S. Ramakrishnan's Blog, page 94
March 2, 2022
சௌமியின் கசப்பு
ஓவியர் கே.விக்னேஷ்வரன்.

எஸ் ராமகிருஷ்ணன் அவர்கள் எழுதிய உடலின் அலைகள் என்னும் சிறுகதையை வாசித்தேன். மிகவும் அருமை. இக்கதையின் கரு சிறியதுதான், ஆனால் அவர் இந்தக் கதையைக் கையாண்ட விதம் மிகவும் லாபகமானது. இக்கதையில் ஒரு மனிதன் தொழிற்சாலையில் பணி புரிகிறான். திருமணமாகாதவன். மதுரையைச் சார்ந்தவன் பணி நிமித்தம் காரணமாக வெளிமாநிலத்தில் பணிபுரிகிறான். எப்போது தனது சொந்த ஊருக்குப் பணியிடைமாற்றம் கிடைக்கும் என்று காத்துக் கொண்டிருக்கிறான். ஒரு சமயத்தில் ரயில் பயணம் செய்யும்போது தனக்கு எதிரே உள்ள இருக்கையில் ஒரு பெண் அமர்ந்திருப்பதைப் பார்க்கிறான்.
உடனே அந்தப் பெண் (பெயர் சௌமி) புன்னகைக்கிறாள். அவளின் எந்த விதமான செய்கைக்கும் பதில் சொல்லாமல் மனிதனாக ரயில் பயணத்தை நிறைவு செய்கிறான்.
ரயிலில் இருந்து இறங்கி தனது இல்லத்திற்கு நடந்து போய்க் கொண்டிருந்தான். சௌமி அவனைப் பின் தொடர்ந்து சென்று இருவரும் வீட்டின் வந்தடைந்தார்கள். நீ யார்? என்று கேட்க, என் பெயர் சௌமி என்றாள். நீ எதற்காக என் வீட்டுக்கு வந்தாய்? இங்கிருந்து கிளம்பு என்று கோபமாகக் கூறியும் சௌமி அங்கிருந்து நகரவில்லை. என்னை உனக்குப் பிடிக்கவில்லையா? என்கிறாள். இவள் வேசி என்று நினைத்து விட்டான். இந்தா பணம் இங்கிருந்து கிளம்பு என்று வாதிட,
இருவரும் சிறிது நேரம் பேசிக் கொள்கிறார்கள். இரவு நேரமானதால் வேறுவழியில்லாமல் சௌமி இவனுடைய வீட்டில் தங்க நேர்ந்தது. மிகவும் கடுமையாகவே நடந்து கொண்டான். சௌமி தான் கொண்டுவந்த மலாய் சந்தேஷ் இனிப்பை கொடுக்கிறாள். வேண்டாம் என்று சொல்கிறான். நீ இந்த ஸ்வீட்டை சாப்பிட்டால் தான் நான் இங்க இருந்து கிளம்புவேன் என்கிறாள்.
கோபத்தோடு சாப்பிடுகிறான். பிறகு நான் ஒரு கதை சொல்கிறேன், அதைக் கேட்டால்தான் நான் இங்க இருந்து கிளம்புவேன் என்கிறாள்,சௌமி. அதுவும் அவள் மடியில் தலைவைத்து கதை கேட்க வேண்டுமாம், வேறு வழியில்லாமல் அவனும் சௌமியின் மடியில் தலை வைத்துக் கொண்டு கதை கேட்க தயாராகிறான். சௌமி கதை சொல்ல ஆரம்பிக்கிறாள். அது ஒரு நிருபமா என்ற பெண்ணைப் பற்றிய கதை. கதையில் வரும் பெண் அழகான தோற்றம் உடையவள். ஏற்கனவே மூன்று திருமணங்களைக் கடந்தவள். நிரூபாமாவின் கணவர்கள் ஒவ்வொருவரும் இந்தப் பெண்ணை அனுபவித்து விட்டு ஏமாற்றி ஓடியவர்கள். எதாவது ஒருகாரணம் சொல்லி ஒவ்வொருவரும் இந்தப் பெண்ணை அனுபவித்து விட்டு ஏமாற்றி ஓடினார்கள்.
ஓர் அமைதியான இல்லற வாழ்க்கையை அனுபவிக்காதவள். ஏனோ தெரியவில்லை அவளுக்கு மட்டுமே இப்படியொரு அவலம். வாழ்க்கையை வெறுத்து உடலில் தீயை பற்ற வைத்துக்கொண்டு இறக்க முடியாமல் போனவள் என்று சௌமி கதை சொல்லிக் கொண்டிருக்க, உடனே மடியிலிருந்து எழுந்து சௌமியை சந்தேகத்தோடு பார்த்து இக்கதையில் வரும் பெண் நீங்கதானா? என்று கேட்டான். சௌமி மெல்லிய புன்னகையுடன் சிரித்துவிட்டு, இல்லை என்று சொன்னால். ஆனால் அவன் மனம் அதை ஏற்க மறுத்துவிட்டது. தயக்கத்தோடு சௌமியை பார்த்தபடி நின்றான். தான் வாங்கி வந்த மலாய் சந்தேஷ் ஸ்வீட்டை ஊட்டும் படி கேட்டாள். அவனும் அதனை ஊட்ட. ஊட்டிய விரல்களை ஸ்வீட்டோடு சேர்த்து லேசாகக் கடித்தாள் சௌமி. நள்ளிரவு நேரம் ஆயிற்று நான் கிளம்புகிறேன் என்றாள் சௌமி. உன்னை வண்டியில் கொண்டுபோய் விடட்டுமா என்றான். இல்லை பரவாயில்லை என்றாள். நடக்க ஆரம்பித்தாள் சௌமி. அவள் ரோட்டில் நடந்து சென்றதையே குற்ற உணர்ச்சியோடு பார்த்துக் கொண்டிருந்தான். இதுதான் கதை.
சௌமி, அவனைத் தன் மடியில் வைத்து கதை சொல்லியது அவளுடைய கதையைதான் சொல்லியிருக்கிறாள். சௌமிதான் மூன்று முறை திருமணமான நிருபமா. தன்னுடைய வருத்தத்தைத் தான் அவள் கதையாகச் சொல்லிருக்கிறாள். சௌமியின் கதாப்பாத்திரம் ஒரு ஆசிரியரை போன்று உள்ளது. சௌமி என்பவள் தன்னுடைய நிலையை அல்ல, சமூகத்தில் நடக்கும் இதுபோன்ற சம்பவங்களை முன்னிறுத்தி தன்னுணர்வை வெளிப்படுத்துகிறாள். எத்தனையோ பேர் கல்யாணம் பண்ணி நன்றாக வாழ்கிறார்கள் எனக்கு மட்டும் ஏன்? இந்த அவலம் என்று கவலைப்படுகிறாள், சௌமி.
மலாய் சந்தேஷ்- ன் இனிப்பும், சௌமியின் கசப்பும் இந்தக் கதைக்கு மாபெரும் சுவையூட்டியுள்ளது. இக்கதையைப் படித்து முடித்த போது சௌமி நேரடியாக என்னிடம் இக்கதையைச் சொன்னது போல உள்ளது. –
அன்பு மட்டுமே எல்லாம்
‘மண்டியிடுங்கள் தந்தையே’ வாசிப்பனுபவம்
டாக்டர் மதன்குமார்

