S. Ramakrishnan's Blog, page 80
August 29, 2022
தஸ்தாயெவ்ஸ்கியின் ஐந்து யானைகள்
A translation is not a caterpillar crawling from left to right, a translation always emerges from the whole. Do you understand? One has to make the text entirely one’s own. The Germans say “internalised”
Svetlana Geier
ரஷ்ய இலக்கியங்களை ஜெர்மனியில் மொழிபெயர்த்தவர் ஸ்வெட்லானா கேயர்.

தஸ்தாயெவ்ஸ்கியின் ஐந்து பெரிய நாவல்களை மொழியாக்கம் செய்திருக்கிறார். இதற்காக 20 ஆண்டுகள் செலவிட்டிருக்கிறார். அந்த மொழிபெயர்ப்புகளை “ஐந்து யானைகள்” என்றே அழைக்கிறார். அவரது மொழிபெயர்ப்பு மற்றும் வாழ்க்கைச்சூழல். தஸ்தாயெவ்ஸ்கி மீது கொண்டுள்ள அபிமானத்தை இந்த ஆவணப்படம் சிறப்பாக விவரிக்கிறது
உக்ரேனைச் சார்ந்த ஸ்வெட்லானா ஸ்டாலினிச அரசின் நெருக்கடிகளுக்குப் பயந்து ஜெர்மனியில் தஞ்சம் புகுந்திருக்கிறார். இந்த ஆவணப்படத்திற்காகவே மறுபடியும் தனது சொந்த ஊருக்குப் பயணம் மேற்கொள்கிறார். தஸ்தாயெவ்ஸ்கியின் வாழ்க்கைக்கும் ஸ்வெட்லானாவின் வாழ்க்கைக்கும் இடையில் நிறைய ஒற்றுமைகள் இருக்கின்றன. தஸ்தாயெவ்ஸ்கி போலவே ஸ்வெட்லானாவின் தந்தையும் அரசால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கபட்டிருக்கிறார்.
முதுமையிலும் தளராமல் ஸ்வெட்லானா செயல்படும் விதம். நாஜிக் கொடுமைகள் பற்றிய நினைவுகள், மொழிபெயர்ப்பு செய்வது குறித்த அவரது கருத்துகள், தஸ்தாயெவ்ஸ்கி படைப்புகள் பற்றிய பார்வையை வெளிப்படுத்தும் விதம் என ஸ்வெட்லானாவின் வாழ்வைச் சிறப்பாக ஆவணப்படுத்தியிருக்கிறார்கள்.
2010 இல் தனது 87 வயதில் ஸ்வெட்லானா கேயர் மறைந்தார்
August 27, 2022
கவிதையின் நிலவெளி
கவிஞர் Robert Bly தினமும் காலையில் ஒரு கவிதை எழுதும் பழக்கம் கொண்டிருக்கிறார். அவை தொகுக்கப்பட்டு Morning Poems என வெளியிடப்பட்டிருக்கின்றன

இந்த நேர்காணலில் தனது கவிதைகள் மற்றும் கவிதையின் ஆதார விஷயங்கள் பற்றிச் சிறப்பாகப் பேசியிருக்கிறார்.
August 26, 2022
இருநூறு ஆண்டுகாலக் கதை
“யாமம்” வாசிப்பனுபவம்
இர. மௌலிதரன்.

ஒரு ஊரின் வரைபடம் வேண்டும் என்றால் அந்த ஊரின் எழுத்தாளனை தான் நாம் கேட்க வேண்டும். ஏனெனில் அவன் ஒருவன் மட்டுமே அந்த ஊரை அங்குலம் அங்குலமாக அளந்தும், அனுபவித்தும், தனக்குள் ஆழமாகப் புதைத்து வைத்திருப்பான். இப்படி ஒரு கிராமமோ, ஒரு நகரமும் ஒருவன் நினைவில் இருந்தால் அது சாத்தியம். ஆனால் அதுவே ஒரு நாடு முழுவதும் ஒருவன் இப்படித் தனக்குள் வரைபடமாக வரைந்து வைத்திருக்கிறான் என்றால் அது அசாதாரணம். அப்படி இந்தியாவையே தனக்குள் அளந்து, புதைத்து வைத்திருப்பவர் தான் எஸ்ரா. காலச்சக்கரத்தில் பின்னோக்கி சென்று அங்கு வாழ்ந்த மனிதர்களையும் அவர்கள் மண்ணையும் அவர்கள் உணர்வுகளையும் அப்பட்டமாக அப்படியே படம் பிடித்துக் காட்டியுள்ளார் இந்த நாவலில். இது எப்படிச் சாத்தியம்? ஒருவேளை இவர் கூடுவிட்டு கூடுபாயும் வித்தை அறிந்தவரோ? அல்லது காலச்சக்கரத்தில் பின்னோக்கிச் செல்லும் இயந்திரம் ஏதேனும் உள்ளதோ? எஸ் ரா விற்கு மட்டுமே அது வெளிச்சம். யாமம்- மனித மனங்களை மயக்கும் ஒரு வகை வாசனை திரவம். இந்தத் தலைப்பு இக்கதைக்கு மட்டுமல்லாமல் எஸ் ரா வின் எழுத்துக்கும் பொருந்தும்.

