S. Ramakrishnan's Blog, page 87
May 30, 2022
அக்கடாவின் உலகம்.
மகிழ்நிலா
ஒன்பதாம் வகுப்பு,
கூத்தூர்,திருச்சி
***

குழந்தைகள் கரடி பொம்மைகளுடன் பேசிக்கொண்டிருப்பதைக் கண்டிருக்கிறேன். அப்பொழுதெல்லாம் ஒரு எண்ணம் என்னைத் திகைக்க வைக்கும், ஒருவேளை உயிரற்ற பொருள்களெல்லாம்
பேசிக்கொண்டிருக்கின்றனவா; இல்லை அவை பேசுவது குழந்தைகளுக்கு மட்டுமே கேட்கக்கூடியதா? என்ற கேள்விகள் மனதில் வந்து செல்லும். அத்தகைய கேள்விகளுக்கான விடையாக அக்கடா அமைந்திருந்தது.
என்னை மீண்டும் ஒரு சிறுகுழந்தை போலச் சிந்திக்க வைத்த அக்கடாவை என்னால் மறக்க முடியாது.
அக்கடா தன்னுடைய பெயரைத் தீர்மானம் செய்யும் கதை மிகவும் நகைப்பூட்டலாக இருப்பினும் யாருமே அதன் பெயரைக் கண்டுகொள்ளாதது வருந்தவைத்தது. பென்சில் அண்ணனின் நிலையும் அந்த உணர்வையே ஏற்படுத்தியது.
குறுந்தாடி குண்டூசி என்ற பெயர் கேட்பதற்குச் சுவாரஸ்யமாக இருந்தாலும், அக்கடாவின் கோபத்திற்கு ஆளாகிவிடக்கூடாது என்பதால் அக்கடா என்றே அழைக்கலாம் என்று உத்தேசிக்கிறேன்.
அலுவலக மரங்களின் நிலை பரிதாபத்திற்குரியது.உண்மைதான் …. மனிதர்களுக்கு மரங்களின் மீது உள்ள மரியாதை குறைந்து கொண்டே தான் வருகிறது.
எனக்குக் கூடச் சிலசமயம் மரங்கள் பேசுவது கேட்பதுபோல் இருக்கும். ஆனால் ஏன் மற்ற மனிதர்களுக்கும் அது கேட்கவில்லை என்பது இன்றளவும் எனக்கு ஒரு புரியாத புதிராகவே உள்ளது. அக்கடாவிடம் எனக்கு மிகவும் பிடித்தது தனது நண்பர்களைத் தேடிச் செல்லும் அதன் நட்புணர்ச்சிதான். அதே நட்புணர்வை பித்தளைத்தலையன் எனப்படும் காப்பர்ஹெட்டிடமும் கவனிக்க முடிகிறது.
ஒரு நண்பன் எப்படி இருக்கக்கூடாது என்பதற்கு உதாரணமாகக் கோல்டுஹெட் திகழ்கிறான். அதே சமயம் கெபி ஒரு நல்ல நண்பன் எவ்வாறு இருக்க வேண்டும் என்பதைப் பறைசாற்றுகிறது.ஆமைகளும் நண்டுகளும் மனிதர்கள் இந்தப் பூமியை மேலும் கவனமுடன் கையாள வேண்டும் என்பதை உணர்த்துகின்றன. எலியம்மா என்னை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. அதைவிட ஆச்சரியம் எதிர்காலத்தின் ரோபோ பூஜைகளும் பிளாஸ்டிக் செடிகளும் தான்.
பசி என்ற சொல்லே இல்லை என்றால் மனிதர்களும் சாப்பிட மாட்டார்களா என்ற பூரிப்பை உண்டாக்கியது.வருணின் பொறாமை வருத்தத்திற்குரியது. இக்காலத் தலைமுறை இப்படியிருந்தால் எதிர்காலம் எப்படி இருக்கும் என்ற அச்சத்தை மனதில் உண்டாக்குகிறது. யானையின் நிலை கண்டு நான் வருந்தினேன். அதுவும் சிறுகுழந்தை போல் நடந்து கொள்வதைக் கண்டு அக்கடாவுடன் சேர்ந்து நானும் வியந்தேன்.
“காரைத் தின்னும் கார்கள்” கதை சிறிது பயமூட்டுவதாகவும் சிறிது நகைப்பூட்டுவதாகவும் இருந்தாலும் இந்நாளில் பல மனிதர்கள் அப்படித்தான் இருக்கிறார்கள். பழிவாங்கும் எண்ணத்தால் மேலும் பழியையே நாம் சம்பாதிக்கிறோம் என்ற நிதர்சனத்தை ஏற்க சிலர் மறுக்கிறார்கள்.இதைக் குழந்தைகளிடமும் விதைக்க நினைக்கிறார்கள்.
இன்று குட்டி ஆமையைப் போலவே தான் மனித குழந்தைகளும் இருக்கிறார்கள்.வெளியுலகம் என்னும் நீர் சுழற்சிகளும் சுறாமீன்களும் நிறைந்த கடலினைக் கண்டு அஞ்சுகிறார்கள். அவர்களுக்கு அக்கடா போல ஒரு வழிகாட்டியை அளித்தமைக்குத் தங்களுக்கு மிக்கநன்றி .
***
May 26, 2022
world Literature Today இதழில்
எனது சிறுகதை சொந்தக்குரல் world literature today மே இதழில் வெளியாகியுள்ளது. புகழ்பெற்ற இலக்கிய இதழிது. சர்வதேச அளவில் படைப்புகள் வெளியாகின்றன. திலா வர்கீஸ் எனது கதையை மொழிபெயர்ப்பு செய்துள்ளார்

கதையை வாசிக்க இணைய தளத்திற்கு செல்லவும்.
May 23, 2022
நடைவணிகர்
முதுகில் சுமையோடு கையில் ஊன்றுகோலுடன் தனியே நடந்து செல்லும் வணிகரின் சித்திரம் ஒன்றைப் பார்த்தேன். அவருடன் நாய் ஒன்றும் உடன் செல்கிறது. அழகான ஓவியம். இங்கிலாந்தின், கிராமப்புறங்களிலிருந்து சிறிய நகரங்களுக்குப் பொருட்களைச் சுமந்து சென்று விற்பன செய்யும் வணிகரது கோட்டுச்சித்திரம்

Street Pedlar என அழைக்கப்படும் இது போன்ற வணிகர்கள் இங்கிலாந்தில் நிறைய இருந்தார்கள். இவர்களில் ஒரு சிலருக்கு மட்டுமே எழுதப்படிக்கத் தெரிந்திருந்தது. ஆகவே இவர்களின் பயண அனுபவம் முறையாகப் பதிவு செய்யப்படவில்லை. சிலரது நாட்குறிப்புகள் மற்றும் கணக்குப் புத்தகங்களைக் கொண்டு அவர்களின் வாழ்க்கை அனுபவங்களை அறிந்து கொள்ள முடிகிறது.
எந்த விவசாயி தனக்கு வரவிருக்கும் இரவிற்கு அடைக்கலம் கொடுப்பான் என்ற நிச்சயமற்ற நிலையில் இவர்கள் பயணம் செய்தார்கள். அடுத்த நாள் எங்கே தங்குவோம். என்ன உணவு கிடைக்கும் எனத் தெரியாத நிலையிலும் நீண்ட பயணங்களை மேற்கொண்டிருக்கிறார்கள்
மலைப் பகுதிகளில் வாழ்ந்து வந்தவர்கள் புவியியல் ரீதியாகத் தனிமைப்படுத்தப்பட்ட காரணத்தால் அவர்களுக்குத் தேவையான பொருட்களை நடைவணிகர்கள் வீடு தேடிப் போய் விற்பனை செய்தார்கள்.
சில நடை வணிகர்கள் பெரிய உற்பத்தியாளர்களுக்கு முகவர்களாக அல்லது விற்பனையாளர்களாகப் பணிபுரிந்தனர். 12 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியிலிருந்தே நடை வணிகர்களின் சித்திரங்கள் மற்றும் பதிவு இலக்கியம் மற்றும் கலைகளில் இடம்பெற்றுள்ளது.
சில நேரம் ஒரே இடத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட வணிகர்கள் தங்குவதுண்டு. அது போன்ற நாளில் இரவெல்லாம் குடிபோதையில் பாடிக்கொண்டும் பழங்கதை பேசிக் கொண்டுமிருப்பார்கள். அது தான் பயணத்தின் ஒரே ஆறுதல். பனிக்காலத்தில் இரவு தங்குமிடம் கிடைக்காமல் துரத்தப்பட்ட அனுபவத்தைப் பலரும் பதிவு செய்திருக்கிறார்கள்.

எப்ரைம் லிசிட்ஸ்கி எனும் யூதவணிகர் எழுதிய In the Grip of the Cross-Currents நூலில் வீடுவீடாகப் போய் விற்பனை செய்த போது ஏற்பட்ட சிரமங்களை விரிவாகப் பதிவு செய்திருக்கிறார்.
••
மே 23.22
May 22, 2022
நிழல் சொல்லும் நிஜம்.
பள்ளி நாட்களில் The Count of Monte Cristo நாவலின் சுருக்கத்தை ஆங்கிலத் துணைப்பாடப் புத்தகத்தில் படித்திருக்கிறேன். பின்பு நாவலின் இரண்டு வேறுபட்ட திரைவடிவங்களைப் பார்த்திருக்கிறேன். சுவாரஸ்யமான கதை. 2002ல் வெளியான The Count of Monte Cristo படத்திலுள்ள மழைத்துளிகளுக்கு நடுவே வாள் வீசி பயிற்சி எடுக்கும் காட்சி மறக்கமுடியாதது.

அலெக்சாண்டர் டூமா பிரான்சில் மட்டுமின்றி இந்தியாவிலும் விரும்பிப் படிக்கப்பட்டவர். இவரது The Three Musketeers நாவலுக்கு 50க்கும் மேற்பட்ட திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி தழுவல்கள் உள்ளன , இந்த நாவல் தமிழில் விஜயபுரி வீரன் என்ற பெயரில் படமாக்கப்பட்டிருக்கிறது.

டூமாவின் நாவல்களை எல்லாம் அவர் எழுதவில்லை. அவரது உதவியாளரான அகஸ்டே மாக்கே தான் எழுதினார் என்று ஒரு சர்ச்சை நீண்டகாலமாக இருந்து வருகிறது. டூமாவிடம் நகலெடுப்பவராக மாக்கே பணியாற்றினார். அவரது வேலை உதவியாளர் பணி மட்டுமே என மறுக்கிறார்கள் டூமாவின் ரசிகர்கள். ஆனால் சமகால ஆய்வுகளின் படி மாக்கே டூமாவோடு இணைந்து எழுதியிருப்பது தெரியவருகிறது
இந்தச் சர்ச்சைகளை முன்வைத்து சில ஆண்டுகளுக்கு முன்பு Signé Dumas என ஒரு நாடகம் பிரான்சில் நிகழ்த்தப்பட்டது. அந்த நாடகமே இன்று திரைப்படமாக உருவாகியிருக்கிறது.
டூமாவின் மறுபக்கத்தைச் சொல்வதாக உருவாக்கபட்டடிருக்கிறது L’Autre Dumas திரைப்படம். Safy Nebbou இயக்கியிருக்கிறார்
.தலைப்பே இன்னொரு டூமா என்று குறிப்பிடப்படுகிறது.

யார் உண்மையான டூமா என்ற விசாரணையை விடுத்துப் படம், மாக்கேயின் காதல் மற்றும் டூமாவின் உல்லாச வாழ்க்கையைப் பிரதானமாக விவரிக்கிறது. இவர்களின் காதல் போட்டியின் போது யார் உண்மையில் நாவல்களை எழுதியது என்ற கேள்வி எழுப்பப்படுகிறது.
அலெக்சாண்டர் டூமா கடலோர நகரமான Trouville க்கு வருவதிலிருந்து படம் தொடங்குகிறது , டூமாவாக Gérard Depardieu சிறப்பாக நடித்திருக்கிறார். அகஸ்டே மாக்கேயாக Poelvoorde நடித்திருக்கிறார்.
புதிய நாவலை எழுதுவதற்காக இருவரும் கடற்கரை நகருக்கு வந்து சேருகிறார்கள். வழக்கமாக அவர்கள் தங்கும் விடுதியில் அறை ஒதுக்கப்படுகிறது. கடல் பார்த்த அறையில் மட்டுமே தன்னால் இருக்கமுடியும் எனப் பிடிவாதம் பிடிக்கும் டூமா தனது நண்பரின் அறையை எடுத்துக் கொள்கிறார். இதனால் அகஸ்டே மாக்கே டூமாவின் அறையில் தங்குகிறார்.

