்து வானில் எறிகிறாள். அந்தத் துளி உடைந்து காற்றில் பெருஞ்சிரிப்பொன்று எழுகிறது. வானம் சிரிக்கிறது என்றபடியே சிறுமி சந்தோஷமாகத் தாவிச் சென்றாள் என்று கதை முடிகிறது.

இக்கதையில் நவீன மனதின் சிக்கல்களைப் பூடகமாகச் சித்தரிக்கிறார் எஸ்.ரா. நவீன வாழ்வின் சிடுக்குகளில் சிக்கிக்கொண்டிருக்கும் மனிதனுக்குக் கவலைப்படுவதற்கும் அழுவதற்கும் எண்ணிக்கையற்ற காரணங்கள் இருக்கின்றன. ஆனால், காரணமற்று அவன் சிரிப்பது கூட இல்லை. சிரிப்பை அவன் தொலைக்கும் தறுவாயில் இருக்கிறான். மாநகரத்தின் பேருந்துகளிலோ, ரயில்களிலோ, வீதிகளிலோ சாதாரணமாக அவதானித்தாலே தென்படக்கூடிய நிதர்சனம் இது. எவரும் சிரிப்பை உதிர்ப்பதேயில்லை. தனக்குள் அமிழ்ந்துவாறு ஏதேதோ சிந்தனையில் சிடுசிடுத்த முகங்களை ஏந்திக்கொண்டு தினமும் வீட்டுக்கும் அலுவலகத்துக்கும் ஓடிக் கொண்டிருக்கிறார்கள் மனிதர்கள். நின்று நிதானித்துச் சிரிக்க இயலாத ஒரு வாழ்வைச் சூடிக் கொண்டிருக்கும் மனிதர்கள். தன்னிடம் இல்லாத பண்டத்தைத்தான் மனிதன் வாங்கிக் கொள்வான். இந்தக் கதையிலும் மனிதன் தன்னிடம் இல்லாத சிரிப்பைத்தான் வாங்கிச் சென்றபடியிருக்கிறான். அழுகையை அவன் ஏன் வாங்கிக் கொள்ள வேண்டும். அதுதான் அவனிடம் நிறைய இருக்கிறதே.

ஆனால் அழுகையை விற்றவள் ஆற்றாமை காரணமாக நகரைச் சபித்து விடுகிறாள். “சிரிப்பின் நீண்ட சாலை முடியும் இடத்தில் அழுகையின் வீட்டு முன்கதவு தெரிகிறது” என்ற வரியொன்றைச் சொல்கிறாள் அவள். எப்படிச் சிரிப்பின் சாலை அழுகையின் வீட்டில் முடிகிறதோ அதுபோலவே அழுகையின் சாலையும் சிரிப்பில் முடிகிறது. கதையின் முடிவு இதை உணர்த்துவது போல அமைந்துள்ளது.

இக்கதையில் பூதம் ஏன் இடம்பெறுகிறது? மனிதனை விடவும் பலமும் கூர்மையான நாசியும் பெற்ற பூதத்தினாலும் சிரிப்பின் இயல்பையும் அழுகையின் இயல்பையும்,மனித வாழ்வில் இவையிரண்டின் பாதிப்பையும் உணர்ந்துகொள்ள முடியவில்லை. மனிதனை விடவும் பெரிய சக்தியொன்று தன்னிடம் உள்ள அரியதொன்றை இழக்கத் துணிந்தாலன்றி, மனித உணர்வுகளில் ஒரு சமநிலையை ஏற்படுத்த இயலாது என்பதைச் சுட்டுவதற்காகப் பூதத்தினைக் கதைக்குள் கொண்டு வந்திருக்கலாம் என்பது எனது பார்வை. மனிதனை விடவும் வலியதான பூதம்கூட மனிதனின் ஒற்றைக் கண்ணீர்த் துளியைத் தாங்கும் சக்தியைக் கொண்டிருக்கவில்லை என்பதைக் கதை நுட்பமாக உணர்த்திச் செல்கிறது.

