S. Ramakrishnan's Blog, page 79

September 13, 2022

சலூன் நூலக விழா

இரண்டு நாட்களாகத் தூத்துக்குடியிலிருந்தேன். தனது சலூனில் நூலகம் ஒன்றை அமைத்து புத்தக வாசிப்பைப் பரவலாக்கி வரும் பொன் மாரியப்பன் இலக்கிய வாசகர் திருவிழா ஒன்றினை ஏற்பாடு செய்திருந்தார்.

இப்படி ஒரு நிகழ்ச்சி இந்தியாவில் எங்கும் நடந்ததில்லை. மில்லர்புரத்தில் தனது சலூன் உள்ள வீதியிலே மேடை அமைத்து திறந்தவெளிக் கூட்டமாக அமைத்திருந்தார். இருநூறு பேருக்கும் மேலாக வந்திருந்தார்கள். அவரது கடையின் வாடிக்கையாளர்கள் மட்டுமின்றிப் பொது மருத்துவமனை மருத்துவர்கள், தொழிலதிபர்கள். அரசு அதிகாரிகள். வங்கி அதிகாரி. பள்ளி ஆசிரியர்கள், நகராட்சி உறுப்பினர், காவல்துறை அதிகாரி, எழுத்தாளர்கள். நூலகர்கள் எனப் பலரும் நிகழ்வில் கலந்து கொண்டு வாழ்த்தினார்கள்.

எளிய குடும்பத்தில் பிறந்து, சிகை திருத்தும் கலைஞராக வாழ்க்கை நடத்தும் மாரியப்பன் புத்தக வாசிப்பை முன்னெடுப்பதற்காகத் தன்னால் முடிந்த அத்தனை விஷயங்களையும் தொடர்ந்து செய்து வருகிறார்.

அவரது சலூனில் புத்தகம் படிக்கிறவர்களுக்குக் கட்டணச்சலுகை தருகிறார். முடிவெட்டிக் கொள்ள வரும் சிறுவர்களுக்குத் தமிழ் எழுத்துகளைக் கற்றுத்தருகிறார். இதற்கென ஒரு மைக் வைத்திருக்கிறார். சலூனில் எழுத்தாளர்களின் இலக்கிய உரைகளைக் கேட்க வைக்கிறார். காலச்சுவடு, கல்குதிரை, உயிர்மை, அந்திமழை போன்ற இதழ்களையும் வாங்கிப் போடுகிறார்.

சலூன் நூலகத்தில் புதுமைப்பித்தன், சி.சு. செல்லப்பா கு.அழகிரிசாமி, தி. ஜானகிராமன் மௌனி குபரா அசோகமித்திரன் ஜெயகாந்தன். ஜி.நாகராஜன், ப.சிங்காரம் ஆதவன். ஆ. மாதவன் சுந்தர ராமசாமி, சா.கந்தசாமி, கி ராஜநாராயணன், எம்.வி. வெங்கட்ராம், பிரபஞ்சன் வண்ணநிலவன். வண்ணதாசன். கோணங்கி, ஜெயமோகன், நாஞ்சில் நாடன், பூமணி, திலீப்குமார், தேவதச்சன் அ.முத்துலிங்கம் , அம்பை, இந்திரா பார்த்தசாரதி, இமையம், தேவதேவன், தோப்பில் முகம்மது மீரான் பெருமாள் முருகன் எனச் சிறந்த எழுத்தாளர்களின் முக்கிய நூல்களைச் சேகரித்து வைத்திருக்கிறார். எனது புத்தகங்கள் அத்தனையும் தனியே அடுக்கி வைத்திருக்கிறார்.

நோபல் பரிசு பெற்ற நாவல்கள் துவங்கி பல்வேறு மொழியாக்க நாவல்கள். சிறுகதைகள் வரை அத்தனையும் வைத்திருக்கிறார். சங்க இலக்கியங்கள், சிலப்பதிகாரம், மணிமேகலை, திருக்குறள். கம்பராமாயணம் எனப் பழந்தமிழ் இலக்கியத்தின் முக்கிய நூல்களைத் தனியே அடுக்கி வைத்துள்ளார். அவரது குறைந்த வருமானத்திற்குள் பெருமளவு நூல்களை விலைகொடுத்து வாங்கி வைத்திருப்பது பாராட்டிற்குரியது.

“சலூனுக்குள் நூலகம் வைத்திருக்கவில்லை. ஒரு நூலகத்திற்குள் சிறிய சலூனை வைத்திருக்கிறீர்கள்“ என்று மாரியப்பனைப் பாராட்டினேன்.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பிருந்தே இப்படி ஒரு இலக்கிய வாசகர் விழாவை ஏற்பாடு செய்ய வேண்டும் என்று மாரியப்பன் விரும்பினார். லாக்டவுன் காரணமாக அதைச் செயல்படுத்த முடியவில்லை. இரண்டு மாதங்களுக்கு முன்பு இதற்கான திட்டமிடல் துவங்கியது. பாரதி நினைவுநாளில் இப்படி ஒரு விழாவை நடத்துவது பொருத்தமானது எனச் செப்டம்பர் 11 மாலை நிகழ்வை ஏற்பாடு செய்தோம்.

விழாவிற்கான ஏற்பாடுகளைச் சலூனுக்கு வரும் வாடிக்கையாளர்கள் மற்றும் இலக்கிய நண்பர்களின் உதவியோடு கவனித்துக் கொண்டார். ஷிப்பிங் நிறுவனம் நடத்திவரும் எட்வின் சாமுவேல், பள்ளி ஆசிரியர் ஜெயவேல். UG அருண்பிரசாத், நூலகர் மா. ராம்சங்கர் ,காவல் ஆய்வாளர் முத்துகணேஷ், டாக்டர் ஸ்ரீராம், டாக்டர் ஆர்த்தி, எழுத்தாளர் முகமது யூசுப், வழக்கறிஞர். பொன் இசக்கி, வார்டு கவுன்சிலர் பொன்னப்பன், எம்.எஸ். சொலுசன்ஸ் பாலமுருகன் ஆகியோர் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினார்கள்.

இந்நிகழ்வினைப் பற்றிக் கேள்விபட்டு எனது உரையைக் கேட்பதற்காகவும் மாரியப்பனை வாழ்த்துவதற்காகவும் சென்னையிலிருந்து பட்டிமன்ற பேச்சாளர் ராஜா வந்திருந்தது மிகுந்த மகிழ்ச்சி அளித்தது. அவருக்கு என் மனம் நிறைந்த நன்றி.

நிகழ்வில் கலந்து கொண்ட ஐம்பதுக்கும் மேற்பட்ட சிறார்களுக்குப் புத்தகங்களைப் பரிசாக வழங்கினோம்.

பொன் மாரியப்பனின் தந்தை மற்றும் அவரது துணைவியார், பிள்ளைகளுக்கு எனது வாழ்த்துகளைத் தெரிவித்தேன்.

