புத்தகங்களின் நடுவே
கடந்த ஐந்து நாட்களாகப் பயணத்திலிருந்தேன். இன்று தான் சென்னை திரும்பினேன்.


திருச்சி மற்றும் மதுரை புத்தகத் திருவிழாவில் கலந்து கொண்டேன். திருச்சியில் புத்தகத்திருவிழா மிகவும் சிறப்பாக நடைபெற்றது.
திருச்சி மாவட்ட நிர்வாகமும் தேசிய புத்தக நிறுவனமும் இணைந்து கண்காட்சியை சிறப்பாக உருவாக்கியிருந்தார்கள். களம் அமைப்பின் சார்பில் உரையாற்ற வருகிறவர்களை வரவேற்று வசதியான தங்குமிடம், ருசியான உணவு கொடுத்துக் கவனித்துக் கொண்டார்கள்.

24 சனிக்கிழமை மாலையில் நான் வரலாற்றின் மௌனம் என்ற தலைப்பில் உரையாற்றினேன். அரங்கு நிறைந்த கூட்டம்.


மாவட்ட ஆட்சித்தலைவர் பிரதீப் குமார் தனது குடும்பத்துடன் வந்து நிகழ்ச்சியைக் கேட்டது மகிழ்ச்சி அளித்தது.
தேசாந்திரி அரங்கில் நிறைய வாசகர்களைச் சந்தித்து உரையாடினேன். புத்தகங்களில் கையெழுத்துப் போட்டுக் கொடுத்தேன்.

என்னைச் சந்திப்பதற்காகவே திண்டுக்கல், சேலம், கரூர், தஞ்சை என வேறுவேறு ஊர்களிலிருந்து வந்திருந்த வாசகர்களின் நேசத்திற்கு எப்படி நன்றி சொல்வது. அவர்களின் அன்பும் ஆசியுமே என்னைத் தொடர்ந்து எழுதவைக்கிறது.
வெள்ளிக்கிழமை மாலை கண்காட்சி அரங்கில் நண்பர் திருப்புகழ் ஐஏஎஸ் ஆற்றிய சிறப்புரையைக் கேட்டேன். பயணம் பற்றி விரிவான உரையை நிகழ்த்தினார். ஜப்பானியத் துறவிகளின் ஒட்டம் பற்றிய தகவல்கள் வியப்பளித்தது.
புத்தகத் திருவிழாவிற்குப் பள்ளி கல்லூரி மாணவர்கள் திரளாக வந்திருந்து கை நிறையப் புத்தகங்களை வாங்கிச் சென்றது வேறு எங்கும் காணாத அதிசயம்.
திருச்சியில் நண்பர் துளசிதாசன், கவிஞர் தங்கம் மூர்த்தி, கவிஞர் நந்தலாலா, சந்திரகாந்த், ரமேஷ்பாபு என நிறைய நண்பர்களைச் சந்திக்க முடிந்தது மகிழ்ச்சி அளித்தது

மதுரை புத்தகத் திருவிழா இந்த முறை பிரம்மாண்டமான புதிய அரங்கினுள் நடைபெற்றது. தமுக்கம் மைதானத்தில் உருவாக்கபட்டுள்ள குளிரூட்டப்பட்ட அரங்கு. இருநூறுக்கும் மேற்பட்ட கடைகள் அமைத்திருந்தார்கள். ஞாயிற்றுகிழமை கண்காட்சியில் பெருந்திரளான கூட்டம். நின்று கையெழுத்துப் போட அரங்கில் இடமில்லை. தூத்துக்குடியிலிருந்து வந்திருந்த சலூன் நூலகம் மாரியப்பன் எனக்குப் பொன்னாடை அணிவித்து கௌரவித்தார்.

25 ஞாயிறு மாலை புத்தகத் திருவிழாவில் உலகம் பற்றிய கனவு என்ற தலைப்பில் உரையாற்றினேன்.

எனது நெருங்கிய நண்பரும் மதுரை பாராளுமன்ற உறுப்பினருமான சு.வெங்கடேசனுடன் மேடையைப் பகிர்ந்து கொண்டது சந்தோஷம் அளித்தது. பதினைந்து ஆண்டுகளுக்குப் பிறகு இருவரும் ஒரே மேடையில் பேசினோம். தமிழ்மொழி, பண்பாடு, வரலாறு, மதுரைக்கான சிறப்புத் திட்டங்கள் சார்ந்து பாராளுமன்றத்தில் சு.வெங்கடேசன் தொடர்ந்து குரல் கொடுத்து வருவதைப் பாராட்டினேன். வேள் பாரி திரைப்படமாகப் போவதற்கு வாழ்த்துத் தெரிவித்தேன். கீழடி ஆய்வுகளிலும் மதுரையின் பண்பாட்டுச் சிறப்புகளை முன்னெடுப்பதிலும் அவர் காட்டும் அக்கறையும் ஈடுபாடும் நிகரில்லாதது.





