புத்தகங்களின் மீதான ஆசை
The Groaning Shelf and other instances of book love என்ற புத்தகத்தைப் படித்தேன். பிரதீப் செபாஸ்ட்டியன் எழுதியது. புத்தகப்புழுவாகத் தன்னை அறிமுகம் செய்து கொள்ளும் பிரதீப் தனது சேமிப்பிலுள்ள புத்தகங்களை எப்படிக் கையாளுகிறார். அரிய நூல்கள் வாங்கும் ஆசை உருவான விதம். மற்றும் தன்னைப் போன்ற புத்தக நேசர்கள் எவ்வாறு செயல்படுகிறார்கள் என்பதைச் சுவைபட எழுதியிருக்கிறார்.

நீண்ட கால வாசிப்பு மற்றும் தீராத புத்தக் காதலே இந்தக் கட்டுரைகளின் அடிநாதம்.
தீவிரமாக புத்தகங்களைச் சேகரித்துப் பாதுகாக்கும் இவரைப் போன்ற bibliophile களின் உலகம் விசித்திரமானது. நானும் இந்த உலகைச் சேர்ந்தவன் என்பதால் பிரதீப விவரிக்கும் பல்வேறு நிகழ்வுகள் மற்றும் நினைவுகள் எனக்கே நடந்தவையாக இருக்கின்றன.
எனது சேமிப்பிலுள்ள புத்தகங்களை ஆறு மாதங்களுக்கு ஒருமுறை கலைத்து, வெளியே எடுத்து வேறு வகைப்படுத்தி அடுக்கியும் சிலவற்றை ஒதுக்கியும் வைப்பது எனது வழக்கம். இதனால் சுவாச ஒவ்வாமை ஏற்பட்டுச் சிகிச்சை எடுக்க வேண்டியுள்ளது என்பது வேறு விஷயம். ஆனாலும் புத்தகங்களை வாங்காமல் இருக்க முடியாது. அதைப் பராமரிப்பது எளிதானதுமில்லை.
புத்தகங்களை வாங்கிக் குவிப்பதும் அதை ஆசை ஆசையாகப் படிப்பதும், பராமரிப்பதும் ஒரு வகையான வாழ்க்கை முறை. அதில் தீவிரமாக ஈடுபடுகிறவர்களைப் புத்தகவாதி என்று அழைக்கவே விரும்புவேன்.
புத்தக அலமாரியில் உள்ளதை வெளியே எடுத்துக் கொட்டித் திரும்ப அடுக்கி வைக்க முயலும் போது எதையும் வேண்டாம் என ஒதுக்க மனம் வராது. அது போலவே சில புத்தகங்கள் முன்பு படித்திருந்தாலும் உடனே திரும்பப் படிக்க வேண்டும் என்ற ஆவலை சில புத்தகங்கள் உருவாக்கிவிடும்.
புத்தக அலமாரி என்பது ஒரு சுரங்கம் போன்றது. நம் கண்ணில் படாமல் அபூர்வங்கள் ஒளிந்து கொண்டிருக்கும்.
பல நேரம் இடமில்லை என்று நூறு இருநூறு புத்தகங்களை நிராகரித்து வெளியேற்றுவேன். ஆனால் அடுத்த சில மாதங்களிலே அதை வேறு காரணங்களுக்காக வாங்கிப் புத்தக அலமாரியில் அடுக்கி வைத்துவிடுவேன்.
தனது கட்டுரை ஒன்றில் பிரதீப் தனது புத்தக அலமாரியை வெறுமனே பார்த்துக் கொண்டிருப்பது தனக்குப் பிடித்தமானது என்று சொல்கிறார். அது உண்மையே,
இது போலவே டிஜி வைத்தியநாதன் புத்தகத்தைக் கையில் எடுத்து முகர்வது தனக்குப் பிடித்தமானது என்கிறார். பிரதீப் செபாஸ்டியன் ஒரு பத்திரிக்கையாளர் என்பதால் சிறிய கட்டுரைகளுக்குள் நிறையத் தகவல்களைச் சுவையாக எழுதியிருக்கிறார்.
