S. Ramakrishnan's Blog, page 99
January 23, 2022
மறுக்கப்பட்ட நீதியின் குரல்
இடக்கை (நாவல்) – வாசிப்பனுபவம்
ந. பிரியா சபாபதி, மதுரை

‘இடக்கை’ என்ற இந்த நாலைப் படித்ததும், ‘தன் மனத்தினை அநீதியிடம் ஒப்படைத்தவர்களின் கைகளில் எளியோர் சிக்குண்டால், அவர்களின் நிலைமை சூறாவளியால் வேரோடு பறித்துச்செல்லப்படும் மரத்தின் நிலைமையைப் போன்றாகிவிடுமே!’ என்பதை உணர்ந்தேன்.
இந்நாவல் மன்னராட்சிக் காலத்தைப் பற்றிப் பேசுகிறது. மன்னர்களின் வாழ்வினையும் அவர்கள் நீதிக்கும் அநீதிக்கும் இடையில் சிக்குண்ட நிலையையும் கூறிச் செல்கிறது.
“அரசபதவி என்பது ஒரு மரணசிம்மாசனம், அதில் ஏறி அமர்ந்தவன் மெல்ல மெல்ல மனிதத்தன்மைகளை இழந்து போவான். அவனைச் சிம்மாசனம் ஆட்சி செய்யத் துவங்கிவிடும். அரியணையில் அமர்ந்த பலரும், கைது செய்யப்பட்டுச் சிறைப்பட்டு நொந்து புலம்பியோ, சதி செய்தோதான் இறந்து போயிருக்கிறார்கள்.”
எளியோர்களின் நிலையை உணர்த்தும் காட்சியாகவே ஒவ்வொரு காட்சியும் அமைந்துள்ளது. இரவு, பகலானது ஒவ்வொரு நாளும் மாறிக் கொண்டே வந்தாலும் அவை அனைவருக்கும் ஒரே வெளிச்சத்தைத் தருவதில்லைதானே?.
“எல்லா இரவுகளும் ஒன்றுபோலத் தோன்றினாலும் ஒன்றில்லை. ஒவ்வொரு இரவும் தனித்துவமானது. தனிவாசனையும் இயல்பும் கொண்டது. எங்கிருந்து வருகிறது இந்த இருள். காற்றைப்போல அதுவும் ரகசியமாகப் பிறப்பெடுக்கிறதா, ஒவ்வொரு இரவிலும் மனிதர்கள் இறந்து போகிறார்கள். விடியலில் மீண்டும் உயிர்ப்பெற்று விடுகிறார்கள். இந்த நாடகத்தை எத்தனை பேர் உணர்ந்திருக்கிறார்கள்.”
மன்னரின் தாதி உணர்த்திய கருத்தினை மன்னன் தன் இளம் பருவத்தில் உணர இயலவில்லை. அவர் தன்னுடைய 88ஆவது வயதில் உணர்கிறார். காலம் ஒவ்வொரு மனிதனுக்கும் உரிய வேளையில் உணர்த்துகிறது அல்லது அவர் காலத்திற்குத் தன்னை ஒப்படைக்கும் பொழுது உணர்த்துகிறது.
“எந்தப் பேரரசனாலும் உதிர்ந்த ஒரு பூவை மரத்தில் ஒட்ட வைத்து விட முடியாது. எளிய விஷயங்களைப் புரிந்து கொள்வது சிரமமானது. இயற்கையை எவராலும் வெல்ல முடியாது. மனித சக்தி என்பது வரையறுக்கப்பட்ட ஒன்று. இயற்கை அப்படியானதில்லை. அது ஒரு மர்மம். அவிழ்க்க அவிழ்க்க நீண்டு கொண்டே செல்லும் புதிர்.”
இந்தப் புதிரை அவிழ்க்க நினைப்போருக்கு இது, வெவ்வேறு புதிர்களின் தொகுப்பாக மாறி விடுகிறது.
எளிய மக்களின் பிரதிநிதிகளான தூமகேதுவும் அஜ்யாவும் நீதிக்காகக் காத்திருந்தனர். ‘நீதியானது தங்களுக்குக் கிடைக்காது’ எனத் தெரிந்தும் காத்திருக்கும் சாமர்களில் ஒருவர் தூமகேது. அவர் இடக்கைப் பழக்கம் கொண்டவர். இது இயற்கை அவருக்குக் கொடுத்தது அல்ல. செயற்கையாக அவருக்கு உருவாக்கப்பட்டதாகும்.
“சாமர்கள் எல்லோரும் இடக்கைப் பழக்கம் கொண்டிருந்தார்கள். அது தற்செயலில்லை. மாறாக அவர்கள் வலதுகையைப் பயன்படுத்தக்கூடாது எனத் தண்டிக்கப்பட்டிருந்தார்கள்”
எதற்காக இடக்கைப் பழக்கத்தினை மேற்கொள்ளவேண்டும் என்ற காரணமும் அவர்களுக்காகவே உருவாக்கப்பட்டிருந்தது. அவர்கள் பொய்க்குற்றம் சாட்டப்பட்டுச் சிறையில் அடைக்கப்படுகிறார். நீதியின் குரல் அடங்கும் போது அநீதியின் குரல் மேலெழும். தூமேகது வாழ்விலும் அது நடக்கிறது. அவரின் இறுதிக் காலம் வரை அக்குரல் தொடர்ந்து கொண்டிருக்கிறது. தூமகேது விதியைப் பற்றிச் சிந்திப்பவர் இல்லை. ஆனால், திருட்டுக்குற்றம் சுமத்தப்பட்ட பின்னர் அவர், ‘விதியின் பயன் இது’ என நினைக்கிறார்.
“ஒருவன் விதியை நம்பத் துவங்கிய மறுநிமிசம் பலவீனமானவன் ஆகிவிடுகிறான். பின்பு அவனால் அதிலிருந்து விடுபடவே முடியாது.”
இந்த விதியானது அவரைச் சிறைச்சாலைக்குத் தள்ளுகிறது. அங்கிருந்து அவரைப் பூடகமாக வெளியேற்றுகிறது. ஒவ்வொரு பகுதியாக அவரை அலைக்கழிக்கிறது. துடுப்பை இழந்த படகு என அவர் வாழ்வு மாறிவிடுகிறது. அதனாலேயே அவது அவரை அவர் விரும்பும்வழியில் அவர் விரும்பும் இடத்துக்கு அவரைக் கொண்டு சேர்க்கவில்லை.
சிறைச்சாலையில் நடக்கும் உரையாடல்கள் அனைத்தும் அங்குப் பொய்க்குற்றச்சாட்டின் பேரில் அடைக்கப்பட்டவர்களின் குரலாகவே எழுகின்றன. ‘தன்னைப் போன்ற எளிய மனிதனுக்கு மட்டும் ஏன் இந்த நிலைமை?’ என்று மனதிற்குள் புழுங்குகிறார் தூமகேது. அந்தப் புழுங்கலானது அதைக் காது கொடுத்துக் கேட்போரிடம் வருத்தமாக வெளிப்படுகிறது.
“எல்லாத் தேசங்களிலும் எளிய மனிதர்கள்தான் குற்றவாளியாக்கப் படுகிறார்கள். எவருக்கும் நீதி எளிதாகக் கிடைத்துவிடுவதில்லை. ஒருநாள் தூமகேது சக்ரதாரிடம் கேட்டான்.
“நீதி என்றால் என்ன?”
அவர் சிரித்தபடியே சொன்னார், “அரசிற்கு எது நன்மை பயக்கிறதோ அதுவே நீதி”.
“என்னைப் போன்ற ஆட்டுத் தோலைப் பதப்படுத்துபவன் கூடவா அரசிற்கு எதிரானவன்? எனக் கேட்டான் தூமகேது.
“ஒருவன் மீது குற்றம் சுமத்த ஒரு காரணமும் தேவையில்லை. நிரூபணம் செய்யத்தான் சாட்சிகள் வேண்டும். நீயும் நானும் அரசால் குற்றவாளியாக்கப் பட்டிருக்கிறோம். நம்மைப் போல எண்ணிக்கையற்ற மனிதர்கள் உலகெங்கும் குற்றவாளியாக்கப் பட்டிருக்கிறார்கள். அவர்களில் சிலர்தான் ‘நிரபராதி’ என நிரூபிக்கப்படும் முன்பே இறந்தும் போய்விட்டார்கள். நீதிக்காகக் காத்திருப்பது தொடர்ந்து நடந்துகொண்டிருக்கும் பெருநிகழ்வு. அதில் நாம் சிற்றெறும்புகள்”
அஜ்யா மன்னரின் அன்பினைப் பெறும் பொழுதே தன் வாழ்நாளில் எவ்வாறு முடியும் என்பதைக் கணித்துதான் வைத்திருந்தார். அதன்படியே அவர் வாழ்வில் நடந்தது. அவர் தனது இளம்வயது முதலே பிறரால் துன்புறுத்தப்பட்டே வாழ்ந்தார். அவரின் இறுதிவிநாடியும் அவ்வாறே அமைந்தது.
மண்ணில் ஊர்ந்து செல்லும் எலும்பற்ற எளிய புழு தன் துணையின் இறப்பிற்குக் காரணமானவரை நீதியின் முன் நிறுத்த எண்ணிப் போராடுகிறது. இதுவும் எளியோர்களுக்கு ஒரு குறியீடே!.
“கேட்டவுடன் தானம் தருவதைப் போல நீதியை அளித்துவிட முடியாது. நீத்கி என்பது விசாரித்து அறியப்பட வேண்டிய உண்மை என மறுத்தார் காசிராஜன்.
“காலம் தாழ்த்தி வழங்கப்படும் நீதி அநீதிக்குச் சமமானதே” என்றது புழு.
‘ புழுவானது கீழ் உலகம் மேல் உலகம் என எல்லா உலகத்தில் உள்ளோரிடமும் தனக்கான நீதி வழங்கப்படவில்லை’ என மன்றாடுகிறது. ஒவ்வொருவரும் தாங்கள் ஏற்கனவே தேர்ந்தெடுத்து வைத்த பதிலைக் கூறுகின்றனர்.
“நீதி என்பது வலிமை மிக்கவர்களின் நலனாகத்தான் எப்போதும் இருந்து வருகிறது. சாமானியர்கள் அதன் உயிர்ப்பலிகள்தானா. எனக்கான நீதி மறுக்கப்படும்போது நான் சாவதைத் தவிர வேறு வழியில்லை.”
மன்னர் பிஷாடன் வளர்க்கும் குரங்கானது அவரின் பிம்பமே ஆகும். தன்னைத்தானே கட்டுப்படுத்த தெரியாத மனக்குழப்பம் உடையவராகக் காணப்படுகிறார். கொடூரத்தனம் நிறைந்து வழிகிறது. மனக்குழப்பம் உடையவர்கள் பிறரின் கைப்பாவைகளாக எளிதில் மாறிவிடுவார்கள். இம்மன்னனும் அதே போன்றுதான்.
தன்னை உணர்ந்து, ‘தான் யார்?’ என்பதை அறிந்து செயல்பட வேண்டும். அவ்வாறு செயல்படவில்லை அவர்களின் இறுதி முடிவினை அவர்களாகவே தேடிக் கொள்பவர்கள் ஆவர். கொடூரத்தின் மொத்த வடிவம் கொண்டவராகக் காணப்படுகிறார் மன்னர் பிஷாடன்.
“ஆத்திரத்துடன் பிஷாடன் படுக்கையை விட்டு எழுந்தபோது திடீரென யாரோ அவன் மீது பாய்ந்து அமுக்கினார்கள். அடுத்தச் சில நிமிடங்களில் அவன் வாயைப் பொத்திக் கைகால்களின் கட்டி கம்பளம் ஒன்றில் கட்டி தூக்கிக் கொண்டு ஓடினார்கள். காவலர்களில் ஒருவன் தூக்கக் கலக்கத்தில் யாரோ வெளியேறிப் போவதைக் கண்டான்; ஆனால், குரல் எழுப்பவில்லை.”
காவலாளியின் குரல் என்றோ ஒடுக்கப்பட்டிருக்கும். அதனால்தான் அவர் அன்று குரல் எழுப்ப விரும்பவில்லை போலும். இந்நாவலானது நீதியின் ஆழ்மனத்தில் புதைந்த சொற்களை வெளிக்கொண்டு வந்துள்ளது.
••
நாம் அறியாத உலகம்
சந்தையில் விற்கப்படும் காய்கறிகள், பழங்களை யார் மொத்தமாகக் கொள்முதல் செய்வது. யார் விநியோகம் செய்வது, விலை எவ்வாறு நிர்ணயம் செய்யப்படுகிறது என்பதன் பின்னாள் ஒரு சிண்டிகேட் செயல்படுகிறது.

அவர்களை மீறி எவரும் தக்காளியோ, வெங்காயமோ வாழைப்பழங்களோ நேரடியாக வாங்கி விற்பனை செய்துவிட முடியாது. அந்தச் சிண்டிகேட் உறுப்பினர்கள் விவசாயிகள் எப்போது அறுவடை செய்யவேண்டும். யாரிடம் விற்க வேண்டும் என்பதை முடிவு செய்கிறார்கள். அவர்கள் நினைத்தால் காய்கறிகள் பழங்கள் எதுவும் கிடைக்காமல் நகரை ஸ்தம்பிக்கச் செய்துவிட முடியும். விவசாயிகள் நேரடியாகத் தங்கள் விளைபொருட்களை விற்க முடியாமல் செய்வது அவர்களே.
இந்தச் சிண்டிகேட்டை உடைத்துக் காய்கறிகள் மற்றும் பழங்களை எவரேனும் விற்பனை செய்ய முயன்றால் அந்த மனிதனால் உயிர் வாழ முடியாது. அவனைக் கொன்றுவிடுவார்கள்.
La sfida என்ற1958ல் வெளியான இத்தாலியத் திரைப்படத்தின் கதையிது. புகழ்பெற்ற இயக்குநர் ஃபிரான்சிஸ்கோ ரோசி இயக்கியது
உலகெங்கும் இன்றும் இதே நிலை தானிருக்கிறது. அதுவும் இந்த லாக்டவுன் நாட்களில் பொருட்களின் திடீர் விலையேற்றமும் அதனால் சிலர் அடித்த கொள்ளை லாபமும் இப் படத்தைக் காணும் போது மனதில் ஓடியபடியே இருந்தது.
குற்றவுலகம் என்பது போதைமருந்து கடத்தும் உலகம் மட்டுமில்லை. இது போன்ற காய்கறிச்சந்தையினுள்ளும் ரகசியமாகக் குற்றவுலகம் இயங்கிக் கொண்டிருக்கிறது. அவர்களே வணிகர்களைக் கட்டுப்படுத்துகிறார்கள். விலையை முடிவு செய்கிறார்கள்.