இத்தொகுப்பில் படிமங்களின் அர்த்தங்களைத் தலைகீழாக்கும் பரிசோதனையையும் எஸ்.ரா முயன்றிருக்கிறார். சாக்கியனின் பல்லைத் தேடிப் போகும் ஒரு விவசாயிவின் மகன்கள் பல அவஸ்தைகளின் பிறகு தங்கள் வாழ்நாளின் அந்திம காலத்தில் தங்கள் தந்தையின் மண்டையோட்டில் இருக்கும் பல்லில் சாக்கியனின் பல்லை உணரும் கதை மிக நுட்பமானது. ஆசையின் இலக்கு சாக்கியனின் பல்லின் மீது இருந்தாலும் கூட அது அர்த்தமற்றதே. அதை அறிந்துகொள்ள அவர்கள் தங்கள் வாழ்நாளையே தியாகம் செய்திருந்தனர். மேலும் அவர்கள் அபகரிக்க விரும்பிய பல்லை உடைய சாக்கியன் உண்மையில் அவர்களிடமேதான் இருந்துள்ளான் என்ற உண்மையை அவர்கள் அறிய நேரும்போது தகப்பனின் கபாலம் வெயிலில் சூடேறிக்கொண்டிருக்கிறது. ஆசையற்றிருப்பவன் எவனுமே சாக்கியனின் குறியீடுதான் என்ற அர்த்தத் தலைகீழாக்கத்தை இக்கதையின் மூலம் சுட்டிச் செல்கிறார் எஸ்.ரா.

படைப்பாளி தான் உணர்த்த விரும்பும் ஒன்றை உக்கிரமாக்கிக் காட்டவும் அதன் இயல்பு வடிவத்தினின்றும் பூதாகரமாக்கிக் காட்டவும் அதிகதைகள் உகந்த வடிவங்களாக இருக்கின்றன. ஏன் தான் சொல்ல வருவதை அவன் பூதாகரமாக்க வேண்டும்? காரணம் அதன் இயல்பு வடிவத்தில் அதைப் பலரும் பலவிதத்தில் சொல்லிவிட்டார்கள். ஆனாலும் அது பெரிதான தாக்கத்தையோ பிரக்ஞைபூர்வமான இருப்பையோ வாசகனிடத்தில் ஏற்படுத்தவில்லை. மாறாக, அபௌதிக உருவகங்களைக் கதைக்குள் சிருஷ்டித்து மீபொருண்மைத் தளத்துக்குக் கதையை உயர்த்திப் படிமங்களை உக்கிரமாக்கிக் காட்டும்போது வாசகனிடத்தில் ஒரு கவனக்குவிப்பை ஏற்படுத்த இயல்கிறது. இவ்வியல்பினாலேயே அதிகதைகள், பின் நவீனத்துவப் படைப்பாளிகளின் விருப்பத்திற்குரிய கதை வடிவமாகின்றன. ஜெயமோகனின் புகழ்பெற்ற கதைகளான படுகை, மாடன் மோட்சம், மண் போன்ற கதைகளிலெல்லாம் அதிகதை வடிவங்களே பயன்படுத்தப்பட்டிருக்கின்றன என வாசகர் கவனிக்கலாம்.

மனிதன் தான் காணும் பொருட்களிலெல்லாம் தன் எண்ணங்களை ஏற்றி அதன் மூலம் அந்தப் பொருளை சந்தோஷத்தின் குறியீடாகவோ நிராசையின் குறியீடாகவோ மாற்றிவிட வல்லவன். அவனது இந்த இயல்பை ஒற்றை மழைத்துளி மூலமாக “அந்தரம்” என்ற கதையில் காட்டியிருக்கிறார் எஸ்.ரா. ஒரே ஒரு மழைத்துளி மட்டும் தச்சாசாரியின் வீட்டுக்கூரைக்கு மேலே சில அடிகள் காற்றில் நிலைத்து விடுகிறது. ஆரம்பக் கட்ட ஆச்சர்யங்களைத் தாண்டி, அந்த ஒற்றை மழைத்துளி ஒரு சமயம் வளத்தின் குறியீடாகவும் மறுசமயம் துயரத்தின் குறியீடாகவும் மாறிமாறிக் காட்சியளிக்கத் துவங்கும் விந்தையைக் கொண்டிருக்கிறது. வளத்தின் குறியீடாக அது தென்படும்போதெல்லாம் தச்சாசாரியின் வாழ்வும் வளம் பெறுகிறது, அவனும் சந்தோசமாக இருக்கிறான். ஆனால், துயரத்தின் குறியீடாக அது மாறுகையில் அவனும் துக்ககரமான மனிதனாக மாறிவிடுகிறான்.

