S. Ramakrishnan's Blog, page 101
January 11, 2022
டாவின்சியின் கிறிஸ்து ஓவியம்.
The Lost Leonardo என்ற ஆவணப்படத்தைப் பார்த்தேன். துப்பறியும் கதைகளை விட விறுவிறுப்பாக உருவாக்கப்பட்ட ஆவணப்படமது. லியோனார்டோ டாவின்சியின் கடைசி ஓவியம் என்று விளம்பரப்படுத்தபட்டு மே 2015ல் கிறிஸ்டி நிறுவனத்தின் மூலம் 450 மில்லியன் டாலருக்கு விற்பனை செய்யப்பட்ட Salvator Mundi என்ற இயேசு கிறிஸ்து ஓவியம் எப்படிக் கண்டுபிடிக்கப்பட்டது. இது உண்மையில் டாவின்சி வரைந்த ஓவியம் தானா. இதற்கு எப்படி விலை மதிப்பு உண்டானது என்பதை இந்த ஆவணப்படம் விரிவாகப் பேசுகிறது.

இன்னொரு தளத்தில் அரிய கலைப்படைப்புகள் விற்பனை செய்யும் சந்தையில் நடக்கும் சூது, விற்பனை தந்திரங்கள். போட்டிகள் அதன் பின்னுள்ள நிழல் மனிதர்களின் உலகை நுண்மையாக ஆவணப்படுத்தியிருக்கிறது
டாவின்சியின் இந்த ஓவியம் 2005 ஆம் ஆண்டு நியூ ஆர்லியன்ஸ் ஏலத்தில் தற்செயலாகக் கண்டறியப்படுகிறது. அதை $1175 விலை கொடுத்து வாங்கிய பாரிஷ் மற்றும் ராபர்ட் சைமன் அந்த ஓவியம் யாருடையது என்ற தேடுதல் வேட்டையில் ஈடுபட ஆரம்பிக்கிறார்கள். அது டாவின்சியின் ஓவியமாக இருக்கக்கூடும். அதற்கான சான்றுகள் உள்ளன என்று ஓவிய மறுஉருவாக்கபணியில் ஈடுபடும் வல்லுநர்கள் கருத்துத் தெரிவிக்கிறார்கள். இது டாவின்சி என்றால் தன் கையில் பெரிய பொக்கிஷம் கிடைத்துள்ளது என்பதை உணர்ந்த பாரிஷ் அதை டாவின்சியின் ஓவியங்கள் குறித்து ஆழ்ந்து அறிந்துள்ள வல்லுநர் முன்பு காட்சிக்கு வைக்கிறார். அவர்கள் ஒன்றுகூடி இதனை மதிப்பிட்டு டாவின்சியின் ஓவியமே என்று முடிவு சொல்கிறார்கள். இந்த மதிப்பிடல் ஆவணப்படத்தில் விரிவாகச் சித்தரிக்கப்படுகிறது.
கலையுலகின் மறுபக்கம் என்று அந்த உலகைச் சொல்லலாம். அந்த வல்லுநர்கள் முடிவின் படி தாங்கள் டாவின்சியின் அரிய ஓவியத்தின் உரிமையாளர்கள் என்று உணர்ந்த அவர்கள் அதை விற்பதற்கு முடிவு செய்கிறார்கள்
அது ஆவணப்படத்தின் இரண்டாம் பகுதியாகச் சித்தரிக்கப்படுகிறது. அரிய கலைப்படைப்பு ஒன்றைச் சந்தையில் எப்படி விற்பனை செய்கிறார்கள். இதில் ஏலம் எப்படி நடைபெறுகிறது. விளம்பரத்திற்கான யுக்திகள் எவை. உலகின் மிகப்பெரிய பணக்காரர்கள் எப்படி இந்தக் கலைப்படைப்புகளை வாங்கப் போட்டிப் போடுகிறார்கள். இந்த ஓவியங்கள் எங்கே எப்படி மறைந்து பாதுகாக்கப்படுகின்றன. ம்யூசியங்கள் இவற்றை எப்படி இரவல் பெற்றுக் கண்காட்சி நடத்துகின்றன என்பதை ஒரு துப்பறியும் கதையைப் போல இயக்குநர் விவரித்திருக்கிறார்

போதை மருந்து கடத்தல் உலகிற்கு அடுத்தபடியாகக் கலைப்பொருட்கள் விற்பனை உலகில் தான் யார் விற்கிறார்கள். யார் வாங்குகிறார்கள். இவ்வளவு பணம் எங்கிருந்து வருகிறது. எப்படிக் கைமாறுகிறது என்பது ரகசியமாகச் செயல்படுகிறது என்று கூறும் இயக்குநர் டாவின்சியின் ஓவியம் எப்படிக் கைமாறிக் கைமாறிச் சென்றது என்பதை முழுமையாக ஆவணப்படுத்தியிருக்கிறார்
$1175 க்கு விலைக்கு வாங்கிய அந்த ஓவியத்தை வாரன் அடெல்சன் மூலம் சந்தையில் விற்பதற்கு முயற்சி செய்கிறார்கள். அவர் மூன்றாவது பங்குதாரராக இதில் இணைந்து கொள்கிறார். அவரது முயற்சியால் ஓவியம் சுவிட்சர்லாந்தைச் சார்ந்த தொழிலதிபர் . YVES BOUVIERக்கு $83 மில்லியன் டாலருக்கு விற்பனை செய்யப்படுகிறது.
அவர் இந்த ஓவியத்தை ரஷ்யாவின் மிகப்பெரிய பணக்காரர் Dmitry Rybolovlevக்கு $127.5 மில்லியனுக்கு மறுவிற்பனை செய்து இரண்டு நாட்களுக்குள் $44.5 மில்லியன் லாபம் சம்பாதித்துவிட்டார். ஒரு கலைப்பொருளின் மூலம் எளிதாக 44 மில்லியன் டாலர் சம்பாதிக்க முடிவது என்பது வியப்பூட்டும் உண்மை
தனது கள்ளப்பணத்தை அரிய ஓவியங்கள் வாங்குவதற்காகப் பயன்படுத்தி வந்த தொழிலதிபர் டிமிட்ரி ரைபோலோவ்லேவ் அந்த ஓவியங்களை அவசரமாக விற்க முயன்றபோது .பூவியர் உதவி செய்ய மறுத்துவிடவே அவர்களுக்குள் விரோதம் ஏற்படுகிறது. நீதிமன்றம் செல்கிறார்கள். இந்த நிலையில் ரைபோலோவ்லேவ் வசமிருந்த ஓவியங்களை விற்றுத் தருவதற்குக் கிறிஸ்டி நிறுவனம் முன்வருகிறது. அவர்கள் மற்ற ஓவியங்களை எளிதாக விற்றுவிடுகிறார்கள். ஆனால் உறுதி செய்யப்படாத ஓவியம் என்பதால் டாவின்சியின் ஓவியத்தை விற்பது எளிதாகயில்லை.
ஆகவே இந்த ஓவியத்தை விளம்பரப்படுத்தப் பலகோடி ரூபாய் செலவு செய்கிறார்கள். வேறுவேறு நாடுகளில் காட்சிப்படுத்துகிறார்கள். பொய்யாக இந்த ஓவியம் பற்றிய பரபரப்பை உருவாக்குகிறார்கள். இது சந்தையில் அதன் மதிப்பைப் பல மடங்கு அதிகமாக்குகிறது.
முடிவில் கிறிஸ்டி ஏலத்தில் விடும் நாளில் போட்டி கடுமையானது. யார் ஓவியத்தை வாங்க முற்படுகிறார்கள் என்ற தகவலை ரகசியமாக வைத்துக் கொண்ட கிறிஸ்டி பலத்த போட்டிக்கு இடையில் $450 மில்லியனுக்கு ஓவியத்தை விற்றது
உலகில் அதிக விலைக்கு விற்கப்பட்ட ஓவியம் இதுவென்கிறார்கள். இதை வாங்கியிருப்பது சவுதி அரேபியாவின் ஆட்சியாளர் என்று சொல்கிறார்கள். இந்த ஓவியம் எங்கே வைக்கப்பட்டிருக்கிறது என்ற தகவல் இன்று வரை யாருக்கும் தெரியாது

இந்தநிலையில் இந்த ஓவியத்தைப் பாரீஸிலுள்ள லூவர் ம்யூசியம் காட்சிப்படுத்த முயன்றது.. இதற்காக பெரிய விளம்பரங்கள் செய்யப்பட்டன. டாவின்சியின் ஓவியங்களைக் காண மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தார்கள். ஆனால் சல்வதோர் முண்டி ஓவியம் காட்சிக்கு வைக்கப்படவில்லை. அதற்கான காரணம் மோனோலிசா ஓவியம் உள்ள அறையில் தான் இந்த ஓவியம் காட்சிக்கு வைக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை ம்யூசியம் நிராகரித்துவிட்டது என்பதே.
இந்த ஓவியம் டாவின்சி வரைந்ததில்லை. இது சந்தையால் உருவாக்கப்பட்ட போலியான ஓவியம் என்று கலைவிமர்சகர்கள் கடுமையாக விமர்சனம் செய்கிறார்கள். ஆனால் இந்த எதிர்ப்புக்குரலை மீறி $450 மில்லியன் டாலருக்கு விற்பனை செய்யப்பட்டிருப்பது விசித்திரமானது.
இந்த ஓவியத்தை விற்பனை செய்து கொடுத்த வகையில் கிறிஸ்டி நிறுவனம் மிகப்பெரிய தொகையைத் தனது பங்காகப் பெற்றிருக்கிறது. இது போலவே இந்த ஓவியத்தை மதிப்பீடு செய்தவர்கள். அதை விற்பதற்குத் துணை செய்தவர்கள் எனப் பலரும் கோடிகளில் பணம் பெற்றிருக்கிறார்கள். 1500 ல் வரையப்பட்ட இந்த ஓவியம் இத்தனை ஆண்டுக்காலம் எங்கேயிருந்தது என்பதை இதுவரை கண்டறிய முடியவில்லை.
ஸ்டுடியோவில் மிகவும் திறமையாக மறு உருவாக்கம் செய்யப்பட்ட ஒரு கலைப்படைப்பினை சந்தையில் பெரும்விலைக்கு விற்று ஏமாற்றுகிறார்கள் என்று கலை விமர்சகர் ஜெர்ரி சால்ட்ஸ் கூறுகிறார்
இன்று வங்கிகள் இது போன்ற அரிய ஓவியங்கள் மீது பெருந்தொகையைக் கடன் கொடுக்கின்றன. ஆகவே உலகின் மிகப் பெரிய பணக்காரர்கள் தங்கள் கள்ளப்பணத்தை இப்படி முதலீடு செய்கிறார்கள் என்கிறார்கள். அரிய கலைப் படைப்புகளுக்குப் பாதுகாப்பான காப்பகத்தை வழங்க ஃப்ரீபோர்ட் முறை உருவாக்கப்பட்டிருக்கிறது. அங்கே அதிநவீன பாதுகாப்பு வசதிகள் செய்யப்பட்டிருக்கின்றன. வரி மற்றும் சிவப்பு நாடா இல்லாத அப்படி ஒரு ஃப்ரீபோர்ட் பாதுகாப்பகத்தைத் தான் பூவியர் நடத்தி வந்திருக்கிறார்.
கலை மறு உருவாக்கம் செய்யும் டியான் மொடெஸ்டினி தான் இந்த ஓவியத்தை முதலில் மதிப்பீடு செய்தவர். அவர் வெளிப்படையாக இதில் தனக்கு நிறையப் பணம் கிடைத்தது என்பதை ஒத்துக் கொள்கிறார். அவர் பாரீஸில் நடக்கும் கண்காட்சியைக் காண வருவதும் அவரது இடைவிடாத தேடுதலும் படத்தில் விரிவாக பதிவு செய்யப்பட்டுள்ளது.
2011 இல் லண்டனில் உள்ள நேஷனல் கேலரி டாவின்சி கண்காட்சியினை மக்கள் மத்தியில் பிரபலமாக்குவதற்காக இந்த ஓவியத்தை முன்னிலைப் படுத்தியிருக்கிறார்கள். அது தான் இந்தச் சூதாட்டத்தின் முக்கிய நகர்வு என்கிறார்கள்.

