S. Ramakrishnan's Blog, page 51
October 25, 2023
துறவியும் காதலனும்
ஹெர்மன் ஹெஸ்ஸேயின் நாவல்கள் யாவும் இரண்டு முக்கியச் சரடுகளைக் கொண்டிருக்கின்றன. ஒன்று துறவின் பாதை. மற்றது கலையின் பாதை. இரண்டும் சந்தித்துக் கொள்ளும் தருணங்களையும். துறவும் கலையும் இணைந்து செயல்பட வேண்டும் என்ற வேட்கையினையும் ஹெஸ்ஸே தொடர்ந்து முன்வைக்கிறார். தனது நாவல்களில் நட்பினை முதன்மையான உறவாகக் கொண்டாடுகிறார் ஹெஸ்ஸே.

ஞானத்தை அடையும் முன்பு சித்தார்த்தா உலகியல் இன்பங்களில் திளைக்கிறான். ஆனால் கோவிந்தன் துறவின் பாதையில் சென்று இயற்கையிடம் தன்னை ஒப்படைத்துக் கொண்டுவிடுகிறான். இரண்டு பாதைகளும் சந்தித்துக் கொள்ளும் இடம் முக்கியமானது.
சித்தார்த்தா தமிழில் மொழியாக்கம் செய்யப்பட்டு மாதநாவலாகக் கூட வெளியாகியிருக்கிறது. இந்தியில் திரைப்படமாக எடுக்கபட்டிருக்கிறது. ஆயினும் அந்த நாவலை விடவும் நார்சிசஸ் மற்றும் கோல்ட்மண்ட் மிகச் சிறந்தது என்பேன். கலை மற்றும் துறவு வாழ்வு குறித்துத் தீவிரமான கேள்விகளை நாவல் முன்வைக்கிறது.

1930ல் வெளியான நாவலிது. ஹெஸ்ஸேயின் மூன்றாவது நாவல்.
வாழ்வின் உண்மையான அர்த்தம் எதுவென்ற கேள்விக்கு இந்த நாவலில் இரண்டு கதாபாத்திரங்களை முன்னுதாரணமாக காட்டுகிறார். சீனாவின் யின் மற்றும் யாங் போல சமமான இருபகுதிகள். பிரிக்க முடியாதவை.

நார்சிசஸ் கிரேக்க தொன்மத்தில் வரும் கதாபாத்திரம். தொன்மத்தின் படி அவன் சுயமோகம் கொண்டவன். ஆனால் நாவலில் இந்த அடையாளத்திலிருந்து முற்றிலும் மாறுபட்டவன். சிந்தனையாளன். தீவிர எண்ணங்களால் வழிநடத்தப்படுகிறவன். ஆன்மீக வழிகாட்டி போல நடந்து கொள்கிறான்.
கோல்ட்மண்டிற்கு உணர்ச்சிகளே முக்கியம். அவன் எதையும் தீவிரமாக, முழுமையான ஈடுபாட்டுடன் செய்கிறான். இன்பத்தைத் தேடி செல்வது போலவே துன்பத்தையும் தேடி ஏற்கிறான். முடிவில்லாத காதலே அவனது வாழ்க்கைப் பாதை..
நார்சிசஸ் இளமையைத் தனது அகத்திலிருந்து வெளிப்படும் வெளிச்சமாகக் கருதி மற்றவர்களுக்கு வழிகாட்டுகிறான். காதலோ, காமமோ. குடியோ கொண்டாட்டங்களோ எதுவும் அவனிடம் இல்லை. இவற்றைத் தீமையாக நினைக்கவில்லை. வெறுத்து ஒதுக்கவில்லை. அந்த இன்பங்கள் தனக்கானதில்லை என்று நம்புகிறான். விலகிச் செல்கிறான்.
ஒருவகையில் அவன் வயதில் மட்டுமே இளமையானவன். மனதளவில் முதிர்ச்சியானவன். ஞானியைப் போலவே நடந்து கொள்கிறான்.
கோல்ட்மண்ட் கலையின் வழியே உன்னதங்களை உருவாக்க முடியும் என்று நம்புகிறான். சிற்பியிடம் கலை பயிலும் போது அதை முழுமையாக வெளிப்படுத்துகிறான்.
நார்சிசஸ் பிறர் துன்பத்திற்காக வருந்தக்கூடியன். துறவு என்பதைச் சுயநலமற்ற பொறுப்புணர்வு என்று நம்புகிறவன். நண்பனின் மீட்சிக்காக எதையும் செய்ய முற்படுகிறான்.
வெளித்தோற்றத்தில் எதிரெதிர் துருவமாகத் தெரியும் இவர்கள் வாழ்நாள் முழுவதும் நண்பர்களாக இருக்கிறார்கள். இரண்டு சமநிலையற்ற இயல்புகள் ஒன்று சேர்ந்திருப்பதன் அடையாளம் போலவே அவர்கள் சித்தரிக்கபட்டிருக்கிறார்கள்
நாவலின் துவக்கத்தில் கோல்ட்மண்ட்டை அவனது தந்தை வட ஜெர்மனியிலுள்ள மடாலயத்தில் கல்வி கற்க விட்டுச் செல்கிறார்.
கத்தோலிக மடாலயத்திற்குச் சொந்தமான மரியாப்ரான் உறைவிடப்பள்ளியது.
இந்தப் பள்ளியில் ஹெர்மன் ஹெஸ்ஸே படித்திருக்கிறார். ஆகவே பள்ளி வளாகத்தைத் துல்லியமாக விவரித்துள்ளார்.

