மஞ்சள் நிறத் தனிமை
ந.ஜயபாஸ்கரனின் அறுந்த காதின் தனிமை கவிதைத் தொகுப்பைப் படித்தேன் மிகச்சிறந்த கவிதைகளைக் கொண்ட தொகுப்பு. ஜயபாஸ்கரன் நாம் கொண்டாட வேண்டிய மிக முக்கியமான கவிஞர். மதுரையில் வெண்கலப் பாத்திரங்கள் விற்கும் சிறு வணிகராக வாழ்ந்து வரும் இவர் நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாகக் கவிதைகள் எழுதி வருகிறார். இந்தத் தொகுப்பிலுள்ள அவரது கவிதைகள் வான்கோவினைப் போலவே தீவிர மனநிலையிலிருந்து எழுதப்பட்டிருக்கின்றன

தனது கவிதைகளில் வான்கோவின் அறுந்த காதினை ஒரு குறியீடாக மாற்றியிருக்கிறார் ஜயபாஸ்கரன். அது கொரானோ காலத்தில் உறைந்து போன நம் மனநிலையினை அடையாளம். இக்கவிதைகள் மரணம் பற்றிய அச்சத்திலிருந்து உருவாகவில்லை. மாறாக வாழ்வின் நெருக்கடிகளை, கைமீறிய நிகழ்வுகளை எப்படி எதிர்கொள்வது, ஏற்றுக் கொள்வது என்பதைப் பற்றிய விசாரணையாக மாறுகிறது.
கவிதையில் திரவத்தன்மை கூடியிருப்பதை உணர்ந்துள்ளதாக ஜயபாஸ்கரன் தனது முன்னுரையில் சொல்கிறார். அதைத் திரவத்தன்மை என்பதை விடவும் பாதரசம் போலாகியிருக்கிறது என்றே சொல்ல வேண்டும்.

கொரோனா உருவாக்கிய புறநெருக்கடிகள் உலகம் அறிந்தது. ஆனால் அக நெருக்கடிகள் விநோதமானவை. திடீரென அன்றாட வாழ்க்கை இப்படி ஒடுங்கிவிடும் என்று எவரும் நினைக்கவில்லை. வீட்டின் சுவர்களுக்குள் ஒடுங்கிய நிலையில் வழிமறந்து போன விலங்கைப் போல உணரும் நிலை ஏற்பட்டது. சிலந்தியின் வலையைப் போல அச்சம் மெல்லப் படர்ந்து விரிந்தது. தன் அகத்தை மீட்டுக் கொள்ளக் கவிஞராக ஜயபாஸ்கரன் எமிலியை, ஆண்டாளை, உலகக் கவிஞர்களைத் துணை கொண்டிருக்கிறார். நினைவிற்கும் நிஜத்திற்கும் நடுவில் சஞ்சரிக்கும் இந்தக் கவிதைகள் வெயிலுக்குள் கூவும் குயிலின் பாடலைப் போல அபூர்வமாக ஒலிக்கின்றன. அகத்தனிமை தீராதது. புறத்தனிமை உருவாக்கப்படுவது. அகத்தனிமையைத் தான் எமிலி டிக்கன்ஸ்ன் பாடுகிறார். ஜயபாஸ்கரன் எழுதுகிறார்.
ஜயபாஸ்கரனின் கவிதைகள் நவீனத் தமிழ் கவிதையுலகில் தனித்துவமானவை. Modern Metaphysical poet என்று அவரை வகைப்படுத்தலாம். ஆனால் Metaphysical poet களிடம் காணமுடியாத காமம் பற்றிய அவதானிப்புகளும் ஆழ்ந்த உணர்வெழுச்சிகளும் இவரது கவிதையில் காணப்படுகின்றன.
