S. Ramakrishnan's Blog, page 71
January 7, 2023
சென்னை இலக்கியத் திருவிழா
நேற்று அண்ணா நூற்றாண்டு நூலக அரங்கில் சென்னை இலக்கியத் திருவிழா சிறப்பாகத் துவங்கியது. தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்கள் விழாவைத் துவக்கி வைத்துச் சிறப்புரை ஆற்றினார். விழாவில் மலையாள எழுத்தாளர் பால் சக்கரியா கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினார். அமைச்சர்கள். சென்னை நகர மேயர், பாடநூல் கழக தலைவர் முன்னிலையில் இந்நிகழ்வு நடைபெற்றது.

சென்னை இலக்கியத் திருவிழா ஏற்பாடுகளைச் சிறப்பாக செய்திருந்தார்கள். தமிழக அரசின் சார்பில் இப்படி ஒரு இலக்கியவிழாவை முன்னெடுத்திருப்பது மிகுந்த பாராட்டிற்குரியது.
இந்த நிகழ்விற்கு காரணமாக இருந்த பள்ளிக்கல்வித்துறை மற்றும் பொது நூலகத்துறைக்கும், அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, நிகழ்வினைச் சிறப்பாகத் திட்டமிட்டு செயல்படுத்திய உதயசந்திரன் ஐஏஎஸ். இளம்பகவத் ஐஏஎஸ், டாக்டர் சங்கர சரவணன், பவா. செல்லத்துரை, ஒளிவண்ணன், மற்றும் அண்ணா நூற்றாண்டு நூலக இயக்குநர் மற்றும் உதவி இயக்குநர்கள் , ஒருங்கிணைப்பாளர்கள் உள்ளிட்ட அனைவரையும் பாராட்டுகிறேன்.

முதல்நிகழ்வில் கலந்து கொண்டு சென்னையும் நானும் என்ற தலைப்பில் உரையாற்றினேன். அரங்கு நிறைந்த கூட்டம். நிகழ்வின் அறிமுகவுரையை எழுத்தாளர் அகரமுதல்வன் ஆற்றினார்.

எழுத்தாளர் லட்சுமி சரவணக்குமார், ஒளிப்பதிவாளர் ஆர்.டி.ராஜசேகர், எழுத்தாளர் இமயம், எழுத்தாளர் ராஜன், ஆய்வாளர் ராஜன்குறை, டாக்டர் அரசு, முனைவர் ம. ராஜேந்திரன், ஏ.எஸ்.பன்னீர் செல்வம், திட்டக்குழு தலைவர் ஜெயரஞ்சன், பேராசிரியர் சந்திரசேகர், விழியன். பாலபாரதி, விஷ்ணுபுரம் சரவணன், கவின்மலர், பேரறிவாளன், ஒவியர் பல்லவன். இனியன், என நிறைய நண்பர்களை காணவும் பேசவும் முடிந்தது மகிழ்ச்சி அளித்தது.
ஸ்ருதிடிவி கபிலன் இந்த உரையைப் பதிவு செய்து இணையத்தில் பதிவேற்றம் செய்துள்ளார். அவருக்கு எனது மனம் நிறைந்த நன்றி.
January 4, 2023
நிறங்களை இசைத்தல்- வாசிப்பனுபவம்
Boje Bhojan
110 பக்கங்களும் 16 தலைப்புகளும் கொண்ட இந்த புத்தகத்தில் ஓவியங்கள் பற்றியும் அதை வரைந்த ஓவியர்களின் வரலாறு பற்றியும் மிகவும் பயனுள்ள தகவல்களையும் சொல்லி இருப்பது இந்த புத்தகத்தின் சிறப்பு.