இயற்கையில் மனிதனைச் சூழ்ந்துள்ள பருவுலகத்திற்கென்று தனியான அர்த்தம் ஒன்றில்லை, ஆனால் மனிதன்தான் தனது மனநிலைக்கேற்ப அவற்றுக்கு அர்த்தத்தை அளிக்கிறான் என்ற உண்மையை எதிரொலிக்கிறது இக்கதை. முடிவில்,குறியீடும் அக்குறியீட்டிற்கு அர்த்தங்கற்பிப்பவனும் ஒன்றாய்க் கலந்து தங்களுக்குள் ஐக்கியமாகிவிடுகிறார்கள் என்ற கவித்துவமான முடிவை கதை அடைகிறது.

ஒரு மேலான நோக்கத்திற்கான கதைவடிவாக மட்டுமே அதிகதைகள் இருக்க வேண்டியதில்லை. உண்மையில் அது எந்த அர்த்தத்தையும் உணர்த்தாத கதை மொழிபாகக் கூட இருக்கலாம். குறிப்பிட்ட நோக்கமோ, அர்த்தமோ அன்றி, சகல திசைகளிலும் பாய முயலும் பாதரசத்தைப் போல ஒரு கதை இத்தொகுப்பில் இருக்கிறது. கற்பனையின் உச்சமும், அதற்கேற்ற மொழியும் ஒரு படைப்பாளிக்கு வாய்க்கப் பெறும்போதுதான் “சயன விடுதி” போன்ற கதைகள் பிறக்கின்றன. உத்கலாவின் சயன விடுதியில் நான்கு திசைகளிலும் சயன் அறைகள் இருக்கின்றன. கிழக்குச் சயனம், மேற்கு சயனம், வடசயனம், தென்சயனம் ஆகிய சயன அறைகள் விசித்திரத்திலும் விசித்திரமானவை. பல்வேறு காலகட்டங்களில், பல்வேறு மனிதர்கள் அச்சயன அறைகளில் உறங்கிப்போயிருக்கிறார்கள். ஆனால், அச்சயன அறைகளில் உறங்கும் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விசித்திர அனுபவம் ஏற்படுகிறது. ஒருவன் வயதானவனாக உருமாறுகிறான், இன்னொருவன் சிறுவனாக உருமாறுகிறான், பெண்கள் சிறுமிகளாகிறார்கள், இன்னும் சிலர் விழித்தெழுகையில் முற்றிலும் வேறு இடத்தில் இருக்கிறார்கள்.

கனவை விடவும் புதிரான அந்தச் சயன அறைகளையுடைய விடுதியை தேடிப்போகும் தேசாந்திரிக்கும் அதே அனுபவம்தான் ஏற்படுகிறது. உண்மையில் உத்கலா என்ற நகரம் வரைபடத்தில் எங்கும் இல்லை, அது ஒரு சாயை எனவும், வண்ணத்துப்பூச்சியின் கால்களில் ஒட்டிக்கொண்டு பறந்தலைவதாகவும் கதை முடிகிறது. சூதாட்டப் பலகையைப் போலச் சுற்றிச் சுற்றி ஒவ்வொருவரின் அகத்தையும் குலைத்துப் போட்டுவிட எத்தனிக்கும் அந்தச் சயன விடுதி உண்மையில் மனிதனின் கற்பனையே என்கிறது இக்கதை. இலக்கிய அனுபவம் பெறுவது என்ற நோக்கத்தை உதறி, வெறும் கதை கேட்கும் அனுபவத்தை அடைவதற்காகவேகூட இக்கதையை வாசிக்கலாம்.

இத்தொகுப்பில் உள்ள சில கதைகளுக்குள் நுழைய வாசகனுகனுக்குச் சில சிரமங்கள் இருக்கலாம். நவீன கவிதைக்குள் நுழையச் சிரமப்படுவது போன்றதே இது. காரணம், இவ்வதிகதைகள் யாவும் தர்க்கங்களை மீறிய ஒன்றுக்குக்காகக் கலாபூர்வமாக வாதிடுகின்றன. குறியீட்டு மொழியிலும், தொன்ம வெளியிலும் புழங்கும் கதைகள் என்பதால் இவை அடிப்படையில் உட்சிக்கலான வடிவத்தில் இருப்பவை. இக்கதைகள் வாசகனிடம் முதன்மையாகக் கோருவது ஒன்றே. கற்பனை. கற்பனை என்பதே அடிப்படையில் தர்க்கத்தை மீறும் இயல்புடையதால், கற்பனை ஆற்றல் கொண்ட வாசகனுக்கு இக்கதைகள் அணுக்கமாகி விடுகின்றன. தர்க்கத்தை ஒத்திவைத்து கற்பனையின் துணைகொண்டு இக்கதைகளுக்குள் நுழைகையில் மட்டுமே கதையின் சாளரம் திறந்துகொள்ளும்.

