S. Ramakrishnan's Blog, page 81

August 17, 2022

நகுலனைக் கொண்டாடுவோம்

.

நகுலன் நூற்றாண்டினைக் கொண்டாடும் விதமாக அருவம் உருவம் நகுலன் 100 என்ற நூற்தொகுப்பு ஒன்றைக் கவிஞர் ஷங்கர் ராமசுப்ரமணியன் கொண்டு வந்திருக்கிறார். நூல்வனம் இதனை வெளியிட்டுள்ளது.

தொகுக்கப்படாத நகுலனின் சிறுகதைகள், நகுலன் எழுதிய ஆங்கிலக் கவிதைகளின் மொழிபெயர்ப்பு, அவரது ஆங்கிலச் சிறுகதையின் மொழியாக்கம், நகுலனின் வாக்குமூலத்தைச் சித்திரக் கதையாக வெளியிட்டிருப்பது, நகுலனின் பன்முகப் பங்களிப்பை மதிப்பிடும் சிறந்த கட்டுரைகள் என அரிய தொகுப்பாக வெளியாகியுள்ளது.

நகுலனின் நூற்றாண்டினை இதைவிடச் சிறப்பாகக் கொண்டாட முடியாது. இந்நூல் நகுலனை அறிந்து கொள்ள விரும்பும் இளம் வாசகனுக்குச் சிறந்த வாசலாக அமையும்.

பலமுறை ,கோணங்கியும் நானும் திருவனந்தபுரத்திலுள்ள நகுலன் வீட்டிற்குச் சென்று உரையாடி மகிழ்ந்திருக்கிறோம்.. நகுலனுக்கு விளக்கு விருது வழங்கப்பட்ட விழாவில் உரையாற்றியிருக்கிறேன். நகுலன் என்றும் என் விருப்பத்திற்குரிய படைப்பாளி.

இந்தத் தொகுப்பில் நகுலன் என்பது ஒருவரில்லை என்ற தலைப்பில் நானும் ஒரு கட்டுரை எழுதியிருக்கிறேன்.

நகுலனின் ஆங்கிலக் கவிதைகளை முன்பே வாசித்திருக்கிறேன். முதன்முறையாக அவற்றைத் தமிழில் மொழியாக்கம் செய்திருக்கிறார்கள். நகுலனை மொழியாக்கம் செய்வது எளிதானதில்லை. அந்தச் சவாலைச் சிறப்பாகவே செய்திருக்கிறார்கள். ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு வெளியான கவிதைகளாக இருந்தாலும் இன்றும் அதன் புதுமை மாறவில்லை. நேற்று எழுதியது போல அத்தனை புதியதாக, நெருக்கம் தருவதாக உள்ளது.

வாக்குமூலம் குறுநாவலை கிராபிக் நாவலாக உருவாக்கியிருப்பது பாராட்டிற்குரியது.

ஆ. பூமிச்செல்வம், ந. ஜயபாஸ்கரன், எம். யுவன், வரதராஜன் ராஜூ, கல்யாணராமன், ப. சகதேவன் என்னும் கிருஷ்ணசாமி, ஆனந்த், கலாப்ரியா, சி. மோகன், சுகுமாரன், கோணங்கி, அய்யப்ப பணிக்கர், பி. ரவிகுமார், ஆர் ஆர் சீனிவாசன், எஸ். சண்முகம், கண்டராதித்தன், ராணிதிலக், ஸ்ரீநேசன், ஆசை, சர்வோத்தமன் சடகோபன், பிரவீண் பஃருளி, விக்ரமாதித்யன், ஜி. முருகன், சபரிநாதன் என முக்கிய படைப்பாளிகள் நகுலனின் கவிதைகளையும் அவரது ஆளுமையினையும் பல்வேறு கோணங்களில் ஆராய்ந்து கட்டுரை எழுதியிருக்கிறார்கள்.

இப்படி ஒரு நூற்தொகுப்பினை உருவாக்குவதற்காக ஓராண்டிற்கும் மேலாக ஷங்கர் ராமசுப்பிரமணியன் அயராமல் வேலை செய்திருக்கிறார். அந்த அர்ப்பணிப்பு போற்றுதலுக்குரியது. ஷங்கர் ராமசுப்ரமணியனுக்கு என் அன்பும் பாராட்டுகளும்.

அச்சும் புத்தக வடிவாக்கமும் அபாரம். சிற்பம் போல ஒரு புத்தகத்தை தேர்ந்த கலைப்படைப்பாக உருவாக்க வேண்டும் என்பதற்கு இந்நூல் ஒரு உதாரணம். நூல்வனம் மணிகண்டனுக்கு எனது மனம் நிறைந்த வாழ்த்துகள்

••

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on August 17, 2022 23:25

உனது மலர் கொடியிலே

நேற்றிரவு ஜூலியன் பார்ன்ஸ் நாவலைப் படித்துக் கொண்டிருந்த போது திடீரென மனதில் சினிமா பாடலின் வரிகள் தோன்றியது. புத்தகத்தை மூடி வைத்துவிட்டு அந்த பாடலைப் பற்றியே நினைத்துக் கொண்டிருந்தேன். நான் படித்துக் கொண்டிருந்த The Sense of an Ending நாவலுக்கும் இந்த பாடலுக்கும் என்ன தொடர்பு. ஏன் நினைவில் வந்தது என்று புரியவில்லை. இது போல நினைவின் அடுக்கிலிருந்து சில பாடல்கள் மேல் எழுந்து வருவதுண்டு

உனது மலர் கொடியிலே

எனது மலர் மடியிலே

உனது நிலா விண்ணிலே

எனது நிலா கண்ணிலே

பாதகாணிக்கை திரைப்படத்தில் இடம்பெற்ற கண்ணதாசனின் பாடல். எம்.எஸ்.விஸ்வநாதன்-ராமமூர்த்தி இசை. பி.சுசிலா எல்.ஆர்.ஈஸ்வரி இருவரும் இணைந்து மிக அழகாகப் பாடியிருப்பார்கள்.