மறுநாள் டூமாவைக் காண்பதற்காக சார்லெட் என்ற இளம்பெண் வருகிறாள். அவளது அழகில் மயங்கி தனது உண்மை அடையாளத்தை மறைத்துக் கொண்டு தானே டூமா என்று நடிக்கிறார் மாக்கே.
புரட்சிகர நடவடிக்கை காரணமாகச் சிறையில் அடைக்கப்பட்டு தூக்குத்தண்டனைக்காகக் காத்திருக்கும் தனது தந்தை டிஸ்ரைவ்ஸை விடுவிக்க உதவி கேட்கிறாள் சார்லெட். மாக்கே அவளுக்கு உதவி செய்வதாக வாக்களிக்கிறார்.
இந்தப் பொய்யை நிஜமாக்க அவளது பெயரில் டூமாஸிற்கு உதவிக் கடிதம் ஒன்றை அனுப்பி வைக்கிறார். டூமாஸிற்குப் புரட்சி அரசியலில் ஆர்வமில்லை. இந்நிலையில் மனைவியை விவாகரத்து செய்துவிட்டுச் சார்லெட்டை மணந்து கொள்ள வேண்டும் எனக் கனவு காணுகிறார் மாக்கே. இந்தத் தீவிர காதலின் காரணமாக அவளைப் பாரீஸிற்கு வரவழைத்து டூமாவின் விருந்தினர் மாளிகையில் தங்க வைக்கிறார்.

டூமா ஏற்பாடு செய்த விருந்தில் உண்மை வெளிப்பட்டுவிடுகிறது. சார்லெட் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்து மாக்கேவினை அடித்துவிடுகிறாள். அப்போது தான் நடந்த உண்மைகள் டூமாவிற்குத் தெரியவருகின்றது. சார்லெட்டின் அழகில் மயங்கிய டூமா அவளுக்கு உதவி செய்ய முன்வருகிறார். அவளது தந்தையை மீட்பதற்கான முயற்சியில் ஈடுபடுகிறார்கள்.

இதற்கிடையில் மன்னருக்கு எதிராகப் புரட்சியாளர்களுடன் டூமா இணைந்து செயல்படுகிறார் என அரசாங்கம் சந்தேகம் கொண்டு அவரைக் கண்காணிக்கிறது. அவரைச் சுற்றிப் பின்னப்பட்ட சதிவலையில் டூமா விழுகிறார். அதிலிருந்து எப்படி மீளுகிறார் என்பதே படத்தின் இறுதிப்பகுதியாகும்.
படத்தில் ஆகஸ்டே மாக்கே டூமாவின் உதவியாளர் போலவே சித்தரிக்கப்படுகிறார். ஒரு காட்சியில் அவரே தனது முதல் வாசகன். அவரது வேலை நகலெடுப்பது மட்டுமே என்கிறார் டூமா
ஆனால் மாக்கே தனது கதைகளை டூமா தனது பெயரில் வெளியிட்டு நிறையப் பணம் சம்பாதித்துவிட்டார் என்று முகத்திற்கு நேராகவே குற்றம் சாட்டுகிறார். அப்போது டூமா நாம் இணைந்து எழுதினோம் என்று வேண்டுமானால் சொல்லலாம் என்கிறார். மாக்கே காதலிக்கும் பெண்ணை டூமா காதலிக்கும் போது அவர்களுக்குள் மோதல் அதிகமாகிறது
அந்தக் காலத்தில் ஆகஸ்டே போன்ற கோஸ்ட் ரைட்டர்கள் இருந்தார்கள், அவர்கள் பணத்திற்காக எழுதிக் கொடுத்தார்கள் என்பதே வரலாறு.
டூமாவின் காதல் வாழ்வு விசித்திரமானது. நாற்பது பெண்கள் அவருடன் நெருங்கிப் பழகியிருக்கிறார்கள். இந்த உறவால் நான்கு கள்ளக்குழந்தைகள் பிறந்திருக்கின்றன. முதல் மனைவி விவாகரத்து கோரியதோடு அவரிடம் பெரிய தொகையை ஜீவனாம்சம் கேட்டு வழக்குத் தொடர்ந்தார். கடைசி வரை அவரால் அதைப் பெற முடியவில்லை.
படத்தின் ஒரு காட்சியில் நடைப்பயிற்சி மேற்கொள்ளும் போது தான் எழுதிய வரிகளை மாக்கேடிற்கு வாசித்துக் காட்டுகிறார் டூமா. அந்தக் காகிதங்கள் சட்டெனக் காற்றில் பறந்துபோகவே மாக்கே இப்போது என்ன செய்வது எனக்கேட்கிறார். எழுதப்பட்ட எல்லா வரிகளும் என் ஞாபகத்தில் அப்படியே இருக்கின்றன எனக் கடகடவெனச் சொல்லத் துவங்குகிறார் டூமா.

இதன் வழியே டூமாவின் படைப்பாற்றல் அடையாளப்படுத்தப்படுகிறது. அதே நேரம் மது, பெண்கள், நடனம் என உல்லாசமான வாழ்க்கையில் டூமா அதிக ஆர்வம் காட்டும்போது, மாக்கே தனது எழுத்துவேலையில் மட்டுமே முழு அர்ப்பணிப்புடன் செயல்படுகிறார். ஆகவே அவர் டூமாவின் எழுத்துப் பணிக்கு நிறையத் துணை செய்திருப்பதை அறிந்து கொள்ள முடிகிறது.
முழுக்க முழுக்கக் கற்பனையான இக்கதை, டுமாஸின் வாழ்க்கையில் நடந்த சில உண்மை நிகழ்வுகளை இணைத்து உருவாக்கப்பட்டிருக்கிறது, டூமாஸை விடவும் மாக்கே மீது கவனம் குவியும்படியாகத் திரைக்கதை எழுதப்பட்டிருக்கிறது.
சமையலில் ஆர்வம் காட்டுவது, முகமூடி விருந்தில் கோமாளி போல நடந்து கொள்வது. கோபம் கொண்டு வெளியேறிப் போகும் சார்லெட்டினை குதிரையில் துரத்திப் போவது, அவளது தந்தையை மீட்கத் தானே குதிரைவண்டி ஒட்டுவது என டூமா உணர்ச்சிக் கொந்தளிப்பிலே இருக்கிறார் அவரைப் போலின்றி மாக்கே எதையும் ஆழ்ந்து யோசித்துத் திட்டமிடுகிறார். செயல்படுத்துகிறார்.
சார்லெட்டை சந்திக்கும் வரை அவருக்கு டூமா மீது கோபமில்லை. அறிந்தே அவர் நிழல் எழுத்தாளராகப் பணியாற்றியிருக்கிறார்.
மாக்கே ஒரு கண்ணாடி. அதில் நான் என்னையே பார்த்துக் கொள்கிறேன் என்று ஒரு காட்சியில் டூமா சொல்வது பொருத்தமானதே.
டூமாவை பற்றிய இப்படம் பலவிதங்களிலும் Cyrano de Bergerac நாடகத்தை நினைவுபடுத்துகிறது. இந்த நாடகம் திரைப்படமாக வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்த ஆண்டு கூடச் சைரானோ (2022) எனப் புதிய படமாக வெளியாகியுள்ளது
டூமாவின் மீது சுமத்தப்பட்ட இதே குற்றச்சாட்டு ஷேக்ஸ்பியர் மீதும் வைக்கப்பட்டிருக்கிறது. மார்லோ தான் ஷேக்ஸ்பியர் நாடகங்களை எழுதியவர் என்று இன்றும் வாக்குவாதம் செய்து கொண்டிருக்கிறார்கள். இது போன்ற சர்ச்சைகளுக்கு முடிவே கிடையாது.
சமையலில் விருப்பம் கொண்ட டூமா Great Dictionary of Cuisine (Le Grand Dictionaries’ de Cuisine) என்ற சமையற் குறிப்புகள் கொண்ட அகராதியை எழுதியிருக்கிறார், இன்றும் அவரது பெயரால் அழைக்கப்படும் “Alexander Dumas Potato Salad” விரும்பி உண்ணப்படுகிறது.

இப்படத்தில் வெளிப்புறத்திலே அதிகக் காட்சிகளை படமாக்கியிருக்கிறார்கள். வழக்கமான காதல் கதை, திரைக்கதையிலும் பெரிய மாற்றமில்லை. புரட்சியாளர், மக்கள் போராட்டம் என்று பூசியிருக்கிறார்கள். அது கதையின் போக்கில் பெரிய மாற்றத்தை உருவாக்கவில்லை.
அலெக்சாண்டர் டூமாவின் வாழ்க்கையையும் படத்தில் சரியாகச் சொல்லப்படவில்லை. வரலாறும் சரியாகச் சித்தரிக்கப்படவில்லை. சினிமா சந்தைக்கான விற்பனைப்பொருளாகவே எழுத்தாளனின் வாழ்க்கையும் கையாளப்பட்டிருக்கிறது.
•••
May 21, 2022
துப்பாக்கியிலிருந்து எழும் இசை
உலகப் புகழ் பெற்ற இசைக்கலைஞர் எனியோ மோரிகோன் பற்றி Ennio என்ற ஆவணப்படத்தை இயக்குநர் குசாபே டொர்னடோர் இயக்கியுள்ளார். எனியோ மோரிகோன் 2020 இல் தனது 91வது வயதில் மறைந்தார். அவர் 500க்கும் மேற்பட்ட திரைப்படங்களுக்கு இசையமைத்திருக்கிறார்.

எனியோ மோரிகோன் என்றதும் வெஸ்டர்ன் திரைப்படங்களின் மறக்கமுடியாத இசை நினைவில் எழுகிறது. அதிலும் குறிப்பாக விசிலோடு கூடிய The Good the Bad and the Ugly – Main Theme மற்றும் Man with Harmonica – Once upon a time in the west அற்புதமான இசைக்கோர்வையாகும்.

இந்த இசை வழியே நமது இளமைக்காலத்திற்கு பின்னோக்கி செல்லத் துவங்குகிறோம். ஏதோ ஒரு திரையரங்கில் இருட்டிற்குள்ளிருந்தபடி குதிரைகளில் செல்லும் சாகசவீர்ர்களை ரசித்துக் கொண்டிருக்கிறோம். ஒரு துப்பாக்கி நம்மை நோக்கிச் சுடுகிறது. ஆனந்தமாகக் கைதட்டுகிறோம். பெயரில்லாத ஒருவன் யாருமில்லாத ஊருக்கு ரயிலில் வந்து இறங்குகிறான். அவன் மவுத்ஆர்கான் வழியே பேசுகிறான். கண்சிமிட்டுவதை விட வேகமாக துப்பாக்கி சுடுகிறான். இப்போது நான்காவது குதிரை தேவையற்றுப் போகிறது. இசையே அவனது சாகசத்தை முழுமையாக்குகிறது.

Cinema Paradiso, Once Upon a Time in America, The Mission, The Untouchables, Days of Heaven, 1900, Battle of Algiers என எனியோ மோரிகோன் இசையில் வெளியான படங்களில் அவரது பங்களிப்பு காட்சிமொழியை அடுத்த கட்டத்திற்கு உயர்த்துவதாகவும் பலநேரங்களில் காட்சிகளைத் தாண்டியதாகவும் இருக்கிறது. திரையிசைக்கு மிகப்பெரிய கௌரவத்தை உருவாக்கியவர் எனியோ மோரிகோன். ஒரு ஆண்டில் 24 படங்கள் வரை இசையமைத்திருக்கிறார் என்பது அவரது மேதமையின் சான்று. இத்தாலியத் திரைப்படங்கள் மட்டுமின்றிப் பிரெஞ்சு, ஹாலிவுட் படங்களிலும் தொடர்ந்து இசையமைத்திருக்கிறார். அவரது திரையிசைத் தொகுப்புகள் அதிக அளவில் விற்பனையாகியுள்ளன.

ஆறுமுறை ஆஸ்கார் விருதுக்குப் பரிந்துரை செய்யப்பட்ட போதும் ஆஸ்காரின் உள்அரசியல்காரணமாக அவருக்கு விருது கிடைக்கவில்லை. 2016ல் The Hateful Eight படத்திற்காக ஆஸ்கார் விருது பெற்ற போது அவர் கண்கலங்கிய நிலையில் மேடையில் நிற்கும் காட்சி மறக்கமுடியாதது.
இந்த நிராகரிப்பைப் பற்றி ஆவணப்படத்தில் பேசுகிறார். அப்போது அவரிடம் வெளிப்படும் கோபம் அகாதமியின் செயல்பாடு அற்பத்தனமானது என்பதையே காட்டுகிறது.
ஆவணப்படத்தின் துவக்கக் காட்சியில் எனியோ மோரிகோன் தனது வீட்டில் உடற்பயிற்சி செய்து கொண்டிருக்கிறார். யாரோ ஒரு முதியவர் போலத் தோற்றம் தரும் அவர் இசைக்குறிப்புகளை எழுதுவதற்காக மேஜையில் அமருகிறார். பரபரப்பாக இசைக்குறிப்புகளை எழுதுகிறார். அப்போது தான் அவர் உலகின் தலைசிறந்த இசையமைப்பாளர் என்பது புரியத்துவங்குகிறது.
தனது இளமைக்காலத்தை நினைவுகூறும் போது மருத்துவம் படிக்க விரும்பிய தன்னை, கட்டாயத்தின் பெயரில் டிரம்பட் கற்றுக் கொள்ள அனுப்பி வைத்தார் தந்தை என்கிறார் எனியோ மோரிகோன்.