பொதுவாக ஓவியம் என்பது கலை என்பதையும் தாண்டி அது ஒரு தியானத்திற்கு இணையான விஷயம் என்றே சொல்லலாம் தியானத்தில் நாம் உணரும் ஒரு அமைதியும் சரி , இசையில் நாம் அடையும் பரவசமும் சரி இவை ரெண்டுக்கு இணையாது ஓவியம். பொதுவாக ஓவியம் என்பது ஒரு இயற்கை காட்சி அதாவது மலை காடுகள் என்று இயற்கை சார்ந்த பொருட்களையோ அல்லது எதிர் பாலினத்தையோ அல்லது ராஜ வம்சம் அவர்கள் சார்ந்த நபர்களை மட்டுமே தான் சம்பந்த படுத்தி இருக்கும் என்று நினைத்து இருந்தேன் ஆனால் அந்த நினைப்பு இந்த புத்தகம் மூலம் பொய் என்று ஆகிறது. அது மட்டும் இல்லாமல் பழைய ஓவியங்கள் எப்படி பாதுகாக்க படுகிறது என்ற தகவல்களையும் சொல்லி இருக்கிறார் எஸ் ராமகிருஷ்ணன்.
ஓவியர் ஹாமர்ஷோயின் ஓவியத்தில் தொடங்கி , ஹென்றி மாங்குயின் , வின்சென்ட் வான்கோ ஓவியங்களாக இருக்கட்டும் பறவைகளை பற்றி வரைந்த ஆடுபான் ஓவியங்களாக இருக்கட்டும் , டாவின்சியின் மோனாலிசா போன்ற புகழ் பெற்ற ஓவியங்களாக இருக்கட்டும் டாவின்சி க்கு இணையாக இருந்த ராஃபல் ஆக இருக்கட்டும் எல்லோருக்கும் ஒரு பொதுவான தன்மை தான் அவர்களை சிறந்த ஓவியராக மாற்றியிருக்கிறது.
அது என்ன என்பதை நான் சொல்லமாட்டேன். நீங்கள் இந்த புத்தகம் படிக்கும் போது உங்களுக்கே தெரியும்.
இது தவிர துப்பறியும் கதைகளுக்கு ஓவியம் வரைந்த ராபர்ட் பாசெட், குதிரை சந்தைகளில் உள்ள குதிரைகளை வரைய ஆண் வேடம் போட்டு சென்ற ரோசா பன்ஹெர்,பழங்குடி மக்களை ஓவியமாக வரைந்த ஜார்ஜ் கேட்லின்,பெண் ஓவியர் எலிசபெத் லூயிஸ் என அபூர்வமான தகவல்கள் இந்த புத்தகத்தில் இருக்கிறது.
கண்டிப்பாக வாசிக்க பட வேண்டிய கட்டுரை தொகுப்பு
எனது புதிய நூல்கள்
சென்னை புத்தகக் கண்காட்சி தேசாந்திரி அரங்கு எண் 415 & 416ல் எனது புதிய புத்தகங்களைப் பெறலாம்




January 2, 2023
ஆர். சேஷசாயி பாராட்டு
ஹிந்துஜா குழுமத்தின் துணைத்தலைவர் ஆர். சேஷசாயி இசையிலும் இலக்கியத்திலும் தீவிர ஈடுபாடு கொண்டவர். சமீபத்தில் ‘The Dance of Faith’ என்ற நாவலை எழுதியிருக்கிறார். இந்நாவல் மிகுந்த பாராட்டினைப் பெற்று வருகிறது.

சென்ற ஆண்டு அவர் வாசித்த சிறந்த புத்தகங்களைப் பற்றி The Hindu BusinessLine ல் எழுதியிருக்கிறார். அதில் எனது சஞ்சாரம் நாவல் இடம்பெற்றுள்ளது.

ஆர் சேஷசாயி அவர்களுக்கு எனது மனம் நிறைந்த நன்றி

மண்டியிடுங்கள் தந்தையே
டால்ஸ்டாயின் வாழ்க்கையை மையப்படுத்தி நான் எழுதிய மண்டியிடுங்கள் தந்தையே நாவல் ஓராண்டில் மூன்று பதிப்புகள் விற்றுத் தீர்ந்திருக்கின்றன
இந்நாவலுக்கு எழுதப்பட்ட அறிமுக/ விமர்சனக் கட்டுரைகளை தொகுத்தால் ஐநூறு பக்கங்களுக்கு மேலாக வரும்.
இந் நாவல் மலையாளம், தெலுங்கு, ஆங்கிலம், ரஷ்ய மொழிகளில் வெளிவர இருக்கிறது
தேசாந்திரி பதிப்பகம் இந்நாவலின் புதிய பதிப்பை புத்தகக் கண்காட்சிக்காக வெளியிட்டுள்ளது.

