நிழல் சொல்லும் நிஜம்.
பள்ளி நாட்களில் The Count of Monte Cristo நாவலின் சுருக்கத்தை ஆங்கிலத் துணைப்பாடப் புத்தகத்தில் படித்திருக்கிறேன். பின்பு நாவலின் இரண்டு வேறுபட்ட திரைவடிவங்களைப் பார்த்திருக்கிறேன். சுவாரஸ்யமான கதை. 2002ல் வெளியான The Count of Monte Cristo படத்திலுள்ள மழைத்துளிகளுக்கு நடுவே வாள் வீசி பயிற்சி எடுக்கும் காட்சி மறக்கமுடியாதது.

அலெக்சாண்டர் டூமா பிரான்சில் மட்டுமின்றி இந்தியாவிலும் விரும்பிப் படிக்கப்பட்டவர். இவரது The Three Musketeers நாவலுக்கு 50க்கும் மேற்பட்ட திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி தழுவல்கள் உள்ளன , இந்த நாவல் தமிழில் விஜயபுரி வீரன் என்ற பெயரில் படமாக்கப்பட்டிருக்கிறது.

டூமாவின் நாவல்களை எல்லாம் அவர் எழுதவில்லை. அவரது உதவியாளரான அகஸ்டே மாக்கே தான் எழுதினார் என்று ஒரு சர்ச்சை நீண்டகாலமாக இருந்து வருகிறது. டூமாவிடம் நகலெடுப்பவராக மாக்கே பணியாற்றினார். அவரது வேலை உதவியாளர் பணி மட்டுமே என மறுக்கிறார்கள் டூமாவின் ரசிகர்கள். ஆனால் சமகால ஆய்வுகளின் படி மாக்கே டூமாவோடு இணைந்து எழுதியிருப்பது தெரியவருகிறது
இந்தச் சர்ச்சைகளை முன்வைத்து சில ஆண்டுகளுக்கு முன்பு Signé Dumas என ஒரு நாடகம் பிரான்சில் நிகழ்த்தப்பட்டது. அந்த நாடகமே இன்று திரைப்படமாக உருவாகியிருக்கிறது.
டூமாவின் மறுபக்கத்தைச் சொல்வதாக உருவாக்கபட்டடிருக்கிறது L’Autre Dumas திரைப்படம். Safy Nebbou இயக்கியிருக்கிறார்
.தலைப்பே இன்னொரு டூமா என்று குறிப்பிடப்படுகிறது.

யார் உண்மையான டூமா என்ற விசாரணையை விடுத்துப் படம், மாக்கேயின் காதல் மற்றும் டூமாவின் உல்லாச வாழ்க்கையைப் பிரதானமாக விவரிக்கிறது. இவர்களின் காதல் போட்டியின் போது யார் உண்மையில் நாவல்களை எழுதியது என்ற கேள்வி எழுப்பப்படுகிறது.
அலெக்சாண்டர் டூமா கடலோர நகரமான Trouville க்கு வருவதிலிருந்து படம் தொடங்குகிறது , டூமாவாக Gérard Depardieu சிறப்பாக நடித்திருக்கிறார். அகஸ்டே மாக்கேயாக Poelvoorde நடித்திருக்கிறார்.
புதிய நாவலை எழுதுவதற்காக இருவரும் கடற்கரை நகருக்கு வந்து சேருகிறார்கள். வழக்கமாக அவர்கள் தங்கும் விடுதியில் அறை ஒதுக்கப்படுகிறது. கடல் பார்த்த அறையில் மட்டுமே தன்னால் இருக்கமுடியும் எனப் பிடிவாதம் பிடிக்கும் டூமா தனது நண்பரின் அறையை எடுத்துக் கொள்கிறார். இதனால் அகஸ்டே மாக்கே டூமாவின் அறையில் தங்குகிறார்.

