S. Ramakrishnan's Blog, page 84
July 17, 2022
கோவை புத்தகக் கண்காட்சியில்
கோவை புத்தகக் கண்காட்சி கொடீசியா அரங்கில் ஜுலை 22 முதல் 31 வரை நடைபெறுகிறது. இந்தப் புத்தகக் கண்காட்சியில் தேசாந்திரி பதிப்பகம் அரங்கு அமைத்துள்ளது
அரங்கு எண் 136,


ஜுலை 24 ஞாயிறு கோவை வருகிறேன். மாலை 4 மணி முதல் தேசாந்திரி அரங்கில் இருப்பேன். விருப்பமான நண்பர்கள். வாசகர்கள் சந்திக்கலாம்
ஜுலை 25 திங்கள் மாலை ஆறு மணிக்கு ``ஏன் நாவல்கள் படிக்க வேண்டும்`` என்ற தலைப்பில் புத்தகக் கண்காட்சி அரங்கில் உரையாற்றுகிறேன்
திங்கள் கிழமையும் தேசாந்திரி அரங்கில் இருப்பேன் .விருப்பமானவர்கள் சந்திக்கலாம்.
தேசாந்திரி பதிப்பகத்தின் புதிய நூல்கள்– 2022








July 15, 2022
கு.ப.ராவின் கடைசி நாட்கள்
கு.ப.ரா பற்றிக் கரிச்சான்குஞ்சு ஒரு புத்தகம் எழுதியிருக்கிறார். இலக்கியச் சிந்தனையின் சார்பில் எழுதப்பட்ட இந்த நூலை வானதி பதிப்பகம் வெளியிட்டிருக்கிறது. அதில் கு.ப.ராவின் வாழ்க்கை மற்றும் படைப்புகள் குறித்துச் சிறப்பாக எழுதியிருக்கிறார்

கரிச்சான் என்ற பெயரில் கு.ப.ரா எழுதியிருப்பதால் அவரது சீடனாகத் தனது பெயரைக் கரிச்சான் குஞ்சு என்று மாற்றிக் கொண்டிருக்கிறார் நாராயணசுவாமி.

கு.ப.ராவின் துயர்மிகுந்த வாழ்க்கையைப் படிக்கும் போது கண்ணீர் வருகிறது.

இன்று நிகரற்ற சிறுகதையாசிரியராகக் கொண்டாடப்படும் கு.ப.ரா அன்று கண்டுகொள்ளப்படாத படைப்பாளியாக இருந்திருக்கிறார். ஆண் பெண் உறவு பற்றிப் பச்சையாக எழுதுகிறார் என்று அவரைக் கடுமையாக விமர்சித்திருக்கிறார்கள். அவரது கதைகள் வெளியிடத்தகுதியற்றவை என்று பத்திரிக்கைகளில் திருப்பி அனுப்பி வைக்கப்பட்டிருக்கின்றன.
மாதவருமானதில்லை. கஷ்ட ஜீவனம். விரும்பிய புத்தகங்களை வாங்க முடியவில்லை. மருத்துவச் செலவு செய்யக்கூடப் பணமில்லை. ஆனால் மனம் முழுவதும் எழுத வேண்டிய கதைகள். இலக்கியம் குறித்த கற்பனைகள். 32 வயதில் எதிர்பாராமல் அவரது கண்பார்வை மங்கிப் போனது. நண்பர்களின் உதவியால் மட்டுமே குடும்பத்தை நடத்த முடிந்திருக்கிறது. 42 வயதில் கு.ப.ரா இறந்து போனார். இன்னும் கொஞ்சம் பணமும் வாழ்க்கை வசதிகளும் இருந்திருந்தால் நீண்ட காலம் வாழ்ந்திருப்பார். நிறைய எழுதியிருப்பார் என்கிறார் கரிச்சான் குஞ்சு.
தமிழ் இலக்கிய முன்னோடிகள் தங்கள் சொந்தவாழ்க்கையைப் பலிகொடுத்து எப்படி இலக்கியத்தை வளர்த்தெடுத்தார்கள் என்ற உண்மையை அறிந்து கொள்ள இந்த நூலைக் கட்டாயம் வாசிக்க வேண்டும்
••

1902 ஜனவரியில் பிறந்த கு.ப.ராஜகோபாலன் தந்தையின் ரயில்வே வேலை காரணமாகக் கொடுமுடி மற்றும் திருச்சியில் வாழ்ந்திருக்கிறார். கு.ப.ரா.வின் ஆறு வயதில் அவரது குடும்பம் திருச்சிராப்பள்ளிக்குச் சென்றது. அங்கே உள்ள கொண்டையம் பேட்டைப் பள்ளியில் அவருடைய ஆரம்பக் கல்வி தொடங்கியிருக்கிறது.
1918-ஆம் ஆண்டில் மெட்ரிகுலேஷன் தேர்வில் கு.ப.ரா. தேர்ச்சி பெற்றார். அவரது பதினெட்டு வயதில் தந்தை இறந்து போகவே குடும்ப பொறுப்பினை ஏற்க வேண்டிய சூழல் உருவானது. அந்த நிலையில் பி.ஏ. படிப்பதற்காகக் கும்பகோணம் வந்த கு.ப.ரா பிள்ளையார் கோவில் தெருவிலிருந்த பூர்வீக வீட்டில் குடியிருந்திருக்கிறார். இவரது பக்கத்து வீட்டில் வசித்தவர் கவிஞர் ந.பிச்சமூர்த்தி. இலக்கியத்திலும் வாழ்க்கையிலும் சிறந்த தோழமையாக இருந்தவர் பிச்சமூர்த்தி.
கும்பகோணம் இரட்டையர் என்றே அவர்களை அழைத்திருக்கிறார்கள். தமிழ் ஆங்கிலம் வங்கம் தெலுங்கு, சமஸ்கிருதம் ஆகிய ஐந்து மொழிகளை அறிந்த கு.ப.ரா மகாகவி தாகூரை நேரில் கண்டிருக்கிறார். அவர் மீதான அபிமானத்தால் ஆங்கிலக் கவிதைகள் எழுதியிருக்கிறார்.
1921ம் ஆண்டுத் தனது கல்லூரியில் கு.ப.ரா ஷேக்ஸ்பியர் சங்கம் ஒன்றை உருவாக்கி அதில் ஆங்கிலத்திலே கதை கவிதை கட்டுரைகள் வாசிக்கும் பழக்கத்தைக் கொண்டுவந்திருக்கிறார். அந்தச் சங்கத்தில் ந.பிச்சமூர்த்தி தான் எழுதிய ஆங்கிலக் கதைகள் மற்றும் கட்டுரைகளை வாசித்திருக்கிறார். ஞாயிறு தோறும் அந்தச் சங்கம் தவறாது கூடுவது வழக்கம். அங்கே ஷேக்ஸ்பியர் அல்லது வேறு நாடக ஆசிரியர்களின் சில பகுதிகளை நடித்துக் காட்டுவார்கள். அந்தச் சபையில் கு.ப.ரா வாசித்துக் காட்டிய ஆங்கிலக் கவிதைகளில் குறைவானதே தமிழில் வந்துள்ளன. மற்றவை அப்படியே மறைந்துவிட்டன.
1926ல் திருமணம். மனைவி அம்மணி அம்மாள். மூன்று பிள்ளைகள்.
மேலூர் தாலுகா அலுவலகத்தில் சில காலம் கு.ப.ரா பணியாற்றியிருக்கிறார். ஆகவே மதுரை மண் சார்ந்த வீரம்மாளின் காளை போன்ற சிறுகதைகளை எழுதியிருக்கிறார். இது போலவே பதவி உயர்வு பெற்று ரெவின்யூ இன்ஸ்பெக்டராகக் கொங்கு மண்டலத்தில் பணியாற்றிய அனுபவத்தைக் கொண்டு பண்ணை செங்கான் போன்ற கொங்கு வட்டாரக் கதைகளை எழுதியிருக்கிறார். முப்பத்திரண்டாம் வயதில் கண்பார்வையில் ஏற்பட்ட குறைபாடு காரணமாக அவரது வேலை திடீரெனப் பறிபோனது. அந்த நாட்களில் அவர் சொல்லச் சொல்ல அவரது கதைகளைக் கு.ப.ராவின் சகோதரி சேது அம்மாள் எழுதிக் கொடுத்திருக்கிறார். இந்தப் பழக்கம் காரணமாகப் பின்னாளில் அவரே சிறந்த சிறுகதைகள். நாவல்களை எழுதி வெளியிட்டிருக்கிறார். சேது அம்மாளின் நூல்களும் நாட்டுடமையாக்கபட்டிருக்கின்றன
சில காலம் தமிழ்நாடு என்ற தினசரியில் வ.ரா ஆசிரியராகவும் கு.ப.ரா மற்றும் சி.சு. செல்லப்பா உதவி ஆசிரியர்களாகவும் பணியாற்றியிருக்கிறார்கள். சுதந்திரச் சங்கு மணிக்கொடி போன்ற சிறுபத்திரிக்கைகளில் எழுதிக் கொண்டும் பத்திரிக்கைகளில் கிடைத்த வேலையைப் பார்த்துக் கொண்டும் இலக்கியக் கனவுகளுடன் இயங்கியிருக்கிறார் கு.ப.ரா.
கும்பகோணத்திலிருந்த மகாலிங்கம் என்ற கண்மருத்துவர் செய்த அரிய சிகிச்சையால் கு.ப.ராவின் பார்வை திரும்பியிருக்கிறது. தனது மொழிபெயர்ப்பு நூல் துர்க்கேஸநந்தினி முன்னுரையில் டாக்டருக்கு நன்றி தெரிவித்திருக்கிறார்.
1937ல் எழுத்தை மட்டுமே நம்பி வாழ்ந்துவிடலாம் என்று நம்பி சென்னைக்கு வந்து நிறையத் துன்பங்களை அனுபவித்திருக்கிறார். எழுதுவதன் மூலம் மாதம் ஐம்பது ரூபாய் கிடைப்பதே பெரியதாக இருந்திருக்கிறது. அதுவும் பலநேரம் கிடைக்கவில்லை. பறிபோன தனது அரசாங்க வேலையைத் திரும்ப வழங்கும்படி ரெவின்யூ மந்திரி பிரகாசத்திற்குக் கடிதம் எழுதியிருக்கிறார். அந்த வேலை கடைசிவரை கிடைக்கவில்லை.
கும்பகோணத்தில் பிழைப்பிற்கு ஏதாவது செய்யவேண்டுமே என்று புத்தக விற்பனை நிலையம் ஒன்றைத் துவங்கியிருக்கிறார். அவரது வீட்டுத்திண்ணை தான் புத்தகக் கடை. சில பதிப்பகத்தார் அவருக்குத் தர வேண்டிய பணத்திற்குப் பதிலாகத் தாங்கள் வெளியிட்ட புத்தகங்களை விற்றுப் பணம் எடுத்துக் கொள்ளும்படி தந்திருக்கிறார்கள்.
அவரது வீட்டிற்கு வரும் நண்பர்கள் திண்ணையிலிருந்த புத்தகங்களைப் புரட்டுவார்கள். அங்கேயே அமர்ந்து படிப்பார்கள். சிலர் படிப்பதற்கு இரவல் வாங்கிப் போய்விடுவார்கள். ஆகவே அவரால் கடையை நடத்த முடியவில்லை. நிறைய நஷ்டம். தொண்டர் என்ற அன்பர் தான் அவருக்கு உதவி செய்வதாகக் கூறி தனது கடையில் வைத்து புத்தகங்களை விற்றுக் கொடுத்திருக்கிறார்.
கும்பகோணம் டவுன்ஸ்கூலுக்கு எதிரில் இருந்த தொண்டர் கடை முக்கியமான இலக்கிய மையமாகச் செயல்பட்டிருக்கிறது. அங்கே தினமும் கு.ப.ரா சென்றிருக்கிறார். இலக்கிய நண்பர்கள் ஒன்றுகூடியிருக்கிறார்கள். கு.ப.ரா முன்பாகத் தொண்டர் உட்கார மாட்டார். நின்று கொண்டேயிருப்பார் என்கிறார் கரிச்சான் குஞ்சு.
கு.ப.ரா உலகப்புகழ் பெற்ற படைப்பாளிகளைத் தேடித்தேடிப் படித்திருக்கிறார். அறுபது ஆண்டுகளுக்கு முன்பே 600 பக்கமுள்ள டால்ஸ்டாயின் வாழ்க்கை வரலாற்றை வாங்கி வாசித்து அதைச் சக்தி காரியாலயத்திற்காக மொழியாக்கம் செய்ய முயன்றிருக்கிறார். மொழிபெயர்ப்புக்கான பணம் சரியாகத் தரப்படாத காரணத்தால் அந்த மொழிபெயர்ப்பை அவரால் தொடர முடியவில்லை. ஆனால் டால்ஸ்டாய் சிறுகதைகளை மொழியாக்கம் செய்து வெளியிட்டிருக்கிறார். ஆர்.எல். ஸ்டீவன்சனை மொழியாக்கம் செய்திருக்கிறார். ஷெல்லி கீட்ஸ் வால்மீகி, காளிதாசனையும் பாசனையும் ஆழ்ந்து படித்து வியந்திருக்கிறார்.

