S. Ramakrishnan's Blog, page 66
March 30, 2023
நீலக்குதிரைகள் – கவிதை
நீலக்குதிரைகள் என்ற ஒவியம் பற்றிய எனது பதிவில் மேரி ஆலிவர் கவிதையை குறிப்பிட்டிருந்தேன்.
கவிஞர் ஷங்கரராமசுப்ரமணியன் அதை முன்னதாக மொழியாக்கம் செய்து அவரது வலைப்பதிவில் வெளியிட்டிருக்கிறார்.
நேற்று இதனை அவரே அனுப்பி வைத்தார். சிறப்பான மொழிபெயர்ப்பு.

நீலக்குதிரைகள் – மேரி ஆலிவர்
நான்கு நீலக்குதிரைகள் ஓவியத்துக்குள் நுழைகிறேன்
அது சாத்தியமாவதில்
எனக்கு ஆச்சரியம் கூட இல்லை.
நான்கில் ஒரு குதிரை என்னை நோக்கி நடந்துவருகிறது.
அதன் நீல மூக்கு என்னிடம் லேசாக நீள்கிறது.
நான் எனது கையை அதன் நீலப்பிடறியில் இட்டு
கட்டிக் கொள்கிறேன்.
என் புளகிதத்தை அது அனுமதிக்கிறது.
ஓவியன் ப்ரான்ஸ் மர்க்
மூளையில் வெடிகுண்டின் உலோகத்துண்டு தாக்கி
இறந்துபோனான்.
போரென்றால் என்னவென்று அந்த நீலக்குதிரைகளுக்கு
விளக்குவதை விட நான் இறந்தே விடலாம்.
அவை பீதியில் மயக்கம் போட்டு விழுந்துவிடும்
அல்லது
அதை அவற்றால் நம்பவே முடியாது.
ப்ரான்ஸ் மர்க்
உனக்கு எப்படி நன்றி சொல்வது.
நமது உலகம் காலப்போக்கில்
கூடுதலாக அன்பானதாக ஆகலாம்.
அழகான ஒன்றை ஆக்கும் வேட்கை
நம் எல்லாருக்குள்ளும் இருக்கும் கடவுளின்
ஒரு சிறு துண்டாக இருக்கலாம்.
இப்போது அந்த நான்கு குதிரைகளும்
நெருக்கமாக வந்து
ரகசியங்கள் சொல்ல இருப்பதைப் போல
என்னை நோக்கி தங்கள் தலையைத் தாழ்த்துகின்றன
அவை பேசவேண்டுமென்று நான் எதிர்பார்க்கவில்லை
அவை பேசவும் செய்யாது.
என்ன சொல்லக் கூடும் அவை
இத்தனை அழகாக இருப்பது போதாதா என்ன?
தமிழில் : ஷங்கர ராமசுப்ரமணியன்
March 28, 2023
பெலா தார் கற்றுத்தருகிறார்.
புகழ்பெற்ற The Turin Horse திரைப்படத்தை எப்படிப் பெலா தார் (BelaTarr) உருவாக்கினார் என்பதை விவரிக்கிறது Tarr Bela: I Used to Be a Filmmaker ஆவணப்படம்.

இளம் திரைப்பட இயக்குநர்கள் மற்றும் சினிமா ஆர்வலர்கள் இதனை அவசியம் காண வேண்டும்.
திரைப்பட உருவாக்கத்தில் பெலா தார் எவ்வளவு தீவிரம் காட்டுகிறார். எப்படி ஒரு காட்சியைத் துல்லியமாக உருவாக்குகிறார் என்பதற்கான மாஸ்டர் கிளாஸ் போல இந்த ஆவணப்படம் அமைந்துள்ளது.
ஹங்கேரிய திரைப்பட இயக்குநர் பெலா தார் தனித்துவமான சினிமா பாணியை உருவாக்கியவர். கறுப்பு வெள்ளையில் இவர் உருவாக்கிய Sátántangó (1994) மற்றும் Werckmeister Harmonies (2000) The Turin Horse போன்ற திரைப்படங்களை Philosophical Movies என்று வகைப்படுத்துகிறார்கள். நேர்கோட்டில் கதை சொல்லும் மரபிலிருந்து முற்றிலும் மாறுபட்டதாக, Very Long Takeல் காட்சி படிமங்களின் மூலம் கதை சொல்பவர் பெலா தார். இவரது திரைப்படத்தில் நிலப்பரப்பு ஒரு முக்கியக் கதாபாத்திரமாகிறது.

