சின்னஞ்சிறு கவிஞன்
The Kindergarten Teacher என்ற இஸ்ரேலியத் திரைப்படத்தில் Being a poet in our world is going against the nature of the world என்ற வசனம் இடம்பெற்றுள்ளது. முற்றான உண்மையிது.

ஒரு கவிஞனின் மனதில் கவிதை எப்படிப் பிறக்கிறது. எது அவனைக் கவிதை எழுதத் தூண்டுகிறது என்ற கேள்வியை நூற்றாண்டுகளாகக் கவிஞர்களிடம் கேட்டுவருகிறார்கள். இதற்குச் சொல்லப்பட்ட அத்தனை பதில்களுக்கும் வெளியே கவிதை உருவாகும் விதம் ரகசியமாகவும் ஆழ் மனதின் வெளிப்பாடாகவும் விளக்கமுடியாத புதிராகவுமே தொடர்கிறது.
ஜப்பானில் ஒரு காலத்தில் நிறையக் கவிதைப்பள்ளிகள் இருந்தன. அதன் ஆசிரியர்களாகப் புகழ்பெற்ற கவிஞர்கள் செயல்பட்டார்கள். பாஷோவின் நாட்குறிப்பிலும் இஸாவின் நாட்குறிப்பிலும் இத்தகைய கவிதைப்பள்ளிகளைப் பற்றி அறிந்து கொள்ள முடிகிறது
ஜப்பானுக்குச் சென்றிருந்த போது நானே கவிஞர் பாஷோவின் நினைவகத்தில் நடைபெற்றுவரும் கவிதைப்பள்ளி ஒன்றினை பார்த்தேன். பள்ளி மாணவர்கள் அங்கே கவிதை பயிலுகிறார்கள். ஹைக்கூ எழுதுவதற்கான அடிப்படை பயிற்சிகள் தருகிறார்கள்.
எந்தக் கவிதைப் பள்ளியிலும் பயிலாமல். முறையாக இலக்கணம் பயிலாமல் கவிதையின் வடிவம் மற்றும் நுட்பங்களை அறியாமல் ஒரு கவிஞன் பிறந்துவிடுகிறான். அற்புதமான கவிதைகளை எழுதுகிறான். கவிஞனாக அறியப்பட்ட பின்பு அதன் நுட்பங்களைக் கற்றுக் கொள்ளவும் அடுத்த நிலைக்குச் செல்லவும் முற்படுகிறான். அதில் வெற்றியும் தோல்வியும் அடைகிறான்.

The Kindergarten Teacher என்ற 2014ல் வெளியான இஸ்ரேலியத் திரைப்படத்தில் மழலையர் பள்ளியில் படிக்கும் யோவா என்ற ஐந்து வயது சிறுவன் திடீரென “I have a poem” என்று ஒரு கவிதை சொல்கிறான். அவனது கவிதையைக் கண்டு வியந்த ஆசிரியை நீரா எப்படி அந்தக் கவிதை தோன்றியது என்று விசாரிக்கிறாள். மனதில் திடீரெனத் தனக்குக் கவிதை வரிகள் தோன்றுகின்றன. அவற்றைச் சொல்கிறேன் என்கிறான்.
கவிதைகள் எதையும் வாசித்து அறியாத, கவிதையின் இலக்கணங்கள் எதுவும் அறியாத சிறுவன் எப்படி இவ்வளவு அற்புதமாகக் கவிதை சொல்கிறான் என்று வியந்து போகிறாள். அவனுக்குக் கவிதை எழுத வேண்டும் என்று தோன்றும் போது தன்னிடம் சொல்லும்படியாகக் கேட்கிறாள்.
பள்ளி ஆசிரியை நீரா கவிதைகள் எழுத விரும்புகிறவள். இதற்காக ஒரு கவிதை வகுப்பில் கலந்து கொண்டு பயிற்சி பெறுகிறாள்.
அந்த வகுப்பில் ஒரு நாள் யோவா சொல்லிய கவிதையைத் தனது கவிதை என்று சொல்லி வாசிக்கிறாள். அதைக் கவிதை வகுப்பு நடத்தும் ஆசிரியர் சைமன் மிகவும் பாராட்டுகிறான். ஒரு பக்கம் சந்தோஷம் மறுபக்கம் அது தனது கவிதையில்லையே என்ற குற்றவுணர்வுக்கு உள்ளாகிறாள்
யோவாவின் திறமையை அவனது வீடு அறியவில்லை. உணவகம் நடத்தும் தந்தை தொழிலில் மூழ்கிக்கிடக்கிறார். , பிரிந்து வாழும் பெற்றோர்கள். அன்புகாட்ட யாருமில்லாத நிலை. தாதி தான் அவனைப் பள்ளிக்கு அழைத்து வருகிறாள். இந்தச் சூழலில் அவன் உணரும் விசித்திர மனநிலையே கவிதை எழுத வைக்கிறது..
கவிதை எழுதத் தோன்றும் தருணத்தில் தன்னைத் தொலைபேசியில் அழைத்துச் சொல்லும்படியாக நீரா கேட்டுக் கொள்கிறாள். யோவாவும் அப்படி ஒரு நாள் அவளைத் தொலைபேசியில் அழைத்துக் கவிதை சொல்கிறான்.

