S. Ramakrishnan's Blog, page 89
April 27, 2022
நூறு விமர்சனங்கள்
2021 டிசம்பர் 25ல் எனது புதிய நாவல் மண்டியிடுங்கள் தந்தையே வெளியானது.
இந்த மூன்று மாத காலத்திற்குள் இரண்டு பதிப்புகள் விற்றுத் தீர்ந்துள்ளது. அத்துடன் இந்த நாவல் குறித்து இதுவரை நூறு விமர்சன,அறிமுகக்கட்டுரைகள் வெளியாகியுள்ளன.
இந்த கட்டுரைகளில் சிலவற்றை நானே எனது இணையதளத்தில் பகிர்ந்திருக்கிறேன்.
நாவல் குறித்த காணொளி. டால்ஸ்டாய் மற்றும் அக்ஸின்யா குறித்த ஓவியம், நாவலின் வரைபடம், டால்ஸ்டாய் போஸ்டர், கனடாவில் நடைபெற்ற ஜும் சந்திப்பு, பாலம் புத்தக கடை ஏற்பாடு செய்த அறிமுக நிகழ்வு என வாசகர்கள், அன்பர்கள் விதவிதமாக இதைக் கொண்டாடியது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது.

சிறுகதைகள். கவிதைகளை விடவும் நாவல் படிப்பவர்கள் தமிழில் அதிகமிருக்கிறார்கள். அவர்கள் எப்போதும் புதிய நாவலுக்காக காத்திருக்கிறார்கள். ஆர்வத்துடன் வாங்கிப் படித்து பகிர்ந்து கொள்கிறார்கள். பாராட்டுகிறார்கள்.
இந்த மகிழ்ச்சியான தருணத்தில் என் சார்பிலும், தேசாந்திரி பதிப்பகம் சார்பிலும் வாசகர்கள் அனைவருக்கும் மனம் நிறைந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
மண்டியிடுங்கள் தந்தையே நாவல் தற்போது மலையாளத்தில் மொழியாக்கம் செய்யப்பட்டு வருகிறது. கேரளாவின் பெரிய பதிப்பகம் ஒன்று இதனை வெளியிடுகிறது. இந்த ஆண்டிற்குள் வெளியாகக்கூடும்.
இந்த நாவலின் ரஷ்யன், ஆங்கிலம், இந்தி, தெலுங்கு மொழிபெயர்ப்புகளும் விரைவில் வெளியாக இருக்கின்றன.
எனது தேர்வு செய்யப்பட்ட 25 சிறுகதைகளின் ஆங்கில மொழிபெயர்ப்பு பணி முடிந்து அந்நூல் ஆகஸ்ட் மாதம் வெளியிடப்பட இருக்கிறது. பிரபல ஆங்கிலப் பதிப்பகம் ஒன்று இத்தொகுப்பை வெளியிடுகிறது
சஞ்சாரம் நாவல் சாகித்ய அகாதமியால் தெலுங்கு மற்றும் மலையாளத்தில் மொழிபெயர்க்கப்பட்டு வருகிறது. அதன் ஆங்கில மொழியாக்கம் நிறைவுபெற்றுவிட்டது
உபபாண்டவம் நாவல் மலையாளத்தில் மொழிபெயர்ப்பு முடிந்து ஜூன் மாதம் வெளியாகிறது.
துணையெழுத்து, தேசாந்திரி, கர்னலின் நாற்காலி ஆகியவை ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்யப்பட்டு விரைவில் வெளிவர இருக்கின்றன.
ஏழு தலை நகரம், எலியின் பாஸ்வேர்ட் ஆகிய சிறார் நூல்களின் மொழியாக்கப் பணி நடந்து வருகிறது.
இந்த ஆண்டிற்குள் எனது பத்து நூல்கள் பிறமொழிகளில் வெளிவர இருப்பது சந்தோஷம் அளிக்கிறது.
•••
அறிந்த தவறு
The Birdcatcher’s Son திரைப்படம் 2019ல் வெளியானது. 18ம் நூற்றாண்டில் ஃபாரோ தீவில் நடக்கும் கதையிது. இந்தத் தீவின் சட்டப்படி ஆண் வாரிசு இல்லாதவர் தங்கள் குத்தகை நிலம் மற்றும் வீட்டிற்கு உரிமை கொண்டாட முடியாது பறவைகளைப் பிடித்து விற்கும் எஸ்மர் குடியிருக்கும் வீடு மற்றும் நிலத்தை அதன் உரிமையாளர் காலி செய்யச் சொல்கிறார்.

அவனோ தன் மனைவி கர்ப்பிணியாக இருக்கிறாள். இந்த முறை நிச்சயம் தனக்கு ஆண் பிள்ளை பிறக்கும் ஆகவே நிலத்தின் குத்தகை அடுத்த 36 ஆண்டுகள் நீடிக்கப்பட வேண்டும் என்கிறான். அது நடக்காத விஷயம். உன்னுடைய மனைவி பெண்பிள்ளைகளைத் தான் இதுவரை பெற்றுவந்திருக்கிறாள் உனக்கு ஆண்வாரிசு பிறக்காது என்கிறான் நில உரிமையாளன்.
ஆனால் எஸ்மர் ஓராண்டிற்குள் தனக்கு ஆண்பிள்ளை பிறக்காவிட்டால் தான் நிலத்தை விட்டுத் தருவதாகச் சவால் விடுகிறான்
இந்த நிலையில் எஸ்மரின் மனைவி ஜோஹன்னா பெண்பிள்ளையைப் பெறுகிறாள். இது எஸ்மரை ஏமாற்றம் அடையச் செய்கிறது. நிலம் தன் கையை விட்டுப் போய்விடாமலிருக்க என்ன செய்வது என்று குழப்பமடைகிறான்.
அந்தத் தீவில் மதுவிடுதி நடத்தி வரும் லிவியா தான் மருத்துவ நூல் ஒன்றினை படித்துள்ளதாகச் சொல்லி மகிழ்ச்சியில்லாத தம்பதிகளுக்கு ஆண் அல்லது பெண்பிள்ளைகள் மட்டுமே பிறக்கும். அவர்கள் விரும்பும் குழந்தை பிறக்காது என்கிறாள். இதற்கு என்ன தீர்வு எனக்கேட்க அவள் எஸ்மரோ அல்லது ஜோஹன்னாவோ வேறு ஒருவர் வழி குழந்தை பெற்றுக் கொள்வது தான் என்கிறாள்.

இந்த ஆலோசனையை எஸ்மரால் ஏற்க முடியவில்லை. அவனுக்கு வேறு பெண் வழியே குழந்தை பெற விருப்பமில்லை. ஆகவே ஜோஹன்னா ஒப்புதலுடன் வேறு ஒருவரை அவளுடன் உறவு கொள்ளச் செய்து குழந்தை பிறக்க முடிவு செய்கிறான்
இதற்காக லிவியாவின் காதலனும் கப்பல் தலைவனுமான அர்மண்டைத் தேர்வு செய்கிறார்கள். அவன் வழியே ஜோஹன்னா கர்ப்பம் அடைகிறாள். ஆண் குழந்தை பிறக்கிறது.
எஸ்மர் நினைத்தது போல நிலம் அவன் வசமாகுகிறது. அந்தப் பையனை எஸ்மர் தனது மகன் போலவே வளர்க்கிறான். இந்த உண்மை உலகம் அறியாமல் புதைத்து வைக்கப்படுகிறது. ஆனால் சில ஆண்டுகளுக்குப் பிறகு தீவிற்குத் திரும்பி வரும் கேப்டன் தனது மகனைக் காண விரும்புகிறான். இது எஸ்மர் குடும்பத்தை நிலை குலையச் செய்கிறது.
மகாபாரதக் கதையை நினைவுபடுத்தும் இந்த ஃபாரோ தீவின் நாட்டார் கதையை மிக அழகாகப் படமாக்கியிருக்கிறார்கள். உயரமான பாறைகளில் ஏறி எஸ்மர் பறவைகளைப் பிடிப்பது. அதை விற்பனைக்காகத் தள்ளுவண்டியில் கொண்டு செல்வது. தீவின் மதுவிடுதி. லிவியாவின் காதல் வாழ்க்கை. தீவில் நடைபெறும் படகுப்போட்டி. கேப்டன் திரும்பி வந்து பையனைச் சந்திப்பது என அழகான காட்சிகள்.

பிடிபட்ட பறவையைப் போலவே ஜோஹன்னா நடந்து கொள்கிறாள். தனது தோழி லிவியா சொன்ன ஆலோசனையை அவளே எஸ்மரிடம் தெரிவிக்காமல் நேரடியாகக் கேட்டுவரும்படி அனுப்பிவைக்கிறாள்.
எஸ்மர் லிவியா தேடிச் செல்லும் போது அவள் தன் காதலனுடன் சந்தோஷமாக இருப்பதைக் காணுகிறான். அதன்பிறகே அவள் மருத்துவ நூலைப் புரட்டி உண்மையை எடுத்துச் சொல்கிறாள். எஸ்மருக்கு வேறு வழியில்லை. இன்னொருவன் தன் மனைவியோடு உறவு கொள்வதை ஏற்க முடியாமல் அவன் போதையில் வீடு திரும்பும் போது புலம்பிக் கொண்டே வருகிறான். அவனுக்கு விருப்பமில்லை என்றால் வீட்டையும் நிலத்தையும் காலி செய்து ஒப்படைத்துவிடுவோம் என்கிறாள் ஜோஹன்னா, ஆனால் அதை எஸ்மரால் ஏற்க முடியவில்லை.
கேப்டன் வழியாகப் பிறந்த பையனைத் தனது சொந்த மகன் போலவே எஸ்மர் நடத்துகிறான். அவனைக் கேப்டனுடன் அனுப்பிவைக்க அவனுக்கு மனமில்லை.

