S. Ramakrishnan's Blog, page 53
September 16, 2023
பறவைகளின் வீடு
கே. பாஸ்கரன்.
பகலின் சிறகுகள் என்ற எஸ்.ராமகிருஷ்ணன் எழுதிய சிறுகதையைப் படித்தேன்.

படிக்கப் படிக்க சினிமா பார்ப்பது போலவே இருந்தது. இதனை அப்படியே சினிமாவாக எடுக்கலாம்.
கொரோனா காலத்தில் கூண்டு பறவைகள் விற்கும் பெண் அத்தனை பறவைகளையும் தன்னுடைய அபார்ட்மெண்டிற்குக் கொண்டு வந்து பாதுகாக்கிறாள். கொரோனா வந்துவிடுமோ என்ற பயத்தில் மக்கள் பறவைகளை வெறுக்கிறார்கள். அதே அடுக்குமாடிக்குடியிருப்பில் பறவைகளின் இன்னிசையைக் கேட்டு நம்பிக்கை கொள்ளும் வாட்ச்மேன் இருப்பதைச் சரியாக அடையாளம் காட்டியிருக்கிறார்.
இந்தச் சிறு கதையில் வரும் அப்பாவைப் போலவே கொரோனா துவங்கும் போது இவ்வளவு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்று நானும் நினைக்கவில்லை. அப்பா ஆட்கள் யாருமில்லாத மெரினா பீச்சிற்குப் போய் நிற்பது போல நானும் ஒரு நாள் நின்றிருந்தேன். கதையில் வரும் மகள் மிகவும் பொறுப்பாக நடந்து கொள்கிறாள்.
ஒரு சிறுகதைக்குள் எத்தனை நிகழ்ச்சிகள். மகளுக்கும் அப்பாவிற்குமான அன்பு. கூண்டு பறவை விற்பவர்களின் உலகம். காதல் பறவைகளை வளர்ந்த கிழவர் கொரோனாவில் இறந்துவிட அவரது பறவையை அபார்ட்மெண்ட்வாசிகள் கொல்ல நினைப்பது எனக் கதை வளர்ந்து கொண்டே போகிறது.
பகலின் சிறகுகள் தொகுப்பில் நிறைய நல்ல சிறுகதைகள் இருக்கின்றன. ஒவ்வொன்றையும் பற்றிப் பத்துப் பக்கம் எழுத வேண்டும் போலிருக்கிறது.
September 14, 2023
கரூர் – உரை
கரூர் மாவட்ட மைய நூலகம் சார்பில் நடைபெறும் சிந்தனைமுற்றம் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றுகிறேன்
நாள் : செப்டம்பர் 24 ஞாயிறு
நேரம் : காலை 10.30


September 13, 2023
பழைய மனிதர்
புதிய குறுங்கதை
பூங்காவில் அந்த நபரைப் பார்த்தேன். ஐம்பது வயதிருக்கும். வெளிர் பச்சை நிற கதர் வேஷ்டி. கட்டம் போட்ட சட்டை அணிந்திருந்தார். அவர் அணிந்திருந்த கண்ணாடியின் இடது பக்கப் பிடி உடைந்திருந்தது. அதை நூலால் கட்டியிருந்தார். வழக்கமாகப் பூங்காவிற்கு வருகிறவராகத் தெரியவில்லை. இன்றைக்குத் தான் முதன்முறையாகப் பார்க்கிறேன்.

அவரது கையில் ஒரு நியூஸ் பேப்பர் இருந்தது. அந்த செய்தித்தாளை விரித்து ஆர்வமாகப் படித்துக் கொண்டிருந்தார். பேப்பரின் முதற்பக்கத்தில் சத்தியவாணி முத்து மரணம் எனத் தலைப்பு செய்தி வெளியாகியிருந்தது. அந்தப் பெயரை எனது சிறுவயதில் கேட்டிருக்கிறேன். அமைச்சராக இருந்தவர்
அவர் இறந்த செய்தி இப்போது ஏன் வெளியாகியுள்ளது எனப்புரியாமல் பூங்காவின் சிமெண்ட் பாதையில் நடந்தேன். இரண்டாம் முறை அவரை நெருங்கி வரும் போது கவனித்தேன். அவர் கையில் வைத்திருந்தது 1999 நவம்பர் 12ம் தேதி பேப்பர்.
ஒரு பழைய பேப்பரை ஏன் இவ்வளவு சுவாரஸ்யமாகப் படித்துக் கொண்டிருக்கிறார். அந்தப் பேப்பர் இன்று வெளியானது போல கசங்காமல் இருக்கிறதே என யோசித்தபடியே நடந்தேன்.
என்றோ நடந்து முடிந்த செய்திகளால் இன்று என்ன பயன். பொழுதுபோகாமல் படிக்கிறவர் என்றால், எதற்காக இப்படிப் பழைய நாளிதழைப் படிக்க வேண்டும். குழப்பமாக இருந்தது.
நான்காவது சுற்றின் போது அவர் பேப்பரில் வந்த சினிமா விளம்பரத்தைப் பார்த்துக் கொண்டிருப்பதைக் கண்டேன். புதுக்குடித்தனம் என்ற சினிமாவிற்கான விளம்பரமது. அப்படி ஒரு படத்தைப் பற்றி நான் கேள்விப்படவேயில்லை.
வழக்கமாக நான் பத்தாயிரம் காலடிகள் நடக்கக் கூடியவன். அத்தனை சுற்று முடியும் வரை அவர் நாளிதழைப் படித்துக் கொண்டேயிருந்தார். எனது கடைசிச் சுற்று நடையின் போது அந்தப் பூங்கா, அங்குள்ள மரங்கள், சிமெண்ட் பெஞ்சுகள் எல்லாமும் இது போல நாற்பது வருஷங்களுக்கு முந்தியவை தானே. அது ஏன் பழையதாகத் தோன்றவில்லை பழைய நியூஸ் பேப்பர் படிப்பது மட்டும் கேலிக்குரியதாகத் தோன்றுகிறது எனத் தோன்றியது.
வீடு திரும்பும் வழியில் அவரைப் பற்றியே நினைத்துக் கொண்டு வந்தேன். ஒருவேளை அவர் இன்றைய செய்திகளை விரும்பாதவராக இருக்கக் கூடும். அல்லது அவருக்கு நினைவாற்றல் மங்கிப் போயிருக்கக் கூடும். எப்படியோ உலகம் கைவிட்ட ஒன்றைக் கையில் எடுத்து ஆசையாகப் படிக்க யாரோ இருக்கிறார்கள் என்பது புரிந்தது.
அதன் மறுநாள் பூங்காவிற்குள் செல்லும் போது எனது கண்கள் அவரைத்தான் முதலில் தேடின. அவர் இன்றைக்கு வேறு ஒரு பெஞ்சில் அமர்ந்திருந்தார். இன்று படித்துக் கொண்டிருந்த செய்தித்தாள் 1986ம் ஆண்டின் ஆகஸ்டில் வெளியான செய்தித் தாள். ஆசையாக விரித்துப் படித்துக் கொண்டிருந்தார்.
இதே ஆண்டு வெளியான ஒரு நாவலை அவர் படித்துக் கொண்டிருந்தால் எனக்கு வியப்பாக இருக்காது. செய்தித்தாள் என்பது தான் பிரச்சனையே. அவருக்கு எங்கே இந்தப் பழைய நியூஸ் பேப்பர்கள் கிடைக்கின்றன. அதை ஏன் பொதுவெளியில் வைத்துப் படிக்க நினைக்கிறார்.
என்னுடன் நடைப்பயிற்சிக்கு வரும் செல்வாவிடம் அவரைப் பற்றிச் சொன்ன போது அவர் தீவிரமான குரலில் சொன்னார்.
“அந்த ஆள் சிபிசிஜடியா இருந்தாலும் இருப்பார் சார். நோட்டம் பாக்க வந்திருப்பார்.v
அதுவும் சாத்தியம் தானே. அப்படி நினைத்தவுடன் அவரை ஏறிட்டுப் பார்ப்பது அச்சம் தருவதாக மாறியது. அவர் பூங்காவில் நடப்பவர்களைப் பற்றிக் கவனம் கொள்ளவேயில்லை.
கடந்தகாலத்தின் படிகளில் இறங்கி என்றோ நடந்துமுடிந்துவிட்ட நிகழ்வுகளில் நீந்திக் கொண்டிருந்தார். உலகிற்குத் தேவையற்றுப் போன செய்திகள் சிலருக்குத் தேவையான செய்தியாக இருக்கின்றன. சிலர் ஒரு காலை கடந்தகாலத்திலும் மறுகாலை எதிர்காலத்திலும் வைத்து நடக்கிறார்கள். அவர்களுக்கு நிகழ்காலம் பொருட்டேயில்லை.
அவர் தன்னோடு மர்மத்தைக் கொண்டு வருகிறார். மர்மத்தை விரித்துப் படிக்கிறார். அவர் யார், எங்கே வீடிருக்கிறது, எதற்காக இவற்றைப் படிக்கிறார் என்ற விடை தெரிந்துவிட்டால் மர்மம் கலைந்துவிடும். அதை நான் விரும்பவில்லை
எங்கேயிருந்து எப்போது வந்தது என அறியாத குயிலின் குரல் இனிமையை நாம் ரசிப்பதில்லையா. அப்படி இந்த மனிதரும் மர்மத்துடன் இருக்கட்டும் என விட்டுவிட்டேன்.
அவர் ஒவ்வொரு நாளும் பழைய நியூஸ் பேப்பர் படிப்பது மாறவில்லை. ஆனால் ஏன் புதிய புதிய பழைய நியூஸ் பேப்பரைப் படிக்கிறார் என்பது தான் புரியவேயில்லை.
September 12, 2023
கடவுளின் நாக்கு – உரை
பேராசிரியர் வினோத் எனது கடவுளின் நாக்கு கட்டுரைத் தொகுப்பு குறித்து ஆற்றிய அறிமுக உரை
டால்ஸ்டாயின் காலடிச்சப்தம்
யூ.ஜி.அருண்பிரசாத்
மண்டியிடுங்கள் தந்தையே நாவல் குறித்த விமர்சனம்.
••

