S. Ramakrishnan's Blog, page 92
March 28, 2022
வெளிச்சத்தைப் பரப்பும் மழைமான்
பிச்சைக்காரன்

எஸ் ராமகிருஷ்ணனின் மழைமான் சிறுகதை தொகுதி சமீபத்தில் மனநிறைவளித்த ஒரு கதை தொகுப்பு. எளிய மனிதர்களின் அன்றாட வாழ்க்கை எந்த நிமிடத்திலும் திசை திரும்பி விடக்கூடியது. அறம் அழிவது அன்றாடச் செயல்பாடாகி வருகிறது; என்ற பின்னட்டைக்குறிப்புகள் இந்தச் சிறுகதைத் தொகுதியை முடித்தபின்பு வேறோரு பொருளைத்தருகின்றன
எளிய மனிதர்கள் என்பதே ஒரு ரிலேட்டிவ் பதம்தான். ஒரு பார்வையில் மனிதர்கள் அத்தனைப்பேருமே எளியவர்கள்தான். காலம்தான் சிலரை அவ்வப்போது ஒவ்வொரு இடத்தில் வைக்கிறது.ஒரு நிமிடத்தில் மாறி விடக்கூடியதுதான்.
இந்தத் தொகுப்பில் நடுத்தர வாழ்வு என்ற ஓர் உலகுக்குள் நடக்கும் இந்த ஒரு பரமபத விளையாட்டை அழகாகப் பதிவு செய்துள்ளார் எஸ்ரா
உயர் ரசனையுடன் , கம்பீரமாக வாழும் ஒரு குடும்பத்தலைவி ஒரு கல்லூரி மாணவனின் அத்துமீறல் என்றொரு செயலால்மனம்நிலைகுலைவதும் அந்தச் சம்பவம் நிகழக் காரணமாக அமைந்த மற்ற நிகழ்வுகளும் ஒரு முழு வாழக்கையையே பிரதிபலித்து விடுகின்றன; ( அவன் பெயர் முக்கியமில்லை சிறுகதை)
வாழ்க்கை என்பது எண்ணற்ற தற்செயல்களின் விளைவுகள். நம்மை மீறிய செயல்களே நம்மை எளியவனாகவும் வலியவனாகவும் மாற்றிக்காட்டுகின்றன. ஒரு கணம் முன்பு உண்டியல் விற்கும் தாத்தா முன்பு வலியவளாக இருந்தவள் அதே நாளில் ஓர் விக்டிம் அல்லது அபலை ஆகிப்போகிறாள்
அந்த நிகழ்வு வேறோரு,பெண்ணுக்குக் கிளுகிளுப்பானதாக அவளது ஈகோவை வலுவாக்கும் சம்பவமாக அமைந்திருக்கக்கூடும்
இதன் பின்னணியில் நிகழும் ஒரு கொலை சம்பவமும் இந்த எளியவன் வலியவன் இருமையை அடிக்கோடு இடுகிறது.
இதில் தன்னை வலியவனாக உணரும் மாணவன் ஒரே ஒரு நிமிடத்தில் எளியவனாகும் வாய்ப்பும் இருக்கிறது
ஒழுங்கின்மைக்குள் ஏதோ ஒரு ஒழுங்கு இருக்கிறது என்கிறது அறிவியல். அதுபோல அறமின்மைக்குள் வாழும் அறம்தான் உலகை வாழ வைத்துக்கொண்டு இருக்கிறது
இன்னொரு ஞாயிற்றுக்கிழமை கதையில் வேலையில்லாமல் நண்பன் அறையில் தங்கி இருக்கும் தாமோதரன் ஞாயிற்றுக்கிழமை ஒரு நாளாவது வயிறார சாப்பிட விரும்புகிறான். அதற்கு அவன் ஒரு யுக்தி வைத்திருக்கிறான்.
யாராவது ஒரு வசதியான பழைய நண்பனை நட்பு ரீதியாகச் சந்திக்க செல்வதுபோல மதிய வேளை சந்தித்துச் சுவாரஸ்யமாகப் புகழ்ந்து பேசி அப்படியே சாப்பிட்டு விட்டு வந்து விடுவான்
பாஸ்கர் என்ற நண்பனிடம் இந்த யுக்தி பலிக்கவில்லை துச்சமாக நடத்துகிறான் பசி தாங்க முடியவில்லை பாஸ்கரின் பாட்டி கொரியர் செய்யக் கொடுத்த 50 ரூபாயில் தனது நண்பனுடன் சாப்பிட்டு விடுகிறான்
கதையின் வெடிப்பு நிகழ்வது அதற்குப்பிறக்குதான். 50 ரூபாய்க்குப் பாட்டியை ஏமாற்றியவனால் அந்தக் கவரில் இருக்கும் 500 ரூபாயை அபகரிக்க முடியவில்லை
வலியவன் எளியவனை வாட்டினால் எளியவன் தான் துன்புறுத்தத் தன்னை விட எளியவன் ஒருவனைக் கண்டுபிடிப்பான் என்ற அறவீழ்ச்சியால் சூழப்பட்ட ஒரு யுகத்தின் மத்தியில் அவனது அறம் விழிக்கிறது
தனக்கு நிகரானவரைத் தன்னை விட உயர்நிலையில் இருப்பவரை ஏமாற்றுவதை ஏற்கும் அவன் உள்ளம்,தன்னை விடக் கையறு நிலையில் இருக்கும் ஒரு கிழவியை − அதுவும் அவள் தன்னிலும் எளிய ஓர் அபலைக்கு உதவ முனையும்போது −, ஏமாற்றுவதை ஏற்கவே முடியவில்லை
Games people play என்பதுபோல, மனிதர்கள்,விளையாடும் இந்தக்கருணையற்ற விளையாட்டின் விளைவை அவன் கண் முன் பார்ப்பது அவனுக்கு ஒரு தரிசனமாக ( vision)அமைகிறது
அறம் என்பதையே கேள்விக்குள்ளாக்குகிறது ஓலைக்கிளி கதை
ஒரு காலத்தில் ரவுடியாக இருந்தவன் தற்போது திருந்தி விடுகிறான் தன் மகள் திருமணத்துக்குக் கிட்டத்தட்டப் பிச்சை எடுக்கிறான். கடைசியில் மகள் திருமணம் என்பதே பொய் எனத் தெரிகிறது. வேண்டுமென்றேதான் செய்தேன் எனக்கூறி அதற்கொரு லாஜிக்கலாகக் காரணமும் கூறி கடிதம் அனுப்புகிறான் குடும்பத்தினருக்கு அரிய பரிசு ஒன்றையும் அனுப்புகிறான்.அவன் செயலில் எவ்வித அறப்பிழையையும் நம்மால் காண முடிவதில்லை. நமக்கே அவனைப்பார்க்க வேண்டும் என்ற ஆசை ஏற்படுகிறது
நம்மில் பலருக்கு உரிய சம்பளத்தைக் கேட்டுப்பெறப் பயம் , சாலை உடைசல் , குப்பை குவியல் இவற்றையெல்லாம் யாரிடம் முறையிடுவது என்று தெரிவதில்லை தெரிந்தாலும் உரியவர்களிடம் முறையிட,தயக்கம் , பயம் , சோம்பல் இந்தக்கோழைத்தனத்தை மறைத்து நம்மை நாமே ஏமாற்றிக் கொள்ள , முகநூல் அவதாரம் எடுக்கிறோம் . விளாடிமின் புடின் , டிரம்ப் , மோடி , ஸ்டாலின் , எடப்பாடி என அனைவரையும் வீரமாக எதிர்க்கிறோம். வீரன் சமூகப்போராளி என நம்மை நம்ப வைத்துக் கொள்கிறோம்.
இதை மழைமான் எனப் படிமம் மூலம் அழகாகச் சொல்கிறது மழை மான் கதை.

