மதகுரு 3 – ஓநாயும் நாவலும்
மதகுரு நாவலில் ஓநாய்களின் கூட்டம் கெஸ்டாவை தாக்கும் காட்சி இடம்பெறுகிறது. அபாரமான பகுதியது.

பணக்காரக் கிழவன் பிபெர்க்கும் அழகி அன்னா ஸ்டார்ண்யேக்கும் திருமணம் அறிவிக்கப்படுகிறது. அதைக் கெஸ்டா விரும்பவில்லை. அன்னா ஏன் இப்படி ஒரு கிழவனைத் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று ஆத்திரப்படுகிறான். அன்னாவை மணந்து கொள்ள வேண்டும் எனப் பெர்டினாண்ட் பிரபு ஆசைப்படுகிறான்
அன்னாவின் திருமணத்தை ஏற்பாடு செய்தவள் மதகுருவின் மனைவி ஸ்வார்ட்டோ. அவள் தான் பணக்காரக் கிழவனைத் திருமணம் செய்தால் வசதியாக வாழலாம் என அன்னாவின் மனதை மாற்றியவள்.
பெர்டினாண்ட் மணந்து கொள்வதற்காக அன்னாவை தூக்கி வருகிறேன் என்று கெஸ்டா வாக்குக் கொடுக்கிறான். அப்படிக் கிளம்பும் போது பரூஉக்ளா அவனிடம் ஒரு நாவலைப் படிக்கத் தருகிறாள். நீ தோற்றுவிட்டால் இந்த நாவல் உனக்குத் தேவைப்படும் என்கிறாள்.
பின்ஜுவான் என்ற குதிரை பூட்டிய வண்டியில் செல்கிறான் கெஸ்டா. அவனுடன் பின்கிரெட் என்ற நாயும் உடன் செல்கிறது

••
கிழவனைத் திருமணம் செய்து கொள்ளப்போகும் தனது முடிவில் அன்னா உறுதியாக இருக்கிறாள். ஆகவே அவளை அவமானப்படுத்த நினைத்த உல்லாச புருஷர்கள் நடனவிருந்தில் எவரும் அவளுடன் சேர்ந்து ஆடக்கூடாது என்று முடிவெடுக்கிறார்கள்.
பத்து நாட்டியம் முடியும் வரை ஒருவரும் அவளைச் சேர்ந்து ஆட அழைக்கவில்லை. இந்த அவமானத்தை அன்னாவால் சகிக்க முடியவில்லை. பதினோறாவது நடனத்தின் போது அசடு வழிந்த வாலிபன் அவளைத் தன்னோடு ஆட வருமாறு அழைக்கிறான். அதை அன்னா ஏற்கவில்லை.
கிழட்டுப் பில்பெர்க்கை அவள் முத்தமிட வேண்டும் என விருந்தினர்கள் கூச்சலிடுகிறார்கள். இதற்குப் பதிலாக நான் சிறிதும் விரும்பாத ஒரு இளைஞன் கன்னத்தில் அறைவேன் என்று கூறிய அன்னா கெஸ்டாவின் கன்னத்தில் அறைகிறாள். இந்த அடி தான் அவர்கள் காதலுக்குக் காரணமாகிறது.
கெஸ்டா அவளைக் கோவித்துக் கொள்ளவில்லை. தனியே சந்திக்கும்படி கேட்டுக் கொள்கிறான். அந்தச் சந்திப்பில் தான் எவரைத் திருமணம் செய்து கொண்டால் அவனுக்கு என்ன என அன்னா கோபம் கொள்கிறாள். அவளைப் போன்ற அழகி விஷயத்தில் அப்படி விட்டுவிட முடியாது எனக் கூறும் கெஸ்டா பேசிப்பேசி காதல் வசப்படுத்துகிறான். அன்னா அவனைக் கட்டி அணைக்கிறாள்
தனது திருமணத்தை முறித்துக் கொண்டு கெஸ்டாவோடு ஒடிவிட முடிவு செய்கிறாள் . அதன்படி அவர்கள் ஒரு குதிரைவண்டியில் பயணம் செய்கிறார்கள். ஏக்பி பண்ணைக்குப் போய்விட்டால் போதும் என்று வேகமாக வண்டி ஒட்டுகிறான் கெஸ்டா. பெர்டினாண்ட்டினை ஏமாற்றியதைப் பற்றியோ கிழபில்பெர்க்கை ஏமாற்றியதைப் பற்றியோ அவனுக்கு வருத்தமில்லை.

