S. Ramakrishnan's Blog, page 106
December 6, 2021
புனைவின் வரைபடம்
சிங்கப்பூரிலிருந்து வெளியாகும் அரூ இணைய இதழ் எனது விரிவான நேர்காணலை வெளியிட்டது. அரூ ஆசிரியர் குழுவினர் எனது படைப்புகளை முழுமையாக வாசித்து இந்த நேர்காணலைச் சிறப்பாக செய்திருந்தார்கள்.
சமீபத்தில் புரவி இதழில் எனது நேர்காணல் வெளியானது. எழுத்தாளர் கமலதேவி செய்த நேர்காணல். இந்த இரண்டு நேர்காணல்களின் தொகுப்பாக புனைவின் வரைபடம் நூலை உருவாக்கியுள்ளேன்
இந்த நூலை தேசாந்திரி பதிப்பகம் வெளியிடுகிறது
டிசம்பர் 25 சென்னை ரஷ்ய கலாச்சார மையத்தில் இந்நூல் வெளியிடப்படவுள்ளது

நன்றி
புகைப்படம் : வசந்தகுமாரன்
காந்தியின் நிழலில்
மகாத்மா காந்தி குறித்து நான் எழுதிய கட்டுரைகள் மற்றும் புனைவுகளைத் தொகுத்து காந்தியின் நிழலில் என்ற நூலை உருவாக்கியுள்ளேன்.
காந்தி குறித்து நான் எழுதிய சிறுகதைகள் ஆங்கிலம், ஹிந்தி, தெலுங்கு, மலையாளம், கன்னடம் என ஐந்து மொழிகளில் வெளியாகி மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளது.
இந்த நூலை தேசாந்திரி பதிப்பகம் வெளியிடுகிறது
டிசம்பர் 25 சென்னை ரஷ்ய கலாச்சார மையத்தில் இந்நூல் வெளியிடப்படவுள்ளது

நூலக மனிதர்கள்
நூலகத்திற்கும் எனக்குமான உறவு மிக நீண்டது. பள்ளிவயதில் நூலகத்திற்குச் செல்ல ஆரம்பித்தேன். எனது கிராம நூலகம் துவங்கி உலகின் மிகப்பெரிய நூலகங்கள் வரை நூற்றுக்கணக்கான நூலகங்களுக்குச் சென்றிருக்கிறேன். நான் கண்ட நூலக மனிதர்கள். சிறந்த நூலகங்கள் பற்றிய கட்டுரைகளின் தொகுப்பு
டிசம்பர் 25 மாலை சென்னை ரஷ்ய கலாச்சார மையத்தில் வெளியிடப்படுகிறது
தேசாந்திரி பதிப்பகம் இந்நூலை வெளியிடுகிறது

December 5, 2021
காலத்தின் சிற்றலை
பா ஜின்., பால் வான் ஹெய்ஸே, ஐரின் நெமிரோவ்ஸ்கி ,பில்லி காலின்ஸ், ரெட் பைன், லி போ, கென்ஸாபுரோ ஒயி ஜெய் பரினி, ஷெரீப் எஸ். எல்முசா, எமிதால் மஹ்மூத், ஹெலன் ஹான்ஃப் . ஜே.டி.சாலிஞ்சர், எடுவர்டோ காலியானோ வில்லியம் சரோயன், போஹுமில் ஹ்ரபால், பீட்டர் செமோலிக் என உலக இலக்கியத்தின் முக்கியப் படைப்பாளிகள் பற்றிய கட்டுரைகளின் தொகுப்பு
தேசாந்திரி பதிப்பகம் இந்நூலை வெளியிடுகிறது
டிசம்பர் 25 மாலை ஆறுமணிக்கு சென்னை ரஷ்ய கலாச்சார மையத்தில் இந்நூல் வெளியிடப்படவுள்ளது

நேற்றின் நினைவுகள்
நகுலன். கிரா, தோப்பில் முகமது மீரான், ஆ.மாதவன், தி. ஜானகிராமன். வண்ணநிலவன், விட்டல்ராவ், எஸ்.எல்.எம். ஹனீபா, ஷங்கர் ராமசுப்ரமணியன் எனத் தமிழ் இலக்கியத்தின் முக்கியப் படைப்பாளிகள் குறித்த கட்டுரைகளின் தொகுப்பு
தேசாந்திரி பதிப்பகம் இந்நூலை வெளியிடுகிறது
டிசம்பர் 25 மாலை ஆறுமணிக்கு சென்னை ரஷ்ய கலாச்சார மையத்தில் இந்நூல் வெளியிடப்படவுள்ளது