நிலத்தின் மீதான உரிமையை இழக்கவிரும்பாத எஸ்மர் மனைவியின் மீதான உரிமையை இழக்கிறான். மகாபாரத காலம் தொட்டு இன்று வரை தொடரும் பிரச்சனையது. ‘என்னமோ கற்பு கற்பு என்று கதைக்கிறீர்களே! இதுதான் ஐயா பொன்னகரம்! என்று புதுமைபித்தன் தனது கதையில் சொல்கிறார். இந்த வரிகள் இக்கதைக்கும் பொருந்தக்கூடியதே.
ஜோஹன்னா படம் முழுவதும் எஸ்மரை சந்தோஷப்படுத்துவதை மட்டுமே வாழ்க்கையாக நினைக்கிறாள். இந்தப் பிரச்சனையில் உண்மையாக மாட்டிக் கொள்வது அந்தப் பையன் மட்டுமே. கதை அவனைச் சுற்றிப் பின்னப்பட்டிருந்தால் முற்றிலும் புதிய அனுபவத்தை உருவாக்கியிருக்கும்.
நில உரிமையாளர் ஜோஹன்னாவை அடைய வேண்டும் என்று ஆசை கொண்டவர். அதற்காக எதையும் செய்யத் தயராக இருக்கிறார். அந்த நினைப்பை வெல்ல வேண்டும் என்பதற்காகவே ஜோஹன்னா எதையும் செய்யத் தயாராக இருக்கிறாள்.

லிவியா தான் கதையின் திறவுகோல். அவள் இந்த ஆலோசனையைச் சொல்லாமல் போயிருந்தால் எஸ்மரின் வாழ்க்கை வேறாக இருந்திருக்கும். சிறிய நிகழ்வுகள் தான் பெரிய திருப்பங்களை ஏற்படுத்துகின்றன
•••
April 25, 2022
வானில் எவருமில்லை
புதிய சிறுகதை
புரவி ஆண்டு மலரில் வெளியானது

தியேட்டரில் பாதிப் படம் நடந்து கொண்டிருக்கும் போதே சித்ராவிற்குப் பசிக்க ஆரம்பித்தது. ஆனால் அவள் அதைக் காட்டிக் கொள்ளவில்லை.
மணி எட்டைக் கடந்தவுடன் வயிறு தானே பசிக்கத் துவங்கிவிடுகிறது. ஒன்பது மணிக்குள் இரவு உணவைச் சாப்பிட்டு முடித்துவிடுவது தான் அவளது வழக்கம். ஆனால் சினிமாவிற்குப் போகும் நாட்களில் என்ன செய்வது.
இடைவேளையின் போது பாப்கார்ன் சாப்பிட்டார்கள். ஆனாலும் பசி அடங்கவில்லை. திரையில் ஒடும் காட்சிகளில் அவளது மனம் கூடவில்லை. எப்போது வீட்டிற்குப் போவோம் என்றிருந்தது.
அருகில் அமர்ந்து படம் பார்த்துக் கொண்டிருந்த கார்த்திக் தன்னை மறந்து படம் பார்த்துக் கொண்டிருந்தான். வலது பக்கம் அமர்ந்திருந்த அவளது எட்டு வயது மகள் ப்ரியாவிடம் “பசிக்கிறதா“ என்று மெதுவான குரலில் கேட்டாள். “ஆமாம்“ என அவள் தலையாட்டினாள்.
ப்ரியா பெரும்பான்மை நாட்கள் ஒன்பது மணிக்கெல்லாம் தூங்கிவிடுவாள். இருவர் மட்டும் எழுந்து வெளியே போய் ஏதாவது சாப்பிட்டு வரலாமா என்று நினைத்தாள். ஆனால் கார்த்திக் கோவித்துக் கொள்வான். படம் விட்டதும் வெளியே போய்ச் சாப்பிடலாம் என்று சொல்லியிருந்தான். இன்னும் படம் எவ்வளவு நேரம் ஒடும் என்று தெரியவில்லை.
பசியை அடக்கிக் கொண்டு காத்திருக்க வேண்டியது தான். திரையைப் பார்க்க பிடிக்காமல் செல்போனில் வந்திருந்த வாட்ஸ்அப் செய்திகளைப் பார்த்துக் கொண்டிருந்தாள்
அன்றைக்கு அவர்களின் திருமண நாள்.
பத்தாவது திருமண நாளை கொண்டாடுகிறார்கள்.
சித்ரா அலுவலகத்திற்கு லீவு போட்டிருந்தாள். ஆனால் கார்த்திக் அலுவலகம் போய்விட்டு மாலை வந்துவிடுவதாகச் சொல்லியிருந்தான். அவர்களுக்குத் திருமண நாளை எப்படிக் கொண்டாடுவது எனத் தெரியவில்லை. புத்தாடைகள் அணிந்து கொண்டு கோவிலுக்குப் போவது. அப்புறம் சினிமா. இரவு ஏதாவது ஒரு நான்வெஜ் ஹோட்டல் இப்படித் தான் இத்தனை ஆண்டுகளாகக் கொண்டாடி வருகிறார்கள். அது சித்ராவிற்குச் சலிப்பை ஏற்படுத்தியிருந்தது.
நாமாகச் சந்தோஷத்தை உருவாக்கிக் கொள்ள முடியவில்லை. யாராவது எதிர்பாராத மகிழ்ச்சியை ஏற்படுத்துவார்களா என்றாலும் நடப்பதில்லை. பிறந்தநாளை எப்படிக் கொண்டாடினார்களோ, அது போலவே தான் திருமண நாளையும் கொண்டாடுகிறோம். இதில் என்ன வேறுபாடு.
சில ஆண்டுகள் நண்பர்களை அழைத்துச் சிறிய விருந்து வைத்து பிறந்த நாளை கொண்டாடியிருக்கிறார்கள். ஆனால் அந்தச் சந்திப்பு உண்மையாக இல்லை. பொய்யாகச் சிரித்துக் கொண்டு போலியாக நடித்துக் கொண்டு பேசும் விருந்தினர்களின் சந்திப்பாக மாறியது. அதைவிடவும் சிலரை வேண்டுமென்றே தவிர்த்துவிட்டோம் என்ற குற்றசாட்டு. வந்தவர்களில் சிலருக்கு சாப்பாடு பிடிக்கவில்லை என்ற குற்றசாட்டு எனத் தேவையில்லாத பிரச்சனைகள் உருவாகவே அதையும் தவிர்த்துவிட்டார்கள்.
ஒன்பதாவது திருமண நாள் கொண்டாடத்திற்கும் பத்தாவது திருமண நாள் கொண்டாட்டத்திற்கும் ஒரு வேறுபாடுமில்லை. ஆனாலும் அதை மகிழ்ச்சியோடு அனுபவிப்பது போலக் காட்டிக் கொள்ள வேண்டியிருக்கிறது
அன்றைக்குக் காலையில் ப்ரியாவை ஸ்கூலுக்கு லீவு போட சொல்லி தன்னோடு வீட்டிலிருக்க வைத்தாள். அதற்குக் கார்த்திக் கோவித்துக் கொண்டான்
“அவ லீவு போட்டு வீட்ல என்ன செய்யப்போறா“
“நான் மட்டும் என்ன செய்யப்போறேன் . பரவாயில்லை இருக்கட்டும்“
“அதை தான் நானும் கேக்குறேன். நாம ஒண்ணும் சின்னபிள்ளை இல்லை சித்ரா. நீயே ஆபீஸ் போயிட்டு வரலாம். ஈவினிங் தான் வெளியே போறோமே“
“எனக்கு இன்னைக்கு ஆபீஸ் போகப் பிடிக்கலை. நான் லீவு போட்டுட்டேன்“
“அது உன் இஷ்டம். ஆனால் பாப்பா ஸ்கூலுக்குப் போகட்டும்“
“ஒரு நாள் லீவு போட்டா ஒண்ணும் ஆயிராதுப்பா“
“அப்புறம் உன் விருப்பம்“ என்றபடியே அவன் முகத்தை இறுக்கமாக்கிக் கொண்டான். திருமண நாள் அதுவுமாக அவனுடன் சண்டை போட சித்ரா விரும்பவில்லை.
அவன் பைக்கை எடுக்கும் போது தயக்கத்துடன் கேட்டாள்
“ லஞ்ச்க்கு வீட்டுக்கு வந்துரலாம்லே“
“பாக்குறேன். நிறைய வேலையிருக்கு“
“நாங்க வேணும்னா.. உன் ஆபீஸ் வந்துருறோம். அப்படியே ஈசிஆர்ல போயி லஞ் சாப்பிடுவோம்“
“அது வேணாம். நான் வீட்டுக்கு வரப்பாக்குறேன்“
“இன்னைக்கு அவியல், பொறியல், கூட்டு, பச்சடி பாயாசம்னு நிறையப் பண்ண போறேன்“
“சரி வந்துருறேன். ஆனால் கொஞ்சம் லேட் ஆகும்“
“நாங்க வெயிட் பண்ணுறோம்“
கார்த்திக் புது டிரஸ் அணிந்து கொண்டு ஆபீஸ் கிளம்பிப் போன பிறகு அவளும் ப்ரியாவும் வீட்டிலிருந்தார்கள். தனது திருமண ஆல்பத்தை எடுத்துப் புகைப்படங்களைப் பார்த்துக் கொண்டிருந்தாள் சித்ரா. அப்போது இருந்ததை விடவும் இப்போது குண்டாகியிருக்கிறோம். திருமண நாளில் செய்து கொண்ட ஒப்பனை சரியாக இல்லை. காதோரம் முடி பறக்கிறது. அதைக் கவனிக்கவேயில்லை.
கல்யாண நாளில் அணிந்திருந்த நிறைய நகைகள் அவளது சித்தியுடையது. அதை ஒரு நாள் அணிந்து கொள்ள இரவல் தந்திருந்தாள். அந்த நகைகளைத் தானே சம்பாதித்து வாங்கிவிட வேண்டும் என்று சித்ரா ஆசைப்பட்டாள் இத்தனை வருஷத்தில் அது நடக்கவேயில்லை.
சிறுவயதில் வானிலிருந்து தேவதைகள் பூமிக்கு இறங்கி வந்து மகிழ்ச்சியான பரிசை தருவார்கள் என்று கற்பனை செய்து கொண்டிருந்தாள். திருமணமான பிறகு வானில் எவருமில்லை. நமது சந்தோஷங்களை நாமாக உருவாக்கி கொள்ள வேண்டியது தான் என்பதை உணர்ந்திருந்தாள்.
•••
ப்ரியாவும் அவளும் சூப்பர் மார்க்கெட்டிற்காக ஷேர் ஆட்டோ பிடித்துக் கிளம்பும் போது மணி பத்தரை ஆகியிருந்தது. அவர்கள் மெயின்ரோட்டில் இறங்கிக் கொண்டார்கள்,. சிக்னலைத் தாண்டி சென்றால் இடது பக்கமிருந்தது சூப்பர் மார்க்கெட். போகிற வழியில் இருந்த ஷிவானி ரெடிமேட் கடையைத் தாண்டும் போது ப்ரியாவிடம் கேட்டாள்
“நீ ஒரு புதுடிரஸ் வாங்கிடுறயா“
“எனக்கு எதுக்கும்மா“ என்றாள் ப்ரியா
“வெட்டிங்டேக்கு நாங்க மட்டும் தான் புதுசு போடணுமா“
“அப்போ புது டிரஸ் வாங்கலாமா“ என ஆசையாகக் கேட்டாள் ப்ரியா
இருவரும் ரெடிமேட் கடையினுள் நுழைந்தார்கள். ப்ரியாவிற்காகப் புது ஆடைகளைத் தேர்வு செய்வதற்குள் தனக்கு ஏதாவது புதிய புடவை கிடைக்கிறதா என்றும் சித்ரா தேடினாள். அவளுக்குப் பிடித்தமான மயில்கழுத்துக் கலரில் ஒரு புடவை கிடைத்தது. வாங்கிக் கொள்ளலாமா என்று தயக்கமாக இருந்த்து.
“வாங்கிக்கோம்மா. அப்பா ஒண்ணும் சொல்லமாட்டார்“ என்றாள் ப்ரியா
கார்த்திக்கிற்குப் போன் செய்து கேட்கலாமா என்று தோன்றியது. வெட்டிங் டேயிற்கு எனப் பட்டுபுடவை எடுத்து வைத்திருக்கிறாள். அதை விட இதைக் கட்டிக் கொள்வது அழகாகயிருக்கும் என்று தோன்றியது.
ப்ரியா வெள்ளையில் பூவேலைப்பாடுகள் செய்த எத்னிக்வேர் பார்ட்டி டிரெஸ் ஒன்றைத் தேர்வு செய்திருந்தாள்
சிறுவயதில் இப்படி எல்லாம் உடை அணிந்து கொள்ள வேண்டும் என்று சித்ரா ஆசைப்பட்டிருக்கிறாள். ஆனால் அவளது அப்பா வாங்கித் தரவேயில்லை.
“பொம்பளை பிள்ளை வெள்ளை டிரஸ் போடக்கூடாது“ என்று அப்பா கண்டிப்புடன் சொல்லிவிடுவார்.
ஆனால் எத்னிக்வேர் பார்ட்டி டிரெஸ் அத்தனை அழகாக இருந்த்து. அதன் விலையைப் பார்த்தபோது எட்டாயிரத்து முந்நூறு ரூபாய் என்றிருந்தது. நிச்சயம் கார்த்திக் கோவித்துக் கொள்வான். ஆனாலும் ப்ரியா ஆசைப்படுகிறாள்.
ப்ரியா ஏக்கத்துடன் அம்மாவை பார்த்துக் கொண்டிருந்தாள்
“வாங்கிக்கோ“ என்றாள் சித்ரா
இருவரும் ஆளுக்கு ஒரு புது ஆடை வாங்கிக் கொண்டு கடையை விட்டு வெளியே வந்த போது அத்தனை சந்தோஷமாக இருந்தது. இப்படி யாராவது நம்மை அழைத்துக் கொண்டு போய் வேண்டியதை வாங்கிக் கொள்ளுங்கள் என்று சொல்லமாட்டார்களா என்று மனதிற்குள் ஏக்கமாகவும் இருந்தது.
சூப்பர் மார்கெட்டில் ப்ரியா அப்பா அம்மாவிற்கு ரகசியமாகக் கொடுப்பதற்காக ஒரு சாக்லேட் பார் வாங்கி வைத்துக் கொண்டாள். பை நிறையப் பொருட்களுடன் அவர்கள் வீடு திரும்பி வரும்போது டெய்லர் கடையை ஒட்டிய ஐஸ்கிரீம் ஷாப்பில் பாதாம் ஐஸ்கிரிம் சாப்பிட்டார்கள். ப்ரியா மிகவும் சந்தோஷமாக இருந்தாள்
வீடு வந்து சேர்ந்தவுடன் சித்ரா தன்னை அறியாமல் “ஒரு இனிய மனது இசையை அனைத்துச் செல்லும் “என்ற அவளுக்குப் பிடித்த சினிமா பாடலை முணுமுணுத்தாள். அந்தப் பாட்டினை ப்ரியா ரசித்தபடியே சொன்னாள்
“உங்க வெட்டிங்டே அன்னைக்கு யாராவது பாட்டு பாடுனாங்களாம்மா“
“இல்லையே“
“சினிமாவுல மட்டும் பொண்ணு மாப்பிள்ளையைச் சுற்றி பாடுறாங்க“
“அது சினிமா கல்யாணம். இது நிஜக் கல்யாணம்“
“நிஜக்கல்யாணத்துல ஏன் பாட மாட்டேங்குறாங்க“
“ஆமாம். ஏன் பாடக்கூடாது. ஆனால் யாருக்கு பாடத்தெரியும்“ என்று மனதிற்குள் தோன்றியது.
சமையல் செய்ய நேரமாகிவிட்டது என்பதால் அவசரமாக அவள் சமையல் வேலையைத் துவங்கினாள். இதற்குள் ப்ரியா தனது புது டிரஸை போட்டுக் கொண்டு வந்து அவளிடம் காட்டினாள். அத்தனை அழகாக இருந்தது. தான் சிறுவயதில் இப்படித் தானே இருந்தோம் என்ற நினைப்புடன் மகளை இழுத்து அணைத்து தலையைத் தடவிக் கொடுத்தாள்.
“நான் அழகா இருக்கேனாம்மா“ என்று கேட்டாள் ப்ரியா
“ரொம்ப அழகா இருக்கே“
“எங்க கிளாஸ்ல ரீமா தான் ரொம்ப அழகு.. ஸ்கின் எல்லாம் எப்படி ஜொலிக்கும் தெரியுமா. “
“அது நேச்சரல் இல்லை பாப்பா. உன் ஸ்கின் தான் நேச்சரல்“ என்றாள் சித்ரா. அப்படிச் சொல்லித்தான் ஆறுதல் பட்டுக் கொள்ள வேண்டும்.
ப்ரியா தனது உடையைத் தானே ரசித்தபடியே அம்மா போனில் புகைப்படம் எடுத்துக் கொண்டாள். பிறகு தயக்கத்துடன் கேட்டாள்
“இந்த போட்டோவை டாடிக்கு அனுப்பவா“
“வேண்டாம். சர்ப்ரைஸா இருக்கட்டும்“ என்றாள் சித்ரா
சமைக்கும் போது அவளை அறியாமல் மனதில் பாட்டு சுரந்தபடியே இருந்த்து. இத்தனை சந்தோஷமாக என்றாவது ஒரு நாள் தான் சமைக்க முடிகிறது. மற்ற நாளில் அது ஒரு வேலை. அதுவும் தவிர்க்க முடியாத வேலை.
அன்றைக்கு அவள் நிறைய உணவு வகைகளைச் சமைத்தாள். பாயாசம் தயரானதும் அவளும் ப்ரியாவும் ஆளுக்கு ஒரு டம்ளர் குடித்துக் கொண்டார்கள். டைனிங் டேபிளில் எல்லா உணவினையும் எடுத்துக் கொண்டு போய் வைத்துவிட்டு அவர்கள் கார்த்திக் வருவதற்காகக் காத்திருந்தார்கள்.

