S. Ramakrishnan's Blog, page 88
July 5, 2022
இருண்ட நினைவுகள்
.
நண்பர் ஆம்பூர் அசோகன் ஜெர்மன் மற்றும் ஆஸ்திரிய இலக்கியங்களை மிகவும் விரும்பிப் படிக்கக்கூடியவர். சமீபத்தில் அவர் எனக்கு ஒரு புத்தகத்தைப் பரிசாக அனுப்பி வைத்திருந்தார்
What’s to Become of the Boy? Or, Something to Do with Books என்ற அந்தப் புத்தகம் ஜெர்மன் எழுத்தாளர் ஹென்ரிக் போலின் இளமைப்பருவம் பற்றியது. சுயசரிதையாக மட்டுமின்றி ஹிட்லரின் எழுச்சி மற்றும் நாஜிகளின் ஆதிக்கம் வளர்ந்த விதம் பற்றியும் எழுதியிருக்கிறார்.

82 பக்கங்களே கொண்ட சிறிய நூல். இதை வாசிப்பதன் வழியே ‘ஹென்ரிக் போலின் படைப்புகளைப் புரிந்து கொள்ள முடியும்.
ஹென்ரிக் போல் 1972 இல் இலக்கியத்திற்கான நோபல் பரிசைப் பெற்றவர் ஜெர்மனியின் கொலோனிலுள்ள ரோமன் கத்தோலிக்கக் குடும்பத்தில் பிறந்தவர் .

1981 இல் எழுதப்பட்ட இந்த நினைவுக்குறிப்புகள் பெரிதும் ஹென்ரிக் போலின் பள்ளி நாட்களைப் பற்றியது,
நாஜிகளால் புத்தகங்கள் எரிக்கப்பட்ட நிகழ்வைப் பற்றிய அவரது குறிப்பு முக்கியமானது. நூலகங்களிலும் தனிநபர் சேமிப்பிலுமிருந்து அரிய இலக்கிய நூல்களைப் பறிமுதல் செய்து கொண்டுவந்து பொது இடத்தில் வைத்துத் தீயிட்டதை அவர் கண்ணால் பார்த்திருக்கிறார். புத்தகங்களின் சாம்பல் காற்றில் பறந்ததைப் பற்றி அவர் எழுதியிருப்பது அதிர்ச்சி அளிக்கக்கூடியது 1930களில் ஹிட்லரின் இளைஞர் படையில் சேர போல் மறுத்துவிட்டார்.
கொலோன் பல்கலைக்கழகத்தில் ஜெர்மன் இலக்கியத்தில் ஆய்வு செய்வதற்கு முன்பாக அவர் சில காலம் ஒரு புத்தக விற்பனையாளரிடம் பயிற்சி பெற்றிருக்கிறார்
பழைய புத்தகக் கடைகளில் மலிவான விலையில் கிடைத்த பால்சாக் மற்றும் தஸ்தாயெவ்ஸ்கியின் புத்தகங்கள் பற்றியும். அந்தக் காலத் திரையரங்குகள். அதன் கட்டண விபரம்.கள்ளச்சந்தையில் விற்கப்பட்ட சிகரெட்டுகள் பற்றியும் எழுதியிருக்கிறார்
ஹிட்லரால் ஒரு போதும் வெற்றியடைய முடியாது என்று அவரது அம்மா கருதினார். ஹிட்லர் ஒரு மோசமான மனிதர் என்று அடிக்கடி சொல்லிக் கொண்டிருந்தார். நல்லவேளை ஹிட்லரின் எழுச்சியைக் காண அவர் உயிரோடில்லை என்று போல் எழுதியிருக்கிறார்
.1930 களின் பிற்பகுதியில் ஜெர்மன் பள்ளிகள் முழுமையாக நாஜிகளின் கட்டுப்பாட்டிற்குள் வரவில்லை. ஆகவே மாணவர்கள் ஓரளவு சுதந்திரத்தை அனுபவித்திருக்கிறார்., பள்ளி அதிகாரிகள் பாசிச எதிர்ப்பாளராகத் தங்களைக் காட்டிக் கொண்டிருந்திருக்கிறார்கள். பள்ளியில் நடைபெற்ற விளையாட்டுப் போட்டிகள். பயிற்சிகள். ஆசிரியர்கள் பற்றிய நினைவுகளையும் மெல்லிய கேலியோடு பகிர்ந்திருக்கிறார்.
அவரது குடும்பம் நாஜி எதிர்ப்புக் கருத்துக் கொண்டிருந்த போதும் தங்களை எதிர்ப்பாளராகக் காட்டிக் கொள்ளவில்லை. ஹிட்லரின் எழுச்சிக்குப் பயந்து நாட்டை விட்டு வெளியேறிப் போவதைப்பற்றி அவர்கள் கற்பனை கூடச் செய்ததில்லை. பிள்ளைகளின் கல்வி மற்றும் வேலை குறித்தே அவரது பெற்றோர்கள் கவலைப்பட்டார்கள். ஹென்ரிக் போலின் பள்ளிப் படிப்பைப் பாதியில் நிறுத்திவிட்டு வேலைக்கு அனுப்பிவிடலாம் என்று கூடப் பெற்றோர் நினைத்தார்கள். ஆனால் அப்படி நடைபெறவில்லை.
ஜெர்மன் ராணுவத்தில் ஆறு ஆண்டுகள் பணியாற்றிய போல் போர்கைதியாக அமெரிக்க ராணுவத்திடம் பிடிபட்டு சிறை வாழ்க்கையை அனுபவித்திருக்கிறார்.
நாஜி ஆட்சி துர்கனவு போலவே இருந்தது. தன் கண்முன்னே தனது நண்பர்கள். உறவினர்கள் மறைந்து போனதன் துயரமே தன்னை எழுத வைத்தது என்கிறார்.
அவரது நாவல்களில் பயணம் ஒரு முக்கியப் பொருளாக இடம்பெறுகிறது. விடைபெறுதல் முக்கியமான நிகழ்வு. இனி சந்தித்துக் கொள்ள முடியுமா என்று கேள்வி திரும்பத் திரும்ப எழுப்பப்படுகிறது. தஸ்தாயெவ்ஸ்கியின் எழுத்துகள் தன்னை மிகவும் பாதித்தன எனக்கூறும் போல் 1933க்கு பிறகு ஜெர்மானியராக இருப்பது அதிகமான குற்றவுணர்வை ஏற்படுகிறது. ஆகவே தனது நிலைப்பாட்டினை வெளிப்படையாக அறிவிக்க வேண்டியிருக்கிறது என்கிறார் ஹென்ரிக் போல்.
தஸ்தாயெவ்ஸ்கி மீது தீவிர ஈடுபாடு கொண்ட ஹென்ரிக் போல் 1969 இல், “The Writer and His City: Dostoevsky and St. Petersburg” என்ற ஆவணப்படத்தினை உருவாக்கியிருக்கிறார்.. இதன் திரையிடலுக்காக ரஷ்யா சென்றிருக்கிறார். இவரது படைப்புகள் ரஷ்ய மொழியில் வெளியாகி மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளன. சோல்செனிட்சன் பிரச்சனையில் ரஷ்யாவிற்கு எதிர்நிலை எடுத்த காரணத்தால் இவர் விமர்சிக்கப்பட்டார்.
தனது பள்ளிச் சான்றிதழில் பிறந்த தேதி, வருஷம் தவறாகக் குறிப்பிடப்பட்டிருக்கிறது எனக் கேலியாகச் சொல்லும் ஹென்ரிக் குழப்பமும் இருளும் சூழ்ந்த காலத்தில் வளர்ந்திருக்கிறார். அதன் சாட்சியமாகவே இந்தச் சிறுநூல் எழுதப்பட்டிருக்கிறது.
••.
July 4, 2022
வரலாறு எப்போது நாவலாகிறது
The History of the Siege of Lisbon என்ற ஸரமாகோ நாவலில் பதிப்பகம் ஒன்றில் பணியாற்றும் பிழைத்திருத்துபவர் தான் திருத்தம் செய்யும் நூலில் ஒரு வரலாற்றுத் தகவல் தவறாக இருப்பதைக் கண்டுபிடிக்கிறார். தானே ஒரு சொல்லை மாற்றிவிடுகிறார்