பிரிட்டிஷ் வணிகக் கப்பல் இந்திய கரையைத் தொடுவதோடு கதை தொடங்குகிறது 1600 களில். ஒரு முகலாய மன்னனின் சுயநலத்தால் இந்தியாவையே ஆங்கிலேயர்கள் கையில் தாரை வார்த்துக் கொடுப்பதில் தொடங்கி 200 ஆண்டுகாலக் கதை இந்த நாவல். இதனைக் கதை என்றழைப்பதை விடக் குறுங்காவியம் என்றே அழைக்கவேண்டும். இதனுள் நான்கு வெவ்வேறு கதைகள் வேறு வேறு திசையில் சென்றாலும் அவற்றை இணைக்கும் ஒரே புள்ளி மதராபட்டினம் மட்டுமே. அந்தக் கதைகளுடன் சேர்ந்து கிழக்கு இந்திய கம்பெனியின் கோட்டையான மதராபட்டினமும் நம் கண் முன் விரிகிறது.
யாமம் என்ற வாசனை திரவியம் தயாரிக்கும் கரீமும் அவனது மூன்று மனைவிகளும் எப்படி இந்த மதராபட்டினம் மண்ணில் வாழ்ந்து வீழ்ந்து இறுதியில் கரீம் சொத்து இழந்து காணாமல் போக, மூத்த மனைவி காலராவில் இறந்து போக, மீதி இரண்டு மனைவிகளும் தன் சொந்த ஓர் சென்று பஞ்சம் பிழைக்க, அவன் யாமம் வடித்த ஒற்றைச் செங்கலில் ஒட்டிய அதன் வாடையுடன் அவர்கள் கொத்தடிமைகளாக உப்பளம் சென்றடைகிறது அவர்கள் கதை.
அப்பாவின் அக்கிரமத்தால் அம்மாவை இழந்து, தன் நங்கை சித்தியின் துணையோடு அரும்பாடு பட்டு தன் தம்பி திருச்சிற்றம்பலத்தை நல்ல நிலைமைக்குக் கொண்டு சென்று, மணம் முடித்து, கணித மேற்படிப்புக்கு லண்டன் நகரம் அனுப்பிவைத்துச் சந்தோசமாக மதராபட்டினத்தில் வாழ்ந்து வந்த பத்ரகிரி ஒரு கட்டத்தில் தன் தம்பியின் மனைவி மேல் சபலம் கொண்டு தானும் சீரழிந்து தன் தம்பியின் கனவையும் சீரழித்து இறுதியில் அவன் சொந்த ஊருக்கே ஒரு நாடோடியாகச் சென்றடைகிறான்.
மதராபட்டினத்தில் உள்ள எலிசபெத் என்ற சட்டைக்காரிக்காகத் தன் பரம்பரை சொத்து அனைத்தையும் விட்டு கொடுத்து தனக்கென ஒரே ஒரு மலையை மட்டும் வாங்கிக்கொண்டு அதையும் அந்தப் பெண்ணிற்கே எழுதி கொடுத்துவிட்டு தன் காட்டில் தானே ஒரு துறவியாக வாழ தொடங்குகிறார் கிருஷ்ணப்பா கரையாளர்.அவருக்குத் தெரியவில்லை வருங்காலத்தில் அந்த மலை தான் தமிழகத்தின் முதலும் பெரியதுமான தேயிலை தோட்டமாக மாறப்போகிறது என்று.
தன்னைப் பெற்ற தாய் பிச்சை கேட்காத குறையாகத் தன்னை நோக்கி கெஞ்சியும் மண்டியிட்டு புலம்பியும் தன் சிறு வயதிலே துறவு பூண்ட பண்டாரம். தான் தினமும் வணங்கும் சிவபெருமான் தான் நாய் ரூபத்தில் தனக்குக் காட்சியளித்துள்ளார் என்று நம்பி அந்த நாய்க்கு நீலகண்டம் என்று பெயரிட்டு அதன் பின் சென்றே தன் வாழ்க்கையைக் கழித்து இறுதியில் மதராபட்டினத்தில் எங்கோ ஒரு மூலையில் ஒரு அறையில் தன்னைத் தானே அடைத்துக்கொண்டு அரூபமாக மறைந்து விடுகிறார்.
இந்த நான்கு கதைகளில் வரும் மாந்தர்களும் எந்த இடத்திலும் ஒருவரை ஒருவர் சந்தித்துக் கொள்ளவேயில்லை. ஆனால் இந்த நான்கு கதைகள் மூலம் எஸ் ரா நம் வாழ்வின் நான்கு முக்கிய உணர்வுகளை விளக்குகிறார். பேராசை, சபலம் , அமைதி, ஆன்மீகம். இந்த நான்கு நம் அனைவர்க்குள்ளும் உள்ளவைகளே, ஆனால் அதன் வெளிப்பாட்டின் அளவுதான் ஒருவரிடம் இருந்து மற்றொருவரை வேறுபடுத்துகிறது. இந்த நான்கும் வாழ்க்கை வண்டியின் நான்கு சக்கரங்கள் போல அளவுக்கு மீறாமல் இருந்தால் அந்த வண்டியும் அதன் பயணிகளும் பயணத்தைச் சீராகப் பயணிக்க முடியும்.
–
August 25, 2022
மலையாளத்தில் உப பாண்டவம்
எனது உப பாண்டவம் நாவல் மலையாளத்தில் வெளியாகிறது. டிசிபுக்ஸ் இதனை வெளியிடுகிறார்கள். மொழியாக்கம் கே.எஸ்.வெங்கடாசலம்.

ஹெமிங்வேயும் புதுமைப்பித்தனும்
புதுமைப்பித்தனின் துரோகம் என்றொரு சிறுகதையை ஆதவன் எழுதியிருக்கிறார்.

அந்தக் கதையில் இருவர், எழுதி என்ன பயன், எதற்காக எழுதிக் கொண்டேயிருக்க வேண்டும் என்பதைப் பற்றி உரையாடுகிறார்கள். அதில் எதிர்காலத்தில் வரப்போகும் ரசிகன் என்ற நம்பிக்கை மட்டுமே ஓர் எழுத்தாளனுக்குப் போஷாக்குத் தரமுடியாது என்கிறது ஒரு கதாபாத்திரம்.
யாருக்காக எழுதுகிறோம், எதற்காக எழுதுகிறோம் என்ற கேள்வியை நூற்றாண்டுகளாக எழுத்தாளர்கள் சந்தித்து வருகிறார்கள். இதற்குச் சொல்லப்பட்ட எல்லாப் பதில்களும் தற்காலிக சமாதானமே.

கதையின் மையப்பகுதி இது.
‘புகழும் பணமும் இருந்தும் ஹெமிங்வே தற்கொலை செய்து கொண்டானே! அதைப் பற்றியும் நினைத்துப் பார். அவனுக்கென்ன, ரசிகர்களுக்குப் பஞ்சமா!’
‘அதைப் பற்றி நான் யோசித்ததுண்டு’ என்று ராம் மறுபடி வேணுவை ஆச்சரியப்படுத்தினான். ஹெமிங்வே ஓர் அமெரிக்கர், here, how என்ற சித்தாந்தத்தைத் தொழுதவர். தன் ‘நம்பர் ஒன் எழுத்தாளர்’ என்ற பிம்பத்தைத் தொழுதவர். தன் நம்பர் ஒன் ஸ்தானம் சாஸ்வதமல்ல, யாரும் எக்கணமும் அதைப் பறித்து விடக்கூடும், என்ற இன்செக்யூரிட்டியை அவரால் தாள முடியவில்லை. அதுவே அவரைத் தற்கொலைக்கு விரட்டியது. புதுமைப்பித்தன் விஷயம் வேறே. அவர் ஒரு துறவி, அதாவது தோல்வி சார்ந்த துறவு அல்ல, ஞானத்துறவு. He was a mystic.’