நான் தஸ்தாயெவ்ஸ்கியின் நாவல்களை ரஷ்ய மொழியிலே வைத்திருக்கிறேன். அதை என்னால் படிக்க இயலாது. ஆனாலும் அவர் ரஷ்ய மொழியில் தானே எழுதினார் என்று மூல நூலை வாங்கி வைத்திருக்கிறேன். இப்படிப் புத்தகக் காதலர்களுக்குள் ஆளுக்கு ஒருவகைப் பித்து இருக்கவே செய்கிறது.
விக்டோரியன் யுகத்தில் புத்தக அலமாரியில் ஆண்கள் எழுதிய புத்தகமும் பெண்கள் எழுதிய புத்தகமும் ஒரே வரிசையில் அடுத்தடுத்து வைக்கக் கூடாது என்றொரு விதி இருந்ததாம். தம்பதிகளாக எழுத்தாளர் இருந்தால் மட்டுமே ஒரே வரிசையில் வைக்க அனுமதிப்பார்கள். இல்லாவிட்டால் தனித்தனி வரிசை தான் என்று பிரதீப் குறிப்பிடுகிறார்

இது போலவே பதினெட்டாம் நூற்றாண்டு வரை புத்தகங்களின் முதுகில் தலைப்பு அச்சிடப்பட்டதில்லை. ஆகவே நூலகத்தில் புத்தகங்களை அதன் நிறம் மற்றும் வடிவத்தை வைத்தே கண்டறிந்தார்கள். இது போல மடாலயங்களில் உள்ள அரிய நூல்களை வெளியே எடுக்க முடியாதபடி சங்கிலி போட்டுப் பிணைத்துப் பூட்டுப் போட்டுப் பூட்டிவிடுவார்கள். திறவு கோல் இருந்தால் மட்டுமே அந்த நூலைத் திறந்து படிக்க முடியும்.
வீடு நிறைய புத்தகங்களை நிரப்பிவிட்டுத் தனக்குப் படுக்க இடம் கிடைக்காத சூழலின் போது புத்தகங்களை வெளியே தூக்கிப் போடாமல் தான் வெளியே தனி அறை எடுத்து தங்கிக் கொண்டவர்களைப் பற்றியும் குறிப்பிட்டிருக்கிறார்.
புத்தகங்களைப் பற்றியும் புத்தக் காதலர்களைப் பற்றியும் நிறைய நூல்கள் வெளியாகியிருக்கின்றன. அவற்றைத் தேடி வாசிப்பதில் பிரதீப்பிற்கு ஆர்வம் அதிகம். அதற்கெனத் தனது புத்தக அலமாரியில் தனி வரிசை ஒதுக்கியிருக்கிறார். புத்தக் கடைகளைத் தனது இரண்டாவது வீடு என்று அவர் குறிப்பிடுவது மிகவும் பிடித்திருந்தது
அபூர்வமான பழைய நூல்களைச் சேகரிப்பது, ஆவணப்படுத்துவது ஒரு கலை. அரிய கலைப்பொருட்களை வாங்குவதைப் போல இதற்கென ஆர்வலர்கள் இருக்கிறார்கள். அரிய முதற்பதிப்புகள் இன்று ஐந்து முதல் ஐம்பது லட்சம் ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது.