சக பெண் ஊழியர் வீட்டுக்குச் சர்ப்ரைஸ் விசிட் அடித்து இன்ப அதிர்ச்சி அளித்து ஹீரோ ஆகும் முயற்சி அசட்டுத்தனமாய் முடிகிறது. இப்படி அலுப்பூட்டும் வாழ்வில் சுவையாக ஏதேனும் செய்யும் பொருட்டு மான் ஒன்றைப் பார்க்க ஆசைப்படுகிறார் ஒருவர் அந்தத் தேடல் அனுபவத்தைச் சாகசமாக ஆக்கிக் கொள்ளும் சந்தர்ப்பங்களைக் கோட்டை விடுகிறார். நிஜ மானைத் தவற விட்டுவிட்டு மழைமான் ஒன்றைக் கற்பனையில் உருவாக்கி மழை நீர் மட்டுமே அருந்தும் கற்பனை மானைத் தான் பார்த்ததாகப் பிறரிடம் அளந்து விடுகிறார். அதைத் தானும் நம்புவது மட்டுமல்ல அதை உண்மையில் பார்க்கவும் செய்கிறார்
ஆனால் மழைமான் கதையைத் தன் மனைவியிடம் சொல்லும்போது அவள் சிரித்து விடுகிறாள். அவருக்கு வலிக்கிறது.
முகநூலில் சமூக ஊடகங்களில் நாம் உருவாக்கி அலைய விட்டிருக்கும் மழைமான்கள் எத்தனை எத்தனை
இந்தச் சிறுகதைத் தொகுப்பை ஒரு நான்லீனியர் நாவலாகவும் வாசிக்க இயலும்.
எளியவன் வலியவன் எனும் இருமையை இன்னொரு கோணத்தில் காட்டும் கதை , எதிர் கோணம். சிறந்த கேமிரா கலைஞனாக உருவாகி இருக்க வேண்டிய ஒருவரை வாழ்க்கை பேருந்து நடத்துநராக ஆக்கி வைத்துள்ளது அவரது வாழ்வின் ஒரு துளிதான் கதை. எங்கோ பெற்ற அடியை வேறு எங்கோ செலுத்தும் முடிவில்லா அர்த்தமற்ற விளையாட்டு
இந்த விளையாட்டின் அபத்தம் நாம் முன்பு பார்த்த கதையில் ஒரு கணத்தில் முகத்தில் அறைகிறது இக்கதையில் அந்தச் செயல்பாடு நிகழ்கிறது
பாடல்களுக்கும் நமக்குமான ( குறிப்பாகப் பெண்களுக்குமான ) உணர்வுப்பூர்வமான பந்தத்தை,பேசும் கதை , அபூர்வமான பறவையைத் தேடும் அனுபவம் முழுக்க முழுக்கக் கவிதை நடையில் அமைந்த மழைக்கதை என அனைத்தும் அழியாத ஏதோ ஒன்றைச் சொல்வதாகவே தோன்றுகிறது
வெறும் பிரார்த்தனை கதையில் பொறுப்பற்ற குடிகாரன் ஒருவனால் குடும்பம் அடையும் மன உளைச்சல் காட்டப்படுகிறது பொறுப்பற்ற தந்தை இரக்கமற்ற வேலை சூழல் கடுமையாக வேலை வாங்கும் முதலாளி என முழுக்க முழுக்க இருண்மையான வாழ்க்கை ஆனால் அந்த,முதலாளி ஒவ்வொரு நாளும் வீட்டுக்குக் கிளம்பும்போதும் பத்திரமா போய்ட்டு வாம்மா என அன்பாகப் பேசி ஒரு சாக்லேட் வழங்குவதில் அத்தனை வலியும் மறந்து போய்விடுகிறது
மாபெரும் இருளை விட ஒரு சின்னஞ்சிறு தீப்பொறி ஆற்றல் மிக்கது
இந்தத் தொகுதியின் செய்தி என எஸ்ரா எதுவும் உத்தேசித்து இருக்க மாட்டார் ஆனால் எனக்கு இத்தொகுதி வழங்கிய”செய்தி இதுதான்
மாபெரும் இருளை விட ஒரு சின்னஞ்சிறு தீப்பொறி ஆற்றல் மிக்கது
தூய வெளிச்சம் என்ற கடைசிக்கதை எனக்கு அவ்வளவு நிறைவளித்தது.
எத்தனையோ கனவுகளுடன் கலை உணர்வுடன் ஒரு மாளிகையை எழுப்புகிறார் குமாரசாமிப்பிள்ளை . வீட்டின் முகப்பில் அமைக்கப்பட்டு இருக்கும் மின் விளக்கு அந்தத் தெருவுக்கே இரவு முழுக்க நிலவு போல வெளிச்சமளிக்கும்
ஆனால் குமாரசாமிப்பிள்ளையின் வாரிசுகளைப் பொருத்தவரை அந்த வீட்டின் கலையுணர்வோ தூய வெளிச்சம் வழங்கும் அவரது நல்லெண்ணமோ பொருட்டில்லை..
பணம் மட்டுமே பொருட்டு. எதற்குத் தெண்டமாக மின்விளக்கு என அந்த விளக்கை நிறுத்தி விடுகின்றனர். பிள்ளையின் மறைவுக்குப்பிறகு அந்த வீடு இடிக்கப்படுகிறது
அப்படி என்றால் அவரது ரசனை நல்லெண்ணம் எல்லாம் காரிருளில் மறைந்து விட்டதா ? அந்த வெளிச்சம் யார் மனதிலும் இல்லாமல் இணைப்புச்சங்கிலி அறுந்து விட்டதா என்பதற்கு அற்புதமான பதிலைத்தருகிறது கதை
ரசனை , நல்லெண்ணம் எனும் வெளிச்சம் என்றும் மறைவதில்லை தனக்கான கடத்தியைத் தேர்வு செய்து கொண்டு அவை காலம் காலமாகத் தொடர்கின்றன
ஒரு திருடன்தான் இந்த வெளிச்சத்தை அடுத்த தலைமுறைக்கு ஏந்திச் செல்கிறான் என்பது சுவையான முரண்
அந்தக் கட்டடத்தை , அந்த வெளிச்சத்தை அணு அணுவாக ரசிப்பவன் அந்தத் திருடன். அந்த வீட்டிற்குள் ஒரு முறையாவது நுழைந்து பார்க்க வேண்டும் எனத் திட்டமிட்டு உள்ளே திருடச் செல்கிறான் வீட்டின் இருண்மை அவ்வீட்டில் உள்ளோரின் மனநிலையை அவனுக்குத் தெரிவிக்கிறது
பிள்ளை மரணத்துக்கு இதயப்பூர்வமாக வருந்துபவன் அவன் மட்டுமே
அந்த வீடு இடிபட்டுத் தரைமட்டமாகும்போது அவ்வீட்டின் ஒரு சிறிய கல்லை எடுத்துக் கொண்டு அவன் செல்வதுடன் கதை கவித்துவமாக முடிகிறது. அந்தத் தூய வெளிச்சம் நம்முள்ளும் பரவுகிறது
வித்தியாசமான துள்ளும் நடையில் அனைத்து கதைகளையும் படைத்துள்ளார் எஸ்ரா . சும்மா புரட்டிப்பார்க்கத்தான் எடுத்தேன் முடித்து விட்டுத்தான் வைத்தேன்
இப்படிச் சுவையான நடையில் ஆழமான இலக்கிய நூல்கள் வருவது அரிது
தேசாந்திரி பதிப்பகம் சிறப்பாக நூலை உருவாக்கியுள்ளது . அட்டை ஓவியம் அருமை
கிரா ஓவியம்
கி.ராவின் கன்னிமை கதை குறித்து எழுதிய பதிவை வாசித்த சேது வேலுமணி நாச்சியாரை ஓவியமாக வரைந்திருக்கிறார். அவருக்கு எனது மனம் நிறைந்த பாராட்டுகள்

சாகித்திய அகாதமி விழா
சாகித்திய அகாதமியின் யுவபுரஸ்கார் விருது வழங்கும் நிகழ்வு சென்னையில் மார்ச் 30 மாலை நடைபெறுகிறது.
இந்த நிகழ்வில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு உரையாற்றுகிறேன்
வடபழனியிலுள்ள எஸ்.ஆர்.எம் கல்லூரி அரங்கில் இந்த நிகழ்வு நடைபெறுகிறது


March 23, 2022
நாச்சியாரு, என் பிரியே
கி.ராவின் ’கன்னிமை’ சிறுகதையில் வரும் நாச்சியாரைப் பற்றி நினைக்கும் போது மனதில் மணிமேகலையின் உருவம் தோன்றி மறைகிறது. இருவருக்கும் ஒரே சாயல்.

நாச்சியார் கன்னிப்பெண்ணாக இருந்த போது எல்லோருக்கும் அள்ளிக் கொடுக்கிறாள். ஒடியோடி உதவிகள் செய்கிறாள். அன்பு மயமாக இருக்கிறாள். வேலைக்காரர்களுக்குக் கூட அவள் கையில் தான் கஞ்சி ஊற்றுவது பிடித்திருக்கிறது. பருத்தி எடுக்கும் பெண்கள் கூட அவள் வருகைக்காகக் காத்திருக்கிறார்கள்.
வேலைக்காரர்களுக்கு மட்டுமில்லை, பிச்சைக்காரர்களுக்குக்கூட நாச்சியாரம்மாஎன்றால் ‘குலதெய்வம்’தான். அவளுக்கு என்னவோ அப்படி அடுத்தவர்களுக்குப் படைத்துப் படைத்து அவர்கள் உண்டு பசி ஆறுவதைப் பார்த்துக்கொண்டிருப்பதில் ஒரு தேவ திருப்தி
அவளுக்கு ரங்கையாவோடு திருமணமாகிறது. திருமணம் பேசி முடிக்கபட்டதும் அவள் மூன்று நாட்கள் நினைத்து நினைத்து அழுகிறாள். திருமணமானதும் அவளது இயல்பு மாறிவிடுகிறது. இப்போது அவளிடம் அள்ளிக் கொடுக்கும் மனசில்லை. வாசலில் வந்து யாசிப்பவருக்குச் சோறு போட முகம் சுளிக்கிறாள். வேலைக்காரர்களைக் கோவித்துக் கொள்கிறாள். கணவனுக்கு உடல் நலமில்லை என்னும் நிலையிலும் வீட்டுக்கணக்குப் பார்ப்பதில் தான் கவனம் செலுத்துகிறாள்.
இந்த கதையில் வரும் உணவு வகைகளும் அதன் தயாரிப்பும் நாவில் எச்சில் ஊறச் செய்கின்றன அத்துடன் நாச்சியாரைப் பற்றிய இந்த சித்திரம் அபூர்வமானது
அப்பொழுது எங்கள் வீட்டில் மரத் திருவிளக்கு என்று ஒன்று இருந்தது. அது அவ்வளவும் மரத்தினாலேயே ஆனது. தச்சன் அதில் பல இடங்களில் உளிகளைப் பதித்து நேர்கோடுகளால் ஆன கோலங்களைப் போட்டிருந்தான். மொங்காங்கட்டையின் வடிவத்தில் நிற்கும் பெரிதான பற்கள் இருக்கும். அதில் உயரத்துக்குத் தகுந்தபடி ஏற்றவும் இறக்கவும் வசதியாக இருக்கும்படியாக ‘ட ’ வடிவத்தில் ஒரு துளையிட்ட சக்கையில் ‘சல்ல முத்த ’ என்று சொல்லப்படும் மாட்டுச்சாண உருண்டையின் மீது மண் அகல்விளக்கு வைக்கப்பட்டு எரியும். சாணி உருண்டை தினமும் விளக்கு இடும் போதெல்லாம் மாற்றிவிட்டுப் புதிதாக வைக்கப்படும். அப்புறம் x மாதிரி ஒரு போர்வைப் பலகை கொண்டு இரவு வெகு நேரம் வரைக்கும் பெண்கள் புடைசூழ இவள் உரக்க ராகமிட்டு வாசிப்பாள். வாசித்துக்கொண்டே வரும்போது இவளும் மற்றப் பெண்களும் கண்ணீர் விடுவார்கள். கண்ணீரைத் துடைத்துக்கொண்டே தொண்டை கம்மத் திரும்பவும் ராகமிட்டு வசனத்தைப் பாடுவாள். அவர்கள் கண்ணீர் விடுவதையும் மூக்கைச் சிந்துவதையும் நான் படுக்கையில் படுத்துக்கொண்டு பேசாமல் இந்தக் காட்சிகளையெல்லாம் பார்த்துக் கொண்டேயிருப்பேன்.
அவள் வாசிப்பதை என் காதுகள் வாங்கிக்கொள்ளாது. என் கண்களே பார்க்கவும் செய்யும்; ‘கேட்க ’வும் செய்யும்.
விளக்கின் ஒளியில்தான் அவள் எவ்வளவு அழகாகப் பிரகாசிக்கிறாள். அழகுக்கும் விளக்கின் ஒளிக்கும் ஏதோ சம்பந்தம் இருக்கிறது. கறிக்கு உப்பைப்போல் அழகுக்கும் அதி ருசி கூட்டுகிறதுபோலும் விளக்கு.
“நாச்சியாரு,என் பிரியே !நீ எங்கிருக்கிறாய்?” என்று கதையை முடிக்கிறார் கி.ரா.
திருமணமான நாச்சியாரிடம் இந்த மாற்றங்கள் தானே உருவாகின்றன. கிரா கன்னிமையின் அடையாளமாக அவளது தாராள மனதையும் அன்பு செலுத்துவதையும் சொல்கிறார்.
மணிமேகலையின் கையில் அட்சயபாத்திரம் கிடைப்பதும் அவள் பெருங்கருணையுடன் பசித்தோருக்கு உணவு வழங்கியதும் இந்தக் கன்னிமையால் தானா
நாச்சியாரும் மணிமேகலையும் சகோதரிகள் போலவே இருக்கிறார்கள்
நாச்சியாரு என் பிரியே நீ எங்கிருக்கிறாய் என்ற குரல் கதையைத் தாண்டி ஒலித்துக் கொண்டேயிருக்கிறது
கிராம வாழ்க்கையில் தான் கண்டறிந்த பெண்ணின் நினைவில் இந்தக் கதையை எழுதியதாகக் கிரா நேர் பேச்சில் குறிப்பிட்டார். நாச்சியாருக்கு மாற்றாகத் திருமணமான பின்பு தாராள மனதுடன் அள்ளிக் கொடுக்கத் துவங்கிய பெண்களை நான் அறிவேன். அவர்கள் வறுமையான குடும்பச் சூழல் காரணமாகப் பசியும் பட்டினியுமாக வளர்ந்தவர்கள். நல்ல இடத்தில் திருமணமாகிப் போனதும் அவர்களின் வயிறு நிறைந்ததோடு கொடுக்கும் மனதும் உருவாகிவிட்டது.
பெர்க்மெனின் வர்ஜின் ஸ்பிரிங் திரைப்படத்தில் கன்னிப்பெண் கொல்லப்படுகிறாள். அவள் கொல்லப்பட்ட இடத்தில் ஒரு நீரூற்று பிறக்கிறது. அந்த நீரூற்று வற்றாத அன்பின் அடையாளம். அதைத் தான் கிராவும் சொல்கிறார் என நினைக்கிறேன்.
கிராவின் சிறுகதைகளில் வரும் பெண்கள் அசலானவர்கள். அபூர்வமான கதாபாத்திரங்களாக உருவாக்கப்பட்டவர்கள். நடுத்தரவர்க்க குடும்பங்களைச் சித்தரிக்கும் கதைகளில் காணமுடியாத வலிமையும் துணிச்சலும் வெளிப்படையான பேச்சும் கோபமும் கொண்டவர்கள். இந்தக் கதையில் வரும் நாச்சியார் மிகச்சிறந்த கதாபாத்திரம்.
கன்னிமை தமிழில் எழுதப்பட்ட மிக முக்கியமான சிறுகதை
•••
உறக்கத்தை வரைபவர்
ஹென்றி மாங்குயின் (Henri Manguin )என்ற பிரெஞ்சு ஓவியரின் La Sieste என்ற ஓவியம் உறக்கத்திலுள்ள ஒரு பெண்ணைச் சித்தரிக்கிறது.

