S. Ramakrishnan's Blog, page 73

December 15, 2022

December 13, 2022

புலிக்கட்டம் – மொழியாக்கம்

எனது புலிக்கட்டம் சிறுகதையை ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்துள்ளார் பரத் குமார்.
www.usawa.in இணைய இதழில் கதை வெளியாகியுள்ளது

நன்றி :

https://www.usawa.in/issue-8/Translation/lambs-and-tigers-bharath-kumar.html

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on December 13, 2022 00:56

December 12, 2022

பெயர் தெரியாத ஞானி.

The Unknown Saint அலா எடின் அல்ஜெம் இயக்கிய 2019 மொராகோ திரைப்படம்

தான் திருடிய பணத்தை எங்கே ஒளித்து வைப்பது என்று தெரியாமல் யாருமற்ற பாலைவன மணல்மேடு ஒன்றில் புதைத்துவைத்துவிட்டு அடையாளத்திற்காகப் புதைமேடு போல ஒன்றை உருவாக்கி விட்டு சிறைக்குப் போகிறான் யான்ஸ்.

சிறை வாழ்க்கையை அனுபவித்துவிட்டு வெளியே வந்து தான் புதைத்த பணத்தை எடுக்க வருபவன் அங்கேயுள்ள காட்சியைக் கண்டு அதிர்ச்சி அடைகிறான். காரணம் அவனது புதைமேட்டினை ஒரு ஞானியின் சமாதி என நினைத்து பெரிய நினைவிடம் கட்டி மக்கள் வழிபடுகிறார்கள். அந்த இடம் அற்புதங்கள் நடைபெறும் ஆலயமாகக் கருதப்படுகிறது. கிராமத்து மக்கள் தங்கள் நோய் தீர ஞானியை வழிபடுகிறார்கள்.

தனது பணத்தை எப்படி மீட்பது என்று தெரியாமல் அந்த ஊரில் ஒரு இரவு தங்குகிறான் யான்ஸ். மறுநாள் தன்னை ஒரு விஞ்ஞானி என்று சொல்லிக் கொண்டு அந்தப் பகுதியை ஆராய்கிறான்

பழமையில் ஊறிப்போன அந்த ஊர் மிகவும் சலிப்பானது. அந்த ஊரில் வசிக்கும் மருத்துவர் மற்றும் அவரது உதவியாளர் அழகான கதாபாத்திரங்கள். அவர்கள் சலிப்பின் உச்சத்திலிருக்கிறார்கள். அவர்களின் உரையாடல் மற்றும் செயல்கள் அபத்த நாடகம் போலவே உணர்த்தப்படுகின்றன

வறட்சியால் பாதிக்கப்பட்ட பாலைவன கிராமத்தில் வயதான விவசாயி ஒருவர் தனது மகன் இடம்பெயர்ந்து போய்விடலாம் என்ற அழைப்பினை நிராகரித்துக் கட்டாயம் மழை பெய்யும் என்கிறார். அதற்காகப் பிரார்த்தனையில் ஈடுபடுகிறார். இறந்தும் போகிறார்.

ஞானியின் சமாதியினுள் உள்ள தனது பணத்தைக் கொள்ளையிட யான்ஸ் பல்வேறுவிதங்களில் முயலுகிறான். அந்த ஊரும் அதன் விசித்திரமான மக்களின் நம்பிக்கை மற்றும் செயல்பாடுகளும் படத்தைத் தனித்துவமானதாக்குகின்றன.

தனது காயம்பட்ட நாயிற்குப் பல்கட்டுவதற்காக ஒருவன் முயலுவது, ஊரின் முடிதிருத்துபவர், அவரது வாடிக்கையாளர்கள். வாரத்தில் இரண்டு நாட்கள் மட்டுமே இருமல் வரும் பெண்மணி, சலிப்பைப் போக்கிக் கொள்ளத் திருடும் கிழவர் என்று விநோதமான கதாபாத்திரங்கள்.