தேசாந்திரி பதிப்பகம் அரங்கு
சென்னை புத்தகக் கண்காட்சியில் தேசாந்திரி பதிப்பகம் அரங்கு அமைத்துள்ளது.
எண் 415 மற்றும் 416
நான்காவது வரிசையின் பின்பகுதியில் உள்ளது
தினமும் மாலை 4 மணிக்கு தேசாந்திரி பதிப்பக அரங்கிற்கு வருவேன், விருப்பமான வாசகர்கள், நண்பர்கள் சந்திக்கலாம்

January 1, 2023
பனிவிழும் பனைவனம்
காலம் செல்வம் எனும் செல்வம் அருளானந்தம் எழுதியுள்ள பனிவிழும் பனைவனம் நூலை வெளிவருவதற்கு முன்பாகவே வாசித்தேன். மிகவும் அற்புதமாக எழுதியிருக்கிறார். முக்கியமான புத்தகம்.

இந்த எழுத்து துன்பமும் இன்பமும் வலியும் பகடியும் நிறைந்த ஒரு நினைவு கூரல்.என முன்னுரையில் சச்சிதானந்தன் சுகிர்த ராஜா குறிப்பிடுவது மிகப் பொருத்தமானது. படிக்கும் போது சிரிப்பையும், நூலை வாசித்து முடிக்கும் போது கண்ணீரையும் வரவழைத்த அசலான எழுத்து.

யாழ்ப்பாணத்தைக் கொண்டாடும் இந்த நூல் அதன் அரசியல் மாற்றங்கள். பண்பாட்டு நினைவுகள். மற்றும் மறக்கமுடியாத மனிதர்களின் வாழ்க்கையை மிக நுண்மையாகச் சித்தரித்துள்ளது. வரலாற்று நிகழ்வுகள் ஒரு சாமானிய மனிதனை எப்படிப் பாதிக்கிறது. அவன் என்னவாக மாறுகிறான் என்பதை மிக நேர்மையாகச் செல்வம் பதிவு செய்திருக்கிறார்.
கனடாவில் வாழும் செல்வம் காலம் என்ற இலக்கிய இதழை நடத்திவருகிறார். தீவிர வாசிப்பாளர். இலக்கியப் பற்றாளர்.
இதன் வெளியீட்டுவிழா விரைவில் சென்னையில் நடைபெற உள்ளது
.இந்நூலைக் காலச்சுவடு பதிப்பகம் வெளியிடுகிறது
சென்னை இலக்கியத் திருவிழா.
தமிழக அரசின் சார்பில் சென்னை இலக்கியத் திருவிழா ஜனவரி 6 முதல் 8 வரை நடைபெறுகிறது.
மூன்று நாட்கள் நடைபெறும் இந்த விழா சென்னை அண்ணா நூற்றாண்டு நூலக வளாகத்தினுள் நடைபெறுகிறது.
தமிழகம் முழுவதும் ஐந்து மையங்களில் இது போன்ற இலக்கியத் திருவிழா நடைபெறவுள்ளது. முதல் நிகழ்வு திருநெல்வேலியில் துவங்கியது. சென்னையில் நடைபெறுவது இரண்டாவது இலக்கியத் திருவிழா.
தமிழ் இலக்கியத்தைக் கொண்டாடும் தமிழக அரசின் இந்த ஏற்பாடு மிகுந்த பாராட்டிற்குரியது.
சென்னை இலக்கியத் திருவிழாவில் ஜனவரி 6 மதியம் 12 மணிக்கு சென்னையும் நானும் என்ற தலைப்பில் உரையாற்றுகிறேன்.

December 30, 2022
ஷேக்ஸ்பியரின் உலகம்- 1 லியரும் முட்டாளும்
ஷேக்ஸ்பியரின் கிங் லியர் நாடகம் இருபது முறைக்கும் மேலாகத் திரைப்படமாக்கப்பட்டுள்ளது. இதில் சில தொலைக்காட்சிக்கான தயாரிப்பு. பெரும்பான்மையான ஷேக்ஸ்பியர் நாடகங்கள் திரைப்படமாகியுள்ளன. லியர் படங்களில் ரஷ்ய இயக்குநரான கிரிகோரி கோஜின்ட்சேவ் இயக்கிய 1971 ஆம் ஆண்டு வெளியான கிங் லியர் நிகரற்றது. இப்படத்தைப் பலமுறை பார்த்திருக்கிறேன். இன்று இணையத்தில் அதன் தரமான பிரதி காணக்கிடைக்கிறது.

