ரோஜா மற்றும் பட்டாம்பூச்சி

கேப்ரியல் கார்சியா மார்க்வெஸ் தனது மேஜிகல் ரியலிச எழுத்திற்காகப் புகழ்பெற்றவர். அவரது நாவல்களை விடவும் சிறுகதைகள் எனக்கு மிகவும் பிடித்தமானவை. சிறுகதைகளில் அவர் உருவாக்கிக் காட்டும் அற்புதங்கள் நிகரில்லாதவை.

1970ல் வெளியான அவரது சிறுகதை. DEATH CONSTANT BEYOND LOVE. இப்போது வாசிக்கும் போதும் வியக்கவைக்கிறது

ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பே அவர் சிறுகதையில் அரிய 3சாதனைகளை நிகழ்த்தியிருக்கிறார்

இந்தக் கதை தேர்தல் பிரச்சாரத்திற்குச் செல்லும் நாற்பத்திரண்டு வயதான செனட்டர் ஒனேசிமோ சான்செஸ் பற்றியது. அவர் இறப்பதற்குப் பதினொரு நாட்களுக்கு முன்பு கதை நிகழுகிறது. துல்லியமான காலக்குறிப்பின் வழியே வாசிப்பவரை நம்ப வைப்பது அவரது உத்தி.

தேர்தல் பிரச்சாரத்திற்காக ஒனேசிமோ செல்லும் ஊரில் ஒரு ரோஜாப்பூ கூடக் கிடையாது. ரோஜா இல்லாத இடம் என்பது அழகான குறியீடு. அவர் ஒரு ரோஜாப்பூவை கோட்டில் அணிந்து செல்கிறார். அது வெக்கையால் வாடிப்போகாமல் இருக்கத் தண்ணீர் டம்ளரில் மிதக்க விடுகிறார். உண்மையில் அவருக்குள்ளிருக்கும் காதல் தான் அந்த ரோஜாவாகச் சுட்டப்படுகிறது. அதைக் காப்பாற்றி வைத்துக் கொள்ளவே ஒனேசிமோ முயலுகிறார்.

லத்தீன் அமெரிக்க அரசியலுக்கும் இந்திய அரசியலுக்கும் பெரிய வேறுபாடுகள் கிடையாது. குறிப்பாகத் தேர்தல் பிரச்சாரங்களைப் பற்றிப் படிக்கும் போது நம் ஊரில் தேர்தல் நடப்பது போலவேயிருக்கிறது.

மொகலாய ஓவியங்களில் மன்னர்கள் கையில் ரோஜாப்பூவை ஏந்தியிருப்பார்கள். அது நித்யத்துவத்தின் அடையாளம். இக்கதையிலும் மரணத்தை வெல்லும் மலராகவே ரோஜா இடம்பெறுகிறது

பிரச்சாரத்தின் நடுவே அவரது ஆட்கள் காகித பறவைகளைச் செய்து பறக்கவிடுகிறார்கள். அது நிஜப்பறவைகள் போலவே பறந்து போகிறது. உண்மையில் அவரது வாக்குறுதிகள் தான் அந்தக் காகிதப்பறவைகள். அது உலகிற்கு நிஜப்பறவைகள் போலக் காட்சிதருகின்றன.

தனக்கான ரோஜாவை செனட்டர் கண்டறிவதே கதையின் முக்கியத் தருணம்.

தேர்தல் பிரச்சாரத்தின் நடுவே செனட்டர் தன வாழ்வில் இதுவரை காணாத அழகி ஒருத்தியை காணுகிறார். அவளது பெயர் லாரா ஃபரினா. அவளது தந்தை ஒரு கோரிக்கையை நிறைவேற்றும்படி அவளை செனட்டரிடம் அனுப்பி வைக்கிறார். அந்த அழகியிடம் மயங்கிவிடும் செனட்டர் அவளுடன் நெருக்கமாகிறார். அவளுடன் உடலுறவு கொள்ள முயலும் போது லாரா ஃபரினா அணிந்துள்ள கற்புக்கவசம் தடுக்கிறது. அதன் சாவியைப் பெண்ணின் தந்தை வைத்திருக்கிறான். கோரிக்கை நிறைவேறினால் மட்டுமே சாவியைத் தருவதாகச் சொல்கிறான். அந்தச் சாவியே வேண்டாம் எனக் கூறும் செனட்டர் அவளுடன் சும்மா இருப்பதே போதும் என அணைத்துக் கொள்கிறார்.