தந்தை தன்னை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்ற மகனின் ஒரு வித்தியாசமான போராட்டத்தையும் (இளம் வயதில் ஒருவாறாக வயது முதிர வேறொரு விதமாக), தன்னைக் காதலித்துப் பிள்ளையைக் கொடுத்துவிட்டுத் திருமணம் செய்து கொள்ளாத ஒருவரை எந்தவித கோபமும் வெறுப்பும் இல்லாமல் அணுகும் ஒரு பெண்ணையும், தன் கணவனின் கடந்த காலத்தை அறிந்து அவர் இப்போது அப்படியில்லை என்று அறிந்தும் அவர் எங்கே தன்னைப் பிரிந்து விடுவாரோ என்ற ஏக்கமும் அவரின் மீது அளவற்ற அன்பும் அக்கறையும் கொண்டு அதே சமயத்தில் பொறுப்பும் கடமையும் கொண்ட சோபியா என்ற பெண்ணைப் பற்றியதுமாக இருக்கிறது இந்நாவல்.
இதில் தந்தை, ஏமாற்றியவர், கணவன் ஆகிய மூன்றுமே லியோ டால்ஸ்டாய் தான். இருந்தாலும் டால்ஸ்டாய் அவரின் உண்மையான இயல்புகளாலும் சிறந்த பண்புகளினாலும் இரக்கமும் உதவும் குணமும் அவரை வேறொரு பரிணாமத்தில் அணுக வைக்கிறது. தன் தந்தை டால்ஸ்டாய், அம்மா அக்ஸின்யாவின் கல்லறையில் நின்று பூக்கள் வைத்து வருந்துவதைக் கண்டு திமோஃபி அமைதியாய் நிற்கிறான் என்பதோடு கதை முடிவடைகிறது.
இது தமிழில் எழுதப்பட்ட இரஷ்ய நாவல் என்று நண்பர் ஒருவர் சொல்லியதாகவும் அதையே எஸ்.ரா அவர்கள் விரும்பியதுமாக முன்னுரையில் குறிப்பிட்ட போது வித்தியாசமான சூழலுக்கு நுழைகிறோம் என்றே படிக்க ஆரம்பித்தேன்.
பெயர்களை மட்டும் மாற்றி விடுவதால் அது ரஷ்ய இலக்கியமாக மாறிவிடாது கதாப்பாத்திரங்கள் அதன் இயல்புகள், சூழல், உணவு, ஊர்கள் என்று பல விடயங்களைக் கவனிக்க வேண்டும் அதை ரஷ்யாவிலே வசித்து அதன் அத்தனை நிகழ்வுகளையும் கூர்ந்து நோக்கிய ஒருவரால் தான் நாவலை முழுமை அடையச்செய்யும். அப்படிப் பார்க்கையில் உண்மையாகவே நம்மை ரஷ்யாவில் உள்ள யாஸன்யா போல்யானவின் பண்ணைக்கே கூட்டிச்சென்று சுத்திக்காட்டுகிறது இந்நாவல்.
இந்நாவலில் ஒரு கடிகாரத்தின் மையமாக லியோ டால்ஸ்டாய் இருக்கிறார் அதில் திமோஃபி மற்றும் அக்ஸினியா நொடி முள்ளாகச் சூழலுகிறார்கள். இக்கடிகாரத்தின் முள் முன்னும் பின்னுமாகச் சுழன்று சோபியா, செர்ஜி, முட்டாள் டிமின்ட்ரி என்ற பல கதாப்பாத்திரங்களைக் காட்டுகிறது.
இந்நாவலை கூர்ந்து கவனித்தால் படிக்கும் நமக்கு டால்ஸ்டாயாகவும், சோபியாவிற்கு லிவோச்சாவாகவும், இளமை காலத்தில் லெவ்வாகவும், அக்ஸின்யாவிற்கு நல்லுள்ளம் கொண்ட உயர்ந்த கணவானாகவும், பண்ணை தொழிலாளிகளுக்கு முதலாளியாகவும் வலம் வருகிறார் கதாநாயகன் கவுன்ட் லெவ் நிக்கோலோவிச் டால்ஸ்டாய்.
இதெல்லாம் முக்கியமில்லாதது என்று எண்ணுதல் வேண்டாம். எந்த அளவிற்கு அவரையும் அவரைச் சார்ந்தவர்களையும் புரிந்துக்கொண்டு இருந்தால் அவரவர்கள் எப்படி அழைப்பார்கள் என்று ஒவ்வொரு இடத்திற்கு ஏற்ப அவரின் பெயரை உபயோகித்துள்ளார் என்பது புரியும்.
இந்நாவலில் எஸ்.ரா அவர்கள் பட்டாம்பூச்சி விளைவு (BUTTERFLY EFFECT) பயன்படுத்தியுள்ளார் என்று சொன்னால் மிகையாகாது. நாவலின் ஆரம்பத்தில் சொல்லி சொல்லாமல் விட்ட விடயங்கள் பக்கங்கள் சொல்ல சொல்ல விவாதிக்கும் முறையில் அழகாக விளக்கப்பட்டுள்ளது. உதாரணமாக டால்ஸ்டாய் தனது தவறை நினைத்து முதலில் வருந்துவார். அந்த எண்ணம் பக்கங்கள் நகர ‘கடந்த காலத்தை எவன் மறைக்க விரும்புகிறானோ அவன் நிகழ்காலத்தில் தொடர்ந்து தவறுகள் செய்வான்’ என்று சொல்லப்பட்டுள்ளது. அதாவது அவர் தனது கடந்த காலத்தை மறைக்க விரும்பவில்லை எனவும் தற்போது எந்தத் தவறு செய்யவில்லை என்றும் விளக்குகிறார். இந்தக் கருத்து மேலும் வலுவடைந்து ஒரு உரையாடலில் ‘மன்னிப்பு கேட்பதால் குற்றத்தைக் கடந்து போய்விட முடியாது’ என்று டால்ஸ்டாய் சொல்ல ‘ஆனால் உணர முடியுமோ’ என்று பிராங் கேட்க ‘அது ஒரு தப்பித்தல்’ என்று சொல்லுகிறார். இதற்கு ஆதாரமாக அக்ஸின்யாவிற்குப் பிடித்த மஞ்சள் பூக்களை அவர் அவளின் கல்லறையில் வைத்து அமைதியாய் நிற்கும் போது இறந்தவர்களிடம் மன்னிப்பு கேட்பது சிரமமானதில்லை அவர்கள் உயிரோடு இருப்பவர்களைப் போலக் கோபித்துக் கொள்வதில்லை. இத்தனை காலம் என்ன செய்தீர்கள் என்று கேள்வி கேட்பது இல்லை. மன்னிப்பு கேட்க வந்தாலும் முகம் கொடுத்து பார்க்க மாட்டேன் என்று திரும்பி கொள்வதில்லை பிறந்தவர்கள் எல்லாவற்றையும் அப்படியே ஏற்றுக் கொண்டு விடுகிறார்கள். இனி அவர்களுக்குச் சொல்வதற்கு எதுவும் இல்லை என்று அவர் மனதில் தோன்றியது. இது மாதிரி எடுத்துக்காட்டுக்கள் பல சொல்லலாம்.
இந்த நாவலின் கதாப்பாத்திரங்கள் டால்டாயின் எண்ணங்களைப் பிரதிபலிக்கும் வகையில் அமையப்பெற்றுள்ளது இன்னொரு சிறப்பு. அக்ஸின்யா ஒரு பண்ணையில் வேளையில் செய்யும் பெண் அவள் தன்னை ஏமாற்றியவர் மீது எந்தக் கோபமும் கொள்ளாமல் அவரை மதித்து அவரின் அன்புக்காக ஏங்கி, அவரை விட்டு விலகாமல் அங்கேயே அந்தப் பண்ணை வேலைகளைச் செய்யதுக்கொண்டு இருக்கும் வெளியுலகம் தெரியாத பெண்.
இதை விளக்க டால்ஸ்டாய் உடன் ஒரு இளைஞன் நடத்தும் உரையாடலின் போது “துர்கனேவ் கதைகளில் வரும் பெண்கள் கட்டுப்பாடுகளை மீறுகிறார்கள் மிகுந்த தைரியசாலியாக நடந்து கொள்கிறார்கள் ஆனால் உங்கள் கதையில் வரும் பெண்கள் தடுமாற்றத்துடன் நடந்துகொள்கிறார்கள் பகல் கனவுகளில் சஞ்சரிக்கிறார்கள்” என்று இளைஞன் கேட்க அதற்கு டால்ஸ்டாய் “அது உண்மை இல்லை அவர் விருந்தில் சந்தித்து அழகிகளைக் கதாபாத்திரமாக எழுதிக் கொண்டிருக்கிறார். நான் அப்படி இல்லை பண்ணை அடிமைகள் பற்றி எழுதுகிறேன் தனிமையிலும் பெண்களை உரிமைகள் மறுக்கப்பட்ட பெண்களை நிராதரவான பெண்களைப் பற்றி எழுதுகிறேன்” என்று கூறுகிறார்
இதை இன்னொரு இடத்தில் “நீங்கள் எப்பொழுதும் ஏன் பெண்கள் பக்கம் இருக்கிறீர்கள்” என்று ஒருவர் கேட்க “அந்தப் பக்கம் தான் நியாயம் இருக்கிறது”, “உங்கள் கதையின் நாயகிகள் முடிவில் வெற்றி அடைவதில்லை”, “வாழ்க்கை அப்படித்தான் இருக்கிறது நான் பொய்யாகக் கதாபாத்திரங்களுக்குச் சுபமான முடிவு அளிப்பதில்லை” என்று கூறுகிறார் இதே தான் எஸ்.ரா அவர்களும் அக்ஸினியாவின் கதாப்பாத்திரத்திற்கு நியாயப்படுத்தியிருக்கிறார். இன்னொரு பக்கம் சோபியா, அவளின் வருகை ஒட்டுமொத்த பண்ணையின் நிலையையும் மாற்றிவிடுகிறது. எல்லாப் பொறுப்புகளையும் சுமந்து அதை ஒழுங்குபடுத்தி நிர்வாகிக்கும் திறமையான பெண்ணாக இருக்கிறார். அதுமட்டுமல்லாமல் பெண் என்பவள் சுதந்திரமான முடிவுகளை எடுக்கக் கூடியவள் என்பதற்கேற்ப கருத்தடை, குழந்தைப்பேறு போன்றவற்றின் பெண்மை சார்ந்த வலிகளையும் தன் கருத்துக்களையும் சொல்லும் போது முற்போக்காக இருக்கிறார்கள் சோபியா.
திமோஃபி சிறுவனாய் இருக்கும் போது தந்தை பற்றிய கேள்விகளையும் பதின் பருவத்தில் முரட்டுத்தனமாகவும் தன் தந்தையின் மீது அளவற்ற கோவத்தையும் கொண்டவனாக இருக்கிறான். தந்தையின் அன்பை தேடும் ஒருவனாகத் தன்னைத் தன்னைத் தனித்து உணரும் மனிதனாக இருக்கிறான். பண்ணையிலிருந்து வெளியேறி உலகம் சுற்றி மீண்டும் தனக்கென ஒரு இருப்பிடம் வேண்டுமென உணர்ந்து பண்ணையை வந்தடையும் போது முற்றிலும் வேறொரு மனிதனாக இருக்கிறான். உலகம் அவனுக்கு வாழ்க்கையைக் கற்றுக்கொடுத்திருக்கிறது.
அதன் பின் தன் தந்தைக்குத் தொந்தரவு இல்லாமல் பண்ணையின் எல்லா வேலைகளையும் செய்து அவரைத் தூரத்திலிருந்தே ரசிக்கிறான். தனக்கென ஒரு குடும்பம் அமையும் போது புது மனிதனாய் மாறி அதை இழக்கும் போது இனிமேல் இழக்க ஏதுமில்லாதவன் போல் மாறிவிடுகிறான். அவனின் முடிவு சற்று சோகமானது தான் ஆனால் அது தான் நிதர்சனம்.
அடுத்து முக்கியமாகக் கூறவேண்டும் என்றால் முட்டாள் டிமிட்ரி. ஒவ்வொரு முறையும் அவனை முட்டாள் டிமிட்ரி என்று தான் சொல்லப்படுகிறது அதற்குக் காரணம் என்னைப் பொறுத்தவரை அவன் கடவுள் உங்களைப் பார்க்கிறார் என்றும் அனைவரின் தவறுகளையும் அறிந்தவனாக இருக்கிறான். இப்படி உண்மையையும் தவறுக்குப் பரிகாரத்தைக் கூறுபவனையும் முட்டாள் என்று தானே கூறுவார்கள். அவன் வரும் பகுதிகள் அத்தனையுமே அருமையான வரிகளில் நிரப்பப்பட்டிருக்கும்.
மண்டியிடுங்கள் தந்தையே ஒரு ரஷ்ய நாவல் தான் என்று நான் முழுமையாக நம்புகிறேன். நாவல் முழுவதும் அன்பு மட்டுமே எல்லாம் என்பதை அழுத்தமாகப் பதிவு செய்கிறது. நிச்சயம் படிக்க வேண்டிய ஒரு நாவல்.
எஸ்.ரா அவர்களின் உழைப்பு, நாவலுக்காகத் தன் அர்ப்பணிப்பு என்பது வரிகளின் ஊடே தெரிகிறது. அவர்கள் மேலும் மேலும் நல்ல படைப்புகளைக் கொடுக்க நான் வேண்டுகிறேன்.
இந்நாவலை பற்றி இன்னும் நிறையப் பேசலாம் ஆனால் சுவாரசியத்தை நான் குறைக்க விரும்பவில்லை. படியுங்கள் நிச்சயம் பிடிக்கும்.
***
February 28, 2022
சாப்ளினின் பயணங்கள்
Chaplin in Bali என்ற ஆவணப்படத்தைப் பார்த்தேன். 2017ல் வெளியானது. ரஃபேல் மில்லட் இயக்கியுள்ளார்.

