உலகெங்கும் விரியும் தமிழ்

(இந்து தமிழ் திசையில் வெளியானது.)

இணையத்தின் வருகையால் தமிழ் இலக்கியம் இன்று உலகம் முழுவதுமுள்ள தமிழர்களால் வாசிக்கப்படுகிறது. இரண்டாயிரத்திற்குப் பிறகான தமிழ் இலக்கியம் பன்முகத்தன்மை கொண்டது. தமிழகம் மட்டுமின்றி இலங்கை, மலேசியா, சிங்கப்பூர், கனடா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா, நார்வே, இங்கிலாந்து, ஜெர்மனி, சுவிட்சர்லாந்து, பர்மா, ஹாங்காங், வியட்நாம், ஆப்பிரிக்கா மொரிசீயஸ், பிரான்ஸ் எனச் சர்வதேச அளவில் வாழும் தமிழர்கள் இன்றைய தமிழ் இலக்கியத்தை வளர்த்தெடுப்பதில் முக்கியப் பங்கு வகிக்கிறார்கள்.

நோபல் பரிசு, புக்கர் விருது, டப்ளின் விருது எனப் புகழ்பெற்ற விருதுகளின் பட்டியலில் ஏன் தமிழ்ப் படைப்புகள் எதுவும் இடம்பெறுவதில்லை. முதற்காரணம் நாம் இன்றும் நமக்குள்ளாகவே பெருமையைப் பேசிக் கொண்டிருக்கிறோம். சர்வதேச அளவில் அதைக் கொண்டு செல்ல பெரிய முயற்சிகள் எடுக்கவில்லை. இன்றுவரை ஒரு தமிழ் நாவல் கூட இந்தியாவின் அங்கீகரிக்கப்பட்ட 23 ஆட்சி மொழிகள் யாவிலும் வெளியானதில்லை.

ஆண்டுதோறும் நூற்றுக்கும் மேற்பட்ட பிறமொழி படைப்புகள் தமிழில் மொழியாக்கம் செய்யப்படுகின்றன. ஆனால் தமிழிலிருந்து ஆங்கிலத்திற்கோ பிற மொழிகளுக்கோ செல்லும் படைப்புகளின் எண்ணிக்கை மிகமிகக் குறைவு.

சீன ஜப்பானிய இலக்கியங்கள் இன்று பெற்றுள்ள அங்கீகாரத்திற்கு முக்கியக் காரணம் அரசும், கல்வி நிறுவனங்களும், தனிப்பட்ட ஆய்வாளர்கள். மொழிபெயர்ப்பாளர்களின் தொடர் செயல்பாடுகளுமேயாகும். அத்தகைய பணியை நாமும் முன்னெடுக்கவேண்டும். குறிப்பாக அயல்நாடுகளில் செயல்பட்டு வரும் தமிழ்ச் சங்கங்கள். இலக்கிய அமைப்புகள் இதனைத் தனது முதற்கடமையாகச் செய்ய வேண்டும்.

இணையத்திலும் இதழ்களிலும் வெளியாகும் படைப்புகளைத் தொடர்ந்து வாசித்து வருபவன் என்ற முறையில் தமிழ் புனைகதையினை அடுத்த தளத்திற்குக் கொண்டு செல்லும் இளம்படைப்பாளிகள் சிலரை அறிவேன். இவர்களில் திருச்செந்தாழை, செந்தில் ஜெகன்நாதன், நரன், சுநில் கிருஷ்ணன், , சுஷில்குமார், போகன்சங்கர், மயிலன் ஜி சின்னப்பன், கமலதேவி, கலைச்செல்வி, ஐ.கிருத்திகா, சுரேஷ் பிரதீப், தூயன், கே.ஜே.அசோக்குமார், காளி பிரசாத், அகரமுதல்வன், கார்த்திக் பாலசுப்பிரமணியன், முத்துராசா குமார் முக்கியமானவர்கள்.

மரபாகத் தமிழ்ச் சிறுகதைகள் பேசிய விஷயங்களிலிருந்து விடுபட்டு புதிய கருப்பொருளுடன் புதிய வடிவத்துடன் புதிய கதைமொழியினை இவர்கள் முன்னெடுக்கிறார்கள். உலகமயமாக்கலின் விளைவாகவும் நுகர்வு பண்பாட்டின் காரணமாகவும் இன்றைய வாழ்க்கை சிதறடிக்கப்பட்டிருக்கிறது. பண்பாட்டுத் தொடர்ச்சி அறுபட்டு. மிதக்கும் உலகில் சஞ்சரிப்பது போல நம் வாழ்க்கை ஊசலாடுகிறது. எந்த நம்பிக்கைகள். விழுமியங்கள் இதுவரை வாழ்க்கையைக் காப்பாற்றி வந்ததோ அது பறிபோய்விட்டிருக்கிறது. ஆண் பெண் உறவு. பணியிட நெருக்கடிகள். குடும்ப அமைப்பின் வன்முறை. பாலியல் தேர்வு, புகலிட வாழ்வு, குற்றவுலகம் எனக் கிளைவிடும் இன்றைய வாழ்வின் திரிபை இன்றைய புனைகதைகள் பேசுகின்றன

தமிழகத்திற்கு வெளியிலிருந்து தமிழ் இலக்கியத்திற்குத் தொடர்ந்து பங்களித்து வரும் எழுத்தாளர்களில் ஆறு பேரைச் சிறப்பாகக் குறிப்பிட விரும்புகிறேன்.