இன்னொரு புறம் மதுரை மாநகரின் தொன்மங்களை, நம்பிக்கைகளை, தெய்வாம்சங்களை, வையை நதியை, இன்றைய உருமாறிய வாழ்க்கையைத் தொடர்ந்து எழுதி வருகிறார் என்பதால் மதுரை நகரின் பெரும்பாணன் என்றும் வகைப்படுத்தலாம். பொற்றாமரைக் குளத்தைச் சுற்றி வரையப்பட்ட ஓவியங்களைப் போல இவர் கவிதைகளின் வழியே மதுரையைப் பற்றிய அபூர்வ சித்திரத்தை வரைந்திருக்கிறார்.

மதுரை மீனாட்சியம்மன் கோவிலுக்குச் செல்வதற்கு ரகசிய வழிகள் இருப்பதாகச் சொல்லிக் கொள்வார்கள். அப்படி ஒரு ரகசிய வழியைத் தனது கவிதைகளின் வழியே ஜயபாஸ்கரன் உருவாக்கியிருக்கிறார். அதன் வழியே நாம் சென்றால் மீனாட்சியின் கிளி நம்மை வரவேற்கும். மீனாட்சியின் சிரிப்பை நாம் கேட்கலாம். தெற்குவாசலில் வெட்டுண்ட பாணனின் தலையைக் காணலாம். கோவிலையும் மதுரையின் தொன்மங்களையும் இப்படிக் கவிதைகளில் ரசவாதம் செய்ய முடியும் என்பது வியப்பளிக்கிறது. .
காமமும் கடவுளும் ஒரு வெண்கலக்கடை வணிகரும் சந்திக்கும் முக்கோணமாக அவரது கவிதையுலகினைச் சொல்லலாம். கோவில் கோபுரத்திலுள்ள பதுமைகளில் சில பறக்க எத்தனித்த நிலையில் சிறகை விரித்தபடியே நிற்பதைக் கண்டிருக்கிறேன், அப்படித் தனது சிறகை விரித்தபடியே உறைந்து போன ஒரு பதுமை போலவே ஜயபாஸ்கரன் தன்னை உணருகிறார்
வாழ்க்கை அனுமதித்துள்ள விஷயங்களுக்கும் மனது விரும்பும் விஷயங்களுக்கும் இடையில் ஊசலாடுகின்றன அவரது கவிதைகள். ஆழ்ந்த வாசிப்பின் வழியே அவர் கொண்டாடும் கவிஞர் எமிலி டிக்கன்ஸின். ஆண்டாள். காரைக்கால் அம்மையார், யேட்ஸ், நகுலன், யோஸகோ அகிகோவுடன் நெருக்கமாக உணருகிறார். அவர்களைத் தனது தோழிகளாக, தோழர்களாக மதுரை வீதிகளில் உடன் அழைத்துச் செல்கிறார். உரையாடுகிறார்.

மீனாட்சியம்மனும் எமிலி டிக்கன்ஸ்சனும் தோழிகளாகும் அபூர்வ நிலையை அவரது கவிதைகளில் காணமுடிகிறது
என் கவிதைகள்
சுருக்கமாகக் இருப்பதைக் கண்டு
நான் வார்த்தைகளின் கஞ்சன் என்கிறார்கள்
ஆனால் நான் எதையும்
சொல்லாமல் விட்டுவிடவில்லை
சேர்ப்பதற்கு எதுவுமில்லை
மீன் போலின்றி
இறக்கைகள் இல்லாமலே
நான் நீந்துகிறேன்
ஒரே மூச்சிலே என் கவிதை
முடிந்துவிடுகிறது
என்ற ஐப்பானிய கவிஞர் யோசனோ அகிகோ கவிதையைத் தனக்கு விருப்பமான கவிதையாக ஜயபாஸ்கரன் குறிப்பிடுகிறார். இந்த வரிகள் அவரது கவிதைகளுக்கும் பொருந்தக்கூடியதே.
ஜயபாஸ்கரன் கவிதைகளில் கடவுள் வெளிப்படுகிறார். ஆனால் அவர் சமயக் கவிதைகளில் வெளிப்படுகிறவராக இல்லை. அதே சமயம் நவீன மனது கற்பனை செய்யும் கடவுளாகவும் இல்லை. ஞானக்கூத்தன் சொல்வது போல நரியைப் பரியாக்கிய விளையாட்டு முடிந்துவிட்ட ஒருவரைப் போலவே தோற்றமளிக்கிறார்.