இசையில் மிகுந்த ஆர்வம் கொண்ட கு.ப.ரா தன்னைச் சந்திக்க வரும் தி.ஜானகிராமனை பாடச் சொல்லிக் கேட்பது வழக்கம். குறிப்பாக ராகங்களைத் தி.ஜா சிறப்பாகப் பாடிக்காட்டுவார். இருவரும் இசை மற்றும் இலக்கியம் குறித்து விரிவாக விவாதம் செய்வார்கள் என்கிறார் கரிச்சான் குஞ்சு. இதில் ஜானகிராமனின் குரலைப் பற்றிக் கரிச்சான் குஞ்சு எழுதியிருப்பது சிறப்பு. தி.ஜானகிராமனின் குரலை இதுவரை நான் கேட்டதில்லை. அவர் பாடுவதைப் பற்றிய இந்த வரிகள் ஆழமான ஏக்கத்தை உருவாக்குகின்றன.
1942ல் கு.ப.ரா கும்பகோணத்தில் வசிக்கிறார் என்பதாலே தி.ஜானகிராமனும் கரிச்சான் குஞ்சுவும் சென்னையிலிருந்த தங்கள் வேலையை விட்டுவிட்டுக் கும்பகோணம் வந்திருக்கிறார்கள். தி.ஜா BA LT என்பதால் கும்பகோணம் டவுன் ஹைஸ்கூலில் உடனே வேலை கிடைத்துவிட்டது. ஆனால் கரிச்சான் குஞ்சு போராடி ஒரு பள்ளி ஆசிரியர் வேலைக்குப் போயிருக்கிறார். சொற்ப சம்பளம். அவருக்கும் குடும்பக் கஷ்டம் அதிகம்.. குறைந்த வருமானத்திற்குள் குடும்பத்தை நடத்தப் போராடியிருக்கிறார்.
அப்போது கு.ப.ராவிற்கு வயது நாற்பதுக்கும் மேல். தி.ஜானகிராமனுக்கு வயது 22, கரிச்சான் குஞ்சிற்கு வயது 23.
தினமும் மாலையில் கு.ப.ராவைத் தொண்டர் கடையில் சந்திப்பது, காந்தி பார்க்கில் உட்கார்ந்து பேசுவது, இருட்டிய பிறகு கணபதி விலாஸ் காபி கிளப்பில் இட்லி சாப்பிடுவது, பின்பு கு.ப.ரா வீட்டின் மொட்டை மாடியில் அமர்ந்து நீண்ட நேரம் பேசிக் கொண்டிருப்பது அவர்களின் வழக்கம். ஜானகிராமனுக்குத் தாகூர் கவிதைகளில் விருப்பம் கிடையாது. அவற்றை வெறும் போலி என்று சொல்லுவார். ஆனால் கு.ப.ராவின் தாகூர் மீது மிகுந்த விருப்பமிருந்தது. வட மொழி இலக்கியங்களைப் பற்றி அவர்கள் தீவிரமாக விவாதித்துக் கொள்வார்கள். கவிதை பற்றி உரையாடல்களில் தி.ஜானகிராமன் கலந்து கொள்வது கிடையாது. சிட்டியோடு நிறைய விவாதிப்பார் கு.ப.ரா. வங்க மொழியை தனது சுய விருப்பத்தின் படி தானே கற்றுக் கொண்டு நிறைய வங்காளப் படைப்பாளிகளை கு.ப.ரா படித்திருக்கிறார். மொழிபெயர்ப்பு செய்திருக்கிறார். கு.ப.ராவின் இறுதி வருஷங்களில் அவர் அனுபவித்த வறுமை தான் அவரது உடலும் உள்ளமும் நலிந்து போக முக்கியக் காரணமாக இருந்தது. கு.ப.ராவும் ந.பிச்சமூர்த்தியும் வறுமையுடன் போராடியே செத்துப் போனார்கள் என்கிறார் கரிச்சான் குஞ்சு.
கு.ப.ரா கையில் கொஞ்சம் பணம் இருந்திருந்தால் நிச்சயமாக இப்படி அற்ப ஆயுளில் மறைந்து போயிருக்க மாட்டார். அவரது உடல்நலம் சீர்கெட்டுப் போன நிலையில் வைத்தியம் செய்யக்கூடப் பணமில்லை
இதைப்பற்றிக் கண் டாக்டர் மகாலிங்கம் சொல்வதாக ஒரு குறிப்பு நூலில் இடம்பெற்றிருக்கிறது
கு.ப.ரா இத்தனை வறுமையுடன் போராடுகிறார் என்று எனக்குச் சத்தியமாகத் தெரியாது. தெரிந்து கொள்ளாமல் இருந்தது என் தவறு
கு.ப.ராவால் அன்றாடம் தி ஹிண்டு பத்திரிக்கை வாங்கும் அளவிற்குக் கூட வசதியில்லை. ஆகவே சந்தானம் என்ற கல்லூரி மாணவர் தினமும் தங்கள் வீட்டிற்கு வரும் பேப்பரை படித்து முடித்துவிட்டு கு.ப.ராவிற்கு அனுப்பி வைப்பார்.
அவர் பெரிதாக நம்பியிருந்த கிராம ஊழியன் பத்திரிக்கையும் அவருக்கு உரியதைச் செய்யத் தவறிவிட்டது. தி.ஜானகிராமன் மட்டும் பிறர் அறியாமல் கு.ப.ராவிற்குப் பலமுறை உதவி செய்திருக்கிறார். அது ஒரு அன்புக் கொடை. இன்னும் அதிகமாகக் கு.ப.ராவிற்குச் செய்யத் தன்னிடம் வசதியில்லையே என்று ஜானகிராமன் ஏங்கியிருக்கிறார்.
அந்தக் காலத்தில் ரேடியோவில் இரவு 7 30 மணிக்கு நல்ல கச்சேரிகள் ஒலிபரப்பு ஆவது வழக்கம். கு.ப.ரா அதைக் கேட்பதற்காகச் சந்தானம் வீட்டிற்குச் செல்வார். சந்தானம் வீட்டில் அவருக்கு ஒரு டம்ளர் பால் கொடுப்பார்கள். அதைக் குடிக்கும் போது வீட்டில் தனது பிள்ளைகள் குடிக்கப் பால் இல்லையே என்று வேதனையுடன் நினைத்துக் கொள்வார். தனது வறுமையைப் பற்றி ஒரு போதும் கு.ப,ரா புலம்பியதில்லை. உண்மையில் வறுமை தான் அவரைக் கொன்றது.
1944ம் ஒரு திருமணத்திற்குச் சென்று திரும்பி வந்த போது அவரால் ஒற்றை மாட்டுவண்டியில் ஏற முடியவில்லை. ஆட்கள் கைதாங்கலாகப் பிடித்து ஏற்றி அமர வைத்து வீட்டிற்கு அழைத்து வந்திருக்கிறார்கள்.
சில நாட்களில் ஒரு காலில் வீக்கம் ஏற்பட்டு ரத்தம் கட்டிக் கொண்டது, அவர் மருத்துவரிடம் சென்று காட்டவேயில்லை. கடுகு அரைத்து பத்து போட்டுக் கொண்டிருந்திருக்கிறார்.
சில நாட்களில் கால் வீக்கம் மிகவும் அதிகமாகவே அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார் அங்கே சர்மா என்ற மருத்துவர் அவரது கால்களைக் காங்கரின் பாதித்துள்ளதால் சதைகள் உயிரற்றுப் போய்விட்டன. இரண்டு கால்களையும் முழங்காலுக்குக் கீழே துண்டித்து விட வேண்டும் என்று கூறியிருக்கிறார். அதை விரும்பாத கு.ப.ரா Let me die a peaceful death என்று நனைந்த கண்களுடன் சொல்லியிருக்கிறார். அதன்பிறகு தனக்குக் குடிக்க ஒரு டம்ளர் காவிரி தண்ணீர் வேண்டும் என்று கேட்டிருக்கிறார். கொண்டு வந்து தரவே அதை ஒரு வாய் குடித்துவிட்டு வீட்டிற்குச் செல்ல கார் ஏறியிருக்கிறார். வரும் வழியிலே அவரது உயிர் பிரிந்துவிட்டது.
•••
கு.ப.ராவின் கதைகளை ஆராயும் கரிச்சான் குஞ்சு அது எழுதப்பட்டதன் பின்புலத்தைத் தெளிவாக விளக்கி கதையின் சிறப்புகளை நுட்பமாக விவரிக்கிறார். ஆற்றாமை, விடியுமா, கனகாம்பரம் போன்ற கதைகளின் பின்புலத்தைப் பற்றிச் சொல்வது சுவாரஸ்யம்.
கு.ப,ராவின் கதைகளில் இரண்டு நண்பர்கள் அடிக்கடி இடம்பெறுகிறார்கள். தனது ஆசையை மறைத்துக் கொள்ளும் பெண்களும் ஆண்களுமே அவரது உலகம். அவரது கதைகள் உருவ அமைதி கொண்டவை. விடியுமா சிறுகதை அபூர்வமானது. ஒரு பெண்ணின் தவிப்பை, சஞ்சலமான மனதை இதைவிடச் சிறப்பாகச் சொல்லிவிட முடியாது. எதையும் சொல்லாமலே சொல்ல வேண்டும் என்பதே கு.ப.ராவின் பாணி.
கு.ப.ராவின் கதைகளில் வரும் பெண்கள் எளிமையானவர்கள். அந்தக் கால வறுமையின் சின்னங்களாகவே அவர்கள் காணப்பட்டார்கள். அவர் படைத்த ஒரு பெண்ணாகிலும் ஓலமிட்டு அழுததேயில்லை. மௌனமாகக் கண்ணீர் வடிக்கும் பெண்களைத் தான் எழுதியிருக்கிறார். ஏழ்மை நிறைந்த நடுத்தர வர்க்கத்து மனிதர்களைப் பற்றித் தான் அவரது கதைகள் பேசுகின்றன. கு.ப.ராவின் கதைகள் முழுவதையும் ஆராய்ந்தால் அனேகமாக அவர் பெண்களுக்காக மட்டுமே எழுதினார் என்று எண்ணத் தோன்றுகிறது என்கிறார் கரிச்சான் குஞ்சு. அது உண்மையே. கு.ப.ராவின் கதைகளில் தான் பெண்ணின் அகம் உண்மையாகப்பதிவு செய்யப்பட்டிருக்கிறது.
கு,ப,ராவின் நாடகங்கள். கவிதைகள் மொழியாக்கங்கள், இலக்கியம் குறித்த எண்ணங்கள். நேரு மற்றும் காந்தி மீதான கு.ப.ராவின் பற்று. தான் குருவாகக் கொண்ட கு.ப.ராவின் மீதான அன்பும் ஆசியும் பற்றிக் கரிச்சான் குஞ்சு மிகவும் அற்புதமாக எழுதியிருக்கிறார்.