விருப்பமில்லாமல் இசைக்கற்கத் துவங்கிய போதும் குறுகிய காலத்திலே இசையின் மீது தீவிர ஈடுபாடு உருவாகி மிகச்சிறந்த டிரம்பட் இசைக்கலைஞராக உருவானார். அதன்பின்பு இசைக்கோர்வைகளைக் கற்றுக் கொண்டு தனியிசை தொகுப்புகளை உருவாக்குபவராகவும், வானொலி நாடகங்களுக்கு இசை அமைப்பவராகவும் மாறினார்
இந்த ஆவணப்படத்தில் எனியோ மோரிகோன் தனது இளமைக்கால நினைவுகளையும், முக்கிய இயக்குநர்களுடன் பணியாற்றிய அனுபவத்தையும் பகிர்ந்து கொண்டிருக்கிறார்.
முறையாக மேற்கத்திய இசை கற்றுவிட்டு சினிமாவிற்கு இசையமைக்க வந்தது தனக்குள் குற்றவுணர்ச்சியை ஏற்படுத்தியது என்றும் அதற்காகவே தனியிசை மற்றும் திரையிசை என இரண்டு தளங்களில் தொடர்ந்து இயங்கியதாகவும் குறிப்பிடுகிறார்.
திரையிசையின் தரத்தை உயர்த்தியதிலும், புகழ்பெறச் செய்ததிலும் இவருக்கு முக்கியப் பங்கிருக்கிறது. திரையில் அவரது பெயரைப் பார்த்த மாத்திரம் பார்வையாளர்கள் கைதட்டிக் கொண்டாடியது மதுரையில் நடந்திருக்கிறது. நானே நேரில் கண்டிருக்கிறேன்.
எனியோ மோரிகோனுடன் பணியாற்றிய முக்கிய இயக்குநர்கள் அவரது இசைமேதமை குறித்து வியந்து கூறுகிறார்கள். மிக வேகமாகவும் சிறப்பாகவும் இசையமைக்கக் கூடியவர், திரை இசையில் பல்வேறு பரிசோதனைகளைச் செய்திருக்கிறார் என்று விவரிக்கிறார்கள். திரைப்பட இசை என்பது “முழுமையான சமகால இசை” என எனியோ மோரிகோன் நிரூபித்திருக்கிறார்.
அவர் இசைக்குறிப்புகளை எழுதும் வேகத்தைத் திரையில் காட்டுகிறார்கள். வியப்பாக இருக்கிறது. ஒவ்வொரு பத்தாண்டிலும் இத்தோடு சினிமாவை விட்டு விலகி விடலாம் என நினைத்ததாகவும் ஆனால் ஒரு புதிய படம் அது தரும் வெற்றி, அடுத்த பத்தாண்டிற்குத் தன்னை வேலை செய்ய வைத்து விடுகிறது என வேடிக்கையாகக் கூறுகிறார்
மோரிகோன் தனது ஆரம்பகால இசையமைப்பில் ட்ரம்பெட் இசையை வேண்டுமென்றே தவிர்த்ததாகக் கூறுகிறார். இந்த ஆவணப்படத்தில் தனது நண்பனின் திருமண நிகழ்வில் கலந்து கொண்டு அவர் டிரம்பட் வாசிப்பது சிறப்பான தருணமாகும்.
தனது இசையாசிரியரான கோஃப்ரெடோ பெட்ராஸியை வியந்து கூறும் மோரிகோன் தனது The Good the Bad and the Ugly படத்தின் பின்னணி இசையை அவர் பாராட்டியதைப் பெருமையாகச் சொல்கிறார்.
செர்ஜியோ லியோனும் அவரும் பள்ளியில் ஒன்றாகப் பயின்றவர்கள். அந்த நட்பின் காரணமாக அவர் இயக்கிய வெஸ்டர்ன் படங்கள் அத்தனைக்கும் எனியோ மோரிகோன் இசையமைத்திருக்கிறார். இந்தக் கூட்டணி திரையிசையில் மகத்தான சாதனைகளைச் செய்திருக்கிறார்கள் . படப்பிடிப்பு தளத்திலே எனியோ மோரிகோனின் இசையை ஒலிக்கவிட்டு காட்சிகளைச் செர்ஜியோ லியோன் படமாக்கியிருக்கிறார். நடிகர்களும் கூட அந்த இசைக்கு ஏற்ப நடித்தார்கள் என்பது வியப்பானது.
இது போலவே The Mission படத்தின் இயக்குநர் ரோலண்ட் ஜோஃப் தனது படத்திற்காக அரிய இசைக்கருவிகளைக் கொண்டு எப்படி மகத்தான இசையை உருவாக்கினார் என்பதை விவரித்திருக்கிறார். இசையில்லாமல் அந்தக் காட்சிகளை ஒருமுறை பாருங்கள். பின்பு இசையோடு அதைக் காணுங்கள். அப்போது அந்த மேதையைப் புரிந்து கொள்வீர்கள் என்கிறார் ரோலண்ட்.

மோரிகோன் தனது முதல் இசைக்கோர்வையைத் தனது ஆறு வயதில் எழுதினார். ஆனால் அது பரிகசிக்கப்படும் என்பதால் தூக்கி எறிந்துவிட்டார். டிரம்பட் கற்றுக்கொண்டு நாடகம் மற்றும் இசைநிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு சொற்ப ஊதியம் பெற்று வந்தார். பின்பு வானொலி நாடகங்களுக்குப் பின்னணி இசையை உருவாக்கியதன் மூலம் பிரபலமாகத் துவங்கினார். அங்கிருந்தே திரையிசைக்கு அறிமுகமானார். இத்தாலிய ஒலிபரப்பு சேவையான RAIவுடன் அவர் ஒப்பந்தம் செய்து கொண்டிருந்தார். ஆகவே அவர்களுக்காகத் தொடர்ந்து இசைப்பதிவுகளை மேற்கொண்டு வந்தார்.
ஜான் ஹுஸ்டன் இயக்கிய பைபிள் படத்திற்கான ஒரு இசைக்கோர்வையை உருவாக்க அழைக்கப்பட்ட போது கடவுள் உலகைச் சிருஷ்டித்த பகுதிக்காக 15 நிமிட இசைக் கோர்வையை எழுதினார்
ஆனால் படத்தில் அவர் பணியாற்ற இத்தாலிய ஒலிபரப்பு சேவை அனுமதி அளிக்கவில்லை. இதன் காரணமாக அவர் ஜான் ஹுஸ்டன் படத்தில் பங்குபெற முடியவில்லை.
பின்பு இத்தாலிய ஒலிபரப்பு சேவையிலிருந்து விலகி ஹாலிவுட்டின் வெஸ்டர்ன் படங்களுக்கு இசையமைக்கத் துவங்கினார். நிறைய ஹாலிவுட் படங்களுக்கு இசை அமைத்திருந்த போதும் தனக்கு மிகக் குறைவாகவே ஆங்கிலம் தெரியும் என்கிறார் மோரிகோன் இது போலவே. ஹாலிவுட் திரைப்படங்களுக்குத் தொடர்ந்து இசை அமைத்த போதும் அவர் வாழ்நாள் முழுவதும் இத்தாலியில் வாழ்ந்தார்.
மோரிகோன் செஸ் விளையாடுவதில் மிகவும் விருப்பம் கொண்டவர். சொந்த வாழ்க்கையின் சிக்கல்கள். பிரச்சனைகளைத் தீர்த்துக் கொள்ளச் சதுரங்க விளையாட்டு மிகவும் உபயோகமாக இருக்கிறது என்கிறார். தனிப்பட்ட முறையில் செஸ்விளையாடுவது மட்டுமின்றிச் சதுரங்க போட்டிகளிலும் கலந்து கொண்டு வெற்றி பெற்றிருக்கிறார்.
அவர் நடத்திய இசை நிகழ்ச்சிகளை ஆவணப்படத்தில் காணுகிறோம். பெருந்திரளாக மக்கள் கூடி அவரைக் கொண்டாடுகிறார்கள்.

பெர்டோலூசி, பசோலினி, பிரையன் டி பால்மா , டெரன்ஸ் மாலிக், ஆலிவர் ஸ்டோன், க்ளின்ட் ஈஸ்ட்வுட், குவென்டின் டரான்டினோ ஆகியோருடன் பணியாற்றிய அனுபவங்களைப் பற்றிச் சுவாரஸ்யமாகப் பகிர்ந்துள்ளார். அது போலவே ஸ்டான்லி குப்ரிக் படத்தில் பணியாற்ற முடியாமல் போன வருத்தத்தையும் பதிவு செய்திருக்கிறார். ஹான்ஸ் ஜிம்மர், ஜான் வில்லியம்ஸ் மற்றும் புரூஸ் ஸ்பிரிங்ஸ்டீன் போன்ற இசைக்கலைஞர்கள் அவரது இசை எவ்வளவு தனித்துவமானது என்பதைப் பற்றிக் கூறுகிறார்கள். ஒரு குறிப்பிட்ட காட்சிக்கு எந்த இசை பொருத்தமானது என்பதில் மோரிகோன் எப்போதுமே ஒரு உள்ளுணர்வைக் கொண்டிருந்தார் என்கிறார் ஹான்ஸ் ஜிம்மர். செவ்வியல் இசையைத் திரைக்கு ஏற்ப உருமாற்றிக்கொடுப்பது எனியோ மோரிகோனின் சிறப்பாகும்.
இரண்டு மணி நேரத்திற்கும் அதிகமாக ஓடும் இந்த ஆவணப்படம் மேஸ்ட்ரோ எனியோ மோரிகோனிற்குச் செலுத்தப்பட்ட சிறந்த சமர்ப்பணமாகும்
May 19, 2022
இயல்விருது
இந்த ஆண்டிற்கான இயல் – வாழ்நாள் சாதனையாளர் விருது சிறந்த ஆய்வாளரும் பதிப்பாசிரியருமான ஆ.இரா.வேங்கடாசலபதிக்கு வழங்கப்படுகிறது. அவருக்கு எனது மனம் நிறைந்த வாழ்த்துகள்

அபுனைவு பிரிவில் தனது சுயசரிதைக்காக நீதிநாயகம் சந்துரு இயல்விருது பெற்றிருக்கிறார். அவருக்கு எனது அன்பான வாழ்த்துகள்.

புனைவிலக்கியத்திற்கான விருது பெற்றுள்ள ஜெயகரனுக்கும் ,கவிதைக்கான விருது பெற்றுள்ள ஆழியாளுக்கும் அன்பான வாழ்த்துகள்.
சதுரங்கக் காய்கள் போல
வைரவன் லெ.ரா.வின் பட்டர் பி சிறுகதைத் தொகுப்பினைப் படித்தேன்.

பதினைந்து சிறுகதைகள் கொண்ட முதற்தொகுப்பு. யாவரும் பதிப்பகம் வெளியிட்டுள்ளது.
சொந்த ஊர் திரும்புதலின் போது வெளிப்படும் நினைவுகளையும், கடந்தகால வாழ்வின் அரிய தருணங்களையும், மறக்கப்பட்ட மனிதர்களையும் சித்தரிக்கும் கதைகள்.
நாஞ்சில் வட்டார வாழ்க்கையைக் கிருஷ்ணன் நம்பி, நாஞ்சில் நாடன் துவங்கி சுசில்குமார் வரை பலரும் சிறப்பாக எழுதியிருக்கிறார்கள். இவர்களிலிருந்து மாறுபட்டு தனக்கென கதைமொழியும், கதைக்களன்களும் கொண்ட சிறுகதைகளை வைரவன் எழுதியிருக்கிறார். அதுவே இவரது வருகையைக் கொண்டாடச் செய்கிறது.