மதுரை மாநகரம் ஒரே நேரத்தில் பல்வேறு நூற்றாண்டுகளில் வாழ்ந்து கொண்டிருக்கிறது. கோவிலுக்குள்ளும் அதைச் சுற்றிய வீதிகளில் உலவும் காலம் வேறு. டவுன்ஹால் ரோட்டின் காலம் வேறு. இதே மதுரைக்குள் கோவலன் கொலையுண்ட பொட்டலைத் தேடி ஒருவன் இன்றும் அலைந்து கொண்டிருக்கிறான். புட்டுத்திருவிழா ஒரு பக்கம் நடக்கிறது. இரவில் அன்னை மீனாட்சி தனது மூக்குத்தியைக் கழட்டிவிட்டுச் சயனம் செய்யச் செல்கிறாள். கல்யானை கரும்பு தின்கிறது. இப்படி மதுரையில் ஊடாடும் பல்வேறு காலங்களைத் தனது கவிதைகளில் அடையாளம் காட்டுகிறார் ஜயபாஸ்கரன்.
அவரது பிற்பகல் பொழுதுகளின் உலோக மஞ்சள் தொகுப்பில் அங்கம் வெட்டுண்ட பாணனின் கதை ஒரு குறியீடாக முன்வைக்கப்படுகிறது. அங்கம் வெட்டுண்ட பாணனின் இன்னொரு வடிவம் போலவே வான்கோவின் அறுந்த காது இடம் பெறுகிறது.
பாணன் தீராக்காமத்தின் பொருட்டே அங்கம் துண்டிக்கபடுகிறான். வான்கோவின் காது துண்டித்தலுக்குப் பின்னும் இப்படியான காமம் இருக்கவே செய்கிறது. விலைமாதின் மீதான அன்பிற்கான வெகுமதியாகத் தனது காதை துண்டித்துக் கொடுத்தார் என்றொரு கதையும் இருக்கத்தானே செய்கிறது
உலோக மஞ்சள் என்பது தினசரி வாழ்வின் தோற்றம். மனிதன் தான் பயன்படுத்தும் பொருட்களைக் கலைவடிவமாக மாற்றுவதில் தேர்ந்தவன். நாச்சியார்கோவில் விளக்கு எவ்வளவு அழகானது. வெண்கலப் பாத்திரங்கள் தன் தோற்றத்திலே இளமையைக் கொண்டிருக்கின்றன.
சமையலறை பொருட்கள் யாவும் அழகிய கலைவடிவங்களே. அவை தன் பயன்பாட்டினை இழந்தவுடன் மறைந்துவிடுகின்றன. அல்லது கலைப்பொருளாகிவிடுகின்றன. மொகலாயர் காலச் சமையற்பாத்திரங்கள் இன்று விலைமதிப்பற்ற ம்யூசியப்பொருளாக உள்ளதே.

வான்கோவின் கடிதங்களை வாசிக்கும் போது அளவில்லாத அன்பு கொண்ட அவரை உலகைத் தொடர்ந்து நிராகரித்து வந்திருப்பதை உணர முடிகிறது. அது தான் அவரது மனச்சிதைவிற்கான காரணம். படைப்பாற்றலின் தீவிரத்தில் அவரது மனம் கொந்தளிப்பிலே இருந்திருக்கிறது. அது தான் இத்தனை தீவிரமாக வண்ணங்களை வெளிப்படுத்தியிருக்கிறது. வான்கோவின் வயல் வெளியில் எரியும் வண்ணங்களும் சூரிய காந்தி பூவின் அடர் மஞ்சளும், பச்சை வயலும் கனவில் தோன்றும் காட்சிகளாகவே உள்ளன.