1905ல் வரையப்பட்ட இந்த ஓவியத்திலிருப்பவர் மாங்குயினின் மனைவி ஜீன். அவளை மாடலாகக் கொண்டு மாங்குயின் நிறைய ஓவியங்களை வரைந்திருக்கிறார்
இந்த ஓவியத்தைப் பார்த்தவுடன் மனதில் ஜப்பானிய நாவலாசிரியரான யாசுனாரி கவாபத்தா எழுதிய House of the Sleeping Beauties நாவல் தான் நினைவிற்கு வந்தது. மயக்க நிலையில் உறங்கும் பெண்ணின் அருகில் அவளறியாமல் படுத்து உறங்கும் கிழவரின் இரவுகளைப் பற்றிய அந்த நாவல் பாலுணர்வைத் தாண்டிய பெண்ணின் தேவையை, நெருக்கத்தை நுட்பமாக விவரிக்கிறது.

இயற்கைக் காட்சிகளை, நிர்வாணப்பெண்களை, நீராடும் அழகிகளை, மலர்த்தோட்டங்களை, விருந்துக்காட்சிகளை ஐரோப்பாவில் நிறைய ஓவியர்கள் சிறப்பாக வரைந்திருக்கிறார்கள். ஆனால் இப்படி ஒரு ஓவியர் தொடர்ந்து உறக்கத்தை வரைவது என்பது அபூர்வமான விஷயம்.

உறக்கத்தில் உங்களின் அழகை நீங்கள் காட்டிக் கொள்ள முடியாது. ஒருவகையில் நீங்கள் இயற்கையைப் போல இயல்பாக இருக்க நேரிடுகிறது. இயக்கத்தில் வெளிப்படும் அழகினை விடவும் ஓய்வில் வெளிப்படும் அழகு மாறுபட்டது. தனித்துவமானது.
பொதுவாக ஒருவரின் உறக்கத்தினை மற்றவர் அவதானிப்பதில்லை. உறங்கும் போது நாம் யாருடைய சாயலில் உறங்குகிறோம் என்று நமக்குத் தெரியாது.
உறங்கும் பெண்ணின் உருவத்தை மாங்குயின் நிறைய வரைந்திருக்கிறார். La Sieste ஓவியத்தில் மரங்களுக்கு நடுவே சாய்வு நாற்காலியில் உறங்கும் பெண்ணின் மீது படும் ஒளி அலாதியானது. நடுத்தரவயதுடைய பெண்ணின் உடல் மற்றும் அவளது உடை. அவள் சாய்ந்து படுத்துள்ள விதம். அந்த முகத்தில் வெளிப்படும் சாந்தம் அழகாக வரையப்பட்டிருக்கிறது. வண்ணங்களைப் பயன்படுத்தியுள்ள விதமும் ஓய்வின் இதத்தை வெளிப்படுத்தும் உணர்வும் சிறப்பாக உள்ளன.
பிரெஞ்சு ஓவியரான ஹென்றி சார்லஸ் மாங்குயின் இம்ப்ரெஷனிசத்தால் பெரிதும் பாதிக்கப்பட்டவர், பிரகாசமான வெளிர் வண்ணங்களை அவர் பயன்படுத்துவதில் இதன் பாதிப்பு வெளிப்படையாகத் தெரிகிறது.

உறக்கத்தின் போது உங்கள் கை மற்றும் கால்கள் நெகிழ்வடைந்து விடுகின்றன. இந்த ஓவியத்திலும் அது அழகாகச் சித்தரிக்கப்பட்டிருக்கிறது. குறிப்பாகக் கால்களைக் குறுக்கேயிட்டு உறங்குவதன் மூலம் வெளியிடத்தில் உறங்குகிறோம் என்ற கவனம் இருப்பதாகத் தோன்றுகிறது.
சற்றே சாய்ந்து உறங்கும் பெண்ணின் முகத்தில் சந்தோஷம் படர்ந்திருக்கிறது. அவரைச் சுற்றிய இயற்கையின் இயக்கம் இயல்பாக நடந்து கொண்டிருக்கிறது. ஆனால் அவர் தன்னை இயற்கையின் பொறுப்பில் ஒப்படைத்துக் கொண்டிருக்கிறார். இக்காட்சியை மாங்குயின் வரைந்துள்ள விதம் Cézanne இன் ஒவியப்பாணியை நினைவூட்டுகிறது.
இந்த ஓவியத்தைப் போலவே உறங்கும் பெண்ணைச் சித்தரிக்கும் வேறு பல ஒவியங்களையும் மாங்குயின் வரைந்திருக்கிறார்.

எதற்காக உறக்கத்திலிருப்பவரை வரைவதில் இவ்வளவு ஆர்வம் கொண்டிருக்கிறார் என்று வியப்பாக உள்ளது.
உண்மையில் விழித்திருப்பவரிடம் இல்லாத எதை அவர் தூக்கத்தில் காணுகிறார்.

ஹென்றி ரூசோ வரைந்த The Sleeping Gypsy ஓவியம் தான் உறக்கத்தைச் சித்தரித்த ஓவியங்களில் மிகவும் புகழ்பெற்றது. அதில் தன்னை மறந்து உறங்கும் ஜிப்சியின் தோற்றம் மிகவும் அழகானது. அந்த ஓவியம் கனவில் வெளிப்படும் காட்சி போலவேயிருக்கிறது. நிலவொளியில் சிங்கம் நிற்பது கனவுத்தோற்றம் போலிருக்கிறது சிங்கத்தின் தோற்றமும் அதன் கண்களும் முகபாவமும் கூடச் சாந்தம் கொண்டதாக இருக்கின்றன. நிலவொளி அந்தக் காட்சிக்கு மாயத்தன்மையை உருவாக்குகிறது.
உறக்கத்தினை ரூசோ வியப்பூட்டும் நிலையாக வரைந்திருக்கிறார். ஆனால் மாங்குயின் ஓவியத்தில் உறங்கும் பெண் இதிலிருந்து மாறுபட்டவள். அவள் பகலுறக்கம் கொள்கிறாள். தெற்கு பிரான்சின் கோடைக்கால காட்சியது. தொலைவில் தெரியும் விரிகுடாவின் தண்ணீர் இந்தக் காட்சிக்குக் கூடுதல் அழகினை தருகிறது.
ஓவியத்தில் அந்தப் பெண்ணைப் போலவே இயற்கையும் நெகிழ்வுதன்மை கொண்டிருக்கிறது. விரிந்த கிளைகளும் நிழல் தரும் இதமும் சிறப்பாக வரையப்பட்டிருக்கிறது

Model at Rest ஓவியத்தில் நாம் காணுவதும் இது போன்ற ஒரு ஓய்வு நிலையைத் தான். அந்தப் பெண்ணின் கைகளைப் பாருங்கள். பின்புறமாக மடக்கி வைக்கப்பட்டுள்ளது.
தண்ணீருக்குள் பிரவேசிப்பது போலவே ஒருவர் உறக்கத்திலும் மெதுவாகப் பிரவேசிக்கிறார். தண்ணீரைப் போலவே உறக்கமும் இதமாக அணைத்துக் கொள்கிறது. உறக்கத்தின் நுழைவாயில் எது வெளியேறும் வாசல் எது என எவராலும் சொல்ல முடியாது.

Sleeping Child ஓவியத்திலும் கோடைக்காட்சியே இடம்பெற்றிருக்கிறது. இதில் தொப்பி அணிந்தபடியே அந்தச் சிறுமி உறங்குகிறாள். இதிலும் இயற்கையும் அவளும் ஒரே நிலை கொண்டதாகச் சித்தரிக்கப்பட்டிருக்கிறார்கள். தொப்பியின் நிழல் அவளது முகத்தில் விழுவது அழகாக வரையப்பட்டிருக்கிறது.
மாங்குயின் பகலுறக்கத்தை வரைவதில் தான் ஆர்வம் கொண்டிருக்கிறார். குறிப்பாக இயக்கமற்ற இயக்கத்தைக் காணுவது தான் அவருக்குப் பிடித்திருக்கிறது.