முதல் ஐம்பது பக்கங்கள் மரியப்ரான்னில் அவர்கள் இருவரும் எப்படிச் சந்தித்துக் கொள்கிறார்கள். நட்பாகப் பழகுகிறார்கள் என்பது விவரிக்கபடுகிறது. அதில் கோல்ட்மண்ட் தனது குதிரையைச் சந்தித்து விடைபெறுவது சிறப்பான பகுதி
மடாலயத்தின் கட்டுப்பாடுகள் அவனுக்குப் பிடிக்கவில்லை. விதிகளை மீறி நடந்து கொள்கிறான், மடாலயத்திலுள்ள பெரிய பையன்கள் இரவில் வளாகத்தை விட்டு வெளியே அருகிலுள்ள கிராமத்திற்குச் செல்கிறார்கள். , அங்கு அவர்கள் மது அருந்திவிட்டு ஒரு விவசாயியின் அழகான மகளுடன் அரட்டையடிக்கிறார்கள். இதைப் பற்றிக் கண்டிக்கும் நார்சிசஸிடம் மதகுரு போலப் பேசாதே என்று கோவித்துக் கொள்கிறான். அவர்களின் உரையாடலின் போது கோல்ட்மண்டின் இதயத்திற்குள் ஒரு ஏவாள் ஒளிந்திருக்கிறாள் என்பதை நார்சிசஸ் கண்டு கொள்கிறான்.
கோல்ட்மண்ட் ஜிப்ஸி லிசா மீது காதல் கொள்கிறான். அவள் பின்னாடி நாடோடியாக அலைகிறான். . செல்லும் இடங்களில் எல்லாம் கோல்ட்மண்ட் பெண்களால் விரும்பப்படுகிறான் அவனைக் காதலிப்பதில் பெண்களுக்குள் போட்டி நடக்கிறது. காதலின் காரணமாகவே தண்டிக்கபடுகிறான்.
பிளேக்கின் போது மரணத்தை அருகில் சந்திக்கிறான். பிரசவ வலியால் துடிக்கும் பெண்ணைக் காணுகிறான். கோல்ட்மண்ட் உருமாறிக் கொண்டேயிருக்கிறான். வாழ்க்கை எங்கும் எதிலும் நின்றுவிட அனுமதிக்கவில்லை. சந்தோஷத்தை அதிகமாக அனுபவிக்கும் அவன் மறுநிமிஷமே வேதனைக்குள் தள்ளப்படவும் செய்கிறான். அவமானங்களை அவன் பெரிதாக நினைக்கவில்லை. முடிவில் போக்கிடமின்றி துரத்தப்பட்டு வீழ்ச்சி அடைகிறான்.
சிற்பக்கலை பயிலும் போது தான் காதலித்த பெண்களின் ஒட்டுமொத்த நினைவையும் ஒன்றாக்கிச் சிற்பம் செய்ய முயலுகிறான் கோல்ட்மண்ட். அது விசித்திரமான அனுபவத்தை ஏற்படுத்துகிறது.
சிற்பி வீட்டிலும் அவனது காதலே முக்கியப் பிரச்சனையாகத் தலை தூக்குகிறது. கடைசி வரை சுதந்திர மனிதனாக நடந்து கொள்கிறான். முடிவில்லாத கோல்ட்மண்ட்டின் காதலை ஆன்மாவிற்கும் உடலிற்கும் இடையே நடக்கும் போராட்டமாக ஹெஸ்ஸே சித்தரிக்கிறார்.
அவர்களின் விசித்திரமான நட்பு குறித்து நாவலின் ஒரிடத்தில் உரையாடுகிறார்கள். அதில் நிலமும் கடலும் போல என்றொரு உவமை வருகிறது. அது உண்மையே. நார்சிசஸ் நிலம் போல அமைதியாக இருக்கிறான். கோல்ட்மண்ட் கடல் போலக் கொந்தளிக்கிறான்.
” We are sun and moon, dear friend; we are sea and land. It is not our purpose to become each other; it is to recognize each other, to learn to see the other and honor him for what he is: each the other’s opposite and complement.”
பிறந்தவுடன் தாயை இழந்துவிடுகிறான் கோல்ட்மண்ட். நாவல் முழுவதும் அவன் தாயைத் தேடுகிறான். அவன் காதலிக்கும் பெண்களுக்குள் தாயின் அன்பிருப்பதாக உணருகிறான். நாவலின் முடிவில் தாயின் வடிவமாக நார்சிசஸ் இருப்பதை அறிந்து கொண்டு அவனிடமே அடைக்கலமாகிறான்.
‘நான் இறப்பதற்கு ஆர்வமாக இருக்கிறேன், காரணம் நான் என் அம்மாவிடம் திரும்பிச் செல்கிறேன் என்பது எனது நம்பிக்கை அல்லது என் கனவு, மரணம் எனக்கு பெரிய மகிழ்ச்சியை அளிக்கும் என நம்புகிறேன் – என் முதல் பெண் அளித்த மகிழ்ச்சியைப் போல என்கிறான் கோல்ட்மண்ட்
ஹெஸ்ஸேயிடம் வெளிப்படும் கவித்துவமான உரையாடல்கள் நாவலுக்குத் தனி அழகைத் தருகின்றன.
நாவலில் உயர்வான லட்சிய வாழ்வினை வாழும் நார்சிசஸை விடவும் அலைந்து திரிந்து தன்னை அழிந்து கொண்ட கலைஞனாக வாழும் கோல்ட்மண்ட்டே அதிகம் கவருகிறான் .
இந்த இருவரில் நாம் யாராக இருக்கிறோம் என்ற கேள்வியை நமக்குள் நாவல் எழுப்புகிறது. சிலருக்கு நாம் நார்சிசஸாக இருக்கிறோம். சிலரிடம் நாம் கோல்ட்மண்ட்டாக நடந்து கொள்கிறோம். உண்மையில் இந்த இருவரும் நமக்குள்ளே இருக்கிறார்கள். வெளிப்படும் இடமும் தருணமும் தான் மாறிக் கொண்டேயிருக்கிறது.
October 23, 2023
ரஷ்ய இலக்கியக் கட்டுரைகள்
ரஷ்ய இலக்கியம் குறித்து நான் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு மாஸ்கோவின் மணியோசை.
புஷ்கின் துவங்கி இன்று முக்கியக் கவியாக விளங்கும் வேரா பாவ்லோவா வரை இதில் இடம்பெற்றுள்ளார்கள்.
இந்நூல் டிசம்பர் 25 மாலை சென்னையில் வெளியிடப்படுகிறது.
 