ஐந்து வருட மௌனம்
இந்த ஆண்டு வெளியாகவுள்ள எனது புதிய சிறுகதைத் தொகுப்பு
இதில் 25 சிறுகதைகள் உள்ளன. 350 பக்கங்களுக்கும் மேலாக உள்ள சிறுகதைத்தொகுப்பு
கடந்த இரண்டு ஆண்டுகளில் நான் எழுதிய சிறுகதைகளின் தொகுப்பாக வெளியாகிறது

டிசம்பர் 25 சனிக்கிழமை மாலை ஆறுமணிக்கு ரஷ்ய கலாச்சார மையத்தில் வெளியிடப்படயிருக்கிறது
இந்நூலை தேசாந்திரி பதிப்பகம் வெளியிடுகிறது
December 3, 2021
பறப்பாய் பூவிதழே
ரெயின்போ பிளவர் என்ற வாலண்டின் கதயேவ் எழுதிய ரஷ்ய சிறார் கதை ஒன்றை பல ஆண்டுகளுக்கு முன்பாக வாசித்தேன். அந்தக் கதையில் வரும் ஒரு காட்சி மனதை விட்டு அகலவேயில்லை. இன்று மீண்டும் அக் கதையைத் திரும்பப் படிக்க வேண்டும் போலத் தோன்றவே இணையத்தில் தேடிக் கண்டுபிடித்து வாசித்தேன்.

அந்தக் கதையில் கேட்டவரம் தரும் ஏழு வண்ணப்பூ ஒன்றை ஒரு சிறுமி பெறுகிறாள். அவள் அந்த இதழ்களை எப்படிப் பயன்படுத்தினாள் என்பதைக் கதை அழகாக விவரிக்கிறது
பறப்பாய், பறப்பாய் பூவிதழே
பறப்பாய் கிழக்கிருந்து மேற்கே
பின் வடக்கிருந்து தெற்கே பறந்திடுவாய்
சுற்றிப் பறந்தே திரும்பிவந்து
தரையை நீயே தொட்டிடுவாய்
நான் கேட்கும் வரத்தைத் தந்திடுவாய்
உலகத்திலுள்ள எல்லா விளையாட்டுச் சாமன்களையும் என்னுடையதாக்கு!
அவள் இப்படிச் சொல்லி முடித்த அக்கணமே எல்லாப் பக்கமிருந்தும் விளையாட்டுச் சாமன்கள் அவளை நோக்கி விரைந்து வரத்தொடங்கின. முதலில் வந்தவை பொம்மைகளே. அவை கண்களைச் சிமிட்டி ‘மா-மா’, ‘மா-மா’ என்று விடாமல் கூறின.
முதலில் ஷேன்யா மிகவும் மகிழ்ச்சியடைந்தாள். ஆனால் சில நிமிடங்களிலேயே ஏராளமான விளையாட்டுச் சாமான்கள் வந்து வாசலையும், அவர்களது சிறிய தெருவையும், இரண்டு பெரிய நிழற்சாலைகளையும், இன்னும் பாதியளவு சதுக்கத்தையும் நிறைத்துவிட்டன. யாருமே ஒரு பொம்மையையாவது மிதிக்காமல் நடக்க முடியவில்லை. பொம்மைகள் ‘மா-மா, மா-மா!’ என்று சளசளப்பதையத் தவிர வேறு எதையும் யாருமே கேட்க முடியவில்லை.

