சங்கீதக்காரனின் வீடு
இசையை மையமாகக் கொண்டு தமிழில் எழுதப்பட்ட நாவல்களில் கே.பி.நீலமணியின் புல்லின் இதழ்கள் தனிச்சிறப்பு கொண்டது.

இசைக்கலைஞரின் வாழ்க்கையை விவரிக்கும் நாவலின் ஊடாக அந்தக் கால சுவாமிமலை மற்றும் திருவிடைமருதூரின் சித்தரிப்புகள் அழகாக விவரிக்கப்பட்டுள்ளது.
இசைக்கலைஞர்களுக்குக் காந்தியின் மீதிருந்த ஈடுபாடு. கச்சேரியில் சுதேசி பாடல்களைப் பாடுவது, அதற்கு உருவான எதிர்ப்பு எனச் சுதந்திரத்திற்கு முந்தைய காலகட்டத்தின் சமூகச் சூழலையும் நீலமணி நுண்மையாக விவரித்திருக்கிறார்
ஹரி என்ற இளம்பாடகன் சாதகம் செய்வதில் தான் நாவல் துவங்குகிறது. திருவிழா மற்றும் திருமண வீடுகளுக்குப் பெட்ரோமாக்ஸ் விளக்கு தூக்கிச் சுமக்கும் பெரியசாமியின் பிள்ளையான கண்ணப்பன் எப்படி ஹரியாக மாறினான் என்ற கடந்தகாலம் விவரிக்கப்படுகிறது.
நாவலின் ஒரு அத்தியாயத்தில் நாதஸ்வர சக்கரவர்த்தி ராஜரத்தினம் பிள்ளை வருகிறார். பூங்குளம் மைனர் வீட்டுக் கல்யாணத்திற்கு ராஜரத்தினம் பிள்ளை வாசிக்க வருவதும் அவரை எப்படிக் கவனித்துக் கொண்டார்கள் என்பதையும் நீலமணி விரிவாக எழுதியிருக்கிறார்.

பெட்ரோமாக்ஸ் தூக்கிச் செல்வதில் உதவி செய்ய வந்த கண்ணப்பன் நாதஸ்வர இசையைக் கேட்க வேண்டும் என்பதற்காகத் தனது வேலையை மறந்துபோய்விடுகிறான். இதனால் விளக்குகள் அணைந்து இருட்டாகி சம்பந்தி வீட்டோர் கோவித்துக் கொள்கிறார்கள்.
தன் மகனின் செயலுக்காகப் பெரியசாமி மைனரிடம் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறார். ஆனால் மைனர் இவ்வளவு இசை ஆர்வம் கொண்ட மகனைப் பெற்றிருக்கிறாயே என்று பாராட்டுகிறார். இப்படி இசையில் பித்துக் கொண்ட கண்ணப்பன் தனது ஒன்பது வயதில் சுப்பராம பாகவதரால் கண்டுபிடிக்கப்பட்டு இசை கற்றுக் கொள்ள அவரது சீடனாக அவரது வீட்டிற்குள் வருகிறான். பத்து ஆண்டுகள் முறையாக இசை கற்றுக் கொள்கிறான். ஹரியைத் தனது சொந்த மகனைப் போலவே பாகவதர் நடத்துகிறார்.
ஆனால் ஒரு நாள் அவர்கள் வீட்டிற்கு வருகை தரும் நாராயணன் மாமா வேற்று சாதி பையனை இப்படி வீட்டிற்குள் அனுமதித்து ஒன்றாகச் சாப்பாடு போடுவது தோஷம் என்று சொல்லி அவனை வெளியே உட்காரவைத்து சாப்பாடு போட வைக்கிறார். மோசமாக நடத்துகிறார். இது ஹரிக்கு மனவேதனையை அளிக்கிறது.
வீடு திரும்பும் பாகவதர் நடந்த விஷயங்களை அறிந்து தானும் வீட்டுக்கு வெளியே அமர்ந்து சாப்பிடுகிறேன் என்கிறார். தெரியாமல் நடந்துவிட்டது என்று மனைவி மன்னிப்பு கேட்கிறார். இது சங்கீதக்காரன் வீடு. இங்கே சாதி மதம் கிடையாது. எல்லோரும் ஒண்ணு தான் என்கிறார் பாகவதர். நாராயணனுக்கும் பாகவதருக்கும் வாக்குவாதம் நடக்கிறது. இசையில் தனக்கு வாரிசு ஹரி தான் என்று சொல்லி தனக்குத் தரப்படும் அதே மரியாதை ஹரிக்கும் தரப்பட வேண்டும் என்று உறுதியாகச் சொல்கிறார் பாகவதர். இதனால் அவரது மகளின் திருமணப் பேச்சு நின்று போகிறது.
