பெயரில்லாத பெண்ணும் நினைவில்லாத ஆணும்
எகிப்திய திரைப்படமான “feathers” கேன்ஸ் திரைப்பட விழாவில் கிராண்ட் பிரிக்ஸ் பரிசை வென்றுள்ளது. இயக்குநர் ஓமர் எல் ஜோஹைரியின் முதல் படம்.

படம் துவங்கிய சில நிமிஷங்களிலே மலையாள இயக்குநர் ஜி.அரவிந்தன் இயக்கிய கும்மாட்டி படம் நினைவில் வந்து போனது. அதே போன்ற கதைக்களம். ஆனால் இப்படம் மையம் கொள்ளும் பிரச்சனைகளும் சித்தரிப்புகளும் வேறுவிதமானவை.
ஜோஹைரி பெரும்பாலும் தொழில்முறை அல்லாத நடிகர்களைப் பயன்படுத்தியிருக்கிறார். அது தான் படத்தை மிகவும் யதார்த்தமாக உணரச் செய்கிறது.

கமல் சாமியின் ஒளிப்பதிவு மிகச்சிறப்பானது. கேமிரா கோணங்கள் வியப்பூட்டுகின்றன. மிகவும் இறுக்கமான பிரேம்கள். ஆஃப்-சென்டர் ஃப்ரேமிங் சாம்பல் மற்றும் வெளிறிய நிறத்தேர்வு. மற்றும் கதை நிகழும் விநோதமான நிலவெளி, சிறார்களின் மாறாத விளையாட்டுத்தனம். விலங்குகளின் குறுக்கீடு. மெல்லிய நகைச்சுவை, நிழல் போல அமைதியாக நடந்து கொள்ளும் பெயரில்லாத பெண், கைவிடப்பட்ட உலகம் போன்ற வாழ்விடம். இவை யாவும் ஒன்றுகூடிப் படத்தைத் தனித்துவமாக்குகின்றன
எகிப்திய தொழிற்சாலை நகரம் ஒன்றில் வாழும் வறுமையான குடும்பத்தின் கதையைப் படம் சித்தரிக்கிறது. அவர்கள் அழுக்கடைந்து போன மோசமான குடியிருப்பு ஒன்றில் வசிக்கிறார்கள். அதற்கும் மூன்று மாதமாக வாடகை செலுத்தவில்லை.
அவர்களின் வாழ்விடம் தூசி நிறைந்த, புறக்கணிக்கப்பட்ட தொழில் நகரத்தைப் போலவே சித்தரிக்கபடுகிறது. கணவனுக்கும் பெயர் கிடையாது. மனைவி பாழடைந்த அடுக்குமாடிக் குடியிருப்பில் அதிகாலையில் எழுகிறாள். காலை உணவைச் சமைக்கிறாள், வீட்டிற்குத் தேவையான மளிகைப் பொருட்களுக்கான பணத்தை வாங்குவதற்காகக் கணவன் முன்பு அமைதியாகக் காத்திருக்கிறாள். அவன் பூட்டிவைத்திருக்கும் பணப்பெட்டியைத் திறந்து மெதுவாகப் பழைய நோட்டுகளை எண்ணுகிறான். வீட்டுச் செலவைக் குறைத்துக் கொள்ளச் சொல்கிறான். இரவு உணவிற்குக் கத்தரிக்காய் சமைக்க வேண்டும் என்று உத்தரவு போடுகிறான். அவனது கட்டளையை ஏற்றுக் கொண்டு அவனை நேர் கொள்வதைத் தவிர்க்கும் கண்களுடன் ஓரமாக நிற்கிறாள்.