ஐம்பது இலட்சம் பேசும் பொம்மைகள் போடும் சத்தத்தை உங்களால் கற்பனை செய்ய முடிகிறதா? குறைந்தபட்சம் அத்தனை பொம்மைகளாவது இருந்தன. இவை மாஸ்கோவிலிருந்த பொம்மைகள் மட்டுமே. லெனின்கிராட், கார்கோவ், கீவ், லிவ்யூ ஆகிய நகரங்களிலிருந்து இனிதான் வரவேண்டும். அவை சோவியத் யூனியனின் ஒவ்வொரு தெருவிலும் கிளிகளைப் போலக் கீச்சிட்டுக் கொண்டிருந்தன.
ஷேன்யா கவலைப்பட ஆரம்பித்தாள். ஆனால் இது வெறும் ஆரம்பம் மட்டுமே. பொம்மைகளை அடுத்து உருண்டோடும் ரப்பர் பந்துகள் வந்தன. பிறகு கோலிகள், ஸ்கூட்டர்கள், மூன்று சக்கரச் சைக்கிள்கள், விளையாடு டிராக்டர்கள் மற்றும் கார்கள். தாண்டும் கயிறுகள் பாம்புபோலத் தரையில் ஊர்ந்து வந்தன. அவை பொம்மைகளின் காலில் சிக்கி, அவற்றைப் பதற்றத்தில் மேலும் பலமாகக் கூக்குரலிடச் செய்தன.
இலட்சக்கணக்கான விளையாட்டு விமானங்களும், ஆகாயக் கப்பல்களும் கிளைடர்களும் ஆகாயத்தில் பறந்துகொண்டிருந்தன. காகித பாராசூட்டுகளோ வானதிலிருந்து இறங்கி தொலைபேசி வயர்களிலும், மரங்களிலும், பனி போலச் சிக்கியிருந்தன. நகரத்தின் போக்குவரத்து முழுவதும் ஸ்தம்பித்துவிட்டது. சாலை சந்திப்புகளில் இருந்த மிலீஷியாக்காரர்கள் பக்கத்து விளக்குக் கம்பத்தில் ஏறிக்கொண்டு என்ன செய்வது என்று தெரியாமல் விழித்தார்கள்.
‘நிறுத்து, நிறுத்து!’ ஷேன்யா ஓலமிட்டாள். ‘இது போதும்! எனக்கு இதற்கு மேல் எதுவும் வேண்டாம்! எனக்கு இத்தனை விளையாட்டுப் பொருட்கள் தேவையில்லை. நான் சும்மாதான் சொன்னேன். எனக்குப் பயமாயிருக்கிறது…’ அதுசரி, அவள் சொன்னதை யார் கேட்டார்கள்? விளையாட்டுச் சாமான்கள் கொட்டிக்கொண்டே இருந்தன. முழு நகரமும் விளையாட்டுச் சாமான்களால் நிரைந்துவிட்டது. ஷேன்யா மாடிக்கு ஓடினாள்–விளையாட்டுச் சாமான்கள் அவளைத் தொடர்ந்தன. ஷேன்யா பால்கனிக்கு ஓடினாள்–விளையாட்டுச் சாமான்கள் அவளைத் தொடர்ந்தன. ஷேன்யா உப்பரிகைக்குச் சென்றாள்–விளையாட்டுச் சாமான்கள் அங்கும் அவளைத் தொடர்ந்தன. ஷேன்யா கூறைமேல் ஏறி அவசரம் அவசரமாக வயலட் நிற இதழைக் கிள்ளினாள். அதை வீசியெறிந்து சடுதியாகச் சொன்னாள்:
பறப்பாய், பறப்பாய் பூவிதழே
பறப்பாய் கிழக்கிருந்து மேற்கே
பின் வடக்கிருந்து தெற்கே பறந்திடுவாய்
சுற்றிப் பறந்தே திரும்பிவந்து
தரையை நீயே தொட்டிடுவாய்
நான் கேட்கும் வரத்தைத் தந்திடுவாய்
எல்லா விளையாட்டுச் சாமான்களையும் மறுபடி கடைகளுக்கே போகும்படி செய்!
அவள் இப்படிச் சொல்லி முடித்த அக்கணமே அத்தனை விளையாட்டுச் சாமான்களும் மறைந்தன. பின் ஷேன்யா ஏழு நிறப்பூவைப் பார்த்தாள். அதில் ஒரேயொரு இதழ் மட்டுமே மிச்சம் இருந்தது. ‘அடக் கடவுளே!’ அவள் சொன்னாள். ‘ஆறு இதழ்களை ஏற்கனவே உபயோகித்துவிட்டேன்; என்றாலும் அவற்றிலிருந்து ஒரு மகிழ்ச்சியையும் பெறவில்லை. நல்லது, அடுத்தத் தடவை சாமர்த்தியமாக இருப்பேன்.
•••
Thanks
சரவணன்
முழுக்கதையை வாசிக்க
புத்தக வெளியீட்டு விழா
எனது புதிய நூல்களின் வெளியீட்டு விழா டிசம்பர் 25 சனிக்கிழமை மாலை ஆறுமணிக்கு ரஷ்யக் கலாச்சார மையத்தில் நடைபெறவுள்ளது.