காலம் தான் தனது கதையின் மையசரடு. காலத்தைப் பற்றிய உணர்வும் காலமின்மையின் சுவடுகளையும் திரைப்படத்தில் பேசுவதாகச் சொல்கிறார் பெலா தார். வீழ்ச்சி மற்றும் இழப்பின் துயரை முதன்மையாகக் கொண்ட இவரது படங்கள் மனிதர்களின் மௌனத்தைப் புரிய வைக்க முயலுகின்றன.
நாவலாசிரியர் லாஸ்லோ க்ராஸ்னஹோர்காய், இசையமைப்பாளர் மிஹாலி விக், ஒளிப்பதிவாளர் ஃப்ரெட் கெலெமென், நடிகை எரிகா போக் மற்றும் ஆக்னஸ் ஹ்ரானிட்ஸ்கி ஆகியோர் அவரது நிரந்தரத் திரைக்கூட்டாளிகள். பெலா தாரின் முக்கியப் படங்களை இவர்கள் இணைந்து உருவாக்கியிருக்கிறார்கள்.
இந்த ஆவணப்படத்தில் சப்டைட்டில் இல்லை. ஆனால் MUBI தளத்தில் ஆங்கில சப்டைட்டிலுடன் காண முடிகிறது
March 27, 2023
நீலக்குதிரைகளின் மௌனம்.
ஃபிரான்ஸ் மார்க் வரைந்த புகழ்பெற்ற ஓவியமான Blue Horses பற்றி மேரி ஆலிவர் ஒரு கவிதை எழுதியிருக்கிறார். அதில் அந்த ஒவியத்தினுள் செல்லும் அவரை நீலக்குதிரைகள் நெருங்கி வருகின்றன. தாங்கள் அறிந்த ஏதோ ரகசியத்தைச் சொல்ல முயல்வது போலக் காட்சியளிக்கின்றன. ஆனால் எதையும் சொல்லவில்லை என கவிதை முடிவு பெறுகிறது. உலகில் இன்னும் கருணை மீதமிருக்கிறது என்பதன் அடையாளம் போலவே இந்த நீலக்குதிரைகள் வரையப்பட்டிருப்பதாக ஆலிவர் கருதுகிறார்.

இந்த ஓவியத்தைக் காணும்போதெல்லாம் டால்ஸ்டாயின் நடனத்திற்குப் பிறகு என்ற கதையின் தலைப்பு என் மனதில் தோன்றுகிறது. என்ன தொடர்பு எதற்காக அந்தத் தலைப்பு மனதில் வந்து போகிறது எனத் தெரியவில்லை.
ஆனால் இது துயிலின் நடனம் என்றே மனது உணர்கிறது. மூன்று நீலக்குதிரைகளும் கனவில் தோன்றும் உருவங்கள் போலிருக்கின்றன
சிவப்புமலையுள்ள நிலப்பரப்பில் மூன்று நீலநிறக்குதிரைகளும் ஒன்றோடு ஒன்று இணைந்து லயத்துடன் நடனமாடுவது போலக் காட்சி அளிக்கின்றன. குதிரைகளின் உடலில் வெளிப்படும் தளர்வும் முகத்தைத் திருப்பியுள்ள விதமும் அபாரமான அழகுடன் வரையப்பட்டுள்ளன. ஃபிரான்ஸ் மார்க் 1911 ஆம் ஆண்டில் இந்த ஓவியத்தை வரைந்திருக்கிறார் ஹிட்லர் காலத்தில் இவரது ஒவியங்கள் மலினமானவை எனக்கூறி தடைசெய்யப்பட்டன.