எஸ்ராவின் இந்த நாவலை டால்ஸ்டாயின் பிறந்த செப்டம்பர் மாதத்தில் அவரது நினைவாக வாசிக்கத் துவங்கினேன்.
இந்த நாவல் மூலம் எஸ்ரா நம்மை ரஷ்யா அழைத்துச் செல்கிறார். பனி படர்ந்த ரஸ்யாவில் நான் பார்த்த காட்சிகள் வியப்பளிக்கின்றன . டால்ஸ்டாயிக்கு சொந்தமான யஸ்னயா போல்னயா பண்ணை, ஒரு ஆள் ஒளிந்து கொள்ளும் அளவுள்ள எல்ம் மரம், டால்ஸ்டாயின் பெரிய குடும்பம், அங்குள்ள பண்ணையில் வேலை செய்பவர்கள், வசந்த காலத்தில் அந்தப் பண்ணைக்கு வருகை தரும் ஜிப்ஸிகள், அங்குள்ள ஆப்பிள் தோட்டம், வோரன்கா ஆறு, அடர்ந்த கிரெளன்வுட் காடு என வேறு ஒரு உலகத்திற்குள் பயணித்தேன்..
ஒரு நாவலின் வழியே அந்தக் கால ரஷ்யாவிற்குள்ளே அழைத்துச் சென்றுவிட்டார் எஸ்.ரா. அது தான் நாவலின் சிறப்பு.
எழுத்தின் வழியே வாசகன் நிஜத்தில் தான் அறியாத உலகத்திற்குள் கற்பனை வழியே பயணிக்க முடியும் என்றால் அது எழுத்தாளரால் மட்டுமே சாத்தியம். அதுதான் எஸ்ரா அவர்களின் எழுத்தின் வல்லமை.
மண்டியிடுங்கள் தந்தை நாவல் வழியே நான் டால்ஸ்டாயின் காலடிச்சப்தத்தைக் கேட்டேன். அவரது சொந்த உலகத்தைப் பார்த்தேன் , டால்ஸ்டாய் காலத்து ரஷ்யாவை தெரிந்து கொண்டேன் , அவர் சமகாலத்து எழுத்தாளர்களை அறிந்தேன் , ரஷ்யாவின் இரவு பகலை மட்டுமின்றி டால்ஸ்டாய் காலத்தில் ஏற்பட்ட ரஷ்ய பஞ்சத்தினைக் கூட அறிந்து கொண்டேன்.
நாவலில் வரும் திமோபி வீட்டை விட்டு வெளியேறி சில வருடங்கள் பிறகு திரும்பி வருகிறான் . வீட்டை விட்டு வெளியேறியவன் வேறு உலகத்திற்குச் சென்று வந்தவன் முற்றிலும் மாறி விடுகிறான் புதிய மனிதனாக மாறிய அவன் பேச்சில் செயலில் மாற்றம் தெரிகிறது .
இந்த நாவலை வாசித்து டால்ஸ்டாய் வாழ்க்கை உலகத்திற்குச் சென்று வரும் வாசகனாகிய நானும் புது அனுபவம் கொள்கிறேன். என்னையும் திமோபி போலவே உணருகிறேன்.
மண்டியிடுங்கள் தந்தையே நாவலின் வழியே டால்ஸ்டாயை மிகவும் நெருங்கி சென்ற ஒரு உணர்வு ஏற்படுகின்றது . எழுத்தின் வழியே இந்த நெருக்கத்தை ஏற்படுத்திய எஸ்ரா அவர்களுக்கு நன்றி
ஓவியம் சொல்லும் கதை
லண்டனிலுள்ள நேஷனல் கேலரி பற்றிய ஆவணப்படத்தைப் பார்த்தேன். ஃபிரடெரிக் வைஸ்மேன் இயக்கியுள்ளார்

இந்தக் கேலரியில் 2400 அரிய ஓவியங்கள் இடம்பெற்றுள்ளன. காட்சியகத்தில் உள்ள ஓவியங்களின் சிறப்பு மற்றும் அவற்றை எவ்வாறு காட்சிப்படுத்துகிறார்கள் ஓவியங்களை மறுசீரமைப்பு செய்யும் பணி எப்படி நடைபெறுகிறது என்பது குறித்து விரிவாக விளக்குகிறார்கள்