புத்தகம் வெளியான பிறகு அது கண்டுபிடிக்கப்படுகிறது. அவர் விசாரிக்கப்படுகிறார். ஏன் அந்தச் சொல்லை மாற்றினார் என்று அறியும் பதிப்பாசிரியர் நீ ஏன் சரியான வரலாற்றை எழுதக் கூடாது என்று கேட்கிறார்.
உண்மை வரலாற்றை ஆராயத் துவங்கும் ரைமுண்டோ சில்வா ஒரு கட்டத்தில் அதை வரலாற்று நூலாக எழுதுவதை விடவும் ஒரு நாவலாக எழுதலாமே என்று நினைக்கிறார். அதற்கான வேலையைத் துவங்குகிறார்.
இந்த முடிவிற்கு ஏன் வருகிறார் என்று நீண்ட நேரம் யோசித்துக் கொண்டிருந்தேன்.
வரலாற்று உண்மையை அப்படியே எழுதுவதில் ஏதோவொரு போதாமையைச் சில்வா உணருகிறார். அவருக்கு வரலாற்றில் நுழைந்த கதைகளை நீக்கிவிட்டு வரலாற்றைப் புதிதாக எழுத ஆசை. ஆனால் தனது உண்மையும் கதையாகிவிடும் என்ற அபாயத்தை உணர்ந்திருக்கிறார்.
நாவலாக எழுதும் போது வரலாற்றுச்சுமையிலிருந்து விடுபட்டுவிடலாம். ஒரு நாவலின் வாசகன் வரலாற்று உண்மைகளை அப்படியே எதிர்பார்ப்பதில்லை. சாட்சியங்கள் எதையும் கேட்பதில்லை. அவன் எதைக் கற்பனை என்று நினைக்கிறானோ அது வரலாற்று உண்மையாக இருக்கவும் கூடும். பாடப்புத்தக வரலாற்றில் எப்போதும் மன்னர்களும் சதிகாரர்களும் அதிகாரத்தைத் தீர்மானிப்பவர்களும் வழிநடத்துபவர்கள் மட்டுமே இடம்பெறுகிறார்கள். அவர்களின் அன்றாட வாழ்க்கை இடம்பெறுவதில்லை. இதற்கான மாற்றாகப் புனைவு உருக் கொள்கிறது.
புனைவில் வரலாற்று நாயகர்கள் தங்கள் தலைக்கு மேலே புனித வட்டமில்லாமல் சித்தரிக்கப்படுகிறார்கள். நம்மைப் போலவே தினசரி நிகழ்வுகளைச் சந்திக்கிறார்கள். அனுபவிக்கிறார்கள். உணர்ச்சிவசப்படுகிறார்கள். வரலாற்றின் உறைந்த உடலுக்குள் புனைவின் வழியே ரத்தவோட்டத்தை உருவாக்க முனைகிறார் ரைமுண்டோ சில்வா
ரைமுண்டோ சில்வா ஐம்பது வயதானவர். ஒருவேளை அவர் இருபது வயதுகளிலிருந்திருந்தால் புனைவை நோக்கித் திரும்புவதை விடவும் ஆய்வை நோக்கியே அதிகம் கவனம் கொண்டிருக்கக் கூடும் என்றும் தோன்றியது.
நாவலில் நடைபெறும் விசித்திரத்திற்கு நிகராகவும் கூடுதலாகவும் பதிப்புத்துறையில் விநோத மனிதர்கள் மற்றும் விந்தையான நிகழ்வுகள் நடக்கின்றன.
நாவலின் தலைப்பு ஒரு வரலாற்றுப் புத்தகம் போலவே இருக்கிறது. பொதுவாக ஸரமாகோவின் நாவல் குறியீட்டு தன்மை கொண்ட தலைப்பு கொண்டிருப்பதில்லை. நேரடியாகக் கதாபாத்திரத்தின் பெயரோ, இடமோ, முக்கிய நிகழ்வோ தான் தலைப்பாக வைக்கப்பட்டிருக்கின்றன. மார்க்வெஸின் நாவல்கள் அதன் தலைப்பிற்காகவே பேசப்படுகின்றன. அப்படியான எந்தக் கவித்துவ வெளிப்பாட்டினையும் ஸரமாகோ விரும்புவதில்லை. ஆனால் சிக்கலான, முற்றுப்புள்ளியில்லாத நீண்ட வாக்கியங்கள். அதுவும் கதையில் உரையாடல்கள் தனித்து இடம்பெறுவதில்லை. தத்துவம், வரலாறு, மதம், விஞ்ஞானம் எனப் பல்வேறு விவாதங்களைக் கொண்டதாகவே நாவலை எழுதிச் சென்றிருக்கிறார்.
வரலாறும் புனைவும் சந்திக்கும் இடத்தை ஸரமாகோ மிக அழகாகத் தொட்டுக் காட்டுகிறார். புனைவின் வழியே வரலாறு மீள் உருவாக்கம் செய்யப்படுகிறது. வரலாற்று நிகழ்வுகளுக்கு ஊடாக ஒரு காதல்கதையும் எழுதப்படுகிறது. அது தான் புனைகதையின் சிறப்பு. காதலும் வரலாறும் ஒற்றை புள்ளியினை நோக்கி நகர்கின்றன.
கொடுக்கப்பட்ட பிரதியிலுள்ள தவறுகளைச் சுட்டிக்காட்டுவதுடன் பிழைத்திருத்துபவர்கள் பணி முடிந்துவிடுகிறது. அவராக எதையும் எழுத முடியாது. இந்த நெருக்கடியை ரைமுண்டோ சில்வா நன்றாகவே உணர்ந்திருக்கிறார். ஆனால் ஒரு சொல்லை அவரால் அனுமதிக்க முடியவில்லை. திருத்தம் செய்துவிடுகிறார். தான் செய்த திருத்தம் கண்டுபிடிக்கப்படுமோ என்று அச்சம் கொள்கிறார். ஆனால் புத்தகம் வெளியான பிறகே அந்த வார்த்தை மாறியிருப்பது கண்டுபிடிக்கப்படுகிறது.
ஒரு சொல்லை மாற்றுவதன் மூலம் புதிய உண்மையை வெளிக்கொண்டுவர முடியும் என்கிறார் ஸரமாகோ.
போர்த்துகலின் வரலாற்றில் ஒரு முக்கிய வார்த்தையைச் சேர்த்து, கடந்த காலத்தை மட்டுமல்ல, தனது சொந்த வாழ்க்கையையும் மீண்டும் எழுதுகிறார் ரைமுண்டோ சில்வா.
பதிப்பகம் தான் கதையின் மையம். பிழைத்திருத்துபவர் பதிப்பாசிரியர் இருவரும் ரகசியமாகக் காதலிக்கிறார்கள். அறியப்படாத வரலாற்று உண்மையைத் தேடும் ரைமுண்டோ சில்வா அறியப்படாத காதலைக் கண்டறிகிறார்
ஸரமாகோவின் சொந்த வாழ்க்கையில் நடைபெற்ற சில நிகழ்வுகள் இந்த நாவலில் இடைவெட்டாக வந்து போகின்றன.
புனைவு எப்போதும் வரலாற்று இடைவெளிகளைக் கண்டறிந்து நிரப்பவே முனைகிறது. வரலாற்றில் இடம்பெறாத மனிதர்களை வரலாற்றில் இடம்பெறச் செய்வதும். வரலாற்றில் இடம்பெற்றவர்களை இன்றைய மனிதர்களைப் போல மாற்றுவதுமே நாவலின் தனித்துவம்.
••
July 1, 2022
பெயரில்லாத பெண்ணும் நினைவில்லாத ஆணும்
எகிப்திய திரைப்படமான “feathers” கேன்ஸ் திரைப்பட விழாவில் கிராண்ட் பிரிக்ஸ் பரிசை வென்றுள்ளது. இயக்குநர் ஓமர் எல் ஜோஹைரியின் முதல் படம்.

படம் துவங்கிய சில நிமிஷங்களிலே மலையாள இயக்குநர் ஜி.அரவிந்தன் இயக்கிய கும்மாட்டி படம் நினைவில் வந்து போனது. அதே போன்ற கதைக்களம். ஆனால் இப்படம் மையம் கொள்ளும் பிரச்சனைகளும் சித்தரிப்புகளும் வேறுவிதமானவை.
ஜோஹைரி பெரும்பாலும் தொழில்முறை அல்லாத நடிகர்களைப் பயன்படுத்தியிருக்கிறார். அது தான் படத்தை மிகவும் யதார்த்தமாக உணரச் செய்கிறது.

கமல் சாமியின் ஒளிப்பதிவு மிகச்சிறப்பானது. கேமிரா கோணங்கள் வியப்பூட்டுகின்றன. மிகவும் இறுக்கமான பிரேம்கள். ஆஃப்-சென்டர் ஃப்ரேமிங் சாம்பல் மற்றும் வெளிறிய நிறத்தேர்வு. மற்றும் கதை நிகழும் விநோதமான நிலவெளி, சிறார்களின் மாறாத விளையாட்டுத்தனம். விலங்குகளின் குறுக்கீடு. மெல்லிய நகைச்சுவை, நிழல் போல அமைதியாக நடந்து கொள்ளும் பெயரில்லாத பெண், கைவிடப்பட்ட உலகம் போன்ற வாழ்விடம். இவை யாவும் ஒன்றுகூடிப் படத்தைத் தனித்துவமாக்குகின்றன
எகிப்திய தொழிற்சாலை நகரம் ஒன்றில் வாழும் வறுமையான குடும்பத்தின் கதையைப் படம் சித்தரிக்கிறது. அவர்கள் அழுக்கடைந்து போன மோசமான குடியிருப்பு ஒன்றில் வசிக்கிறார்கள். அதற்கும் மூன்று மாதமாக வாடகை செலுத்தவில்லை.
அவர்களின் வாழ்விடம் தூசி நிறைந்த, புறக்கணிக்கப்பட்ட தொழில் நகரத்தைப் போலவே சித்தரிக்கபடுகிறது. கணவனுக்கும் பெயர் கிடையாது. மனைவி பாழடைந்த அடுக்குமாடிக் குடியிருப்பில் அதிகாலையில் எழுகிறாள். காலை உணவைச் சமைக்கிறாள், வீட்டிற்குத் தேவையான மளிகைப் பொருட்களுக்கான பணத்தை வாங்குவதற்காகக் கணவன் முன்பு அமைதியாகக் காத்திருக்கிறாள். அவன் பூட்டிவைத்திருக்கும் பணப்பெட்டியைத் திறந்து மெதுவாகப் பழைய நோட்டுகளை எண்ணுகிறான். வீட்டுச் செலவைக் குறைத்துக் கொள்ளச் சொல்கிறான். இரவு உணவிற்குக் கத்தரிக்காய் சமைக்க வேண்டும் என்று உத்தரவு போடுகிறான். அவனது கட்டளையை ஏற்றுக் கொண்டு அவனை நேர் கொள்வதைத் தவிர்க்கும் கண்களுடன் ஓரமாக நிற்கிறாள்.

அருகிலுள்ள தொழிற்சாலையிலிருந்து வரும் புகை அறைக்குள் பரவும் போது, குழந்தையைப் பாதுகாப்பதற்காக அவசரமாகச் சென்று ஜன்னல்களைப் பூட்டுகிறாள்; இப்படி அவளது உலகம் தினசரி செயல்களால் நிரம்பியது.
கணவன் தனது மகனின் நான்காவது பிறந்தநாளைக் கொண்டாட ஏற்பாடு செய்கிறான். பிறந்தநாள் கேக் தயாரிக்கப்படுகிறது. பலூன்கள், தோரணங்கள் என வீடு அலங்காரம் செய்யப்படுகிறது. பையன் புத்தாடைகள் அணிந்து கொள்கிறான். நண்பர்கள் ஒன்று கூடுகிறார்கள். நடனம் நடக்கிறது.
பிறந்த நாள் கொண்டாட்டத்திற்காக சர்க்கஸிலிருந்து ஒரு மேஜிக் கலைஞர் அழைக்கப்பட்டிருக்கிறார். அவர் சிறிய மேஜிக்குகளைச் செய்து காட்டிக் கைதட்டு பெறுகிறார்.
மகனின் பிறந்தநாளை வாழ்த்துவதற்காக வந்த தனது முதலாளி தரும் பணத்தையும் பரிசுகளையும் ஏற்றுக் கொண்டு அவரை வழியனுப்பி வைக்கிறான் கணவன்
மேஜிக் செய்பவன் ஒரு மரப்பெட்டியினுள் அவனை ஒளிந்து கொள்ளும்படி அழைக்கிறான். கணவன் மரப்பெட்டிக்குள் ஒளிந்து கொண்டதும் மேஜிக் கலைஞன் தனது மந்திரக்கோலை அசைத்துவிட்டு பெட்டியிலிருந்து ஒரு வெள்ளை நிறக் கோழியை வெளியே எடுக்கிறான். எல்லோரும் சிரிக்கிறார்கள்

பின்பு கோழியை அதே பெட்டியில் வைத்து மூடி மந்திரம் போடுகிறான். இப்போது கணவன் மறு உருவம் பெற்று வரவில்லை. ஏதோ தவறு நடந்துவிடுகிறது. அவன் கோழியாகவே இருக்கிறான்.
பிறந்தநாள் விருந்திற்கு வந்தவர்கள் மேஜிக் கலைஞனுடன் சண்டையிடுகிறார்கள். அவனால் கோழியை மறுபடியும் கணவனாக மாற்ற முடியவில்லை. அந்தக் கோழியை எப்படி நடத்த வேண்டும் என்று அவளுக்குக் குழப்பமாக இருக்கிறது.
மறுநாள் அந்தக் கோழியை வைத்துக் கொண்டு மேஜிக் கலைஞனைத் தேடி அலைகிறாள் . அவனைக் கண்டுபிடிக்க முடியவில்லை. இந்தக் கோழி தான் இனிமேல் தனது கணவன் என்று உணரும் அவள் அதைக் கவனித்துக் கொள்வதைத் தனது கடமையாக உணருகிறாள்
கோழியின் மனைவியாக அதற்குத் தேவையான உணவைத் தயாரித்துத் தருகிறாள். கணவனின் படுக்கையிலே கோழியை நடக்கவிடுகிறாள். அந்தப் படுக்கை முழுவதும் சிதறிக்கிடக்கும் உணவுத்துகள்கள் குறியீடு போலவே உணர்த்தப்படுகின்றன
கோழியை மீண்டும் மனிதனாக மாற்ற மாந்திரீகம் செய்கிறார்கள். ஆனால் அதிலும் தோல்வியே ஏற்படுகிறது.
அப்பா கோழியாக உருமாறியதைப் பிள்ளைகளால் ஏற்க முடியவில்லை. அவர்களைச் சமாதானப்படுத்த ஏதேதோ செய்கிறாள். வறுமையான சூழ்நிலை காரணமாக அவளால் வாடகை தர முடியவில்லை. அவளுக்கும் வேலை கிடைக்கவில்லை. நண்பர்களும் உறவினர்களும் முடியாதவகையில் உதவுகிறார்கள். முடிவில் எட்டு வயதான மகனைத் தந்தை வேலை செய்த தொழிற்சாலைக்கே அனுப்பி வைக்கிறாள்.