தி ப்ளூ ரைடர் என்ற கலை இயக்கத்தை முன்னெடுத்தவர் ஃபிரான்ஸ் மார்க் இந்த இயக்கம் ஓவியத்தில் உணர்ச்சிகள் வெளிப்படுவதே முதன்மையானது எனக் கருதியது.
நீலக்குதிரைகள் ஓவியத்தில் அமைதி மற்றும் சாந்தநிலையின் அடையாளமாகவே குதிரைகள் தோற்றமளிக்கின்றன. ஓவியரின் கற்பனையில் குதிரையும் தாவரங்களைப் போலவே தளர்ந்திருக்கின்றன/ இந்த ஓவியம் குறித்துப் பல்வேறு குறியீட்டு விளக்கங்களைக் கலைவிமர்சகர்கள் கூறுகிறார்கள்.
முதலாம் உலகப்போரில் பங்குபெற்றவர் ஃபிரான்ஸ் மார்க் . குண்டுவெடிப்பு சிதறல் காரணமாக ஏற்பட்ட காயத்தால் தனது 36வது வயதில் இறந்து போனார்.
நீல வண்ணத்தை மார்க் விரும்பி உபயோகிக்கக் கூடியவர். அவரது வேறு நீலக்குதிரைகளிலும் இதனைக் காணலாம். மார்க் வரைந்த குதிரைகளிடம் விசித்திரமான கவர்ச்சியைக் காணமுடிகிறது..
போர்ஹெஸ் தனது புகழ்பெற்ற நீலப்புலிகள் கவிதையில் பிளேக்கின் புலியை பற்றிச் சொல்லும் போது அதன் அச்சமூட்டும் அழகினைப் பற்றிக் குறிப்பிடுகிறார் அவரது கனவில் கங்கைப்பிரதேசத்தில் ஒரு நீலப்புலி தோன்றுகிறது. கவிதையில் வெளிப்படும் நீலப்புலியிடம் நாம் காணும் அதே விசித்திரம் தான் மார்க் ஒவியத்தில் காட்சியாக விரிந்திருக்கிறது.
மூன்று குதிரைகளில் முகம் தெரியாத குதிரை தான் என்னை அதிகம் கவர்கிறது.
March 25, 2023
கவின் கடிதம்
டான்டூனின் கேமிரா என்ற எனது சிறார் நூலை வாசித்துவிட்டு இரா.கவின் என்ற நான்காம் வகுப்பு மாணவர் எழுதியுள்ள கடிதம்.


கவினின் கடிதத்திற்கும் அழகான ஒவியத்திற்கும் நன்றி. வாசிப்பைத் தொடர வாழ்த்துகிறேன்.
கவின் கேட்ட கேள்விக்குப் பதில் : எறும்பின் வாழ்க்கை என்பது சில நாட்கள் தானே., ஆகவே கதை முடிவதற்குள் டான்டூன் இளைஞனாகி விடுகிறான்.
புதுமைப்பித்தன் நாடக நிகழ்வு
இரண்டு நாட்களும் புதுமைப்பித்தன் நாடகம் வெகு சிறப்பாக நடைபெற்றது. அரங்கு நிறைந்த கூட்டம். நாடகத்தை மிக அருமையாக உருவாக்கியிருக்கிறார்கள். நிறைய இளைஞர்கள் நாடகம் காண வந்திருந்தது மகிழ்ச்சி அளித்தது.
நாடக இயக்குநர் கே.எஸ்.கருணா பிரசாத், நடிகர்கள், மேடை அமைப்பு, ஒளியைக் கையாண்ட கலைஞர்கள். நாடகத்தைத் தயாரித்த கூத்துப்பட்டறைக்கும் எனது மனம் நிறைந்த பாராட்டுகள்.
புதுமைப்பித்தன் குடும்பத்தினர், புதுமைப்பித்தன் வாழ்க்கை வரலாற்றை எழுதிய ரகுநாதன், கண்மணி கமலாவிற்கு நூலை வெளியிட்ட இளையபாரதி, புதுமைப்பித்தன் கதைகளின் செம்பதிப்பை உருவாக்கிய ஆ.இரா.வேங்கடாசலபதி. அதை வெளியிட்ட காலச்சுவடு கண்ணன். புதுமைபித்தன் ஒவியம் வரைந்த ஆதிமூலம். அதை பயன்படுத்திக் கொள்ள அனுமதி அளித்த அபராஜிதன். சீர் பதிப்பகம் மூலம் புதுமைப்பித்தன் கதைகளை சிறப்புவிலை பதிப்பாக கொண்டு வந்த டாக்டர் அரசு மற்றும் பதிப்பகத்தார், மணிக்கொடி, தினமணி இதழ்கள், புதுமைப்பித்தனின் வாழ்விற்கு உதவிய இலக்கிய நண்பர்கள். என அனைவரையும் நன்றியோடு நினைவு கொள்கிறேன்.
எனது அழைப்பை ஏற்று சிறப்பு விருந்தினர்களாக வருகை தந்த இயக்குநர் வசந்தபாலன், டாக்டர் ஸ்ரீவர்மா, டாக்டர் அன்பு, டாக்டர் நந்தினி, இசைவிமர்சகர் நடிகர் ஷாஜிக்கு எனது அன்பும் நன்றியும்.
இன்னும் மூன்று நாட்கள் இந்த நாடகம் கூத்துப்பட்டறை அரங்கில் நடைபெறுகிறது. சரியாக மாலை 6.45 மணிக்கு நாடகம் துவங்கிவிடும். சிறிய அரங்கு என்பதால் முன்னதாக வருகை தருவது அவசியம்.
அனைவரும் வருக என வரவேற்கிறேன்.
கூத்துப்பட்டறை முகவரி
16/58, 3rd Main Road, Sri Ayyappa Nagar, Virugambakkam,, Chennai