புதுச்சேலையை இப்போதே கட்டிப் பார்த்துவிடலாம் என்று நினைத்த சித்ரா படுக்கை அறைக்குச் சென்று மயில்கழுத்து நீலத்திலுள்ள சேலையைக் கட்டிக் கொண்டு வெளியே வந்தபோது ப்ரியா வியப்புடன் அவளைப் பார்த்தபடியே சொன்னாள்
“சூப்பரா இருக்கும்மா“
“அம்மா அழகா இருக்கேனா“
“ரொம்ப அழகா இருக்கே“ என்றபடியே அருகில் வந்து புடவை தொட்டு தடவினாள் ப்ரியா
அவர்கள் புது டிரஸ் அணிந்து கொண்டு காத்திருந்தார்கள். மணி இரண்டினை தாண்டியும் கார்த்திக் வரவில்லை. சித்ரா அவனுக்குப் போன் செய்தாள். போனை எடுக்கவில்லை. அவர்களால் பசியைப் பொறுக்க முடியவில்லை. சாப்பிட்டுவிடலாமா என்று கூட நினைத்தார்கள். இரண்டரை மணிக்கு கார்த்திக் வந்த போது அவள் கோபத்தைக் காட்டிக் கொள்ளவில்லை
“சாரி சித்ரா. ஆபீஸ்ல பிரண்ட்ஸ் எல்லாம் சேர்ந்து ட்ரீட் கொடுக்கச் சொல்லிட்டாங்க. புகாரி போயிட்டோம்“
“பரவாயில்லை. அதைப் போன் பண்ணி சொல்லியிருக்கலாம்லே“
“நான் பிரியாணி கொஞ்சம் தான் சாப்பிட்டேன். வீட்ல சாப்பிடணும்லே“ என்று பொய்யான புன்னகையுடன் சொன்னான்
அவர்கள் ஒன்றாகச் சாப்பிட்டார்கள். விதவிதமான உணவு வகைகளைப் பற்றி அவன் எதுவும் சொல்லவில்லை. நீண்டநேரம் பசித்துச் சாப்பிட்ட காரணத்தால் அவளுக்கும் சாப்பாடு பிடிக்கவில்லை. பாயாசத்தைக் கண்ணாடி கிண்ணம் ஒன்றில் எடுத்துக் கொண்டு டிவி முன்பாகப் போய் உட்கார்ந்தபடியே கார்த்திக் கேட்டான்
“பாப்பா புது டிரஸ் போட்டிருக்கா. இது எப்போ வாங்கினது“
“மார்னிங் தான். நானும் அம்மாவும் வாங்கினோம். அம்மா கட்டியிருக்கிறதும் புதுச் சேலை தான்“ என்றாள் ப்ரியா
“ஏன் பாப்பா வொயிட் டிரஸ் வாங்கிருக்கே. இது உடனே அழுக்காகிடும்“
தன் அப்பா பேசுவது போலவே அவளுக்குக் கேட்டது. ஆத்திரத்தை மறைத்துக் கொண்டு சொன்னாள்
“அழுக்கானா துவைச்சிகிடலாம்“
“உனக்கு எதுக்குப் புது டிரஸ். அதான் பட்டுபுடவை வாங்கியிருக்கியே“ என்றான் கார்த்திக்
“இந்த கலர் என்கிட்ட இல்லை“ என்றாள்
நல்லவேளையாக அவன் ப்ரியா டிரஸ் எவ்வளவு விலை என்று கேட்கவில்லை.
“நான் திரும்ப ஆபீஸ் போகணும். நீங்க ஆறுமணிக்கு நேரா ஷாப்பிங் மால் வந்துடுங்க.. “
“அப்போ கோவில்“
“அது இன்னொரு நாள் போகலாம். இன்னைக்கு நேரமில்லை. “
அலுவலகத்திலிருந்து போன் வந்தவுடன் கார்த்திக் கிளம்பினான். அணிந்திருந்த புது டிரஸை கழட்டி வைத்துவிட்டு இருவரும் மாற்று உடைகளை அணிந்து கொண்டார்கள். ப்ரியா டிவி பார்த்துக் கொண்டிருந்தாள். சித்ரா படுக்கை அறைக்குச் சென்று உறங்கிவிட்டாள். மாலை ஐந்து மணிக்கு தான் எழுந்து கொண்டாள்.
அன்றைக்கு அதியமாகப் பகலில் அவளுக்குக் கனவு வந்தது. அதிலும் அவள் புத்தாடை அணிந்திருந்தாள். தலைசீவி பட்டுப்புடவையைக் கட்டிக் கொண்டு அவள் கிளம்பியபோது ப்ரியா தயாராகி நின்றிருந்தாள். அவர்களாக ஒரு ஆட்டோ பிடித்து ஷாப்பிங் மாலுக்குச் சென்றார்கள்
ஷாப்பிங் மாலில் அதிகக் கூட்டமில்லை. ஒவ்வொரு கடையாக வேடிக்கை பார்த்தபடியே எஸ்கலேட்டரில் ஏறி திரையரங்கு இருந்த நான்காவது தளத்தை அடைந்தார்கள். கார்த்திக் வரும்வரை அங்கே காத்திருந்தார்கள். அவர்களைப் போல அன்று திருமண நாளை கொண்டாடும் யாராவது வருவார்களா என்று மனதிற்குள் ஆசையாக இருந்தது. ஆங்கிலப்படம் விட்டு நிறைய இளைஞர்கள் வெளியே வந்தார்கள்.
கார்த்திக் அலுவலகத்தைவிட்டு கிளம்பி விட்டானா என்று கேட்பதற்காகப் போன் செய்தாள். அவன் போனை எடுக்கவில்லை. அகன்ற திரையில் ஒடிக் கொண்டிருந்த விளம்பரங்களைப் பார்த்தபடியே அவர்கள் நின்றிருந்தார்கள்
“இதை மாதிரி நாமலும் ஒரு கார் வாங்கணும்மா“ என்றாள் ப்ரியா
“அந்த காரோட விலை நாற்பது லட்சம்“ என்றாள் சித்ரா
“அப்போ வேற கார் வாங்குவோம்“ என்றாள் ப்ரியா
“முதல்ல வீடு வாங்கணும். அப்புறம் தான் கார்“
“இதை நீயும் சொல்லிகிட்டே இருக்கே. ஆனா நடக்கவே நடக்கலை. “
“வீடு வாங்கணும்னா. மினிமம் அறுபது எழுபது லட்சம் வேணும்“ என்று பெருமூச்சுடன் சொன்னாள் சித்ரா
இளஞ்சிவப்பில் லினன் சட்டை அணிந்த ஒரு இளைஞன் தன்னையே பார்த்துக் கொண்டிருப்பதைச் சித்ரா உணர்ந்தாள். தன்னை அவன் ரசிக்கிறான் என்றே தோன்றியது. நல்லவேளை அதை ப்ரியா கவனிக்கவில்லை. அந்த இளைஞனை தேடி ஜீன்ஸ் பிளாக் டாப் அணிந்த ஒரு இளம்பெண் வந்தாள். இருவரும் கைகோர்த்தபடியே நான்காவது திரைஅரங்கினுள் நுழைந்தார்கள். இப்படிப் பொது இடத்தில் இதுவரை அவள் கார்த்திக்கோடு கைகோர்த்து நடந்த்தில்லை. இதெல்லாம் ஒரு ஆசையா என்று தோன்றியது.
கார்த்திக் வந்து சேர்ந்த போது மணி ஆறு நாற்பதாகியிருந்த்து.
“படம் ஏழு மணிக்கு தான்“
“அப்போ லேட்டா வந்துருப்போம்ல“
“நான் கவனிக்கலே. உள்ளே வரும்போது தான் பார்த்தேன்“
அவர்கள் சினிமா தியேட்டர் உள்ளே நுழைந்தார்கள். கார்த்திக் போனில் யாருடனோ பேசிக் கொண்டே நடந்து வந்தான்.
••
படம் முடிந்து வெளியே வந்தபோது பத்துமணியாகியிருந்த்து.
“செகண்ட் ப்ளோர்ல ஒரு ஹோட்டல் இருக்கு. அங்கேயே சாப்பிடலாம் “என்றாள் சித்ரா
“அது காசு பிடுங்குற ஹோட்டல். சிக்கன் சூப் நானூறு ரூபாய். தெண்டம். சாப்பாடும் நல்லா இருக்காது. நாம புதுசா திறந்திருக்கிற ரெட்சில்லீஸ் போவோம். “
“அது எங்க இருக்கு“
“மே போட்டு பாத்துகிடுவோம்“.
“இப்பவே மணி பத்து“ என்றாள் சித்ரா
“பக்கத்துல தான் இருக்கு. போயிடலாம்“ என்றான் கார்த்திக்
அவர்கள் பைக்கில் கிளம்பினார்கள். மேப்பில் காட்டிய இடத்தில் ஹோட்டல் இல்லை. சுற்றி அலைந்து இரண்டு தெருவின் பின்னால் இருந்த ஹோட்டலை கண்டுபிடித்தார்கள். சிறிய இடம். அதிகக் கூட்டமிருந்தது. காத்திருந்து அவர்கள் இடம்பிடித்தார்கள்
ப்ரியா அசதியான முகத்துடன் “தூக்கம் வருதும்மா“ என்றாள்
“உனக்கு பிடிச்ச வீச்சுப் பரோட்டா சாப்பிடு“ என்றான் கார்த்திக்
ப்ரியா தலையாட்டிக் கொண்டாள். அவர்கள் ஆர்டர் செய்த உணவை தயார் செய்து கொண்டு வருவதற்கு அரைமணி நேரமாகியது. உணவில் ஒரே காரம். அவளால் சாப்பிட முடியவில்லை. கார்த்திக் கொத்து பரோட்டாவை ருசித்துச் சாப்பிட்டான். ப்ரியா தூக்க கலக்கத்தில் பரோட்டாவை கொறித்தாள். மீதமான உணவை பார்சல் பண்ணி வாங்கிக் கொண்டு அவர்கள் வீடு நோக்கி கிளம்பும் போது பதினோறு மணியைத் தாண்டியிருந்த்து
அவர்கள் குடியிருந்த வீடு ஜாபர்கான் பேட்டையினுள் இருந்தது. வழியில் நிறையத் தெரு நாய்கள். அடுக்குமாடி குடியிருப்பில் குடியிருக்கக் கார்த்திற்கு விருப்பமில்லை. உள்ளோடியிருந்தாலும் அங்கே தான் தனி வீடு வாடகைக்குக் கிடைத்தது. கூவத்தை ஒட்டிச் செல்லும் பாதையது. நிறையக் கொசுகள். அவர்கள் குடியிருந்தது இரண்டு படுக்கைகள் உள்ள வீடு.
அந்த வீதியில் இருந்த எவருடனும் அவர்களுக்குப் பழக்கமில்லை. பைக் இருப்பதால் தேவையானதை மெயின் ரோட்டில் போய் வாங்கிக் கொள்ளலாம். நிறைய ஷேர் ஆட்டோ உள்ளது. சித்ரா தினமும் ஷேர் ஆட்டோவில் தான் அலுவலகம் போய் வந்தாள்.
திரும்பி வர லேட்டாகும் என்று அவள் முன்யோசனையாக வெளியே இருந்த லைட்டை போட்டுவந்திருந்தாள். அந்த வெளிச்சம் தெருவில் நுழையும் போது தனியே தெரிந்தது.
பைக்கை நிறுத்திவிட்டு கார்த்திக் முன்கேட்டை தள்ளியபடி “சாவியைக் கொடு “என்றான்
அவள் தனது ஹேண்ட்பாக்கினுள் கையை விட்டு தேடினாள். சாவி அகப்படவில்லை.
“சாவி எங்கே“ என்று எரிச்சலுடன் கேட்டான்
ஹேண்ட்பேக்கை முழுவதும் திறந்து தேடினாள். சாவியைக் காணவில்லை. சைடு ஜிப், உள்ஜிப் எனத் தேடினாள். எங்கும் சாவியில்லை
“சாவியைக் காணோம்“ என்று தயங்கியபடியே சொன்னாள்
“இண்டர்வல்ல நீ தானே பாப்கார்ன் வாங்கினே. அப்போ ஹேண்ட் பேக்ல இருந்து தானே பணம் எடுத்துருப்பே“
“அது சைடு ஜிப்ல பணம் வச்சிருந்தேன்“ என்றாள்
“அப்போ சாவி எங்கே“
“தெரியலை“ என்று தலைகுனிந்தபடியே சொன்னாள்
“சினிமா தியேட்டர்ல விழுந்திருக்குமா“ என்று கோபத்துடன் கேட்டான் கார்த்திக்
“இருக்கலாம்“ என்று தலையாட்டினாள்
“நான் போய்ப் பார்த்துட்டு வர்றேன். நீங்க வெயிட் பண்ணுங்க“ என்று அவளை முறைத்தபடியே சொன்னான்
“நீ சாவியை எடுக்கவேயில்லைம்மா. சாவி கீ ஸ்டாண்ட்ல இருந்ததைப் பார்த்தேன்“ என்றாள் ப்ரியா
“அப்பவே சொல்ல வேண்டியது தானே“ என ப்ரியாவை கோவித்தாள் சித்ரா
“நீ கிளம்பும் போது எடுத்துக்கிடுவேனு நினைச்சேன்“ என்றாள் ப்ரியா
“சாவியை வெளியே எடுக்காமல் கதவை பூட்டியிருக்கிறோம் என்பது சித்ராவிற்கு உறைந்தது. அந்தப் பூட்டிற்குச் சிறிய சாவி தரப்பட்டிருந்தது. அது நவீனமான பூட்டு. பழைய காலத்துச் சாவிகள் போலப் பெரியதாக இருந்தால் மறக்கவே மறக்காது. அம்மா தன் இடுப்பில் வீட்டுசாவியைச் சொருகியிருப்பாள். இந்தப் பூட்டுக்கு வேறு சாவி கிடையாது. கார்த்திக் இன்னொரு சாவி வைத்திருந்தான். அதை அலுவலகத்தில் தொலைத்துவிட்டான்.
“வீட்டுச்சாவி உள்ளே தான் இருக்கு“ என்று மெதுவான குரலில் சொன்னாள் சித்ரா
“இப்போ உள்ளே எப்படிப் போறது“ என்று கோபமாகக் கேட்டான் கார்த்திக்
“யாரையாவது ஹெல்ப்க்கு கூப்பிடுவமா“ என்று கேட்டாள் சித்ரா
“இப்போ மணி என்ன தெரியுமா. 11.30. இந்நேரம் யாரை கூப்பிடுறது“
“நான் வேணும்னா.. நித்துவை கேட்கட்டும்மா“ என்றாள்
“கேட்டுத்தொலை. நான் மெயின்ரோடு வரைக்கும் போயிட்டு வர்றேன்“
என்று பைக்கை கிளம்பிச் சென்றான்
பூட்டப்பட்ட வீட்டின் முன்னால் நின்றபடியே அவளது தோழி நித்யாவிற்குப் போன் செய்தாள். அவள் பாதித் தூக்கத்தில் கண் விழித்தபடியே “என்னடி யாருக்காது உடம்பு முடியலையா“ என்று கேட்டாள்
“வீட்டு சாவியை உள்ளே வச்சி பூட்டிட்டேன். என்ன பண்ணுறதுனு தெரியலை“
“நீ பேசமா. இங்கே வந்துடு.. காலைல பாத்துகிடுவோம்“
“யாராவது பூட்டு திறக்கிறவங்க கிடைப்பாங்களா“
“இந்நேரம் யார் வருவா“
“ஏதாவது போன் நம்பர் இருந்தா குடு. கேட்டு பாக்குறேன்“
“அதெல்லாம் வேணாம். நீங்க கிளம்பி என் வீட்டுக்கு வந்துடுங்க“
“பாக்குறேன்“ என்றபடியே போனை துண்டித்தாள்
வெளியே எவ்வளவு நேரம் நிற்பது. இந்த வீதியில் ஒரு வீட்டில் கூடத் திண்ணை கிடையாது. படிக்கட்டுகள் கிடையாது. இரும்பு கேட்டுகளைத் தவிர வேறு எதுவும் கண்ணில் படவில்லை. ஒரு பழைய நாற்காலியை வெளியே போட்டு வைத்திருக்கக் கூடாதா. இது போன்ற நேரத்தில் உட்காரலாமே என்று தோன்றியது
ப்ரியா தூக்கத்தை அடக்க முடியாமல் கேட்டாள்
“இப்போ என்னம்மா செய்றது“