‘ஹெமிங்வேயின் ‘கடலும் கிழவனும்’, ‘கிலிமஞ்சாரோ பனிச்சிகரங்கள்’ ஆகிய படைப்புகளில் mystic சாயைகள் இல்லையா, என்ன?’
‘தனிமை பற்றிய ஒரு தவிப்பு, ஒரு மருட்சி… ஆனால் ‘தான்’ சரணாகதியடைவதில்லையே! Surrender of the ego… you know what I mean?’
’புதுமைப்பித்தன் mystic தான். அதைப் பற்றிச் சந்தேகமில்லை’ வேணு இப்போது தானும் புதுமைப்பித்தனைப் படித்திருப்பதாகச் சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கும் நிர்ப்பந்தத்தில் சிக்கிக்கொண்டான். –
‘அப்பா! சாமியாராகப் போற கேரக்டர்ஸுக்குப் பஞ்சமேயில்லை… அன்று இரவு, உபதேசம், அவதாரம், சித்தி, …. கந்தசாமிப் பிள்லை என்னடான்னா, கடவுளை பிராட்வே பக்கத்தில் சந்திக்கிறாராம், காஷுவலா அவரைக் காப்பி ஹோட்டலுக்குக் கூட்டிப் போறாராம். தன் பத்திரிக்கைக்குச் சந்தா கேட்கிறாராம்… என்ன நையாண்டி, என்ன அனாயாசமான தத்துவவீச்சு! எமகாதகப் பேர்வழியப்பா, அந்த மனுஷன்…’
‘கயிற்றரவு…’
‘கிளாசிக்!’
‘அப்புறம் அமானுஷியக் கதைகள்… காஞ்சனை மாதிரி… புராண நிகழ்ச்சிகள்… சாப விமோசனம் மாதிரி...’
ஆதவன் சொல்வது போலப் புதுமைப்பித்தனுக்குத் துறவின் மீது மிகுந்த ஆசையிருக்கிறது. அவரது கதைகளில் நிறையச் சாமியார்கள் வருகிறார்கள். ஹடயோகியை வியந்து பேசுகிறார். துறவியான ஒருவர் மீண்டும் இல்வாழ்க்கைக்குத் திரும்புகிறார்.
கதையில் வரும் ராம் புதுமைப்பித்தனுடைய தத்துவ விசாரத்தின் ஊற்று, ஒருவேளை நிறைவற்ற திருமண உறவாக இருக்குமோ, என்று தோன்றியது என்கிறான் .
அவர்களின் உரையாடலின் வழியே புதுமைப்பித்தன் கதைகளின் மீது புதிய வெளிச்சம் பாய்ச்சப்படுகிறது. இருவரது உரையாடலில் எவரது பார்வை சரியானது என்பதை விடவும் வேணு புதுமைப்பித்தனுடன் கொள்ளும் உறவும், ராம் கொண்டிருக்கும் உறவும் வேறுவேறாக இருப்பதை நம்மால் உணர முடிகிறது.
கதையின் முடிவில் தன்னையும் ஒரு புதுமைப்பித்தனின் கதாபாத்திரமாகவே வேணு உணருகிறான்.
வாழ்விலிருந்து கதை பிறப்பது போலவே கதை நிஜவாழ்க்கையாக மாறிவிடுவதைக் காண முடிகிறது.
இரண்டு நண்பர்களின் இலக்கிய உரையாடலின் வழியே புதுமைப்பித்தனைப் பற்றிய அபூர்வமான பார்வைகளை முன்வைத்திருப்பது ஆதவனின் சிறப்பு. இப்படி ஒரு கதையை அவரால் மட்டுமே எழுத முடியும்.
கதையின் சுவாரஸ்யம் புதிதாக இலக்கியம் படிக்க ஆரம்பித்தவருக்கும் எழுத்தாளருக்குமான உரசல். கருத்துமோதல். அதுவும் ராம் தானும் மனைவியும் சேர்ந்து புதுமைப்பித்தன் படிப்பதாகச் சொல்வது வேணுவிற்கு எரிச்சலை ஏற்படுத்துகிறது. அவன் உரையாடலில் ராமை வீழ்த்திவிடவே முயலுகிறான். ராமின் சீண்டலை வேணு சரியாகவே உணர்ந்து கொள்கிறான்
“எனக்கு மட்டுமே சொந்தமென்று நான் நினைப்பதாக அவன் நினைக்கிற இலக்கிய உலகம் தனக்கும்தான் சொந்தமென்று முழங்கி என் பிரத்தியேகத் தன்மையைச் சீண்டுதல், என் காலை வாருதல், என் அகந்தையை ஆழம் பார்த்தல்…“
புதுமைப்பித்தனையும் ஹெமிங்வேயினையும் இப்படி யாரும் ஒப்பிட்டதில்லை. இருவரது எழுத்தும் வேறுவிதமானது. புகழின் உச்சத்தை அடைந்த ஹெமிங்வே தற்கொலை செய்து கொண்டதற்கு வெறுமையான மனநிலையே காரணம். அவரது படைப்புகளில் ‘தான்’ சரணாகதியடைவதில்லை என்பது சரியான மதிப்பீடு.
ஆனால் புதுமைப்பித்தனை இயக்கியது அவரது ஞானத்தேடல் அவர் ஒரு மிஸ்டிக் என்று விவாதிப்பது புதிய நோக்கு.
இந்தக் கதையின் வடிவம் ஹெமிங்வேயின் சிறுகதை பாணியில் உள்ளது. அவரது கதைகளில் கதாபாத்திரங்கள் இது போல பாரில் சந்தித்து உரையாடுவார்கள். பெரிதும் உரையாடலின் வழியே கதை விரிவு கொள்ளும். புதுமைப்பித்தனிடம் வெளிப்படும் எள்ளலையும் ஆதவன் சிறப்பாகக் கையாண்டிருக்கிறார்.
கதை ஒரு உணவகத்தில் நடப்பதும். இட்லி வந்தவுடன் புதுமைப்பித்தனை விடவும் இட்லி முக்கியம் என்று கேலியாகச் சொல்வதும் காபியைக் கண்டதும் கடவுளும் கந்தசாமி பிள்ளை நினைவிற்கு வருவதும் சுவாரஸ்யம்
‘ரியலிசம் அல்ல, ஃபேன்டஸியும் மிதாலஜியும் தான் புஷ்டியான இலக்கிய ஊற்றுகள்னு ஜான் பார்த் ஒரு இண்டர்வியூவிலே சொல்லி இருக்கிறான், படித்தேன். புதுமைப்பித்தன் அன்றைக்கே இதை ஆன்டிசிபேட் பண்ணிட்டானே! அதை நினைச்சால் ஆச்சரியமாயிருக்கு.’
என்று கதையில் ஆதவன் சொல்லியிருப்பது முக்கியமான பார்வை.
இந்த உண்மையை அறிந்திருந்த ஆதவன், ஏன் இது போன்ற ஃபேன்டஸியும் மிதாலஜி எழுத்துப் பக்கம் திரும்பவேயில்லை.
இன்றைய, மேஜிகல் ரியலிசம், பின்நவீனத்துவம், தொன்மம், வரலாறு சார்ந்த புனைவுகளுக்குப் புதுமைப்பித்தன் முன்னோடியாக இருப்பது தற்செயல் அல்ல, அது ஒரு தேர்வு என்பதை ஆதவன் சரியாகவே நிரூபித்துள்ளார்.
August 24, 2022
டானென்பாம் சொல்கிறார்
கோவிட் லாக்டவுன் காலத்தில் பதிப்பகங்கள் மற்றும் புத்தகக் கடைகள் மிகவும் பாதிப்படைந்தன. மக்கள் படிப்பதில் அதிக ஆர்வம் காட்டிய போதும் கடைகளுக்குச் சென்று புத்தகங்களை வாங்க முடியவில்லை. பல மாதங்களாக மூடப்பட்டதால் புத்தகக் கடைகள் பெரிய பொருளாதார நஷ்டத்தைச் சந்தித்தன. சில கடைகளால் இன்று வரை அதிலிருந்து மீள முடியவில்லை.

தேசாந்திரி பதிப்பகமும் லாக்டவுன் காலத்தில் இது போன்ற பொருளாதார நெருக்கடியைச் சந்தித்தது. அதனால் தானோ என்னவோ “Hello, Bookstore“ என்ற ஏ.பி. ஜாக்ஸ் இயக்கியுள்ள ஆவணப்படத்தைக் காணும் போது மிகவும் நெருக்கமாக உணர்ந்தேன்.
உலகின் எந்த மூலையிலிருந்தாலும் புத்தகக் கடைகளையும் வாசகர்களையும் எனது சொந்த உலகின் பகுதியாகவே உணர்கிறேன்.
1973 முதல் அமெரிக்காவின் லெனாக்ஸில் தி புக் ஸ்டோர் என்ற பெயரில் புத்தகக் கடை ஒன்றை நடத்தி வருகிறார். மேத்யூ டேனன்பாம். இவர் ஒரு தீவிர வாசகர். புத்தகங்களின் மீதான காதலால் புத்தகக் கடை ஒன்றை நடத்தி வருகிறார். அவருக்கென நிறைய வாடிக்கையாளர்கள் இருந்தார்கள். கடையின் உள்ளே சிறிய ஒயின் பார் ஒன்றையும் நடத்தி வந்தார்.