இந்த வகை ஓவியங்களை ஃபாவிஸ்ட் என்கிறார்கள்
அதாவது ஃபாவிஸ்ட் ஓவியங்கள் நிறத்தினைக் குறியீடாகப் பயன்படுத்துவதில்லை. மாறாகத் தூய நிறத்தின் வெளிப்படையான குணங்களைக் கொண்டிருக்கின்றன. பொருள் இயற்கையில் எப்படிக் காட்சியளிக்கிறது என்பதைப் பற்றி அவர்கள் பொருட்படுத்தவில்லை.. அடர்த்தியான தூரிகைகள் மற்றும் பிரகாசமான நிறத்தினைக் கொண்டு ஓவியங்களை உருவாக்கினார்கள்
மாங்குயின் தெற்கு பிரான்ஸின் இயற்கையால் கவரப்பட்டு, 1920 இல் அங்கு ஒரு வீட்டை வாங்கினார். அங்கிருந்தபடியே வரைந்த ஓவியங்களில் ஒன்று தான் ஜேன் பகலுறக்கத்திலிருப்பது. இதமான நிழல் தரும் மரங்களின் நடுவே தனியாகவும் அமைதியாகவும் படுத்திருக்கிறாள். கடலை நோக்கிய தோட்டத்தினுள் தான் இந்தக் காட்சி இடம்பெற்றிருக்கிறது.
நேர்த்தியான ஒளி, மகிழ்ச்சியான மனநிலை, ஒளிரும் வண்ணங்கள் மற்றும் அமைதியான புறச்சூழல் இவற்றையே மாங்குயின் ஓவியங்களில் அதிகம் காணமுடிகிறது. நீல நிறத்தை இவர் பயன்படுத்தும் விதம் தனித்துவமாகயிருக்கிறது.
ஹென்றி மாங்குயின் சிறுவயதிலேயே பள்ளியை விட்டு விலகி ஓவியத்தில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டவர். 1894 ஆம் ஆண்டில் குஸ்தாவ் மோரோ அவரைத் தனது ஸ்டுடியோவிற்கு அழைத்துச் சென்றார், அங்கு மாங்குயின் ஹென்றி மத்தீஸ் மற்றும் மார்க்குரட் ஆகியோருடன் பயிற்சி பெற்றார். 1899 ஆம் ஆண்டில் அவர் தனது விருப்பமான மாடலான ஜீன் கேரெட் மணந்தார், அடுத்த மூன்று ஆண்டுகளில் அவர்களுக்கு இரண்டு மகன்கள் பிறந்தனர். செசான் மற்றும் வான் கோவின் பாணியில் மாங்குயின் தனது ஓவியங்களை உருவாக்கினார்.
உடலை இயற்கையுடன் ஒத்திசைவு கொள்ள வைப்பதன் மூலம் உண்மையான பிணைப்பை உருவாக்கியிருக்கிறார் என்பதாகவே இதனை உணருகிறேன்.
•••
.
March 22, 2022
பச்சை வாசனை
Yellow Flowers on the Green Grass என்ற வியட்நாமிய படத்தைப் பார்த்தேன். 2015ல் வெளியான இப்படத்தை இயக்கியுள்ளவர் Victor Vũ. இரண்டு சிறார்களின் வாழ்க்கையை விவரிக்கும் இப்படம் பால்ய வயதின் கொண்டாட்டங்களை, பயத்தை, இழப்புகளை அழகாகப் பதிவு செய்திருக்கிறது

1980 களின் மத்திய வியட்நாமில் கதை நடக்கிறது. 12 வயது தியூ, 7 வயதான அவனது தம்பி துவாங் இருவரையும் மையமாகக் கொண்ட கதை.
சின்னஞ்சிறிய கிராமம். சுற்றிலும் பசுமையான வயல்கள். தூரத்து மலை. வண்ணத்துப்பூச்சிகள் பறக்கும் நீல ஆகாசம். தெளிந்த ஆறு என எழிலான சூழல்.. விவசாயக் குடும்பத்தில் பிறந்த தியூ ஏழாம் வகுப்புப் படிக்கிறான். அவனது தம்பி துவாங். இருவரும் அருகிலுள்ள பள்ளிக்கு வயல்வெளியின் ஊடாக நடந்து போய்ப் படித்து வருகிறார்கள்.
தியூ பயந்தவன். ஆனால் துவாங் தைரியசாலி. சகோதரர்கள் ஒன்றாக வயலில் விளையாடுகிறார்கள், வீட்டு வேலை செய்ய ஓடுகிறார்கள், ஒரே படுக்கையில் தூங்குகிறார்கள், அவர்களின் நாட்கள் மகிழ்ச்சியான சாகசங்களால் நிரம்பியுள்ளன.

விளையாட்டுதனமிக்கத் துவாங் தனது மாமா தரும் காதல் கடிதங்களை ரகசியமாக அவரது காதலிக்குக் கொண்டு போய்த் தருகிறான். பெரிய மனுசன் போலத் தனது தம்பி நடந்து கொள்வதைக் கண்டு தியூ வியப்படைகிறான்.
அண்ணன் மீது மிகுந்த நேசம் கொண்டவன் துவாங், பள்ளியில் தனது அண்ணனை யாராவது திட்டினாலோ, அடிக்க வந்தாலோ பாய்ந்து அடித்துவிடுகிறான்.
துவாங் எப்போதும் ஒரு தவளையை வைத்து விளையாடிக் கொண்டிருக்கிறான். பூச்சிகளைச் சேகரிக்கிறான். மரமேறுவது, பாறைகளில் தாண்டி விளையாடுவது. நீந்தி குளிப்பது என உற்சாகமாக இருக்கிறான்.
ஆனால் தம்பியைப் போல விளையாட்டுகளில் ஈடுபடாமல் தியூ படிப்பதிலும் கதை கேட்பதிலும் ஆர்வம் காட்டுகிறான். ஒரு நாள் அவனது மாமா அந்த ஊரின் எல்லையிலுள்ள காய்ந்த மரத்திற்குள் மோகினி ஒளிந்திருக்கிறாள் என்றொரு கதை சொல்கிறார். இதைக் கேட்டதிலிருந்து தியூ இரவில் அந்த மரத்தைக் கடந்து போகப் பயப்படுகிறான்.
அந்த மோகினி கதை படம் முழுவதும் ஒரு குறியீடு போலவே தொடருகிறது. இரவில் அந்த மரத்தைக் காணும் காட்சியில் தியூவின் பயம் கலந்த ஒட்டம் அசலான சித்தரிப்பு.
அவனோடு படிக்கும் மூன் என்ற மாணவியை நேசிக்கும் தியூ அவளிடம் தனது அன்பை எப்படி வெளிப்படுத்துவது எனத் தெரியாமல் தான் படித்த கவிதையிலிருந்து இரண்டு வரிகளை ஒரு கடிதமாக எழுதித் தருகிறான். அதை மூன் வகுப்பு ஆசிரியரிடம் தந்துவிடுகிறாள்.

காதல் கடிதம் எழுதியதற்காகத் தியூ ஆசிரியரால் தண்டிக்கப்படுகிறான். மாணவர்கள் அவனைக் கேலி செய்கிறார்கள். மாலை வீடு திரும்பும் போது மூன் அவனிடம் மன்னிப்பு கேட்கிறாள். அதன்பிறகு அவர்களுக்குள் நட்பு உருவாகிறது.
மூனின் தந்தை தொழுநோயாளி என்பதால் எவர் கண்ணிலும் படாமல் ஒரு குடிசையில் மறைந்து வாழுகிறார். அவளது அம்மா தன் கணவன் வெளியூர் போயிருப்பதாக நடித்து வருகிறாள். இந்த நிலையில் ஒரு நாள் அக் குடிசை தீப்பிடித்து எரிந்துவிடவே அவரை ரகசியமாக நகரிலுள்ள மருத்துவமனைக்குக் கொண்டு போகிறாள் மூனின் அம்மா
தீவிபத்தின் காரணமாக மூன் சில நாட்கள் தியூ வீட்டில் தங்க நேரிடுகிறது. தன் வீட்டிலே மூன் இருப்பது அவனை மிகவும் சந்தோஷப்படுத்துகிறது. ஆனால் தம்பியோடு அவள் சிரித்து விளையாடுவது தியூவிற்குப் பிடிக்கவில்லை.
ஒரு நாள் ஆத்திரத்தில் தியூ தம்பியைப் பலமாகத் தாக்கிவிடவே அவனது இடுப்பு எலும்பு முறிந்து போகிறது. பெற்றோர்களிடம் தான் மரத்திலிருந்து விழுந்துவிட்டேன் என்று பொய் சொல்கிறான் துவாங்.

அவனுக்குச் சிகிச்சை அளித்தும் பலனற்றுப் போகிறது. துவாங் நடமாட முடியாமல் படுக்கையில் வீழ்கிறான்.
தனது தம்பியின் கால்கள் முடங்கிப் போனதற்குத் தானே காரணம் என்ற குற்றவுணர்வு கொண்ட தியூ தம்பிக்கான எல்லா உதவிகளையும் செய்கிறான்.
வயதில் மூத்தவன் போல நடந்து கொள்ளும் துவாங்கிடம் இல்லாத பொறாமை பயந்து போன, ரகசியமாக எதையும் செய்யக்கூடிய தியூவிடம் வெளிப்படுகிறது. அந்த முரண் தான் படத்தின் மையம். சிறுவர்கள் பிறர் அறியாத கற்பனையுலகில் சஞ்சரிக்கிறார்கள். மனதிற்குள்ளாகவே ஆசையை வளர்த்துக் கொள்கிறார்கள். குடும்பச் சூழல் அவர்கள் ஆசையை தடுக்கும் போது ஏமாற்றமடைகிறார்கள். மூன் குடும்பக் கஷ்டங்களை உணர்ந்திருக்கிறாள். மென்சோகம் கலந்த அவளது முகம் அவளது குடும்பத்தின் துயரைத்தை அடையாளப்படுத்துகிறது.
படத்தில் இரண்டு கிளைக்கதைகள் தனி இழைகளாக ஊடாடுகின்றன. ஒன்று தியூ மாமாவின் காதல் கதை. மற்றொன்று சர்க்கஸில் வேலை பார்த்து வந்தவரின் மனநலம் பாதிக்கப்பட்ட மகளின் கதை. இந்தத் தேவதைக்கதை வேறு திசையை நோக்கிப் படத்தைக் கொண்டு செல்வதால் மைய கதையிலிருந்து நாம் விலகிப் போகிறோம். அதை நீக்கியிருந்தால் படம் இன்னும் முழுமைபெற்றிருக்கும்.
மரணக்கிணறு சுற்றும் பெண்ணின் கதாபாத்திரம் வித்தியாசமானது. அதுவும் மகளின் முன்னால் அவள் வேகமாகப் பைக்கில் சுற்றிவரும் காட்சி சிறப்பாகப் படமாக்கப்பட்டிருக்கிறது.

மூன் ஊரை விட்டுச் செல்லும் காட்சியில் இனி அவள் திரும்பி வரமாட்டாள் என்பதை உணர்ந்து கலங்கி நிற்கும் காட்சியிலும், அவள் நினைவாகப் பழைய கவிதை நூலைப் புரட்டி பார்க்கும் காட்சியிலும் தியூ சிறப்பாக நடித்திருக்கிறான். மூன்று சிறுவர்களுமே சிறப்பாக நடித்திருக்கிறார்கள் இதில் மூன் உணர்ச்சிகளை அற்புதமாக வெளிப்படுத்துகிறார்.
Nguyen Nhat Anh என்ற எழுத்தாளரின் நாவலை மையமாகக் கொண்டு படத்தை உருவாக்கியிருக்கிறார்கள் , நவீன உபகரணங்கள் எதுவுமில்லாத கிராமிய வாழ்க்கையை, அதன் வறுமை, மற்றும் நெருக்கடிகளை யதார்த்தமாக எழுதியிருக்கிறார். அழகான இடங்கள், இயல்பான நடிப்பு. மிக நேர்த்தியான ஒளிப்பதிவு, மென்மையான இசை படத்தினைச் சிறப்பாக்குகிறது.
படத்தில் என்னை மிகவும் கவர்ந்தவன் துவாங். அசலான விளையாட்டுச் சிறுவன். அவனது முகத்தில் தான் எவ்வளவு சந்தோஷம். கடைசிவரை அவன் அண்ணன் மீது கோபம் கொள்ளவில்லை. வெறுக்கவில்லை. தூய அன்பின் அடையாளமாக இருக்கிறான்.
திரையில் காணும் பால்யத்திற்கும் நமது பால்யத்திற்கும் பெரிய இடைவெளியில்லை. வாழ்க்கையின் பச்சை வாசனையைப் படம் முழுவதும் உணர முடிகிறது. அந்த நெருக்கமே படத்தைச் சிறந்த அனுபவமாக்குகிறது.
March 21, 2022
இளமையின் குழப்பங்கள்
நாட்சுமே சோசெகியின் கோகொரோ நாவல் 1959ல் தமிழில் மொழியாக்கம் செய்யப்பட்டிருக்கிறது.
இந்த நாவல் ஜப்பானில் 1914ல் தொடராக வெளியானது. கோகொரோ என்பதன் பொருள் இதயம் அல்லது இதயத்தால் உணரப்படுவதாகும். மூன்று பகுதிகளாக உள்ள இந்த நாவல் சென்ஷி எனப்படும் முதியவரும் சோசெகிக்குமான நட்பையும் சோசெகியின் குடும்பப் பின்புலம் மற்றும் சென்ஷியின் கடந்தகாலத்தையும் விவரிக்கிறது