தனது நெருக்கடியான வாழ்க்கைச் சூழலுக்குள்ளும் இப்படி இலக்கியத்தை, புத்தக வாசிப்பை முன்னெடுத்து வரும் மாரியப்பனின் செயல் முன்னோடியானது. அவரைப் பாராட்டியதோடு வாசிப்பின் வெளிச்சம் என்ற தலைப்பில் உரையாற்றினேன்.

அதில் தூத்துக்குடியை மையமாகக் கொண்டு வங்க மொழியில் எழுதப்பட்ட சிப்பியின் வயிற்றில் முத்து என்ற நாவலைப் பற்றி விரிவாகப் பேசினேன். போதி சத்வ மைத்ரேய. என்ற வங்காள எழுத்தாளர் தூத்துக்குடியில் மீன்வளத்துறை அதிகாரியாகப் பணியாற்றியிருக்கிறார். இந்த நாவல் பாண்டியர் காலம் துவங்கி 1960கள் வரையான தூத்துக்குடியின் வரலாற்றைப் பேசுகிறது. மிக அற்புதமான நாவல். இந்த நாவலை எழுதிய போதி சத்வ மைத்ரேயாவை தூத்துக்குடி கொண்டாட வேண்டும் என்பதை வலியுறுத்தினேன்.

பலரும் இந்த நாவல் எங்கே கிடைக்கும் என்று கேட்டார்கள். இதனை நேஷனல் புக் டிரஸ்ட் வெளியிட்டுள்ளது. தற்போது அச்சில் இல்லை என்கிறார்கள். ஒருவேளை ஏதாவது புத்தகக் கண்காட்சியில் பழைய பிரதிகள் கிடைக்கக் கூடும். இந்நாவல் இணையத்தில் இலவசமாகத் தரவிறக்கம் செய்து கொள்ளக் கிடைக்கிறது.

இது போலவே இடிந்தகரை, உவரி, மணப்பாடு பகுதியை மையமாகக் கொண்டு வண்ண நிலவன் எழுதிய கடல்புரத்தில் நாவலைப் பற்றிப் பேசினேன். சிவராம காரந்தின் அழிந்தபிறகு, தகழியின் செம்மீன் நாவல் பற்றியும் குறிப்பிட்டேன். ஜோ டி குரூஸ் எழுதிய கொற்கை , ஸ்ரீதர கணேசனின் உப்பு வயல், முகமது யூசுப்பின் நாவல்களை வாசிக்க வேண்டும் என்பதைக் குறிப்பிட்டேன்.

இரண்டு நாட்களிலும் ஜெயபாலும் அவரது நண்பர்களும் செய்த உபசரிப்பு மறக்க முடியாதது. மாரியப்பனும் அருண்பிரசாத்தும் விமான நிலையம் வரை உடனிருந்து சிறப்பாகக் கவனித்துக் கொண்டார்கள்.

சென்னையிலிருந்து ஸ்ருதிடிவி கபிலன் வந்து இந்நிகழ்ச்சியைப் பதிவு செய்து வலையேற்றம் செய்துள்ளார். அவருக்கும் மனம் நிறைந்த நன்றி

புத்தக வாசிப்பை முன்னெடுக்கும் பொன் மாரியப்பன் போன்றவர்களைப் புத்தகத் திருவிழாவில் கௌரவிக்க வேண்டும். அவர்களுக்குப் புத்தகக் கொடையை அளிக்க வேண்டும்.

வாசிப்பின் வெளிச்சம் – எஸ்.ராமகிருஷ்ணன் சிறப்புரை

3 likes ·   •  0 comments  •  flag
Share on Twitter
Published on September 13, 2022 01:35

September 9, 2022

உறவும் நட்பும்

கன்னட எழுத்தாளர் சிவராம காரந்த்-ன் ‘அழிந்தபிறகு‘ நாவலில் வரும் யசவந்தராயர் மறக்கமுடியாத கதாபாத்திரம். தற்செயலாக அவரை ரயில் பயணத்தில் சந்திக்கும் கதைசொல்லி பின்பு மும்பையில் அவரைத்தேடிச் சென்று நட்பு கொள்வது. அவரது மரணத்திற்குப் பிறகு அவரது ஆசைகளை நிறைவேற்ற முனைவதும் நாவலில் மிகசிறப்பாக எழுதப்பட்டுள்ளது

இந்த நாவலில் வரும் கதைசொல்லி பயணத்தை விரும்புகிறவன். நம்முடைய வாழ்க்கையே ஒரு ரயில் பயணம் தான் என்கிறான். நமக்கான இடம் கிடைக்காவிட்டால் பயணத்தில் நின்று கொண்டே பயணிப்பது போன்ற நிலை வாழ்க்கையிலும் ஏற்படவே செய்கிறது, நம்மோடு பயணிக்கும் எல்லோருடனும் நாம் நட்பாகப் பழகுவதில்லை. சிலர் இந்தப் பயணம் எப்போது முடியுமோ என்று நினைக்கிறார்கள். சிலர் இந்தப் பயணம் முடியவே கூடாது என ஆசைப்படுகிறார்கள் என்கிறான்

யசவந்தராயர் ஐந்து ஆண்டுகளுக்கு முன்பாக ரயில் பயணத்தில் பழக்கமான ஒருவரை நம்பி தனது வாழ்நாள் சேமிப்பை ஒப்படைக்கிறார். தனது காலத்திற்குப் பின்பு தான் செய்து வரும் உதவிகள் நின்றுவிடக்கூடாது என்று வேண்டிக் கொள்கிறார்.

யசவந்தரின் தந்தியைக் கண்டு மருத்துவமனைக்குச் செல்பவன் அவரது இறந்த உடலைத் தான் காணுகிறான். அவரது இறுதிக்காரியங்களை அவனே மேற்கொள்கிறான். அத்தனை உறவுகளை விடுத்து தனக்கு ஏன் தந்தி கொடுத்து வரச்செய்தார் என்று வியப்புடன் யோசிக்கிறான்.

வாழ்க்கையில் இப்படிச் சில நேரம் யாருக்கோ நாம் மிக முக்கிய மனிதராகிவிடுகிறோம். அதை நாமே உணருவதில்லை. யசவந்தர் தனது குடும்ப உறவுகளை விடவும் நட்பை முதன்மையாக நினைக்கிறார். நம்புகிறார். அவர்களுக்குள் இருந்தது கடித உறவு மட்டுமே. சிலர் மீது நம்பிக்கை கொள்வதற்கு ஆண்டுகள் தேவையற்றவை.

தான் செய்து வரும் உதவிகளுக்கான காரணம் பற்றி யசவந்தர் எதுவும் சொல்வதில்லை. ஆனால் அந்த உதவிகள் தன் காலத்திற்குப் பின்பும் அப்படியே தொடரவேண்டும் என்று விரும்புகிறார். இப்படியான மனிதர்களைக் காணுவது இன்று அபூர்வம்.