  October 21, 2023
நிமித்தம் / ஆங்கிலத்தில்
எனது நாவல் நிமித்தம் ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளது. டாக்டர் சந்திரமௌலி இதனை மொழிபெயர்ப்பு செய்துள்ளார். விரைவில் இந்த நாவல் வெளியாகும்.
 
  விகடன் தீபாவளி மலரில்
ஆனந்த விகடன் தீபாவளி மலரில் சிறுகதை எழுதியிருக்கிறேன்
 
  October 20, 2023
லூயிஸ் வான் பீத்தோவன்
Louis van Beethoven ஜெர்மன் தொலைக்காட்சிக்காக 2020ல் உருவாக்கப்பட்ட திரைப்படம். பீத்தோவனின் 250வது பிறந்தநாளைக் கொண்டாடும் விதமாக உருவாக்கப்பட்டிருக்கிறது. நிக்கி ஸ்டெயின் இதனை இயக்கியுள்ளார்

லுட்விக் பீத்தோவனின் இறுதி ஆண்டுகளில் துவங்கி அவரது பால்யகாலத்திற்குள் இடைவெட்டி முன்பின்னாகக் கதை நகர்கிறது . குழந்தைப் பருவம். இளமைக்காலம், முதுமை என்று மூன்று வேறுபட்ட காலங்களில் பீத்தோவனைக் காணுகிறோம்.
படம் பீத்தோவனின் பயணத்தில் துவங்குகிறது. தனது இளைய சகோதரன் வீட்டிற்குக் கோச் வண்டியில் பயணம் செய்கிறார் .வீட்டில் அவருக்குக் கிடைக்கும் அழையா விருந்தாளி போன்ற வரவேற்பு, அவரது உதவியாளரின் நடத்தை. அவரது வருவாய். உணவை மறந்து இசையில் ஈடுபடும் அவரது தீவிரம் எனக் கொஞ்சம் கொஞ்சமாகப் பீத்தோவனின் வாழ்வினுள் பிரவேசிக்கிறோம். படம் அவரது கடந்தகாலத்தை நோக்கி நகர்கிறது.

ஐந்து வயதிலே இசைமேதையாக மொசார்ட் உருவானதால் அவரைப் போலவே பீத்தோவனையும் உருவாக்க வேண்டும் என்று அவரது தந்தை முயலுகிறார்.
இதற்காகப் பீத்தோவனின் உண்மையான வயதை மாற்றிச் சொல்கிறார். வீட்டில் இடைவிடாமல் இசைப்பயிற்சி மேற்கொள்ள வைக்கிறார். தந்தையின் கோபம் மற்றும் மிதமிஞ்சிய கண்டிப்பு பீத்தோவனைப் பாதிக்கிறது. பகலிரவாக இசைப் பயிற்சியினை மேற்கொள்கிறார். வாசிக்கக் கடினமான இசைக்குறிப்புகளைக் கூட எளிதாக வாசிக்கிறார். தானே சொந்தமாக இசைக்குறிப்புகளை எழுதுகிறார்.
தந்தையின் கட்டளைக்குப் பதில் தரும்விதம் விதமாகப் பீத்தோவன் ப்யானோ வாசித்துக் காட்டும் காட்சி சிறப்பானது.
காது கேளாத பீத்தோவன் எல்லாவற்றையும் சிறிய கையேட்டில் எழுதிக் காட்டுகிறார். அவர் உருவாக்க விரும்பும் ஒன்பதாவது சிம்பொனியை உடனிருக்கும் இசைக்கலைஞர்கள் கூடப் புரிந்து கொள்வதில்லை.
பீத்தோவன் திருமணம் செய்து கொள்ளவில்லை. அவரது சகோதரர் ஜோஹன் குடும்பத்துடனே வாழ்ந்து வந்தார். சகோதரனின் மகனுக்கு இசை கற்றுக் கொடுத்தார். அவனுக்கு இசையின் மீது விருப்பமேயில்லை. ராணுவத்தில் சேர ஆசைக் கொண்டிருந்தான். ஆகவே பிடிக்காத இசையைத் தொடர விரும்பாமல் தற்கொலை செய்து கொள்ள முயலுகிறான். இது பீத்தோவனைக் குற்றவுணர்வு கொள்ள வைக்கிறது.

