S. Ramakrishnan's Blog, page 91
April 8, 2022
திருப்பூர் புத்தகத் திருவிழாவில்
திருப்பூர் புத்தகத் திருவிழா ஏப்ரல் 14 முதல் ஏப்ரல் 24 வரை நடைபெறுகிறது. இந்தக் கண்காட்சியில் தேசாந்திரி பதிப்பகம் அரங்கு அமைத்துள்ளது
ஏப்ரல் 16 சனிக்கிழமை மாலை கண்காட்சி வளாகத்தில் உரையாற்றுகிறேன்
தலைப்பு : பசியின் கதை
அன்று மாலை 4 மணி முதல் தேசாந்திரி பதிப்பக அரங்கில் இருப்பேன். விருப்பமான நண்பர்கள். வாசகர்கள் சந்திக்கலாம்
•••


ஃபாசெட்டின் கதைச்சித்திரங்கள்.
1940- 50களில் Saturday Evening Post, Collier, Cosmopolitan போன்ற அமெரிக்க இதழ்களில் வெளியான துப்பறியும் கதைகளுக்குத் தனித்துவமிக்கப் படங்களை வரைந்திருக்கிறார் ராபர்ட் ஃபாசெட்(Robert Fawcett).

இவரது கதைச்சித்திரங்களின் தொகுப்பினை பார்த்துக் கொண்டிருந்தேன். அந்தப் படங்கள் வரையப்பட்ட திகில் கதைகளில் ஒன்றிரண்டினை தான் படித்திருக்கிறேன். ஆனால் பல கதைகளில் என்ன நடக்கிறது என்பதை ஓவியத்தின் வழியாகவே புரிந்து கொள்ள முடிகிறது. அது தான் ஃபாசெட்டின் சிறப்பு.

ஷெர்லாக் ஹோம்ஸ் கதைகளை எழுதிய ஆர்தர் கோனன் டாய்லின் மறைவிற்குப் பிறகு அவரது மருமகன் அட்ரியன் கோனன் டாய்ல் மற்றும் ஜான் டிக்சன் கார் இணைந்து எழுதிய ஷெர்லாக் ஹோம்ஸ் கதைகளுக்கு இவர் வரைந்துள்ள ஓவியங்கள் சிறப்பானவை.

ராபர்ட் ஃபாசெட் நிறக்குருடினால் பாதிக்கப்பட்டவர். ஆனாலும் அவர் பயன்படுத்திய வண்ணங்களும், துல்லியமான சித்தரிப்புகளும் வியப்பூட்டக்கூடியவை. தனது மனைவியின் உதவியோடு வண்ணங்களைத் தேர்வு செய்ததாக ஃபாசெட் கூறுகிறார்
ஃபாசெட் சிறுவனாக இருந்த போது அவரது தந்தை ஓவியம் வரைவதற்குப் பயிற்சிகள் கொடுத்திருக்கிறார். அத்தோடு ஃபாசெட் பென்சிலால் வரையும் ஒவ்வொரு கோட்டோவியத்தையும் பாராட்டி நாணயம் ஒன்றைப் பரிசாகக் கொடுத்திருக்கிறார். அந்த ஊக்குவிப்பே அவரை ஓவியராக உருமாற்றியது.
ஃபாசெட் 1903 இல் இங்கிலாந்தில் பிறந்தார், அவரது குடும்பம் 1913 இல் கனடாவிற்குக் குடிபெயர்ந்தது. அங்கே இருந்த நாட்களில் வார இதழ்களில் வெளியான ஓவியங்களை நகலெடுத்து வரைவதில் ஆர்வம் கொண்டிருந்தார்.
ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு அவர்கள் குடும்பம் நியூயார்க் நகரத்திற்குக் குடிபெயர்ந்தது. பகுதி நேர வேலை செய்து சம்பாதித்த பணத்தைக் கொண்டு லண்டனிலுள்ள கலைக்கல்லூரி ஒன்றில் சேர்ந்து இரண்டு ஆண்டுகள் பயின்றார். அமெரிக்கா திரும்பிய பிறகு பத்திரிக்கை உலகோடு தொடர்பு ஏற்பட்டது. அதன்பிறகே தொடர்கதைகளுக்கு ஓவியம் வரையத் துவங்கினார்.
குறிப்பாகத் துப்பறியும் கதைகளுக்கு அவர் வரைந்த ஓவியங்கள் மிகுந்த புகழைப் பெற்றுத் தந்தன. ஷெர்லாக் ஹோம்ஸ் கதைகள் புத்தகமாக வந்த போதும் இவரது ஓவியங்களே இடம்பெற்றிருந்தன.

கோட்டோவியம் வரைவதற்கான எளிய பயிற்சிகள். உபகரணங்கள். அடிப்படை பாடங்களை விளக்கும் விதமாக இவர் எழுதிய On the Art of Drawing என்ற நூல் இன்றும் ஓவியக்கல்லூரிகளில் பாடநூலாகப் பயிலப்படுகிறது.
இந்த டிஜிட்டல் யுகத்திலும் அவரது ஓவியங்களை முன்மாதிரியாகக் கொண்டே பத்திரிக்கை ஓவியங்கள் வரையப்படுகின்றன. ஃபாசெட்டினை “The Illustrator’s Illustrator” என்று கலையுலகம் கொண்டாடுகிறது
துப்பறியும் கதைகளின் திகில் மற்றும் பரபரப்பான சூழலை இவரது ஓவியங்கள் நுட்பமாக வெளிப்படுத்துகின்றன. குறிப்பாகக் காட்சிக்கோணங்களும் கதாபாத்திரங்களின் முகத்தில் வெளிப்படும் உணர்ச்சிகளும், சூழலின் விநோதமும் வெகு நேர்த்தியாகச் சித்தரிக்கப்பட்டிருக்கின்றன

துப்பறியும் கதை என்பதே காலத்தின் முன்பின்னாகச் செல்லும் பயணம் தானே. ஒரு கொலை யாரால் எதற்காக நடந்தது என்பதைக் கதாபாத்திரங்களுடன் இணைந்து வாசகருடன் கண்டுபிடிக்கிறார்கள்.
நிகழ்காலத்திலிருந்து கடந்தகாலத்திற்குள் செல்லும் காலப்பயணம் தான் துப்பறியும் செயலாக வெளிப்படுகிறது. துப்பறியும் கதைகளை வாசிக்கத் தூண்டுவது அதற்கு வரையப்பட்ட சித்திரங்களே. கதையைப் படித்து முடித்துவிட்டு அந்தச் சித்திரங்களைத் தனித்துப் பார்க்கும் போது அவை கதையின் ஆதாரத்தை உயிரோட்டமாகச் சித்தரித்திருப்பதை உணர முடிகிறது. அது தான் ஓவியனின் வெற்றி.
துப்பறியும் கதைகளில் இயல்பான நிகழ்விடம் கூடக் குற்றத்தின் காரணமாக விநோத தோற்றம் கொண்டுவிடுகிறது. குற்றத்துடன் தொடர்பு கொண்டவர்களின் முகமும் உடலும் உறைந்து விடுகின்றன. இருளும் குறைந்த ஓளியும் கலந்த அந்த உலகினை சித்தரிப்பது ஓவியருக்கு ஒரு சவால். அதில் ராபர்ட் ஃபாசெட் அரிய சாதனையைச் செய்திருக்கிறார்.

