S. Ramakrishnan's Blog, page 105
December 14, 2021
சிறிய உண்மைகள்
போர்ஹெஸ் தனது The Book of Sand கதையில் NEITHER THE BOOK NOR THE SAND HAS ANY BEGINNING OR END என்கிறார்
வாசிப்பின் போது சில வரிகள், சில நிகழ்வுகள். நினைவுகள் மனதில் ஆழமாகப் பதிந்துவிடும். அவற்றைச் சேகரித்து வைத்துக் கொள்வேன். இவை எழுத்தாளனுக்கான கச்சாப் பொருட்கள்.
எழுத்தின் ஆதாரங்களைப் பற்றிப் பேசும் இந்தக் கட்டுரைகள் எனது இணையதளத்தில் வெளியானவை.
தேசாந்திரி பதிப்பகம் வெளியிடும் இந்நூல் டிசம்பர் 25 மாலை ரஷ்ய கலாச்சார மையத்தில் வெளியாகிறது

புத்தக வெளியீட்டு விழா
டிசம்பர் 25 சென்னை ரஷ்ய கலாச்சார மையத்தில் நடைபெறவுள்ள எனது பத்து புதிய நூல்களின் வெளியீட்டுவிழா சம்பிரதாயமான முறையிலிருந்து மாறுபட்டு ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது
தலைமை, வாழ்த்துரை என எதுவும் கிடையாது. பத்து நூல்களுக்கும் தனி உரைகள் நிகழ்த்தப்படப்போவதில்லை
நிகழ்வின் துவக்கத்தில் புதிய நூல்களை வெளியிடுகிறோம். அன்பிற்குரியவர்கள் அதைப் பெற்றுக் கொள்கிறார்கள்

எனது புதிய நாவலை எனது நண்பரும் தேர்ந்த இலக்கியவாசகருமான திருப்புகழ் IAS அவர்கள் வெளியிட்டு உரை நிகழ்த்துகிறார்
அதைத் தொடர்ந்து நாவலின் சில பகுதிகளை நான் வாசிக்க இருக்கிறேன்

மண்டியிடுங்கள் தந்தையே நாவல் உருவான விதம் பற்றி அகரமுதல்வன் என்னுடன் கலந்துரையாடல் நிகழ்த்துகிறார்

அடுத்த அமர்வாக காந்தியின் நிழலில் நூலை காந்தி கல்வி நிலையத்தின் சரவணன் பெற்றுக் கொண்டு என்னுடன் கலந்துரையாடல் செய்ய இருக்கிறார்
டான்டூனின் கேமிரா என்ற சிறார் நூல் வண்ணத்தில் வெளியாகிறது. புகழ்பெற்ற ஒவியர் நரேந்திரபாபு இதற்கான ஒவியங்களை வரைந்து தந்திருக்கிறார்


இந்த நூல் பார்வையற்றவர்கள் வாசிப்பதற்காக பிரையில் முறையில் தனி நூலாகவும் வெளியாகிறது.
தேசாந்திரி பதிப்பகம் நடத்தும் இந்த நிகழ்வில் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டுகிறேன்
••••
ரகசியத்தின் பாதையில்
Souad என்ற எகிப்திய படத்தைப் பெண் இயக்குநரான அய்டன் அமீன் இயக்கியுள்ளார். 2021ல் வெளியான இப்படம் ஆஸ்கார் விருதுக்கான அயல்மொழி பிரிவில் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது
பேஸ்புக், டிக்டாக், டிவிட்டர், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக ஊடகங்களின் வருகைக்குப் பிறகு இளந்தலைமுறையினருக்கென ஒரு ரகசிய வாழ்க்கை உருவாகியிருக்கிறது. ஆன்லைன் வழியாகக் காதல் கொள்வதும் அதில் ஏற்படும் சிக்கல்களும் முந்தைய தலைமுறை அறியாத விஷயம்.

டீனேஜர்கள் இணையவெளியில் எவருடன் நட்பாக இருக்கிறார்கள். யாருடன் சாட் செய்கிறார்கள். எந்த வீடியோவை, புகைப்படத்தை ரசிக்கிறார்கள். எதைப் பகிர்ந்து கொள்கிறார்கள். என்ன பொருட்களை ஆன்லைனில் வாங்குகிறார்கள். என்பதைக் குடும்பத்தினர் அறிந்து கொள்ள முடியாது. பாஸ்வேர்டுகளின் உலகை பெற்றோர்களால் புரிந்துகொள்ள முடியாது
வீடும் சமூகமும் அனுமதிக்க மறுத்த விஷயங்கள் யாவும் இணையத்தில் எளிதாகக் கிடைக்கின்றன. மாயச்சுழல் போல ஒரு விசை அவர்களை உள்ளிழுத்துக் கொண்டுவிடுகிறது. இந்தச் சுழலுக்குள் சிக்கி மீளமுடியாதவர்கள் நிறைய இருக்கிறார்கள்.
அது போன்ற டீனேஜர்களில் ஒருத்தியான சோகேத்தின் கதையைத் தான் படம் விவரிக்கிறது. டீனேஜ் பெண்களின் அக உலகை இவ்வளவு நெருக்கமாக இதுவரை திரையில் யாரும் சித்தரித்ததில்லை. மிக உண்மையாக, நுட்பமாக உணர்ச்சிப்பூர்வமாகக் காட்சிப்படுத்தியிருக்கிறார்கள்.
டீனேஜர்களை வழிநடத்துவது இணையவெளியில் பகிரப்படும் இசை, சினிமா, விளையாட்டு, விளம்பரங்களே. அவர்கள் தன்னை வேறு ஒருவராக அதில் காட்டிக் கொள்கிறார்கள். பேஸ்புக்கில் உள்ள புனைபெயர்களை வாசித்துப் பாருங்கள். அந்த விநோதம் புரியும். தன்னை தானே ரசித்துக் கொள்ளும் இவர்களின் ஆசைகளும் எதிர்பார்ப்பும் நிமிஷத்துக்கு நிமிஷம் மாறிக் கொண்டேயிருக்க கூடியது.

பெருநகரம் துவங்கி சிறு கிராமம் வரை செல்பி எடுப்பது இயல்பாகிவிட்டது. பேஸ்புக்கில் நேரம் செலவிடுவது வாடிக்கையாகிவிட்டது. உலகெங்கும் இது தான் சூழல். இந்த மாயவெளி பெண்களுக்கு புதிய சுதந்திரத்தை அளித்த அதே நேரம் அவர்களின் மீதான வன்முறைக்கருவியாகவும் மாறிவிட்டிருக்கிறது.
இப்படம் அந்த உலகை தான் பேசுகிறது. பதினாறு வயது பெண் தன் வயதை மறைத்து ஏன் யாரோ முகமறியாத ஒருவனின் நட்பை நாடுகிறாள். அவனுக்காக ஏங்குகிறாள், தற்கொலை செய்து கொள்கிறாள என்ற கேள்வியை எழுப்புகிறது
சமூக ஊடக செயல்பாட்டில் எது சரி எது தவறு என்ற நிலைப்பாட்டினை படம் எடுக்கவில்லை. மாறாக எப்படி இது போன்ற பிம்பவெளியால் இளம்பெண்கள். காவு வாங்கப்படுகிறார்கள் என்பதையே சுட்டிக்காட்டுகிறது.
இளைஞனான அகமது இன்ஜினியரிங் படித்துவிட்டு வேலைக்குச் செல்லாமல் பேஸ்புக்கில் வீடியோக்களைப் பகிர்ந்து கொண்டும் விதவிதமான ஸ்டோரி போட்டு லைக்குகளை அள்ளிக் கொண்டும் காதல் நாயகனாக வலம் வருகிறான். அவன் அலெக்சாண்டிரியாவில் வசிக்கிறான். செல்போன் தான் அவனது உலகம். உறக்கத்திலும் அவன் கைகள் தானே போனை எடுத்துப் பேசுகின்றன. அவனுக்கு ஏராளமான பெண் தோழிகள். அவர்களுடன் அரட்டை அடிப்பதே வாழ்க்கையென இருக்கிறான்.
ஜகாசிக் என்ற சிற்றூரில் வசிக்கும் மருத்துவ மாணவியும் தீவிர மதநம்பிக்கை கொண்ட குடும்பத்தில் பிறந்தவளுமான சோகேத் பேஸ்புக் மூலம் அகமதுவின் நட்பைப் பெறுகிறாள். அவனது வீடியோக்களை ரசித்துப் பாராட்டுகிறாள். இந்த நட்பு மெல்லக் காதலாக மாறுகிறது.
அவனைத் திருமணம் செய்து கொள்ளப் போவதாகக் கனவு காணுகிறாள். ஆனால் அவனோ வேறு ஒரு பெண்ணைக் காதலிப்பதைப் பற்றி அவளுடனே பேசுகிறான். காதலியின் படங்களைப் பகிர்ந்து கொள்கிறான். அவனை எப்படியாவது தன்வசப்படுத்திக் கொள்ள வேண்டும் என்ற முனைப்பில் அவனுடன் ஃபோன் செக்ஸில் கூட ஈடுபடுகிறாள். அப்படியும் நெருக்கமாகயில்லை. இதனால் ஆத்திரமாகி அவனுடன் சண்டை போடுகிறாள். தனது ரகசிய காதலை குடும்பத்தினர் அறிந்துவிடாமல் ஒளித்துக் கொள்கிறாள். அவளது தோழிகளுக்குக் கூட உண்மை தெரியக்கூடாது என நினைக்கிறாள்.
ஒரு நாள் மூன்று இளம்பெண்களும் வீட்டில் ஒன்றுகூடி ரகசிய ஆசைகளைப் பகிர்ந்து கொள்கிறார்கள். அப்போது சோகேத் செக்ஸியாகப் போட்டோ எடுத்துப் பேஸ்புக்கில் போஸ்ட் போட வேண்டும் என்று ஆசைப்படுகிறாள். இதற்காக அவளும் தங்கையும் ஸ்டைலாக ஒப்பனை செய்து புகைப்படம் எடுத்துப் பகிருகிறார்கள்.
மதக்கட்டுபாடும் வீட்டின் அதிகாரமும் அவளுக்கு மூச்சுத் திணறச்செய்கின்றன. இதிலிருந்து விடுபட அவள் இணையவெளியில் சுதந்திரமாகச் சஞ்சரிக்கிறாள். டிஜிட்டல் மீடியா அவளது கனவுலகமாகிறது

மனக்குழப்பம் அதிகமான ஒரு நாளில் அகமது தன்னை நிராகரிப்பதைத் தாங்கிக் கொள்ளமுடியாமல் சோகேத் தற்கொலை செய்துவிடுகிறாள். இந்த அதிர்ச்சியைக் குடும்பத்தினரால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. அம்மா அழுது கரைகிறாள். அவளது தங்கை ரபாப் அக்காவின் செல்போனில் உள்ள போட்டோ மற்றும் வீடியோக்களை வைத்து அவளது ரகசிய வாழ்க்கையை அறிந்து கொள்கிறாள்.
அக்கா ரகசியமாகக் காதலித்த அகமதுவைக் காண அலெக்சாண்ட்ரியா புறப்படுகிறாள். அங்கே அவனுடன் ஒருநாளைச் செலவிடுகிறாள். இந்த நாளில் தன்னையே அவள் அக்காவாக உணருகிறாள். படத்தின் மிக அழகான பகுதியது
அவர்கள் ஒன்றாக ஷாப்பிங் மாலில் சுற்றுவதும். கடற்கரைப் பகுதியில் நடப்பதும், உணவகத்தில் சாப்பிடுவது. வானளாவிய கட்டிடங்கள் கொண்ட நகரத்தின் வழியாகக் காரில் பயணம் செய்வதும், பாலத்தில் நின்று வேண்டுதல் செய்வதும். முத்தம் கேட்பதும் என இழப்பின் துயரத்தை தாண்டி அவர்கள் இளம் காதலர் போலவே நடந்து கொள்கிறார்கள்.