அவர்களின் பயண வழியில் எதிர்பாராத விதமாக ஓநாய்கள் குறுக்கிடுகின்றன செல்மா லாகர்லேவ் ஒநாய்களின் தாக்குதலை அற்புதமாக எழுதியிருக்கிறார்.
கெஸ்டாவின் நாயான பின்கிரெட் ஓநாய்களைக் கண்டு பயப்படுகிறது. அவனது குதிரையும் ஓநாய் கூட்டத்தைக் கண்டு மிரளுகிறது.
தன்னுடைய விருப்பம் நிறைவேறக் கூடாது என நினைத்துத் தான் கடவுள் ஓநாய்களை அனுப்பியிருப்பதாகக் கெஸ்டா நினைக்கிறான். காதலின் பெயரால் எதையும் செய்யத் தயாராகயிருக்கிறேன் என்று அவன் ஓநாய்களின் மீது சாட்டையை வீசி துரத்துகிறான்.
ஒநாய்கள் அந்த வண்டியைத் தொடர்ந்து வருகின்றன. அவர்கள் மீது பாய்ந்து தாக்குகின்றன. இதனால் குதிரை மிரளுகிறது. இந்தத் தாக்குதலிலிருந்து தப்ப முடியாதோ என அன்னா பயப்படுகிறாள். வண்டியை வேகமாக ஒட்டுகிறான் கெஸ்டா
காட்டு ஓநாய்கள் குறுக்கு வழியாக முன்னேறி அவர்களைத் தாக்குகின்றன.

கெஸ்டா கடவுளையும் சாத்தானையும் ஒரே நேரத்தில் அழைக்கிறான் தனது குதிரையைச் சாட்டையால் அடித்து வேகப்படுத்துகிறான். ரேக்ளாவின் பின்னால் பச்சைக் கம்பளியைக் கட்டி பறக்கவிடுகிறான். காற்றில் அது படபடக்கவே ஓநாய்கள் அதைக் கண்டு பயப்படுகின்றன. காற்றில் அடிக்கும் கம்பளி நம் முன்னால் காட்சியாகத் தோன்றி ஒளிர்கிறது.
தொலைவில் பெர்கா பண்ணையில் எல்லா விளக்குகளும் எரிவது அவன் கண்ணிற்குத் தெரிகிறது. ஓநாய்கள் பின்தொடர்கின்றன. குதிரைவண்டியை கெஸ்டா திருப்புகிறான். வெண்மையான கோரைப் பற்களுடன் ஓநாய்கள் அவனை நோக்கிப் பாய்கின்றன. தன் மீது பாயும் ஓநாயின் வாயில் ப்ரூஉக்ளா கொடுத்த நாவலைத் திணிக்கிறான் கெஸ்டா.
ஓநாயின் வாயில் ஒரு நாவல் திணிக்கபடும் அந்தக் காட்சி என்னைப் பரவசப்படுத்தியது. கிளர்ச்சியூட்டும் காட்சியது. ப்ரூஉக்ளா போன்ற இளம்பெண்கள் பகற்கனவின் வடிவம் போலவே நாவலை நினைக்கிறார்கள். ஆகவே அவள் நாள் முழுவதும் நாவல் படித்தபடியே இருக்கிறாள்.
மாடம் தே ஸ்டேலின் கொரின் நாவலை ஓநாயின் வாயில் கெஸ்டா திணிப்பது சர்ரியலிச ஓவியம் போலிருக்கிறது. நாவலின் வழியே உருவான காதல் கனவுகள் அர்த்தமற்றவை என்பதைத் தான் இந்தக் காட்சி வெளிப்படுத்துகிறதா.
கெஸ்டாவின் காதலுக்கு மனிதர்கள் எதிரியில்லை. ஆனால் எதிரியாக ஓநாய்கள் தோன்றுகின்றன. அது தான் செல்மாவின் அபார கற்பனை. சாவிற்கும் வாழ்விற்குமான போராட்டமாக அந்தத் தாக்குதல் சித்தரிக்கப்படுகிறது.