2019 /20 ல் கோவிட் பாதிப்பால் அவரது கடை மூடப்பட்டது. இந்த நாட்களில் அவர் சந்தித்த நெருக்கடிகள். புத்தகம் வாங்க வந்தவர்களின் மனநிலை, மற்றும் அவரது தினசரி வாழ்க்கையை படம் விவரிக்கிறது
நீண்ட லாக்டவுன் காரணமாக வருவாய் வெகுவாகக் குறைந்ததால் கடன்சுமை அதிகமாகவே கடையை மூடவேண்டிய நிலை உருவானது. அப்போது புத்தகக் கடையை காப்பாற்றும்படி பொது அறிவிப்பு ஒன்றை இணையத்தில் வெளியிட்டார். அதற்கு மக்கள் பேராதரவு தந்து உதவினார்கள். லாக்டவுன் கால வாழ்க்கையை மற்றும் புத்தக வாசிப்பாளர்களின் உலகைப் படம் சிறப்பாகப் பதிவு செய்திருக்கிறது
புத்தகம் வாங்க வருகிறவர்களுடன் அவர் மனம் விட்டு உரையாடும் விதமும் புத்தகங்களைத் தேர்வு செய்து தரும் முறையும் தனித்துவமானது. ஹாரிபோட்டர் படிக்கும் சிறுமிக்கு அவர் ஒரு மந்திரக்கோலை பரிசு தருகிறார். அவரது கடைக்கு வருகிறவர்கள் இனிப்பு வகைகள் மற்றும் உணவினை அன்போடு தருகிறார்கள். யாரும் வராத நேரத்தில் அவர் கண்ணாடி தடுப்பின் வழியே சாலையை, வானத்தை, கடந்து செல்லும் வாகனங்களை வேடிக்கை பார்த்தபடியே இருக்கிறார்.
புத்தகங்களை அழகாக வகைப்படுத்தி அடுக்கி வைப்பது, பழைய புத்தகங்களைப் பற்றிய அவரது நினைவுகள். அவரது குடும்பம் தரும் ஆதரவு. புத்தங்களுக்குள்ளாகவே நாளை கழிப்பது. என மேத்யூவின் வாழ்க்கையை நாமும் உடனிருந்து காணுகிறோம்.
மேத்யூ டேனன்பாமின் தோற்றமும் புன்னகையும் வசீகரமாகயிருக்கிறது. அவர் வாடிக்கையாளர்களுடன் அரட்டையடிப்பதில் மிகுந்த மகிழ்ச்சி கொள்கிறார். அவரது புத்தகக் கடைக்கு வருகிறவர்களில் குறைவானவர்களே இளைஞர்கள். பெரும்பாலும் வயதானவர்களே கடையைத் தேடி வருகிறார்கள். பை நிறையப் புத்தகங்களை வாங்கிப் போகிறார்கள்.
டிஜிட்டில் புத்தகங்கள் பெருகிவிட்ட இன்றைய சூழலில் ஒரு புத்தக் கடை செயல்படும் விதத்தையும் அது சந்திக்கும் நெருக்கடிகளையும் படம் உண்மையாகப் பதிவு செய்திருக்கிறது.
டானென்பாமின் சொந்த வாழ்க்கை ஒரு நாவலைப் போலவே விவரிக்கப்படுகிறது .டானென்பாம் மன்ஹாட்டனில் செயல்பட்ட கோதம் புக் மார்ட்டில் புத்தக விற்பனையாளராகப் பணிபுரிந்திருக்கிறார். அந்த அனுபவம் தான் பின்னாளில் சொந்தமாக ஒரு கடை நடத்தத் தூண்டியிருக்கிறது
ஆன்லைன் புத்தகக் கடைகள் வந்தபிறகு இது போன்ற சிறிய புத்தக் கடைகளைத் தேடி வந்து வாங்குகிறவர்கள் குறைந்து போனார்கள். என்கிறார் மேத்யூ.
கோவிட் காலத்தில் தனது கடையைத் தேடி வரும் வாசகர்களுடன் உரையாட டானென்பாம் புத்தகக் கடையின் முன் கதவைத் திறக்கிறார். அவர்கள் கேட்கும் புத்தகத்தைத் தானே எடுத்து வந்து தருகிறார். கையில் பணத்தை வாங்குவதில்ல. கிரெடிட் கார்ட் மட்டுமே. பயன்படுத்த முடியும் என்கிறார் தொடர்ந்து ஒலிக்கும் தொலைபேசியில் அன்போடு பேசுகிறார். கடையின் இணையதளத்தின் வழியே ஆர்டர் செய்யும்படி சொல்கிறார்

வாசகர்கள் ஆர்டர் செய்த ஒவ்வொரு புத்தகத்தையும் பிரவுன் பேப்பரில் நேர்த்தியான கவனத்துடன் சுற்றுகிறார். பின்பு கடையின் முன் உள்ள ஸ்டூலில் வைத்துவிடுகிறார். ஆர்டர் செய்தவர்கள் அங்கிருந்து எடுத்துக் கொள்கிறார்கள்.
தொடர்ந்து இடம்பெறும் இக்காட்சிகளின் வழியே நாமும் கடைக்குள் பிரவேசிக்கிறோம். டானென்பாமோடு உரையாடுகிறோம்.
கடன்சுமையால் கடையை மூடும் சூழல் வந்த போது அந்தப் பகுதி மக்கள் தங்களால் முடிந்த நிதி உதவியைச் செய்து புத்தகக் கடையைக் காப்பாற்றுகிறார்கள். நாற்பது ஆண்டுகள் தான் உருவாக்கிய நட்பே அதற்குக் காரணமாக இருந்தது என்கிறார்.
படத்தின் முடிவில் $100,000 டாலர் நிதி கிடைத்தது. இப்போது எனக்குக் கடன் இல்லை. என்று டானன்பாம் மகிழ்ச்சியோடு தெரிவிக்கிறார்.
புத்தகம் படிப்பது என்பது ஒருவகைப் பசி. அது மறையவே மறையாது. எனக்கும் அந்தப் பசியிருக்கிறது. வாசகர்களுக்கும் இருக்கிறது. அந்தப் பசி நீடிக்கும் வரை நான் புத்தகக் கடையை நடத்துவேன் என்கிறார் டானென்பாம்
86 நிமிடங்களில் எளிமையான, மனதைத் தொடும் அனுபவத்தைத் தருகிறது இந்த ஆவணப்படம்
August 23, 2022
உரையாட விரும்புகின்ற நாவல்
‘ மண்டியிடுங்கள் தந்தையே’ நாவல் குறித்த வாசிப்பனுபவம்.
க.வை. பழனிசாமி