கதையில் வரும் துப்பறிவாளரின் தோற்றம் மற்றும் தனிச்சிறப்புகளை ஓவியர்களே உருவாக்கினார்கள். எழுத்தில் நாம் அறியும் ஷெர்லாக் ஹோம்ஸின் தோற்றமும் ஓவியத்தில் காணப்படும் தோற்றமும் ஒன்றல்ல. ஆனால் வாசகர் மனதில் இந்த ஓவியத்தின் வழியே தான் ஷெர்லாக் ஹோம்ஸ் பிம்பமாகப் பதிந்து போகிறார். புகழ்பெறுகிறார்.
“நான் கலைப் பள்ளியில் படிக்கும் போது ராபர்ட் ஃபாசெட்டின் ஓவியங்களைப் பாடமாகப் பயின்றேன். குறிப்பாக அவரது காட்டுக்கோணங்கள் கதையைச் சித்தரிக்கும் விதம் அதன் நுணுக்கமான சித்தரிப்பு. உணர்ச்சி நிலை மற்றும் வண்ணங்கள், அவர் ஒரு நிகரற்ற மாஸ்டர் என்பதை உணர்த்துகின்றன என்கிறார் ஓவியர் முர்ரே டின்கெல்மேன்.

“பத்திரிக்கை ஆசிரியர் மற்றும் விளம்பர நிறுவனங்களின் கெடுபிடிகள் மற்றும் வற்புறுத்தல் காரணமாகவே சிறந்த ஓவியர்களால் கூட நல்ல கதைச்சித்திரங்களைத் தர இயலவில்லை. ஆனால் நான் பிடிவாதமாக எனக்கு விருப்பமானதை மட்டுமே வரைந்தேன். பல நேரங்களில் பத்திரிக்கைகள் சொன்ன எந்த ஆலோசனையும் நான் கேட்டதில்லை. வற்புறுத்தல் அதிகமானால் அந்த வேலையை விட்டுவிடுவேன். பத்திரிகையுலகின் அவசரத்திற்கான என்னைப் பலிகொடுத்துக் கொள்ள விரும்பவில்லை. அதே நேரம் என்னால் வேகமாக, சிறப்பாக ஓவியத்தை வரைய முடியும் என்பதையும் அவர்களுக்குக் காட்டியிருக்கிறேன். கதையில் எந்தக் காட்சியை, நிகழ்வினை சித்திரமாக வரைவது என்பது எப்போதும் எனது தேர்வாக மட்டுமே இருக்கும். வண்ணங்களை, உருவங்களை மாற்றச் சொன்னால் நான் ஒரு போதும் சம்மதிக்க மாட்டேன். எனக்கான தனித்துவத்தை விட்டுக் கொடுத்து வேலை செய்ய மாட்டேன் என்பதை அவர்களும் உணர்ந்திருந்தார்கள்“ என்கிறார் ராபர்ட் ஃபாசெட்
பத்திரிக்கைகளில் வரும் கதைகளுக்கு ஓவியம் வரைந்திருக்கிறார் என்றபோதும் அவருக்குப் புத்தகம் படிப்பதில் அதிக ஆர்வமில்லை. இசை கேட்பதும் இசைக்கலைஞர்களுடன் நெருங்கிப் பழகுவதும் தான் அவரது விருப்பம். அவரது வீடு இசைக்கலைஞர்கள் ஒன்றுகூடும் மையமாக விளங்கியது. உலகப் புகழ்பெற்ற இசைக்கலைஞர்களுடன் நெருக்கமான நட்பு கொண்டிருந்தார்.

கதாபாத்திரங்கள் அணிந்துள்ள ஆடைகளின் சிறப்பம்சங்களை நுணுக்கமாக வரைந்திருக்கிறார் ஃபாசெட். அறையின் துல்லியமான சித்தரிப்பு. திரைச்சீலைகள். தரைக்கம்பளங்கள். உணவு மேஜைகள். தூரத்து ஜன்னல் கண்ணாடிகளில் வரும் ஒளி. நிகழ்வின் உக்கிரத்தை வெளிப்படுத்தும் முகபாவனைகள். கலைந்த தலைமுடிகள். ஆவேசத்தை, பயத்தை வெளிப்படுத்தும் கைகள். பயந்து போன கண்கள். இறந்த உடல்களின் விநோத நிலை என அந்தச் சித்திரங்களைப் பற்றிச் சொல்வதற்கு நிறையவே இருக்கிறது. ரெம்ப்ராண்ட்டைப் போலவே ஒளி மற்றும் அடர் வண்ணங்களை. பயன்படுத்தியிருக்கிறார்.
ஜப்பானிய நோட்டன் கருத்தாக்கத்தைப் பயன்படுத்தி இருள் ஒளி அமைப்பினை உருவாக்குகிறார். ஓவியத்தின் மையத்தில் கவனம் செலுத்தும்படி மட்டும் அவர் வாசகரை வழிநடத்துவதில்லை. அந்தக் காட்சிக்குள் நாம் எட்டிப்பார்ப்பது போன்ற உணர்வையே ஏற்படுத்துகிறார்.
துப்பறியும் கதைகளில் சிறிய பொருட்கள் கூட முக்கியமான தடயமாக மாறிவிடுகின்றன. அதைக் கவனத்தில் கொண்டு நிகழ்விடத்திலுள்ள பொருட்களை. கீழே விழுந்து கிடக்கும் சுருட்டு, கிழித்தெறியப்பட்ட காகிதம். சிற்பத்தின் உடைந்த பகுதி, சிகரெட் லைட்டர், கண்ணாடி டம்ளர் எனத் துல்லியமாக வரைந்திருக்கிறார்.

துப்பறியும் கதைகள் திரைப்படமாக உருவாக்கப்பட்ட போது இந்த ஓவியத்திலிருந்த உடைகள். முகபாவங்கள். தோற்றம் மற்றும் அகபுற சித்தரிப்புகள் அப்படியே நகலெடுக்கப்பட்டிருக்கின்றன. குறிப்பாக Film Noir படங்களில் இவரது காட்சிக்கோணங்களை, சித்தரிப்பை அப்படியே காணமுடியும். சினிமாவை போலவே ஓவியங்களில் closeup shots அதிகம் வரைந்தவர் ஃபாசெட்
அமெரிக்கப் பத்திரிக்கை ஓவியர்கள் மற்றும் அவர்களின் முக்கியப் பங்களிப்பு குறித்து நிறைய நூல்கள் வெளியாகியிருக்கின்றன. தமிழ் பத்திரிகையுலகில் பங்களித்த ஓவியர்கள் குறித்து இது போல விரிவான ஆய்வும் மதிப்பீடுகளும் நடைபெறவில்லை.
வார இதழ்களில் வெளியாகும் சித்திரங்கள் தேவை கருதி வரையப்பட்டவை. ஆகவே அவற்றின் கலைத்தன்மை மற்றும் நிலைத்தன்மை குறைவு. ஆனால் பொழுதுபோக்கு இதழ்களில் கூடச் சிறந்த கலைப்படைப்புகளை உருவாக்க முடியும் என்பதையே ராபர்ட் ஃபாசெட் நிரூபித்துக் காட்டியிருக்கிறார்.
April 6, 2022
புரவி முதலாம் ஆண்டுவிழா
வாசக சாலையின் சார்பில் வெளியிடப்படும் புரவி இதழின் முதலாம் ஆண்டுவிழாவில் கலந்து கொண்டு உரையாற்றுகிறேன்.
இந்த நிகழ்வு ஏப்ரல் 9 சனிக்கிழமை மாலை தி.நகரிலுள்ள தக்கர்பாபா வளாகத்தினுள் நடைபெறுகிறது

வெள்ளைக் கோட்டினைக் கடந்து.
தி ஸ்கார்லெட் அண்ட் தி பிளாக் 1983 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம்.
இதை இயக்கியவர் ஜெர்ரி லண்டன்.