லியனார்டோ டா வின்சியைப் பற்றிய சிறப்புக் கண்காட்சிதான் படத்தின் முக்கியப் பகுதியாக உள்ளது.
ரெம்ப்ரான்ட்டின் உருவப்படத்தை மீட்டெடுப்பவர்கள் காட்டும் கவனமும் அக்கறையும் வியப்பளிக்கிறது.
பார்வையற்றவர்கள் எவ்வாறு ஓவியத்தை ரசிப்பது என்பதற்கான சிறப்புப் பயிற்சி பற்றி ஒரு பகுதியில் விவரிக்கிறார்கள்.
கலைவழிகாட்டிகள் உதவியோடு ஓவியத்தின் மாதிரியை உருவாக்கி அதைக் கையால் தொட்டு உணர்ந்து புரிய வைப்பது பற்றி விளக்கிக் காட்டுகிறார்கள்.
இந்த ஆவணப்படத்தில் என்னை மிகவும் கவர்ந்த பகுதி ஓவியத்திற்கும் கதை சொல்லலுக்கும் உள்ள தொடர்பு பற்றியது.
புகழ்பெற்ற எல்லா ஓவியங்களுக்குப் பின்னும் கதையிருக்கிறது. அந்தக் கதை உலகம் அறியாதது. ஓவியத்தில் இடம்பெற்றவர்கள் பற்றியோ ஓவியர் வாழ்க்கை பற்றியோ உள்ள அக்கதையைப் பார்வையாளர்களுக்குக் கலைவிமர்சகர்களும் வழிகாட்டிகளும் எடுத்துச் சொல்கிறார்கள். குறிப்பாக ரூபன்ஸின் Samson and Delilah ஓவியத்தின் தனித்துவத்தையும் அதன் பின்னுள்ள கதையினையும் விளக்குவது சிறப்பாக உள்ளது.
அருங்காட்சியகத்தின் செலவுகளைச் சமாளிக்க அதை எவ்வாறு வணிக நிறுவனங்களோடு இணைந்து சந்தைப்படுத்துவது, நிர்வாகச் செலவுகளை எவ்வாறு திட்டமிடுவது என்பது பற்றிய விவாதங்களும் காட்டப்படுகின்றன.

இந்த ஆவணப்படத்திற்காக 12 வாரங்கள் படப்பிடிப்பு நடத்தியிருக்கிறார்கள். மொத்தம் 170 மணிநேரக் காட்சிகளைப் படமாக்கி அதிலிருந்து இந்த ஆவணப்படத்தை உருவாக்கியிருக்கிறார்கள்.
மூன்று மணி நேரத்திற்குள் நேஷனல் கேலரியை முழுமையாகச் சுற்றி வந்த அனுபவத்தை ஏற்படுத்திவிடுகிறது இந்த ஆவணப்படம்.
September 11, 2023
ஆறு சித்திரங்கள்
1920 களின் ரஷ்ய கவிதையுலகம் மற்றும் கவிஞர்களின் வாழ்க்கை குறித்து வாசிக்கும் போது அவர்கள் ஒரு விசித்திரக் கனவுலகில் உலவியதை அறிய முடிகிறது.

கவிஞர் விளாடிஸ்லாவ் கோடாசெவிச் அந்தக் காலக் கட்டத்தின் ஆறு முக்கியக் கவிஞர்கள் குறித்த தனது நினைவுக் குறிப்பினை NECROPOLIS என்ற நூலாக எழுதியிருக்கிறார். புஷ்கின் மட்டுமே தனது ஆதர்சம் எனும் கோடேசெவிச் அன்றைய குறியீட்டுக் கவிதை இயக்கத்தின் முக்கியக் கவிஞராக இருந்தார்.
குறியீட்டு வாதம் என்பது ஒரு தனித்துவமான கருத்தைத் தெரிவிக்க, ஒரு வார்த்தை, அல்லது பிம்பத்தைப் பயன்படுத்துவதாகும். குறிப்பாக நிறங்கள். சின்னங்கள் எப்படி அடையாளமாக மாறிவிடுகின்றன என்பதைக் குறியீட்டு வாதம் பேசியது, கலையை யதார்த்தமாகவும் யதார்த்தத்தைக் கலையாகவும் மாற்ற முயன்றது குறியீட்டுவாதம்

நூலின் முதற்கட்டுரை கவிஞர் ஆன்ட்ரி பைலியின் காதலி நினா இவனோவ்னா பெட்ரோவ்ஸ்கயா பற்றியது. கோடேசெவிச் அவரை மோசமாக விமர்சித்து எழுதிய போதும் நினாவின் துயரம் நம்மைப் பற்றிக் கொள்ளவே செய்கிறது.
பாரிஸில் புறநகரிலுள்ள சிறிய விடுதியில் பிப்ரவரி 22, 1928 இரவு நினா இவனோவ்னா பெட்ரோவ்ஸ்கயா சமையல் வாயுவைத் திறந்து விட்டு தனது உயிரை மாய்த்துக் கொண்டார்.
மறுநாள் செய்தித்தாளில் எழுத்தாளர் நினா இவனோவ்னா மறைந்துவிட்ட செய்தி வெளியாகியிருந்த்து. அதைப் பற்றிக் குறிப்பிடும் கோடேசெவிச் அவள் எழுத்தாளரில்லை. ஆனால் அப்படித் தன்னை அழைத்துக் கொள்வதில் பெருமைப்பட்டவள். அவளது கதைகள் கட்டுரைகள் எதுவும் இலக்கியதரமானவையில்லை பெரிதும் நகல் படைப்புகள்.
ஆனால் அவள் 1903 மற்றும் 1909 ஆண்டுகளுக்கு இடையில் மாஸ்கோ இலக்கிய உலகின் மையமாக விளங்கினாள். பல்வேறு கவிஞர்களுடன் நெருக்கமாகப் பழகினாள். எழுத்தாளர்கள். ஓவியர்கள் கவிஞர்கள் என்ற அவளது நட்பு பட்டியல் மிக நீண்டது. இலக்கியச் சந்திப்புகளில் அவள் மிகையான பாவனையுடன் நடித்தாள். இளம் படைப்பாளிகளிடம் பொய்யான காதல் வசனங்களைப் பேசினாள்.. இத்தனைக்கும் அவள் அழகியில்லை. சராசரியான பெண். ஆனால் அவளுக்கு எவரையும் தன்வசம் ஈர்த்துவிடும் திறமையிருந்தது.
நினாவின் உண்மையான வயது யாருக்கும் தெரியாது. அவள் தனது தனது வயதை மறைத்து வந்தாள். அவள் ஒரு அதிகாரியின் மகள். பல் மருத்துவம் படித்திருக்கிறாள். ஆனால் அதை முடிக்கவில்லை. திருமண வாழ்க்கையும் தோல்வியில் முடிந்திருக்கிறது. ஆகவே அவள் கலைகளின் மீது தனது நாட்டத்தை ஏற்படுத்திக் கொண்டாள். இலக்கிய உலகில் அவளைக் காதலித்த முதல் நபர் ஆன்ட்ரி பைலி.