நேபிள்ஸின் பின்தங்கிய பகுதியில் வசிக்கும் விட்டோ போலரா குறுக்குவழியில் பணம் சேர்க்க நினைப்பவன். இதன் காரணமாக வெளிநாட்டு சிகரெட்டுகளைக் கள்ளச்சந்தையில் விற்பனை செய்து வருகிறான். நகரில் ஏற்பட்ட வேலைநிறுத்தத்தின் போது தற்செயலாக அவன் பூசணிக்காய்களை விற்பனை செய்ய வேண்டிய சூழ்நிலை ஏற்படுகிறது. வழக்கத்தை விட நான்கு மடங்கு விலைக்கு விற்கத் தொடங்குகிறான்.
அதில் கிடைக்கும் லாபத்தை மனதில் கொண்டு நேரடியாகக் கிராமப்புறத்திற்குச் சென்று பழங்கள் மற்றும் காய்கறிகளை வாங்கி நகரில் விற்பனை செய்தால் நிறையப் பணம் கிடைக்குமே என்று நினைக்கிறான். இதற்காகக் கிராமப்புறத்தினைத் தேடிச் செல்கிறான்
அங்கே யாரும் அவனுக்குப் பழங்களோ, காய்கறிகளோ விற்க முன்வரவில்லை. விவசாயிகள் சிண்டிகேட்டின் கட்டுப்பாட்டில் இருப்பதை அறிந்து கொள்கிறான். அவர்களுக்குக் கூடுதல் பணம் தந்து கொள்முதல் செய்ய முற்படுகிறான். இதை அறிந்த சிண்டிகேட் தலைவர் சால்வடோர் அஜெல்லோ அவனை எச்சரிக்கை செய்கிறார்.

அவரிடம் சவால்விட்டு தனது கட்டுப்பாட்டிற்குள் கிராம விவசாயிகளில் சிலரை வைத்துக்கொண்டு புதிய வணிகம் துவங்குகிறான். அது மெல்ல வளர்ச்சி அடைகிறது. விட்டோ கையில் பணம் புழங்கத் துவங்குகிறது. அவனே ஒரு கேங் லீடர் போல உருமாறுகிறான்.
இந்நிலையில் அவனையும் சிண்டிகேட் இணைத்துக் கொள்கிறது. ஆனாலும் அதன் தலைவர் சால்வடோர் அஜெல்லோவுக்கும் அவனுக்குமான மோதல் மறையவில்லை. அவனைப் பழிவாங்க அவர் காத்துக் கொண்டிருக்கிறார்.
வசதியான வாழ்க்கையை அமைத்துக் கொண்ட விட்டோ புதிய வீடு வாங்குகிறான். அதற்காக வீடு பார்க்கச் செல்லும் காட்சி அழகானது. விற்பனையாளன் அவனை யாரோ பெரிய தொழிலதிபர் என நினைத்துக் கொள்கிறான். புதிய ஆடம்பரமான கடலோர அடுக்குமாடிக் குடியிருப்பில் குடியேறுகிறான் விட்டோ.

காதலியோடு அவனது திருமணம் நடைபெறுகிறது. திருமண நாளில் எதிர்பாராத பிரச்சனை ஏற்படுகிறது. திருமணம் முடிந்த கையோடு அதைச் சந்திக்கப் புறப்படுகிறான். அந்த ஒரு நாளில் என்ன நடக்கிறது என்பதை மிகப் பரபரப்பாகக் காட்சிப்படுத்தியிருக்கிறார்கள்.
Pasquale Simonetti என்ற மாபியா லீடரின் வாழ்வினை தான் படம் விவரிக்கிறது. இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு இத்தாலிய அரசாங்கம் புகையிலை மீதான அரச ஏகபோகத்தை மீண்டும் அறிமுகப்படுத்தியது. சிமோனெட்டி 1950 களின் முற்பகுதியில் கள்ளச் சந்தையில் பிரபலமான அமெரிக்கச் சிகரெட்டுகள் விற்கத் துவங்கி பின்பு பழங்கள் மற்றும் காய்கறி வணிகத்தினுள் நுழைந்தார்.
அன்றிருந்த சிண்டிகேட்டுடன் அவருக்குப் பிரச்சனை ஏற்பட்டது. அவரது குடோன் தீவைத்து எரிக்கப்பட்டது. போட்டி குழுக்களுடன் பல ஆயுத மோதல்கள் நடந்தன. ஆனால் விடாது போராடி தனக்கெனக் குற்றவியல் குழுவினை உருவாக்கி மிகப்பெரிய கேங்லீடராக உருமாறினார்.
1955 ல் தனது 29 வயதில், சிமோனெட்டி நேபிள்ஸின் பரபரப்பான சந்தையில் வைத்து கொலை செய்யப்பட்டார்.
இந்தப் படம் சிமோனெட்டியின் வாழ்க்கையில் நடந்த முக்கிய நிகழ்வுகளே விவரிக்கிறது. படத்திற்காக ரோஸி சிமோனெட்டியின் பெயரை விட்டோ பொலாரா என்று மாற்றிக் கொண்டிருந்தார். ஆனால் அவரது மனைவிக்கு அசுன்டா என்ற உண்மையான காதலியின் பெயரை வைத்துள்ளார்..
1958 வெனிஸ் திரைப்பட விழாவில் இந்தப் படம் திரையிடப்பட்ட போது சிமோனெட்டியின் எதிரிகள் படத்தைத் திரையிடக்கூடாது என்று தடுக்க முயன்று தோல்வியடைந்தனர். அக்டோபர் 26 அன்று நேபிள்ஸில் வெளியிடப்பட்டபோது, திரையரங்கங்களைத் தீவைத்து எரிக்கப்போவதாக மிரட்டல் விடுக்கவே பலத்த பாதுகாப்புப் போடப்பட்டுப் படம் வெளியானது.
இதற்கிடையில், சிமோனெட்டி மற்றும் எஸ்போசிட்டோ குடும்பங்கள் தயாரிப்பாளர் மற்றும் இயக்குநர் மீது வழக்குத் தொடர்ந்தார்கள். ஆனால் வழக்கு வெற்றிபெறவில்லை.
ஒளிப்பதிவாளர் ஜியானோ டி வெனான்சோவின் ஒளிப்பதிவு அபாரமானது. விட்டோவும் அவன் காதலியும் மொட்டைமாடியில் சந்தித்துக் கொள்வதும், திருமண நிகழ்வும், டிரக்கை துரத்திச் செல்லும் காட்சியும், இறுதி துப்பாக்கிச்சூடும் மிகச் சிறப்பாக ஒளிப்பதிவு செய்யப்பட்டிருக்கின்றன

பக்கத்து வீட்டில் வசிக்கும் இளம்பெண் அசுன்டா ரகசியமாக விட்டோவை ரசிப்பதும் அவனிடம் தனது காதலைத் தெரிவிக்கும் விதமும் அவர்களுக்குள் ஏற்படும் நெருக்கமும் மிக அழகான காதல்கதையாக வெளிப்படுகிறது
அது போலவே கிராமத்து விவசாயிகளை மிரட்டி ஒடுக்கி வைத்திருக்கும் சால்வதோரை சந்திக்க அவன் வீட்டிற்குச் செல்வதும் நேரடியாகச் சவால்விட்டு ஜெயித்துக் காட்டுவதும் சிறப்பாக உருவாக்கப்பட்டுள்ளது.
விட்டோ அறிமுகமாகும் காட்சி மிக இயல்பானது. அவன் தேய்த்த உடைகளை அணிந்து கொண்டு புறப்படுவது, அசுன்டா அவனை ரகசியமாகப் பின்தொடர்வது, அவனது கூட்டாளிகள் செய்த தவறு. அதில் ஏற்படும் எரிச்சல் எனப் படம் மெல்ல விட்டோவின் உலகை நமக்கு அறிமுகம் செய்கிறது. விட்டோ குற்றவுலகின் நாயகனாக வளரும் போது அவனது நண்பர்களும் உடன் வளருகிறார்கள். அவர்களும் அவனது வீழ்ச்சியால் பாதிக்கபடுகிறார்கள்.

சென்ற ஆண்டுப் பெய்ரூட்டில் உள்ள பழங்கள் மற்றும் காய்கறி சந்தைகளில், எலுமிச்சை, வாழைப்பழங்கள் மற்றும் பிற பழங்கள் திடீரென 50 சதவீதம் வரை தள்ளுபடியில் விற்பனை செய்யப்பட்டன. இது லெபனானின் விவசாயிகளுக்குப் பெரிய அடியாக விளங்கியது.. இந்தப் போட்டி சந்தை விற்பனையாளர்களால் ஏற்படவில்லை, மாறாகப் போதைப்பொருள் மாபியா மற்றும் நேர்மையற்ற சுங்க அதிகாரிகளால் உருவாக்கப்பட்டது என்கிறார்கள்
லெபனானில் இருந்து அனுப்பப்பட்ட மாதுளைக் கப்பலில் மில்லியன் கணக்கான போதை மாத்திரைகள் மாதுளைக்குள் மறைத்து வைக்கப்பட்டிருப்பதைக் கண்டுபிடித்த பிறகு சவுதி அரேபிய அரசு, லெபனான் விவசாயப் பொருட்களின் இறக்குமதியைக் காலவரையின்றி நிறுத்த அதிகாரிகள் முடிவு செய்தனர். இது பழங்களை விநியோகம் செய்யும் நிறுவனங்களுக்கு ஏமாற்றத்தை உருவாக்கியது.
பெரும்பாலான ஏற்றுமதிகள் பெரிய அளவிலான வணிக நிறுவனங்களால் நடத்தப்படுகின்றன. ஆகவே அவர்கள் சூழ்நிலையைச் சமாளிக்க இது போன்ற மலிவான முறைகளை மேற்கொண்டார்கள் என்கிறார்கள். இப்படி உலகெங்கும் இன்றும் உணவுப்பொருட்களின் பின்னால் நாம் அறியாத குற்றவுலகம் இயங்கிக் கொண்டிருக்கிறது.
ஃபிரான்செஸ்கோ ரோசியின் திரைப்படம் மிகுந்த கலைநேர்த்தியுடன் உருவாக்கப்பட்டவை. குற்றவுலகின் நிகழ்வுகளை மையப்படுத்தியபோதும் இரண்டாம் உலகப்போருக்குப் பின்பு இத்தாலி எப்படியிருந்தது. பொருட்களின் விலையேற்றம் மற்றும் புதிய குற்றக்குழுக்களின் உருவாக்கம். ஏழை எளிய மனிதர்களின் பிரச்சனைகள் என அன்றைய யதார்த்தத்தை ரோசி தனது படத்தின் ஊடு இழையாகப் பின்னியிருக்கிறார். அது தான் இன்றும் இப்படத்தைப் புதியதாக்குகிறது.
January 22, 2022
டால்ஸ்டாயின் ஒளிரும் அகம்
‘மண்டியிடுங்கள் தந்தையே’ (நாவல்) – வாசிப்பனுபவம்
முனைவர் ப. சரவணன், மதுரை.