ஓநாய்களிடமிருந்து தப்பிப்போக ஒரே வழி பெர்டினாண்ட் பண்ணைக்குப் போவது தான் எனக் கெஸ்டா முடிவு செய்கிறான். அது தான் கடவுளின் தீர்ப்பு. அவன் விரும்பும் காதல் ஒரு போதும் நிறைவேறாது. இதைத் தீர்க்கமாக உணர்ந்து பெர்டினாண்ட் பண்ணைக்குப் போகிறான். அன்னாவை அவர்களிடம் ஒப்படைக்கிறான்.
பெர்டினாண்ட்டினை ஏற்றுக் கொள்வதைத் தவிர வேறு வழியில்லை என்பதை அன்னாவும் உணருகிறாள். தியாகியைப் போலக் கெஸ்டாவிடம் பேசுகிறாள். விதி நாம் ஒன்று சேருவதை விரும்பவில்லை என்று சொல்கிறான் கெஸ்டா.
தனது பாவச் செயல் தடுத்து நிறுத்தப்பட்டிருக்கிறது , கடவுளின் ஒங்கிய கையே நம்மைத் தடுத்து நிறுத்தியிருக்கிறது என்றும் சொல்கிறான்.
விடைபெறும் போது என்னைச் சீக்கிரமே மறந்துவிடுவாயா அன்னா என்று ஆதங்கமாகக் கேட்கிறான்
அதற்கு அவள் போ கெஸ்டா போ. நாமும் மனிதர்கள் தானே என்கிறாள்.
காதலை மறந்து வாழ்வில் கரைந்து போவது தானே மனித வாழ்க்கை. இதில் அன்னா மட்டும் விதிவிலக்கா என்ன.
கெஸ்டாவின் கேள்வியில் அவனது ஆழ்ந்த காதல் வெளிப்படுகிறது.
குதிரைவண்டி புறப்படும் போது அவன் ஓநாய்களை மறந்துவிட்டாயா என்று கேட்கிறான்.
ஓநாய்களை என்னால் ஒரு போதும் மறக்கமுடியாது. இனி அவை என்னைத் தேடி வராது என்கிறாள் அன்னா
விதி எனும் ஓநாய் தான் செய்ய வேண்டிய வேலையைச் செய்து முடித்துவிட்டது. இனி அன்னாவின் வாழ்வில் அது குறுக்கிடாது.
ஒநாய்குலச்சின்னம் நாவலில் இது போல ஓநாய்களின் வேட்டைக்காட்சி ஒன்று இடம் பெறுகிறது. திரைப்படமாக்கப்பட்ட போது அந்தக் காட்சியைச் சிறப்பாகப் படமாக்கியிருப்பார்கள். திரையில் கண்ட அந்த வியப்பை விடவும் எழுத்தின் வழியே அபாரமான பாய்ச்சலை உருவாக்கியிருக்கிறார் செல்மா.
ஓநாய்கள் பைபிளில் தீமையின் உருவமாகச் சித்தரிக்கப்படுகிறது. மந்தைகளைத் தாக்கும் ஓநாய் பற்றிப் பைபிள் குறிப்பிடுகிறது. இயேசு மேய்ப்பனாகச் சித்தரிக்கப்படுகிறார், ஆட்டு மந்தையை ஓநாய்களிடமிருந்து பாதுகாக்கிறார். அந்த வகையில் விவிலியத்தில் ஆடும் ஓநாயும் உருவகமாகச் சித்தரிக்கப்படுகிறது.
ஓநாயைப் போலச் சுதந்திரமாக இச்சையின் பாதையில் செல்லும் கெஸ்டாவை காட்டு ஓநாய்கள் தடுத்து நிறுத்துகின்றன என்பதை வாசிக்கையில் மனிதனின் ஆசையும் கடவுளின் விருப்பமும் மோதிக் கொள்வதாகவே தோன்றுகிறது

கிழட்டுப் பிபெர்க்கை திருமணம் செய்ய முடிவு எடுத்த அன்னா ஏன் சட்டென மனம் மாறிவிடுகிறாள். அந்தத் திருமணம் அவள் விரும்பியதில்லை. அது நிறுத்தப்படக்கூடும் என அவளும் நினைத்திருப்பாள். கெஸ்டா வழியாக அது நடந்தேறுகிறது.
அன்னாவை அழைத்துக் கொண்டு போகும் முயற்சியில் சிண்ட்ரோம் உதவி செய்கிறான். அவனுக்கு நடக்கப்போவது தெரிந்திருக்கும் தானா. இதுவும் சாத்தானின் விளையாட்டா.
கெஸ்டாவை எவரும் திருமணம் செய்து கொள்ள முடியாது. அவனைக் காதலிக்க மட்டுமே முடியும் என்று நாவலின் ஒரு இடத்தில் செல்மா லாகர்லேவ் சொல்கிறார்.
இந்தக் கருஞ்சுழியிடமிருந்து கெஸ்டா மீள முடியவில்லை.
பணக்கார கிழவனைத் திருமணம் செய்து கொள்ள ஏன் அன்னா தயாராகிறாள். இது தான் ஏக்பி சீமாட்டிக்கு நடந்தது. அதே நிகழ்வின் மறுவடிவம் போலத் தான் அன்னாவின் கதை சொல்லப்படுகிறது.
மரியாள் ஒருவிதமாக அவமானப்படுத்தப்படுகிறாள் என்றால் அன்னா வேறு விதமாக அவமானப்படுத்தபடுகிறாள். இருவரும் காதலின் புதிர் பாதையில் சுழலுகிறார்கள். விரும்பிய வாழ்க்கை எவருக்கும் கிடைப்பதில்லை. கெஸ்டா இந்த உலகின் நிகரற்ற பலசாலி ஆனால். மிகப் பலவீனமானவனும் அவனே என்கிறார் செல்மா.

நிஜம். காதலே அவனைப் பலசாலியாக்குகிறது. காதலே அவனைப் பலவீனமாக்குகிறது. விதியின் பகடையாட்டத்தில் கெஸ்டா தோற்றுக் கொண்டேயிருக்கிறான். செல்மாவின் கற்பனையில் நிஜமும் மாயமும் போட்டி போடுகின்றன. வெல்லமுடியாத ஒரு ஓநாயைப் போலவே எழுத்தில் பாய்ச்சலை நிகழ்த்துகிறார் செல்மா லாகர்லேவ்.
•••
S. Ramakrishnan's Blog
- S. Ramakrishnan's profile
- 657 followers
