மதகுரு- 2 தந்தையின் கோபம்
தந்தைக்கும் மகளுக்குமான உறவில் ஏற்படும் விரிசலையும் அதனால் ஏற்படும் கோபத்தையும் மதகுரு நாவலில் செல்மா லாகர்லெவ் மிகவும் நுட்பமாக எழுதியிருக்கிறார்.

கெஸ்டா பெர்லிங் தனது மகள் மரியாளைக் காதலிக்கிறான். மகளும் அவனுடன் நெருங்கிப் பழகுகிறாள் என அறியும் மெல்கியார் இதை விரும்பாமல் ஆத்திரமடைகிறார்.
அந்தக் கோபத்தினாலே மகளைச் சூதாட்டப்பொருளாக வைக்கிறார். சூதில் கெஸ்டா வென்றுவிடவே மரியாளை அவனிடமே விட்டுவிட்டு ஏக்பி மாளிகையை விட்டு வெளியேறுகிறார்.
அன்றிரவு நடந்த நடனவிருந்தில் கெஸ்டாவும் மரியாளும் கைகோர்த்து ஆடுகிறார்கள். நள்ளிரவைத் தாண்டியும் நடனம் தொடருகிறது. தந்தை தன்னைக் கைவிட்டுப் போனதை அறிந்த மரியாள் வீடு திரும்பக் குதிரைவண்டி இல்லாமல் நடந்தே போகிறாள்.
அவளது செயலை விவரிக்கத் தன்னழிவு என்ற சொல்லை க.நா.சு. பயன்படுத்துகிறார்

தந்தையின் மீதான கோபத்தில் அவள் தன்னை அழித்துக் கொள்கிறாள். கொட்டும் பனியின் ஊடாக நள்ளிரவில் நீண்ட தொலைவில் இருக்கும் தன் வீட்டை நோக்கி ஓடுகிறாள். தந்தை வீட்டுக்கதவை மூடியதோடு பணியாளர்களையும் திறக்கக்கூடாது என்று உத்தரவிட்டிருக்கிறார். தந்தையின் மீதான கோபத்தைக் காட்ட வீட்டுவாசலில் வெறுந்தரையில் படுத்துக் கிடக்கிறாள் மரியாள். மரணம் தன்னைத் தழுவிக் கொள்ளட்டும் என்று வேண்டுகிறாள்.
பின்னிரவில் கெஸ்டா அங்கே வந்து அவளைக் காப்பாற்றுகிறான். எதற்காகக் கெஸ்டா அங்கே வருகிறான் என்பதற்கு விநோதமான காரணம் ஒன்றை செல்மா சொல்கிறார்.
ஏக்பி பண்ணையில் நடந்த நடனவிருந்திலிருந்து விடைபெற்றுப் போன அழகிகளின் வீட்டைத் தேடிப் போய் உறக்கத்திலிருக்கும் அவர்களை எழுப்பி அவர்களைப் புகழ்ந்து பாட வேண்டும் என்பதே கெஸ்டாவின் ஆசை.
எந்த இரவிலும் இளம்பெண்கள் தங்களைப் புகழ்ந்து பாடுவதை விரும்புவார்கள் என்கிறான் கெஸ்டா. இதை ஏற்றுக் கொண்ட உல்லாச புருஷர்கள் இளம்பெண்களைத் தேடிச் சென்று அவர்கள் வீட்டின் முன்பாக நின்று புகழ்ந்து பாடுகிறார்கள்.
இப்படிச் செல்லும் போது தான் மரியாளின் வீட்டிற்கு வருகிறார்கள். அங்கே மரியாள் பனியில் உறைந்து கிடப்பதைக் கண்ட கெஸ்டா கோபம் கொள்கிறான். அவளது வீட்டுக் கதவை உடைக்க முற்படுகிறான். மருத்துவரை அழைத்துவர ஆள் அனுப்புகிறான். பின்பு பனிக்கட்டியை எடுத்து அவள் காலில் தேய்ந்து உணர்வு வரச் செய்கிறான். இனி அவள் தனது மனைவி என முடிவு செய்து மரியாளை தனது கோச் வண்டியில் அழைத்துச் செல்கிறான்
மறுநாள் நடந்த நிகழ்வுகளைக் கேள்விப்படும் மெல்கியார் கோபத்தின் உச்சத்தை அடைகிறார். அவள் நினைவாக வீட்டிலிருக்கும் பொருட்கள் அத்தனையும் ஏலத்தில் விடுவதெனத் தீர்மானிக்கிறார்.