புகைப்படங்கள்
நன்றி
நந்தா
ஹரி
March 22, 2023
புதுமைப்பித்தன் நாடகம்
புதுமைப்பித்தன் வாழ்வை மையமாகக் கொண்டு நான் எழுதிய நாடகத்தைக் கே.எஸ்.கருணாபிரசாத் இயக்கியிருக்கிறார். கூத்துப்பட்டறையின் முக்கிய நடிகர்கள் இதில் பங்கேற்கிறார்கள். டாக்டர் ரவீந்திரன் ஒளியமைப்பு செய்கிறார்.


நவீன நாடக உலகில் தனிச்சிறப்பு மிக்க நடிகராகவும் இயக்குநராகவும் அறியப்படும் கே.எஸ்.கருணாபிரசாத் எனது அரவான் நாடகத்தை முன்னதாக இயக்கியிருக்கிறார்.
எழுத்தாளர் ந.முத்துசாமி அவர்களால் நவீன நாடகப் பயிற்சி பள்ளியான கூத்துப்பட்டறை 1977ல் துவங்கப்பட்டது. மிகச்சிறந்த நவீன நாடகங்களைக் கூத்துப்பட்டறை நிகழ்த்தியிருக்கிறது.
கூத்துப்பட்டறை சார்பில் நடைபெறும் இந்நாடகம் மார்ச் 24 முதல் 28 வரை ஐந்து நாட்கள் தினமும் மாலை 6 45க்கு கூத்துப்பட்டறை அரங்கில் நடைபெறுகிறது.
அனைவரும் கலந்து கொள்ளும்படி அன்புடன் அழைக்கிறேன்
நடைபெறும் இடம் :
கூத்துப்பட்டறை
16/58, 3rd Main Road, Sri Ayyappa Nagar, Virugambakkam, Chennai 92
March 20, 2023
இசையுலகின் நட்சத்திரம்.
டார் திரைப்படம் பெர்லின் இசைக்குழுவின் தலைமை இசை நடத்துநர் லிடியா டார் வாழ்க்கையை விவரிக்கிறது. இந்த ஆண்டு ஆஸ்கார் விருதுக்கான பட்டியலில் இடம்பெற்றிருந்தது. ஆனால் விருது பெறவில்லை.

கிளாசிக்கல் இசையுலகில் நட்சத்திரமாகத் திகழும் லிடியா டாரின் நேர்காணலில் படம் துவங்குகிறது.
புகழ்பெற்ற இசை நடத்துநர்களாக பெரிதும் ஆண்களே இருப்பது பற்றி கேள்வி கேட்கப்படுகிறது. அதற்கு இசையில் அப்படியான பேதமில்லை என்று சொல்லிவிட்டுத் தன்னைப் போலப் பெண் இசை நடத்துநர்கள் நிறைய வந்துவிட்டார்கள் என்று தனது ஆதர்சங்களைச் சொல்கிறார்.