ரஷ்ய படைப்புகளின் தமிழ் மொழிபெயர்ப்புகளைப் படிக்கும்போது, அந்த நாட்டின் நிலக்காட்சி மனத்தில் பதிய மறுக்கும். அங்கு நிகழும் பனிப்பொழிவு நமக்கு அந்நியமானது.
அவர்களின் பெயர்களும் அவர்களின் உடை, உணவு முறைகளும்கூட நமக்கு முற்றிலும் புதிதானவையே. அதனாலேயே நான் ரஷ்ய படைப்புகளின் தமிழ் மொழிபெயர்ப்புகளைத் திணறி திணறித்தான் படித்து முடிப்பேன். ஆனாலும் அவற்றில் உள்ள படைப்பு நயம் என்னை மயக்கிவிடும். அந்த மயக்கத்திற்காகவே நான் மீண்டும் அவற்றைப் படிப்பேன்.
‘தமிழில் எழுதப்பட்ட ரஷ்ய நாவல்’ என்ற அறிமுகத்தோடு வெளிவந்த இந்த “மண்டியிடுங்கள் தந்தையே!” நாவலை அணுகும்போது, எனக்கு மேற்சுட்டிய தயக்கமும் மயக்கமும் ஒருசேரத் தாக்கின. அதனால், நான் இந்த நாவலையும் அச்சத்துடன்தான் படிக்கத் தொடங்கினேன்.
ஆனால், எழுத்தாளர் எஸ். ராமகிருஷ்ணன் அவர்கள் தன்னுடைய எழுத்தாற்றலால் ரஷ்யப் பனிப்பொழிவையும் மன்னர்காலத்திய ரஷ்யப் பண்ணைகளையும் அவை சார்ந்த நிலக்காட்சிகளையும் என் மனத்திற்கு மிகவும் நெருக்கமானவையாக மாற்றிவிட்டார். இந்த நாவலின் முதல்வெற்றியே அதுதான் என்பேன்.
இந்த நாவல், ‘ரஷ்ய எழுத்தாளர் லெவ் நிக்கலாயெவிச் டால்ஸ்டாயின் வாழ்வை அடிப்படையாகக் கொண்டது’ என்பதை அறிந்தவுடனேயே என்னுள் இரண்டு வினாக்கள் எழுந்தன.
ஒன்று – ஓர் எழுத்தாளரின் வாழ்வை நாவலாக எழுதும்போது அது அந்த எழுத்தாளரின் எழுத்தைப் போலவே என் மனத்தில் இடம்பிடித்துவிடுமா?
இரண்டு – அவரின் வாழ்வுக்கும் அவரின் எழுத்துக்குமான உறவு என் மனத்தில் ஏற்படுத்தும் சித்திரம் என்னவாக இருக்கும்?
ஆனால், இந்த இரண்டு வினாக்களையும் தகர்த்துவிட்டது இந்த நாவல். காரணங்கள் – இந்த நாவல் டால்ஸ்டாயின் அன்றாட வாழ்க்கையின் தொகுப்பாக இல்லை. அவரின் எழுத்துகளைப் பற்றிய விமர்சனமாகவும் இல்லை. அவரின் வாழ்வுக்கும் எழுத்துக்குமான உறவாகவும் இல்லை.
இந்த நாவல், டால்ஸ்டாயின் அகத்தை அச்சுஅசலாக அவரின் பல்வேறு அகவய, புறவயச் செயல்பாடுகளைக் கொண்டே நமக்குத் தெரியப்படுத்துகிறது. சுருக்கமாக, ‘டால்ஸ்டாய் மனத்தின் குறுக்குவெட்டுத் தோற்றம்தான் இந்த நாவல்’ என்று கூறிவிடலாம்.
தந்தை – மகன் உறவுப் போராட்டம்தான் இந்த நாவலின் மையக்கரு என்றாலும் கணவன் – மனைவி உறவை தக்கவைத்துக்கொள்ளுதல், அங்கீகரிக்கப்படாத மனைவி – அங்கீகரிக்கப்படாத கணவன் உறவுநிலையைப் பேணுதல், தனிநபர்களுக்கிடையிலான ஆழமான நட்புறவுகளும் பிரிவுகளும் என இந்த நாவல் கிளைபிரிந்து வளர்ந்துள்ளது. ‘உறவுகளாலும் உறவின்மைகளாலும் மனித மனம் படும்பாடு’தான் இந்த நாவலின் ஒட்டுமொத்த கரு என்று கருதமுடிகிறது.
டால்ஸ்டாயை மையமாகக் கொண்டு சுழலும் இந்த நாவலில் இடம்பெற்றுள்ள எல்லா மாந்தர்களுடனும் டால்ஸ்டாய் நிழலுருவாய்ச் சுழல்கிறார். டால்ஸ்டாயை எல்லோரும் புனிதராக உருவகித்துவரும் சூழலில், அவர் தன்னுடைய புனிதத்தன்மையைத் தானே தோலுரித்துக்கொள்கிறார். அவர்கள் தன் மீது பூசும் புனிதச் சாயத்தைக் கழுவிவிட்டு, உண்மைப் புனிதத்தை நோக்கி, மானுட விழுமியத்தை நோக்கி நடக்கத் தொடங்குகிறார்.
டால்ஸ்டாய் தன் எழுத்துகளின் வழியாகக் கண்டடைந்தது மானுட புனிதத்துவத்தைத்தான். அதனை அடைய ‘அன்பு’ ஒன்றே வழி என்பதை முன்மொழிகிறார். அதை நோக்கியே அவரின் இறுதிக்கால மனப்பயணம் அமைந்துவிடுகிறது. ஆனால், ‘தன் வாழ்நாள் முழுவதும் அவர் அன்பினைத் தன் சுயதேவைக்காக மறைத்தே வந்தார்’ அல்லது ‘தன்னுடைய சுயதேவைக்கு ஏற்ப சிக்கனமாகச் செலவு செய்துவந்தார் என்பதுதான் நகைமுரண்கள்.
ஒருவகையில் இந்த நாவல், டால்ஸ்டாயை மதிப்பீடு செய்கிறது. அவரை ஓர் அளவுகோலாகக்கொண்டு, அவர் காலத்திய மானுட வாழ்வை விமர்சனம் செய்கிறது. இந்த நாவல், அவரின் வாழ்க்கையின் வழியாகவே அவரைப் பற்றியும் அவரின் காலத்திய ரஷ்ய அரசியலையும் சமுதாய நிலவரங்களையும் புகழ்பெற்ற எழுத்தாளர்களையும் மதிப்பீடு செய்கிறது.
இந்த நாவலில் என்னைப் பெரிதும் ஈர்த்தவை ஒன்று தந்தை – மகன் உறவில் நிகழும் பிறழ்வும் இணைவும்தான். தந்தையும் மகனும் தனித்தனியே ஒருவரை ஒருவர் நேசிக்கின்றனர். அதேநேரத்தில் காலச்சூழலால் வெறுக்கவும் செய்கின்றனர்.
“எஜமானரும் நெருப்பைப் போன்றவர்தான். நெருப்பு எப்போது உக்கிரமடையும் என்ற யாருக்குத் தெரியும்? திமோஃபியின் மனத்திற்குள் தந்தையின் மீதான ஏக்கம் ஆழமான வெறுப்பாக உருக்கொண்டது.”
டால்ஸ்டாய் திமோஃபியை வெறுக்கவில்லை என்றாலும் அவனைத் தன் மகனாக அவர் அங்கீகரிக்கவில்லை என்பதை நாம் நினைவில்கொள்ள வேண்டும். திமோஃபி விதவையான ஓல்காவின் மகன் கிரிபோவைத் தன் மகனாக ஏற்கிறான். தான் இழந்த தந்தையின் அன்பை அவனுக்குத் தன்னால் வழங்க இயலும் என்று நம்புகிறான். அவனால், கிரிபோவை அங்கீகரிக்க முடிகிறது.
“நீ அதையே நினைத்துக் கொண்டிருக்காதே! நீதான் இப்போது கிரிபோவின் தந்தை. உன் தந்தை உனக்குக் காட்டாத அன்பை நீ அவனுக்குக் காட்டு. ”
டால்ஸ்டாய் தன்னுடைய எழுத்துலகைத் தனக்கான தனி உலகாகவே கருதுகிறார். அதை அவர் யாருக்காகவும் விட்டுத்தர விரும்பவில்லை. இது பற்றி அவர் சோபியாவிடம் மிகத் தெளிவாகக் கூறிவிடுகிறார்.
எழுத்துலகில் உள்ள டால்ஸ்டாய் வேறாகவும் அவருடைய பண்ணையில் உலாவும் டால்ஸ்டாய் வேறாகவும்தான் எனக்குத் தெரிகிறார். எழுத்தை அவரின் அகம் என்றும் பண்ணையை அவரின் புறம் என்றும் நாம் உருவகித்துக் கொள்ளலாம். இரண்டுக்குள்ளும் அவரின் மனம் இடையறாது ஊசலாடுகிறது.
“மனிதன் குழப்பமானவன். புறம் அவனை உருவாக்குகிறது. அகம் அவனை வழிநடத்துகிறது. ஒரு மனிதன் ஒரு பக்கம் குதிரையினையும் மறுபக்கம் ஒரு பறவையினையும் பூட்டி எப்படிப் பயணம் செய்ய முடியும்? அப்படித்தான் இன்றைய வாழ்க்கையிருக்கிறது.”
“எழுத்துதான் அவரது நிரந்தரக் கொண்டாட்டம். நிகரற்ற சந்தோஷம். ஒரு கதையை எழுதி முடித்த பிறகு கிடைக்கும் மகிழ்ச்சியை எந்தப் பண்டிகையும் தருவதில்லை.”
அவர் தன்னுடைய வாழ்வைப் புரிந்துகொள்ளத் தன்னுடைய எழுத்தைத்தான் நாடுகிறார். ஆனால், அவர் தன்னுடைய புறவுலகிலிருந்துதான், இந்தச் சமுதாயத்தில் உள்ள எளிய மனிதர்களில் இருந்துதான், குறிப்பாகத் தன்னுடைய பண்ணையில் பணியாற்றுவோரிடமிருந்துதான் தன்னுடைய கதைமாந்தர்களை உருவாக்கிக்கொள்கிறார். அவரும் அவருடைய எழுத்தும் ‘ஒரு பொருளும் அதன் நிழலும்’ என இணைந்துள்ளனர்.
“எழுத்து ஒன்றுதான் எப்போதும் புதிதாக இருக்கிறது. நாளை என்ன எழுதப் போகிறோம் என்று தெரியாது. ஒரு கதாபாத்திரம் எப்படி நடந்து கொள்ளப்போகிறது என்பது பெரும்புதிரே! அந்த வசீகரம்தான் அவரைத் தொடர்ந்து எழுத வைத்துக்கொண்டிருந்தது.”
தன் வாழ்நாள் முழுவதும் எழுத்தைக்கொண்டாடும் மனிதராகத்தான் டால்ஸ்டாய் வாழ்ந்து, மடிந்தார். இப்போது உலகம் அவரின் எழுத்தைக் கொண்டாடுகிறது.
“எழுத்துதானே எல்லா மாற்றங்களையும் கொண்டு வந்திருக்கிறது. ‘ஒருவன் தன் நினைவுகளைத் தன்னிடமிருந்து பிரித்து எழுத்தாக்கிவிடுவது’ என்பது, எவ்வளவு பெரிய மாயம்!. அது ஏன் இந்த உலகிற்குச் சாதாரணமாகப்படுகிறது?. நினைவுகளுக்கு ஒரு வடிவம் கொடுக்க முடிவது எத்தனை அருமையான விஷயம்! நினைவில் வாழுகிறவர்களுக்கு அழிவே கிடையாது. அவர்கள் நினைவில் என்றும் குறிப்பிட்ட வயதுள்ள தோற்றத்தில் வாழுகிறார்கள். ‘ஒரு மனிதன் யார் நினைவில் என்னவாகப் பதிந்து போயிருக்கிறான்’ என்பது, கண்டறியமுடியாத புதிர். உலகின் வயதோடு ஒப்பிட்டால், தனது இந்த எழுபது வயது என்பது சிறுகூழாங்கல். ஆனால், இதைச் சுமக்கவே இவ்வளவு கனமாக, வேதனையாக இருக்கிறது.”
திமோஃபி இளமையில் தன் தந்தையைப் பற்றி அறிந்துகொள்ளத் துடிக்கும் காட்சி மிகவும் நுட்பமாகச் சித்தரிக்கப்பட்டுள்ளது. அவனுக்கு உண்மையைக் கூறாமல் மறைக்கும் அவனின் அன்னையின் மனப்பக்குவம் வாசகரை வியக்க வைக்கிறது.
“அப்படியானால் என் தந்தை எங்கே இருக்கிறார் என்பதை மறைக்காமல் சொல்லுங்கள்?” என்றான் திமோஃபி.
அக்ஸின்யா தொலைவில் இருந்த ஓக்மரத்தைக் காட்டியபடியே கேட்டாள், “அந்த மரத்திற்குத் தந்தை யார் எனத் தெரியுமா? இல்லை. அதோ மேய்ந்து கொண்டிருக்கிறதே குதிரை. அது தன் தந்தையைப் பற்றி எப்போதாவது யோசித்துக் கொண்டிருக்குமா? திமோஃபி, உன் தந்தை ஓர் அறிவாளி. மிகப் பெரிய மனிதர். தூரத்துப் பனிமலையைப் போல ஒளிரக்கூடியவர். அவ்வளவுதான் என்னால் சொல்ல முடியம். அவரையே நினைத்துக் கொண்டிருக்காதே! உன்னுடைய உடல் அவர் கொடுத்தது. உனது கண்களுக்குள் அவர் இருக்கிறார். உன் முகத்தில் நான் அவரையே பார்க்கிறேன். நீ அவரது நிழல். இது போதாதா?”
“என்னைப் போலத்தான் என் தந்தை இருப்பாரா?” என மறுபடி கேட்டான். “மரத்தைப் போலப் பச்சை நிறமாகவா இருக்கிறது அதன் நிழல்?” என்று சிரித்தபடியே கேட்டாள் அக்ஸின்யா.
“நிழலைப் பற்றி மரம் கவலைப்படுவதில்லை” என்று அழுத்தமான குரலில் சொன்னான் திமோஃபி.
“உன் தந்தை பெருமைக்குரியவர். கனவான். அதற்கு மேல் சொல்ல என்னிடம் எதுவுமில்லை”.
“அவர் ஏன் நம்முடன் வாழவில்லை?”
“அவருக்கு விருப்பமானவர்களுடன் அவர் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார்”
“எங்கே வாழ்ந்து கொண்டிருக்கிறார்?”
“விருப்பமான இடத்தில். திமோஃபி! உனக்கு நான் சொல்வது புரியவேண்டுமென்றால் உனக்கு இன்னும் வயதாக வேண்டும்”
எவ்வளவு வயது?” எனக்கேட்டான் திமோஃபி.
“ ‘இந்தக் கேள்வியை என்னிடம் கேட்கக்கூடாது’ என்று உணரும் வயது” என்றாள்.