நாராயணன் ஆத்திரத்தில் இவ்வளவு பேசும் நீங்கள் சங்கீதம் படிக்க வந்த பெண்ணை இரண்டாந்தாரமாகக் கட்டிக் கொண்ட ஆள் தானே என்று குற்றம் சாட்டுகிறார். தனது சபலத்தை நினைத்து வருந்தும் சுப்பராம பாகவதர் கடந்த கால நாட்களை நினைத்துப் பார்க்கிறார்.
சுந்தரி அவரிடம் இசை கற்க வருகிறாள். அவளது இசைத்திறமையும் அழகும் அவரை மயக்குகின்றன. அரங்கேற்றத்தின் போதே அவளைத் தனக்குச் சொந்தமாக்கிவிட வேண்டும் என்று பாகவதர் முடிவு செய்துவிடுகிறார். சுந்தரியிடம் குருதட்சிணையாக அவளையே கேட்கிறார். அவளும் மறுக்கவில்லை. ஆனால் அதன்பிறகு கச்சேரியில் பாட மாட்டேன் என்கிறாள். இந்தத் திருமண உறவை ஏற்கத் தயங்கிய பாகவதரின் மனைவி லட்சுமி மெல்லச் சுந்தரியின் மனதைப் புரிந்து கொண்டு உதவிகள் செய்ய ஆரம்பிக்கிறாள். பாகவதரின் இரண்டு குடும்பங்கள் வேறுவேறு ஊரில் வசிக்கிறார்கள். இருவருக்கும் பிள்ளைகள் பிறக்கிறார்கள். பாகவதர் அங்கும் இங்குமாக வசிக்கிறார்
ஒரு நாள் பாகவதருக்கு உடல் நலமில்லாமல் போகிறது. அவருக்குப் பதிலாக ஹரி கச்சேரி செய்ய அழைக்கப்படுகிறான். ஹரியின் அரங்கேற்றம் நாவலின் முக்கியமான பகுதி. அந்தக் கச்சேரி மிக அழகாக விவரிக்கப்பட்டிருக்கிறது. ஹரியின் உன்னத இசையைக் கண்டு வியந்த கலெக்டர் ஒரு தங்கச் சங்கிலி பரிசாக அளிக்கிறார். கச்சேரி கேட்க வந்த வித்வான்கள் வியந்து பாராட்டுகிறார்கள். கூண்டு வண்டி ஒன்றிலிருந்து தன் சிஷ்யனின் பாடலை ரசித்துக் கேட்டு மெய் மறந்து போகிறார் பாகவதர். ஹரி தான் பெற்ற பரிசுகள் அத்தனையும் குருவிற்குக் காணிக்கையாகச் செலுத்துகிறான். ‘
பாகவதரின் வீட்டில் அவரது மகளுக்கு ஹரியைப் பிடிக்கவில்லை. ஆனால் அவனது சங்கீதம் பிடித்திருக்கிறது. அதைப் பற்றி விவரிக்கும் நீலமணி அன்பு காட்டுவதற்கும் வெறுப்பதற்கும் காரணம் தேவையில்லை. சிலரது மனது அப்படித் தான் செயல்படுகிறது என்று எழுதியிருக்கிறார்.