இசைக்கலைஞர் ஹைடனிடம் இசை கற்பதற்காக நவம்பர் 1792 வியன்னா நகருக்குச் சென்றார். அங்கே உயர்குடியைச் சேர்ந்த எலியோனார் வான் ப்ரூனிங் என்ற இளம்பெண்ணைக் கண்டார். அவள் பீத்தோவனின் இசைதிறமையைக் கண்டு காதலுற்றாள்.. இந்தக் காதலை எலியோனாரின் குடும்பம் ஏற்கவில்லை. ஆகவே அவரது காதல் தோல்வியில் முடிவடைந்தது. எலியோனார் 1802 இல் ஃபிரான்ஸ் வெகெலரை மணந்தாள். ஆயினும் அவர்களுக்குள் கடித தொடர்பு இருந்தது
பிரெஞ்சுப் புரட்சி பீத்தோவனின் இதயத்தில் புதிய எழுச்சியை ஏற்படுத்தியது. புதுயுகத்தை வாழ்த்தி அவர் இசை அமைத்தார்
பீத்தோவன் 1787 இல் வியன்னாவில் மொஸார்ட்டை சந்தித்தார். படத்தின் முக்கியக் காட்சிகளில் ஒன்றாக இந்தச் சந்திப்பு இடம்பெறுகிறது.
பீத்தோவன் போன்ற இசை மேதையை அவரது குடும்பம் புரிந்து கொள்ளவில்லை. உறவுகளால் அலைக்கழிக்கப்படுகிறார். பீத்தோவன் பற்றி Immortal Beloved: என்றொரு படம் வந்திருக்கிறது. அதிலும் அவரது காதலே முதன்மையாகச் சித்தரிக்கப்பட்டது.
உலகையே தனது இசையால் மகிழ்ச்சிப்படுத்திய மேதை சொந்த வாழ்வில் துயரமும் வேதனையும் சூழவே வாழ்ந்திருக்கிறார். படத்தில் அவரது தனிமை முழுமையாக வெளிப்படுகிறது.
பீத்தோவனின் இசையைப் போலவே இப்படமும் நம்மைப் புத்துணர்வு கொள்ள வைக்கிறது.
லியர் சென்ற பாதை
லியோ டால்ஸ்டாய் தனது 82வது வயதில் வீட்டை விட்டு வெளியேறிப் போன நிகழ்வை பாவெல் பெசின்ஸ்கி விரிவாக ஆராய்ந்து தனது Flight from Paradise நூலில் எழுதியிருக்கிறார்.

அதில் டால்ஸ்டாய் வீட்டை விட்டு வெளியேறிய செய்தி நாளிதழ்களில் எவ்வாறு வெளியிடப்பட்டது என்பதைப் பற்றிக் குறிப்பிட்டிருக்கிறார்.
கிழட்டுச் சிங்கம் தன் குகையை விட்டு வெளியேறிச் சென்றது,
தப்பிப்பறந்தார் டால்ஸ்டாய்
டால்ஸ்டாய் எங்கே ஒளிந்திருக்கிறார்
என செய்தி வெளியிட்டிருக்கிறார்கள்.
ஒடேசா என்ற நாளிதழ் “டால்ஸ்டாயைத் தேடாதீர்கள். அவர் குடும்பத்திற்கு மட்டும் உரியவரில்லை. நம் அனைவருக்கும் சொந்தமானவர் என்று செய்தி வெளியிட்டது. அத்தோடு அவரது புதிய வசிப்பிடம் நிச்சயமாக வெளிப்படுத்தப்படும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தியது.
இன்னொரு பத்திரிக்கை. “வயதான சிங்கம் தனிமையில் இறக்கப் போய்விட்டது” என்று செய்தி வெளியிட்டிருக்கிறது.

இவான் புனின் எழுதிய தி லிபரேஷன் ஆஃப் டால்ஸ்டாய் என்ற புத்தகத்தில், அவர் தனது மனைவிக்கு எழுதிய கடைசிக் கடிதம் இடம்பெற்றுள்ளது. அதில் என் வயதிலுள்ள முதியவர்கள் வழக்கமாகச் செய்வதைத் தான் நானும் செய்கிறேன் என்று டால்ஸ்டாய் எழுதியிருக்கிறார்.
எளிய விவசாயிகள் இப்படிக் கோவித்துக் கொண்டு வீட்டைவிட்டுச் செல்வார்கள். ஆனால் டால்ஸ்டாய் போன்ற பண்ணை முதலாளி இப்படி நடந்து கொள்வாரா என்று மக்கள் ஆச்சரியப்பட்டார்கள். அவர் ஒருவேளை புனித யாத்திரை சென்றிருக்கக் கூடும் என்றும் நினைத்தார்கள்.
டால்ஸ்டாய் வீட்டை விட்டு வெளியேறப் போவது அவரது மகள் சாஷாவிற்குத் தெரியும். அவளிடமே தனது கடைசிக் கடிதத்தை ஒப்படைத்திருக்கிறார். சில நாட்களுக்குப் பின்பு அவர் இருக்குமிடத்திற்குச் சாஷா வருவாள் என்பதே ஏற்பாடு.