அப்போது கவிஞர் பைலி மிகவும் இளமையாக இருந்தார், தங்கச் சுருட்டை முடி, நீல நிற கண்கள், கவிதையின் மீது பித்துக் கொண்டிருந்தார். அவளைக் காதலித்த ஆன்ட்ரி பைலி அவளது அழகினைப் புகழ்ந்து கவிதை எழுதினார். அது மட்டும் அவளுக்குப் போதுமானதாகயில்லை, அவள் இளங்கவிஞர்களின் பட்டாளமே தன்னைக் காதலிக்க வேண்டும் என ஆசைப்பட்டாள். அப்படி நடக்கவும் செய்தது.
ஆனால் அதில் ஒருவர் கூட அவளை உண்மையாகக் காதலிக்கவில்லை. நினா நிறையக் குடித்தாள். போதை மருந்துகளை உட்கொண்டாள். மார்பின் அடிமையாக மாறினாள். அதனால் அவளது உடல்நிலை சீர்கெட்டது.
மனரீதியாகவும், உடல்ரீதியாகவும் வளர்ச்சியடையாத தங்கை நதியா அவளது பொறுப்பில் விடப்பட்டிருந்தாள். நினா ரஷ்யாவை விட்டு வெளியேறியபோது, தனது சகோதரியை தன்னுடன் அழைத்துச் சென்றார் சில காலம் பெர்லினில் வாழ்ந்தாள். ஒன்றிரண்டு நண்பர்கள் அவளுக்கு உதவினார்கள். நிரந்தரமாகப் போதையிலிருந்த அவள் தன்னை அழித்துக் கொண்டாள்.
புற்றுநோயால் நதியா இறந்தது அவளுக்குள் மோசமான பாதிப்பை ஏற்படுத்தியது. மருத்துவமனையின் பிணவறைக்குச் சென்று சகோதரியின் சடலத்தை ஊசியால் குத்தினாள். பின்னர் அதே ஊசியால் தன்னுடைய கையையும் குத்திக் கொண்டாள்: தனது கடைசி நாட்களில் நினா பேசிய எதுவும் புரியும்படியாக இல்லை. முடிவில் அவள் தன்னை எரிவாயுவால் அழித்துக் கொண்டுவிட்டாள் என்று கோடேசெவிச் அவளது நினைவைப் பகிருகிறார்.
சொந்த வாழ்வின் வேதனைகளை மறைத்துக் கொண்டு இலக்கியத்தில் அதற்கான மீட்சியைத் தேடியவர் என்றே நினாவைப் புரிந்து கொள்கிறேன்.
கவிஞர் குமிலியோவ் மற்றும் பிளாக் குறித்து எழுதிய கட்டுரையில் இருவரது ஆளுமையும் சிறப்பாக வெளிப்பட்டுள்ளது. குறிப்பாகக் குமிலியோவின் வீடு, விருந்தினர்களை வரவேற்கும் விதம். அவரது மனோபாவம் குறித்து உணர்ச்சிப்பூர்வமாக எழுதியிருக்கிறார்.

1921 இல் இரண்டு மாத இடைவெளியில் கவிஞர் குமிலியோவ் மற்றும் பிளாக் இருவரும் இறந்து போனார்கள். குமிலியோவை விடப் பிளாக் ஆறு ஆண்டுகள் மூத்தவர். இருவரும்: ஒரே இலக்கியச் சகாப்தத்தைச் சேர்ந்தவர்கள் என்றாலும் வெவ்வேறு கவிதை மரபில் வருபவர்கள். பிளாக் குறியீட்டு வாதக் கவிதைகளை நிராகரித்தார். கவிதை எழுதுவது தான் உண்மையான ஆன்மீகம் என்று நம்பினார். ஆனால். குமிலியோவைப் பொறுத்தவரை, கவிதை என்பது ஒரு இலக்கிய வடிவம் மட்டுமே.
பிளாக் வாழ்க்கையின் ஒவ்வொரு கணமும். ஒரு கவிஞராக மட்டுமே இருந்தார். அவரது பேச்சிலும் எழுத்திலும் அது முழுமையாக வெளிப்பட்டது என்கிறார் இந்தத் தொகுப்பின் சிறந்த கட்டுரையாக மாக்சிம் கார்க்கி பற்றியதைச் சொல்வேன். கார்க்கி எவ்வளவு செல்வாக்குடன் இருந்தார் என்பதன் நேரடி சாட்சியமாக எழுதப்பட்டிருக்கிறது
தனது கவிதைத்தொகுப்பினை மாக்சிம் கார்க்கி படித்துப் பாராட்டியதாகக் கேள்விப்பட்டு அவரைச் சந்திக்கப் பீட்டர்ஸ்பெர்க் செல்கிறார் விளாடிஸ்லாவ் கோடாசெவிச்.
கார்க்கின் வீட்டில் ஏகப்பட்ட ஆட்கள். அதில் உதவி கேட்டு வந்திருப்பவர்கள் அதிகம். தன்னைத் தேடி வருகிறவர்களின் துயரக்கதையைக் கேட்டு அவர்களுக்குத் தேவையான உதவிகளை உடனே செய்து தருகிறவராகக் கார்க்கி இருந்தார். எவ்வளவு சிபாரிசு கடிதங்கள் கொடுத்திருப்பார் என்று கணக்கேயில்லை.
முதன்முறையாக மாக்சிம் கார்க்கியைச் சந்தித்த நாளை நினைவு கூறும் விளாடிஸ்லாவ் கோடேசெவிச் அவர் அழகான தொப்பியும் சீனப்பட்டு அங்கியும் அணிந்திருந்தார். அவர் வீட்டில் மின்சாரம் கிடையாது. மண்ணெண்ணெய் விளக்கு தான் எரிந்து கொண்டிருந்தது என்கிறார்
கார்க்கி அளவிற்கு ரஷ்யாவில் புகழ்பெற்ற எழுத்தாளர் வேறு எவருமில்லை. உலகின் பல்வேறு மூலைகளிலிருந்தும் அவருக்குக் கடிதங்கள் எழுதப்பட்டன. தினமும் ஆயிரக்கணக்கான கடிதங்கள் வருவதுண்டு.
அந்த நாட்களில் ரஷ்ய கம்யூனிஸ்ட் அகிலத்தின் தலைவராக இருந்த ஜினோவியேவிற்கும் கார்க்கிக்கும் மோதல் இருந்தது. அவர் கார்க்கி மீது நடவடிக்கை எடுக்கக் காத்துக் கொண்டிருந்தார். ஒரு முறை ஜினோவியேவ் ஆணையின் பெயரில் மாக்சிம் கார்க்கி வீட்டில் சோதனை நடத்தப்பட்டது. இதன் பிறகு கார்க்கி பீட்டர்ஸ்பெர்க்கை விட்டு மட்டுமல்ல, சோவியத் ரஷ்யாவையும் விட்டு வெளியேற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது
அவர் ஜெர்மனி சென்றார். அங்கே ஒரு சாதாரண விடுதியில் வசித்து வந்தார். பின்பு ஸ்டாலின் ஆட்சியில் நாடு திரும்பிய பிறகு அவருக்கு அரசின் தரப்பில் வீடு ஒதுக்கப்பட்டது.
மாக்சிம் கார்க்கி ஆடம்பரமான வாழ்க்கை வாழுவதாகச் செய்தி பரவியது. அந்தச் செய்தி உண்மையில்லை. அவருக்கு ஒதுக்கிய வீடு முறையான பராமரிப்பு இன்றி இருந்த பெரிய, வசதியற்ற, புறக்கணிக்கப்பட்ட மாளிகையாகும்.
அவரது தனிப்பட்ட தேவைகள். குறைவு. ஆனால் அவர் தன்னைத் தேடி வருகிறவர்களுக்குத் தாராளமாகச் செலவு செய்தார் அவரிடம் உதவி கேட்க வந்த எவரையும். அவர் மறுக்கவில்லை
சாமானியர்கள் முதல் பேரரசி அலெக்ஸாண்ட்ரா வரை அவரிடம் உதவி கேட்டுப் பெற்றிருக்கிறார்கள். லட்சியக்கனவுகளுடன் வாழ்ந்த கார்க்கி அதே கனவுகளை எல்லோரும் காணவேண்டும் என்று விரும்பினார். வற்புறுத்தினார். அது நடக்கவில்லை. அந்த ஏமாற்றத்தை அவரால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. உண்மையில் அவர் ஒரு தோல்வியுற்ற நாயகன். எந்த நம்பிக்கைகள். கனவுகள் அவரை உருவாக்கியதோ அதன் தோல்வியைக் கண்முன்னே கண்டார். அவரே நேரடியாகப் பாதிக்கப்பட்டார். தனக்கு அனுப்பி வைக்கப்பட்ட அத்தனை புத்தகங்களையும் கார்க்கி படித்தார். இளம் படைப்பாளிகளைக் கொண்டாடினார். அப்படி ஒருவரை இனி காண முடியாது என்கிறார் விளாடிஸ்லாவ் கோடேசெவிச்.
1921 வாக்கில் பிளாக் மூன்று வருடங்களாகக் கவிதை எதுவும் எழுதவில்லை. அவர் மாக்சிம் கார்க்கியிடம் தனது “மனிதகுலத்தின் ஞானத்தின் மீதான நம்பிக்கை” முடிந்துவிட்டதாகப் புகார் செய்தார், அதன் பின்பு பிளாக் நோய்வாய்ப்பட்டார். அவரை மருத்துவச் சிகிச்சைக்காக வெளிநாட்டிற்கு அனுப்புமாறு மருத்துவர்கள் கோரிக்கை வைத்தனர் ஆனால் அவர் நாட்டை விட்டு வெளியேற அனுமதிக்கப்படவில்லை
மாக்சிம் கார்க்கி அவரது விசாவிற்காக முயன்றார். அவர் அனடோலி லுனாசார்ஸ்கிக்கு எழுதிய கடிதத்தில் அலெக்சாண்டர் பிளாக் ரஷ்யாவின் தலைசிறந்த கவிஞர். நீங்கள் அவரை வெளிநாடு செல்ல தடை விதித்து, ஒருவேளை அவர் இறந்துவிட்டால், நீங்களும் உங்கள் தோழர்களும் அவரது மரணத்திற்குக் குற்றவாளியாகக் கருதப்படுவீர்கள் என்று குறிப்பிட்டுள்ளார்
1921 ஆம் ஆண்டு ஜூலை 23 ஆம் தேதி பிளாக்கிற்கு விசா வழங்க முடிவு செய்யப்பட்டது. ஆனால் அவரது உடல்நிலை கடுமையாக மோசமடைந்ததால், பிளாக்கின் மனைவி அவருடன் செல்வதற்கு அனுமதி கேட்டார். லியுபோவ் டிமிட்ரிவ்னா பிளாக் ரஷ்யாவை விட்டு வெளியேறுவதற்கான அனுமதி மிகவும் தாமதமாகவே வழங்கப்பட்டது. அதற்குள் பிளாக் இறந்துவிட்டிருந்தார்.
ரஷ்ய வரலாற்றின் மிகவும் கொந்தளிப்பான காலகட்டத்தில் வாழ்ந்த படைப்பாளிகளின் வாழ்க்கையை மிகவும் நேர்மையாக நினைவுகூர்ந்திருக்கிறார் கோடாசெவிச்.
September 9, 2023
கர்னலின் நாற்காலி – அறிமுகவுரை
எனது கர்னலின் நாற்காலி குறுங்கதைகள் தொகுப்பு குறித்து விரிவான அறிமுகவுரையை நிகழ்த்தியிருக்கிறார் முனைவர். சு.வினோத். இவர் சிவகாசியில் தமிழ்த்துறை பேராசிரியராகப் பணியாற்றுகிறார். இந்த நிகழ்வு சங்க இலக்கிய ஆய்வு நடுவத்தில் நடைபெற்றிருக்கிறது.
சிறப்பாக உரையாற்றிய பேராசிரியர் வினோத்திற்கு எனது அன்பும் நன்றியும்.
இதனைக் கவனப்படுத்திய சாத்தூர் ஆறுமுகசாமிக்கு அன்பான நன்றி.

