ஓடிய கால்கள்
அடிடாஸ். பூமா இரண்டும் புகழ்பெற்ற காலணி தயாரிப்பு நிறுவனங்கள். டாஸ்லர் சகோதரர்கள் எனப்படும் ஜெர்மனியைச் சேர்ந்த அடோல்ஃப் மற்றும் ருடால்ஃப் சகோதரர்கள் பிரிந்து இந்த நிறுவனங்களை உருவாக்கினார்கள்.

இவர்கள் எப்படி விளையாட்டு வீர்ர்களுக்கான சிறப்புக் காலணி தயாரிப்பில் ஈடுபடத் துவங்கினார்கள். எவ்வாறு புகழ்பெற்றார்கள். எதன் காரணமாக இவர்களுக்குள் பிரிவு ஏற்பட்டது. அந்தப் பிரிவிற்குப் பின்பு எப்படித் தனக்கெனத் தனி நிறுவனத்தை உருவாக்கினார்கள் என்பதை அழகான திரைப்படமாக உருவாக்கியிருக்கிறார்கள்.
That’s The Name Of The Game! – Adidas vs. Puma என்ற இந்தப் படத்தை இயக்கியிருப்பவர் ஆலிவர் டோமெங்கட்
ஜெர்மனியின் ஹெர்சோஜெனாராச்சிலுள்ள எளிய குடும்பத்தில் பிறந்தவர். ருடால்ஃப் , அவரது தம்பி அடோல்ஃப்.
காலணி தயாரிப்பில் பாரம்பரியாக ஈடுபட்டு வரும் குடும்பமது. ஆகவே விளையாட்டு வீர்ர்களுக்கான சிறப்புக் காலணியை உருவாக்க வேண்டும் என்று அடோல்ஃப் கனவு கண்டார..
இதற்கான புதிய மாடலைத் தானாக உருவாக்கினார். அவரிடம் பொருளாதார வசதியில்லை. எவரது உதவியும் கிடைக்கவில்லை. ஆகவே தானாக உருவாக்கிய இயந்திரங்களுடன் காலணி தயாரிப்பில் ஈடுபட்டு வந்தார். அவரைப் புரிந்து கொள்ளாமல் ஊர்மக்கள் ஏளனம் செய்தார்கள்.

தம்பியின் ஆர்வத்திற்கு உதவி செய்ய முன் வந்த ருடால்ஃப் தான் பார்த்துக் கொண்டிருந்த விற்பனை பிரதி வேலையை உதறிவிட்டு புதிய காலணி உற்பத்தி நிறுவனம் ஒன்றைத் துவங்குகிறார். இந்த நிறுவனத்தில் தயாரிப்பு பணிகளை அடோல்ஃப் கவனித்துக் கொள்ள வேண்டும். விற்பனை பகுதியை ருடால்ஃ பார்த்துக் கொள்வார் என முடிவு செய்து கொள்கிறார்கள்.
1919ல் அவர்களின் புதிய நிறுவனம் துவங்கப்படுகிறது. அவர்கள் உருவாக்கிய சிறப்புகாலணியை அணிந்து கொண்டு 1936 ஒலிம்பிக்கில் தடகள வீர்ர்கள் வெற்றி பெறுகிறார்கள். இதனால் நிறுவனம் புகழ்பெறத் துவங்குகிறது. இந் நிலையில் ருடால்ஃப் ஒரு பெண்ணைக் காதலிக்கிறான். அவளையே திருமணம் செய்து கொள்கிறான்.
ஜெர்மனியில் நாஜி எழுச்சி பெற்று வரும் காலமது. ஆகவே ராணுவ அதிகாரிகளின் உதவியைப் பெற்று ருடால்ஃப் தனது நிறுவனத்தைப் பெரியதாக வளர்த்தெடுக்கிறான். பணமும் புகழும் வந்து சேர்கின்றன.