பழைய புத்தகங்களைத் தேடுகிறவர்களைப் பற்றிப் பிரதீப் ஒரு நாவல் எழுதியிருக்கிறார். The Book Hunters of Katpadi என்ற அந்த நாவல் புதுமையானது. அரிய புத்தகங்களை விற்கும் பழைய புத்தக் கடை ஒன்றைப் பற்றியும் அதை நடத்தும் இரண்டு பெண்களையும் சுற்றி நடக்கிறது நாவல். நல்லதம்பி வைட்ஹெட் என்ற அரிய புத்தகச் சேகரிப்பாளர், ஆயிரத்தோரு அரேபிய இரவுகளை மொழியாக்கம் செய்த ரிச்சர்ட் பர்ட்டன் எழுதிய அரிய ஆவணம் ஒன்றைத் தேடுகிறார். அதற்கான தேடலை துப்பறியும் கதை போல பரபரப்பாக சித்தரித்துள்ளார் பிரதீப் செபாஸ்டியன்

Joseph Epstein,Walter Benjamin,Nicholson Baker,Alberto Manguel போன்றவர் புத்தகங்களைப் பற்றி எழுதிய செய்திகளையும், நினைவுகளையும் பிரதீப் தனது கட்டுரைகளில் இடைவெட்டி அழகாகத் தருகிறார். கிளை பிரியும் பாதைகள் போல இந்தக் கட்டுரைகளின் வழியே நாம் வேறுவேறு புத்தகவாதிகளைத் தேடிச் செல்ல முடியும். ஒரிடத்தில் Walter Benjamin எழுதிய ‘Unpacking My Library என்ற கட்டுரையை மேற்கோளாகப் பிரதீப் காட்டுகிறார். தேடிப்படிக்க வேண்டிய சுவாரஸ்யமான கட்டுரையது.
புத்தகங்களுக்கு ஒரு விதி இருக்கிறது. புத்தக அலமாரியில் உறைந்து கிடக்கும் புத்தகங்களுக்குள் என்ன நடக்கிறது என்பது புதிரானதே என்று பிரதீப் குறிப்பிடுவது உண்மையே.
லோலிதா நாவலின் முதற்பதிப்பினை நபகோவ் எழுத்தாளர் கிரஹாம் கிரீனுக்குப் பரிசாக அனுப்பி வைத்திருக்கிறார். அந்த நாவலை விற்க விரும்பிய கிரீன் அதைப் பழைய புத்தக விற்பனையாளருக்கு விற்ற போது நாலாயிரம் டாலர் கிடைத்திருக்கிறது. பல்வேறு கைகள் மாறி மாறி இன்று சந்தையில் அந்த நாவல் ஏலமிடப்படும் போது 264000 டாலருக்கு விற்பனை செய்யப்பட்டிருக்கிறது. அதாவது இந்திய மதிப்பில் இது 1,98,95,040 ரூபாய். நபகோவையும் லோலிதா நாவலினையும் அதை பிரபலமாக்கிய கிரீனையும் பற்றிய செபாஸ்டியன் கட்டுரை சிறப்பானது.
.David Meyer’s Memoirs of a Book Snake, Larry McMurty’s Books; A Memoir, John Baxter’s A Pound of Paper: Confessions of a Book Addict, Book Row: An Anecdotal and Pictorial History of the Antiquarian Book Trade, போன்ற அரிய புத்தகங்களை வாங்கி விற்பவர்களைப் பற்றிய எழுதப்பட்ட நூல்களை இதில் பிரதீப் குறிப்பிடுகிறார்
அரிய புத்தகங்களை விற்பனை செய்பவர்களிடம் FIRST EDITION Fever என்ற நோய் காணப்படுகிறது. இவர்கள் அரிய நூல்களின் முதற்பதிப்பைத் தேடி அலைகிறார்கள். அப்படி ஒரு புத்தகத்தின் முதற்பதிப்பு கிடைத்துவிட்டால் அது தங்கப் புதையல் கிடைத்தது போன்றதே. சந்தையில் எளிதாக ஒரு கோடி வரை அதை விற்க முடியும். ஆனால் இந்தியாவில் அரிய நூல்களின் முதற்பதிப்பு பற்றிய எண்ணமே யாருக்கும் வரவில்லை. ஒருவேளை காந்தியின் சத்திய சோதனை முதற்பதிப்பு ஒருவரிடம் இருந்தால் கூட அதன் மதிப்பு அவருக்குத் தெரியவே தெரியாது என்கிறார் செபாஸ்டியன்.

நபகோவ் பென்சிலைப் பயன்படுத்திக் குறிப்புகள் எழுதுவார் என்பதால் அவர் பயன்படுத்தியTiconderoga No. 2 ரகப் பென்சிலுக்குச் சந்தையில் பெரிய மதிப்பு உள்ளது. அதைத் தேடி தானும் வாங்கியிருக்கிறேன் என்று செபாஸ்டியன் குறிப்பிடும் போது அவர் நபகோவை எவ்வளவு நேசிக்கிறார் என்பது புரிகிறது இது போலவே புத்தகக் கேட்லாக். புக் மார்க். புத்தக அட்டைகள். புத்தக விளம்பரங்கள் இவற்றைத் தேடிச் சேகரிப்பவர்களையும் செபாஸ்டியன் குறிப்பிடுகிறார்.