இன்று உலகின் கண்களிலிருந்து மறைந்து போன அந்த டாவின்சியின் ஓவியத்தைத் தனது கையில் சிறிய பெட்டி ஒன்றில் வைத்து எடுத்துக் கொண்டு பாரிஷ் பயணம் செய்வது வியப்பான உண்மை
இன்று வங்கிகளின் லாக்கர்களை விடவும் ம்யூசியத்திலுள்ள ஓவியங்களுக்கு அதிகப் பாதுகாப்பு அளிக்கப்படுகிறது. பகலும் இரவும் அதி நவீன சாதனங்களுடன் காவல்காக்கப்படும் இந்த ஓவியங்கள் மக்களை விட்டு அந்நியமாகிவிட்டன. இவை உலகின் மிகப்பெரிய பணக்காரர்களின் தனிச்சொத்தாகமாறி எங்கோ ஒரு ரகசிய அறையில் முடக்கப்படுகின்றன என்கிறார் கலை விமர்சகர் ஜான் பெர்ஜர்
கலையுலகிற்குள் இப்படி ஒரு நிழல் உலகம் இயங்கிக் கொண்டிருக்கிறது என்பதைப் பதிவு செய்துள்ள விதத்தில் ஆண்ட்ரியாஸ் கோஃபோடின் இந்த ஆவணப்படம் மிக முக்கியமானது.
January 10, 2022
டால்ஸ்டாயுடன் ஒரு பயணம்
மண்டியிடுங்கள் தந்தையே – எஸ். ராமகிருஷ்ணன்….
பிரான்சிஸ் சேவியர்
2022 ல் நான் வாசித்த முதல் நாவல்….

எஸ். ராமகிருஷ்ணன் சொல்லுவது போல் தமிழில் எழுதப்பட்ட ரஷ்ய நாவல். ஒரு பனிக்காலத்தில் கதை தொடங்குகிறது. யஸ்னயா போல்யானா பண்ணை, போர்யா கிராமம், துலா, மாஸ்கோ எனப் பயணிக்கிறது… டால்ஸ்டாய் கால ரஷ்யாவுக்குச் சென்று டால்ஸ்டாய் யோடு பயணித்த உணர்வு வந்து போகிறது…
டால்ஸ்டாய் வாழ்கையின் ஊடே பயணித்துப் பற்றிய உண்மைகளை அப்படியே சொல்லுகிறது… முன்னும் பின்னுமாக நகர்ந்து உணர்வுகளைக் கவ்விப் பிடித்து விடுகிறது…
இது ஒரு புனைவா ? அல்லது டால்ஸ்டாய் உடன் பயணித்த நபரின் அனுபவ பகிர்வா? நாவல் முழுவதும் அன்றைய ரஷ்ய சமுக, பொருளாதார, கலாச்சார, அரசியல் பின்புலத்தில் வாழ்கையின் எதார்த்தங் களின் ஊடே இயல்பாக நடந்த உணர்வே ஏற்படுகிறது …
பனிக்காலம், உறைந்து கிடக்கும் பனி பற்றி விவரிக்கும் போது பனி மழையில் குளித்தது போன்ற அனுபவம். வானத்தை, நட்சத்திரங்களை, மரங்களை, மலர்களை விவரிக்கும் போது பார்த்து, தொட்டு, உணர்ந்த அனுபவம் வந்து விடுகிறது.
சிவப்பு அங்கி அக்ஸின்யா இறந்த செய்தியோடு ஆரம்பித்து… கல்லறை தோட்டத்தில் இடம் தரப்படாததால் காட்டில் புத்தைக்கப் பட்ட அக்ஸின்யாவின் புதை மேட்டில் டால்ஸ்டாய் காட்டு மலர்களை வைக்கும் காட்சியோடும், காற்றில் பறந்த அந்த மலர்களைத் திமோபி மார்போடு அணைத்துக் கொள்ளும் காட்சியோடும் நிறைவடைகிறது…. ஆனால் அனைத்து கதாபாத்திரங்களும், காட்சிகளும் நினைவில் அப்படியே ஏதோ சிறு சலனங்கள் ஏற்படுத்திக் கொண்டு இருக்கின்றன….
டால்ஸ்டாய், அக்ஸின்யா, திமோபி பாத்திரப் படைப்புகள் எதார்த்தமாக இருக்கின்றன. சூதாட்டம் போலக் காதலிப்பதும் ஒரு போதை, மயக்கம். நாம் ஜெயிப்பது போலத் தோன்றும் ஆனால் தோற்றுக் கொண்டே இருப்போம்… என்பது சற்று நெருடலாக உள்ளது… காலம் மாறுகிறது, அரண்மனைகளே இருக்காது. மக்கள் ஆட்சி செய்வார்கள் என்பது நம்பிக்கை தீபம் ஏற்றி வைப்பது போல் உள்ளது. அன்புதான் கடவுள், அன்பு செலுத்துவதை விட வழிபாடு வேறில்லை என்று ஆன்மீகம் பற்றிய தெளிந்த புரிதலை காணமுடிகிறது.
பஞ்சம் ஏற்படக் காரணம் இயற்கை அல்ல அரசும், திருச்சபை இரண்டுமே என டால்ஸ்டாய் கூறுவது ஆழமான சமுகப் பகுப்பாய்வு…. கல்வி அடிப்படை உரிமை என்று பண்ணையில் பள்ளிக்கூடம் தொடங்குவதும், அரசின் கட்டளையை மீறி பஞ்சக் காலத்தில் பாதிக்கப் பட்ட மக்களுக்கு உணவை பகிர்ந்து கொடுப்பது டால்ஸ்டாயின் ஆளுமையின் சிறப்புப் பரிணாமங்கள்…. மாஸ்கோவில் இருந்து வந்த இளைஞர்கள், டால்ஸ்டாய் உரை யாடல் அழகு சேர்க்கிறது… அறிவியல் அறிஞர்கள், எழுத்தாளர்கள் பலர் உரையாடலின் ஊடே வந்து போகிறார்கள்.
டால்ஸ்டாயின் மனைவி சோபியா, தேமோபின் மனைவி ஓல்கா பாத்திர படிப்புகளும் சிறப்பே … பிரச்சாரம் இல்லாமல் தத்துவங்கள், பல தகவல்கள் இழையோட புனைவு எழுதுவது எஸ்ரா வின் கைவந்த கலை என்பதும் மீண்டும நிரூபிக்கப் படுகிறது. எப்படியும் எஸ்ரா முன் மண்டியிட வேண்டியதுதான்…. படித்து முடிக்கும் போது பிரமிப்பாக இருக்கிறது.
காலம் வரைந்த காட்சிகள்
காவேரிப்பட்டினம் சித்தாந்த வேங்கடரமணி எனப்படும் கே.எஸ். வேங்கடரமணி இரண்டு நாவல்களை எழுதியிருக்கிறார். ஆங்கிலத்தில் எழுதப்பட்ட இந்த நாவல்கள் தஞ்சை மாவட்ட கிராமிய வாழ்க்கையை விவரிக்கின்றன.

பூம்புகாரைச் சேர்ந்த கா.சி. வேங்கடரமணி வழக்கறிஞராகப் பணியாற்றியவர். .இவரது தந்தை சித்தாந்த ஐயர் சுங்கவரி அதிகாரி. இவரது முன்னோர்கள் தஞ்சை மராட்டிய மன்னர்களின் அரசவையில் அமைச்சர்களாகப் பணியாற்றியிருக்கிறார்கள்..
வேங்கடரமணி ஆரம்பப் பள்ளியினை மாயவரத்திலும் கல்லூரி படிப்பைச் சென்னை கிறிஸ்தவக் கல்லூரியிலும் பயின்றிருக்கிறார். சட்டம் படித்து மயிலாப்பூரில் வழக்கறிஞராகத் தொழில் நடத்தியிருக்கிறார். ஓவியத்தில் ஆர்வம் கொண்டவரான வேங்கடரமணி ஆங்கிலத்தில் சொற்பொழிவுகள் ஆற்றவும் கட்டுரைகள் எழுதவும் துவங்கியிருக்கிறார். அதன் அடுத்த கட்டமாக இரண்டு நாவல்களை ஆங்கிலத்தில் எழுதியிருக்கிறார். ‘முருகன் ஓர் உழவன்’ ‘தேசபக்தன் கந்தன்’ என்ற இந்த நாவல்கள் மிகுந்த பாராட்டினை பெற்றிருக்கின்றன.
1928 இல் வேங்கடரமணி சாந்தி நிகேதனுக்குச் சென்றிருந்தார். அங்கே மகாகவி ரவீந்திரநாத் தாகூரைச் சந்தித்தபோது அவர் வேங்கடரமணியின் எழுத்துகளைப் பாராட்டியதுடன் அவர் தமிழில் ஒரு இதழைத் தொடங்க வேண்டும் என்று ஆலோசனை சொன்னார். அதன்படி தமிழ் உலகு என்ற வார இதழைத் தொடங்கி நடத்தியிருக்கிறார். இரண்டு ஆண்டுகள் இந்த இதழ் வெளியாகியிருக்கிறது.

