அவளும் அவனும்
கடிதம் வழியாகவே படம் துவங்குகிறது. ஒருவரையொருவர் சந்திக்க வேண்டும் என்று ஆசை கொண்ட பினா மற்றும் ஆல்ஃபிரடோ கடிதங்களின் வழியே மனதை வெளிப்படுத்திக் கொள்கிறார்கள். அவர்கள் காதலர்களாக இருக்கக் கூடும் என்ற எண்ணம் நமக்கு உருவாகிறது.

The Visit (1963) என்ற இத்தாலியப்படம் பினாவின் ஒருநாளிற்குள் என்ன நடக்கிறது என்பதை விவரிக்கிறது
ரயில் நிலையத்தில் படபடப்புடன் காத்திருக்கிறாள் பினா. அங்கே வரும் இரண்டு கன்னியாஸ்திரீகள் அவளது மிகையான ஒப்பனையைக் கண்டு நகைக்கிறார்கள். அவளோ ஆல்ஃபிரடோவின் வருகைக்காக ஆவலாகக் காத்திருக்கிறாள். கண்ணாடி முன்பாக நின்று பேசி ஒத்திகை பார்த்துக் கொள்கிறாள்.
ரோமிலிருந்து ரயில் வந்து சேருகிறது. பிளாட்பாரத்தில் வேகவேகமாக ஓடுகிறாள். எங்கேயும் ஆல்ஃபிரடோவைக் காணவில்லை. ரயில் கிளம்பும் போது ஒரு பெட்டியிலிருந்து இறங்கி அவளை நோக்கி நடந்து வருகிறான் ஆல்ஃபிரடோ. ரயிலிலே முகச்சவரம் செய்து கொள்ள வேண்டியிருந்ததால் உடனே இறங்க முடியவில்லை என்கிறான்.

அவனை எப்படி வரவேற்பது என்று பினாவிற்குத் தெரியவில்லை. அவளது ஆசை, விலகல் அவளது முகத்தில் அழகாக வெளிப்படுகிறது. தனது பழைய காரில் அவனை அழைத்துப் போகிறாள். அந்தக் காரின் கதவு சரியாகப் பூட்டுவதில்லை. அதைத் தனது கையாலே பிடித்துக் கொண்டு உட்கார்ந்திருக்கிறான் ஆல்ஃபிரடோ.
வழியில் ஒரு முட்டாள் ஆல்ஃபிரடோவை கேலி செய்கிறான். அவனைப் பிடிக்கவில்லை என்று திட்டுகிறான். முட்டாளின் கோபத்திற்குப் பயந்து ஆல்ஃபிரடோ காரிலே உட்கார்ந்திருக்கிறான்

ஆல்ஃபிரடோவை தனது வீட்டிற்கு அழைத்துச் செல்கிறாள் பினா. அதன்பிறகே உண்மை நமக்கு உணர்த்தப்படுகிறது
முப்பத்தைந்து வயதான, தனித்து வாழும் அழகியான பினா தனக்காகக் கணவனைத் தேர்வு செய்யத் திருமண விளம்பரம் கொடுத்திருக்கிறாள். அதில் அவள் தேர்வு செய்துள்ளவன் தான் ஆல்ஃபிரடோ. அவளை நேரில் சந்தித்துப் பேசுவதற்காக வந்திருக்கிறான். அவனுக்கும் நாற்பது வயதுக்கும் மேலாகிறது. புத்தக அங்காடி ஒன்றில் வேலை செய்கிறான்.
ஆல்ஃபிரடோவிற்குத் தனது வீட்டினைச் சுற்றிக் காட்டுவதோடு அவள் வளர்க்கும் கிளி, நாய் ஆமை போன்றவற்றையும் அறிமுகம் செய்து வைக்கிறாள். 36 வயதிலும் பினா அழகியாகவே இருக்கிறாள். ஊர்மக்களின் அன்பைப் பெற்றிருக்கிறாள்.
ஆல்ஃபிரடோ அவற்றை விரும்பாத போதும் அவள் முன்பாக நடிக்கிறான். சொத்திற்காகவும் அழகிற்காகவும் மட்டுமே அவளைத் திருமணம் செய்து கொள்ள விரும்புகிறான். அவனுக்கு ஏற்கனவே வேறு பெண்களுடன் உறவு இருக்கிறது. அதுவும் உதடு கிழிந்த சலவை நிலைய பெண்ணுடன் அவன் உறவு கொள்ளும் காட்சி வேடிக்கையானது.