தமிழ் இலக்கியத்தில் முக்கியமானப் புத்தகம் எஸ்.ராவின் ‘மண்டியிடுங்கள் தந்தையே’. வாசிக்கத் தொடங்குகிறபொழுதே அதை உணர்ந்துவிடுகிறோம். வாசகனிடம் அதிகமாக உரையாட விரும்புகின்ற நாவல். உரையாடல்தான் இந்த நாவலின் பலம். உரையாடல் பன்முகத் தன்மையில் இருக்கிறது. பழக்கமான நாவல்களிலிருந்து வேறானது என்பதை இதன் கதையாடல் சொல்லிவிடுகிறது. இந்தப் புரிதல் தோன்றியதுமே நாவல் மீதான அக்கறை கூடிவிடுகிறது. டால்ஸ்டாயை மையமாகக்கொண்டு ரஷ்ய சூழலில் எழுதப்பட்டிருக்கிறது என்பது மட்டுமே இதிலிருக்கும் புதுமையா? ரஷ்ய வாழ்க்கைத் தமிழில் என்பது புதுமையா? இதைத் தாண்டிய வேறு புதுமை இருக்கிறது. அது இதன் வாசிப்பு முறை சார்ந்தது. எல்லா நாவல்களும் கோருகின்ற வாசிப்பு அல்ல. இதன் ஒவ்வொரு நகர்தலிலும் டால்ஸ்டாயின் குரல் தீண்டி.., உள் நகர்ந்து, உணர்ந்து மீண்டும் வாசிக்கிறோம்.
எண்ணற்ற சாளரங்களைத் திறந்து காட்டிய டால்ஸ்டாயை இந்த நாவலில் வேறு வகையான சாளரம் வழியாகப் பார்க்கிறோம். அவரையே அவர் காட்டிய இடத்திலிருந்து மீண்டும் அவரைப் பார்ப்பது. இதைத்தான் உள் நகர்ந்து என்று குறிப்பிட்டேன். மேலும் பார்வையில் விரிகிற காட்சிகள் நாவலுக்கு உள்ளேயும் வெளியேயும் டால்ஸ்டாயை பார்வைகொள்ளவைக்கின்றன. அதனால்தான் உரையாட விரும்புகிற நாவல் என்று குறிபிட்டேன்.
டால்ஸ்டாய் பாத்திரம்.., நாவலில் ஒரு வகையில் புனைவு. இன்னொரு வகையில் நிஜம். புனைவாக வாசிக்கிறபோது நிஜம் ஊடுருவும். நிஜமாக நினைத்து வாசித்தால் புனைவில் முட்டிக்கொள்வோம். கதைக்குள் வருகிற டால்ஸ்டாய் முற்றிலும் நிஜமும் அல்ல. முற்றிலும் புனைவும் அல்ல. புனைவும் நிஜமும் மோதி உருவாகிற அந்த நேர மனிதன். படைப்புக்கு வெளியே இருக்கிற எழுத்தாளனை விட படைப்பு உருவாகிறபோது பிறக்கிற அந்தநேர படைப்பாளிதான் முக்கியம். அவன் அந்தப் படைப்புக்காகவே தன்னை ஒப்புக்கொடுத்தவன். தனது அனுபவத்தை ஒரு படைப்புலகின் வழியாக சந்திக்கிறவன். இந்த உழைப்பின் வழியாகத்தான் Writer Self என்பதே உருவாகிறது. இதை படைப்பில் பாத்திரங்களின் வழியாகவோ அல்லது உள் ஒலிக்கிற குரலிலோ உணரலாம். கரம்சேவ் சகோதரர்கள் கதையில் கடவுளின் இருப்பை வாசகனோடு இணைந்து தேடுவது இந்த Writer Self தான். படைப்பின் வழியாகத் தன்னையும் தன் வழியாகப் படைப்பையும் கூட்டிச் செல்கிறது. நாவலின் அந்தக் கதையாடலுக்காகத் தோற்றம்கொள்கிற சுயம். படைப்பாளி இத்தகைய பிம்பத்தின் வழியாகத் தன்னையும் செதுக்கிக்கொள்கிறான். டால்ஸ்டாயின் இந்த பிம்பத்திலிருந்துதான் எஸ்.ராவின் ‘மண்டியிடுங்கள் தந்தையே’ நாவலை வாசிக்கிறோம். நாவல் அதனால்தான் நம்மிடம் அதிகமாக உரையாடுகிறது.