கிங் லியராக நடித்திருப்பவர் ஜூரி ஜார்வெட். லியர் இப்படித்தான் இருந்திருப்பார் என்று தோன்றும்படியான. அற்புதமான நடிப்பு. மகளால் புறக்கணிக்கப்படும் போதும் சூறைக்காற்றில் சிக்கி அவதிப்படும் போதும் அவரது முகமும் உடலும் வெளிப்படுத்தும் நடிப்பு அபாரம்.

.கிரிகோரி கோஜின்ட்சேவின் கடைசித் திரைப்படம் இதுவாகும். பிரம்மாண்டமான நிலப்பரப்பும் கற்கோட்டைகளும் தொலைவிலிருந்து கூட்டமாக நடந்து வரும் மக்களின் வருகையும் பிரமிப்பூட்டுகின்றன. தேர்ந்த அரங்க அமைப்பு, இசை, ஆடைவடிவமைப்பு, உணர்ச்சிப்பூர்வமான நடிப்பும் கொண்டதாகப் படத்தைக் காவியமாக உருவாக்கியிருக்கிறார். கிரிகோரி கோஜின்ட்சேவ்

ஷேக்ஸ்பியரின் கிங் லியர்1605 முதன்முதலில் நிகழ்த்தப்பட்டது1608 இல் வெளியிடப்பட்டது. நானூறு வருஷங்களைக் கடந்தபின்பும் எது லியரைக் கொண்டாட வைக்கிறது. ஒரு தமிழ் பார்வையாளன் லியரை எப்படி அணுகுகிறான். புரிந்து கொள்கிறான்
நாடகம் தந்தை மகள் உறவின் மீதான விசாரணையாக ஒரு தளத்திலும் மறுதளத்தில் தேசம் சொந்த காரணங்களுக்காகத் துண்டாடப்படுவதையும் இதன் காரணமாக அதிகார மாற்றம் பற்றியதாகவும் உள்ளது. இன்றும் இந்த இருதளங்களும் மாற்றமின்றித் தொடர்கின்றன.
லியர் அரசனுடன் எப்போதும் ஒரு முட்டாள் இருக்கிறான். அவனுக்கு நாடகத்தில் பெயர் கிடையாது. அந்த முட்டாள் உண்மையைப் பேசுகிறவனாக, விசுவாசியாக, துயரை ஆற்றுப்படுத்துகிறவனாக, எதிர்காலத்தை முன்னறிவிப்பவனாக இருக்கிறான்.

ஏன் லியரின் முட்டாள் இளைஞனாகச் சித்தரிக்கப்படுகிறான். இளமை முட்டாள்தனத்தை ஆனந்தமாகச் செய்யும் காலம் என்பதாலா, எது முட்டாளை இவ்வளவு ஞானம் கொண்டவனாக உருமாற்றியது. முட்டாளுக்குக் கடந்தகாலமில்லை. எதிர்காலத்தைப் பற்றிக் கவலை கொள்ளுவதுமில்லை
இன்று நாம் பயன்படுத்தும் முட்டாள் என்ற சொல்லின் பொருளும் மத்திய காலத்தில் பயன்படுத்திய சொல்லின் பொருளும் வேறானது. நாடகத்தில் வரும் முட்டாள் உண்மையில் அறிவாளி. அவன் ஒருவனே லியர் அரசனின் தவறுகளைச் சுட்டிக்காட்டுகிறான். நடக்கப்போகும் நிகழ்வுகளை முன் உணர்ந்து சொல்கிறான்
தன்னை லியரின் நிழல் என்றே சொல்லிக் கொள்கிறான். லியர் அரசன் எந்த நேரமும் முட்டாளைத் தேடுகிறான். துணைக்கு வைத்துக் கொள்கிறான். கிரிகோரி கோஜின்ட்சேவின் கிங் லியரில் இந்த முட்டாள் மிக அற்புதமாக நடித்திருக்கிறான்.
நாடகத்தில் Nothing என்ற சொல் 34 முறை இடம்பெற்றுள்ளது. இதில் லியர் மட்டும் பத்துமுறை இந்தச் சொல்லைப் பயன்படுத்துகிறான். ஒன்றுமில்லை என்பதை ஆராய்வது தான் நாடகத்தின் மையம் போலும். இதனால் தான் தந்தை தன் மீதான அன்பைப் பற்றிக் கேட்கும் போது கார்டிலியா Nothing என்கிறாள்.