அந்தப் பாடலை உடனே கேட்க வேண்டும் என இணையத்தில் தேடி பாடலைக் கேட்டு முடித்தேன். ஆனால் மனம் திருப்தி அடையவில்லை. மீண்டும் மீண்டும் அதே பாடலைக் கேட்டுக் கொண்டிருந்தேன்.

பி.சுசிலா, எல்.ஆர்.ஈஸ்வரி இருவரது குரலையும் மாற்றி மாற்றி எனது காந்திமதி சித்தி பாடுவார். அந்த ஞாபகம் எழுந்தது. இன்று அவரில்லை. ஆனால் பாடலின் வழியே அவரது இனிய முகம் தோன்றி மறைகிறது.

நினைவில் வாழுகிறவர்களை எழுப்புவது தான் பாடலின் வேலையா.

உண்மையில் இந்தப் பாடலின் வழியே எதையோ தேடுகிறேன். எதையோ அடைகிறேன். பாடல் ஒரு தூண்டுதல் மட்டுமே.

கேட்கும் போது அடையும் மகிழ்ச்சியை யார் புரிந்து கொண்டால் என்ன, புரியாமல் போனால் என்ன.

காதலனை நினைத்துப் பாடும் பாடல் என்றாலும் இரண்டு பெண்களும் இருவேறு உணர்ச்சி நிலையின் அடையாளமாக இருக்கிறார்கள். பாடலைக் கேட்கும் போது இரண்டு சிறுமிகளின் விளையாட்டு போலவும் தோன்றுகிறது.

உனது மலர், எனது மலர் என்று அவர்கள் மாறி மாறி பூப்பந்தை வீசுவது போலச் சொற்களை வீசிக் கொள்கிறார்கள்

பாடலைக் கேட்கும் நாமும்,

எனது மலர் எங்கேயிருக்கிறது

எனது நிலா எங்கேயிருக்கிறது என்று இந்த விளையாட்டிற்குள் இணைந்து கொள்கிறோம்.

எளிய வரிகளின் வழியே ஆழமான துயரை, துள்ளியாடும் மகிழ்ச்சியை எவ்வளவு அழகாக எழுதியிருக்கிறார் கண்ணதாசன் என வியப்பாக இருக்கிறது.

கண் மயங்கிப் பயணம் போகும்

உனது தோணி கடலிலே

என்ற வரியில் வரும் கண்மயங்கிப் பயணம் போவது பற்றியே நினைத்துக் கொண்டிருந்தேன். எப்போதாவது கிடைக்கும் அரிய அனுபவமது. .

காலம் பார்த்து வந்து சேரும்

எனது தோணி கரையிலே என்று சாவித்திரி பாடும் போது காலம் பார்த்து வந்து சேரும் தோணி தான் காதல் என்பது ரசிக்க வைக்கிறது.

சந்தோஷத்தில் துள்ளியபடியே விஜயகுமாரி பாடுகிறார்

ஆற்று வெள்ளம் தடையை மீறிப்

பாய்ந்து செல்லும் அவரிடம்

அதன் மறுமொழியாகச் சாவித்திரியிடம் வெளிப்படுவது சங்க இலக்கியத்தில் வரும் பெண்ணின் காதலைப் போன்ற பதில்.

ஆசையா……..இன்னுமா ..

அந்த நெஞ்சம் என்னிடம்

இரவில் கேட்கும் போது பாடலின் சுவை மாறிவிடுகிறது.

இதே பாடலை முன்னொரு நாள் ரேடியோவில் கேட்டிருக்கிறேன். அன்று இந்த நெருக்கத்தை அடையவில்லை.

பாடலை அழகாகப் படமாக்கியிருக்கிறார்கள். இருவரின் வீடு. உடைகள். காதணிகள். நெற்றிப்பொட்டு. நெளியும் கூந்தல். திரைச்சீலையை விலக்கி வெளியே வரும் சாவித்திரியின் வலது கன்னத்தில் படிந்துள்ள பிரிவுத்துயரம். நிழலும் வெளிச்சமும் கலந்து அவர் மீது படரும் விநோதம். சாவித்திரியின் முகமும் ரோஜாவும் கொண்ட அந்தக் கால க்ளோசப். (இன்றைக்கு இது போன்ற காட்சிகள் எல்லாம் வழக்கொழிந்து போய்விட்டது. என்றாலும் அந்த அழகு வசீகரமாகவேயிருக்கிறது.) விஜயகுமாரி கண்களில் சந்தோஷம் மின்னுகிறது. அவரது வீட்டின் பிரம்பு நாற்காலி. பெரிய ஜன்னல்கள். பொம்மைப்படகு. பாடலின் ஊடாகத் தென்படும் இரண்டு பழங்கள். கண்ணாடியில் மூன்றாகத் தெரியும் அவர்களின் முகம். ஒவ்வொரு பிரேமும் மனதுக்கு இதம் தருவதாகவே இருக்கிறது

இரவிலே என் நண்பரை அழைத்து இந்தப்பாடலைக் கேட்கச் சொன்னேன். அவர் சிரித்தபடியே உங்களுக்கும் வயதாகிவிட்டது என்றார்.

உண்மை தான் என்று சிரித்தேன்

புதிய உடைகள் நமது வயதை மறைத்துக் கொள்வதைப் போல பழைய பாடல்கள் நம் வயதைக் காட்டிக் கொடுத்துவிடுகிறதோ என்னவோ

•••

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on August 17, 2022 05:01

August 15, 2022

யாருக்கானது உலகம்

 “I like to use simple words, but in a complicated way.”