மதுரைப் புத்தகத் திருவிழாவில் மண்ணின் மைந்தர்களான படைப்பாளிகளும். புதிதாக எழுதத் துவங்கியுள்ள இளம்படைப்பாளிகளும் கௌரவிக்கப்பட்டது பாராட்டிற்குரியது. படைப்பூக்க அரங்கம். சிறார்களுக்கான அரங்கம், வரலாற்றுக்கண்காட்சி எனச் சிறந்த முன்னெடுப்புகளை மதுரையில் காண முடிந்தது


தமிழக அரசு இப்படி மாவட்டம் தோறும் புத்தகத்திருவிழாவை நடத்திவருவது மிகுந்த பாராட்டிற்குரியது. இதற்காகத் தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்களை மனம் நிறைந்து பாராட்டுகிறேன்.
மாவட்ட ஆட்சித்தலைவர் அனிஷ் சேகர், பாராளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் இருவரும் புத்தகத் திருவிழா ஏற்பாடுகளைச் சிறப்பாகச் செய்திருந்தார்கள். அவர்களுக்கு என் நன்றியும் வாழ்த்துகளும்.
நண்பர் சு. வெங்கடேசன். பேசத்துவங்கிய ஐந்து நிமிஷங்களில் சூறைக்காற்றோடு பலத்த மழை. அந்த மழைக்கு நடுவிலும் அவர் மதுரை எழுத்தின் தலைநகராக எப்படி விளங்கியது என்பதைச் சிறப்பாக எடுத்துப் பேசினார். அபூர்வமான தகவல்கள், உண்மைகள். காற்றின் வேகமும் மழையின் சீற்றமும் அதிகமானதால் அரங்கினுள் தண்ணீர் புகுந்துவிட்டது. வாசகர்கள் பலரும் மேடைக்கே வந்து புத்தகங்களில் கையெழுத்து வாங்கினார்கள். புகைப்படம் எடுத்துக் கொண்டார்கள்.
நண்பர் முத்துகிருஷ்ணன் பசுமை நடையின் மூலம் மதுரையின் தொன்மையைத் தொடர்ந்து அடையாளப்படுத்திவருவதுடன் மதுரையின் வரலாற்றைப் பற்றித் தூங்காநகர நினைவுகள் என்ற புத்தகத்தை எழுதியிருக்கிறார். அபூர்வமான தகவல்களும் புகைப்படங்களும் கொண்ட புத்தகமது.
அவரும் பசுமை நடை நண்பர்களும் இந்தப் புத்தகத்திருவிழாவிற்குப் பல்வேறுவிதங்களில் உறுதுணை செய்திருக்கிறார்கள். முத்துகிருஷ்ணனுக்கும் பசுமை நடை நண்பர்களுக்கும் எனது வாழ்த்துகள்.
மதுரை மாவட்ட நிர்வாகம் சார்பில் அதிகாரிகள் முறையாக என்னைத் தொடர்பு கொண்டு வரவேற்றுத் தங்கவைத்துச் சிறப்பாகக் கவனித்துக் கொண்டார்கள். அவர்களுக்கு எனது நன்றி.
•••
புத்தகத் திருவிழாவிற்கான எனது பரிந்துரைகள்
1) மின்னூல்கள்(Ebooks) மற்றும் மின்னூலகங்கள் பற்றிய அறிமுகம் மற்றும் உரைகள் அவசியம் தேவை.
2) தமிழக வரலாறு குறித்து ஒரு நாள் தனியே அமர்வு அல்லது கருத்தரங்கு ஏற்பாடு செய்யப்பட வேண்டும்.
3) சுற்றுச்சூழல் மற்றும் அறிவியல் சார்ந்த நூல்களுக்கான அறிமுக உரைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்
4) அரிய நூல்கள், கையெழுத்துப்பிரதிகள், முதற்பதிப்புகள், சிற்றிதழ்கள், நிகண்டு, அகராதிகள் மற்றும் தற்போது அச்சில் இல்லாத நூல்களுக்கான சிறப்புக் கண்காட்சி ஒன்றினை ஏற்பாடு செய்ய வேண்டும்
5) புத்தகத் தயாரிப்பு, புதிய தொழில்நுட்பம், வடிவமைப்பு. குறித்த உரைகள், பயிலரங்கு ஏற்பாடு செய்யப்பட வேண்டும்
6) கல்வி குறித்த நூல்கள். சிறப்புரைகளுக்கெனத் தனியே ஒரு அமர்வு
7) தமிழ் காமிக்ஸ் மற்றும் சிறார் கதைப்புத்தகங்களுக்கான ஓவியம் வரைவது, உருவாக்குவது தொடர்பாக ஓவியர்கள் படைப்பாளிகள் கலந்து கொள்ளும் சிறப்பு நிகழ்ச்சி
8) கண்காட்சி வளாகத்தில் பாரம்பரிய உணவுத் திருவிழா ஏற்பாடு செய்யப்படல் வேண்டும்.
புகைப்படங்கள் :
நன்றி
திரு லெனின், ஸ்ருதி டிவி கபிலன். தங்கம் மூர்த்தி
டாக்டர் வெங்கடாசலம்
S. Ramakrishnan's Blog
- S. Ramakrishnan's profile
- 659 followers