இந்தக் கதைகளின் சிறப்புக் கதை வழியாக வைரவன் லெ.ரா. காட்டும் நாஞ்சில் நாட்டுச் சித்திரங்கள். அதில் வெளிப்படும் நேற்றைய நினைவுகள். இன்றைய வீழ்ச்சிகள். காலமாற்றம் மனிதர்களின் இயல்பையும் மாற்றிவிடுவதைக் கதைகள் தோறும் காணமுடிகிறது
ஊரிலிருந்து நாம் துண்டிக்கப்பட்டிருந்தாலும் அந்த நினைவுகளிலிருந்து துண்டிக்கப்படவில்லை. இன்றைய தலைமுறையினர் ஏக்கமும் இயலாமையும் கனவுகளும் கொண்டவர்களாக இருக்கிறார்கள். அவர்களுக்கு ஊரும் உறவும் வேண்டியிருக்கிறது ஆனால் ஊரில் வசிக்க விருப்பமில்லை. உறவுகளைப் பேணுவதற்கு இயலவில்லை. இந்தத் தவிப்பை, சிக்கலை, ஊசலாட்டத்தைப் பேசுகின்றன வைரவனின் சிறுகதைகள்.
நாலைந்து கதைகளில் கைவிடப்பட்ட பெண்களைப் பற்றியும் குடியால் வீழ்ந்த மனிதர்களைப் பற்றியும் சித்திரத்தன்மையோடு எழுதியிருக்கிறார். வறுமையான நிலையிலும் தன்னைக் காண வீடு தேடி வந்தவரை சாப்பிட்டுத்தான் போக வேண்டும் என்று ஆச்சி உபசரிப்பதும், அந்தக் குரலில் வெளிப்படும் வாஞ்சையும் உயிரோட்டமாகக் கதையில் வெளிப்படுகிறது

வைரவன் கதைகளில் வரும் கதாபாத்திரங்கள் ஆல்பிரட் டூரரின் செதுக்கோவியங்களில் உள்ள உருவங்களைப் போல மிகவும் நுணுக்கமாக, தனித்துவத்துடன் உருவாக்கபட்டிருக்கிறார்கள். கதை தோறும் திருவிழாக் காட்சி போல விதவிதமான மனிதர்கள். ஒன்றிரண்டு வரிகளிலே அவர்களின் முழுத்தோற்றமும் கடந்தகாலமும் வெளிப்பட்டுவிடுகிறது.
கோம்பை கதையில் வரும் நாடாரும், சூரிய பிரகாஷ் என்ற கோம்பையும் கூன்கிழவியும் அசலான மனிதர்களாகக் கண்முன்னே நடமாடுகிறார்கள். எல்லா ஊரிலும் இது போன்று ஒன்றோ இரண்டோ கோம்பையைக் காண முடியும்..
பெட்டிக்கடை நாடாருக்கும் கோம்பைக்குமான உறவும் விலகலும் காலமாற்றமும் கதையில் நேர்த்தியாக வெளிப்படுகிறது. கதையின் முடிவில் காயம்பட்ட கோம்பைக்கு உதவி செய்ய நாடார் அவனது வீட்டிற்கே சென்று தூக்கி வந்து சிகிச்சை அளித்துத் தனது கடையிலே படுக்க வைத்துக் கொள்வது சிறப்பானது.
இந்த நிகழ்விற்குப் பின்பு கதை மீண்டும் துவங்கிய இடத்திற்கே வருகிறது. இப்போது முதல்வரி வேறுவிதமாகக் காட்சியளிக்கிறது. தேர்ந்த எழுத்தாளர்களால் எழுதமுடிகிற இக்கதையை அநாயசமாக வைரவன் எழுதியிருக்கிறார்..
நாஞ்சில் வட்டார பேச்சுமொழியை வைரவன் மிகச்சிறப்பாகக் கையாளுகிறார். கேலியும் கோபமும் அன்பும் துடிப்புடன் பேச்சில் வெளிப்படுகின்றன.
இந்தச் சிறுகதைகளில் தேவாலயமும் ஆராதனைகளும் கிறிஸ்துவக் குடும்பங்களின் இயல்பும் உயிரோட்டமாகச் சித்தரிக்கப்படுகின்றன. கதை வழியே நாம் ஊர்திருவிழாவை, கும்பாட்டமாடும் பெண்களை, ஓட்டுவீடுகளை வயல்வெளியின் ஈரக்காற்றை, தனித்த மண்சாலைகளை, கல்பெஞ்சு கிடக்கும் தேநீர்க் கடைகளைக் காணுகிறோம். அந்த உலகில் ஒருவராக ஒன்று கலந்துவிடுகிறோம்

நாஞ்சில் நாட்டிற்கும் கம்பனுக்கும் உள்ள நெருக்கம் வேறு எங்கும் காணமுடியாதது. எழுத்தாளர் நாஞ்சில் நாடன் கம்பராமாயணத்தில் தோய்ந்து போனவர். அவர் கம்பனைப் பற்றிப் பேசினால் கேட்டுக் கொண்டேயிருக்கலாம். அபாரமான புலமை கொண்டவர்.
ஒருமுறை அவரது சகோதரரை மும்பையில் சந்தித்தேன். எங்கள் பேச்சு துவங்கிய ஐந்தாவது நிமிஷம் கம்பராமாயணத்தைப் பற்றிச் சொல்ல ஆரம்பித்துவிட்டார். கவித்துவம் பீறிட்டது. அவர்கள் குடும்பமே கம்பனைக் கொண்டாடுகிறது. இவர்களைப் போலவே நாஞ்சில் வட்டார தமிழ் அறிஞர்கள். பேராசிரியர்கள். எழுத்தாளர்கள். கவிஞர்களுக்குக் கம்பனிடம் தீராத பற்றும் பெருமதிப்பும் இருப்பதை அறிந்திருக்கிறேன்.
ஏசுவடியான் கதையில் வைரவனும் கம்பனைக் கொண்டாடுகிறார். பறக்கை பள்ளிக்கூடத்தில் ஏசுவடியான் கம்பராமாயணம் நடத்துவதைக் காணும் போது நாமே அவரிடம் பாடம் கேட்க வேண்டும் என்ற ஆசை உருவாகிறது.
பள்ளி வயதில் கம்பராமாயணம் படிக்க ஆசிரியர் வீடு தேடிச் சென்ற ஜோசப் காலமாற்றத்தின் பின்பு தனது பிள்ளைகளையும் கம்பராமாயணம் படிக்க அனுப்ப விரும்புவதும், அந்த விருப்பத்தை ஏற்றுக் கொண்டு, அதுக்கென்ன அனுப்பு கம்பன பாடப் புண்ணியம் வேணும் என ஆசிரியர் சொல்வதும் சிறப்பு.
இந்தக் கதையில் பைபிளும் கம்பராமாயணம் ஒன்னு தான் என்றொரு வரி இடம் பெறுகிறது. இந்த இரண்டு உலகங்களும் இணைந்த கதைகளைத் தான் வைரவன் எழுதுகிறார். தேவாலயமும் குலசாமியும் ஒன்று சேரும் புள்ளியே அவரது புனைவுலகம்
ஒரு சிறுகதைக்குள் தலைமுறைகளின் வாழ்க்கையை, குடும்ப வீழ்ச்சியை வைரவன் கொண்டுவந்துவிடுகிறார். அதே நேரம் கதை தனது மையத்தை விட்டு விலகுவதுமில்லை. இது தான் தேர்ந்த படைப்பாளியின் தனித்திறன்..
இந்தத் தொகுப்பில் பகவதியம்மை என்ற கதை எனக்கு மிகவும் பிடித்திருந்தது. இந்தக் கதையில் ஒருவன் தனது சொந்த ஊருக்கு நீண்டகாலத்தின் பின்பு செல்கிறான். ஊரின் பெயரைச் சொல்லி பேருந்து எப்போது வரும் எனக்கேட்டால் எவருக்கும் தெரியவில்லை. தற்செயலாக ஊர்க்காரர் ஒருவர் அவனிடம் அறிமுகமாகி வழிகாட்டுகிறார். சந்தித்த சில நிமிஷங்களிலே அவனுடன் நட்பாகப் பழகுகிறார். பழப்பமும் காபியும் வாங்கித் தருகிறார்.
ஒன்றாக ஊருக்குப் பயணம் செய்கிறார்கள். அங்கே பகவதியம்மை என்றால் யாருக்கும் தெரியவில்லை. கூனிக்கிழவி என்று அவளை அழைக்கிறார்கள். அவளது வீட்டினைத் தேடிப் போகும் போது கொஞ்சம் கொஞ்சமாக அவன் தனது உறவு என்பதை உடன்எவந்தவர் கண்டுகொள்கிறார். அவர்கள் பகவதியம்மையைக் காணச் செல்கிறார்கள்.
பகவதியம்மையின் வழியே தாத்தாவின் கடந்தகாலமும் ஆகிருதியும், செயல்களும் நினைவு கொள்ளப்படுகின்றன. ஆச்சியின் வாஞ்சை மனதைத் தொடுகிறது.
கிழவியைச் சந்தித்தவுடனே கதை முடிந்துவிட்டதோ எனும் தருணத்தில் இல்லை என அடுத்த நகர்விற்குச் சென்று செவ்வியல் கதைகளைப் போலக் கச்சிதமான உணர்ச்சி வெளிப்பாட்டுடன் கதையை முடிக்கிறார்.

தலைப்புக் கதையான பட்டர் பியும் இது போல ஊர் திரும்பியவனின் கதையே. ஆனால் இதில் ஆச்சியும் பேரனும் வண்ணத்துப்பூச்சிகளை வேடிக்கை பார்ப்பதும் பேரன் சொல்லத் தெரியாமல் பட்டர்பிளையைப் பட்டர்பி என்பதும் ஆச்சி அதை ரசித்து விஜியிடம் அது பட்டர்பிளை என்பதும் அழகாக வெளிப்படுகிறது.
இந்தக் கதையில் விஜி இயல்பாக வீட்டின் சமையலறையை நோக்கி செல்வதும் அவன் தயங்கித் தயங்கி சுவரில் மாட்டப்பட்ட பழைய புகைப்படங்களை வேடிக்கை பார்ப்பதும் நுட்பமான அவதானிப்பு
ஒரு கதையில் சாத்தூரை அடுத்த இருக்கன்குடி கோவிலும் ஆற்றுப்பாதையும் பனைவிடலியும் வருகிறது. கதையில் வருவது போன்ற அனுபவம் அப்படியே எனக்கும் நடந்திருக்கிறது. ஆகவே படிக்கையில் பால்ய நாட்களுக்குத் திரும்பிப் போனதாகவே உணர்ந்தேன்.
.வைரவனின் கதைகளை வாசிக்கும் போது சில உறவுகளின் அருமையை, நெருக்கத்தை நாம் உணராமல் போய்விட்டோமே என்ற குற்றவுணர்வு ஏற்படுகிறது. சதுரங்கக் காய்கள் போல எவராலோ நாம் கையாளப்படுகிறோம், வெட்டுப்படுகிறோம் என்ற உணர்வு உருவாகிறது.
ஊரும் வாழ்க்கையும் எவ்வளவு மாறியிருந்தாலும் அசலான மனிதர்கள் உண்மையான அன்புடன் இருக்கிறார்கள். அக்கறையுடன் நடந்து கொள்கிறார்கள் என்பது மிகுந்த நம்பிக்கை அளிக்கிறது
தொகுப்பின் அட்டைப்படம் பொருத்தமாகயில்லை. இது போலவே தொகுப்பிற்கு இன்னும் சிறப்பான தலைப்பு வைக்கப்பட்டிருக்கலாம்.
தனது முதல் சிறுகதைத் தொகுப்பிலே தனிக்கவனம் பெற்ற படைப்பாளியாகியுள்ள லெ.ரா. வைரவனுக்கு எனது மனம் நிறைந்த பாராட்டுகள்.
இந்தச் சிறுகதைகளைப் படிக்கும் போது இவரால் எளிதாக நாவல் எழுத முடியும் என்று தோன்றுகிறது. எழுதுவார் என்றே நினைக்கிறேன்.
••
May 17, 2022
பரவாயில்லையின் சங்கீதம்
கவிதைக்குள் நம்மை அழைத்துச் செல்ல எப்போதும் ஒரு மௌன ரயில் காத்திருக்கிறது. அது ஒருவர் மட்டுமே செல்லக்கூடியது. மலையின் உச்சியை நோக்கி குகைப் பாதையினுள் செல்லும் பயணமது
வழக்கமான ரயில் பயணத்தில் நமக்கும் புறக்காட்சிக்குமான இடைவெளி குறைவதும் விரிவதுமாக இருக்கும். கவிதையினுள் செல்லும் ரயில் மரங்களை நெருங்கியில்லை மரங்களுக்குள்ளாகவே நம்மை அழைத்துச் சென்றுவிடுகிறது. மரத்தினுள் தண்ணீர் நுழைந்து செல்வது போல ரகசியமாக, மகிழ்ச்சியாக நீங்களும் ஒன்று கலந்துவிடுகிறீர்கள். சில வேளைகளில் இந்த ரயில் பின்னோக்கியும் செல்லக்கூடியது. அப்போது கவிதையின் அகம் புறமாகவும், புறம் அகமாகவும் மாறிவிடுகிறது.
கவிதையின் முதல்வரி என்பது கவிதைக்குள் செல்வதற்கான கதவில்லை. மாறாகக் கவிதையின் எல்லா வரிகளும் எப்போதும் திறந்திருக்கின்றன. பாலைவனத்தின் மணல்வெளியைப் போல. சில நேரம் முதல் வரி வழியாக நாம் ஐந்தாவது வரிக்குச் சென்றுவிடுகிறோம். சில நேரம் கடைசிவரி கவிதையின் முதல்வரிக்கு முந்தியதாகிவிடுகிறது. புதிர்வட்டப்பாதையில் கிளைவிடும் வழிகள் யாவும் ஒன்றோடு ஒன்று இணைந்து எளிதில் வெளியேற விடாமல் செய்வது போன்றதே கவிதை. அந்த வகையில் கவிதை என்பது ஒரு சுழற்புதிர்வட்டம். அதனுள் நுழைவது எளிது. வெளியேறுவது கடினம்