மாயாண்டி கியாஸ் லைட் கம்பெனி என்ற நிறுவனம், அதில் பெரியசாமி வேலை செய்வது. அவர்கள் திருவிழா மற்றும் விசேச வீடுகளுக்குப் பெட்ரோமாக்ஸ் சுமந்து போவது. அதில் கிடைத்த வருமானத்திலுள்ள வாழ்க்கை. பெரியசாமியின் இரண்டாவது மனைவி. அவள் ஹரி மீது காட்டும் வெறுப்பு என அந்தகால மனிதர்களின் இயல்பு துல்லியமாகச் சித்தரிக்கப்பட்டிருக்கிறது
இசைதட்டுகள் அறிமுகமான காலத்தில் பாகவதரையும் கிராமபோன் ரிக்கார்டு கொடுப்பதற்காக அழைக்கிறார்கள். அவர் பாடிய ரிக்கார்ட் விற்பனையில் பெரிய சாதனை நிகழ்த்துகிறது. ஆனால் அந்தக் கம்பெனியோடு அவருக்குப் பிரச்சனை ஏற்படுகிறது. இன்னொரு முறை அவர் தன்னை மறந்து பாடும் போது ஒலிப்பதிவு செய்கிறவர் சரியில்லை என்று மறுபடி பாடச் சொல்லவே பாகவதர் கோவித்துக் கொண்டுவிடுகிறார். இப்படிச் சில நிகழ்வுகள் விவரிக்கப்படுகின்றன. பாகவதர் ரிக்கார்ட் மூலம் கிடைத்த பணத்தைக் கொண்டு ஒரு பஜனை மடம் ஒன்றைக் கட்டுகிறார். இசை நிகழ்ச்சிகள் நடத்த உதவி செய்கிறார். அன்னதானம் வழங்குகிறார்.
சுந்தரியைப் போன்ற அபூர்வமான இசைக்கலைஞர்கள் இப்படிக் குருவின் கட்டளையால் தன்னை அழித்துக் கொள்கிறார்கள். இந்த நாவலைப் படிக்கும் போது சௌந்தரம் என்ற இசைக்கலைஞரின் வாழ்க்கை வரலாறு நினைவில் வந்து போனது. சுந்தரி உடல்நலத்தைக் கெடுத்துக் கொண்டதோடு மேடையில் பாடுவதையும் நிறுத்திக் கொண்டுவிடுகிறாள்.
ஹரியின் அரங்கேற்றத்தின் பின்பு அவனைப் பாராட்டுவதற்காகத் தங்கபேடா ஒன்றைத் தருகிறாள். அது விலைமதிப்பில்லாத பரிசு என்று சொல்கிறார் பாகவதர். அந்தப் பரிசு அவனை உருவாக்கிய உங்களுக்குத் தான் என்று கேலி செய்கிறாள் சுந்தரி.
மராட்டியக் குடும்பத்திலிருந்து இசை கற்க வரும் காந்தாமணி. அவரது அம்மா கங்காபாய் இருவரின் வாழ்க்கை அந்தகாலச் சினிமா பாணியில் எழுதப்பட்டிருக்கிறது
நீலமணி முறையாக இசை பயின்றவர். வயலின் இசைக்கலைஞர். ஆகவே நாவலில் கர்நாடக சங்கீதத்தின் மேன்மையைச் சிறப்பை வெகு அழகாக விவரித்திருக்கிறார். அது போல இசைக்கலைஞர்களின் குடும்ப வாழ்க்கை. அன்றைய சமூகச் சூழல். இசைக்கலைஞர்களுக்கு இருந்த வரவேற்பு. சபாக்களின் நிலை இவற்றையும் சிறப்பாக எழுதியிருக்கிறார்
ஹரி காவேரி ஆற்றுக்குக் குளிக்கப்போவது. ரயிலடியில் சென்று பாகவதர் வருவதற்காகக் காத்திருப்பது. சினிமா நோட்டீஸ் விநியோகம் செய்தபடியே செல்லும் மாட்டுவண்டி. நிறையப் பாட்டுகள் உள்ள அக்காலச் சினிமா. குடும்பத்துடன் பாகவதர் சினிமாவிற்குப் போன நினைவு என மறைந்து போன வாழ்வின் பக்கங்களை நாவல் ஒரு ஆவணப்படம் போலக் காட்சிப்படுத்தியிருக்கிறது.
மாறிவரும் சூழலினை புரிந்து கொண்டு சாதி மதக்கட்டுபாடுகளைக் கடந்து வாழ முற்படுகிறார் பாகவதர். அதை அவரது சமூகம் ஏற்க மறுக்கிறது. உறவினர்கள் கோவித்துக் கொள்கிறார்கள். கர்நாடக சங்கீதம் பாடும் அவர் கதர் உடுத்துகிறார். ஓய்வான நேரத்தில் ராட்டை நூற்கிறார்.. நிகழ்ச்சியில் ஒன்றிரண்டு தேசிய பாடல்களைப் பாடுகிறார். இதனைக் காரணம் காட்டி தன்னைக் கைது செய்து சிறையில் அடைத்தால் அங்குள்ள கைதிகளுக்குப் பாட்டுப் பாடுவேன் என்கிறார். சுப்பராம பாகவதர் அபூர்வமான கதாபாத்திரம்.