தனது கையசைவில் காலம் உறைந்துவிடுகிறது. தான் காலத்துடன் நடனமாடுகிறேன் என்று அவர் விளக்கம் தருவது அருமையானது.
டார் ஒரு கற்பனை கதாபாத்திரம். ஆனால் உண்மையான வாழ்க்கை வரலாறு என்பது போலச் சித்தரிக்கிறார்கள். நம்மை நம்ப வைக்கிறார்கள். அது தான் படத்தின் வெற்றி
பெர்லினில் மஹ்லரின் ஐந்தாவது சிம்பொனியை நிகழ்த்த லிடியா ஒத்திகை செய்கிறார், படத்தின் முக்கியப்பகுதி அந்த ஒத்திகையே,
படத்தில் நாம் இரண்டு வகையான லிடியாவைக் காணுகிறோம். ஒன்று மேதைமையுடன் இசைநிகழ்வினை நடத்தும் லிடியா. மற்றொன்று குழப்பங்களுடன், ஏக்கங்களுடன் தனிமையில் வாழும் லிடியா. இருவரும் வேறுவேறு நபர்களைப் போலவேயிருக்கிறார்கள்.

லிடியாவின் ஆளுமை அவளது பேச்சில். நடையில். எதையும் தீர்மானிக்கும் விதத்தில் மிக அழகாக வெளிப்பட்டுள்ளது. பாக் இசையை வெறுக்கிறேன் என்று சொல்லும் இளைஞனை அவள் கையாளும் விதம் அபாரம்.
காரில் குழந்தையுடன் விளையாடும் போதும் வீட்டில் பின்னிரவில் அழுகுரல் கேட்டுத் திகைத்து எழுந்து வரும்போதும், இசைக்குழுவினர்கள் தன்னை நிராகரிக்கிறார்கள் என்ற நிலையில் ஆவேசமாக இன்னொரு நடத்துநரைத் தாக்கும் போது லிடியாவின் மனநிலை ஊசலாடிக்கொண்டிருப்பதைக் காணமுடிகிறது,
லிடியா கிளாசிக்கல் இசையை மிக நுண்மையாக, ஆழமாகப் புரிந்து வைத்துள்ளார். Gustav Mahler 5th Symphonyயை அவர் மேடையில் அரங்கேற்ற முயலும் தீவிரம் படத்தில் அற்புதமாக வெளிப்படுத்தப்படுகிறது,

ஆரம்பம் முதல் லிடியாவின் உதவியாளர் ஃபிரான்செஸ்கா தனது மன உணர்ச்சிகளை மறைத்துக் கொண்டு நடப்பதும் முடிவில் பிரிந்து செல்லும்போது தனது எதிர்ப்பை உக்கிரமாக வெளிக்காட்டிக் கொள்வதும் சிறப்பானது.
இசைக்கோர்வை போலவே லிடியாவின் வாழ்விலும் ஏற்றத் தாழ்வுகள். மௌனம், சிறிய நகர்வுகள். பெரிய திருப்பங்கள் ஏற்படுகின்றன.
திரையில் செவ்வியல் இசையின் நுட்பங்களை வகுப்பெடுப்பது போல விவரிக்கிறார்கள். அதற்காகவே இதனை விரும்பிப் பார்த்தேன்.
March 13, 2023
மாணவர்களின் கடிதம்.
காரியாபட்டி ஒன்றியம் சத்திரம் புளியங்குளம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியைச் சேர்ந்த மாணவர்கள் எனது சிறார் கதைகளைப் படித்துப் பாராட்டுக் கடிதம் அனுப்பியிருந்தார்கள்.
பள்ளியின் தலைமை ஆசிரியர் சக்திவேல். மாணவர்களுக்கு நல்ல புத்தகங்களைத் தொடர்ந்து அறிமுகம் செய்து வருகிறார்.