தேசாந்திரி பதிப்பகம்
ரூ 350
September 7, 2023
டால்ஸ்டாயைக் கொண்டாடுகிறார்கள்
தூத்துக்குடியில் சலூன் நூலகம் நடத்திவரும் பொன். மாரியப்பன் மற்றும் அவரது நண்பர்கள் ஜெயபால், அருண்பிரசாத் மற்றும் ராம்குமார் இணைந்து நூலக மனிதர்கள் என்ற வாசிப்பு இயக்கத்தை உருவாக்கியுள்ளார்கள்



இந்த இயக்கத்தின் மூலம் சிறந்த புத்தகங்களை மக்கள் மத்தியில் அறிமுகம் செய்கிறார்கள். பொது நூலகத்திற்குத் தேவையான உதவிகளை மேற்கொள்கிறார்கள். பள்ளி மாணவர்களிடம் புத்தக வாசிப்பை ஏற்படுத்தி வருகிறார்கள்.
நேற்று ரஷ்ய தூதரகம் சார்பில் டெல்லியில் டால்ஸ்டாயின் 195வது பிறந்த நாள் கொண்டாட்டம் சிறப்பாக நடைபெற்றது பற்றிய செய்தியை டிவியில் கண்டேன். சென்னையில் அப்படி எதுவும் நடைபெறுவதாகத் தெரியவில்லை.
நூலக மனிதர்கள் இயக்கத்தின் சார்பில் தூத்துக்குடியில் நாளை நகர் முழுவதும் டால்ஸ்டாய் பிறந்த நாளுக்காகச் சுவரொட்டிகளை ஒட்டி அவரது நினைவைக் கொண்டாடுகிறார்கள்.
இந்த நிகழ்வின் ஒரு பகுதியாக டால்ஸ்டாய் வாழ்க்கை வரலாற்றை மையமாகக் கொண்டு நான் எழுதிய மண்டியிடுங்கள் தந்தையே நூலை அறிமுகம் செய்து வைக்கிறார்கள்

நேற்று புத்தக வாசிப்புச் சம்பந்தமான வாசக அட்டையைத் தூத்துக்குடியில் உள்ள மாவட்ட மைய நூலகத்திற்கு வழங்கியிருக்கிறார்கள்.இதற்குத் துணை நின்ற நூலகர் ராம் சங்கர் அவர்களுக்கு நன்றி
தூத்துக்குடியிலுள்ள ஒரு தேநீர் கடையிலும் வாசிப்பு அட்டை ஒட்டப்பட்டிருக்கிறது. .


பந்தலக்குடி அரசு பள்ளியில் பணியாற்றும் ஆசிரியர் ஜெயபால் அவர்கள் தலைமையில் லியோ டால்ஸ்டாய் பற்றிய கட்டுரை போட்டி நடந்துள்ளது. கட்டுரைகளை எழுதிய அனைத்து மாணவர்களுக்கும் புத்தகங்களைப் பரிசாக வழங்கியிருக்கிறார்கள்.
அதுபோல மல்லாங்கிணறு அரசு பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர் ராம்குமார் மாணவர்களுக்கான கட்டுரை போட்டியை நடத்தி பரிசு வழங்கியிருக்கிறார்.