படத்தின் முடிவு எதிர்பாராத ஒன்று. ஆனால் கச்சிதமாகக் கதைக்குப் பொருந்திப் போகிறது.

கதை நிகழும் நிலப்பரப்பும் அதன் விசித்திர மனிதர்களும் நமக்குப் புதிய அனுபவத்தை உருவாக்குகிறார்கள். ஒரு நாவலைப் போலவே அனுபவம் ஆழ்ந்துவிரிந்து நமக்குள் பரவுகிறது. இதுவே படத்தின் வெற்றி.

1 like ·   •  0 comments  •  flag
Share on Twitter
Published on December 12, 2022 04:38

December 8, 2022

சி. மோகன் விழா

எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர், கலைவிமர்சகர் சி.மோகன் அவர்களின் கலை இலக்கியப் பங்களிப்பைக் கொண்டாடும் விதமாக அவரது படைப்புகள் குறித்த கருத்தரங்கம் நடைபெறுகிறது. அத்துடன் அவருக்குப் பணமுடிப்பு அளித்து கௌரவிக்கும் விழாவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது

இந்த நிகழ்வில் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றுகிறேன்

டிசம்பர் 18 மாலை இந்த நிகழ்வு நடைபெறுகிறது

இடம் கவிக்கோ மன்றம் சென்னை.

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on December 08, 2022 21:20

புத்தக வெளியீட்டு விழா

தேசாந்திரி பதிப்பகம் சார்பில் டிசம்பர் 25 2022 ஞாயிறு மாலை எனது புதிய புத்தகங்களின் வெளியீட்டுவிழா நடைபெறவுள்ளது.

நிகழ்வினைத் தலைமையேற்று புத்தகங்களை எழுத்தாளர் வண்ணநிலவன் வெளியிடுகிறார்

சென்னை சிஐடி நகரிலுள்ள கவிக்கோ மன்றத்தில் மாலை ஆறுமணிக்கு நிகழ்வு நடைபெறுகிறது

சிறுகதைகள்ஓவியங்கள் குறித்த கட்டுரைகள்உலக இலக்கியக் கட்டுரைகள்
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on December 08, 2022 21:02

December 6, 2022

டிசம்பர் 25 – உலக இலக்கியப் பேருரை

டிசம்பர் 25 ஞாயிறு மாலை சென்னை கவிக்கோ மன்றத்தில் புகழ்பெற்ற பிரெஞ்சு எழுத்தாளர் பால்சாக் பற்றி உரை நிகழ்த்த இருக்கிறேன்.

தேசாந்திரி பதிப்பகம் ஒருங்கிணக்கும் இந்த நிகழ்வில் எனது புதிய நூல்களும் வெளியாகின்றன

இந்த ஆண்டு எனது மூன்று புதிய நூல்கள் வெளியாகின்றன

பகலின் சிறகுகள் -சிறுகதைத் தொகுப்பு

வான் கேட்கிறது – உலக- இந்திய இலக்கியக் கட்டுரைகளின் தொகுப்பு

நிறங்களை இசைத்தல் – ஒவியங்கள் குறித்த கட்டுரைகள்.

••

புகழ்பெற்ற பிரெஞ்சு நாவலாசிரியர் பால்சாக்கின் வாழ்வும் படைப்புகளும் பற்றியதாக இந்த உரை அமையும்.

ஐரோப்பிய இலக்கியத்தின் மிகச்சிறந்த யதார்த்த எழுத்தாளராகக் கொண்டாடப்படுபவர் பால்சாக்.

லியோ டால்ஸ்டாய், தஸ்தாயெவ்ஸ்கி, சார்லஸ் டிக்கன்ஸ், எமிலி ஜோலா, ஹென்றி ஜேம்ஸ் போன்ற மகத்தான படைப்பாளிகளுக்கு ஆதர்ச எழுத்தாளராகத் திகழ்ந்தவர் பால்சாக்

பால்சாக்கின் பல படைப்புகள் திரைப்படங்களாக உருவாக்கப்பட்டு வெற்றிபெற்றுள்ளன.