மாணவர்கள் கூட்டாக எழுதிய கடிதத்திற்கு நன்றி கூறும்விதமாக அவர்களுக்கு எனது சிறார் நூல்களைப் பரிசாக அனுப்பி வைத்தேன். மகிழ்ச்சியோடு பெற்றுக் கொண்டார்கள்.
March 12, 2023
அருஞ்சொல் – சமஸின் சாதனை
கடந்த ஓராண்டாக அருஞ்சொல் இணைய இதழை வாசித்துவருகிறேன். சமகால அரசியல், பொருளாதாரம், பண்பாடு சார்ந்த முக்கிய விஷயங்கள் குறித்து இதில் வெளியாகும் கட்டுரைகள் மிகச்சிறப்பாக உள்ளன. புதிய புரிதலை ஏற்படுத்துகின்றன.


தினம் ஒரு கட்டுரையை வெளியிடும் இதழாக அருஞ்சொல் வெளியாகிறது. சமஸ் எழுதும் தலையங்கம் மற்றும் அரசியல் கட்டுரைகள் மற்றும் அவர் முன்னெடுக்கும் நேர்காணல்களும் தனிச்சிறப்பானவை. இந்து தமிழ் நாளிதழின் நடுப்பக்க ஆசிரியராக இருந்த போது சமஸ் முன்னெடுத்த விஷயங்கள் அதுவரை இதழியலில் யாரும் செய்யாதவை. குறிப்பாக புத்தகக் கண்காட்சி சார்ந்து சமஸ் வெளியிட்ட முழுப்பக்க செய்திகள், வாசிப்பைப் பரவலாக்கும் விதமாக வெளியிட்ட படைப்பாளிகளின் கட்டுரைகள், எழுத்தாளர் அசோகமித்ரன், ஞானக்கூத்தன். கி.ராஜநாராயணன் மறைவின் போது செய்யப்பட்ட முழுப்பக்க அஞ்சலிகள் பாராட்டிற்குரியவை.
இந்தியாவின் தலைசிறந்த பத்திரிக்கையாளர்கள். அரசியல் பிரபலங்கள், எழுத்தாளர்கள் அருஞ்சொல்லில் எழுதும் கட்டுரைகள் பொதுத்தளத்தில் நாம் கவனம் கொள்ளாத. அதே நேரம் ஆழ்ந்து புரிந்து கொள்ள வேண்டிய பிரச்சனைகளைக் கவனப்படுத்துகின்றன. புதிய விவாதத்தை உருவாக்குகின்றன. ‘
நிறைய இளைஞர்கள் இதனைத் தொடர்ந்து வாசிக்கிறார்கள் என்பதே அருஞ்சொல்லின் சாதனை. இதழியலின் அடுத்த கட்ட வளர்ச்சியாகவே இதனைக் காணுகிறேன்.
கல்வி சார்ந்து இதில் வெளியாகியுள்ள கட்டுரைகள் தனிநூலாக வெளியாக வேண்டியவை.
அருஞ்சொல் இணைய இதழை வெற்றிகரமாக நடத்திவரும் சமஸிற்கு எனது நெஞ்சார்ந்த பாராட்டுகள்
இணைப்பு
அறிவுச்சுடர் படிப்பகம்
தூத்துக்குடி மாவட்டம் ஆத்தூரில் திருமதி.சண்முகவடிவு மற்றும் அவரது தோழிகள் இணைந்து குழந்தைகளுக்காக அறிவுச்சுடர் படிப்பகம் என்ற நூலகத்தை நடத்தி வருகின்றனர். இங்கே தினமும் மாலையில் சிறுவர்கள் கூடி நூல்களை வாசிக்கிறார்கள்.

இவர்களைப் பாராட்டும்விதமாக தூத்துக்குடியில் சலூன் நூலகம் நடத்தி வரும் மாரியப்பன் மற்றும் அவரது நண்பர்கள் ஜெயபால், அருண்பிரசாத் ஆகியோர் எனது நூல்கள் உள்ளிட்ட ஐம்பது நூல்களை அறிவுச்சுடர் நூலகத்திற்குக் கொடையாக வழங்கியுள்ளார்கள்.

நூலகமனிதர்கள் என்ற வாசிப்பு இயக்கத்தை முன்னெடுக்கும் மாரியப்பனுக்கும் அவரது நண்பர்களுக்கும் எனது மனம் நிறைந்த நன்றியும் பாராட்டுகளும்.
S. Ramakrishnan's Blog
- S. Ramakrishnan's profile
- 657 followers