இந்த நிகழ்வில் எனது பத்து புதிய நூல்கள் வெளியிடப்படவுள்ளன. தேசாந்திரி பதிப்பகம் இந்த நூல்களை வெளியிடுகிறது.
இதில் டால்ஸ்டாயின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு எழுதிய மண்டியிடுங்கள் தந்தையே நாவல் வெளியாகிறது.
எழுத்தாளர்களின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு சர்வதேச அளவில் நிறைய நாவல்கள் எழுதப்பட்டுள்ளன. ஆனால் தமிழில் இந்தவகையான நாவல்இதுவரை வெளியானதில்லை. அதுவும் ஒரு ரஷ்ய எழுத்தாளரின் வாழ்க்கையை விவரிக்கும் நாவல் இந்நாள் வரை தமிழில் எழுதப்பட்டதில்லை. இதுவே முதன்முறை . அந்த வகையில் இதைத் தமிழில் எழுதப்பட்ட ரஷ்ய நாவல் என்பேன்.
இந்த நாவலை எழுதுவதற்காக மூன்று ஆண்டுகள் டால்ஸ்டாயின் வாழ்க்கை வரலாறு, ரஷ்ய வரலாறு, டால்ஸ்டாயின் டயரிக்குறிப்புகள். சோபியாவின் டயரிக்குறிப்புகள். டால்ஸ்டாய் குடும்பத்தினரின் நினைவலைகள், டால்ஸ்டாய் பற்றி எழுதப்பட்ட கட்டுரைத் தொகுப்புகள், அவரது சமகால எழுத்தாளரின் படைப்புகள். பண்ணை அடிமைகள் பற்றிய அறிக்கைகள். எனத்தேடித்தேடி படித்தேன்.
அழகிய வடிவமைப்புடன் கெட்டி அட்டைப் பதிப்பாக இந்நூல் வெளியாகிறது.

December 1, 2021
வாசிப்பெனும் கலை
சில ஆண்டுகளுக்கு முன்பாக மலேசியாவில் உள்ள ஆசிரியர்களுக்கான பயிலரங்கு ஒன்றில் கலந்து கொண்டேன். அதன் முக்கிய நோக்கம் வகுப்பறையில் கவிதை கவிதை நாடகம் போன்றவற்றை எப்படிக் கற்பிப்பது என்பது குறித்து உரையாடுவதாகும். பாடமாக வைக்கப்பட்ட சிறுகதையோ, கவிதையோ, நாவலோ மாணவர்களுக்கு விருப்பமாக இருப்பதில்லை. மதிப்பெண் பெற வேண்டும் என்பதற்காக மட்டுமே படிப்பதால் குறிப்பிட்ட எழுத்தாளர்கள் மீதே அவர்களுக்குக் கோபமும் வெறுப்பும் வந்துவிடுகிறது.
நான் படிக்கும் நாட்களில் துணைப்பாடமாக இருந்த சிறுகதைகளை வகுப்பில் நடத்தவே மாட்டார்கள். பரிச்சைக்கு முன்பாகப் பத்து கேள்விகளை எழுதிப்போட்டு அதை மனப்பாடம் செய்யச் சொல்லிவிடுவார்கள் அப்படிதான் ஜெயகாந்தன். புதுமைப்பித்தன் சிறுகதைகளைப் பள்ளியில் நடத்தினார்கள். மனப்பாடம் செய்வது என்பதைத் தவிர இலக்கியத்தைச் சுவாரஸ்யமாகச் சொல்லித் தரும் ஆசிரியர்கள் குறைவே.

ஆகவே பள்ளி கல்லூரி மாணவர்களில் பலரும் இந்தத் துணைப்பாடங்களை. பரிச்சைக்குப் படிக்க வேண்டிய நாவல்களைத் தவிர்த்துவிடுவார்கள். உலகெங்கும் இது தான் நிலை. இன்றும் வகுப்பறையில் ஒரு சிறுகதையை எப்படி நடத்துவதும் அந்த எழுத்தாளரை எப்படி அறிமுகம் செய்வது என்பது சவாலே.
இதைத் தான் The act of reading ஆவணப்படம் பேசுகிறது.
ஓய்வுபெற்ற உயர்நிலைப் பள்ளி ஆங்கில ஆசிரியர் தன்னிடம் பதினைந்து ஆண்டுகளுக்குப் படித்த ஒரு மாணவரை மீண்டும் சந்திக்கிறார். அந்த மாணவர் படிக்கிற காலத்தில் புத்தக வாசிப்புப் பயிற்சியில் தோல்வியுற்றவர். அவர்களுக்குப் பாடமாக வைக்கப்பட்டிருந்த மோபிடிக் நாவலை அவரால் படித்து மதிப்பீடு செய்ய இயலவில்லை. இன்று அந்த மாணவர் திரைக்கலை பயின்று முதுநிலைப் பட்டம் பெற்றுள்ளதோடு மோபிடிக் மீது மிகுந்த விருப்பம் கொண்டவராக இருக்கிறார்
ஏன் பாடமாக வைக்கப்பட்ட ஒரு நாவலை மாணவர்களால் படிக்க முடியவில்லை. வகுப்பறையில் இலக்கியம் எப்படிக் கற்பிக்கப்பட வேண்டும் வாசிப்பு ஒரு மனிதனுக்கு எவ்விதம் முக்கியமானது. அது சமூகத்தில் என்ன விளைவுகளை ஏற்படுத்துகிறது என்பதைப் பற்றியே இந்த ஆவணப்படம் பேசுகிறது