கவித்துவமான படிமங்களும் இத்தொகுப்பில் மிகுந்திருக்கின்றன. சிறந்த உதாரணம்: சோர் பஜார் என்ற கதை. இக்கதையில் எழுத்தாளன் ஒருவனுடைய எழுதும் மேஜை நாளடைவில் மரமாக உருமாறுவது கவித்துவமான ஒரு காட்சி. படைப்புச் செயல்பாட்டினையும், கற்பனை வற்றாத படைப்பூக்கத்தையும், செழித்து வளரும் ஒரு மரத்துக்கு ஒப்பிடுவது சிறந்த கற்பனை.

மந்திரவாதி, வான சாஸ்திரிகள், தாவரயியல் நிபுணர்கள், புத்த பிட்சுக்கள், பூதங்கள், நத்தை முதலிய உயிரினங்கள், விந்தையான நகரங்கள், சயன விடுதிகள், தெருக்கள், கூழாங்கற்கள் என்று மாறி மாறி மானுடரும் அமானுடரும் இத்தொகுப்பின் அதிகதைகளில் சாரை சாரையாக வந்த வண்னம் இருக்கிறார்கள். இவர்களை மாறி மாறி சந்திப்பதே வாசகனுக்கு ஒரு புதுமையான அனுபவமாக இருக்கும்.

நவீன அதிகதைகள் (Modern Fables) நிறைந்த,”வெயிலைக் கொண்டு வாருங்கள்” போன்ற தொகுப்புகள் வாசகனின் கற்பனைக்குச் சவால் விட்டபடியே அவனை அறியாமலே அவனை நவீன இலக்கிய வாசிப்புக்கு தயார்ப்படுத்துவதை வாசகன் உணர்ந்துவிட்டால் அவனுக்கும் நவீன இலக்கிய வாசிப்புக்கும் இடையே உள்ள மெல்லிய கோடுகள் யாவும் காலப்போக்கில் மறையும் விந்தையை அவன் உணர்ந்துகொள்வான்.

•••

(அரூ இணைய இதழில் வெளியானது. மறுபிரசுரம்)

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on August 04, 2023 19:21

புதுக்கோட்டை / உரை

புதுக்கோட்டை புத்ததகத்திருவிழாவில் நான் ஆற்றிய உரை

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on August 04, 2023 18:59

August 3, 2023

உப பாண்டவம் புதிய பதிப்பு

மலையாளத்தில் கே.எஸ் வெங்கிடாசலம் மொழிபெயர்ப்பில் வெளியாகியுள்ள உப பாண்டவம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. தற்போது அதன் இரண்டாம் பதிப்பு வெளியாகியுள்ளது.

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on August 03, 2023 20:47

ருகெண்டாஸின் ஓவியங்கள்

An Episode in the Life of a Landscape Painter என்றொரு நாவலை அர்ஜென்டின எழுத்தாளர் செசர் ஐரா எழுதியிருக்கிறார். ஜெர்மானிய ஓவியரான ஜோஹன் மோரித் ருகெண்டாஸ் வாழ்க்கையினையும் செவ்விந்தியர்களைத் தேடி அவர் மேற்கொண்ட பயணத்தையும் முதன்மைப்படுத்தி எழுதப்பட்டது இந்த நாவல். ரொபெர்த்தோ பொலான்யோ இதற்கு முன்னுரை எழுதியிருக்கிறார். அதில் ஐராவை நிகரற்ற நாவலாசிரியர் என்று கொண்டாடுகிறார். அது உண்மை என்பதை நாவலை வாசித்து முடிக்கும் போது உணர்ந்தேன்

ருகெண்டாஸ் தனது உயிரையும் பொருட்படுத்தாமல் செவ்விந்தியர்களை தேடிச் சென்று படம் வரைந்திருக்கிறார். குதிரையில் செல்லும் போது மின்னல் தாக்கி விழுந்திருக்கிறார். யாரும் அறிந்திராத உலகை வரையச் சென்ற அவரது தேடல் விசித்திரமாக நாவலில் விவரிக்கபடுகிறது.

rather than isolating images and treating them as “emblems” of knowledge, his aim was to accumulate and coordinate them within a broad framework, for which landscape provided the model. என்கிறார் ஐரா.