அக்கா தன் வாழ்நாளில் சந்திக்காத அகமதுவைத் தங்கை சந்திக்கிறாள் என்பது அழகான முடிச்சு. இந்தச் சந்திப்பின் போது அகமதுவிடம் குற்றவுணர்வே இல்லை. அவனுக்குத் தெரிந்த பல பெண்களில் சோகேத்தும் ஒருத்தி. அவளது மரணத்திற்காகப் பிரார்த்தனை செய்யும் காட்சியில் கூட அவன் உண்மையாகப் பிரார்த்தனை செய்வதில்லை.
மார்க்கட்டுக்குப் போகும் போது கூடச் சோகேத்தின் அம்மா அவளது கையைப் பற்றிக் கொண்டு நடக்கிறாள். அந்த அளவு சோகேத் குடும்பத்திற்குள்ளாகவே வளருகிறாள். ஆனால் அதே சோகேத் பேருந்தில் உடன் வரும் பெண்ணிடம் தன்னைப் பற்றிக் கற்பனையாக ஏதோ சொல்கிறாள். தனது அடையாளத்தை வேறாகக் காட்டிக் கொள்ள முயலுகிறாள். இந்தக் குழப்பம் தான் அவளது பிரச்சனை.
சோகேத்தின் படுக்கையறையில் மூன்று பெண்களும் சேர்ந்து உரையாடுவதும் அவர்களின் அத்தை போல நடித்துக் காட்டுவதும் சிறப்பான காட்சி. சோகேத் கையிலுள்ள, ஃபோன் கேமரா என்பது அவளது அகத்தைக் காட்டும் கண்ணாடி போலாகிறது. அவள் கேமிராவுடன் பேசுகிறாள். கேமிராவிற்குத் தனது உடலைக் காட்டுகிறாள். கேமிரா முன்பு அழுகிறாள். செல்போன் கேமிரா என்பது வெறும் கருவியில்லை. அது ஒரு சாளரம். ரகசிய கதவு.

கதாபாத்திரங்களுடன் ஒருவராகக் கேமிரா கூடவே பயணிக்கிறது. நகரை அது காட்டும் அழகும். சமூக ஊடகவெளியை பிரதிபலிக்கும் விதமும் சிறப்பாக உள்ளது. சிறந்த இசையும் படத்தொகுப்பும் பாராட்டிற்குரியது.
இளமைப் பருவத்தின் கொந்தளிப்புகளையும் சமூக ஊடகங்களில் அது வெளிப்படும் விதத்தையும் அசலாகப் பதிவு செய்துள்ளதில் இப்படம் முக்கியமானதாகிறது.
December 12, 2021
மண்டியிடுங்கள் தந்தையே
தேசாந்திரி பதிப்பகம் சார்பில் வெளியாகவுள்ள எனது புதிய நாவல் மண்டியிடுங்கள் தந்தையே பற்றிய காணொளி
சென்னை ரஷ்ய கலாச்சார மையத்தில் டிசம்பர் 25 சனிக்கிழமை மாலை ஆறுமணிக்கு புதிய நூல்களின் வெளியீட்டு விழா நடைபெறுகிறது
கார்க்கியின் பாட்டி
மாக்சிம் கார்க்கி தனது வாழ்க்கை வரலாற்றை மூன்று பகுதிகளாக எழுதியிருக்கிறார். மூன்றும் மிகச் சுவாரஸ்யமான புத்தகங்கள். இதில் எனது குழந்தைப் பருவம் அற்புதமாக எழுதப்பட்டிருக்கிறது. தனது தந்தையின் மரணத்தைக் கார்க்கி எதிர்கொண்ட விதமும் பாட்டியோடு மேற்கொண்ட கப்பல் பயணத்தைப் பற்றிய நினைவுகளும் திரைப்படம் போல நம் கண்முன்னே விரிகின்றன.

கார்க்கியின் தந்தை அவரை எதற்காகவும் அழக்கூடாது என்று பழக்கியிருந்தார். ஆகவே தந்தை இறந்த போதும் அவருக்கு அழுகை வரவில்லை. ஒரு மழைநாளில் தந்தை இறந்த போது பாட்டி அவரிடம் கடைசியாகத் தந்தையை ஒரு முறை பார்த்துக் கொள். இனி அவரைப் பார்க்கவே முடியாது என்கிறார். அது ஏன் எனக் கார்க்கிக்குப் புரியவில்லை. ஏன் தனது தந்தையைச் சுற்றி இத்தனை பேர் அமர்ந்து அழுகிறார்கள். அவர் ஏன் பேசாமல் இருக்கிறார் என்று குழப்பமாக இருக்கிறது
மழையோடு தந்தையின் சவப்பெட்டியைப் புதைகுழியில் இறக்கி மண்ணைப் போட்டு மூடும் போது அந்தச் சவப்பெட்டி மீது ஒரு தவளை இருப்பதைக் கார்க்கி கவனிக்கிறார். அந்தத் தவளையும் சேர்த்து மண்ணைப் போட்டு மூடிவிடுகிறார்கள். அது தான் கார்க்கிக்கு வருத்தமாக இருக்கிறது.
அந்தத் தவளை என்னவாகும் என்று கேட்கிறார். தவளையைக் கடவுள் ஆசிர்வதிக்கட்டும் என்கிறார் பாட்டி.
முதன்முறையாக மரணத்தைச் சந்திக்கும் ஒரு சிறுவனின் மனத்தை எவ்வளவு துல்லியமாகக் கார்க்கி எழுதியிருக்கிறார் என்று வியப்பாக இருக்கிறது
இது போலவே அவர்கள் நீராவிக்கப்பலில் பயணம் செய்யும் போது பாட்டி சொல்கிறார்
“தவளைகளுக்காகக் கவலைப்படுகிறாயே.. உன் அம்மா இப்போது அநாதரவாக நிற்கிறாள். இனி அவளது வாழ்க்கை என்னவாகும் என்று நினைத்துப் பார்“ என்கிறார். கார்க்கிக்கு மெல்லத் துயரத்தின் வலி புரிய ஆரம்பிக்கிறது

அவர்கள் கப்பலில் பயணம் செய்து கொண்டிருக்கும் போது கார்க்கியின் தம்பி இறந்து போய்விடுகிறான். அவனது உடலை வெள்ளைத் துணியால் சுற்றி ஒரு மேஜையில் கிடத்தியிருக்கிறார்கள். பக்கத்திலிருந்து அந்த உடலைக் காணும் கார்க்கியின் பயப்படாதே என்கிறார் பாட்டி
சாராட்டாவ் என்ற இடத்தில் கப்பல் நிற்கிறது. குழந்தையின் உடலைச் சவப்பெட்டியில் ஏந்திக் கொண்டு பாட்டியே புதைக்கச் செல்கிறார். பருத்த உடல் கொண்ட அவர் மெதுவாக நடந்து செல்லும் காட்சியைக் கார்க்கி உணர்ச்சிப்பூர்வமாக எழுதியிருக்கிறார்.
அம்மாவை பாட்டி ஆறுதல்படுத்தும் விதமும் அம்மாவின் வேதனை படிந்த முகத்தையும் பற்றி கார்க்கி விவரிக்கும் போது அந்த ஈரமான கண்கள் நம் முன்னே தோன்றி மறைகின்றன.
வாழ்க்கை நெருக்கடிகளைப் பாட்டி எதிர்கொள்ளும் தைரியமும் உறுதியாக நடந்து கொள்ளும் முறையும் அழகாக எழுதப்பட்டிருக்கிறது. பாட்டி அவருக்கு நிறையக் கதைகள் சொல்கிறார். கப்பலில் வேலை செய்கிறவர்கள் அவளது கதையைக் கேட்கிறார்கள். பாராட்டுகிறார்கள்.
இதயத்தை வலுப்படுத்துவதற்குக் கதைகள் தேவைப்படுகின்றன என்கிறார் பாட்டி
உண்மையான மதிப்பீடு.
பாட்டிக்கு மிகவும் நீண்ட கூந்தல். சிக்குப் பிடித்த தனது கூந்தலைச் சீப்பால் சீவி சரி செய்யப் போராடுகிறாள். இதனால் அவளது முகம் சிவந்து போகிறது
தனது நீண்ட கூந்தலைப் பற்றிப் பாட்டி சொல்வது அசலான வார்த்தைகள்..
இது ஆண்டவனுடைய விருப்பத்தால் ஏற்பட்ட தண்டனை. இளமைப்பருவத்தில் நீண்ட கூந்தலை நினைத்துப் பெருமைப்பட்டுக் கொண்டிருந்தேன். ஆனால் முதுமையில் கூந்தலை வாரி முடிப்பதிலே பொழுது கழிந்துவிடுகிறது. இது ஒரு சாபக்கேடு போலிருக்கிறது
பாட்டியின் பேச்சும் சிரிப்பும் கதை சொல்லும் விதமும் அவளை ஒரு நண்பனைப் போலாக்கியது என்கிறார் கார்க்கி.
பாட்டி கொடுத்த தைரியமே தன்னைத் தேசம் முழுவதும் சுற்றியலைய வைத்தது. தன் எழுத்தின் ஊற்றுக்கண் பாட்டியே என்கிறார் கார்க்கி
சமையல் அறையைக் காப்பதற்கென ஒரு தெய்வம் இருப்பதாகப் பாட்டி நம்புகிறார். அது தான் உணவிற்குச் சுவையை உருவாக்குகிறது. அந்தத் தெய்வம் கோவித்துக் கொண்டுவிட்டால் வீட்டில் உணவு சமைக்க முடியாது என்கிறார்.
அவர்கள் வீடு மாறிப் போகும் போது அந்தத் தெய்வத்தைத் தன்னோடு வரும்படி பாட்டி அழைக்கிறாள். பின்பு ஒரு பெட்டியில் கடவுளையும் அழைத்துக் கொண்டு சென்றார்கள் என்கிறார் கார்க்கி
கார்க்கியின் கதைகளில் வரும் விநோதமான நிகழ்ச்சிகள்.. தைரியமான பெண் கதாபாத்திரங்கள்.. வாழ்க்கை நெருக்கடிகளை அச்சமின்றி எதிர்கொள்ளும் விதம். கஷ்டமும் போராட்டமுமான அன்றாட வாழ்க்கையின் நடுவேயும் உணவும் நடனமும் இசையுமாக வாழ்க்கையை அனுபவிக்கும் விதம் யாவும் பாட்டியின் வழியே அவருக்கு கிடைத்த வளங்கள்.
ஒரு எழுத்தாளன் எப்படி உருவாகிறான் என்பதை அறிந்து கொள்வதற்குக் கார்க்கியின் இந்த மூன்று தொகுதிகளும் சாட்சியமாக உள்ளன.
December 8, 2021
இனிய உதயம் இதழில்
எனது படைப்புகள் குறித்த ஒரு நாள் கருத்தரங்கம் பற்றி இனிய உதயம் இதழில் ஒரு கட்டுரை வெளியாகியுள்ளது

உதிர்ந்த கனவுகள்
A Fortunate Man என்ற டேனிஷ் திரைப்படத்தைப் பார்த்தேன். வெளியான படம். பில்லி ஆகஸ்ட் இயக்கியிருக்கிறார்

கதை 19 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் நடக்கிறது.
தீவிரமான மதப்பற்றுள்ள குடும்பம் ஒன்றில் பிறந்த பீட்டர் தந்தையைப் போல மதகுருவாக விரும்பாமல் பல்கலைக்கழகத்தில் சென்று பொறியியல் படிக்க விரும்புகிறான்.
இதை அவனது தந்தை ஏற்றுக் கொள்ளவில்லை. ஆனால் பிடிவாதமாக வீட்டை விட்டுப்புறப்படும் மகனுக்கு ஒரு பாக்கெட் கடிகாரத்தைப் பரிசாகத் தருகிறார் தந்தை.