லியோ டால்ஸ்டாயின் பிறந்த நாளைக் கொண்டாடும் இவர்களை மனம் நிறைந்து வாழ்த்துகிறேன். இலக்கிய உலகில் கூட இது போன்ற நிகழ்வு நடப்பது குறைந்து வரும் சூழலில் இவர்களின் முன்னெடுப்பு பாராட்டிற்குரியது. பொன். மாரியப்பன், ஜெயபால். ராம்குமார், அருண்பிரசாத் உள்ளிட்ட அனைவருக்கும் எனது அன்பும் நன்றியும்.
September 6, 2023
கோமாலாவில் என்ன நடக்கிறது
மெக்சிகன் எழுத்தாளரான யுவான் ருல்ஃபோவின் பெட்ரோ பராமோ உலகின் சிறந்த நாவல்களில் ஒன்று. இந்நாவல் 1955ம் ஆண்டு வெளியானது. 122 பக்கங்கள் கொண்டது.

தேரியின் மணல்மேடுகளைப் போல நாவல் பல்வேறு மடிப்புகளைக் கொண்டிருக்கிறது. வாசிக்கையில் அந்த மடிப்புகளின் விசித்திர அழகு வியப்பூட்டுகிறது. இந்த நாவலின் பாதிப்பில் தான் கேப்ரியல் கார்சியா மார்க்வெஸ் தனது நூற்றாண்டு காலத் தனிமை நாவலை எழுதினார் என்கிறார்கள். பெட்ரோ பரமோவின் ஒரு வாக்கியத்தைத் தனது நாவலில் மார்க்வெஸ் அப்படியே பயன்படுத்தியிருக்கிறார்
முதல் மேஜிகல் ரியலிச நாவல் என்று கருதப்படும் இந்த நாவல் லத்தீன் அமெரிக்காவில் புதிய வகை எழுத்துமுறையை உருவாக்கியது. காலத்தின் முன்பின்னாகச் சென்று விநோதங்களை இயல்பாகவும், இயல்பை விநோதமாகவும் மாற்றிக் காட்டுகிறது
ருல்ஃபோவின் கதை சொல்லும் முறை ஆச்சரியமளிக்கிறது. கலைத்துப் போடப்பட்ட சீட்டுகள் போல நாவலில் நினைவுகள் சிதறிக்கிடக்கின்றன. கையில் கிடைத்த சீட்டுகளை நாமே அடுக்கி வரிசைப்படுத்திக் கொள்வது போலவே நினைவுகளை ஒன்று சேர்த்துக் கொள்கிறோம்
நாவல் எழுபது துண்டு துண்டான நிகழ்ச்சிகளைக் கொண்டுள்ளது, இந்த நாவலுக்குச் சூஸான் ஸான்டாக் எழுதிய முன்னுரை அபாரமானது. மிகக் கச்சிதமாக நாவலையும் ருல்ஃபோவின் ஆளுமையினையும் மதிப்பிடுகிறார்.

சிறந்த நாவல்கள் தனது துவக்க வரிகளால் நம்மை உள்ளே இழுத்துக் கொள்ளக்கூடியவை. அப்படியான ஒரு துவக்கம் தான் பெட்ரோ பராமோவிலும் காணப்படுகிறது.
நாவலின் நாயகன் யுவான் ப்ரீஷியாடோ, தனது தாயின் இறப்பிற்குப் பின்னால் தந்தையைத் தேடி கோமாலா என்ற ஊருக்குப் போகிறான். தந்தையின் பெயர் தான் பெட்ரோ பராமோ. தாயின் நினைவுகளிலிருந்து அவன் கொமாலோவைப் பற்றி அறிந்திருக்கிறான். அம்மாவின் இளமைக்காலம் அங்கே கழிந்தது. கொமாலோ இறந்தவர்கள் வாழும் ஊர் என்று அவன் அறிந்திருக்கவில்லை. அங்கே வீடுகள் காலியாக உள்ளன
உண்மையில் இரண்டு கோமாலா இருக்கிறது. கடந்தகாலத்தில் வாழும் கோமாலாவில் உயிருள்ளவர்கள் வசிக்கிறார்கள். நிகழ்காலத்தில் வாழும் கோமாலாவில் இறந்தவர்களே வசிக்கிறார்கள். இந்த விசித்திரம் தான் நாவலுக்குப் புதிய தோற்றத்தைத் தருகிறது.நாவல் பெட்ரோ பரமோவின் வாழ்க்கையைச் சுருக்கமாக மறுகட்டமைக்கிறது. அவர் வறுமையிலிருந்து விடுபட்டு கோமாலாவின் செல்வாக்கு மிக்க தலைவராக எவ்வாறு உருவானார் என்பதை படிப்படியாக அறிந்து கொள்ள முடிகிறது. கோமாலாவில் ஆவிகளின் முணுமுணுப்புகளும், உடலற்ற குரல்களும் காலியான இடத்தை நிரப்புகின்றன. நகரத்தின் வறண்ட மற்றும் வெற்று நிலப்பரப்பு மெக்ஸிகோவின் உண்மையான, தனிமைப்படுத்தப்பட்ட நிலவியலைப் பிரதிபலிக்கிறது..

ருல்ஃபோவின் கதை சொல்லும் முறை நாவலுக்கு பன்முகத்தன்மையை உருவாக்குகிறது அவர் இறந்தவர்களின் கதைகளை விவரிக்கிறார். அவை இப்போது நடப்பவை போலவே சொல்லப்படுகின்றன. ஏனெனில் கோமாலாவில் நிலத்திற்கு மேல், கீழ் என்ற பாகுபாடு கிடையாது. அங்கே நடப்பது நினைவின் நாடகம்.
நாவலில் வரும் கோமாலா பற்றிய விவரிப்புகள். வெயிலைப் பற்றி எழுதியுள்ள வரிகள். நினைவின் ஊசலாட்டத்தைத் துல்லியமாக வெளிப்படுத்தும் முறை ருல்ஃபோவின் சாதனை என்றே சொல்வேன்.
யுவான் தேடுவது தனது தந்தையான பெட்ரோ பரோமாவை ஆனால் அவன் அறிந்து கொள்வது அவனது அம்மாவின் இளமைக்காலத்தை. அவளது தோழிகளை. ஒடுக்குமுறைக்கு உள்ளான கோமாலாவின் மனிதர்களை.
பெட்ரோ பரோமாவை ஊரே வெறுக்கிறார்கள். அவன் நரகத்திற்குத் தான் போவான் என்று சபிக்கிறார்கள். உண்மையில் அவன் இறந்தபிறகு கோமாலா மொத்தமும் நரகமாக மாறிவிடுகிறது.
நாவலில் இறந்தவர்கள் பேசுகிறார்கள். நிறைவேறாத ஆசைகளுக்காக ஏங்குகிறார்கள். சண்டையிட்டுக் கொள்கிறார்கள். கல்லறைக்குள் இருந்தபடியே நட்பு கொள்கிறார்கள். பிடிக்காதவரை வெறுக்கிறார்கள். மரணத்திற்குப் பின்னும் அவர்கள் அடங்குவதில்லை. நிம்மதி கொள்வதுமில்லை இறந்தவர்களின் இத்தகைய வாழ்வினை மெக்சிகோவில் இன்றும் ஒரு திருவிழாவாகக் கொண்டாடுகிறார்கள்.
ஸ்பானிய மொழியில் பரோமா என்றால் தரிசு அல்லது பாழ்நிலம் என்று பொருள். பெட்ரோ என்றால் பாறை என்று அர்த்தம். அந்தப் பெயருடைய தந்தை தனது அதிகாரத்தால் தனது ஊரையே ஆளுகிறான். அவனுக்குப் பின்பு ஊர் பாழ்நிலமாகிவிடுகிறது. நாவலின் இறுதி வரியில் அவன் பாறையைப் போலச் சரிந்து விழுகிறான்.
கோமாலாவில் என்ன நடக்கிறது என்பது புதிரானது. அந்த ஊருக்கு வரும் யுவான் தனது பயண வழியில் லாஸ் என்குவென்ட்ரோஸ் என்ற சந்திப்பில் கழுதையில் வரும் அபன்டியோ என்பவனைச் சந்திக்கிறான்.
அவனிடம் கோமாலாவிற்கு வழி கேட்கிறான். அபன்டியோ தான் அந்த வழியே செல்வதாக உடன் அழைத்துக் கொண்டு நடக்கிறான். எதற்காக யுவான் கோமாலாவிற்கு வந்திருக்கிறான் என்று அபன்டியோ கேட்கிறான்.