கு.ப.ராவின் மொத்த சிறுகதைகளின் தொகுப்பை எழுத்தாளர் பெருமாள் முருகன் பதிப்பித்திருக்கிறார். மிகச்சிறப்பான தொகுப்பு. காலச்சுவடு வெளியிட்டிருக்கிறது.
••
கு.ப.ராவை பற்றிய நூலாக இருந்தாலும் இது கரிச்சான்குஞ்சுவின் வாழ்க்கை மற்றும் குடும்பச் சூழல் அவரது இலக்கிய நண்பர்கள் மற்றும் கும்பகோணத்தின் கதையாகவும் எழுதப்பட்டிருக்கிறது. அந்தக் காலத்தில் எவ்வளவு கனவுகளுடன் செயல்பட்டிருக்கிறார்கள் என்று வியப்பாக இருக்கிறது. எழுத்திற்காக எவ்வளவு துயரங்களை அடைந்திருக்கிறார்கள் என்று வேதனையாகவும் இருக்கிறது
காலத்தின் திரைகள் இந்த உண்மைகளை மறைந்துவிட்டிருக்கின்றன. கு.ப.ரா தன்னை ஏமாற்றிய பதிப்பாளரின் பெயரைக் கூட வெளியே சொல்லவில்லை. தன்னை அவமதித்த பத்திரிக்கை ஆசிரியரின் பெயரைக் கூடச் சொல்லாமலே வருந்துகிறார். யாரைப் பற்றியும் அவரிடம் புகாரில்லை.
“புதுமைப்பித்தனின் வாழ்க்கை தமிழ் எழுத்தாளர் ஒருவரின் சோக நாடகம்: உயிருள்ள எழுத்தாளர்களுக்கு ஒரு எச்சரிக்கை“ என்று புதுமைப்பித்தன் பற்றிய நூலின் முன்னுரையில் தொ.மு.சி. ரகுநாதன் எழுதியிருக்கிறார்.
அதே வரிகள் கு.ப.ராவைப் பற்றிய இந்த நூலுக்கும் பொருந்தக்கூடியதே
•••
நேர் நோக்கும் கண்கள்.
இனிமையான பாடல். சிறப்பான காட்சிகள்.
கறுப்பு வெள்ளைக் காட்சிகள் மிகுந்த நெருக்கம் தருகின்றன.
இந்தப் பாடலுக்குள் எத்தனையோ சொல்லப்படாத கதைகள் மறைந்திருப்பதை உணர முடிகிறது.
Tony Allen – Go Back (feat. Damon Albarn) [Official Music Video] directed by Bernard Benant
July 14, 2022
கறுப்பும் வெள்ளையுமான வாழ்க்கை
– தமிழ்மதி
நிமித்தம் நாவல் குறித்த விமர்சனம்.

தேவராஜ் எனும் சிறுவனுக்குத் தனது ஒன்பது வயதில் குளிர் காய்ச்சல் வந்ததில் இருந்து காது கேட்காது. அதனைத் தொடர்ந்து அவன் அனுபவிக்கும் தொடர் புறக்கணிப்புகளும், துரத்தும் அவமானங்களுமாக நித்தம் நித்தம் பெருங்கசப்பை அருந்தும் தேவராஜின் கதையே நிமித்தம்.
தன்னைச் சரிவரப் புரிந்து கொள்ளாத குடும்பம், தோசைக்கரண்டியால் அடிக்கும் தந்தை, இவர் தனது மூத்த மகனுக்கு மட்டும் பால்கோவா வாங்கி வருவார். காது கேட்க வேண்டி கோவில் கோவிலாக அலையும் அன்னை, உன் துணிகளை எல்லாம் இனி நீயே துவைத்துக் கொள் எனப் பாகுபாடு காட்டும் அக்கா எனத் தேவராஜின் வாழ்க்கை. நம் சமுதாயத்தில் சிறப்புக் குழந்தைகளும், மாற்றுத் திறனாளிகளும் படும் அவமானங்கள் சொல்லில் வடிக்க இயலாதவை. சிறப்புகுழந்தைகள் அவர்களுக்கென அழகான உலகத்தைத் தனக்குள் வைத்திருக்கிறார்கள். நமக்குதான் பொறுமை இல்லை. அதனாலேயே அவர்கள் உலகத்துக்குள் நுழைய முடியவில்லை.
உதாரணமாக, சர்க்கஸில் வித்தை காட்டும் அத்தனை மிருங்கங்களையும் பார்த்து மற்ற குழந்தைகள் சிரிக்க, தேவராஜுக்கு மட்டும் கோபம் வருகிறது. ஏன் இந்தப் புலியும் யானையும் தன் கம்பீரத்தை இழந்து உணவுக்காகவும் பிரம்படிக்காகவும் வளைந்து கொடுக்க வேண்டும் என வருத்தபடுகிறான். அவன் ரோட்டோரம் மூத்திரம் பெய்வதில்லை. செவிட்டு முண்டமே எனத் திட்டி பள்ளிப் படிப்பைக் கெடுத்த ரசாக் வாத்தியார், அதன்பின் காதுகேளாதோர் சிறப்புப் பள்ளிக்கு மாற்றம். அங்கும் கடைசிப் பெஞ்சில். படிப்புக்கு தலைமுழுக்கு.
ஒரு நாள் கூட்டத்தை வேடிக்கை பார்க்கும் பொழுது லத்தியால் அடிக்கும் போலிஸ்.இலங்கை அகதி பெண்ணிற்கு உதவி செய்ய முதலாளியை வேண்டியதால்,சம்பள பணத்தை முகத்துக்கு நேரே வீசியெறிந்து வேலையை விட்டு துரத்தும் முதலாளி. ஜோஸ்லினோடு திரைப்படம் பார்த்து வெளியே வரும் போது, திடீரெனஅவன் அப்பா வந்து, காதலியை கெட்ட வார்த்தையால் திட்டி விட்டு, அவனையும் எல்லோர் முன் செருப்பால் அடிக்கிறார். என்ன ஜென்மம் இவர்.
சிறப்புக் குழந்தையென்றாலோ மாற்றுத் திறனாளி என்றாலோ அவர்களுக்குக் காதல் வர கூடாதா? காமம் மறுக்கப்பட வேண்டுமா? (பேரன்பு படம் நியாபகத்திற்கு வருகிறது)
தொடர்ந்து அவமானப்பட்டதால் கர்நாடகாவுக்கு ஓடிப் போகிறான். சோப்புக் கம்பெனியில் வேலை செய்து, கெமிக்கல் பாதிப்பினால் மிகவும் உடல் நிலை பாதிப்புக்குள்ளாகி வீடு திரும்பியவனை மறுபடியும் வாழ்க்கை பந்தாடுகிறது.
இத்தனை கசப்புகளுக்கிடையே அவனுக்குக் கிடைத்த வரம் அவனது நண்பன் ராமசுப்பு. அவனிடம் மட்டுமே சிரித்துப் பேசுகிறான் தேவராஜ். அவனுக்கு எல்லாமும் ஆகிறான்.
அவன் கேட்ட இனிமையான குரலென்றால் அது அங்கையற்கண்ணி டீச்சருடையது தான். ஓவியம் வரையும் சுதர்சனம் வாத்தியாரின் மனைவியார் இவர். புத்தகம் படிப்பதை சிறுவயதிலேயே தேவுக்கு(அவள் அப்படித்தான் செல்லமாக அழைப்பாள்) சொல்லிக் கொடுத்தவள். இனியவள். செருப்பு போட சொல்லிக் கொடுத்ததோடு வாங்கியும் கொடுத்தவள்.
சுதர்சனம் வாத்தியாரின் தயவால் மாற்றுத் திறனாளிகளுக்கான, அரசின் உதவியோடு பயில தூத்துகுடியில் பிரிண்டிங் பிரஸ் தொழிலை கற்றுக்கொள்ளச் செல்கிறான். அங்கு இவனைப் போலவே, ஆனால் இவன் போல் தாழ்வுணர்ச்சி இல்லாது சுதந்திரமாக, இருக்கும் ஜோசப்.
வண்டிப்பேட்டை தாத்தா, காந்தி மெஸ் ராஜாமணி, (கதைக்குள் கதையாக). என நிறையக் கதாபாத்திரங்கள். கறுப்பும் வெள்ளையுமாகத் தேவராஜின் வாழ்க்கை பக்கங்கள்.
மீதியை நாவலில் படித்து அனுபவியுங்கள். யதார்த்தமும் கொஞ்சம் மாயையும் கலந்து திரு.எஸ்.ரா அவர்கள் வழக்கம் போலவே ஒரு அருமையான நாவலை நமக்குப் பரிசளித்திருக்கிறார்.
July 12, 2022
முதல் நினைவு
இயக்குநர் இங்மர் பெர்க்மென் தான் பிறந்த சில நாட்களில் நடைபெற்ற நிகழ்வுகளைத் துல்லியமாக நினைவு கொண்டிருக்கிறார்.