கார்டிலியாவிற்கும் மற்ற இரு சகோதரிகளுக்கும் இடையில் எவ்வளவு ஆண்டுகள் இடைவெளி என்ற கேள்விக்கு நாவலாசிரியர் ஜே.ஆர். தோர்ப்பதினைந்து வருஷங்கள் என்கிறார். ஒன்றிரண்டு வயது வேறுபாடு கொண்ட சகோதரிகள் ஒன்று போலத் தான் நடந்து கொள்வார்கள். கார்டிலியா நீண்ட இடைவெளிக்குப் பின்பு பிறந்தவள் ஆகவே அவளிடம் வேறுபட்ட தன்மைகளைக் காண முடிகிறது என்கிறார்கள்.
லியரின் மனைவி என்றொரு நாவலை ஜே.ஆர். தோர்ப் எழுதியுள்ளார் வெளியாகியுள்ளது. இந்த நாவல் நாடகத்தில் குறிப்பிடப்படாத லியர் அரசனின் மனைவியைப் பற்றியது. இப்படி ஷேக்ஸ்பியரின் நாடகத்திலிருந்து எத்தனையோ மறுபுனைவுகள் எழுதப்பட்டிருக்கின்றன. ஜே.ஆர். தோர்ப் லியர் அரசனின் மனைவி கணவனைப் பிரிந்து தனியே வாழுகிறாள். அவளது நினைவுகளின் வழியே லியரும் பிள்ளைகளும் புதிய கோணத்தில் விவரிக்கபடுகிறார்கள்
டபிள்யூ.எஸ். மார்வின் “லியரின் மனைவி” என்ற தலைப்பில் ஒரு கவிதை எழுதியிருக்கிறார். அதுவும் புதிய பார்வையில் எழுதப்பட்டதே
ஒருவேளை லியரின் மனைவி இருந்திருந்தால் லியரின் மகள்கள் எப்படி நடந்திருப்பார்கள். இது போன்ற பிரச்சனை உருவாகியிருக்குமா என்ற கேள்வியை எழுப்புகிறார்கள்.
அது போலவே மனைவியை இழந்த காரணத்தால் தான் லியர் அரசன் தன்னைப் பிள்ளைகள் எவ்வளவு நேசிக்கிறார்கள் என்று அறிந்து கொள்ள முயலுகிறான் என்றும் சொல்கிறார்கள்
நாடகத்தில் வரும் முட்டாள் கடைசி அங்கத்தில் திடீரெனக் காணாமல் போய்விடுகிறான். அவன் இறந்து போய்விட்டதாக லியர் அரசனின் பேச்சில் தெரிந்து கொள்ள முடிகிறது. ஏன் உற்றதுணையாக இருந்த முட்டாள் காணாமல் போகிறான் என்பதற்குச் சுவாரஸ்யமான காரணம் ஒன்றைச் சொல்கிறார்கள்
அந்தக் காலத்தில் முட்டாளாகவும் கார்டிலியாகவும் ஒரே நபரே நடிக்கும் சூழல் இருந்தது. ஆகவே ஷேக்ஸ்பியர் முட்டாளைக் கடைசி அங்கத்தில் காணாமல் போகச் செய்துவிட்டார் என்கிறார்கள்.
ஷேக்ஸ்பியர் நாடகத்தில் புயல் தொடர்ந்து இடம்பெறுகிறது. இந்த நாடகத்திலும் புயலில் சிக்கி லியரும் முட்டாளும் தஞ்சம் தேடுகிறார்கள். அந்தக் காட்சியின் போது முட்டாள் வீடற்றவன் என்பது சுட்டிக்காட்டப்படுகிறது.
உண்மையை நேரடியாக அப்படியே சொல்லிவிட முடியாது. அதைப் பதப்படுத்தி உரிய முறையில் வெளிப்படுத்த வேண்டும், அதைத்தான் நாடகத்தில் வரும் முட்டாள் செய்கிறான் என்கிறார்கள். சில வேளைகளில் இந்த முட்டாளின் செய்கை கிரேக்க நாடகத்தில் வரும் கோரஸை நினைவுபடுத்துகிறது