அந்த விடுபடல் முக்கியமான இடம். உலகம் அறிந்திராத ஒனேசிமோவை அவள் அறிந்து கொள்கிறாள்.

ஒனேசிமோ பிரச்சாரத்திற்குச் செல்லும் ஊர் ஒரு காலத்தில் கடத்தல்காரர்களின் கப்பல்களுக்கான உல்லாசத் தளமாக இருந்தது, அங்கே நடைபெறும் தேர்தல் பேரணி, ஒனேசிமோ வரும் குளிரூட்டப்பட்ட கார். அவரது சில்க் சட்டை, ஓய்வெடுக்கும் வீடு, வெக்கையான நிலவெளி, கழுதை ஒன்றில் தொடையில் தேர்தல் பிரச்சார வாசகம் எழுதிவிடுவது. ஒனேசிமோவின் காவலர்கள். அனலாய் எரியும் சூரியன் என யாவும் துல்லியமாக எழுதப்பட்டிருக்கிறது

ஒனேசிமோ காலண்டர் காகிதத்தைக் கிழித்து ஒரு பட்டாம்பூச்சி செய்கிறார். அந்தப் பட்டாம்பூச்சி காற்றில் பறந்து வெளியே செல்கிறது. காகித பட்டாம்பூச்சி வெளியே வருவதை லாரா ஃபரினா பார்க்கிறாள். அவளைப் பொருத்தவரை அது ஒனேசிமாவின் அடையாளம். அந்த சந்திப்பு தான் அவளிடம் பரிவை ஏற்படுத்துகிறது.

மார்க்வெஸின் தனிமையின் நூறு ஆண்டுகள் நாவலிலும் பட்டாம்பூச்சிகள் வரும் காட்சி இருக்கிறது.

மரணத்தைக் காதல் வென்றுவிடும் எனக்கூறும் இக்கதையில் உடலின்பங்களைக் கடந்து ஒருவன் அசாதாரண அழகு கொண்ட பெண்ணிடம் அடைக்கலமாகிறான். அவளைக் குழந்தை எனக்கருதும் ஒனேசிமோ முடிவில் தானே குழந்தையாகிறார்

ஐந்து குழந்தைகளின் தந்தையாக உள்ள ஒனேசிமோ ஏன் அன்பிற்காக ஏங்குகிறார். மரணம் தான் உண்மையான காரணம். சாவின் சுவடுகளே அந்தத் தவிப்பை உருவாக்குகிறது. குடும்பம் அவரைக் கைவிட்டதாக உணருகிறார். தன்னை முழுமையாக ஏற்றுக் கொள்ளும் பெண்ணிற்காக ஏங்குகிறார். அது கடைசியில் நிறைவேறுகிறது.

அகிரா குரசோவாவின் இகிரு திரைப்படத்தின் நாயகன் ஒரு நாள் இது போலத் தனது மரணத்தினைப் பற்றி அறிந்து கொள்கிறான். அதுவரை தொடர்ந்த அவனது சலிப்பூட்டும் வாழ்க்கையை மாற்றிக் கொள்ள முயலுகிறான். பொது விஷயங்களில் ஈடுபடத் துவங்கி மெல்ல நீதி கேட்கிறவனாக மாறுகிறான். இக்கதை அதன் மாற்று வடிவம் போலப் பொதுவாழ்வில் உள்ள ஒருவன் மரணத்தின் முன்னிலையில் காதலிடம் அடைக்கலமாகிறான்.