இது தான் வெறுப்பின் உச்சம்.
மகளின் மீதான கோபத்தில் ஒரு தந்தை அவளது பொருட்களை வீட்டை விட்டு வீசி எறிவதையும். தீயிட்டு எரிப்பதையும் அறிந்திருக்கிறோம். ஆனால் மெல்கியார் அவள் ஆசையாக வைத்திருந்த எல்லாப் பொருட்களையும் ஏலத்தில் விட முடிவு செய்கிறார். யாரோ ஒருவன் அதை அனுபவிக்கட்டும் என நினைக்கிறார். அந்த வீட்டில் மகளின் நினைவு படியாத பொருட்களே இல்லை.
ஆகவே மரச்சாமான்கள். உடைகள். படுக்கை, கட்டில். நாற்காலி தலையணை உறை விளையாட்டுப் பொம்மைகள். அலங்காரப் பொருட்கள். தேநீர் கோப்பைகள் வரை அத்தனையும் அள்ளி வந்து அறையில் குப்பை போலப் போடுகிறார். அப்படியும் அவரது கோபம் அடங்கவில்லை.
எந்தப் பொருளும் அவளுக்கு இனி உபயோகமாகக் கூடாது என்பதே அவரது ஒரே நோக்கம். இந்தச் செயலை மனைவி தடுக்கக் கூடும் என அவளைச் சமையலறையில் அடைத்துப் பூட்டிவிடுகிறார்.
ஏலம் போடுவதற்காக மகளின் பொருட்களை எடுக்கும் போது அவளது நினைவு அதிகமாகிறது. ஆகவே அவரது கோபமும் அதிகமாகிறது
தனது வீட்டில் இப்படி ஒரு ஏலம் நடப்பதைப் பற்றி மரியாள் அறிந்திருக்கிறாள்.
அவளால் அதைத் தடுக்க முடியவில்லை.

இந்த ஏலத்தில் கிடைக்கும் மொத்த பணத்தையும் தனது தந்தை ஒரு மூட்டையாகக் கட்டி லாங்பென் ஏரியில் போட்டுவிடப்போகிறார் என்று கேள்விப்படுகிறாள். அது மிகவும் அதிர்ச்சி அளிக்கிறது
தந்தையைப் பிரிந்து கெஸ்டாவோடு தங்கிய மரியாளை அம்மை நோய் தாக்குகிறது. அவள் படுக்கையிலே கிடக்கிறாள். பேரழகியான அவளது முகம் உருமாறுகிறது. அம்மை தழும்புகள் கொண்ட முகத்தைக் காண அவளுக்கே பிடிக்கவில்லை. கறுத்துப் புள்ளிகள் கொண்ட தனது முகத்தை உலகம் இனி காணக்கூடாது என நினைக்கிறாள்.
இந்த நிலையில் தன்னைக் கெஸ்டா திருமணம் செய்து கொள்வானா என்று சந்தேகம் வருகிறது.தனது எதிர்காலம் பற்றிக் குழப்பமடைகிறாள். இப்படிக் கோரமான முகத்துடன் ஏன் உயிர்வாழ வேண்டும் என நினைக்கிறாள். மனக்குழப்பமும் கவலையும் நாளுக்கு நாள் அதிகமாகிறது. இந்தக் கோலத்தில் இருக்கும் தன்னையும் உல்லாச புருஷர்கள் கேலி செய்வார்கள் என்ற நினைப்பு வருத்தம் கொள்ளச் செய்கிறது.
கெஸ்டாவோடு தனது மனதிலிருப்பதைப் பகிர்ந்து கொள்ள வேண்டும் என நினைக்கிறாள். ஆனால் கெஸ்டா ஏக்பி பண்ணையில் இல்லை. அவன் பியோர்ன் பண்ணைக்குச் சென்றிருக்கிறான் என்பதை அறிந்து கொள்கிறாள்.
பியோர்ன் பண்ணையில் நடக்கும் ஏலம் உலகம் அறியாதது. மிகவும் விலைமதிப்புள்ள பொருட்களைக் கூட மலிவான விலையில் எடுத்துக் கொள்ளச் செய்கிறார் மெல்கியார். அப்படி ஏலம் எடுத்தவர்களுடன் மதுக்கோப்பையைப் பகிர்ந்து கொள்கிறார். காலை முதல் குடித்துக் குடித்து அவரது தலைமயிர் கூடக் குத்திட்டு நிற்கிறது என்கிறார் செல்மா. அவரது பீறிடும் ஆத்திரமே தலைமயிரைக் கூடப் படியவிடாமல் செய்கிறது.