 Carol Ann Duffy

கரோல் ஆன டஃபி சமகாலப் பிரிட்டிஷ் கவிதைகளில் மிக முக்கியமானவர்

பிரபலமான ஆண்களைப் பற்றி அவரது மனைவியின் குரலால் சொல்லப்படும் கவிதைகளை எழுதியிருக்கிறார். The World’s Wife என்ற தொகுப்பாக வெளியாகியுள்ளது.

கரோல் ஆன் டஃபி ரோமன் கத்தோலிக்கக் குடும்பத்தில் பிறந்தவர். 11 வயதில் கவிதைகளை எழுதத் துவங்கினார். தனது பதினாறு வயதில் லிவர்பூல் கவிஞர்களில் ஒருவரான அட்ரியன் ஹென்றியைச் சந்தித்தார், எட்டு ஆண்டுகள் அவர்களின் நட்பு தொடர்ந்தது. 1999 இல் கவிஞர் டெட் ஹியூஸின் மரணத்திற்குப் பிறகு பிரிட்டனின் Poet Laureateயாக நியமிக்கப்பட்டார். .

“கவிதையில் நான் உண்மைகளைக் கையாள்வதில்லை, உணர்ச்சிகளைக் கையாளுகிறேன் “என்கிறார் கரோல் ஆன் டஃபி

ஈசாப்பை உலகம் அறிந்த அளவிற்கு அவரது மனைவி பற்றி அறியாது. தொட்டதெல்லாம் பொன்னாகும் மைடாஸின் வரத்தைப் பற்றி அவரது மனைவி என்ன நினைக்கிறாள் என்று தெரியாது. சாத்தானின் மனைவி அவனது தீமைகள் பற்றி என்ன கருதுகிறாள். அதைத்தான் கரோல் ஆன் டஃபி கவிதையாக எழுதியிருக்கிறார். இந்தக் கவிதைகள் இதுவரை நமக்குள் பதிந்து போன பிம்பங்களை உருமாற்றுகின்றன. திரைக்குப் பின்னால் உள்ள பெண்கள், சிம்மாசனத்திற்குப் பின்னால் இருந்த பெண்கள், வரலாற்றில் மறைந்து போன பெண்களைப் பற்றியே இக்கவிதைகள் பேசுகின்றன

சாத்தானின் மனைவி துவங்கி பிலாத்துவின் மனைவி, டார்வினின் மனைவி சிசிபஸின் மனைவி, ஈசாப்பின் மனைவி ,மைடாஸின் மனைவி, ஃபாஸ்ட்டின் மனைவி, ரிப் வான் விங்கிள் மனைவி, பிராய்டின் மனைவி. ஷேக்ஸ்பியரின் மனைவி கிங்காங்கின் மனைவி எனப் பல்வேறு பெண்களைப் பற்றிய இத் தொகுப்பு தனித்துவமானது

கரோல் ஆன் டஃபி தனது கவிதைகளில் ஒரு காலப்பயணியாகவே செயல்படுகிறார். அவர் தனது கதாபாத்திரங்களின் வாழ்க்கையில் உள்ளேயும் வெளியேயும் பனிச்சறுக்கு வீரர் போல எளிதாகச் சறுக்கிச் செல்கிறார். அவரது கற்பனையின் பாய்ச்சல் வசீகரமானது. மொழியின் மூலம் அர்த்தமும் யதார்த்தமும் கட்டமைக்கப்படும் விதத்தை ஆராய்கிறார். வெவ்வேறு குரல்கள் மற்றும் வெவ்வேறு அடையாளங்களை ஆராய்வதில் அவரது கவனம் குவிந்துள்ளது.

நான் சுருங்கிக் கொண்டேன்

ஒரு பறவை அளவு

ஒரு மனிதனின் கையில்

இனிதினும் இனிய, சிறிய பாடலை

நான் பாடினேன்

அவனது கைகளின் அழுத்தத்தை உணரும் வரை

என ஒரு கவிதையைத் துவக்குகிறார்.

தன்னைப் புரிந்து கொள்ளாத ஆணின் அதிகாரத்தையே அவரது கவிதைகள் சுட்டுகின்றன.

அப்போது என் நாக்கு சுடராக இருந்தது

என் முத்தங்கள் எரிந்தன

என்ற வரிகளில் அவரது கவித்துவம் பிரகாசிக்கிறது.

தனது கவிதைகளுக்கு அடித்தளம் குழந்தைப் பருவம் என்றும் அது என்றும் பசுமையாக இருக்கும் இல்லமாகயிருக்கிறது. அங்கிருந்தே தனது கவிதைகள் பிறக்கின்றன என்கிறார்

மனிதனுக்குள் ஒருவகை இசை எப்போதுமிருக்கிறது. அதை உலகிற்குக் கேட்கச் செய்வதே கவிதை எனும் கரோல் ஆன் டஃபி கனமான, சூடான தேநீர் கெட்டிலை தூக்கி அதிலிருந்து போதுமான அளவிற்குத் தேநீரை டீக்கோப்பையில் ஊற்றுவது போன்றதே தனது கவிதை செயல்பாடும் என்கிறார்.

உலகம் நமக்குக் காட்டியது போலப் புகழ்பெற்ற மனிதர்களின் வாழ்க்கை அமைந்திருக்கவில்லை என்பதையே இந்தக் கவிதைகள் வெளிப்படுத்துகின்றன. மைடாஸின் மனைவி தொடுதலை விடத் தங்கம் ஒன்றும் அரிய விஷயமில்லையே என்கிறாள். சாத்தானின் மனைவி தனக்கு மீட்சியே இல்லை என்கிறார். லாசரஸின் மனைவி தன் கணவன் இறந்த துக்கத்தை அனுஷ்டிக்கும் போது இறந்த மனிதனை மீண்டும் உயிரோடு வரச் செய்யும் இயேசுவின் முடிவு அவளுக்கு எப்படியிருந்திருக்கும். உயிர்த்தெழுந்த ஒரு மனிதனின் மனைவி இத்தகைய உணர்ச்சிக் கொந்தளிப்பை எவ்வாறு எதிர்கொள்வாள்? என்பதைக் கவிதை பேசுகிறது.