1 like ·   •  0 comments  •  flag
Share on Twitter
Published on December 06, 2022 23:12

December 1, 2022

கி.ராஜநாராயணன் மணி மண்டபம் – விழா

கரிசல் இலக்கியத்தின் பிதாமகர் கி.ராஜநாராயணன் அவர்களுக்கு தூத்துகுடி மாவட்டம் கோவில்பட்டியில் சிறப்பான மணிமண்டபம் கட்டப்பட்டுள்ளது.

இதனைத் தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்கள் காணொளி மூலம் நாளை (02.12.22) திறந்து வைக்கிறார்.

மாலை ஐந்து மணிக்கு கிரா நினைவரங்கத்தில் கலை இலக்கிய நிகழ்வினை ஏற்பாடு செய்திருக்கிறார்கள்.

கிராவைப் போற்றும் இந்த நிகழ்வில் கலந்து கொணடு உரையாற்றுகிறேன்.

4 likes ·   •  0 comments  •  flag
Share on Twitter
Published on December 01, 2022 06:09

November 29, 2022

இரண்டு முடிவுகள்

Between Two Dawns கடந்த ஆண்டு வெளியான துருக்கி திரைப்படம். இதன் இயக்குநர் செல்மன் நகார். இவரது முதல் படமிது. தொழிற்சாலையில் நடைபெற்ற விபத்துக் காரணமாக அதன் நிர்வாகியின் வாழ்க்கையில் ஏற்படும் சிக்கல்களையும் விபத்துக்குள்ளான தொழிலாளியின் குடும்ப நிலையினையும் மையமாகக் கொண்டு படம் உருவாக்கப்பட்டிருக்கிறது. சிறுகதை அளவேயுள்ள சம்பவம். ஆனால் அதனை நேர்த்தியாக, நுட்பமாகப் படம் விவரிக்கிறது.

காதிர் அவரது சகோதரர் ஹலீல் அவர்களின் தந்தை இப்ராகிம் மூவரும் சாயமிடப்பட்ட துணிகளை உற்பத்தி செய்யும் தொழிற்சாலையை நடத்திவருகிறார்கள். குறிப்பிட்ட காலக்கெடுவிற்குள் வேலை நடந்தாக வேண்டும் என்ற அவசரத்தில் பணியாளர்களை விரட்டுகிறார்கள்.

நீராவி இயந்திரம் ஒன்றில் ஏற்பட்ட பழுதினை சரிசெய்ய முயன்ற தொழிலாளி அதில் சிக்கிக் காயமடைகிறார். அவரை உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு செல்கிறார்கள்.

மருத்துவமனையில் அடிபட்ட தொழிலாளியின் பெயர், அடையாள எண் போன்றவற்றைக் கேட்கிறார்கள். காதிருக்குத் தெரியவில்லை. இப்ராகிம் தலைமை மருத்துவரைப் பார்த்துப் பேசிவிட்டு வருவதாகச் சொல்கிறார். தீக்காயப்பிரிவில் தொழிலாளி அனுமதிக்கப்பட்டு அவசர சிகிச்சை மேற்கொள்ளப்படுகிறது.

தொழிற்சாலைக்குத் திரும்பும் சகோதரர்கள் காப்பீடு மற்றும் ஆலைபாதுகாப்பு ஏற்பாடுகள் முறையாக இருப்பதற்கான சான்றுகளைச் சரிபார்க்கிறார்கள்

முறையான பாதுகாப்புக் கவசம் அணியாதது மற்றும் வேலையில் குடிபோதையிலிருந்ததால் தொழிலாளி தவறு செய்தாரா? என்ற கோணத்தில் விசாரணை செய்கிறார்கள்.