தனது தந்தையைத் தேடி வந்துள்ள விபரத்தைச் சொல்லும் யுவான் அவரது பெயர் பெட்ரோ பரோமா என்கிறான். இதைக் கேட்ட அபன்டியோ தானும் பெட்ரோ பரோமாவின் மகன் தான் என்று சொல்வதோடு இங்கிருப்பவர்களில் பலரும் அவரது பிள்ளைகள் தான் என்கிறான். இதை யுவானால் புரிந்து கொள்ள முடியவில்லை. ஆனால் நாவல் முடியும் போது அந்த நிஜத்தை யுவான் புரிந்து கொள்கிறான்
கோமாலா என்பது கைவிடப்பட்ட ஊர். அங்கே யாரும் வருவதில்லை. அழுகிய ஸ்போனாரியாப் பூக்களின் நாற்றத்தால் விஷமான ஆகஸ்ட் மாத அனல்காற்று வீசும் வெயில் அடிக்கிறது. தொலைதூரத்தில் மலைத்தொடர் காணப்படுகிறது.
கோமாலா என்பது காலத்தின் கோலம் என அபன்டியோ சொல்கிறான். மொத்த நாவலையும் திறக்கும் சாவி அது தான்.
காலம் தான் கோமாலாவை இப்படியாக்கியிருக்கிறது. அது மறைவை ஏற்றுக் கொள்ளவில்லை. இருவேறு உலகில் மனிதர்களின் வாழ்க்கையை முன்னெடுக்கிறது.
நாவலின் துவக்கத்தில் வெயிலின் தாக்கத்தை உணர்ந்த யுவான் நல்ல வெயில் என்று சலித்துக் கொள்கிறான். ஆனால் அபன்டியோ நீங்கள் அப்படிச் சொல்லலாம். இதெல்லாம் ஒன்றுமேயில்லை என்கிறான். அதே நிலத்தில் வாழுகிறவர்களுக்கு வெயில் பொருட்டாகயில்லை. கோமாலா நரகத்தின் வாயில் போலிருக்கிறது என்கிறான்.
யுவான் கொமாலோவிற்குத் தங்குவதற்காக டோனா எடுவிஜஸ் என்ற பெண்ணின் வீட்டைத்தேடிப் போகிறான். அவள் அம்மாவின் தோழி. அவள் யுவானை வரவேற்கிறாள். தங்குவதற்கு அறை ஒதுக்கித் தருகிறாள். அத்தோடு அவன் வரப்போவதை டோலோரிடா சொன்னாள் என்றும் சொல்கிறாள்.
எனது அம்மா இறந்துவிட்டாரே என்று குழப்பத்துடன் யுவான் சொல்லும் போது இறந்தவர்களால் பேச முடியாது என்று நினைக்கிறாயா. டோலோரிடா எனது நீண்டகாலத்தோழி. உனது வருகையைப் பற்றி இப்போது தான் சொன்னாள் என்கிறாள்.
அவளது வீட்டினை அடையாளம் காட்டிய அபன்டியோ பற்றி யுவான் சொல்லும் போது அவன் இறந்து போய்ப பல ஆண்டுகள் ஆகிவிட்டது. ஆனாலும் ஊருக்குப் புதியவர்கள் வந்தால் வழிகாட்டியாக இருக்கிறான் என்று டோனா சொல்கிறாள். விசித்திரத்தின் சுழல் பாதைக்குள் தான் நுழைந்துவிட்டதை யுவான் உணருகிறான். அவனுக்கு ஒதுக்கப்பட்ட அறைக்குச் செல்லும் போது டோனா அவன் தனது மகனாகப் பிறந்திருக்க வேண்டியவன். ஆனால் தனது ஒரு முடிவால் அவன் டோலோரிடாவின் மகனா பிறந்துவிட்டான் என்று பிறப்பின் புதிய ரகசியம் ஒன்றைப் பகிருகிறாள் .
அந்தப் பகுதியை வாசிக்கும் போது மகாபாரதத்தில் வரும் அம்பா அம்பாலிகா கதை நினைவிற்கு வந்தது. அதில் அம்பிகா வியாசருடன் உடலுறவு கொள்ள விரும்பாமல் தனது பணிப்பெண்ணான பராஷ்ரமியை அனுப்பி வைக்கிறாள். அந்த உறவில் பிறந்தவர் தான் விதுரன். கிட்டதட்ட அதே நிகழ்வு தான் பெட்ரோ பரோமாவிலும் நடக்கிறது. விதுரனைப் போன்றவன் தான் யுவான்.
கோமாலா விற்கு வந்த யுவான் தனது நினைவின் சுழலுக்குள் செல்கிறான். அம்மா எதற்காக அவனைக் கோமாலா அனுப்பி வைத்தாள் என்பதை நினைவு கொள்கிறான்“பெட்ரோ பரோமாவிடம் நமக்கு உரியதை மட்டுமே கேள். அவர் எனக்குக் கொடுத்திருக்க வேண்டிய ஆனால் ஒரு போதும் கொடுக்காததை மட்டுமே கேள். அவர் இத்தனை வருஷங்களாக நம்மை மறந்து இருந்ததிற்குப் பதில் சொல்ல வை“ என்கிறாள்
அவளுக்குப் பெட்ரோபரோமா இறந்து போனது தெரியாது. யுவானின் அம்மா வேண்டுவது அன்பே மட்டுமே. கோமாலாவின் அரசனைப் போல ஊரையே ஆண்டு கொண்டிருந்தவனிடம் தங்களை நிராகரித்த காரணத்தை மட்டுமே கேட்கச் சொல்கிறாள்.
பெட்ரோ பரோமா அவர்களை மட்டும் நிராகரிக்கவில்லை. அவன் காதலித்த. நெருங்கிப்பழகி குழந்தை கொடுத்த எல்லாப் பெண்களையும் அப்படித் தான் நடத்தியிருக்கிறான். அவனுக்குப் பெண்கள் ஆடையைப் போன்றவர்கள். உடுத்தி அழகு பார்த்தவுடன் வீசி எறிந்துவிடுவான். ஆனால் அவனுடன் வாழ்வதற்கு டோனாவும் ஆசைப்படுகிறாள். டோலோரிடாவும் ஆசைப்படுகிறாள். டோனாவால் தான் டோலோரிடா ஒரு இரவு பெட்ரோவுடன் கழிக்கிறாள்.