ருகெண்டாஸின் ஓவியங்களை நேரிலே பார்த்திருக்கிறேன். பிரேசிலின் நிலக்காட்சிகள் மற்றும் பூர்வ குடிகளின் வாழ்க்கையை ருகெண்டாஸ் சிறப்பாகப் பதிவு செய்திருக்கிறார்.

1822 முதல் 1825 வரையிலான காலகட்டத்தில் பிரேசில் முழுவதும் பயணம் செய்து  அங்குள்ள கறுப்பின மக்களையும் அவர்களின் பழக்கவழக்கங்களையும் வரைந்திருக்கிறார்.

ருகெண்டாஸின் நிலப்பரப்பு ஓவியங்களின் தனிச்சிறப்பு வண்ணங்களை அவர் பயன்படுத்தும் விதமாகும். பிரேசிலின் இயற்கைக் காட்சிகள் மர்மமான வசீகரத்துடன் தோற்றமளிக்கின்றன. திருவிழா, வேட்டை, நடனம் என அவர் பூர்வ குடிகளின் வாழ்க்கையைச் சிறப்பாக வரைந்திருக்கிறார்.

The Dance  என்ற ஓவியத்தினை ஆழ்ந்து அவதானிக்கும் போது அந்த இசையை நம்மால் கேட்க முடியும்.  

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on August 03, 2023 01:55

July 30, 2023

திரைப்படங்களை ஆவணப்படுத்துதல்

தமிழ் திரைப்படங்களை ஆவணப்படுத்துதல் குறித்தும் அழிந்தும் மறைந்தும் போன தமிழ் திரைப்படங்கள் குறித்து உருவாக்கபட்ட சிறந்த டாகுமெண்டரி. சுகீத் கிருஷ்ணமூர்த்தி இதனை இயக்கியுள்ளார்.

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on July 30, 2023 06:30

புதுக்கோட்டை புத்தகத் திருவிழாவில்

புதுக்கோட்டை புத்தகத் திருவிழாவில் தேசாந்திரி பதிப்பகம் அரங்கு அமைத்துள்ளது. கடை எண் 98

எனது அனைத்து நூல்களும் அங்கே கிடைக்கும்

28 மாலை புதுக்கோட்டை புத்தகத் திருவிழா அரங்கில் உரையாற்றினேன். திரளான கூட்டம். நிறைய இளைஞர்கள் வந்திருந்தார்கள்.

புத்தகக் கண்காட்சிக்கு உரையாற்ற வருபவர்களை எப்படி கவனித்துக் கொள்ளவேண்டும் என்பதற்கு புதுக்கோட்டை ஒரு முன்மாதிரி. தங்கும் அறை, உணவு, பயண ஏற்பாடு என அத்தனையும் சிறப்பாக செய்து கொடுத்தார்கள்.

புதுக்கோட்டை புத்தகத் திருவிழாவினை சிறப்பாக ஒருங்கிணைக்கும் நண்பர், கவிஞர் தங்கம் மூர்த்தி மற்றும் அவரது நண்பர்களுக்கு மனம் நிறைந்த பாராட்டுகள்

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on July 30, 2023 06:19

அரவான் – கல்லூரி பாடம்

தஞ்சாவூரில் இயங்கிவரும் குந்தவை நாச்சியார் அரசினர் மகளிர் கலைக்கல்லூரியில் அரவான் நாடகம் யூனிட் 3 பாடமாக வைக்கபட்டுள்ளது.

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on July 30, 2023 00:19

July 26, 2023

நினைவுச் சித்திரங்கள்

சசி எம் குமார் எழுதிய திண்ணை இருந்த வீடு சிறுகதைத் தொகுப்பைப் படித்தேன். 23 சின்னஞ்சிறு கதைகள். சந்தியா பதிப்பகம் வெளியிட்டுள்ளது.