ஒரு புத்தகத்தைக் கையில் எடுக்கும் முன்பு நமது கைகளைச் சுத்தமாகக் கழுவிக் கொண்டு கையில் கொஞ்சம் வாசனைபவுடர் போட்டுக் கொண்டு மெதுவாகப் புத்தகத்தைத் தொட்டு வெளியே எடுக்க வேண்டும். புத்தகத்தை அழுத்திப் பிரிக்கக் கூடாது. காதலியை அணுகுவது போலப் புத்தகத்தை ஆசையோடு அணுக வேண்டும் என்று டி.ஜி. வைத்தியநாதன் சொன்னதை ஒரு கட்டுரையில் பிரதீப் நினைவுபடுத்துகிறார்.


புத்தகங்களை இரவல் கொடுப்பது பற்றியும். வெளிநாட்டிலிருந்து புத்தகங்களை ஆய்வு செய்வதற்காக வந்த ஆய்வாளர்கள் பற்றியும், அரிய நூல்களைத் தேடிய விந்தை பயணிகளைப் பற்றியும் நிறையத் தகவல்களைப் பிரதீப் எழுதியிருக்கிறார்.
பொதுவாகப் புத்தகங்களை இரவல் கொடுத்தால் திரும்பப் பெறவே முடியாது. ஒருவேளை திரும்பிக் கிடைத்தாலும் அந்தப் புத்தகம் அட்டை கிழிந்தோ, பக்கங்கள் மடங்கியோ காணப்படும். அதைக் காணும் போது ஏற்படும் வருத்தம் சொல்ல முடியாதது
புத்தக அலமாரிகள் எப்படி வடிவமைக்கப்படுகின்றன. ஏன் புத்தகங்கள் நின்ற விதமாக அடுக்கி வைக்கப்படுகின்றன. தேன்கூடு வடிவ புத்தக அலமாரிகள், விதவிதமான கோணங்களில் வடிவமைக்கப்பட்டிருக்கும் புத்தக அலமாரிகள், கண்ணாடிக் கதவுகளுடன் உள்ள புத்தக அலமாரி என அதன் புதிய தோற்றம், வடிவமைப்பு பற்றியும் தனியான கட்டுரை எழுதியிருக்கிறார்
வியப்பூட்டும் புத்தகங்களை விடவும் விசித்திரமாக அதைச் சேகரிப்பவர்கள் இருக்கிறார்கள். அவர்கள் ஒரு புத்தகத்திற்காக எதையும் செய்ய தயங்குவதில்லை. ஏன் இப்படி புத்தகங்களைச் சேகரிக்கிறார்கள், பாதுகாக்கிறார்கள் என்பதைப் பற்றியும் ஒரு கட்டுரையில் விரிவாக எழுதியிருக்கிறார்.
வாசிப்பின் வரலாற்றையும் பதிப்புத்துறையில் ஏற்பட்ட வளர்ச்சியினையும் பற்றி எழுதும் செபாஸ்டியன். காமிக்ஸ் புத்தகங்களை ஆய்வு செய்ய வந்த Karline McLain பற்றியும், இந்திய பதிப்புத் துறை வரலாற்றை எழுதிய Ulrike Stark பற்றியும் விரிவாக பதிவு செய்திருக்கிறார்.
புத்தக விரும்பிகளின் உலகையும் அதன் விசித்திரங்களையும் சுவாரஸ்யமாக எழுதியிருக்கிறார் பிரதீப். இந்தப் புத்தகத்தின் வழியே இன்னும் ஐம்பது புத்தகங்களை அடையாளம் காண முடிகிறது என்பதே இதன் கூடுதல் சிறப்பு.
•••
S. Ramakrishnan's Blog
- S. Ramakrishnan's profile
- 657 followers