கரோல் ஆன் டஃபி ஒரு நாடகாசிரியர் என்பதால் இந்தக் கவிதைகளைத் தனிமொழி போலவே எழுதியிருக்கிறார்.

“எழுத்தை விடவும் பேச்சு பழமையானது, பேச்சைப் போலவே கவிதையும் பழமையானது. கவிதை என்பது ஒரு பழங்காலத் தகவல்தொடர்பு முறை

வார்த்தைகளின் முழுக் கனத்தையும் சுவையையும் வரிகளின் ஓட்டத்தையும் பெறக் கவிதைகளை உரத்து வாசித்துக் கேட்க வேண்டும். ஆகவே நான் மேடைகளில் கவிதை வாசிக்கிறேன். அதிலிருந்து உடலும் மனமும் ஒரு சேர புத்துணர்வு அடைவதை உணர்ந்திருக்கிறேன்

நமது உடல் இயக்கத்திற்காக வடிவமைக்கப்பட்டுள்ளது போல, மனம் கவிதைக்காக வடிவமைக்கப்பட்டுள்ளது“ என்கிறார் ஆன் டஃபி

350 வருஷங்களாக ஆண்கள் மட்டுமே வகித்து வந்த Poet Laureate எனும் அங்கீகாரத்தைப் பெற்ற முதல் பெண்கவியாக இவரைக் கொண்டாடுகிறார்கள்.

1 like ·   •  0 comments  •  flag
Share on Twitter
Published on August 15, 2022 06:33

August 14, 2022

சுதந்திர தின வாழ்த்துகள்

அனைவருக்கும் இனிய சுதந்திர தின வாழ்த்துகள்.

இந்தத் திருநாளில் தேசவிடுதலைக்குப் பாடுபட்ட தியாகிகள், கலைஞர்கள் அனைவரையும் நினைவு கொள்வோம்.

2 likes ·   •  0 comments  •  flag
Share on Twitter
Published on August 14, 2022 23:06

August 13, 2022

இந்து தமிழ் நாளிதழில்

இன்றைய இந்து தமிழ் திசை நாளிதழில் எனது கட்டுரை வெளியாகியுள்ளது

1 like ·   •  0 comments  •  flag
Share on Twitter
Published on August 13, 2022 02:35

August 8, 2022

கவிஞன் எனும் மேகம்

சீனாவின் புகழ்பெற்ற கவிஞர் துஃபு (Du Fu) பற்றிய ஆவணப்படம்.

BBC இதனைத் தயாரித்துள்ளது

8 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த துஃபு சீனக் கவிஞர்களில் மிகச்சிறந்தவராகக் கொண்டாடப்படுகிறார். இவரது சில கவிதைகள் தமிழில் மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளன

தமிழில் ஜப்பானிய இலக்கியம் அறிமுகமான அளவிற்குச் சீன இலக்கியம் அறிமுகமாகவில்லை


வாரிச்சூடினும் பார்ப்பவரில்லை என்ற பயணியின் மொழியாக்கத்தில் வெளியான சீனக்கவிதை நூல் முக்கியமானது. இது போலவே உதிர்ந்த இலைகளின் பாடல் கல்பனா மொழிபெயர்ப்பில் வெளியான கவிதை தொகுப்பும் மிகச்சிறப்பானது.

Du Fu : China’s Greatest Poet

2 likes ·   •  0 comments  •  flag
Share on Twitter
Published on August 08, 2022 03:53

August 6, 2022

எல்லை நோக்கிய பயணம்

பறவைகள் வானில் தடயமில்லாமல் பறந்து செல்வது போல மனிதர்களும் சில வேளைகளில் பயணிப்பதுண்டு. அப்படியான ஒரு பயணத்தின் கதையைத் தான் Hit The Road திரைப்படம் விவரிக்கிறது.

ஈரானின் புகழ்பெற்ற இயக்குநர் ஜாபர் பனாஹி அரசிற்கு எதிராகச் செயல்பட்டார் என்று வீட்டுச்சிறையில் வைக்கப்பட்டுள்ளார். அவரது மகன் பனாஹ் பனாஹி டெஹ்ரானில் உள்ள திரைப்படப் பள்ளியில் பயின்றவர், குறும்படங்களை உருவாக்கி விருது பெற்றிருக்கிறார். தந்தை இயக்கிய திரைப்படத்தில் உதவி இயக்குநராகவும் பணியாற்றியுள்ளார். இது பனாஹ் பனாஹி இயக்கியுள்ள முதல்படம்.

நெடுஞ்சாலையோரம் ஒரு SUV கார் நின்று கொண்டிருக்கிறது. அதில் கால் உடைந்து கட்டுப்போட்ட ஒருவர் அயர்ந்து உறங்கிக் கொண்டிருக்கிறார். அவரது ஏழு வயது மகன் கால்கட்டில் பியானோவின் படம் வரைந்து அதில் இசை எழுப்புகிறான். அழகான காட்சியோடு படம் துவங்குகிறது. சாலையில் கார்கள் கடந்தவண்ணம் உள்ளன. அவர்கள் எதற்காகக் காத்திருக்கிறார்கள் என்று தெரியவில்லை.

பையனின் அம்மா விளையாட்டுதனமிக்க மகனைக் கடிந்து கொள்கிறான். அவன் வைத்துள்ள செல்போனை பறித்துக் கொண்டு போய்ச் சிம் கார்டை அகற்றிவிட்டு யாரும் அறியாமல் மண்ணில் புதைத்து வைக்கிறாள். அவர்களின் மூத்த மகன், 20 வயதான ஃபரித் குழப்பமும் கவலையுமாகக் காரை ஒட்டுகிறான். ஜெஸ்ஸி என்ற நாயும் அவர்களுடன் காரிலிருக்கிறது. ஈரானின் வடக்கு எல்லையை நோக்கி அந்தக் குடும்பம் பயணிக்கிறது.