மௌனப்படங்களின் யுகம் முடிந்து பேசும் படங்கள் வரத்துவங்கிய போது சார்லி சாப்ளின் தனது இடம் பறிபோனது போலவே உணர்ந்தார். பேசும் படத்திற்கு ஏற்ப எப்படித் தனது நடிப்பை மாற்றிக் கொள்வது, தனது குரலை ரசிகர்கள் எப்படி ஏற்றுக் கொள்வார்கள் என்ற குழப்பம் ஏற்பட்டது. அத்துடன் திருமண உறவில் ஏற்பட்ட சிக்கல். விவாகரத்து. பத்திரிக்கையாளர்களுடன் ஏற்பட்ட மோதல் எனத் தொடர்ந்து பிரச்சனைகளால் சூழப்பட்டிருந்தார்.
ஆகவே 1932ம் ஆண்டு ஒரு நீண்ட பயணத்தைச் சாப்ளின் தனது சகோதரன் சிட்னியுடன் இணைந்து மேற்கொண்டார். அந்தப் பயணத்தில் அவர் பாலி தீவிற்குச் சென்று தங்கினார். அதனை மையமாகக் கொண்டே இந்த ஆவணப்படம் உருவாக்கப்பட்டிருக்கிறது
தனது பயணத்தினைச் சாப்ளினே சிறிய கேமிரா மூலம் பதிவு செய்திருக்கிறார். நிறையப் புகைப்படங்களையும் எடுத்திருக்கிறார். பயண அனுபவத்தை ஒரு தொடராகவும் சாப்ளின் எழுதினார். A Comedian Sees the World என அது தனி நூலாகவும் வந்துள்ளது

சாப்ளினின் ஆசியப் பயணம் அவருக்குள் நிறைய மாற்றங்களை உருவாக்கியது. பரபரப்பான அமெரிக்க வாழ்க்கைக்கு மாற்றாக இயற்கையான தீவு வாழ்க்கை அவரைச் சந்தோஷப்படுத்தியது
சாப்ளினின் இந்தப் பயணம் எப்படித் துவங்கியது. எங்கெல்லாம் பயணம் செய்தார். யாரைச் சந்தித்தார், எப்படி வரவேற்றார்கள் என்பதை இந்த ஆவணப்படம் விரிவாகப் பதிவு செய்துள்ளது.
பாலித் தீவு இயற்கை அழகுடன் அமைதிப் புகலிடமாக விளங்கக்கூடியது. இன்று அது உலகின் முக்கியச் சுற்றுலா மையம். ஆனால் சாப்ளின் சென்ற நாட்களில் இவ்வளவு சுற்றுலாப் பயணிகள் வரவில்லை.
பிப்ரவரி 1932 இல், லான்ஸ்பெர்ஜ் கப்பலில், சார்லி தனது மூத்த சகோதரர் சிட்னி உடன் பயணம் செய்தார், சுவிட்சர்லாந்திலிருந்து புறப்பட்டு, சூயஸ் கால்வாய் வழியாகச் சிங்கப்பூர் சென்றார். பின்பு அங்கிருந்து பாலித் தீவிற்குச் சென்றிருக்கிறார். செல்லுமிடமெல்லாம் அவரை மக்கள் பெருந்திரளாகக் கூடி வரவேற்றார்கள். கொண்டாடினார்கள். விதவிதமான விருந்து நிகழ்வுகளில் கலந்து கொண்டிருக்கிறார்.
கப்பலிலிருந்தபடியே சாப்ளின் கைகளை அசைக்கிறார். பத்திரிக்கையாளர்கள் அவரைப் புகைப்படம் எடுக்கப் போட்டிப் போடுகிறார்கள்.
1908 இல் டச்சுக்காரர்கள் வசம் பாலித் தீவு இருந்தது. அவர்களை அதை முக்கியச் சுற்றுலா மையமாக மாற்றினார்கள். பாலித் தீவைப் பூவுலகின் சொர்க்கம் என்பது போல விளம்பரப்படுத்த அரை நிர்வாண பெண்களின் படங்களை வெளியிட்டார்கள்.

சாப்ளின் வடக்கு பாலிக்குச் சென்று டச்சு அதிகாரிகளின் வரவேற்பைப் பெற்றுக் கொண்டார். அங்கே ஆளுநர் மற்றும் டச்சு அதிகாரிகள் வசித்து வந்தனர் – சீனர் மற்றும் இந்தியர்களால் நடத்தப்படும் சந்தை ஒன்று இருந்தது. .அவற்றையும் சாப்ளின் பார்வையிட்டார்
பின்பு தெற்கு பாலிக்குச் சென்று தங்கினார். அங்கே அவரை மன்னர் வரவேற்றுக் கௌரவித்து இரண்டு பகல் மற்றும் இரண்டு இரவு நடைபெறும் பாரம்பரிய திருவிழாவை ஏற்பாடு செய்தார்.
கோயில் முகப்பின் முன்பு இந்த விழா நடைபெற்றது., பராம்பரிய இசைக்கருவிகளை வாசிக்கும் வாத்திய குழுவினர்களும் அழகான அலங்காரத்தில் நடனமாடும் பெண்களுமாக அந்த விழா பெரும் கொண்டாட்டமாக இருந்தது
நடனமாடும் பெண்களுடன் இணைந்து சாப்ளின் ஆடினார். ராமாயணக் காட்சியின் சிறு பகுதியை மையமாகக் கொண்டு 10-12 வயது சிறார்களால் நிகழ்த்தப்பட்ட மரபு நடனத்தைச் சாப்ளின் ரசித்துப் பார்த்தார்,

மூன்று முறை சாப்ளின் பாலித்தீவிற்கு வருகை தந்திருக்கிறார். அந்த மக்களையும் அவர்களின் பண்பாட்டுச் சிறப்புகளையும் பற்றி ஒரு திரைப்படத்தை எடுக்கவும் முனைந்திருக்கிறார். ஆனால் அந்தப் படம் உருவாக்கப்படவில்லை.
இந்த எட்டு மாத பயணம் அவருக்குள் ஏற்படுத்திய மாற்றமே மார்டன் டைம்ஸ் திரைப்படத்தை எடுக்கக் காரணமாக இருந்திருக்கிறது. இப்படம் இயந்திரமயமாகிப் போன நவீன வாழ்க்கையை விமர்சனம் செய்கிறது.
மௌனப்படங்களுக்கெனத் தான் உருவாக்கிய பாணியை மாற்றிக் கொண்டு பேசும்படங்களில் சாப்ளின் புதிய அவதாரத்தை எடுத்தார். இன்றும் உலகம் கொண்டாடும் The Great Dictator படமே அவரது முதல் பேசும் படமாகும்.
••
அன்பும் நன்றியும்.
புத்தகக் கண்காட்சியில் ஏன் நாற்காலியில் அமர்ந்திருக்கிறீர்கள். உடல் நலமில்லையா என்று பலரும் அன்போடு விசாரிக்கிறார்கள்.
மூட்டு அழற்சி காரணமாக எனது வலது முழங்காலில் வீக்கம் ஏற்படுகிறது. அதனால் நாற்காலியில் அமர்ந்து வாசகர்களைச் சந்திக்கிறேன். அதைப் புரிந்து கொள்ளாமல் சிலர் தவறாக நினைத்து கண்டனக்குரல் எழுப்பி வருகிறார்கள்.
நின்றபடியே புத்தகங்களில் கையெழுத்துப் போடுவது சிரமமானது. மேலும் தொடர்ந்து நிற்பதால் கால் வீக்கம் அதிகமாகிறது
என் அருகிலே இரண்டு நாற்காலிகள் போடப்பட்டுள்ளன. விரும்புகிறவர்கள் அதில் அமர்ந்து புகைப்படம் எடுத்துக் கொள்கிறார்கள்.
ஒவ்வொரு நாளும் புத்தகக் கண்காட்சியில் நூற்றுக்கணக்கான வாசகர்களைச் சந்திக்கிறேன். அவர்களின் அன்பு நெகிழச் செய்கிறது.
இந்த அன்பும் ஆசியும் தான் என்னை எழுத வைக்கிறது. என்றும் உறுதுணையாக இருக்கிறது.
இவர்கள் தான் எனது உலகம். எனது மனிதர்கள். என் எழுத்தையும் என்னையும் எவ்வளவு நேசிக்கிறார்கள் என்பதை நேரில் அறிந்து கொள்வது மிகுந்த மகிழ்ச்சியானது.
நான் அன்றாடம் புத்தகக் கண்காட்சிக்கு வருவதைச் சிலர் கேலி பேசுகிறார்கள். அவர்களுக்கு இந்த அன்பின் மகத்துவம் புரியாது.
புத்தகக் கண்காட்சி என்பது வெறும் வணிகச் சந்தையில்லை. அது எழுத்தாளர்களும் வாசகர்களும் சந்தித்து மகிழும் பண்பாட்டுவெளி.
ஒரே இடத்தில் ஓராயிரம் பறவைகள் ஒன்று கூடியிருப்பதைக் காணுவது எவ்வளவு மகிழ்ச்சியாக இருக்குமோ அதை விடவும் மகிழ்ச்சியானது இத்தனை வாசகர்களை ஒரே இடத்தில் காணுவது.
புத்தகம் என்பது ஒரு சுடர். ஆயிரமாயிரம் சுடர்கள் உயர்த்திப் பிடிக்கப்படும் போது எந்த இருளும் விலகி ஒடிவிடும்.