அவளை எங்க படுக்கச் சொல்வது. அந்த வீதி திடீரெனஅவளை அச்சுறுத்துவதாக மாறியது.
உதவிக்கு என்று யாரை அழைப்பது. யார் வந்தும் என்ன செய்து விட முடியும். பேசாமல் நித்யா வீட்டிற்குப் போய் இரவு தங்கிக் கொள்ளலாமா
கார்த்திக் பைக்கில் திரும்பி வந்த போது முகம் இறுகிப்போயிருந்த்து.
“பூட்டு திறக்க ஒரு ஆளை வரச்சொல்லியிருக்கேன். ஆயிரம் ரூபாய்க் கேட்கிறான். “
அவர்கள் வீட்டின் முன்பு காத்திருந்தார்கள். வீதியின் கடைசியில் இருந்த தெருவிளக்குப் பிரகாசமாக எரிந்து கொண்டிருந்தது. என்ன செய்வது எனத் தெரியாமல் அதை நோக்கி சித்ரா நடந்தாள். படுத்துகிடந்த தெரு நாய் ஒன்று தலையைத் தூக்கி பார்த்துவிட்டு குலைக்கவில்லை
ஐம்பது வயதுள்ள ஒரு ஆள் பைக்கில் வந்திருந்தார். அவரது பையில் நிறைய விதமான சாவிக் கொத்துகள். அவர் கார்த்திக்கிடம் செல்போனிலுள்ள டார்ச்லைட்டை அடிக்கும்படி சொன்னார்
கார்த்திக் செல்போனில் இருந்து வெளிச்சத்தைக் கதவை நோக்கி திருப்பினான்.
மாறிமாறி சாவிகள் போட்டும் கதவைத் திறக்க முடியவில்லை
“இது ஒரிஜினல் சாவி போட்டா மட்டும் தான் திறக்கும் சார். இந்தப் பூட்டு விலை அதிகம். கம்பெனில கேட்டா தான் டூப்ளிக்கேட் சாவி கிடைக்கும்“
“இப்போ என்ன செய்றது“
“யாராவது கார்பெண்டரை கூப்பிட்டு பாருங்க. கதவை உடைச்சி திறந்து தருவாங்க“
“இது வாடகை வீடுங்க. கதவை உடைச்சா என்ன ஆகுறது“ என்றான் கார்த்திக்
“வேற வழியில்லை சார். என்கிட்ட இருக்கிற சாவி எதுவும் செட் ஆகலை“.
“உங்களை விட்டா வேற வழியில்லை. எப்படியாவது திறந்து குடுத்துருங்க“
“பாவம் உங்க வொய்ப். பொண்ணு வேற இப்படி நின்னுகிட்டு இருக்காங்க. நான் வீட்ல போயி வேற சாவி இருக்கானு பாத்துட்டு வர்றேன். “
“நான் கூட வரட்டும்மா“
“வேணாம் சார். பொம்பளை புள்ளை தனியா இருட்டுல எப்படி இருப்பாங்க. நான் வந்துடுறேன்“
என்று அந்த ஆள் பைக்கில் கிளம்பிப் போனார். சித்ராவிற்குத் தான் ஏன் இவ்வளவு மறதியாக நடந்து கொண்டோம் என்று குற்றவுணர்வு மேலோங்கியது
“நாம நித்துவீட்டுக்கு போய் நைட் தங்கிகிடுவமா“ என்று தயங்கி தயங்கி கேட்டாள்
“அந்த ஆள் வந்து பூட்டை திறக்க முடியலைன்னா. போவோம்“ என்றான் கார்த்திக்
வீட்டுச்சாவியைத் தொலைத்துவிடுவோம் என்ற பயமில்லாத பெண் எவருமிருக்க முடியாது. யார் சாவியைத் தொலைத்துவிட்டாலும் தப்பு அவள் மேல் தான் வந்து விழும். கார்த்திக் மாலை வீட்டிற்கு வந்திருந்தால் நிச்சயம் இப்படி நடந்திருக்காது. ஆனால் அதைச் சொன்னால் கோவித்துக் கொள்வான்.
பிடிக்காத சினிமா, பிடிக்காத ஹோட்டல். இத்துடன் இப்படிச் சாவியில்லாமல் வெளியே நிற்பது என்பது அவளுக்குத் தாங்க முடியாத எரிச்சலை உருவாக்கியது. அடுக்குமாடிக் குடியிருப்பில் இப்படிப் பிரச்சனை வராது. வந்தாலும் உதவிக்கு வாட்ச்மேனை கூப்பிடலாம் என்று நினைத்துக் கொண்டாள்.
அவர்கள் மூவரும் வீட்டின் வெளியே நின்றிருந்தார்கள். ப்ரியா பைக் மீது சாய்ந்து நின்று கொண்டிருந்தாள். நித்யா போன் செய்து அவள் கிளம்பி வருகிறாளா என்று கேட்டாள்
“தெரியலை. பூட்டுதிறக்கிறவர் அவர் வீட்டுக்குப் போய் வேறு சாவி கொண்டுட்டு வரப்போயிருக்கார்“
“நான் வேணும்னா கார்த்திக் கிட்ட பேசவா“
“வேணாம். இப்போ இருக்கக் கோபத்துல உன் மேல வள்ளுனு விழுவார்“
“எப்போ வேணும்னாலும் நீ கிளம்பி வந்துரு“.. என்றபடியே நித்யா போனை துண்டித்தாள்.
ஊரிலிருக்கும் அம்மாவிற்குப் போன் பண்ணி பேச வேண்டும் போலிருந்தது. இந்நேரம் போன் வந்தால் அம்மா பதறிவிடுவாள். அதுவும் இது போன்ற நெருக்கடி என்றால் அவளுக்கு என்ன செய்வது என்றே தெரியாது. ஆனால் அவள் தானே கார்த்திகை திருமணம் செய்து கொள்ளச் செய்தவள். அவளுக்குப் போன் செய்தால் என்ன என்று தோன்றியது.
பூட்டு திறக்கிறவர் வரவேயில்லை. கார்த்திக் அவரது போன் நம்பரை திரும்பத் திரும்ப அழைத்தபடியே இருந்தான். அவர் போனை எடுக்கவில்லை. இவ்வளவு பெரிய மாநகரில் உதவி செய்ய ஆளே இல்லை. அந்த வீடு திறக்கமுடியாத குகையைப் போலாகியிருந்தது. எரிச்சலில் அவனும் தெருமுனை வரை நடந்து வந்தான்
பூட்டு திறக்கிறவர் திரும்பி வந்தபோது அவரது பைக்கில் இன்னொரு ஆளும் உடனிருந்தான் .அவர்கள் ஒன்றாகப் பூட்டினை திறக்க முயன்றார்கள். உடன் வந்திருந்த இளைஞன் தன்னிடமிருந்த சாவியை உரசி உரசி பூட்டினுள் நுழைத்தான். கதவில் காதை வைத்து ஒசையைக் கேட்டான். நீண்ட போராட்டத்தின் பிறகு கதவு திறந்து கொண்டது.
ப்ரியா அவசரமாகப் பாத்ரூமை நோக்கி ஒடினாள். கார்த்திக் அவருக்குப் பணம்கொடுத்து விட்டு நன்றி சொன்னான்
சித்ரா வீட்டினுள் நுழைந்தவுடன் கீஸ்டேண்டில் இருந்த சாவியைப் பார்த்தாள். சிறிய யானை பொம்மையுடன் அந்தச் சாவி ஆடிக் கொண்டிருந்தது. அதைக் கையில் எடுத்துக் காட்டியபோது பூட்டுத் திறப்பவர் சொன்னார்
“மறதி யாருக்கும் வர்றதுதானம்மா. பகலா இருந்தா இவ்வளவு நேரம் வெயிட் பண்ண வேண்டியிருக்காது. உங்களுக்காக நான் சைதாப்பேட்டை வரைக்குப் போயி இவனைக் கூட்டிட்டு வந்தேன். இப்ப வர்ற பூட்டு எல்லாம் நமக்குத் தெரியாது. அதெல்லாம் இவனுக்குத் தான் அத்துபடி“
சித்ரா அந்த இளைஞனுக்கு ஐநூறு ரூபாய் கொடுத்தாள்
“பரவாயில்லைக்கா. சார் பணம் குடுத்துட்டார்“ என்றான் இளைஞன்
“எங்களுக்காக இந்நேரம் வந்தீங்களே அதுக்குத் தான் இந்தப் பணம்“ என்றாள் சித்ரா
“இந்த சாவியை டூப்ளிகேட்டா வச்சிக்கோங்க“ என்று தான் செய்த சாவியை அவளிடமே கொடுத்தான்.
அவர்கள் கிளம்பிப் போன பிறகு கதவை மூடுவதா இல்லை அப்படியே திறந்து வைத்திருப்பதா என்று தெரியாமல் பார்த்துக் கொண்டேயிருந்தாள். அவளுக்கு அழுகை முட்டியது. ஆனால் திருமண நாளின் போது யாராவது அழுவார்களா என்று தன்னைத் தானே சமாதானம் செய்து கொண்டாள். கார்த்திக் உடை மாற்றிவிட்டு படுக்கைக்குப் போயிருந்தான்
திறந்துகிடந்த கதவை தாண்டி வீதிக்கு வந்தாள் சித்ரா. மணி இரண்டினைக் கடந்திருந்தது. இந்த நேரத்தில் ஒரு நாளும் தெருவினைக் கண்டதில்லை. அலாதியான தெருவிளக்கின் ஒளியும் அடைத்து சாத்திய வீடுகளின் அமைதியும் விரிந்த அந்தத் தெரு ஏதோ ஒவியம் ஒன்றிலிருந்து உயிர்பெற்று வந்துவிட்டது போலிருந்தது.
ஹோட்டலில் சரியாகச் சாப்பிடாமல் வந்ததால் பசி எடுப்பதாகத் தோன்றியது. பிரிட்ஜிலிருந்து தோசை மாவை எடுத்துத் தோசை சுட்டு சாப்பிடலாமா என்று நினைத்தாள். பின்பு தன்னைத் தானே தண்டித்துக் கொள்ளச் சாப்பிடாமல் விட வேண்டியது தான் என்று அவளுக்குத் தோன்றியது.
அதுவரை நடந்த களேபரம் யாவையும் மறந்து அவள் கதவைப் பூட்டினாள். இன்னும் நாலு மணி நேரத்தில் மறுநாள் துவங்கிவிடும். சமைக்க வேண்டும். ப்ரியாவை பள்ளிக்கு அனுப்பிவிட்டு ஆபீஸிற்குக் கிளம்பி ஒட வேண்டும் என்பது ஆயாசமாக இருந்தது.
திருமண நாளும் அதுவுமாக அவர்கள் ஜோடியாகப் புத்தாடையில் ஒரு போட்டோ எடுத்துக் கொள்ளவில்லையே என்று படுக்கைக்குப் போன போது தோன்றியது
அது மட்டும் தான் குறைச்சல் என்று தனக்குத் தானே சொல்லிக் கொண்டாள்
•••
உலகெங்கும் விரியும் தமிழ்
(இந்து தமிழ் திசையில் வெளியானது.)
இணையத்தின் வருகையால் தமிழ் இலக்கியம் இன்று உலகம் முழுவதுமுள்ள தமிழர்களால் வாசிக்கப்படுகிறது. இரண்டாயிரத்திற்குப் பிறகான தமிழ் இலக்கியம் பன்முகத்தன்மை கொண்டது. தமிழகம் மட்டுமின்றி இலங்கை, மலேசியா, சிங்கப்பூர், கனடா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா, நார்வே, இங்கிலாந்து, ஜெர்மனி, சுவிட்சர்லாந்து, பர்மா, ஹாங்காங், வியட்நாம், ஆப்பிரிக்கா மொரிசீயஸ், பிரான்ஸ் எனச் சர்வதேச அளவில் வாழும் தமிழர்கள் இன்றைய தமிழ் இலக்கியத்தை வளர்த்தெடுப்பதில் முக்கியப் பங்கு வகிக்கிறார்கள்.
நோபல் பரிசு, புக்கர் விருது, டப்ளின் விருது எனப் புகழ்பெற்ற விருதுகளின் பட்டியலில் ஏன் தமிழ்ப் படைப்புகள் எதுவும் இடம்பெறுவதில்லை. முதற்காரணம் நாம் இன்றும் நமக்குள்ளாகவே பெருமையைப் பேசிக் கொண்டிருக்கிறோம். சர்வதேச அளவில் அதைக் கொண்டு செல்ல பெரிய முயற்சிகள் எடுக்கவில்லை. இன்றுவரை ஒரு தமிழ் நாவல் கூட இந்தியாவின் அங்கீகரிக்கப்பட்ட 23 ஆட்சி மொழிகள் யாவிலும் வெளியானதில்லை.
ஆண்டுதோறும் நூற்றுக்கும் மேற்பட்ட பிறமொழி படைப்புகள் தமிழில் மொழியாக்கம் செய்யப்படுகின்றன. ஆனால் தமிழிலிருந்து ஆங்கிலத்திற்கோ பிற மொழிகளுக்கோ செல்லும் படைப்புகளின் எண்ணிக்கை மிகமிகக் குறைவு.
சீன ஜப்பானிய இலக்கியங்கள் இன்று பெற்றுள்ள அங்கீகாரத்திற்கு முக்கியக் காரணம் அரசும், கல்வி நிறுவனங்களும், தனிப்பட்ட ஆய்வாளர்கள். மொழிபெயர்ப்பாளர்களின் தொடர் செயல்பாடுகளுமேயாகும். அத்தகைய பணியை நாமும் முன்னெடுக்கவேண்டும். குறிப்பாக அயல்நாடுகளில் செயல்பட்டு வரும் தமிழ்ச் சங்கங்கள். இலக்கிய அமைப்புகள் இதனைத் தனது முதற்கடமையாகச் செய்ய வேண்டும்.
இணையத்திலும் இதழ்களிலும் வெளியாகும் படைப்புகளைத் தொடர்ந்து வாசித்து வருபவன் என்ற முறையில் தமிழ் புனைகதையினை அடுத்த தளத்திற்குக் கொண்டு செல்லும் இளம்படைப்பாளிகள் சிலரை அறிவேன். இவர்களில் திருச்செந்தாழை, செந்தில் ஜெகன்நாதன், நரன், சுநில் கிருஷ்ணன், , சுஷில்குமார், போகன்சங்கர், மயிலன் ஜி சின்னப்பன், கமலதேவி, கலைச்செல்வி, ஐ.கிருத்திகா, சுரேஷ் பிரதீப், தூயன், கே.ஜே.அசோக்குமார், காளி பிரசாத், அகரமுதல்வன், கார்த்திக் பாலசுப்பிரமணியன், முத்துராசா குமார் முக்கியமானவர்கள்.
மரபாகத் தமிழ்ச் சிறுகதைகள் பேசிய விஷயங்களிலிருந்து விடுபட்டு புதிய கருப்பொருளுடன் புதிய வடிவத்துடன் புதிய கதைமொழியினை இவர்கள் முன்னெடுக்கிறார்கள். உலகமயமாக்கலின் விளைவாகவும் நுகர்வு பண்பாட்டின் காரணமாகவும் இன்றைய வாழ்க்கை சிதறடிக்கப்பட்டிருக்கிறது. பண்பாட்டுத் தொடர்ச்சி அறுபட்டு. மிதக்கும் உலகில் சஞ்சரிப்பது போல நம் வாழ்க்கை ஊசலாடுகிறது. எந்த நம்பிக்கைகள். விழுமியங்கள் இதுவரை வாழ்க்கையைக் காப்பாற்றி வந்ததோ அது பறிபோய்விட்டிருக்கிறது. ஆண் பெண் உறவு. பணியிட நெருக்கடிகள். குடும்ப அமைப்பின் வன்முறை. பாலியல் தேர்வு, புகலிட வாழ்வு, குற்றவுலகம் எனக் கிளைவிடும் இன்றைய வாழ்வின் திரிபை இன்றைய புனைகதைகள் பேசுகின்றன
தமிழகத்திற்கு வெளியிலிருந்து தமிழ் இலக்கியத்திற்குத் தொடர்ந்து பங்களித்து வரும் எழுத்தாளர்களில் ஆறு பேரைச் சிறப்பாகக் குறிப்பிட விரும்புகிறேன்.