உலகம் மனிதர்களின் குரலுக்கே எப்போதும் முக்கியத்துவம் தருகிறது. ஆயிரமாயிரம் சிறிய பெரிய குரல்கள் இயற்கையிலிருந்தாலும் மனிதனின் குரலே அவற்றை விட முதன்மையாகக் கருதப்படுகிறது. ஆனால் கவிதை மனிதனின் குரலை மட்டும் ஒலிப்பதில்லை. அது உதிரும் இலையின் குரலில் பேசுகிறது. காற்றின் பாடலை முணுமுணுக்கிறது. மௌனமானது என உலகம் நினைக்கும் பொருட்களின் குரலை. துயரை அடையாளம் காட்டுகிறது.
சில்வண்டுகள் துவங்கி குண்டூசி வரை அனைத்தும் கவிதையில் பேசுகின்றன. சந்தோஷத்தையும் துக்கத்தையும் பகிர்ந்து கொள்கின்றன. சிறுபொருட்களின், சிற்றுயிர்களின் குரலை தொடர்ந்து பதிவு செய்து வருபவர் கவிஞர் தேவதச்சன். அவரது சமீபத்திய கவிதைகள் உயிர்மையில் வெளியாகி இருக்கின்றன.
இந்தக் கவிதைகள் சில தனித்துவமான தருணங்களை, மகிழ்ச்சியைக் குரல்களை, அடையாளம் காட்டுகின்றன. இதில் தண்ணீரைப் பற்றி மூன்று கவிதைகள் வழியே தேவதச்சன் மகத்தான கவித்துவ அனுபவத்தை உருவாக்கியிருக்கிறார்

ஞானக்கூத்தன் பாலம் பற்றி ஒரு கவிதை எழுதியிருக்கிறார்
முன்னாளெல்லாம் பாலம்
தியானித்திருக்கும் நீருக்கு மேலே
இந்நாளெல்லாம் பாலம்…
நிலத்திலும் உண்டு அதன் முதுகெலும்பு.
ஆதியில் இந்தப் பாலம்
தென்னையாய்ப் பனையாய்க் கிடந்ததென்றாலும்
போகப் போகப் போக
மூங்கிற் சிம்பும் ஆணியும் விரும்பி
ஒருவாறாகிப் பிறந்தது பூமியில்
என நீள்கிறது இக்கவிதை
தண்ணீரைக் கடந்து செல்லவே ஆரம்பக் காலங்களில் பாலங்கள் உருவாக்கப்பட்டன. ஆனால் நம் காலத்தில் நிலத்தில் எழுகின்றன பாலங்கள். ஒரே சொல் தான் ஆனால் அது நேற்றும் இன்றும் உணர்த்தும் பொருள் வேறு.
ஞானக்கூத்தன் கவிதையில் பாலம் பேசுகிறது. ஒருகாலத்தில் தென்னையும் பனையும் ஆற்றைக் கடக்கும் பாலமாகப் பயன்பட்டன என்பதை நினைவுபடுத்தும் கவி பாலத்தின் இன்றைய உருமாற்றத்தைச் சுட்டிக்காட்டுகிறார்
கவிதையின் முடிவு இப்படி அமைகிறது.
புறப்படும் பொழுது
என்னைப் பார்த்துப் பாலம்
சிரிப்பில்லாமல் சொல்லிற்று
ஜாக்கிரதையாகப் போய் வா
எங்கும் ஆட்கள் நெரிசல்
உன்னைத் தள்ளி உன்மேல்
நடக்கப் போறார் பார்த்துக் கொள்.
இந்த வரியின் மூலம் பாலம் என்பது ஒரு நிலை. நெருக்கடியான உலகில் நாமே பாலமாகவும் கூடும் எச்சரிக்கை ஏற்படுகிறது. இந்த உபதேசத்தை ஏன் பாலம் சிரிக்காமல் சொல்கிறது, காரணம் அது நடந்துவிடக்கூடிய செயல் என்பதால் தான்.
நம்மைப் பாலமாக்கி யாரோ கடந்து போகிறார்கள் என்று சில வேளைகளில் நாம் உணர்ந்திருக்கிறோம் என்பதே நிஜம்
எந்தப் பாலமும் நிரந்தரமானதில்லை. காலந்தோறும் புதிய பாலங்கள் உருவாகிக் கொண்டேயிருக்கின்றன, கடந்து செல்ல மனிதர்கள் எதையும் பாலமாக்கிவிடுவார்கள்.
பெருநகர வாழ்க்கையில் அன்றாடம் சில பாலங்களைக் கடந்து செல்கிறோம். சாலையில் அடையாத ஏதோவொரு உணர்வை, மிதப்பை பாலத்தைக் கடக்கும் போது அடைகிறோம். விண்ணிலிருந்து பாலத்தைக் காணும் ஒருவன் அதை விரிந்திருக்கும் காங்கிரீட் மலர் போலவே கருதுகிறான்.

தண்ணீருக்கும் பாலத்திற்குமான உறவு மிக நீண்டது. பாலம் மனிதர்கள் உருவாக்கிய இரும்பு வானவில். தண்ணீர் பாலத்தைக் கண்டு பயம் கொள்வதில்லை. பாலமும் தண்ணீரைக் காதலிப்பதில்லை.அடியில் ஓடும் தண்ணீரைப் பார்த்துப் பாலம் தியானித்திருக்கிறது என்கிறார் ஞானக்கூத்தன். இரவில் பாலத்தைக் காணும் போது இப்படி உணர்ந்திருக்கிறேன்
சிறிய பாலங்கள் தருக்கத்தைப் பெரிய பாலங்கள் தருவதில்லை. அது போலவே ஆற்றுப்பாலத்தின் அழகு தரைப்பாலத்திற்கில்லை. பாலத்தின் அடியில் நீரோடும் வழியைப் பாலத்தின் கண் என்பார்கள். பாலம் கண்கள் கொண்டது என்ற நினைவு இந்தக் கவிதையை வாசிக்கையில் எழுகிறது
குடையால் மழையைத் தடுக்க முடியாது. ஆனால் மழையிடமிருந்து தப்பிக்க முடியும். அது போன்றது தான் பாலமும். படகில்லாமல் ஆற்றைக் கடக்க நினைத்தவன் தான் பாலத்தை உருவாக்கியிருக்கிறான். மன்னர் ஆட்சியில் சில பாலங்களைக் காவலர்கள் இரவுபகலாக பாதுகாத்தார்கள். அது தான் தேசத்தின் நுழைவாயில். சில பாலங்கள் தேசத்தின் பெருமையாக கருதப்படுகின்றன.
இது போலவே பல ஊர்களில் பாலம் தற்கொலை செய்யும் இடமாகயிருக்கிறது. சில தொங்குபாலங்கள் இரண்டு மலைகளை இணைக்கின்றன. பாலத்தின் நடுவில் தனியே நிற்கும் மனிதன் முடிவு எடுக்க முடியாதவனின் அடையாளமாகிறான். இப்படி பாலத்தைப் பற்றி நிஜமாகவும் புனைவாகவும் நிறையவே எழுதப்பட்டிருக்கின்றன.

தேவதச்சனின் என் பாலங்கள் என்ற கவிதை தண்ணீருக்கும் பாலத்திற்குமான உறவை பேசுகிறது.
உடைந்த பாலத்தைப் போலத்
துக்கம் தருவது வேறில்லை
நீர்த்துளியின்
யுத்தத்தில்
தோற்றுப்போய்த் தலை
கவிழ்ந்திருக்கிறது
தண்ணீர் அதன்மேல் ஏறி
ஓடும் போது அவ்வளவு
அவமானமாக இருக்கிறது
தான் எங்கே தப்பு பண்ணினோம் என்று அதற்குத்
தெரியவில்லை
சில வாடிய செடிகள் மட்டும்
பேச்சுத் துணைக்குக் கூட நிற்கின்றன
•
உடைந்த பாலம் என்பது அழகான உருவகம். கவிதையில் பாலம் பேசுவதில்லை. மாறாகக் கவிஞன் அதன் துயரைப் பேசுகிறான். உடைந்த பாலம் என்பது எதிர்பாராத நிகழ்வின் அடையாளம். உறுதியானவற்றை மென்மையானது வென்றுவிடும் என்பதன் சாட்சியம்.

தண்ணீரை வென்றுவிட்டதாக நினைத்துக் கொண்டிருக்கும் பாலத்தைச் சட்டென ஒரு நாளில் மழை வென்றுவிடுகிறது. வென்றதன் அடையாளமாக விரிசலையும் ஏற்படுத்திவிடுகிறது. அதை நீர்த்துளிகளின் யுத்தம் என்கிறார் தேவதச்சன். சீறும் மழையின் வேகத்தைக் காணும் போது யுத்தமென்றே தோன்றுகிறது.
நீர்த்துளிகளின் யுத்தம் காலம் காலமாக நடந்து கொண்டேயிருக்கிறது. பலநேரங்களில் மனிதர்கள் ஜெயித்திருக்கிறார்கள். சில நேரங்களில் நீர்த்துளிகள் ஆங்காரமாகப் போரிட்டு மனித வெற்றியை அடையாளமில்லாமல் செய்கின்றன. மழைத்துளிகளின் யுத்தம் ரகசியமானது. நம்மால் தடுத்து நிறுத்த முடியாதது
இந்தக் கவிதையில் தான் எங்கே தப்பு பண்ணிணோம் எனப் பாலத்திற்குத் தெரியவில்லை என்ற வரி அழகானது.
இதை வாசிக்கையில் எதிர்பாராமையைச் சந்தித்துக் கடக்கும் போது நம் மீது குற்றவுணர்வு கொள்ளத் தேவையில்லையோ என்று தோன்றுகிறது.
நடந்த செயலில் பாலத்தின் மீது ஒரு தவறுமில்லை. நீர்த்துளிகள் மனிதனுக்குத் தனது வலிமையை அடையாளம் காட்டுகின்றன.
தண்ணீரால் வெல்லப்பட்டதும் பாலம் ஒரு விளையாட்டுப் பொருள் போலாகிவிடுகிறது. அதை ஊர் மக்கள் வேடிக்கை பார்க்கிறார்கள். புகார் சொல்கிறார்கள். இனி பயனில்லை என்று கைவிடுகிறார்கள்.
எந்தப் பாலமும் பூமியில் முளைவிடும் ஒரு சிறுசெடியை போலத் தானே வளர்வதில்லை. அது உருவாக்கப்படுகிறது.
பாலத்தின் மேலேறி தண்ணீர் ஓடும் போது பாலம் அவமானப்படுகிறது. என்ற இடத்தில் கவிதை ஒளிரத்துவங்குகிறது
இதுபோன்ற காட்சியை எத்தனையோ முறை திரையில் பார்த்திருக்கிறோம். சில வேளை நேரில் கண்டிருக்கிறோம். மழைவெள்ளம் பாலத்தைக் கடந்து போகையில் பாலம் அவமானப்படும் என ஒரு போதும் யோசித்ததில்லை. கவிதையில் பாலம் சுய உணர்வு கொண்டதாகிறது. தன்னால் இனி தடுக்கமுடியாது என்ற நிலையில் அது தண்ணீர் கடந்து போக அனுமதிக்கிறது. நெருக்கடிகள் உயரும் போது மனிதன் இந்தப் பாலமாக மாறிவிடுகிறான்.
தன்னிடத்தை விட்டு அகலமுடியாதவனுக்கும் சதா ஓடிக்கொண்டேயிருப்பவனுக்கும் இடையில் போர் நடந்தால் யார் ஜெயிப்பார்கள். அது தான் இங்கே நடக்கிறது.
மிகுமழையின் போது தான் பாலம் தான் ஒரு தற்காலிகம் என்பதை உணருகிறது. தான் ஒரு பழைய ஆள் என்பதைக் கண்டுகொள்கிறது. உறுதியான கால்கள் கொண்டிருந்தாலும் அகல விரிந்த கைகள் கொண்டிருந்தாலும் கால்கள் இல்லாமல் ஓடும் தண்ணீரைத் தடுக்க முடியாது என்ற உண்மையை உணருகிறது.