••
February 26, 2022
டால்ஸ்டாய் ஓவியம்
எனது மண்டியிடுங்கள் தந்தையே நாவலின் முகப்பிலுள்ள டால்ஸ்டாய் ஓவியத்தை 11வயதான சித்தார்த் வரைந்து அனுப்பியிருக்கிறான்.
சித்தார்த்திற்கு எனது மனம் நிறைந்த அன்பும் வாழ்த்துகளும்


February 24, 2022
மஞ்சள் நிறத் தனிமை
ந.ஜயபாஸ்கரனின் அறுந்த காதின் தனிமை கவிதைத் தொகுப்பைப் படித்தேன் மிகச்சிறந்த கவிதைகளைக் கொண்ட தொகுப்பு. ஜயபாஸ்கரன் நாம் கொண்டாட வேண்டிய மிக முக்கியமான கவிஞர். மதுரையில் வெண்கலப் பாத்திரங்கள் விற்கும் சிறு வணிகராக வாழ்ந்து வரும் இவர் நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாகக் கவிதைகள் எழுதி வருகிறார். இந்தத் தொகுப்பிலுள்ள அவரது கவிதைகள் வான்கோவினைப் போலவே தீவிர மனநிலையிலிருந்து எழுதப்பட்டிருக்கின்றன

தனது கவிதைகளில் வான்கோவின் அறுந்த காதினை ஒரு குறியீடாக மாற்றியிருக்கிறார் ஜயபாஸ்கரன். அது கொரானோ காலத்தில் உறைந்து போன நம் மனநிலையினை அடையாளம். இக்கவிதைகள் மரணம் பற்றிய அச்சத்திலிருந்து உருவாகவில்லை. மாறாக வாழ்வின் நெருக்கடிகளை, கைமீறிய நிகழ்வுகளை எப்படி எதிர்கொள்வது, ஏற்றுக் கொள்வது என்பதைப் பற்றிய விசாரணையாக மாறுகிறது.
கவிதையில் திரவத்தன்மை கூடியிருப்பதை உணர்ந்துள்ளதாக ஜயபாஸ்கரன் தனது முன்னுரையில் சொல்கிறார். அதைத் திரவத்தன்மை என்பதை விடவும் பாதரசம் போலாகியிருக்கிறது என்றே சொல்ல வேண்டும்.

கொரோனா உருவாக்கிய புறநெருக்கடிகள் உலகம் அறிந்தது. ஆனால் அக நெருக்கடிகள் விநோதமானவை. திடீரென அன்றாட வாழ்க்கை இப்படி ஒடுங்கிவிடும் என்று எவரும் நினைக்கவில்லை. வீட்டின் சுவர்களுக்குள் ஒடுங்கிய நிலையில் வழிமறந்து போன விலங்கைப் போல உணரும் நிலை ஏற்பட்டது. சிலந்தியின் வலையைப் போல அச்சம் மெல்லப் படர்ந்து விரிந்தது. தன் அகத்தை மீட்டுக் கொள்ளக் கவிஞராக ஜயபாஸ்கரன் எமிலியை, ஆண்டாளை, உலகக் கவிஞர்களைத் துணை கொண்டிருக்கிறார். நினைவிற்கும் நிஜத்திற்கும் நடுவில் சஞ்சரிக்கும் இந்தக் கவிதைகள் வெயிலுக்குள் கூவும் குயிலின் பாடலைப் போல அபூர்வமாக ஒலிக்கின்றன. அகத்தனிமை தீராதது. புறத்தனிமை உருவாக்கப்படுவது. அகத்தனிமையைத் தான் எமிலி டிக்கன்ஸ்ன் பாடுகிறார். ஜயபாஸ்கரன் எழுதுகிறார்.
ஜயபாஸ்கரனின் கவிதைகள் நவீனத் தமிழ் கவிதையுலகில் தனித்துவமானவை. Modern Metaphysical poet என்று அவரை வகைப்படுத்தலாம். ஆனால் Metaphysical poet களிடம் காணமுடியாத காமம் பற்றிய அவதானிப்புகளும் ஆழ்ந்த உணர்வெழுச்சிகளும் இவரது கவிதையில் காணப்படுகின்றன.
இன்னொரு புறம் மதுரை மாநகரின் தொன்மங்களை, நம்பிக்கைகளை, தெய்வாம்சங்களை, வையை நதியை, இன்றைய உருமாறிய வாழ்க்கையைத் தொடர்ந்து எழுதி வருகிறார் என்பதால் மதுரை நகரின் பெரும்பாணன் என்றும் வகைப்படுத்தலாம். பொற்றாமரைக் குளத்தைச் சுற்றி வரையப்பட்ட ஓவியங்களைப் போல இவர் கவிதைகளின் வழியே மதுரையைப் பற்றிய அபூர்வ சித்திரத்தை வரைந்திருக்கிறார்.

மதுரை மீனாட்சியம்மன் கோவிலுக்குச் செல்வதற்கு ரகசிய வழிகள் இருப்பதாகச் சொல்லிக் கொள்வார்கள். அப்படி ஒரு ரகசிய வழியைத் தனது கவிதைகளின் வழியே ஜயபாஸ்கரன் உருவாக்கியிருக்கிறார். அதன் வழியே நாம் சென்றால் மீனாட்சியின் கிளி நம்மை வரவேற்கும். மீனாட்சியின் சிரிப்பை நாம் கேட்கலாம். தெற்குவாசலில் வெட்டுண்ட பாணனின் தலையைக் காணலாம். கோவிலையும் மதுரையின் தொன்மங்களையும் இப்படிக் கவிதைகளில் ரசவாதம் செய்ய முடியும் என்பது வியப்பளிக்கிறது. .
காமமும் கடவுளும் ஒரு வெண்கலக்கடை வணிகரும் சந்திக்கும் முக்கோணமாக அவரது கவிதையுலகினைச் சொல்லலாம். கோவில் கோபுரத்திலுள்ள பதுமைகளில் சில பறக்க எத்தனித்த நிலையில் சிறகை விரித்தபடியே நிற்பதைக் கண்டிருக்கிறேன், அப்படித் தனது சிறகை விரித்தபடியே உறைந்து போன ஒரு பதுமை போலவே ஜயபாஸ்கரன் தன்னை உணருகிறார்
வாழ்க்கை அனுமதித்துள்ள விஷயங்களுக்கும் மனது விரும்பும் விஷயங்களுக்கும் இடையில் ஊசலாடுகின்றன அவரது கவிதைகள். ஆழ்ந்த வாசிப்பின் வழியே அவர் கொண்டாடும் கவிஞர் எமிலி டிக்கன்ஸின். ஆண்டாள். காரைக்கால் அம்மையார், யேட்ஸ், நகுலன், யோஸகோ அகிகோவுடன் நெருக்கமாக உணருகிறார். அவர்களைத் தனது தோழிகளாக, தோழர்களாக மதுரை வீதிகளில் உடன் அழைத்துச் செல்கிறார். உரையாடுகிறார்.

மீனாட்சியம்மனும் எமிலி டிக்கன்ஸ்சனும் தோழிகளாகும் அபூர்வ நிலையை அவரது கவிதைகளில் காணமுடிகிறது
என் கவிதைகள்
சுருக்கமாகக் இருப்பதைக் கண்டு
நான் வார்த்தைகளின் கஞ்சன் என்கிறார்கள்
ஆனால் நான் எதையும்
சொல்லாமல் விட்டுவிடவில்லை
சேர்ப்பதற்கு எதுவுமில்லை
மீன் போலின்றி
இறக்கைகள் இல்லாமலே
நான் நீந்துகிறேன்
ஒரே மூச்சிலே என் கவிதை
முடிந்துவிடுகிறது
என்ற ஐப்பானிய கவிஞர் யோசனோ அகிகோ கவிதையைத் தனக்கு விருப்பமான கவிதையாக ஜயபாஸ்கரன் குறிப்பிடுகிறார். இந்த வரிகள் அவரது கவிதைகளுக்கும் பொருந்தக்கூடியதே.
ஜயபாஸ்கரன் கவிதைகளில் கடவுள் வெளிப்படுகிறார். ஆனால் அவர் சமயக் கவிதைகளில் வெளிப்படுகிறவராக இல்லை. அதே சமயம் நவீன மனது கற்பனை செய்யும் கடவுளாகவும் இல்லை. ஞானக்கூத்தன் சொல்வது போல நரியைப் பரியாக்கிய விளையாட்டு முடிந்துவிட்ட ஒருவரைப் போலவே தோற்றமளிக்கிறார்.

மதுரை மாநகரம் ஒரே நேரத்தில் பல்வேறு நூற்றாண்டுகளில் வாழ்ந்து கொண்டிருக்கிறது. கோவிலுக்குள்ளும் அதைச் சுற்றிய வீதிகளில் உலவும் காலம் வேறு. டவுன்ஹால் ரோட்டின் காலம் வேறு. இதே மதுரைக்குள் கோவலன் கொலையுண்ட பொட்டலைத் தேடி ஒருவன் இன்றும் அலைந்து கொண்டிருக்கிறான். புட்டுத்திருவிழா ஒரு பக்கம் நடக்கிறது. இரவில் அன்னை மீனாட்சி தனது மூக்குத்தியைக் கழட்டிவிட்டுச் சயனம் செய்யச் செல்கிறாள். கல்யானை கரும்பு தின்கிறது. இப்படி மதுரையில் ஊடாடும் பல்வேறு காலங்களைத் தனது கவிதைகளில் அடையாளம் காட்டுகிறார் ஜயபாஸ்கரன்.
அவரது பிற்பகல் பொழுதுகளின் உலோக மஞ்சள் தொகுப்பில் அங்கம் வெட்டுண்ட பாணனின் கதை ஒரு குறியீடாக முன்வைக்கப்படுகிறது. அங்கம் வெட்டுண்ட பாணனின் இன்னொரு வடிவம் போலவே வான்கோவின் அறுந்த காது இடம் பெறுகிறது.
பாணன் தீராக்காமத்தின் பொருட்டே அங்கம் துண்டிக்கபடுகிறான். வான்கோவின் காது துண்டித்தலுக்குப் பின்னும் இப்படியான காமம் இருக்கவே செய்கிறது. விலைமாதின் மீதான அன்பிற்கான வெகுமதியாகத் தனது காதை துண்டித்துக் கொடுத்தார் என்றொரு கதையும் இருக்கத்தானே செய்கிறது
உலோக மஞ்சள் என்பது தினசரி வாழ்வின் தோற்றம். மனிதன் தான் பயன்படுத்தும் பொருட்களைக் கலைவடிவமாக மாற்றுவதில் தேர்ந்தவன். நாச்சியார்கோவில் விளக்கு எவ்வளவு அழகானது. வெண்கலப் பாத்திரங்கள் தன் தோற்றத்திலே இளமையைக் கொண்டிருக்கின்றன.
சமையலறை பொருட்கள் யாவும் அழகிய கலைவடிவங்களே. அவை தன் பயன்பாட்டினை இழந்தவுடன் மறைந்துவிடுகின்றன. அல்லது கலைப்பொருளாகிவிடுகின்றன. மொகலாயர் காலச் சமையற்பாத்திரங்கள் இன்று விலைமதிப்பற்ற ம்யூசியப்பொருளாக உள்ளதே.