வாழ்க்கையின் புரியாமையை, குழப்பத்தை தனது கதைகளின் வழியாக எழுத்தாளர் டால்ஸ்டாய் சந்திக்கிறார். இதே சூழலை ‘மண்டியிடுங்கள் தந்தையே’ நாவலில் வருகிற டால்ஸ்டாய் பாத்திரமும் சந்திக்கிறது. வாசிக்கிறபொழுது இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொள்வது இந்த நாவலின் வசீகரம். இருவரும் பார்த்துக்கொள்வது என்பது டால்ஸ்டாயின் ஒட்டுமொத்த படைப்புலகமும், ‘மண்டியிடுங்கள் தந்தையே’ நாவலில் வருகிற படைப்புலகமும் சந்தித்துக்கொள்வது. இதுதான் நாவல் தருகிற புதிய அனுபவம். டால்ஸ்டாயின் பாத்திரங்கள் வாசிப்பில் கூடவே நமக்குள் வருவது இந்த புத்தகத்தைப் பல்வேறு மடிப்புகளாக்கிவிடுகிறது. நமக்குள் அர்த்தமாகியிருக்கிற மனிதர் நாவலுக்குள் ஒரு புனைவாக வந்து போகிற சாத்தியமே இல்லை. மரமும் மர நிழலும் சேர்ந்தே இருக்கிறது. இதை இந்த நாவலின் பல இடங்கள் உறுதிசெய்கின்றன.
டால்ஸ்டாயிக்கு அவரது கள்ள உறவில் பிறந்த பிள்ளை ஒருவன் இருக்கிறான் என்கிற உண்மைமீது நாவல் கட்டமைக்கப்பட்டுள்ளது. ரஷ்ய மண்ணில் அவர் வாழ்ந்த இடங்கள்தான் கதையின் களம். நம்பகத்தன்மைக்காக நிஜமான சில நிகழ்வுகளும் கலந்துள்ளன. ஆனால் பெரும்பாலான நிகழ்வுகள் எழுத்தாளரின் புனைவில் இருக்கிறது. டால்ஸ்டாய் என்ற ஒரு தந்தைக்கும் அவரது கள்ள உறவில் பிறந்த மகனுக்குமான வாழ்க்கை. பண்ணையில் உள்ள அக்ஸின்யா என்ற பெண்மீது அந்த வயதில் ஏற்பட்ட ஒரு காதலால் அல்லது ஈர்ப்பால் பிறந்தவன் திமோஃபி. பண்ணையிலேயே இருக்கிற இவர்களை அறிந்திருக்கிற மனைவி சோபியா, பிள்ளைகள். இவர்களின் இருப்பை விரும்பாத மனைவி. தந்தையை அறிந்தபின்பும் உரிமைகொண்டாட முடியாத இருப்பின்மீதான கோபம்தான் கதை. பெண்ணுக்கு உரிய இடம் கிடைக்காத கலாச்சாரப் பின்னணியும் கூடவே வருகிறது.
நாவலை வாசிக்கும்போது நாவல்களில் டால்ஸ்டாய் முன் வைத்து உரையாடிய சில சம்பவங்களும் வருகின்றன. அவர்மீது எழுத்தின் வழியாகக் கட்டமைத்துக்கொண்ட படைப்பாளியின் பிம்பமும் அதிர்கின்றது. வாசகன் நாவலுக்குள் வருகிற டால்ஸ்டாயியை வெறும் பாத்திரமாகப் பார்க்க முடியாது. ஒரு படைப்பாளியாக அறிமுகமான இடத்திலிருந்தும் பார்க்கத் தூண்டும். இந்த வகையான நெருக்கடியை நாவலாசிரியர் சந்தித்தே ஆகவேண்டிய கட்டாயம். இந்த நெருக்கடி தமிழ் படைப்பாளிகளுக்கு முன் நிகழாதது. டால்ஸ்டாய் என்ற படைப்பாளிமீதான பிம்பம்… கூடவே வாழ்க்கையைச் சந்திக்கிற டால்ஸ்டாய். இருவருக்கும் இருக்கிற முரண்களை நாவல் தருகிற அனுபவமாக ஏற்க வேண்டும். எஸ்.ராவிற்கேயான ரஷ்ய இலக்கியங்களின் பயிற்சி, டால்ஸ்டாயின் வாழ்தல் குறித்த அடிப்படையான புரிதல், பாத்திரங்களை முழுதாக உள்வாங்கிய வாசிப்பு அனுபவம். இவ்வளவும் இந்தச் சிறிய நாவலில் முக்கியப் பங்காற்றியிருக்கிறது. வாழ்க்கைத் திணிக்கிற அனுபவங்களை பொது வெளியில் சந்திப்பதுதானே எழுத்து. இதையே தனது நாவலுக்கான தளமாக ஆக்கிக்கொள்கிறார் எஸ்.ரா.
நாவலின் 12 வது அத்தியாயம் வாசிப்பில் முக்கியமானதாகப்பட்டது. எஸ் ராவின் நாவலுக்கு அதிகமான பங்களிப்பு இந்தப் பகுதியில் இருப்பதாக உணர்கிறேன். அக்ஸின்யாவின் நினைவுகள் என்று எழுதப்பட்ட பகுதி. ஒரு சிறுமியாக, வளர் இளம் பெண்ணாக அவளுக்குள் எவ்வளவு ஆசைகள். எல்லாமும் பிறகான வாழ்க்கையில் அழிந்துபோகின்றன. இது மனதை உறுத்தாதா? இந்த உறுத்தலை டால்ஸ்டாய் போன்ற கருணைமிக்க மனிதரால் தாங்க முடியுமா? ஆனாலும் வாழ்க்கையில் அவரால் ஒன்றுமே செய்ய முடியவில்லை. இதன் வெளிப்பாடுதான் அவரது நாவலில் வருகின்ற பெண்கள். அன்னா கரினீனா மட்டுமல்ல அவரது பெண் பாத்திரங்கள் பலவும் நினைவில் வருகிறார்கள்.
வாசிக்கிற ஒவ்வொரு வாசகனுக்கும் இதில் அவர் அவர்களுக்கான பிரதி ஒன்று காத்திருக்கிறது. இந்தப் பிரதிகளைத் தொகுத்தால் படைப்பு, படைப்பாளி குறித்த புதிய உரையாடலைக் கேட்க முடியும். இதில் கிடைக்கும் எந்தப் பிரதியும் நாவலின் கதையாடலை மட்டும் முன் வைத்து உரையாடுவதில்லை. இந்த நாவலின் கதையாடல் நாவலுக்கு வெளியேயும் இருக்கிறது. அந்த வெளி டால்ஸ்டாயின் படைப்புகளின் வெளி. டால்ஸ்டாயின் படைப்புலகங்கள் சங்கமிக்கிற இடமாகிறது ‘மண்டியிடுங்கள் தந்தையே’. இதிலிருக்கும் கதை விரிந்தபடியிருக்கிறது. இதுவும் நாவலில் இருக்கிற புதுமை. டால்ஸ்டாயின் ஒவ்வொரு நகர்தலிலும் வாசகன் அவரை அவரது பாத்திரங்களின் வழியாகவே பின் தொடர்கிறான். நமக்கு தோன்றுகிறது நடைமுறை வாழ்க்கையில் சந்திக்க முடியாத இருப்பின் வலியை, மன அவஸ்தையை கதைசொல்லி கடக்க முயல்கிறார் என்று. இந்த இடத்தில் பாரதியின் நினைவு வருகிறது. பாரதியின் எழுத்திலிருந்த வீரியத்தை, சக்தியை அவரது வாழ்க்கையில் பார்க்க முடிவதில்லை. இது முரணாகத் தோன்றினாலும் சில நேரங்களில் இது கள எதார்த்தம்.