கவிதை சொல்லும் தருணத்தில் அவன் பெரியவர்கள் போல நடந்து கொள்கிறான். அவனது முகபாவம் மாறிவிடுகிறது. உணர்ச்சிகளை வெளிக்காட்டிக் கொள்ளாமல் அழுத்தமாகக் கவிதை சொல்கிறான். அவன் ஒரு பிறவிக் கவிஞன் என்பது போலவே நீரா உணருகிறாள்.
உள்ளூரில் நடைபெறும் கவிதை வாசிப்பு நிகழ்வில் யோவாயை பங்குபெற வைத்து அவனுக்கான அங்கீகாரத்தைப் பெற்றுத்தர வேண்டும் என்று நினைக்கிறாள். இதற்கு யோவாவின் தந்தை அனுமதி தருவதில்லை. ஆகவே பொய் சொல்லி அவனை அழைத்துக் கொண்டு போகிறாள். யோவா அங்கே தனது கவிதையைச் சொல்லிப் பாராட்டுப் பெறுகிறான்
நீரா இந்நாள் வரை தன்னை ஏமாற்றியதாக உணரும் சைமன் அவளது மோசடியைக் கண்டு கோபமாகி கவிதை வகுப்பை விட்டு வெளியேறும்படி சொல்கிறான்.
யோவாவை நீரா கவிதை நிகழ்விற்கு அழைத்துச் சென்றதையும் அவள் யோவா மீது அதிக உரிமை எடுத்துக் கொள்வதையும் விரும்பாத தந்தை அவனை வேறு ஒரு மழலையர் பள்ளியில் சேர்க்கிறார்.
இந்த நிராகரிப்பை நீராவால் ஏற்கமுடியவில்லை. அவள் யோவாயின் மீது கொண்டுள்ள அன்பால் அவனைத் தேடி புதிய பள்ளிக்கு வருகிறாள். பழகுகிறாள்.

ஒரு நாள் அவனைத் தன்னுடன் காரில் அழைத்துக் கொண்டு கண்காணாத இடத்திற்குச் செல்கிறாள். அங்கே இருவரும் ஒன்றாக ஏரியில் நீந்துகிறார்கள். யோவா ஒரு கவிதை சொல்கிறான். அவர்கள் மகிழ்ச்சியாக நாளை கழிக்கிறார்கள். முடிவு எதிர்பாராத அதிர்ச்சியை உருவாக்குகிறது.
கவிஞனான ஒரு சிறுவனின் திறமையை அடையாளம் காணும் ஆசிரியர் கதாபாத்திரம் மிக அழகாக உருவாக்கப்பட்டிருக்கிறது. யோவா கவிதை சொல்லும் நேரத்தைத் தவிர மற்ற நேரங்களில் இயல்பான விளையாட்டு சிறுவனாகவே இருக்கிறான்.
நீராவால் கடைசிவரை கவிதை பிறக்கும் ரகசியத்தை அறிந்து கொள்ள முடிவதேயில்லை. ஆனால் அன்பிற்கான ஏக்கம் தான் கவிதையை உருவாக்குகிறது என்பது போலப் புரிந்து கொள்கிறாள். அவனிடம் அன்பு காட்டுகிறாள். இறுதிக்காட்சியில் அவனது அம்மாவைப் போலவே நீராவை நாம் உணருகிறோம்.
பள்ளி வகுப்பறைக்குள் ஒரு கவிஞன் ஒளிந்திருக்கக் கூடும். அவனை அடையாளம் கண்டு படைப்பாற்றலை உலகறியச் செய்ய நல்லாசிரியர் தேவை. அப்படி ஒரு ஆசிரியரை படம் நமக்குக் காட்டுகிறது. எளிமையும் அழகும் கொண்ட இத் திரைப்படம் இதன் காரணமாகவே நம்மைக் கவருகிறது,
S. Ramakrishnan's Blog
- S. Ramakrishnan's profile
- 657 followers