திமோஃபி அவன் அன்னையிடம் தன் தந்தையைப் பற்றிக் கேட்கும் போதெல்லாம் அன்னை டால்ஸ்ட்டாயைப் பற்றி மிகவும் உயர்வாகவே பேசுகிறார். அவர் எந்தத் தருணத்திலும் அவரை விட்டுக்கொடுக்கவில்லை. தன் மகனிடம் தன்னை ஓர் அன்னையாக நிறுவிக்கொள்வதைவிட டால்ஸ்டாயை விரும்பும் எளிய பெண்ணாகவே தன்னை நிலைநாட்டிக் கொள்கிறார். அதேபோலவே டால்ஸ்டாயும் தன்னைத் திமோஃபியின் தந்தை என்பதை எந்தத் தருணத்திலும் வெளிப்படுத்திக் கொள்ளவில்லை.
இருவரும் சேர்ந்து யாருக்குத் துரோகம் செய்தார்கள்? யாருக்காக இந்தத் தியாகத்தைச் செய்தார்கள்? இந்த வினாக்களுக்கு விடையாக இருப்பது பொருளாதார ஏற்றத்தாழ்வுதான். இங்கு உறவு முறைகள் பொருளாதாரத்தைக் கொண்டே நிர்ணயிக்கப்படுகின்றன. டால்ஸ்டாய் சோபியாவைத் திருமணம் செய்துகொண்டதற்குக்கூட அதுவே மையமாக இருக்கிறது.
எஸ். ராமகிருஷ்ணனின் படைப்புகளில் எரிநட்சத்திரம்போலச் சில வரிகள் அவ்வப்போது மின்னிவிழும். அவை அந்தந்த அத்யாயத்திற்கு அழகையும் வலுவையும் சேர்க்கும்.
“உலகின் மிகச்சிறந்த மலர்கள் அம்மாவின் கைகள்தான் என்று தோன்றும்.”
“மரத்தின் உச்சியைத் தொடுவதற்கு மரமேற வேண்டும் என்று அவசியமில்லை. அதன் நிழலைத் தொட்டால் போதாதா என்று கூட நினைத்தான்.”
“ப்யானோவின் கட்டைகளை விரலால் அழுத்தி இசையை எழுப்புவது போல நடக்க நடக்கத் தானே நினைவுகள் மேலே எழும்பத் துவங்குகின்றன.”
“சவத்திற்குத்தான் ஆறடி நிலம் தேவை. உயிர்வாழ்வதற்கு இந்த உலகமே போதாது.”
“ ‘அறிவு’ என்பது, யாருக்கும் உரிமையானதில்லை. அதைப் பெறுவதன் நோக்கமே பகிர்ந்து தரவேண்டும் என்பதுதான். கல்வியை ஒருபோதும் நாம் வணிகமாக்கக் கூடாது.”
இந்த நாவலில் மிக முக்கியப் பகுதியாக நான் கருதுவது டால்ஸ்டாய் – டன்ஸ்கோவ் சந்திப்புதான். இந்த உரையாடலின் வழியாக நாம், ‘டால்ஸ்டாய் என்ற எழுத்தாளரை ஏன் உலகம் கொண்டாடுகிறது?’ என்பதைத் தெளிவாகப் புரிந்துகொள்ள முடிகிறது.
சமுதாயத்தில் ஓர் எழுத்தாளரின் இடம் என்ன? அவரின் சமூகப் பங்களிப்பு என்ன? புனைவிலக்கியங்களால் உலகைப் புரட்டிப்போட முடியுமா? ஒரு மனிதனின் மனமாற்றத்துக்கு இலக்கியங்கள் எந்த வகையில் உதவுகின்றன? போன்ற அடிப்படை வினாக்களுக்கு இந்த உரையாடலின் வழியாகத்தான் நாமக்கு விடைகள் கிடைக்கின்றன.
“இலக்கியத்தின் வேலைகள் மனித வாழ்க்கையின் புதிர்களை விசாரணை செய்வது, ஆராய்வது, புதிய கனவுகளை உருவாக்குவதுமாகும். நடந்து முடிந்துபோன அனுபவங்களை வெறுமனே பதிவு செய்வதற்கு டயரி போதும்தானே? அதை ஏன் ஒருவன் கதையாக்க வேண்டும்? ‘சுதந்திரம்’ என்பதன் உண்மையான பொருளை இலக்கியம் ஆராய்கிறது. மனிதன் தோன்றிய நாள் முதல் ஆண், பெண் உறவு குறித்த சிக்கல்களும் வரையறைகளும் உருவாகிவிட்டன. சிடுக்கேறிய நூல்பந்து போலாகிவிட்ட அந்தப் பிரச்சனையை எல்லாக் காலத்திலும் இலக்கியம் பேசிக் கொண்டிருக்கிறது. ‘உண்மையைத் தேடுவதே இலக்கியத்தின் ஆதாரப் பணி’யாக நான் கருதுகிறேன்.”
“கலையின் வேலை மனிதர்களை மகிழ்ச்சிப்படுத்துவது மட்டுமில்லை; நெறிப்படுத்துவதும் வழிகாட்டுவதும் மேம்படுத்துவதும் அதன் வேலைகள்.”
“அழகும் ஞானமும் ஒன்றுக்கொன்று எதிரானதாக உலகம் நம்புகிறது. ஆனால், கலையில் இந்த இரண்டும் ஒன்று சேர்ந்துவிடுகின்றன. அழகின் லட்சியம் என்பதும் அழகான உடல் மட்டுமில்லை; அழகான ஆன்மாவுதான். கலை மனித வாழ்க்கையின் ஆன்மிக வடிவம். எதை எவராலும் அழிக்க முடியாது. ‘கலையின் நோக்கம்’ என்பது, மனித மீட்சியே!”
இந்த நாவலில் அன்பும் மூர்க்கமும் ஒன்றிணையும் புள்ளி ஒன்று உள்ளது. காலத்தால் அந்தப் புள்ளியில் திமோஃபி நிறுத்தப்படுகிறான். இங்கு ‘வைக்கோற்பொம்மை’ யதார்த்த வாழ்வுக்குக் குறியீடாக அமைந்துள்ளது. அந்த யதார்த்தத்தை மறைக்கலாம், அழிக்கலாம்; ஆனால், அதனாலேயே அது இல்லையென்றாகிவிடாது. அது காலம். அது விதி. அதை மாற்றியமைக்க முயலும்போது நாம்தான் மேலும் மேலும் அதனின் இறுகிய பிடியில் அகப்பட்டுக் கொள்கிறோம்.
திமோஃபி ‘வைக்கோற்பொம்மை’யை எரித்த இந்த நிகழ்வு, அவன் தன் விதியை மாற்றியமைக்க முயன்றமைக்கு ஒரு குறியீடாக இந்த நாவலில் காட்டப்பட்டுள்ளது. மற்றொரு வகையில் அது அவனுடைய இயலாமையின் மறுவெளிப்பாடு அல்லது அது அவனால் இயன்றதன் உண்மைநிலை.
இந்த நாவலில் எல்லாப் பக்கங்களிலும் காதலைக் காணமுடிகிறது. அதன் நிழலாக இருக்கும் இழப்பினையும் நம்மால் உணரமுடிகிறது. இந்த நாவலில் எண்ணற்ற சோக நிகழ்வுகள் இடம்பெற்றுள்ளன. கடல் அலைபோல ஓயாமல் அவை வந்து வந்து மனித உறவுகளைத் தாக்கிச் சிதைக்கின்றன. ‘ஒட்டுமொத்த மானுட மனத்தில் ஒருகால் இன்பத்திலும் மறுகால் துன்பத்திலும்தான் நிலைநாட்டப்பட்டுள்ளதோ?’ என்றும் கூட எண்ணத்தோன்றுகிறது.
“ஏன் காலம் இப்படி விருப்பத்திற்குரியவர்களைப் பறித்துக் கொண்டுவிடுகிறது என்று வேதனைப்பட்டார்.”
“விருப்பமானவர்களின் மரணம் மனத்தில் ஏற்படுத்திய பள்ளம் ஒருபோதும் நிரம்பப் போவதில்லை.”
“இழந்தவற்றை அப்படியே ஏற்றுக்கொள்ள வேண்டும். என்று அறிவிற்குப் புரிந்தாலும் மனது அதை ஏற்றுக்கொள்வதில்லை. திரும்பத் திரும்ப இழப்பையே நினைத்து ஏங்கிக் கொண்டிருக்கிறது.”
டால்ஸ்டாய் தன்னிலை விளக்கமாகக் கூறும் பின்வரும் பத்திகள் அறுதி உண்மையை நெருங்கியதாக அமைந்துள்ளன.
“எந்தப் புகழும் நிரந்தரமானதில்லை. அதை நான் அறிவேன். இயற்கை புகழ்ச்சிக்காக எதையும் செய்வதில்லை. புகழ்பெற்றவர்கள் எழுதியதால் மட்டும் அவர்களின் புத்தகங்கள் புகழ்பெற்றுவிடாது. தானியம் எவரது நிலத்தில் விளைந்தது என்று மதிப்பிடப்படுவதில்லை; அதன் தரத்தால் மட்டுமே மதிப்பிடப்படுகிறது.”
‘சொர்க்கம்’ என்பது ஓர் உலகமில்லை. நிகரற்ற கற்பனை. இன்பங்களும் சந்தோஷங்களும் மட்டுமே நிரம்பிய உலகமாக அதைச் சிருஷ்டி செய்தவன் ஒரு கவிஞனாகத்தான் இருக்க வேண்டும். சொர்க்கம் நிச்சயம் வானில் இருக்க முடியாது. அது மனிதனின் மனத்திற்குள் இருக்கிறது. மனித மனமே சொர்க்கத்தின் நுழைவாயில். சொர்க்கத்திற்கும் நரகத்திற்கும் ஒரே நுழைவாயில் தானிருக்கிறது. அதன் பெயர் செயல். நமது செயல்களே சொர்க்கம் நரகத்தை முடிவு செய்கின்றன. மனிதர்கள் தங்களது இழிவான செயல்களால் நரகத்தின் கதவுகளைத் திறந்துவிடுகிறார்கள். அன்பும் கருணையும் கொண்ட செயல்களாலே மனிதர்கள் சொர்க்கத்திற்குள் பிரவேசிக்க முடியும். நற்செயல்களே மனிதனுக்குச் சிறகுகளை அளிக்கின்றன. ‘இந்தச் சிறகுகள் விரியத் துவங்கினால், மனிதன் மகத்தானவன் ஆகிவிடுவான்’ என்று டால்ஸ்டாய்க்குத் தோன்றியது.
ஒரு வீட்டைச் சுற்றிப் பார்க்க பலர் தலைவாசல் வழியாகச் செல்வார்கள். சிலர் கொல்லைப்புறம் வழியாகவும் வெகுசிலர், சன்னல் வழியாக எட்டிப் பார்த்தும் அந்த வீட்டைப் பற்றித் தெரிந்துகொள்வார்கள். இந்த நாவலின் வழியாக எழுத்தாளர் எஸ். ராமகிருஷ்ணன் டால்ஸ்டாய் என்ற ஓர் ஆளுமையை நமக்கு உணர்த்துவதற்காக, நம்மை டால்ஸ்டாயின் கதைமாந்தர்களின் வழியாகவும் டால்ஸ்டாயின் வாழ்க்கை நிகழ்வுகளோடும் தன்னுடைய இனிய புனைவுவெளியின் ஊடாகவும் அழைத்துச் செல்கிறார்.
இறுதியில் நாம் கண்டடைவது லெவ் நிக்கலாயெவிச் டால்ஸ்டாய் என்ற மாபெரும் எழுத்தாளரையும் அவரைப் பற்றித் தன் வாழ்நாள் முழுவதும் உருகி உருகிப் பயின்றுவரும் எஸ். ராமகிருஷ்ணன் என்ற மாபெரும் வாசகரையும்தான்.
– – –
கவிஞர் சிற்பி ஆவணப்படம்
இந்திரன் தமிழின் முன்னோடி கலைவிமர்சகர். ஓவியம். சிற்பம். வரைகலை எனக் கலைகள் குறித்துத் தொடர்ந்து எழுதியும் பேசியும் வரும் இவர் தமிழ் அழகியல் குறித்துத் தனித்த பார்வைகள் கொண்டவர். தமிழிலும் ஆங்கிலத்திலும் இவர் எழுதியுள்ள கட்டுரைகள் மிகுந்த பாராட்டிற்குரியவை.
தனித்துவமான கலையாளுமையாக விளங்கும் இந்திரன் கவிஞர் சிற்பி குறித்த ஆவணப்படம் ஒன்றை இயக்கியுள்ளார்.
சிற்பி பாலசுப்பிரமணியம் எனும் கவிஞர் சிற்பி, பேராசிரியர் மொழிபெயர்ப்பாளர், ஆய்வாளர், பாடத்திட்டக்குழு உறுப்பினர். இதழாசிரியர் சாகித்ய அகாதமி தமிழ் ஆலோசனைக் குழு ஒருங்கிணைப்பாளர் எனப் பன்முகத்தன்மைகள் கொண்டவர். மொழிபெயர்ப்புக்காகவும், படைப்பிலக்கியத்துக்காகவும் இருமுறை சாகித்திய அகாதமி விருது பெற்றவர்.
ஆத்துப்பொள்ளாச்சி என்ற அழகிய சிற்றூரில் பிறந்து வளர்ந்து கேரளாவின் பாலக்காட்டில் உள்ள தத்தமங்கலம் சீலி நினைவு உயர்நிலைப் பள்ளியில் பள்ளிப்படிப்பை முடித்து அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் தமிழ் பயின்று பொள்ளாச்சி நல்லமுத்து மகாலிங்கம் கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியராகவும் தமிழ் கவிதையுலகில் சிறந்த கவிஞராகவும், ஆளுமையாகவும் சிற்பி உருவான விதம் பற்றி இந்த ஆவணப்படம் அழகாகச் சித்தரிக்கிறது.
இந்த ஆவணப்படத்தை அழகிய மணவாளன் நேர்த்தியாக ஒளிப்பதிவு செய்திருக்கிறார். குறிப்பாக நதிக்கரையோரக் காட்சிகளும், தத்தமங்கலம் பள்ளிக்காட்சிகளும், நேர்காணல்கள் செய்யப்பட்டுள்ள விதமும் பாராட்டிற்குரியவை
இந்திரன் தேர்ந்த கலைத்திறன் கொண்டவர் என்பதால் இந்த ஆவணப்படத்தைக் கலைநுட்பத்துடன் உருவாக்கியிருக்கிறார். அவருக்கு என் மனம் நிறைந்த பாராட்டுகள்.
January 21, 2022
தபால்காரனின் நாட்கள்
நோபல் பரிசு பெற்ற பிரெஞ்சு எழுத்தாளரான ரோஜர் மார்டின் தூகார்டு எழுதிய தபால்காரன் நாவல் பற்றிக் காலம் இலக்கிய இதழில் ஒரு கட்டுரை எழுதியிருக்கிறேன்.