யசவந்தராயர் வீட்டில் ஒரு வேலைக்காரன் இருக்கிறான். நெருக்கடியான நேரத்தில் அவனுக்கு உதவி செய்து தனது வீட்டிலே அவனுக்கு வேலை கொடுத்து உணவு கொடுத்துச் சொந்தமகனைப் போல நடத்துகிறார். ஆனால் அவன் யசுவந்தரை ஏமாற்றவே விரும்புகிறான். மரியாதையின்றி நடத்துகிறான். அவனைத் துரத்திவிட்டுவிட வேண்டியது தானே கதைசொல்லி கேட்கும் போது அதற்கு மனம் வரவில்லை. இருந்துவிட்டுப் போகட்டும் என்கிறார். தவறுகளை அங்கீகரித்து ஏற்றுக் கொள்ளும் அவரது மனது வியப்பளிக்கிறது.

யசுவந்தரின் வாழ்க்கையில் நடந்த, அவர் சொல்லவிரும்பாத நிகழ்வுகளை வாசகர்கள் கதையின் போக்கில் யூகித்துக் கொள்ள முடிகிறது. சாபம் என்பது சில குடும்பங்களின் மீது விழுந்த இடி தான் போலும். ஒருவரது வாழ்க்கையில் நாம் அறிந்திருப்பது கொஞ்சமே. எவராலும் யாருடைய வாழ்க்கையினையும் முழுமையாக அறிந்திருக்க முடியாது. அதற்கு ஒரு உதாரணம் யசுவந்தர்.

யசவந்தராயர் தன்னிடம் ஒப்படைத்த விஷயத்தை முறையாகச் செய்ய வேண்டும் என்று கதை சொல்லி விரும்புகிறார். ஒரு மனிதனின் இறப்போடு அவனுடன் இருந்த நட்பு முடிந்துவிடுவதில்லை. இவர்களுக்குள் நட்பு தொடர்கிறது. உண்மையில் யசவந்தராயர் மரணத்திற்குப் பிறகே அவரைப் பற்றி முழுமையாக அறிந்து கொள்கிறான். ஆழ்ந்த நட்பு கொள்கிறான்.

சிவராம காரந்த் இந்த நாவலில் இரண்டு வகையான நட்பினை விவரிக்கிறார். ஒன்று பள்ளி வயதில் உருவாகும் நட்பு. அந்த வயதில் நண்பர்களே உலகமாக இருந்தது. அவர்களுடன் ஊர்சுற்றவும் சேர்ந்து விளையாடவும் கதை பேசவும் மகிழ்ந்திருக்கவுமே ஆசையிருந்தது. ஆனால் இளமைப் பருவம் வந்தபிறகு பள்ளி நட்பு மறைந்துபோகிறது. எத்தனை பேர் பள்ளி நண்பர்களுடன் வாழ்நாள் முழுவதும் நட்போடு இருக்கிறார்கள்.

பின்பு வாழ்க்கை பயணத்தில் புதிய நண்பர்கள் உருவாகிறார்கள். சிலர் மிகவும் நெருக்கமாகிறார்கள். ஆனால் அவர்களும் காலவேகத்தில் கடந்து போய்விடுகிறார்கள். மனதில் தங்கியிருப்பது ஒரு சிலர் மட்டும் தான்.

முதுமையில் தனித்து வாழும் யசவந்தராயர் தனது ஓவியத்தின் வழியே தனது உறவுகளின் இயல்பைக் குறியீடாக வரைந்திருக்கிறார். உலகை நேரடியாக மதிப்பீடு செய்வது போல உறவுகளை மதிப்பீடு செய்ய முடியாது தானே. கலையின் வழியே அதைச் சாத்தியமாக்குகிறார்.

முதுமையில் ஒத்த வயதுடையவர்களுடன் அதிகத் தொடர்பு ஏற்படுவதில்லை என்றொரு வரியை காரந்த் எழுதியிருக்கிறார். முற்றிலும் உண்மையது.

வாழ்வில் ஒரு மனிதன் அடையவேண்டியது என்ன. அதில் எவற்றை அடைந்துவிட்டிருக்கிறான். எதை அடைய முடியவில்லை. ஒருவன் மறைந்துவிட்டால் இந்த உலகிற்கோ, குடும்பத்திற்கோ என்ன இழப்பு ஏற்படுகிறது என்ற கேள்விகளை இந்த நாவல் எழுப்புகிறது. இதற்கான விடையாக யசவந்தராயரின் வாழ்க்கை விவரிக்கப்படுகிறது.

மறதி நிறைந்த இந்த வாழ்க்கை இனிமையானது. கசப்பை மறக்க முடிந்தால் மட்டுமே வாழ்க்கை வாழக்கூடியதாக இருக்கும் என்கிறார் காரந்த்

கன்னடக்குடும்பம் ஒன்றின் கதையின் ஊடாகக் காலம் காலமாக உறவுகளுக்குள் நடக்கும் பகையை, வெறுப்பை, புறக்கணிப்பை நாவல் பேசுகிறது. இந்த கசடுகளிலிருந்து யசவந்த விடுபட்டிருக்கிறார். உயர்வான மனிதராக நடந்து கொள்கிறார். நம்மையும்இந்த நாவல் யசவந்த போலவே நடக்க தூண்டுகிறது

••

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on September 09, 2022 03:41

September 6, 2022

என்றாவது ஒரு நாள்

காப்ரியேல் கார்சியா மார்க்கேஸ்

(ஆங்கிலத்திலிருந்து தமிழில்: எஸ்.எம்.ஏ.ராம்)

அந்தத் திங்கள் கிழமை மழையின்றி வெதுவெதுப்பாய் விடிந்தது. முறையான மருத்துவப் பட்டம் எதுவுமற்ற பல் மருத்துவர் ஆரிலியோ எஸ்கோவர் விடிகாலையிலேயே எழுந்து விடும் வழக்கமுள்ளவர் என்பதால், சரியாய் ஆறு மணிக்குத் தன் அலுவலகத்தைத் திறந்தார். இன்னமும் பிளாஸ்டர் அச்சிலேயே பொருத்தி இருந்த  சில பொய்ப்பற்களைக் கண்ணாடிப் பெட்டியிலிருந்து  வெளியில் எடுத்தார். பின், கை நிறையப் பல் சிகிச்சைக் கருவிகளை அள்ளி எடுத்து, அவற்றின் நீளங்களுக்கு ஏற்றவாறு, காட்சிக்கு வைப்பது போல் அவற்றை மேஜையின் மீது வரிசையாய்ப் பரப்பி வைத்தார். அவர் ஒரு காலர் இல்லாத, வரிவரியான மேல்சட்டையை எடுத்துப் போட்டுக் கொண்டார். அதன் கழுத்துப் பகுதி   தங்கக் குமிழால் மூடியிருந்தது. பின்புறத் தோளிலிருந்து தொங்கும், பெல்ட்கள் இழுத்துப் பிடித்துக் கொண்டிருக்கும் கால் சட்டையையும்  மாட்டிக் கொண்டார். நிமிர்ந்த ஒல்லியான உடல் வாகு அவருடையது. அவரது பார்வை அபூர்வமாய் இருந்தது. அது பார்ப்பதற்குக் காது கேட்காதவர்களின் பார்வையைப் போல் தோன்றியது.   