சிங்கப்பூரைச் சார்ந்த எழுத்தாளர் சித்துராஜ் பொன்ராஜ், இதுவரை மூன்று நாவல்கள், இரண்டு சிறுகதைத் தொகுப்புகளை வெளியிட்டுள்ளார். சிங்கப்பூரின் சமகால வாழ்க்கை, கடந்தகால வரலாறு, மறைந்து போன நினைவுகள். சட்டவிரோத குடியேற்றம் எனப் பல்வேறு ஊடு இழைகளைக் கொண்டு சிறப்பான கதைகளை எழுதி வருகிறார்.
ரா.செந்தில்குமார் ஜப்பானில் வசிக்கிறார். இவரது இசூமியின் நறுமணம் என்ற சிறுகதைத் தொகுப்பு இரண்டு ஆண்டுகளின் முன்பு வெளியானது. இந்தத் தொகுப்பில் எட்டுக் கதைகள் ஜப்பானிய வாழ்க்கையைப் பேசுகின்றன. அதன் வழி நாம் அறியாத ஜப்பானிய பண்பாடு, நகரச்சூழல் மற்றும் சமகால நிகழ்வுகள் அழகாகப் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன.
கனகராஜ் பாலசுப்ரமணியம் கன்னடத்திலும் தமிழிலும் எழுதி வருகிறார். தற்போது சவுதி அரேபியாவில் ஆங்கில ஆசிரியராகப் பணியாற்றுகிறார்.. இவரது வாட்டர்மெலன் சிறுகதை தொகுப்பு முக்கியமானது. இவரது கதைகள் தமிழகத்திலிருந்து கர்நாடகாவிற்குப் புலம்பெயர்ந்த தமிழர்களின் கடந்த கால வாழ்க்கையினைப் பேசுகின்றன இவரது சமீபத்திய நாவலான அல்கொஸாமா அரபு தேசத்தில் வசிக்கும் பதூவீக்களின் வாழ்க்கையைச் சிறப்பாகப் பதிவு செய்திருக்கிறது.
மலேசியாவில் பிறந்து வளர்ந்தவர் ம.நவீன். இவரது சிறுகதைகள் மற்றும் நாவல்கள் மலேசியத் தமிழர்களின் இன்றைய வாழ்க்கைச் சூழலைச் சித்தரிக்கின்றன. இவரது சிகண்டி நாவல். திருநங்கைகளின் வாழ்க்கையை அசலாகப் பதிவு செய்திருக்கிறது. குறிப்பாகச் சமூகத்தில் அவர்களின் நிலை மற்றும் அவர்கள் எதிர்கொள்ளும் நெருக்கடிகள். பெருநகரத்தின் இருண்ட வாழ்வு என நுட்பமாக எழுதப்பட்டிருக்கிறது
எழுத்தாளர் ஹஸீன் கிழக்கு இலங்கையின் அக்கரைப்பத்தில் வசிப்பவர். சிறியதும் பெரியதுமாக எட்டுக் கதைகள், பூனை அனைத்தும் உண்ணும் என இரண்டு சிறுகதைத் தொகுப்புகளை வெளியிட்டுள்ளார். மிகக் குறைவாக எழுதுபவர். நான் போரின் குழந்தை எனும் ஹஸீன் அபூர்வமான வாசிப்பனுபவத்தைத் தரும் சிறுகதைகளை எழுதியிருக்கிறார்.
அமெரிக்காவில் வசிக்கும் நம்பி கிருஷ்ணன் சொல்வனம் இணைய இதழில் தொடர்ந்து எழுதி வருகிறார். பாண்டியாட்டம் என்ற கட்டுரை தொகுப்பினை வெளியிட்டிருக்கிறார். நோபல் பரிசு பெற்ற எழுத்தாளரான ரொபெர்த்தோ கலாஸ்ஸோ பற்றிய இவரது சமீபத்திய தொடர் கட்டுரை நிகரற்றது. உலக இலக்கியம் குறித்த இவரது பல்வேறு கட்டுரைகள் மிகச்சிறப்பானவை. ஆழ்ந்த வாசிப்பும், செறிவான புரிதலும். நேர்த்தியான எழுத்துமுறையும் சிறந்த மொழியாக்கமும் கொண்ட இவரது பங்களிப்பு மிகுந்த பாராட்டிற்குரியது.
உலகில் அன்பு குறையும் போது அதைத் தருவதற்காகப் புத்தகங்கள் எப்போதும் காத்துக் கொண்டிருக்கின்றன என்கிறார் உம்பர்தோ ஈகோ, புத்தக வாசிப்பு என்பது அன்பைப் புரிந்து கொள்வதும் பகிர்வதுமேயாகும்.
••
April 22, 2022
உலக புத்தக தின வாழ்த்துகள்
அனைவருக்கும் மனம் நிறைந்த உலக புத்தக தின வாழ்த்துகள்.