வான்கோவின் கடிதங்களை வாசிக்கும் போது அளவில்லாத அன்பு கொண்ட அவரை உலகைத் தொடர்ந்து நிராகரித்து வந்திருப்பதை உணர முடிகிறது. அது தான் அவரது மனச்சிதைவிற்கான காரணம். படைப்பாற்றலின் தீவிரத்தில் அவரது மனம் கொந்தளிப்பிலே இருந்திருக்கிறது. அது தான் இத்தனை தீவிரமாக வண்ணங்களை வெளிப்படுத்தியிருக்கிறது. வான்கோவின் வயல் வெளியில் எரியும் வண்ணங்களும் சூரிய காந்தி பூவின் அடர் மஞ்சளும், பச்சை வயலும் கனவில் தோன்றும் காட்சிகளாகவே உள்ளன.
பிரான்சின் தெற்கில் உள்ள ஆர்லஸ் நகரத்தில், வான்கோ வசித்த போது தீவிரமான மனச்சிதைவிற்கு உள்ளாகியிருந்தார்., அந்த நாட்களில் ஓவியர் பால் காகினுடன் ஆழ்ந்த நட்பு கொண்டிருந்தார். அவரைவிட்டு காகின் பிரியவே அந்தக் கோபத்தில் தனது காதை துண்டித்துக் கொண்டார் என்கிறார்கள். ஆர்லஸில் வான்கோ மஞ்சள் நிற வீட்டில் வசித்தார். மஞ்சள் என்பது அவரது கொந்தளிக்கும் மனநிலையின் அடையாளம்.
வான்கோவின் மஞ்சளை ஒரு குறியீடாகக் கொண்டு ஐயபாஸ்கரன் முந்தைய தொகுப்பிலே கவிதைகள் எழுதியிருக்கிறார். அதன் தொடர்ச்சியாகவே இந்தத் தொகுப்பினையும் பார்க்கிறேன்.
இதில் வான்கோவை மதுரையின் வீதிகளுக்குள் அழைத்து வருகிறார். உரையாடுகிறார். அவரது மஞ்சளையும் தனது வெண்கல மஞ்சளையும் ஒன்றிணைந்து பார்க்கிறார். அறுந்த காது ஒரு படிமமாக மாறுகிறது
இயேசு கடைசியாகச் செய்த அற்புதம் கைது செய்ய வந்த காவலரின் அறுந்த காது ஒன்றை ஒட்டியது . துண்டிக்கப்பட்ட காதை இணைப்பது மூலம் தனது கருணையை இயேசு வெளிப்படுத்துகிறார். வான்கோவின் அறுந்த காது மறுதலிப்பு என்றால் இயேசுவின் அதிசயம் அன்பின் வெளிப்பாடு. இந்த இரண்டிற்கும் இடையில் ஊசலாடுகிறது ஐயபாஸ்கரனின் கவிதைகள்.
உலோகம் சார்ந்து இவ்வளவு கவிதைகளை யாரும் தமிழில் எழுதியதில்லை. வெண்கல பாத்திரங்கள் என்பது வெறும் பயன்பாட்டுப் பொருளில்லை. அது ஒரு காலத்தின் அடையாளம். பண்பாட்டின் அடையாளம். சந்தோஷத்தின் அடையாளமாக வெண்கல ஓசை குறிப்பிடப்படுகிறது. வெண்கல மணிகளே ஆலயத்தில் ஒலிக்கின்றன. வெண்கலத்தின் மஞ்சளும் வான்கோவின் மஞ்சளும் எதிர்நிலை படுகின்றன.
கால மாற்றம் வெண்கலப் பாத்திரங்களை நிறமாற்றுகிறது. அது தினசரி வாழ்வின் தேய்மானம். ஆனால் வான்கோவின் மஞ்சள் நிறம் மாறுவதேயில்லை. அது காலத்தைத் தாண்டி ஒளிருகிறது.
அறுந்த காதின் தனிமை என்பது துண்டிக்கபட்ட வாழ்வின் அடையாளமாக மாறுகிறது.
காரைக்கால் பேய்
ஆண்டாள்
பராங்குச நாயகி
மகாதேவி அக்கா
லல்லேஸ்வரி
எமிலி டிக்கின்ஸ்ன்
வர்ஜீனியா வுல்ஃப்
ஸில்வியா பிளாத்
எல்லோரும்
அறுந்த காதின்
தனிமையை உணர்ந்தவர்கள் தான்
அறுந்த காதின் தனிமைக்குழு இணையானது
இன்னொரு காதின் தனிமை
என்பதும் உண்மை
என்ற கவிதையில் வரும் கலைஞர்கள் யாவரும் தன் இருப்பைத் தீவிரமாக அறிந்தவர்கள். விசாரணை செய்தவர்கள். மாற்றத்திற்காக ஏங்கியவர்கள். தனது தனிமையைச் சுடராக மாற்றியவர்கள். அவர்களையே அறுந்த காதின் தனிமையை உணர்ந்தவர்கள் என்று கவிஞர் அடையாளப்படுத்துகிறார். இதே கவிதையில் அறுபடாத இன்னொரு காதின் தனிமையைப் பற்றியும் பேசுகிறார். இருத்தலும் இன்மையும் ஒரே புள்ளியில் சந்திக்கின்றன. கண்ணகி ஒற்றைமுலைச்சியானது போல ஒற்றைக் காது கொண்ட வான்கோ நினைவில் எழுகிறார்
செடியிலிருந்து ஒரு இலையைத் துண்டிப்பது போல வான்கோ தனது காதை துண்டித்துக் கொண்டார்.. துண்டிக்கப்பட்ட பிறகு அந்தக் காது வான்கோவின் காதில்லை. அது ஒரு விசித்திர வஸ்து. காதை துண்டிப்பதால் உலகின் ஓசையிலிருந்து ஒருவன் தப்பிவிட முடியாது. ஆனால் தன்னை இழப்பதன் வழியே தனது எதிர்ப்பை, அன்பை, காட்டமுடியும் என நினைப்பவர்கள் கலைஞர்கள். அதை இந்தக் கவிதையை வாசிக்கையில் உணரமுடிகிறது
ஜப்பானியக் கதை ஒன்றில் ஒரு சிறுவன் இசை ஆசிரியரிடம் தனக்கு மௌனத்தை இசைக்கக் கற்றுத் தரும்படி கேட்கிறான். ஆசிரியர் அது ஒன்றும் பெரிய விஷயமில்லை. ஆனால் நீண்டகாலம் பயில வேண்டும் என்கிறார். அவன் இல்லாத இசைக்கருவியைக் கொண்டு மௌனத்தை இசைக்கப் பழகுகிறான் என்று கதை நீளும். அந்தச் சிறுவனைப் போலவே ஜயபாஸ்கரன் தனது கவிதைகளில் மௌனத்தை இசைக்கிறார். நிறங்களைக் கவிதையாக்குவது என்பது அப்படியான முயற்சியே.
காலமாற்றம் தான் அவரது மையப்பொருள். அதை எதிர்கொள்ளும் மனிதன் இழந்தவற்றைப் பற்றி நினைக்கிறான். ஏங்குகிறான். அது வெறும் ஏக்கமில்லை. மாறாக மீட்கமுடியாத விஷயங்களின் முன்னால் தான் ஒரு சிறுதுளி என்று உணரும் நினைவுகளே கவிஞரை வழிநடத்துகின்றன. அந்த நினைவுகளில் மதுரையும் அதன் கோவிலும் தொன்மங்களும் கரைந்திருக்கின்றன. நினைவில் ஒடும் வையை வேறுவிதமாக உள்ளது.
பாத்திரக்கடை அவரது கவிதைகளில் தொடர்ந்து ஒரு குறியீடாக வருகிறது. மண்பானையில் அதன் வெற்றிடம் தான் பயன்பாடாகிறது என்கிறது தாவோ. வெற்றிடத்தை அழகான பாத்திரமாக மாற்றுகிறான் குயவன். அது கலையின் வெளிப்பாடு.
பாத்திரக்கடைக்குள் இருக்கும் ஒருவன் தனக்குக் கிடைத்துள்ள உலகம் மிகவும் சிறியது. தான் கனவு காணும் உலகம் மிகப்பெரியது என்று நினைக்கிறான். இந்த இருவேறு உலகங்களின் இணைப்பு கண்ணிகளை. இடைவெளிகளை, நகர்வுகளை ஏக்கத்துடன். சலிப்புடன். ஆதங்கத்துடன் எதிர்கொள்கிறான். தனது இயலாமை பற்றிச் சிறியதாக முணுமுணுக்கிறான். அவை கவிதைகளில் வெளிப்படுகின்றன.
வான்கோவின் சூரியகாந்தி மஞ்சள்
ஆலிவ் பச்சையாக
உருமாறிக் கொண்டிருப்பதாகச் சொல்கிறார்கள்
என்னுடைய பித்தளை மஞ்சளில்
ஊர்ந்து கொண்டிருக்கிறது
கருப்பு
என்ற கவிதையில் காலம் இரண்டு மாற்றங்களை நிகழ்த்திக் காட்டுகிறது. ஒன்று வளர்ச்சி மற்றது முடிவு. ஆனால் இரண்டிலும் மஞ்சள் தான் ஆதாரமாக இருக்கிறது.
திறந்த கதவிற்குள் சப்தமின்றி வெயில் நுழைவது அவரது கவிதையில் நிகழ்வுகள் எளிதாக நடந்தேறுகின்றன. திகைப்பூட்டும் சம்பவங்களில்லை. ஆனால் நாம் கவனிக்கத் தவறிய முக்கிய நிகழ்வுகள். எளிய மனிதர்களின் இயல்பான குரல்கள். சின்னஞ்சிறிய சந்தோஷங்கள், இழப்புகள் அது ஏற்படும் அதிர்வுகளைக் காணமுடிகிறது.
கடிகாரக் கடையின் சுவரில் ஒரே நேரத்தில் வேறுவேறு நேரத்தைக் காட்டிக் கொண்டிருக்கும் கடிகாரங்களைப் போல இவரது கவிதைகள் இருக்கின்றன. எந்தக் கடிகாரம் எப்போது ஒசை எழுப்பும் என்று சொல்ல முடியாது. அதே நேரம் இந்தக் கடிகாரங்களால் கட்டுப்படுத்த முடியாத காலமற்ற இருப்பும் அதே இடத்தினுள் இருக்கிறது என்பதையும் அவர் சுட்டிக்காட்டுகிறார்.
கைதவறி விழுந்த பாத்திரம் எழுப்பும் ஓசையைப் போலக் கவிதையின் முடிவில் சட்டென ஒரு ஓசை சற்றே உயர்ந்து ஒலித்து அடங்கிவிடுகிறது. சிறிய அதிர்வு. அவ்வளவு தான் கவிதை முடிந்துவிடுகிறது.