விடுமுறை நாளில் காமகுரா கடற்கரையில் தற்செயலாக ஒரு முதியவரைச் சந்திக்கிறான் கல்லூரி மாணவனான சோசெகி. கிழவர் கடலில் நிதானமாக நீந்தும் விதம் மற்றும் அவரது உடற்மொழி அவனைக் கவருகிறது. அவருடன் நட்புடன் பழக விரும்புகிறான். ஆனால் அவரோ விலகிப்போகிறார். வலிந்து அவருடன் அறிமுகமாகி அவரது நட்டைப் பெறுகிறான்
முதியவர்களின் தனிமை வேறு இளைஞர்களின் தனிமை வேறு. இளைஞர்கள் தனிமையைப் போக்கிக் கொள்ளத் துணையைத் தேடுகிறார்கள். முதியவர்களோ விரும்பி தனிமையை ஏற்றுக் கொள்கிறார்கள். அல்லது உருவாக்கிக் கொள்கிறார்கள் என்கிறார் சென்ஷி.
குரு, வழிகாட்டி, அல்லது ஆசான் என்ற பொருள் கொண்டதே சென்ஷி எனும் சொல். தனது வழிகாட்டியாகவே அந்த முதியவரை சோசெகி நினைக்கிறான். அவரது உண்மையான பெயர் நாவலில் சொல்லப்படுவதில்லை.
சென்ஷியின் வீட்டிற்குச் சென்று அவருடன் நெருங்கிப் பழகுகிறான். சென்ஷியின் மனைவி ஷிஜி அவனை அன்போடு நடத்துகிறார். சென்ஷி தம்பதிகளுக்குக் குழந்தை இல்லை.

ஒரு நாள் அவரைத் தேடிச் சென்ற போது அவர் கல்லறைத்தோட்டத்திற்குச் சென்றிருப்பதாக மனைவி சொல்கிறார். அங்கே தேடிப்போன போது எதிர்பாராத வருகையை விரும்பாதவராகக் கடுமையாக நடந்து கொள்கிறார். தனது நண்பனின் கல்லறையைக் காணச்செல்வதாக மட்டும் சொல்கிறார். யார் அந்த நண்பன். ஏன் அங்கே தனியே செல்கிறார் என்று எதுவும் அவனுக்குப் புரியவில்லை.
ஆனால் நண்பனின் மறைவில் மாளாத துயரம் கொண்டிருக்கிறார் என்பதை மட்டுமே புரிந்து கொள்ள முடிகிறது
முதியவரான சென்ஷியை ஏன் சோசெகி விரும்புகிறான். காரணம் சென்ஷியிடம் பரபரப்பில்லை. அவர் ஒரு புத்த துறவி போலவே நடந்து கொள்கிறார். அவர் தனது மனைவி ஷிஜுவை இசை நாடகம் என அழைத்துப் போகிறார். அன்பான தம்பதியாக விளங்குகிறார். ஒருநாள் அவர்களுக்கு இடையில் நடக்கும் சண்டையைக் காணுகிறான் சோசெகி. அன்று அவனிடம் நான் அறிந்துள்ள ஒரே பெண் என்று மனைவி மட்டும் தான், ஆனாலும் அவள் என்னைப் புரிந்து கொள்ளவில்லை, என்று சென்ஷி வருத்தப்படுகிறார். எதற்காகச் சண்டை நடந்தது என்பதை அவர் விவரிக்கவில்லை.
பல்கலைக்கழக பாடங்களைப் போலவே சென்ஷியின் வழியே வாழ்க்கையைப் பற்றிய பாடங்களையும் சொசேகி கற்றுக் கொள்கிறான். நேரடியாக அவர் எதையும் போதிப்பதில்லை. ஆனால் அவரது செயல்களின் வழியே அவன் நிறையக் கற்றுக் கொள்கிறான். நட்போடு நெருங்கிப் பழகிய போதும் அவரைப் புரிந்து கொள்ள முடியவில்லை.
படிப்பை முடித்துச் சொந்த ஊருக்குச் செல்கிறான் சோசெகி. அவன் பட்டம் பெற்று வந்திருப்பதைக் குடும்பம் பெருமையாகக் கருதுகிறது. திருமணப்பேச்சு நடக்கிறது. அதை அவன் விரும்பவில்லை. தான் பெரிய வேலைக்குப் போக வேண்டும் எனக் கனவு காணுகிறான். எதிர்பாராமல் தந்தை உடல்நலமற்றுப் போகவே உடனிருந்து உதவி செய்ய வேண்டிய சூழல் ஏற்படுகிறது
நாவலில் எனக்கு மிகவும் பிடித்தமான பகுதி இதுவே. நகரில் படித்து முடித்துவிட்டு சொந்த ஊரில் சொந்த வீட்டில் நாட்களைக் கழிப்பதைப் பற்றிய அந்தப் பகுதி என்றைக்கும் பொருந்தக்கூடியது. கிராம வாழ்க்கை அவனுக்குச் சலிப்பூட்டுகிறது. என்ன வேலைக்குப் போவது என்று தெரியவில்லை. ஆனால் மனதில் பெரிய கனவு இருக்கிறது. அவன் பட்டம் வாங்கியதற்காக வீட்டோர் விருந்து கொடுக்க ஆசைப்படுகிறார்கள். அவன் அதை விரும்பவில்லை. படித்து முடித்தவுடன் திருமணம் செய்துவிட வேண்டும் எனப் பெற்றோர் நினைக்கிறார்கள். அதையும் ஏற்கவில்லை. இந்தக் குழப்பமான நாட்களை நாட்சுமே சோசெகி மிகவும் உணர்வுப்பூர்வமாக எழுதியிருக்கிறார். வேலை தேட உதவி கேட்டு சென்ஷிக்குக் கடிதம் எழுதுகிறான். அவரிடமிருந்து பதில் வரவில்லை. அது ஏமாற்றமளிக்கிறது. உலகைப் புரிந்து கொள்ள முயலும் அந்தப் புள்ளி இளைஞனின் வாழ்வில் முக்கியமானது. அதைச் சரியாக, துல்லியமாகப் பதிவு செய்திருப்பதே நாவலின் சிறப்பு
நாவலின் இரண்டாம் பகுதியில் அவனது தந்தையும் சென்ஷியும் இருவேறு நிலை கொண்ட முதியவர்களாகச் சித்தரிக்கப்படுகிறார்கள். உடல்நலமற்ற சூழலிலும் குடும்பத்தின் பொருட்டு வேலைகளைத் தொடரவே அவனது தந்தை முயல்கிறார். ஆனால் உதவி கேட்டு எழுதிய கடிதங்களைக் கூடப் புறக்கணிக்கிறார் சென்ஷி. அது ஏன் என்று அவனுக்குப் புரியவில்லை.
ஒரு நாள் சென்ஷியிடமிருந்து ஒரு பெரிய கடிதம் வருகிறது. இந்தக் கடிதம் உன்னிடம் சேர்வதற்குள் நான் இவ்வுலகை விட்டுச் சென்றுவிடுவேன் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. பயந்து போன சோசெகி அவசரமாக டோக்கியோ புறப்படுகிறான்
சென்ஷியின் கடிதமும் அவரது சொந்த வாழ்க்கையில் நடந்த நிகழ்வுகளும் மூன்றாவது பகுதியாக விரிகிறது. கடந்த காலக் கதையின் மூலம் நிகழ்கால முடிச்சுகள் அவிழ்க்கப்படுகின்றன.
நாவலின் ஒரு பகுதியில் ஜப்பானின் மன்னர் இறந்து போனதை மக்கள் எவ்வாறு பெருந்துக்கமாக அனுஷ்டித்தார்கள் என்பதை விவரித்துள்ளார். அதில் மன்னரின் மரணத்தைத் தாங்க முடியாமல் தளபதி நோகி மாரேசுகே தற்கொலை செய்து கொண்டதை அறிந்து மக்கள் நெகிழ்ந்து போனதையும் பதிவு செய்திருக்கிறார்.
நாவலில் இரண்டு குடும்பங்கள் விவரிக்கப்படுகின்றன. சென்ஷியிடம் குடும்பம் எரிமலையைப் போலத் தோற்றத்திற்கு அமைதியாகவும் உள்ளே கொந்தளிப்பான நிலையிலும் இருக்கிறது. ஆனால் கதைசொல்லியின் குடும்பம் வெளிப்படையாக, வாழ்வின் அடுத்த நிலைக்குப் போக முயற்சிக்கும் போராட்டத்தில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டதாக இருக்கிறது. மாறிவரும் ஜப்பானின் வாழ்க்கை முறையைத் தான் சோசெகி கவனப்படுத்துகிறார். குறிப்பாகப் பெண்கள். மற்றும் குடும்ப உறவில் ஏற்பட்ட மாற்றம். தேசத்தின் எதிர்காலமும் தனிநபரின் எதிர்காலமும் கேள்விக்குள்ளாகும் நிலை பற்றி எழுதியிருக்கிறார்.
இந்த நாவலை வாசிக்கும் போது தஸ்தாயெவ்ஸ்கியின் Poor Folk நாவல் நினைவிற்கு வந்தது. அது ஒரு எபிஸ்டோலரி நாவல் — அதாவது, கதாபாத்திரங்களுக்கு இடையே கடிதங்களின் வழியாகச் சொல்லப்பட்ட கதை. இந்த நாவலில் சென்ஷியின் கடிதம் வழியே தான் முன்கதையின் இடைவெளிகள் நிரப்படுகின்றன. அந்தப் பகுதியில் வரும் கே தஸ்தாயெவ்ஸ்கியின் கதாநாயகனை நினைவுபடுத்துகிறான். சென்ஷியிடமும் அந்தச் சாயலே வெளிப்படுகிறது.
சென்ஷியை முதன்முறையாகச் சந்தித்த போதே அவரை எங்கேயோ முன்பு பார்த்திருப்பது போலச் சோசெகி உணருகிறான். அவரோ அதன் முன்பு அவனைக் கண்டதேயில்லை என்கிறார். புரிந்து கொள்ள முடியாத அந்த உணர்வு தான் அவனை அவருடன் நெருக்கமாக்குகிறது
இதே போலத் தான் Zorba The Greek நாவலில் இளைஞனும் ஜோர்பாவும் எதிர்பாராமல் சந்தித்துக் கொள்கிறார்கள். ஆனால் ஜோர்பா குற்றவுணர்வைக் கடந்தவன். கொண்டாட்டமே வாழ்க்கையாகக் கொண்டவன். சென்ஷி இதற்கு எதிரான மனப்போக்கு கொண்டவர்.
ஐரோப்பிய இலக்கியங்களை ஆழ்ந்து கற்றவர் என்பது சொசேகியின் எழுத்துகளை வாசிக்கும் போது நன்றாகத் தெரியவருகிறது. குறிப்பாக சுயசரிதை பாணியிலான எழுத்துமுறையை அவர் ஆங்கில இலக்கிய எழுத்துகளிடமிருந்து பெற்றுக் கொண்டிருக்கிறார்.
இந்த நாவலை யார் மொழிபெயர்ப்புச் செய்தார்கள் என்று முகப்பில் இல்லை. கலைக்கதிர் வெளியீடு என்று மட்டுமே உள்ளது. விலை 1 ரூபாய். அணிந்துரை எழுதியுள்ள ஏ.எல் முதலியார் நாவலினை பற்றி ஒரு வரி கூட எழுதவில்லை. பொதுவாகத் தென்னிந்திய மொழிகள் புத்தக டிரஸ்ட் செயல்பாட்டினைப் பற்றியே எழுதியிருக்கிறார். சென்னைப் பல்கலைக்கழக துணைவேந்தராக இருந்தார் என்பதால் இந்த அணிந்துரையை வாங்கியிருக்கக் கூடும்.