பிரான்சின் தெற்கில் உள்ள ஆர்லஸ் நகரத்தில், வான்கோ வசித்த போது தீவிரமான மனச்சிதைவிற்கு உள்ளாகியிருந்தார்., அந்த நாட்களில் ஓவியர் பால் காகினுடன் ஆழ்ந்த நட்பு கொண்டிருந்தார். அவரைவிட்டு காகின் பிரியவே அந்தக் கோபத்தில் தனது காதை துண்டித்துக் கொண்டார் என்கிறார்கள். ஆர்லஸில் வான்கோ மஞ்சள் நிற வீட்டில் வசித்தார். மஞ்சள் என்பது அவரது கொந்தளிக்கும் மனநிலையின் அடையாளம்.
வான்கோவின் மஞ்சளை ஒரு குறியீடாகக் கொண்டு ஐயபாஸ்கரன் முந்தைய தொகுப்பிலே கவிதைகள் எழுதியிருக்கிறார். அதன் தொடர்ச்சியாகவே இந்தத் தொகுப்பினையும் பார்க்கிறேன்.
இதில் வான்கோவை மதுரையின் வீதிகளுக்குள் அழைத்து வருகிறார். உரையாடுகிறார். அவரது மஞ்சளையும் தனது வெண்கல மஞ்சளையும் ஒன்றிணைந்து பார்க்கிறார். அறுந்த காது ஒரு படிமமாக மாறுகிறது
இயேசு கடைசியாகச் செய்த அற்புதம் கைது செய்ய வந்த காவலரின் அறுந்த காது ஒன்றை ஒட்டியது . துண்டிக்கப்பட்ட காதை இணைப்பது மூலம் தனது கருணையை இயேசு வெளிப்படுத்துகிறார். வான்கோவின் அறுந்த காது மறுதலிப்பு என்றால் இயேசுவின் அதிசயம் அன்பின் வெளிப்பாடு. இந்த இரண்டிற்கும் இடையில் ஊசலாடுகிறது ஐயபாஸ்கரனின் கவிதைகள்.
உலோகம் சார்ந்து இவ்வளவு கவிதைகளை யாரும் தமிழில் எழுதியதில்லை. வெண்கல பாத்திரங்கள் என்பது வெறும் பயன்பாட்டுப் பொருளில்லை. அது ஒரு காலத்தின் அடையாளம். பண்பாட்டின் அடையாளம். சந்தோஷத்தின் அடையாளமாக வெண்கல ஓசை குறிப்பிடப்படுகிறது. வெண்கல மணிகளே ஆலயத்தில் ஒலிக்கின்றன. வெண்கலத்தின் மஞ்சளும் வான்கோவின் மஞ்சளும் எதிர்நிலை படுகின்றன.
கால மாற்றம் வெண்கலப் பாத்திரங்களை நிறமாற்றுகிறது. அது தினசரி வாழ்வின் தேய்மானம். ஆனால் வான்கோவின் மஞ்சள் நிறம் மாறுவதேயில்லை. அது காலத்தைத் தாண்டி ஒளிருகிறது.
அறுந்த காதின் தனிமை என்பது துண்டிக்கபட்ட வாழ்வின் அடையாளமாக மாறுகிறது.