வேங்கடரமணி ஏன் இந்த நாவல்களை ஆங்கிலத்தில் எழுதியிருக்கிறார். இவரது ஆங்கிலப் புலமையே முதற்காரணம். நேரடியாக ஆங்கிலத்தில் நாவல் எழுதிய முதற் தமிழர் இவரே என்கிறார்கள்.
சிறந்த ஆங்கிலப் புலமை கொண்டிருந்த வேங்கடரமணி லண்டனிலிருந்து வெளியாகும் The Times Literary Supplementல் பணியாற்றுவதற்காக அழைக்கப்பட்டிருக்கிறார். ஆனால அந்தப் பணியை அவர் ஏற்கவில்லை.
இந்திய ஆங்கில எழுத்தாளர்களான முல்க்ராஜ் ஆனந்த், ராஜா ராவ் போன்றவர்களுக்கு முன்பாகவே கிராமிய வாழ்க்கையை முன்வைத்து ஆங்கிலத்தில் வேங்கடரமணி நாவல் எழுதியிருப்பது பாராட்டிற்குரியது.
முருகன் ஓர் உழவன் என்ற இவரது நாவலை கிருஷ்ணகுமாரி தமிழில் மொழிபெயர்ப்புச் செய்திருக்கிறார். 1928ல் வெளியாகியிருக்கிறது.
இன்று வாசிக்கும் போது பழைய கறுப்பு வெள்ளை படம் பார்ப்பது போன்ற அனுபவத்தைத் தருகிறது. முருகன் ஓர் உழவன் என்று தலைப்பிடப்பட்டிருந்தாலும் நாவல் முருகனின் வாழ்க்கையை விவரிக்கவில்லை. ராமச்சந்திரன் எனப்படும் ராமுவின் வாழ்க்கையினையும் கேதாரி என்ற சட்டம் பயிலும் இளைஞனின் வாழ்க்கையினையும் மையமாகக் கொண்டே எழுதப்பட்டிருக்கிறது

ராமுவின் பண்ணையைக் கவனித்துக் கொண்டு வாழ்ந்து வரும் பண்ணையாள் முருகன். அவனது தாத்தா காலத்திலிருந்து அந்தப் பண்ணையில் தான் வேலை செய்து வருகிறார்கள். பெரிய தென்னந்தோப்பு. ஏழு ஏக்கர் வயல் ராமுவிற்குச் சொந்தமாக உள்ளது. அப்பா அம்மா இறந்துவிட்டார்கள்.
அலவந்தி என்ற தஞ்சை மாவட்ட கிராமம் அறிமுகமாகிறது. காவிரியின் அழகுடன் துவங்கும் நாவல் ராமு பி.ஏ பரிட்சையில் பெயலாகிப் போன செய்தியிலிருந்து விரிவு கொள்கிறது. தனது மகன் பி.ஏ. பரிட்சையில் பாஸ் செய்ய வேண்டும் என்று அவனது அம்மா கனவு கண்டுவந்தாள் ஆனால் அது அவளது இறப்பின் பின்பும் நிறைவேறவில்லை. அது போலவே மகனுக்கு நல்ல இடத்தில் பெண் பார்த்துத் திருமணம் செய்ய வேண்டும் என்றும் நினைத்திருந்தாள். அதுவும் நடக்கவில்லை. இதில் ராமு மிகவும் வருத்தமடைகிறான்
பரிட்சையில் தோற்றுப் போன ராமுவை ஆறுதல் படுத்துகிறான் முருகன்.
அம்மாவின் ஆசைக்காக ஆங்கில வழியில் கல்வி கற்று ஒரு பயனுமில்லை. பட்டணத்திற்குப் படிக்கப் போய் நிறையப் பணத்தை வீண் செலவு செய்தது தான் மிச்சம். இனிமேல் பேசாமல் நிலத்தைப் பார்த்துக் கொண்டு அங்கேயே தங்கிவிடப்போவதாக ராமு சொல்கிறான். அதுவும் நல்ல யோசனை தான் என்கிறான் முருகன்.
ஆனால் சில நாட்களிலே நண்பன் கேதாரியின் கடிதம் அவனை மீண்டும் பட்டணத்திற்கு வரவழைக்கிறது. கேதார் ஏழைக்குடும்பத்திலிருந்து வந்தவன். அறிவாளி. முதல் மாணவனாகத் தேர்ச்சி பெற்றுச் சட்டம் படிக்கச் செல்கிறான். அவன் ராமுவின் நீண்டகாலத் தோழன்.
பட்டணத்தில் புதிய அறையை இருபதுரூபாய் வாடகைக்கு எடுத்திருக்கிறான் கேதாரி. அது அன்றைக்கு மிகப்பெரிய தொகை. அந்த அறையில் ராமு தங்கிக் கொள்கிறான். நண்பர்கள் ரயில் போவதை அறையிலிருந்து வேடிக்கை பார்க்கிறார்கள். ஒரு இடத்தில் சிலோன் போட் மெயில் பற்றிய குறிப்பும் இடம்பெற்றுள்ளது
பாஸாகி சட்டம் படிக்கப் போன கேதாரி பரிட்சையில் தோற்றுப் போன ராமுவோடு முன்பு போல இயல்பாகப் பழகுவதில்லை. அந்த விலகல் ராமுவை தொந்தரவு செய்கிறது. இதைப்பற்றிக் கேதாரியிடம் கேட்டபோது அந்த இடைவெளி தவிர்க்கமுடியாதது என்கிறான்.
அந்தக் காலப் பிராட்வேயைச் சுற்றிக் கதை நிகழுகிறது. கைரிக்ஷா ஒட்டுகிறவர்கள் எப்படி வாடிக்கையாளர்களைப் பிடிப்பார்கள் என்பதையும் அவர்கள் செல்லும் வேகம் பற்றியும் வேங்கடரமணி சுவாரஸ்யமாக எழுதியிருக்கிறார்.
பட்டணம் வந்து சேரும் ராமு கிறிஸ்துவக் கல்லூரியில் சேருகிறான். ஊரிலிருந்து முருகன் அனுப்பி வைக்கும் பணத்தைக் கொண்டு வசதியாக வாழுகிறான். முருகனும் அவனது மனைவியும் கஷ்டப்பட்டு உழைத்து பண்ணையைக் காப்பாற்றுகிறார்கள்.