மேஜை மீது எல்லா உபகரணங்களும் தயார் நிலையில் இருக்க, அவர் பல் நோயாளிகளுக்கான  இருக்கையை  நோக்கித் துளைப்பானை(Driller) இழுத்து உட்கார்ந்து கொண்டு, செயற்கைப் பற்களைப் பாலீஷ் பண்ணத் தொடங்கினார். தான் என்ன செய்கிறோம் என்ற சிந்தனையே அற்றவராய் அவர் தன் பாட்டுக்கு, தேவை இல்லாத தருணங்களிலும்  துளைப்பானைக் கால்களால் பெடல் செய்து கொண்டு, இடைவிடாமால் ஒரே சீராக வேலை செய்தார்.

எட்டு மணிக்குப் பிறகுக் கொஞ்ச நேரம்  தன் வேலையை நிறுத்தி விட்டு ஜன்னல் வழியாய் வெளியே ஆகாயத்தை ஏறிட்டு நோக்கினார். அப்போது, பக்கத்துக்கு வீட்டுக் கூரை முகட்டின் மேல் இரண்டு பருந்துகள் ஆழ்ந்த யோசனையோடு கூடித் தங்கள் உடம்பை வெய்யிலில் உலர்த்திக் கொண்டிருப்பதை அவர் பார்த்தார். பிற்பகல் உணவுக்கு முன் மறுபடியும் மழை வரக் கூடும் என்று யோசித்த படியே அவர் வேலையைத் தொடர்ந்தார். அவரது பதினோரு வயதுப் பையனின் கீச்சுக் குரல் அவரது கவனத்தைக் கலைத்தது.

“அப்பா”

“என்ன?”

“மேயர் வந்திருக்கார். நீங்க அவர் பல்லைப் பிடுங்குவீங்களான்னு கேக்கறார்.”

“நான் வீட்டில இல்லேன்னு  என்று அவர்கிட்டச் சொல்லிடு.”

அவர் தங்கப் பல்லைப் பாலீஷ் செய்து கொண்டிருந்தார். அந்தப் பற்களை முன்னங்கை தூரத்தில் பிடித்துக் கொண்டுப் பாதி மூடிய கண்களால்  பரிசோதித்தார். சின்ன வரவேற்பறையிலிருந்து அவரது மகன் மீண்டும் உரக்கக் குரல் கொடுத்தான்.

“நீங்க இங்க தான் இருக்கீங்கன்னு  அவருக்குத் தெரியும்னு சொல்றார். ஏன்னா  நீங்க பேசறது  இங்க அவருக்கு நல்லாவே  கேக்குது!”

பல் மருத்துவர் தங்கப்பல்லைத் தொடர்ந்து ஆராய்ந்து கொண்டிருந்தார். அந்த வேலையை முழுதுமாக முடித்து, அதை மேஜை மீது வைத்த பின்னர் அவர் இப்படிச் சொல்லிக் கொண்டார். “பரவாயில்ல. இது வரைக்கும் நல்லாவே  வந்திருக்கு..”

அவர் துளைப்பானை மீண்டும் இயக்கினார். அவர் இன்னும் வேலை செய்வதற்காக வைத்திருந்த நிறையப் பல் வரிசைகளை ஓர் அட்டைப் பெட்டிக்குள்ளிருந்து வெளியே எடுத்துத் தங்கத்தைப் பாலீஷ் பண்ண ஆரம்பித்தார்.

“அப்பா”

“என்ன?”

அவர் தன் குரலின் தொனியை இன்னும் மாற்றிக் கொள்ளவில்லை.

“நீங்க அவர் பல்லை எடுக்காமப் போனா, உங்களைச் சுட்டுடுவேன்னு சொல்றார்..”

அவர் எந்தச் சலனமும் இன்றி அமைதியாய், துளைப்பானைப் பெடல் பண்ணுவதை நிறுத்தி விட்டு, அதை இருக்கையிலிருந்து விலக்கித் தள்ளினார். மேஜையின் கீழ்-டிராயரை முழுதுமாக வெளியே இழுத்தார். அதில் ஒரு கைத்துப்பாக்கி இருந்தது. அவர் சொன்னார்: “சரி. அவரை என்னை வந்து சுடச் சொல்லு.”

கை மேஜையின் விளிம்பில் அழுந்திய நிலையிலேயே இருக்க, அவர் இருக்கையைக் கதவுக்கு எதிர்ப்புறமாக உருட்டி நகர்த்தினார். மேயர் கதவுக்கருகில் நின்று கொண்டிருந்தார். அவர் தன் கன்னத்தின் இடது புறத்தை நன்றாக மழித்திருந்தார்.. ஆனால், வீங்கிப் போய் வலி கண்டிருந்த  அவரது  வலது கன்னம் ஐந்து நாட்களாய் மழிக்கப் படாத தாடியோடு காட்சி அளித்தது. மருத்துவர் மேயரின் சோர்ந்த விழிகளில் பல இரவுகளின் வேதனையையும் அவநம்பிக்கையையும் பார்த்தார். அவர் டிராயரை மூடி விட்டு, மென்மையான குரலில் சொன்னார்;

“உக்காருங்க”

“குட் மார்னிங்” என்றார் மேயர்.

“மார்னிங்” என்று சொன்னார் மருத்துவர்.

பல் சிகிச்சைக் கருவிகள் வெந்நீரில் கொதித்துக் கொண்டிருந்தன. மேயர் தன் பின்தலையைப் பல்-நாற்காலியின் ‘தலைதாங்கி*யில் சாய்த்துக் கொண்டபடியே, தன்னைச் சிறிது ஆசுவாசப் படுத்திக் கொண்டார். அவரது மூச்சுக் காற்று சில்லிட்டிருந்தது.

அது ஓர் ஏழ்மையான அலுவலகம்; ஒரு பழைய மர இருக்கை; பெடல் துளைப்பான்; பீங்கான் பாட்டில்கள் வைக்கப் பட்ட கண்ணாடிப் பெட்டி. இருக்கைக்கு எதிர்ப்புறத்தில் தோள் உயரத் திரைச்சீலையோடு கூடிய ஒரு ஜன்னல்.

மருத்துவர் தன்னை சமீபிப்பதை உணர்ந்த மேயர், தன் குதிகால்களை முழு பலத்தையும் பிரயோகித்து  அழுத்தமாய் ஊன்றிக் கொண்டு வாயைத் திறந்தார். ஆரிலியோ எஸ்கோவர் மேயரின் தலையை விளக்கை நோக்கித் திருப்பினார். சொத்தைப் பல்லை ஆராய்ந்த பிற்பாடு, விரல்களில் அளவான அழுத்தத்தைப் பிரயோகித்து மேயரின் தாடையை மூடினார்.

