உளவு பார்க்கும் உலகில்

ஒரு நிகழ்வு துவங்கும் போது அது எப்படி முடியும் என்று யாராலும் கணித்துவிட முடியாது. இயல்பாக முடிந்துவிட்டால் அன்றாடச் செயலாகிவிடுகிறது. எதிர்பாராமல் முடிந்துவிட்டால் மறக்கமுடியாத அனுபவமாகிறது.

சலூனுக்குச் சிகை அலங்காரம் செய்து கொள்ளச் சென்ற ஒரு பெண் மீள முடியாத பிரச்சனைக்குள் மாட்டிக் கொள்வது என்பது நாம் நினைத்துப் பார்க்க முடியாத விஷயம்.

அதுவும் நட்பாகப் பழகிய தோழியால் வஞ்சிக்கப்படுவதும், மிரட்டி சதிவேலையில் ஈடுபடச்செய்வதும் அதிர்ச்சியான விஷயங்கள். அதைத் தான் Huda’s Salon விவரிக்கிறது. ஹானி அபு-ஆசாத் இயக்கிய இப்படம் 2022ல் வெளியாகியுள்ளது.

பெத்லஹேமில் சிறிய சலூன் ஒன்றை நடத்திக் கொண்டிருக்கிறாள் ஹுடா, ஒரு நாள் அந்தச் சலூனுக்குத் தனது கைக்குழந்தையுடன் வருகிறாள் இளம்பெண் ரீம். அவர்களுக்குள் முன்பே நட்பிருக்கிறது. சிகை அலங்காரம் செய்து கொண்டபடியே தன் கணவன் தனக்குக் கள்ள உறவு இருப்பதாகச் சந்தேகப்படுவதாகச் சொல்கிறாள்

அவரது அடர்ந்த கருமையான கூந்தலில் வெதுவெதுப்பான நீரைச் செலுத்தியபடியே ஏதாவது வேலை தேடிக் கொள்ள வேண்டியது தானே என ஆறுதல் சொல்கிறாள் ஹுடா,

தானே ஒரு சலூனை ஆரம்பிக்க நினைத்துள்ளதாகவும் அது கணவனுக்குப் பிடிக்காவிட்டாலும் செய்ய வேண்டும். கைக்குழந்தையின் காரணமாக இப்போது அதை ஆரம்பிக்க இயலவில்லை என ரீம் பதில் தருகிறாள். இப்படி இயல்பாகத் தொடரும் உரையாடல் நீண்ட ஒற்றைக்காட்சியாகப் பத்து நிமிஷங்கள் நீளுகின்றன..

காபியில் மயக்கமருந்து கொடுத்து நிர்வாணப்படுத்தப்படும் ரீம் ஹுடாவால் போட்டோ எடுக்கப்பட்டு பிளாக்மெயில் செய்யப்படுகிறாள். தான் ஒரு திட்டமிடப்பட்ட சூழ்ச்சி ஒன்றில் மாட்டிக் கொண்டுவிட்டோம் என்பது ரீமிற்கு அச்சமூட்டுகிறது.

கைக்குழந்தையை ஏந்தியபடி பதற்றத்துடன் வீடு நோக்கிப் போகிறாள். ஆனால் அவளை ரகசிய உளவாளியாக நினைத்து காவலர் பின்தொடருகிறார்கள்.

ஹுடா இஸ்ரேலிய ஆக்கிரமிப்புப் படைகளுடன் ரகசியமாக வேலை செய்கிறாள். அவளது சலூன் உளவுபார்க்கும் இடம் என்பதும் அவள் இப்படி இளம்பெண்களை மிரட்டி உளவுபார்க்க வைக்கிறாள் என்பதும் கொஞ்சம் கொஞ்சமாகத் தெரிய வருகிறது.

படத்தின் துவக்கக் காட்சியிலே ரீம் பேஸ்புக் வந்தபிறகு தனது அந்தரங்கம் பறிபோய்விட்டது. தன்னை அறியாமல் அதன் வலைக்குள் சிக்கிக் கொண்டுவிட்டேன். ஏன் இலவசமாக எல்லோருக்கும் பேஸ்புக் பக்கம் தரப்படுகிறது. அது ஒரு வணிகத் தந்திரம் என்கிறாள்.

இதற்கு ஹுடா இப்போது எல்லாம் யூடியூப் பார்த்து மக்கள் தானே சிகையலங்காரம் செய்து கொள்கிறார்கள் தனது வியாபாரம் மிகவும் படுத்துவிட்டது என்கிறாள்.

இந்த உரையாடலின் நீட்சி போலவே அடுத்து வரும் நிகழ்வுகள் நடந்தேறுகின்றன.