அடோல்ஃப் ஒரு பெண்ணைக் காதலிக்கிறான். அவளைத் திருமணம் செய்து கொள்கிறான். அவள் நிறுவனப் பணிகளில் ஈடுபடத் துவங்கி ருடால்ஃப்பிற்கு நெருக்கமாகிறாள். அவர்களுக்குள் கள்ள உறவு இருக்கிறது எனக் கண்டறியும் ருடால்ஃப்பின் மனைவி அவரிடம் கோவித்துக் கொள்கிறாள். அந்த உறவை பற்றி அடோல்ஃப்பிற்கு எதுவும் தெரியாது
இந்நிலையில் ஓட்டப்பந்தய வீரர் ஜெஸ்ஸி ஓவன்ஸ் அடோல்ஃப் உருவாக்கி தந்த காலணியை அணிந்து கொண்டு ஒடி ஒலிம்பிக்கில் வெற்றி பெறுகிறார். இது ஜெர்மன் ராணுவ தலைமைக்குப் பிடிக்காமல் போய்விடுகிறது. இந்தக் காலணியைத் தயாரித்த ருடால்ஃப் நிறுவனத்தை மூடும்படி உத்தரவு பிறப்பிக்கிறார்கள்.

இந்தப் பிரச்சனால் அண்ணன் தம்பி இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு உருவாகிறது. இருவரது மனைவியும் அந்தப் பிரிவை பெரிதாக்குகிறார்கள். பரஸ்பரம் குற்றம் சாட்டிக் கொள்கிறார்கள்.
எப்படியாவது நிறுவனத்தைக் காப்பாற்ற வேண்டும் என்று ராணுவ தலைமையை நேரில் சந்தித்து விளக்கம் தருகிறார்கள்.
காலணி தயாரிப்பை நிறுத்திவிட்டு அவர்கள் ராணுவ தளவாடங்களைத் தயாரித்துத் தர வேண்டும் என்கிறார் ராணுவ அதிகாரி. ருடால்ஃப் மன்றாடவே ஆறாயிரம் ராணுவ வீர்ர்களுக்கான தோல் காலணிகள் தயாரிக்கும் ஆர்டர் அவர்களுக்குத் தரப்படுகிறது. ராணுவத்திற்கான காலணி தயாரிப்பில் அடோல்ஃப் ஆர்வம் காட்டவில்லை. ஆகவே அவர்கள் தயாரிப்புத் தரமற்றது என ராணுவத்தால் நிராகரிக்கபடுகிறது.
அண்ணன் தம்பி உறவில் விரிசல் ஏற்படுகிறது. இருவரும் சண்டை போடுகிறார்கள். போர்ச் சூழல் உருவாகவே ருடால்ப் ஜெர்மன் இராணுவத்தில் சேர்கிறார். அவர்களின் காலணித் தொழிற்சாலை ஆயுத தொழிற்சாலையாக மாற்றப்படுகிறது.
போர் முடிந்த பிறகு, ருடால்ப் சொந்த ஊர் திரும்புகிறார். நிலைமை உருமாறிப் போயிருக்கிறது. இனி என்ன செய்வது என அவருக்குத் தெரியவில்லை. சகோதரர்கள் ஒருவர் மீது மற்றவர் குற்றம் சாட்டுகிறார்கள். கசப்பான உறவோடு ஒரே வீட்டில் வசிக்கிறார்கள்.
முடிவில் அந்த நிறுவனத்தை இரண்டாகப் பிரிப்பது என முடிவு செய்கிறார்கள். பெரும்பகுதி ஊழியர்களைத் தன் வசமாக்கிக் கொள்கிறான் ருடால்ப். இருப்பவர்களைக் கொண்டு புதிய தயாரிப்பு முயற்சியில் ஈடுபடுகிறான் அடோல்ஃப்
ருடால்ஃப் உருவாக்கியது பூமா. அடோல்ஃப் உருவாக்கியது அடிடாஸ். இரண்டு நிறுவனங்களுக்குள் போட்டி உருவாகிறது. யார் எந்தக் கிளப்பை சொந்தமாக்கிக் கொள்வது எனப் போட்டியிடுகிறார்கள். அடோல்ஃப் தனது காலணிகளுக்கு எனத் தனி முத்திரையாக மூன்று கோடுகளை வடிவமைக்கிறான். ருடால்ஃப் தனது அதிநவீன விற்பனை அணுகுமுறையால் பெரிய வீர்ர்களைத் தனதாக்கிக் கொள்கிறான்.