அந்தக் கடிகாரம் அவன் தவறான பாதையில் செல்வதை நினைவுபடுத்தி அவன் மனதை மாற்றும் என்கிறார்
அந்தக் கடிகாரத்தை ஏற்க மறுக்கும் மகன் அவரை எதிர்த்து வாதிடுகிறான். இதனால் ஆத்திரமான. தந்தை அவனை அடித்துவிடுகிறார். பீட்டர் குடும்பத்தை விட்டு வெளியேறிப் போகிறான்.
அவனது வெளியேற்றம் ஒரு குறியீடு போலவே காட்டப்படுகிறது. உண்மையும் அப்படியானதே. மரபான சமூகம் மற்றும் பண்பாட்டுச் சூழலிலிருந்து விடுபட்ட புதிய தலைமுறையின் அடையாளம் போலவே பீட்டர் சித்தரிக்கப்படுகிறான்.
வறுமையான சூழலில் கல்வி பயில கோபன்ஹேகனுக்கு வருகிறான். வசதியில்லாத அறை. பகுதி நேர வேலை செய்து சம்பாதிக்க வேண்டிய நெருக்கடி. இதற்குள் தனது புதிய கனவுகளை வளர்த்தெடுக்கிறான் பீட்டர்.
ஆனால் அவன் நினைத்தது போல வாழ்க்கையில் வெற்றி பெறுவது எளிதாகயில்லை. தந்தையிடம் துவங்கும் படம் பீட்டர் தந்தையாகி உலகைப் புரிந்து கொள்வதுடன் நிறைவு பெறுகிறது. அந்த வகையில் ஒரு மனிதனின் முழு வாழ்க்கையை நாம் திரையில் காணுகிறோம்
டேனிஷ் நோபல் பரிசு பெற்ற எழுத்தாளர் ஹென்ரிக் பொன்டோப்பிடனின் நாவலைத்தான் படமாக்கியிருக்கிறார்கள். ஆகவே கதையின் செவ்வியல் தன்மை மிக அழகாகத் திரையிலும் வெளிப்பட்டுள்ளது.

கோபன்ஹேகனுக்குப் படிக்கச் செல்லும் பீட்டர் அங்கே நீர் மற்றும் காற்றாலையைப் பயன்படுத்தி மின்சாரத்தை உருவாக்கும் திட்டத்தை உருவாக்குகிறான். இதைச் செயல்படுத்தப் பலரையும் சந்திக்கிறான்.
இந்தத் திட்டம் செயல்வடிவம் கொண்டால் தேசம் மிகப் பெரிய வளர்ச்சியைப் பெறும் என்று நம்புகிறான். ஆனால் அவனுக்கு நிதியுதவி செய்ய யாரும் முன்வரவில்லை.
இந்நிலையில் உணவகத்தில் வேலை செய்யும் ஒரு பெண்ணுடன் நட்பாகப் பழகுகிறான். அவனது தேவைகளைப் புரிந்து கொண்டு பல்வேறு வகையிலும் அவள் உதவிகள் செய்கிறாள். ஆனால் அவளையும் தான் கடந்து செல்லும் ஒரு பாலம் போலவே பீட்டர் நினைக்கிறான்.
இந்நிலையில் ஒருநாள் பணக்கார குடும்பத்தைச் சேர்ந்த இவான் சாலமோனை சந்திக்கிறான். அவனிடம் நீர்மின்சாரத்திட்டத்தைப் பற்றி விவரிக்கிறான். இதில் ஆர்வம் கொண்ட இவான் உதவி செய்ய முன்வருகிறான்
நீர்மின்சக்தி திட்டத்தில் முதலீடு செய்வதற்காக வங்கி உரிமையாளர் பிலிப் சாலமனை சந்திக்க ஏற்பாடு செய்கிறான். இதற்காகப் பிலிப் சாலமன் வீட்டிற்குச் செல்லும் பீட்டர் தன்னை வசதியான குடும்பத்து ஆள் போலக் காட்டிக் கொள்ளப் புத்தாடைகள் அணிந்து செல்கிறான்.

அங்கே சாலமனின் இரண்டாவது மகளைச் சந்திக்கிறான். அவள் பீட்டர் மீது காதல் கொண்டவளாக நடந்து கொள்கிறாள். அதைத் தனக்குச் சாதமாக அவன் பயன்படுத்திக் கொள்கிறான்.
பின்னொரு முறை சாலமனின் மூத்தமகள் ஜேகோப்யை சந்திக்கிறான். அவளது அறிவாற்றலை வியந்து அவள் மீது காதல் கொள்கிறான். ஆனால் அவளை மணக்கவிரும்பும் கொண்டிருந்த யூதவணிகரான ஐபெர்ட் இதற்குத் தடையாக இருக்கிறார்.
தனது பிடிவாதமான நம்பிக்கை மற்றும் முயற்சிகளால் அவன் ஜேகோப்பை திருமணம் செய்யச் சம்மதம் பெறுகிறான். குதிரைவண்டியின் முன்னால் பீட்டர் ஒடுவது அவனது ஆளுமையின் அடையாளம். அந்தக் காட்சியில் அவன் தான் விரும்பியதை அடைய எதையும் செய்வான் என்பது தெளிவாக உணர்த்தப்படுகிறது
ஜேகோப் அவனது காதலை ஏற்றுக் கொண்டு திருமணத்திற்குச் சம்மதிக்கிறாள். ஆனால் அவர்கள் யூதகுடும்பம் என்பதால் மதம் குறுக்கீடு செய்கிறது. இதை எப்படிச் சமாளிப்பது எனத் தெரியாமல் பீட்டரின் குடும்ப உறுப்பினர்களைச் சந்தித்து அனுமதி கேட்கிறாள். அந்த முயற்சி தோல்வியில் முடிகிறது
இதற்கிடையில் பீட்டரின் நீர் மின்சக்தி திட்ட அறிக்கையை அரசின் தலைமை பொறியாளர் நிராகரித்துவிடுகிறார். இதனால் அரசின் ஒப்புதல் கிடைக்காமல் போகிறது. தற்காலிகமாக பீட்டர் ஆஸ்திரியாவிற்குச் சென்று பணியாற்ற வேண்டிய சூழல் உருவாகிறது.
இந்தப் பின்னடைவு அவனது கசப்புணர்வை, தனிமையை அதிகமாக்கிவிடுகிறது. இந்த நிலையில் ஒரு நாள் அவனைத் தேடி ஜேகோப் வருகிறாள். எதிர்பாராத அவளின் சந்திப்பும் அன்பும் பீட்டரை நெகிழச்செய்கிறது. இருவரும் ஒன்றாகத் தங்குகிறார்கள். உல்லாசமான நாளை கழிக்கிறார்கள்.
அந்த நாளின் போது பீட்டருக்குள் வேர்விட்டுள்ள மதவெறுப்பை அறிந்து கொள்கிறாள் ஜேகோப்.

பின்னொரு நாள் பீட்டரின் தந்தை இறந்து போன செய்தி வருகிறது. அவன் அவரது இறுதிச்சடங்கில் கலந்து கொள்ளவில்லை. அவரது மரணம் தனக்கு எந்தப் பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை என்கிறான். தந்தையின் பிடியிலிருந்து முழுமையாக விடுபட்டு விட்டதாக உணரும் அவன் தாயின் நிலையை எண்ணி கண்ணீர் வடிக்கிறான்.
பீட்டரின் தேவையற்ற பிடிவாதம் காரணமாக அவனது கனவுத்திட்டம் தோற்றுப்போகிறது. உடல்நலமற்ற அவனது அம்மாவும் இறந்து போகிறாள். பீட்டர் மனம் உடைந்து போகிறான். மீளாத்துயரத்தில் கரைந்து போகிறான்.
தந்தையின் மரணம் ஏற்படுத்தாத வலியைத் தாயின் மரணம் ஏற்படுத்திவிடுகிறது. அதுவும் அம்மாவின் கடைசிக்கடிதம் அவனைத் தன்னிலை உணரச் செய்கிறது. மனம் திருந்திய மைந்தன் போலாகிவிடும் பீட்டர் நகரவாழ்க்கையை விட்டு ஒதுங்கி இயற்கையான சூழலில் தனது மரபான வேர்களைத் தேட ஆரம்பிக்கிறான்.
அம்மாவின் இறுதிச்சடங்கில் கலந்து கொள்கிறான். தந்தையின் நண்பரான மதகுருவின் ஆலோசனைப் படி தீவிரமான மதப்பற்றுக் கொள்கிறான். ஜேகோபை விலக்கி மதகுருவின் மகள் இங்கரை திருமணம் செய்ய முயல்கிறான். அவன் வாழ்க்கை திசைமாறிப் போகிறது
பீட்டரின் திருமண வாழ்க்கை எப்படியிருந்தது. அவன் கனவு நிறைவேறியதா என்பதை நோக்கி படம் நகர்கிறது
பீட்டரின் ஆளுமை தான் படத்தின் மையம். பீட்டர் பல்வேறு விதங்களில் இங்க்மர் பெர்க்மனை நினைவுபடுத்துகிறான். அவரும் இது போலத் தந்தையின் மீது ஒவ்வாமை கொண்டவரே. தந்தைக்கு எதிராகவே அவர் சினிமாவை தனது வடிவமாகத் தேர்வு செய்திருக்கிறார். பீட்டரும் பெர்க்மெனும் ஒரு புள்ளியில் தந்தையின் அகத்தைப் புரிந்து கொள்கிறார்கள்