எனக்கு மிகவும் பிடித்த நாவலிது. க.நா.சு மொழியாக்கம் செய்திருக்கிறார்.
தபால்காரனை முக்கியக் கதாபாத்திரமாகக் கொண்ட கதைகளையும் இந்தக் கட்டுரையில் குறிப்பிட்டிருக்கிறேன்.

காதலும் காதல் சார்ந்தவையும்
‘ஒரு சிறிய விடுமுறைக்காலக் காதல் கதை’ – வாசிப்பனுபவம்
முனைவர் ப. சரவணன், மதுரை.
கடுங்கோடையில் மழைக்காகக் காத்திருக்கும்போது வானிலிருந்து சரமென இறங்கும் கோடைமழையின் முதற்துளியைக் கையில் ஏந்தியது போன்றதுதான் பருவவயதில் வாய்த்துவிடும் முதற்காதலை வரவேற்கும் இளம் மனத்தின் நிலை.

அந்த மனநிலையை வாழ்நாள் முழுவதும் மறக்கவே முடியாது. அதன் பின்னர் ஆயிரமாயிரம் பெருங்காதல்கள் வந்து மனத்தில் குடியேறியபோதும் அந்த முதற்காதல் நினைவுகள் கடுங்கோடையில் மண்ணில் விழுந்த முதல்மழையின் சுவடுகள்போலப் பதிந்தே இருக்கும்.
காதலைக் கொண்டாடாத படைப்பாளர்கள் யாரேனும் இருக்கிறார்களா? எழுத்தாளர் எஸ். ராமகிருஷ்ணனின் நாவல்வரிசையில் காதலைக் கொண்டாடும் முதல் நாவல் ‘ஒரு சிறிய விடுமுறைக்காலக் காதல் கதை’ ஆகும்.
இந்தத் தலைப்பே ஒரு குறியீடுதான். ‘இந்த விடுமுறைக்காலம்’ எதைக் குறிக்கிறது? இயல்பான மனநிலையிலிருந்து காதல்கொண்ட மனநிலைக்குத் தாவி? மீண்டும் இயல்பான மனநிலைக்குத் திரும்பிவரும் அந்தக் குறிப்பிட்ட கால இடைவெளியைக் குறிக்கிறது. அந்தத் தாவலில் இயல்பான மனநிலைக்கு விடுமுறை அளிக்கப்படுகிறது.
அந்தக் காலக்கட்டத்தில்தான் பள்ளியில் கோடைவிடுமுறை அறிவிக்கப்படுகிறது. அது நீண்ட விடுமுறைக்காலம்தான். ஆனால், காதல்கொண்ட மனத்துக்கு அந்த விடுமுறை போதுமானதாக இருப்பதில்லை. அந்த விடுமுறையைக் காதல்கொண்ட மனம் வேகமாகக் கடந்துவிடுகிறது. அதனால்தான், இதனை ‘ஒருசிறிய விடுமுறைக்காலம்’ என்று எழுத்தாளர் குறிப்பிடுகிறார் போலும்.
பதின்பருவத்தை எட்டும்போது உடலில் நிகழும் பெரும் மாற்றங்களுக்கும் அதனால் மனம் மேற்கொள்ளும் பெரும் பாய்ச்சலுக்கும் இடையே ஒரு சிறிய இடைவெளி அல்லது இடைவெட்டு இருக்கிறது.
அந்தக் காலக்கட்டத்தில்தான் நாமறியாத பெருமாற்றத்தின் திகைப்பு நம் நெஞ்சைக் கவ்விக்கொள்ளும். அப்போது நாம் தேங்கி நிற்போம் அல்லது நாம் தேக்கப்படுவோம். அது நமது சிந்தனைச் செயல்பாடுகளுக்கான விடுமுறைக்காலம். அதுவும் ‘ஒரு சிறிய விடுமுறைக்காலம்’தான். அது நாமறியாத எண்ணற்ற உணர்வுநிலைகள் நம்மில் வந்து குடியேறும் காலம்.
இந்தப் பருவத்தைக் கடக்காதவர்கள் யாரும் இருக்க முடியாது. பெரும்பாலும் தடுமாறி, தவறி விழுந்தோ அல்லது விரும்பியே அதில் குதித்தோ அதிலிருந்து மீள விரும்பும் மனம். அந்தப் பருவத்தைத் தாண்டிக் கடந்தவர்கள் மிகச் சிலரே. பிற்காலத்தில் அவர்கள் இந்தத் தாண்டலைத் தம் வாழ்வில் ஒழுக்கமாக வாழ்ந்துவிட்டதாக நினைத்தாலும் அவர்கள் இயற்கை ஒவ்வொரு உயிருக்கும் வழங்கிய பெருங்கொடையைத் தவறவிட்டவர்களே ஆவா். தவறிவிழுந்தவர்கள் தங்களின் மனத்தை உலுக்கிக்கொண்டு வேறுதிசையை நோக்கி நடக்கிறார்கள். விரும்பி விழுந்தவர்கள் தங்களை அதிலேயே கரைத்துக்கொள்கிறார்கள்.

இந்த நாவலில் அந்தப் பருவத்தில் நிகழும் இயல்பான மனமாற்றங்களை உளவியல் அடிப்படையில் விளக்க நினைக்கிறார் எழுத்தாளர். அதற்கு ஏற்ற சான்றுகளாகவே கதைக்களத்தை உருவாக்கிக் கொண்டுள்ளார்.
காதல் ஒருவகையான வாழ்வென்றால், காதலுக்குப் பிறகான வாழ்வென்பது வேறொரு வகையாகவே இருக்கிறது. இதில் தடுமாறியவர்களுக்கும் தடம்மாறியவர்களுக்கும் வாழ்வென்பது பிறிதொரு வகையாக அமைந்துவிடுகிறது. இந்த நாவலில் இந்த மூன்று புள்ளிகளையும் நாம் காணமுடிகிறது.
இந்த நாவால் யதார்த்த வாழ்வை, அதன் விதிப்பாடுகளுக்கு இணங்கி அப்படியே நமக்குக் காட்டுகிறது. வாழ்வை அதன் போக்கில் ஏற்க நினைக்கும் மனம்படைத்தவர்களுக்கு இந்த நாவல் மிகச் சிறந்த வாசிப்பனுபவத்தைத் தரும். வாழ்வைத் தன் போக்கில் இழுத்துக்கொண்டு, தனக்கேற்பவே வாழ நினைப்போருக்கு இந்த நாவல் நல்லதொரு அனுபவப்பாடமாக மாறிவிடும்.
இலக்கியவாசிப்பின் பயனே புதியதொன்றைக் கற்றுக்கொள்வதும் புதிய பாதையில் பயணித்துத் திரும்புவதும்தானே! அந்த இரண்டும் இந்த நாவலில் மிகச் சரியாக வாசகருக்குக் கிடைக்கும். அதையும் தாண்டி இந்த நாவலில் பல சிறப்புக் கூறுகள் உள்ளன. அவை –
1. கோடைக்காலச் சித்திரம்
2. காதலைப் பந்தாடும் மனம்
3. காதலால் பந்தாடப்படும் மனம்
4. மனித உறவுகளின் மனநிலை மாற்றங்கள்
5. விதியின் விளையாட்டு
இந்த நாவலில் என்னை ஈர்த்த முதற்கூறு, ‘கோடைக்காலச் சித்திரம்’ தான். கோடையை மிகுதியாக எழுத்தில் கையாண்ட எழுத்தாளர்களுள் முதல்நிலையில் இருப்பவர் எஸ். ராமகிருஷ்ணன். எல்லோரும் வெறுக்கும் வெய்யில் இவருக்கு மட்டும் இனிக்கிறது. வெய்யிலை நேசிக்கும் இவரின் மனம் எப்போதும் குளிர்ச்சியாகவே இருக்கிறது.
இவரின் படைப்புகள் பலவற்றில் வெய்யில் பற்றிய வர்ணனைகள் விதவிதமாக இடம்பெற்றுள்ளன. இந்த நாவலிலும் வெய்யில் பற்றிய குறிப்புகள் நம் மனத்தை ஈர்க்கும் வகையில் உள்ளன. குறிப்பாகக் கோடை வெய்யிலை உவமையாக்கியும் பயன்படுத்தியுள்ளார் எழுத்தாளர்.
“கோடை வெய்யிலைப் போலச் சில்வியா எனக்குள் அழிவற்று ஒளிர்ந்து கொண்டேயிருக்கிறாள்.”
“பள்ளி வயதின் கோடைவிடுமுறை நினைவுகள் மரத்தின் கிளையொன்றில் சிக்கிக்கொண்ட பட்டம் போலப் படபடத்துக்கொண்டேயிருக்கின்றன.”
“கோடைக்காலத்திற்கென்றே தனியான சுபாவமிருக்கிறது. கோடையில்தான் எத்தனை புதிய ருசிகள். கோடையில் விளையும் பழங்கள். எப்போதும் குடிக்கும் தண்ணீர் கோடையில் புது ருசி கொண்டுவிடுகிறது. கோடையில் அபூர்வமான சில பறவைகளைக் காண முடிகிறது. கோடையில் மட்டுமே காணப்படும் மோர்ப்பந்தல். அங்கே கிடைக்கும் கொத்துமல்லி இலைகள் மிதக்கும் மோர்.”
ஒவ்வொருவரையும் காதல் படுத்தும்பாடு சொல்லிமாளாது. வெய்யில் பறந்தலையும் எளிய கிராமத்தில் பிறந்து வளர்ந்த இனிய மனிதன் ராமசுப்ரமணியம்தான் இந்த நாவலின் நாயகன். மணி, பட்டு, சுப்ரமணி, சுப்பி என்றெல்லாம் அவன் அழைக்கப்படுகிறான். நகர நாகரிகத்தில் தோய்ந்த தேவதை சில்வியாதான் நாயகி. நாயகன் காதலால் பந்தாடப்படுகிறான். நாயகி காதலைப் பந்தாடுகிறார்.
‘காதல் பந்தாடும் மனம்’ பற்றி ரஷ்ய எழுத்தாளர் பியோதர் மிக்கைலோவிச் தஸ்தயெவ்ஸ்கி அவர்கள் தன்னுடைய ‘வெண்ணிற இரவுகள்’ என்ற குறுநாவலிலும் கனடா எழுத்தாளர் அ. முத்துலிங்கம் அவர்கள் தன்னுடைய ‘மகாராஜாவின் ரயில்வண்டி’ என்ற சிறுகதையிலும் மிகச் சிறப்பாக எழுதியிருப்பார்கள். ஆனால், இந்த நாவல் காதல் பந்தாடும் மனம் காதலின் போக்கிலெல்லாம் சென்று இறுதியில் அதிலிருந்து மீளும் நுட்பத்தைத் தெரிவிக்கிறது. ‘யதார்த்தமாக வாழ்தல்’ என்பதே, எதிலும் அகப்படாமல் இருப்பதும் அகப்பட்டதிலிருந்து லாவகமாக விடுபடுவதும்தானே!
“கொந்தளிக்கும் மனம்தான் இப்படியான பிரமைகளை ஏற்படுத்துகிறது. ஆயிரம் ஜன்னல் கொண்ட வீடு போலதான் மனமும். ஒரே நேரத்தில் அத்தனை ஜன்னல்களும் திறந்து கொண்டுவிடுகின்றன. பகிர்ந்து கொள்ள முடியாத நினைவுகள் குருட்டுப் பறவைகள் போலப் பறக்க இயலாமல் முட்டிமோதி தடுமாறுகின்றன. ”
‘காதலைப் பந்தாடும் மனம்’ எல்லோருக்கும் கைவருமா எனத் தெரியவில்லை. வித்தியாசமான, குழந்தைத்தனமான உள்ளம் கொண்டவர்களுக்கே அது சாத்தியம் என்று நினைக்கிறேன். இந்த நாவலில் சில்வியா அத்தகையவராக இருக்கிறார்.

சில்வியா நகரச் சூழலில் வளர்ந்தவர். பொருளாதாரத்தில் தன்னிறைவுபெற்ற குடும்பத்தைச் சார்ந்தவர். ஆனால், அவரின் மனத்தில் துக்கமே மிஞ்சியிருக்கிறது. அவரின் பெற்றோருக்கிடையில் இருக்கும் மோதல் அவரை மன அழுத்தத்துக்கு ஆளாக்குகிறது. அதில் இருந்து விடுபடவே, ஒருமடைமாற்றமாகவே அவர் தன்னுடைய குழந்தைத்தனத்தைக் கைவிடாமல் இருக்கிறார் என்று எனக்குப் படுகிறது.
தன்னைச் சுற்றி வேடிக்கை விநோதங்களை உருவாக்கிக்கொள்ளவே அவர் விழைகிறார். ஒருவகையில் காதலும் காதல் சார்ந்தவையும் அவருக்கு அந்த வேடிக்கை விநோதங்களுள் ஒன்றாகவே இருக்கிறது. அதனால்தான் அவர் இந்த நாவலின் நாயகனைத் தன் காதலால் பந்தாடுகிறார்.
இந்த நாவல் காதல் கதையைக் கருவாகக் கொண்டிருந்தாலும் இதில் இழையோடுவது மனித உறவுகளின் மனநிலை மாற்றங்கள் பற்றிய உண்மைநிலவரம்தான். எஸ். ராமகிருஷ்ணனின் எழுத்துகளில் மனித மனம் பற்றிய வெவ்வேறு சித்திரங்கள் வெளிப்பட்டபடியே இருக்கும். மனித உறவுகளின் மோதல்கள் உளவியல் அடிப்படையில் உருவாவதை நுட்பமாகக் காட்டக் கூடியவர் எஸ். ராமகிருஷ்ணன்.
இந்த நாவலில் சில்வியாவுக்கும் அவரின் கணவருக்குமான உறவுநிலை, ராமசுப்ரமணியத்துக்கும் அவரின் மனைவிக்குமான உறவுநிலை ஆகிய இரண்டும் ஒரு தீற்றலாகத்தான் காட்டப்பட்டுள்ளன. அதில் உள்ள நுட்பம் நம்மை வியக்க வைக்கிறது. அந்தத் தீற்றலிலிருந்து நாம் உருவாக்கிக்கொள்ளும் மனச்சித்திரம்தான் இந்த நாவலை நம் மனத்துக்கு மிக நெருக்கமாகக் கொண்டுவருகிறது.
இந்த நாவலில் சில்வியாவுக்கும் அவரின் சகோதரிகளுக்குமான உறவுநிலை இடைவெட்டாகக் கிளைபிரிந்தோடுகிறது. வளர்இளம் பருவத்தில் நட்பும் உறவுமாகத் திகழும் அந்த மனநெருக்கம் ஒருகட்டத்தில் உடைந்து சிதறும் சூட்சுமத்தை யாரும் அறியமுடியாததாகத்தான் இருக்கிறது.
‘எந்தப் புள்ளியில் எந்த உறவு முறியும்’ என்பது, ஒரு வேடிக்கைக்காட்சியாகத்தான் நம் வாழ்க்கை முழுவதும் இருக்கிறது. இத்தகைய உறுதியற்ற சூழலில் ‘உறவற்ற ஓர் உறவு உன்னதம் கொள்கிறது’ என்றால், அது காதலின் அடித்தளத்தில்தானே உருப்பெற முடியும்? அந்தக் காதல், ‘அன்பினால் விளைந்ததாக இருக்க வேண்டும்’ என்பதுதான் முதல் விதி. அந்தக் காதல் காமத்தின் சுடரால் விளைந்ததாக இருந்தால், அது எல்லா உறவையும் அழித்தல்லவா வளரும்?.
“அன்புதான் உலகை மீட்கும் வழி என்கிறார் இயேசுநாதர். எல்லாச் சமயங்களும் அன்பைத்தானே வலியுறுத்துகின்றன? அன்பைச் செலுத்துவதுதானே நட்பும் காதலும்? ”
இந்த நாவலில் தன் மகள் உள்பட எல்லா உறவுகளாலும் கைவிடப்பட்ட சில்வியாவைத் தாங்கிப் பிடிப்பது, அன்பில் விளைந்த காதல் உறவுதானே! அது ராமசுப்ரமணியத்தின் வழியாக அவருக்குக் கிடைக்கிறது. அந்த அன்பின் நிழலில் இளைப்பாறவே இருவரும் விரும்புகின்றனர்.
இந்த நாவலில் விதியின் விளையாட்டு ஆங்காங்கே பட்டுச்சேலையில் நெய்யப்பட்ட வெள்ளிப் புட்டாபோல இடம்பெற்றுள்ளது. அந்த விதியின் விளையாட்டை விரித்தெழுதினால், அது சிறந்த சிறுகதையாகக்கூட அமையக்கூடும். அப்படி இந்த நாவலில் வாசகர்கள் தம் மனத்துள் விரித்து எழுதிக்கொள்ளக் கூடிய எண்ணற்ற சிறுகதைகள் மறைந்திருக்கின்றன. தேர்ந்த வாசகர்களால் அவற்றைச் சேகரித்து, தம் மனத்தை நிறைத்துக்கொள்ள முடியும்.
“தொலைதூர சாலையில் தபால்காரர் மெதுவாகத் தனது சைக்கிளில் போகிறார். அவரது பையிலிருந்த கடிதங்களில் ஒன்று ஊரைப் பிரிந்தவனின் வேதனையைச் சொல்லக்கூடியது. அவன் தப்புத்தப்பான எழுத்துகளால் மனத்தை வெளிக் கொட்டியிருக்கிறான். படிக்கத் தெரியாத அவனின் அம்மா அந்தப் போஸ்ட் கார்டினை வெறித்துப் பார்த்தபடி இருப்பாள். அந்தச் சொற்களின் வழியே அவனின் முகம் தென்படக்கூடுமோ, என்னவோ. அந்தக் கடிதம் அம்மாவிற்கு எழுதப்பட்டிருந்தாலும் தனக்குத் தானே ஆறுதல் தேடிக்கொள்வதுதான்.”
“தாத்தாவுக்கு என் அப்பாவைப் பிடிக்காது. இருவரும் பேசிக்கொண்டதாக எனக்கு நினைவேயில்லை. அப்பாவின் குணம் அப்படி. அவர் தாத்தாவை விடவும் அதிகம் கோபம் கொண்டவர். ஒருமுறை பள்ளி மாணவர்களில் ஒருவன் கன்னத்தில் அவர் ஓங்கி அறையவே அவன் மயங்கி விழுந்துவிட்டான். ஊரே கூடிவிட்டது. நல்லவேளை, அவன் மயக்கம் தெளிந்துவிட்டான். பிறகு அந்தப் பையன் பள்ளிக்கே வரவில்லை. பின்னாளில் அந்தப் பையனுக்குக் காது கேளாமல் போய்விட்டது என்றார்கள்.”
“பாவம்பா, அந்தக் குதிரை வண்டிக்காரன். அவன் வீட்ல ரெண்டு குட்டிப்பாப்பா. டுவின்ஸ். அந்த ஆளோட பொண்டாட்டி அழு அழுனு அழுகுறா. அந்த ஆளோட குதிரை செத்துப் போனதுல இருந்து ஒரே குடியாம். வெறும் வண்டி அந்த ஆள் வீட்டு முன்னாடி நிக்குது. பரோட்டாக் கடைல வேலை செய்து இருக்காரு. அந்த வேலை பிடிக்கவேயில்லையாம். செத்துப் போகப் போறேன். செத்துப் போகப்போறேன்னு சொல்லிக்கிட்ட இருப்பாராம். அந்தப் பொம்பளை சொல்லி சொல்லி அழுகுறா”
யதார்த்த வாழ்வைச் சிறு கோட்டோவியமாகக் காட்டிச் செல்வதில் எஸ். ராமகிருஷ்ணன் கைத்தேர்ந்தவர்.
“உண்மையைச் சொன்னால் சிரிக்க முடிவதில்லை. வயது வளர வளர வாழ்க்கை யாரை மனம்விட்டுச் சிரிக்க அனுமதிக்கிறது? தன்னை மறந்து சிரிப்பதெல்லாம் பள்ளிநாட்களுடன் போய்விடுகிறது. இப்போது சிரிப்பு ஒரு நடிப்பே.”
“ஒரே உலகில் மனிதர்கள் யாவரும் வாழ்வதாக நினைப்பது கற்பிதம். ஒவ்வொருவரும் தனக்கான தனியுலகில்தான் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.”
இந்த நாவலின் ஒட்டுமொத்த ஓட்டத்தையும் உளவியல் அடிப்படையில் வெளிப்படுத்தும் ஐந்து வரிகள் இந்த நாவலுக்குள் உள்ளன. அது சில்வியா ராமசுப்ரமணியத்திடம் தன் கனவு பற்றிச் சொல்லும் பகுதி.
“ரயில் கனவுதான் நிறைய வரும். வெள்ளை ரயிலைப் பார்த்து இருக்கியா? நான் கனவில் பார்த்திருக்கிறேன். எல்லா ரயில் பெட்டியும் வெள்ளை வெளேர்ணு பனியில் செஞ்சது மாதிரி இருக்கும். அந்த ரயில்ல நான் ஒரு ஆள் மட்டும்தான் போவேன். அந்த ரயில் எங்கேயும் நிற்காது. ஓடிக்கிட்டே இருக்கும். ”
உண்மைதான்! சிலர் இப்படித்தான் தமது ஒட்டுமொத்த வாழ்க்கையையும் தனி ரயிலில், தனித்துப் பயணம் செய்தே கழித்துவிடுகிறார்கள். இன்னும் சிலர் வீடுநிறைய சொந்தங்களைப் பெற்றிருந்தாலும் தனக்குள் தனித்துத்தான் பயணம் செய்ய நேர்ந்துவிடுகிறது.
உலக வாழ்வில் ‘யதார்த்தம்’ என்பது இந்த வெள்ளைநிற ரயில்பெட்டிபோலத்தான் இருக்கிறது. வேறு வழியில்லை எல்லோரும் தங்களுக்கான ரயிலில் தனித்துத்தான் பயணித்தாக வேண்டியுள்ளது. அந்த ரயில் நிற்காது. ஓடிக்கொண்டே இருக்கும். அது காலத்தின் ரயில். அந்த ரயிலின் ஓட்டத்திற்கு விடுமுறையே கிடையாது; ‘ஒரு சிறிய விடுமுறைக்காலம்’ கூடக் கிடையாதுதான்.
–
நிழலின் பந்தம்
“மண்டியிடுங்கள் தந்தையே” நூல் குறித்த வாசிப்பு விமர்சனம்…
மஞ்சுநாத்
எழுத்தாளனுக்கு எழுத்தின் வழியேயான சுதந்திரம் எல்லையற்றது. கட்டுபாடுகள் இல்லாதது. உண்மையில் எல்லா வகையான படிமங்களிலும் இதைச் சாத்தியமாக்குவது முடியுமா…? முடியாது என்பதே எதார்த்தம்.