இந்த மோதலின் உச்சமாக ஜெர்மன் கால்பந்தாட்ட வீர்ர்கள் எந்தக் காலணியை அணிவது என்ற போட்டி உருவாகிறது. இதற்காக ஜெர்மன் கோச் ருடால்ஃப்பை தேடி வந்து பேசுகிறார். கமிஷன் அதிகம் கேட்கிறார். ருடால்ஃப் இதனை மறுத்துவிடுகிறான். ஆனால் அடோல்ஃப் ஏற்றுக் கொள்கிறான். அவனது நிறுவனம் உருவாக்கிய காலணியை அணிந்து கொண்டு ஜெர்மன் கால்பந்தாட்ட அணி விளையாடுகிறது. உலகக் கோப்பையை வெல்கிறது. அடோல்ஃ புகழின் உச்சிக்குச் செல்கிறான்
படம் அதிலிருந்து தான் துவங்குகிறது. அங்கே தான் நிறைவுபெறுகிறது. தனது தம்பியின் வெற்றியை பாராட்டி அண்ணன் ருடால்ஃப் ஒரு வாழ்த்து அட்டையைச் சொருகிச் செல்வது சிறப்பான காட்சி
அது போலவே தாங்களால் ஜெர்மன் கால்பந்தாட்ட அணியின் கோச்சை சந்திக்க முடியாது என ருடால்ஃப் தோற்று திரும்பும் போது அவரே தேடி வந்து ஒப்பந்தம் செய்து கொள்வது அரியதொரு நம்பிக்கையை ஏற்படுத்துகிறது.
1948 இல் ருடால்ஃ பூமாவை நிறுவினார் 1949ல், அடால்ஃப் அடிடாஸை நிறுவினார். இரண்டு நிறுவனங்களுக்கு இடையே உள்ள போட்டி இன்றும் குறையவில்லை. இரண்டும் விஸ்வரூப வளர்ச்சி கொண்டு நிற்கின்றன.
தொழிற்போட்டி வீட்டிற்குள் என்ன விளைவுகளை ஏற்படுத்தும் என்பதற்குச் சாட்சியமாக உள்ளது ருடால்பின் மனைவி அடோல்ஃப் மனைவியைக் குற்றம் சாட்டுவது. அந்தக்காட்சியில் குழந்தைகள் ஒளிந்திருந்து பெற்றோர் பேசுவதைக் கேட்கிறார்கள். அதிர்ச்சியான தகவலைக் கேட்டு பையன் அழுகிறான். அவனைத் தேடி வந்து அடால்ஃப் அணைத்துக் கொள்கிறான். உணர்ச்சிப்பூர்வமான காட்சியது
காலணி தயாரிப்பு நிறுவனத்திற்குள் இருந்த இனவெறி. அன்றைய ஜெர்மானிய போர்சூழல். ராணுவத்தின் அதிகார வெறி. நம்பிக்கை இழந்த பணியாளர்கள் என அந்தக் காலகட்டத்தைச் சிறப்பாக உருவாக்கிக் காட்டியிருக்கிறார்கள்
காலணிகளில் எந்த ஒன்றை பிரித்துவிட்டாலும் மற்றொன்றை பயன்படுத்த முடியாது. உறவு அப்படியானதில்லை போலும். இங்கே சகோதர்கள் ஒரே துறையில் இரண்டு பாதையில் பயணிக்கிறார்கள். இருவரும் வெற்றி பெறுகிறார்கள். கடைசி வரை இணையவேயில்லை.
1974 இல் ருடால்ஃப் இறந்தார், அதைத் தொடர்ந்து அடோல்ஃப் 1978 இல் இறந்து போனார், இருவரது கல்லறையும் எதிரெதிராக உள்ளன. இரண்டு குடும்பங்களுக்குள் இன்றும் உறவு மலரவில்லை.
S. Ramakrishnan's Blog
- S. Ramakrishnan's profile
- 658 followers