ஆரம்பப் பள்ளி ஆசிரியராகப் பணியாற்றிய நாட்சுமே சோசெகி கல்வி அமைச்சகத்தின் நிதி நல்கையுடன் தனது 34வது வயதில் லண்டன் சென்று கல்வி பயின்றிருக்கிறார். அப்போது அவருக்குத் திருமணமாகி குழந்தையிருந்தது. மனைவி கர்ப்பிணியாக இருந்தார். அவர்களைத் தனியே விட்டு சோசெகி லண்டனில் இரண்டு ஆண்டுகள் ஆங்கில இலக்கியம் பயின்றிருக்கிறார். தனது லண்டன் நாட்கள் குறித்து விரிவாக நாட்குறிப்பில் பதிவு செய்திருக்கிறார். லண்டன் வாழ்க்கையைப் பற்றிச் சைக்கிள் டயரிஸ் என்ற பெயரில் தொடராகவும் எழுதியிருக்கிறார்
லண்டனிலிருந்த நாட்களில் ஏற்பட்ட தனிமை மற்றும் மனக்குழப்பங்கள் அவரை மனச்சிதைவு கொண்டவராக்கியது. அவரது மகிழ்ச்சியற்ற பால்ய காலம் கசப்பான நினைவுகளாக மனதில் படிந்திருந்தது. பாதுகாப்பின்மை, அவநம்பிக்கை, அதீத தனிமை, புறக்கணிப்பட்ட நிலை இவற்றால் அதிகம் பாதிக்கப்பட்டவராக இருந்தார். அந்த மனநிலை தான் அவரது எழுத்திலும் வெளிப்பட்டது
கிராமப்புற நினைவுகளை எழுதுவதிலிருந்து நகர்ப்புற நினைவுகளை எழுதுவதை நோக்கி நகர்ந்ததே நவீன ஜப்பானிய இலக்கியம் செய்த முதற்பணி. இந்த நாவலிலும் அதை நாம் காண முடிகிறது. மாறிவரும் டோக்கியோவும் அதன் புதிய புறநகர் வாழ்க்கையும் அவரது நாவல்களில் இடம் பெற்றுள்ளது.
தனது சொந்த தந்தையை மிகவும் வெறுத்தார் சொசேகி. அத்துடன் தனது சிறுவயதில் இரண்டு மூத்த சகோதரர்களை இழந்தவர் என்பதால் அந்த நினைவுகள் அவரை வாழ்நாள் முழுவதும் அலைக்கழித்தன. வாழ்க்கைக்கும் சாவுக்கும் இடையில் எங்கோ சுற்றிக்கொண்டிருக்கும் விசித்திரமான நிலையைத் தான் உணர்ந்தாக எழுதியிருக்கிறார்
நமக்கு எவ்வளவு வயதானாலும், நாம் இளமையின் உணர்வை முழுவதுமாக இழப்பதில்லை என்கிறார் ஆர்.எல். ஸ்டீவன்சன். அந்த வரித் தன்னை மிகவும் பாதித்தது எனும் சோசெகி அதைச் சென்ஷியின் வழியே வெளிப்படுத்தியிருக்கிறார்
நாட்சுமே சோசெகி நாவலாசிரியராக மட்டுமின்றி ஜென் கவிஞராகவும் சித்திர எழுத்துக்கலைஞராகவும் விளங்கினார். அவரது கோகொரோ நாவல் மூன்றுமுறை திரைப்படமாக எடுக்கப்பட்டிருக்கிறது. ஆங்கில மொழிபெயர்ப்புடன் ஒப்பிட்டால் தமிழில் கதையை மட்டுமே சொல்லியிருக்கிறார்கள் என்பதைப் புரிந்து கொள்ளலாம். ஆனாலும் 1959ல் இப்படி ஒரு ஜப்பானிய நாவலைத் தமிழில் மொழிபெயர்த்து வெளியிட்டிருக்கிறார்கள் என்பதை நிச்சயம் பாராட்டவே வேண்டும்.
நித்தியத்துவத்தின் அடையாளம்
The Adoration of the Magi என்ற இயேசுவின் பிறப்பைக் குறித்த ஓவியத்தைப் பார்த்துக் கொண்டிருந்தேன். 1440 ஆண்டு வரையப்பட்ட அந்த ஓவியத்திலுள்ள மயில் என்னை மிகவும் கவர்ந்தது. மாட்டுத்தொழுவம் மீது அமர்ந்துள்ள அந்த மயிலின் தோற்றம் அலாதியானது.

இந்திய மினியேச்சர் ஓவியங்களில் மயில் மிக அழகாகச் சித்தரிக்கப்படுவதைக் கண்டிருக்கிறேன். குறிப்பாக ராஜஸ்தானிய நுண்ணோவியங்களிலும், மொகலாய நுண்ணோவியங்களிலும் மயில் முக்கியமான இடத்தைக் கொண்டிருக்கிறது.
இயேசுவின் பிறப்பை விவரிக்கும் இந்த ஓவியத்தில் மயில் இடம்பெற்றிருப்பது தனிக்கவனத்தைப் பெறுகிறது.
கலை விமர்சகரான ரஸ்கின் சொல்கிறார்
“Great nations write their autobiographis in three manuscripts, the book of their deeds the book of their words and the book of their art. Not one of these books can be understood unless we read the two others, but of the three the only trustworthy one is the last”
அந்த வகையில் கலையின் வழியே தான் ஒரு தேசம் தன்னை அடையாளப்படுத்திக் கொள்கிறது. குறிப்பாகப் பிரம்மாண்டமான தேவாலயங்களைக் கட்டியதும் அதில் புகழ்பெற்ற ஓவியர்களின் ஓவியங்களை வரையச் செய்ததும் சிற்பங்களைச் செய்து நிறுத்தியதும் சமய வளர்ச்சியில் மிக முக்கியப் பங்கு வகித்திருக்கிறது
இதைப் பற்றிக் குறிப்பிடும் கலைவிமர்சகர் கென்னத் கிளார்க், மேற்கத்திய கலைவளர்ச்சியில் தேவாலயங்களை உருவாக்கியது முக்கியமான இடத்தை வகிக்கிறது. ஆரம்பக் காலத் தேவாலயங்களில் சிலுவையில் அறைப்பட்ட இயேசுவின் உருவம் முதன்மையாக இடம்பெறவில்லை. அவர் நிகழ்த்திய அற்புதங்களே முக்கியமாக இடம்பெற்றிருந்தன. பத்தாம் நூற்றாண்டின் பின்பே சிலுவையில் அறையப்பட்ட இயேசு முதன்மையாகச் சித்தரிக்கப்பட்டார் என்கிறார்.

கிறிஸ்துவ ஓவியங்களில் மயில் நித்தியத்துவத்தின் அடையாளமாகச் சித்தரிக்கப்படுகிறது. கிறிஸ்துவின் உயிர்த்தெழுதலைக் குறிப்பதற்காகவும் மயில் உருவத்தை வரைகிறார்கள். நீர் குடுவைகளில் மயிலின் உருவம் செதுக்கப்படுவதற்கான காரணம் நித்தியத்துவத்தின் நீரை அருந்துகிறோம் என்ற உணர்வு ஏற்படுவதற்காகவே. மயில் தோகையிலுள்ள கண்கள் கடவுளின் முடிவில்லாத கண்களை அடையாளப்படுத்துவதாகவும் கூறுகிறார்கள்.
நித்தியத்தின் அடையாளமாக மயில் சித்தரிப்படுவது பொருத்தமானதே.
என் பால்ய வயதில் கரிசல் நிலத்தில் மயில் தனியே அலைந்து கொண்டிருப்பதைக் கண்டிருக்கிறேன். அடிவானத்தினை நோக்கி மயில் தனியே செல்லும் காட்சி மனதில் அழியாப் பிம்பமாக உறைந்துள்ளது.
இயேசுவின் பிறப்பை அறிந்து அவருக்கான காணிக்கைகளுடன் மூன்று ஞானியர் கிழக்கிலிருந்து வருகை தந்தார்கள் என்கிறது பைபிள். அந்தக் காட்சியைத் தான் இந்த ஓவியம் சித்தரிக்கிறது. ஓவியத்தின் வண்ணங்களும் உருவங்களும் தனித்துவமாக உள்ளன.

தொழுவத்திலுள்ள மாட்டின் கண்களில் வெளிப்படும் பாவம். கன்னிமேரியின் சாந்தம். இயேசுவின் பிறப்பைக் காணவரும் மக்களின் முகத்தில் வெளிப்படும் ஆனந்தம், பணிவு, தொழுது நிற்கும் நிலை.வியப்பு. இரண்டு குதிரைகள் ஒன்றையொன்று தொட்டுக் கொண்டு நிற்கும் காட்சி. மடங்கிய நிலையில் வரையப்பட்ட பாதங்கள். ஆடைகளின் மடிப்பு, சிவப்பு மற்றும் நீலநிறத்தின் வசீகரம். இயேசுவின் கையிலுள்ள மாதுளை. அதன் முத்துகள் என மிகவும் நுணக்கமாக வரையப்பட்டிருக்கிறது.
டிரெஸ், ரேயெஸ், மேகோஸ் என்ற அந்த மூன்று ஞானியர் வருகையைப் பற்றி நான் ஒரு குறுங்கதையை எழுதியிருக்கிறேன். அக்கதையில் அவர்கள் இயேசு சிலுவையில் அறையப்படுவதற்கு முந்திய இரவு மீண்டும் வருகை தருகிறார்கள். இயேசுவுடன் உரையாடுகிறார்கள்.
மூன்று ஞானியரின் வருகை சித்தரிக்கும் இந்த ஓவியத்தை வரைந்தவர் ஃப்ரா ஏஞ்சலிகோ . அவர் இந்த ஓவியத்தை முழுமையாக வரைந்து முடிக்கவில்லை. அவரது மரணத்தின் சுமார் 20 ஆண்டுகளுக்குப் பிறகு, அதை முழுமையாக்கியவர் ஃப்ரா பிலிப்போ லிப்பி என்கிறார்கள்.
கிறிஸ்துவச் சமயத்துறவியாக வாழ்ந்த இருவரும் சிறந்த கலைஞர்களாக இருந்திருக்கிறார்கள் இந்த ஓவியத்தில் ஒளியை நேர்த்தியாகப் பயன்படுத்தி, நிழலுடன் கூடிய மாதிரி முப்பரிமாணத்தை உருவாக்கியிருக்கிறார்கள். .