மகன் முதன்முறையாக வேலைக்குச் செல்லும் போது பணியிடம் வரை அவள் அழைத்துக் கொண்டு போய்விடும் காட்சி மிக அழகானது
ஒரு பணக்கார வீட்டில் பணிப்பெண்ணாக வேலைக்குச் சேருகிறாள். அங்கே மீதமான இறைச்சி மற்றும் சாக்லேட்டுகளைத் திருடிச் செல்லும் போது பிடிபடுகிறாள். அந்த வேலை பறிபோகிறது.
படத்தில் மனைவிக்குப் பெயர் கிடையாது. அவள் ஒரு பெண். குடும்பத்தலைவி. கணவனின் அதிகாரத்திற்குக் கட்டுப்பட்டவள்.. மனைவியாக அவள் சந்திக்கும் நெருக்கடிகள். அவமானம் மற்றும் பிரச்சனைகளைச் சிறப்பாகப் பதிவு செய்திருக்கிறார்கள்.
அவளுக்குப் புதிய வேலை கிடைக்கிறது. முதலாளி அவள் மீது பரிவு கொள்கிறார். தேவையான உதவிகளைச் செய்து தருகிறார்.
இதற்கிடையில் கணவன் காணாமல் போய்விட்டான் என்று காவல்துறையில் புகார் கொடுத்து உரிய சான்றிதழுடன் வந்தால் மட்டுமே மகனுக்கு உரிய வேலையும் சம்பளமும் தர முடியும் என்று தொழிற்சாலை நிர்வாகம் சொல்கிறது.
புகார் கொடுக்கக் காவல் நிலையம் செல்கிறாள். அங்கே உருக்குலைந்த நிலையில் அவளது கணவனை அடையாளம் காட்டுகிறார்கள். அவன் எப்படி இந்த நிலைக்கு வந்தான். அவனுக்கு என்ன நடந்தது என்று காட்டப்படுவதில்லை. ஆனால் நினைவுகளற்று உடல் முழுவதும் காயத்துடன் மயங்கிக் கிடக்கிறான்..
அவனை வீட்டிற்குக் கொண்டு வந்து தேவையான மருத்துவ உதவிகள் செய்து கவனித்துக் கொள்கிறாள். அன்றாடம் அவனைக் குளிக்க வைத்து உடை உடுத்தி உணவு கொடுத்துப் பராமரிக்கிறாள். ஒரு வார்த்தை கூடப் பேசாத அவனை உலுக்கி வாயில் விரலைக் கொடுத்துத் திறந்து பேசும்படியாக அவள் கத்தும் காட்சி அபாரமானது

படம் முழுவதும் அவள் மிகவும் அரிதாகவே பேசுகிறாள் அல்லது புன்னகைக்கிறாள். குழந்தைகளுடன் விளையாடும் போது மட்டுமே முகத்தில் மகிழ்ச்சி வெளிப்படுகிறது. கணவனின் கட்டளைகளுக்குக் கீழ்ப்படியும் போது அவளது கண்கள் தாழ்ந்தேயிருக்கின்றன.
அதிகாரத்துடன் நடந்து கொள்ளும் கணவனை விடவும் அந்தக் கோழி மேலானது எனப் பல நேரங்களில் நினைக்கிறாள். நினைவுகளில்லாமல் கணவன் திரும்பி வந்த பிறகு அவளது குடும்பச் சுமை கூடிவிடுகிறது.
காஃப்காவின் உருமாற்றம் கதை கரப்பான்பூச்சியாகிவிடும் கிரிகோர் சாம்சாவின் நெருக்கடிகளைச் சித்தரிக்கிறது. இதன் எதிர்நிலை போலக் கோழியாகிவிட்ட கணவனின் உலகை அவனது மனைவி எதிர்கொள்ளும் அபத்த, துன்பவியல் நிகழ்வுகளின் மூலம் படம் விரிவு கொள்கிறது.

படம் முழுவதும் அவள் தீர்க்க முடியாத பொறுப்புகளை ஏற்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறாள். முடிவில் தலையணை மற்றும் சமையலறைக் கத்தி அவளுக்கான விடுதலையின் திறவுகோலாக மாறுகிறது,
மேஜிகல் ரியலிசக் கதை போன்ற ஒன்றைப் பெண்ணிய நோக்கில் அழுத்தமான சமூகப்பிரச்சினையாக மாற்றியிருப்பது படத்தின் தனிச்சிறப்பு.
ஒரு அரசியல்வாதி தொடர்ந்து மேடையில் பேசிப்பேசி அவனது குரல் சேவலின் குரலாக மாறிவிடுவதாக ஒரு சிறுகதை எழுதியிருக்கிறேன். சேவற்குரலோன் என்ற அந்தச் சிறுகதை குறும்படமாகவும் வெளியாகியுள்ளது. எனது கதையின் இன்னொரு வடிவம் போலவே இந்தப் படத்தினை உணர்ந்தேன். அது கூடுதலாகப் படத்தை எனக்கு நெருக்கமாக்கியது
.
June 30, 2022
மலையாளத்தில்
எனது மண்டியிடுங்கள் தந்தையே நாவல் மலையாளத்தில் வெளியாகிறது.
இதனை மாத்ருபூமி பதிப்பகம் வெளியிடுகிறது
June 29, 2022
மறைமலையடிகள் நாட்குறிப்புகள்
மறைமலையடிகள் 1898 முதல் 1950 வரையில் எழுதிய நாட்குறிப்புகளைத் தொகுத்து வெளியிட்டிருக்கிறார்கள்.
இணையத்தில் இதனைத் தரவிறக்கம் செய்து கொள்ளலாம்

நூலின் தொகுப்பாசிரியர் மறை. திருநாவுக்கரசு, மறை. தி. ஆலங்காடன். தி. தாயுமானவன். இந்த நூலை ஆ.இரா. வேங்கடாசலபதி பதிப்பித்திருக்கிறார்
தனித்தமிழ் தந்தை என்று போற்றப்படும் மறைமலையடிகள் இளமைப்பருவம் முதல் நாட்குறிப்பு எழுதும் பழக்கம் கொண்டிருந்திருக்கிறார். ஆங்கிலத்தில் நல்ல புலமை கொண்டவர் என்பதால் தனது நாட்குறிப்புகளை ஆங்கிலத்தில் எழுதியிருக்கிறார்.
ஆயிரம் பக்கங்களுக்கும் மேலாக உள்ள இந்த நாட்குறிப்புகளிலிருந்து தேர்வு செய்யப்பட்ட விஷயங்களை மொழியாக்கம் செய்திருக்கிறார்கள்



மறைமலையடிகளின் நாட்குறிப்புகளை வாசிக்கும் போது அவர் எவ்வளவு ஆங்கில நூல்களைத் தேடிப்பிடித்துப் படித்திருக்கிறார். விலைக்கு வாங்கியிருக்கிறார் என்று வியப்பாகவுள்ளது. நூறு வருஷங்களுக்கு முன்பே 11 ரூபாய் கொடுத்து ஆங்கிலப் புத்தகம் ஒன்றை விலைக்கு வாங்கியிருக்கிறார். அப்போது அவரது மாதசம்பளம் 30 ரூபாய்.

நிறையப் புத்தகங்கள் வாங்குகிறார் என்று மனைவி அவரோடு சண்டையிட்டிருக்கிறார். பல்லாவரத்தில் வீடு கட்ட நிலம் 90 ரூபாய்க்கு வாங்கியதைப் பதிவு செய்திருக்கிறார்.









நூறு ஆண்டுகளுக்கு முந்தைய சென்னை நகரின் தோற்றம், மற்றும் அன்றைய வாழ்க்கைமுறை, அன்றைய கல்வி நிலையங்கள். பிரம்மஞானச் சபையில் நடந்த கூட்டங்கள். வெள்ளைக்கார அதிகாரிகள் தமிழ் கற்றுக் கொண்டது. அன்றிருந்த தமிழறிஞர்களின் வாழ்க்கை மற்றும் ஆய்வுப்பணிகள் குறித்து விரிவாகப் பதிவு செய்திருக்கிறார்.
குறிப்பாகச் சென்னைக்கு விமானம் அறிமுகமானது. ஜாலியன் வாலாபாக் படுகொலை நடந்த நாளில் ஏற்பட்ட அனுபவம் . காந்தி கொல்லப்பட்டது. சென்னையில் நடைபெற்ற பல்வேறு அரசியல் கூட்டங்கள். ஆங்கிலத் திரைப்படங்கள். அறிஞர்களுக்குள் நடந்த கருத்து மோதல். வழக்கு விபரங்கள். Oriental Mystic Myna என்ற ஆங்கில இதழ் வெளியிட்டது. அந்த நாட்களில் வெளியான தமிழ், ஆங்கில இதழ்கள் இவற்றைப் பற்றியும் சிறப்பாக எழுதியிருக்கிறார்
பெரியார் ஆரம்பித்த சுயமரியாதை இயக்கம் பற்றிய மறைமலையடிகளின் பார்வை, இந்தி எதிர்ப்புப் போராட்டம் பற்றிய பதிவுகள். டாக்டர் ஆனந்த குமாரசாமியின் நட்பு. இலங்கை மற்றும் வட இந்தியாவில் மேற்கொண்ட பயணங்கள் பற்றிய குறிப்புகள். மாக்ஸ்முல்லருடன் உருவான கடித தொடர்பு. அருட்பா மருட்பா விவாத அரங்குகள் பற்றிய குறிப்புகள் முக்கியமானவை.
••
June 23, 2022
குற்றவுணர்வின் மணியோசை
கன்னடத்திலிருந்து மொழிபெயர்க்கப்பட்ட பத்து சிறுகதைகளின் தொகுப்பு புத்த மணியோசை. கதைகளைத் தேர்வு செய்து மொழியாக்கம் செய்திருக்கிறார் கே.நல்லதம்பி. எதிர் வெளியீடு இதனை வெளியிட்டுள்ளது.