கேதாரியின் அத்தை வீடு அறிமுகமாகிறது. அவனது அத்தை மகள் ஜானகி அழகானவள். பதினைந்து வயது இளம்பெண். அவளுக்குத் திருமணம் செய்து வைக்க வேண்டும் என்று அம்மா மீனாட்சி ஆசைப்படுகிறாள். இந்தச் சூழலில் அவர்களுக்கு ராமு அறிமுகமாகிறான். அவன் ஜானகியின் அழகில் மயங்கி அவளைத் திருமணம் செய்து கொண்டுவிடுகிறான். இது ஊரில் எவருக்கும் தெரியாது.
கேதாரி சட்டம் பயிலுவதுடன் புகழ்பெற்ற வழக்கறிஞர்களுடன் நெருக்கமாகப் பழக ஆரம்பிக்கிறான். அவனது பேச்சும் செயலும் பலருக்கும் பிடித்துப் போகிறது. தன்னை ஆங்கிலக் கனவான் போலவே காட்டிக் கொள்கிறான். கோகிலம் என்ற பெண்ணை திருமணம் செய்து கொள்கிறான்.
ராமு மீண்டும் பரிட்சையில் தோற்றுப் போகிறான். ஆகவே பட்டணத்தில் குடியிருக்க விரும்பாமல் மனைவியை அழைத்துக் கொண்டு அலவந்தி கிராமத்திற்கு வருகிறான். முருகன் இதை எதிர்பார்க்கவில்லை.
ராமுவின் புது மனைவி ஜானகி வீட்டிற்குள்ளாகவே அடைந்து கிடப்பதைப் பற்றி ஊர் பெண்கள் வம்பு பேசுகிறார்கள். காவேரி ஆற்றுக்குக் குளிக்கக் கூட வருவதில்லையே என்று முருகனிடம் கேட்கிறார்கள். அவன் புது மனிதர்களுடன் பழகக் கூச்சப்படுகிறாள் என்று விளக்குகிறாள்.
மறுநாள் ஜானகி ஆற்றங்கரைக்கு வருகிறாள். ஊர் பெண்களுடன் சகஜமாக உரையாடுகிறாள். சீதை என்ற பெண்ணின் நட்பு கிடைக்கிறது. இருவரும் நெருக்கமான நண்பர்களாக மாறுகிறார்கள்
ஏழு ஏக்கர் நிலமிருந்தாலும் ஆயிரம் ரூபாய் கடன் இருக்கிறது. அது நிலத்தை விழுங்கிவிடும் என்று உணரும் ராமு எப்படியாவது நாலு ஆண்டிற்குள் கடனை அடைத்துவிட வேண்டும் என்று திட்டமிடுகிறான். ராமுவின் இயலாமையை பற்றி பேசி அவனது மாமியார் குற்றம் சொல்லியபடியே இருக்கிறாள்.
இந்த நிலையில் ஒரு நாள் பெருமழை பெய்து ஆற்றில் வெள்ளம் ஏற்படுகிறது. தென்னந்தோப்புப் பாதிக்கப்படுகிறது. வயலில் தண்ணீர் நிரம்புகிறது. இதனால் ஏற்பட்ட நஷ்டத்தைத் தாங்க முடியாது என உணர்ந்த ராமு பண்ணையை முருகன் வசம் ஒப்படைத்துவிட்டுக் கடப்பாவில் கேம்ப் கிளார்க் வேலைக்கு மாதம் 25 ரூபாய் சம்பளத்திற்குப் போய்விடலாம் என்று நினைக்கிறான். இதை முருகன் ஏற்கவில்லை. கடன் வாங்கி விவசாயம் செய்வோம் , நிச்சயம் நல்ல விளைச்சல் வரும் என்கிறான்.
ஆனால் பிடிவாதமாகத் தனது மனைவி மாமியாருடன் கடப்பா புறப்பட்டுப் போகிறான் ராமு. அங்கே மாவட்ட கலெக்டர் காடெல் துரைக்கு அவனைப் பிடித்துப் போகிறது. மூன்று ஆண்டுகள் கேம்ப் கிளார்க்காக வேலை செய்கிறான். கலெக்டரின் மனைவி அவனது அமைதியான குணத்தைப் பாராட்டுகிறாள். ஆனால் வீட்டில் அவனுக்கு நற்பெயர் கிடைக்கவில்லை.
தாங்க முடியாத உஷ்ணப்பிரதேசத்தில் எப்படி வாழுவது என்று மாமியார் கோவித்துக் கொள்கிறாள். உறவினர்களோ, தோழிகளோ இல்லாமல் எப்படி அன்றாடப்பொழுதை கழிப்பது என ஜானகி வருந்துகிறாள். கேம்ப் கேம்ப் என்று பாதி நாட்கள் வெளியூர் போய்விடுகிறான் ராமு. மற்ற ஊழியர்களைப் போல அவனுக்குப் பணம் சம்பாதிக்கத் தெரியவில்லை என்று மாமியார் தொடர்ந்து குற்றம் சாட்டுகிறாள்
ராமு கலெக்டரின் விருப்பத்திற்குரிய ஊழியனாக மாறுகிறான். ஆனாலும் அந்த வேலையில் நிலை கொள்ள முடியவில்லை.
250 ரூபாய் ஆண்டுக் குத்தகைக்கு நிலத்தை எடுத்துக் கொண்ட முருகன் கடினமான உழைத்து நிறையப் பணம் சம்பாதிக்கிறான். தொப்பை என்ற ஒருவனைத் துணைக்கு வைத்துக் கொள்கிறான்.
இந்நிலையில் கடப்பா வாழ்க்கையினை விட்டு விலகி அலவந்தி திரும்புகிறான் ராமு. ஊர்வந்த வேகத்தில் தனது நிலத்தை விற்பனை செய்துவிடுகிறான். இதனால் முருகன் அதிர்ச்சி அடைந்து போகிறான். முருகனுக்கே தென்னந்தோப்பினை கிரயம் பண்ணித் தருவதாகச் சொல்லி அவனிடம் உள்ள பணத்தில் எவ்வளவு முடியுமோ அவ்வளவு தரச் சொல்கிறான் ராமு. தானும் மனைவியும் கடினமாக உழைத்து ஐந்நூறு ரூபாய் சேர்த்து அதை ஒரு கலயத்தில் போட்டுப் புதைத்து வைத்துள்ளதாக முருகன் சொல்கிறான். ராமு அந்தத் தோப்பை முருகனிடம் விற்றுவிட்டு ஊரைவிட்டுப் போகிறான்
கேதாரி சட்டம் படித்து வழக்கறிஞராகி மார்க்கண்டம் ஐயரின் ஜுனியராக பணியாற்றுகிறான். பெயரும் புகழும் உருவாகிறது. ஆனால் பதவி ஆசை கொண்டு வீழ்ச்சியடைகிறான். இந்த இருவரின் வாழ்க்கையும் என்னவாகிறது என்பதையே நாவல் விவரிக்கிறது.
எதற்காக இந்த நாவலுக்கு முருகன் ஓர் உழவன் என்று தலைப்பு வைத்தார் என்று தெரியவில்லை. கதையில் விவசாய வாழ்க்கையைப் பற்றி அதிகம் எழுதப்படவில்லை. ஆனால் கிராம வாழ்க்கையிலிருந்து பட்டணத்திற்குக் குடியேறியவர்களின் வாழ்க்கை பாடுகளையும், சொந்த ஊர்திரும்பி விவசாயம் செய்து பிழைத்துக் கொள்ளலாம் என்ற பொய் கனவினையும் அன்றே யதார்த்தமாக எழுதியிருக்கிறார். இன்றைக்கும் அந்த நிலை மாறிவிடவில்லை
ஊரின் தொடர்பு துண்டிக்கப்பட்டவுடன் ராமு தனது கடந்தகாலம் தன்னைவிட்டுத் துண்டிக்கப்பட்டுவிட்டதாகவே உணருகிறான். அவனால் கிராமத்திலும் வாழ முடியவில்லை. பட்டணத்து வாழ்க்கையும் ஏற்றதாகயில்லை.
காடெல் துரை என்ற கடப்பா மாவட்ட கலெக்டர், அவரது மனைவி அவர்களுக்குள் நடக்கும் உரையாடல், இதன் வழியாக அந்தக் கால நிர்வாகம் மற்றும் அதிகாரத்திலிருப்பவர்களின் நடவடிக்கைகள் பற்றி வேங்கடரமணி சிறப்பாக எழுதியிருக்கிறார்.
மார்க்கண்டம் என்ற அந்த வழக்கறிஞர் அந்தக் காலத்தில் புகழ்பெற்றிருந்த ஒருவரின் சாயலில் உருவாக்கப்பட்டது என்கிறார்கள்.
காவிரி ஆற்றங்கரையில் அமர்ந்து ஊர்பெண்கள் ஜானகியைப் பற்றிப் பேசிக் கொள்ளும் காட்சியும் ஜானகிக்கும் சீதாவிற்குமான நட்பும். ஊரைவிட்டுப் போவதற்கு முன்பு ராமுவை சந்தித்துச் சீதா பேசும் உரையாடலும் நேர்த்தியாக எழுதப்பட்டிருக்கிறது. நாடகத் தமிழில் அவர்கள் பேசிக் கொள்கிறார்கள். அது அன்றைய வழக்கு
அந்தக் காலச் சென்னை வாழ்க்கையை, குறிப்பாக வக்கீல்களின் உலகை, கல்லூரி படிப்பதற்காக அறை எடுத்துத் தங்கிய மாணவர்களின் வாழ்க்கையை, அந்தக் கால மைலாப்பூர் வீதிகளை வேங்கடரமணி அழகாகப் பதிவு செய்திருக்கிறார்.
நாவலின் முற்பகுதியிலிருந்த கதைப்போக்குப் பிற்பகுதியில் திசைமாறிப் போய்விடுகிறது.
நீண்டகாலத்தின் பின்பு கேதாரி வீட்டைத் தேடி ராமு மைலாப்பூர் போகும் காட்சி மிகவும் அழகாக எழுதப்பட்டிருக்கிறது. கேதாரியின் மனைவி கோகிலம் அவனை அடையாளம் தெரிந்து கொள்வதும் வீட்டிற்குள் அழைத்துத் தங்கள் கஷ்டகாலத்தைச் சொல்வதும் உணர்ச்சிப்பூர்வமான பகுதி.

“சென்னையில் யாவும் டம்பமே. ஆளுக்கு ஒரு ஆசையைத் துரத்திக் கொண்டு அலைகிறார்கள். இங்கே அமைதியே கிடையாது“ என்கிறாள் கோகிலம். இந்த நிலை இன்றும் மாறவேயில்லை.
“நாம் அனுபவிக்கும் துன்பத்தில் பாதி நாம் உருவாக்கிக் கொண்டதே மனிதன் குயவன் கையில் அகப்பட்ட களிமண் போன்றவன், சகவாசமே எதையும் தீர்மானிக்கிறது“ என்கிறான் ராமு. அது போலவே வழக்கறிஞர் தொழிலில் வெற்றிபெறத் தேவையான சாதுரியமும், உணர்ச்சிவசப்படாத தன்மையும் கேதாரியிடம் இல்லை என்றும் சொல்கிறான் ராமு.
கிராம நிர்வாகம், விவசாயத்தில் மேற்கொள்ள வேண்டிய மாற்றங்கள். அரசு நிர்வாகம். நீதித்துறை எனப் பல்வேறு சிந்தனைகளை வேங்கடரமணி தனது கதாபாத்திரங்களின் மூலமாக விளக்கிப் பேசுகிறார். ஏற்றுக் கொள்ள முடியாத கருத்துகள் நிறையவே இருக்கின்றன. அவரது அந்தக் கால மனநிலையின் வெளிப்பாடாக அவற்றை எடுத்துக் கொள்ள வேண்டியது தான்.
நாவல் முழுவதும் பிறருக்காகவே வாழுகிறான் முருகன். அவன் யாரையும் குற்றம் சொல்வதில்லை. அர்ப்பணிப்புடன் கடினமாக உழைக்கிறான். அவனது வாழ்க்கை பெருமைக்குரியது என்பதற்காக நாவலுக்கு முருகனின் பெயரைத் தலைப்பாக வைத்திருக்க வேண்டும்.
பொழுதுபோக்கிற்கான துப்பறியும் கதைகளும், மலிவான காதல்கதைகளும் எழுதப்பட்டு வந்த அந்தக் காலத்தில் இப்படி ஒரு யதார்த்தமான கிராமிய வாழ்க்கையை வேங்கடரமணி நாவலாக எழுதியிருப்பது முன்னோடியான இலக்கியச் செயல்பாடாகும்.
••
January 9, 2022
ஒளிமலர்
பிரபு மயிலாடுதுறை