ரீம் ஒரு பிரச்சனைக்குள் மாட்டிக் கொள்வது போலவே ஹுடாவும் காவல்துறையிடம் மாட்டிக் கொள்கிறாள். அவளது உளவுப்பணியைக் கண்டறிந்து அவளை மிரட்டி யாரெல்லாம் உளவாளியாகச் செயல்படுகிறார்கள் என்பதை விசாரணை செய்கிறார்கள். அந்த விசாரணை முடிவில் தான் கொல்லப்படுவோம் என்று ஹுடாவிற்கு நன்றாகத் தெரிகிறது

ஹுடாவுக்கும் ஹசனுக்கும் இடையிலான விசாரணைக் காட்சி படம் முழுவதும் நீடிக்கிறது. புத்திசாலித்தனம் மற்றும் தைரியமான இரண்டு சமமான எதிரிகளுக்கு இடையேயான மோதலது. ஹசன் விசாரணையின் போது அவளை ஒரு அற்ப புழு போலவே நடத்துகிறான். ஹுடா எளிதில் அடிபணிவதில்லை.

படத்தில் அந்த விசாரணை காட்சிகள் நாடகம் போலச் சித்தரிக்கப்படுகின்றன குறிப்பாக ஹுடா பேசும் முறை. குற்றவுணர்வில்லாத அவளது நடத்தை. பயத்தை மறைத்துக் கொண்டு உரையாடும்விதம் என நுணுக்கமாக உருவாக்கியிருக்கிறார்கள்.

ரீமைப் பிரச்சனைக்கு மேல் பிரச்சனை சூழ்கிறது. கணவன் அவளைச் சந்தேகப்படுகிறான். போலீஸ் அவளது இருப்பிடத்தைத் தேடுகிறார்கள். இந்த நெருக்கடிகளிலிருந்து தப்பிக்க அவள் மேற்கொள்ளும் முயற்சிகள் எதுவும் நடக்கவில்லை.

நான்கே கதாபாத்திரங்கள். எதிர்பாராத ஒரு நிகழ்வு. அதன் தொடர்ச்சியான துரத்தல். விசாரணை. சிக்கல் இவற்றை அழகாகப் பின்னிச் செல்கிறது திரைக்கதை

கைக்குழந்தையுடன் ரீம் வீதியில் அலைந்து திரிவதும், தன்னைக் காப்பாற்றிக் கொள்ளச் செய்யும் முயற்சிகளும் நேர்த்தியாகச் சித்தரிக்கப்பட்டிருக்கின்றன.

ஒரு நாளில் உங்கள் வாழ்க்கை தலைகீழாக மாறிவிடும் அபாயமிருக்கிறது என்பதை அழகாகப் புரியவைக்கிறார்கள். ரீமாக நடித்துள்ள Maisa Abd Elhadi மிகவும் சிறப்பாக நடித்துள்ளார். அவர் நிர்கதியை வெளிப்படுத்தும் விதம் அபாரம்.

வீட்டில் குழந்தைக்கு உடல்நலமில்லாத போது ரீமீன் கணவன் நடந்து கொள்ளும் முறை, மற்றும் கணவனின் உறவினர்கள் மற்றும் அம்மா ஒன்றுசேர்ந்து தன்னைக் கேலி பேசுவதைக் கேட்டுத் தனிமையில் ரீம் பொங்கி அழுவது, தோழியிடம் சென்று உதவி கேட்பது. புரிந்து கொள்ளாத கணவனுடன் சண்டைபோடுவது என யதார்த்தமான காட்சிகள் படத்தினை நிஜவாழ்க்கைக்கு நெருக்கமாக்குகின்றன.

கதையின் ஊடாக இரண்டு பாலஸ்தீனியப் பெண்களின் வாழ்க்கை அசலாகச் சித்தரிக்கப்படுகிறது. ஒரு புறம் இஸ்ரேலியப் படைகளால் நீண்டகாலமாக ஆக்கிரமிக்கப்பட்ட பாலஸ்தீனத்திற்குள் வாழும் நெருக்கடியான நிலை மறுபுறம் வீட்டின் சூழல் மற்றும் ஆணாதிக்க வெளிப்பாடு இந்த இரண்டுக்குள் இருந்தபடியே அவர்கள் கனவு காணுகிறார்கள். திட்டமிடுகிறார்கள். தோற்றுப் போகிறார்கள்.

அரசியல் சூழல் எவரையும் விழுங்கிவிடும் என்பதையே திரைப்படத்தில் சித்தரித்துள்ளதாக இயக்குநர் கூறுகிறார். இவரது முந்தைய படங்களான ஓமர் மற்றும், பாரடைஸ் நவ் படங்களின் வரிசையில் இப்படமும் நிறையப் பாராட்டுகளைப் பெற்றுவருகிறது

••

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on April 01, 2022 02:12
No comments have been added yet.


S. Ramakrishnan's Blog

S. Ramakrishnan
S. Ramakrishnan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow S. Ramakrishnan's blog with rss.