அருகிலுள்ள தொழிற்சாலையிலிருந்து வரும் புகை அறைக்குள் பரவும் போது, குழந்தையைப் பாதுகாப்பதற்காக அவசரமாகச் சென்று ஜன்னல்களைப் பூட்டுகிறாள்; இப்படி அவளது உலகம் தினசரி செயல்களால் நிரம்பியது.
கணவன் தனது மகனின் நான்காவது பிறந்தநாளைக் கொண்டாட ஏற்பாடு செய்கிறான். பிறந்தநாள் கேக் தயாரிக்கப்படுகிறது. பலூன்கள், தோரணங்கள் என வீடு அலங்காரம் செய்யப்படுகிறது. பையன் புத்தாடைகள் அணிந்து கொள்கிறான். நண்பர்கள் ஒன்று கூடுகிறார்கள். நடனம் நடக்கிறது.
பிறந்த நாள் கொண்டாட்டத்திற்காக சர்க்கஸிலிருந்து ஒரு மேஜிக் கலைஞர் அழைக்கப்பட்டிருக்கிறார். அவர் சிறிய மேஜிக்குகளைச் செய்து காட்டிக் கைதட்டு பெறுகிறார்.
மகனின் பிறந்தநாளை வாழ்த்துவதற்காக வந்த தனது முதலாளி தரும் பணத்தையும் பரிசுகளையும் ஏற்றுக் கொண்டு அவரை வழியனுப்பி வைக்கிறான் கணவன்
மேஜிக் செய்பவன் ஒரு மரப்பெட்டியினுள் அவனை ஒளிந்து கொள்ளும்படி அழைக்கிறான். கணவன் மரப்பெட்டிக்குள் ஒளிந்து கொண்டதும் மேஜிக் கலைஞன் தனது மந்திரக்கோலை அசைத்துவிட்டு பெட்டியிலிருந்து ஒரு வெள்ளை நிறக் கோழியை வெளியே எடுக்கிறான். எல்லோரும் சிரிக்கிறார்கள்

பின்பு கோழியை அதே பெட்டியில் வைத்து மூடி மந்திரம் போடுகிறான். இப்போது கணவன் மறு உருவம் பெற்று வரவில்லை. ஏதோ தவறு நடந்துவிடுகிறது. அவன் கோழியாகவே இருக்கிறான்.
பிறந்தநாள் விருந்திற்கு வந்தவர்கள் மேஜிக் கலைஞனுடன் சண்டையிடுகிறார்கள். அவனால் கோழியை மறுபடியும் கணவனாக மாற்ற முடியவில்லை. அந்தக் கோழியை எப்படி நடத்த வேண்டும் என்று அவளுக்குக் குழப்பமாக இருக்கிறது.
மறுநாள் அந்தக் கோழியை வைத்துக் கொண்டு மேஜிக் கலைஞனைத் தேடி அலைகிறாள் . அவனைக் கண்டுபிடிக்க முடியவில்லை. இந்தக் கோழி தான் இனிமேல் தனது கணவன் என்று உணரும் அவள் அதைக் கவனித்துக் கொள்வதைத் தனது கடமையாக உணருகிறாள்
கோழியின் மனைவியாக அதற்குத் தேவையான உணவைத் தயாரித்துத் தருகிறாள். கணவனின் படுக்கையிலே கோழியை நடக்கவிடுகிறாள். அந்தப் படுக்கை முழுவதும் சிதறிக்கிடக்கும் உணவுத்துகள்கள் குறியீடு போலவே உணர்த்தப்படுகின்றன
கோழியை மீண்டும் மனிதனாக மாற்ற மாந்திரீகம் செய்கிறார்கள். ஆனால் அதிலும் தோல்வியே ஏற்படுகிறது.
அப்பா கோழியாக உருமாறியதைப் பிள்ளைகளால் ஏற்க முடியவில்லை. அவர்களைச் சமாதானப்படுத்த ஏதேதோ செய்கிறாள். வறுமையான சூழ்நிலை காரணமாக அவளால் வாடகை தர முடியவில்லை. அவளுக்கும் வேலை கிடைக்கவில்லை. நண்பர்களும் உறவினர்களும் முடியாதவகையில் உதவுகிறார்கள். முடிவில் எட்டு வயதான மகனைத் தந்தை வேலை செய்த தொழிற்சாலைக்கே அனுப்பி வைக்கிறாள்.