சமகாலக் கன்னடச்சிறுகதைகளின் போக்கையும் தனித்துவத்தையும் இத்தொகுப்பு சரியாக அறிமுகம் செய்திருக்கிறது. நேரடியாகத் தமிழில் எழுதப்பட்டது போல அத்தனை நிறைவான மொழியாக்கத்தைச் செய்திருக்கிறார் நல்லதம்பி. அவருக்கு எனது மனம் நிறைந்த பாராட்டுகள்

இந்தத் தொகுப்பில் பத்து கதைகளுமே சிறப்பாக உள்ளன. குறிப்பாகக் கிருஷ்ணமூர்த்தி சந்தரின் கதை, ஹெச். என் சுபதாவின் கதை, ஸ்ரீகாந்தாவின் சிறுகதை, மஹந்த்தேஷ் நவல்கல் எழுதிய சிறுகதை இந்த நான்கும் மிகச்சிறந்தவை.
கன்னடக்கதைகளாக இருந்தாலும் இதில் சில கதைகள் சென்னையில் நடக்கின்றன. அதுவும் சென்னையில் நாம் அறியாத விஷயங்களை, நினைவுகளை, மனிதர்களை அடையாளம் காட்டுகின்றன. இன்னொரு மொழியில் சென்னை வாழ்க்கை அசலாகச் சித்தரிக்கப்படுவது மகிழ்ச்சியளிக்கிறது.
கிருஷ்ணமூர்த்தியின் துங்கபத்ராவின் மாமரமும் மதராசின் குயிலும் சிறுகதை புகழ்பெற்ற இசைக்கலைஞர் ராஜீவ் தாராநாத்தின் தந்தை பண்டிட் தாராநாத் பற்றியது. அவர் ஒரு கல்வியாளர். ஆயுர்வேத மருத்துவர். இசைக்கலைஞர். அவரது தங்கை லீலா சென்னையில் கல்வி பயின்றிருக்கிறார்.
லீலாவின் தோழியான சுமதி தமிழ்பெண். அவரைத் தான் பண்டிட் தாராநாத் திருமணம் செய்து கொண்டிருக்கிறார். நிஜாம் அரசு பண்டிட் தாராநாத்தை கைது செய்ய முற்பட்ட போது அவரை எப்படித் தந்திரமாகத் தப்ப வைத்தார்கள் என்பது வியப்பளிக்கிறது.
கதையை விடவும் வாழ்க்கை அதிகத் திருப்பங்களும் எதிர்பாராத நிகழ்வுகளும் கொண்டது என்பதற்குத் தாராநாத்தின் வாழ்க்கை ஒரு உதாரணம்
கதை கடந்த கால நிகழ்வுகளை இன்றைய உரையாடலின் வழியே அழகாக இணைக்கிறது. மாமரமும் குயிலும் அழகான கட்டிங் பாயிண்ட். சுமதிபாய் 1930களில் ஆங்கிலத்திலும் கன்னடத்திலும் புரட்சிகரமான சிந்தனைகளைக் கொண்ட கட்டுரைகளை எழுதியிருக்கிறார். அவரது ஆளுமை கதையில் முழுமையாக வெளிப்படுகிறது. உண்மை நிகழ்வுகளை இவ்விதம் சிறந்த சிறுகதையாக்க முடியும் என்று நிரூபித்திருக்கிறார் கிருஷ்ணமூர்த்தி.
நார்மண்டியின் நாட்கள் என்ற சுபதாவின் கதை நிகரற்றது. சமீபத்தில் நான் படித்த மிகச்சிறந்த சிறுகதை இதுவே.

நார்மண்டியில் வசித்த தனது பால்ய நினைவுகளைக் கதை சொல்லி நினைவுபடுத்துவதில் துவங்குகிறது கதை
அவரது அப்பா ஜார்ஜ், அம்மா தெல்லி இருவரையும், நார்மண்டியின் வாழ்க்கைச் சூழலையும் அறிமுகம் செய்கிறார்.
சமையல் செய்வதில் நிகரற்ற ஜார்ஜ் பிள்ளைகளுக்கு விதவிதமான உணவை ருசியாகச் சமைத்துத் தருகிறார். அவர் பாரீஸின் புகழ்பெற்ற உணவகங்களில் பணியாற்றிய தலைசிறந்த சமையற்கலைஞர். தெல்லி அவரது உணவின் ருசியில் மயங்கிக் காதலித்துத் திருமணம் செய்து கொண்டிருக்கிறார்.
இயற்கையோடு இணைந்து வாழுவதற்காக அவர்கள் நார்மண்டியில் குடியேறுகிறார்கள். பிள்ளைகளுக்கும் மனைவிக்கும் சுவையான உணவுகளைத் தயாரித்துக் கொடுப்பதில் ஜார்ஜ் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறார். ஆனால் மற்ற ஆண்களைப் போல வாழ்க்கையில் பெரிய கனவுகள் எதுவுமற்று இருக்கிறாரே, பணம் தேட முயலவில்லையே என்று தெல்லிக்கு ஆதங்கம்.
தெல்லி ஒரு அழகி. அவள் ஆடம்பரமான வாழ்க்கையை விரும்புகிறாள். நாடகம், சினிமா, விருந்து என உல்லாசமாக இருக்க நினைக்கிறாள். பாரீஸை விட்டு அவர்கள் நார்மண்டிக்கு வந்தது அவளுக்குப் பிடிக்கவில்லை. மூன்று குழந்தைகள் பிறந்த பிறகு காதல் வாழ்க்கை சலிக்கத் துவங்கிவிடுகிறது. ஆனால் ஜார்ஜ் கிராம வாழ்க்கையை விரும்புகிறார். நார்மண்டியில் ஒவ்வொரு இரவும் அவர் கணப்பு அடுப்பின் முன்பாக அமர்ந்து கிதார் வாசிக்கிறார். பிள்ளைக்கு வீட்டுப்பாடம் சொல்லிக் கொடுக்கிறார். சமையலையும் சங்கீதம் போலவே உணர்கிறார்.

அன்றாடம் வீட்டில் ஒன்றுகூடும் தெல்லியின் நண்பர்கள் அனைவருக்கும் ஜார்ஜ் சுவையான உணவு தயாரித்துத் தருகிறார். அவர்கள் ஜார்ஜை புகழ்ந்து பேசுவது அவளுக்குப் பிடிக்கவில்லை. ஊரே ஜார்ஜின் சமையலைப் புகழ்ந்து பேசுகிறது. அவரது மனைவியாக இருப்பது அதிர்ஷ்டம் என்று தெல்லியை பாராட்டுகிறது அவளுக்கோ அந்தப் பாராட்டு கசப்பாக இருக்கிறது. தெல்லி அவரை வெறுக்கத் துவங்குகிறாள் ‘
இதைக் காட்டிக் கொள்ள அவளாகச் சமைக்க முயலுகிறாள். ஜார்ஜ் அதை அனுமதிப்பதில்லை. அவள் சின்னஞ்சிறு விஷயங்களுக்காகக் கூட அவரைக் கோவித்துக் கொள்கிறாள். சண்டையிடுகிறாள்.
ஆனால் ஜார்ஜ் எதற்காகவும் அவளுடன் சண்டையிடுவதில்லை. எப்போதும் மாறாத சிரிப்புடன் இருக்கிறார். சமையலறையைச் சுத்தமாக வைத்துக் கொள்கிறார். மனைவிக்குப் பிடித்தமான உணவை சமைத்துத் தருகிறார். பிள்ளைகள் அவரது உணவின் ருசியைப் பாராட்டும்போது மனதில் அன்பு இருந்தால் மட்டுமே உணவில் ருசி பிறக்கும் என்று சொல்கிறார்
ஒரு நாள் தெல்லி இனி நீங்கள் சமைக்க வேண்டாம் என்று அவரைத் தடுத்துவிடுகிறாள். அவரால் இந்த நிராகரிப்பைத் தாங்க முடியவில்லை. அவளுடன் சண்டைபோடவில்லை. மாறாக நோயாளி போல முடங்கிப் போகிறார். அவரது சிரிப்பு மறைந்து போகிறது. சதா ஏதோ யோசனையுடன் இருக்கிறார். ஒரு நாள் கடைக்குச் சென்று விதவிதமான பாட்டில்களை வாங்கி வருகிறார். அவற்றைச் சமையலறையில் வைத்து பலசரக்குப் பொருட்களைப் போட்டு வைக்கிறார். அலங்காரப் பொருள் போல அழகு படுத்துகிறார்.
இந்த ஆசை மெல்ல வளருகிறது. அடிக்கடி கடைக்குப் போய்ப் புதிது புதிதான வண்ணங்களில் அளவுகளில் பாட்டில் வருகிறார். சதா அதைச் சுத்தம் செய்கிறார். பகலிரவாக அதைப் பற்றியே நினைத்துக் கொண்டிருக்கிறார். ஒரு நாள் மிகப் பெரிய சைஸில் பாட்டிலை வாங்கி வருகிறார். தனது உணவு உடை எல்லாவற்றையும் அதற்குள் போடுகிறார். அவரது விபரீத நடவடிக்கை வீட்டைக் குழப்பமாக்குகிறது.
அவரது மாற்றம் தெல்லிக்கு அச்சமூட்டுகிறது. சமாதானம் செய்ய முயன்று தோற்றுப் போகிறாள்
இதனால் வீட்டின் அன்றாடம் பாதிக்கப்படுகிறது. பிள்ளைகளின் படிப்பில் சிக்கல் ஏற்படுகிறது. ஜார்ஜ் நலமுடைய தெல்லி ஏதேதோ செய்கிறாள். மீட்பது எளிமையாக இல்லை. தெல்லியின் நண்பர்கள் அவரது உடல் நலம் பற்றி அக்கறையாக விசாரிக்கிறார்கள். பாதிரியார் கூட ஆலோசனை சொல்கிறார். மெல்ல ஜார்ஜ் மனப்பிறழ்வின் உச்சத்தை நோக்கிச் செல்கிறார். கதையின் முடிவு நம்மைக் கலங்கச் செய்கிறது

