மன்னிக்கப்படும் குற்றம்

புதுமைப்பித்தனின் சிறுகதை ஒன்றில் காபிக்கடை முதலாளி கடவுளிடமே ஒரு கள்ளநோட்டினைத் தள்ளிவிடுகிறார். கடவுள் அந்த நோட்டினை தனியே எடுத்துக் கிழித்துப் போட்டுவிடுகிறார். துக்ளக் காலம் துவங்கி இன்றுவரை கள்ளநோட்டுப் புழக்கம் இல்லாத காலமேயில்லை. அதுவும் புதிய ரூபாய் நோட்டுகள் அறிமுகமாகும் போது உடனே கள்ளநோட்டுகள் தயாராகிவிடுகின்றன. இன்றைக்கு நாம் எந்தக் கடைக்குப் போய்ப் பணம் கொடுத்தாலும் அது ஒரிஜினல் தானா என்று பரிசோதித்துப் பார்க்கிறார்கள். நூற்றில் ஒரு கள்ளநோட்டு எப்படியோ கலந்துகிடக்கிறது.

கள்ளநோட்டு கும்பலைப் பற்றி எத்தனையோ படங்கள் வெளியாகியுள்ளன. இதில் The Counterfeiters of Paris -1961 Seven Times Seven -1969 The Counterfeiters (2007) போன்றவை முக்கியமானவை . ஹாலிவுட்டின் கறுப்பு வெள்ளை யுகத்தில் குற்றப்பின்புலம் கொண்ட படங்களில் Mister 880 போலச் சில அபூர்வமான படங்கள் வெளியாகியுள்ளன.

கோடிக்கணக்கில் கள்ளநோட்டு அச்சிட்டு மாட்டிக் கொள்ளும் குற்றவாளிகளை போலின்றி ஒரு டாலர் நோட்டினை மட்டுமே அச்சிட்டு அதுவும் அந்தப் பணத்தைத் தனக்கெனப் பயன்படுத்திக் கொள்ளாத ஒரு குற்றவாளியின் கதையைத் தான் படம் விவரிக்கிறது

1950களில் அமெரிக்காவில் கள்ளநோட்டுப் புழக்கம் அதிகமானதால் காவல்துறை இதற்கெனச் சிறப்புப் பிரிவினை உருவாக்குகிறது. அவர்கள் நாடுமுழுவதும் தேடுதல் வேட்டை நடத்தி கள்ளநோட்டு கும்பலைக் கைது செய்கிறார்கள். இந்தத் தேடுதலில் நீண்டகாலமாகத் தீர்க்கப்படாத வழக்காக இருப்பது ஒரு டாலர் மோசடி.

பழைய, கிழிந்து போன நோட்டு போலக் காணப்படும் கள்ளநோட்டு அச்சு அசலாக உருவாக்கப்பட்டிருக்கிறது. இந்த நோட்டினை அடித்தவர் யார். எங்கிருந்து செயல்படுகிறார் என்பதைக் கண்டறியவே முடியவில்லை. 20 ஆண்டுகளாகத் தீர்க்கப்படாத வழக்கு என்பதால் இதைக் கண்டுபிடிக்கப் புலனாய்வாளர் ஸ்டீவ் புக்கனன் நியமிக்கப்படுகிறார். அவர் பிடிபடாத குற்றவாளியை அடையாளப்படுத்தும் விதமாக Mister 880 எனப் பெயரிடுகிறார்.

இப்படம் எமெரிச் ஜூட்னர் என்ற ஆஸ்திரியரின் வாழ்க்கையில் நடந்த சம்பவங்களை மையமாகக் கொண்டே உருவாக்கப்பட்டிருக்கிறது. ஒரு டாலர் நோட்டு அச்சடித்த குற்றத்திற்காகச் சிறை சென்ற ஜூட்னர் இந்தப் படத்தின் கதைக்காகப் பெற்ற பணம் அவர் அடித்த கள்ளநோட்டுகளைப் போலப் பலநூறுமடங்கு அதிகம் என்கிறார்கள்.

ஒரு டாலர் நோட்டினைத் தேடும் ஸ்டீவ் புக்கனன் ஏஜென்ட் மேக்குடன் நியூயார்க்கிற்கு வந்து சேருகிறார். அங்கே விசாரிக்கத் தொடங்கும் போது கள்ள நோட்டைக் கைமாற்றிய ஒரு பெண்ணைப் பற்றி அறிந்து கொள்கிறார். ஐ.நா.சபையில் பிரெஞ்சு மொழிபெயர்ப்பாளராக வேலை செய்யும் ஆன் வின்ஸ்லோவிடம் விசாரணை நடத்திய போது அது கடையில் கிடைத்த சில்லறை என்கிறாள். அந்தக் கடைக்கு எப்படி வந்தது. ஒரு டாலர் அச்சிடும் ஆள் எங்கேயிருக்கிறான் என்று தேட ஆரம்பிக்கிறார்கள்

இதற்கிடையில் பழைய பொருட்களை விற்கும் வயதான வில்லியம் முல்லர் ஆன் வின்ஸ்லோ வசிக்கும் அதே குடியிருப்பில் வசிக்கிறார். அவரை அக்குடியிருப்பில் அனைவரும் நேசிக்கிறார்கள்.