உறங்கிக் கொண்டிருந்த மனைவி எழுந்துவிடாமல் டால்ஸ்டாய் வெளியேறியிருக்கிறார். அவரது படுக்கையறைக்கும் அவளது அறைக்கும் இடையே மூன்று கதவுகள் இருந்தன , இரவு நேரங்களில் சோபியா அவற்றைத் திறந்து வைப்பது வழக்கம், அவருக்கு ஏதாவது உதவி தேவைப்பட்டால். சோபியா எழுந்து வருவார். ஆனால் அன்று அந்தக் கதவுகள் மூடப்பட்டிருந்தன. நிழல் போலச் சப்தமின்றி அறையை விட்டு வெளியேறி நடந்தார் டால்ஸ்டாய்
டால்ஸ்டாய் வீட்டை விட்டு வெளியேறிய செய்தியை ரஷ்யா முழுவதும் மக்கள் பரபரப்பாக வாசித்தார்கள். அவர் எங்கே சென்றிருப்பார் என்ற யூகத்தைப் பத்திரிக்கைகளே வெளியிட்டிருக்கிறார்கள்.
அத்தோடு டால்ஸ்டாய் பண்ணைக்குப் பத்திரிக்கையாளர்கள் திரண்டு வந்து பல்வேறு கோணங்களில் கேள்விகளை எழுப்பியிருக்கிறார்கள். பலரையும் நேர்காணல் செய்திருக்கிறார்கள்
டால்ஸ்டாயோடு துணையாக அவரது மருத்துவர் மாகோவிட்ஸ்கியும் சென்றிருந்தார். தாங்கள் டால்ஸ்டாயின் மருமகனுக்குச் சொந்தமான பண்ணைக்குப் போவதாகவே அவர் நினைத்துக் கொண்டிருந்தார். காரணம் இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை டால்ஸ்டாய் அங்கே சென்று வருவது வழக்கம்.
அதிகாலை நேரம் குதிரைவண்டியில் டால்ஸ்டாய் செல்வதைத் தபால்காரர் ஃபில்கா பார்த்திருக்கிறார். அவரது பேட்டியும் நாளிதழில் வெளியாகியிருக்கிறது.
நோயுற்ற நிலையில் டால்ஸ்டாய் அஸ்தபோவ் ரயில் நிலையத்திலிருக்கிறார் என்ற செய்தியை சோபியாவிற்குத் தந்தி மூலம் தெரிவித்தவர் பத்திரிகையாளர் கான்ஸ்டான்டின் ஓர்லோவ். அவசரமாக துலாவிலிருந்து அஸ்தபோவ் செல்வதற்காகத் தனி ரயில் ஒன்றை சோபியா ஏற்பாடு செய்தார். அதற்குச் செலவிடப்பட்ட பணம். 492 ரூபிள் மற்றும் 27 கோபெக்குகள்
கிங் லியர் நாடகத்தில் கைவிடப்பட்ட லியர் கடைசியில் போக்கிடம் தெரியாமல் நடந்து செல்வான். லியர் சென்ற அதே பாதையில் தான் டால்ஸ்டாயும் சென்றிருக்கிறார்.
டால்ஸ்டாயின் மறைவிற்குப் பிறகு அவரது ஆறு பிள்ளைகள் வீட்டில் ஒன்று கூடினார்கள். (செர்ஜி, தாத்தியானா, இலியா, ஆண்ட்ரி, மிகைல் மற்றும் சாஷா), பண்ணையின் எதிர்காலம் மற்றும் அம்மாவின் நிலை பற்றி விவாதித்தார்கள். அம்மா துயரம் தாங்க முடியாமல் தற்கொலை செய்து கொள்ளக்கூடும் என்று பயந்தார்கள். ஆகவே அம்மாவிற்கு ஆறுதல் சொல்லி அவளது கண்ணீரைத் துடைத்தார்கள். டால்ஸ்டாய் தனது மகள்களிடம் காட்டிய நெருக்கத்தை மகன்களிடம் காட்டவில்லை. ஆகவே மகன்கள் அம்மாவின் பக்கமே நின்றார்கள்.
டால்ஸ்டாய் மூன்றுமுறை உயில் எழுதியிருக்கிறார். தனது எண்பதாவது பிறந்தநாளுக்குச் சில வாரங்களுக்கு முன்பு மூன்றாவது உயிலை எழுதியிருக்கிறார். அதில் தனது இறப்பிற்குப் பின்பு உடலுக்கு எந்தச் சடங்குகளும் செய்யக்கூடாது. எளிய சமாதி அமைத்தால் போதும் என்று குறிப்பிட்டிருக்கிறார். தனது சமாதிக்கான இடத்தையும் அவரே தேர்வு செய்திருக்கிறார். அந்த உயிலே அவரது மரணத்திற்குப் பிறகு நடைமுறைப்படுத்தபட்டது,
October 19, 2023
மறதியின் பாடல்
அமெரிக்காவின் தேசியக் கவியாக கொண்டாடப்படும் பில்லி காலின்ஸ் பல்வேறு இதழ்களுக்கு அளித்த நேர்காணல்கள் தொகுக்கபட்டு தனிநூலாக வெளியிடப்பட்டுள்ளது. மிகச்சிறந்த நேர்காணல்களின் தொகுப்பு. கவிதை எழுதுவது குறித்தும் கவிஞனின் அகம் குறித்தும் சிறப்பாக தனது பார்வைகளை முன்வைக்கிறார் பில்லி காலின்ஸ்.
‘பிக் டேட்டா காலத்தில் கவிதைகளின் தேவை அல்லது கவிதை எழுதுவது எப்படியிருக்கிறது என ஒரு கேள்வியை முன்வைக்கிறார்கள். அதற்கு அவர் கவிதை என்பது ஸ்மால் டேட்டா என்று பதில் சொல்கிறார். உண்மை தான்.
பில்லி காலின்ஸ் சொன்னதைப் பற்றியே நினைத்துக் கொண்டிருந்தேன்
உலகம் கண்டுகொள்ளாத, அல்லது அறியாத சிறிய தகவலை கவிதை கவனப்படுத்துகிறது. இந்தத் தகவல் கவிதையின் வழியே வெளிப்படும் போது வசீகரமாக, விநோத அழகுடன் வெளிப்படுகிறது. லென்ஸ் வழியாக எறும்பைப் பார்க்கும் போது அதன் கால்கள் வியப்பளிக்கிறதே. அது போல எளிய , அன்றாட நிகழ்வுகளை கவிதை தனக்கே உரித்தான ஒரு லென்ஸ் வழியாக பார்க்கிறது. பகிர்ந்து தருகிகறது. ஒரு இலை உதிர்வது உலகிற்கு ஒன்றுமேயில்லை. ஆனால் கவிதைக்கு அது முக்கியமான நிகழ்வு. கவிதை பைனாக்குலர் போல தொலைவை அருகிலும், மாற்றி பிடித்து பைனாக்குலரைப் பார்க்கும் போது அருகிலிருப்பது தொலைவிற்கும் செல்வது போன்ற மாயத்தை ஏற்படுத்துகிறது.
தேவதச்சனின் கவிதைகளில் தொலைவும் அண்மையும் முக்கியமான பாடுபொருட்கள். தொலைவை அவர் வெளியாக மட்டும் பார்ப்பதில்லை.
பில்லி காலின்ஸ் மறதியைப் பற்றி ஒரு கவிதையை எழுதியிருக்கிறார். அதில் படித்த புத்தகம், படிக்காத புத்தமாக மாறும் மறதியின் விநோத உணர்வைப் பற்றி எழுதியிருக்கிறார். சிறந்த கவிதையது. இவரது கவிதைகளின் தொகுப்பு தமிழில் அவசியம் வெளிவர வேண்டும்
மேரி ஆலிவர், பில்லி காலின்ஸ் இருவரும் மிகச்சிறந்த அமெரிக்க கவிகள். தமிழில் இவர்களின் கவிதைகள் குறைவாகவே மொழியாக்கம் செய்யப்பட்டிருக்கின்றன.
unlike some poets I’m not pouring out my misery. I’m really involved in some playful game with language – it’s a serious game in some ways, but it’s a game என்று நேர்காணலில் குறிப்பிடுகிறார். மனநிறைவைப் பற்றி கவிதை எழுதுவதை மக்கள் ஏற்றுக் கொள்வதில்லை. நிராசைகளும் குறையுமே கவிதையில் பெரிதும் பேசப்படுகின்றன. ஆகவே மகிழ்ச்சியை விடவும் துயரமே கவிதையில் அதிகம் வெளிப்படுகிறது என்கிறார் பில்லி காலின்ஸ்
கவிதை குறித்த கட்டுரை ஒன்றில் வேர்ட்ஸ்வொர்த் கவிதையின் அடிப்படை அம்சங்களில் ஒன்றாக மகிழ்ச்சியை குறிப்பிடுகிறார். அதுவும் கவிதை வாசிக்கும் இன்பத்தை அளிக்க வேண்டும் என்கிறார். அதை பில்லி காலின்ஸ் தனது நிலைப்பாடாகவும் வலியுறுத்துகிறார். அது போலவே ரொமான்டிசிசக் கவிஞர்கள் நகைச்சுவை மற்றும் காமத்தை விலக்கிவிட்டு அந்த இடத்தில் நிலவெளியை வைத்துவிட்டார்கள் என்று சொல்லும் அவரது அவதானிப்பு முக்கியமானது.
பில்லி காலின்ஸின் நேர்காணல் தொகுப்பு கவிஞர்கள் அவசியம் வாசிக்க வேண்டியது. அன்றாட வாழ்க்கையை அவர் மாயமாக்கும் வித்தையைக் கற்றுத் தருகிறார். கவிஞனின் உலகம் எத்தகையது என்பதை அடையாளம் காட்டுகிறார்
 