1943 இல், ரோம் நகரை நாஜி படைகள் ஆக்கிரமித்துக் கொண்ட போது ராணுவம். வாடிகன் நகரையும் போப்பின் அதிகாரத்தையும் தனது கட்டுக்குள் வைக்க முயன்றது
படத்தின் துவக்கக் காட்சியிலே இரண்டு ராணுவ உயரதிகாரிகள் போப்பினை சந்தித்து வாடிகன் தங்கள் அதிகாரத்தில் தலையிடக் கூடாது. யாருக்கும் அடைக்கலம் கொடுப்பதோ, உதவி செய்வதோ கூடாது என்று நிபந்தனை விதிக்கிறார்கள். அத்துடன் செயின்ட் பீட்டர்ஸ் சதுக்கத்தில் ஒரு வெள்ளைக்கோடு வரைகிறார்கள்.
அந்த எல்லையோடு வாடிகனின் அதிகாரம் முடிந்துவிடுகிறது, தாங்களும் அதைத் தாண்டி வரமாட்டோம் என்று ஆணையிடுகிறார்கள்.

ரோம் நகரம் கர்னல் ஹெர்பர்ட் கெப்ளரின் கட்டுப்பாட்டிற்குள் இயங்குகிறது. அவர் யூதர்களை வேட்டையாடுகிறார். குடியிருப்புகளைச் சூறையாடுகிறார், அவர்களிடமிருந்து பெரும் தொகை மற்றும் தங்கத்தைப் பறித்துக் கொள்கிறார். உயிருக்குப் பயந்த யூதர்கள் திருச்சபையிடம் தஞ்சமடைகிறார்கள்.
தங்களிடம் தஞ்சமடைந்த யூதர்களையும் பிரிட்டிஷ் மற்றும் அமெரிக்கப் போர்வீரர்களையும் காப்பாற்றித் தப்ப வைக்க முயலுகிறார் ஐரிஷ் கத்தோலிக்கப் பாதிரியாரான மான்சிக்னர் ஓ’ ஃப்ளாஹெர்டி
ஃப்ளாஹெர்டிக்கு உள்ளூர் வாசிகள், மதகுருமார்கள் மற்றும் தூதரக உறுப்பினர்கள் பல்வேறு வழிகளில் உதவுகிறார்கள்.
கர்னல் கெப்ளருக்கும் பாதிரி ஃப்ளாஹெர்டிக்கும் நடக்கும் மோதலே படத்தின் மையக்கதை

கிரிகோரி பெக் ஃப்ளாஹெர்டியாகச் சிறப்பாக நடித்திருக்கிறார். கெப்ளராக நடித்துள்ளவர் கிறிஸ்டோபர் பிளம்மர்
கெப்ளரின் மனைவி குடும்பம் மற்றும் அவரது நாஜி விசுவாசத்தை ஒரு புறம் சித்தரிக்கிறார்கள். மறுபுறம் தஞ்சமடைந்தவர்களைக் காப்பாற்றப் பாதிரியார் எப்படி நிதி திரட்டுகிறார். அவர்களை ஒளித்து வைக்க இடம் தேடுகிறார். அவரை எவ்வாறு எஸ்எஸ் அதிகாரிகள் கண்காணிக்கிறார்கள் என்பதைக் காட்சிப்படுத்தியிருக்கிறார்கள்
எந்த நேரமும் தான் கைது செய்யப்படுவோம் என்ற சூழ்நிலை இருந்தபோதும் தைரியத்துடன் நடந்து கொள்கிறார் ஃப்ளாஹெர்டி.
உண்மை சம்பவத்தை மையமாகக் கொண்ட உருவாக்கப்பட்ட படமிது.
நகரசோதனையின் போது துப்பாக்கி வைத்திருந்ததாகக் கைது செய்யப்படும் பாதிரியை கர்னல் கெப்ளர் அடித்து உதைத்து சித்ரவதை செய்கிறார். ஆனால் அவர் உண்மையைச் சொல்வதில்லை. முடிவில் அவரைச் சுட்டுக்கொல்வதற்காக அழைத்துச் செல்கிறார்கள். துப்பாக்கி வீரர்களின் முன்னால் அவர் மனம் திறந்து பேசுகிறார். அவரைக் கொல்ல ஒரு வீரனும் முன்வரவில்லை. ஆத்திரமான கெப்ளர் தானே சுட்டுக் கொல்கிறார்.

வெள்ளைக்கோட்டினைத் தாண்டி ஃப்ளாஹெர்டி வெளியே செல்லக்கூடாது என்பதற்காகக் கண்காணிப்பினை வலுப்படுத்துகிறார்கள். ஆனால் அவர் மாறுவேடத்தில் தப்பிச் செல்கிறார். தேவையான உதவிகளைச் செய்கிறார்
இசைநிகழ்ச்சியில் அவர் கெப்ளரை சந்தித்து உரையாடும் காட்சி முக்கியமானது. கெப்ளரின் கையெழுத்தை அவர் தந்திரமாகப் பயன்படுத்தும் விதம் சிறப்பு
எப்படியாவது ஃப்ளாஹெர்டியை கைது செய்துவிட வேண்டும் என்று கெப்ளர் துடிக்கிறார். ஆனால் திருச்சபைக்குள் சென்று அவரைக் கைது செய்ய முடியாது என்பதால் காத்திருக்கிறார். ரகசியமாக ஆட்களை அனுப்பிக் கொலை செய்யவும் முயல்கிறார்
பாதிரியாக இருந்த போதும் குத்துச்சண்டை வீரர் என்பதால் ஃப்ளாஹெர்டி எதிரிகளுடன் சண்டையிட்டு வீழ்த்துகிறார்
நெருக்கடியான சூழ்நிலையில் நாஜி ராணுவத்தின் செயல்பாடுகளை நேரடியாக எதிர்ப்பதா அல்லது ஒதுங்கிச் செல்லும் போக்கினை கடைப்பிடிக்க வேண்டுமா என்றே கேள்வி திருச்சபையின் முன் எழுகிறது. போப் தேவையற்ற மோதலை தவிர்க்கலாம் என்றே நினைக்கிறார். ஆனால் தீமையை எதிர்ப்பது முக்கியம் என்கிறார் பாதிரி.
ஒருவேளை நாஜி ராணுவம் வாடிகனை கைப்பற்றி அங்குள்ள கலைப்பொருட்கள் மற்றும் ஆவணங்களைக் கொள்ளை அடித்துப் போய்விடுமோ என்று பயப்படுகிறார் போப்.