மறுநாள் டூமாவைக் காண்பதற்காக சார்லெட் என்ற இளம்பெண் வருகிறாள். அவளது அழகில் மயங்கி தனது உண்மை அடையாளத்தை மறைத்துக் கொண்டு தானே டூமா என்று நடிக்கிறார் மாக்கே.
புரட்சிகர நடவடிக்கை காரணமாகச் சிறையில் அடைக்கப்பட்டு தூக்குத்தண்டனைக்காகக் காத்திருக்கும் தனது தந்தை டிஸ்ரைவ்ஸை விடுவிக்க உதவி கேட்கிறாள் சார்லெட். மாக்கே அவளுக்கு உதவி செய்வதாக வாக்களிக்கிறார்.
இந்தப் பொய்யை நிஜமாக்க அவளது பெயரில் டூமாஸிற்கு உதவிக் கடிதம் ஒன்றை அனுப்பி வைக்கிறார். டூமாஸிற்குப் புரட்சி அரசியலில் ஆர்வமில்லை. இந்நிலையில் மனைவியை விவாகரத்து செய்துவிட்டுச் சார்லெட்டை மணந்து கொள்ள வேண்டும் எனக் கனவு காணுகிறார் மாக்கே. இந்தத் தீவிர காதலின் காரணமாக அவளைப் பாரீஸிற்கு வரவழைத்து டூமாவின் விருந்தினர் மாளிகையில் தங்க வைக்கிறார்.

டூமா ஏற்பாடு செய்த விருந்தில் உண்மை வெளிப்பட்டுவிடுகிறது. சார்லெட் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்து மாக்கேவினை அடித்துவிடுகிறாள். அப்போது தான் நடந்த உண்மைகள் டூமாவிற்குத் தெரியவருகின்றது. சார்லெட்டின் அழகில் மயங்கிய டூமா அவளுக்கு உதவி செய்ய முன்வருகிறார். அவளது தந்தையை மீட்பதற்கான முயற்சியில் ஈடுபடுகிறார்கள்.

இதற்கிடையில் மன்னருக்கு எதிராகப் புரட்சியாளர்களுடன் டூமா இணைந்து செயல்படுகிறார் என அரசாங்கம் சந்தேகம் கொண்டு அவரைக் கண்காணிக்கிறது. அவரைச் சுற்றிப் பின்னப்பட்ட சதிவலையில் டூமா விழுகிறார். அதிலிருந்து எப்படி மீளுகிறார் என்பதே படத்தின் இறுதிப்பகுதியாகும்.
படத்தில் ஆகஸ்டே மாக்கே டூமாவின் உதவியாளர் போலவே சித்தரிக்கப்படுகிறார். ஒரு காட்சியில் அவரே தனது முதல் வாசகன். அவரது வேலை நகலெடுப்பது மட்டுமே என்கிறார் டூமா
ஆனால் மாக்கே தனது கதைகளை டூமா தனது பெயரில் வெளியிட்டு நிறையப் பணம் சம்பாதித்துவிட்டார் என்று முகத்திற்கு நேராகவே குற்றம் சாட்டுகிறார். அப்போது டூமா நாம் இணைந்து எழுதினோம் என்று வேண்டுமானால் சொல்லலாம் என்கிறார். மாக்கே காதலிக்கும் பெண்ணை டூமா காதலிக்கும் போது அவர்களுக்குள் மோதல் அதிகமாகிறது
அந்தக் காலத்தில் ஆகஸ்டே போன்ற கோஸ்ட் ரைட்டர்கள் இருந்தார்கள், அவர்கள் பணத்திற்காக எழுதிக் கொடுத்தார்கள் என்பதே வரலாறு.
டூமாவின் காதல் வாழ்வு விசித்திரமானது. நாற்பது பெண்கள் அவருடன் நெருங்கிப் பழகியிருக்கிறார்கள். இந்த உறவால் நான்கு கள்ளக்குழந்தைகள் பிறந்திருக்கின்றன. முதல் மனைவி விவாகரத்து கோரியதோடு அவரிடம் பெரிய தொகையை ஜீவனாம்சம் கேட்டு வழக்குத் தொடர்ந்தார். கடைசி வரை அவரால் அதைப் பெற முடியவில்லை.
படத்தின் ஒரு காட்சியில் நடைப்பயிற்சி மேற்கொள்ளும் போது தான் எழுதிய வரிகளை மாக்கேடிற்கு வாசித்துக் காட்டுகிறார் டூமா. அந்தக் காகிதங்கள் சட்டெனக் காற்றில் பறந்துபோகவே மாக்கே இப்போது என்ன செய்வது எனக்கேட்கிறார். எழுதப்பட்ட எல்லா வரிகளும் என் ஞாபகத்தில் அப்படியே இருக்கின்றன எனக் கடகடவெனச் சொல்லத் துவங்குகிறார் டூமா.