  October 18, 2023
அமைதியற்ற நிழல்
Land and Shade படம் பார்த்து முடியும் போது நம் உடல் முழுவதும் எரிக்கப்பட்ட கரும்பு வயலின் தூசியும் சாம்பலும் ஒட்டிக் கொண்டிருப்பதைப் போல உணருகிறோம். அவ்வளவு நெருக்கமான உணர்வைப் படம் ஏற்படுத்துகிறது. கொலம்பியாவைச் சேர்ந்த இப்படத்தைச் சீசர் அகஸ்டோ அசெவெடோ இயக்கியிருக்கிறார். 2015ல் வெளியானது. சிறந்த ஒளிப்பதிவிற்கான கேன்ஸ் விருதைப் பெற்றுள்ளது,

படத்தின் முதல் காட்சியில் அல்போன்சா கரும்புத் தோட்டத்தின் நடுவே நடந்து வருகிறார். பெரிய டிரக் ஒன்று மண் சாலையில் வேகமாக அவரைக் கடந்து போகிறது. ஒதுங்கி வழிவிடுகிறார். அந்த வாகனத்தால் எழும் தூசி மேகம் போல எழுந்து அவரது உடல் முழுவதும் படிகிறது. படம் முழுவதும் கரும்புத்தூசி குறியீடு போலவே சித்தரிக்கப்படுகிறது.
Land and Shade கொலம்பிய கரும்புத் தோட்ட வாழ்க்கையைச் சிறப்பாகச் சித்தரித்துள்ளது. குறிப்பாகத் தாத்தாவிற்கும் பேரனுக்குமான உறவை மிக அழகாக வெளிப்படுத்துகிறது. பேரனின் ஆசையை நிறைவேற்ற தாத்தா மேற்கொள்ளும் முயற்சிகள் சிறப்பானவை.