மனக்குழப்பம் மிகுந்த ஒரு தருணத்தில் இங்கரின் தந்தையிடம் பீட்டர் புலம்பும் போது அவர் உன் மனத்துயரம் நீங்கும்வரை அழுது கொள் என்கிறார். அத்துடன் உன் குழப்பங்களுடன் நீயே போரிட வேண்டும் என்று ஆலோசனை சொல்கிறார்.
இங்கரை அவளது வீட்டில் சந்திக்கும் காட்சியும் அவளோடு காதல் கொள்வதும் அழகான காட்சிகள்
ஜேகோப் அறிவாளியான பெண். அவள் பீட்டரைப் புரிந்து கொண்டு தேவையான உதவிகள் செய்கிறாள். ஆனால் அவளைப் பீட்டர் புரிந்து கொள்ளவில்லை. அவனது தடுமாற்றங்கள். குழப்பங்கள் அவளது காதலை நிராகரிக்கிறது.
அதிர்ஷ்டசாலியாகக் கருதப்படும் பீட்டர் உலகியல் வாழ்க்கையில் தோற்றுப் போகிறான். இதற்கு முக்கியக் காரணம் பீட்டர் எவரையும் தனது விருப்பத்திற்காகப் பயன்படுத்திக் கொண்டு உதறி எறிகிறான் என்பதே
சாலையோரம் உள்ள இயேசுநாதரின் சிலையினை நோக்கி ஒரு காட்சியில் பீட்டர் கேள்விகேட்கிறான். இது போலவே ஜேகோப்புடன் தனிமையில் இருக்கும் போது மரத்தால் செய்யப்பட்ட சிலையின் மீது தனது கோபத்தைக் காட்டுகிறான். இயேசுவை அவன் தனது தந்தையின் மாற்று வடிவம் போலவே கருதுகிறான்.
வாழ்க்கை வரலாற்றுச் சித்திரம் போல உருவாக்கப்பட்டுள்ள இதற்குள் எத்தனை அடுக்குகள். தனித்துவமான கதாபாத்திரங்களே இதன் தனிச்சிறப்பு. அவர்களை முழுமையாகப் படம் சித்தரிக்கிறது. ஆரம்பக் காட்சிகளில் பீட்டருக்கு உதவி செய்யும் பணிப்பெண் அவனது கனவுகளைப் பற்றி எதையும் அறியாதவளாக அவனுக்குத் தேவையான உடற்சுகத்தை மட்டுமே தருகிறாள். அவனுக்கான பணஉதவியைச் செய்கிறாள். ஜேகோப் அவனது லட்சிய மனைவி போல நடந்து கொள்கிறாள். இங்கர் மரபான, பணிவான பெண்ணாகச் சித்தரிக்கபடுகிறாள். இங்கருடன் பீட்டர் பேசிக் கொண்டபடியே நடக்கும் காட்சியில் முன்னதாகவே அவள் தன்மீதான அவனது ஈர்ப்பினை உணர்ந்து கொண்டுவிடுகிறாள். இது போல நுட்பமான பல காட்சிகள் படத்தில் இடம்பெற்றுள்ளன.
இயற்கை ஒளியும் வண்ணங்களும் மிக அழகாகப் படத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளன. டிர்க் ப்ரூயலின் சிறப்பான ஒளிப்பதிவு சிறந்த இசை. சிறந்த நடிப்பு எனப் படம் நேர்த்தியாக உருவாக்கப்பட்டிருக்கிறது
நோபல் பரிசு பெற்ற நாவலாசிரியர் ஹென்ரிக்கின் தந்தை இது போல ஒரு மதகுரு. ஆகவே இந்த நாவல் பெரிதும் சுயசரிதைத்தன்மை கொண்டிருக்கிறது.
நாவலைப் படமாக்கும் போது கதாபாத்திரங்களை அதன் துல்லியத்துடன் மறு உருவாக்கம் செய்திருப்பது பாராட்டிற்குரியது
இயக்குநர் பில்லி ஆகஸ்ட் தனது படங்களைப் புகழ்பெற்ற நாவல்களை மையமாகக் கொண்டே உருவாக்கி வருகிறார். இந்தப்படம் சிறந்த அயல்மொழி திரைப்படமாக ஆஸ்கார் விருதுக்குப் பரிந்துரை செய்யப்பட்டது. ஆனால் விருதைப் பெறவில்லை

தான் எதிர்பார்ப்பதை உலகம் கொடுக்க வேண்டும் என்று பீட்டர் நினைக்கிறான். அது போதும் நடக்காத விஷயம் என்பதை முடிவில் அவனே உணர்ந்து கொள்கிறான்.
பீட்டர் தனது தந்தையிடம் காட்டிய கோபமும் பீட்டரின் மகன் அவனிடம் காட்டும் கோபமும் ஒன்று தான். இரண்டு தந்தைகளும் ஒன்று போலவே நடந்து கொள்கிறார்கள். ஆனால் பீட்டரைப் போலின்றி அவனது மகன் தனது தந்தையின் அன்பை அழகாக வெளிப்படுத்துகிறான்.
இங்கரின் தந்தை அழகான கதாபாத்திரம். அவர் பீட்டரின் அகக் கொந்தளிப்புகளைச் சரியாகப் புரிந்து கொள்கிறார்.
இதுபோலவே பீட்டரின் அண்ணனை ஜேகோப் சந்திக்கும் காட்சியிலும் பீட்டர் சந்திக்கும் காட்சியிலும் அண்ணன் தனது உணர்ச்சிகளை வெளிக்காட்டிக் கொள்வதேயில்லை. ஆனால் அவன் பீட்டர் மீது பேரன்பு கொண்டிருக்கிறான் என்பது அழகாக உணர்த்தப்படுகிறது
தனது கர்ப்பத்தை மறைத்துக்கொண்டு அம்மாவிடம் தான் வெளியூர் பயணம் செல்ல இருப்பதாகப் பணம் கேட்கும் ஜேகோப்பை அவளது அம்மா புரிந்து கொள்ளும் விதமும் நடத்தும் முறையும் படம் எவ்வளவு நுட்பமாக உருவாக்கப்பட்டிருக்கிறது என்பதன் அடையாளம்
பீட்டரின் முதுமையைக் காணும் போது நமக்குள் இவ்வளவு தான் வாழ்க்கையா என்ற பெருமூச்சு எழுவே செய்கிறது. ஆனால் புதிய கனவுகளுடன் ஜேகோப் அடுத்த நிலையை நோக்கி நகர்வதைக் காணும்போது வாழ்க்கையின் புதிய சாலைகள் முடிவற்றவை என்ற நம்பிக்கையும் உருவாகிறது.
••
மண்டியிடுங்கள் தந்தையே
டால்ஸ்டாயின் வாழ்க்கை வரலாற்றில் நடந்த சில நிகழ்வுகளை மையமாகக் கொண்டு நான் எழுதியிருக்கும் புதிய நாவல் மண்டியிடுங்கள் தந்தையே.
இந்த நாவல் டிசம்பர் 25 சனிக்கிழமை சென்னை ரஷ்ய கலாச்சார மையத்தில் வெளியிடப்படவுள்ளது

தேசாந்திரி பதிப்பகம் இந்நூலை வெளியிடுகிறது
நிமித்தம் கேட்கிறது
நிமித்தம் நாவல் குறித்த வாசிப்பு விமர்சனம்…
மஞ்சுநாத்

சப்தம் என்பது ஒரு வலுவான இருப்பு. இருப்பின் மூலமே அது தன்னை நீட்டித்துக் கொள்வகிறது. மனிதனின் வாழ்வியல் இருப்பும்கூடச் சப்தத்தினால் நிலை நிறுத்தப்படுவது வியப்பானது.
காது கேளாதவர்களுக்கு நிசப்தம் ஒரு வரமாக அமைந்திருக்கும் என்று கருதியிருந்தேன். அது தவறு. வெளிப்புற சப்தங்கள் கேட்காத போதும் பேரிரைச்சலாய் அகத்தின் குரல் அவர்களை தினம்தினம் கொன்று கொண்டிருக்கும் என்பது தான் நெருடலான உண்மை.
வெறுமையின் வேதனை வாழை குருத்திலையின் மீது பதியும் நகத்தின் கீறல் போன்றது. நிமித்தத்தின் பல அத்தியாயங்களை எழுதுகையில் எனதன்பு எஸ்ரா பலமுறை தன்னையுமறியாமல் கண்ணீர் சிந்தியிருப்பார் என்றே நினைக்கிறேன். நிமித்தம் முழுவதும் உப்பின் கரிப்பு. வாசகனின் கண்ணீரையும் அது கேட்கிறது.
மகிழ்ச்சியைவிட மனிதன் துன்பத்தைத் தனக்கு வெகு நெருக்கமாக உணர்கிறான். அதுதான் அவனுக்கு அவனையே அடையாளம் காட்டுகிறது. எஸ்.ராவின் இலக்கியம் துன்பத்தின் நிழலை உருவாக்குவதன் மூலம் நிஜத்தின் பாதையை அமைத்துத் தருகிறது.