குறிப்பாகத் தனி மனிதர்களின் வரலாற்றுப் பின்புலத்தைச் சாரமாகக் கொண்டு கட்டமைக்கப்படும் கதைகளுக்கு எல்லைகளும் கட்டுப்பாடுகளும் அதிகம் உள்ளன. கூடுதலாக ரஷ்ய எழுத்துலகின் கொண்டாட்டமான மனிதரான டால்ஸ்டாய் வாழ்வை அடிப்படையாகக் கொண்டு ஒரு நாவலை எழுதுவதென்பது காட்டில் திரியும் குதிரை தானாக விரும்பி தனது முகத்தைச் சேணத்திற்குள் பொறுத்திக் கொள்வதைப் போன்றது.
நான் எழுத்தாளர் எஸ்.ரா அவர்களின் படைப்புகளின் சுவாசத்துடிப்பை நெருக்கமாக உணர்ந்தவன். அவரது புனைவு சுதந்திரம் ஞிமிர்சிட்டு(Trochilidae) என்கிற தேன் சிட்டு பறவை இனத்தின் சிறகசைப்புக்கு (நொடிக்கு 60-80 சிறகசைப்புகள்) ஒப்பானது. கர்னலின் நாற்காலி தொகுப்பை வாசித்தவர்கள் அவரது புனைவின் சிறகசைப்புச் சுதந்திரத்தை புரிந்து கொண்டிருப்பார்கள். அத்தகைய எழுத்தாளர் எப்படித் தன்னைக் கட்டுக்குள் வைத்துக்கொண்டு, இப்படி முற்றிலும் மாறுபட்டு அவரது பாணியிலிருந்து விலகி அதேசமயம் வியப்பான நாவலை தர முடிந்தது.
எதைப் பற்றி நாம் அதிகம் சிந்திக்கிறமோ நாம் அதுவாகவே மாறி விடுகிறோம். எஸ்.ரா ரஷ்ய இலக்கியங்களில் வாழ்ந்தவர். அந்த வாழ்க்கையின் சாரத்தைத் தமிழ் வாசகர்களுக்குத் தனது பேச்சு மற்றும் கட்டுரைகள் வழியாக அறிமுகப்படுத்தியவர். குறிப்பாக டால்ஸ்டாய் பற்றியும் அவரது படைப்பிலக்கியம் குறித்தும் நீண்ட உரையை நிகழ்த்தி இருக்கிறார். ரஷ்ய இலக்கியத்தின் தந்தையாகக் கொண்டாடப்படும் லியோ டால்ஸ்டாய் பெரும்பாலான வாசகர்களின் விருப்பம் மட்மல்லாது உலக எழுத்தாளர்களின் ஆதர்சமாக இன்று வரையிலும் கூடத் திகழ்பவர்.
பறவைகளை விரட்டுவதற்காகக் கோதுமை வயலின் நடுவே டால்ஸ்டாயின் ஆடைகள் அணிவிக்கப்பட்ட வைக்கோல் பொம்மையின் வாசம் திமோஃபியின் நிழலுக்கு மிகவும் நெருக்கமானது. நெருக்கத்தின் இடைவெளி உருவாக்கும் அன்பைப்போல் கோபத்திற்கும் அளவு என்பதே கிடையாது.
வைக்கோல் பொம்மை மீது தீ வைத்து மகிழ்கிறான் சிறுவன் திமோஃபி. காலம் அவனைத் துரத்துகிறது. அதனோடு இயைந்து ஓடுபவன் அனுபவத்தின் மூத்த அதிபதியாகிறான். காலம் அனுபவத்தையும் மூர்க்கமாகச் சோதிக்கும் காலம் சவலானது. சோதனைகள் அனுவத்தின் உச்சத்தில் மறைந்துள்ள ருசி. அவை அளவுக்கு அதிகமாகி விடும் போது சிலருக்கு வாழ்க்கை அருசியாகத் திகட்டி விடுகிறது.
தனது தாயின் புதைமேட்டில் டால்ஸ்டாய் வைத்துவிட்டு போன மஞ்சள் மலர்களைக் கையில் எடுக்கும் திமோஃபி அதனை மென்மையாக முத்தமிட்டபடியே முகர்கிறான். அவன் சிறுவனாக இருந்த போது முகர்ந்த வைக்கோலின் வாசத்திற்கும் இப்போது முகரும் மலர்களின் வாசத்திற்கும் மிகப்பெரிய வித்தியாசம் இருக்கிறது. இவ்விரு நிகழ்வுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் பதிவாகிய பலநூறு வாசத்தின் அச்சாணியாக டால்ஸ்டாயின் மூச்சுக்காற்று எவ்வாறு தொடர்படுத்தப்படுகிறது என்பது தான் நாவல்.
பெரும் பண்ணை முதலாளியான டால்ஸ்டாயின் பார்வை தனது தொழிலாளிகள் மீது எந்த விதமாக இருந்தது…? மனைவி சோபியாவின் மீதும் அவரது பிள்ளைகள் மீதும் அவரது அன்பு எப்படிப் பிரதிபலித்தது. இளமையில் அவரது எண்ணற்ற காதலிகளின் காதலனாகச் சுற்றி திரிந்த போதும், முதுமையின் போது எதிர்கொண்ட பெரும் பஞ்ச கால நிவாரணப்பணிகளில் தன்னை முழுமையாக ஐக்கியப்படுத்திக் கொண்ட தருணித்திலும் அவரது சிந்தனை எவ்வாறு எதன் போக்கில் இயங்கியது.
டால்ஸ்டாய் தனது காலத்தில் வாழ்ந்த தஸ்தாயெவ்ஸ்கி, புஷ்கின், துர்கனேவ், கோகோல், ஆன்டன் செகாவ் போன்ற எழுத்தாளர்களின் மீது எவ்விதமான மதிப்பீடுகள் கொண்டிருந்தார், “மிதமிஞ்சிய மதபோதனைகளும் நீதி கருத்துகளும் டால்ஸ்டாய் படைப்புகளை ஆக்கிரமித்துள்ளன…” போன்ற அவரது காலத்தில் எழுந்த எதிர் விமர்சனங்களுக்கு அவரது நிலைப்பாடு என்ன? அளித்த பதில் என்னவாக இருந்திருக்கும்…?
டால்ஸ்டாயின் மனைவி சோபியா, அவரது பிள்ளைகள், அபலை அக்ஸின்யா, பண்ணை தொழிலாளர்கள், அரசு அதிகாரிகன், சமூகம், எழுத்தாளர்கள், வாசகர்கள் என அனைவரது பார்வையிலும் டால்ஸ்டாய் என்னவாக இருந்தார்…? இப்படி 360 டிகிரி காட்சியில் நாவல் விரிவடைந்தாலும் முழுமை பெறாதது போன்றே தோன்றுகிறது. விரைவாகவும் சுருக்கமாகவும் முடிந்து விட்டதைப் போன்ற ஏக்கத்தைத் தருகிறது. டால்ஸ்டாய் கால ரஷ்யாவின் பெருங்கதவின் வழியே நுழையவிட்டு விரைவில் நம்மை வெளியேற்றி விடுகிறது.

இந்த நாவல் டால்ஸ்டாய் பிம்பத்தின் ஒளிக்கீற்றாகக் கசிந்தாலும், விளக்கு திரியின் மீது சேர்த்துக்கொள்ளும் கருந்துகள் படிம நிழலின் துயரத்தை, தனிமையை, எதிர்பார்ப்புகளை, நிராகரிப்பை,பழிச்சொற்களை,வெளிப்படுத்த முடியாத கோபத்தை, அன்பை திமோஃபி வாயிலாகப் பேசுகிறது.
சமூகத்தின் பார்வையிலும் அதன் தரத்திலும் டால்ஸ்டாய் உயர்வானவராக இருக்கலாம். ஆனால் வாழ்வின் தரத்தை வைத்து பார்க்கும் போது திமோஃபி போன்றவர்களே உயர்ந்தவர்களாக இருக்கிறார்கள். எஸ்.ரா எழுத்துகளில் பிரதிபலிக்கும் ரகசியங்களில் இதுவும் ஒன்று.
எழுத்தாளன் தன்னை எவ்வாறு தரிசித்துக் கொள்கிறானோ அதற்கான உருவத்தைத் தெரிந்தோ தெரியாமாலோ தனது படைப்புகள் வழியே உருவாக்கி கொள்வதுடன் அதற்கு உயிரையும் கொடுத்து விடுகிறான். அவனைச் சமூகம் முட்டாளாகவே பார்த்துச் சிரிக்கிறது. காரணம் அவன் சமூகத்தின் ரகசியத்தை அறிந்தவன். நாய்களைத் தூக்கிலிடும் மனிதர்கள் மத்தியில் நாய்களின் இறப்பிற்காக அழுகிறவன் கோமாளியாகவே கருதப்படுகிறான்.
“இளமைப் பருவம் சந்தோஷத்தை தேடித்தேடி அனுபவிக்கச் சொல்லும். ஆனால் எல்லாச் சந்தோஷமும் முழுமையானதில்லை என்பதே அது தரும் பாடம். நடுத்தர வயதிற்குள் நுழைந்துவிட்ட பிறகு சந்தோஷம் என்பது தோளில் அமரும் வண்ணத்துப்பூச்சியைப் போல அபூர்வமான நிகழ்வாகி விடுகிறது.”
ரஷ்ய பெருவெளிக்குள் ஒரு தமிழ் நாவல் மூலம் பயணிப்பது முற்றிலும் மாறுபட்ட அனுபவம் மட்டுமல்ல. தமிழ் இலக்கிய உலகின் அபூர்வமான நிகழ்வாகவும் புதிய திறப்பிற்கான முன்னேடுப்பாகவும் கருதுகிறேன்.
January 19, 2022
தொலைந்து போனவர்களின் உலகம்
.