அதைப் பற்றி தனது சுயசரிதையான The Magic Lantern நூலில் குறிப்பிடுகிறார்.
எனது நினைவில் மூன்று நான்கு வயதுகளில் நடந்த நிகழ்ச்சிகளே இருக்கின்றன. அதுவும் துல்லியமாக இல்லை. சில தெளிவற்ற காட்சிகள். சில முகங்கள். சில இடங்கள் மட்டுமே இருக்கின்றன.

பெர்க்மென் பிறந்தபோது அவரது அம்மா உடல்நலமற்று இருந்த காரணத்தால் பால்புகட்டுவதற்கு தாதியை ஏற்பாடு செய்திருந்தார்கள். அந்தத் தாதியின் குறட்டைச் சப்தம் துவங்கி. அடிக்கடி தான் வாந்தி எடுத்துக் கொண்டிருந்தது வரை அத்தனையும் பெர்க்மென் துல்லியமாக எழுதியிருக்கிறார்.
இது குறித்துப் பெர்க்மெனின் அம்மாவிடம் கேட்டபோது தனக்கு எதுவும் நினைவில்லை. அவன் பிறந்த போது மருத்துவர் பிழைக்கமாட்டான் என்று சொன்னது மட்டுமே நினைவிலிருக்கிறது. பெர்க்மென் நிறைய கற்பனை செய்யக்கூடியவன். அவனது வாழ்க்கை வரலாற்று நூலில் எது உண்மை என அவனுக்கே தெரியும் என்கிறார்
பெர்க்மெனின் அண்ணனும் இது போன்ற விளக்கத்தை தான் கொடுத்திருக்கிறார். அவரது முதல்நினைவுகள் உண்மையா, இல்லை கற்பனையா என்பதை விடவும் ஒருவர் தனது நினைவுகளை எவ்வளவு துல்லியமாக விவரிக்கிறார் என்பது தான் எனக்கு பிரமிப்பாக இருக்கிறது
தனக்கு உணவு கொடுப்பதற்காக வைத்திருந்த கிண்ணம். அதில் வரையப்பட்டிருந்த நீலமலர்கள். அந்தக் கிண்ணத்தில் பட்டு ஒளி பிரதிபலிப்பு கொள்வது. கிண்ணம் சுழலும் போது ஏற்படும் வியப்பு இவை பற்றி பெர்க்மென் மிகவும் துல்லியமாக எழுதியிருக்கிறார்.
பயம் மட்டும் தான் பின்னாளில் உருவானது என்ற அவரது வரி ரசிக்கத் தக்கது
சிறுவயதின் பயங்களைப் பட்டியல் போட்டால் வியப்பாக இருக்கிறது. இதற்கெல்லாம் ஏன் பயந்தோம் என்று சிரிப்பாகவும் வருகிறது.
பால்யகாலம் என்பதே ஏமாற்றங்களின் விளைநிலம் தானோ. அந்த வயதில் கிடைத்தவை குறைவு. ஏங்கிக் கிடைக்காமல் போனது அதிகம். கண்ணுக்குத் தெரியாமல் நிறைய காயங்களை பால்யவயது ஏற்படுத்தியிருக்கிறது. அந்தக் காயங்கள் வாழ்நாள் முழுவதும் ஆறிப்போவதேயில்லை.

Fanny and Alexander திரைப்படம் பெர்க்மெனின் பால்ய நினைவுகளையே கொண்டிருக்கிறது. அதைப் புரிந்து கொள்ள The Magic Lantern அவசியம் படிக்க வேண்டும்.
பிறந்த போது தனக்கு ஏற்பட்ட வயிற்றுப் பிரச்சனை வாழ்நாள் முழுவதும் தன்னைத்தொடர்ந்து என்று பெர்க்மென் நம்புகிறார். உணவு ஒவ்வாமையால் மிகவும் அவதிப்பட்டிருக்கிறார். படப்பிடிப்பில் காபியைத் தவிர வேறு எதையும் அவர் தொடுவதில்லை. எந்த விருந்திலும் அவர் கலந்து கொள்வதில்லை. ஒதுங்கி ஒரு தீவில் வாழ்ந்தார். அதற்கு வயிற்றுஉபாதைகள் தான் முக்கிய காரணம்.
பெர்க்மெனின் சுயசரிதை மிகவும் காட்சிப்பூர்வமாக எழுதப்பட்டிருக்கிறது. ஒரு திரைப்படம் பார்ப்பது போன்ற உணர்வைத் தருகிறது.
உண்மையில் ஒருவர் தனது முதல் நினைவு எது எனக் கண்டுபிடிக்க முடியுமா.
அது நாமாக முடிவு செய்து கொள்வது தான்.
டால்ஸ்டாய் குழந்தையாக இருந்த போது நடந்த நிகழ்வு ஒன்றை தனது முதல்நினைவாகச் சொல்லுகிறார். தனது முதல் குதிரைவண்டி பயணத்தைப் பற்றி எழுதியிருக்கிறார். அவரது நினைவாற்றல் அபாரமானது.
ஸ்டுடியோவில் எடுக்கபட்ட புகைப்படத்தில் நாம் தவழுகிற குழந்தையாக உள்ளதைக் காணும் போது அது யாரோ போலவே இருப்பதாகவே உணருகிறோம்.
அப்பா அல்லது அம்மா கையில் குழந்தையாக இருக்கும் புகைப்படத்தைக் காணும் போது அந்த கண்களின் பிரகாசமும் தெளிந்த முகமும் மகிழ்ச்சி தருகிறது. அந்தக் குழந்தை நாம் தானா என்று சந்தேகமும் வருகிறது
எல்லா வயதின் புகைப்படங்களும் இந்தத் தலைமுறையிடம் இருக்கிறது.
என் தலைமுறையில் ஒன்றிரண்டு குழந்தைப் பருவ புகைப்படங்கள். பள்ளி நாட்கள். கல்லூரி நாட்கள் அதற்கு பிறகான புகைப்படங்களே இருக்கின்றன.
வெயில் படர்ந்த எனது வீதியும் வீடும் ஒரு புகைப்படத்திலும் இல்லை. நாயோடு சுற்றித் திரிந்த ஐந்து வயது சிறுவனான எனது உருவத்தை இனி நான் காண முடியாது. அதன் ஒரு புகைப்படம் கிடையாது.
சிறுவயதில் எத்தனையோ முறை, ஏதேதோ ஊர் ரயில் நிலையங்களில் பேருந்து நிலையங்களில் மணிக்கணக்கில் காத்திருந்திருக்கிறோம். அந்தக் காட்சியின் சாட்சியமாக ஒரு புகைப்படம் கிடையாது. விருப்பமான ஆசிரியர்களுடன் ஒரு புகைப்படமும் எடுத்துக் கொள்ளவில்லை. அவர்கள் உலகிலிருந்தும் விடைபெற்று போய்விட்டார்கள். இனி அந்த முகங்கள் நினைவில் ஆழத்தில் மட்டுமே மிதந்து கொண்டிருக்கும்
தீபாவளி அன்று புத்தாடை அணிந்து கொண்டு சினிமா தியேட்டரில் முண்டியடித்து நின்ற சாட்சியமாக ஏன் புகைப்படம் இல்லை
தூண்டிலோடு மீன்பிடிக்க கண்மாய் கரையில் நடந்த போது கண்ட சூரியன் எந்தப் புகைப்படத்திலும் இல்லை
புகைப்படமில்லாத வயதுகள் நினைவில் மட்டுமே எஞ்சியிருக்கின்றன. நினைவைக் காப்பாற்றுவதும் மீட்பதும் நம் கையில் இல்லை. நினைவு ஒரு விநோதப் பறவை. எப்போது எழும் எப்போது மறையும் எனக் கண்டறியவே முடியாது
••
அறியப்படாத வரலாறு
மறைக்கப்பட்ட இந்தியா – நூல் அறிமுகம்
– சசிகலா ரகுராமன்
“மகாத்மா” என்றால் காந்தியடிகள் மட்டுமே என நினைத்துக் கொண்டிருப்பவரா நீங்கள் ? இந்திய மன்னர்கள் கோட்டைகளையும் கோவில்களையும் கட்ட மட்டுமே ஆதரவு அளித்தார்கள் என்ற உங்களுடைய எண்ணம் சரிதானா ? வெள்ளைக்காரர்கள் வருகைதான் இந்தியாவில் அறிவியல் சிந்தனையை அறிமுகப்படுத்தியது என நினைக்கிறீர்களா ?