தனது கிராமிய நினைவுகளையும் வாழ்வில் சந்தித்த மறக்கமுடியாத மனிதர்களையும் அழகான சிறுகதைகளாக எழுதியிருக்கிறார். மூன்று நான்கு பக்கங்களே உள்ள இந்தக் கதைகள் காட்சி ரூபமாகக் கண்முன்னே விரிகின்றன.

கதை என்று சொன்னாலும் இவை உண்மையான வாழ்க்கைப் பதிவுகள். இந்த மனிதர்களில் சிலரை நாம் அறிவோம். அவர்களுக்கு வேறு பெயர்கள் இருக்கக் கூடும்.   சசி இவர்களைத் தேர்ந்த ஓவியர் போல அழகான கோட்டுச் சித்திரமாக்கியிருக்கிறார்.

சித்திரமாடம் கதையில் வரும் ஓவியர் சேகர் மறக்கமுடியாத கதாபாத்திரம். கதையின் முடிவில் பரட்டை தலையுடன் அவர் ஆன்டன் செகாவ் சிறுகதைகள், மீராவின் கவிதைகள் மற்றும் அலுமினிய தட்டு டம்ளர் கொண்ட கிழிந்த பையோடு நிற்கும் கோலத்தைக் காணும் போது கண்ணீர் கசிகிறது. சேகர் போன்ற கலைஞர்களைக் காலம் இவ்வளவு இரக்கமின்றி விழச் செய்திருக்க வேண்டாம்.

அழியாத காதலைப் பேசும் கிருஷ்ணவேணியின் காதல் கடிதங்களில் ஆண்டுகள் கடந்தும் வெளிப்படும் காதல் பார்வை அழகானது. சசியின் கதைகளில் தஞ்சை நகரமும் காவிரி ஆறும் கிராமத்து மனிதர்களும் மிகுந்த அழகுடன் கலாபூர்வமாக வெளிப்படுகிறார்கள்.

எங்கிருந்தோ வந்து சேரும் லஜ்ஜாவின் கூடவே நாமும் நடக்கிறோம். வீடு பறிபோன துயரத்தில் பரதேசியாகிப் போன ஆர்கேபி, , சினிமா தியேட்டரில் வேலை செய்த ராஜா மணி, முருகேசன் மாமா லோகுமாமா என இவர் எழுதிக்காட்டியுள்ள மனிதர்கள் தஞ்சை மண்ணின் உண்மையான நாயகர்கள்.

வாழ்க்கை போராட்டத்தில் தோற்றுப் போன இந்த மனிதர்கள் தனது தீராத அன்பாலும் மனவுறுதியாலும் வெல்ல முடியாதவர்களாகிறார்கள். தன் மண்ணையும் மனிதர்களையும் கதைகளின் வழியே அழியா நினைவுச் சித்திரங்களாக்கியிருக்கிறார் சசி.  அவருக்கு என் மனம் நிறைந்த பாராட்டுகள்

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on July 26, 2023 23:14

எனது ஆங்கிலச் சிறுகதைத் தொகுப்பு

தேர்வு செய்யப்பட்ட சிறுகதைகளின் ஆங்கிலத் தொகுப்பினை ஒரியண்ட் பிளாக்ஸ்வான் பதிப்பகம் வெளியிட்டுள்ளது. இதனை நீதிபதி பிரபாஸ்ரீதேவன் மொழிபெயர்ப்புச் செய்துள்ளார். இருநூறு பக்க அளவில் வெளியாகியுள்ளது

Justice Prabha Sridevan

The Man Who Walked Backwards and Other Stories தொகுப்பில் 18 சிறுகதைகள் இடம்பெற்றுள்ளன.

வாசகர்கள், நண்பர்கள் இந்த நூலை வாங்கி ஆதரவு அளிக்க வேண்டுகிறேன்.

குறிப்பாகப் பிறமாநிலங்களிலும், அயல்நாட்டிலும் வசிக்கும் வாசகர்கள் இதனை வாங்கி நண்பர்களுக்கும் நூலகங்களுக்கும் பரிசாக அளிக்கலாம்.

நூலை வாங்குவதற்கான இணைப்பு.

https://www.orientblackswan.com/details?id=9789354424373

1 like ·   •  0 comments  •  flag
Share on Twitter
Published on July 26, 2023 19:15

July 25, 2023

பழிவாங்குதலின் பாதை

ஜான் ஃபோர்டின் The Searchers ஹாலிவுட் சினிமாவின் காவியங்களில் ஒன்றாகும்.