டால்ஸ்டாய் அவர் விரும்பிய வாழ்க்கையை வாழ முடியவில்லை. இந்தத் துயரத்திலிருந்து கடைசிவரை விடுபடவேயில்லை. எஸ்.ரா இந்த இந்த இடங்களை நாவலில் கவனமாக வெளிக்கொண்டு வந்திருக்கிறார். டால்ஸ்டாய் தனது வாழ்தலில் எல்லா முயற்சிகளையும் செய்து பார்க்கிறார். ஆனால் அவர் நினைத்ததுபோல எதையும் செய்து முடிக்கவில்லை. ஞானியாய் கருணைபொங்க சுற்றியிருந்த மனிதர்களைப் பார்க்கிறார். பண்ணையிலிருக்கும் பிள்ளைகளுக்கு கல்வியைக்கொடுக்க முயல்கிறார். அரசு தலையிடுகிறது. நிலத்தை மக்களிடமே தர முயல்கிறார். பஞ்சகாலத்தில் தனது இருப்பிலிருந்து தாணியங்களை, பிற உதவிகளைத் தருகிறார். அரசாங்கம் சந்தேகப்படுகிறது. வாழ்வின் ஒவ்வொரு கட்டத்திலும் அவரது மனித மனம் அவஸ்தையிலேயே இருக்கிறது. மீள முடியாத மனதை எழுதியே மீட்க முயல்கிறார். எழுத்தில் அவர் உருவாக்கிய பாத்திரங்கள் சில ஆயிரம் இருக்கலாம். எல்லாமும் வாழ்வின் சாகரத்தைக் கடந்துபோக அவர் பயன்படுத்திய தோணிகளே.
நாவலில் ஓல்கா என்ற பெண் வருகிறாள். திமோஃபியை விரும்பி திருமணம் செய்துகொள்கிறாள். அவளுக்கு கிரிபோ என்ற மகன் இருக்கிறான். கிரிபோவைத் தன் மகன்போல பாவித்து வளர்க்கிறான். ஆனால் திமோஃபியின் வாழ்வில் சிறிது வெளிச்சமாக ஓல்காவும் கிரிபோவும் வந்து போகிறார்கள். ஓல்கா, கிரிபோ இருவரும் மடிந்து திமோஃபி கைவிடப்படுகிறான். அக்ஸின்யாவின் பெற்றோர்கள் அவளது இளமையிலேயே இறந்துவிடுகிறார்கள். அக்ஸின்யாவின் இறப்பில்தான் நாவலே தொடங்குகிறது. டால்ஸ்டாயின் மனைவி தனது இளமையிலிருந்த குதூகலமான வாழ்க்கையைத் திருமணத்திற்குபின் வாழவே இல்லை. துக்கமே எட்டிப் பார்க்காத டிமிட்ரியும் இடையில் இறந்துவிடுகிறான். டால்ஸ்டாயின் அம்மா பற்றி அவரது அண்ணன் நிகோலாய்…‘அப்பாவின் அதிகாரமே அம்மாவை நோயாளியாக்கியது. அவள் மரணத்திற்கு அப்பா முக்கியக் காரணம்’ என்கிறார். நாவலில் இது ஏன் நிகழ்கிறது? நாவலில் ஒருவர்கூட சந்தோசமாக இல்லை. மகிழ்ச்சியான தருணங்கள் யாவும் குறைவான கால எல்லையில் முடிந்துவிடுகின்றன. வாழ்வின் புரியாமை, குழப்பத்தை டால்ஸ்டாய் தனது எழுத்தில் எதிர்கொண்டது போலவே எஸ்.ராவின் நாவலும் இருக்கிறது. டால்ஸ்டாயை புரிந்துகொள்வதற்கு அவரது படைப்பை உணர்ந்துகொள்வதற்காக எழுதப்பட்ட நாவலாகத் தோன்றுகிறது. மாபெரும் படைப்பாளியை அவரது எழுத்தை அறிந்துகொள்வதான நாவலாகவும் உணர்கிறோம்.
நாவலின் இறுதியில் அக்ஸின்யாவின் கல்லறையில் இத்தனை காலம் மனதில் பாதுகாத்து வைத்திருந்த பூக்களைத் தூவி நகர்கிறார். திமோஃபி அதைப் பார்ப்பது டால்ஸ்டாயிக்கு எஸ் ராவின் பங்களிப்பு. டால்ஸ்டாயின் ஒவ்வொரு நகர்தலிலும் வாசகன் அவரது படைப்புலகையும் சேர்த்தே பார்க்கத் தூண்டுகிற எழுத்து மொழி நாவலில் இருக்கிறது. அது டால்ஸ்டாயின் கருணை மனத்தைக் காப்பாற்றிவிடுகிறது. இது நாவலில் உள்ள எழுத்தின் வெற்றி.
****
August 21, 2022
குளிர்மலையின் வெண்மேகம்
தாங் பேரரசைச் சேர்ந்த கவிஞர் ஹான்ஷான் குளிர்மலை(COLD MOUNTAIN) என்ற பெயரிலே அறியப்படுகிறார். உலகின் பரபரப்பிலிருந்து ஒதுங்கி குளிர்மலை எனும் மலையுச்சியினைத் தேடிச் சென்று தனிமையில் வாழ்ந்திருக்கிறார் ஹான்ஷான். அவர் வசித்த குகை இன்றைக்குமிருக்கிறது. ஹான்சானின் கவிதைகள் வாழ்வின் நிலையாமையைப் பற்றிப் பேசுவதுடன் இயற்கை தரும் நிகரில்லாத மகிழ்ச்சியினையும் பாடுகின்றன.

இக் கவிதைகள் ஆயிரத்து இருநூறு ஆண்டுகளுக்கு முன் எழுதப்பட்டவை என்றாலும், மாறாத ஞானத்தையும் உண்மையையும் கொண்டு வாழ்க்கையை ஆழமாகப் புரிந்து கொள்ள உதவுகின்றன
மொழிபெயர்ப்பாளர் ரெட் பைன் சீனாவிலுள்ள குளிர்மலையைத் தேடிச் சென்ற பயணத்தையும், ஹான்ஷானின் கவிதைகள் மற்றும் ஆளுமை குறித்த பார்வைகளையும் கொண்ட ஆவணப்படம் “Cold Mountain”
இதனை மைக் ஹசார்ட் மற்றும் டெப் வால்வொர்க் இயக்கியிருக்கிறார்கள்.
ஹான்ஷான் வசித்த குகையைத் தேடி வருகிறவர்களுக்கு உணவளிக்கும் பெண் எவருடனும் பேசுவதில்லை. அவள் சிரித்துக் கொண்டேயிருக்கிறாள். அது தான் குளிர்மலையின் அடையாளம்.
நான் ஒரு கல் தலையணையில் என்னுடைய தலையை மகிழ்ச்சியுடன் வைத்திருக்கிறேன். வானத்திலும் பூமியிலும் ஏற்படும் மாற்றங்களைப் ஆழ்ந்து கவனிக்கிறேன். இன்னும் மேகங்களையும் மலைகளையும் கவனித்து வருகிறேன் , அது தான் எனது ஆனந்தம் என்கிறார் ஹான்ஷான்.
ஹான்-ஷான் எப்படிப்பட்ட மனிதர் என்று யாருக்கும் தெரியாது. அவர் ஒரு ஏழை, ஒரு பித்தன், ஞானி என்று சொல்கிறார்கள். அவர் ஒரு நாடோடி போல வாழ்ந்திருக்கிறார்.. அவரது தொப்பி பிர்ச் மரப்பட்டைகளால் ஆனது, அவரது ஆடைகள் கிழிந்து அழுக்கடைந்து போயிருந்தன, மரக் காலணிகள் அணிந்திருக்கிறார்
அவர் அடிக்கடி குவோ-சிங் ஆலயத்திற்குச் சென்றுவந்திருக்கிறார். கோவிலின் உணவுக்கூடத்தை நடத்தும் ஷிஹ்டேயுடன் நட்புடன் பழகியிருக்கிறார். மலைக்குகையிலே மறைந்துவிட்டார் என்று சொல்கிறார்கள். அவர் இறந்த பிறகு அவரது கவிதைகள் பாறைகளில், வீட்டுச்சுவர்களில், மரச்செதுக்குகளில் இருந்து சேகரிக்கபட்டுத் தொகுக்கப்பட்டிருக்கின்றன.
August 19, 2022
தேடப்படும் மனிதர்
“தி லெஜண்ட் ஆஃப் மோலி ஜான்சன்” லியா பர்செல் இயக்கியபடம். 2021ல் வெளியாகியுள்ளது
ஆஸ்திரேலிய சினிமாவிற்கெனத் தனித்த அழகியல் இருக்கிறது. பூர்வகுடி மக்களின் வாழ்க்கை, பண்ணைக் குடியிருப்புகள். பிரிட்டிஷ் காலனிய ஒடுக்குமுறைகள். துரத்தப்பட்ட பூர்வகுடிகளின் அவலம், உறுதியான பெண்களின் செயல்பாடு, பழங்குடியின கலாச்சாரத்தின் தனித்துவம் போன்றவற்றைப் பல்வேறு விதங்களில் ஆஸ்திரேலிய சினிமா தொடர்ந்து விவரித்து வருகிறது.

The Drover’s Wife படத்தில் ஆல்பைன் பனிமலைத் தொடருக்கு மத்தியில் தனது நான்கு குழந்தைகளுடன் தனியே வசித்து வருகிறார் மோலி ஜான்சன். ஆடுகளை மேய்ச்சலுக்குக் கூட்டிச் சென்றிருக்கிறான் அவளது கணவன் ஜோ. அவளுக்குத் துணை ஒரு துப்பாக்கியும் நாயும் மட்டுமே.
மலையுச்சியிலிருந்து கீழே எவர்டனுக்குச் சென்று வீட்டிற்குத் தேவையான பொருட்களை வாங்கி வருவதற்கு 12 வயது மகன் டேனி உதவி செய்கிறான். வடகிழக்கு விக்டோரியாவில் அமைந்துள்ள சிறிய நகரம் எவர்ட்ன்.