ஹரப்பா தொல் சின்னங்களிலே மயில் காணப்படுகிறது. முருகனின் வாகனமாகவும், கம்பீரம், காதல் மற்றும் தெய்வீகத்தின் அடையாளமாகவும் மயில் ஓவியங்களில் சித்தரிக்கப்படுகிறது. காஞ்சிபுரத்தைச் சேர்ந்த நெசவாளர்கள் தாங்கள் நெய்யும் புடவைகளில் மயில் உருவத்தை அதிகம் பயன்படுத்தியுள்ளனர். புடவையின் பார்டர்களிலும், பல்லுவிலும், அதே போல் புடவையின் உடல் முழுவதும் சிறிய வடிவங்களில் மயிலைக் காணலாம். மயில் சக்கரம் திருமணப் புடவைகளுக்கு என்றே வடிவமைக்கப்படுகிறது.

புத்தர் முந்தைய பிறவியில் தங்க மயிலாக இருந்தார் என்கிறது புத்த ஜாதகக்கதை. ஆகவே பௌத்த ஓவியங்கள் மற்றும் சிற்பங்களிலும் மயில் தொடர்ந்து இடம் பெறுகிறது. சாஞ்சி ஸ்தூபியின் வடக்கு நுழைவாயிலில் மயிலின் உருவம் செதுக்கப்பட்டிருக்கிறது.
மயில் இந்தியாவைப் பூர்வீகமாகக் கொண்டது, இந்திய வர்த்தகர்களால் பண்டைய பாபிலோனுக்குக் கொண்டு செல்லப்பட்டது என்கிறார்கள்.
அலெக்சாண்டரின் வெற்றிக்குப் பின்னரே கிரேக்கர்கள் மயிலைப் பற்றி அறிந்தனர். மயிலை அரிஸ்டாட்டில் பாரசீக பறவை என்று குறிப்பிடுகிறார். கிரேக்கர்கள் மயிலை தங்களின் தெய்வீக பறவையாகச் சேர்த்துக் கொண்டார்கள். வான்கடவுளாகக் கருதப்படும் கிரேக்கத் தெய்வமான ஹேராவின் தேரை மயில்கள் இழுத்துச் செல்கின்றன.
ரோமானியர்கள் குறிப்பாக மயிலை அதன் அழகிற்காக மட்டுமின்றி ருசிமிக்க உணவு என்பதாலும் நேசித்தார்கள். ரோமானியர்கள் தங்கள் பளிங்கு மற்றும் ஓவியங்களில் மயிலை அலங்காரமாகப் பயன்படுத்தினர்.
கிரேக்கத் தத்துவஞானியும் கணிதவியலாளருமான பித்தகோரஸ், ஹோமரின் ஆன்மா ஒரு மயிலுக்குள் புகுந்து கொண்டது என்று எழுதியிருக்கிறார்.
சொர்க்கத்தில் நுழைவதற்குச் சாத்தனுக்கு உதவியதற்காக மயில் தண்டிக்கப்பட்டது அதன் காரணமாகவே அது தன் குரலின் இனிமையை இழந்து போனது. என்றொரு கதையும் இருக்கிறது

The Adoration of the Magi யை புகழ்பெற்ற ஓவியரான ரஃபேல் 1502 இல் வரைந்திருக்கிறார். ரஃபேலின் பாணி மிகவும் மாறுபட்டது. அவரது ஓவியத்தில் மயில் இடம்பெறவில்லை. அதில் வெள்ளைக் குதிரையும் கறுப்பு நாய் ஒன்றும் மிகுந்த அழகுடன் வரையப்பட்டிருக்கிறது. இதில் மாட்டுத் தொழுவம் இடிந்த நிலையில் காணப்படுகிறது. மரியாளின் முகபாவமும் துறவிகளின் முகபாவமும் ஃப்ரா ஏஞ்சலிகோ ஓவியத்திலிருந்து மாறுபட்டிருக்கிறது. குழந்தை இயேசுவைக் காணக் கூடியுள்ளவர்கள் பிரகாசமான வண்ண ஆடைகளை அணிந்திருக்கிறார்கள். ஓவியத்தில் ஒரு மேய்ப்பன் ஒரு ஆட்டுக்குட்டியைப் பிடித்துக்கொண்டு பக்கத்தில் நிற்கிறான், அது இயேசுவின் அடையாளமாகச் சித்தரிக்கப்படுகிறது.
ஆட்கள் மற்றும் நாய், குதிரையின் மென்மையான நிழல்களை வரைந்திருப்பது தான் ரஃபேலின் தனித்துவம். பயன்படுத்திய நீல வண்ணம் இதில் இடம்பெறவில்லை.

ஃப்ரா ஏஞ்சலிகோ வரைந்த ஓவியத்திலுள்ள கறுப்பு குதிரையின் கண்கள் மற்றும் பற்களைப் பாருங்கள். எவ்வளவு நுணுக்கமாக வரையப்பட்டிருக்கிறது. இயேசுவைக் காணக்கூடியுள்ள மனிதர்களின் விதவிதமான தோற்றம். உயர்த்திய கைகள். மார்பின் குறுக்கே குவிந்த கைகள். விரிந்த விரல்கள். சுருள் கூந்தல்.அவிழ்ந்த, இறுக்கமான தலைப்பாகைகள் ,சோகமும் தவிப்புமான முகங்கள். கூர்மையான நாசி. எந்த இருவரின் முகபாவமும் ஒன்று போல இல்லை.

இடிபாடுகளில் நிற்கும் பணியாளர்களின் ஒற்றை ஆடை. கூடியுள்ள அந்த முகங்களில் வெளிப்படும் உணர்ச்சி அபாரமாக வயைரப்பட்டிருக்கிறது. இரண்டு குதிரைகளின் இடைவெளியில் தெரியும் முகங்களைப் பாருங்கள். குறிப்பாக மேல்நோக்கிய அந்தக் கண்கள் அபூர்வமாக வரையப்பட்டிருக்கின்றன.

மூன்று ஒட்டகங்களை வரைந்துள்ள விதமும் சிறப்பானது. குறிப்பாக அதன் மூக்கு மற்றும் முகபாவம் மிகவும் அழகாக உள்ளது.

பகட்டான உடைகள். நெற்றியில் அணிந்துள்ள மாலையிலுள்ள முத்து மணிகள். தங்க ரேகைகள் கொண்ட தலையலங்காரம். இயேசுவுடன் புனிதமேரி அமர்ந்துள்ள விதம். காலடியில் முளைத்துள்ள காட்டுப்பூக்களின் வசீகரம் என இந்த ஓவியம் மிகுந்த கலைநேர்த்தியுடன் வரையப்பட்டிருக்கிறது
.

ஆழ்ந்து கேட்கக் கேட்க இசை நமக்குள் விரிவு கொள்வதைப் போன்றதே ஓவியங்களும். அதை ரசிக்கத் துவங்கியதும் ஓவியத்தின் லேயர்கள் இதழ் இதழாக விரியத் துவங்குகின்றன. ஓவியத்திற்குள் நாம் ஒரு பறத்தலை மேற்கொள்ள வேண்டியிருக்கிறது. அப்படி நுண்மையாக அவதானிக்கும் போது அதன் நிகரற்ற அழகு உணரப்படுவதுடன் கலைஞனின் மேதமையும் நமக்குப் புலப்படுகிறது.
•••
March 17, 2022
அடங்க மறுத்த குதிரைகள்
பிரெஞ்சு ஓவியரான ரோசா பான்ஹர் விலங்குகளை வரைவதில் தேர்ச்சிபெற்றவர். குறிப்பாகக் குதிரைகளையும் சிங்கங்களையும் ஆட்டு மந்தையினையும் மிக அழகான ஓவியங்களாக வரைந்திருக்கிறார். பத்தொன்பதாம் நூற்றாண்டின் மிகவும் பிரபலமான பெண் ஓவியராகக் கொண்டாட்டப்பட்ட. இவரது இருநூறாவது பிறந்த நாளை கொண்டாடும் விதமாக நேற்று கூகிள் தனது முகப்பில் இவரது உருவத்தை வைத்திருந்தது. இவரது புகழ்பெற்ற குதிரை சந்தை என்ற ஓவியத்தை நான் நியூயார்க்கில் நேரில் பார்த்திருக்கிறேன். வியப்பூட்டும் ஒவியமது.

ரோசா பான்ஹரின் தந்தை ஒரு ஒவியர் என்பதால் சிறுவயதிலே ஓவியம் கற்றுக் கொள்ளத் துவங்கினார். கற்றல் குறைபாடு கொண்ட குழந்தையாக இருந்தவர் என்பதால் பேசக் கற்றுக்கொள்வதற்கு முன்பு பென்சில் மற்றும் பேப்பரைக் கொண்டு மணிக்கணக்கில் ஓவியம் வரைந்திருக்கிறார். பள்ளியில் சேர்த்து அவரைப் படிக்க வைப்பது சிரமமாக இருந்தது. ஆகவே வீட்டிலே பாடம் நடத்தியிருக்கிறார்கள்.
தனது தாய் அரிச்சுவடி கற்றுத்தரும் போது ஒவ்வொரு எழுத்திற்கும் அருகிலே ஒரு விலங்கின் உருவத்தை வரைவதற்குப் பயிற்சி கொடுத்தார். இதனால் எழுத்து மனதில் ஆழமாகப் பதிந்து போனதுடன் விலங்குகளின் உருவத்தினை வரைவதிலும் தனித்த ஈடுபாடு உருவாகியது என்கிறார் ரோசா.
தந்தையின் வழி காட்டுதலில் ஒவியம் பயின்ற ரோசா அவரது ஆலோசனைப் படி தினமும் லூவர் ம்யூசியத்திற்குச் சென்று ஓவியம் பயின்றிருக்கிறார். பின்பு தந்தை நடத்திய ஒவியப்பள்ளியில் இணைந்து பணியாற்றியிருக்கிறார்.
இருநூறு வருஷங்களுக்கு முன்பு ஓவிய உலகில் பெண்கள் தனித்துப் புகழ்பெறுவது பெரும் சவாலாக இருந்தது. அதை வெற்றிகரமாக முறியடித்தவர் ரோசா.