எனில், நீங்கள் அவசியம் எஸ் ராமகிருஷ்ணன் அவர்கள் எழுதிய ‘மறைக்கப்பட்ட இந்தியா’ என்ற புத்தகத்தைப் படிக்க வேண்டும். இந்தியாவின் புதைக்கப்பட்ட அருமை பெருமைகளை, மறக்கப்பட்ட சுதந்திர போராட்ட தலைவர்களை , மறைக்கப்பட்ட நிகழ்வுகளை, அவலங்களை ஆராய்ந்து வியப்பாகவும், விறுவிறுப்பாகவும், சுவாரஸ்யமாகவும், உயிர்ப்பாகவும் சொல்லியிருக்கிறார்.
இந்திய சுதந்திரத்திற்கு ரஷ்யாவில் இருந்து உதவிய நாயர் ஸான், நேதாஜியின் ‘ஐ என் ஏ’ விற்கு ஜப்பானில் இருந்து உதவிய வீரேந்திரநாத் சட்டோபாத்யாய ஆகியோருக்கு வரலாறு இடம் கொடுக்காததைச் சுட்டிக் காட்டி வருந்துகிறார். தினம் ஓர் இடத்தில் இருந்து ‘ரகசிய ரேடியோவை’ இயக்கி, ஆங்கிலேயரின் கண்களில் மண்ணைத் தூவிய உஷா மேத்தா , ஜப்பானில் குண்டுகளின் நடுவே நடந்து வந்து, ஹரி ப்ரபோ என்ற பெண்மணி ஒளிபரப்பு செய்த ‘ஆசாத் இந்தியா ரேடியோ ‘ போன்ற நிகழ்வுகள் , சிறந்த திரைப்படம் அல்லது குறைந்த பட்சம் ஒரு இணையத் தொடராகவோ எடுக்கக் கரு உள்ளவை.
புகைப்படக்கலையிலும் , நுண்ணோவியங்களிலும், மருத்துவத்திலும் சிறந்து விளங்கியவர்களைப் பார்த்து வியந்தவர், கூடவே இங்கு வந்து கோலோச்சிய பார்ஸிக்கள், யவனர்கள், ஆர்மேனியர்கள் ஆகியோரின் சிறப்புகளையும் எடுத்துரைக்கிறார்.
இந்தியாவைத் தேடி வந்த சீன யாத்திரிகர்கள்(அனைவரும் அறிந்த யுவன் சுவாங் ) மட்டுமல்லாமல், ரஷ்ய யாத்ரிகர்களும், இங்கிலாந்தில் திருமணத்திற்கு மணமகன் கிடைக்காததால் கப்பல் கப்பலாக வந்து இறங்கிய இளம் பெண்களும், பயணத்தின் போது பட்ட அவதிகளைப் பற்றிப் படித்தால், இன்னொரு ” டைட்டானிக்” போன்ற படம் எடுத்து விடலாம்.
தீப்பெட்டிக்குள் அடக்கி வைக்கக் கூடிய, மஸ்லின் சேலை தயாரித்த நெசவாளர்களின் நகங்கள் வெட்டப்பட்டதும், இந்திய விவசாயிகள் அவுரி விதைப்பதற்கக்காகக் கொடுமை படுத்தப்பட்டதும், இண்டிகோ புரட்சியும், அன்றும் இன்றும் நம் நாட்டில் தொழிலாள வர்க்கம் நசுக்கப்படுவதைச் சித்தரிக்கிறது.
நடந்த பல கொடுமைகளுக்கும் , ‘காடும்’ , ‘தாவர உலகமும்’ நம் அனைத்து இயற்கை வளங்களும் சீறாமல் மௌனம் காத்தது பற்றியும், அதனால் இழந்த வளங்களும் , வந்த விருந்தினர்களுக்கு மன்னர்கள் அளித்த காண்டாமிருகங்களும் , யானைகளும், மான்களும், பிற விலங்குகளும் பட்ட அவதிகளையும் எழுத்தாளர் விவரிக்கும் போது, ‘ வாடிய பயிரைக் கண்ட போதெல்லாம் வாடிய’ வள்ளலாரையே நான் கண்டேன்..
நமது தேசிய சின்னங்களை வடிவமைத்தவர்கள் யார்? அதன் பின்னணியில் இருந்த அரசியல் என்ன? அரிக்கமேட்டில் என்ன உள்ளது? காந்தியடிகளுக்கு மகாத்மா எனப் பெயர் சூட்டியவர் யார்? அவரே ஏன் சூட்டினோம் என்ற அளவிற்குக் கோபம் வரக் கரணம் என்ன?
பல அரிய தகவல்களை அறிய , மறைக்கப்பட்ட இந்தியா என்ற இந்தப் பண்பாட்டு வரலாற்று நூலை அவசியம் படியுங்கள் .
•••
July 11, 2022
நிலோஃபர். நிஜாம்
துருக்கி அரசகுமாரி நிலோஃபர். நிஜாம் புகைப்படம் ஒன்றை இணையத்தில் பார்த்தேன். உடனடியாக அசோகமித்ரனின் நினைவு தான் வந்த்து. இந்த இளவரசியைப் பற்றி அவர் ஒரு கட்டுரையில் எழுதியிருக்கிறார். சிறிய பதிவு. ஆனால் அதற்குள் பெரிய கதை மறைந்திருக்கிறது

நடைவெளிப் பயணம் நூலில்
அசோகமித்ரன்
நான் சிறுவனாக இருந்தபோது குடிசையிலிருந்து அரண்மனை வரை புகைப்படங்கள் இல்லாத வீடே இருக்காது. அன்று சுருள் ஃபிலிம் வரவில்லை. எல்லாம் ‘பிளேட்’ புகைப்படங்கள். ஆதலால் படத்தில் உள்ள ஒவ்வொரு பொருளும் மிகத் தெளிவாக இருக்கும். செகந்தராபாத்தில் நான்கைந்து புகைப்படக்காரர்கள். யார் மிகச் சிறந்த படங்களை எடுக்கிறார்கள் என்பதில் போட்டி. போட்டியே போட முடியாதவர் ராஜா தீன் தயாள். அவர் நிஜாம் அரசுப் புகைப்படக்காரர்.
அன்று (அதாவது 1920 அளவில்) உலகத்தில் மிக அழகான பெண் என்பவள், அவளையும் அவள் சகோதரியையும் தன் மருமகள்கள் ஆக்கிக் கொண்டார். இந்த இரட்டைத் திருமணத்துக்கு நிஜாம் போகவில்லை. திருமணம் பாரிஸில் நடந்தது. மணமக்கள் ஹைதராபாத் திரும்பியவுடன் பெரிய விருந்து, புகைப்படங்கள். அப்படங்களில் நிலோஃபரும் அவள் சகோதரியும் இருப்பார்கள்.

அப்பெண்கள் உலக அழகிகள் என்பதற்காக நிஜாம் தன் குடும்பத்தில் சேர்த்துக் கொள்ளவில்லை. அன்று துருக்கி அரசன்தான் காலிஃப். இந்த உறவால் தன் மகன்களில் ஒருவன் காலிஃப் ஆகலாம் என்று நிஜாம் நினைத்தார். ஆனால் துருக்கியில் புரட்சி நடந்து, காலிஃ பதவியே போய் விட்டது.
நிஜாமின் இரு மகன்களும், உலக அழகிகள் மனைவியாகக் கிடைத்தாலும் நடத்தை கெட்டு இருந்தார்கள். காலிஃ பதவி வாய்ப்பு போய், அந்த இரு மகன்களும் தன் வாரிசே இல்லை என்று நிஜாம் அறிவித்தார். இரு மகன்களும் அற்பாயுளில் இறந்தும் விட்டார்கள். ஆனால் அந்த உலக அழகிகள் இன்றும் தீன் தயாள் இல்ல முன்னறையில் புகைப்படமாக அலங்கரிக்கிறார்கள்.
***
July 9, 2022
வாசகனுக்கான சிறு வெளிச்சம்
– காட்வின் ஜினு
எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணனின் கதைகள் செல்லும் பாதை பலருக்கும் பல உள்ளீடுகளைத் தந்துவிட்டுச் செல்லும் அற்புதமான தொகுப்பு .