மகன் முதன்முறையாக வேலைக்குச் செல்லும் போது பணியிடம் வரை அவள் அழைத்துக் கொண்டு போய்விடும் காட்சி மிக அழகானது
ஒரு பணக்கார வீட்டில் பணிப்பெண்ணாக வேலைக்குச் சேருகிறாள். அங்கே மீதமான இறைச்சி மற்றும் சாக்லேட்டுகளைத் திருடிச் செல்லும் போது பிடிபடுகிறாள். அந்த வேலை பறிபோகிறது.
படத்தில் மனைவிக்குப் பெயர் கிடையாது. அவள் ஒரு பெண். குடும்பத்தலைவி. கணவனின் அதிகாரத்திற்குக் கட்டுப்பட்டவள்.. மனைவியாக அவள் சந்திக்கும் நெருக்கடிகள். அவமானம் மற்றும் பிரச்சனைகளைச் சிறப்பாகப் பதிவு செய்திருக்கிறார்கள்.
அவளுக்குப் புதிய வேலை கிடைக்கிறது. முதலாளி அவள் மீது பரிவு கொள்கிறார். தேவையான உதவிகளைச் செய்து தருகிறார்.
இதற்கிடையில் கணவன் காணாமல் போய்விட்டான் என்று காவல்துறையில் புகார் கொடுத்து உரிய சான்றிதழுடன் வந்தால் மட்டுமே மகனுக்கு உரிய வேலையும் சம்பளமும் தர முடியும் என்று தொழிற்சாலை நிர்வாகம் சொல்கிறது.
புகார் கொடுக்கக் காவல் நிலையம் செல்கிறாள். அங்கே உருக்குலைந்த நிலையில் அவளது கணவனை அடையாளம் காட்டுகிறார்கள். அவன் எப்படி இந்த நிலைக்கு வந்தான். அவனுக்கு என்ன நடந்தது என்று காட்டப்படுவதில்லை. ஆனால் நினைவுகளற்று உடல் முழுவதும் காயத்துடன் மயங்கிக் கிடக்கிறான்..
அவனை வீட்டிற்குக் கொண்டு வந்து தேவையான மருத்துவ உதவிகள் செய்து கவனித்துக் கொள்கிறாள். அன்றாடம் அவனைக் குளிக்க வைத்து உடை உடுத்தி உணவு கொடுத்துப் பராமரிக்கிறாள். ஒரு வார்த்தை கூடப் பேசாத அவனை உலுக்கி வாயில் விரலைக் கொடுத்துத் திறந்து பேசும்படியாக அவள் கத்தும் காட்சி அபாரமானது

படம் முழுவதும் அவள் மிகவும் அரிதாகவே பேசுகிறாள் அல்லது புன்னகைக்கிறாள். குழந்தைகளுடன் விளையாடும் போது மட்டுமே முகத்தில் மகிழ்ச்சி வெளிப்படுகிறது. கணவனின் கட்டளைகளுக்குக் கீழ்ப்படியும் போது அவளது கண்கள் தாழ்ந்தேயிருக்கின்றன.
அதிகாரத்துடன் நடந்து கொள்ளும் கணவனை விடவும் அந்தக் கோழி மேலானது எனப் பல நேரங்களில் நினைக்கிறாள். நினைவுகளில்லாமல் கணவன் திரும்பி வந்த பிறகு அவளது குடும்பச் சுமை கூடிவிடுகிறது.
காஃப்காவின் உருமாற்றம் கதை கரப்பான்பூச்சியாகிவிடும் கிரிகோர் சாம்சாவின் நெருக்கடிகளைச் சித்தரிக்கிறது. இதன் எதிர்நிலை போலக் கோழியாகிவிட்ட கணவனின் உலகை அவனது மனைவி எதிர்கொள்ளும் அபத்த, துன்பவியல் நிகழ்வுகளின் மூலம் படம் விரிவு கொள்கிறது.

படம் முழுவதும் அவள் தீர்க்க முடியாத பொறுப்புகளை ஏற்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறாள். முடிவில் தலையணை மற்றும் சமையலறைக் கத்தி அவளுக்கான விடுதலையின் திறவுகோலாக மாறுகிறது,
மேஜிகல் ரியலிசக் கதை போன்ற ஒன்றைப் பெண்ணிய நோக்கில் அழுத்தமான சமூகப்பிரச்சினையாக மாற்றியிருப்பது படத்தின் தனிச்சிறப்பு.
ஒரு அரசியல்வாதி தொடர்ந்து மேடையில் பேசிப்பேசி அவனது குரல் சேவலின் குரலாக மாறிவிடுவதாக ஒரு சிறுகதை எழுதியிருக்கிறேன். சேவற்குரலோன் என்ற அந்தச் சிறுகதை குறும்படமாகவும் வெளியாகியுள்ளது. எனது கதையின் இன்னொரு வடிவம் போலவே இந்தப் படத்தினை உணர்ந்தேன். அது கூடுதலாகப் படத்தை எனக்கு நெருக்கமாக்கியது
.
S. Ramakrishnan's Blog
- S. Ramakrishnan's profile
- 659 followers
