சாம்பல் முகங்கள்
ஆறுவயதான கர்ட் தனது அத்தை எலிசபெத்துடன் டிரெஸ்டனில் நடைபெறும் ஓவியக்கண்காட்சிக்குச் செல்வதுடன் NEVER LOOK AWAY படம் துவங்குகிறது. ஆஸ்கார் விருது பெற்ற இயக்குநர் ஃப்ளோரியன் ஹென்கெல் வான் டோனர்ஸ்மார்க் இயக்கியுள்ள படம்

அந்தக் கண்காட்சி கர்ட்டிற்கு விநோதமாகயிருக்கிறது வருகை தந்துள்ள மனிதர்கள். சுவரில் மாட்டப்பட்டிருக்கும் விசித்திர ஓவியங்கள், புதிரான நவீன சிற்பங்கள். காவல்காக்கும் ராணுவத்தினர் என அந்த இடமும் மனிதர்களும் மிரட்சி கொள்ளச் செய்கின்றன
ஆனால் எலிசபெத் கண்காட்சியில் இடம்பெற்ற புகழ்பெற்ற ஒவியங்களை ரசிக்கிறாள். அவளது அழகை பலரும் ரசிக்கிறார்கள். அதை அவள் அறிந்துமிருக்கிறாள்.

கலை என்ற பெயரில் தேசமெங்கும் மனநோய் பெருகிவருகிறது. குறியீடுகள் அரூபங்கள் என ஓவியர்கள் வரைந்தவை யாவும் அர்த்தமற்ற கலைப்பொருட்கள் எனக் கருதிய நாஜி, கலைஞர்களை அவமானப்படுத்தும் விதமாகச் சீரழிந்த கலைக்காட்சிகளை ஏற்பாடு செய்தார்கள். அப்படி ஒரு கண்காட்சியினைத் தான் எலிசபெத்தும் கர்ட்டும் பார்வையிடுகிறார்கள்
எதை அதிகாரம் விலக்கவும் ஒடுக்கவும் நினைக்கிறதோ அதிலிருந்தே கர்ட் தனது கனவுகளைத் துவங்குகிறான்.

கண்காட்சியில் இடம் பெற்ற, யூஜென் ஹாஃப்மேனின் நவீன சிற்பமான கேர்ள் வித் ப்ளூ ஹேரைக் கண்டு கர்ட் மயங்கி நிற்கிறான் . சிற்பத்தின் முன்பு அவன் நிற்கும் தருணம் அழகானது. பேரழகியான அவனது அத்தை காடின்ஸ்கி ஓவியத்தின் முன்பு நின்று ரசிக்கிறாள். வெளியே வரும் போது கர்ட்டிடம் அதை தான் மிகவும் விரும்புவதாகத் தெரிவிக்கிறாள். வெளிப்படையாக தங்கள் விருப்பத்தை காட்ட முடியாத சூழல் இருந்த காலமது.
கர்ட் பர்னெர்ட்டின் கலைவாழ்வும் காதல் வாழ்வும் இரு சரடுகளாகப் பின்னி வளரும் இந்தத் திரைப்படத்தில் நாஜி ஆட்சியிலும் அதன் பிந்திய காலத்திலும் கலைஞர்களின் வாழ்வு எவ்வளவு நெருக்கடிகளைக் கொண்டிருந்தது என்பது விவரிக்கப்படுகிறது
ஓவியக் கண்காட்சியிலிருந்து அவர்கள் வீடு திரும்பும் போது அத்தையின் விநோத நடவடிக்கை ஒன்றை கர்ட் காணுகிறான்.
இரவில் நிறுத்திவைக்கப்பட்ட பேருந்துகளின் ஹார்ன்களை ஒரே நேரத்தில் அடிக்குமாறு ஒட்டுநர்களிடம் வேண்டுகிறாள் எலிசபெத். அவளுக்காகப் பேருந்தின் ஒலி எழுப்பப்படுகிறது. அந்த விநோத சங்கீதத்தை ஆனந்தமாக ரசிக்கிறாள் எலிசபெத். அந்தக் காட்சியில் அவள் ஒரு சிறுமியைப் போலவே நடந்து கொள்கிறாள். கண்காட்சி முடித்து திரும்பும் சிறுவன் பெரிய ஆள் போல நடப்பதும் அவள் சிறுமியாகிவிடுவதும் சுவாரஸ்யமான முரண்.

கலையின் வழியே தான் தனது மீட்சியை அடைய முடியும் என நம்புகிறாள் எலிசபெத். இன்னொரு காட்சியில் வீட்டில் நிர்வாணமாக ப்யானோ வாசிக்கிறாள். அதைக் கண்டு கர்ட் வியப்படைகிறான். அவளுக்கு மனச்சிதைவு ஏற்பட்டுள்ளதாகக் கருதிய குடும்பத்தினர் மனநலக் காப்பகத்தில் ஒப்படைக்கிறார்கள். மருத்துவமனை ஊழியர்கள் அவளை இழுத்துக் கொண்டு போவதை அதிர்ச்சியுடன் காணுகிறான் கர்ட்.