யார் அவர்கள், எங்கே போகிறார்கள், வழியில் ஏதாவது விபத்து நடந்து அதை மறைக்கிறார்களா என்று பார்வையாளர்கள் யோசிக்கும் போது கதை கொஞ்சம் கொஞ்சமாக விரிகிறது.

அவர்கள் மேற்கொள்ளும் பயணத்தின் உண்மையான நோக்கத்தை இறுதியில் தான் அறிந்து கொள்கிறோம். அதுவரை நான்கு வேறுபட்ட மனநிலை கொண்டவர்கள் ஒன்றாக மேற்கொள்ளும் பயணத்தில் ஏற்படும் சிக்கல்கள் பிரச்சனைகள் நம்மை சுவாரஸ்யமாகப் பின்தொடர வைக்கிறது.

பயணத்திற்கான உண்மையான காரணத்தை விடவும் நெருக்கடியை எதிர்கொள்ளும் போது நாம் அடையும் வேறுபட்ட உணர்ச்சிகளையும் குழப்பத்தையும் தடுமாற்றத்தையுமே படம் முதன்மையாக விவரிக்கிறது.

ஈரானில் கார் என்பது இரண்டாவது வீடு போன்றது. காரிலே உறங்குவது. காரில் நீண்ட தூரம் பயணிப்பது எங்கள் வாழ்க்கையின் பிரிக்க முடியாத அம்சம் என்கிறார் பனாஹ் பனாஹி. இந்தப் படத்திலும் அந்த அனுபவமே வெளிப்படுத்தப்படுகிறது

படத்தில் வரும் சிறுவன் நம்மைக் கவர்ந்துவிடுகிறான். சூழலின் நெருக்கடி அவனது குறும்புத்தனத்தை மாற்றவில்லை. துருதுருவென அலைபாய்கிறான். நிறையக் கேள்விகள் கேட்கிறான். சில வேளைகளில் பெரியவர்களைப் பேசுகிறான். நடந்து கொள்கிறான்.

தனது பெற்றோர் எதையோ தன்னிடம் மறைக்கிறார்கள் என்பது அவனுக்குப் புரிகிறது. அந்த விஷயம் அவனது அண்ணனைப் பற்றியது என்பதைக் கூடத் தெரிந்து கொள்கிறான். ஆனால் பிரச்சனையை நினைத்து ஏன் இவ்வளவு பதற்றமாக நடந்து கொள்கிறார்கள் என்று அவனுக்குப் புரியவில்லை. அவன் விளையாட்டுத் துணையின்றித் தவிக்கிறான். ஒரு கடையில் அவனாகச் செல்போனை விலை கேட்பது அழகான காட்சி.

உடைந்த காலுடன் வரும் தந்தை படம் முழுவதும் தனது உணர்ச்சிகளை மறைத்துக் கொண்டு பயணத்தினைத் திட்டமிடுகிறார். ஆலோசனைகள் வழங்குகிறார். ஊன்றுகோலுடன் தடுமாறி நடந்து செல்கிறார். சாலையைக் கடக்க முற்பட்டு தவிக்கிறார். அவரது உடைந்த கால் ஒரு குறியீடு போலவே உணர்த்தப்படுகிறது.

குழப்பத்தில் தவிக்கும் பெரிய மகனை ஆறுதல் படுத்த அம்மா பாட்டுப் பாடுகிறாள். வேடிக்கை செய்கிறாள். ஈரானிய பாப் இசையினை ரசித்தபடியே செயற்கையான மகிழ்ச்சியின் வெளிப்படுத்துகிறாள் . அதைச் சகிக்க முடியாமல் ஃபரித் கோபம் கொள்கிறான். அவனது நலனிற்காகத் தாங்கள் எதையும் செய்வோம் என்கிறாள் அம்மா. தந்தையோ தாங்கள் ஒரு கரப்பான்பூச்சியைப் போல உணர்வதாகச் சொல்கிறார்.

அவர்கள் பயணம் செய்யும் நிலக்காட்சி மாறிக் கொண்டேயிருக்கிறது. பரந்த நிலவெளியில் வளைந்து வளைந்து செல்லும் மண்சாலை ஒன்றில் பைக்கில் முகத்தை மறைத்துக் கொண்ட ஒருவன் வரும் காட்சி அபாரமானது.

நெடுஞ்சாலையில் தங்களை யாராவது பின்தொடர்கிறார்களோ என்ற கவலை அவர்களை வாட்டுகிறது. சைக்கிள் பந்தயம் செல்லும் ஒருவன் காரின் மீது மோதி அடிபடுவதும் அவனைக் காரில் ஏற்றிக் கொண்டு அழைத்துக் கொண்டு போவது சிறப்பான காட்சி.

ஃபரித் தனக்காகத் தனது குடும்பத்தினர் எவ்வளவு தியாகம் செய்கிறார்கள் என்பதை உணர்ந்திருக்கிறான். இவ்வளவு பிரச்சனைக்கும் தானே காரணம் என்று வருந்துகிறான்.

சிறுவன் களங்கமின்மையைப் பிரதிபலிக்கும் கண்ணாடியாகத் தோற்றம் தருகிறான்.

வடமேற்கு ஈரானின் வளைந்த நெடுஞ்சாலைகள், பாலைவனம் மற்றும் அழகிய பள்ளத்தாக்கின் விரிந்த காட்சிகள் படமாக்கப்பட்டுள்ள விதம் அற்புதமானது. ஒளிப்பதிவாளர் அமீன் ஜாபரியின் ஒளிப்பதிவு மிகுந்த கவித்துவமானது. காருக்குள்ளே கேமிரா செயல்படும் விதம் மற்றும் சாலைக்காட்சிகள். தனித்த பாதையினைக் கேமிரா பின்தொடர்வது என மிகச்சிறப்பான ஒளிப்பதிவு.