மார்க் ப்ளம்பெர்க் என்ற திரைப்பட இயக்குநர் தனது வகுப்பறை நினைவுகளைப் பகிர்ந்து கொள்வதே படத்தின் பிரதான அம்சம்.
வாசிப்பின் அவசியத்தைப் பேசும் இந்த ஆவணப்படம் இன்னொரு வகையில் மோபிடிக் நாவலைக் கொண்டாடுகிறது. ஹெர்மன் மெல்வில் பற்றியும் அவரது கடலோடி அனுபவங்களையும் நாவல் எழுதப்பட்டவிதம், அதன் கதாபாத்திரங்களின் தனித்துவம். நாவலில் வெளிப்படும் மெய் தேடல் என விரிவாக இந்நாவலை ஆராய்ந்து வெளிப்படுத்துகிறார்கள்
ஆவணப்படத்தின் வழியே மெல்வில் ம்யூசியத்தை நாம் காணுகிறோம். அங்குள்ள புகைப்படங்களின் மூலமாக மெல்விலின் கடந்த காலம் விவரிக்கப்படுகிறது. மெல்விலின் கொள்ளுப்பேரன் பீட்டர் விட்டெமோர் நேர்காணல் செய்யப்படுகிறார். அவர் மோபிடிக்கை மதிப்பிடும் விதமும் தனது குடும்ப வரலாற்றை நினைவு கொள்வதும் சிறப்பாகப் பதிவு செய்யப்பட்டிருக்கிறது
நாவல் மாரத்தான் என மோபிடிக் நாவலை அதன் தீவிரவாசகர்கள் ஒன்று கூடி வாசிக்கிறார்கள். ஒரு நிமிடத்திற்கு 141.8 வார்த்தைகள் வீதம் 25 மணி நேரத்தில் இந்த நாவலை வாசித்து முடிக்கிறார்கள்.
இது போலவே மோபிடிக்கை நாடகமாக்கும் போது ஏற்பட்ட அனுபவத்தையும். கற்றல் திறன் குறைந்தவர்களுக்கு வாசிப்பு ஏற்படுத்தும் மாற்றங்களையும் ஆவணப்படத்தில் அழகாக விவரித்திருக்கிறார்கள்.
Poor Herman என்ற நாடகத்தின் மூலம் மெல்வில் மற்றும் அவரது குடும்பம் குறித்த மாற்றுப்பார்வைகளை முன்வைத்த விஷயமும் படத்தில் விவாதிக்கப்படுகிறது.

1851ல் வெளியான மோபிடிக் நாவல் 150 வருஷங்களைக் கடந்து இன்றும் வாசகர்களின் விருப்பத்திற்குரிய நாவலாக விளங்குகிறது. திரைப்படமாகவும் தொலைக்காட்சி தொடராகவும் மேடை நாடகமாகவும் பலமுறை நிகழ்த்தப்பட்டிருக்கிறது. நானே மோபிடிக் பற்றி விரிவான உரை ஒன்றை நிகழ்த்தியிருக்கிறேன். இப்படி உலகெங்கும் மோபிடிக்கின் ரசிகர்கள் அதைக் கொண்டாடிவருகிறார்கள்
இந்த ஆவணப்படம் இன்றைய இளந்தலைமுறை இது போன்ற செவ்வியல் நாவலை எப்படி வாசிக்கிறது. புரிந்து கொள்கிறது என்பதையே முதன்மையாக விவரிக்கிறது.
society is moving from literacy to digital memory என்று படத்தின் ஒரு காட்சியில் ஜான் கிளேரி குறிப்பிடுகிறார். தேவையற்ற தகவல்களை மூளையில் குப்பையாக நிரப்பி வைத்துக் கொள்ளும் நாம் உண்மையில் வாசிப்பின் வழியே சென்ற தலைமுறை அடைந்த இன்பத்தை. முழுமையான அனுபவத்தை இழந்துவிட்டோம் என்கிறார் கிளேரி. அது உண்மையே.
***
November 30, 2021
புதிய சிறுகதை
டிசம்பர் மாத அந்திமழை இதழில் எனது புதிய சிறுகதை மலைப்பாம்பின் கண்கள் வெளியாகியுள்ளது.

S. Ramakrishnan's Blog
- S. Ramakrishnan's profile
- 657 followers