ஒரு காட்சியில் ஃப்ளாஹெர்டியை கலைப்பொருட்கள் உள்ள அறைக்கு அழைத்துப்போய்க் காட்டுகிறார். தனது அச்சத்தைப் பகிர்ந்து கொள்கிறார். ஆனால் ஃப்ளாஹெர்டி தீவினையை எதிர்ப்பதற்கு நாம் அஞ்சத்தேவையில்லை. வருவது வரட்டும் என்று உறுதியான குரலில் பதில் தருகிறார்
ரோம் நகரம் எப்படி நாஜி ராணுவத்திடமிருந்து மீட்கப்பட்டது. கெப்ளர் என்னவானார் என்பதைப் படத்தின் கடைசிப்பகுதி பேசுகிறது
ஃப்ளாஹெர்டியின் உறுதியான நிலைப்பாடும் சாகசச்செயல்களும் சிறப்பாகக் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. தனியார் வீடுகள் மற்றும் அடுக்குமாடிக் குடியிருப்புகள், தேவாலயங்கள் மற்றும் மடாலயங்களைப் பயன்படுத்தி அவர் 6,500 பேரைக் காப்பாற்றியுள்ளார்.
வெள்ளைக்கோடு என்பது தங்கள் காலில் மாட்டப்பட்ட சுருக்குக் கயிறு என்பதை போப் உணர்ந்திருக்கிறார். ஆனால் ஃப்ளாஹெர்டி வெள்ளைக்கோடினை கண்டுகொள்வதில்லை. உதவி செய்வதற்கு எந்த கோட்டினையும் கடந்து செல்லலாம் என்றே நினைக்கிறார்.

ஒரு காட்சியில் அவர் வெள்ளைக்கோட்டின் ஒரமாக நடந்து செல்லும் போது தூரத்திலிருந்து துப்பாக்கி முனையில் கெப்ளர். அவரை கண்காணிக்கிறார் சுட்டுவிடக்கூடுமோ என்ற நிலை உருவாகிறது. ஆனால் ஃப்ளாஹெர்டி சலனமேயில்லாமல் விலகிப் போகிறார்.
நாஜி ராணுவத்திடமிருந்து யூதர்களை காப்பாற்றிய மனிதர்களை முதன்மைப்படுத்தி ஹாலிவுட்டில் நிறைய திரைப்படங்கள் வெளியாகியிருக்கின்றன. இந்தப் படம் திருச்சபை மற்றும் பாதிரி ஃப்ளாஹெர்டியின் தரப்பை பேசுகிறது. அதற்காகவே இன்றும் யூத திரைப்படவிழாக்களில் இப்படம் தவறாமல் திரையிடப்படுகிறது
••
April 5, 2022
மாநில கல்விக் கொள்கை குழு
தமிழ்நாடு அரசின் புதிய கல்விக் கொள்கையை வடிவமைக்க வல்லுனர் குழு அமைக்கப்பட்டுள்ளது
“தமிழ்நாட்டின் வரலாற்று மரபு, தற்போதைய நிலைமை, எதிர்காலக் குறிக்கோள்களுக்கு ஏற்ப, மாநிலத்திற்கெனத் தனித்துவமான மாநிலக் கல்விக் கொள்கை ஒன்றை வகுப்பதற்கு, கல்வியாளர்கள் மற்றும் வல்லுநர்களைக் கொண்ட உயர்மட்டக் குழு ஒன்றை இந்த அரசு அமைக்கும்’’ எனத் தமிழக முதல்வர் அறிவித்திருந்தார்.
அந்த அறிவிப்பைச் செயல்படுத்தும் விதமாகப் புதிய குழுவினை, மாண்புமிகு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

இக்குழுவின் தலைவராக டெல்லி உயர் நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி திரு. த.முருகேசன் அவர்களும்
உறுப்பினர்களாகப் பேராசிரியர் திரு. எல். ஜவஹர்நேசன், முன்னாள் துணைவேந்தர், சவீதா பல்கலைக்கழகம்
திரு. இராமானுஜம், ஓய்வு பெற்ற கணினி அறிவியல் பேராசிரியர், தேசிய கணித அறிவியல் நிறுவனம்
பேராசிரியர் திரு. சுல்தான் இஸ்மாயில், மாநிலத் திட்டக்குழு உறுப்பினர்
பேராசிரியர் திரு. இராம சீனுவாசன், மாநிலத் திட்டக்குழு உறுப்பினர்
முனைவர் அருணா ரத்னம், மேனாள் சிறப்புக் கல்வி அலுவலர், யூனிசெப் நிறுவனம்
திரு.எஸ்.இராமகிருஷ்ணன், எழுத்தாளர்
திரு விஸ்வநாதன் ஆனந்த், உலகச் சதுரங்க சேம்பியன்.
திரு.டி.எம்.கிருஷ்ணா, இசைக் கலைஞர்
திரு.துளசிதாஸ், கல்வியாளர்
முனைவர் திரு.ச.மாடசாமி, கல்வியியல் எழுத்தாளர்
திரு.இரா.பாலு, தலைமை ஆசிரியர், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, கிச்சான்குப்பம், நாகப்பட்டினம் மாவட்டம்
திருமதி.ஜெய தாமோதரன், அகரம் அறக்கட்டளை ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இக்குழுவானது புதிய கல்விக்கொள்கையை வடிவமைத்து, ஓராண்டு காலத்திற்குள் தனது பரிந்துரையை அரசுக்கு அளிக்கும் என அறிவிக்கபட்டுள்ளது
தமிழகக் கல்விக்கொள்கையை உருவாக்கும் குழுவில் எழுத்தாளராக என்னை நியமித்துள்ள தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்களுக்கு மனம் நிறைந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
தமிழகப் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் பொய்யாமொழி அவர்களுக்கு எனது மனம் கனிந்த நன்றி .
••••
April 4, 2022
வேடிக்கைப் பேச்சு
பீகாரைச் சேர்ந்த எழுத்தாளர் ராம்ப்ருக்ஷ் பேனிபுரி (Rambriksh Benipuri )இந்தியச் சுதந்திரப் போராட்டத்தில் சிறை சென்றவர். ஹாஜாரீபாக் மத்தியச் சிறையிலிருந்த நாட்களில் தன்னுடைய ஊரைப்பற்றியும் தனது நினைவில் பதிந்துபோன அபூர்வமான மனிதர்களைப் பற்றியும் தொடர் கட்டுரைகள் எழுதியிருக்கிறார். அதன் தொகுப்பு தான் மண் உருவங்கள். வி.எஸ். ரங்கநாதன் மொழியாக்கத்தில் கலைமகள் வெளியீடாக 1960ல் வெளியாகியுள்ளது

நூலின் முன்னுரையில் கிராமத்தின் அரசமரம் அல்லது ஆலமரத்தடியில் உள்ள மண்பொம்மைகளைப் பற்றி எழுதியிருக்கிறார்.
இவை அபூர்வமான கலைப்பொருட்கள் அல்ல. ஆனால் நிறைவேறாத ஆசையின் வடிவங்கள். பிரார்த்தனையின் சாட்சியங்கள். இந்த மண் உருவங்கள் கிராம மக்களைப் போலவே எளிமையானவை. அசலானவை. இவை காலமாற்றத்தின் மௌனசாட்சியங்களாக இருக்கின்றன. அப்படித் தன் வாழ்நாளில் கண்ட அபூர்வமான மனிதர்களில் சிலரைப் பற்றியே குறிப்புகளே இக்கட்டுரைகள் என்கிறார் பேனிபுரி
எழுத்தாளர் கி.ராஜநாராயணின் கதைகளில் வரும் மனிதர்களை நினைவுபடுத்தும் இந்த புத்தகம் 12 கதாபாத்திரங்களை அறிமுகம் செய்கிறது. இவர்கள் சரித்திர புருஷர்களோ, சாதனையாளர்களோ கிடையாது. எளிய கிராமவாசிகள். எந்த அங்கீகாரமும் பாராட்டும் பெறாதவர்கள்.