“அனஸ்தீஷியா இல்லாமத்  தான் இதச் செய்யணும்..” என்றார் அவர்.

“ஏன்?’

“ஏன்னா, உங்களுக்குச் சீழ் கோத்திருக்கு.”

மேயர் அவரது கண்களுக்குள் நோக்கினார். “சரி” என்று சொல்லி விட்டுப் புன்னகைக்க முயன்றார். மருத்துவர் திரும்பப் புன்னகைக்கவில்லை. நன்றாகக் கொதிக்க வைத்துக் கிருமிகள் அழிக்கப் பட்ட கருவிகளைப் பாத்திரத்தோடு எடுத்துக் கொண்டு வந்து, மேஜை மீது வைத்தார். இப்போதும் எந்த வித அவசரமும் இன்றி, அந்தக் கருவிகளைக் குளிர்ந்த இடுக்கியால் பற்றி வெளியே எடுத்தார். பிறகு உமிழ்கலத்தைத் (spitton) தன் ஷூவின்  முனையால் தள்ளி விட்டு, எழுந்து போய் வாஷ் பேசினில் கை கழுவினார். அவர் இத்தனையையும் மேயரின் முகத்தை ஏறிட்டுப் பார்க்காமலேயே செய்தார். ஆனால், மேயர் மட்டும் தன் விழிகளை மருத்துவரின் மீதிருந்து அகற்றவே இல்லை.

அது கீழ்த்தாடைக் கடைவாய்ப் பல். பல் மருத்துவர் தன் கால்களை அகட்டி நின்று கொண்டார். அந்தப் பல்லை சூடான இடுக்கிகளால் இறுகப் பற்றினார். மேயர்  நாற்காலியின் கரங்களை அழுத்திப் பிடித்துக் கொண்டார். பலம் கொண்ட மட்டும் கால்களை ஊன்றித் தன்னை ஸ்திரப் படுத்திக் கொண்டார். அவரது அடி வயிறு சில்லிட்டு உறைகிற மாதிரி இருந்தது. ஆனாலும் அவர் சத்தம் எதுவும் எழப்பவில்லை. மருத்துவர் தன் மணிக்கட்டுகளை மட்டும் அசைத்தார். குரலில் கோபத்தையும் வெறுப்பையும் காட்டிக் கொள்ளாமல் ஒரு கடுமை கலந்த கரிசனத்தை வரவழைத்துக் கொண்டார்.

“இப்ப நீங்க செத்துப்போன எங்க இருபது பேருக்கான விலையக் கொடுக்கப் போகிறீங்க.”

மேயர் தன் தாடை எலும்புகள் நொறுங்குகிற மாதிரி உணர்ந்தார். அவர் கண்களில் நீர் பெருகி நிரம்பியது. பல் ஒரு வழியாய் வெளியே வந்து விட்டதை உறுதிப் படுத்திக் கொள்கிற வரை அவர் மூச்சை விடாமல் பிடித்து வைத்துக் கொண்டிருந்தார். தன் கண்ணீர்த் திவலைகளின் ஊடாக அந்தப் பல்லைப் பார்த்தார். அந்தப் பல், அவர் ஐந்து இரவுகளாக அனுபவித்த வலிக்கும் வேதனைக்கும் துளியும் சம்பந்தமற்ற ஏதோ ஓர் அந்நிய வஸ்துவைப் போல் அவருக்குத் தோற்றமளித்தது.

முகம் வியர்த்துப் பெருமூச்சு வாங்கிய நிலையில் துப்புவதற்காக  உமிழ் கலத்தை நோக்கிக் குனிந்தவர், தன் சட்டைப் பித்தான்களைக் கழற்றி விட்டுக் கொண்டு, பேன்ட் பாக்கெட்டிலிருந்து கைக்குட்டையை எடுப்பதற்காகக் கைகளை நீட்டித் துழாவினார்.  மருத்துவர் அவரிடம் ஒரு சுத்தமான துணியை நீட்டினார்.

“உங்க கண்ணைத் துடைச்சுக்குங்க”

மேயர் அப்படியே செய்தார். அவர் உடம்பு நடுங்கிக் கொண்டிருந்தது. மருத்துவர் கைகளைக் கழுவிக் கொண்டிருந்த போது, அவர் உடைந்து கொண்டிருக்கும் மேற்கூரையையும், சிலந்தி முட்டைகளோடு கூடிய ஓர் அழுக்கேறிய சிலந்தி வலையையும், இறந்த பூச்சிகளையையும் கண்டார். மருத்துவர் தன் கைகளை உலர்த்திய படியே திரும்பி வந்தார். “படுக்கப் போங்க. அதுக்கு முன்னால உப்புத் தண்ணியால வாய்  கொப்புளியுங்க.” என்று அவர் சொன்னார். மேயர் எழுந்து நின்றார். வழக்கமான ராணுவ சல்யூட்டுடன், “குட் பை” என்று சொல்லிவிட்டு, சட்டைப் பித்தான்களைத் திரும்ப மாட்டிக் கொள்ளாமலேயே காலை நீட்டி வாசலை நோக்கி நடந்து போனார்.

“‘பில்’லை அனுப்பி வையுங்க”

“யாருக்கு, உங்களுக்கா, இல்ல ஊராட்சிக்கா?”

“ரெண்டு எழவும் ஒண்ணு தான்..”

                              ____________________

நன்றி -தளம், டிசம்பர், 2015

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on September 06, 2022 06:08

September 5, 2022

கதையாகும் மனிதர்கள்

Niall Williams எழுதிய History of the Rain நாவல் எனக்குப் பிடித்தமானது. இந்நாவலை அடிக்கடி எடுத்து வாசிப்பேன். சிறிய நாவல். எளிமையான கதை. ரிச்சர்ட் பாக்கை நினைவுபடுத்தும் எழுத்து.

இளவயதிலே நோயாளியாகி படுக்கையில் வாழும் ரூத் தன்னைச் சுற்றி நிறையப் புத்தகங்களைக் கொண்டிருக்கிறாள். அவளது கட்டில் படகு போன்ற வடிவில் இருக்கிறது. நோயாளியான அவளுக்கு வேதனையிலிருந்து மீள்வதற்கான ஒரே வழி புத்தக வாசிப்பு மட்டுமே.

புத்தகங்களின் வழியாக அவள் தனது தந்தையைத் தேடுகிறாள். கதை என்பது வாழ்க்கை தரும் பரிசு என்பதை உணருகிறாள் நாம் உயிரோடு இருப்பதற்காகக் கதை சொல்கிறோம். நாம் தான் கதை என்கிறாள்.

இந்த நாவலில் புத்தக வாசிப்பு மற்றும் கதைகளின் மகத்துவம் பற்றி நியால் சிறப்பாக எழுதியிருக்கிறார்.