உன் அம்மா உன் பிறப்பின் ரகசியத்தை உன்னிடம் சொல்ல வெட்கப்பட்டிருக்கலாம் என்று சொல்கிறாள் டோனா. மறைக்கப்பட்ட ரகசியங்கள் வெளிப்படுவதற்காகத் தான் யுவான் கோமாலா வருகிறானோ என்றும் தோன்றுகிறது
பெட்ரோ பரோமாவின் நினைவில் டோலோரிடா இல்லை. அவன் எந்த காதலிக்கும் மதிப்பு கொடுக்கவில்லை. அவன் இச்சையால் வழிநடத்தப்படுகிறான். ஊரின் பார்வையில் அவன் மிக மோசமானவன். அவனைத் தேடி எதற்காக மகனை அனுப்பி வைக்கிறாள் டோலோரிடா. பெட்ரோ பரோமா பற்றி உலகம் அறியாத எதையோ யுவான் அறிந்து கொள்ள வேண்டும் என்றே ஆசைப்படுகிறாள்.
கோமாலாவில் வசித்தவர்களின் வாழ்க்கை விசித்திரமாகயிருக்கிறது. அந்த விசித்திரம் தான் ஊரையும் பற்றிக் கொள்கிறது. இந்த நாவலில் வரும் பாட்டி ரொகேலியா, டோனா மற்றும டோலோரிடாவின் மாற்றுவடிவங்கள் போலவே மார்க்வெஸ் நாவலில் பாட்டியும் உர்சுலாவும் இடம்பெறுகிறார்கள்.
மிகுவல் பரோமா ஒரு சிவப்பு குதிரை வைத்திருக்கிறான். அந்தக் குதிரை எப்போதும் அவனுடனிருக்கிறது. அந்தக் குதிரையும் குற்றவுணர்வில் அலைந்து கொண்டிருக்கிறது. மோசமான செயலைச் செய்துவிட்டால் விலங்குகளும் அதை நினைத்து வருந்துகின்றன என்கிறார் ருல்ஃபோ
கனவில் வரும் காட்சிகள் போலக் கோமாலாவின் நிஜம் விரிவு கொள்கிறது. யுவான் எது கனவு எது நிஜம் எனப் பிரித்து அறியமுடியாமல் குழம்பிப் போகிறான். பரோமா இறந்த போது பாதிரி அவன் நிச்சயம் நரகத்திற்குப் போவான் என்று சொல்கிறார். அவனால் மோட்சத்தை விலைக்கு வாங்க முடியாது என்றும் வாதிடுகிறார்
நாம் இறந்தவர்களால் வழிநடத்தப்படுகிறோம். அவர்கள் தங்களின் வெறுப்பை, தீராக்கோபத்தை. அநீதியை வெளிப்படுத்திக் கொண்டேயிருக்கிறார்கள். மரணம் ஒரு முற்றுப்புள்ளியில்லை. கோமாலாவின் இந்த நிஜம் மெக்சிகோவினைப் பற்றியது. அதன் கிறிஸ்டெரோக்களின் கலகம் பற்றியது. யுவான் ருல்ஃபோ சட்டம் பயின்றவர். தனது நாற்பத்தைந்து வயதுக்குப் பின்பே எழுத துவங்கியவர். ஒரு சிறுகதைத் தொகுப்பும் இந்த நாவலும் மட்டுமே எழுதியிருக்கிறார். மிக்க் குறைவாக எழுதி இலக்கியத்தில் பெரிய இடம் பிடித்தவர் ருல்ஃபோ. 1986 இல் ருல்ஃபோ நுரையீரல் புற்றுநோயால் இறந்தார்
அதைத்தான் சூஸான் ஸான்டாக் தனது முன்னுரையில் வியக்கிறார். அத்தோடு பலமுறை வாசிக்கும் தகுதியற்ற எந்த ஒரு புத்தகமும் ஒரு முறை வாசிப்பதற்கும் தகுதியற்றதே என்றும் சொல்கிறார். நான் அப்படி நினைக்கவில்லை. மாறாக ஒரு முறை வாசிப்பதும் பலமுறை வாசிப்பதும் புத்தகம் சார்ந்த விஷயம் மட்டுமில்லை. நமது அத்தேடலை அதைத் தீர்மானிக்கிறது.
இந்த நாவலின் துவக்கம் எனக்கு எமிலி பிராண்டேயின் Wuthering Heights நாவலை நினைவுபடுத்துகிறது. அதில் வரும் மலையுச்சியில் இருந்த வீடு போன்றது தான் கோமாலா எனத் தோன்றுகிறது.
அம்மாவின் நினைவில் இருந்த கோமாலா வேறு, தான் நேரில் காணும் கோமாலா வேறு என்பதை யுவான் உணர்ந்து கொள்கிறான். ஊர் ஒவ்வொருவர் மனதிலும் ஒரு விதமாக உருக்கொள்கிறது. ஊரை சில மனிதர்களே நினைவுபடுத்துகிறார்கள்.தவறு தான் நாவலின் முக்கியக் குறியீடு. பல்வேறு தவறுகள் நாவலில் நடக்கின்றன. அதிலிருந்து அவர்களால் விடுபட முடியவில்லை. தவறுகளை ஏற்றுக் கொள்ள மறுக்கிறார்கள். ஆனால் ஒவ்வொரு தவறும் தனக்கான வாரிசுகளை விட்டுச் செல்வதைக் காண முடிகிறது.

காமமும் அதிகாரமும் தான் கோமாலாவை ஆட்சி செய்கிறது. கோமாலாவில் யுவான் வழி தவறி வந்துவிட்டவனைப் போலவே நடத்தப்படுகிறான்.
நினைவு ஒற்றைக்குரல் கொண்டதில்லை. அது ஒரு சேர்ந்திசை என்பதை நாவலின் வழியாக நாம் புரிந்து கொள்கிறோம்
நாவல் முழுவதும் பல்வேறு குரல்களைக் கேட்டுக் கொண்டேயிருக்கிறோம். அவை பிரித்து அறியமுடியாத ரகசியக் குரல்கள். அவை மனிதர்களின் குரல் மட்டுமில்லை.
யுவான் ருல்ஃபோ மிகச்சிறந்த கவிஞர் என்பதால் நாவல் கவித்துவத்துடன் எழுதப்பட்டிருக்கிறது. இந்த நாவலை தமிழில் எஸ் பாலச்சந்திரன் சிறப்பாக மொழியாக்கம் செய்திருக்கிறார். விடியல் பதிப்பகம் 2001ல் வெளியிட்டுள்ளது.
கோமாலா என்பது அழிந்த ஊர் மட்டுமில்லை .அது ஒரு விசித்திரக் கனவு. அதிலிருந்து விழித்து எழுந்தவுடன் நமக்கு மிஞ்சுவது சில நினைவுகள் மட்டுமே.
••
7.9.23
S. Ramakrishnan's Blog
- S. Ramakrishnan's profile
- 657 followers