மார்க்வெஸ் நினைவுகளால் தூண்டப்பட்டே கதைகளை எழுதுகிறார். அவரது நினைவுகள் தனிநபருடையது மட்டுமில்லை. பூர்வ குடி இந்தியர்கள் மற்றும் அவரது கிராமவாசிகளின் நினைவுகளையும் ஒன்று சேர்த்து எழுதுகிறார். இக்கதையிலும் அதுவே நிகழுகிறது.

மார்க்வெஸ் தான் எழுதும் அறையில் எப்போதும் மஞ்சள் ரோஜா இருக்க வேண்டும் என்ற நம்பிக்கை கொண்டிருந்தார். அது போன்ற ஒரு நம்பிக்கை தான் செனட்டரிடம் வெளிப்படுகிறது.

இதே கதையின் இன்னொரு வடிவம் போலத் தான் அவரது இறுதி நாவலான Memories of My Melancholy Whores எழுதப்பட்டிருக்கிறது. அதில் வரும் முதியவர் பதின்வயது பெண்ணோடு உடலின்பத்தைத் தாண்டிய நட்பினை உருவாக்குகிறார். நோபல் பரிசு பெற்ற ஜப்பானிய எழுத்தாளரான யாசுனாரி கவாபத்தாவின் The House of the Sleeping Beauties நாவலின் பாதிப்பில் இதை எழுதியதை மார்க்வெஸே ஒத்துக் கொள்கிறார். ஆனால் இந்தக் கருப்பொருள் குறித்த வேட்கையை 1970களில் எழுதிய சிறுகதையிலே காணமுடிகிறது

கதையின் மையப்பொருள் தேர்தல் பிரச்சாரம் என்றாலும் கதை அதை இரண்டாம் நிலை கருப்பொருளாகவே கையாளுகிறது. உண்மையில் தேர்தல் பிரச்சாரம் கேலிக்கூத்தாகவே சித்தரிக்கப்படுகிறது.

செனட்டர் கொஞ்சம் கொஞ்சமாக அரசியல்வாதியாக இல்லாமல் போவதே கதையின் சுவாரஸ்யம்.

மார்கஸ் அரேலியஸ் எழுதிய Meditations பற்றிய குறிப்பு இக்கதையில் இடம் பெறுகிறது. தனக்கு மிகவும் பிடித்த புத்தகம் அதுவென்று மார்க்வெஸ் தனது நேர்காணலிலும் குறிப்பிடுகிறார்

மரணம் என்பது இயற்கையின் மர்மம்; அது ஏற்றுக் கொள்ளப்படவேண்டியது. எனக்கூறும் மார்கஸ் அரேலியஸ் அழகு என்பதைக் குறித்துப் பல்வேறு நிலைகளில் வரையறை செய்கிறார். அத்தோடு To love only what happens, what was destined. No greater harmony. எனக் குறிப்பிடுகிறார். இதைப் புரிந்து கொள்ளும் போது கதையில் வரும் காதலை நாம் வேறுவிதமாக உணர முடியும்.

உண்மையில் செனட்டர் மரத்திலிருந்து உதிரும் பூவைப் போலிருக்கிறார். வீழும் மலர்கள் எதையோ முணுமுணுக்கின்றன. உலகம் அதைக் கேட்பதேயில்லை.

லாரா ஃபரினா தந்தையின் வேண்டுகோளை ஏன் ஏற்றுக் கொள்கிறாள். அவளது கடந்தகாலம் என்ன என்று எதுவும் கதையில் விவரிக்கப்படுவதில்லை. அது வாசகரால் கற்பனை செய்து கொள்ளபட வேண்டியது.

நுண்ணோவியங்கள் வரைவது போல நுணுக்கமாகத் தகவல்களைத் தருவதே மார்க்வெஸின் சிறப்பு. இந்தக் கதை ரோஜா, மற்றும் பட்டாம்பூச்சி வழியே தன் மாயத்தை நிகழ்த்திவிடுகிறது.

••  

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on July 13, 2023 03:19
No comments have been added yet.


S. Ramakrishnan's Blog

S. Ramakrishnan
S. Ramakrishnan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow S. Ramakrishnan's blog with rss.