சிலர் வாசகராக மட்டுமே இருக்க விரும்புகிற இருக்கிறார்கள். அவர்கள் ஒரு போதும் எழுத்தாளராக விரும்புவதில்லை. அவர்களுக்குப் புத்தக வாசிப்பு தான் உலகம். அது போதுமானது. வாழ்க்கையின் நெருக்கடிகளை, சுகதுக்கங்களை அவர்கள் புத்தகத்திடமே பகிர்ந்து கொள்கிறார்கள். புத்தகம் வழியாகவே தனக்கான மீட்சியைக் கண்டடைகிறார்கள். புத்தகம் போல அவர்களை வேறு எதுவும் மகிழ்ச்சிப்படுத்துவதில்லை என்கிறார் நியால் வில்லியம்ஸ்

முதன்முறையாகத் தந்தையுடன் நூலகத்திற்குச் சென்ற அனுபவத்தை விவரிக்கும் ரூத் புத்தகங்களைத் தொடும்போது அடையும் உணர்ச்சியை வியந்து எழுதுகிறார். புத்தகம் படிப்பவர்களைக் காணும் போது ஏற்படும் தோழமை உணர்வைப் பற்றிச் சரியாகச் சொல்கிறார்.

உண்மையில் நாம் புத்தகங்களைத் தொடும் போது அந்த எழுத்தாளருடன் கைகுலுக்குகிறோம். நட்பு கொள்கிறோம். புத்தகம் உருவாக்கும் தோழமை அபூர்வமானது. புத்தகம் என்பது ஒரு நதி. அது நேற்றும் இன்றும் நாளையும் முடிவில்லாமல் ஒடிக் கொண்டேயிருப்பது. என்கிறார்.

பள்ளியும் வீடும், ஊரும் உறவுகளும் கற்றுத்தராத எத்தனையோ விஷயங்களைப் புத்தகம் கற்றுத் தந்துவிடுகிறது. விழிப்புணர்வு கொள்ள வைக்கிறது. புத்தகம் நமக்குள் உருவாக்கிய அற்புதமென்பது பிறரது துயரத்தை எண்ணி நம்மை வருந்தச் செய்ததும், பரிவு கொள்ள வைத்ததுமாகும்.

நம் கையில் வைத்துள்ள புத்தகம் நமக்குள் இருக்கும் புத்தகத்தை அடையாளம் காட்டுகிறது. புத்தகத்தின் பக்கம் புரளும் போது நமது அகமும் சேர்ந்தே புரளுகிறது. சில புத்தகங்களில் நாம் காணுவது கதாபாத்திரங்களை அல்ல நமது மூதாதையர்களை. நாம் மறந்து போன பாட்டன் பாட்டிகளை, எழுத்தாளன் சொற்களைக் கொண்டு மேஜிக் செய்கிறான். மாறவே மாறாது என நாம் நம்பும் உலகம் கதைகளில் மாறத்துவங்கிவிடுகிறது.

••

1 like ·   •  0 comments  •  flag
Share on Twitter
Published on September 05, 2022 05:33

September 2, 2022

ராபர்ட் போல்ட்

டேவிட் லீன் பற்றிய ஆவணப்படம் ஒன்றில் அவர் தனது படங்களின் திரைக்கதை ஆசிரியர் ராபர்ட் போல்ட் பற்றி மிகவும் உயர்வாகக் குறிப்பிடுகிறார். ராபர்ட் போல்ட் மிகச்சிறந்த திரைக்கதையாசிரியர். டேவிட் லீனின் முக்கியப் படங்கள் யாவும் அவர் எழுதியவை.

ராபர்ட் போல்ட் எழுதித்தருவதில் மிகக் குறைவாகவே மாற்றம் செய்வேன். மற்றபடி அவரது எழுத்துப்பணியில் குறுக்கிட மாட்டேன். திரைக்கு ஏற்ப ஒரு காட்சியை எவ்வாறு உருவாக்க வேண்டும் என்று அவருக்கு நன்றாகத் தெரியும். அவரை விடச் சிறப்பாக எவராலும் வசனம் எழுத முடியாது என்கிறார் டேவிட் லீன்.

நாடக ஆசிரியர் என்பதால் போல்ட் தனித்துவமான கதாபாத்திரங்களை உருவாக்கக்கூடியவர். தேர்ந்த வசனங்களை எழுதுபவர். திரைக்கு ஏற்ப நாவலை உருமாற்றுவதில் போல்ட் திறமைசாலி. போரிஸ் பாஸ்டர்நாக்கின் டாக்டர் ஷிவாகோ நாவலையும் படத்தையும் ஒப்பிட்டுப் பார்த்தால் போல்ட்டின் தனித்திறமையைப் புரிந்து கொள்ள முடியும்.

டாக்டர் ஷிவாகோ நாவலை விடவும் படமே எனக்கு அதிகம் பிடித்திருந்தது. நாவலில் வரும் சில எளிய நிகழ்வுகளைத் திரையில் மகத்தான காட்சிகளாக டேவிட் லீன் உருவாக்கியிருக்கிறார்.

ராபர்ட் போல்ட் இரண்டு முறை சிறந்த திரைக்கதைக்கான ஆஸ்கார் விருது பெற்றிருக்கிறார்.

சார்லஸ் டிக்கன்ஸ், பாஸ்டர்நாக், லாரன்ஸ், ஈ எம் பாஸ்டர் என்று புகழ்பெற்ற எழுத்தாளர்களின் புத்தகங்களை மையமாகக் கொண்டு படங்களை உருவாக்கிய டேவிட் லீன் மேடம்பவாரி நாவலைத் தழுவி உருவாக்கியதே Ryan’s Daughter. டேவிட் லீன் படங்களில் மிகவும் கவித்துவமானது இப்படம். காதல் காட்சிகளை மிகவும் அழகாக உருவாக்கியிருக்கிறார்.

இப்படத்தின் ஒரு காட்சியில் கதாநாயகி ரோசி புத்தகத்தைக் கடலில் தூக்கி வீசி எறிவார். அது தான் அவள் காதலிக்கத் துவங்கியதன் அறிகுறி. காதல் கதைகளின் வழியே தனக்குள் கற்பனையை வளர்த்துக் கொண்ட ரோசி பள்ளி ஆசிரியரைக் காதலிக்கத் துவங்கும் போது அவளது கையிலிருந்த புத்தகம் தேவையற்றதாக்கி விடுகிறது

புத்தகம் நம் கைக்கு வந்தால் தான் மாற்றம் உருவாகும் என்றில்லை. கையை விட்டுப் போனாலும் மாற்றம் ஏற்படும் போலும்.