கலையின் வேலை வாழ்க்கையைப் பூசி மறைப்பதில்லை. அதை நிஜமாக வெளிப்படுத்துவதே. தானும் அப்படி வண்ணப்பூச்சுகள் எதுவுமின்றி இந்த மனிதர்களை அசலாகப் பதிவு செய்திருக்கிறேன் என்கிறார் பேனிபுரி
1940-50களில் இந்தியா முழுவதுமே இப்படி நடைச்சித்திரங்கள் எழுதப்பட்டிருக்கின்றன. இது போன்று உண்மை மனிதர்களைச் சித்தரிக்கக் கூடிய மலையாள, வங்க, தெலுங்கு மொழியாக்கப் புத்தகங்களைப் படித்திருக்கிறேன். ஒருவகையில் இவர்கள் அறியப்படாத மனிதர்கள். சமூகம் அங்கீகரிக்க மறுத்த இவர்களைப் படைப்பாளிகள் அங்கீகரித்து உரிய முக்கியத்துவத்தை உருவாக்கியிருக்கிறார்கள்
மண் உருவங்கள் தொகுப்பிலும் இத்தகைய மனிதர்களே இடம்பெற்றிருக்கிறார்கள்.
பொதுப்பார்வையில் இவர்கள் உதவாக்கரைகள். ஏமாளிகள் அல்லது முக்கியமில்லாதவர்கள். ஆனால் எழுத்தாளனுக்கு இவர்களே கதாநாயகர்கள். கதாநாயகிகள். இவர்களில் சிலரோடு பேனிபுரி நேரடி உறவு கொண்டிருக்கிறார். சிலரது வாழ்க்கையைத் தள்ளி நின்று அறிந்திருக்கிறார்.
அந்த மனிதர்கள் எவ்வாறு தனது வளர்ச்சி மற்றும் வீழ்ச்சியைச் சமமாகப் பாவித்தார்கள் என்பதையும் அவர்களின் கனவிற்கும் நிஜத்திற்குமான இடைவெளியைப் பற்றியுமே ராம்ப்ருக்ஷ் எழுதியிருக்கிறர் .
1899 ஆம் ஆண்டு டிசம்பர் 23 ஆம் தேதி பீகாரில் உள்ள பெனிபூர் என்ற சிறிய கிராமத்தில் பிறந்தவர் ராம்ப்ருக்ஷ் , கிராமப்பள்ளியில் ஆரம்பக் கல்வியை முடித்தபிறகு மேல்படிப்புக்காக முசாபர்பூருக்கு சென்றார். அங்கே தேச அரசியலில் ஈடுபாடு கொண்டு தனது படிப்பைப் பாதியிலே கைவிட்டு சுதந்திரப் போராட்டங்களில் கலந்து கொண்டார்.
1920 ஆம் ஆண்டு மகாத்மா காந்தியால் தொடங்கப்பட்ட ரவுலட் சட்டத்திற்கு எதிரான ஒத்துழையாமை இயக்கத்தில் பங்கேற்றார். ஹாஜாரீபாக் சிறையிலிருந்தபடியே அவர் கவிதைகள் மற்றும் கட்டுரைகள் எழுதி வந்தார். இந்தி இலக்கியத்தின் முக்கியப் படைப்பாளியாகக் கொண்டாடப்படும் ராம்ப்ருக்ஷ் பேனிபுரி சாகித்திய அகாதமி விருது உள்ளிட்ட பல்வேறு முக்கிய விருதுகளைப் பெற்றிருக்கிறார்.
மண் உருவங்களில் மறக்கமுடியாத கதாபாத்திரம் ரஜியா.
வளையல் விற்கும் அம்மாவுடன் விளையாட்டுச் சிறுமியாக அறிமுகமாகிறாள். நாடோடி இனத்தைச் சேர்ந்தவள். சுடரென ஒளிரும் முகம். பளிச்சிட்ட சிரிப்பு. அழகான காதணி. மணிக்கட்டுவரை ரவிக்கை அணிந்திருக்கிறாள்.
பள்ளிவிட்டு வீடு திரும்பும் சிறுவன் ராம்ப்ருக்ஷ் அந்தச் சிறுமியின் அழகில் மயங்கி அவளுடன் பேச முற்படுகிறான். ஆனால் அவள் எந்தக் கேள்விக்குப் பதில் சொல்வதில்லை. தலையை மட்டுமே அசைக்கிறாள்.
ராம்ப்ருக்ஷ் தனது சிற்றன்னைக்கு ரஜியாவின் அம்மா. வளையல் போட்டுவிடுவதை வேடிக்கை பார்க்கிறான். ரஜியாவின் வீடு அதே ஊரில் தானிருக்கிறது. எளிய இஸ்லாமியக் குடும்பம். இந்து இஸ்லாம் எனப் பேதமின்றி ஊர்மக்கள் ஒன்றாக வாழ்ந்து வருகிறார்கள்.
தன் மகளைச் சின்ன எஜமான் ராம்ப்ருக்ஷ் ஆசையோடு பார்ப்பதைக் கண்ட ரஜியாவின் அம்மா “மாப்பிள்ளை என் மகளைக் கட்டிக் கொள்கிறீர்களா“ எனக் கேலியாகக் கேட்கிறாள். “உன் மகள் ஒத்துக் கொள்ள வேண்டுமே“ எனச் சிற்றன்னை கேட்டதும் ரஜியா வெட்கப்படுகிறாள்.