சிங்கப்பூரைச் சார்ந்த எழுத்தாளர் சித்துராஜ் பொன்ராஜ், இதுவரை மூன்று நாவல்கள், இரண்டு சிறுகதைத் தொகுப்புகளை வெளியிட்டுள்ளார். சிங்கப்பூரின் சமகால வாழ்க்கை, கடந்தகால வரலாறு, மறைந்து போன நினைவுகள். சட்டவிரோத குடியேற்றம் எனப் பல்வேறு ஊடு இழைகளைக் கொண்டு சிறப்பான கதைகளை எழுதி வருகிறார்.

ரா.செந்தில்குமார் ஜப்பானில் வசிக்கிறார். இவரது இசூமியின் நறுமணம் என்ற சிறுகதைத் தொகுப்பு இரண்டு ஆண்டுகளின் முன்பு வெளியானது. இந்தத் தொகுப்பில் எட்டுக் கதைகள் ஜப்பானிய வாழ்க்கையைப் பேசுகின்றன. அதன் வழி நாம் அறியாத ஜப்பானிய பண்பாடு, நகரச்சூழல் மற்றும் சமகால நிகழ்வுகள் அழகாகப் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன.

கனகராஜ் பாலசுப்ரமணியம் கன்னடத்திலும் தமிழிலும் எழுதி வருகிறார். தற்போது சவுதி அரேபியாவில் ஆங்கில ஆசிரியராகப் பணியாற்றுகிறார்.. இவரது வாட்டர்மெலன் சிறுகதை தொகுப்பு முக்கியமானது. இவரது கதைகள் தமிழகத்திலிருந்து கர்நாடகாவிற்குப் புலம்பெயர்ந்த தமிழர்களின் கடந்த கால வாழ்க்கையினைப் பேசுகின்றன இவரது சமீபத்திய நாவலான அல்கொஸாமா அரபு தேசத்தில் வசிக்கும் பதூவீக்களின் வாழ்க்கையைச் சிறப்பாகப் பதிவு செய்திருக்கிறது.

மலேசியாவில் பிறந்து வளர்ந்தவர் ம.நவீன். இவரது சிறுகதைகள் மற்றும் நாவல்கள் மலேசியத் தமிழர்களின் இன்றைய வாழ்க்கைச் சூழலைச் சித்தரிக்கின்றன. இவரது சிகண்டி நாவல். திருநங்கைகளின் வாழ்க்கையை அசலாகப் பதிவு செய்திருக்கிறது. குறிப்பாகச் சமூகத்தில் அவர்களின் நிலை மற்றும் அவர்கள் எதிர்கொள்ளும் நெருக்கடிகள். பெருநகரத்தின் இருண்ட வாழ்வு என நுட்பமாக எழுதப்பட்டிருக்கிறது

எழுத்தாளர் ஹஸீன் கிழக்கு இலங்கையின் அக்கரைப்பத்தில் வசிப்பவர். சிறியதும் பெரியதுமாக எட்டுக் கதைகள், பூனை அனைத்தும் உண்ணும் என இரண்டு சிறுகதைத் தொகுப்புகளை வெளியிட்டுள்ளார். மிகக் குறைவாக எழுதுபவர். நான் போரின் குழந்தை எனும் ஹஸீன் அபூர்வமான வாசிப்பனுபவத்தைத் தரும் சிறுகதைகளை எழுதியிருக்கிறார்.

அமெரிக்காவில் வசிக்கும் நம்பி கிருஷ்ணன் சொல்வனம் இணைய இதழில் தொடர்ந்து எழுதி வருகிறார். பாண்டியாட்டம் என்ற கட்டுரை தொகுப்பினை வெளியிட்டிருக்கிறார். நோபல் பரிசு பெற்ற எழுத்தாளரான ரொபெர்த்தோ கலாஸ்ஸோ பற்றிய இவரது சமீபத்திய தொடர் கட்டுரை நிகரற்றது. உலக இலக்கியம் குறித்த இவரது பல்வேறு கட்டுரைகள் மிகச்சிறப்பானவை. ஆழ்ந்த வாசிப்பும், செறிவான புரிதலும். நேர்த்தியான எழுத்துமுறையும் சிறந்த மொழியாக்கமும் கொண்ட இவரது பங்களிப்பு மிகுந்த பாராட்டிற்குரியது.

உலகில் அன்பு குறையும் போது அதைத் தருவதற்காகப் புத்தகங்கள் எப்போதும் காத்துக் கொண்டிருக்கின்றன என்கிறார் உம்பர்தோ ஈகோ, புத்தக வாசிப்பு என்பது அன்பைப் புரிந்து கொள்வதும் பகிர்வதுமேயாகும்.

••

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on April 25, 2022 05:31
No comments have been added yet.


S. Ramakrishnan's Blog

S. Ramakrishnan
S. Ramakrishnan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow S. Ramakrishnan's blog with rss.