ஹருகி முரகாமியின் Kafka On The Shore நாவலில் காஃப்கா டமூரா வீட்டை விட்டு ஓடிப்போகிறான். அதுவும் அவனது பதினைந்தாவது பிறந்தநாள் அன்று. ஒருவன் வீட்டைவிட்டு ஓடுவது ஒரு நாளில் நடக்கும் நிகழ்வில்லை. அந்த எண்ணம் அவனுக்குள் ஒரு தாவரம் போல மெல்ல வளர்ந்து கொண்டவரும். முடிவில் ஒரு நாள் சாத்தியமாகும்.
அப்படித் தான் டமூரா ஓடிப்போவதற்குத் தயார் ஆகிறான். தந்தையிடமிருந்து விலகி ஓடுகிறான் என்பதாலே அவன் காஃப்காவின் மறு உருவம் போலக் கருதப்படுகிறான்.
அவன் வீட்டை விட்டு ஓடும் போது எதையெல்லாம் தன்னோடு எடுத்துக் கொண்டு போக வேண்டும் என்று தீர்மானிக்க முடியாத குழப்பம் கொள்கிறான். அவனும் சகோதரியும் உள்ள புகைப்படத்தை மட்டுமே எடுத்துக் கொள்கிறான். அப்பாவின் கைப்பேசியை தனக்காக எடுத்துக் கொள்கிறான். கொஞ்சம் உடைகளுடன் புறப்படுகிறான்.
வீட்டை விட்டு ஒடிய அவன் நீண்ட தூரம் பயணித்து டகமாட்சு செல்கிறான். அங்கே ஒரு விடுதி அறையில் தங்குகிறான். அடுத்த நாளை எப்படிக் கழிப்பது என்று திட்டம் எதுவும் அவனிடமில்லை. அவன் தனக்கான புகலிடமாக நூலகத்தைத் தேர்வு செய்கிறான். கொமூரா நினைவு நூலகம் என்ற பழமையான ஒரு நூலகத்திற்குச் சென்று ஆயிரத்தோரு அரேபிய இரவுகள் நூலை எடுத்து வாசிக்க ஆரம்பிக்கிறான்.
இந்த நாவலில் காஃப்கா டமூரா நூலகத்தில் கழிக்கும் நாட்களே சிறப்பான பகுதி. அவன் ஒவ்வொரு முறை நூலகத்திற்குச் செல்லும் போதும் புதிய அனுபவத்திற்கு உட்படுகிறான். கடந்தகாலத்தை மீட்கும் செயலாகவே அவனது வாசிப்பு நடைபெறுகிறது.
முதல்முறை அந்த நூலகத்திற்குச் சென்ற போது ஒரு இளம்பெண் அந்த நூலகத்தின் சிறப்புகளைச் சுற்றிக் காட்டுகிறாள். புகழ்பெற்ற கவிஞர்கள் வந்து தங்கிய இடமது. அவர்களின் கையெழுத்துப் பிரதிகள் கூடப் பாதுகாத்து வைக்கப்படுகின்றன. அந்த நூலகத்திற்கு வயதானவர்களே அதிகம் வந்து போகிறார்கள்.
நூலகம் என்பது காஃப்கா டமூரா போல உலகைத் தனியே சந்திக்க விரும்புகிறவர்களுக்கான இடம். அங்கே அவர்கள் தனக்கான பாதையைத் தேடுகிறார்கள். கண்டறிகிறார்கள்.
எதிர்காலத்தைத் திட்டமிடுவதற்குப் பதிலாக எதற்காகக் காஃப்கா டமூரா ஆயிரத்தோரு அரேபிய இரவுகளை வாசிக்க ஆரம்பிக்கிறான். அது போல ஏதாவது மாயம் நடந்துவிடும் என்றா. அல்லது முடிவில்லாத கதைகளின் வழியே தனக்காக விஷயத்தைக் கண்டறிய முடியும் என்று நம்புவதாலா. அல்லது அவனது அம்மாவின் நினைவு தான் அந்தப் புத்தகத்தைத் தேர்வு செய்ய வைக்கிறதா.
விசித்திரங்கள் நிறைந்த அரேபிய இரவுகளின் கதையில் ஒரு பெண் தான் கதை சொல்லுகிறாள். பயணத்தில் காஃப்கா டமூரா சகுரா என்ற ஒரு இளம்பெண்ணைச் சந்திக்கிறான். அவளும் கதை சொல்கிறாள். புராதன கதை சொல்லிக் காட்டும் உலகம் வேறு. வழியில் சந்தித்த இளம்பெண் காட்டும் உலகம் வேறு. ஆனால் இரண்டும் ஒரு புள்ளியில் ஒன்று சேருகின்றன
நூலகம் என்பதே கடந்தகாலத்தின் உலகம் என்று நம்பிக் கொண்டிருக்கிறோம். ஆனால் எதிர்காலத்தைத் தேடி ஒருவன் அதற்குள் செல்லுகிறான் என்பது வியப்பளிக்கிறது.
பூனைகள் காணாமல் போவதும் மனிதன் காணாமல் போவதும் தனித்தனியே நடக்கின்றன. நகாடா ஒரு அற்புதமான கதாபாத்திரம். மனித மொழி மறந்து போன அவர் பூனைகளுடன் உரையாடுகிறார். தொலைந்து போன பூனைகளைத் தேடிக் கண்டுபிடிக்கிறார். தீர்க்கதரிசியைப் போல நடந்து கொள்கிறார்.
ஒரு இடத்தில் பூனைகளுக்குப் பெயர் முக்கியமில்லை. ஒரு பெயரில்லாமல் பூனையால் வாழ்ந்துவிட முடியும் என்கிறது ஒரு பூனை. வீட்டை விட்டு ஓடும் காஃப்கா டமூராவும் தனது பெயரைப் பற்றி யோசிக்கிறான். தனது அடையாளத்தை இழப்பது பற்றிச் சிந்திக்கிறான்.
நமது அன்றாட உலகம் என்பது நான்கைந்து அடுக்குகள் கொண்டது. எந்த அடுக்கிற்கு நாம் செல்கிறோம் என்பதை வைத்து அனுபவம் மாறிவிடும். டமூரா அப்படியான அனுபவத்தினைத் தான் அடைகிறான்.
நூலகத்தில் ஒஷிமாவோடு அவன் மேற்கொள்ளும் உரையாடல்கள் அபாரமானவை. அதில் தான் அவனது ஆளுமை வெளிப்படுகிறது. முடிவில் காஃப்கா டமூரா நூலகத்தின் ஒரு அறையிலே தங்கிக் கொள்கிறான்.
தொலைந்து போவது என்பதை மையப்படிமமாக நாவல் கொண்டிருக்கிறது. மீட்சி என்பது முனைந்து மேற்கொள்ளவேண்டிய செயலாகிறது.
வீட்டை விட்டு வெளியேறிய பிறகு காஃப்கா டமூரா தனது வீட்டிற்கு ஒருமுறை போன் பண்ணிப் பார்க்கிறான். மணியோசை வீட்டில் ஒலிப்பது அவனுக்குச் சந்தோஷம் தருகிறது. அந்த மணியோசையின் வழியே வீடு முழுமையாக அவனுக்குள் நிரம்பி விடுகிறது
வரலாறு, நிகழ்காலம், நூலகம், இரண்டாம் உலகப்போரின் நினைவுகள், பூனைகளின் உலகம் என வேறுவேறு அடுக்குகளுக்குள் சென்று வரும் முரகாமியின் புனைவெழுத்து மாயத்தையும் யதார்த்தத்தையும் அழகாகப் பின்னிச் செல்கிறது
நினைவுகள் இல்லாமல் வாழுவது, நினைவைக் கதையாக்குவது. கதையின் வழியே ஒரு நிகழ்காலத்தை உருவாக்குவது. எது நிஜம் எனது விந்தை என அறியமுடியாதபடி ஒன்று கலந்த நிகழ்வுகள் என விசித்திரமான இழைகளைக் கொண்ட இந்த நாவல் ஒரு சிம்பொனி போல உருவாக்கப்பட்டிருக்கிறது.

880 பக்கங்கள் கொண்ட இந்த நாவலை எழுத்தாளர் கார்த்திகை பாண்டியன் காஃப்கா கடற்கரையில் எனச் சிறப்பாக மொழியாக்கம் செய்திருக்கிறார். எதிர்வெளியீடு பதிப்பித்துள்ளார்கள். பல்வேறு நுண்ணடுக்குகள் கொண்ட இந்த நாவலை மொழியாக்கம் செய்வது சவாலானது. அதைச் சிறப்பாகவே செய்திருக்கிறார் கார்த்திகை பாண்டியன். அவருக்கு என் மனம் நிறைந்த பாராட்டுகள்.
மகனின் நினைவாக
கணேஷ் பாரி ·
மண்டியிடுங்கள் தந்தையே : வாசிப்பனுபவம்
ஒரு தானியம் தன்னை அழித்துக் கொள்வதன் வழியேதான் புத்துயிர்ப்பு பெறுகிறது.மனிதர்களுக்கு அது சாத்தியமில்லை..
– எஸ்.ராமகிருஷ்ணன்

விடுமுறைக் காலத்துக் காதல் கதை நாவலுக்குப் பிறகு நான் வாசிக்கும் நாவல் இது.ஐந்துவருடத்துக்குப் பிறகு எங்களுக்குப் போன வருடம் நவம்பர் மாதம் ஆண் குழந்தை பிறந்தது. எனது மகனின் நினைவாக வாங்கிய புத்தகம் இது.வெளியீட்டின் முதல் நாளே எஸ்.ராவின் கையால் எனது மகன் பெயர் “லெனின் வான்கா “ எழுதி வாங்கிக்கொண்டேன் இந்தப் புத்தகம்.எனக்கு மகன் பிறந்த போது எஸ்.ரா மகன் தந்தை உறவின் கதையை எழுதுகிறார்.எனக்காகவே எழுதியிருக்கிறார் தோழர் எஸ்.ரா.
ரஷ்யக் கருப்பு வெள்ளை திரைப்படம் பார்த்த அனுபவத்தைத் தந்தது இந்தப் புத்தகம்.எஸ்.ராவின் சிறப்பே ஒரு வரியாயிருந்தாலும் அதைக் காட்சியாக எழுதுவது.அதுவும் ஓர் சிறந்த Cameraman காட்சி அமைப்பில் இருக்கும்.ஒளி,இசையென பின்னணி இசையே வாசிக்கும் அனைவரையும் ரஷ்யாவுக்கே அழைத்துச் சென்றுவிடுவார்.
திமோஃபியின் கதாபாத்திரம் உயிரோடு உலாவும் இந்தக் கதையில்.அவனின் சிரிப்பு அழுகை கோவம் நடை பாவனையென நம் கண்முன்னே அலைந்து திரிகிறான். தந்தை ஏன் அவனை மகன் என்று ஏற்க மறுக்கிறார்.ஏன் தன் அம்மாவைக் கைவிட்டார்.மனைவியையும் தன் குழந்தையும் எப்படிப் பண்ணை அடிமைகளாக வைத்து வேலை வாங்க முடிகிறது.அம்மா ஏன் தனது உரிமையை விட்டுக்கொடுத்து தினம் தினம் அவரை நினைத்து மனதளவில் இப்படிக் கஷ்டப்படுகிறார்.
சமூகத்தில் இவ்வளவு பெரிய இடத்தில் இருக்கும் ஓர் எழுத்தாளன் எப்படித் தனக்கொரு மகன் மனைவி இருப்பதை மறைத்து இந்தப் பெருமையில் வாழமுடிகிறது. கேள்வி கடைசிவரை விடை தெரியமால் போவது.
டால்ஸ்டாயின் மனைவியாக வரும் சோபியாவின் கோபம் கலந்த காதல் நம்மையும் கோவம் வரவழைக்ககூடியது .டால்ஸ்டாயின் எழுத்தில் பெரியபங்கு சோபியாவிற்க்கு இருந்திருக்கிறது.
சோபியாவின் கோபத்தைச் சரியாக எதிர்கொண்டு டால்ஸ்டாய் வாழ்க்கை முழுக்க வென்றிருக்கிறார்.
அக்ஸின்யாவின் பனிபோல் தூய்மையானது அவளது காதல் எங்கும் நமக்கு டால்ஸ்டாய் மீது கோவமே வராதமாதிரியிருக்கிறது,
சிகப்பு துணி அவளை ஞாபகப்படுத்தும்.திமோஃபி அவளைப் புரிந்துகொள்ளவே முடியாது அவளின் தியாகம் அர்த்தம் அற்றது என்றுநினைத்தான்.
டால்ஸ்டாயால் பட்ட வேதனை போதாது என்று இவனும் வேதனை அடைய செய்வான்.டால்ஸ்டாயை குதிரை லாடாத்தால்காயப்படுத்தியது அவரின் உருவபொம்மையை எரிப்பது,அவரை தவறாகப் பேசுவது கூட முட்டாள் டிம்ட்ரியை சேர்த்துக்கொண்டு மொரட்டுதனம் பண்ணுவது ஊரை விட்டு ஒடுவது என சொல்லிக்கொண்டே போகலாம் பாவம் அக்ஸின்யா கணவனாலும் மகிழ்ச்சியில்லை பெற்ற பிள்ளையாலும் மகிழ்ச்சியில்லாமல் தவிக்கிறாள் ஆனால் அவள் யார் மீதும் புகார் சொன்னதே இல்லை.மீன் போல அவளின் வாழ்வு நீரில் தோன்றி நீரிலே முடிந்துவிடுகிறது.
* இயற்கை கடந்தகாலத்தை நினைவு வைத்துக் கொள்வதில்லை.
* காலம்தான் மனிதர்களின் பிரச்சனை.அவர்களால் நிகழ்காலத்தில் மட்டும் வாழமுடியாது.
* ரகசியங்கள் இல்லாத மனிதர்கள் யார்? எத்தனையோ ரகசியங்களை மனிதன் இறக்கும்போது கூடவே புதைந்து போய்விடுகின்றன.
* சந்தோஷம் என்பதை எதை வைத்து முடிவு செய்வது.எல்லா சந்தோஷங்களும் மழை போலத்தானே எவ்வளவு நேரம் மழை தொடர்ந்து பெய்யமுடியும்.மழை நின்றவுடன் வெறுமை கவிழ்ந்துவிடுகிறதே.
* சொர்க்கம் நிச்சயம் வானில் இருக்கமுடியாது.அது மனிதனின் மனதிற்குள் இருக்கிறது.மனித மனமே சொர்க்கத்தின் நுழைவாயில்.
* ஒருவன் மற்றவர்களுக்காக இல்லை என்றாலும் தனக்குத் தானே உண்மையைச் சொல்லிக் கொள்ளத்தானே வேண்டும்.
* கலையின் வேலை மனிதர்களை மகிழ்ச்சிப்படுத்துவது மட்டுமில்லை.நெறிப்படுத்துவதும் வழிகாட்டுவதும் மேம்படுத்துவதும் அதன் வேலைகள்.
* மனிதர்கள் தங்கள் வாழ்க்கையில் மிகக்குறைவான நேரத்தையே தனக்காகச் செலவு செய்கிறார்கள்.பெரும்பகுதி வாழ்க்கை அடுத்தவர்களுக்கானது.வேலைக்கானது.சம்பாத்தியத்திற்கானது.ஒரு வகையில் இது முட்டாள்தனமான செயல்.இன்னொரு வகையில் மனிதனின் வாழ்க்கை இதனால்தான் அர்த்தமுள்ளதாகிறது.
* பறவைகள் ஒரு மரத்தில் கூடு கட்டி அடைந்தாலும் அதற்கு முழு ஆகாசமும் தேவைப்படுகிறது.அப்படிதான் மனிதனும்.இந்த மொத்த நிலமும் தனக்கே வேண்டும் என ஒருவன் ஆசைப்படுவதில் தவறு ஒன்றுமில்லை.
* பெண்கள் விஷயத்தில் எல்லாமும் தலைகீழ்தான்.அவர்கள் ஏமாற்றியவனையும் மன்னிப்பார்கள்.அவனுக்காக உருகுவார்கள்.பிரார்த்தனை செய்வார்கள்.தெய்வமாக எண்ணி வணங்குவார்கள்.தன்னைத் தியாகம் செய்துகொள்வது பெண்களுக்குப் பிடித்தமானது.
பண்ணை அடிமை முறைகள்.அதில் டால்ஸ்டாயின் எதிர்வினை கட்டுரைகள்.ரஷ்யாவில் ஏற்பட்ட பஞ்சம்.பண்ணையாட்களுக்காகப் பள்ளிக்கூடம் கட்டும் கனவு. ரஷ்யாவில் ஜார் மன்னர் ஆட்சிக்காலத்தில் கலைஞர்கள் எழுத்தாளர்கள் கண்காணிக்கும் அரசு நடைமுறை.அவரின் நண்பர்கள் வாயிலாக அவர் கொடுக்கும் நேர்காணல்கள் என நாவல் விரிகிறது
.புத்தகத்தில் இருக்கும் அட்டை படத்தில் இருக்கும் டால்ஸ்டாய் கண்முன் வந்துபோவர்.டால்ஸ்டாய் அக்ஸின்யாவை சந்திக்கும் போது பார்த்தும் பார்க்காமல் போது போன்ற காட்சி தனிச்சிறப்பு.
எஸ்.ரா திரைத்துறையில் இருப்பாதல் ஒர் திறமையான ஒளிப்பதிவாளர் கண்ணோட்டத்தில் காட்சியிருக்கும்.நாவலின் இறுதி காட்சி அப்படித் தரமாக நமக்குக் காட்சிதரும்.
இந்தாண்டு தொடக்கத்திலேயே சிறந்த நாவலை வாசித்தேன் என்ற மனநிறைவோடு இந்தாண்டைத் தொடங்குகிறேன்.இந்த நாவலை எனது மகனுக்கும் படித்துக் காட்டினேன்.அவன் கேட்ட முதல் புத்தகம் எஸ்.ராவின் புத்தகம் என்பது எனக்குப் பெரும் மகிழ்ச்சி..இந்தாண்டை எஸ்.ராவோடு தொடங்குங்கள்
•••
••
••
தப்பிச் செல்லும் பயணம்
நார்த் வெஸ்ட் ஃபிரான்டியர் 1959 ஆம் ஆண்டு வெளியான ஆங்கிலத் திரைப்படம். Flame over India என்ற தலைப்பிலும் இப்படம் வெளியாகியிருக்கிறது