ஒரு பெரிய கிராமம். அதில் உலகம் கண்ட மகத்தான கலைஞர்களில் ஒருவன் வாசம் புரிகிறான். அவனது குடும்பம். நேசிக்கும் மனைவி . கலையார்வம் மிக்க வாரிசுகள். நூற்றுக்கணக்கான அவனது பண்ணைத் தொழிலாளர்கள். பெரிய மாளிகை. பெரிதினும் பெரிது கேட்கும் அவனது மனநிலை. சாரட்டு வண்டிகள். கிராமத்துத் திருவிழாக்கள் என உலகின் மகத்தான கலைஞன் எத்தனையோ ஆண்டுகளுக்கு முன்னால் வாழ்ந்த வாழ்க்கையைத் தன் சொற்கள் மூலம் என்றுமுள காலத்தில் நிறுவியிருக்கிறார் திரு. எஸ். ராமகிருஷ்ணன் அவர்கள்.
பித்தேறிய தன் மனத்தின் சங்கேதங்களைத் தொடர்ந்த படி வாழ்வின் அனைத்து போகங்களையும் நோக்கிச் செல்கிறார் இளம் டால்ஸ்டாய். குடி, சூதாட்டம், பெண் என அனைத்தையும் அறிய முற்படுகிறார். இராணுவத்தில் பணி புரிந்து சாகசமான வாழ்முறை மூலம் சாவினையும் சாவினுக்கு ஒப்பான தருணங்களையும் மிக அண்மையில் பார்த்து அறிகிறார் லேவ். எனினும் அவர் அகத்தில் ஏதோ ஒன்று அவரைப் போகங்களைக் கடந்து செல்ல தூண்டிக் கொண்டே இருக்கிறது. அது புறவயமாக வரையறுக்கத் தக்கதாக இல்லை. அது தன்னை அவ்வாறு வெளிப்படுத்திக் கொள்ளவில்லை; அடையாளப்படுத்திக் கொள்ளவில்லை.
தன்னை முழுமையாக நேசிக்கும் பெண்ணைச் சந்திக்கிறார். மண்ணுக்குத் தன்னை முற்றிலும் ஒப்படைக்கும் விதையைப் போன்றவளாக இருக்கிறாள் அப்பெண். வானத்துச் சூரியனை நேசிக்கும் ஏரிக்கரை மலரைப் போன்றவளாக இருக்கிறாள் அவள். டால்ஸ்டாயின் அகத்தில் சுடரும் ஒளியைக் காண்பவளாகவும் அதனை ஆராதிப்பவளாகவும் இருக்கிறாள் அவள். எனினும் டால்ஸ்டாய்க்கு தான் முன்னர்ப் பழகிய பெண்களைப் போன்ற இன்னொரு பெண்ணே அவள். காதல் என்ற உணர்வை அவள் டால்ஸ்டாய் உடனான உறவின் மூலம் முழுமையாக அடைகிறாள் அந்தப் பெண். டால்ஸ்டாய்க்கு அந்த உணர்வு முதல் அறிமுகம் ஆகிறது.
டால்ஸ்டாய் பின்னர்ச் சோஃபியாவை மணக்கிறார். தனது ரகசியங்கள் அனைத்தையும் சோஃபியாவிடம் முன்வைக்கிறார். அது அவளுக்கு வேதனையளிக்கிறது. உலகின் மகத்தான கலைஞன் தன் கணவன் என்ற உணர்வும் ஒரு பெண்ணாகத் தன் மனம் உணரும் துயரங்களும் அவளை வாழ்நாள் முழுதும் அலைக்கழிக்கிறது.
டால்ஸ்டாய், அக்ஸின்யா, திமோஃபி என்ற முக்கோணச் சித்தரிப்பில் நான் மகாபாரதத்தின் சூரிய பகவான், குந்தி, கர்ணன் என்ற கோணம் வெளிப்பட்டதாக நினைக்கிறேன். சிறுவனான திமோஃபி குதிரை லாடத்தால் தாக்குவது என்பதிலும் மகாபாரதம் உப பிரதியாக இருக்கிறது என்று தோன்றியது.
யஸ்னயா போல்யானாவிற்கு ஜிப்சிகள் வருகை புரிவதை சொல்லும் பகுதி மிக அழகாக இருக்கிறது. பண்ணை மட்டுமே உலகம் என இருக்கும் மனிதர்கள் மத்தியில் ஜிப்சிகள் வண்ணமயமான உடைகளுடனும் ஆபரணங்களுடனும் உள் நுழைவது என்பது குறியீட்டு ரீதியில் பல அர்த்தங்கள் பொதிந்தது. அவர்களது மாயங்கள் எல்லா மனித மனத்திலும் இருக்கும் கண்டடையப் படாமலே போகும் மாயங்களே.
அக்ஸின்யா டால்ஸ்டாயிடம் அர்ப்பணம் ஆனதைப் போலத் தனது படைப்பாற்றலுக்குத் தன்னை முழுதாகக் கொடுக்கிறார் டால்ஸ்டாய். அவரது அக ஒளி அவரை வழிநடத்துகிறது. மானுடத்தின் மகத்தான ஆக்கங்களைப் படைக்கத் தொடங்குகிறார் டால்ஸ்டாய்.
தன்னைச் சூழ்ந்திருக்கும் சக மனிதர்களுக்காகத் தான் வாழும் ஒட்டு மொத்த உலகுக்காகச் செயல்படத் தொடங்குகிறார் டால்ஸ்டாய். அவரது அகம் கனியத் தொடங்குகிறது. திமோஃபி சில ஆண்டுகள் பண்ணையை விட்டு ஓடிப் போய் விட்டு மீண்டும் வீடு திரும்புகிறான். பண்ணையை விட்டு ஓடியவன் ஒருவன். திரும்பி வரும் போது ஓடிப் போனவனாகத் திமோஃபி இல்லை. வேறு ஒருவனாக மாற்றம் பெற்றிருக்கிறான். இந்தப் பகுதி எனக்கு ஜீசஸ் சொல்லும் கதையான ‘’The lost son” ஐ நினைவுபடுத்தியது. புனைவு ரீதியில் இதை டால்ஸ்டாய்க்கும் பொருந்தும் படியாகக் காட்டியுள்ளார் எஸ். ரா.
பல்வேறு ஆழமான நுட்பமான உணர்ச்சிகள் பிரவாகிக்கும் தருணங்கள் நாவல் முழுதும் நிரம்பியுள்ளன. ஒரு விதை மண்ணைக் கீறி தளிராக எழுந்து வான் நோக்குவது போல வாசக மனம் இந்த நாவலை வாசித்த பின்னும் அதன் உணர்வுநிலைகளைப் பின் தொடர்ந்து கொண்டிருக்கிறது.
•••
January 8, 2022
சலனமாகாத காதல்
ஆதித்ய ஸ்ரீநிவாஸ்

மண்டியிடுங்கள் தந்தையே வாசித்தேன். டால்ஸ்டாயின் கதையெனத் தோன்றியது, டால்ஸ்டாயின் காதல் கதை எனத் தோன்றியது, திமோஃபியின் கதை எனத் தோன்றியது, திமோஃபிக்கும் டால்ஸ்டாய்க்குமான உறவு பற்றிய கதை எனத் தோன்றியது. ஆனால் இது அக்ஸின்யாவின் கதை. அக்ஸின்யாவில்தான் எதற்கும் சலனமாகாத காதல் திகழ்கிறது. முகங்களை சொற்களை மீறி ஆழ்மனதின் அலைகளை உணர்வதால் மட்டும் உணரப்படும் அன்பு அக்ஸியாவினுடையது.
இந்த அன்பினைச் சுற்றித்தான் நாவல் ஒரு வாழ்வை நெய்துக்காட்டுகிறது. டால்ஸ்டாயின் வாழ்க்கை, பண்ணையடிமைகள், திமோஃபி, ஓல்கா, சோஃபியா, ருஷ்யப் பஞ்சம் என நாவல் விரிந்தாலும் அதன் மையமென என் வாசிப்பில் நான் உணர்வது அக்ஸின்யாவின் அன்பினையே.
நாவலின் அரசியல்,பஞ்சம், ஓல்காவின் குழந்தை இறந்துபோவது, ஓல்கா இறப்பது வாழ்க்கையை திசையற்றதாக உணரச் செய்கிறது. திமோஃபியின் வாழ்க்கை காற்றில் அலைக்கழியும் சுடர்போல் அசைந்து குலைந்து பின் மெல்ல ஒழுங்குகொள்வது போல் தோற்றம் கொண்டு பின் மீண்டும் அணையத்துடிக்கும் சுடராக சிறுத்துப்போகிறது. ஒரு ஒளி தோன்றி சட்டென மறைவது போல். இதென்ன அமைப்பு என குழம்பச் செய்கிறது. பஞ்சம் உயிர்களை வாரிக்கொண்டு போவதும், ஒரு சிறுவன் தற்செயலாக இறப்பதும் அது ஒரு பெண்ணைக் குலைத்து அவள் இறப்பதும் வாழ்க்கை நம் சக்திக்கு மீறியதாக விரிவதன் நம் கட்டுக்குள் நிற்காமல் பெருகும் தன்மையுடன் இருப்பதை வலியுடன் காட்டுகிறது. இவ்விடத்தில் நம்மால் இயன்ற ஒன்று அன்புதான் எனத் தோன்றுகிறது.
டால்ஸ்டாயின் மீது திமோஃபி தன் தீர்ப்புகளை வைக்கிறான். சோஃபியா அவரை கண்காணிப்பவளாக இருக்கிறாள். வாசிக்கையில் எழுத்தாளர் டால்ஸ்டாய்க்கும் கவுன்ட் டால்ஸ்டய்க்குமான முரணை உணர்ந்தபடி வாசிக்கிறேன். என்னைமீறி அவர் முடிவுகள் மீது என் தீர்ப்புகளை வைக்கிறேன். ஆனால் நன்மை தீமை சரி தவறு கடந்ததாக எழுவது அக்ஸின்யாவின் அன்பு.
அக்ஸின்யாவின் கண்களில் திமோஃபியும் டால்ஸ்டாயை பார்ப்பதுடன் நாவல் முடிகிறது. தன் சமாதிக்கு லிவோச்சா வந்ததல்ல.. திமோஃபி அக்ஸின்யாவின் மனம் டால்ஸ்டாய் பற்றி உணர்ந்த விதத்தை உணர்ந்துகொண்டதே அவளை மகிழ்வித்திருக்கும். மேல்மனதின் மேலிருக்கும் உதடுகளில் பிறக்கும் சொற்களின் உலகில் எல்லோரும் வாழ்கிறார்கள். அக்ஸின்யா லிவோச்சாவின் ஆழ்மனதின் மணத்தை உணர்ந்தவளாய் அதன் பரிமளத்தில் நிறைவுற்று வாழ்ந்து மறைகிறாள். அந்த காதல் மனதின் முன் டால்ஸ்டாய் மண்டியிடுகிறார். அக்ஸின்யாவின் சமாதி முன் மண்டியிடும் தந்தையை காணும் திமோஃபி உணர்ந்துகொள்கிறான் எதை நோக்கி அக்ஸின்யா அன்பு செலுத்தினாள் என்பதை.
**
January 7, 2022
வெறும் வலை
மால்டாவிலுள்ள மீனவர்களின் வாழ்க்கையை விவரிக்கும் “Luzzu” படத்தை இயக்கியுள்ளார் அலெக்ஸ் காமிலேரி. இயக்குநரின் முதற்படமிது

தலைமுறையாக மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டு வரும் ஜெஸ்மார்க்கின் வழியே கதை சொல்லப்படுகிறது. அவன் வைத்துள்ள நாட்டுப்படகு அவனது தாத்தாவிற்குச் சொந்தமானது.
நவீன இயந்திர படகுகளும் புதிய கடல் விதிமுறைகளும் வந்தபிறகு மீன்பிடி தொழிலில் கள்ளச்சந்தை உருவாகிவிட்டது. அது ஜெஸ்மார்க்கிற்குப் பிடிக்கவில்லை. மேலும் படகுகள் அதிகாரிகளால் சீரற்ற முறையில் சோதனை செய்யப்படுகின்றன. அதிகாரிகள் மிரட்டி லஞ்சம் பெறுகிறார்கள். உள்ளூர் மீன் ஏலத்தினைச் சிலர் தங்கள் கட்டுப்பாட்டிற்குள் வைத்துக் கொண்டு கொள்ளை லாபம் பார்ப்பதுடன் கள்ளச்சந்தையினையும் உருவாக்குகிறார்கள்.
ஐரோப்பிய ஒன்றியத்தின் விதிகளின் படி கடலில் உள்ள சில அரிய வகை மீன்களைப் பிடிப்பது தடைசெய்யப்பட்டிருக்கிறது. அந்த மீன்கள் வலையில் அகப்பட்டால் கூட அவற்றைக் கடலில் திரும்ப விட்டுவிட வேண்டும் . ஆனால் சில மீனவர்கள் அவற்றை ரகசியமாக விற்பனை செய்து பணம் சம்பாதிக்கிறார்கள். அதற்கு ஏலம் விடுபவர்கள் உறுதுணை.
ஜெஸ்மார்க் தனது பழைய நாட்டுப்படகுடன் கடலுக்குச் செல்கிறான். கிடைத்த மீன்களை விற்று வாழ்க்கையை நடத்துகிறான். கஷ்டமான சூழ்நிலை. அவனது இளம்மனைவி டெனிஸ் கைக்குழந்தையை வைத்துக் கொண்டு வேலைக்குப் போய் வருகிறாள்.