சொல்லப்படாத உண்மை தான் கதையை முன்னகர்த்திச் செல்கிறது. ஒரு வீட்டின் சுவர்களுக்குள் நடந்திருக்க வேண்டிய கதையை இப்படிப் பயணத்தின் வழியே சொன்னது தான் இயக்குநரின் புதுமை. அதன் காரணமாகவே இப்படம் கொண்டாடப்படுகிறது.

1 like ·   •  0 comments  •  flag
Share on Twitter
Published on August 06, 2022 05:49

August 5, 2022

தென்காசி புத்தகத் திருவிழாவில்

தென்காசி புத்தகத் திருவிழாவில் ஆகஸ்ட் 10 புதன்கிழமை மாலை உலகெங்கும் கதைகள் என்ற தலைப்பில் உரையாற்றுகிறேன்.

குற்றாலம் பராசக்தி மகளிர் கல்லூரி வளாகத்தினுள் புத்தகத் திருவிழா நடைபெறுகிறது

1 like ·   •  0 comments  •  flag
Share on Twitter
Published on August 05, 2022 23:47

August 4, 2022

நினைவில் ஒளிரும் முகங்கள்

கோவையில் இயங்கி வரும் சிறுவாணி வாசகர் மையம் வீடு தேடி வரும் புத்தகத் திட்டத்தை ஐந்து ஆண்டுகளாக வெற்றிகரமாகச் செயல்படுத்தி வருகிறது. இவர்களின் மாதம் ஒரு நூல் திட்டத்தில் இணைந்து கட்டணம் செலுத்தினால் வீடு தேடி நல்ல புத்தகங்களை அனுப்பி வைக்கிறார்கள்.

கோவை புத்தகக் கண்காட்சியில் சிறிய கடையை அமைத்திருந்த சிறுவாணி வாசகர் மைய ஒருங்கிணைப்பாளர் ஜி.ஆர்.பிரகாஷை சந்தித்தேன். இரண்டு புதிய நூல்களைப் பரிசாக அளித்தார். அவரது மகள் எனது உப பாண்டவம் நாவலை விரும்பிப் படித்திருக்கிறார் என்று அறிமுகம் செய்து வைத்தார். சந்தோஷமாக இருந்தது.

சிறுவாணி வெளியிட்டுள்ள ஓவியரும் திரை விமர்சகருமான ஜீவா எழுதிய ஒரு பீடியுண்டோ சகாவே என்ற திரைப்படக் கட்டுரைகளின் தொகுப்பை வாசித்தேன்.

கோவையில் வசிக்கும் ஓவியர் ஜீவா சிறந்த திரைப்பட நூலுக்கான தேசிய விருது பெற்றவர். திரைப்படப் பேனர் வரைவதில் நிகரற்றவர். பத்திரிக்கை தொடர்கள். அட்டை ஓவியங்கள், நவீன ஓவியங்கள். சுவரோவியங்கள் வரைவதில் தேர்ந்தவர்.

இந்தத் தொகுப்பில் சினிமா பேனர்கள் பற்றிய அவரது கட்டுரை சிறப்பானது. சட்டம் படித்த ஜீவா எப்படிப் பேனர் வரையத் துவங்கினார் என்பதிலிருந்து, சினிமா பேனர் வரையும் நுட்பங்கள். அதை எப்படி நிறுத்தி வைப்பார்கள். ஹாலிவுட் மற்றும் இந்தி சினிமாவிற்கு எப்படி பேனர் வரைந்தார்கள் என்பதன் சிறப்புகளையும் அவரது தந்தை வேலாயுதம் சினிமா பேனர்கள் வரையத் துவங்கிய காலம் பற்றிய நினைவுகளையும் அற்புதமாக எழுதியிருக்கிறார். இதை அப்படியே ஒரு ஆவணப்படமாக உருவாக்க வேண்டும்.

அந்தக் காலத்தில் சினிமா பேனர்களைப் பார்த்தே மக்கள் கதை சொல்லுவார்கள். புதுப்படப் பேனர் வைத்தவுடன் அதைக் காணுவதற்காகவே மக்கள் திரண்டு செல்லுவார்கள். மதுரையிலும் சென்னையிலும் பார்த்த அழகான சினிமா பேனர்கள் நினைவில் நிழலாடுகின்றன.

அந்தத் திரை விளம்பரக் கலையின் நுட்பங்களையும் தனித்துவத்தையும் ஜீவா உணர்ச்சிப்பூர்வமாக எழுதியிருக்கிறார். பிளக்ஸ் பேனர்களின் வருகை அந்தக் கலைஞர்களின் வாழ்க்கையை எப்படி முடித்துவிட்டது என்ற கட்டுரையின் கடைசி வரி மனதைத் தொடுகிறது.