இதற்கிடையில் காவல்துறை விசாரணைக்கு முன்பாகத் தங்கள் தரப்பைச் சரிசெய்து கொள்ள வழக்கறிஞரின் உதவியை நாடிச் செல்கிறார்கள்

வழக்கறிஞர் இந்த வழக்கினை கோட்டிற்குச் செல்லாமல் முடித்துவிடுவதே நல்லது. ஒருவேளை தொழிலாளி இறந்துவிட்டால் பெரிய காப்பீட்டுத்தொகை தர வேண்டியது வரும் என்பதுடன் அவர்களில் ஒருவர் சிறை செல்ல நேரிடும் என்கிறார். இதைக் கேட்டு காதிர் அதிர்ச்சியடைகிறான்.

தொழிற்சாலையை அடுத்த கட்டத்திற்குக் கொண்டு செல்லும் கனவிலிருக்கிற காதிர் நேரடியாகத் தாங்களே வெளிநாட்டு வர்த்தகத்தில் ஈடுபட வேண்டும் என்று நினைக்கிறான். அதற்குப் பொருளாதாரச் சிக்கல் இருப்பதை ஆரம்பத்தில் சுட்டிக்காட்டுகிறார்கள்.

காதிர் ஆயுத்த ஆடையகம் நடத்திவரும் எஸ்மாவைக் காதலிக்கிறான். அவளைத் திருமணம் செய்து கொள்ள விரும்புகிறான். இதற்காக எஸ்மா வீட்டிற்குச் சென்று அவளது பெற்றோரை முதல் முறையாகச் சந்திக்கத் திட்டமிடுகிறான். அதே நாளில் தான் இந்த விபத்து நடக்கிறது. ஆயினும் அவன் எஸ்மா வீட்டிற்குச் செல்வதை நிறுத்தவில்லை

எஸ்மா வீட்டில் நடப்பது அழகான காட்சி. அவளது தந்தை காதிரை விசாரிக்கும் முறை. காதிர் நிதானமாகப் பதில் சொல்லும்விதம். மற்றும் எஸ்மாவின் தாயிற்கு அவனைப் பிடித்துள்ளது என்பதற்கான அடையாளமான பேச்சு. அவர்கள் ஒன்றுகூடி உண்ணுவது, இறுதியில் காதிர் இசைக்கருவியை மீட்டி பாடுவது என அந்தக் காட்சியில் ஒரு புறம் அவனது தத்தளிப்புக் கவலைகள் மறுபுறம் திருமண ஏற்பாடு. காதல். என இரண்டிற்கும் நடுவே ஊசலாடுவது சிறப்பாகப் படமாக்கப்பட்டிருக்கிறது.

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள தொழிலாளியின் மனைவி செர்பிலிடமிருந்து ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்துப் பெறுவதற்குக் காதிர் முயற்சிக்கும் காட்சியில் ஏற்படும் குழப்பமும் சண்டையும் நிஜமானது.

வறுமையான குடும்பச் சூழ்நிலையிலும் அவன் தரும் பணத்தை வாங்கிக் கொள்ள அவள் விரும்பவில்லை. தனது கணவன் திரும்பி வருவான் என்ற நம்பிக்கையோடு இருக்கிறாள். நீதி கேட்பதில் உறுதியாக இருக்கிறாள். அந்த நியாயத்தைக் காதிர் புரிந்து கொண்டிருக்கிறான். ஆனால் உண்மையை அவனால் வெளிப்படுத்த முடியவில்லை.

எதிர்பாராத விபத்தின் காரணமாகச் செர்பிலின் வாழ்க்கை மட்டுமில்லை காதிரின் வாழ்க்கையும் திசைமாறிப் போகிறது. அவன் கனவு கண்டது போலத் திருமணம் செய்து கொள்ள முடியாத சூழல் உருவாகிறது. அவசரமாக வெளிநாடு செல்ல முயலும் போது எஸ்மா அதை விரும்பவில்லை. காதிர் சட்டரீதியாகவும் உளவியல் ரீதியாகவும் சில கடுமையான சவால்களை எதிர்கொள்கிறான்.

காதிரின் மனசாட்சி நேர்மையாகச் செயல்படவே முனைகிறது. ஆனால் சூழ்நிலை அவனை எதிர்நிலைக்குத் தள்ளுகிறது. மருத்துவமனையில் அறிந்து கொண்ட உண்மையைச் செர்பிலிடம் சொல்ல முடியாமல் தவிக்கும் காட்சி அபாரமானது.