போதுமான தாய்ப்பால் கிடைக்காமல் குழந்தைக்குச் சத்துக்குறைபாடு ஏற்படுகிறது. . அதற்குச் சத்தான உணவு மற்றும் பால்பொருட்கள் வாங்கித் தர வேண்டும். சிறப்பு மருத்துவரிடம் காட்ட வேண்டும் என்கிறார் பெண் மருத்துவர்.
இதற்குப் பணத்திற்கு என்ன செய்வது என ஜெஸ்மார்க் கவலைப்படுகிறான். ஆனால் டெனிஸ் தனது அம்மாவின் உதவியை நாடுகிறாள். இது ஜெஸ்மார்க்கிற்குப் பிடிக்கவில்லை. அவளோ நெருக்கடியான நிலையில் பிள்ளையைத் தனது அம்மாவால் மட்டுமே காப்பாற்ற முடியும் என்று அவனுடன் சண்டையிட்டு குழந்தையுடன் சென்றுவிடுகிறாள்
கடலுக்குச் செல்லும் ஜெஸ்மார்க் வலையில் மீன்கள் விழுவதில்லை. ஏமாற்றத்துடன் கரை திரும்புகிறான். அவன் கொண்டுவரும் மீன்களை ஏலத்தில் விடுகிறவன் நிராகரிக்கிறான். ஆகவே சம்பாதிக்க வேண்டித் தெரிந்த சில்லறை வேலைகளில் ஈடுபடுகிறான்.
இந்தச் சூழலில் மீன் தொழிலின் குற்றவியல் உலகம் அவனைக் கொஞ்சம் கொஞ்சமாக உள்ளிழுத்துக் கொள்ள ஆரம்பிக்கிறது. ஜெஸ்மார்க் தவறான பாதையில் செல்ல ஆரம்பிக்கிறான். இதில் நிறையப் பணம் கிடைக்கிறது. ஆனால் அவனது மனைவிக்கு அவனது இந்தப் புதிய வாழ்க்கை பிடிக்கவில்லை.
படம் முழுவதும் அவனது படகு ஒரு குறியீடு போலவே காட்டப்படுகிறது. படகின் ஒருபக்கம் ஏற்பட்டுள்ள கசிவைச் சரிசெய்ய அவனுக்குப் பணம் தேவைப்படுகிறது. அவன் குழந்தையாக இருந்தபோது அவனது காலடித் தடத்தை அந்தப் படகில் தந்தை பதித்திருக்கிறார். அது போலவே ஒரு காட்சியில் ஜெஸ்மார்க்கும் தனது மகனின் காலடித்தடத்தைப் பதிவு செய்கிறான். ஆனால் அந்தப் படகை நம்பி வாழ முடியாது என்பது அவனுக்கு நன்றாகப் புரிந்துவிடுகிறது. முடிவில் படகை விற்றுவிட்டு ஒரு வேன் வாங்குகிறான். கள்ளச்சந்தையில் அதைப் பயன்படுத்த ஆரம்பிக்கிறான்.

ஏமாற்றமான மனநிலையில் ஜெஸ்மார்க் மீனவர்களுடன் உரையாடும் காட்சி சிறப்பானது. அதில் அவர்கள் காலமாற்றம் கடல் வாழ்க்கையில் ஏற்படுத்தியுள்ள விளைவுகளைப் பற்றிப் பேசிக் கொள்கிறார்கள். கவலைப்படுகிறார்கள். மீனவர்களுக்குத் தரப்படும் நலத்திட்டங்கள் பற்றியும் அது தவறாகப் பயன்படுத்தப்படுவது பற்றியும் ஆதங்கத்துடன் உரையாடுகிறார்கள்.
ஒரு காட்சியில் ஜெஸ்மார்க் குழந்தையைக் காணுவதற்காக மாமியார் வீட்டிற்குச் செல்லும் போது அவள் அவமானப்படுத்தித் துரத்துவதும், கோபத்துடன் வீட்டிற்குள் நுழைந்து உறங்கும் குழந்தையைக் கையில் ஏந்திக் கொஞ்சுவதும் அழகான காட்சி. இது போலவே வீட்டில் நடக்கும் விசேசத்தின் போது அது தனக்குப் பிடிக்கவில்லை என்பதை ஜெஸ்மார்க் வெளிப்படுத்தும் விதம். இரண்டும் மிகச்சிறப்பாக உருவாக்கப்பட்டிருக்கிறது
தனக்கு விருப்பமில்லாத விஷயத்தில் ஒருவன் ஈடுபடும் போது இப்படியான அவமானங்களைச் சந்திக்கவே நேரிடும். தொழிலும் குடும்பமும் ஒரே நேரத்தில் அவனைத் துரத்துகின்றன.
ஜெஸ்மார்க்கின் படகு சரிசெய்யப்படும் போது புதிய வாழ்க்கையை அவன் துவக்கக் கூடும் என்றே நாம் நம்புகிறோம். ஆனால் அது சாத்தியமில்லை என்று உணர்ந்து அவனாகப் படகை விற்பனை செய்யக் கொண்டு செல்லும் போது நாமும் அந்த வேதனையைப் பகிர்ந்து கொள்கிறோம். இந்த நெருக்கத்தை உருவாக்கியதே படத்தின் சிறப்பு.

படகிலுள்ள மரக்கண்கள் மனதை உறுத்துகின்றன. அந்தக் கண்கள் அர்த்தமில்லாத உலகத்தை உற்று நோக்குகின்றன. எதையோ சொல்கின்றன.
ஒரு காட்சியில் மீன் ஏலமிடுகிறவனுடன் சண்டையிட்டுத் தான் பிடித்த மீன்களைத் தானே விற்பனை செய்யக் கடை கடையாகக் கொண்டு செல்கிறான் ஜெஸ்மார்க். எவரும் அதை வாங்க தயராகயில்லை. அவரது நிர்கதி கடல்வாழ்க்கை இன்று கைமாறிப்போய்விட்டது என்பதை நன்றாகப் புரிய வைக்கிறது.
படம் பார்த்துக் கொண்டிருக்கும் போது பல இடங்களில் ஹெமிங்வேயின் கடலும் கிழவனும் நாவல் நினைவிற்கு வந்தது. சாண்டியாகோ இப்படித் தான் வெறும் வலையுடன் பல நாட்கள் வீடு திரும்புகிறான். இளவயது சாண்டியாகோ போலவே ஜெஸ்மார்க் தோன்றுகிறான்.
தனது குழந்தையைத் தன்னோடு வைத்துக் கொண்டு அதற்குத் தேவையான உணவும் மருத்துவப் பராமரிப்புகளும் தர வேண்டும் என்று ஜெஸ்மார்க் விரும்புகிறான். சம்பாத்தியமில்லாத அவனால் அது இயலாது என்று அவனது மனைவி நினைக்கிறாள். இந்த எதிர்நிலையைப் படம் சரியாக வளர்த்தெடுத்திருக்கிறது
இயல்பான நிகழ்வுகளின் வழியே விரியும் திரைக்கதை இதன் கூடுதல் சிறப்பு. இயலாமையின் உச்சத்தில் தான் அவன் குற்றவுலகிற்குள் செல்கிறான். பின்பு அவனிடம் தான் தவறு செய்கிறோம் என்ற உணர்வேயில்லை. அந்த உலகிற்குள் தனது இடத்தை உறுதியாக்கிக் கொள்ளவே முயலுகிறான்.
படத்தின் முக்கியக் கதாபாத்திரங்கள் யாவரும் உண்மையான மீனவர்களே. கதாநாயகனாக நடித்துள்ள ஜெஸ்மார்க் சிக்லுனா மால்டா மீனவரே. மீன் ஏலமிடும் காட்சி உண்மையாகப் படமாக்கப்பட்டிருக்கிறது ஒளிப்பதிவாளர் லியோ லெஃபெவ்ரே கடற்காட்சிகளை, இரவுக் காட்சிகளை வெகுசிறப்பாகப் படமாக்கியிருக்கிறார்.

எங்களைப் போன்ற வீடற்ற மனிதர்களை நிலம் ஏற்றுக் கொள்வதில்லை. ஆனால் கடல் ஏற்றுக் கொள்கிறது. இந்தப் படகு தான் எனது வீடு. இதில் எங்கெங்கோ பயணம் செய்திருக்கிறேன் என்று ஒரு காட்சியில் ஜெஸ்மார்க்கின் நண்பன் சொல்கிறான். அவன் தன் சந்தோஷத்தை உணவின் வழியே வெளிப்படுத்துகிறான். அவர்களுக்குள் உருவாகும் நட்பு அழகானது.
இத்தாலிய நியோ ரியலிச படங்களின் பாணியில் உருவாக்கப்பட்டுள்ள நவீன கலைப்படைப்பு என்ற விதத்தில் இப்படம் முக்கியமானது என்பேன்.
••
ரயில் கதைகள்
தமிழில் எழுதப்பட்ட ரயில் சார்ந்த சிறுகதைகளைத் தொகுத்து சா. கந்தசாமி ஒரு தொகைநூல் கொண்டு வந்திருக்கிறார். இதனை சாகித்ய அகாதமி வெளியிட்டுள்ளது. இந்தத் தொகுப்பில் எனது ரயில் நிலையத்தில் ஒருவன் சிறுகதை இடம் பெற்றுள்ளது.
ரஸ்கின் பாண்ட் இது போல ரயில் கதைகள் கொண்ட ஆங்கிலத் தொகுப்பு நூல் ஒன்றை கொண்டுவந்திருக்கிறார். அது போல ஒன்றை தமிழில் தொகுக்க வேண்டும் என்று கந்தசாமி விரும்பினார். இந்நூல் அவரது மறைவிற்குப் பிறகு தற்போது வெளியாகியுள்ளது,

சங்கீதக்காரனின் வீடு
இசையை மையமாகக் கொண்டு தமிழில் எழுதப்பட்ட நாவல்களில் கே.பி.நீலமணியின் புல்லின் இதழ்கள் தனிச்சிறப்பு கொண்டது.