காரைக்கால் பேய்
ஆண்டாள்
பராங்குச நாயகி
மகாதேவி அக்கா
லல்லேஸ்வரி
எமிலி டிக்கின்ஸ்ன்
வர்ஜீனியா வுல்ஃப்
ஸில்வியா பிளாத்
எல்லோரும்
அறுந்த காதின்
தனிமையை உணர்ந்தவர்கள் தான்
அறுந்த காதின் தனிமைக்குழு இணையானது
இன்னொரு காதின் தனிமை
என்பதும் உண்மை
என்ற கவிதையில் வரும் கலைஞர்கள் யாவரும் தன் இருப்பைத் தீவிரமாக அறிந்தவர்கள். விசாரணை செய்தவர்கள். மாற்றத்திற்காக ஏங்கியவர்கள். தனது தனிமையைச் சுடராக மாற்றியவர்கள். அவர்களையே அறுந்த காதின் தனிமையை உணர்ந்தவர்கள் என்று கவிஞர் அடையாளப்படுத்துகிறார். இதே கவிதையில் அறுபடாத இன்னொரு காதின் தனிமையைப் பற்றியும் பேசுகிறார். இருத்தலும் இன்மையும் ஒரே புள்ளியில் சந்திக்கின்றன. கண்ணகி ஒற்றைமுலைச்சியானது போல ஒற்றைக் காது கொண்ட வான்கோ நினைவில் எழுகிறார்
செடியிலிருந்து ஒரு இலையைத் துண்டிப்பது போல வான்கோ தனது காதை துண்டித்துக் கொண்டார்.. துண்டிக்கப்பட்ட பிறகு அந்தக் காது வான்கோவின் காதில்லை. அது ஒரு விசித்திர வஸ்து. காதை துண்டிப்பதால் உலகின் ஓசையிலிருந்து ஒருவன் தப்பிவிட முடியாது. ஆனால் தன்னை இழப்பதன் வழியே தனது எதிர்ப்பை, அன்பை, காட்டமுடியும் என நினைப்பவர்கள் கலைஞர்கள். அதை இந்தக் கவிதையை வாசிக்கையில் உணரமுடிகிறது
ஜப்பானியக் கதை ஒன்றில் ஒரு சிறுவன் இசை ஆசிரியரிடம் தனக்கு மௌனத்தை இசைக்கக் கற்றுத் தரும்படி கேட்கிறான். ஆசிரியர் அது ஒன்றும் பெரிய விஷயமில்லை. ஆனால் நீண்டகாலம் பயில வேண்டும் என்கிறார். அவன் இல்லாத இசைக்கருவியைக் கொண்டு மௌனத்தை இசைக்கப் பழகுகிறான் என்று கதை நீளும். அந்தச் சிறுவனைப் போலவே ஜயபாஸ்கரன் தனது கவிதைகளில் மௌனத்தை இசைக்கிறார். நிறங்களைக் கவிதையாக்குவது என்பது அப்படியான முயற்சியே.
காலமாற்றம் தான் அவரது மையப்பொருள். அதை எதிர்கொள்ளும் மனிதன் இழந்தவற்றைப் பற்றி நினைக்கிறான். ஏங்குகிறான். அது வெறும் ஏக்கமில்லை. மாறாக மீட்கமுடியாத விஷயங்களின் முன்னால் தான் ஒரு சிறுதுளி என்று உணரும் நினைவுகளே கவிஞரை வழிநடத்துகின்றன. அந்த நினைவுகளில் மதுரையும் அதன் கோவிலும் தொன்மங்களும் கரைந்திருக்கின்றன. நினைவில் ஒடும் வையை வேறுவிதமாக உள்ளது.
பாத்திரக்கடை அவரது கவிதைகளில் தொடர்ந்து ஒரு குறியீடாக வருகிறது. மண்பானையில் அதன் வெற்றிடம் தான் பயன்பாடாகிறது என்கிறது தாவோ. வெற்றிடத்தை அழகான பாத்திரமாக மாற்றுகிறான் குயவன். அது கலையின் வெளிப்பாடு.
பாத்திரக்கடைக்குள் இருக்கும் ஒருவன் தனக்குக் கிடைத்துள்ள உலகம் மிகவும் சிறியது. தான் கனவு காணும் உலகம் மிகப்பெரியது என்று நினைக்கிறான். இந்த இருவேறு உலகங்களின் இணைப்பு கண்ணிகளை. இடைவெளிகளை, நகர்வுகளை ஏக்கத்துடன். சலிப்புடன். ஆதங்கத்துடன் எதிர்கொள்கிறான். தனது இயலாமை பற்றிச் சிறியதாக முணுமுணுக்கிறான். அவை கவிதைகளில் வெளிப்படுகின்றன.
வான்கோவின் சூரியகாந்தி மஞ்சள்
ஆலிவ் பச்சையாக
உருமாறிக் கொண்டிருப்பதாகச் சொல்கிறார்கள்
என்னுடைய பித்தளை மஞ்சளில்
ஊர்ந்து கொண்டிருக்கிறது
கருப்பு
என்ற கவிதையில் காலம் இரண்டு மாற்றங்களை நிகழ்த்திக் காட்டுகிறது. ஒன்று வளர்ச்சி மற்றது முடிவு. ஆனால் இரண்டிலும் மஞ்சள் தான் ஆதாரமாக இருக்கிறது.