முடிவில் உடைந்த பாலத்திற்கு ஆறுதலாகச் சில வாடிய செடிகள் மட்டும் துணை நிற்கின்றன. அவ்வளவு தான் மிச்சம்.
நாம் அனைவரும் ஏதோ ஒரு புள்ளியில் உடைந்த பாலமாகிறோம். நமது பயன்பாட்டினை மறந்து உலகம் நம்மைக் கைவிடுகிறது. எத்தனை நூறு ஆண்டுகள் கொண்டதாக இருந்தாலும் நீரைத் தடுக்க இயலாத கணத்தில் அதன் வீழ்ச்சி துவங்கிவிடுகிறது.
இன்னும் உயரமாக இன்னும் அகலமாகப் புதிய பாலத்தை உலகம் உருவாக்கும். புதிய பாலம் எப்போதும் பழைய பாலத்தைக் கேலி செய்தபடியே இருக்கும். பழைய பாலத்தின் மௌனம் என்பது காலத்தின் அமைதி.
என் கண்முன்னே பொருளியல் வெற்றிகளால் அடையாளப்படுத்த சில மனிதர்கள் இது போலவே காலத்தின் பெருவேகத்தில் உடைந்த பாலமானது நினைவிற்கு வருகிறது.
உடைந்த பாலம் தன்னுடைய தரப்பு நியாயத்தைச் சொல்லி என்ன ஆகப்போகிறது. ஆனால் நம்மை மீறி நடக்கிற செயல்களின் போது நாம் அடையும் துயரைப் பகிர்ந்து கொள்ளக் குறைந்த பட்சம் வாடிய செடி போலவாவது பேச்சுத்துணை வேண்டுமில்லையா.
சிறுசெடிகளால் தலைகவிழ்ந்து நிற்கும் பாலத்தின் துயரைக் கேட்டுக் கொள்ள முடியும். நிவர்த்திச் செய்ய இயலாது. பெருமழையின் போது மரங்கள் முறிந்துவிடுகின்றன. சிறுசெடிகள் வழிவிட்டு ஒதுங்கிநிற்கின்றன. மழையின் வேகம் அதனை வாடச்செய்கிறது அவ்வளவே.
வணிக உலகின் தந்திரங்கள். சூழ்ச்சிகள் அறியாமல் தோற்றுப் போன சிறுவணிகனைப் போலிருக்கிறது இந்தப் பாலம். சாலையைப் போல இருபுறமும் மரங்களின் துணையில்லாமல் போனது தான் பாலத்தின் தோல்வியா. புகைப்படங்களில் பழைய பாலங்களைக் காணும் போது பிரியத்துக்குரிய மனிதரைக் காணுவது போலப் பரவசம் ஏற்படுவது எனக்கு மட்டும் தானா,
மழையின் வெற்றி சில நாட்களுக்கு மட்டுமேயானது என்றாலும் பாலத்தின் தோல்வி ஏற்றுக் கொள்ளக்கூடியதில்லை. அடையாம் தான் இந்த நாடகமா.
பாலம் என்பது ஒரு அடையாளம். ஒருவகை இருப்பு நிலை என்பதன் மூலம் ஞானக்கூத்தனின் கவிதையும் தேவதச்சனின் கவிதையும் ஒரு புள்ளியில் இணைந்துவிடுகின்றன.
ஒரே பாடல் ஆண் பெண் என இருகுரலில் ஒலிப்பது போல இந்தப் பாலம் பற்றிய கவிதை ஆண் பெண் என இருகுரலாக ஒலிப்பதும் இருவேறு பொருள் கொள்வதும் விசித்திரமாகயிருக்கிறது.
•••

தேவதச்சனின் பரவாயில்லை என்ற கவிதையில் இதே தண்ணீர் வேறு விதமாக வெளிப்படுகிறது.
நம்மைச் சுற்றிய எல்லா நிகழ்வுகளையும் பொருட்களையும் இசைக்கருவி போலாக்கி மீட்டத்துவங்குகிறார் தேவதச்சன். இந்தக் கவிதையும் அது போன்றதே

••
ஹோட்டலுக்குள் ஆர்வமாய்
நுழைகிறாள்
பிடித்த உணவு இரண்டும்
விலை உயர்ந்த குளிர்பானம்
ஒன்றையும் ஆர்டர் செய்தாள்
பெரிய ஆஸ்பத்திரியில்
சிறப்புச் சிகிட்சை மருத்துவர்
சொல்லிவிட்டார்
இருதயத்தில் கோளாறு ஏதும்
இல்லை
அவளுக்கோ
ஒரு வாரமாய் அதே கவலை
நடைப்பயிற்சி மட்டும் போதும்
என்றும் சொல்லிவிட்டார்
மேஜையில் டம்ளரை வைத்த
பையன் தண்ணீரை
அவள் மேல் தெறித்துவிட்டான்
நிறையச் சிந்தியும் விட்டான்
குளிரும்
புன்னகையோடு
அவன் முகத்தைப் பார்த்தபடியே சொன்னாள்
பரவாயில்லை பரவாயில்லை
மேஜையெங்கும் பரவியது
பரவாயில்லையின் சங்கீதம்
மேஜைகளெங்கும்
••
கவிதையில் வரும் பெண் உணவகத்தினுள் நுழைந்து தனது விருப்பமான உணவினை ஆர்டர் செய்கிறாள். காத்திருக்கிறாள். தன்னைத் தானே மகிழ்ச்சிப்படுத்திக் கொள்ள முயலும் அவளின் இந்தச் செயலுக்கான காரணம் மருத்துவர் அவளது இருதயத்தில் கோளாறு ஏதுமில்லை. நடைப்பயிற்சி போதும் என்று சொல்லிவிட்டார் என்பதே
தன் உடல்குறித்த பயத்திலிருந்து விடுபட்ட அவள் இந்த மகிழ்ச்சியை வெளிப்படுத்திக் கொள்ள உணவகத்தினுள் நுழைகிறாள். நாமாக அது மாலைவேளையாகக் கருதிக் கொள்கிறோம். கவிதையில் அந்த உணவகம் எங்கேயிருக்கிறது என்ற அடையாளமில்லை. நாமாக அது மருத்துவமனையின் அருகிலிருக்கிறது என நினைத்துக் கொள்கிறோம். வழக்கமாக அவள் செல்லும் உணவகம் அதுவல்ல என்பதையும், அவளுடன் துணைக்கு யாரும் வரவில்லை என்பதையும் நாமாக உணர்ந்து கொள்கிறோம்.
அவளைப் போல வேறு தனியாக உள்ள பெண் யாராவது கண்ணில் படுகிறார்களா என அவள் தேடவில்லை. அவள் நடுத்தரவயது. நடுத்தரக் குடும்பத்தைச் சேர்ந்தவள், தனியார் மருத்துவமனைகளுக்கு போக பணமில்லாதவள் என்பதைக் கவிதை வரிகளிலிருந்து கண்டு கொள்கிறோம். அவளது பெயரோ, மதமோ, வீடு உள்ள தெருவோ, குடும்பமோ, ஊரோ எதுவும் காட்டப்படவில்லை. காட்ட தேவையுமில்லை. அது தான் கவிதையின் விசேசம்.
அவளது மேஜையில் டம்ளரை வைத்த பையன் தண்ணீரை அவள் மேல் தெறித்துவிட்டான். நிறையச் சிந்தியும் விட்டான். இந்தச் சிறுபிழை அவளுக்குக் கோபத்தை ஏற்படுத்தவில்லை. பரவாயில்லை என்று அவனிடம் குளிர்ந்த புன்னகையுடன் சொல்கிறாள்.
அது பையனின் கவனமின்மையாலோ, தற்செயலாகவோ செய்த தவறு. அதைப் புரிந்து கொண்டவளாகப் பரவாயில்லை என இருமுறை சொல்கிறாள்
இரண்டு முறை சொல்வதன் மூலம் அவள் முழுமனதோடு சொல்வது உணர்த்தப்படுகிறது.
இந்தப் பரவாயில்லை என்ற சொல் சட்டென ஒரு சங்கீதமாக மாறுகிறது. இந்தச் சொற்கள் நிச்சயமாக அந்தப் பையன் காதில் சங்கீதமாகவே ஒலித்திருக்கும். அவள் சிறுசொல்லின் மூலம் பரவாயில்லையின் சங்கீதத்தை வெளிப்படுத்துகிறாள். அது முதலில் அவள் மேஜையில் துவங்குகிறது. பின்பு மேஜைகளெங்கும் விரிவடைகிறது. ஒரு நிமிஷத்தில் அந்தக் உணவகமெங்கும் மகிழ்ச்சி பரவுகிறது.
எளிய தினசரி நிகழ்வு ஒன்றின் வழியே கவிஞர் புதியதொரு சங்கீதத்தை அறிமுகம் செய்கிறார்.
பயத்திலிருந்து நாம் விடுபடும் போது நம்மைச் சுற்றிய உலகம் இனிமையாக மாறிவிடுகிறது. ஒருவேளை இதே பெண் மருத்துமவனைக்குப் போவதற்கு முன்பு இப்படி சர்வர் தண்ணீரைச் சிந்தியிருந்தால் கோபம் கொண்டிருப்பாள். அல்லது தனக்கு மோசமான விஷயம் நடக்கப்போவதன் அடையாளமாக நினைத்திருப்பாள். ஆனால் இப்போது அவள் பயத்திலிருந்து விடுபட்டவள்.
கவலையிலிருந்து , துக்கத்திலிருந்து, அசாதாரண நெருக்கடிகளிலிருந்து நாம் விடுபடும் போது உணவின் மீது கவனம் கூடிவிடுகிறது. அப்போது உணவின் ருசி புதியதாகிறது. எளிய இனிப்புப் பண்டங்கள் கூட அதிகத் தித்திப்புக் கொண்டதாகிவிடுகின்றன. சுவையான, பிடித்த உணவைத் தேடுகிறோம். அதன் மூலம் நமக்குள் உருவான வெறுமையைப் பூர்த்தி செய்து கொள்ள முயலுகிறோம்.
எப்போதெல்லாம் இப்படி விடுபட்ட தருணத்திற்கு பின்பு விரும்பி சாப்பிட்டிருக்கிறோம் என நினைத்துப் பார்த்தால் பட்டியல் விரிவடைகிறது. அவை எளிய நிகழ்வுகளில்லை.