மேடம்பவாரி நாவலிருந்து இப்படம் மாறுபட்டது. படத்தின் இறுதிக்காட்சியில் ரோசியை ஊரே கூடித் தண்டிக்கிறது. அவர்கள் ஊரைவிட்டு வெளியேறிச் செல்கிறார்கள். அப்போது ரோசி அவமானத்தால் தலைகுனிந்தபடி நிழல் போல நடக்கிறாள். அந்த நிலையில் அவளது கணவன் உரிமையோடு அவளைக் கைகோர்த்து நடக்கச் சொல்கிறான். மறக்கமுடியாத காட்சியது

ராபர்ட் போல்ட் எழுதிய எ மேன் ஃபார் ஆல் சீசன்ஸ் நாடகம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. திரைப்படமும் மிக நன்றாகவே எடுக்கபட்டிருக்கிறது. இதில் தாமஸ் மோர் பேசும் வசனங்கள் அபாரமானவை

“When a man takes an oath, he’s holding his own self in his own hands like water, and if he opens his fingers then, he needn’t hope to find himself again.“

“Some men think the earth is round, others think it flat. It is a matter capable of question. But if it is flat, will the King’s command make it round? And if it is round, will the King’s command flatten it?“

“gentlemen of the jury, there are many kinds of silence. Consider first the silence of a man who is dead. Let us suppose we go into the room where he is laid out, and we listen: what do we hear? Silence. What does it betoken, this silence? Nothing; this is silence pure and simple. But let us take another case. Suppose I were to take a dagger from my sleeve and make to kill the prisoner with it; and my lordships there, instead of crying out for me to stop, maintained their silence. That would betoken! It would betoken a willingness that I should do it, and under the law, they will be guilty with me. So silence can, according to the circumstances, speak! Let us consider now the circumstances of the prisoner’s silence. The oath was put to loyal subjects up and down the country, and they all declared His Grace’s title to be just and good. But when it came to the prisoner, he refused! He calls this silence. Yet is there a man in this court – is there a man in this country! – who does not know Sir Thomas More’s opinion of this title?“

••

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on September 02, 2022 04:53

Katha Vilasam: The Story Within

எனது கதாவிலாசம் கட்டுரைத் தொகுப்பு ஆங்கிலத்தில் வெளியாகியுள்ளது.

மொழிபெயர்ப்பாளர்கள் பி.சி. ராமகிருஷ்ணா மற்றும் மாலினி சேஷாத்ரி.

Katha Vilasam: The Story Within offers a path-breaking series of 50 articles by S. Ramakrishnan, published over the course of two years in the widely read Tamil magazine Ananda Vikatan, to a wider reading public through translation into English. The writing style is intentionally direct and compact to suit a magazine readership. Nevertheless, the prose is elevating, even lyrical at times. There are “Aha” moments aplenty.

The author uses a unique device in these units. They are “stories within stories”. In each unit, he describes an incident from his own experience and relates it to a short story he has read by a particular eminent Tamil writer. He paraphrases/summarises the writer’s story, melds it into his own reminiscence, and allows the two to resonate and create a musical signature in the reader’s mind.

Thus, 50 noted short story writers in the Tamil language are featured here.

The avowed purpose of the author was to introduce the readers of Ananda Vikatan (who may have been readers of nothing but magazines) to also delve into the works of excellent Tamil short story writers. The series ran for four years and was very well received by readers.

Each unit deserves to be read and re-read not only for the insights and information about writers in different genres, but for the word wizardry and imagery that flow effortlessly through the lines.

It is hoped that this English translation will teleport these unique offerings to a wider reading public and bring the works of excellent Tamil writers into the lives of discriminating lovers of literature everywhere.

Publisher: Taylor & Francis Ltd

ISBN-13: 9781032162461

Rs 625

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on September 02, 2022 03:25

September 1, 2022

காந்தி தொகை நூல்

Mahatma Gandhi in Indian Language Series என்றொரு வரிசையை காந்தி பவுண்டேஷன் வெளியிட்டுள்ளார்கள். அதில் தமிழில் காந்தி பற்றி வெளியான முக்கியப் படைப்புகளை எழுத்தாளர் சுனில்கிருஷ்ணன் தொகுத்துள்ளார். த.கண்ணன் ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்துள்ளார். இந்தத் தொகுப்பில் எனது படைப்புகளும் இடம்பெற்றுள்ளன. சுனில் கிருஷ்ணன் மற்றும் த. கண்ணனுக்கு மனம் நிறைந்த நன்றி.

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on September 01, 2022 23:24

சலூன் நூலகம் நடத்தும் விழா.

பொன்மாரியப்பன் தூத்துக்குடியிலுள்ள தனது சலூனில் நூலகம் அமைந்து அனைவரின் பாராட்டினையும் பெற்றவர். ’மன் கி பாத்’ நிகழ்ச்சியில் பிரதமர் மோடி அவர்கள் பொன்மாரியப்பனுடன் உரையாடி நூலகம் நடத்தி வருவதற்கு வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். 500க்கும் மேற்பட்ட சிறந்த புத்தகங்களைக் கொண்ட நூலகத்தை சலூனில் வைத்திருக்கிறார்.

பொன்மாரியப்பன் எனது தீவிர வாசகர். இவரது சலூனில் எனது இலக்கிய உரைகளைத் தொடர்ந்து ஒளிபரப்பு செய்து வருகிறார்.

தற்போது புத்தக வாசிப்பை வளர்க்கும் விதமாக இலக்கிய வாசகர் திருவிழா ஒன்றை ஏற்பாடு செய்திருக்கிறார்.

இந்த நிகழ்வு அவரது சலூன் முன்பாகவே நடைபெறுகிறது.

தமிழ்நாட்டில் முதன்முறையாக இப்படி ஒரு நிகழ்வு நடைபெறுகிறது. இது ஒரு நல்ல துவக்கம்.

செப்டம்பர் 11 ஞாயிறு மாலை தூத்துக்குடி மில்லர்புரத்திலுள்ள சுசில்குமார் ப்யூட்டி கேரில் இலக்கிய வாசகர் திருவிழா நடைபெறுகிறது

இந்நிகழ்வைத் துவக்கிவைத்து உரையாற்றுகிறேன்.

அனைவரும் இந்நிகழ்வில் கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டுகிறேன்.

புகைப்படங்கள்

நன்றி : விகடன்

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on September 01, 2022 00:10

August 30, 2022

நேற்றின் நிழல்கள்

அபராஜிதோ என்ற தலைப்பைக் கேட்டதும் சத்யஜித்ரேயின் புகழ்பெற்ற திரைப்படமே நினைவிற்கு வரும். ஆனால் தற்போது வெளியாகியுள்ள அபராஜிதோ (Aparajito 2022) சத்யஜித்ரேயைக் கற்பனைக் கதாபாத்திரமாக்கி, பதேர் பாஞ்சாலி உருவான அனுபவத்தை விவரிக்கிறது. இப்படத்தை அனிக் தத்தா இயக்கியுள்ளார்.

சத்யஜித்ரேயாக நடித்துள்ள ஜீது கமல் அப்படியே இளவயது ரேயின் தோற்றம் கொண்டிருக்கிறார். அவரது உடல்மொழியும் துல்லியமாக ரேயைப் பிரதிபலிக்கிறது. அவரது தேர்ந்த நடிப்பு மற்றும் சுப்ரதிம் போலின் ஒளிப்பதிவு படத்தின் தனிச்சிறப்பாகும்.