தன்னுடைய கட்டுரைத் தொகுப்புகளின் வழியே உலகின் மிகச் சிறந்த சிறுகதைகளை, அவற்றின் ஆசிரியர்கள் பற்றிய தகவல்களை, தனக்கே உரிய சுவாரஸ்யமான நடையில் வாசகனின் முன்பு எழுத்தாளர் வைத்திருக்கிறார்.
உலக இலக்கியம், சினிமா, இசை, பயணங்கள் என அவரது கட்டுரைகள் ஒரு வாசகனுக்குத் தரும் தகவல்கள் உண்மையிலேயே பிரமிப்பூட்டுபவை. குறிப்பாக இந்தத் தொகுப்பில் இடம் பெற்றுள்ள கட்டுரைகள் ஒரு இளம் படைப்பாளிக்கு நிறைய உள்ளீடுகளையும், சிறுகதைகள் குறித்த சில நுட்பங்களையும் கொண்டுள்ளது. அந்த நுட்பங்களைக் குறித்த ஒரு சுருக்கமான கட்டுரையைத் தருவதே இப்பதிவின் நோக்கம்.
நீங்கள் ஒரு மொழியின் இலக்கியங்களைத் தொடர்ந்து வாசித்துக் கொண்டிருக்கும் தேர்ந்த வாசகராக இருந்தால் உங்கள் வாசிப்பனுபவம் உங்களைச் சும்மா இருக்க விடாது என்பது என் கணிப்பு.
உங்கள் வாசிப்பனுபவம் என்ன செய்யும்?
நீங்கள் நாவலிலும், சிறுகதைகளிலும் சந்தித்த மனிதர்களின் உணர்வுகள் உங்களைப் படைப்புலகின் அடுத்த கட்டம் நோக்கி நகர்த்திச் செல்லும் தானே. ஒவ்வொரு தேர்ந்த வாசகனும் தனக்குள்ளே ஒரு படைப்புலகை உருவாக்கிக் கொண்டே இருக்கிறான். சிறு பிள்ளைகள் களிமண் கொண்டு விதவிதமான பொம்மைகள் செய்து மகிழ்வது போலவே அவனும் தன்னளவில் சொற்களைக் கொண்டு கவிதைகளை, கட்டுரைகளை, சிறுகதைகளை எழுதிப் பார்த்துக் கொள்கிறான். அப்படிப்பட்ட ஒரு வாசகனுக்காகச் சிறு வெளிச்சம் என இப்புத்தகத்தைச் சொல்வேன்.
நீங்கள் ஒரு மொழியில் எழுத வேண்டும் என்று முடிவெடுத்து விட்டால் சிறுகதையே அதற்கான உகந்த வடிவம் என்கிறார் எஸ்.ராமகிருஷ்ணன். எழுத்து கைவர வேண்டும் என்றால் எழுதிக் கொண்டே இருக்க வேண்டும் என்கிறார். இந்தப் புத்தகத்தில் அமெரிக்க எழுத்தாளர் ரே பிராட்பரி (Ray Bradbury) பற்றிய கட்டுரை ஒன்றிருக்கிறது, ஆம் பாரன்ஹீட் 451 எழுதிய அதே பிராட்பரி தான். அதில் ஒரு நேர்காணலில் பிராட்பரி சொல்லும் வார்த்தைகள் முக்கியமானவை, “எழுதிக் கொண்டேயிருக்க வேண்டும். படிப்பு, இசை, எழுத்து என அயராமல் இயங்கிக் கொண்டேயிருக்க வேண்டும். அதுவே வாழ்வின் மீதான எனது பற்றுதல்“. உங்களுக்கு வாழ்வின் மீதான பற்றுதல் தரும் விஷயங்கள் எவை என யோசித்திருக்கிறீர்களா?
அடுத்ததாக ‘சிறுகதைகள் எழுத நினைப்பவர்கள் நிறையச் சிறுகதைகளைப் படிக்க வேண்டும். எழுத்தின் நுட்பங்களை யாரும் கற்றுத் தந்து விட முடியாது. வாசிப்பே அவற்றைப் புரிய வைக்கும்’ என்பது எஸ்.ராமகிருஷ்ணனின் கருத்து. அது உண்மையும் கூட, ஒரு மொழியின் குறிப்பிட்ட இலக்கிய வடிவத்தை ஆழ்ந்து வாசிப்பது என்பது உங்கள் படைப்புலகிற்கான உறுதியான அடித்தளம் அமைக்கும் ஒரு செயல்.
‘கதையின் தலைப்பு என்பது கதையின் திறவுகோல் போன்றது’ என்று எழுதியிருக்கும் ஆசிரியர் அதற்கு உதாரணமாகப் புகழ்பெற்ற ஆங்கிலக் கவியான கமலாதாஸின் ‘கடலின் விளிம்பில் ஒரு வீடு’ என்ற கதையின் கவித்துவமான தலைப்பை முன்வைக்கிறார். என்னளவில் நீங்கள் வாசிக்க வேண்டிய முக்கியமான கதைகளில் ஒன்று இது என்பேன்.
‘சிறுகதை ஆசிரியனுக்கு நினைவுகளைக் கையாளத் தெரிந்திருக்க வேண்டும். கதை முழுவதும் வெறும் நினைவுகளாக வே இருந்து விட்டால் சலிப்பாகி விடும். புனைவும் நினைவும் கலந்து எழுதும் போது தான் கதை சிறப்பாக இருக்கும்.’ தமிழின் சிறந்த சிறுகதையாக ஆசிரியர் குறிப்பிடும் சா.கந்தசாமியின் தக்கையின் மீது நான்கு கண்கள் என்ற சிறுகதையும், 2000ம் ஆண்டு இலக்கியத்துக்காக நோபல் பரிசு பெற்ற சீன எழுத்தாளரான Gao Xingjian எழுதிய Buying a Fishing Rod for my Grandfather என்ற சிறுகதையும் நினைவுகளையும், கால மாறுபாடுகளையும் சிறுகதை எழுதுபவர் எவ்வாறு கையாள வேண்டும் என்பதைக் கற்றுத் தரக் கூடும்.
‘சிறுகதை எழுத விரும்புகிறவர்களுக்கு ரஸ்கின் பாண்ட்டின் (Ruskin Bond) இல்லாத கண்கள் (The Eyes have it) ஒரு உத்தியை கற்றுக் கொடுக்கிறது’. அது என்ன உத்தி என்பதனை கதையைப் படிக்கும் போது நிச்சயம் கண்டறிந்து விடுவீர்கள். ரஸ்கின் பாண்ட் குழந்தைகளுக்காக எழுதிய கதைகளில் பெரும்பாலானவை அறம் சார்ந்த கருத்துகளைத் தன்னகத்தே கொண்டவை. பெற்றோர்கள், ஆசிரியர்கள் எனப் பெரியவர்களும் கொண்டாட வேண்டிய ஒரு சிறந்த கதாசிரியர் ரஸ்கின் பாண்ட்.
‘சிறுகதை ஆசிரியன், கதையில் நிறையச் சொல்லத் தேவையில்லை. குறைவான கச்சிதமான உரையாடல்களின் வழியே கதையினை நேர்த்தியாக உருவாக்கி விட முடியும்’. இதற்கு உதாரணமாக Etgar Keret எழுதிய கனவுத்தன்மை கொண்ட The Crazy Glue என்ற கதையைக் குறிப்பிடுகிறார். யதார்த்தத்தைக் கனவுத்தன்மையோடு கை கோர்க்க வைத்து அதனை அழுத்தமாக வாசகர்களது மனதில் பதிய வைக்கும் உத்தியை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்கிறார்.
சிறுகதை வடிவத்தைத் தேர்ந்தெடுக்க விரும்புகிறவர்களுக்கு இன்னொரு முக்கியமான தகவல் இந்த நூலில் தரப்பட்டிருக்கிறது. தன் வாழ்நாளில் 600க்கும் மேற்பட்ட சிறுகதைகளை எழுதிய ரஷ்யாவின் சிறுகதை சிற்பியான ஆன்டன் செகாவ் தான் எழுத விரும்பிய கதைக்கருக்களைத் தனது நோட்புக்கில் குறித்து வைத்திருந்தார் என்பதும், அது செகாவின் நோட்புக் எனத் தனியான வெளியாகியுள்ளது என்பதுமான தகவல் தான் அது.
‘சிறுகதை எழுதுவது நாவல் எழுதுவதை விடவும் சவாலானது. மொழியைக் கையாளுவதிலும், கதைகளை விவரிப்பதிலும் மிகுந்த கட்டுப்பாடும், லயமும், ஒருமையும் தேவை’ என்ற முக்கியமான அறிவுரையையும் முன்வைக்கிறார்.
‘சிறுகதை ஆசிரியர்கள் பேராசை கொண்டவர்கள். எதையும் கதையாக்கிவிட முயற்சி செய்வார்கள்’ என்பதும் எவ்வளவு பெரிய உண்மை என்பது கதைகளின் உலகில் சஞ்சரிப்பவர்களுக்குப் புரியும்.
சிறுகதைகள் மட்டுமன்றி சில கவிஞர்களைப் பற்றிய தகவல்களும், அவர்களது கவிதைகளும், அந்தக் கவிதைகளுக்கு எஸ்.ரா. வின் சிறு விளக்கங்களும் என நீள்கிறது இந்தப் புத்தகம். இந்த நூலில் கவிஞர் வைத்தீஸ்வரன் எழுதிய ‘மன்னிப்பு’ என்ற தலைப்பிட்ட கவிதை எனக்கு மிகவும் பிடித்துப் போனது.
மன்னிப்பு
மரங்கள் ஓயாமல்
அழிந்து கொண்டிருந்த போதிலும்
குயில்களுக்கு இன்னும்
கோபமில்லை யாரிடமும்
அதன் குரல் இன்னும்
காதலையே பாடுகின்றன
இனி வரப் போகும்
“ஒரு மனிதனுக்காக”
எழுத்தாளன் கூட ஒரு வகையில் இந்தக் குயில் போலத் தான் இல்லையா? நூலகங்கள் தரைமட்டமாக்கப்பட்ட போதும், புத்தகங்கள் தடை செய்யப்பட்ட போதும், அவன் இயற்கையின் பேருண்மைகளை, பேரன்பின் உடனிருப்பை, அடக்குமுறைக்கு எதிரான போர் குரலை, மனித மனதின் எண்ணற்ற உணர்வுகளை, தீராத பக்கங்களில் எழுதிக் கொண்டே தானே இருக்கிறான், இனி வரப்போகும் ஒரு வாசகனுக்காக.
நன்றி
vetrinadai.com
July 6, 2022
நிறமுள்ள சொற்கள்
வின்சென்ட் வான்கோ குறித்து Van Gogh: Painted with Words என்ற புதிய டாகுடிராமா வெளியாகியுள்ளது. பிபிசி தயாரிப்பில் உருவான இப் படத்தில் வான்கோவாக நடித்திருப்பவர் பெனடிக்ட் கம்பெர்பாட்ச்.

வான்கோ எழுதிய கடிதங்களில் உள்ள வரிகளைக் கொண்டே முழுப்படமும் உருவாக்கப்பட்டிருப்பது இதன் சிறப்பு.
வான்கோ எழுதிய 903 கடிதங்களில் 650 கடிதங்கள் அவரது சகோதரர் தியோவிற்கு எழுதப்பட்டதாகும். வான்கோவின் சகோதரிகள் , ஓவியர் பால் காகின் மற்றும் நண்பர்களுக்கு எழுதிய கடிதங்கள் யாவும் முறையாகத் தொகுக்கப்பட்டு The Letters of Vincent van Gogh எனத் தன்நூலாக வெளியாகியுள்ளது. கடிதங்களில் அவர் வரைந்துள்ள கோட்டோவியங்களும் சிறப்பானவை.
வான்கோவின் மறைவிற்குப் பிறகு தியோவின் மனைவி ஜோஹன்னா இந்தக் கடிதங்களைத் தொகுக்கப் பல ஆண்டுகள் செலவிட்டிருக்கிறார், 1914 இல் அவை தொகுப்பாக வெளியிடப்பட்டன.

வான்கோ தனக்கு வந்த கடிதங்களைப் பாதுகாத்து வைத்திருக்கவில்லை. அவரிடம் எஞ்சிய கடிதங்களில் 39 தியோவிடமிருந்து வந்தவை
மனதில் பொங்கி வரும் அன்பைக் கட்டுப்படுத்த முடியாமல் தத்தளிப்பது என்பது எனக்குப் புது அனுபவமில்லை. காதல் என்ற ஒன்று எனக்கு அவசியம் வேண்டும். நான் தேடுவது நெருப்பின் பொறியை, அதையே காதல் என்று நினைக்கிறேன். காலையில் படுக்கையை விட்டு எழுந்திருக்கும் போது நீ மட்டும் தனியாக இல்லாமல் உனக்குப் பக்கத்தில் இன்னொரு உயிரும் இருக்கிறது என்ற உண்மை உனக்குத் தெரிய வரும்போது அதுவே உன்னை உலகத்தை மேலும் அதிகமான நட்புணர்வுடன் பார்க்குமாறு செய்யும் என்கிறார் வான்கோ.
உலகோடு இணைந்து வாழ விருப்பமின்றி. சமரசங்களுக்கு இடம் தராமல் கலையின் உன்மத்த நிலையில் வாழ்ந்து மறைந்தவர் வான்கோ. படைப்பின் பித்துநிலை அவரைத் துன்புறுத்தியது. வாழ்க்கை தனக்கு அளித்த கசப்புகளையும் அவமானங்களையும் தனது வண்ணங்களின் வழியே கடந்து போனார் வான்கோ. அடர் வண்ணங்கள் விடுதலையின் அடையாளமாக மாறின. சூரியகாந்திப்பூக்கள் மனசாட்சியின் கண்களாக உருமாறின.

வான்கோவின் வாழ்க்கையைப் புரிந்து கொள்ளும் போது தான் அவரது படைப்பின் மேதமையைப் புரிந்து கொள்ள இயலும்.
செயிண்ட்-ரெமியில் உளவியல் சிகிச்சை பெற்ற நாட்களில் அவரது படைப்பாற்றல் உச்சத்தைத் தொட்டிருக்கிறது. வான்கோவின் மஞ்சள் அறையும் நாற்காலியும் நமக்கு நிராகரிக்கப்பட்ட கலைஞனின் அவஸ்தையை உணர்த்துகின்றன.
காட்சிகளைத் துல்லியமாகத் தனது கடிதத்தில் பதிவு செய்திருக்கிறார்
மெலிந்த தோற்றத்தைக் கொண்ட பெண் கறுப்பு நிறத்தில் உடையணிந்து கொண்டு கையை மார்பின் மீது வைத்தபடி சாம்பல் நிற சுவரோரமாக எவ்விதமான ஓசையும் இன்றி எதையோ திருடி வைத்துக் கொண்டு வருகிறாள். அவளின் சுருண்ட கூந்தல். சிறிய வட்டவடிவ முகம். அவளின் முகம் பிரௌன் நிறமா அல்லது ஆரஞ்சும் மஞ்சளும் கலந்ததா என்பதைப் பற்றி என்னால் ஒரு முடிவிற்கு வர முடியவில்லை.
ஆர்லஸில் வசித்த போது வான்கோ ஒரு மனநலமற்றவர். அவர் ஆர்லஸில் குடியிருக்கக் கூடாது என்று 80க்கும் மேற்பட்டவர்கள் கையெழுத்துப் போட்டு மேயரிடம் புகார் அளித்திருக்கிறார்கள்.
ஒரு மனிதனுக்கு எதிராக ஒன்று சேரும் அளவுக்குக் கோழைத்தனமாக ஆட்களைக் கண்டது அதிர்ச்சி அளிக்கிறது. அவர்கள் என்னைச் சுதந்திரமாக இருப்பதற்குத் தகுதியற்ற மனிதன் எனக் கருதினார்கள், இது ஒரு அவமானம் – அதற்கு மேல் பேச ஒன்றும் இல்லை. என்கிறார் வான்கோ. பொதுமக்கள் அளித்த புகார் ஆவணப்படத்தில் காட்டப்படுகிறது..