கார்டிலியாவும் முட்டாளும் லியரின் பராமரிப்பாளர்கள், ஒருவர் இருக்கும் போது, மற்றவர் இருக்க வேண்டியதில்லை. ஆகவே கடைசிக் காட்சியில் முட்டாள் இடம்பெறவில்லை என்றும் விமர்சகர்கள் குறிப்பிடுகிறார்கள்.
லியருக்கும் முட்டாளுக்குமான உறவைப் பற்றி எழுத்தாளர் ஜார்ஜ் ஆர்வெல் எழுதிய கட்டுரை சிறப்பானது. இதில். ஷேக்ஸ்பியரைப் பற்றி டால்ஸ்டாயின் மதிப்பீட்டினை ஆராய்கிறார் ஆர்வெல்., லியரின் கதையுடன் டால்ஸ்டாயின் சொந்தக் கதை நிறைய ஒற்றுமைகளைக் கொண்டிருக்கிறது. வீட்டைவிட்டு வெளியேறிய லியர் போலவே டால்ஸ்டாய் கடைசி நாட்களில் நடந்து கொண்டார் என்கிறார் ஆர்வெல்

லியர் அரசனை முட்டாள் மட்டுமே புரிந்து கொண்டிருக்கிறான். உண்மையான சூழலை, மனித இயல்பைப் புரிந்து கொள்ள வைக்கிறான். அவனை வேலை மன்னரை மகிழ்ச்சிப்படுத்துவது மட்டுமில்லை. வழிகாட்டுவது. அவனது பேச்சில் ஞானமும் கேலியும் ஒருங்கே வெளிப்படுகிறது
லியரை வாசிக்கும்போதோ, திரைப்படமாகக் காணும் போதோ நமக்குள் இருக்கும் லியரை, முட்டாளை நாம் அடையாளம் காணுகிறோம். இந்தியத் தந்தை ஒரு போதும் லியர் மன்னராக நடந்து கொள்ள மாட்டான். பிள்ளைகளால் புறக்கணிக்கப்படும் போது தனது முன்வினை என்றே நினைத்துக் கொள்வான்.
லியர் அரசன் நாடகத்தில் லியர் நடந்த தவறுகளுக்குக் கடவுளைக் குற்றம் சாட்டவில்லை. லியர் தனது அதிகார இழப்பை உணரத் துவங்கும் போது தனது ஆடைகளைக் கிழித்து எளிய மனிதனாக உருமாறுகிறான். வீழ்ச்சி அடைந்த நிலையில் தான் உலகம் அவனுக்குப் புரிகிறது.
where’s my Fool? I have not seen him this two days. என ஆரம்பக் காட்சியில் லியர் தேடுகிறார். முட்டாள் அறிமுகமானதும் அவனது கேலி லியரின் செயலைப்பற்றியதாக இருக்கிறது.அவன் ஒரு இடத்தில் Can you make no use of nothing என இடத்தில் கேட்கிறான்.
ஸ்காட்டிஷ் ஓவியர் வில்லியம் டைஸ் வரைந்துள்ள King Lear and the Fool ஓவியத்தில் முட்டாள் ஆர்வத்துடன் லியரை பார்த்துக் கொண்டிருக்கிறான். கைவிடப்பட்ட நிலையில் லியர் குழப்பத்துடன் எதையோ பேசிக் கொண்டிருக்கிறார். இந்த ஓவியத்தையும் ரஷ்ய லியர் அரசன் திரைப்படத்தையும் ஒன்றாகக் காணும் போது கிரிகோரி கோஜின்ட்சேவ் எவ்வளவு ஆழமாக லியரைப் புரிந்து திரையில் மறுஉருவாக்கம் செய்திருக்கிறார் என்று தெரிகிறது.
சிறந்த புத்தகங்கள் 2022
இந்த ஆண்டில் நான் படித்த புத்தகங்களில் எனக்கு மிகவும் பிடித்தவை
கவிதை