திறந்த கதவிற்குள் சப்தமின்றி வெயில் நுழைவது அவரது கவிதையில் நிகழ்வுகள் எளிதாக நடந்தேறுகின்றன. திகைப்பூட்டும் சம்பவங்களில்லை. ஆனால் நாம் கவனிக்கத் தவறிய முக்கிய நிகழ்வுகள். எளிய மனிதர்களின் இயல்பான குரல்கள். சின்னஞ்சிறிய சந்தோஷங்கள், இழப்புகள் அது ஏற்படும் அதிர்வுகளைக் காணமுடிகிறது.
கடிகாரக் கடையின் சுவரில் ஒரே நேரத்தில் வேறுவேறு நேரத்தைக் காட்டிக் கொண்டிருக்கும் கடிகாரங்களைப் போல இவரது கவிதைகள் இருக்கின்றன. எந்தக் கடிகாரம் எப்போது ஒசை எழுப்பும் என்று சொல்ல முடியாது. அதே நேரம் இந்தக் கடிகாரங்களால் கட்டுப்படுத்த முடியாத காலமற்ற இருப்பும் அதே இடத்தினுள் இருக்கிறது என்பதையும் அவர் சுட்டிக்காட்டுகிறார்.
கைதவறி விழுந்த பாத்திரம் எழுப்பும் ஓசையைப் போலக் கவிதையின் முடிவில் சட்டென ஒரு ஓசை சற்றே உயர்ந்து ஒலித்து அடங்கிவிடுகிறது. சிறிய அதிர்வு. அவ்வளவு தான் கவிதை முடிந்துவிடுகிறது.

ஐயபாஸ்கரனின் கவிதைகளை வாசிக்கும் போது கவிதையின் கடைசிவரி முடிந்தவுடன் மீண்டும் நாம் முதல் வரிக்குத் திரும்பி வர வேண்டும். இப்போது அதே வரிகள் புதிதாக ஒளிர ஆரம்பிக்கின்றன. பொம்மலாட்டக்கலைஞன் ஆணும் பெண்ணுமாக ஏழு கதாபாத்திரங்களுக்கு ஒருவனே மாற்றி மாற்றிக் குரல் கொடுப்பது போல அவர் சட்டெனக் காரைக்கால் அம்மையாராகவும் ஆண்டாளாகவும் கவிஞராகவும் கடைபத்தராகவும் மாறி மாறி குரல் கொடுக்கிறார். அது கவிதையை மாயக்கலையாக மாற்றுகிறது.
நினைவுகளின் சுடர் எதனால் தூண்டப்படுகிறது என்று நமக்குத் தெரியாது. ஆனால் நினைவு ஒளிரும் போது அவை கடந்தகாலத்தின் காட்சிகள் என்பதை மறந்துவிடுகிறோம். நினைவுகள் முடிவில்லாத நித்யவெளியில் திரும்பத் திரும்ப நடந்து கொண்டேயிருக்கின்றன. நிகழ்காலம் நெருக்கும் போது ஒருவன் நினைவுகளுக்குள் தஞ்சம் அடைந்து விடுகிறான். முதுமை என்பது நினைவின் கூடாரம். அங்கே நினைவின் நடனம் முடிவதேயில்லை.
இந்தத் தொகுப்பின் நிகரற்ற கவிதையாக நான் இதைக் கருதுகிறேன்.