சாந்திநிகேதனில் ஓவியம் பயின்று விளம்பர நிறுவனத்தில் வேலை செய்த சத்யஜித்ரேயிற்கு எப்படி இசை மற்றும் திரைப்படங்களின் மீது ஆர்வம் உருவானது. பதேர் பாஞ்சாலி திரைப்படத்தை எவ்வாறு உருவாக்கினார், அவரது திரைப்படம் எப்படி சர்வதேசக் கவனம் பெற்றது என்பதே படத்தின் கதை

MY YEARS WITH APU நூலில் சத்யஜித்ரே பதேர்பாஞ்சாலி உருவான விதம் பற்றி விரிவாக எழுதியிருக்கிறார். அதைத் தான் இப்படத்திலும் காட்சிப்படுத்தியிருக்கிறார்கள். அகில இந்திய வானொலிக்காகச் சத்யஜித் ரேயை நாடக அறிஞர் சமிக் பந்தோபாத்யாயா எடுத்த நேர்காணல் தான் படத்திலும் மையமாக விளங்குகிறது.

சத்யஜித்ரேயின் பதேர்பாஞ்சாலி பற்றி விரிவான புத்தகம் ஒன்றை நான் எழுதியிருக்கிறேன். ஆகவே படம் விவரிக்கும் பின்புல நிகழ்வுகளை நன்றாகவே அறிவேன்.

சத்யஜித்ரே மனைவியாக நடிக்கும் சயோனி கோஷ் சிறப்பாக நடித்துள்ளார். லண்டனிலிருந்து கப்பலில் திரும்பும் போது அவர் தாகூர் பாடலை பாடுவது மிகவும் அழகான காட்சி. இது போலவே படப்பிடிப்பில் யோசனை சொல்வது, வீட்டில் ஆங்கிலச் சொல் ஒன்றிற்காக ரேயுடன் சண்டை போடுவது, படம் எடுக்கத் தனது நகைகளைக் கொடுப்பது, ரேயின் வெற்றிக்கு உற்ற துணையாக இருப்பது எனப் பிமலா கதாபாத்திரத்தை அசலாகச் சித்தரித்துள்ளார்கள்.

பதேர் பாஞ்சாலி படத்தில் அபு மற்றும் துர்காவாக நடித்த குழந்தைகள் இருவரும் பிஜயா ரேயால் எவ்வாறு கண்டுபிடிக்கப்பட்டனர் என்பதை இப்படத்திலும் நினைவுபடுத்துகிறார்கள்

ரே லண்டனுக்குச் சென்ற நாட்களையும் டிசிகாவின் பைசைக்கிள் தீவ்ஸ் பார்த்த அனுபவத்தையும் படம் நேர்த்தியாகப் பதிவு செய்திருக்கிறது

மேற்கத்திய இசை மீது சத்யஜித்ரே கொண்டிருந்த விருப்பம் அவரது திரைப்பட உருவாக்கத்தின் போது எப்படி உதவியது என்பதைச் சில காட்சிகள் மூலம் அழகாகக் காட்டுகிறார்கள். பண்டிட் ரவிசங்கருடன் இணைந்து ரே பதேர்பாஞ்சாலி இசையமைப்பினை உருவாக்கும் காட்சி அற்புதம். மறக்கமுடியாத இசைக்கோர்வையை ரவிசங்கர் உருவாக்கியிருப்பார்.

சத்யஜித்ரேயின் வாழ்க்கை வரலாற்றை அவரது பெயரிலே படமாக்காமல் கற்பனையாக அபராஜிதோ ரே என்ற இயக்குநர் படம் உருவாக்குவது போலக் காட்டியிருக்கிறார்கள். பதேர்பாஞ்சாலி படம் உருவாக்கபட்டது பற்றி நேரடியாகவே ஒரு படத்தை எடுத்திருக்கலாமே எதற்காக இப்படிக் கற்பனை பெயர்கள். கற்பனை கதாபாத்திரங்கள் என்று புரியவில்லை. இவ்வளவிற்கும் ரே குடும்பத்தினர் இதற்கு அனுமதி வழங்கியிருக்கிறார்கள்.

பிபூதிபூஷன் நாவலுக்கான உரிமையைக் கேட்பதற்காக அவரது மனைவியைச் சந்தித்து ரே உரையாடும் காட்சி, மழையின் முதல் துளி வழுக்கைத்தலை மனிதர் தலையில் விழ வேண்டும் என்பதற்காக ரே எடுக்கும் எத்தனம். நாயும் துர்காவும் அபுவும் மிட்டாய் வியாபாரி வரும் போது பின்னால் செல்லும் காட்சியினைப் படமாக்கும் போது ரேயின் மனைவி தரும் யோசனை, கட் சொல்லாத காரணத்தால் பாடையிலே கண்மூடி படுத்துக் கிடக்கும் கிழவியின் செயல், வழக்கமாகத் தாங்கள் சந்தித்து உரையாடும் காஃபி ஹவுசிற்குப் படம் இயக்கியபிறகு ரே செல்லும் போது கிடைக்கும் உற்சாக வரவேற்பு, அமெரிக்காவில் படம் திரையிடப்படும் நாளில் ரே உறக்கமின்றித் தவிப்பது, பிரதமர் ஜவஹர்லால் நேரு பதேர்பாஞ்சாலி படம் பார்க்கும் காட்சி, பதேர்பாஞ்சாலி வெளியான நாளில் திரையரங்கத்தில் கிடைத்த வரவேற்பு என நிறைய ரசிக்கத்தக்க காட்சிகள்.

கறுப்பு வெள்ளையில் எடுக்கப்பட்டுள்ள இப்படம் 1950களின் கல்கத்தா நகரக் வாழ்க்கையை மறு உருவாக்கம் செய்துள்ளது . பழங்கால வால்வு ரேடியோ, விண்டேஜ் கார்கள், விளம்பர ஏஜென்சியின் மேசை மற்றும் நாற்காலி அமைப்பு, அந்தக்கால வீடு, பழங்கால ப்ரொஜெக்டரின் ஒசை, சீலிங் ஃபேனின் சத்தம், எளிமையான உடைகள் மூலம் காலம் உணர்த்தப்படுகிறது. பதேர் பாஞ்சாலி படப்பிடிப்புக் காட்சிகள் நம்மை அந்தத் தருணங்களுக்கு அழைத்துச் செல்லும் அளவுக்குச் சிறப்பாக உள்ளது.

இந்தத் திரைப்படம் மீண்டும் ஒருமுறை சத்யஜித் ரேயின் பதேர் பாஞ்சாலியைப் பார்க்கத் தூண்டுகிறது. அதுவே இதன் வெற்றி.

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on August 30, 2022 00:01

August 29, 2022

புத்தக வெளியீடு

கேரளாவில் டிசி பதிப்பகம் நடத்திய விழாவில் எனது உப பாண்டவம் நாவலின் மொழிபெயர்ப்பு வெளியிடப்பட்டது

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on August 29, 2022 22:28

S. Ramakrishnan's Blog

S. Ramakrishnan
S. Ramakrishnan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow S. Ramakrishnan's blog with rss.