ஐயபாஸ்கரனின் கவிதைகளை வாசிக்கும் போது கவிதையின் கடைசிவரி முடிந்தவுடன் மீண்டும் நாம் முதல் வரிக்குத் திரும்பி வர வேண்டும். இப்போது அதே வரிகள் புதிதாக ஒளிர ஆரம்பிக்கின்றன. பொம்மலாட்டக்கலைஞன் ஆணும் பெண்ணுமாக ஏழு கதாபாத்திரங்களுக்கு ஒருவனே மாற்றி மாற்றிக் குரல் கொடுப்பது போல அவர் சட்டெனக் காரைக்கால் அம்மையாராகவும் ஆண்டாளாகவும் கவிஞராகவும் கடைபத்தராகவும் மாறி மாறி குரல் கொடுக்கிறார். அது கவிதையை மாயக்கலையாக மாற்றுகிறது.
நினைவுகளின் சுடர் எதனால் தூண்டப்படுகிறது என்று நமக்குத் தெரியாது. ஆனால் நினைவு ஒளிரும் போது அவை கடந்தகாலத்தின் காட்சிகள் என்பதை மறந்துவிடுகிறோம். நினைவுகள் முடிவில்லாத நித்யவெளியில் திரும்பத் திரும்ப நடந்து கொண்டேயிருக்கின்றன. நிகழ்காலம் நெருக்கும் போது ஒருவன் நினைவுகளுக்குள் தஞ்சம் அடைந்து விடுகிறான். முதுமை என்பது நினைவின் கூடாரம். அங்கே நினைவின் நடனம் முடிவதேயில்லை.
இந்தத் தொகுப்பின் நிகரற்ற கவிதையாக நான் இதைக் கருதுகிறேன்.
தன்னுள் தேநீர் இல்லாத
மெலிந்த திரேகக் கல்லாக்காரன்
பாத்திரங்களைக் களவு கொடுப்பவனாகக் இருக்கிறான்
பிற்பகல் உணவு வேளையில்
பெட்டியடிக் கணக்குப் பிள்ளையோ
வாய் பதனம் கை பதனம்
என்று
சொல்லிக் கொண்டிருக்கிறார்
சக வேலையாட்களின்
முக வலிப்பைப் பொருட்படுத்தாமல்
எல்லாவற்றுக்கும் இடையில்
சேலை மடிப்பில் சாமான்களுடன்
வெட்டி மறைகிறாள்
திடீர் நகர் மின்னல் கொடி
பிற்பகல் மஞ்சளில்
பாத்திரக் கடையில் திருடும் பெண்ணின் சித்திரத்தை விவரிக்கும் இக் கவிதையில் வரும் திடீர் நகர் மின்னல்கொடி தமிழ் கவிதைக்குப் புதுவரவு. கவிதையில் திருட்டு தெரிந்தே நடக்கிறது. மின்னல்கொடிக்குப் பயமில்லை. அங்கே பிற்பகல் மஞ்சள் ஒரு சாட்சியம் போலாகிவிடுகிறது
தன்னுள் தேநீர் இல்லாத
மெலிந்த திரேகக் கல்லாக்காரன்
பாத்திரங்களைக் களவு கொடுப்பவனாகக் இருக்கிறான்
என்ற வரிகளின் கடைக்காரனின் இயல்பு அழகாக வெளிப்படுத்தப்படுகிறது. தன்னுள் தேநீர் இல்லாதவன் என்பது எவ்வளவு அழகான வரி.
பெட்டியடி கணக்குப் பிள்ளையும் அவர் முணுமுணுப்பும் காலத்தின் குரலாகவே ஒலிக்கிறது
ஆண்டாளையும் எமிலியையும் காரைக்கால் அம்மையாரையும் மட்டுமில்லை. திடீர் நகர் மின்னல்கொடியினையும் எழுதியிருக்கிறார் என்பதே ஜயபாஸ்கரனின் சிறப்பு.
நான்மாடக் கூடலின் அன்றிரவு மூவர் தூங்கவில்லை என்று முடியும் உரைநடைக்கவிதையில் காலம் நீரூற்று போலத் தனக்குள் பொங்கி வழிகிறது. தொகுப்பின் உரைநடைக் கவிதைகள் தனித்துக் கொண்டாட வேண்டியவை.
இருளும் ஒளியும் சமமாய்ப் புணர்ந்த சித்திரத்தில்
அவித்த உருளைக்கிழங்கைப் புசிக்கிறவர்களின்
துயர விலாசம்
கழுவாத வெண்கலக் கும்பா மஞ்சளுடன்
கரைக்கஞ்சி குடிப்பவனின்
மன விலக்கம்
கவிதையில் வான்கோவின் புகழ்பெற்ற ஓவியமும் சமகாலத் தமிழ் வாழ்வின் சித்திரமும் ஒன்றாகின்றன. வான்கோவின் ஒவியத்தைப் பற்றி எழுதப்பட்ட மிகச்சிறந்த வரியாக இதைச் சொல்வேன்.
இரவானது மதுரை நகரம் நூற்றாண்டுகள் பின்னோக்கிப் போய்விடுவதை உணர்ந்திருக்கிறேன். ஜயபாஸ்கரனின் கவிதைகளில் பகல்நேர மதுரைக்காட்சிகள் நிறைய இருக்கின்றன. இரவு நேர மதுரை என்பது நாட்படு தேறலைக் குடிப்பது போன்றது. அந்த மயக்கம் எளிதானதில்லை. மதுரை மாநகரம் ஜயபாஸ்கரன் கவிதைக்குள் குருதியாக ஓடுகிறது. பாத்திரங்களில் எழுதப்பட்ட பெயர்கள் பாத்திரம் தனது பயன்பாட்டினை இழந்த போதும் மறைந்துவிடுவதில்லை. அப்படியானது தான் அவரது கவிதைகளும்.
உண்மையை அப்படியே சொல்லாமல் சற்றே சரித்துச் சொல்லிவிட வேண்டும் என்கிறார் எமிலி டிக்கின்ஸன்.. அதைத் தான் ஜய பாஸ்கரனின் கவிதைகளும் செய்திருக்கின்றன
••
February 22, 2022
நீதி மறுக்கப்பட்ட மனிதன்
மஞ்சுளா
இந்தியாவின் இரு பெரும் இதிகாசங்களும் நீதி குறித்தே பேசுகின்றன. நீதி கேட்பது, நீதிக்காகக் காத்திருப்பது, நீதி கிடைக்காத போது யுத்தம் செய்வது என்பதையே இரண்டும் முதன்மைப்படுத்துகின்றன என்று இந்த நூலின் முன்னுரையில் எஸ்.ராமகிருஷ்ணன் குறிப்பிடுகிறார். அவர் குறிப்பிடுவது போல் வரலாறு நெடுகிலும் நீதியின் குரல் நெறிக்கப்பட்டு வந்திருப்பதை நாம் அறிந்து கொள்ள முடிகிறது.