இந்தக் கதையில் வரும் ஜார்ஜ் தனது குடும்பத்தால் நிராகரிக்கப்படுகிறார். உலகம் அவரது திறமையைக் கொண்டாடுகிறது. ஆனால் காதல் மனைவி அவரது திறமையை, அன்பை விரும்பவில்லை. பிள்ளைகள் அவரை நேசிக்கிறார்கள். அவர் சமைத்துத் தரும் ருசியான உணவைப் பாராட்டுகிறார்கள். அவரும் அவர்களுக்காகவே வாழுகிறார். ஆனால் அதைத் தெல்லி புரிந்து கொள்ளவில்லை.
அவள் வேறு கனவுகளுடன் வாழுகிறாள். அவரைத் தொடர்ந்து வேறு வேலைக்குச் செல்லும்படி நிர்ப்பந்தம் செய்கிறாள்.
ஜார்ஜ் தன்னை ஒரு காலி பாட்டில் போலவே உணருகிறார். முறிந்த கிளையைப் போல வாடத் துவங்குகிறார். தெல்லி தனது தவற்றை உணருகிறாள். ஆனால் அவளால் அவரை மீட்க இயலவில்லை.
ஜார்ஜ் உண்மையில் ஒரு கலைஞன். அவரது நுண்ணுணர்வே அவரை வீழ்ச்சியடையச் செய்கிறது. வேறு ஒரு ஆணாக இருந்தால் கோபம் கொண்டு சண்டையிட்டிருப்பார். அல்லது விலகி வெளியேறிப் போயிருப்பார். ஆனால் ஜார்ஜ் இன்னமும் தெல்லியைக் காதலிக்கிறார். ஆனால் அவரைச் சமையலறையிலிருந்து வெளியேற்றியதைத் தாங்கிக் கொள்ள முடியவில்லை. புரிந்து கொள்ளப்படாத அன்பு தான் மனப்பிறழ்வாக மாறுகிறது.
மிகச் சிறப்பான கதை. அடர்த்தியாக, நுணுக்கமாக நிகழ்வுகள் கதையில் விவரிக்கப்படுகின்றன. குறைவான உரையாடல்களே இதன் பலம். ஜார்ஜ் தெல்லியின் வாழ்க்கையை மட்டுமில்லை அவர்களின் பிள்ளைகளின் வாழ்க்கையினையும் அவர்கள் எதிர்கொள்ளும் உண்மையான சிக்கல்களையும் கதை அழகாகப் பின்னிச் செல்கிறது.
எங்கேயும் யார் மீதும் குற்றம் சுமத்தப்படவில்லை. ஆனால் குடும்பத்தில் பிரச்சனை எப்படி உருவாகிறது. எப்படி வளருகிறது. எப்படி விடுபட முடியாமல் போகிறது என்பதைக் கதை நுட்பமாக விவரிக்கிறது
ஜார்ஜ் காலிக் குப்பிகளின் மூலம் தனக்காக விடுதலையைக் கண்டறிவது போல நிராகரிக்கப்பட்ட ஒவ்வொருவரும் ஏதோ ஒரு வழியில் தனது வெறுமையைப் போக்கிக் கொள்ள முயலுகிறார்கள். வீழ்ச்சி அடைகிறார்கள்.
ஸ்ரீகாந்தாவின் ஈயைத் துரத்திக் கொண்டு சிறுகதையில் காமம் தான் ஈயாகச் சுற்றியலைகிறது. அது குருட்டு ஈயைப் போலத் தத்தளிக்கிறது. அந்தக் கதையிலும் தமிழ் சினிமா காட்சிகள் கேலி செய்யப்படுகின்றன. கதையில் காதலுற்ற இரண்டு ஈக்கள் ஒன்றையொன்று துரத்துகின்றன. முத்தமிட்டுக் கொள்கின்றன. கலவி புரிகின்றன. அசிங்கம் என்ற வார்த்தை அழகாக இருக்கிறதே என்று அந்தக் கதையில் ஒரு வரி வருகிறது. சோபியா லோரனும் விவேகானந்தரும் ஒரே அட்டையின் முன்பின்னாக இருப்பது ஸ்ரீகாந்தாவின் கூர்மையான கேலிக்குச் சான்று
புத்த மணியோசை கதை பேங்காங்கில் நடக்கிறது. கிருமிநாசினிகள் விற்பனை செய்யும் ஒருவன் பட்டாங்கில் ஆன்காங்க் என்ற விலைமாதைச் சந்திக்கிறான்.

விற்பனை பிரதிநிதிகளை உற்சாகப்படுத்த நிறுவனம் வெற்றியாளர்களைப் பாங்காங் அழைத்துவருகிறது. மது பெண்கள், கேளிக்கை என உல்லாசம் அனுபவிக்க வைக்கிறது.
பேங்காங் என்றால் சொர்க்கம் எனப் பலரும் நினைக்கிறார்கள். உண்மையில் அது ஒரு நரகம். மோசமான உடலின்ப சந்தை. பச்சைக்காய்கறிகள் போல இளம்பெண்களும் விற்பனை பொருளாகக் கருதப்படுகிறார்கள் என்கிறார் மஹந்த்தேஷ் நவல்கல்.
கதையின் ஒரு இடத்தில் ஆன்காங் கேட்கிறாள்.
“இந்தியர்கள் இங்கே உல்லாசமாக இருக்க வருகிறீர்கள். உங்கள் மனைவிகள் சரியாக இல்லையோ அல்லது அவர்களுக்கு இதைப்பற்றி எல்லாம் தெரியாதோ.“
பின்பு அவளே சொல்கிறாள்
“அவர்கள் உங்களைச் சரியாகப் பார்த்துக் கொண்டால் பின்பு எங்களை யார் காப்பாற்றுவார்கள். “
வேறு நாட்டவர்களை விடவும் இந்தியர்கள் தான் பாங்காங்கிற்கு அதிகம் வருகிறார்கள். அவர்களால் தான் பாலியல் தொழில் இங்கே சிறப்பாக நடந்து வருகிறது. அவர்களுக்கு நாங்கள் நன்றிக்கடன் பட்டிருக்கிறோம் என்கிறாள் ஆன்காங்க்.
குற்றமனதுள்ள விற்பனை பிரதிநிதி உல்லாசத்தை நாடவில்லை. அவன் தனது மீட்சிக்காக ஏங்குகிறான். ஆகவே அவளிடம் தான் விவசாயிகளுக்குப் பாதகம் செய்யும் கிருமிநாசினிகளை விற்று வருகிறேன் என்று பாவமன்னிப்புக் கேட்கிறான்
அதிர்ச்சி அடைந்த அவள் தனது சூட்கேஸை திறந்து சிறிய புத்த விக்கிரகத்தை எடுத்து வைத்துத் தியானம் செய்கிறாள். பின்பு சின்ன மணிகளைக் கையில் பிடித்து அசைக்கிறாள். அது அதி பயங்கர ஓசை எழுப்புவதாக அவன் உணருகிறான்.
அந்த மணியோசை நம் காதுகளிலும் விழுகிறது.
குற்றவுணர்வு கொண்ட ஒருவனும் விலைமாதுவும் புத்தனின் முன்பு மண்டியிடுகிறார்கள். உலகின் தவறுகளுக்காக அவர்கள் இருவரும் வருந்தும் அந்தக் காட்சி அபாரமானது.
கதை பேசும் சமகாலப் பிரச்சனையும் வணிகத் தந்திரங்கள் செயல்படும் விதமும் முக்கியமானது. கதை முழுவதும் புத்தனும் மணியோசையும் குறியீடாக முன் வைக்கப்படுகின்றன
கன்னடம், வங்காளம், மராத்தி என இந்தியாவின் வேறுமொழிகளில் வெளியாகும் சமகாலச் சிறுகதைகளை வாசிக்கும் போது கதைகளின் களம் அந்த மாநிலத்தைத் தாண்டி வெளியே சர்வதேச அளவில் சஞ்சரிப்பதைக் காணமுடிகிறது. அது போலவே மரபான சிறுகதைகள் போலக் கதையை நேர்கோட்டில் வளர்த்துக் கொண்டு போவதற்கு முயலவில்லை. நிறைய ஊடு இழைகளைக் கொண்டு ஒரு சிறுகதையை எழுதுகிறார்கள். கவிதையைப் போலவே கதைக்கும் மையப்படிமம் உருவாக்கப்படுகிறது. இன்றைய வாழ்க்கையின் சிக்கல்களும் கடந்த கால வாழ்வின் நினைவுகளும் அழகாகப் பின்னப்படுகின்றன. கதை சொல்லப்படும் மொழி புதிதாகயிருக்கிறது.
பத்துகதைகளிலும் குற்றவுணர்வு ஏதோ ஒரு வகையில் வெளிப்படுகிறது. குற்றவுணர்வு கொள்வது அல்லது மறுப்பது என்ற இருநிலையினையும் கதைகள் பேசுகின்றன. இன்றைய வாழ்க்கையின் முக்கியப் பிரச்சனையாக இருப்பது உறவுச்சிக்கல்களே என்பதை இந்தத் தொகுப்புக் கவனப்படுத்துகிறது.
தானே ஒரு சிறுகதையாசிரியர் என்பதால் கே.நல்லதம்பி சரியான கன்னடக் கதைகளைத் தேர்வு செய்து மொழியாக்கம் செய்திருக்கிறார். தமிழிலிருந்து கன்னடத்திற்கும் கன்னடத்திலிருந்து தமிழுக்கும் அவர் செய்து வரும் மொழியாக்கங்கள் மிகுந்த பாராட்டிற்குரியவை.
புத்தகத்தின் அட்டை வடிவமைப்பு மிக அழகானது. எழுத்துருவும். பௌத்த மணியும் தனித்துவமான அழகுடன் வடிவமைக்கப்பட்டிருக்கின்றன. சந்தோஷ் நாராயணனுக்கு எனது பாராட்டுகள்.
June 21, 2022
நமக்கான புத்தகம்
புத்தகங்களை எப்படி அறிமுகம் செய்வது என்பதைப் பற்றிய உரையாடலில் “எல்லா புத்தகங்களையும் விரிவாக அறிமுகம் செய்ய வேண்டிய அவசியமில்லை. சில புத்தகங்களை எந்த அறிமுகமும் இன்றி அப்படியே கையில் கொடுத்துப் படிக்கச் சொல்ல வேண்டும். வேண்டுமானால் இது உங்களுக்குப் பிடிக்கக்கூடும் என்று சில வார்த்தைகள் சொல்லலாம்“ என்கிறார் ஹென்றி மில்லர்

தற்செயலாகக் கையில் கிடைத்தோ, யாரோ கொடுத்தோ அறிமுகமாகும் புத்தகம் நாம் எதிர்பாராத மகிழ்ச்சியை, வியப்பை உருவாக்குவதை உணர்ந்திருக்கிறேன்
இதற்காகப் புத்தக அறிமுகமே தேவையில்லையா என்றால் தேவை தான். ஆனால் சில புத்தகங்கள் மௌனமாகப் பகிர்ந்து கொள்ளப்பட வேண்டியவை. நாமே தேடிக் கண்டறிய வேண்டியவை.

இருபது ஆண்டுகளுக்கு முன்பாகச் சென்னை லேண்ட்மார்க் புத்தகக் கடையில் நாவல்கள் வரிசையில் ஒரு புத்தகத்தைப் பார்த்தேன். தலைப்பு வசீகரமாகயிருந்தது. அந்த எழுத்தாளரின் பெயரைக் கூடக் கேள்விப்பட்டிருக்கவில்லை. ஆகவே அந்த இடத்திலே நாவலின் இரண்டு பக்கங்களைப் படித்துப் பார்த்தேன். எனக்குப் பிடித்திருந்தது. உடனே வாங்கிவிட்டேன். அடுத்த சில தினங்களில் படித்துமுடித்துவிட்டு நண்பர்கள் பலருக்கும் அவரைப் படிக்கும்படி சிபாரிசு செய்தேன்.
அப்போது ஒரு நாள் நண்பர் ஜி.குப்புசாமியைக் காண ஆரணி சென்றிருந்தேன். அவரிடம் இந்த நாவலைப் பற்றிப் பேசி வாங்கிப் படிக்கும்படி சொன்னேன். அவரும் உடனே நாவலை வாங்கிப் படித்துவிட்டு வியந்து பேசினார். ஆனால் அந்த நாவலை அவரே மொழிபெயர்க்கப் போகிறார் என்றோ. அந்த எழுத்தாளர் நோபல் பரிசு பெறப் போகிறார் என்றோ அன்றைக்குத் தெரியாது
லேண்ட்மார்க்கில் நான் தற்செயலாகக் கண்டுபிடித்து வாங்கியது My Name Is Red நாவல். அதை எழுதியவர் Orhan Pamuk.