இது ஜான் ஃபோர்டின் நூற்றுப் பதினைந்தாவது திரைப்படம், சிறந்த இயக்குநருக்கான ஆஸ்கார் விருதை நான்கு முறை பெற்றிருக்கிறார் ஜான் ஃபோர்ட். அவரது மோசமான குடிப்பழக்கம் மிதமிஞ்சிய கோபம் காரணமாக அவரைக் கண்டு ஹாலிவுட் தயாரிப்பாளர்கள் பயந்தார்கள். திரையில் அவர் உருவாக்கிக் காட்டிய பிரம்மாண்டம் இன்றும் அதிசயமாகப் பேசப்படுகிறது.

இப்படம் ஃபிராங்க் எஸ். நுஜென்ட் எழுதிய திரைக்கதையை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. இவர் ஜான் ஃபோர்டின் 11 படங்களுக்குத் திரைக்கதை எழுதியிருக்கிறார்.

மேற்கு டெக்சாஸின் பரந்து விரிந்த நிலக்காட்சிகளின் நடுவே ஒற்றைக்குதிரையில் வரும் ஜான் வெய்னின் தோற்றம் மறக்க முடியாதது.

1868 இல் கதை நடக்கிறது. எட்டு ஆண்டுகளுக்குப் பின்பு, மேற்கு டெக்சாஸில் உள்ள தனது சகோதரர் ஆரோனின் வீட்டிற்கு ஈதன் எட்வர்ட்ஸ் வருகிறார். அவர் உள்நாட்டுப் போரில் சண்டையிட்டவர். இதற்காகப் பதக்கம் பெற்றிருக்கிறார். அவரது சேமிப்பில் நிறையத் தங்கக் காசுகள் இருக்கின்றன. படத்தின் ஆரம்பத்தில் ஒரு வீட்டின் கதவு திறந்து ஒரு பெண் வெளியே வருகிறாள். முடிவில்லாமல் விரிந்துள்ள நிலவெளியில் ஒரு குதிரை வருவதைக் காணுகிறாள். அவளது முகம் மலர்ச்சியடைகிறது. தொலைவில் ராணுவ உடுப்பு அணிந்து இடுப்பில் உடைவாளுடன் கறுப்பு தொப்பியோடு ஈதன் வருகிறார். மிக அழகான காட்சியது.

வீட்டிற்கு வரும் ஈதன் எட்டு வயதான சிறுமி டெபியை தலைக்கு மேல் தூக்கிக் கொஞ்சுகிறான். இரவு உணவிற்குப் பிறகு, ஈதன் தனியாக வெளியே அமர்ந்து கொண்டிருக்கிறான். ஈதனின் முகத்தில் விவரிக்க முடியாத சோகம் படிந்திருக்கிறது.

ஈதனின் கடந்த காலம் மர்மமானது; கடந்த சில ஆண்டுகளாக அவர் எங்கே இருந்தார் என யாருக்கும் தெரியாது. ஆகவே அவரிடம் ‘கலிபோர்னியா எப்படி இருக்கிறது எனச் சகோதர்ர் விசாரிக்கிறார். யாருக்கு தெரியும் என்கிறான் ஈதன். சட்டவிரோதமாக எதையோ செய்திருக்கிறார் போலும் என்ற எண்ணம் உருவாகிறது. அவரிடம் நிறையத் தங்கக் காசுகள் இருக்கின்றன. அது இந்தச் சந்தேகத்தை வலுப்பெற வைக்கிறது.

டெக்சாஸில் கால்நடைகள் திருடுபோவது வழக்கமாக நடந்து வருகிறது. இதைத் தடுக்கவும் கால்நடைகளை மீட்கவும் தனிக்காவல் படை செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் ஆரோனின் பக்கத்துப் பண்ணையிலுள்ள லார்ஸ் ஜோர்கென்சனுக்குச் சொந்தமான கால்நடைகள் திருடப்படுகின்றன. அந்தக் கால்நடைகளை மீட்கக் கேப்டன் சாமுவேல் கிளைட்டன் மற்றும் ஈதன் குழுவினர் புறப்படுகிறார்கள். உண்மையில் இது ஒரு சூழ்ச்சி என்பதும் ஆண்களை வெளியே அனுப்பிவைப்பதற்காகவே இந்தத் திருட்டு நடைபெற்றது எனவும் தெரிய வருகிறது.