இசைக்கலைஞரின் வாழ்க்கையை விவரிக்கும் நாவலின் ஊடாக அந்தக் கால சுவாமிமலை மற்றும் திருவிடைமருதூரின் சித்தரிப்புகள் அழகாக விவரிக்கப்பட்டுள்ளது.
இசைக்கலைஞர்களுக்குக் காந்தியின் மீதிருந்த ஈடுபாடு. கச்சேரியில் சுதேசி பாடல்களைப் பாடுவது, அதற்கு உருவான எதிர்ப்பு எனச் சுதந்திரத்திற்கு முந்தைய காலகட்டத்தின் சமூகச் சூழலையும் நீலமணி நுண்மையாக விவரித்திருக்கிறார்
ஹரி என்ற இளம்பாடகன் சாதகம் செய்வதில் தான் நாவல் துவங்குகிறது. திருவிழா மற்றும் திருமண வீடுகளுக்குப் பெட்ரோமாக்ஸ் விளக்கு தூக்கிச் சுமக்கும் பெரியசாமியின் பிள்ளையான கண்ணப்பன் எப்படி ஹரியாக மாறினான் என்ற கடந்தகாலம் விவரிக்கப்படுகிறது.
நாவலின் ஒரு அத்தியாயத்தில் நாதஸ்வர சக்கரவர்த்தி ராஜரத்தினம் பிள்ளை வருகிறார். பூங்குளம் மைனர் வீட்டுக் கல்யாணத்திற்கு ராஜரத்தினம் பிள்ளை வாசிக்க வருவதும் அவரை எப்படிக் கவனித்துக் கொண்டார்கள் என்பதையும் நீலமணி விரிவாக எழுதியிருக்கிறார்.

பெட்ரோமாக்ஸ் தூக்கிச் செல்வதில் உதவி செய்ய வந்த கண்ணப்பன் நாதஸ்வர இசையைக் கேட்க வேண்டும் என்பதற்காகத் தனது வேலையை மறந்துபோய்விடுகிறான். இதனால் விளக்குகள் அணைந்து இருட்டாகி சம்பந்தி வீட்டோர் கோவித்துக் கொள்கிறார்கள்.
தன் மகனின் செயலுக்காகப் பெரியசாமி மைனரிடம் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறார். ஆனால் மைனர் இவ்வளவு இசை ஆர்வம் கொண்ட மகனைப் பெற்றிருக்கிறாயே என்று பாராட்டுகிறார். இப்படி இசையில் பித்துக் கொண்ட கண்ணப்பன் தனது ஒன்பது வயதில் சுப்பராம பாகவதரால் கண்டுபிடிக்கப்பட்டு இசை கற்றுக் கொள்ள அவரது சீடனாக அவரது வீட்டிற்குள் வருகிறான். பத்து ஆண்டுகள் முறையாக இசை கற்றுக் கொள்கிறான். ஹரியைத் தனது சொந்த மகனைப் போலவே பாகவதர் நடத்துகிறார்.
ஆனால் ஒரு நாள் அவர்கள் வீட்டிற்கு வருகை தரும் நாராயணன் மாமா வேற்று சாதி பையனை இப்படி வீட்டிற்குள் அனுமதித்து ஒன்றாகச் சாப்பாடு போடுவது தோஷம் என்று சொல்லி அவனை வெளியே உட்காரவைத்து சாப்பாடு போட வைக்கிறார். மோசமாக நடத்துகிறார். இது ஹரிக்கு மனவேதனையை அளிக்கிறது.
வீடு திரும்பும் பாகவதர் நடந்த விஷயங்களை அறிந்து தானும் வீட்டுக்கு வெளியே அமர்ந்து சாப்பிடுகிறேன் என்கிறார். தெரியாமல் நடந்துவிட்டது என்று மனைவி மன்னிப்பு கேட்கிறார். இது சங்கீதக்காரன் வீடு. இங்கே சாதி மதம் கிடையாது. எல்லோரும் ஒண்ணு தான் என்கிறார் பாகவதர். நாராயணனுக்கும் பாகவதருக்கும் வாக்குவாதம் நடக்கிறது. இசையில் தனக்கு வாரிசு ஹரி தான் என்று சொல்லி தனக்குத் தரப்படும் அதே மரியாதை ஹரிக்கும் தரப்பட வேண்டும் என்று உறுதியாகச் சொல்கிறார் பாகவதர். இதனால் அவரது மகளின் திருமணப் பேச்சு நின்று போகிறது.
நாராயணன் ஆத்திரத்தில் இவ்வளவு பேசும் நீங்கள் சங்கீதம் படிக்க வந்த பெண்ணை இரண்டாந்தாரமாகக் கட்டிக் கொண்ட ஆள் தானே என்று குற்றம் சாட்டுகிறார். தனது சபலத்தை நினைத்து வருந்தும் சுப்பராம பாகவதர் கடந்த கால நாட்களை நினைத்துப் பார்க்கிறார்.
சுந்தரி அவரிடம் இசை கற்க வருகிறாள். அவளது இசைத்திறமையும் அழகும் அவரை மயக்குகின்றன. அரங்கேற்றத்தின் போதே அவளைத் தனக்குச் சொந்தமாக்கிவிட வேண்டும் என்று பாகவதர் முடிவு செய்துவிடுகிறார். சுந்தரியிடம் குருதட்சிணையாக அவளையே கேட்கிறார். அவளும் மறுக்கவில்லை. ஆனால் அதன்பிறகு கச்சேரியில் பாட மாட்டேன் என்கிறாள். இந்தத் திருமண உறவை ஏற்கத் தயங்கிய பாகவதரின் மனைவி லட்சுமி மெல்லச் சுந்தரியின் மனதைப் புரிந்து கொண்டு உதவிகள் செய்ய ஆரம்பிக்கிறாள். பாகவதரின் இரண்டு குடும்பங்கள் வேறுவேறு ஊரில் வசிக்கிறார்கள். இருவருக்கும் பிள்ளைகள் பிறக்கிறார்கள். பாகவதர் அங்கும் இங்குமாக வசிக்கிறார்
ஒரு நாள் பாகவதருக்கு உடல் நலமில்லாமல் போகிறது. அவருக்குப் பதிலாக ஹரி கச்சேரி செய்ய அழைக்கப்படுகிறான். ஹரியின் அரங்கேற்றம் நாவலின் முக்கியமான பகுதி. அந்தக் கச்சேரி மிக அழகாக விவரிக்கப்பட்டிருக்கிறது. ஹரியின் உன்னத இசையைக் கண்டு வியந்த கலெக்டர் ஒரு தங்கச் சங்கிலி பரிசாக அளிக்கிறார். கச்சேரி கேட்க வந்த வித்வான்கள் வியந்து பாராட்டுகிறார்கள். கூண்டு வண்டி ஒன்றிலிருந்து தன் சிஷ்யனின் பாடலை ரசித்துக் கேட்டு மெய் மறந்து போகிறார் பாகவதர். ஹரி தான் பெற்ற பரிசுகள் அத்தனையும் குருவிற்குக் காணிக்கையாகச் செலுத்துகிறான். ‘
பாகவதரின் வீட்டில் அவரது மகளுக்கு ஹரியைப் பிடிக்கவில்லை. ஆனால் அவனது சங்கீதம் பிடித்திருக்கிறது. அதைப் பற்றி விவரிக்கும் நீலமணி அன்பு காட்டுவதற்கும் வெறுப்பதற்கும் காரணம் தேவையில்லை. சிலரது மனது அப்படித் தான் செயல்படுகிறது என்று எழுதியிருக்கிறார்.
மாயாண்டி கியாஸ் லைட் கம்பெனி என்ற நிறுவனம், அதில் பெரியசாமி வேலை செய்வது. அவர்கள் திருவிழா மற்றும் விசேச வீடுகளுக்குப் பெட்ரோமாக்ஸ் சுமந்து போவது. அதில் கிடைத்த வருமானத்திலுள்ள வாழ்க்கை. பெரியசாமியின் இரண்டாவது மனைவி. அவள் ஹரி மீது காட்டும் வெறுப்பு என அந்தகால மனிதர்களின் இயல்பு துல்லியமாகச் சித்தரிக்கப்பட்டிருக்கிறது
இசைதட்டுகள் அறிமுகமான காலத்தில் பாகவதரையும் கிராமபோன் ரிக்கார்டு கொடுப்பதற்காக அழைக்கிறார்கள். அவர் பாடிய ரிக்கார்ட் விற்பனையில் பெரிய சாதனை நிகழ்த்துகிறது. ஆனால் அந்தக் கம்பெனியோடு அவருக்குப் பிரச்சனை ஏற்படுகிறது. இன்னொரு முறை அவர் தன்னை மறந்து பாடும் போது ஒலிப்பதிவு செய்கிறவர் சரியில்லை என்று மறுபடி பாடச் சொல்லவே பாகவதர் கோவித்துக் கொண்டுவிடுகிறார். இப்படிச் சில நிகழ்வுகள் விவரிக்கப்படுகின்றன. பாகவதர் ரிக்கார்ட் மூலம் கிடைத்த பணத்தைக் கொண்டு ஒரு பஜனை மடம் ஒன்றைக் கட்டுகிறார். இசை நிகழ்ச்சிகள் நடத்த உதவி செய்கிறார். அன்னதானம் வழங்குகிறார்.
சுந்தரியைப் போன்ற அபூர்வமான இசைக்கலைஞர்கள் இப்படிக் குருவின் கட்டளையால் தன்னை அழித்துக் கொள்கிறார்கள். இந்த நாவலைப் படிக்கும் போது சௌந்தரம் என்ற இசைக்கலைஞரின் வாழ்க்கை வரலாறு நினைவில் வந்து போனது. சுந்தரி உடல்நலத்தைக் கெடுத்துக் கொண்டதோடு மேடையில் பாடுவதையும் நிறுத்திக் கொண்டுவிடுகிறாள்.
ஹரியின் அரங்கேற்றத்தின் பின்பு அவனைப் பாராட்டுவதற்காகத் தங்கபேடா ஒன்றைத் தருகிறாள். அது விலைமதிப்பில்லாத பரிசு என்று சொல்கிறார் பாகவதர். அந்தப் பரிசு அவனை உருவாக்கிய உங்களுக்குத் தான் என்று கேலி செய்கிறாள் சுந்தரி.
மராட்டியக் குடும்பத்திலிருந்து இசை கற்க வரும் காந்தாமணி. அவரது அம்மா கங்காபாய் இருவரின் வாழ்க்கை அந்தகாலச் சினிமா பாணியில் எழுதப்பட்டிருக்கிறது
நீலமணி முறையாக இசை பயின்றவர். வயலின் இசைக்கலைஞர். ஆகவே நாவலில் கர்நாடக சங்கீதத்தின் மேன்மையைச் சிறப்பை வெகு அழகாக விவரித்திருக்கிறார். அது போல இசைக்கலைஞர்களின் குடும்ப வாழ்க்கை. அன்றைய சமூகச் சூழல். இசைக்கலைஞர்களுக்கு இருந்த வரவேற்பு. சபாக்களின் நிலை இவற்றையும் சிறப்பாக எழுதியிருக்கிறார்
ஹரி காவேரி ஆற்றுக்குக் குளிக்கப்போவது. ரயிலடியில் சென்று பாகவதர் வருவதற்காகக் காத்திருப்பது. சினிமா நோட்டீஸ் விநியோகம் செய்தபடியே செல்லும் மாட்டுவண்டி. நிறையப் பாட்டுகள் உள்ள அக்காலச் சினிமா. குடும்பத்துடன் பாகவதர் சினிமாவிற்குப் போன நினைவு என மறைந்து போன வாழ்வின் பக்கங்களை நாவல் ஒரு ஆவணப்படம் போலக் காட்சிப்படுத்தியிருக்கிறது.
மாறிவரும் சூழலினை புரிந்து கொண்டு சாதி மதக்கட்டுபாடுகளைக் கடந்து வாழ முற்படுகிறார் பாகவதர். அதை அவரது சமூகம் ஏற்க மறுக்கிறது. உறவினர்கள் கோவித்துக் கொள்கிறார்கள். கர்நாடக சங்கீதம் பாடும் அவர் கதர் உடுத்துகிறார். ஓய்வான நேரத்தில் ராட்டை நூற்கிறார்.. நிகழ்ச்சியில் ஒன்றிரண்டு தேசிய பாடல்களைப் பாடுகிறார். இதனைக் காரணம் காட்டி தன்னைக் கைது செய்து சிறையில் அடைத்தால் அங்குள்ள கைதிகளுக்குப் பாட்டுப் பாடுவேன் என்கிறார். சுப்பராம பாகவதர் அபூர்வமான கதாபாத்திரம்.
பாகதவரை தனது சொந்த தந்தையைப் போலவே ஹரி நினைக்கிறான். அவருக்குத் தான் வாழ்நாள் முழுவதும் கடமைப்பட்டவன் என்று கருதுகிறான். அவரோ அவனது சந்தோஷங்களைச் சொந்த பெற்றோர்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று அனுப்பி வைக்கிறார். கண்ணப்பனாக இருந்த போதும் அவனை வீடு புரிந்து கொள்ளவில்லை. ஹரியாகப் புகழ்பெற்ற போதும் அவனது பணத்தை மட்டுமே குறியாக நினைக்கிறது.
பாகவதரின் மனைவி லட்சுமி இசைஞானம் கொண்டவள். அவள் பாகவதர் கண்ணப்பனை தன்னோடு அழைத்து வந்து ஹரியாக மாற்றியதை வரவேற்கிறாள். அவனையும் தனது பிள்ளையைப் போலவே வளர்க்கிறாள். அவனது இசைத்திறனை உலகம் பாராட்டும் போது மகிழ்ச்சி அடைகிறாள். கணவன் வேறு ஒரு பெண்ணை மணந்து கொண்டு அவளுடன் வாழுவதைக் கூட அவள் எதிர்க்கவில்லை. அவள் கருணையின் வடிவமாகவே சித்தரிக்கபடுகிறாள்.
இரட்டை மாட்டு வண்டியில் செல்லும் பயணம். டூரிங் டாக்கீஸ், காவேரி ஆற்றங்கரை. சுவாமி மலை சிறிய கிராமமாகப் பச்சை பசேல் என வயல்வெளிகளும் தென்னஞ்சோலைகளும் சூழ இருந்த நிலை. மின்சாரம் வராத நாட்கள், அன்றைய நாடக கொட்டகைகள் இவற்றை நீலமணி சுவைபட எழுதியிருக்கிறார். பிடில் பஞ்சு அண்ணா அரியதொரு கதாபாத்திரம். பணம் காசிற்காக இசையை விற்கக்கூடாது. அது ஆத்மார்த்தமான விஷயம் என்று சொல்கிறார் பாகவதர். அதை அவரது மகள் சுசீலா ஏற்றுக் கொள்ளவில்லை. பாராட்டுகளை விடவும் பணம் தான் முக்கியம் என்று நினைக்கிறாள். இந்த நெருக்கடி இன்று இசைக்கலைஞர்கள் குடும்பத்தில் நீடிக்கவே செய்கிறது.
நாவலின் ஒரு இடத்தில் ஹரியும் பாகவதரும் இணைந்து பாடுகிறார்கள். தந்தையும் மகனும் தழுவிக் கொண்டு நிற்பதைப் போல இரண்டு தம்பூராக்களும் சுருதி சுத்தமாக நன்கு இணைந்து வீடு முழுவதும் நாத ஒலி எழுப்பின என அழகாக எழுதியிருக்கிறார் நீலமணி.
ஊரின் கோபம் மிகும் போதெல்லாம் பாகவதர் தனது இசையின் வழியே தான் பதில் சொல்கிறார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையிலும் அவர் பாடவே விரும்புகிறார். இசை தான் அவரது வாழ்க்கை. மனிதர்கள் யாவரும் இறைவனின் இசை வடிவங்களே.
தான் பாடுவதை நிறுத்திக் கொண்டாலும் பாட்டுத் தன்னை விடுவதாகயில்லை என்று சொல்லி ஒரு இடத்தில் சுந்தரி தன்னை மறந்து பாடுகிறாள். அந்தக் காட்சியை வாசிக்கும் நமக்கும் அவளது பாடல் கேட்கத் துவங்குகிறது. அது தான் நாவலின் வெற்றி.
••
January 6, 2022
சிறப்பு சலுகை
பெருந்தொற்று பரவல் மீண்டும் வேகமெடுத்துள்ள காரணத்தால் புதிய லாக்டவுன் விதிகள் அறிவிக்கபட்டுள்ளன. சென்னைப் புத்தகக் கண்காட்சி ஒத்திவைக்கபட்டுள்ளது. இந்தச் சூழலில் புதிய நூல்களை வாங்க விரும்பும் வாசகர்களுக்காக தேசாந்திரி பதிப்பகம் சிறப்பு சலுகை அறிவித்துள்ளது
தேசாந்திரி இணையதளத்திலிருந்து புத்தகங்களை ஆன்லைன் மூலம் பெற்றுக் கொள்ளலாம்.
தேசாந்திரி பதிப்பகத்தின் அலுவலகம் சாலிகிராமத்திலுள்ளது. நேரில் இந்த நூல்களைப் பெற்றுக் கொள்ள முடியும்