புகழ்பெற்ற ஒவியராக இருந்த போதும் சமகால ஒவியர்களுடன் இணைந்து அவர் செயல்படவில்லை. தனித்து வாழ்ந்த அவர் லெஸ்பியன் உறவில் வாழ்ந்திருக்கிறார். இது அந்த நாளில் சர்ச்சைக்குரியதாக விளங்கியது. தனது சொந்த வாழ்க்கையைப் பற்றி விமர்சிக்க எவருக்கும் உரிமையில்லை என்ற ரோசா தனது தோழி நதாலி மைக்காஸுடன் நாற்பது ஆண்டுகள் இணைந்து வாழ்ந்திருக்கிறார்
ரோசாவின் தந்தை ஆஸ்கார்-ரேமண்ட் இயற்கை மற்றும் உருவப்படம் வரைவதில் தேர்ந்தவர். ஆகவே மகளின் ஒவியத்திறமையை வளர்த்தெடுக்க விரும்பினார். எல்லா உயிர்களுக்கும் ஆன்மா இருக்கிறது. அவற்றை நாம் நேசிக்க வேண்டும் என்ற தந்தையின் அறிவுரையே தன்னை விலங்குகளை நேசிக்கவும் ஒவியம் வரையவும் செய்தது என்கிறார் ரோசா
சிற்பம் ஓவியம் மற்றும் பல்வேறு வகைக் கலைச்செயல்பாடுகளை ஆழ்ந்து கற்றுக் கொண்ட ரோசா குதிரைகள் செம்மறி ஆடுகள் முயல்களை ஆசையாக வரைந்திருக்கிறார்.

குதிரை சந்தையை நேரில் பார்வையிட வேண்டும் என்பதற்காக ஆணைப்போல உடை அணிந்து கொண்டு தலைமுடியை வெட்டிக் கொண்டு போலீஸ் அனுமதியோடு குதிரை சந்தையில் வலம் வந்திருக்கிறார். இது போலவே இறைச்சிக்கூடங்களைப் பார்வையிட்டு விலங்கின் கண்கள் மற்றும் அதன் உடலமைப்பு. ரோமங்கள். கால் குளம்புகளை அவதானித்ததாகவும் ரோசா கூறுகிறார்
பாரீஸில் நடைபெறும் குதிரை சந்தை மிகவும் புகழ்பெற்றது. அந்தச் சந்தையில் பல்வேறு ரகக் குதிரைகளை நேரில் கண்டறிந்து குறிப்புகளை உருவாக்கிக் கொண்டதுடன் குதிரை வியாபாரிகள். பிரபுக்கள். குதிரை வைத்தியர்கள், சந்தையிலுள்ள உணவகம். கூலியாட்கள் எனப் பலதரப்பட்ட மனிதர்களையும் அவர் அவதானித்து ஓவியம் வரைந்திருக்கிறார்
பொதுவெளியில் ஆண் உடையை அணிந்து நடமாடவே ரோசா விரும்பினார். அவரது ஒவியங்களைக் காணும் எவரும் அது ஒரு பெண்ணால் வரையப்பட்டது என நினைக்கக்கூடாது என்பதில் கவனமாக இருந்தார் என்கிறார்கள். ஆண்களுக்குக் கிடைக்கும் அதிகாரம் மற்றும் சுதந்திரத்துடன் தான் வாழ விரும்பியதாகவும் ரோசா கூறுகிறார்.
ஒரு பெண் இப்படி ஆண் உடைந்து அணிந்து நடமாடுவது அந்நாளில் குற்றமாகக் கருதப்பட்டது.ஆகவே அவர் காவல்துறையில் விண்ணப்பித்து இதற்காகச் சிறப்பு அனுமதி பெற்றிருக்கிறார்

Ploughing in the Nivernais என்ற அவரது புகழ்பெற்ற ஓவியம் காளைகள் நிலத்தை உழுவதைச் சித்தரிக்கிறது. இலையுதிர் கால நிலத்தின் இயல்பும் காளைகளின் கடிமனான உழைப்பும் நிலப்பரப்பின் அழகினையும் ஓவியம் சிறப்பாகப் பதிவு செய்திருக்கிறது. காளைகளின் வால்களைப் பாருங்கள்.சீரற்ற ரோமங்களுடன் அவை காற்றில் அசைந்தாடுகின்றன. மாட்டின் வாயிலிருந்து நீர் ஒழுகுகிறது. கால்களை மடக்கி முன்னேறும் அதன் விசையும் கண்களில் வெளிப்படும் பாவமும் மிக நேர்த்தியாக உள்ளன. நிலத்தினை உழுபவர் அணிந்துள்ள தொப்பி மற்றும் உடைகள் சூரிய ஒளியில் மாட்டின் நிழல் விழும் விதம் யாவும் மிக நுணுக்கமாக வரையப்பட்டுள்ளன.
ஓவியத்தில் மனிதர்களை விடவும் காளைகளே பிரதானமாக வரையப்பட்டுள்ளன. உழவு செய்யப்பட்ட நிலம் ஒரு குறியீடு போலவே தோற்றமளிக்கிறது. ஓவியத்தின் தெளிவும் வெளிச்சமும் டச்சு ஓவிய பாணியில் உருவானது போலிருக்கிறது.

The Horse Fair என்ற அவரது புகழ்பெற்ற ஓவியம் 1853 இல் முதன்முதலில் காட்சிக்கு வைக்கப்பட்டது.
8 அடி உயரமும் ஹ 16.5 அடி நீளமும், கொண்ட பிரம்மாண்டமான ஓவியம் குதிரை சந்தையில் வியாபாரிகள் குதிரைகளை விற்பனை செய்வதை ஓவியம் சித்தரிக்கிறது. சல்பெட்ரியரின் பிரபல மருத்துவமனையைப் பின்புலத்தில் காணமுடிகிறது..
1850 கோடையிலிருந்து 1851 இன் இறுதி வரை ஒன்றரை ஆண்டுகள் வாரம் இரண்டு முறை குதிரை சந்தையில் ரோசா கலந்து கொண்டார். அந்த அவதானிப்பு தான் இந்த ஓவியத்தை உயிருள்ளதாக மாற்றியிருக்கிறது.
கட்டுப்பாடில்லாத குதிரைகளின் இயக்கம் மற்றும் கம்பீரம், குதிரையோட்டிகளின் லாவகம். குதிரைகளைச் சுற்றியுள்ள ஒளியின் இயக்கம்.. குதிரைகளின் துள்ளல் அதன் கண்களில் வெளிப்படும் உணர்ச்சி, குதிரை ரகங்களின் தனித்துவம் என இந்த ஓவியத்தினை மிகவும் நுணுக்கமாக வரைந்திருக்கிறார்.
வெள்ளைக் குதிரையின் திமிறல் அதைப் பிடித்து அடக்குபவரின் திறன். கறுப்புக்குதிரையில் அமர்ந்துள்ள நபரின் வேகம். வால்கட்டப்பட்ட குதிரையின் புட்டத்தின் புள்ளிகள். குதிரைகளின் நிழல் விழும் அழகு. வேகமும் திமிறலும் உற்சாகமும் கொண்ட அந்தக் காட்சியினை ஆழ்ந்து காணக் காண நமக்கு அதன் ஓசைகள் கேட்கத் துவங்குகின்றன. குதிரைகளின் கனைப்பு ஒலியை நாம் கேட்க முடியும்.
1850 களில் ஆங்கிலம் மற்றும் ஸ்காட்டிஷ் கிராமப்புறங்களுக்குச் சுற்றுப்பயணம் செய்யும் வாய்ப்பை பெற்ற ரோசா அங்கே தனது எதிர்கால ஓவியங்களுக்குத் தேவையான பாடங்களாகப் பிரிட்டிஷ் விலங்குகளின் பல்வேறு இனங்களைப் பற்றி ஆய்வு செய்தார். பைரனீஸ் பயணத்திலிருந்து திரும்பும் போது நீர் நாரையை அவர் கொண்டு வந்திருந்தார். தனக்காக அவர் உருவாக்கிக் கொண்ட கலைக்கூடம் இயற்கை காப்பகம் போலவே அமைந்திருந்தது

“Sheep by the Sea” என்ற ஓவியம் 1855 கோடையில் ஸ்காட்டிஷ் ஹைலேண்ட்ஸ் வழியாக மேற்கொண்ட பயணத்தின் சாட்சியாக வரையப்பட்டிருக்கிறது. கடலின் நிறமும் ஆடுகளின் வண்ணமும் அபாரமாக வரையப்பட்டிருக்கின்றன. ஆட்டுக்குட்டியின் முகபாவம் எத்தனை மிருதுவாக, சாந்தமாக வரையப்பட்டிருக்கிறது என்பதைப் பாருங்கள். சீற்றமில்லாத கடலும் சாந்தமான ஆடுகளும் கனவுலகின் காட்சியினைப் போலவே தோன்றுகின்றன ரோசா பான்ஹரின் பாணி இயற்கை, கலை மற்றும் சமூகம் ஆகியவற்றுக்கு இடையேயான தொடர்பைக் கொண்டது. , நேர்த்தியான மென்மையுடன் வரையப்பட்ட அவரது ஓவியங்கள் விலங்குகளைப் பற்றிய ஓவிய வகைமையில் தனித்து அறியப்படுகின்றன.
1870களில் இருந்து, சிங்கங்களை ஆராயவும் அதன் இயக்கம் மற்றும் பண்புகளை அவதானிக்கவும் துவங்கிய ரோசா சிங்கங்களின் குடும்பத் தொகுப்புகளை வரைந்திருக்கிறார். தானே ஒரு பெண் சிங்கத்தை வளர்த்து வந்தார் ரோசா. பொதுவெளியில் சிங்கம் அதிகாரத்தின் அடையாளமாக முன்வைக்கப்படும் போது ரோசா அவற்றைத் தனித்துவமிக்கக் குடும்பத்தின் அடையாளமாக மாற்றிக் காட்டுகிறார். இதற்குச் சிறந்த உதாரணம் அவர் வரைந்த .The Lion at Home

தனது ஓவியங்களின் வழியாகக் கிடைத்த பெரும் செல்வத்தைக் கொண்டு வசதியான வாழ்க்கையை மேற்கொண்டார் ரோசா.
அவரது காலத்திலிருந்த மற்ற பெண் ஓவியர்களை விடவும் ஆழ்ந்த கலைத்திறனும் தனித்த பார்வையும் கொண்டிருந்த ரோசா விலங்குகளைத் துல்லியமாக உரிய உயரம் மற்றும் அளவுகளுடன் நேர்த்தியாக வரைந்திருக்கிறார்
Genius has no sex என்பதன் அடையாளமாக இன்று ரோசா பான்ஹர் உலகெங்கும் கொண்டாடப்படுகிறார்.
March 15, 2022
கதாவிலாசம் ஆங்கிலத்தில்
தமிழக அரசின் முன்னெடுப்பு காரணமாக சிறந்த தமிழ் படைப்புகள் ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்யப்பட்டு வெளியிடப்பட்டுள்ளன.
தமிழ்நாடு பாடநூல் நிறுவனம் சார்பில் இந்த ஆண்டு வெளியான நூல்களில் எனது கதாவிலாசமும் இடம்பெற்றுள்ளது.
கதாவிலாசம் ஆங்கிலப் பிரதிகளை வேண்டுகிறவர்கள் தமிழ்நாடு பாடநூல் நிறுவனத்தைத் தொடர்பு கொள்ளவும்


S. Ramakrishnan's Blog
- S. Ramakrishnan's profile
- 657 followers