பிழையான உடல் பெற்ற மனிதர்களை இந்தச் சமூகம் பார்க்கும் பார்வையில் பெரிய ஊனம் உள்ளது. அகப்பிழைகள் கண்ணுக்கு தெரிவதில்லை. ஒருவேளை மனிதன் தனது அகப்பிழைகளைக் கண்டுணர வேண்டுமென்பதற்காகத் தான் இப்படி உடல்பிழை கொண்டவர்கள் பிறக்கிறார்களோ…?
செவித்திறனற்ற தேவராஜ் மீதான முதல் நிராகரிப்பு அவன் குடும்பத்திடமிருந்தும் குறிப்பாக அவன் தந்தையிடமிருந்தும் பின்பு சமூகத்திடமிருந்தும் வருகிறது. முற்கள் நிறைந்த கைகள் மூலம் நிராகரிப்பின் வலியை இந்தச் சமூகம் தொடர்ந்து அவனது மனதிலும் உடலிலும் உருவாக்கிக் கொண்டே இருக்கிறது.
நிமித்தத்தின் முதல் அத்தியாயத்தைக் கடப்பதற்கு முன்பாகவே தேவராஜீன் வேதனையானது களங்கிய வண்டல் போல் நம் மனதில் தேங்கி விடுகிறது. அதன் சாரத்தில் முளைவிடும் கதைகள் ஒலியற்ற குறிப்புகளாக நம் மீது மோதி ஒளிப்புள்ளியின் மையத்திற்கே நம்மை இழுத்துச் செல்கிறது.
தேவராஜ். வயது 47. அதாவது அவன் அவமானத்திற்குப் பழகிப்போனவன் என்பதற்கான முதல் அடையாளத்தைப் பெற்றுவிட்டான். எஸ்.ரா மனிதனுக்கு அவனது வாழ்வில் மூன்று கொண்டாட்டங்கள் இருப்பதாகக் கூறுகிறார். ஒன்று பிறப்பது இரண்டாவது திருமணம் மூன்றாவது இறப்பு. முதலும் கடைசியிலும் என்ன நடக்கிறது என்பது நமக்குத் தெரியாது. ஆனால் திருமணம் என்பது நாமறிய செய்து கொள்ளும் கொண்டாட்டம். இந்தக் கொண்டாட்டம் தேவராஜ் வாழ்வின் பகல் கனவாக நீள்கிறது. இருப்பினும் கனவு நிஜம். அதற்கான போராட்டங்களும் வலிகளும் ஏளனங்களும் அவமானங்களும் உண்மை. இந்த உலகமும் கல்யாணம் ஆகாமல் போன பெண்களைப் பற்றித்தான் எப்போதும் கவலைப்படுகிறது.
ஒருவனின் உடல் பிழையை உதாசினப்படுத்திக் கூர்மையான வார்த்தைகள் மற்றும் பொறுப்பற்ற செயல்கள் மூலம் எவ்வளவு எளிதாகவும் அலட்சியமாகவும் கடந்து போகிறோம். சமூகத்தின் மருதாணி பூசிய விரல் நகங்களுக்குள் மற்றவர்களின் காயத்தைக் குத்திக்கிளறி ஆறாத ரணமாக்கும் குரூரம் ஒளிந்துள்ளது.
தஸ்தாயெவ்ஸ்கியின் ரஷ்ய சமூகத்தில் அவர் காலத்தில் பெண்கள் மன அழுத்தத்திலிருந்து நிவாரணம் பெற தேவாலயங்களுக்குச் சென்றனர். இங்கும் நமது சமூகத்தில் பெண்கள் கோவில்களுக்குச் செல்கிறார்கள். அதனால் தான் எஸ்.ரா உறுதியாகக் கூறுகிறார். “கோவில் என்ற ஒன்று மட்டும் இல்லாமல் போயிருந்தால் பெரும்பாண்மை பெண்கள் மனநோயாளி ஆகியிருப்பார்கள்.” ஆண்கள் தங்கள் மன அழுத்தத்தின் விடுதலையை மது அருந்துவதிலும் மனைவியை அடிப்பதிலும் பிள்ளைகளை உதைப்பதிலும் தீர்த்துக் கொள்கிறார்கள்.
மனித உடல் என்பது உணர்வுகளாலும் உணர்சிகளாலும் நிரம்பியது. கண் தெரியவில்லை, காது கேட்கவில்லை , வாய்ப்பேச முடியவில்லை , கை கால்கள் இயங்கவில்லை என்பதால் உணர்வுகளும் உணர்ச்சிகளும் இல்லையென்று ஆகிவிடாது. பசி எடுக்கத்தான் செய்யும், உடல் வளரும் போது தேவைகளும் மாறவே செய்கிறது, உலகம் அவர்கள் மீதும் பாலியல் அத்துமீறல்களை வன்முறைகளைத் தயங்காமல் ஏவுகிறது, அவர்கள் வாழ்விலும் நட்பு, துரோகம், காதல் , தோல்வி, அவமானம் இத்தனையும் நிகழவே செய்கிறது. அதன் எதிரொலிப்பு ஒரு இயல்பான மனிதனுக்கு எப்படியோ அப்படியே இவர்களுக்கும் பொருந்தும்.
கிராமத்தில் மனிதர்கள் தற்கொலை செய்து கொள்வதற்கு அரளி விதை, எட்டிக்கொட்டை, பூச்சிக்கொல்லிகள் எனக் கசப்பானவைகளையே ஏன் தேர்ந்தெடுக்கிறார்கள்…? அது அவர்களுக்குக் கசக்கதா என எனது சிறுவயதில் சிந்திப்பதுண்டு… வாழ்வின் பெரும்கசப்பு அவர்களது அடிநாக்கு வரை பரவியதற்கு முன்னால் இந்தச் சிறுகசப்பு அவர்களுக்குச் சாதாரணம் தான்…
தேவராஜ் எங்கே சாவு நடந்தாலும் அந்த வீட்டிற்குச் சென்று இறந்த உடலின் நெருக்கத்தில் உட்கார்ந்து கொள்வான். சாவின் மனத்தை நுகர்வது அவனுக்குப் பிடிக்கத்துவங்கியது. அந்த அழுகை, ஒப்பாரி, மலர்களின் வரிசை, துக்கம் பிடித்த முகங்கள், அசைவற்ற பிரேதம் … அன்பு மறுக்கப்படுபவர்களின் உலகம் மயானமாகி விடுகிறது. நிராகரிப்பின் ஓசை அவனது கபாலத்தின் அதிவர்வலைகளை அதிகப்படுத்தி விடுகிறது. தன்னைச் சுற்றியுள்ள ஒரு சில மனிதர்களின் அன்பு நிறைந்த அபிமானம் அவனை உயிர்ப்போடு வைத்திருக்கிறது. ராமசுப்புவின் நட்புக்கூடக் கிடைக்காத தேவராஜ்கள் தான் நடைமுறையில் அதிகம்.
ஒலியை ருசிக்காத்தவனின் உயிர்ப்பின் விகாசிப்பில் எஸ்ரா பெருங்கதைகளின் சூலை திறந்து விடுகிறார். ஒரு காலத்தில் பருத்தி வணிகத்தின் மையமாகத் திகழ்ந்த கிராமம் வீழ்ந்த கதையும் , மதிப்பாக வாழ்ந்த விவசாயி சோற்றுக்கு நாதியற்றுப் போனதும், கோரத்தின் உச்சமான பஞ்சம், அகதிகளின் பரிதாபங்கள், ஆண் கிணறு பெண் கிணறு பற்றிய கதை, வெள்ளை கலயம் கதை, காற்றுக்குக் கிறுக்குப் பிடித்த கதை என மகரந்த பெருவெடிப்பில் பெருந்துயரின் வண்ணத்தை வழியவிடுகிறார்.
காசியின் கங்கை படித்துறையிலும் துயரின் வாசம் மிகுந்த அலைகளைக் காட்சிப்படுத்துகிறார். துயரம் என்பது இருப்பதில்லை. அது ஒருவரால் மற்றவருக்குள் உருவாக்கப்படுவது கடத்தப்படுவது. துயர் எங்கெல்லாம் பரவியுள்ளதோ அங்கு ஒலிகள் மறுக்கப்படுகின்றன. ஒலிகள் மறுக்கப்படும் இருமைக்குள் துயர் அரிதாரம் பூசிக்கொள்கிறது.
ஒலிகள் மறுக்கப்பட்டவனின் ஒட்டு மொத்த வாழ்வும் நிமித்தமாய் நம்முன் நிற்கிறது.
**
December 6, 2021
மலைப்பாம்பின் கண்கள்
அந்திமழை டிசம்பர் இதழில் வெளியான புதிய சிறுகதை
ராகவின் கனவில் ஒரு மலைப்பாம்பு வந்தது.
அவனது முப்பதாவது வயது வரை இப்படிக் கனவில் ஒரு மலைப்பாம்பினைக் கண்டதேயில்லை. ஆனால் திருமணமாகி வந்த இந்த ஏழு மாதங்களில் பலமுறை அவனது கனவில் மலைப்பாம்பு தோன்றிவிட்டது. இதற்குக் காரணம் மிருதுளா.
அவளுக்கு மலைப்பாம்பினைப் பிடிக்கும். குளோப்ஜாமுனைப் பார்த்ததும் நாக்கைச் சுழற்றுவது போல அவள் மலைப்பாம்பைப் பார்த்தால் எவ்வளவு அழகாக இருக்கிறது என்று கண்கள் விரிய ஆசையுடன் ரசிப்பாள். என்ன பெண்ணிவள் என்று குழம்பியிருக்கிறான்.