இந்தப் பெண் தனது மகிழ்ச்சியை வீட்டிற்குச் சென்று பகிர்ந்து கொள்ளவில்லை. உடனடியாக தன்னை மகிழ்வித்துக் கொள்ள முயலுகிறாள். ஒருவேளை வீட்டில் இந்தச் செய்தியை யாரும் பெரிதாகக் கண்டுகொள்ளமாட்டார்கள். பொருட்படுத்த மாட்டார்கள் என நினைக்கிறாள் தானோ.
கையில் ஸ்கேன் ரிப்போர்ட், லேப் டெஸ்ட்டுகளுடன் மருத்துவமனையில் காத்திருக்கும் போது மெல்லிய காகிதங்கள் கூட எடைகூடி விடுகின்றன. கடிகாரம் மிக மெதுவாக இயங்க ஆரம்பிக்கிறது. மருத்துவமனை இறுக்கம் என்றே ஒன்றுள்ளது. அது நம் நாவை ஒடுக்கிவிடுகிறது. மருத்துவமனையில் நம் தோள்களில் கவலைகள் ஏறி அமர்ந்து நம்மை அழுத்துகின்றன. நாம் கைவிடப்பட்டதாக உணருகிறோம். கவலைப்பட ஒன்றுமில்லை என்ற மருத்துவரின் சொல் தான் நம்மை மீட்கிறது. மருத்துவமனையிலிருந்து வெளியே வரும் போது மழைக்குப் பின்பாக வரும் சூரியனின் மஞ்சள் வெளிச்சம் போல நாம் உணருகிறோம்.
நிஜத்தில் நம்மை மகிழ்ச்சிப் படுத்திக் கொள்ள நமக்குத் தெரியவில்லை. வரையறை செய்யப்பட்ட மகிழ்ச்சியின் பட்டியலிலிருந்து எதையோ தேர்வு செய்து நாமும் அனுபவித்துக் கொள்கிறோம். உண்மையில் இந்தப் பெண் மருத்துவமனையில் நடனமாடியிருக்கலாம். வீதியில் குதித்தோடியிருக்கலாம். அல்லது விருப்பமான பாடலை பாடியபடியே வெளியே வந்திருக்கலாம். அவையெல்லாம் திரை உருவாக்கிய காட்சிகள். இந்தக் கவிதையில் அவள் இருட்டில் மெழுகுவர்த்தியைக் கையில் எடுத்துக் கொண்டு படியேறிய செல்லும் பெண்ணைப் போலவே நடந்து கொள்கிறாள்.
இந்தப் பெண் சொல்வது போல நாமும் சில தருணங்களில் கோபத்தை கடந்து பரவாயில்லை என சொல்லியிருப்போம். பரவாயில்லையின் சங்கீதம் நம்மிடமிருந்தும் ஒலித்திருக்கும். ஆனால் அதைப்பற்றி கவனம் கொண்டிருக்கமாட்டோம். கவிதையில் பரவாயில்லை என்ற சொல் அழகான வண்ணத்துப்பூச்சி போலப் பறக்கதுவங்குகிறது.
அவளுக்கும் உணவகப் பையனுக்கும் நடுவில் தண்ணீர் தான் விளையாடுகிறது. முந்தைய கவிதையில் பாலத்தை வென்ற அதே தண்ணீர் உணவக மேஜையில் எளிய சிதறலை மேற்கொள்கிறது.
ஈரம் பட்டவுடன் நாம் ஏன் கோபம் கொள்கிறோம். நாம் விரும்பும் நேரத்தில் மட்டுமே தண்ணீருடன் நெருக்கமாக இருக்க விரும்புகிறோம். வேறு தருணங்களில் வேறு இடங்களில் தண்ணீர் நம்மை நனைக்கவோ, நம் உடைகளை ஈரப்படுத்தவோ கூடாது. உணவகப்பையனைப் போலவே தண்ணீரும் அடங்கி நடக்க வேண்டும்.
மழையிடம் கொள்ளும் பரவசத்தை டம்ளர் தண்ணீரிடம் நாம் கொள்வதில்லை. ஆனால் இரண்டும் ஒரே தண்ணீர் தான்.
கைதவறிய டம்ளர் தண்ணீரை அவள் சிறுமழையாக நினைத்துக் கொள்கிறாள். அவளது பரவாயில்லை இதுவும் மழை தான் என்பதன் அடையாளம். இந்த நிகழ்வில் அந்தப் பையன் அவசரமாக மேஜையைத் துடைப்பதைத் தவிர வேறு எதையும் செய்திருக்கமாட்டான். அவன் கோபத்திற்குப் பழகியவன். சிலசெயலால் தனது வேலை பறிபோய்விடும் என அறிந்தவன். பசி எப்போதும் கோபத்தைத் துணைக்கு அழைத்து வரக்கூடியது என்பதை உணர்ந்தவன். பரவாயில்லை என்ற சொல் மூலம் குளிர்ச்சி அவன் மீதும் படிகிறது. அவன் அவளுக்கு எடுத்து வரும் உணவைக் கூடுதல் அக்கறையுடன் கொண்டுவரக்கூடும். அவளுக்காகக் கொஞ்சம் கெட்டி சட்னியும் வைத்துக் கொண்டு வைத்திருப்பான். அவ்வளவு தான் அவனால் முடியும்.
••
நீரைப் பற்றிய மூன்றாவது கவிதை முந்தைய கவிதைகளிலிருந்து முற்றிலும் மாறுபட்டது. ஆழமானது.
தாகங்கள் என்ற கவிதை இப்படித் துவங்குகிறது
உன் வீட்டிற்குத் தாகம் என்று
வருபவர்
தம்ளரில் நீ தரும்
தண்ணீருக்காவா வருகிறார்
அவருக்குள் வற்றவிட்
தண்ணீரைத் தேடி
வருகிறார்
யார் யார்அதை
வற்ற செய்தார்கள்
எப்போ எப்போவெல்லாம் அது
வற்றிப் போனது
நீ தரும் ஒரு மடக்குத் தண்ணீர்
ஒரு பாலம்
அப் பாலத்தில் ஏறி
அவர் அலைச்சலைத் தொடர்கிறார்
தனது நிழல்களை
உன்னிடம் விட்டுவிட்டு உடலும் அவரைத் தொடர்கிறது
இந்தக் கவிதையில் தனக்குள் வற்றிவிட்ட தண்ணீரைத் தேடி அலைகிறோம் என்ற குரலைக் கேட்கிறோம். நமக்குள் இருந்த தண்ணீர் எப்படி மறைந்து போனது. எதனால். அல்லது யாரால் அது வற்றிப் போனது என்ற கேள்வி ஆழமானது.
நீ தரும் ஒரு மடக்குத் தண்ணீர் ஒரு பாலம்
என்ற வரியில் சட்டென உலகில் இல்லாத ஒரு பாலம் உருவாகிறது. அந்தப் பாலத்தில் ஏறி அவர் அலைச்சலைத் தொடர்கிறார். அவர் விட்டுச் செல்வது தனது நிழல்களை.
நீரால் வெல்லப்படும் பாலம் ஒருபுறம் என்றால் நீரே பாலமாகிறது இந்தக் கவிதையில். அவளுக்கும் பையனுக்கும் நடுவில் தண்ணீர் பாலமாகிறது இன்னொரு கவிதையில். இப்படி நீரின் ரகசியங்களை, புதிரை, எளிமையை, சொல்லும் கவிஞர் தண்ணீருக்குள் நாம் காணாத தண்ணீர் இருக்கிறது என அடையாளம் காட்டுகிறார்.
அறிந்த நீருக்குள் அறியாத நீர் இருக்கிறது போலும்.
நமக்குள் நீர் வற்றிப் போவது என்பது தவிர்க்கவே முடியாத செயலா, நமக்குள் தண்ணீரை நிரப்பிக்கொள்வதன் மூலம் அந்த வெறுமையைத் தீர்க்க முயலுகிறோம் என்பது உண்மையா, நமக்குள் நிறைந்திருந்த நீரும் உலகின் நீரும் ஒன்றில்லையா. இப்படி நம்மை ஆழமாக யோசிக்கவைக்கும் இந்தக் கவிதை மெய்ஞானத்தையும் அன்றாடச் செயலையும் ஒன்றாக்கி காட்டுகிறது.
எளிய தினசரி நிகழ்வுகளை அசாதாரணமான தளத்திலும் பொருளிலும் உருமாற்றுகின்றன தேவதச்சனின் கவிதைகள். அதுவும் இந்தச் சமீபத்திய கவிதைகளில் மருத்துவமனையில் இருந்து ஆறுதலாக வெளியே வந்த பெண் உணவகத்தில் நடந்து கொள்வது போலவே நடந்து கொள்கிறார். அவரிடமிருந்து பரவாயில்லையின் சங்கீதத்தை நாம் பெறுகிறோம். இதைப் பரவவிட வேண்டும் என்பதே நமக்கிருக்கும் பொறுப்பு
••
May 14, 2022
உலகம் கொண்டாடுகிறது.
பல்வேறு நாடுகளிலும் எழுத்தாளர்களைக் கௌரவிக்கும் விதமாக அவரது உருவப்படம் கொண்ட பணத்தை வெளியிட்டிருக்கிறார்கள். அதுவும் அவர்களின் கதையுலகின் காட்சிகளுடன் வெளியிடப்பட்டிருப்பது கூடுதல் சிறப்பு.







இந்திய எழுத்தாளர்களுக்கு அதிகப்படியாகக் கிடைக்கும் கௌரவம் தபால்தலை அல்லது சிறப்புத் தபால் உறை வெளியிடப்படுவது தான். தி.ஜானகிராமன் நினைவாகச் சிறப்புத் தபால் உறை வெளியிடப்பட்ட நிகழ்வு ஒன்றில் நான் கலந்து கொண்டிருக்கிறேன். 2016ல் நடந்ததாக நினைவு.

கையெழுத்துப் பிரதிகள். முதற்பதிப்புகளைப் பாதுகாத்து ஆவணப்படுத்தும் பழக்கம் நம்மிடமில்லை. மகாகவி பாரதியின் குரல் எப்படியிருக்கும் என்று நமக்குத் தெரியாது. இவ்வளவிற்கும் அவர் காலத்திலிருந்த பலரது குரல்பதிவுகள் இன்று கேட்கக் கிடைக்கின்றன.

ரஷ்யாவில் குற்றமும் தண்டனையும் நாவலில் இடம்பெற்றுள்ள இடங்களைக் காணுவதற்காகச் சுற்றுலா ஒன்றை ஏற்பாடு செய்கிறார்கள். விருப்பமான வாசகர்கள் ஒன்று கூடி செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கில் ரஸ்கோல்னிகோவ் சென்ற இடங்களுக்கு எல்லாம் நடந்து போகிறார்கள்.

இது போலவே ஜேம்ஸ் ஜாய்ஸ் நாவலுக்கும். வர்ஜீனியா வுல்ப் குறிப்பிட்டுள்ள லண்டன் வீதிகளுக்கும் பயணம் ஏற்பாடு செய்யப்படுகிறது. ஹெமிங்வே, மெல்வில் பிறந்த நாளில் அவரது நாவலை ஆளுக்கு ஒரு பக்கம் என வாசகர்கள் ஒன்று கூடி மாரத்தான் வாசிப்பு நடத்துகிறார்கள். நமது நூலகங்களே இது போன்ற வாசிப்புப் பயணங்களை முன்னெடுக்கலாம்.

டிக்கன்ஸ் காலத்தில் பூங்காவில் மேடை அமைத்து எழுத்தாளர்கள் கதை சொல்வது வழக்கமாக இருந்திருக்கிறது. தனது புதிய கதையை மக்கள் முன்பாக அவர்கள் படிப்பார்கள். திரளாக மக்கள் திரண்டு கேட்டிருக்கிறார்கள். இது போன்ற கதைவாசிப்பு நிகழ்வுகள் கட்டணம் கொடுத்துக் கேட்கும் நிகழ்வாகவும் நடத்தப்பட்டிருக்கின்றன.
சாகித்திய அகாதமி ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு இப்படி ஒரு கதைவாசிப்பு நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தது. அதில் கலந்து கொண்டு நான் புதிய சிறுகதை ஒன்றை வாசித்தேன்.
பார்வைதிறனற்றவர்கள் தாங்கள் கேட்பதற்காக எழுத்தாளரின் குரலிலே அவரது கதைகள் ஒலிப்பதிவு செய்து தரப்பட வேண்டும் என்று விரும்புகிறார்கள். ஒவ்வொரு எழுத்தாளரும் தனது குரலிலே தனது சில கதைகளைப் பதிவு செய்து பொதுவான இணையதளம் ஒன்றில் பகிர்ந்து தரலாம்.
பொது நூலகங்களைப் புத்தகங்கள் இரவல் தரும் இடமாக மட்டும் கருதாமல் பண்பாட்டு வெளியாக மாற்ற வேண்டும். அங்கே கதை வாசித்தல். எழுதும் பயிற்சிமுகாம்களை நடத்துவது. சிறார்களுக்கான வாசிப்பு முகாம். எழுத்தாளர் திருவிழா, அரிய நூல்களின் அறிமுகம், பதிப்புத்துறை மற்றும் இலக்கியம் சார்ந்த கண்காட்சிகள். போன்றவை நடத்தப்பட வேண்டும்
கோடையில் சிறார்களுக்கெனச் சிறப்புப் புத்தகக் கண்காட்சி ஒன்றினை சென்னை, கோவை, மதுரை போன்ற நகரங்களில் ஏற்பாடு செய்யலாம். இதன் மூலம் சிறார்களின் வாசிப்பு மேம்படுவதுடன் சிறார் இலக்கியமும். சிறார் நூல்களை வெளியிடும் பதிப்பகங்களும் வளர்ச்சியடையத் துவங்கும்.
••
May 13, 2022
குகையில் ஒரு பெண்
ஈரானில் நடைபெறும் ஆட்சிக்கு எதிராகச் செயல்பட்டதாகக் கூறி இயக்குநர் ஜாபர் பனாஹிக்கு 20 ஆண்டுகாலம் திரைப்படம் இயக்க தடை விதிக்கப்பட்டிருக்கிறது.
2019ல் வெளியான 3 Faces திரைப்படம் தடையை மீறி ரகசியமாக இயக்கப்பட்டதாகும்.