அக்காட்சியில் கண்ணை மூடிக் கொள்ளும் கர்ட்டிடம் “Never Look Away,” என்று சொல்கிறாள் எலிசபெத். அது தான் படத்தின் மையக்கரு.
நாஜி ராணுவத்தின் கட்டாயக் கருத்தடை மற்றும் கருணைக்கொலை பற்றிப் பேசும் இப்படம் அதற்குக் காரணமாக இருந்த டாக்டர் கார்ல் சீபாண்ட் தனது கடந்தகாலத்தை மறைத்துக் கொண்டு எவ்வாறு குற்றவுணர்வே இல்லாமல் நடந்து கொள்கிறார் என்பதையும் விவரிக்கிறது
மனநல மருத்துவமனையில் எலிசபெத் நாஜி SS மருத்துவப் படையின் உயர் பதவியில் இருக்கும் பேராசிரியர் கார்ல் சீபாண்ட் வசம் ஒப்படைக்கப்படுகிறார். அவர் கட்டாயக் கருச்சிதைவு மற்றும் கருணைக்கொலையினை அரங்கேற்றுபவர். அவள் தனக்கு மனச்சிதைவு இல்லை. தன்னை வெளியே விட்டுவிடும்படி மன்றாடுகிறாள். அவரைத் தந்தை போல நினைப்பதாகக் கண்ணீர் விடுகிறாள். ஆனால் சீபாண்ட் மனம் இரங்கவில்லை. அவளைக் கொல்வதற்கு ஆணையிடுகிறார்.
கர்ட்டின் வாழ்க்கையிலிருந்து ஒரு எலிசபெத் விடைபெறுகிறாள். இன்னொரு எலிசபெத் எல்லி என்ற பெயரில் அவன் வாழ்வில் நுழைந்து அவனை வழிநடத்துகிறாள். இந்த இரண்டு எலிசபெத்திற்கும் இடையில் நிறைய ஒற்றுமைகள். அழகாக இணைக்கப்பட்ட கண்ணியது
நாஜிகளின் காலம் முடிவடைகிறது. ரஷ்யச் செம்படை நகரை ஆக்கிரமிக்கிறது. கார்ல் சீபாண்ட் ரஷ்ய ராணுவத்தால் கைது செய்யப்பட்டுச் சிறை முகாமில் அடைக்கப்படுகிறார். விசாரணையின் போது தன்னைப் புரொபசர் என அழைக்க வேண்டும் என்கிறார் சீபாண்ட். அதற்காக அடிவாங்குகிறார்.
கைதியாக இருந்த போதும் தான் கௌரவமாக நடத்தப்பட வேண்டும் என நினைக்கிறார் சீபாண்ட். ஆனால் செம்படையினர் நாஜி எஸ்எஸ் பிரிவின் தலைமை யார் என்பதை அறிந்து கொள்ள அவரை துன்புறுத்துகிறார்கள்.
ஒரு நாள் செம்படை அதிகாரியின் மனைவி சிக்கலான பிரசவத்தில் அலறுவதைக் கேட்டு உதவி செய்யச சீபாண்ட் முன் வருகிறார். அவரது உதவியால் குழந்தை நலமாகப் பிறக்கிறது.