அந்த மாநகரில் இருந்த உயிரியல் பூங்காவில் ஒரு கூண்டில் பனிரெண்டு அடி நீளமான மலைப்பாம்பு இருந்தது. 3செயற்கை மரம் ஒன்றையும் உருவாக்கியிருந்தார்கள். எங்கிருந்து அதைப் பிடித்துக் கொண்டுவந்தார்கள் என்று தெரியவில்லை. அவர்கள் திருமணத்திற்குப் பிறகு ஜோடியாகப் போய். அந்த மலைப்பாம்பினை தான் முதலில் பார்த்தார்கள்.
“ராகவ், அதோட கண்ணைப் பாரேன். அதுக்குள்ளே ஏதோ ரகசியம் மினுமினுங்குது. பாடியோட டெக்சர், சுருண்டு படுத்துகிடக்கிற ஸ்டைல், அதோட ஸ்மால் மூவ்மெண்ட், எல்லாமே அசத்தலா இருக்கு.. ஐ லைக் இட்.. தூக்கி மடியில வச்சிகிடலாமானு இருக்கு என்றாள் மிருதுளா
அவனுக்கோ மலைப்பாம்பை பார்க்க உள்ளுற பயமாக இருந்தது. அதைக் காட்டிக் கொள்ளாமல் “போவோமா“ என்று கேட்டேன்
“இப்போ தானே வந்தோம்… ஏன் அவசரப்படுறே… “ என்றபடியே அவள் தடுப்புவேலியின் மிக அருகில் சென்று மலைப்பாம்பை ரசித்துப் பார்த்துக் கொண்டிருந்தாள்.
அப்படி என்ன பிடித்திருக்கிறது என அவனுக்குப் புரியவில்லை.
“ஸ்கூல்ல படிக்கும் போதே மலைப்பாம்பை டிராயிங் பண்ணி பிரைஸ் வாங்கியிருக்கேன். இது ஒண்ணும் பாய்சன் இல்லை தெரியுமில்லே“ என்றாள் மிருதுளா
“ஆனாலும் பாம்பு தானே“.. என்றான் ராகவ்
அவள் செல்போனில் பாம்பினை படம்பிடித்துக் கொண்டிருந்தாள். வேடிக்கை பார்க்க வந்த ஒரு சிறுவன் கண்களை மூடிக் கொண்டு அவனது அம்மா பின்னாடி ஒளிந்து கொண்டான்.
சும்மா பாருடா என்று அம்மா அவனை முன்னால் இழுத்துக் கொண்டிருந்தாள்.
ராகவ் அவளைத் தனியே விட்டு வெள்ளைப் புலியை காணுவதற்காக உள்ளே நடந்தான். திரும்பி வந்தபோதும் அவள் அதே இடத்தில் நின்று மலைப்பாம்பினை ரசித்துக் கொண்டிருந்தாள். அவள் கையில் ஒரு ஐஸ்கிரீம் இருந்தது. அதைக் கொஞ்சம் கொஞ்சமாகச் சுவைத்தபடியே அவள் அசைவற்ற பாம்பின் உடலை கண்களால் வருடிக் கொண்டிருந்தாள். அதைக் காண எரிச்சலாக வந்தது.
பொதுவாக இளம்தம்பதிகள் ஜோடியாகச் சினிமாவிற்குத் தானே போவது வழக்கம். ஆனால் மிருதுளாவிற்குச் சினிமா பார்க்க விருப்பமில்லை. அவள் தனது இருபத்தியாறு வயதிற்குள் பத்துக்கும் குறைவான படங்களைத் தான் பார்த்திருக்கிறாள்.
“சினிமா பார்க்கப் போனால் தூக்கம் வந்துவிடுகிறது“ என்று சொன்னாள்.
அவனால் அப்படி ஒரு முறை கூடச் சினிமா தியேட்டரில் தூங்க முடிந்ததில்லை.
கல்லூரி நாட்களில் தீபாவளி பொங்கல் நாளன்று ரீலிசான மூன்று திரைப்படங்களையும் தொடர்ந்து பார்ப்பது அவனது வழக்கம். அவனது ஊரில் மூன்று திரையரங்குகள் இருந்தன. அதில் வாரம் இரண்டுமுறை தான் படம் மாற்றுவார்கள். ஆகவே வாரத்திற்கு ஆறு படங்களைப் பார்த்துவிடுவான். பெரும்பாலும் செகண்ட் ஷோ சினிமா தான். அதுவும் நண்பர்களுடன். படம் விட்டு வீட்டுக்குப் போக முடியாது என்பதால் நண்பனின் வீட்டு மாடியில் போய் உறங்கி எழுந்து அப்படியே கல்லூரிக்குப் போய்விடுவான்.
இப்படிச் சினிமாவே பிடிக்காத ஒரு பெண்ணை ஏன் திருமணம் செய்து கொண்டோம் என்று அவனுக்குக் குழப்பமாக இருந்தது.
மிருதுளா பன்னாட்டு நிறுவனம் ஒன்றின் விற்பனைப்பிரிவில் பணியாற்றிவந்தாள். ஒரே பெண். அவளது அப்பா ஒரு பல் மருத்துவர். பள்ளி படிப்பை ஊட்டி கான்வென்டில் படித்திருக்கிறாள். கல்லூரி படிப்பு மணிப்பால் யுனிவர்சிட்டி. இரண்டு ஆண்டுகள் இத்தாலியில் வேலை செய்திருக்கிறாள். ஆகவே நாலைந்து மொழிகள் சரளமாகப் பேசவும் எழுதவும் முடியும். ஒன்றரை லட்ச ரூபாய் மாத சம்பளம் வாங்குகிறாள்.
மெட்ரிமோனியல் நிறுவனம் ஒன்றின் மூலமாகத் தான் அவள் அறிமுகம் ஆனாள். அவர்கள் இருவரும் முதன்முறையாக அமேதிஸ்ட் காபி ஷாப்பில் சந்தித்துப் பேசிய நாளில் அவளிடமிருந்த கசிந்த பெர்ப்யூம் வாசனை அவனை மயக்குவதாக இருந்தது. அன்று கறுப்பும் மஞ்சளும் கலந்த சல்வார்-கமீஸ் அணிந்திருந்தாள். அவளையே பார்த்துக் கொண்டிருக்க வேண்டும் போலிருந்தது.
அவளோ மிக இயல்பாக, தனது வாடிக்கையாளர்களில் ஒருவரிடம் பேசுவது போலச் சரளமாக, பொய் சிரிப்புடன் பேசினாள். அவளாகவே ஆரஞ்சு ஐஸ் டீ ஆர்டர் செய்தாள். அதை ராகவ் குடித்ததேயில்லை
“நீங்கள் ஒரே பையனா“ என்ற கேள்வியை மட்டும் அவள் இரண்டு முறை கேட்டாள்.
“ஆமாம். அப்பா கல்லூரி பேராசிரியர். அம்மா ஸ்கூல் டீச்சர்“ என்று சொன்னான்
“நல்லவேளை நீங்களும் டீச்சராகவில்லை“ என்று சொல்லி சிரித்தாள். இதில் சிரிப்பதற்கு என்ன இருக்கிறது என்று எனப்புரியவில்லை. ஸ்டார் ஹோட்டலில் அலங்கரித்து வைக்கபட்ட அன்னாசிபழத்துண்டுகளைப் பார்க்கும் போது ஏற்படும் ஆசையைப் போல அவளது வசீகர அழகின் மயக்கத்தால் அவனும் சிரித்துவைத்தான்.
அவள் வேண்டுமென்றே குரலில் குழைவினை ஏற்படுத்திப் பேசுவது போலத் தோன்றியது
“உங்கள் எடையைத் தெரிந்து கொள்ளலாமா“ என்று கேட்டான்
இப்படி எந்தப் பெண்ணும் அவனிடம் கேட்டதில்லை. சொல்லக் கூச்சமாக இருந்தது. மெதுவான குரலில் சொன்னாள்
“அறுபத்தியெட்டு“
“ஐந்து கிலோ குறைக்க வேண்டும்“ என்று புன்னகையோடு சொன்னாள்.
அவள் முன்பாக இருக்கும் போது முகத்தில் மழைதுளி விழுவது போலவே உணர்ந்தான்.
“வேறு ஏதாவது கேட்க வேண்டுமா“ என்று கேட்டபடி கண்களைச் சிமிட்டினாள்.
“ரொம்ப அழகாக இருக்கிறீர்கள்“ என்றான் ராகவ்
“எனக்கே தெரியும்“ என்றாள் மிருதுளா.
“நான் அதிர்ஷ்டசாலி“ என்று சொல்லி லேசாகச் சிரித்தான்
“அதை இன்னமும் நான் முடிவு செய்யவில்லை. யோசிக்க வேண்டும். நான் எதிலும் அவசரப்படுவதில்லை. நான் கொஞ்சம் வித்தியாசமானவள். என்னைப் புரிந்து கொள்வது கஷ்டம்“ என்றாள் மிருதுளா
“வித்தியாசம் என்றால் எப்படி“ என்று கேட்டான்.
அவள் சிரித்தபடியே “இப்போதே உங்களைப் பயமுறுத்தவிரும்பவில்லை. ஆனால் நான் அப்படித்தான்“ என்றாள்
பேச்சின் ஊடாக அவள் தனது சிறிய உதடுகளை நாக்கால் வருடிக் கொண்டதை கவனித்துக் கொண்டேயிருந்தான். கவர்ச்சியான உதடுகள். மேலுதடு சற்றே சிறியது போலத் தோன்றியது.
“உங்களை விட நான் ஒரு இன்ஞ் உயரம் அதிகம் என நினைக்கிறேன்“ என்றாள்.
“அப்படியா“ என வியப்போடு கேட்டபடியே “அது ஒன்றும் பிரச்சனையில்லை“ என்றான் ராகவ்
“எனக்குப் பிரச்சனையாக இருக்கும். நீங்கள் உயரமான காலணி அணிந்து கொள்ள வேண்டும்“ என்றாள்
“அதற்கென்ன“ என்று சிரித்துவைத்தான்.
“உங்களுக்குக் காரோட்டத் தெரியுமா“ எனக்கேட்டாள்
“இல்லை. பைக் மட்டும் தான் ஒட்டுவேன்“
“நான் நன்றாகக் கார் ஒட்டுவேன். வேலைக்குச் சேர்ந்தவுடனே கார் வாங்கிவிட்டேன். ஆபீஸிற்குக் காரில் தான் போகிறேன். ஐ லவ் டிரைவிங்“ என்றாள்
“அதுவும் நல்லது தான் வெளியே எங்காவது போக ஒலா புக் பண்ண வேண்டிய அவசியமில்லை“ என்றான்
அதை அவள் ரசிக்கவில்லை. நிதானமாகத் தனது கலைந்த கூந்தலை கோதிவிட்டபடியே அவள் தேநீரோடு இருந்த ஆரஞ்சு துண்டினை சுவைத்தாள்.
“என்ன கார் வைத்திருக்கிறேன் என்று கேட்க தோணவேயில்லையா“ என்று கேட்டாள்
“சாரி.. எனக்குக் காரைப் பற்றி ஒன்றுமே தெரியாது“
“ரோட்டில் கண்ணை மூடிக் கொண்டு தான் போவீர்களா“ என்று சீண்டும் குரலில் கேட்டாள்
“ஹெல்மெட் போட்டிருப்பதால் எதையும் கவனிக்கமாட்டேன்“ என்றான்
அவள் சக்கரை துண்டில் ஒன்றை தனியே எடுத்து வாயிலிட்டு ருசித்தபடியே மௌனமாக அவனைப் பார்த்துக் கொண்டிருந்தாள். அந்தப் பார்வை அவனுக்குள் எதையோ தேடுவது போல உணர்ந்தான். என்ன பார்க்கிறாள். அவனால் அந்த ஊடுருவலைத் தாங்க முடியவில்லை. அவள் புன்சிரிப்புடன் சொன்னாள்
“நாம் இன்னொரு முறை சந்திப்போம்“
அவள் போனபிறகும் அந்த நறுமணம் அவளது இடத்தைச் சுற்றிலும் நிரம்பியிருந்தது. அவளைப் போலவே ஒரு சக்கரைத்துண்டினை ராகவும் எடுத்து வாயில் போட்டுக் கொண்டான்.
அதன்பிறகு மூன்று முறை தனியே சந்தித்துப் பேசினார்கள். பிறகு தான் இருவர் வீட்டிலும் பேசி திருமணம் முடிவானது. வழக்கமாகத் திருமண மண்டபங்களில் நடக்கும் திருமணம் போலின்றிக் கடற்கரை சாலையிலுள்ள ரெசார்ட் ஒன்றில் ஆடம்பரமாக அவர்களின் திருமணம் நடைபெற்றது. மிருதுளாவின் அப்பா நிறையச் செலவு செய்திருந்தார். ஹனிமூனிற்காக ஹவாய் தீவிற்குப் போனார்கள். விதவிதமான உணவு வகைகளை, மீன்களை அவள் விரும்பி சாப்பிட்டாள். ராகவிற்குச் சோறு கிடைக்காதா என்று ஏக்கமாக இருந்தது.
படுக்கையில் அவனை முத்தமிடும் போது கூட மிருதுளா நிதானமாக அவனது உதட்டில் தனது உதட்டினைப் பதித்தாள். அழுத்தமான முத்தம். கட்டிக் கொள்வதும் மெதுவாகவும் நீண்டதாகவும் இருந்தது. வெயில்காலத்தில் ஐஸ்கீரிம் சாப்பிடுவது போல அவசரமாகவும் குளிர்ச்சி தருவதுமாக இருந்தது அவர்களின் உடற்கூடல்.