நேற்று சென்னை மாநிலக் கல்லூரியில் மாணவர்கள் மத்தியில் உரையாற்றினேன். இரண்டு மணி நேர நிகழ்ச்சி. அரங்கு நிரம்பியிருந்தது. நான்கு மணிக்கு முடியவேண்டிய நிகழ்வு ஐந்து மணி வரை நீண்டு சென்றது. மாணவர்கள் ஆர்வமாகப் பங்கேற்று கேள்வி கேட்டார்கள். நிறைய மாணவர்கள் எனது புத்தகங்களை ஆழ்ந்து படித்திருக்கிறார்கள். சிறப்பான கேள்விகளை எழுப்பினார்கள் .
இந்த நிகழ்வினைச் சிறப்பாக ஏற்பாடு செய்த கல்லூரி முதல்வர் முனைவர் ராமனுக்கும் துணை நின்ற பேராசிரியர்களுக்கும் கலந்து கொண்ட மாணவர்களுக்கும் எனது அன்பும் நன்றியும்
••
உலகெங்கும் விரியும் தமிழ்
இன்றைய இந்து தமிழ் திசை நாளிதழில் உலகப் புத்தக தினம் குறித்து சிறப்பு கட்டுரைகள் வெளியாகியுள்ளன.
அதில் தமிழின் இளம் சிறுகதையாசிரியர்கள் மற்றும் அயலில் வாழும் முக்கிய தமிழ் படைப்பாளிகள் பற்றி ஒரு கட்டுரை எழுதியிருக்கிறேன்