ஒரு கட்டுரையில் சினிமாவில் ஏற்பட்ட மாற்றம் பற்றி ஜீவா இப்படி எழுதியிருக்கிறார்

சினிமா தியேட்டர் அனுபவம் என்பது வாலிப வயதைக் கடந்தவர்களுக்கும் மத்திய வயதுக்காரர்களுக்கும் மறக்கமுடியாத கடந்த கால அனுபவம். இன்று பெரும்பாலான தியேட்டர்கள் மூடப்பட்டுவிட்டன. பல, தரைமட்டமாகிவிட்டன. இன்னும் பல, வேறு வடிவங்கள் எடுத்து வெற்றிகரமாகத் திகழ்ந்து கொண்டிருக்கின்றன. தியேட்டர் இடைவேளையில் சோடா கலர் விற்ற காலத்திலிருந்து, மல்டிப்ளெக்ஸ் ஸ்க்ரீன்களில், ஏற்கனவே தந்த ஆர்டரின்படி மசாலா மணக்க உணவுப்பொருட்களை இருட்டில் பணியாளர்கள் கொண்டு வந்து நம் மடியில் வைக்கும் காலம் வரை பார்த்தாயிற்று. தியேட்டர்களில் நீண்ட வரிசையும், சைக்கிள் கியூவும், டூவீலர் டோக்கனும் எல்லாமே பழங்கதை ஆயின

கியூப் முறையில் சாட்டிலைட் மூலம் படங்கள் திரையிடல் தொடங்கியது. ஃபிலிம் என்பதே ஓர் அதிசயப்பொருள் ஆனது. பழைய கருப்பு வெள்ளைப் படங்கள் வண்ணமடிக்கப்பட்டன. ரங்காராவ் கலர் கடோத்கஜனாக மாறி சமையலறையில் கல்யாண சமையல் சாதம் சாப்பிட்டதை மக்கள் பார்த்தனர். பழைய படங்களை ஃபிலிமிலிருந்து டிஜிட்டலாக மாற்றும் முயற்சியில் சிலர் ஈடுபட்டனர். பெரும்பாலும் எம்ஜியார், சிவாஜிபடங்கள் இந்த மாற்றத்துக்குள்ளாயின. திரைப்பட விநியோகமென்ற தொழில் பெரும் பாதிப்புக்குள்ளானது. தொழில்நுட்ப மாற்றங்களால் ஃபிலிம் லேப்கள் மூடப்பட்டன. பல பிரம்மாண்ட ஸ்டுடியோக்கள் அபார்ட்மெண்டுகளாகவும் மருத்துவமனைகளாகவும் உருமாறின.

திரையுலகம் சந்தித்த மாற்றத்தை இதைவிடச் சிறப்பாக எழுதிவிடமுடியாது.

ரங்காராவ் கலர் கடோத்கஜனாக மாறி சமையலறையில் கல்யாண சமையல் சாதம் சாப்பிட்டதை மக்கள் பார்த்தனர் என்பது போன்ற ஜீவாவின் கிண்டல் தனித்துவமானது. இது எல்லாக் கட்டுரைகளிலும் அழகாக இழையோடுகிறது.

மலையாள திரைப்படவுலகின் முக்கியத் திரைப்படங்களையும் திரை நட்சத்திரங்களையும் பற்றிய அவரது ஞாபக சக்தி வியப்பூட்டுகிறது. அந்தக்  கால மலையாளப்படங்கள் துவங்கி இன்று வெளியான பகத்பாசில் படம் வரை மலையாள சினிமாவின் தனித்துவத்தையும் அழகியலையும் நுட்பமாக எழுதியிருக்கிறார். அரசியல் சினிமாவைப் பற்றிய அவரது பார்வை முக்கியமானது.

சர்வதேச சினிமாவைத் தொடர்ந்து பார்த்து வருபவர் என்ற முறையில் ஆங்கிலம் அயல்மொழிப்படங்களைப் பற்றிய அவரது பார்வைகளை சிறப்பாகப்  பதிவு செய்திருக்கிறார்.

ஒவியர் என்பதால் அரங்க அமைப்பு மற்றும் கலை இயக்கம் குறித்து ஆழ்ந்து அவதானித்து எழுதியிருப்பது சிறப்பு.

பழைய இந்திப்படங்கள், பாடல்கள் பற்றிய அவரது நினைவுகள் நம்மையும் அந்தக் காலத்திற்கே அழைத்துச் செல்கின்றன.

தேர்ந்த சினிமா ரசனை கொண்ட ஒரு நண்பருடன் பேசிக் கொண்டிருப்பது போன்ற நெருக்கத்தைத் தருகிறது இந்நூல். ஜீவாவிற்கு எனது மனம் நிறைந்த பாராட்டுகள்.

2 likes ·   •  0 comments  •  flag
Share on Twitter
Published on August 04, 2022 01:00

August 3, 2022

ரகசிய நூலகம்

The Library Of Mabel Mogaburu என்றொரு சிறுகதையை ஃபொ்னான்டோ ஸோரன்டினோ எழுதியிருக்கிறார். அதில் அவரது நூலகத்தில் உள்ள புத்தகங்களைப் பட்டியலிடுவதைப் பற்றிச் சொல்கிறார். அந்தப் புத்தகங்களை எப்படி வகைப்படுத்துவார். அதில் எவ்வாறு குறிப்புகள் எழுதுவார் என்பதையும் வேடிக்கையாக விவரிக்கிறார்

ஒரு நாள் தற்செயலாகப் புத்தக் கடை ஒன்றில் பழைய புத்தகங்களைத் தேடும் மேபல் என்ற மாணவியைச் சந்திக்கிறார். அவள் ரிக்கார்டோ குய்ரால்டெஸ் எழுதிய டான் செகுண்டோ சோம்ப்ரா என்ற 1926 ஆம் ஆண்டு வெளியான நாவலைத் தேடுகிறாள்.  புத்தகம் அவளுக்குக் கிடைக்கவில்லை.

தன்னிடமிருக்கும் பழைய புத்தகத்தை அவளுக்கு இரவல் தரமுடியும் , ஆனால் அதை அவள் கவனமாகப் படித்துவிட்டுத் திருப்பித் தர வேண்டும் என்று ஸோரன்டினோ சொல்கிறார்.

பத்திரமாக ஒப்படைப்பேன் என்மீது நம்பிக்கையிருந்தால் கொடுங்கள் என்கிறாள் மேபல்.

தனது புத்தகத்தில் அவள் எதையும் எழுதக்கூடாது. படித்து முடித்தவுடன் திருப்பித் தந்துவிட வேண்டும் என்று கண்டிப்புடன் சொல்கிறார்.