பினாவின் வீட்டில் அவன் ஒரு நாளை கழிக்கிறான். அந்த நாளின் இடைவெட்டாக இருவரின் கடந்தகால நிகழ்வுகளும் வந்து போகிறது. ஆல்ஃபிரடோ போலவே பினாவும் நடிக்கிறாள். அவள் ரெனாடோ என்ற டிரக் டிரைவரை விரும்புகிறாள். அவனுடன் படுக்கையைப் பகிர்ந்து கொள்கிறாள். ரெனாடோ திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளவன் என்பதால் வேறு ஒருவனைத் திருமணம் செய்து கொள்ளத் தேடுகிறாள். அப்படித்தான் ஆல்ஃபிரடோ தேர்வு செய்யப்படுகிறான்.
ஆல்ஃபிரடோ குடிகாரன். இளம்பெண்களைக் கண்டால் பின்னாலே ஓடுபவன். பினா வீட்டிற்கு வரும் பக்கத்துவீட்டுப் பெண்ணை மயக்க முயல்கிறான். நடனத்தின் போது வேறு ஒரு பெண்ணுடன் கைகோர்த்து ஆடுகிறான். ஒருவேளை பினாவிடம் சொத்து இல்லாவிட்டால் அவளை ஒருமுறை அடைந்தால் கூடப் போதும் என்பதே ஆல்ஃபிரடோவின் நோக்கம். அதைப் பினா உணர்ந்து கொண்டிருக்கிறாள். அவளுக்கும் அப்படி ஒரு ஆண் தேவைப்படுகிறான். ஆகவே நெருக்கமாகப் பழகுகிறாள்.
அவள் கொடுத்த திருமண விளம்பரத்தைப் பார்த்துப் பதில் அளித்தவர்களை ஒரு ஆல்பமாகத் தயாரித்து வைத்திருக்கிறாள் பினா. அதை இருவரும் புரட்டிப் பார்க்கும் காட்சி சுவாரஸ்யமானது

கிராமத்தில் வாழும் பினாவும் நகரில் வாழும் ஆல்ஃபிரடோவும் வேறுவேறு ரசனைகள், மதிப்பீடுகள் கொண்டவர்கள். ஆனால் திருமணம் என்று வரும்போது இருவரும் நடிக்கிறார்கள். பரஸ்பரம் ஏமாற்றிக் கொள்கிறார்கள்.
பினாவின் வீட்டிலுள்ள வயதான பணிப்பெண் பினாவைத் திருமணம் செய்து கொள்ளும்படி ஆல்ஃபிரடோவிற்கு ஆலோசனை சொல்கிறாள். வீட்டில் பினா இல்லாத நேரங்களில் ஆல்ஃபிரடோ நடந்து கொள்ளும் விதமும் முட்டாள் மீது கொள்ளும் கோபமும் நல்ல வேடிக்கை.
பினா எங்கே சென்றாலும் முட்டாள் பின்தொடருகிறான். அவள் மீது அன்பு கொண்டிருக்கிறான். நடனத்தில் அவளுடன் கைகோர்த்து ஆடுகிறான். முடிவில் அவன் ஆல்ஃபிரடோவை ஏற்றுக் கொண்டு நட்பாக விரும்புகிறான். ஆனால் ஆல்ஃபிரடோ அதை விரும்புவதில்லை