டால்ஸ்டாய் வரவேற்கிறார்.
P பொன் மாரியப்பன்
தூத்துக்குடி
டால்ஸ்டாய் என்பவர் யார்? நான் ஏன்? அவரைத் தெரிந்துகொள்ளவேண்டும், பல கேள்விகளோடு நாவலை வாசிக்க ஆரம்பித்தேன்.

டால்ஸ்டாய் பற்றி நான் வாசித்த முதல் நாவல் இதுதான். முதல் தொடக்கமே உள்ளம் உருக வைத்தது. முதல் அத்தியாயம் முதல் கடைசி அத்தியாயம் வரை டால்ஸ்டாய் என் பக்கம் இருப்பதை உணர்ந்து கொண்டேன். அந்த வயது முதிர்ந்த டால்ஸ்டாயின் அட்டை படம் புதிய வாசனையாக என்னைச் சூழ்ந்தது.
நான் வாசிக்கும் போது அவரும் வாசித்தார். நான் துயரம் கொள்ளும்போது அவரும் துயரம் கொண்டார்.
யஸ்னயா போல்யான பண்ணையில் நுழைவு வாயிலுக்குள் டால்ஸ்டாய் என்னை அழைத்துச் செல்வது போன்ற பிரமை இருந்தது.
கிறிஸ்துமஸ் என்றவுடன் வீட்டில் தொங்கவிடப்படும் நட்சத்திரமும், கேக்குகளும், புத்தாடைகளும் தான் நினைவுக்கு வரும். கிறிஸ்மஸ் பண்டிகைக்கு 15 நாட்கள் முன்னதாகவே ஸ்டார்கள் தொங்க விடப்படும்.
டால்ஸ்டாய்க்கு பண்டிகையை விட எழுத்து தான் அவரது நிரந்தரக் கொண்டாட்டம். நிகரற்ற சந்தோசம்.
கிறிஸ்துமஸ் பண்டிகை நாளில் சிவப்பு அங்கி அக்ஸின்யா இறந்து விடுகிறாள் யார் இந்த அக்ஸின்யா ? எஸ். ராமகிருஷ்ணன் அவர்களின் எழுத்தாளுமையில் வாசகனைத் தேட வைக்கிறது .
8ம் வகுப்பு படித்த எனக்கு ரஷ்ய எழுத்தாளர் டால்ஸ்டாயை அறிமுகம் செய்தது, மண்டியிடுங்கள் நாவலின் ஆசிரியர் எஸ்.ராமகிருஷ்ணன் அவர்களையே சாரும்.
டால்ஸ்டாய் பற்றித் தெரியாதவர்களுக்கெல்லாம் இந்த நாவல் ஒரு கொடை என்றே சொல்லலாம்.