இந்த ஆண்டு வெளியான புதிய நூல்கள்





டான்டூன் என்ற எறும்பு
ரியா ரோஷன் என்ற ஏழாம் வகுப்பு மாணவி டான்டூனின் கேமிரா நூலை வாசித்து எழுதியுள்ள குறிப்பு
•••

பெயர் : ரியா ரோஷன்
வகுப்பு: ஏழாம் வகுப்பு
வயது :12
இடம்: சென்னை
புத்தகம் : டான்டூனின் கேமிரா
ஆசிரியர் : எஸ். ராமகிருஷ்ணன்
பதிப்பகம் : தேசாந்திரி
விலை: Rs.150

2021 இல் நான் படித்த முதல் புத்தகம் – நீல சக்கரம் கொண்ட மஞ்சள் பேருந்து. இந்த வருடத்தில் நான் படிக்கும் முதல் தமிழ் புத்தகம் – டான்டூனின் கேமிரா. இரண்டுமே எஸ். ரா அவர்கள் எழுதியது தான்.
இது எறும்பு உலகத்தின் கதை டான்டூன் என்ற ஒரு எறும்பு தான் இந்தக் கதையின் ஹீரோ. அது தன்னுடைய தந்தையைப் போல ஒரு போட்டோகிராபர் ஆக வேண்டும் என்று ஆசைப்படுகிறது.
அதற்காக ஷெகர் என்ற ஒரு பூனையிடம் போட்டோகிராபி கற்றுக்கொள்கிறது அது எப்படி ஒரு பெரிய போட்டோகிராபர் ஆகுகிறது, என்பது தான் இந்தக் கதையே.
எனக்குப் போட்டோகிராபி மிகவும் பிடிக்கும். அதனால் இந்தப் புத்தகம் எனக்குப் பிடித்திருந்தது.
இந்தப் புத்தகத்தில் எனக்குப் பிடித்த விஷயங்கள்:
• டான்டூனின் அம்மா அவனிடம் “ கால்களைப் பலர் பயன்படுத்துவதேயில்லை. வசதி அதிகமானவுடன் நடப்பதை விட்டுவிடுகிறார்கள். கால்கள் முடங்க ஆரம்பித்தால் உடலில் நோய் உருவாக ஆரம்பித்துவிடும். மனிதர்களுக்குக் கால்களின் அருமை தெரியவில்லை.” என்று சொல்வார்கள். இது ஒரு முக்கியமான பாயிண்ட்.
•டான்டூனின் அம்மா “துப்பாக்கியை விடவும் வலிமையானது கேமிரா. அதைக் கவனமாகக் கையாள வேண்டும்.” என்று சொல்வார். இந்த வார்த்தைகள் மிகவும் அழகாக இருந்தது.
• டான்டூனின் தாத்தா, அவனிடம் போட்டோ எடுப்பது என்பது உண்மையைப் பதிவுசெய்யும் கலை. நீ எப்போதும் உண்மையின் பக்கம் தான் இருக்க வேண்டும்.” என்றும் சொல்வார். இதுவும் மிகவும் அழகாக இருந்தது.
• ஷெகர் டான்டூனிடம் “கஷ்டப்படாமல் எதையும் கற்றுக்கொள்ள முடியாது.” என்று சொல்லும். இது மிகவும் உண்மை.
• மனிதர்கள் துரித உணவுகள் சாப்பிடுவதைக் குறைக்க வேண்டும்.
நாமும் எறும்புகள் போல நிறைய உடற்பயிற்சி செய்ய வேண்டும் என்று இந்தக் கதையில் வருவது பிடித்துள்ளது.
• “புகையில்லாத வாகனங்களை உருவாக்க வேண்டும். சாக்கடையாக உள்ள ஆற்றைத் தூய்மைப்படுத்த வேண்டும். நிறைய மரங்கள் நடப்பட வேண்டும். இதை விடவும் நகரைத் தூய்மையாக வைத்துக் கொள்வது நமது கடமை என மக்கள் உணர வேண்டும்.” என்ற கருத்துக்கள் நன்றாக இருந்தது.
.
இந்தப் புத்தகம் ஒரு திரைப்படத்தைப் போல இருந்தது. ஷெகரும் டான்டூனும் வரும் comedy scene இல் நான் பயங்கரமாகச் சிரித்தேன்.
இதில் உள்ள ஓவியங்கள் மிகவும் அழகாக இருந்தன. ஒரு modern art போல வரையப்பட்டு இருந்தது. இந்த ஓவியங்களை வரைந்தவர் கே.ஜி.நரேந்திர பாபு.
இது அவசியம் படிக்க வேண்டிய ஒரு புத்தகம்.
S. Ramakrishnan's Blog
- S. Ramakrishnan's profile
- 657 followers