சென்னை திரும்பிய பிறகு அவர்கள் தற்காலிகமாக மிருதுளா தங்கியிருந்த அபார்ட்மெண்டிலே சில நாட்கள் ஒன்றாக வசித்தார்கள். புதுவீடு ஒன்றை வாடகைக்குப் பிடிக்க வேண்டும் என்பதில் மிருதுளா தீவிரமாக இருந்தாள்.
புதிதாகக் கட்டப்பட்ட முப்பத்தி நான்கு அடுக்குகள் கொண்ட குடியிருப்பு ஒன்றில் முப்பத்தி நான்காவது மாடியில் ஒரு வீட்டினை வாடகைக்குப் பிடித்தாள்.
“முதற்தளமாக இருந்தால் நன்றாக இருக்குமே“ என்றான் ராகவ்
“ இருப்பதிலே மிக உயரமான இடத்தில் குடியிருக்க வேண்டும். இந்த நகரம் என் காலடிக்கு கீழே இருப்பதைக் காணுவது சந்தோஷமாக இருக்கிறது“ என்றாள்.
அவ்வளவு உயரத்தில் குடியிருப்பது அவனுக்குச் சௌகரியமாகவே இல்லை. ஒருவேளை லிப்ட் இயங்காவிட்டால் என்ன செய்வது. கண்ணாடி தடுப்பில் விரிசல் ஏற்பட்டுவிட்டால் என்ன ஆகும். காலை வெயில் ஏன் இவ்வளவு பிரகாசமாக இருக்கிறது என்று மனதில் ஏதேதோ குழப்பங்கள், பயம் உருவாகிக் கொண்டேயிருந்தது.
அவளோ அன்றாடம் காலையில் கையில் காபியுடன் பால்கனியில் போய் நின்று கொண்டு விரிந்து கிடக்கும் நகரையும் காலை வெளிச்சத்தையும் ரசித்துக் கொண்டிருப்பாள். காற்று மிக வேகமாக அடிக்கும்.அதில் அவளது கூந்தல் அலையாகப் பாயும். அவனுக்கு அந்தப் பால்கனிக்கு போய் நிற்பது பிடிக்கவே பிடிக்காது.
மிருதுளா நன்றாகச் சமையல் செய்வாள். ஆனால் விரும்பினால் மட்டுமே சமைப்பாள். மற்ற நேரங்களில் ஹோட்டலில் இருந்து தான் உணவு வரவழைக்கபடும். அவள் ஒரு நாளும் அலுவலகத்திற்குத் தாமதமாகப் போனது கிடையாது. ஒய்வெடுப்பதே அவளுக்குப் பழக்கமில்லை. வீட்டிலிருந்தாலும் அங்குமிங்குமாக நடந்து கொண்டேயிருப்பாள். அவனுக்கோ அலுவலகம் விட்டுவந்தவுடன் சோபாவில் படுத்துக் கொள்ள வேண்டும். ஞாயிறு என்றால் மதியம் வரை தூங்க வேண்டும். அவள் அப்படியில்லை. எல்லா நாளும் அதிகாலையில் எழுந்து உடற்பயிற்சிகளில் ஈடுபடத் துவங்கிவிடுவாள். அழகிலும் ஆரோக்கியத்திலும் அவளுக்குக் கூடுதல் அக்கறை இருந்தது.
இரண்டு பேரும் ஒன்றாகக் காரில் கிளம்பி போவார்கள். மின்சார ரயில் நிலையத்தில் அவனை விட்டுவிட்டு அவள் தனது காரில் அலுவலகம் செல்லுவாள். ஒருமுறை கூட அவனது அலுவலகம் வரை காரில் கொண்டுவந்து விட்டதில்லை. பெரும்பாலும் அவளது வேலை முடிந்து திரும்பி வர இரவு ஒன்பது மணியாகிவிடும். அவன் ஆறுமணிக்கெல்லாம் வீடு திரும்பி விடுவான்.
அவள் வரும்வரை டிவி பார்த்துக் கொண்டிருப்பான். சில நாட்கள் அவனாக ஏதாவது சமைப்பதுண்டு. திருமண வாழ்க்கை பற்றி அவனுக்குள் இருந்த கனவுகள் யாவும் சில வாரங்களில் வடிந்து போனது. அவசரமாகப் படித்துமுடித்த புத்தகம் போலவே வாழ்க்கையை உணர்ந்தான்.
அவனுக்கு டாய்லெட்டை பயன்படுத்த தெரியவில்லை என்று ஒரு நாள் மிருதுளா சண்டைபோட்டாள். இன்னொரு நாள் பிரிட்ஜில் அவள் வைத்திருந்த சீன உணவு வாடை அடிக்கிறது என்று அவளிடம் கோபம் கொண்டு கத்தினான். சிறுசிறு சண்டைகளைத் தாண்டி அவள் அடிக்கடி அவனுக்குச் சர்ப்ரைஸ் கிப்ட் என ஏதாவது பரிசுப் பொருட்களை வாங்கித் தந்தபடியே இருந்தாள். அவனும் வாரம் தவறாமல் அவளை ஷாப்பிங் அழைத்துக் கொண்டு போனான். அவனுக்குப் பிடிக்காத உணவகத்தில் அவளுக்காகச் சாப்பிட்டான். ஒவ்வொரு செயலிலும் அவளது நிதானம் வியப்பூட்டுவதாக இருந்தது.
ஆன்லைனில் அவள் விநோதமான பொருட்களை வாங்குவது வழக்கம். ஒருநாள் நீலவெளிச்சம் பாய்ச்சும் சுவரில் பொருத்தக்கூடிய விளக்குகளை வாங்கிப் படுக்கை அறையில் மாட்டினாள். சுழலும் நீலவெளிச்சம் அறையில் நிரம்பி அறை ஒரு நீலவெளிச்சக்குளம் போலமாறியது. அதற்குள் அவள் நடமாடுவதைக் காணும் போது ஏதோ கனவில் நடப்பது போலவே இருந்தது.
இன்னொரு நாள் அவன் அலுவலக வேலையில் பரபரப்பாக இருந்த போது வீடியோ ஒன்றை அனுப்பி வைத்து உடனே பார் என்று குறுஞ்செய்தி அனுப்பினாள். உடனே அதை ஒடவிட்டுப் பார்த்தான்.
குரங்குக்குட்டி ஒன்றை ஒரு மலைப்பாம்பு விழுங்கும் வீடியோ . அதைக் காண சகிக்கவில்லை.
அவளுக்குப் போன் செய்து ஏன் அதை அனுப்பி வைத்தாள் என்று கோபமாகக் கேட்டான்
“அந்த மலைப்பாம்பு குரங்கை விழுங்கிட்டு எவ்வளவு சைலண்டா திரும்பி பார்க்குது பாத்தியா.. சம் திங் ஸ்ரேஞ்ச். “
“அந்த குரங்குக்குட்டி பாவமில்லையா“
“என்ன பாவம். பாம்பு அது பசிக்கு சாப்பிடுது.. இதுல என்ன தப்பு. “
“இந்த மாதிரி வீடியோ எல்லாம் இனிமே அனுப்பாதே.. இதை எல்லாம் நான் எதுக்காகப் பாக்கணும் சொல்லு“
“நான் இந்த வீடியோவை இன்னைக்கு முப்பது தடவை பாத்தேன். ஐ லைக் இட். நீ என்னோட பெட்டர் ஹாப் அதான் உனக்கு அனுப்பி வச்சேன்“
“ஸ்டுபிட்“ என்று போனை துண்டித்தான்
அதன் இரண்டு நாட்களுக்கு அவர்களுக்குள் பேச்சில்லை. அவனது கோபத்தை அவள் பொருட்படுத்துவதேயில்லை. அந்தப் புறக்கணிப்பு அவனை மேலும் ஆத்திரம் கொள்ள வைத்தது.
அந்த ஞாயிறு அன்று அவனுக்குப் பிடித்தமான உணவு வகைகளை நிறையச் செய்திருந்தாள். வேண்டுமென்றே பட்டுப் புடவை கட்டிக் கொண்டாள். நிறைய முத்தங்களைத் தந்தாள். அவள் மீதான கோபம் கரைந்து போனது.
இது நடந்த சில தினங்களுக்குப் பின்பு மிருதுளா அலுவலகம் கிளம்பும் போது அவனிடம் சொன்னாள்
“எனக்கு ஒரு பேக்கேஜ் வரும்.. அதை வாங்கிவச்சிடு.. பிரிக்க வேண்டாம்.. நான் வந்து பிரிச்சிகிடுவேன்“
“என்ன பேக்கேஜ்“ என்று கேட்டான்
“சர்ப்ரைஸ்“ என்று சிரித்தாள்.
அவள் சொன்னது போலவே ஒரு பெரிய பாக்ஸ் ஒன்றை ஒரு ஆள் கொண்டுவந்திருந்தான். எங்கேயிருந்து வந்திருக்கிறது என்று பார்த்தான். தைவானில் இருந்து அனுப்பி வைக்கபட்டிருந்தது.
என்ன ஆர்டர் பண்ணியிருக்கிறாள் என்று பார்க்க ஆவலாக இருந்தது. ஒருவேளை அவள் கோவித்துக் கொள்ளக்கூடும் என்பதால் அதைப் பிரிக்காமலே வைத்திருந்தான்
வழக்கத்திற்கு மாறாக அன்று வீட்டுக்கு வருவதற்கு முன்பாக மிருதுளா போன்செய்து “பேக்கேஜ் வந்துவிட்டதா “என்று கேட்டாள்.
“மதியமே டெலிவரி செய்துவிட்டார்கள்“ என்றான்
“ மெக்டொனால்ட்ஸில் உனக்கு ஏதாவது வாங்கி வரவா“ என்று கேட்டாள்
இன்று சமைக்கப்போவதில்லை என்பதை உணர்ந்து கொண்டவனாகச் சொன்னான்
“நீயே பாத்து வாங்கிடு. “
“உனக்கு என்ன ஸ்வீட் பிடிக்கும்“ என்று கேட்டாள்
“ஸ்வீட் சாப்பிடுறதை விட்டுட்டேன்“ என்று உணர்ச்சியற்றுச் சொன்னான்
“இன்னைக்குச் சாப்பிடுறோம்“ என்றபடியே அவள் போனை துண்டித்தாள்
மிருதுளா வீடு திரும்பும் போது அவள் கையில் இரண்டு பைகள் இருந்தன. ஒன்றில் உணவு. மற்றொன்றில் நிறைய இனிப்பு வகைகள். ஒருவேளை இன்று தான் அவளது பிறந்தநாளா.. அவள் பிறந்தநாள் மே எட்டு என்று சொன்னதாக நினைவு. இன்றைக்கு என்ன விசேசம் என்று அவனால் கண்டறிய முடியவில்லை
அவள் கவனமாக அந்தப் பேக்கேஜை பிரித்தாள். உள்ளே ஆறாக மடிக்கபட்ட மலைப்பாம்பு இருந்தது. நிஜம் போலத் தோற்றமளிக்கும் ரப்பர் தயாரிப்பு. அவள் ஆசையோடு அதைத் தடவிக் கொடுத்தாள்
“தொட்டுப்பாரேன். எவ்வளவு சாப்டா இருக்கு“
“இது எதுக்கு மிருதுளா“ என்று கேட்டான்
“இதோட கூடவே ஒரு ஹேண்ட்பம்ப் குடுத்துருக்காங்க. நாம தான் காற்று அடைச்சிகிடணும்.. கொஞ்சம் ஹெல் பண்ணு“ என்றாள்
அந்த ஹேண்ட் பம்பை எடுத்து ரப்பர் மலைப்பாம்பின் உடலில் இருந்த ஒரு துளையினைத் திறந்து காற்றடித்தான். மெல்ல காற்று நிரம்பி மலைப்பாம்பின் உடல் பெரியதாக ஆரம்பித்தது. பத்தடிக்கும் அதிகமான நீளத்தில் அந்த மலைப்பாம்பு மெதுக்மெதுக்கென்ற உடலுடன் உருவெடுத்தது. அவள் அதை அப்படியே தனது தோளில் போட்டுக் கொண்டு சிரித்தாள்.
“கிட்டவா.. சேர்ந்து போட்டுகிடுவோம்“ என்றாள்
அவனுக்கு விருப்பமில்லை என்றாலும் அவள் அருகில் போய் நின்றாள். அவள் அந்தக் காற்றடைக்கப்பட்ட மலைப்பாம்பினை அவன் தோள் மீதும் போட்டாள்.
“எப்படியிருக்கு.. சில்கி டச் பீல் பண்ண முடியுதா“ என்று கேட்டாள்
“நெளுக் நெளுக்குனு என்னமோ மாதிரி இருக்கு“ எனப் பாம்பை உதற முற்பட்டான்.
“ஆன்லைன்ல தேடி தைவான்ல இருந்து வரவழைச்சேன். 300 டாலர்“ என்றாள்.
“வேஸ்ட் ஆப் மணி.. இது எதுக்கு மிரு.. எனக்குப் பிடிக்கலை“ என்றான் ராகவ்
“என்னோட பணம். நான் எப்படியும் செலவு செய்வேன். உனக்கு எது தான் பிடிக்குது.. “ என்றபடியே அவள் அந்த ரப்பர் மலைப்பாம்பினை அணைத்தபடியே சோபாவில் போய் உட்கார்ந்து கொண்டாள். அந்தக் கோலத்தில் அவளைக் காண அவனுக்குச் சற்று பயமாகவே இருந்தது. அவள் பாம்பின் தலையைத் தடவிவிட்டபடியே அதைத் தன் முகத்தோடு வைத்து விளையாடிக் கொண்டிருந்தாள். பாம்பின் வால் சோபாவிற்கு வெளியே தொங்கிக் கொண்டிருந்தது
“ராகவ்.. இன்னைக்கு நான் ரொம்பச் சந்தோஷமா இருக்கேன். நாம அதைச் செலிபரேட் பண்ணுவோம். “
“இதுல செலிபரேட் பண்ண என்ன இருக்கு“