ஐந்தே முக்கியக் கதாபாத்திரங்கள். அவர்களின் வாழ்விடமான கரும்புத் தோட்டம். ஒற்றை வீடு. அதன் முன்னுள்ள பெரிய மரம். சிமெண்ட் பெஞ்ச். வீட்டின் மூடிய ஜன்னல்கள். தூசி படிந்த இலைகள் கொண்ட செடிகள். அல்போன்சோ ஒரு மீட்பனைப் போலவே வருகை தருகிறார்.
குடும்பம் தன்னை ஏற்றுக் கொள்ளாது என அறிந்தும் மகனது நிலையைக் கணக்கில் கொண்டு பதினேழு வருடங்கள் கழித்து வீடு திரும்புகிறார், அவருடைய மகன் ஜெரார்டோ சுவாசக் கோளாறு காரணமாகப் படுக்கையில் கிடக்கிறான். ஜெரார்டோவின் மனைவி எஸ்பெரான்சா கரும்புத் தோட்டக் கூலியாக வேலை செய்கிறாள்.
அல்போன்சோவின் மனைவி அலிசியா அவருடன் பேசுவதில்லை.வீட்டை விட்டு ஓடிய மனிதர் என அவரை வெறுத்து ஒதுக்குகிறாள். பேரனுடன் நெருக்கமாகும் அல்போன்சோ அவனைக் கவனித்துக் கொண்டு வீட்டில் இருக்கிறார். தன்னால் முடிந்த சிறிய உதவிகளைச் செய்கிறார்.
கரும்பு வயலுக்கு நடுவில் உள்ள அவரது வீடும். அதன் முன்புள்ள மரமும் மண்சாலையும் கனவில் காணும் சித்திரம் போல விநோத தோற்றம் தருகின்றன.

கரும்பு வயல் எரிக்கப்படுவதால் ஏற்படும் ஆபத்தான சாம்பல் நுரையீரலை நிரப்புவதைத் தடுக்க, படுக்கையறையின் ஜன்னல்கள் எப்போதும் மூடி வைக்கப்பட்டிருக்கின்றன. அவன் நோயிலிருந்து மீள முடியாத சிரமத்தில் தவிக்கிறான். வீடு திரும்பிய அல்போன்சா ஜன்னலைத் திறக்கிறார். அவரால் அந்தக் குடும்பத்தில் மாற்றம் உருவாகப்போகிறது என்பதன் அடையாளம் போலிருக்கிறது.
அன்றாடம் கரும்புத் தோட்ட வேலைக்காக ஆட்கள் வாகனத்தில் அழைத்துச் செல்லப்படுகிறார்கள். அவர்களின் விநோதமான தோற்றம். கரும்பினை வேக வேகமாக அறுத்துத் தள்ளும் விதம், ஏமாற்றும் முதலாளி என அந்த வாழ்க்கை கண்முன்னே விரிகிறது.
கரும்புத் தோட்ட பணியாளர்களுக்கு முறையாகக் கூலி தரப்படுவதில்லை. அவர்கள் போராட்டம் செய்கிறார்கள். போராட்டத்தில் கலந்து கொண்டால் முதலாளி தனக்குரிய சம்பளத்தைத் தராமல் போய்விடுவாரோ என எஸ்பெரான்சா பயப்படுகிறாள். கணவனின் உடல்நிலை குறித்த கவலை அவள் முகத்தில் படிந்திருக்கிறது.

கரும்புத் தோட்டம் எரிக்கப்படுவது போலவே அவர்கள் வாழ்வும் கண்முன்னே அழிந்து கொண்டு வருகிறது. தாயிற்கும் மகனுக்குமான அன்பு ஒரு தளத்திலும் பேரனுக்கும் தாத்தாவிற்குமான உறவு வேறுதளத்திலும் ஒன்று போல இணைவு கொள்கின்றன.
அபாரமான ஒளிப்பதிவு படத்தின் தனிச்சிறப்பு. மிகக் குறைவான கேமரா அசைவுகளுடன் காட்சிகள் எடுக்கப்பட்டுள்ளன. அல்போன்சோ தனது பேரனுக்குப் பட்டம் பறக்கக் கற்றுக்கொடுக்கும் ஷாட் மிகவும் அழகானது.

அல்போன்சோவை அவரது மனைவி ஏற்றுக் கொள்ளும் இறுதிக்காட்சி உணர்ச்சிப்பூர்வமானது. படத்தின் சில காட்சிகள் டெரன்ஸ் மாலிக்கின் “டேஸ் ஆஃப் ஹெவன்” யை நினைவுபடுத்துகின்றன.
இந்திய இலக்கியத்தின் முகம்
இந்திய இலக்கியத்தின் சிறந்த படைப்புகளை இரண்டு தொகுதிகளாகத் தொகுத்துள்ளார் கே.எம்.ஜார்ஜ். இதனைச் சாகித்ய அகாதமி வெளியிட்டுள்ளது.

முதல் தொகுதி கவிதைகளும் இலக்கிய வரலாறும் கொண்டது. இரண்டாவது தொகுதி புனைகதைகள். இரண்டும் சேர்ந்து 2400 பக்கங்கள். 1993ல் இந்தத் தொகுதிகள் வெளியாகியுள்ளன. அதன் மறுபதிப்பை 2013ல் வெளியிட்டிருக்கிறார்கள். இரண்டு தொகுதிகளும் சேர்ந்து ஆயிரம் ரூபாய் விலைக்கு இணையத்தில் வாங்கினேன்.