பனாஹியின் திரைப்படங்கள் சமகால ஈரானிய வாழ்வைத் துல்லியமாகப் பிரதிபலிக்கக் கூடியவை. அரசியல் ரீதியாகத் துணிச்சலான கருத்துகள் மற்றும் எதிர்ப்பினை முன்வைக்கக்கூடியவை
திரைப்படம் எடுப்பதற்குப் பெரிய கதை தேவையில்லை. ஒற்றை நிகழ்வு போதும். அந்த நிகழ்வினை முன்பின்னாக ஆழ்ந்து அறிவதன் மூலம் சிறந்த திரைக்கதையை எழுதிவிட முடியும் என்பதற்கு இப்படம் சிறந்த உதாரணம். கான்ஸ் திரைப்பட விழாவில் சிறந்த திரைக்கதைக்கான விருதை இப்படம் பெற்றுள்ளது.
செல்போனிற்கு வரும் வீடியோ ஒன்று தான் படத்தின் மையக்கரு. மார்சியே என்ற இளம்பெண் செல்போன் கேமிராவைப் பார்த்துப் பேசியபடியே குகை ஒன்றினுள் நடந்து செல்கிறாள். அந்தக் குகை எங்கேயிருக்கிறது. யார் அந்தப் பெண் எனத் தெரியவில்லை. ஆனால் அவளது கலக்கமான முகம். தயக்கமான நடை, குழப்பத்திலிருப்பதைக் காட்டுகிறது.
அவள் கேமராவை நோக்கிக் கண்ணீருடன் பேசுவதைக் காணும் போது எதற்காக அவள் குகைக்கு வந்திருக்கிறாள் என்ற கேள்வி பார்வையாளருக்கு எழுகிறது

சட்டென அவள் செல்போன் கேமிராவை உயர்த்திக் காட்டுகிறாள். மரக்கிளை ஒன்றில் ஒரு தூக்குக் கயிறு தொங்கிக் கொண்டிருக்கிறது. அவள் தற்கொலை செய்து கொள்ளப்போகிறாள் என்ற அதிர்ச்சியை நாம் உணரும் முன்பு அந்தப் பெண் கழுத்தில் கயிற்றை மாட்டிக்க் கொள்கிறாள். கயிறு இழுபடுகிறது. அவள் உதவிக்காக கூக்குரலிடுகிறாள். சட்டென மரக்கிளை முறிகிறது. காட்சி துண்டிக்கப்படுகிறது
இந்தக் காட்சி செல்போன் மூலம் காணொளியாக ஈரானிய நடிகை பெஹ்னாஸ் ஜாஃபரிக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. மார்சியே அந்தக் காணொளியில் ஜாஃபரியிடம் உதவி கேட்கிறாள். அவளைத் தவிர வேறு யாராலும் செய்ய முடியாது என்று மன்றாடுகிறாள்.
யார் அந்தப் பெண் எதற்காகத் தன்னைத் தொடர்பு கொள்ள முயன்றாள். உண்மையில் அவள் இறந்துவிட்டாளா எனப் பதற்றமடையும் ஜாஃபரி உண்மையை அறிந்து கொள்ள இயக்குநர் ஜாபர் பனாஹி துணையோடு மார்சியே வாழ்ந்த வடமேற்கு ஈரானிய கிராமம் ஒன்றைத் தேடி பயணிக்கிறாள். அந்தப் பிரதேசத்தில் பிறந்தவர் தான் பனாஹி.

அவர் தனது சொந்த ஊருக்கு திரும்பிச் செல்கிறார். ஆனால் இந்தப் பயணம் வேர்களைத் தேடிய பயணமில்லை. உண்மையை கண்டறியும் பயணம்.
இந்தப் பயணமும் அதில் விடுபடும் புதிர்களும், வெளிப்படும் உண்மையும் தான் திரைப்படம். உண்மையில் அந்தப் பெண் தற்கொலை செய்து கொண்டது ஒரு நாடகமா, ஒருவேளை ஜாபர் பனாஹி தான் திட்டமிட்டு இப்படி ஒரு காட்சியை உருவாக்கியிருக்கிறாரோ என்ற சந்தேகம் வரும்படியாக ஆரம்பக்காட்சிகள் விரிகின்றன.
ஓரிடத்தில் ஜாஃபரி அதை நேரடியாக அவரிடமே கேட்கிறாள். இதற்காக அவர் கோவித்துக் கொள்கிறார்.
எதற்காக அந்தக் காணொளி பனாஹிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. ஏன் அந்தப் பெண் தன்னைத் தொடர்பு கொள்ள விரும்பினாள் என்று குற்றமனதுடன் கேட்கிறாள் ஜாஃபரி. தன்னால் அதற்கான விடையைக் கண்டறிய முடியவில்லை என அமைதியாகப் பதில் தருகிறார் ஜாபர் பனாஹி

நீண்ட பயணத்தின் பின்பு அவர்கள் மலைப்பிரதேசத்தை அடைகிறார்கள். அங்கே அந்தப் பெண்ணைப் பற்றி விசாரிக்க ஆரம்பிக்கிறார்கள். ஒருவேளை அவள் இறந்து போயிருந்தால் நிச்சயம் அந்தப் பகுதியில் உள்ள கிராம மக்களுக்குத் தெரிந்திருக்கும் என்கிறாள் ஜாஃபரி, ஆனால் குடும்பத்தினர் அந்தப் பெண்ணின் தற்கொலையை மறைத்திருக்கக் கூடும் என்கிறார் பனாஹி
ஒரு நடிகையும் இயக்குநரும் மேற்கொள்ளும் பயணம் ஒரு சரடு. இன்னொரு சரடில் மலைக்கிராமத்தில் நடக்கும் பல்வேறு நிகழ்வுகள். மூன்றாவது சரடில் தற்கொலை செய்து கொண்டதாகக் கருதப்படும் பெண், அவளது குடும்பம். மற்றும் தோழி. அவர்கள் வெளிப்படுத்தும் உண்மை இடம்பெறுகிறது. இந்த மூன்றும் இணைந்தும் விலகியும் செல்கின்றன. இதன் ஊடாக ஈரானில் மதமும் குடும்ப அமைப்பும் பெண்களை எப்படி அடக்கியும் ஒடுக்கியும் வைத்திருக்கிறது என்பது விவரிக்கப்படுகிறது.
வீட்டுக்காவலில் வைக்கப்பட்ட பனாஹி சில ஆண்டுகளுக்கு முன்பு தனது வீட்டிற்குள்ளாகவே ஒரு படத்தை இயக்கி (This Is Not a Film) வெளியிட்டிருக்கிறார். திரைப்படத்திற்கும் வாழ்க்கைக்குமான இடைவெளியை அழித்து எது நிஜம். எது புனைவு என்ற கேள்வியை அவரது படங்கள் எழுப்புகின்றன மெட்டாஃபிக்சன் பாணியிலான இப் படங்கள் தனித்துவமான அழகியலைக் கொண்டிருக்கின்றன
மூன்று முகங்கள் படத்தின் ஒரு காட்சியில் வயதான பெண் தனக்கான கல்லறை ஒன்றைத் தானே உருவாக்கிக் கொண்டு அதில் படுத்துக் கொண்டிருக்கிறாள். பாம்புகள் வருவதைத் தடுக்க அவள் தலைமாட்டில் விளக்கு ஏற்றிவைக்க படுவதாகச் சொல்கிறாள்.

இன்னொரு காட்சியில் கால் உடைந்த பொலி காளை பயண வழியில் படுத்துக்கிடக்கிறது. அந்தக் காளை ஒரு குறியீடு போலவே சித்தரிக்கப்படுகிறது அந்தப் பொலிகாளை ஒரே இரவில் 10 மாடுகளைக் கருவூட்டக்கூடிய வீரியமான விலங்கு என்று பெருமையாகச் சொல்கிறார் கிராமவாசி. இதன் மற்றொரு வடிவம் போலவே இன்னொரு காட்சியில் வயதான ஆள் இளம்பெண்ணை திருமணம் செய்து கொண்டதுடன், ஆண்மையின் அடையாளமாக உள்ள பழைய நடிகரை ஆராதனை செய்கிறான்.
இவை தனித்தனிக்காட்சிகளாக இருந்தாலும் ஈரானிய சமூகம் பெண்களை எவ்வாறு நடத்துகிறது என்பதன் அடையாளமாகவே இருக்கிறது.
மலைப்பாதையின் வளைவுகள் போலக் கதை கொஞ்சம் கொஞ்சமாக முன்னேறிச் செல்கிறது. இறுதியில், மலைப்பாதையில் கதை முடிவது தான் சிறப்பு. இனியும் பெண்கள் காத்திருக்கப்போவதில்லை. தங்களுக்கான வழியைத் தாங்களே கண்டறிந்து கொள்வார்கள் என்பது போல விரிகிறது கடைசிக் காட்சி
ஒரே கிராமத்தில் இரண்டு உலகங்கள் இயங்குகின்றன. ஆண்கள் சுகபோகங்களையும். கொண்டாட்டங்களையும் மேற்கொள்கிறார்கள். பெண்கள் ஒதுங்கியும் விலகியும் ஒடுங்கியும் காணப்படுகிறார்கள். தன் வீட்டிற்கு அழைக்கும் கிராமவாசியுடன் ஜாஃபரி செல்கிறாள். அப்போது அவளுக்கு தேநீர் கொண்டுவரும் அவனது இளம்மனைவியின் நிலை ஒரு வார்த்தை கூட வசனமின்றி அழகாக வெளிப்படுத்தபடுகிறது
நாம் காணுவது ஒரு திரைப்படமில்லை. உண்மைக் கதை என்பது போன்ற நம்பிக்கையை ஏற்படுத்தவே இயக்குநர் பனாஹி மற்றும் நடிகை ஜாஃபரி அவர்களாகவே படத்தில் இடம்பெறுகிறார்கள். உண்மையான பெயர்கள், உண்மையான கிராமத்துடன் புனைவான ஒரு இளம்பெண்ணின் நிஜமான பிரச்சனையைத் திரைப்படமாக உருவாக்கியிருப்பது தேர்ந்த கலைத்திறனாகும்.

வசீகரமான நிலப்பரப்பும் எளிய வாழ்க்கையை வாழும் கிராமவாசிகளும் ஏதோ வேறு நூற்றாண்டில், வேறு நியதிகளுடன் வாழ்ந்து கொண்டிருப்பது போலிருக்கிறது. தூசி நிறைந்த, வளைந்து செல்லும் சாலைகளில் அவர்கள் செல்லும் பயணம், வழியில் நடைபெறும் திருமணம். கிராமத்தில் ஒரு வீட்டில் நடக்கும் விருத்தசேதன சடங்கு. மூன்று நாட்களாகக் காணாமல் போன மார்சியேவை சந்திப்பது. இரவில் தனது படப்பிடிப்பு பற்றித் தெரிவிக்க ஜாஃபரி போன் செய்யப் போவது. காரில் பனாஹி இரவில் உறங்குவது. இனப்பெருக்கத் திறனுக்காகப் புகழ் பெற்ற காளை, ஒரு சிறுவனின் நுனித்தோல் வினோதமான பரிசாக வழங்கப்படுவது என நேர்த்தியான உருவாக்கபட்டுள்ள காட்சிகள் படத்தை சிறந்த கலைப்படைப்பாக்குகின்றன.
கிராமத்தில் தனிமைப்படுத்தப்பட்ட நடனக்காரி, நடிகையாக விரும்பும் மார்சியே. தேடிவரும் நடிகை ஜாஃபரி என்ற இந்த மூன்று முகங்களின் வழியே ஈரானிய பெண்களின் கடந்த காலம் நிகழ்காலம் மற்றும் எதிர்காலத்தை அடையாளப்படுத்துகிறார் பனாஹி. தற்கொலை செய்து கொண்ட பெண்ணைத் தேடிய பயணத்தின் வழியே தன்னை அறிந்து கொள்கிறாள் ஜாஃபரி.
காருக்குள்ளாகவே சுழலும் கேமிரா . மலைப்பாதைகளில் கார் செல்வது படமாக்கவிதம், மற்றும் இருட்டிற்குள் இருந்தபடியே பெண்ணின் வீட்டைக் காணும் அழகு. கிராமவீதிகளுக்குள் கேமிரா செல்லும் நேர்த்தி என கவித்துவமான ஒளிப்பதிவு படத்தின் சிறப்பாகும். நான்கே கதாபாத்திரங்கள். மற்றவர்கள் கிராமவாசிகள். இவர்களை வைத்து அழகான படத்தை எடுத்துவிட முடிவது ஆச்சரியமளிக்கிறது.

உலகை நோக்கிக் கேமிராவைத் திருப்புவதைத் தவிர்த்து தன்னை நோக்கிக் கேமிராவைத் திருப்பி அதன் வழியே தனது தேசத்தின் முக்கியப் பிரச்சனை ஒன்றைச் சொல்ல முயன்றிருப்பது ஜாபர் பனாஹியின் சாதனை மட்டுமில்லை. சினிமாவிற்கும் புதிய பாதையாகும்.
S. Ramakrishnan's Blog
- S. Ramakrishnan's profile
- 657 followers