அந்த நிமிஷம் ராம்ப்ருக்ஷ் மனதில் அவள் தனக்கானவள் என்ற எண்ணம் பிறக்கிறது. அன்றிலிருந்து ரஜியாவை எங்கே கண்டாலும் அவளுடன் பேசவும் பழகவும் முயலுகிறார். ஆனால் ரஜியா விலகி விலகிப் போகிறாள்.
ராம்ப்ருக்ஷ் போல அவள் பள்ளிக்குச் சென்று படிக்கவில்லை. அம்மாவிற்கு உதவியாக வளையல் விற்கச் செல்கிறாள். அவளது அழகான கைகளால் வளையல் போட்டுக் கொள்வதை ஊர்பெண்கள் விரும்புகிறார்கள். தாயிடமிருந்து அவள் தொழிலைக் கற்றுக் கொள்கிறாள். பள்ளிப்படிப்பு. உயர்நிலை படிப்பு என ராம்ப்ருக்ஷ் வளருகிறார். அதே நேரம் தன் கண்முன்னே ரஜியா குமரிப்பெண்ணாக வளர்ந்து நிற்பதைக் காணுகிறார்.
அவள் வேறு மதத்தைச் சேர்ந்தவள். எளிய குடும்பத்தில் பிறந்தவள். நிச்சயம் தனது காதலை ஏற்கமாட்டாள் என்பதை அவர் உணர்ந்து கொள்கிறார். அவளிடம் தனது காதலை வெளிப்படுத்தவேயில்லை
காலம் மாறுகிறது. வேலை தேடி பாட்னா செல்கிறார். ரஜியா நினைவில் ஒளிரும் நட்சத்திரமாக மட்டுமே இருக்கிறாள். ஒரு நாள் சொந்த ஊர் திரும்பும் போது அவளுக்குத் திருமணமாகி கணவனுடன் வருவதைக் காணுகிறார். அவள் தன்னுடைய கணவரை அறிமுகம் செய்து வைக்கிறாள். தனது தாயைப் போலவே வளையல் விற்கும் அவளுக்கு உதவியாகக் கணவன் கூடவே செல்கிறான்.
அந்தச் சந்திப்பின் போதும் அவளது கண்களில் பரிகாசம் வெளிப்படுகிறது. “உங்களுக்கு உரியவளை இந்த மனுசன் பறித்துக் கொண்டுவிட்டான்“ என்று கேலி பேசுகிறாள்.
பின்பு அவருக்கும் திருமணமாகிறது. அவரது புதுமனைவிக்கு வளையல் போட வருகிறாள் ரஜியா. அவளிடம் “உங்கள் கணவனை நான் கொண்டுபோய்விடுவேன்“ என்று பரிகாசம் செய்கிறாள். ரஜியாவின் கண்களில் மாறாத அன்பு வெளிப்படுவதை உணருகிறார்
சிறுவயதில் நடந்த கேலிப்பேச்சு தான் என்றாலும் சொல்லின் வழியே உருவான அந்தப் பந்தம் உலகம் அறியாதது. அவரைப் போலவே அந்தச் சொல்லை ரஜியாவும் நிஜமாக நம்பியிருக்கவும் கூடும். ஆனால் வாழ்க்கை அவர்களை வேறு திசை நோக்கித் திருப்பிவிட்டது. அவர்கள் தங்கள் காதலை வெளிப்படுத்திக் கொள்ளவில்லை. ஆனால் பள்ளத்தைக் கண்டதும் தானே ஓடும் தண்ணீரைப் போல நேரில் கண்டதும் மனதைப் பரிமாறிக் கொள்கிறார்கள்.
நகரவாழ்க்கைக்கு மாறிப்போன பிறகு ரஜியாவை மறந்துவிடுகிறார். பத்திரிக்கையாளர், எழுத்தாளர் என அவரது உலகம் மாறிவிடுகிறது. ஒரு நாள் பஜாரில் அவளைத் தற்செயலாகச் சந்திக்கிறார்.
இப்போது அவள் நடுத்தரவயதுப் பெண்மணி. ஆளும் மாறியிருக்கிறாள். அவளது கணவன் உடனிருக்கிறான். கிராமத்துப் பெண்கள் இப்போதெல்லாம் புதுவிதமான அலங்காரம் செய்து கொள்ள ஆசைப்படுகிறார்கள். வளையல் போடுவதில் அதிக விருப்பமில்லை. ஆகவே காதணிகள் பவுடர் மற்றும் அலங்காரப் பொருட்கள் வாங்க நகரிற்கு வந்துள்ளதாகச் சொல்கிறாள்.
அன்றும் ராம்ப்ருக்ஷ் மனைவிக்கு அவள் புதிதாக வளையல் கொடுத்து விடுகிறாள். அத்துடன் இதை நீங்களே உங்கள் மனைவிக்கு அணிவித்து விட வேண்டும் என்றும் சொல்கிறாள். அன்றும் அவளது கண்களில் பால்ய நினைவுகளின் மேகம் கடந்து போவதைக் காணுகிறார்
நீண்ட காலத்தின் பின்பு அரசியலில் பெரிய மனிதராகித் தேர்தல் பிரச்சாரத்திற்காகத் தனது சொந்த ஊருக்குப் போகிறார். அங்கே தற்செயலாக ஒரு சிறுமியைக் காணுகிறார். அவள் அப்படியே ரஜியாவின் சாடை. அதே ஒளிரும் முகம். அதே சிரிப்பு. அதே நீலக்கண்கள். அவள் உரிமையுடன் தன் வீட்டிற்கு வரும்படி அழைக்கிறாள். ரஜியா தான் மீண்டும் சிறுமியாகிவிட்டாளோ என்று நினைத்து வியந்து அவளுடன் நடந்து போகிறார்
அவள் ரஜியாவின் பேத்தி என்பதும் ரஜியாவின் கணவன் இறந்துவிட்டதும் பையன்கள் கல்கத்தாவில் வேலையில் இருப்பதையும் அறிந்து கொள்கிறார். நோயாளியாக உள்ள ரஜியாவின் வீட்டிற்குப் போகிறார்.
சுத்தமாக மெழுகப்பட்ட தரை. நிறைவான வாழ்க்கையின் அடையாளமாக மூன்று பையன். அவர்களின் மனைவி, பிள்ளைகள். ரஜியா படுக்கையில் நோயாளியாக இருக்கிறாள். அவர் கூடத்தில் அமர்ந்து அவளது வருகைக்காகக் காத்திருக்கிறார்.
அவரைக் காணுவதற்கு முன்பு தனது உடைகளை மாற்றிவிடும்படி மருமகளிடம் சொல்கிறாள் ரஜியா. வேறு உடையினை உடுத்திவிடுகிறார்கள். பின்பு இரண்டு பெண்கள் கைதாங்கலாக அவளைப் பிடித்து அழைத்துக் கொண்டு வருகிறார்கள். வலுவிழந்து மெலிந்த உருவம். அவளது தலைமயிர் முற்றிலும் வெண்மையாகிவிட்டது.. அருகில் வந்து “சலாம் எஜமான்“ என்கிறாள். அப்போது அவளது குழிவிழுந்த கண்கள் விரிந்து ஒளிர்வதைக் காணுகிறார். அந்த முகத்தில் பரவசம். அந்தக் கண்களில் பால்யத்தில் கண்ட அதே அன்பு. அதே கேலி.
காலம் அவளது கூந்தலின் கருமையைத் துடைத்து சுத்தமாக்கி அவளை வெண்ணிற அழகியாக மாற்றியிருப்பதாக அவர் ஏறிட்டுப் பார்ப்பதுடன் கட்டுரை நிறைவு பெறுகிறது
••
இது தான் அவர்களின் கடைசிச் சந்திப்பாக இருக்கக்கூடும்.
அந்த நிமிஷத்தில் இருவரும் முதியவர்கள். ஆனால் மனதில் பால்யத்தின் அலை பேரோசையுடன் எழுந்து அடித்துச் செல்கிறது. தேவதாஸ் கதையில் தனது வாழ்வின் கடைசியில் இப்படித் தான் பார்வதி வீட்டின் முன்பாக வந்து சேருகிறான். அவர்கள் காதலித்துத் தோற்றவர்கள். ஆனால் ரஜியாவோ காதலைச் சொல்லவேயில்லை.
தன்னை விரும்பும் மனிதன் முன்பு ஒரு பெண் எப்போதும் அழகியாகவே இருக்கிறாள்.
ஒரு சிறுகதையைப் போலக் கச்சிதமாக நிறைவுபெறுகிறது கதை. ஆனால் படித்து முடித்தபிறகு மனதில் அந்தக் காட்சி முடிவடைவதில்லை. என்ன பேசியிருப்பார்கள். அவர்களுக்குள் இனி சொல்லிக் கொள்ள என்ன இருக்கிறது. இனி அவர்கள் இரண்டு பறவைகள் ஒரே கிளையில் அமர்ந்து ஒன்றையொன்று பார்த்துக் கொண்டிருப்பதைப் போலத் தான் உணர்வார்களா.
உலகம் அவர்களிடமிருந்து நழுவிச் சென்றுவிட்ட அந்தக் கணத்தை விட்டு மனம் நகர மறுக்கிறது.
ஒரு கட்டுரைக்குள் நாவலின் உலகம் முழுமையாக விரிந்து எழுவது போலவே உணர்ந்தேன்.
அந்தக் கிராமத்தில் அவர் இல்லாத போது அவரது பெருமைகளை, வெற்றியைத் தனது உறவினர் மற்றும் பேத்திகளிடம் சொல்லிக் கொண்டேயிருக்கிறாள் ரஜியா. அவள் பார்த்த உயர்ந்த மனிதரில்லையா.
இப்போது அவள் வேறு ஒருவரின் மனைவி. வேறு ஒருவரின் தாய். பேரன் பேத்திகளுடன் வாழுகிறவள் என்றாலும் அவள் ராம்ப்ருக்ஷ்க்குரியவள். அதை அவளும் உணர்ந்தேயிருக்கிறாள்.
தண்ணீரில் விழும் நிலவைத் தண்ணீர் பிடித்து வைத்துக் கொள்ள முடியாது. ஆனால் தண்ணீருக்கும் நிலவிற்குமான நேசம் என்பதும் விநோதமானது.
காலம் சேர்ந்து வைக்காமல் போன இது போன்ற உறவுகளை இலக்கியம் தான் இணைத்து வைக்கிறது. புரிந்து கொள்ளச் செய்கிறது.
கைத்தாங்கலாக ரஜியாவை இரண்டு பெண்கள் அழைத்து வருவதும் அவள் சலாம் எஜமான் என்று சொல்வதும் கண்முன்னே காட்சியாக விரிகிறது. மறக்கமுடியாத நிகழ்வு.
இந்த உறவுக்கு என்ன பெயர். காதலின் இந்த அபூர்வ முடிச்சு யாருக்கு எப்போது ஏற்பட்டாலும் ஏன் கண்ணீரை வரவழைக்கிறது.
இந்தத் தொகுப்பில் உள்ள மங்கர், சரயு அண்ணா, பைஜு மாமா மூவரும் தனித்துவமிக்கக் கதாபாத்திரங்கள். அதுவும் பைஜு மாமா ஒரு பசுவை வாங்க முப்பது ரூபாய் தேவை என்பதற்காகத் திருடி சிறைக்குப் போகிறார். ஒவ்வொரு முறை சிறையை விட்டு வந்தவுடன் பணம் திருட முயல்கிறார். ஆனால் கடைசி வரை அவரால் பசுவை வாங்க முடியவேயில்லை. இதற்குள் முப்பது வருஷம் சிறையில் கழிந்துவிடுகிறது.
நீண்டகாலம் சிறையில் இருப்பவர்களுக்குப் ஓய்வூதியம் உண்டா என்று ஒரு இடத்தில் அவர் கேட்கிறார். அந்தச் சிறையில் உள்ள மரங்கள் யாவும் அவர் நட்டுவைத்து வளர்த்தவை. இன்று அவை வளர்ந்து பெரியதாகி நிற்கின்றன. விடுதலையாகி வெளியே சென்றாலும் அந்த மரங்கள் தன்னைக் கைநீட்டி அழைப்பதாக அவர் உணருகிறார். தனக்குச் சிறிய குற்றத்தைக் கூடச் சரியாகச் செய்யத் தெரியவில்லை. குடும்பக் கஷ்டத்தை நிறைவேற்ற முடியாமல் இப்படிச் சிறைவாசியாகிவிட்டேன் என்கிறார் பைஜு மாமா. உலகம் அவரது வேதனையை அறியவில்லை. ஆனால் ராம்ப்ருக்ஷ் புரிந்து கொள்கிறார். ஆற்றுப்படுத்துகிறார்.
ரஜியாவை படித்துக் கொண்டிருந்த போது மனதில் வைக்கம் முகமது பஷீரின் பால்யகாலச் சகி நாவல் வந்து கொண்டேயிருந்தது. மஜீத்,சுஹரா இருவரும் மறக்கமுடியாதவர்கள். வாழ்க்கையில் ஒன்றுசேராவிட்டாலும் அவர்களின் அன்பு இணையற்றது
சுஹராவும் ரஜியாவும் வேறுவேறில்லை.
சிலரது நினைவில் நாம் எப்போதும் இளமையாகவே இருக்கிறோம் என்பார்கள். அது தான் ரஜியா விஷயத்திலும் நடந்திருக்கிறது.
எழுத்தாளனுக்கு விரல்களில் கண்கள் இருக்க வேண்டும் என்கிறார் ராம்ப்ருக்ஷ்.
இந்த எழுத்து அதன் சாட்சியமாகவே இருக்கிறது.
April 1, 2022
திருப்பூரில் உரையாற்றுகிறேன்
ஏப்ரல் 16 சனிக்கிழமை மாலை ஆறுமணிக்கு திருப்பூர் புத்தகக் கண்காட்சியில் உரையாற்றுகிறேன்