பாகதவரை தனது சொந்த தந்தையைப் போலவே ஹரி நினைக்கிறான். அவருக்குத் தான் வாழ்நாள் முழுவதும் கடமைப்பட்டவன் என்று கருதுகிறான். அவரோ அவனது சந்தோஷங்களைச் சொந்த பெற்றோர்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று அனுப்பி வைக்கிறார். கண்ணப்பனாக இருந்த போதும் அவனை வீடு புரிந்து கொள்ளவில்லை. ஹரியாகப் புகழ்பெற்ற போதும் அவனது பணத்தை மட்டுமே குறியாக நினைக்கிறது.
பாகவதரின் மனைவி லட்சுமி இசைஞானம் கொண்டவள். அவள் பாகவதர் கண்ணப்பனை தன்னோடு அழைத்து வந்து ஹரியாக மாற்றியதை வரவேற்கிறாள். அவனையும் தனது பிள்ளையைப் போலவே வளர்க்கிறாள். அவனது இசைத்திறனை உலகம் பாராட்டும் போது மகிழ்ச்சி அடைகிறாள். கணவன் வேறு ஒரு பெண்ணை மணந்து கொண்டு அவளுடன் வாழுவதைக் கூட அவள் எதிர்க்கவில்லை. அவள் கருணையின் வடிவமாகவே சித்தரிக்கபடுகிறாள்.
இரட்டை மாட்டு வண்டியில் செல்லும் பயணம். டூரிங் டாக்கீஸ், காவேரி ஆற்றங்கரை. சுவாமி மலை சிறிய கிராமமாகப் பச்சை பசேல் என வயல்வெளிகளும் தென்னஞ்சோலைகளும் சூழ இருந்த நிலை. மின்சாரம் வராத நாட்கள், அன்றைய நாடக கொட்டகைகள் இவற்றை நீலமணி சுவைபட எழுதியிருக்கிறார். பிடில் பஞ்சு அண்ணா அரியதொரு கதாபாத்திரம். பணம் காசிற்காக இசையை விற்கக்கூடாது. அது ஆத்மார்த்தமான விஷயம் என்று சொல்கிறார் பாகவதர். அதை அவரது மகள் சுசீலா ஏற்றுக் கொள்ளவில்லை. பாராட்டுகளை விடவும் பணம் தான் முக்கியம் என்று நினைக்கிறாள். இந்த நெருக்கடி இன்று இசைக்கலைஞர்கள் குடும்பத்தில் நீடிக்கவே செய்கிறது.
நாவலின் ஒரு இடத்தில் ஹரியும் பாகவதரும் இணைந்து பாடுகிறார்கள். தந்தையும் மகனும் தழுவிக் கொண்டு நிற்பதைப் போல இரண்டு தம்பூராக்களும் சுருதி சுத்தமாக நன்கு இணைந்து வீடு முழுவதும் நாத ஒலி எழுப்பின என அழகாக எழுதியிருக்கிறார் நீலமணி.
ஊரின் கோபம் மிகும் போதெல்லாம் பாகவதர் தனது இசையின் வழியே தான் பதில் சொல்கிறார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையிலும் அவர் பாடவே விரும்புகிறார். இசை தான் அவரது வாழ்க்கை. மனிதர்கள் யாவரும் இறைவனின் இசை வடிவங்களே.
தான் பாடுவதை நிறுத்திக் கொண்டாலும் பாட்டுத் தன்னை விடுவதாகயில்லை என்று சொல்லி ஒரு இடத்தில் சுந்தரி தன்னை மறந்து பாடுகிறாள். அந்தக் காட்சியை வாசிக்கும் நமக்கும் அவளது பாடல் கேட்கத் துவங்குகிறது. அது தான் நாவலின் வெற்றி.
••
S. Ramakrishnan's Blog
- S. Ramakrishnan's profile
- 659 followers