இடக்கை நாவல் முழுக்க நீதி மறுக்கப்பட்ட மனிதனின் துயரக் குரலை அழுத்தமாகப் பதிவு செய்கிறார் எஸ்.ரா.
ஔரங்கசீப்பின் கடைசி நாட்களில் துவங்குகிறது நாவல். ஔரங்கசீப் ஒருமுறை தனக்கு அடங்க மறுத்த ஒரு வீரனின் குதிரையை மிகக் குரூரமான வகையில் கொன்றுவிடுகிறார். நீதியும் இப்படிப்பட்டதுதான். அதை அடக்கி ஆள முடியாத போது அதைப் பலி கொடுப்பதைத் தவிர வேறு வழியில்லை. தன்னால் அடக்க முடியாதவற்றைக் கொன்றுவிடுவதே தீர்வு என்ற ஆழமான பாடம் அவர் மனதில் வேரூன்றி விடுகிறது.
அந்திமக் காலத்தில் தனது முடிவு பற்றி ஐயமும்,நோயும்,உறக்கமில்லாத இரவுகளும் அவரைத் தீவிரமாகச் சிந்திக்க வைக்கின்றன. ஞானி முகைதீனிடம் தனது விதியை பற்றித் தெரிந்து கொள்ள முயல்கிறார் .இந்த இடத்தில ஞானிக்கும் ஔரங்கசீப்புக்கும் இடையே நடக்கும் உரையாடல்கள் ரத்தக்கறை படிந்த எல்லாக் கைகளுக்கும் சொல்லப்பட்ட கருத்துக் கருவூலங்களாகவே உள்ளது.
சட்டங்கள், நீதிகள் என்பவை எல்லாம் ஆள்பவர்களுக்கு வளைந்து கொடுக்காத போது புதிய சட்டங்கள் உருவாக்கப் படுகின்றன.ஒருவன் மீது குற்றம் சுமத்த ஒரு காரணமும் தேவையில்லை. நிரூபணம் செய்யத்தான் சாட்சிகள் வேண்டும்.
அரசிற்கு எது நன்மை பயக்கிறதோ அதுவே நீதி.இந்த நீதியின் படியே ஆள்பவன் ஆள்கிறான், சாமானியன் தனது விதியை நொந்து கொண்டு வாழ்வை நகர்த்துகிறான் .
இந்த நாவல் தொடக்கம் முதல் முடிவு வரை இந்த நியதியில் தனது கதை மாந்தர்களின் வாழ்வை நகர்த்துகிறது.
ஔரங்கசீப் இறப்புக்கு பின்பு ஆட்டுத்தோல் பதப்படுத்தும் சாமர் இனத்தைச் சேர்ந்த தூமகேது என்பவனும் ,ஔரங்கஷீப்பின் அந்தப்புரப் பணியாளரும் அரவாணியுமான அஜ்யாபேகமும் கைது செய்யப்பட்டுச் சிறையிலடைக்கப் படுகின்றனர்.
தூமகேது தான் ஆட்டுத் தோல் திருடியதாகப் பொய்க் குற்றம் சாட்டப்பட்டுக் காலா சிறையில் வருந்தும்போது பல அவமானங்களைச் சந்திக்கிறான்.சிறையிலும் அவனுக்குக் காலாப் பகுதியை துப்புறவு செய்யும் வேலையே தரப்படுகிறது. ஆரம்பத்தில் தூமகேது மீது சுமத்தப்பட்ட வழக்கு பின்னர் அடுக்கடுக்காக வளருகிறது.மிகவும் துரதிர்ஷ்டமான அவனது நிலையைக் கண்டு அவனது குடும்பமும், உறவினர்களும் வருந்துவதைத் தவிர அவர்களால் வேறொன்றும் செய்ய இயலவில்லை.
சாமர் என்று அழைக்கபடுகின்ற அவனது முன்னோர் இடக்கை பழக்கம் உடையவர்கள். உண்மையில் அவர்கள் வலக்கையைப் பயன்படுத்தக் கூடாது என்பதுதான் அன்றைய விதியாக இருந்தது.அதற்கான ஒரு கதையும் அவர்களிடம் இருந்தது. வலக்கையை அவர்கள் பயன்படுத்தினால் கடவுள் அவர்களைத் தண்டித்துவிடுவார் என்ற பயமும் அவர்களின் மனதில் எப்படியோ பதிந்திருந்தது. சாதித் தீட்டின் காரணமாகப் பல நெருக்கடிகளுக்கும் ,இன்னல்களுக்கும் இடையே வாழ்ந்து கொண்டிருந்தாலும் அதை மீறி அவன் வாழ்ந்து காட்டினால் தன் குடும்பத்தைச் சித்திரவதை செய்து தண்டிப்பார்கள் என்ற பயம் அவனை அதுகுறித்து யோசிக்க விடாமல் தடுத்தே வைத்திருந்தது.
இன்னொரு பக்கம் அஜ்யா சிறையில் சித்திரவதைகளை அனுபவித்துக் கொண்டிருந்தாள். மிகக் கொடுமையான சித்திரவதைகளை அனுபவித்துவிட்டுப் பின் தூக்குமேடைக்குப் போகிறாள். கடைசியாகத் தன்னை நேசித்தவர்களை நினைத்துக் கொள்கிறாள்.தன்னை சகோதரியாக நினைத்த பாதுஷா ஔரங்கசீப்பை நினைத்துக் கொண்டாள். எல்லோருக்கும் நன்றி கூறிவிட்டு தானாகவே நடந்து போய்த் தூக்குக் கயிறை மாட்டிக் கொள்கிறாள். பின்பு அவளது உடல் பொட்டலம் கட்டி ஆற்றில் வீசப்படுகிறது. இதற்கெல்லாம் காரணம், வைர வைடூரியங்கள் போன்ற பொக்கிஷங்களை ஔரங்கசீப் வேறு எங்கேயோ புதைத்துவிட்டு அதைப் பதுக்கி வைத்திருக்கும் இடத்தை ஆட்டுத் தோலில் வரைந்து அவளிடம் ஒப்படைத்துவிட்டு இறந்ததுதான் என்று முகம்மது ஆசம் நம்பியதுதான்.
அரச பதவி என்பது ஒரு மரணச் சிம்மாசனம், அதில் ஏறி அமர்ந்தவன் மெல்ல தனது மனிதத் தன்மைகளை இழந்துபோவான். அவனைச் சிம்மாசனம் ஆட்சி செய்யத் தொடங்கிவிடும். அரியணையில் அமர்ந்துகொண்டு எளியவர்களை அதிகாரம் செய்யும் போதையில் மயக்கம் கொண்ட பிஷாடானின் கதை வரும்போது ,அதிகார வெறியும், முட்டாள்தனமும் கொண்ட அவனது ஆட்சியை அயல் வணிகன் ரெமியஸ் எவ்வாறு படிப்படியாகக் கைப்பற்றி ஆள முயல்கிறான் என்பதோடு, இறுதியில் பிஷாடன் மக்களை அதிகமாகத் துன்புறுத்தி டெல்லிக்கு தன் நாட்டு மக்களையும் வலுக்கட்டாயமாகச் செலுத்திக்கொண்டு போகும் வழியில் பகைவரகளால் கை கால்கள் வெட்டப்பட்டு ,கண்கள் குருடாக்கப்பட்டுப் பசியும் தாகமும் வருத்த யாரும் கண்டுகொள்ள முடியாத நிலையிலேயே இறக்கிறான்.

நாவலில் பல இடங்களில் கிளைக் கதைகளும் முளைக்கின்றன. அனைத்து கதைகளும் நீதி குறித்தே பேசுவதாக உள்ளது.நீதியைப் பற்றியும் குற்றங்கள் பற்றியும் பல கதாபாத்திரங்கள் தங்கள் கதை வழியே பேசிக் கொள்கின்றனர். பண்டிதர்கள் முதல் பாமரர்கள் வரை எவ்வித விசாரணைமின்றி அவர்கள் யாவரும் ஒருவரே போல் சிறையில் அடைப்பட்டுக் கிடக்கின்றனர். குற்றத்தின் நிழலில் வாழும்போது சிரிப்பது ஒன்றுதான் அவர்களுக்கு ஆறுதலாக உள்ளது.
நீதியை மையமாகக் கொண்டு ஏதோ சில கதைகள் வழியே சிறையில் இருந்து தப்பிக்கும் தூமகேது தன் குடும்பத்தைத் தேடி அலைகிறான். அவனுக்குப் பல்வேறுபட்ட அனுபவங்கள் கிடைத்த போதும் அவனின் கதைகள் வாசிக்கும் நமக்குப் பல உண்மைகளையும் உணர்த்தும்படி அமைகிறது.
தூமகேது என்ற கதாபாத்திரம் எப்போதும் நீதிக்காக ஏங்குகிறது. அவனது பத்து வயதில், இடிந்தகோட்டையை ஒட்டிய ஆலமரக் கோயிலில் நடந்த ஒரு விழாவில் பலி கொடுக்கப்பட்ட எருமை மீது அணியப் பட்ட சாமந்தி மாலைகள் தரையில் சிதறிக் கிடக்கின்றன.. அந்த மாலையை அன்றுதான் முதன்முதலாக எடுத்து தன் கழுத்தில் அணிந்துகொள்கிறான். இவனது இன மக்களுக்குப் பூக்களைக் கூடத் தொட உரிமை கிடையாது. ஆனால் யாரும் அறிந்து விடாமல் ஆசையாக அணிந்து கொண்டு மகிழ்கிறான். அப்போது யாரோ அவனை நில்லுடா நாயே என்று சொல்லி அவன் இனத்தைச் சொல்லி இழிவு படுத்துகிறான். அவனை அடித்து உதைத்ததுமில்லாமல் ,இன்னொரு பிராமணன் அவனது உள்ளங் கையில் பழுக்கக் காய்ச்சிய கம்பியால் சூடும் போட்டு’விடுகிறான். போதாதற்கு நான்கு பெண்கள் சேர்ந்து சாணத்தைக் கரைத்து அவனது தலையிலும் வாயிலும் ஊற்றுகிறார்கள்.
கழுத்தில் பிய்ந்து போன இரண்டு செருப்புகளை மாலை போல அணிவித்து அடித்துத் துரத்தி விட்டார்கள். அன்றுதான் பிறப்பில் தாழ்ந்தவன் என்பதைத் தூமகேது உணர்கிறான். இதற்காகத் தன்னை யார் வேண்டுமானாலும் அவமதிக்கலாமா? வாழ்நாள் முழுவதும் இப்படி அடி உதைபட்டுத்தான் வாழவேண்டுமா? என்று ஏங்குகிறான் .
எஸ். ரா அவர்கள் தான் சொல்ல விரும்பிய கருத்தை வாசகன் மனதில் ஆழமாகப் பதியவைப்பதில் கை தேர்ந்தவர் என்பதை இறுதி அத்தியாயத்தில் புரிந்து கொள்ளலாம். தூமகேது வயதால தளர்ந்து ஒரு நடைபிணம் போல் ஒரு புளியமரத்தடியில் அமர்ந்திருக்கிறான். அவன் இப்போது யாருமற்ற அநாதை. தெருவில் ஒரு ஊர்வலம் போகிறது. அந்த ஊர்வலத்தில் ஔரங்கசீப்பின் கையால் தைக்கப்பட்ட குல்லாவை ஒரு பிச்சைக்காரன் தூமகேதுவுக்குக் கொடுத்துவிட்டுப் போகிறான். அதைத் தலையில் தூமகேது அணிந்து கொள்கிறான்.
முன்பு அவன் ஏங்கிய சாமந்தி மாலையை யாரோ ஒரு யாத்திரீகன் ஊர்வலம் செல்லும்போது தூக்கி வீசுகிறான். அது தூமகேதுவின் மடியில் விழுகிறது. அதை எடுத்து தன் கழுத்தில் அணிந்து கொள்கிறான்.அவனை அறியாமல் நளா,நளா நான் எப்படி இருக்கிறேன் என்று தான் காணவே முடியாத மனைவியை எண்ணிக் கொண்டு கேட்கிறான். தூரத்தில் அடிக்கும் மேளச்சத்தம் அவன் காதுகளில் கேட்கிறது. துக்கத்தையும், வேதனையையும் மீறி அவனறியாமல் அவனது இடக்கை தாளமிட்டுக் கொண்டிருகிறது.
இறுதி வரிகளில் நமது மனமும் கண்களும் கலங்குவதைத் தவிர்க்கவே முடியாது.
நம் உடலில் இடக்கை வலக்கை என்று இருந்தபோதிலும் இரண்டு கைகளையும் நாம் சமமாக மதிப்பதில்லை. வலக்கைக்குக் கொடுக்கும் முக்கியத்துவம் இடக்கைக்குக் கொடுப்பதில்லைதானே…. இதை நாம் எப்படி உணர்ந்து கொண்டிருக்கிறோம் என்றால் இடக்கையை அருவருப்பு என்றும் அவமானம் என்றும்,இடக்கையின் புழக்கத்தை அதன் காரணமாகவே நாம் குறைத்தும் மதிப்பிட்டும் வந்திருக்கிறோம்.
மனித உடலில் இத்தகைய பாகுபாடுகளைக் கற்பித்திருக்கும் நாம் மனிதர்களிடையேயும் கற்பித்து வந்திருக்கிறோம். பணம் உள்ளவன் வலக்கை ஆகிறான். பணம் இல்லாதவன் இடக்கை ஆகிறான் . சாதியில் உயர்ந்தவன் வலக்கை ஆகவும், தாழ்ந்தவன் இடக்கை ஆகவும் மாறிவிடுகிறான்…. உண்மையில் மாற்றிவிடுகிறது ஆதிக்க மனோபாவம்.