ஒரான் பாமுக்கின் இந்த நாவலை ஜி.குப்புசாமி தமிழில் மொழியாக்கம் செய்திருக்கிறார். அத்தோடு சிறந்த மொழியாக்கத்திற்காக விருதும் பெற்றிருக்கிறார். இன்றும் பாமுக்கின் முக்கியப் படைப்புகளைத் தொடர்ந்து மொழியாக்கம் செய்து வருகிறார்.
இப்படி முன் அறிமுகமின்றி வாங்கிய பல புத்தகங்கள் என்னை மிகவும் பாதித்திருக்கின்றன.
ஹென்றி மில்லரிடம் ஒரு நாள் அவரது நண்பர் ஹெர்மன் ஹெஸ்ஸே எழுதிய சித்தார்த்தா நாவலைக் கொடுத்து இது உனக்கான புத்தகம் என்றாராம். அந்த நாவலைப் படித்துக் கிறங்கிப் போன மில்லர் தன் வாழ்க்கையை மாற்றிய புத்தகமது என்கிறார்.
நம்மை மாற்றிய சில புத்தகங்கள் இப்படிப் பெரிய அறிமுகமின்றிச் சரியான தருணத்தில் நம் கைகளுக்கு வந்து சேருகின்றன.
புத்தக விற்பனையாளர்களும் இது போலச் சில அவதானிப்புகளைப் பகிர்ந்து கொண்டிருக்கிறார்கள்

மில்லர் சித்தார்த்தா பற்றிச் சொன்னது போலவே லண்டனில் புத்தகக் கடை நடத்தும் மார்டின் லேதம் சித்தார்த்தா நாவலைத் தனது கடையில் வாங்கிச் செல்பவர்களிடம் ஒரு பொதுக்குணம் இருப்பதைப் பற்றிச் சொல்கிறார்.
“அவர்கள் நிழல் போலக் கடைக்குள் வந்து சரியாக இந்த நாவலை மட்டும் வாங்கிக் கொண்டு செல்பவராக இருக்கிறார்கள். அவர்கள் ஒரு போதும் எவரிடமும் பேசுவதில்லை. எங்களிடம் பரிந்துரை எதையும் கேட்பதில்லை“ என்கிறார்
நாவல் மட்டுமில்லை. அதைப் படிப்பவர்களும் விசித்திரமான மனநிலை கொண்டவர்களே.
எழுபதுகளில் சித்தார்த்தா நாவலைப் படித்துவிட்டு வெளிநாட்டு இளைஞர்கள் பலர் இந்தியாவை நோக்கி வரத்துவங்கினார்கள். சித்தார்த்தனைப் போல உருமாற ஆசை கொண்டார்கள். ஹிப்பிகள் பலரும் இந்த நாவலை தங்களின் ஆதர்சமாகக் கொண்டிருந்தார்கள்.
பணம் பொருள் என நாட்டம் கொண்டிருந்த மேற்கத்திய இளைஞர்களை ஞானத்தின் பாதையை நோக்கித் திருப்பிவிட்டது சித்தார்த்தா என்கிறார் மில்லர்
இந்த நாவலை எழுதிய ஹெஸ்ஸே இந்தியாவிற்கு வந்ததில்லை. இலங்கையில் அவர் கண்ட பௌத்தவிகாரைகளும் இயற்கைக் காட்சிகளும் இந்த நாவலில் இந்தியாவாக உருமாறியிருக்கின்றன. ஹெஸ்ஸேயின் தாத்தா கேரளாவில் கிறிஸ்துவ ஊழியம் செய்தவர். மலையாள அகராதி உருவாக்குவதில் பங்காற்றியவர். ஆகவே அவர்கள் குடும்பத்திற்கு இந்தியாவோடு நெருக்கமான தொடர்பு இருந்தது
ஒரு நாவல் இலக்கிய உலகைத் தாண்டி இப்படிப் பல்வேறு துறை சார்ந்தவர்களையும் ஈர்த்து பலரது சொந்த வாழ்க்கையை மாற்றிக் கொள்ள வைத்தது பெரிய சாதனையாகும்.
இந்த நாவலை ஒருமுறை மட்டுமே படித்தவர்கள் குறைவு. எதற்காகச் சித்தார்த்தா நாவலை விரும்புகிறீர்கள் என வாசகர்களிடம் ஒரு சர்வே எடுக்கப்பட்ட போது பலரும் “அது தாங்கள் யார் என்பதை உணரச் செய்த புத்தகம். வாழ்க்கை குறித்த புதிய புரிதலை உருவாக்கிய நாவல்“ என்கிறார்கள்.
“சித்தார்த்தா நாவலைப் படித்தபோது எனது வயது இருபது. படித்து முடித்தபோது குழப்பமாகவும் அதிர்ச்சியாகவும் இருந்தது. தான் ஏதோ பெரிய தவறு செய்துவிட்டதைப் போல உணர்ந்தேன். அதிலிருந்து மீள உடனடியாக அன்றாட வாழ்க்கையை உதறி வெளியே போக வேண்டும் என்று துடித்தேன். ஆகவே வீட்டைவிட்டு வெளியேறி நீண்ட தூரம் பயணம் செய்தேன். நான் தான் சித்தார்த்தன் என்று நம்பினேன். அவனது தேடல் உண்மையானது. அதை முழுமையாக உணர்ந்து கொண்டேன்“ என்கிறார் பிரிட்டனைச் சேர்ந்த எரிக் மில்டன்.
ஹெஸ்ஸேயின் மற்ற நாவல்களுடன் ஒப்பிடும் போது சித்தார்த்தா மிகவும் எளிமையான நாவல். அவரது The Glass Bead Game, Narcissus and Goldmund இரண்டும் சிக்கலானவை. ஆழ்ந்த விவாதத்தையும் தரிசனத்தையும் முன்வைப்பவை. கலைஞனின் வாழ்க்கை பெரியதா. இல்லை துறவு வாழ்க்கை பெரியதா என்பதைப் பற்றித் தனது படைப்புகளில் ஹெஸ்ஸே தொடர்ந்து விவாதிக்கிறார். இரண்டுக்கும் இடையில் ஒரு சந்திப்பை உருவாக்குகிறார்.
கீழைத்தேயச் சிந்தனைகளின் மீது ஹெஸ்ஸேயிற்கு இருந்த விருப்பமும் புரிதலும் முக்கியமானது. அதன் சாட்சியமாகவே இந்த நாவல் எழுதப்பட்டிருக்கிறது. சித்தார்த்தா இந்தியரால் எழுதப்பட்டிருந்தால் நிச்சயம் இன்னும் ஆழமான விவாதங்களை எழுப்பியிருக்கும்.
நூலகத்தின் புத்தக அடுக்குகளில் யாரும் எடுக்காமல் போன புத்தகங்களைத் தான் நான் விரும்பி எடுப்பேன். இருபது முப்பது ஆண்டுகள் யாரும் எடுத்துப் போகாத புத்தகங்களைக் கையில் எடுத்துக் கொண்டு போய் நூலகரிடம் கொடுக்கும் போது அவர் திகைப்புடன் இதெல்லாம் படிப்பீர்களா என்று கேட்பார். பதில் சொல்லாமல் புன்சிரிப்புடன் பதிவேட்டில் பதிந்து வாங்கிச் சென்றுவிடுவேன். நாமாகத் தேடி ஒன்றைக் கண்டறிவதன் இன்பம் இணையற்றது. அது புத்தக வாசிப்பில் மிகவும் முக்கியமானது.
**
June 20, 2022
தந்தையின் சிறகுகள்
1940ல் எழுதப்பட்ட ஆர்தர் மில்லரின் Death of a Salesman என்ற பிராட்வே நாடகம் அன்றைய சூழலுக்கு மட்டுமின்றி இன்றைக்கும் மிகப்பொருத்தமாகவே உள்ளது. ஆர்தர் மில்லர் இந்த நாடகத்திற்காகப் புலிட்சர் பரிசைப் பெற்றிருக்கிறார். இந்நாடகம் 29 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது

A MAN IS MEASURED FAR MORE BY WHAT HE SELLS THAN BY WHAT HE DOES என்பதே படத்தின் மையக்கரு.
தந்தைக்கும் மகனுக்குமான உறவுச்சிக்கலை, புரிதலை, எதிர்பார்ப்புகளைப் பேசும் இந்த நாடகம் இருவரது நியாயங்களையும் சரியாக முன்வைத்திருக்கிறது.
இந்த நாடகத்தை ஜெர்மானிய இயக்குநர் வோல்கர் ஸ்க்லோன்டார்ஃப் திரைப்படமாக உருவாக்கியிருக்கிறார். டஸ்டின் ஹாஃப்மேன் தந்தையாக நடித்திருக்கிறார்.

கடந்தகாலத்தின் மகிழ்ச்சியான நினைவுகளுக்கும், இன்றைய நெருக்கடிகளுக்கும் இடையில் சஞ்சரிக்கும் மனப்போக்கினை டஸ்டின் ஹாஃப்மேன் சிறப்பாக வெளிப்படுத்தியிருக்கிறார்.
63 வயதான வில்லி லோமன் விற்பனை பிரதிநிதியாக வேலை செய்பவர். அவர் நீண்ட தூரப் பயணத்திலிருந்து காரில் வீடு திரும்புவதுடன் படம் ஆரம்பிக்கிறது.
அவர் சந்திக்கச் சென்ற வேலை நடக்கவில்லை. ஏமாற்றத்துடன், சோர்வுடன் பயணத்தினை மேற்கொள்கிறார். அர்த்தமில்லாமல் பொய் கனவை துரத்திக் கொண்டிருக்கிறோம் என உணரும் லோமன் தற்கொலை செய்து கொள்வதே இதிலிருந்து மீளும் வழி என நினைக்கிறார். திடீரென கார் அவரது கட்டுப்பாட்டினை இழக்கிறது. சிறிய விபத்து ஏற்படுகிறது. அதிலிருந்து காப்பாற்றப் படுகிறார்
இது தற்செயல் நிகழ்வில்லை. திட்டமிட்ட விபத்து என்று அறிகிறாள் அவரது மனைவி லிண்டா. அவர் சிலகாலமாகவே இப்படித் தற்கொலைக்குத் திட்டமிடுவதை அறிந்த அவள் எப்படியாவது அவரைச் சமாதானம் செய்து மகிழ்ச்சியோடு வைத்துக் கொள்ள முயலுகிறாள்.
வீடு திரும்பும் லோமன் இரண்டு பெரிய பெட்டிகளைத் தூக்க முடியாமல் தூக்கிக் கொண்டு வீட்டிற்குள் வருகிறார். அந்தக் காட்சி ஒரு குறியீடு போலவே தோன்றுகிறது.
அவரது கடந்தகாலம் தான் அந்தப் பெட்டிகளாகக் கனக்கிறதோ என்னவோ

ஏமாற்றத்துடன் வீடு திரும்பியவரை லிண்டா இனி இப்படி சுற்றியலைய வேண்டாம். வயதாகிவிட்டது. வீட்டில் நிம்மதியாக ஓய்வெடுக்கும்படி சொல்கிறாள். ஆனால் குடும்பத்திற்காக உழைத்துக் கொண்டேயிருக்க வேண்டும் என நினைக்கும் லோமன் அதை விரும்பவில்லை.
அவர் தனது இரண்டு மகன்களின் எதிர்காலம் பற்றிக் கவலைப்பட்டுக் கொண்டேயிருக்கிறார். பிள்ளைகள் தன்னைப் போல ஆகிவிடக்கூடாது என்பதில் கவனமாக இருக்கிறார். அவர்கள் ஏதாவது தொழில் செய்து நிறையப் பணம் சம்பாதிக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறார்.
வில்லியின் இளைய மகன் ஹேப்பி வியாபாரத்தில் ஓரளவு வெற்றி பெற்றிருக்கிறான் ஆனால் மூத்த மகன் பிஃப் பல வருடங்களாகப் பலவிதமான திருப்தியற்ற வேலைகளைச் செய்து தோற்றுப் போய் தனது 34வது வயதில் மீண்டும் வீடு வந்து சேருகிறான்
இதனால் லோமன் அவன் மீது கோபம் கொள்கிறார். அவனை உதவாக்கரை என்று திட்டுகிறார். அண்ணன் தம்பி இருவரும் இணைந்து புதிய தொழில் துவங்கக் கனவு காணுகிறார்கள். அதற்கான முதலீடு திரட்டுவது பற்றி யோசிக்கிறார்கள். தந்தை இதை விரும்பவில்லை. தந்தையின் சிறகுகளுக்குள் பிள்ளைகள் அடங்கியிருக்க முடியாது. அவர்களுக்கான வானில் அவர்கள் தனியே பறப்பது தான் சரியானது என நினைக்கிறார்கள்.