இதில் மகிழ்ச்சியடைந்த செம்படை அதிகாரி சீபாண்டை சிறையிலிருந்து விடுவித்துப் பதவி கொடுத்துக் கௌரவப்படுத்துகிறார். கார்ல் சீபாண்ட்டின் வாழ்க்கை மாறுகிறது. தான் ஒரு நாஜி அதிகாரி என்பதை மறைத்துக் கொண்டு புதிய பதவியில் புதிய அடையாளத்துடன் வாழ ஆரம்பிக்கிறார்.
இளைஞனான கர்ட் ஒவியம் பயில விரும்பி டிரெஸ்டன் அகாடமி ஆஃப் ஃபைன் ஆர்ட்ஸில் சேருகிறான் அங்கு எல்லி என்று அழைக்கப்படும் இளம் ஆடை வடிவமைப்பு மாணவியைக் காணுகிறான். அவளது அழகில் மயங்கி காதலிக்கிறான். எல்லியை முதன்முறையாக அவன் சந்திக்கும் காட்சியில் பேப்பரில் ஆஷ்ட்ரே செய்து தருகிறான் கர்ட்.
அவள் பேராசிரியர் கார்ல் சீபாண்ட் டின் மகள் என்பதை அறிந்து கொள்கிறான். அவளும் கர்ட்டினை காதலிக்கிறாள் ஓவியக் கல்லூரியில் நடக்கும் அவர்களின் காதல் பரபரவென நகர்ந்து செல்கிறது.
டிரெஸ்டன் அகாதமியில் சோசலிச யதார்த்தவாதம் மட்டுமே கலையாகக் கருதப்படுகிறது. மற்ற கலைப்படைப்புகளை அவர்கள் அனுமதிப்பதில்லை. ஆகவே கர்ட் தானும் சோசலிச யதார்த்த வகை ஓவியங்களை வரைகிறான். சுவரோவியங்களைத் தீட்டுகிறான்.
எல்லியின் மீதான காதலில் அவளது வீட்டிலே ஒரு அறையை வாடகைக்கு எடுத்துத் தங்குகிறான். இவர்களின் காதலை எல்லியின் அம்மா அறிந்து கொண்டிருக்கிறாள். கர்ட்டும் எல்லியும் நெருங்கிப் பழகுகிறார்கள். அதைச் சீபாண்ட் விரும்பவில்லை. அவர்கள் காதல் உறவைத் துண்டிக்க முயலுகிறார். ஆனால் எல்லியின் பிடிவாதத்தால் அவர்கள் திருமணம் நடந்தேறுகிறது.
சீபாண்டினை கர்ட் ஒவியம் வரையும் போது அவர் தான் எப்படி காட்சியளிக்க வேண்டும் என்பதில் கவனமாக இருக்கிறார். அவரது கறார்தன்மை அழகாக படத்தில் வெளிப்பட்டிருக்கிறது.
கார்ல் சீபாண்ட்டினை அது வரை பாதுகாத்து வந்த செம்படை அதிகாரி மாஸ்கோவிற்கு மாற்றப்பட்டதால் தன் மீதான கடந்தகால வழக்குக்குப் பயந்து, சீபாண்ட் மேற்கு ஜெர்மனிக்குத் தப்பி ஓடுகிறார்.
அந்தக் காட்சியில் செம்படை அதிகாரி உண்மையை அறிந்த போதும் எப்படிச் சீபாண்டிற்கு உதவுகிறார் என்பதும் அவரது நன்றியுணர்வும் நேர்த்தியாக வெளிப்படுகிறது.

பல ஆண்டுகளுக்குப் பிறகு கர்ட் மற்றும் எல்லி மேற்கு ஜெர்மனிக்குத் தப்பிச் செல்கிறார்கள். அங்கேயுள்ள கலைக்கூடத்தில் இணைந்து பணியாற்றுகிறான் ஆனால் அங்கே நடக்கும் கலைப்பரிசோதனைகளை அவனால் ஏற்கமுடியவில்லை. வழியில்லாமல் அவனும் செயற்கையான கலைப்படைப்புகளை உருவாக்குகிறான்.
உணவகத்தில அவனைச் சந்திக்கும் சீபாண்ட் அவனால் ஒரு போதும் கலைவாழ்வில் வெற்றி பெற முடியாது என்று சொல்கிறார். மனச்சோர்வுடன் கலைக்கூடம் திரும்பும் கர்ட் எதையும் வரைய முடியாமல் தடுமாறுகிறான். அவமானம் தான் அவனை புதிய படைப்பை உருவாக்க வைக்கிறது.
புதிய கலைவெளிப்பாட்டினை உணரும் கர்ட் அதில் தீவிரமாகச் செயல்பட ஆரம்பிக்கிறான். உண்மையும் கற்பனையும் ஒன்று கலக்கிறது. இந்தப் புதிய வகை ஓவியத்திற்காகப் பாராட்டுப் பெறுகிறான். கலை உலகம் அவனை அங்கீகாரம் செய்ததா, கடந்தகாலத்தின் உண்மைகள் அவனை என்ன செய்தன என்பதைப் படத்தின் இறுதிப்பகுதி விவரிக்கிறது
மூன்று மணி நேரத்திரைப்படமிது. ஓவியங்களின் நேர்த்தியுடன் கவித்துவத்துடன் அழகாக ஒளிப்பதிவு செய்திருக்கிறார்கள். சீபாண்ட்டாக நடித்தவர் உணர்ச்சிகளை வெளிப்படுத்தும் விதம் அபாரம்.
ஜெர்மன் ஓவியர் ஜெர்ஹார்ட் ரிக்டரின் வாழ்வில் நடந்த சில நிகழ்வுகளை அடிப்படையாகக் கொண்டு இந்தத் திரைப்படம் உருவாக்கப்பட்டிருக்கிறது

கர்ட் இரண்டுவகையான கலைப்பயிற்சிகளைப் பெறுகிறான். ஒன்று சித்தாந்தம் வழிகாட்டும் கலை. மற்றது வெறும் கற்பனையின் வெளிப்பாடான கலை. இரண்டிலும் அவனால் வெற்றிபெற முடியவில்லை. முடிவில் இரண்டும் இணைந்த புதிய கலையாக்கம் ஒன்றை அவனே உருவாக்குகிறான். வெற்றிபெறுகிறான்.
உண்மைக்கும் கலைக்குமான உறவினைப் பேசும் இப்படம் வரலாற்றின் இருண்ட பக்கங்கள் மீது வெளிச்சமிடுகிறது.
S. Ramakrishnan's Blog
- S. Ramakrishnan's profile
- 659 followers