மன்னர் காலம் தொடங்கி மக்கள் ஆட்சி வரை இதன் இடம் அப்படியேதான் இருக்கிறது. இடக்கை என்ற நாவலில் வரும் பல சம்பவங்களைப் போலவே இன்றும் நமது இந்தியாவின் பல கிராமங்களில் சில பட்டியலின சாதி மக்களை இடைநிலைச் சாதிகள் ஒதுக்கியே வைத்துள்ளனர். தீண்டாமைக் கொடுமை ஒழிக்கப்பட்டுவிட்டது, அதைக் கடைப்பிடிப்பது தடை செய்யப்படுகிறது என்ற அரசியல் பிரிவு , குடியுரிமை பாதுகாப்புச் சட்டம், வன்கொடுமை தடுப்புச் சட்டம்போன்ற சட்டங்கள் யாவும் பட்டியலின மக்களுக்கு உரிமைகள் வழங்கினாலும் அந்த உரிமைகள் நடைமுறையில் மறுக்கப்படுவது இன்றும் ஒரு தொடர்கதை போல் நீடித்து வருகிறது.
”இந்தியாவில் ஜனநாயகம் என்பது வெறும் மேல்பூச்சாகவே இருக்கிறது,அடிப்படையில் அது ஜனநாயகமற்றது” என்ற அம்பேத்கர் குறிப்பிட்டதையும் நினைவுபடுத்திக் கொள்வது இங்குப் பொருத்தமாக இருக்கும்.
நாவலை வாசித்து முடிக்கையில், இடக்கை என்பது எப்போதும் இடக்கைதானா? அதன் இழிவை நாம் மாற்றவே முடியாதா?
சாதி இழிவுகளை இந்தியா போன்ற நாடுகளில் துடைத்து அகற்றவே முடியாதா? போன்ற கேள்விகளை நம்முள் எழுப்பிக் கொண்டேயிருக்கிறது.
Thanks
Vimarsanam.in
February 20, 2022
இரண்டு யசோதரா
சித்தார்த்த யசோதரா’ என்ற நாவலை வாசித்தேன்

சிங்கள எழுத்தாளர் சோமா ஜயகொடி எழுதிய இந்த நாவலைத் தமிழாக்கம் செய்திருப்பவர் சரோஜினி அருணாசலம். குமரன் புத்தக இல்லம் வெளியிட்டுள்ளது
புத்தரின் மனைவியான யசோதராவின் கண்ணோட்டத்தில் எழுதப்பட்ட இந்த நாவல் அவர்களின் காதல், திருமணம், புத்தரின் துறவு பற்றி மாறுபட்ட கண்ணோட்டத்தில் எழுதப்பட்டுள்ளது.
இதில் யசோதராவிற்கும் புத்தருக்குமான பந்தம் ஜென்ம ஜென்மமாகத் தொடர்வது என்பதே மைய இழையாக உள்ளது.
ரோஹிணி நதி நீரைப் பங்கு போடுவதில் சாக்கிய வம்சத்திற்கும் கோலிய வம்சத்திற்கும் இடையில் பிரச்சனை நிலவுகிறது. இந்நிலையில் சாக்கிய வம்சத்தைச் சேர்ந்த புத்தர். கோலிய வம்சத்தைச் சேர்ந்த யசோதராவை எப்படித் திருமணம் செய்ய முடியும் என்ற கேள்வி உருவாகிறது.
யசோதரா மீது கொண்ட காதலால் சுயம்வர போட்டிகளில் கலந்து கொண்டு புத்தர் தனது போர்த்திறனை வெளிக்காட்டி சாதனை செய்கிறார். அவர்களின் காதலை சோம ஜயகொடி அழகாக எழுதியிருக்கிறார்
புத்தரின் துறவை யசோதரா புரிந்து கொண்டு அனுமதிக்கிறாள். என்கிறார் சோம ஜயகொடி
புத்த ஜாதகக் கதைகளில் சொல்லப்படும் நிகழ்வுகள் மற்றும் மகாயானத்திலிருந்து பெறப்பட்ட தகவல்களை வைத்து இந்தப் புனைவை எழுதியிருக்கிறார்.
நாம் அறிந்த கதைகளை உணர்ச்சிப்பூர்வ நாடகமாக விவரித்திருக்கிறார் என்பேன்.
புத்தரின் கால இந்தியாவின் வாழ்க்கை முறை, சடங்குகள் அன்றைய அரசாட்சி, மக்களின் நம்பிக்கைகளை நுட்பமாக எழுதியிருக்கிறார்.

தெலுங்கு எழுத்தாளர் வோல்கா இதே போல் யசோதராவை மையப்படுத்தி ஒரு நாவல் எழுதியிருக்கிறார். தமிழில் யசோதரை என்ற பெயரில் நாகலட்சுமி சண்முகம் மொழியாக்கம் செய்திருக்கிறார்.
அதில் புத்தர் ராஜபரிபாலனத்தை விடவும் விவசாயத்தில் அதிக ஆர்வம் கொண்டிருந்தார் என்பது விவரிக்கப்படுகிறது. சித்தார்த்தன் புத்தராக மாறியதற்குப் பின்னால் இருந்த யசோதராவின் பங்கினை வோல்கா தனித்துவத்துடன் விவரிக்கிறார். இதில் வரும் யசோதரா அறியாப்பெண்ணில்லை. ஆழ்ந்து சிந்திக்ககூடியவள். பெண்கள் ஏன் துறவு கொள்ள அனுமதிக்கபடுவதில்லை என்று கேள்விகேட்பவள்.
புத்தரின் வாழ்க்கைச் சரித்திரம் அவர் மறைந்து நூற்றாண்டுகளுக்குப் பின்பு புனையப்பட்டது. அதில் சொல்லப்படும் நிகழ்வுகள் அவரது வாழ்வில் நடந்த உண்மைகள் என்பதற்கு எவ்விதமான நேரடி ஆதாரங்களும் கிடையாது. அவற்றைக் குறியீடுகளாகவும் நம்பிக்கைகளாகவும் கருதுகிறார்கள்.
சோம ஜயகொடி நாவலில் வரும் யசோதரா தியாகம் செய்யும் பெண்ணாகச் சித்தரிக்கபடுகிறாள். அவளுக்குப் புத்தரின் மீது கோபம் கிடையாது. அவரது ஞானத்தேடலுக்கான துணையாக விளங்குகிறாள்.
இரண்டு நாவலும் ஒரே கதைக்கருவைக் கொண்டிருந்தாலும் இரண்டு யசோதராக்களும் வேறுபட்டவர்களாகச் சித்தரிக்கப்பட்டிருக்கிறார்கள். இருவரில் வோல்காவின் யசோதரா இந்த நூற்றாண்டில் வாழுகிறாள். புதிய பார்வைகளுடன் கேள்விகளை எழுப்புகிறாள்.
இரண்டு நாவல்களிலும் புத்தரின் ஆளுமை முழுமையாக வெளிப்படவில்லை என்பதே பொதுவான குறை.
••
அக்ஸின்யா
எனது மண்டியிடுங்கள் தந்தையே நாவலில் வரும் அக்ஸின்யாவை ஓவியமாக வரைந்திருக்கிறார் சுரேஷ்.
நாவலைப் படித்த நண்பர் வேலூர் லிங்கம் அக்ஸின்யாவை யாராவது ஓவியமாக வரைந்தால் நன்றாக இருக்கும் என்று சொன்னார். அவரது விருப்பம் இன்று நிறைவேறியுள்ளது.
சுரேஷிற்கு மனம் நிறைந்த நன்றி

February 19, 2022
இந்து தமிழ் திசையில்
இன்றைய இந்து தமிழ் திசை நாளிதழில் எனது மண்டியிடுங்கள் தந்தையே பற்றிய அறிமுகம் வெளியாகியுள்ளது

S. Ramakrishnan's Blog
- S. Ramakrishnan's profile
- 657 followers