முல்லர் தனது வீட்டின் அருகிலே சிறிய அச்சு இயந்திரத்தை வைத்து ஒரு டாலர் அச்சிடுகிறார். அதுவும் மிகக்குறைவான அளவு மட்டுமே அச்சிடுகிறார். அதையும் குழந்தைகளை மகிழ்ச்சிப்படுத்தவே செலவு செய்கிறார். சில நேரம் வீட்டுவாடகை கொடுக்கப் பணம் அடிக்கிறார். மற்றபடி கள்ளநோட்டு அச்சிட்டு எந்த முறைகேடான வேலையிலும் ஈடுபடவில்லை.

முல்லர் ஒரு நாள் ஸ்பின்னிங் வீல் ஒன்றை ஆனியிடம் விற்கிறார். இதற்காக மூன்று டாலர் பணம் கேட்கிறார். அவள் ஐந்து டாலர் தரவே மீதமுள்ள இரண்டு டாலருக்குத் தனது கள்ளநோட்டினை அவளது பர்ஸினுள் வைத்துவிடுகிறார். இது தெரியாமல் ஆனி அந்தப் பணத்தை மாற்றும் போது கள்ளப்பணம் எனப்பிடிபடுகிறாள்.

போலீஸ் கள்ளநோட்டுக்காரனைக் கைது செய்வதற்காகக் கோனி தீவில் ஒரு திட்டத்தை உருவாக்குகிறார்கள்.. அதில் நிச்சயம் மாட்டிக் கொள்வார் எனக் காத்திருக்கிறார்கள். ஆனால் தப்பிவிடுகிறார். ஆனின் மீது காதல் வசப்படும் ஸ்டீவ் அவளைச் சந்திக்க வரும் போது முல்லரை அறிமுகம் செய்து கொள்கிறார். அவர் தான் குற்றவாளி என அப்போது தெரியவில்லை.

அக்கம்பக்கத்தில் உள்ள வணிகர்களுக்குக் கள்ளநோட்டாக உள்ள ஒரு டாலரை எப்படிக் கண்டறிவது என்பதைக் காட்டும் அட்டைகள் தரப்படுகின்றன. தன்னைப் போலீஸ் தேடுவதை அறிந்த முல்லர் தனது அச்சு இயந்திரத்தை ரகசியமான இடத்தில் புதைத்துவிடுகிறார். அங்கிருந்து தப்பிச் செல்ல திட்டமிடுகிறார். ஆனால் எதிர்பாராதவிதமாக மாட்டிக் கொள்கிறார். போலீஸ் அவரைக் கைது செய்கிறது. முல்லர் தான் குற்றவாளி என அவளால் நம்பமுடியவில்லை.

நீதிமன்ற விசாரணையின் போது முல்லர் தனது குற்றத்தை ஒத்துக் கொள்கிறார் அத்தோடு எதற்காகக் கள்ளநோட்டு அச்சிட்டார் என்ற தனது தரப்பு நியாயத்தையும் சொல்கிறார். அது ஏற்றுக் கொள்ளதக்கதாகவே இருக்கிறது. ஆனாலும் அரசை தவிர வேறு எவரும் நோட்டு அச்சிடக்கூடாது என்பதால் அவரது குற்றத்தை நீதிபதி தண்டிக்கிறார். ஒரு வருடம் மற்றும் ஒரு நாளாகத் தண்டனை விதிக்கப்படுகிறது. அத்துடன் ஒரு டாலர் அபராதமும் விதிக்கப்படுகிறது. அந்த டாலர் நல்ல நோட்டாக இருக்க வேண்டும் என்று சொல்லிச் சிரிக்கிறார் நீதிபதி. ஆனால் முல்லரிடம் உள்ள பணம் முழுவதும் போலியானது. ஆகவே அவருக்கான ஆன் பணம் செலுத்துகிறாள்.

தான் செய்தது குற்றமில்லை என்றே முல்லர் நினைக்கிறார். வணிகர்கள் எளிதாக ஒரு டாலர் விலையை அதிகம் சொல்லி ஏமாற்றுகிறார்கள். ஒரு டாலரை இழப்பதைப் பொதுமக்களும் பெரிதாக நினைப்பதில்லை. ஆகவே தனது வாழ்க்கை நெருக்கடிகளைச் சமாளிக்க இப்படிச் செய்தேன் என்கிறார். அதுவும் தனது மாமா ஹென்றி பணம் தருவதாகச் சொல்லியே கள்ளநோட்டு அச்சிடுகிறார்.

குற்றம் செய்யும் முல்லரிடமும் சில நியதிகள் இருக்கின்றன. அவர் ஒருவரிடம் ஒரு டாலர் தான் ஏமாற்றுகிறார். அவர் இரண்டு டாலர்களை ஏமாற்றிய ஆன் மூலமே கடைசியில் பிடிபடுகிறார். அவரைக் காட்டிக் கொடுத்தது அவரது இச்சிறுசெயலே.

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on September 22, 2022 01:10
No comments have been added yet.


S. Ramakrishnan's Blog

S. Ramakrishnan
S. Ramakrishnan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow S. Ramakrishnan's blog with rss.