புனைகதைகள் தொகுப்பில் 22 மொழிகளிலிருந்து 178 எழுத்தாளர்களின் 115 சிறுகதைகள், 68 நாவல்களின் சிறிய பகுதிகள் இடம் பெற்றுள்ளன. 1860 முதல் முதல் 1970 வரையிலான படைப்புகளைத் தேர்வு செய்திருக்கிறார்கள். இதிலுள்ள சிறுகதைகளை மட்டும் ஒருவர் படித்தால் போதும் இந்திய இலக்கியத்தின் பன்முகத்தன்மையை அறிந்து கொண்டுவிடலாம்.
மிகவும் முன்னோடியான தொகை நூலாக இதனைக் கருதுகிறேன். கதைகளைத் தேர்வு செய்துள்ள விதம், தேர்ந்த மொழியாக்கம், படைப்புகள் காலவரிசைப்படி இடம்பெறுதல், எழுத்தாளர் பற்றிய குறிப்பு என அற்புதமாக உருவாக்கியிருக்கிறார்கள்.
ஒவ்வொரு பத்தாண்டிலும் இலக்கியத்தின் போக்கு மாறியிருப்பதைக் காண முடிகிறது. குறிப்பாக நவீன இலக்கியத்தின் வருகையும் அதன் வழியே கதை சொல்லும் முறையில் ஏற்பட்ட மாற்றங்களையும் தெளிவாக அறியமுடிகிறது.
இந்தத் தொகுப்பின் தமிழ் புனைவுகள் பகுதியில் புதுமைப்பித்தன். குபரா, ரகுநாதன். கல்கி, க.நா.சு, கு.அழகிரிசாமி, ஜெயகாந்தன், சுந்தர ராமசாமி, அசோகமித்ரன் சிறுகதைகள் இடம்பெற்றுள்ளன. நீல பத்மநாபன். ஷண்முகசுந்தரம் நாவலின் பகுதிகளும் இடம்பெற்றுள்ளன.
இன்று இந்தச் சிறுகதைகளிலிருந்து வளர்ந்து புதிய மொழியும் புதிய கதைகூறும் முறைகளும் உருவாகியுள்ளன. குறிப்பாகத் தமிழ் சிறுகதையின் முகம் பெரிய அளவில் மாற்றம் கண்டுள்ளது.
புதிய கருப்பொருட்கள். புதிய கூறல்முறைகள். பேசாப்பொருளைப் பேசுதல், புலம்பெயர்ந்த வாழ்க்கையை எழுதுதல். வடிவரீதியான பரிசோதனை முயற்சிகள், சர்வதேச அளவில் பல்வேறு வாழ்நிலங்களையும் அதன் மனிதர்களையும் எழுதுதல், எனத் தமிழ்ச் சிறுகதைகள் விரிந்த தளத்தில் இயங்குகின்றன.
கே.எம்.ஜார்ஜ் சென்னையில் வசித்தவர். மலையாளப் பேராசிரியராகப் பணியாற்றியவர். சிறந்த மொழிபெயர்ப்பாளர். கேரள சாகித்ய அகாதமி விருது உள்ளிட்ட பல்வேறு விருதுகளைப் பெற்றிருக்கிறார். இந்தத் தொகுப்பு அவரது சாதனைகளில் ஒன்றாகும்.
1980களிலிருந்து 2020 வரையான இந்தியப் புனைகதைகளில் சிறந்தவற்றை இது போன்ற தொகைநூலாக உருவாக்கினால் மிகுந்த பயனுள்ளதாக இருக்கும்.
October 16, 2023
நேற்றைய நிகழ்வு
இணைய வழியில் நடைபெற்ற எஸ்.ரா கதைகள் -நூறு நிறைவு நிகழ்ச்சியில் நேற்று மாலை கலந்து கொண்டேன்.

எனது உரைக்குப் பதிலாக கலந்துரையாடலை வைத்துக் கொள்வோம் என்று சொன்னேன். நிறைய வாசகர்கள் நல்ல கேள்விகளைக் கேட்டார்கள். இரண்டு மணி நேரம் உரையாடல் நீண்டது,
இன்னும் நிறைய கேள்விகள் மிச்சமிருந்தன. நேரமில்லாத காரணத்தால் அவர்களுக்குப் பதில் அளிக்க இயலவில்லை.
பேராசிரியர் வினோத் நிகழ்வைச் சிறப்பாக ஒருங்கிணைப்பு செய்தார். அவருக்கு எனது மனம் நிறைந்த நன்றி.
அய்யா ஆறுமுகசாமி நேற்றைய நிகழ்விலும் இன்று குறுஞ்செய்தியிலும் தனது அன்பைப் பகிர்ந்து கொண்டது மகிழ்ச்சி அளித்தது.
இந்த நிகழ்வைப் போல மாதம் ஒருமுறை விரிவான கலந்துரையாடல் நிகழ்வை இணையத்தில் நடத்தலாம் என்று நினைக்கிறேன். தேசாந்திரி பதிப்பகம் இதனை முன்னெடுக்கும். இதற்கான அறிவிப்பினை விரைவில் வெளியிடுவார்கள்.
•••
S. Ramakrishnan's Blog
- S. Ramakrishnan's profile
- 658 followers
 