ஒரு நாள் லண்டனிலிருந்து புதிதாக வந்துள்ள ராணுவ அதிகாரி நேட் கிளிண்டோஃப் மற்றும் அவரது மனைவி லூயிசா பயணவழியில் உணவு தேடி அவளது வீட்டிற்கு வருகிறார்கள். அவர்களைக் கண்டதும் துப்பாக்கியை உயர்த்தும் மோலியிடம் அன்பாக உரையாடி தங்களுக்கு உதவி வேண்டும் என்கிறார்கள். மோலி உதவி செய்வதாக ஒத்துக் கொள்கிறாள்.
அந்தச் சந்திப்பின் போது லூயிசா தான் கனவு கண்டது போல ஆஸ்திரேலிய வாழ்க்கை இல்லை என்பதை வெளிப்படுத்துகிறாள். அவர்கள் முகாமிற்குத் திரும்பிப் போகும் போது டேனி உடன் செல்லுகிறான்.
மோலியின் துணிச்சலைப் பற்றி அந்த வட்டாரத்தில் அனைவரும் அறிந்திருக்கிறார்கள். “அவள் மலைப்பிரதேசத்தில் பிறந்து வளர்ந்தவள். அவளுக்கு எதைக் கண்டும் பயம் கிடையாது. எதையும் துணிச்சலுடன் சந்திக்கக் கூடியவள் “என்று ஒரு கதாபாத்திரம் சொல்கிறது. அது உண்மை என்பதை அடுத்து வரும் காட்சிகள் அடையாளப்படுத்துகின்றன.
ஒரு நாள் பூர்வகுடி மனிதரான யாடகா காவலர்களிடமிருந்து தப்பியோடி அவளது வீட்டில் அடைக்கலமாகிறான். கொலைக்குற்றம் சாட்டப்பட்டுக் கைது செய்யப்பட்ட அவனது கடந்தகாலத்தைப் பற்றி மோலி அறிந்திருக்கவில்லை. ஆனால் பசியோடு இருந்தவனுக்கு உணவளிக்கிறாள். கைவிலங்குகளை அகற்றிவிடுகிறாள்.

கர்ப்பிணியான அவளுக்குத் தேவையான சிறு உதவிகளைச் செய்து கொண்டு அந்த வீட்டில் மறைந்து வாழுகிறான் யாடகா. மோலியின் மகன் டேனியுடன் மிகுந்த நட்புடன் பழகுகிறான். டேனிக்கு ஈட்டி எறிய கற்றுத் தருகிறான். தான் சர்க்கஸில் வேலை செய்த நாட்களைப்பற்றிக் கதையாகச் சொல்கிறான். அவர்கள் மூவருக்கும் இடையில் நெருக்கம் உருவாகிறது.
இதற்கிடையில் ஆடுகளை மேய்ச்சலுக்குக் கூட்டிப் போன மோலியின் கணவர் ஜோவைக் காணவில்லை என்று ராணுவம் தேடுதல் வேட்டையில் ஈடுபடுகிறது. அந்தத் தேடலின் நடுவே யாடகா கண்டறியப்படுகிறான். தப்பியோட முயலும் போது சுடப்படுகிறான். கொலைக்குற்றவாளிக்கு உடந்தையாக இருந்ததாக மோலி குற்றம் சாட்டப்படுகிறாள். அவளுக்குத் தூக்குதண்டனை விதிக்கப்படுகிறது.
ஆல்பைன் பனிமலைத் தொடரில் தனியொரு பெண்ணாக மோலி எப்படி வாழ்க்கையை எதிர்கொள்கிறாள். எதிர்பாராத நெருக்கடிகளைச் சந்திக்கிறார் என்பதைப் படம் சிறப்பாக விவரிக்கிறது.

மோலிக்கும் யாடகாவிற்கும் இடையில் வெளிப்படுத்திக் கொள்ளாத நேசம் உருவாகிறது. அது காதலில்லை. நட்புமில்லை. புரிந்து கொள்ளல். யாடகாவை அவள் புரிந்து கொண்டிருக்கிறாள். அதன் அடையாளமாக அவளிடம் அடங்கிப் போகிறான். அவர்களின் உறவு படத்தில் அழகாகக் காட்சிப்படுத்தப்பட்டிருக்கிறது
மோலியின் மகன் டேனி அம்மாவிற்கு உற்றதுணையாக இருப்பதோடு ஆபத்தான சூழலில் தைரியமாகச் சண்டையிடுகிறான். அவன் யாடகாவை கட்டி அணைத்துக் கொள்ளும் காட்சியில் அவரையும் தந்தையைப் போலவே உணருகிறான்.
ராணுவ குடியிருப்பில் நடக்கும் கொண்டாட்டத்தில் அவர்கள் எவ்வளவு பூர்வகுடிகளை வெறுக்கிறார்கள். ஒடுக்க நினைக்கிறார்கள் என்பது காட்டப்படுகிறது

லூயிசா தனக்கு உதவி செய்த மோலியை மறுபடி காண வேண்டும் என்று ஆசைப்படுகிறாள். அவள் செய்த உதவிக்கு நன்றியாக எதையாவது செய்ய வேண்டும் என்று முயலுகிறாள். கடைசிக்காட்சியில் அவள் முன்னால் மோலி கைது செய்யப்பட்டுத் தூக்கிலிடப்பட நிற்கிறாள். அப்போது மோலியின் கண்களை நேர்கொள்ள முடியாமல் லூயிசா தவிக்கிறாள்.
பிரிட்டிஷ் காலனிய ஆட்சியின் போது ராணுவம் பூர்வ குடிமக்களை எப்படி ஒடுக்கியது, அவர்களின் நிலத்தையும் உரிமைகளையும் எவ்வாறு பறித்துக் கொண்டது என்பதைப் படம் நேர்த்தியாக விவரிக்கிறது. ப்ளூ மவுண்டன்ஸின் பருவகால மாற்றங்களை ஒளிப்பதிவாளர் மார்க் வேர்ஹாமின் தனித்த அழகுடன் படமாக்கியிருக்கிறார். ஹென்றி லாசன் 1892ல் எழுதிய சிறுகதையை மையமாகக் கொண்டு இந்தப் படம் உருவாக்கப்பட்டிருக்கிறது.
நீங்கள் நேசிப்பவர்களை பாதுகாக்க எவ்வளவு தூரம் செல்வீர்கள் என்பதே படம் எழுப்பும் கேள்வி. அது தான் வரலாற்றில் என்றோ நடந்த நிகழ்வினை இன்றைக்கும் நெருக்கமாக்குகிறது.
August 18, 2022
அஞ்சலி
தமிழப்பெருந்தகை அய்யா நெல்லை கண்ணன் மறைவிற்கு ஆழ்ந்த இரங்கலையும் அஞ்சலியையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

எங்கள் குடும்ப உறவாக, என் மேல் பேரன்பு கொண்டவராய் விளங்கிய அய்யாவின் மறைவு பெருந்துயரத்தில் ஆழ்த்துகிறது.
S. Ramakrishnan's Blog
- S. Ramakrishnan's profile
- 657 followers