நிழல், அம்மா
ஷங்கர் ராமசுப்ரமணியனின் புதிய கவிதைத் தொகுப்பு. தனது முந்தைய கவிதைகளிலிருந்து விலகி சொல்முறையிலும் வெளிப்பாட்டிலும் புதிய உச்சங்களைத் தொட்டிருக்கிறார்.
••
நீரின் திறவுகோல்: பிறமொழிக் கவிதைகள்
க.மோகனரங்கன்
மிகச்சிறந்த மொழிபெயர்ப்பு கவிதைகளின் தொகுப்பு
இதனைப் பற்றி இணையதளத்தில் விரிவாக எழுதியிருக்கிறேன்
தமிழினி பதிப்பகம்

••
அசகவதாளம்
பெரு விஷ்ணுகுமார்

பெரு. விஷ்ணுகுமாரின் இரண்டாவது கவிதை தொகுப்பு. இவரது கவிதைகளில் வெளிப்படும் புதிய படிமங்கள் வியப்பூட்டுகின்றன. காலச்சுவடு பதிப்பகம் இதனை வெளியிட்டுள்ளது
••
பாடிகூடாரம்
கண்டராதித்தன்
1990-களிலிருந்து கவிதைகள் எழுதி வருபவர். மிக முக்கியக் கவிஞர் இந்த தொகுப்பில் மரபும் இன்றைய வாழ்வும் இணையும் தருணங்கள் மிக அழகாக வெளிப்பட்டுள்ளன. சால்ட் பதிப்பகம் இதனை வெளியிட்டுள்ளது

நாவல்
கருங்குன்றம்
மமாங் தய் , கண்ணையன் தட்சணாமூர்த்தி (தமிழில்)
கிறிஸ்துவப் பிரச்சாரம் செய்வதற்காக திபெத் சென்ற பிரெஞ்சுப் பாதிரியின் வாழ்க்கையை விவரிக்கும் நாவல்
வட கிழக்கின் மறைக்கப்பட்ட வரலாற்றையும் இருண்ட வாழ்க்கையையும் சிறப்பாக பதிவு செய்துள்ளது
2017ஆம் ஆண்டின் சிறந்த ஆங்கில மொழி படைப்புக்கான சாகித்திய அகாதெமி விருது பெற்ற நாவலிது
சாகித்திய அகாதெமி வெளியீடு

கதாநாயகி
ஜெயமோகன்
விஷ்ணுபுரம் பதிப்பகம்
கோதிக் திரைப்படம் போல விரிவு கொள்ளும் இந்நாவல் இருதளங்களில் இருகாலங்களில் இயங்குகிறது,. புத்தகம் தான் இதன் இணைப்பு புள்ளி. வசீகரமான புனைவு மொழியின் வழியே ஜெயமோகன் கதையைப் பின்னிச் செல்லும் நேர்த்தி மிகவும் பாராட்டிற்குரியது.

அல் கொஸாமா
கனகராஜ் பாலசுப்பிரமணியம்
ஜீரோ டிகிரி நாவல் போட்டியில் முதல்பரிசு பெற்ற நாவல். கனகராஜ் பாலசுப்பிரமணியம், தமிழ்-கன்னடம் ஆகிய இருமொழி எழுத்தாளர், அரபு பதுவா இன மக்களின் வாழ்க்கையை பேசும் சிறந்த நாவல்.

தவ்வை
அகிலா
டிஸ்கவரி புக் பேலஸ்

தெய்வம் பெண் என்ற இருநிலைகளுக்குள் ஊடாடுகிறது நாவல். திருநெல்வேலி வட்டார வழக்கில் எழுதப்பட்டுள்ளது, பெண்ணின் அகத்துயரை மிக உண்மையாகப் பதிவு செய்துள்ளார் அகிலா
ஒரு பாடகி ஒரு மாயப்பிறவி
சுரேஷ் குமார் இந்திரஜித்
காலச்சுவடு
சுரேஷ் குமார் இந்திரஜித் நாவலின் மையமாக இருப்பது கர்நாடக சங்கீதம். அதன் வழி நெருக்கம் கொள்ளும் இருவரது வாழ்க்கையினையும் பேசுகிறது நாவல்
இதில் வரும் மாய மனிதன் ஒவ்வொரு காலகட்டத்திலும் வேறு கதாபாத்திரமாக உருமாறி உலவுகிறான். மாயமாகிவிடுகிறான் நானாசாகிப், அஸ்வத்தாமன், பட்டினத்தார், வள்ளலார் என காலத்தின் முன்பின்னாக ஊடாடும் புனைவு விசித்திரமானது.