உங்களுக்காக உங்களின் தந்தை நிறையக் கஷ்டப்பட்டுவிட்டார். 34 ஆண்டுகளுக்கும் மேலாக உழைத்துவிட்டார். அவருக்கு ஓய்வு கொடுங்கள் . அவர் வேலை செய்தது போதும் என்கிறார் லிண்டா .
நாங்கள் வேலை செய்து சம்பாதித்து அவரைக் காப்பாற்றுகிறோம் என்கிறார்கள் பிள்ளைகள்
ஆனால் அதை லோமன் விரும்பவில்லை. தனது சம்பாத்தியத்தில் மட்டுமே தான் வாழ வேண்டும் என்று நினைக்கிறார். தனது சாவில் கூடக் குடும்பத்தின் நலமே முக்கியமாக இருக்கும் என்று சொல்கிறார்.

பிள்ளைகள் தன்னைப் புரிந்து கொள்ளவில்லை என்று உறுதியாக நம்புகிறார் லோமன். பிள்ளைகளுக்கோ தந்தை விரும்புவது போல நாம் நடந்து கொள்ள முடியாது. அவர் நம்மைப் புரிந்து கொள்ளமறுக்கிறார் என்று ஆதங்கம். இவர்களுக்கு நடுவில் லோமனின் மனைவி ஊசலாடுகிறார். அவளுக்குக் கணவரும் முக்கியம். பிள்ளைகளும் முக்கியம்.
ஒவ்வொருவரும் மற்றவரின் எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ப வாழத் தவறுகிறார்கள். இதனால் அடுத்தவர் மீது குற்றம் காணுகிறார்கள். ஒரு காட்சியில் லோமனைப் பற்றி அவரது மனைவி பிள்ளைகளிடம் கோபத்தில் வெடித்துப் பேசுகிறாள். அது லோமனைப் பற்றியது மட்டுமில்லை. ஒரு குடும்பத்தில் தந்தையின் நிலை மற்றும் பங்களிப்பு பற்றிய உண்மையான வெளிப்பாடாகும்
ஒரு நாள் பிஃப் தனது பழைய முதலாளியைச் சந்தித்து கடன் கேட்கப்போவதை அறிந்து லோமன் மகிழ்ச்சி அடைகிறார். எப்படியாவது அவரிடம் பேசி கடனை வாங்கிவிடு, புதிய தொழிலை ஆரம்பி என்று உற்சாகப்படுத்துகிறார். அந்தக் காட்சியில் தான் லோமன் சந்தோஷமாக இருக்கிறார். உற்சாகமாக நடந்து கொள்கிறார்.
வில்லியின் மோசமான மனநிலை மற்றும் சமீபத்திய கார் விபத்து குறித்துக் கவலைப்படும் லிண்டா, அவர் தனது சொந்த நகரத்தில் வேலை செய்ய அனுமதிக்குமாறு முதலாளி ஹோவர்ட் வாக்னரைக் கேட்டுக்கொள்ளும்படி சொல்கிறாள்.
இதை அடுத்து லோமன் தனது முதலாளியைச் சந்தித்துத் தனது அடுத்த விற்பனை பயணம் பற்றி விவாதிக்க முயலுகிறார். ஆனால் முதலாளி அவர் இனி வேலையில் தொடரவேண்டியதில்லை. ஓய்வெடுக்கவேண்டிய வயது வந்துவிட்டது என்று சொல்லி வேலையை விட்டு நிறுத்திவிடுகிறார்
அந்தக் காட்சியில் முதலாளியின் அறையில் லோமன் தன்னை மீறி அழுகிறார். மனதைத் தொடும் காட்சியது.

பிஃப். புதிய தொழிலைத் தொடங்க முன்னாள் முதலாளியிடமிருந்து கடனைப் பெற முயல்கிறான் ஆனால் அது நடக்கவில்லை. முதலாளியின் பேனா ஒன்றைத் திருடிக் கொண்டு ஒடிவந்துவிடுகிறான் பிஃப். சிறிய குற்றத்தின் வழியே அவன் உறவை புதுப்பித்துக் கொள்ள முயலுகிறான்.
ஒரே நாளில் தந்தை மகன் இருவரும் ஏமாற்றம் அடைகிறார்கள். ஒரு இரவுவிடுதியில் அவர்கள் சந்தித்துக் கொள்ளும் போது மகன் கெட்ட செய்தியைச் சொல்ல முற்படுவதைக் கேட்பதற்கு லோமன் விரும்பவில்லை. பிஃப் தந்தையிடம் பொய் சொல்ல முயன்று தோற்றுப் போகிறான். இதனால் தந்தைக்கும் மகனுக்கும் இடையில் பெரிய வாக்குவாதம் ஏற்படுகிறது,
வேலை பறி போன லோமனுக்கு அவரது ஒரே நண்பரும் அண்டை வீட்டாருமான சார்லி வேலை தர முன்வருகிறார். ஆனால் லோமன் அதை ஏற்கவில்லை. கடனாகக் கொஞ்சம் பணம் மட்டும் வாங்கிக் கொள்கிறார்.
ஒரு காட்சியில் மகனின் வேலை பற்றிப் பேசிக் கொண்டிருக்கும் போது லோமனின் மனைவி லிண்டா குறுக்கிடுகிறாள். அவளைக் கடிந்து கொள்கிறார் லோமன். இரண்டாம் முறையாக இது போலக் குறுக்கிட்டுப் பேச முற்படும் போது லோமன் முறைத்தபடி அவள் வாயை மூடும்படி சொல்கிறார். இதைக் கண்ட மகன் ஆத்திரமாகி அம்மா விஷயத்தில் இன்னொரு முறை இப்படி நடந்தால் சும்மா இருக்க மாட்டேன் என்று மிரட்டுகிறான். சட்டெனத் தனது தவற்றை உணர்ந்து தலைகவிழ்கிறார். இந்தக் காட்சியில் ஹாஃப்மேன் மற்றும் மல்கோவிச்சின் நடிப்பு சிறப்பானது
நகரவாழ்க்கை லோமனுக்கு மூச்சுமுட்டுகிறது. தனக்கு நண்பர்களேயில்லை என்பதை உணர்ந்திருக்கிறார். வீட்டின் தேவைகளுக்கு ஏற்ப சம்பாதிக்க முடியவில்லை என்ற குற்றவுணர்வு அவரை வேதனைப்படுத்துகிறது. இதைக் காட்டிக் கொள்ளாமல் கடன் வாங்கிக் குடும்பத்தை நடத்துகிறார். கற்பனையான திட்டங்களை உருவாக்குகிறார். தனது பிள்ளைகளின் நலனிற்காகத் தான் உயிருடன் இருப்பதை விடச் சாவதே மேல் என்று உணருகிறார். காரணம் அவர் இறந்து போனால் அவரது இன்சூரன்ஸ் பணம் மகனுக்குக் கிடைக்கும். அதைக் கொண்டு அவன் ஒரு தொழில் துவங்கலாம் என்பதே

வில்லி லோமன் நிகழ்காலத்திலிருந்து கடந்தகாலத்திற்குள் அடிக்கடி நழுவிவிடுகிறார். இரண்டுக்குமான கோடு அவருக்குள் அழிந்துவிடுகிறது. ஆகவே இறந்தவர்களுடன் உரையாடுகிறார். வில்லி ஒரு மோசமான கணவர் மற்றும் ஒரு மோசமான தந்தை இத்தோடு தோற்றுப்போன விற்பனையாளர் , இந்த உண்மைகளை அவர் உணர்ந்திருப்பது தான் அவரை அதிகம் துயரமடையச் செய்கிறது.
பிஃப் ஏன் தந்தையை வெறுக்கிறார் என்பதற்கு ஒரு காட்சி விவரிக்கப்படுகிறது. அதில் தற்செயலாக அவர் தந்தையை ஒரு இளம்பெண்ணுடன் விடுதியின் படுக்கை அறையில் காணுகிறார்.. அந்த சம்பவம் தந்தையிடமிருந்து மகனை விலகிப் போகச் செய்கிறது. தந்தையின் மறுபக்கத்தை மகன் அறியும் தருணமது
உலகம் அவரைப் பந்தாடுகிறது. வறுமை அவரைத் துரத்துகிறது. உலகிடம் காட்டமுடியாத தனது கோபத்தைக் குடும்பத்திடம் காட்டுகிறார் லோமன். வில்லிக்கு எப்பொழுதும் எதைப் பற்றியும் இரண்டாவது எண்ணமே கிடையாது. அவர் தனக்குள்ளாகவே வாழுகிறார். தனது முடிவே இறுதியானது என்று நம்புகிறார். .
தந்தையின் மீதான அன்பை எப்படி வெளிப்படுத்துவது என்று பிள்ளைகளுக்கும் தெரியவில்லை. கழிப்பறையினுள் அமர்ந்தபடியே லோமன் கடந்தகாலத்திற்குள் சஞ்சரிப்பதும் ஒரு வெயிட்டர் கதவைத் தட்டி உதவி செய்வதும் சிறப்பான காட்சி.
தனது மகன் தன்னை மன்னித்துவிட்டதை லோமன் ஒரு காட்சியில் உணர்ந்து கொள்கிறார். அப்போதே அவர் தனது கடைசி முடிவை எடுத்துவிடுகிறார். இறுதிவரை பிஃப் தந்தையின் கனவை நிறைவேற்றவில்லை. ஆனால் அவன் தந்தையின் நிழல் போல மாறிவிடுகிறான். தந்தையின் பாதையில் நடந்து செல்ல ஆரம்பிக்கிறான்.