இந்த ஏலத்தில் கலந்து கொள்ளும் கெஸ்டா ரகசியமாக மரியாளின் தாயான குஸ்தாவாவைச் சந்திக்கிறான். பூட்டிய சமையலறைக் கதவைத் திறந்து அவளை விடுவிக்கிறாள். மரியாளின் பொருட்களை ஏலம் விடுவதை அவள் ஏன் தடுக்கவில்லை என்று கேட்கிறான்.
மெல்கியாரின் கோபத்தைத் தன்னால் கட்டுப்படுத்த முடியாது. மரியாளின் பொருட்களை மட்டுமில்லை. தான் சீதனமாகக் கொண்டு வந்த தங்க பிரேம் போட்ட நிலைக்கண்ணாடியினையும் ஏலத்தில் விடுகிறான் என்று ஆதங்கமாகச் சொல்கிறான். மரியாளுக்கு அம்மை வந்துள்ளது என்பதைப் பற்றிக் கெஸ்டா சொன்னதும் அவள் அவசரமாக மெல்கியாரைக் காணச் செல்கிறாள்
ஏலத்தில் நடுவே அவள் மகளின் நிலையைப் பற்றிச் சொல்கிறாள். நிச்சயம் மெல்கியார் ஏலத்தை நிறுத்திவிடுவார் என்று நம்புகிறான். ஆனால் மகள் எக்கேடு கெட்டாலும் தனக்குக் கவலையில்லை என்பது போல மெல்கியார் ஏலத்தைத் தொடருகிறார்.
அங்கேயும் சாத்தான் குறுக்கிடுகிறான். விதி விளையாடுகிறது. மெல்கியார் ஏலத்தில் தனது பொருட்களை எடுத்த நபர் என்ற உண்மையை அறிந்து கோபம் கொள்கிறான். அனைவரையும் அடித்துத் துரத்துகிறார்

உணர்ச்சிப்பூர்வமான அந்த நாடகத்தை இசைக்கோர்வையைப் போல அத்தனை நேர்த்தியுடன் செல்மா எழுதியிருக்கிறார்.
மெல்கியாரைப் பற்றிச் சொல்லும் போது செல்மா லாகர்லேவ் அவன் தற்பெருமைக்காரன் என்கிறார். அவனது மறுவடிவம் போலவே மரியாளும் இருக்கிறாள். அவளையும் தற்பெருமைக்காரி என்றே அவளது அம்மா சொல்கிறாள். ஒரே நாணயத்தின் இரண்டு பக்கம் போலவே தந்தையும் மகளும் இருக்கிறார்கள். நடந்து கொள்கிறார்கள்.
மரியாளை மணந்து கொள்ளப் போவதைப் பற்றிக் கெஸ்டா சொல்லும் போது அது நடக்கவே நடக்காது. அவள் உன்னை ஏமாற்றிவிடுவாள் என்று மகளைப் பற்றிக் குற்றம் சொல்கிறாள். அதைக் கெஸ்டா நம்ப மறுக்கிறான். குஸ்தாவா மீது கோபம் கொள்கிறான். ஆனால் அவள் சொன்னது தான் பலிக்கிறது
இவர்கள் கதையின் ஊடாகவும் ஏக்பி சீமாட்டியின் சாபம் வெளிப்படுகிறது. ஏக்பி சீமாட்டி இன்று இருந்தால் மெல்கியார் இப்படி ஏலம் விட்டிருக்க மாட்டார் என்று குஸ்தாவா சொல்கிறாள். அது உண்மையே. ஏக்பி சீமாட்டி தனது வீழ்ச்சியை மட்டுமின்றித் தன்னைப் போன்ற சுகபோகிகளின் வீழ்ச்சியினையும் முன்னறிவிக்கிறாள். அது பின்னாளில் அப்படியே நடந்தேறுகிறது
தன்னை விட்டுப் போன மகளின் பிரிவுத்துயரைத் தாங்கமுடியாமல் தான் மெல்கியார் இப்படி நடந்து கொள்கிறார். அது தோற்றுப் போன தந்தையின் மூர்க்கம். அதே தந்தை மகள் அம்மை நோயால் சாவின் விளிம்பைத் தொட்டு மீண்டிருக்கிறாள். இப்போது அவள் அழகியில்லை. முகம் முழுவதும் அம்மை தழும்புகள் கொண்டவள். உலகத்தால் வெறுக்கப்படுகிறவள் என்பதை அறிந்தவுடனே தனது வீட்டிற்கு மகளை அழைத்து வரத் தானே கிளம்பிச் செல்கிறார்
ஏக்பி பண்ணைக்கு மெல்கியார் வருகை தரும் காட்சி அபாரமானது. அங்கே அவன் மகள் அணிந்து கொள்ள ஓநாய் தோலில் செய்யப்பட்ட மேலங்கி ஒன்றைக் கொண்டு வந்திருக்கிறார். மகளின் அறைக்குச் சென்று அவளைக் காணவில்லை. மாறாக அவளாக வந்து தன்னைப் பார்க்கட்டும் எனக் கூடத்தில் காத்திருக்கிறார்
ஏக்பி உல்லாச புருஷர்கள் கரடி வேட்டைக்குச் சென்றிருக்கிறார்கள். ஆகவே பண்ணை வீட்டில் ஆட்கள் இல்லை. தந்தை தனக்காக வந்து காத்திருப்பதை அறிந்த மரியாள் நடந்த அத்தனை நிகழ்வுகளையும் மறந்துவிடுகிறாள்.