ஒரு காட்சியில் பினாவும் ஆல்ஃபிரடோவும் உண்மையை வெளிப்படையாகப் பேசிக் கொள்கிறார்கள். பினாவின் காதலன் ரெனாடோவைச் சந்தித்துப் பேசும் ஆல்ஃபிரடோ அவனுடன் நட்பாகிறான். அது பினாவிற்கு வியப்பளிக்கிறது. ஒத்தரசனையைக் கொண்டவர்களை விடவும் மாறுபட்ட ரசனை கொண்டவர்களால் தான் சந்தோஷமாக, ஒன்றாக வாழ முடியும் என்கிறாள் பினா.
இத்தாலிய நகைச்சுவை படங்களில் ஆண் தான் மையக் கதாபாத்திரமாக இருப்பது வழக்கம். பெண் கதாபாத்திரங்கள் இரண்டாம் நிலையில் தான் இடம்பெறுவார்கள். இந்தப் படத்திலோ மையமாக இருப்பது பினா. அவளது தனிப்பட்ட வாழ்க்கை, உளவியல் மற்றும் சமூகச் சமூகப் பிரச்சனைகளைப் படம் கவனப்படுத்துகிறது
Sandra Milo பினாவாகச் சிறப்பாக நடித்திருக்கிறார்
அறுபதுகளின் இத்தாலிய நகைச்சுவை படங்கள் அன்று நிலவிய கசப்பான மற்றும் ஏமாற்றமடைந்த மனப்பான்மையை வெளிப்படுத்துவதாக உருவாக்கப்பட்டது.
பினா மற்றும் ஆல்ஃபிரடோ தனிமையிலிருந்து விடுபடவே முயலுகிறார்கள். ஆனால் அதற்கான காரணம் வேறுவிதமானது. பினா வீட்டினை அழகாக வைத்திருக்கிறாள். நிறையப் பணமும் சேமித்து வைத்திருக்கிறாள். அவளது வாழ்க்கை ரசனையானது. ஆனால் ஆல்ஃபிரடோ குறுகிய மனப்பான்மையோடு, பேராசை, சுயநலம், சிடுமூஞ்சித்தனம் கொண்டவனாக இருக்கிறான். அவன் தனது தவறுகளை ஒத்துக்கொள்கிறான். அது தான் பினாவைக் கவருகிறது.
அவர்கள் ஒன்றாகக் கழிக்கும் ஒருநாளிற்குள் இத்தாலியத் தினசரி வாழ்க்கையின் குறுக்குவெட்டுத் தோற்றம் வந்து போகிறது. தலைமுறை மாறிவருவது. புதிய தொலைக்காட்சியின் வருகை. நகரத்தில் உணவுப்பொருட்களின் விலை அதிகமாக இருப்பது.
கார்லோ கசோலாவின் சிறுகதையைக் கொண்டு அன்டோனியோ பியட்ரேஞ்செலி இப்படத்தை இயக்கியுள்ளார்.

குளிர்காலத்தில் தனிமையைத் தாங்கிக் கொள்ள முடியவில்லை என்று கருதியே பினா திருமணம் செய்து கொள்ளச் சம்மதிக்கிறாள். அவள் ஆல்ஃபிரடோவின் கடிதங்களிலிருந்து அவனைப் பற்றிய கற்பனையை வளர்த்துக் கொள்கிறாள். முதன்முறையாக அவனைச் சந்திக்கும் போது ஏமாற்றம் அடைகிறாள். அதைக் காட்டிக் கொள்வதில்லை. ஆனால் ஆல்ஃபிரடோ அவளது அழகைக் கண்டதும் எப்படியாவது அவளை அடைந்துவிட வேண்டும் என்று பேராசை கொள்கிறான்.அவளிடம் பாசாங்கு செய்கிறான். படத்தில் ஐந்து ஃப்ளாஷ்பேக் காட்சிகளும் மிக அழகாகத் துவங்கி முடிகின்றன.
அவர்களுக்குள் திருமணம் நடக்குமா அல்லது அந்த உறவு ஒரு நாளுடன் முடிந்துவிடுமா என்ற கேள்வி எழுகிறது.
அதற்கான பதிலும் கடிதம் வழியாகவே வெளிப்படுகிறது. படத்தின் துவக்கக் காட்சி போலவே இறுதி காட்சியும் கடிதம் மூலமே நிறைவு பெறுகிறது

ஹாலிவுட் நகைச்சுவை படங்களில் காணமுடியாத உண்மையான நிகழ்வுகளை, அழுத்தமான உணர்ச்சி வெளிப்பாட்டினை, துயரிலிருந்து கசியும் நகைச்சுவையை இத்தாலியப் படங்களில் காணமுடிகிறது.
பினாவின் செயல்களைக் கண்டு நாம் சிரிக்கிறோம். ஆனால் அவளுக்காக வருந்தவும் செய்கிறோம். இது போலத் தான் ஆல்ஃபிரடோ வாழ்க்கையும். நடுத்தரவயதில் தனிமையை உணருகிறவர்கள் இப்படித்தான் நடந்து கொள்வார்கள். அது தான் இன்றைக்கும் இப்படத்தைப் புதியதாக வைத்திருக்கிறது.
••
S. Ramakrishnan's Blog
- S. Ramakrishnan's profile
- 657 followers