அவள் உறுதி அளித்தபடியே டான் செகுண்டோ நாவலை வாங்கிச் செல்கிறாள். ஆனால் சில வாரங்களுக்கு மேலாகியும் அவள் புத்தகத்தைத் திருப்பித் தரவில்லை. ஆகவே அதைத் திரும்பப் பெறுவதற்காக அவளது வீட்டிற்குத் தேடிப்போகிறார்.

அங்கே மேபலின் தந்தையைச் சந்திக்கிறார். மேபல் வீட்டில் இல்லை என்று தந்தை சொல்கிறார். தான் கடன் கொடுத்த புத்தகம் பற்றிச் சொன்னதும் உள்ளே போய் அவளது அறையில் தேடச் சொல்கிறார். மூன்று அலமாரிகள் கொண்ட அறையில் நிறையப் பழைய புத்தகங்கள் தூசி அடைந்து கிடக்கின்றன. இதை எல்லாம் அவள் படித்திருக்கிறாளா என்று வியப்புடன் அந்த நூல்களைப் பார்க்கிறார். ஆனால் அவர் கடன் கொடுத்த புத்தகம் மட்டும் அங்கேயில்லை. ஏமாற்றத்துடன் வெளியே வரும் அவரிடம் மேபலின் இன்னொரு நூலகம் வேறு இடத்திலிருக்கிறது. வாருங்கள் போகலாம் என காரில் அழைத்துக் கொண்டு போகிறார் அவளது தந்தை.

அவர்கள் போய் சேருமிடம் ஒரு மயானம். அங்குள்ள கட்டிடம் ஒன்றினுள் இரண்டு சவப்பெட்டிகள் இருக்கின்றன. ஒன்று மேபலின் அம்மாவுடையது. மற்றது மேபலின் சவப்பெட்டி

மேபல் தனது 15 வயதில் இறந்துவிட்டாள் ஆனாலும் புத்தகம் படிப்பதை அவளால் நிறுத்த முடியவில்லை. இங்கே அவளது இன்னொரு நூலகம் இருக்கிறது எனச் சுவரைக் காட்டுகிறார் தந்தை.

அங்கே தரையிலிருந்து கூரைவரை நூற்றுக்கணக்கான புத்தகங்கள் அடுக்கி வைக்கப்பட்டிருக்கின்றன. வலது பக்க அடுக்கில் ஸோரன்டினோ கடன் கொடுத்த டான் செகுண்டோ புத்தகம் உள்ளது. அதன் முதல் பக்கத்தில் அவள் தன் பெயரையும் தேதியினையும் எழுதியிருக்கிறாள். அதைக் கண்டு ஸோரன்டினோ எரிச்சல் அடைகிறார்.

‘நீங்கள் புத்தகத்தை எடுத்துச் செல்கிறீர்களா அல்லது மேபலின் நூலகத்திற்கு நன்கொடையாக விட்டுவிடுகிறீர்களா? என அவளது தந்தை கேட்கிறார்.

நான் புத்தகத்தை எடுத்துக் கொள்கிறேன். எனது புத்தகங்களை விட்டுக் கொடுக்கும் வழக்கம் கிடையாது என்று சொல்லி அதைக் கையோடு எடுத்துக் கொள்வதாகக் கதை முடிகிறது

எளிய கதையாகத் துவங்கி திகில் கதையாகி மறுபடியும் எளிய கதையாக மாறிவிடுகிறது. சத்யஜித்ரே இது போன்ற பாணியில் தான் சிறுகதைகள் எழுதினார்.

யதார்த்தமான திரைப்படங்களை உருவாக்கிய ரே ஏன் இது போன்ற விசித்திர கதைகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டிருந்தார் என்பது புதிரானது.

ஸோரன்டினோ கதையில் வரும் மேபல் மரணத்திற்குப் பிறகும் புத்தகங்களைத் தேடிப் படித்துக் கொண்டிருக்கிறாள்.

இந்தக் கதை எட்கர் ஆலன் போவின் கதைகளை நினைவுபடுத்துகிறது. ஆனால் அவரது கதையில் வரும் இருண்மை இக்கதையில் இல்லை. கதையின் முடிவில் ஏற்படும் திகிலை எழுத்தாளரே கேலி செய்கிறார். புனைவின் பாதையில் எதுவும் விசித்திரமாக மாறிவிடலாம் என்பதையே கதை விளக்குகிறது. ஸோரன்டினோவின் சிறுகதைகள் தனித்த கதைமொழியைக் கொண்டிருக்கின்றன.

கடன் கொடுத்த புத்தகங்களைத் திரும்ப வாங்க ஒருவர் மேற்கொள்ளும் முயற்சி எளிதாக வாசகரை உள்ளிழுத்துக் கொண்டுவிடுகிறது. வழக்கமான கதையாக முடிந்திருக்கக் கூடியதை இன்னொரு நூலகம் இருக்கிறது காட்டுகிறேன் என்று தந்தை அழைத்துச் செல்வதில் மாறிவிடுகிறது.

ஸோரன்டினோவின் சிறுகதை இளம்படைப்பாளிக்குப் புனைவின் ரகசியங்களைக் கற்றுக் கொடுக்கிறது. வாசகருக்கு புதிய அனுபவத்தைத் தருகிறது. முடிவில்லாத வாசிப்பின் இனிமையை எடுத்துக் காட்டுகிறது.

இந்தக் கதை HOW TO DEFEND YOURSELF AGAINST SCORPIONS தொகுப்பில் இடம்பெற்றுள்ளது

••

2 likes ·   •  0 comments  •  flag
Share on Twitter
Published on August 03, 2022 05:27

S. Ramakrishnan's Blog

S. Ramakrishnan
S. Ramakrishnan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow S. Ramakrishnan's blog with rss.