தன்னுள் தேநீர் இல்லாத
மெலிந்த திரேகக் கல்லாக்காரன்
பாத்திரங்களைக் களவு கொடுப்பவனாகக் இருக்கிறான்
பிற்பகல் உணவு வேளையில்
பெட்டியடிக் கணக்குப் பிள்ளையோ
வாய் பதனம் கை பதனம்
என்று
சொல்லிக் கொண்டிருக்கிறார்
சக வேலையாட்களின்
முக வலிப்பைப் பொருட்படுத்தாமல்
எல்லாவற்றுக்கும் இடையில்
சேலை மடிப்பில் சாமான்களுடன்
வெட்டி மறைகிறாள்
திடீர் நகர் மின்னல் கொடி
பிற்பகல் மஞ்சளில்
பாத்திரக் கடையில் திருடும் பெண்ணின் சித்திரத்தை விவரிக்கும் இக் கவிதையில் வரும் திடீர் நகர் மின்னல்கொடி தமிழ் கவிதைக்குப் புதுவரவு. கவிதையில் திருட்டு தெரிந்தே நடக்கிறது. மின்னல்கொடிக்குப் பயமில்லை. அங்கே பிற்பகல் மஞ்சள் ஒரு சாட்சியம் போலாகிவிடுகிறது
தன்னுள் தேநீர் இல்லாத
மெலிந்த திரேகக் கல்லாக்காரன்
பாத்திரங்களைக் களவு கொடுப்பவனாகக் இருக்கிறான்
என்ற வரிகளின் கடைக்காரனின் இயல்பு அழகாக வெளிப்படுத்தப்படுகிறது. தன்னுள் தேநீர் இல்லாதவன் என்பது எவ்வளவு அழகான வரி.
பெட்டியடி கணக்குப் பிள்ளையும் அவர் முணுமுணுப்பும் காலத்தின் குரலாகவே ஒலிக்கிறது
ஆண்டாளையும் எமிலியையும் காரைக்கால் அம்மையாரையும் மட்டுமில்லை. திடீர் நகர் மின்னல்கொடியினையும் எழுதியிருக்கிறார் என்பதே ஜயபாஸ்கரனின் சிறப்பு.
நான்மாடக் கூடலின் அன்றிரவு மூவர் தூங்கவில்லை என்று முடியும் உரைநடைக்கவிதையில் காலம் நீரூற்று போலத் தனக்குள் பொங்கி வழிகிறது. தொகுப்பின் உரைநடைக் கவிதைகள் தனித்துக் கொண்டாட வேண்டியவை.
இருளும் ஒளியும் சமமாய்ப் புணர்ந்த சித்திரத்தில்
அவித்த உருளைக்கிழங்கைப் புசிக்கிறவர்களின்
துயர விலாசம்
கழுவாத வெண்கலக் கும்பா மஞ்சளுடன்
கரைக்கஞ்சி குடிப்பவனின்
மன விலக்கம்
கவிதையில் வான்கோவின் புகழ்பெற்ற ஓவியமும் சமகாலத் தமிழ் வாழ்வின் சித்திரமும் ஒன்றாகின்றன. வான்கோவின் ஒவியத்தைப் பற்றி எழுதப்பட்ட மிகச்சிறந்த வரியாக இதைச் சொல்வேன்.
இரவானது மதுரை நகரம் நூற்றாண்டுகள் பின்னோக்கிப் போய்விடுவதை உணர்ந்திருக்கிறேன். ஜயபாஸ்கரனின் கவிதைகளில் பகல்நேர மதுரைக்காட்சிகள் நிறைய இருக்கின்றன. இரவு நேர மதுரை என்பது நாட்படு தேறலைக் குடிப்பது போன்றது. அந்த மயக்கம் எளிதானதில்லை. மதுரை மாநகரம் ஜயபாஸ்கரன் கவிதைக்குள் குருதியாக ஓடுகிறது. பாத்திரங்களில் எழுதப்பட்ட பெயர்கள் பாத்திரம் தனது பயன்பாட்டினை இழந்த போதும் மறைந்துவிடுவதில்லை. அப்படியானது தான் அவரது கவிதைகளும்.
உண்மையை அப்படியே சொல்லாமல் சற்றே சரித்துச் சொல்லிவிட வேண்டும் என்கிறார் எமிலி டிக்கின்ஸன்.. அதைத் தான் ஜய பாஸ்கரனின் கவிதைகளும் செய்திருக்கின்றன
••
S. Ramakrishnan's Blog
- S. Ramakrishnan's profile
- 657 followers