யுவபுரஸ்கார் உரை
சாகித்திய அகாதமி நடத்திய யுவபுரஸ்கார் விழாவில் எனது உரை.
உளவு பார்க்கும் உலகில்
ஒரு நிகழ்வு துவங்கும் போது அது எப்படி முடியும் என்று யாராலும் கணித்துவிட முடியாது. இயல்பாக முடிந்துவிட்டால் அன்றாடச் செயலாகிவிடுகிறது. எதிர்பாராமல் முடிந்துவிட்டால் மறக்கமுடியாத அனுபவமாகிறது.

சலூனுக்குச் சிகை அலங்காரம் செய்து கொள்ளச் சென்ற ஒரு பெண் மீள முடியாத பிரச்சனைக்குள் மாட்டிக் கொள்வது என்பது நாம் நினைத்துப் பார்க்க முடியாத விஷயம்.
அதுவும் நட்பாகப் பழகிய தோழியால் வஞ்சிக்கப்படுவதும், மிரட்டி சதிவேலையில் ஈடுபடச்செய்வதும் அதிர்ச்சியான விஷயங்கள். அதைத் தான் Huda’s Salon விவரிக்கிறது. ஹானி அபு-ஆசாத் இயக்கிய இப்படம் 2022ல் வெளியாகியுள்ளது.
பெத்லஹேமில் சிறிய சலூன் ஒன்றை நடத்திக் கொண்டிருக்கிறாள் ஹுடா, ஒரு நாள் அந்தச் சலூனுக்குத் தனது கைக்குழந்தையுடன் வருகிறாள் இளம்பெண் ரீம். அவர்களுக்குள் முன்பே நட்பிருக்கிறது. சிகை அலங்காரம் செய்து கொண்டபடியே தன் கணவன் தனக்குக் கள்ள உறவு இருப்பதாகச் சந்தேகப்படுவதாகச் சொல்கிறாள்
அவரது அடர்ந்த கருமையான கூந்தலில் வெதுவெதுப்பான நீரைச் செலுத்தியபடியே ஏதாவது வேலை தேடிக் கொள்ள வேண்டியது தானே என ஆறுதல் சொல்கிறாள் ஹுடா,
தானே ஒரு சலூனை ஆரம்பிக்க நினைத்துள்ளதாகவும் அது கணவனுக்குப் பிடிக்காவிட்டாலும் செய்ய வேண்டும். கைக்குழந்தையின் காரணமாக இப்போது அதை ஆரம்பிக்க இயலவில்லை என ரீம் பதில் தருகிறாள். இப்படி இயல்பாகத் தொடரும் உரையாடல் நீண்ட ஒற்றைக்காட்சியாகப் பத்து நிமிஷங்கள் நீளுகின்றன..