“You can’t eat the orange, and throw the peel away—a man is not a piece of fruit” என்ற வில்லியின் சொற்கள் என்றைக்குமானது.
நாடகம் பார்ப்பது போலவே படம் உருவாக்கபட்டிருக்கிறது. சில காட்சிகளில் அப்படியே நாடக அரங்க அமைப்பு பயன்படுத்தபட்டிருக்கிறது. இந்தக் குறைகளை மீறி நம்மைப் படத்தோடு ஒன்றச் செய்வது டஸ்டின் ஹாஃப்மேனின் நடிப்பு. அவர் உணர்ச்சிகளை வெளிப்படுத்தும் விதமும் உடல்மொழியும் அபாரமானது.
நமது வாழ்க்கை என்பது ஒரு வணிகமே. இதில் ஏதேதோ வழிகளில் நம்மை நாமே விற்றுக் கொண்டிருக்கிறோம். இந்த அபத்த நாடகத்தை நாம் உணரும் போது மீளாத் துயரமடைகிறோம். நாம் விரும்பும் வாழ்க்கையும் கிடைத்திருக்கும் வாழ்வும் வேறு வேறானது. இந்த இடைவெளியைக் கடக்கவே முடியாது. ஏமாற்றத்தின் கருநிழல் கவ்விக் கொள்ளும் போது நாமும் வில்லி லோமனைப் போலாகிவிடுகிறோம். இதைத் தவிர்க்கவே முடியாது.
நாளை லோமனின் பிள்ளைகளும் முதுமையில் இப்படித் தான் நடந்து கொள்வார்கள். காலம் காலமாக வாழ்க்கை அப்படியே தான் தொடருகிறது.
June 19, 2022
கவிதையே அடையாளம்
நேற்று வெய்யிலின் கவிதைகள் குறித்த ஒரு நாள் கருத்தரங்கில் கலந்து கொள்வதற்காகச் சென்றிருந்தேன்.
அந்த அரங்கில் ஒரு இளைஞர் தயக்கத்துடன் ஒரு புத்தகத்தில் கையெழுத்து வேண்டும் என்று கேட்டார். மகிழ்ச்சியோடு கையெழுத்திட்டுத் தருகிறேன் என்று அவரிடமிருந்து புத்தகத்தை வாங்கினேன்.
அது கவிதையின் கையசைப்பு என்ற சமகால உலகக் கவிஞர்கள் பற்றிய எனது புத்தகம். முன்பே வாங்கிப் படித்திருக்கிறார்.

கையெழுத்திடுவதற்கு முன்பாக அந்தப் புத்தகத்தை லேசாகப் புரட்டினேன். நிறைய வரிகளை அடிக்கோடிட்டிருக்கிறார். சில பக்கங்களின் ஓரத்தில் ஏதோ குறிப்புகள் போல கிறுக்கலாக எழுதியிருக்கிறார். சில கவிதை வரிகளை அடுத்து பூவின் படம் வரைந்திருக்கிறார். மேலும் கீழுமாக கோடுகள் போன்ற இரண்டு வரிகளை இணைத்துப் பார்த்திருக்கிறார். இப்படி விருப்பமான முறையில் ஆழ்ந்து ரசித்துப் படித்திருப்பது எனக்குப் பிடித்திருந்தது.
சமகால உலகக் கவிதைகளின் தொகுப்பினை பிரம்மராஜன் 1989ல் கொண்டு வந்திருந்தார். அற்புதமான தொகுப்பு. அந்தத் தொகுப்பினை இப்போதும் வைத்திருக்கிறேன். அடிக்கடி எடுத்துப் படிக்கிறேன். பிரம்மராஜனுக்குப் பிறகு அப்படியான விரிவான தொகை நூல் எதுவும் தமிழில் வெளியாகவில்லை.
கொரியக் கவிஞர் கோ யுன் கவிதைகளை ஆங்கிலத்தில் வாசித்த போது இவரைப் போன்ற மகத்தான கவிஞரைத் தமிழில் அறிமுகம் செய்யலாமே என்ற எண்ணம் தோன்றியது. கோ யுன் நிறைய எழுதியிருக்கிறார். தொடர்ச்சியாக அவரது இருபது கவிதை தொகுப்புகளை வாங்கிப் படித்தேன். அதைத் தேடி வாங்கியதே பெரிய கதை. படிக்க படிக்க வியப்பும் மயக்கமும் உருவானது. இவரைப் போன்ற மகத்தான கவிகளை அறிமுகம் செய்யலாமே என்று உருவானது தான் கவிதையின் கையசைப்பு தொடர்.
தடம் இதழில் ஓராண்டு வெளியானது. இதில் 12 முக்கியக் கவிஞர்களின் கவிதைகளை அறிமுகம் செய்து சமயவேல் மொழியாக்கம் செய்த கவிதைகளுடன் வெளியிட்டிருந்தேன். இந்தத் தொடருக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. இந்த நூலைத் தேசாந்திரி பதிப்பகம் வெளியிட்டிருக்கிறது.
பொதுவாக நாவல், சிறுகதைகள். கட்டுரை நூல் அளவிற்குக் கவிதை சார்ந்த நூல்களுக்கு விமர்சனம் வருவதில்லை. யாரும் பொதுவெளியில் பேசுவதில்லை. ஆனால் தீவிரமான வாசகர்கள் கவிதை சார்ந்த நூல்களைக் கவனமாக வாசிக்கிறார்கள். ஆழ்ந்து புரிந்து கொண்டிருக்கிறார்கள் என்பதைத் தனிப்பட்ட முறையில் அறிந்திருக்கிறேன்.
மேஜையின் மீது வைக்கப்பட்ட ரொட்டி
ஒரு குவளை நீர்
அல்லது ஒரு துளி உப்பு
போன்றதே கவிதையும்
என்ற ரூபஸின் வரிகளுக்குக் கீழே அந்த இளைஞன் கோடு போட்டிருந்ததைக் கவனித்தேன்.
ஒரு புத்தகம் எப்படி வாசிக்கப்படுகிறது. எந்த வரிகள் யாரை மகிழ்ச்சிப்படுத்துகின்றன அல்லது துயரமடையச் செய்கின்றன என்பது புதிரானதே. ஒரு புல் நிசப்தமாக வளர்ந்து கொண்டிருப்பது போலத் தான் புத்தகங்களும் வளர்ந்து கொண்டிருக்கின்றன.
அந்த இளைஞருடன் பேச விரும்பினேன். ஆனால் கையெழுத்து வாங்கியதும் கூச்சத்துடன் விலகிப்போய்விட்டார்.
அதுவும் எனக்குப் பிடித்திருந்தது. அவர் நிச்சயம் ஒரு இளம் கவிஞராக இருக்கக்கூடும். அல்லது கவிதைகளை ரகசியமாக எழுதிக் கொண்டிருக்கக் கூடும்.
உலகின் முன்னால் தன்னை ஒருவன் கவிஞனாக அடையாளப்படுத்திக் கொள்வதற்கு முன்னால் கூச்சமும் தயக்கமும் நிராகரிக்கப்படுவோமோ என்ற பயமும் கொண்டிருப்பது இயல்பே.
இந்தத் தயக்கங்களை அவனது கவிதைகளே தாண்ட வைக்கும். கவிதையே அவனை வழிநடத்தி அழைத்துச் செல்லும். கவிஞர்கள் அந்தரங்கமாகக் கவிதையோடு உரையாடிக் கொண்டேயிருக்கிறார்கள். கவிதைகளைத் தனது தனிமைத்தோழனாகக் கொண்டிருக்கிறார்கள்.
கவிதையின் கையசைப்பு என்ற புத்தகம் இது போன்ற ஒரு இளைஞன் கையில் சென்று சேர வேண்டும் என்று எழுதும் நாளில் ஆசை கொண்டிருந்தேன்.
புத்தகம் பல்லாயிரம் பேரால் வாசிக்கப்படுவதை விடவும் நாம் விரும்பும் சிலரால் வாசிக்கப்படுவது ஏற்படுத்தும் மகிழ்ச்சி நிகரில்லாதது.
••
வண்ணங்கள் எதையும் தொடாமல் தூரிகை இல்லாமலே சிறுவர்கள் காற்றில் ஓவியம் வரைவார்கள். அந்த அரூப ஓவியங்கள் அவர்கள் கண்ணுக்கு மட்டுமே புலப்படக்கூடியது. பால்யத்தின் வாசனையில்லாமல் ஒருவனால் கவிதை எழுதிவிட முடியாது. காற்றில் குதிரையை வரைந்து அதைப் பறக்கச் சொல்லும் சிறுவனின் ஆசை போன்றதே கவிஞனின் மனதும். உலகம் இச்செயலைப் பரிகசிக்கக் கூடும். ஆனால் வாழ்க்கை இது போலத் தூய சந்தோஷங்களை வேண்டவே செய்கிறது
மரங்களைப் பற்றிப் பேசுவதென்பதும்
குற்றமே.
காரணம் அது நீதியின்மையைப் பற்றிய மௌனத்தை
உள்ளுணர்த்துகிறது
என்றொரு பெர்டோல்ட் பிரக்டின் கவிதைவரியிருக்கிறது. இக்கவிதை இயற்கையை அதிகாரத்திற்கு எதிரான மௌனசாட்சியாக முன்னிறுத்துகிறது. வோர்ட்ஸ்வொர்த் போன்ற் கவிஞர்கள் இயற்கை வியந்து பாடும் சூழலில் இயற்கையை நீதியின்மையின் சாட்சியமாகப் பிரெக்ட் முன்வைக்கிறார்.
ஆயுதங்களைக் கொண்டு மட்டுமில்லை
சிரிப்பாலும் ஒருவரைக் காயப்படுத்த
முடியும்
என்றொரு ரூபஸின் கவிதைவரியிருக்கிறது. பொதுப்புத்தி உருவாக்கி வைத்துள்ள பிம்பங்களுக்கு மாற்றை உருவாக்குவது கவிதைகளே.
– கவிதையின் கையசைப்பு நூலில் ஒரு பகுதி
June 17, 2022
உண்மையான பரிசு
எதிர்பாராமல் நடக்கும் நிகழ்வுகளை எப்படிப் புரிந்து கொள்வது. நேற்று வரை சரியாக நடந்த விஷயம் இன்று நடக்க மறுப்பது ஏன். நாம் விரும்பாத மாற்றம் நடந்துவிடும் போது எப்படி ஏற்றுக் கொள்வது. இந்தக் கேள்விகளுக்கான பதிலாக உருவாக்கப்பட்டிருக்கிறது Who are you? அனிமேஷன் திரைப்படம்.
ஒரு எழுத்தாளருக்கும் பரிசுப் பொருளை ஒப்படைக்க வந்த இளம்பெண்ணிற்குமான உரையாடலின் வழியே செயலூக்கத்திற்கான வழி அடையாளம் காட்டப்படுகிறது
13 நிமிஷத்துக்குள் எத்தனை நிகழ்வுகளை, மாற்றங்களை அழகாகச் சித்தரித்துள்ளது என வியப்பாக உள்ளது.
அவன், அவள் இருவரும் Who are you? என்ற ஒரே கேள்வியைச் சந்திக்கிறார்கள். ஆனால் இருவேறு அனுபவத்தை விவரிக்கிறார்கள். அவர்களுக்கு இடையில் நிகழும் சந்திப்பு முடிவில் இருவருக்கும் மகிழ்ச்சியை உருவாக்குகிறது
எது உண்மையான பரிசு என்பதை ஜென் போல விளக்குகிறது இப்படம்.
S. Ramakrishnan's Blog
- S. Ramakrishnan's profile
- 658 followers