இந்த ஆவணப்படத்தினைக் காணும் போது வான்கோவின் மூன்று தோல்விகள் பற்றிய எண்ணங்கள் மனதில் எழுந்தன
முதற்தோல்வி அவர் ஒரு மதபோதகராக முயன்றது. அதற்காகப் பைபிளை ஆழ்ந்து படித்து. தன்னைத்தானே வருத்திக்கொண்டு துறவு வாழ்க்கையை மேற்கொண்டிருக்கிறார். சில காலம் நிலக்கரி சுரங்க ஊழியர்களின் கிராமத்தில் மதபோதனையில் ஈடுபட்டார். ஆனால் அவரால் மதபோதகராக இயலவில்லை.
இரண்டாவது தோல்வி காதலித்த பெண்கள் எவரும் அவரைப் புரிந்து கொள்ளாமல் போனது. பொருளாதாரச் சிரமங்களால் அவரது காதல் கனவுகள் கலைந்து போனது
மூன்றாவது தோல்வி கலையுலகம் தன்னை அங்கீகரிக்கும். சக கலைஞர்களுடன் இணைந்து கலைப்படைப்புகளை உருவாக்க வேண்டும் என்ற அவரது ஆசை. அதற்காக முயற்சிகள் மற்றும் தோல்விகள்
இந்த மூன்று தோல்விகளும் ஒன்று சேர்ந்து அவரை மனப்பாதிப்புக்குள்ளாக்கின. அதிலிருந்து கடைசி வரை அவரால் மீளமுடியவில்லை.
வான்கோவின் உலகம் எளிய மனிதர்களால் ஆனது. ஏழை எளிய சுரங்க தொழிலாளர்கள். விவசாயிகள். தபால்காரர். குதிரைவண்டி ஒட்டுகிறவர். கிராமத்துப் பெண்கள். பாலியல் தொழிலாளிகள். நெசவு நெய்பவர்கள் இவர்களைத் தான் அதிகம் வரைந்திருக்கிறார்.
அவரது காலத்தில் அவரது ஓவியங்கள் குறித்து எவரும் மதிப்பீடு செய்யவில்லை. பாராட்டவில்லை. அவரது நண்பர் ஒருவர் The Potato Eaters ஓவியத்தைப் பார்த்துவிட்டுக் கடுமையாக விமர்சனம் செய்திருக்கிறார். அது வான்கோவின் மனதைப் புண்படுத்தியிருக்கிறது.

லண்டனிலிருந்த நாட்களில் வான்கோ உற்சாகமாக இயங்கியிருக்கிறார். கீ என்ற இளம்பெண்ணைக் காதலித்திருக்கிறார். அந்தக் காதல் நிறைவேயில்லை. அன்றாடம் லண்டன் மியூசியத்திற்குச் சென்று புகழ்பெற்ற ஓவியங்களைப் பார்வையிட்டிருக்கிறார். பதிவேட்டில் அவரது பெயர் காணப்படுகிறது.
Giuseppe De Nittis என்ற இத்தாலிய ஓவியர் மழைநாளில் லண்டன் நகரம் எப்படியிருக்கும் என்பதை வரைந்திருக்கிறார். அந்த ஓவியத்தைப் பார்த்த போது லண்டன் நகரை நான் எந்த அளவு நேசித்திருக்கிறேன் என்பதை என்னால் உணர முடிந்தது என்று தனது கடிதம் ஒன்றில் வான்கோ குறிப்பிடுகிறார்.
பாரீஸில் ஓவியம் பயிலுவதற்காகச் சென்ற இடத்திலும் அவரால் இணைந்து கற்க இயலவில்லை. சலிப்பூட்டும் ஒரே விதமான பயிற்சிகளால் தனக்குப் பிரயோசனமில்லை என்று நினைத்து விலகிக் கொண்டார்
கண்களைத் திறந்து வைத்துக் கொண்டு ஒரு மனிதன் இருந்தால் பார்க்கும் யாவுமே அழகாக இருக்கும். ஆனால் அந்தக் கண்களில் ஒரு உயிர்ப்பு வேண்டும். தனித்துவம் கொண்டதாக இருக்க வேண்டும். அது இருந்தால் மட்டுமே கண்ணில் தெரியும் யாவும் அழகாக இருக்கும் என்கிறார் வான்கோ
.அறை வாடகை தருவதற்கும், ஓவியம் வரையத் தேவையான பொருட்களுக்கும் பணம் கேட்டு தியோவிற்குத் தொடர்ந்து கடிதங்கள் எழுதியிருக்கிறார். தன்னால் முடிந்த உதவிகளைத் தொடர்ந்து செய்து வந்திருக்கிறார் தியோ. சிலவேளைகளில் அவர்களுக்குள் சண்டை ஏற்பட்டிருக்கிறது. ஆனாலும் தியோ வான்கோவை விலக்கவில்லை. கடைசிவரை உறுதுணையாகவே இருந்திருக்கிறார்
காதலனால் கைவிடப்பட்ட கர்ப்பிணிப்பெண் ஒருத்தியை வான்கோ ஒரு நாள் தற்செயலாகக் காணுகிறார். அந்தப் பெண் மீது பரிவு கொண்டு அவளைத் தனது வீட்டிற்கு அழைத்து வந்து காப்பாற்றுகிறார். அந்தப் பெண் ஓவியம் வரைவதற்கான மாடலாக இருந்திருக்கிறார். பொருளாதாரச் சிரமங்களால் அப் பெண்ணைத் தொடர்ந்து காப்பாற்ற வான்கோவால் முடியவில்லை. அவள் மீண்டும் பாலியல் தொழிலுக்கே திரும்பிப் போகிறாள். வான்கோ ஏமாற்றத்துடன் தனது தனிமைக்குள் ஆழ்ந்து விடுகிறார்.
ஓவியர் பால்காகினோடு ஏற்பட்ட நட்பும் இருவரும் ஒன்றாக ஒரே இடத்தில் வசித்தபடியே ஓவியம் வரைந்த நாட்களும். அவர்களுக்குள் ஏற்பட்ட பிணக்கும் படத்தில் அழகாகச் சித்தரிக்கப்பட்டிருக்கிறது. குறிப்பாக வான்கோவின் வேகத்திற்குப் பால் காகினால் ஓவியம் வரைய இயலாமல் போவது. காகின் வரைந்த வான்கோ ஓவியம் காகினின் சாயலில் இருப்பதும் போன்றவை சிறப்பாக விளக்கப்படுகின்றன.

மனச்சிதைவு முற்றிய வான்கோ தனது காதை அறுத்துக் கொண்டது, செயிண்ட்-ரெமி மனநலக் காப்பகத்தில் தங்கி சிகிச்சை பெற்றது. அங்கிருந்தபடியே ஓவியம் வரைந்தது. அந்த ஓவியங்களில் அலைவுறும் சுடர்களைப் போல அடர்த்தியான வண்ணக்கோடுகள் வெளிப்பட்டதும் படத்தில் சிறப்பாகப் பதிவு செய்யப்பட்டுள்ளன. புறக்கணிப்பிலிருந்து மீளுவதற்கான வழியாகவே ஓவியம் வரைந்திருக்கிறார்
கடந்த கால அனுபவங்கள் உருவாக்கிய பதற்றமும், எதிர்காலம் குறித்த தீவிரமான குழப்பங்களும் அவரைச் சூழ்ந்து கொண்டிருந்தன. தான் அங்கீகரிக்கப்படுவோம் என்ற நம்பிக்கையே இல்லாமல், உன்னதமான கனவுகளுடன் நிகரற்ற படைப்பூக்கத்துடன் இயங்கியிருக்கிறார்
படத்தில் வான்கோவின் The Starry Night ஓவியம் வரையப்பட்டதன் பின்புலம் மற்றும் அதன் விசேசம் குறித்து அழகாக விளக்கியிருக்கிறார்கள்.
சாம்பல் நிற மேகங்களுக்குப் பின்னால் மறைந்து கொண்டிருக்கும் சூரியனைப் பார்க்கும் போது மிகவும் அழகாக இருக்கிறது. அப்போது விழுந்த நிழல்களைப் பார்க்க வேண்டுமே. அத்தனை அழகு என்று ஒரு கடிதத்தில் எழுதியிருக்கிறார்.
டிக்கன்ஸ் ஷேக்ஸ்பியர், மில்டன், எமிலி ஜோலா என நிறைய வாசித்திருக்கிறார் வான்கோ. அந்தி வெளிச்சம் தெரிகிறது. ஆசீர்வதிக்கப்பட்ட மாலை நேரம் என்கிறார் டிக்கன்ஸ் என்று கடிதம் ஒன்றில் குறிப்பிடுகிறார்
கலை சம்பந்தப்பட்ட விஷயங்களில் நேர்மை மிகவும் முக்கியம். நான் உண்மையுடன் நடந்து கொள்ள வேண்டும். வியாபாரிகள் பின்னாலும் அரைகுறை அறிவு கொண்டவர்கள் பின்னாலும் நான் ஒரு காலத்திலும் ஒடமாட்டேன். தெலாக்ரூ,மிலே, ரூஸோ, துப்ரே, தாபினி ஆகியோரின் ஓவியங்களில் இருக்கும் நிரந்தர இளமையை நினைத்து வியக்கிறேன். அந்த ஓவியங்களில் காணப்படும் கம்பீரம், அமைதி, தனித்துவம் எல்லாவற்றையும் விட இதயத்தைப் பிழியும் தன்மை இவை என்னை வசீகரிக்கின்றன எனவும் ஒரு கடிதத்தில் குறிப்பிடுகிறார்
1888ல் தெற்கு பிரான்சில், பச்சை அலையெனக் காற்றிலாடும் வயல்களையும் நீலவானையும் நட்சத்திரங்கள் நிறைந்த இரவையும் கண்டு வியந்து இங்கே 25 வயதில் வந்திருக்க வேண்டும் என்று ஆதங்கத்துடன் எழுதியிருக்கிறார் வான்கோ
ஜப்பானிய ஓவியங்களில் மயங்கி அந்தப் பாணியில் தனது ஓவியங்களை வரைய முற்பட்டிருக்கிறார். அந்தப் பாதிப்பு எப்படி அவரது ஓவியத்தில் வெளிப்பட்டது என்பதைத் தெளிவான சான்றுகளுடன் காட்சிப்படுத்தியிருக்கிறார்கள்.
ஷேக்ஸ்பியரின் தனிமொழி போலவே வான்கோவின் கடிதங்கள் படத்தில் பேசப்படுகின்றன. அந்தக் காட்சிகள் மேடை நாடகம் காணுவது போன்ற அனுபவத்தைத் தருகின்றன