காபியில் மயக்கமருந்து கொடுத்து நிர்வாணப்படுத்தப்படும் ரீம் ஹுடாவால் போட்டோ எடுக்கப்பட்டு பிளாக்மெயில் செய்யப்படுகிறாள். தான் ஒரு திட்டமிடப்பட்ட சூழ்ச்சி ஒன்றில் மாட்டிக் கொண்டுவிட்டோம் என்பது ரீமிற்கு அச்சமூட்டுகிறது.
கைக்குழந்தையை ஏந்தியபடி பதற்றத்துடன் வீடு நோக்கிப் போகிறாள். ஆனால் அவளை ரகசிய உளவாளியாக நினைத்து காவலர் பின்தொடருகிறார்கள்.
ஹுடா இஸ்ரேலிய ஆக்கிரமிப்புப் படைகளுடன் ரகசியமாக வேலை செய்கிறாள். அவளது சலூன் உளவுபார்க்கும் இடம் என்பதும் அவள் இப்படி இளம்பெண்களை மிரட்டி உளவுபார்க்க வைக்கிறாள் என்பதும் கொஞ்சம் கொஞ்சமாகத் தெரிய வருகிறது.
படத்தின் துவக்கக் காட்சியிலே ரீம் பேஸ்புக் வந்தபிறகு தனது அந்தரங்கம் பறிபோய்விட்டது. தன்னை அறியாமல் அதன் வலைக்குள் சிக்கிக் கொண்டுவிட்டேன். ஏன் இலவசமாக எல்லோருக்கும் பேஸ்புக் பக்கம் தரப்படுகிறது. அது ஒரு வணிகத் தந்திரம் என்கிறாள்.
இதற்கு ஹுடா இப்போது எல்லாம் யூடியூப் பார்த்து மக்கள் தானே சிகையலங்காரம் செய்து கொள்கிறார்கள் தனது வியாபாரம் மிகவும் படுத்துவிட்டது என்கிறாள்.
இந்த உரையாடலின் நீட்சி போலவே அடுத்து வரும் நிகழ்வுகள் நடந்தேறுகின்றன.

ரீம் ஒரு பிரச்சனைக்குள் மாட்டிக் கொள்வது போலவே ஹுடாவும் காவல்துறையிடம் மாட்டிக் கொள்கிறாள். அவளது உளவுப்பணியைக் கண்டறிந்து அவளை மிரட்டி யாரெல்லாம் உளவாளியாகச் செயல்படுகிறார்கள் என்பதை விசாரணை செய்கிறார்கள். அந்த விசாரணை முடிவில் தான் கொல்லப்படுவோம் என்று ஹுடாவிற்கு நன்றாகத் தெரிகிறது
ஹுடாவுக்கும் ஹசனுக்கும் இடையிலான விசாரணைக் காட்சி படம் முழுவதும் நீடிக்கிறது. புத்திசாலித்தனம் மற்றும் தைரியமான இரண்டு சமமான எதிரிகளுக்கு இடையேயான மோதலது. ஹசன் விசாரணையின் போது அவளை ஒரு அற்ப புழு போலவே நடத்துகிறான். ஹுடா எளிதில் அடிபணிவதில்லை.
படத்தில் அந்த விசாரணை காட்சிகள் நாடகம் போலச் சித்தரிக்கப்படுகின்றன குறிப்பாக ஹுடா பேசும் முறை. குற்றவுணர்வில்லாத அவளது நடத்தை. பயத்தை மறைத்துக் கொண்டு உரையாடும்விதம் என நுணுக்கமாக உருவாக்கியிருக்கிறார்கள்.
ரீமைப் பிரச்சனைக்கு மேல் பிரச்சனை சூழ்கிறது. கணவன் அவளைச் சந்தேகப்படுகிறான். போலீஸ் அவளது இருப்பிடத்தைத் தேடுகிறார்கள். இந்த நெருக்கடிகளிலிருந்து தப்பிக்க அவள் மேற்கொள்ளும் முயற்சிகள் எதுவும் நடக்கவில்லை.
நான்கே கதாபாத்திரங்கள். எதிர்பாராத ஒரு நிகழ்வு. அதன் தொடர்ச்சியான துரத்தல். விசாரணை. சிக்கல் இவற்றை அழகாகப் பின்னிச் செல்கிறது திரைக்கதை

கைக்குழந்தையுடன் ரீம் வீதியில் அலைந்து திரிவதும், தன்னைக் காப்பாற்றிக் கொள்ளச் செய்யும் முயற்சிகளும் நேர்த்தியாகச் சித்தரிக்கப்பட்டிருக்கின்றன.
ஒரு நாளில் உங்கள் வாழ்க்கை தலைகீழாக மாறிவிடும் அபாயமிருக்கிறது என்பதை அழகாகப் புரியவைக்கிறார்கள். ரீமாக நடித்துள்ள Maisa Abd Elhadi மிகவும் சிறப்பாக நடித்துள்ளார். அவர் நிர்கதியை வெளிப்படுத்தும் விதம் அபாரம்.
வீட்டில் குழந்தைக்கு உடல்நலமில்லாத போது ரீமீன் கணவன் நடந்து கொள்ளும் முறை, மற்றும் கணவனின் உறவினர்கள் மற்றும் அம்மா ஒன்றுசேர்ந்து தன்னைக் கேலி பேசுவதைக் கேட்டுத் தனிமையில் ரீம் பொங்கி அழுவது, தோழியிடம் சென்று உதவி கேட்பது. புரிந்து கொள்ளாத கணவனுடன் சண்டைபோடுவது என யதார்த்தமான காட்சிகள் படத்தினை நிஜவாழ்க்கைக்கு நெருக்கமாக்குகின்றன.
கதையின் ஊடாக இரண்டு பாலஸ்தீனியப் பெண்களின் வாழ்க்கை அசலாகச் சித்தரிக்கப்படுகிறது. ஒரு புறம் இஸ்ரேலியப் படைகளால் நீண்டகாலமாக ஆக்கிரமிக்கப்பட்ட பாலஸ்தீனத்திற்குள் வாழும் நெருக்கடியான நிலை மறுபுறம் வீட்டின் சூழல் மற்றும் ஆணாதிக்க வெளிப்பாடு இந்த இரண்டுக்குள் இருந்தபடியே அவர்கள் கனவு காணுகிறார்கள். திட்டமிடுகிறார்கள். தோற்றுப் போகிறார்கள்.
அரசியல் சூழல் எவரையும் விழுங்கிவிடும் என்பதையே திரைப்படத்தில் சித்தரித்துள்ளதாக இயக்குநர் கூறுகிறார். இவரது முந்தைய படங்களான ஓமர் மற்றும், பாரடைஸ் நவ் படங்களின் வரிசையில் இப்படமும் நிறையப் பாராட்டுகளைப் பெற்றுவருகிறது
••
March 30, 2022
யுவபுரஸ்கார் விழா
நேற்று நடைபெற்ற சாகித்திய அகாதமியின் யுவபுரஸ்கார் விருது வழங்கும் விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு உரையாற்றினேன்.
இந்திய அளவில் நடைபெறும் இந்த நிகழ்ச்சியை ஊடகங்கள் கண்டுகொள்ளவேயில்லை. நிகழ்ச்சி நடக்கும் இடம் மற்றும் நாள் பற்றி பலருக்கும் தெரியவில்லை. மிகவும் குறைவான கூட்டம்.





புகைப்படங்கள்
நன்றி : ஸ்ருதி டிவி
S. Ramakrishnan's Blog
- S. Ramakrishnan's profile
- 657 followers