கட்டுரைகள்
அருவம் உருவம்: நகுலன் 100
நகுலன் நூற்றாண்டுவிழாவைக் கொண்டாடும் விதமாக உருவாக்கபட்ட சிறந்த தொகுப்பு. நகுலனின் படைப்புகள் மற்றும் ஆளுமை குறித்த கட்டுரைகள். வெளியாகாத படைப்புகள். மொழிபெயர்ப்புகளை உள்ளடக்கியது. கவிஞர் ஷங்கர ராம சுப்ரமணியன் இதனைத் தொகுத்துள்ளார். நூல் வனம் பதிப்பகம் கெட்டி அட்டையில் சிறப்பாக கொண்டு வந்திருக்கிறார்கள்.

நூல்கள் நூலகங்கள் நூலகர்கள்
சச்சிதானந்தன் சுகிர்தராஜா
லண்டனில் வசிக்கும் சச்சிதானந்தன் சுகிர்தராஜா புத்தகங்க்ளைத் தேடித்தேடிப் படிப்பவர். சுவாரஸ்யமாக எழுதுபவர்
இவரது வாசிப்பின் ஆழம் வியப்பளிக்கிறது. சிறந்த நூல்கள்., நூலகங்கள் நூலகர்கள் பற்றிய இந்த கட்டுரைகள் மிகச்சிறப்பானவை. இவை ஆங்கிலத்தில் வெளியாகி இருந்தால் சர்வதேச அளவில் கொண்டாடப்பட்டிருக்கும்.

சிறுகதைகள் / மொழிபெயர்ப்பு
விலாஸம்
பா. திருச்செந்தாழை சிறுகதைத் தொகுப்பு. அற்புதமான கதைகளை தொடர்ந்து எழுதிவருகிறார் திருச்செந்தாழை. இந்த தொகுப்பில் உள்ள கதைகள் கவித்துவமான மொழியில் கச்சிதமாக எழுதப்பட்டிருக்கின்றன
தமிழ் சிறுகதையின் அடுத்த கட்ட நகர்வை முன்னெடுத்துச் செல்கிறார் திருச்செந்தாழை.
எதிர் வெளியீடு

கோதே என்ன சொல்லியிருந்தால் என்ன?
பெருந்தேவி
காலச்சுவடு
பெருந்தேவியின் குறுங்கதைகள் புனைவின் விசித்திரங்களால் உருவானவை. இக்கதைகள்.சமகால வாழ்வையும் மனிதர்களையும் நுண்மையாக அணுகி புதிய கதைமொழியில் எழுதப்பட்டிருக்கின்றன

புத்த மணியோசை
கன்னடச் சிறுகதைகள் கே. நல்லதம்பி மொழியாக்கம்
எதிர் வெளியீடு
சிறந்த கன்னடச்சிறுகதைகளின் மொழியாக்கம். இதனைப் பற்றி இணையதளத்தில் விரிவாக எழுதியிருக்கிறேன்
நல்லதம்பி இந்த ஆண்டு மொழிபெயர்ப்பிற்கான சாகித்ய அகாதமி விருது பெற்றிருக்கிறார். அவருக்கு எனது வாழ்த்துகள்

மரபு இலக்கியம்
ஓர் ஏர் உழவன்
ஆர்.பாலகிருஷ்ணன்
பாரதி புத்தகாலயம்
சங்க இலக்கியம் குறித்த சிறந்த கட்டுரைகள். இணையத்தில் தொடர் சொற்பொழிவாக ஆர் பாலகிருஷ்ணன் ஐஏஎஸ் நிகழ்த்தி பெரும்பாராட்டினைப் பெற்ற உரையின் மேம்படுத்தபட்ட கட்டுரை வடிவம்

••••
S. Ramakrishnan's Blog
- S. Ramakrishnan's profile
- 657 followers