1890 ஜூலை 27-ஆம் நாள் தனது 37 ஆம் வயதில், தன்னைத்தானே துப்பாக்கியால் சுட்டுக்கொண்டு வான்கோ இறந்த போது சூரியகாந்திப் பூக்கள் தலைகவிழ்ந்து கொண்டன. கோதுமை வயலில் பறந்த காகங்கள் தனது குரலை இழந்தன. இருண்ட வானில் ஒளிரும் நட்சத்திரங்கள் மரணம் ஒருபோதும் முடிவில்லை தனக்குத் தானே புலம்பிக் கொண்டன. உலகம் மகத்தான கலைஞனை இழந்தது
கடைசிக்காட்சியில் வான்கோவின் கல்லறையினையும் அவரது சகோதரன் தியோவின் கல்லறையினையும் காட்டுகிறார்கள்.
வான்கோவாகப் பெனடிக்ட் கம்பெர்பாட்ச் அற்புதமாக நடித்திருக்கிறார். குறிப்பாக உணர்ச்சிகளை வெளிப்படுத்தும் முகபாவமும், உரையாடும் விதமும் அபாரம்.
நான் எப்போதும் தேடலில் ஈடுபட்டுக் கொண்டேயிருக்கிறேன். எதையாவது கண்டுபிடித்தேன் என்று கூறுவதை விடவும் தேடிக்கொண்டேயிருக்கிறேன் என்பதே சரியாக இருக்கும் என வான்கோ ஒரு கடிதத்தில் சொல்கிறார்
வான்கோவின் முடிவில்லாத பயணங்களையும் தீராத்தனிமை கொண்ட துயர வாழ்க்கையினையும் கலையின் வழியே தன்னை உயிர்ப்பித்துக் கொண்ட படைப்பாற்றலையும் ஆவணப்படம் சிறப்பாகவே அடையாளப்படுத்தியிருக்கிறது.
••
உரிமை கோரப்படாத உடல்
வேலூர் லிங்கன் மிகச்சிறந்த வாசகர். தமிழ் ஆங்கிலம் இரண்டிலும் அவரிடம் உள்ளது போல அரிய நூல்களைக் காண்பது அரிது. வீடே பெரிய நூலகம் போலிருக்கிறது.
சமீபத்தில் ஒரு நாள் அவர் “அலெக்சாண்டர் குப்ரின் எழுதிய Yama the pit நாவல் போலவே இந்தியில் ஒரு நாவல் வெளியாகியிருக்கிறது. JAGDAMBA PRASAD DIXIT எழுதிய Mortuary என்ற நாவலது. மும்பையிலுள்ள பாலியல் தொழிலாளர்களின் வாழ்க்கையைப் பற்றியது“ என்றார்.

நான் ஜகதம்ப பிரசாத் தீட்சித் பற்றிக் கேள்விப்பட்டிருக்கவில்லை என்றேன். உடனே அந்த நாவலை எனக்குத் தபாலில் அனுப்பி வைத்துவிட்டார். 192 பக்கமுள்ள நாவல்.

படிக்கப் படிக்க ஜி.நாகராஜனின் கதைகள் நினைவிற்கு வந்தபடியே இருந்தன. ஜி.நாகராஜனை விடவும் ஒளிவுமறைவின்றி பச்சையாக, அடர்த்தியாக, வசைகளும் வேதனைகளுமாக நாவல் எழுதப்பட்டிருக்கிறது. காமாதிபுரா என்ற மும்பையின் பாலியல் தொழிலாளர்களின் குடியிருப்பைப் பற்றியதே நாவல்.
பக்கத்துக்குப் பக்கமுள்ள கெட்டவார்த்தைகளை எப்படி மொழிபெயர்ப்பது என்று தெரியவில்லை என்று மொழிபெயர்ப்பாளர் ஆதங்கப்பட்டிருக்கிறார். எந்த அலங்காரமும் இன்றி கொச்சையாக எழுதப்பட்டிருப்பதே நாவலின் தனித்துவம்
உடலை விற்றுப் பிழைக்கும் பெண்களின் அவலநிலையை இப்படி எவரும் உக்கிரமாக எழுதியதில்லை. மராத்தி வசைகள் அப்படியே கையாளப்பட்டிருக்கின்றன.

நாவலில் தமிழ், மராட்டி. இந்தி கதாபாத்திரங்கள் இடம்பெற்றிருக்கிறார்கள். நவநாகரீகமான மும்பையினுள் அந்த உலகம் திரைக்குப் பின்னால் இயங்கிக் கொண்டிருக்கிறது. பகலில் தூங்கி மதியம் எழுந்து கிடைத்த உணவைச் சாப்பிட்டுப் பொய் அலங்காரம் செய்து கொண்டு இரவெல்லாம் அந்தப் பெண்கள் வாடிக்கையாளருக்காகக் காத்திருக்கிறார்கள். ஒன்றிரண்டு பேரைத் தவிரப் பலரும் வாடிக்கையாளர் இன்றி ஏமாற்றம் அடைகிறார்கள். வயிற்றுப்பாட்டினைத் தீர்க்க கடன் வாங்குகிறார்கள்.
அவர்களுக்கும் குடும்பம் இருக்கிறது. பிள்ளைகளை வளர்க்கிறார்கள். குடிகார கணவன் மனைவி ஈட்டிய பணத்தைப் பறித்துக் கொண்டு சூதாடுகிறான். குப்பையும் கழிவுகளும் நிரம்பிய வீதியில் பிள்ளைகள் சந்தோஷமாக விளையாடுகிறார்கள். எப்போதாவது கூடுதல் வருமானம் கிடைக்கிறது. விரும்பியதைச் சாப்பிடுகிறார்கள். மைனா பாய் என்ற பெண்ணே நாவலின் முக்கியக் கதாபாத்திரம். அவளது வாழ்க்கையைச் சுற்றியே நாவல் விரிவு கொள்கிறது.
பெண்களுக்குள் நடக்கும் சண்டைகள். கோபம். வெறுப்பு. ஏமாற்றம். வலி தாங்க முடியாத பெண் புலம்பும் வசைகள். நோயுற்ற போது ஒருவருக்கொருவர் உதவி செய்வது, காதல் கனவுகளைப் பகிர்ந்து கொள்வது. ஆண்களைக் கேலி செய்வது என உலகம் அறியாத அவர்களின் வாழ்க்கை சிதைவுகளை அசலாக எழுதியிருக்கிறார்.
பாலியல் தொழிலாளிகளைக் காவல்துறையினர் துரத்திப் பிடித்து அடித்து வேனில் ஏற்றுவது. இரவில் திடீர் ரெய்டு அடித்துக் கைது செய்வது. உடல்நலமற்ற பெண்ணைப் பாலுறவிற்குக் கட்டாயப்படுத்துவது. ஊனமுற்ற மனிதர்கள், ஏமாற்றிக் கொண்டுவரப்பட்ட இளம்பெண்கள் பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்படுவது. வன்புணர்ச்சியால் கர்ப்பம் கொண்ட பெண்கள். கைவிடப்பட்ட தொழுநோயாளிகள். அவர்களின் இரத்தமும் சலமும் கொண்ட உடல். குழைந்த தசைகள். துருத்திக் கொண்டிருக்கும் எலும்புகள். குப்பையில் கிடப்பதை எடுத்து அவர்கள் சாப்பிடுவது. தெருநாய்களின் வாழ்க்கை ஆண்களும் பெண்களும் சேர்ந்து நாட்டுச்சாராயம் குடிப்பது. கஞ்சா புகைப்பது பெண்களை வைத்துத் தொழில் நடத்தும் மாமாக்கள். அவர்களின் ஏஜெண்டுகள். ரிக்சா ஒட்டுபவர்கள். பணம் படைத்த வணிகர்கள். அவர்கள் வீட்டில் கொண்டாட்டங்கள், என்று சமூகத்தால் புறக்கணிக்கப்பட்ட வாழ்க்கையை யதார்த்தமாகச் சித்தரித்திருக்கிறார்
‘முர்தாகர்’ (சவக்கிடங்கு) என்ற தலைப்பில் இந்த நாவல் இந்தியில் வெளியாகியுள்ளது. நாவலின் சில பத்திகளைப் படிக்கும் போது அதிர்ச்சியாக உள்ளது. எவ்வளவு அருவருப்பான சூழலில் வாழ்கிறார்கள் என்று திகைப்பாகவும் இருக்கிறது.
வறுமையான சூழலில் காலைநேரம் ஒரு தேநீர் வாங்கக் கூடக் கையில் காசில்லாமல் மலபாரி ஒருவனிடம் கடன் சொல்லி டீக்குடிக்கும் பெண்களைப் பற்றிய காட்சி மறக்கமுடியாதது.
அது போலவே போலீஸ் ரெய்டின் போது தப்பியோடும் பெண்கள் மடக்கிப் பிடிக்கப்படுவது. அடித்து இழுத்து வேனில் ஏற்றப்படுவது. போலீஸ் ஸ்டேஷனில் நடக்கும் விசாரணை. அவர்களுக்குக் கிடைக்கும் தண்டனை. அந்தப் பெண்களின் குழந்தைகள் சூழலை மறந்து இயல்பாக ஓடியாடி விளையாடுவது. நல்ல சாப்பாட்டிற்காக அவர்கள் ஏங்குவது. மதராஸி நடத்தும் உணவகம். அங்கே கிடைக்கும் கோழிக்கறி, தோசை. ஐம்பது பைசாவைக் கொடுத்துப் பாலுறவு கொள்ள வரும் ஆண். பசியால் எதையும் செய்யத் துணியும் பெண். இந்த இருண்ட உலகில் வசிக்கும் கைவிடப்பட்ட. நோயாளிகள். புறாக்கூண்டு போன்ற அவர்களின் குடியிருப்பு. துர்நாற்றம் அடிக்கும் படுக்கைகள் எனப் பாலியல் தொழிலாளர்களின் உலகை மிகவும் துல்லியமாக எழுதியிருக்கிறார் ஜகதம்ப பிரசாத் தீட்சித்.
சவக்கிடங்கில் உரிமை கோரப்படாத உடலைப் போலத் தங்களை உணரும் பெண்களைப் பற்றியது என்பதால் தான் நாவலுக்கு சவக்கிடங்கு என்று தலைப்பிட்டிருக்கிறார்.
ஜகதம்ப பிரசாத் தீட்சித் 1913 ஆம் ஆண்டு மத்திய பிரதேசத்தின் பாலகாட் நகரில் பிறந்தவர். நாக்பூரில் கல்வி கற்றிருக்கிறார். பின்பு மும்பை செயின்ட் சேவியர் கல்லூரியில் எம்.ஏ. படித்திருக்கிறார். நாக்பூரில் இரண்டு நாளிதழ்களில் துணை ஆசிரியராகப் பணியாற்றிய அனுபவமும் உண்டு. 1953ல் அவரது முதல்கதை வெளியானது. தீவிர இடதுசாரியான ஜதம்ப பிரசாத் அரசியல் போராட்டத்தில் கைது செய்யப்பட்டுச் சிறை சென்றிருக்கிறார். Akal ,Kata Hua Aasman,Famine ,Itivrat போன்றவை அவரது புகழ்பெற்ற நாவல்கள்.
இப்படி ஒரு சிறந்த நாவலைப் பரிசாக அளித்த வேலூர் லிங்கத்திற்கு மனம் நிறைந்த நன்றி.
S. Ramakrishnan's Blog
- S. Ramakrishnan's profile
- 657 followers