காதலனை விடவும் தந்தையோடு வாழவே விரும்புகிறாள். தந்தையோடு அவள் வீடு திரும்ப முடிவு எடுக்கிறாள். நோயுற்ற பத்துவயது சிறுமியை அழைத்துப் போவதைப் போல அக்கறையோடு அன்போடு அவளைத் தன் வீட்டிற்கு மெல்கியார் அழைத்துப் போகிறார். அந்தத் தருணத்தில் நடந்து முடிந்த சம்பவம் யாவும் நினைவிலிருந்து அழிந்துவிடுகின்றன. அவள் என்றைக்கும் தனது மகள் தான் என்பதை மெல்கியார் உணருகிறார். இந்த உலகில் தந்தையை விடத் தன்னை யாரும் அதிகம் நேசித்துவிட முடியாது என மரியாளும் உணருகிறாள்.
இந்தச் சந்திப்பின் ஊடாக ஒரு அழகிய காட்சியைச் செல்மா லாகர்லேவ் விவரிக்கிறார். அதில் ஒரு நாயும் மெக்பி பறவையும் பேசிக் கொள்கின்றன. பனியில் புதைத்து வைத்த இறைச்சியை ரகசியமாகத் தின்னுவதற்கு நாய் முயல்கிறது. அதைக் கண்ட மெக்பி பறவை நாயைத் திருடன் என்று குற்றம் சாட்டுகிறது. கோபம் கொண்ட நாய் பறவையைத் துரத்துகிறது. நாயிடமிருந்து தப்பிப் பறந்த மெக்பி அதைப் பரிகாசம் செய்கிறது. இந்தக் காட்சியும் தந்தை மகளின் உறவும் நெருக்கமான தொடர்பு கொண்டது.
மரியாள் தன்னைவிட்டுப் போய்விட்டதை உணர்ந்த கெஸ்டா மிகவும் வருத்தமடைகிறான். அந்தப் பிரிவை அவனால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. மரியாளைத் தேடி மெல்கியாரின் பண்ணைக்குச் செல்கிறான். அங்கே மரியாளைக் காணுவதற்காக அவளது அறைக்குள் செல்கிறான்.
அவன் காணுவது தான் காதலித்த மரியாளை அல்ல. மெல்கியாரின் மகளான மரியாளை. அந்த ஏமாற்றத்தை அவனால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. தந்தையைப் போலவே மரியாளும் இருக்கிறாள் என்பதை உணர்ந்து கொள்கிறான் குஸ்தாவா சொன்னது அப்படியே நடந்து விட்டதை அறிகிறான்.