“உனக்குச் சொன்னா புரியாது. நான் கல்யாணத்துக்கு முன்னாடியே சொன்னேன். ஐ ஆம் டிபரெண்ட்னு.. நீ தான் தலையாட்டுனே“
“அதுக்காக இப்படியா.. யாராவது வீட்ல இப்படி மலைப்பாம்பு வச்சிருப்பாங்களா“
“இது நிஜமில்லை. பொம்மை“
“ உனக்கு எதுக்குப் பொம்மை “
“நீ எதுக்காக மீன் தொட்டி வச்சிருக்கே.. உனக்கு மீனை பார்க்க பிடிக்குது.. அதை நான் ஏதாவது கேட்டனா“
“அதுவும் இதுவும் ஒண்ணா“
“ஒண்ணு தான்.. லுக் ராகவ். நாம சேர்ந்து வாழும் போது உனக்குப் பிடிச்சாலும் பிடிக்காட்டியும் எனக்காகச் சில விஷயங்களை ஏத்துகிடதான் வேணும்.. “
“அப்படி ஒண்ணும் கட்டாயம் இல்லை“
“ நோ. பிராப்ளம்.. உன்கிட்ட பெர்மிசன் கேட்க வேண்டிய அவசியம் எனக்கில்லை“ என்று சிரித்தபடியே அவள் டிவி ரிமோட்டினை ஆன் செய்து இத்தாலிய சேனல் ஒன்றை பார்க்க துவங்கினாள். அவளுக்குக் கோபம் வந்தால் இப்படித் தான் உடனே வேறு மொழியில் பேச ஆரம்பித்துவிடுவாள். வேற்றுமொழி நிகழ்ச்சிகளைப் பார்க்க துவங்கிவிடுவாள்.
ராகவ் தன் அறைக்குள் போய்க் கதவை தாழிட்டுக் கொண்டான். அவனது கோபம் வடிய நிறைய நேரமானது. ஒருவேளை படுக்கை அறைக்கே அந்த ரப்பர் மலைப்பாம்பை கொண்டுவந்துவிடுவாளோ என்று தோன்றியது. நல்லவேளை அவள் அதைச் சோபாவில் விட்டுவிட்டு எதுவும் நடக்காதவள் போலத் தனியே சாப்பிட்டுவிட்டு வந்து படுத்துக் கொண்டாள்.
மறுநாள் காலை அவள் குளிக்கப் போகும்போது அந்த மலைப்பாம்பும் கூடவே குளியல் அறைக்குள் போனது. அதையும் ஷவரில் நனையவிட்டாள். சோப்பு நுரைகள் பூசி விளையாடினாள். ஈரமான மலைப்பாம்பினை பால்கனியில் கொண்டு வந்து உலரப் போட்டாள்
ஆத்திரத்தை அடக்கிக் கொண்டு அவன் அலுவலகம் கிளம்பினான்.
காரில் போகும்போது மிருதுளா சொன்னாள்
“நீ ஒவர் ரியாக்ட் பண்ணுறே.. அது ஒரு டாய்.. நீ வீடியோ கேம் ஆடுறதில்லையா… அது மாதிரி தான்.. அதைப் புரிஞ்சிக்கோ“..
அவன் பதில் சொல்லவில்லை. வேண்டுமென்றே அன்று அவனது அலுவலகம் வரை அவளே காரில் கொண்டுவந்து விட்டுப்போனாள். அன்று மாலை வீடு திரும்பிய போது பணிப்பெண் உலர்ந்த மலைப்பாம்பினை ஹாலின் நடுவே வைத்துப் போயிருந்தாள். அது எரிச்சலை அதிகப்படுத்தியது.
அதன் அருகில் அமர்ந்து அதை லேசாகத் தொட்டுப் பார்த்தான். நிஜபாம்பின் உடலைப் போலவே இருந்தது. ஆனால் அசையாத கண்கள். தலையினை அழுத்தினால் பிளாஸ்டிக் நாக்கு வெளியே வந்து துடித்தது. அந்தப் பாம்பினை அவளைப் போலவே தோளில் போட்டுக் கொண்டு கண்ணாடி முன்பு போய் நின்றான். அவனது உருவம் விசித்திரமாகத் தோன்றியது. இதைப் போய் எதற்காக இவ்வளவு பணம் செலவு செய்து வாங்கியிருக்கிறாள். ஊரிலிருந்து யாராவது வந்தால் என்ன நினைப்பார்கள். அப்படி இந்த மலைப்பாம்பில் என்ன தான் இருக்கிறது.
அந்த மலைப்பாம்பில் இருந்த காற்றைப் பிடுங்கி அதை வெறும் கூடாக மாற்றினான். பின்பு அதை மடித்துச் சமையல் அறை மூலையில் கொண்டு போய்ப் போட்டான். அன்று மிருதுளா வருவதற்கு இரவு ஒன்பதரை மணியாகியது. ஹாலிற்குள் நுழைந்தவுடன் மலைப்பாம்பினை தான் தேடினாள். அதைக் காணவில்லை என்றவுடன் அவள் சப்தமாகக் கேட்டாள்
“மலைப்பாம்பை என்ன செய்தே“
“கிச்சன்ல கிடக்கு“
“காற்றைப் பிடுங்கியிருப்பியே“.. என்றபடியே கிச்சனை நோக்கி நடந்தாள்.
“ஆமாம். அதைப் பார்க்க அருவருப்பா இருக்கு..“
“அது உன்னோட பிரச்சனை. நீ இப்படிச் செய்வேனு எனக்கு நல்லா தெரியும். நீ ஒரு பெர்வர்ட்“
“இதுல பெர்வர்ஷனுக்கு என்ன இருக்கு.. யார் வீட்லயாவது இப்படி மலைப்பாம்பு வச்சிருக்காங்களா“
“யார் வச்சிருந்தாலும் வைக்காட்டியும் எனக்குப் பிரச்சனையில்லை. நான் மத்தவங்க மாதிரி கிடையாது“
“இது உன்னோட வீம்பு. “
“ஆமா. நான் அப்படித் தான்“ என்றபடியே அவள் வேண்டுமென்றே மலைப்பாம்பினை ஹேண்ட்பம்ப் கொண்டு நிறையக் காற்று அடித்துப் பெரியதாக்கினாள். வழக்கமான அதன் சைஸை விடவும் மிகப்பெரியதாகியது.
அதை ஆசையோடு அணைத்துக் கொண்டு அவள் படுக்கை அறைக்கே சென்றாள். பலமாக இசையை ஒலிக்கவிடும் சப்தம் கேட்டது. ஒருவேளை மலைப்பாம்புடன் ஆடுகிறாளா.
அன்றிரவு ராகவ் சோபாவில் உறங்கினாள். காலையில் அவள் அலுவலகம் கிளம்பும் போது வேண்டும் என்றே தன்னோடு அந்த மலைப்பாம்பினை லிப்டில் கொண்டு சென்றாள். லிப்டில் வந்த கிழவர் அவளிடம் “ரப்பர் பொம்மையா, எங்கே விற்கிறது“ என்று கேட்டார்
“ தைவான் “ என்று சொல்லி சிரித்தாள்
“நான் அஸ்ஸாம் காட்டிலே மலைப்பாம்பை நேர்ல பாத்துருக்கேன்“ என்று சிரித்தார் கிழவர்
அவள் தன் காரின் பின்சீட்டில் அந்த மலைப்பாம்பினை போட்டுக் கொண்டாள். அன்று அவனைத் தனது காரில் அழைத்துக் கொண்டு போகவில்லை. அவனாகப் பைக்கில் அலுவலகம் சென்றான். அலுவலகத்தில் வேலை செய்யவே பிடிக்கவில்லை. பகலில் அவளிடமிருந்து போன் எதுவும் வரவில்லை. ஊரிலிருந்து அம்மா போன்செய்த போது நடந்தவற்றைச் சொன்னான். அம்மா நம்பமுடியாதவள் போலக் கேட்டாள்
“ ரப்பர் பாம்பா.. அதை எதுக்குடா வாங்கினா“
“ யாருக்கு தெரியும். அவ ஒரு டைப்மா. “
“ நல்லவேளை உசிரோட பாம்பை வாங்காம போனாள்“ என்று அம்மா அதிர்ச்சியுடன் சொன்னாள்
“ அதையும் செய்வாள். எனக்கு என்ன பண்ணுறதுனு தெரியலை“
அம்மா கோபத்தில் திட்டுவது கேட்டது. அன்றிரவு அம்மாவே அப்பாவிடம் மிருதுளா வீட்டில் பேசியிருக்க வேண்டும். மறுநாள் காலை மிருதுளாவிற்கு அவளது அம்மா போன் செய்து விசாரித்தாள்
“ நமக்குள்ளே நடக்கிறதை எல்லாம் ஏன் வெளியே சொல்றே“
“ எங்க அம்மா கிட்ட தானே சொன்னேன்.. “
“நீ என்ன ஸ்கூல் பையனா.. அம்மாகிட்ட சொல்றதுக்கு.. உன் மனசில என்ன நினைச்சிட்டு இருக்கே.நான் என்ன லூசா“
“ஆமா.. “
“நீ எதிர்பாக்குற மாதிரி என்னாலே இருக்கமுடியாது ராகவ்“
“அதை எப்பவோ நல்லா புரிஞ்சிகிட்டேன். “
“அப்போ கண்ணையும் காதையும் மூடிகிட்டு இரு.. இன்னொரு தடவை இப்படி எங்க வீட்ல கம்ப்ளெயிண்ட் பண்ணினே.. நான் என்ன பண்ணுவேனு எனக்கே தெரியாது“
“உனக்கு என்கூட இருக்கப் பிடிக்கலைன்னா.. போயிடு.. என்னை ஏன் சித்ரவதை பண்ணுறே“
“நான் ஏன் போகணும்.. நான் இங்கே தான் இருப்பேன்“
“அப்போ நான் போறேன்.. “
“அது உன் இஷ்டம்“ என்றபடியே மலைப்பாம்பை தூக்கிக் கொண்டு பால்கனிக்கு நடந்தாள். பால்கனி தடுப்பு சுவர் மீது சாய்ந்து கொண்டு பாம்பை கையில் பிடித்தபடியே காற்றில் அலையவிட்டாள். அவள் மீதான கோபத்தைக் காட்டுவதற்காக அதிகாலையிலே அலுவலகம் கிளம்பிப் போனான்.
அன்றிரவு மிகத் தாமதமாகவே வீடு திரும்பினான். வீட்டில் அவளைக் காணவில்லை. எங்கே போயிருக்கிறாள் என்று தெரிந்து கொள்ள ஆர்வம் காட்டவில்லை. அடுத்த நாளும் அவள் வீடு திரும்பவில்லை என்பதால் அவளது அப்பாவிற்குப் போன் செய்தான். அவரும் போனை எடுக்கவில்லை. மூன்று நாட்களுக்குப் பிறகு மதியம் அவனுக்கு மிருதுளா போன் செய்தாள்.
“நான் முடிவு பண்ணிட்டேன். ராகவ்.. ஐ ஆம் லீவிங்“
“அது உன் இஷ்டம். “
“வீட்டுக்காக நான் இதுவரைக்கு ரெண்டு லட்சம் மேல செலவு பண்ணியிருக்கேன். நீ அதைத் திருப்பிக் குடுக்கணும்.. அந்த வீடு நான் அட்வான்ஸ் குடுத்து பிடிச்சது. அதனாலே அதைக் காலி பண்ணுறேனு சொல்லிட்டேன். நீ வேற வீடு பாத்துக்கோ.. நம்ம கல்யாணம் ஒரு பேட் ட்ரீம். அவ்வளவு தான் சொல்லமுடியும்“
எனப் போனை துண்டித்துவிட்டாள். இந்தக் கோபம் வடிந்து அவள் திரும்பிவந்துவிடுவாள் என்று தான் அவன் நினைத்துக் கொண்டிருந்தான். ஆனால் அவள் இவ்வளவு பிடிவாதமாக நடந்து கொண்டதை அவனால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. அவளுக்கு மறுபடி போன் செய்து திட்ட வேண்டும் போலிருந்தது. மறுபடி அழைத்த போது அவள் போனை எடுக்கவில்லை.
அன்றிரவு அவன் தன் வீட்டிற்குத் திரும்பி வரும் போது அவள் தனது உடைகள், பொருட்களைக் காலி செய்து எடுத்துப் போயிருப்பது தெரியவந்தது. ஆனால் அவள் அந்த ரப்பர் மலைப்பாம்பை எடுத்துக் கொண்டு போகவில்லை. அது ஹாலின் நடுவே தனியே கிடந்தது.
ஏன் அதை விட்டுப்போனாள். இதனால் தானே இவ்வளவு பிரச்சனையும். உண்மையில் அவள் என்ன தான் தேடுகிறாள். ஏன் அவள் விருப்பங்கள் இத்தனை விசித்திரமாக இருக்கின்றன.
அவன் ரப்பர் பாம்பினைக் காலால் எத்தினான். அப்படியும் ஆத்திரம் அடங்கவில்லை.
முரட்டுத் தனமாக ஆத்திரம் தீருமளவு அந்த மலைப்பாம்பினை ராகவ் மிதித்தான். பின்பு அதன் காற்றைப் பிடுங்கிவிட்டு பால்கனிக்கு எடுத்துச் சென்று வெளியே வீசி எறிந்தான்.
காற்றில் அந்தப் பாம்பு பறந்து போவதைப் பார்க்க அழகாகவே இருந்தது.
•••
நன்றி
அந்திமழை
ஒவியர் ராஜன்
S. Ramakrishnan's Blog
- S. Ramakrishnan's profile
- 657 followers