மீட்புக்குழுவினர் திரும்பி வருவதற்குள் ஆரோன், அவரது மனைவி மார்த்தா மற்றும் மகன் பென் ஆகியோர் கொல்லப்பட்டிருக்கிறார்கள் டெபி மற்றும் அவரது மூத்த சகோதரி லூசி ஆகியோர் பூர்வகுடியினரான கொமாஞ்சியர்களால் கடத்தப்படுகிறார்கள்.

இறந்த உடல்களை அடக்கம் செய்யும் ஈதன் கடத்தப்பட்ட பெண்களை மீட்க தனது தேடுதல் வேட்டையைத் துவக்குகிறார். கொமாஞ்சியர் ஒரிடத்தில் அவர்களை மறைந்து தாக்குகிறார்கள். லூசி ஒரு பள்ளத்தாக்கில் கொடூரமாகக் கற்பழிக்கப்பட்டுக் கொலை செய்யப்பட்டிருப்பதை ஈதன் கண்டறிகிறார். பழிவாங்கும் வெறி அவருக்குள் அதிகமாகிறது.

அவர்கள் நினைத்தது போல டெபியை கண்டுபிடிப்பது எளிதாகயில்லை. குளிர்காலம் பிறக்கிறது. , ஈதனும் மார்ட்டினும் ஜோர்கென்சன் பண்ணைக்குத் திரும்புகிறார்கள். டெபியைப் பற்றிய தகவலைத் தேடிக் கொண்டேயிருக்கிறார் ஈதன்.

ஐந்து வருடங்களுக்குப் பிறகு நியூ மெக்சிகோவில், டெபியை காண்கிறார், இப்போது அவள் கொமாஞ்சி ஒருவரின் மனைவியாக வாழுகிறாள். கடத்தப்பட்ட பின்பு தப்பிக்க வழியின்றி அவர்களில் ஒருத்தியாகிவிட்டதாகக் கூறுகிறாள். அது தான் நிதர்சனம். அவளது இந்த வாழ்க்கையை ஈதனால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. அதிலிருந்து அவளை விடுவிக்க முயலுகிறார். அவள் அதை ஏற்கவில்லை

இந்தப் பகுதி தான் படத்தின் மையம். யாரை இத்தனை ஆண்டுகள் தேடிக் கொண்டிருந்தாரோ அவள் இப்போது எதிரியின் குடும்பத்தில் ஒருத்தியாகிவிட்டாள். அதை ஈதனால் தாங்க முடியவில்லை. ‘இப்படி ஒரு வாழ்க்கைக்குப் பதில் அவள் செத்துப்போயிருக்கலாம் என நினைக்கிறார். அவளைக் கொல்லவும் துணிகிறார். மார்டின் குறுக்கிட்டு அவளைக் காப்பாற்றுகிறான். டெபியின் காரணமாக இப்போது ஈதனும் கோமாஞ்சியர்களின் உறவே. அதை ஈதனால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. அவரது பழிவாங்குதலின் பாதை திசைமாறுகிறது.

படம் வெளியான போது ஜான் ஃபோர்ட் இனவெறியுடன் ஈதன் கதாபாத்திரத்தை உருவாக்கியிருக்கிறார் எனக் கடுமையான விமர்சனம் வெளியானது.

ஈதனின் வீடு திரும்புதலில் துவங்கிய படம் யாருமற்ற தனிமையில் பயணிப்பதுடன் முடிவடைகிறது. ஈதனின் கடந்தகாலம் போலவே அவனது எதிர்காலமும் மர்மமானதே.

கொமாஞ்சியர்களைத் தேடிச் செல்லும் காட்சிகளும் அவர்களுடன் நடக்கும் பரபரப்பான குதிரைச் சண்டையும். இரவுக்காட்சிகளும் சிறப்பாகப் படமாக்கப்பட்டுள்ளன.

காலமும் வெளியும் தான் படத்தின் உண்மையான கதாநாயகர்கள். இந்த இரண்டும் இணைந்து திரையில் உருவாக்கும் மாயம் நிகரில்லாதது

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on July 25, 2023 03:28

S. Ramakrishnan's Blog

S. Ramakrishnan
S. Ramakrishnan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow S. Ramakrishnan's blog with rss.