இந்தியாவைக் கதைக்களமாகக் கொண்டு உருவாக்கப்பட்டது. வழக்கமான ஆங்கிலப் படங்களைப் போலவே இந்தியாவைப் புரிந்து கொள்ளாமல் பிரிட்டிஷ் ஆட்சியாளர்களின் பெருமை பேசும் மற்றொரு படம்.
சினிமாஸ்கோப்பில் உருவாக்கியுள்ள இந்தப் படம் ஒரு நீண்ட ரயில் பயணத்தினை விவரிக்கிறது. தப்பிச் செல்லும் இந்த ரயில் பயணத்தில் எதிர்கொள்ளும் பிரச்சனைகளும் தாக்குதல்களும் சிறப்பாகப் படமாக்கப்பட்டுள்ளன. ரயில் கடந்து செல்லும் நிலக்காட்சிகளே என்னை அதிகம் வசீகரித்தது.

1905 ஆம் ஆண்டில், பிரிட்டிஷ் இந்தியாவின் வடமேற்கு எல்லையில் கதை நடக்கிறது. தனது மகனை எதிரிகள் வசமிருந்து காப்பாற்றி டெல்லி கொண்டு செல்லும்படி மகாராஜா பிரிட்டிஷ் இராணுவ கேப்டன் ஸ்காட்டிடம் ஐந்து வயதான இளவரசன் கிஷனை ஒப்படைக்கிறார்.
பிரிட்டிஷ் அதிகாரிகள் இளவரசனை ரகசியமாகக் கோட்டையை விட்டு வெளியே கொண்டு செல்கிறார்கள். இதற்கிடையில் கோட்டை எதிரிகளால் தாக்கப்பட்டு மன்னர் கொல்லப்படுகிறார். நாட்டில் மதக் கலவரம் ஏற்படுகிறது. தப்பிச் செல்லும் இளவரசனைக் கொல்ல கிளர்ச்சியாளர்கள் துரத்துகிறார்கள்.
கேப்டன் ஸ்காட் ஹசராபாத் வந்தடைந்தபோது, கலாபூரை விட்டுப் புறப்படும் கடைசி ரயிலில் மக்கள் முண்டியத்துக் கொண்டு தப்பிச் செல்வதைக் காணுகிறார். கிளர்ச்சியாளர்கள் ரயில் பாதைகளைத் தடுத்து ரயிலை நிறுத்த முயலுகிறார்கள். இதன் காரணமாகத் துப்பாக்கிச் சண்டை நடக்கிறது
இளவரசனை டெல்லிக்குக் கொண்டு செல்வதற்காக விக்டோரியா என்ற என்ஜின் கொண்ட சிறப்பு ரயிலைத் தயார் செய்கிறார்கள். அது பழைய ரயில் என்ஜின். குப்தா என்ற ஓட்டுநர் அதை இயக்குகிறான். ஒரேயொரு ரயில் பெட்டியை இணைத்து டெல்லி பயணம் துவங்குகிறார்கள்.
இளவரசனுடன் திருமதி வியாட், ஆயுத வியாபாரி பீட்டர், வயதான பிரிடி, லேடி விண்ட்ஹாம், டச்சு பத்திரிகையாளர் பீட்டர் வான் லேடன் ஆகியோர் பயணம் செய்கிறார்கள்.
ஆபத்தான பாதையில் செல்லும் இந்த ரயில் பயணம் படத்தின் இறுதியில் தான் நிறைவு பெறுகிறது. வழியில் எதிரிகள் கூட்டம் கூட்டமாக ரயிலைத் துரத்துகிறார்கள். சுடுகிறார்கள்.

இன்னொரு இடத்தில் அவர்களுக்கு முன் சென்ற அகதி ரயில் தாக்கப்பட்டு அதிலிருந்தவர்கள் மொத்தமாகக் கொல்லப்பட்டிருப்பதை ஸ்காட் காணுகிறான். மருத்துவரின் மனைவியான வியாட் ரயில் பெட்டியை விட்டு இறங்கி இறந்து கிடந்த உடல்களுக்குள் ஒரு கைக்குழந்தை உயிரோடு இருப்பதைக் காணுகிறார். அக் குழந்தையை மீட்டு தன்னோடு கொண்டு செல்கிறார்.
பயணத்தின் இடையில் ஒரு இடத்தில் ரயில்வே தண்டவாளத்தின் ஒரு பகுதி சிதைக்கப்பட்டிருக்கிறது. அதைச் சரிசெய்ய அனைவரும் ஒன்றுகூடி முனைகிறார்கள். இந்த நேரம் தூரத்து மலையினுள் ஒளிந்திருந்த கிளர்ச்சியாளர்கள் அவர்களைக் கொல்ல திரண்டு வருகிறார்கள். இரண்டு பக்கமும் பலத்த சண்டை நடைபெறுகிறது. ஸ்காட்டும் இளவரசனும் அவர்களிடமிருந்து தப்பிச் செல்கிறார்கள்.
ரயில் பயணம் தொடருகிறது. என்ஜினுக்குத் தண்ணீர் நிரப்ப ஆளற்ற ஸ்டேஷனில் ரயில் நிற்கிறது. அப்போது டச்சு பத்திரிக்கையாளரான வான் லீடன் இளவரசனைக் கொல்ல முனைகிறார். அதை அறிந்த ஸ்காட் அவரைக் கைது செய்து அடைக்கிறான். காவலாளியைக் கொலை செய்துவிட்டு வான்லீடன் இளவரசனைச் சுட்டுக்கொல்ல முயலுகிறான். இதைத் தடுக்க முயலும் ஸ்காட் அவனுடன் சண்டையிடுகிறார். அதில் வான்லீடன் தப்பிவிடுகிறான்.
இளவரசனைக் காப்பாற்றும் சாகசத்தின் நடுவே ஸ்காட்டும் வியாட் என்ற இளம்பெண்ணும் நெருக்கமாகிறார்கள்.
ஓரிடத்தில் ஆற்றுப்பாலம் ஒன்றில் ரயில் செல்ல முடியாதபடி குண்டுவைத்து உடைத்திருக்கிறார்கள். அந்த இடத்தை எப்படிக் கடப்பது என்று ஸ்காட் திட்டமிடுகிறான்.

அதிலிருந்து மீண்டு வரும் போது கிளர்ச்சியாளர்கள் ரயிலைக் குதிரையில் துரத்துகிறார்கள், ஆனால் ரயில் இரண்டு மைல் நீளமுள்ள மலைப்பாங்கான சுரங்கப்பாதையில் நுழைந்துவிடுகிறது. இப்படித் துரத்தலும் தப்பித்தலுமாக ரயில் பயணம் நீளுகிறது.
ஆபத்தான ஒரு ரயில் பயணத்தின் ஊடே சந்திக்கும் சவால்களையும் சாகசங்களையும் சிறப்பாகவே படமாக்கியிருக்கிறார்கள். ஆனால் படம் முழுவதும் இஸ்லாமியர்கள் மீதான வெறுப்புத் தீவிரமாக வெளிப்படுகிறது. அன்றைய பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் உருவாக்கி வைத்திருந்த எண்ணத்தை அப்படியே படம் பிரதிபலிக்கிறது.
தன்னைச் சுற்றி என்ன நடக்கிறது என்று அறியாமல் இளவரசன் கிஷன் விளையாட்டுத்தனமாக நடந்து கொள்வது இயல்பாகச் சித்தரிக்கப்பட்டிருக்கிறது. இது போலக் கைக்குழந்தையைக் கவனித்துக் கொள்ளும் லேடி விண்ட்ஹாமின் அக்கறையும் நேர்த்தியாக வெளிப்படுகிறது
இந்தியாவைக் காக்க தங்களால் மட்டுமே முடியும் என்ற பிரிட்டிஷ் ஆட்சியாளர்களின் எண்ணத்தை உலகமறியச் செய்வதற்காகவே இது போன்ற படங்கள் எடுக்கப்பட்டிருக்கின்றன.
ராஜஸ்தானில் உள்ள ஆம்பர் கோட்டையில் சில காட்சிகளைப் படமாக்கியிருக்கிறார்கள். பிரதான காட்சிகள் தெற்கு ஸ்பெயினில் கிரனாடா மாகாணத்தில் படமாக்கப்பட்டுள்ளன. அல்மேரியா-லினாரெஸ் ரயில் பாதையிலுள்ள அஞ்சுரோன் பாலத்தில் தான் ரயில் பாலம் வெடித்துள்ள காட்சி படமாக்கப்பட்டிருக்கிறது.

பரபரப்பாகத் துவங்கும் படத்தின் முதல் பத்து நிமிடங்களில் உரையாடல் எதுவுமில்லை, தாக்குதல் காட்சிகளும் மக்கள் தப்பிப் போவதும் வியத்தகு முறையில் படமாக்கப்பட்டுள்ளது.
பிரிட்டிஷ் படங்களுக்கு அன்று இந்தியாவில் பெரிய சந்தையிருந்தது. அது போலவே அமெரிக்காவிலும். இந்தச் சந்தைக்காகவே உருவாக்கப்பட்ட படங்களில் இதுவும் ஒன்று. ஆகவே தான் படத்தில் ஒரு அமெரிக்க இளம்பெண் முக்கியக் கதாபாத்திரமாக உருவாக்கப்பட்டிருக்கிறார்.
இந்தர் சென் ஜோஹர் குப்தாவாக நடித்திருக்கிறார், பாஃப்டா விருதுகளுக்குப் பரிந்துரைக்கப்பட்ட முதல் இந்தியர் இவரே. நிறைய ஹாலிவுட் படங்களில் நடித்திருக்கிறார். டேவிட் லீன் இயக்கிய லாரன்ஸ் ஆஃப் அரேபியாவில் பீட்டர் ஓ’டூலுடன் நடித்திருக்கிறார். இந்தப் படத்திலும் அவரது கதாபாத்திரம் மறக்கமுடியாதது. அதுவும் ரயில் என்ஜினுக்குள் இளவரசனுடன் பேசும் காட்சி சிறப்பானது

இந்தப் படம் பார்த்துக் கொண்டிருந்த போது திப்புசுல்தானின் பிள்ளைகளை வெள்ளையர்கள் பிணையாக வைத்துக் கொண்ட நிகழ்வு நினைவில் வந்து போனது. அந்தக் காட்சியை ஓவியமாக வரைந்திருக்கிறார்கள். அது தான் உண்மையான வரலாறு. இப்படத்தில் காட்டப்படும் பிரிட்டிஷ் சாகசம் வெறும் கற்பனை.
S. Ramakrishnan's Blog
- S. Ramakrishnan's profile
- 657 followers
