தந்தையெனும் வெளிச்சம்

சிங்கப்பூரில் வசிக்கும் எழுத்தாளர் அழகு நிலா தனது தந்தையைக் குறித்து அப்பன் என்ற நூலை எழுதியிருக்கிறார். நூல்வனம் பதிப்பகம் மிக நேர்த்தியாக வெளியிட்டிருக்கிறார்கள்

காஃப்காவில் துவங்கி புதுமைப்பித்தன் வரை தந்தையோடு பிணக்கும் மோதலும் கொண்ட படைப்பாளிகளே அதிகம். நோபல் பரிசு பெற்ற எழுத்தாளரான நாடின் கோடிமர் காஃப்காவின் தந்தையின் கோணத்தில் ஒரு கதை எழுதியிருக்கிறார். அது தந்தையின் மனதைப் பிள்ளைகள் புரிந்து கொள்வதில்லை என்பதன் வெளிப்பாடு.

தந்தையைப் பற்றி எப்போது நினைக்கும் போது ஷேக்ஸ்பியரின் லியர் அரசனே நினைவிற்கு வருகிறார். லியர் தன்னை எவ்வளவு நேசிக்கிறார்கள் என மூன்று மகளிடமும் கேட்கிறார். மூன்று பதில்கள் கிடைக்கின்றன. கார்டிலியா தான் உண்மையான பதிலைச் சொல்கிறாள். இதே கேள்வியை மகன்களிடம் கேட்டிருந்தால் லியர் வேறு பதிலைப் பெற்றிருப்பார்.

தமிழ் இலக்கியத்தில் தாய்க் கொண்டாடப்படும் அளவிற்குத் தந்தை கொண்டாடப்படவில்லை. சங்கக் கவிதைகளை வாசிக்கும் போது இந்தக் குறையை ஆழமாக உணர்ந்திருக்கிறேன். குறிப்பாக மகளின் காதலைப் பற்றிச் சங்க காலத் தந்தை என்ன நினைத்தான் என்பது அரிதாகவே பதிவாகியுள்ளது.

அழகு நிலா தனது தந்தையின் ஆளுமையை அழகான கோட்டுச்சித்திரமாக, உணர்ச்சிப்பூர்வமாகப் பதிவு செய்திருக்கிறார். பஞ்சாட்சரம் எனும் தஞ்சை மண்ணின் மனிதர் நம் கண்முன்னே உருக் கொள்ளத் துவங்குகிறார். அவரது குரலை நாம் கேட்க முடிகிறது. முரட்டு மீசையுள்ள கம்பீரமான அந்த மனிதருக்குள் அன்பின் ஊற்று கசிந்து கொண்டேயிருக்கிறது. மகளின் நினைவிலிருந்து வெளிப்படும் தந்தையின் ஆளுமை வியப்பூட்டுகிறது

தமிழ் குடும்பத்தில் தந்தை தான் மையம். அவரைச் சுற்றியே வீடு இயங்குகிறது எல்லா முடிவுகளை அவரே எடுப்பது வழக்கம். அப்பாவிற்கு என்ன பிடிக்கும் என்பதே வீட்டின் விருப்பம். அப்பாவின் கோபம். அப்பாவின் அடி, அப்பாவின் கட்டுப்பாடுகள் இவற்றை பையன் ஏற்றுக் கொள்வதில்லை. ஆனால் மகள் ஏற்றுக் கொள்வதுடன் தந்தையைப் புரிந்து கொண்டும் விடுகிறார்.

தந்தையின் அன்பு மொழியற்றது. அது உணவாக, பயணமாக, உடையாக, உருமாறி வெளிப்படுகிறது.. அழகு நிலா அவற்றை முழுமையாக அனுபவித்து எழுதியிருக்கிறார்.

பெரும்பான்மையான தந்தைகள் தனது மகளைத் தாயின் மறுவடிவமாக நினைக்கிறார்கள். தாயி என்று மகளை அழைக்கும் தந்தைகளை அறிவேன்.

பஞ்சாட்சரம் தான் கட்டிய புதுவீட்டில் மனைவி பிள்ளைகளின் பெயரைக் கல்வெட்டில் பொறிக்கிறார். அந்த வெளிப்பாடு அவரது நிகரற்ற அன்பின் அடையாளமாகிறது.

அழகுநிலா தனது தந்தையின் குடி, கோபம். சாதிய மனப்பாங்கு என நிறைகுறைகளை வெளிப்படையாக எழுதியிருக்கிறார். தந்தையின் பசியைப் பற்றி அவர் எழுதியுள்ள கட்டுரை முக்கியமானது.

தந்தையைப் பற்றிய நினைவுகளின் வழியே தனது சொந்த ஊரையும், தான் உருவாகி வந்த விதம் பற்றியும் அழகாக எழுதியிருக்கிறார். அப்பனை பற்றிய புத்தகமாக விரிந்தாலும் நூலை வாசித்து முடிக்கும் போது எனக்கு அழகுநிலாவின் அம்மா தான் முக்கியமாகப் படுகிறார். தந்தையின் நிழலுக்குள் அவர் மறைந்திருப்பதைக் காண முடிகிறது.

மீன் சாப்பிடுவதில் விருப்பம் கொண்ட அழகுநிலாவின் தந்தையைப் பற்றி வாசிக்கும் போது பிரபஞ்சன் மீன் சிறுகதையில் வரும் அவரது தந்தையின் நினைவு வந்து போனது

.’ஒடம்பு என்னுமோ காலைலேந்து ஒரு மாரியா இருக்கு… சளி புடிச்சிருக்கு… மத்தியானம் காரமீனு வாங்கியாந்து மொளவ கொஞ்சம் அதிகமாப் போட்டுக் கொழம்பு வையி.. எனக் கிராமணி கதையில் சொல்லுவார்.

காரை மீனு எங்க கிடைக்குது’ என மனைவி ஆனந்தாயி சலித்துக் கொள்ளும் போது ‘காரமீனு இல்லன்னா கெழங்கா மீனு கெடைக்காமையா பூடும்… பாரு… கெழங்கானும் கெடைக்கல்லேன்னா இருக்கவே இருக்குச் சுதும்பு… வாங்கி நல்லா தளத் தளன்னு காரம்மா வய்யி… சுதும்பு மீன் வறுத்துப்பூடாத… நெத்திலி கெடைச்சா வாங்கிக்கினு வந்து நெறைய இஞ்சி, பூண்டெல்லாம் வச்சி புட்டு வெயி… நல்லாயிருக்கும். ‘. என்பார் கிராமணி. இது வெறும் ருசி மட்டுமில்லை. வாழ்வின் மீதான பற்று உணவாக மாறியிருப்பதன் அடையாளம். அந்தக் குரல் அப்பனில் வரும் பஞ்சாட்சரத்தின் குரலாகவே எனக்குள் ஒலித்தது.

அழகு நிலாவின் எழுத்தில் நுட்பமும் அழகும் கைகூடிவந்திருக்கிறது. அவருக்கு என் மனம் நிறைந்த பாராட்டுகள்.

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on August 17, 2023 23:39
No comments have been added yet.


S. Ramakrishnan's Blog

S. Ramakrishnan
S. Ramakrishnan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow S. Ramakrishnan's blog with rss.