இக்கட்டான சூழ்நிலை உருவாகும் போது முதலாளிகள் தங்களைக் காப்பாற்றிக் கொள்ள எதையும் செய்வார்கள். அவர்களுக்கு உறுதுணை செய்ய வழக்கறிஞர்கள் முன்வருவார்கள். மாட்டிக் கொள்வது நிர்வாகிகள் தான். ஒரு காட்சியில் காதிர் அதை வெளிப்படையாகவே சொல்கிறான். ஆனாலும் நடந்து போன விபத்திற்குத் தான் ஒரு மறைமுகக் காரணம் என்று உணருகிறான். செர்பில் வீட்டில் அவளது பையனுடன் பழகும் விதத்திலும் மருத்துமவனையில் ஒப்பந்தத்தை வாசிக்கும் போது ஏற்படும் தயக்கத்திலும் இதை எளிதாக உணர முடிகிறது.

காதிர் மூலமாகப் பார்வையாளர்களை நோக்கி ஒரு கேள்வி எழுப்புகிறார் இயக்குநர் அது நமது சொந்த ஒழுக்கத்தைப் பற்றியதாகும். நேரிடையாகச் செய்யாத குற்றத்திற்கு ஒருவர் எவ்வளவு பொறுப்பு ஏற்பது என்ற அந்தக் கேள்வி முக்கியமானது. உண்மையாக, கலைநேர்த்தியுடன் அதைப் படத்தில் வெளிப்படுத்தியிருக்கிறார் இயக்குநர் செல்மன் நகார்.

இறப்புச் செய்தியைத் தெரிவிக்கச் செல்லும் காதிர் செர்பிலிடம் அதைச் சொல்ல முடியாமல் தவிப்பதும், அவள் சமைத்த உணவைச் சாப்பிடத் தயங்குவதும் அவளுக்குச் சொல்லாமலே விஷயம் புரியத் துவங்குவதும் இயக்குநரின் தேர்ந்த கலைவெளிப்பாடாகும்.

ஈரானிய சினிமா பெண்களையும் சிறுவர்களையும் மையமாகக் கொண்டு தொடர்ந்து இயங்குவது போல, இன்றைய துருக்கி சினிமா ஆண்களின் உலகினை, கனவுகளை, நெருக்கடிகளை நிஜமாகச் சித்தரிக்க முயலுவதாகத் தோன்றுகிறது. இந்தக் குவிமைய மாற்றம் துருக்கிய சினிமாவிற்கு தனித்துவத்தை உருவாக்கியிருக்கிறது.

இந்தப் படத்திற்குள் ஆன்டன் செகாவும் தஸ்தாயெவ்ஸ்கியும் கரைந்திருக்கிறார்கள். அவர்கள் படைப்பில் எந்த உண்மையை, நிஜத்தை நெருக்கமாக உணருகிறோமோ அதையே படத்திலும் உணருகிறோம்.

1 like ·   •  0 comments  •  flag
Share on Twitter
Published on November 29, 2022 01:48

November 28, 2022

கேரளா இலக்கிய விழா

2023 ஆண்டிற்கான KLF-KERALA LITERATURE FESTIVAL கோழிக்கோடு கடற்கரையில் நடைபெறவுள்ளது.

இந்த நிகழ்விற்கு சிறப்பு அழைப்பாளராக அழைக்கப்பட்டிருக்கிறேன்.

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on November 28, 2022 02:32

உறுபசி – மலையாளத்தில்

எனது உறுபசி நாவல் மலையாளத்தில் மொழியாக்கம் செய்யப்படுகிறது. லோகோஸ் பதிப்பகம் இதனை வெளியிடுகிறது

1 like ·   •  0 comments  •  flag
Share on Twitter
Published on November 28, 2022 02:26

S. Ramakrishnan's Blog

S. Ramakrishnan
S. Ramakrishnan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow S. Ramakrishnan's blog with rss.