சாமானிய மக்களும் புரிந்து கொள்ளும் வகையில் தன் எழுத்து ஆளுமையாளும் எளிய நடையாலும் வெற்றியும் கொண்டார் என்று தான் சொல்ல வேண்டும். வாசிக்கும் ஒவ்வொரு வாசகர்களுக்குள் எஸ்.ராமகிருஷ்ணன் அவர்களுக்கு “தந்தையே வணக்கம் ! தந்தையே வணக்கம் !! என்று முழங்கிட வைக்கிறது.
வெளியானவுடனே நாவலை வாசித்து, அதன் அனுபவங்களைத் தங்களிடம் முதன்முதல் வாசகனாகக் கூற விரும்பினேன். ஆனால் காலம் கடந்துவிட்டது.
இந்த எழுத்துக் கண்ணாடியில் இரண்டு முகம் தெரிகிறது. ஒரு முகம் டால்ஸ்டாய் , மற்றொரு முகம் எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன். நான் வாழும் வாழ்க்கையின் பிம்பங்களை அந்தக் கண்ணாடி தான் வெளிக்காட்டுகிறது.
மண்டியிடுங்கள் தந்தையே நாவலில் முதல் அத்தியாயம் சிவப்பு அங்கி அக்ஸின்யா முதல், கடைசி அத்தியாயம் நினைவின் மலர்கள் வரை, எல்லா வாக்கியங்களுக்கும் கோடு போட்டுக் கொண்டே தான் வாசித்து வந்தேன். கடைசி அத்தியாயம் அற்புதமான நினைவின் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு விடுகின்றன.
இந்த நாவலின் வழியாக டால்ஸ்டாயை பற்றி நன்கு புரிந்து தெரிந்து கொண்டேன். டால்ஸ்டாயை பற்றி மேலும் தெரிந்து கொள்ள இந்நாவலை வாசித்து முடித்த பின்பு பக்கம் வெற்றுப்பக்கத்தைத் தேடினேன். இன்னும் அதிகப் பக்கங்களை எழுதியிருந்தால் டால்ஸ்டாய் எல்லா உள்ளங்களிலும் முழுமையாக வாழ்ந்து கொண்டிருப்பார் என்பதில் ஐயமில்லை.
நாவலின் ஒவ்வொரு வாக்கியத்தையும் கோடு போட்டுக் கொண்டே இருக்கும் போது கண்ணீர்த் துளிகள் தான் அளவுகோலாகப் பயன்பட்டது.
அக்ஸின்யா யார்?ஏன்? பண்ணை வீட்டில் வந்து வேலை செய்து இறந்து விடுகிறாள். என்ற கேள்விக்குப் பின்னே ஒரு வாழ்க்கையே மறைந்திருக்கிறது.
என்னைப் பண்ணை வீட்டில் விட்டு விட்டு அங்கே நடக்கும் சம்பவங்களைச் சந்தோசமாகக் கண்டு களித்திடச் செய்கிறார் எழுத்தாளர்
சிவப்பு அங்கி அக்ஸின்யா ஒவ்வொரு முறையும் டால்ஸ்டாயின் வருகைக்காகவும் வாசத்திற்காகவும் வீட்டின் முன் முற்றத்தில் காத்திருக்கிறாள். நினைத்துப் பார்க்கையில் அந்தக் காட்சி என் மனதை வருடியது. தெரியாத பருவ பிழையின் காரணமாக இருவருக்குள்ளும் நடந்த தவறுகளுக்குத் தங்களைத் தானே வருத்திக் கொண்டார்கள்.
ஆனால் இருவரும் நியாயம் கேட்கவில்லை. உரிமை கோரவில்லை டால்ஸ்டாய் மனதிற்குள்ளாகத் தினம் தினம் வருந்திக் கொள்வதை நாவலில் நன்றாக உணரமுடிகிறது. அக்ஸின்யா டால்ஸ்டாயின் வாரிசைச் சுமப்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறாள். அவர்கள் இருவரும் சந்தித்த காட்சிகளை எழுத்தாளர் கூறும் போது ஆழமான கண்ணீர் பொங்கியது .
அக்ஸின்யா கையில் குழந்தை திமோஃபி வைத்துக் கொண்டு, திக்கற்றவளாக நிற்கையில் டால்ஸ்டாயின் பண்ணையிலேயே வேலைக்குச் சேர்ந்து கொள்கிறாள்.
அர்ஜுனனுக்குத் தேரோட்டியாகக் கண்ணன் இருப்பதுபோல டால்ஸ்டாயின் குதிரை வண்டிக்கு குதிரைக்காரனாக வருகிறான் திமோஃபி. தாயின் அரவணைப்பிலிருந்த திமோஃபிக்கு அன்றுதான் தந்தையின் வாசம் நெருக்கமாகிறது.
அந்த மணத்தை நம்மாலும் உணரமுடிகிறது. தாயின் அரவணைப்பில் விருப்பு வெறுப்புடன் வாழ்ந்த திமோஃபிக்கு ஏற்பட்ட உள்ளுணர்வுகளைக் குழந்தை முதல் பால்ய வயது வரை உள்ள கோபம், தாபம் வாசிப்பில் தொய்வு ஏற்படாதபடி எஸ் ராமகிருஷ்ணன் அவர்கள் எழுத்து நடையில் நம்மைச் சிறப்பாக வழிநடத்துகிறார்.
சிறுவயது முதல் பால்ய வயது வரை கூடவே வரும் நண்பன் முட்டாள் டிமிட்ரியிடம் எல்லாமே கற்றுக் கொள்ளலாம். இது தான் நாவலின் தொடக்கம்.
இந்நாவலை வாசிக்க எல்லாக் கதாபாத்திரங்களுடன் ஒன்றிணைந்து அவர்களில் ஒருவனாக நானும் வாழ்ந்து விட்டேன்.
நாம் கற்றுக் கொள்ள வேண்டிய வாழ்க்கை பாடங்கள் இதில் நிறைய உள்ளன.
மண்டியிடுங்கள் தந்தையை நாவல் ஒரு நாள் ரஷ்யாவின் உயரிய விருதைப் பெறும் அன்று எஸ் ராமகிருஷ்ணன் அவர்களைப் பாராட்டி மண்டியிட்டு தலை வணங்குவேன்
April 20, 2022
இந்திய இலக்கியத்தின் முகம்
கலை கார்ல்மார்க்ஸ்
திருவாரூர்

•••
நிலவழி குறித்த வாசிப்பனுபவம்

இந்நூலில் பத்துக் கட்டுரைகள் இடம் பெற்றுள்ளன. இக்கட்டுரைகள் சமகால இந்திய இலக்கியத்தின் தனிப்பெரும் ஆளுமைகளையும் அவர்களது படைப்புகளின் முக்கியத்துவத்தையும் பற்றி எடுத்துக் கூறுகின்றது.
முதல் கட்டுரையில் ஞானபீட பரிசு பெற்ற அசாமிய எழுத்தாளர் இந்திரா கோஸ்வாமி அவர்களின் ‘தென் காமரூபத்தின் கதை’ என்ற நாவல் பற்றி விளக்கப்பட்டுள்ளது. மேலும், இந்திரா கோஸ்வாமி பற்றிய தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அவர் வெளியிட்ட நாவல்கள் அதன் பொருட்டு அவருக்கு வந்த மிரட்டல்கள் பற்றிப் பேசுகின்றது. தென் காமரூபத்தின் கதை முழுவதும் புறக்கணிப்பின் வலி அழுத்தமாக முன் வைக்கப்பட்டுள்ளதாகவும், கம்யூனிசத்தின் வருகை, நிலப்போராட்டங்கள், காலனி ஆதிக்கத்தின் பாதிப்புகள் எனப் பரந்த தளத்தில் நாவல் கட்டமைக்கப்பட்டுள்ளதாக இந்நாவலைப் பற்றி இந்நூலாசிரியர் குறிப்பிடுகின்றார்.
இரண்டாவது கட்டுரையான சொற்களால் நெய்யப்பட்ட மாயக் கம்பளத்தில், உருது சிறுகதை வரலாற்றில் ராஜேந்திர சிங்பேதி, கிருஷ்ண சந்தர், சாதத் ஹசன் மண்டோ, இஸ்மத் சுக்தாய் ஆகிய முன்னோடி படைப்பாளர்கள் பற்றியும் அவரது படைப்புகள் பற்றியும் விளக்கப்பட்டுள்ளது.
‘மகாராணியின் பேனா’ என்ற கட்டுரையில் மணிப்பூர் மன்னர் வம்சத்தில் வந்த எழுத்தாளர் பிநோதினி பற்றியும் அவரது படைப்புகள் பற்றியும் பேசப்பட்டுள்ளது.
‘காந்தியைப் பின்தொடர்பவர்கள்’ என்ற கட்டுரையில் ராஜாராவ் மற்றும் பபானி ஆகியோர் பற்றியும் அவர்களது படைப்புகள் பற்றியும் கூறப்பட்டுள்ளது. இவர்கள் தங்கள் எழுத்துக்களின் வாயிலாகக் காந்தியத்தின் மீது நம்பிக்கை கொண்டவர்களாக அறியப்படுகின்றது. மேலும், இக்கட்டுரை பபானி எழுதிய சாகித்ய அகாடமி பரிசு பெற்ற ‘லடாக்கிலிருந்து கவிழும் நிழல்’ என்ற நூல் பற்றியும் அது காந்தியத்திற்கும் இயந்திரமயமாவதற்கும் இடையில் ஏற்படும் பிரச்சனையைக் குறித்து இக்கட்டுரையில் பேசப்பட்டுள்ளது.
‘பெயர்கள் கூடச் சொந்தமில்லை’ என்ற கட்டுரையில் தமிழ்நாடன் மொழிபெயர்ப்பான ‘ஏழு கார்ட்டூன்களும் ஒரு வண்ண ஓவியமும்’ என்ற ஓரிய நூல் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மேலும், கோபிநாத் மொகந்தி பற்றியும் அவர் பழங்குடி மக்களின் வாழ்க்கையை அதிகமாக இலக்கியத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது பற்றியும் இக்கட்டுரை பேசுகின்றது. இத்தோடு பிரதிபா ரே -ன் படைப்புகள் பற்றியும் இக்கட்டுரையில் விளக்கப்பட்டுள்ளது.
‘காட்டின் மீது பயமில்லை’ என்ற கட்டுரையில் தெலுங்கு இலக்கியங்கள் பற்றியும், ‘பாதி உடல் கொண்ட பெண்’ என்ற கட்டுரையில் மராத்திய இலக்கியங்கள் பற்றியும், ‘நவீன கன்னட கதைகளும் திவாகர் காட்டும் சென்னையும்’ என்ற கட்டுரையில் கன்னட இலக்கியங்கள் மற்றும் அவ்விலக்கிய ஆளுமைகளைப் பற்றியும், ‘கோல் கீப்பரின் எல்லை’ என்ற கட்டுரையில் மலையாள இலக்கியங்கள் மற்றும் அவ்விலக்கிய எழுத்தாளர்களைப் பற்றியும் விளக்கப்பட்டுள்ளது.
இந்த நூலில் உள்ள கட்டுரைகள் பிற மாநிலங்களில் வாழும் மனிதர்களின் வாழ்க்கை முறை, இயற்கை எழில், அரசியல், பண்பாடு, மண்வளம் போன்ற அனைத்துக் கூறுகளையும் எடுத்துக் கூறுவதோடு அங்குள்ள இலக்கிய வளமைகளைப் பற்றியும் நாம் அறிந்து கொள்ள வைக்கிறது. அந்த வகையில் நிலவழி இந்திய இலக்கியத்தின் முகமாக விளங்குகிறது
••
புத்தகத்துடன் ஒரு பயணி
சுவாமிநாதன் பாலசுப்ரமணியன் தனது அலுவல் காரணமாகத் தொடர் பயணங்களை மேற்கொள்கிறவர்.

இவர் எனது தேசாந்திரி புத்தகத்தை விருதுநகர் ரயில் நிலையத்தில் படிக்கத் துவங்கி மதுரை, கொச்சி, கொல்லம், பெங்களூரு போன்ற இடங்களுக்குச் செல்லும் போதெல்லாம் படித்து டெல்லி மெட்ரோவில் முடித்திருக்கிறார்.

பயண நூலை இப்படிப் படிப்பது மகிழ்ச்சி தருகிறது.
சுவாமிநாதனுக்கு என் அன்பும் வாழ்த்துகளும்.
April 19, 2022
மாநிலக் கல்லூரியில் உரையாற்றுகிறேன்
சென்னை மாநிலக்கல்லூரியில் ஏப்ரல் 22 வெள்ளிக்கிழமை மதியம் 2 மணிக்கு நாம் ஏன் இலக்கியம் வாசிக்க வேண்டும் என்ற தலைப்பில் உரையாற்றுகிறேன்.

இதைத் தொடர்ந்து ஐந்து வருட மௌனம் என்ற எனது புதிய சிறுகதைத் தொகுப்பு குறித்து மாணவர்களுடன் கலந்துரையாடல் நடைபெறுகிறது
நிகழ்விற்கு கல்லூரி முதல்வர் முனைவர் இரா. இராமன் தலைமை தாங்குகிறார்.

S. Ramakrishnan's Blog
- S. Ramakrishnan's profile
- 657 followers