மெல்கியார் கதாபாத்திரம் ஒரு வகையில் தாரஸ்புல்பாவை நினைவுபடுத்துகிறார். இருவரும் அன்பின் காரணமாகவே மூர்க்கமாக நடந்து கொள்கிறார்கள். இன்னொரு வகையில் மெல்கியார் தான் லியர் அரசன். மகள் விஷயத்தில் அவரும் இப்படிதானே நடந்து கொள்கிறார்
காதல் விஷயத்தில் பெண்கள் எப்படி நடந்து கொள்வார்கள் என்பது எவராலும் முடிவு செய்ய முடியாது. அவர்களின் மனக்குழப்பம் எந்த முடிவிற்கும் கொண்டு செல்லும். வீட்டை விட்டு வெளியேறிய மரியாள் சந்தோஷமாக வாழவில்லை. மாறாகக் கெஸ்டாவோடு இருந்த போது தந்தையைப் பற்றி நினைத்து வருந்துகிறாள். நோய் அவளது குழப்பத்தை அதிகமாக்குகிறது. ஆகவே மீண்டும் தந்தையிடமே சென்றுவிடுகிறாள். அங்குப் போன பிறகு காதலன் கெஸ்டாவை நினைத்து ஏங்குகிறாள். இந்தக் குழப்பத்தின் ஊசலாட்டத்தைச் செல்மா மிகவும் அழகாக எழுதியிருக்கிறார்.

தனது அழகிற்காக மட்டுமே கெஸ்டா தன்னை விரும்புகிறான். தனது தோற்றம் வசீகரமிழந்துவிட்டபிறகு அவனும் தன்னை அவமதிக்கவே செய்வான் என மரியாள் நினைக்கிறாள். ஆனால் தனது தந்தை ஒரு போதும் அப்படி நடந்து கொள்ள மாட்டார் என நினைத்து அவரிடம் செல்கிறாள். மகளுக்கு என்ன நடந்தது என்று மெல்கியார் அவளிடம் எதையும் கேட்டுக் கொள்ளவேயில்லை. ஒரு பார்வையிலே நடந்த எல்லாவற்றையும் புரிந்து கொள்கிறார். அவரது உச்சபட்ச கோபம் எப்படி வடிந்தது என்பது ஆச்சரியமளிக்கிறது.
மரியாளைச் சூதில் பந்தயப்பொருளாக வைத்து ஆடும் முடிவை மெல்கியார் எடுப்பதில்லை. சாத்தானின் தூண்டுதல் அந்த முடிவை எடுக்க வைக்கிறது. சூதில் தோற்ற மறுநிமிடம் அவர் மகளைப் பிரிந்து செல்கிறார். இனி தனக்கும் மகளுக்கும் எந்தத் தொடர்பும் இருக்கக்கூடாது என நினைக்கிறார். பகடைகளைப் போலவே மனிதர்களும் விதியின் கரங்களால் உருட்டி விளையாடப்படுகிறார்கள்.
கெஸ்டா பெர்லிங் கதாபாத்திரத்தை லெர்மென்தேவ் எழுதிய நம் காலத்து நாயகன் நாவலின் கதாநாயகன் பிச்சோரினுடன் ஒப்பிடத் தோன்றுகிறது. இருவரும் ஆசையின் பாதையில் சுதந்திரமாகச் சுற்றி அலைபவர்கள். காதலுக்காக எதையும் செய்யக்கூடியவர்கள்.
உண்மையில் கெஸ்டாவை மரியாள் விரும்பவில்லை. ஆனால் சந்தர்ப்பம் அவளைக் கெஸ்டாவோடு இணைக்கிறது. கட்டி அணைத்து முத்தமிடச் செய்கிறது. நாடகத்தின் ஒரு காட்சி போலவே அது நடந்தேறுகிறது. தந்தை செய்த அவமானத்திலிருந்து தன்னை மீட்டான் என்பதாலே தான் அவன் மீது காதல் பிறக்கிறது. ஆனால் அதுவும் நீடிப்பதில்லை. காதலின் வேறுவேறு வகைகளை, காதலின் உன்மத்தை, விபரீத செயல்களைச் செல்மா மிகவும் உணர்ந்து எழுதியிருக்கிறார்.
பொருட்களை அகற்றிவிடுவதன் மூலம் நினைவுகளை அகற்றிவிட முடியாது. உண்மையில் மெல்கியாரின் வெறுமையான வீடு மகளின் நினைவுகளை அதிகப்படுத்தியிருக்கக் கூடும். அது தான் முடிவில் மகளைத் தேடிச் செல்ல வைக்கிறது.
ஏக்பி சீமாட்டியின் இளமைக்காலக் காதல்கதையும் மரியாளின் காதல்கதையும் ஒரு புள்ளியில் ஒன்று சேருகின்றன. செல்மா லாகர்லேவின் மாயக்கைகள் கதையைக் கொண்டு செல்லும் விதத்தையும் கதை வழியே உருவாக்கும் அற்புதத்தையும் எவ்வளவு பாராட்டினாலும் தகும்.
S. Ramakrishnan's Blog
- S. Ramakrishnan's profile
- 657 followers