இதன் வழியே டூமாவின் படைப்பாற்றல் அடையாளப்படுத்தப்படுகிறது. அதே நேரம் மது, பெண்கள், நடனம் என உல்லாசமான வாழ்க்கையில் டூமா அதிக ஆர்வம் காட்டும்போது, மாக்கே தனது எழுத்துவேலையில் மட்டுமே முழு அர்ப்பணிப்புடன் செயல்படுகிறார். ஆகவே அவர் டூமாவின் எழுத்துப் பணிக்கு நிறையத் துணை செய்திருப்பதை அறிந்து கொள்ள முடிகிறது.
முழுக்க முழுக்கக் கற்பனையான இக்கதை, டுமாஸின் வாழ்க்கையில் நடந்த சில உண்மை நிகழ்வுகளை இணைத்து உருவாக்கப்பட்டிருக்கிறது, டூமாஸை விடவும் மாக்கே மீது கவனம் குவியும்படியாகத் திரைக்கதை எழுதப்பட்டிருக்கிறது.
சமையலில் ஆர்வம் காட்டுவது, முகமூடி விருந்தில் கோமாளி போல நடந்து கொள்வது. கோபம் கொண்டு வெளியேறிப் போகும் சார்லெட்டினை குதிரையில் துரத்திப் போவது, அவளது தந்தையை மீட்கத் தானே குதிரைவண்டி ஒட்டுவது என டூமா உணர்ச்சிக் கொந்தளிப்பிலே இருக்கிறார் அவரைப் போலின்றி மாக்கே எதையும் ஆழ்ந்து யோசித்துத் திட்டமிடுகிறார். செயல்படுத்துகிறார்.
சார்லெட்டை சந்திக்கும் வரை அவருக்கு டூமா மீது கோபமில்லை. அறிந்தே அவர் நிழல் எழுத்தாளராகப் பணியாற்றியிருக்கிறார்.
மாக்கே ஒரு கண்ணாடி. அதில் நான் என்னையே பார்த்துக் கொள்கிறேன் என்று ஒரு காட்சியில் டூமா சொல்வது பொருத்தமானதே.
டூமாவை பற்றிய இப்படம் பலவிதங்களிலும் Cyrano de Bergerac நாடகத்தை நினைவுபடுத்துகிறது. இந்த நாடகம் திரைப்படமாக வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்த ஆண்டு கூடச் சைரானோ (2022) எனப் புதிய படமாக வெளியாகியுள்ளது
டூமாவின் மீது சுமத்தப்பட்ட இதே குற்றச்சாட்டு ஷேக்ஸ்பியர் மீதும் வைக்கப்பட்டிருக்கிறது. மார்லோ தான் ஷேக்ஸ்பியர் நாடகங்களை எழுதியவர் என்று இன்றும் வாக்குவாதம் செய்து கொண்டிருக்கிறார்கள். இது போன்ற சர்ச்சைகளுக்கு முடிவே கிடையாது.
சமையலில் விருப்பம் கொண்ட டூமா Great Dictionary of Cuisine (Le Grand Dictionaries’ de Cuisine) என்ற சமையற் குறிப்புகள் கொண்ட அகராதியை எழுதியிருக்கிறார், இன்றும் அவரது பெயரால் அழைக்கப்படும் “Alexander Dumas Potato Salad” விரும்பி உண்ணப்படுகிறது.

இப்படத்தில் வெளிப்புறத்திலே அதிகக் காட்சிகளை படமாக்கியிருக்கிறார்கள். வழக்கமான காதல் கதை, திரைக்கதையிலும் பெரிய மாற்றமில்லை. புரட்சியாளர், மக்கள் போராட்டம் என்று பூசியிருக்கிறார்கள். அது கதையின் போக்கில் பெரிய மாற்றத்தை உருவாக்கவில்லை.
அலெக்சாண்டர் டூமாவின் வாழ்க்கையையும் படத்தில் சரியாகச் சொல்லப்படவில்லை. வரலாறும் சரியாகச் சித்தரிக்கப்படவில்லை. சினிமா சந்தைக்கான விற்பனைப்பொருளாகவே எழுத்தாளனின் வாழ்க்கையும் கையாளப்பட்டிருக்கிறது.
•••
S. Ramakrishnan's Blog
- S. Ramakrishnan's profile
- 658 followers

