S. Ramakrishnan's Blog, page 109
December 3, 2021
புத்தக வெளியீட்டு விழா
எனது புதிய நூல்களின் வெளியீட்டு விழா டிசம்பர் 25 சனிக்கிழமை மாலை ஆறுமணிக்கு ரஷ்யக் கலாச்சார மையத்தில் நடைபெறவுள்ளது.

இந்த நிகழ்வில் எனது பத்து புதிய நூல்கள் வெளியிடப்படவுள்ளன. தேசாந்திரி பதிப்பகம் இந்த நூல்களை வெளியிடுகிறது.
இதில் டால்ஸ்டாயின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு எழுதிய மண்டியிடுங்கள் தந்தையே நாவல் வெளியாகிறது.
எழுத்தாளர்களின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு சர்வதேச அளவில் நிறைய நாவல்கள் எழுதப்பட்டுள்ளன. ஆனால் தமிழில் இந்தவகையான நாவல்இதுவரை வெளியானதில்லை. அதுவும் ஒரு ரஷ்ய எழுத்தாளரின் வாழ்க்கையை விவரிக்கும் நாவல் இந்நாள் வரை தமிழில் எழுதப்பட்டதில்லை. இதுவே முதன்முறை . அந்த வகையில் இதைத் தமிழில் எழுதப்பட்ட ரஷ்ய நாவல் என்பேன்.
இந்த நாவலை எழுதுவதற்காக மூன்று ஆண்டுகள் டால்ஸ்டாயின் வாழ்க்கை வரலாறு, ரஷ்ய வரலாறு, டால்ஸ்டாயின் டயரிக்குறிப்புகள். சோபியாவின் டயரிக்குறிப்புகள். டால்ஸ்டாய் குடும்பத்தினரின் நினைவலைகள், டால்ஸ்டாய் பற்றி எழுதப்பட்ட கட்டுரைத் தொகுப்புகள், அவரது சமகால எழுத்தாளரின் படைப்புகள். பண்ணை அடிமைகள் பற்றிய அறிக்கைகள். எனத்தேடித்தேடி படித்தேன்.
அழகிய வடிவமைப்புடன் கெட்டி அட்டைப் பதிப்பாக இந்நூல் வெளியாகிறது.
December 1, 2021
வாசிப்பெனும் கலை
சில ஆண்டுகளுக்கு முன்பாக மலேசியாவில் உள்ள ஆசிரியர்களுக்கான பயிலரங்கு ஒன்றில் கலந்து கொண்டேன். அதன் முக்கிய நோக்கம் வகுப்பறையில் கவிதை கவிதை நாடகம் போன்றவற்றை எப்படிக் கற்பிப்பது என்பது குறித்து உரையாடுவதாகும். பாடமாக வைக்கப்பட்ட சிறுகதையோ, கவிதையோ, நாவலோ மாணவர்களுக்கு விருப்பமாக இருப்பதில்லை. மதிப்பெண் பெற வேண்டும் என்பதற்காக மட்டுமே படிப்பதால் குறிப்பிட்ட எழுத்தாளர்கள் மீதே அவர்களுக்குக் கோபமும் வெறுப்பும் வந்துவிடுகிறது.
நான் படிக்கும் நாட்களில் துணைப்பாடமாக இருந்த சிறுகதைகளை வகுப்பில் நடத்தவே மாட்டார்கள். பரிச்சைக்கு முன்பாகப் பத்து கேள்விகளை எழுதிப்போட்டு அதை மனப்பாடம் செய்யச் சொல்லிவிடுவார்கள் அப்படிதான் ஜெயகாந்தன். புதுமைப்பித்தன் சிறுகதைகளைப் பள்ளியில் நடத்தினார்கள். மனப்பாடம் செய்வது என்பதைத் தவிர இலக்கியத்தைச் சுவாரஸ்யமாகச் சொல்லித் தரும் ஆசிரியர்கள் குறைவே.

ஆகவே பள்ளி கல்லூரி மாணவர்களில் பலரும் இந்தத் துணைப்பாடங்களை. பரிச்சைக்குப் படிக்க வேண்டிய நாவல்களைத் தவிர்த்துவிடுவார்கள். உலகெங்கும் இது தான் நிலை. இன்றும் வகுப்பறையில் ஒரு சிறுகதையை எப்படி நடத்துவதும் அந்த எழுத்தாளரை எப்படி அறிமுகம் செய்வது என்பது சவாலே.
இதைத் தான் The act of reading ஆவணப்படம் பேசுகிறது.
ஓய்வுபெற்ற உயர்நிலைப் பள்ளி ஆங்கில ஆசிரியர் தன்னிடம் பதினைந்து ஆண்டுகளுக்குப் படித்த ஒரு மாணவரை மீண்டும் சந்திக்கிறார். அந்த மாணவர் படிக்கிற காலத்தில் புத்தக வாசிப்புப் பயிற்சியில் தோல்வியுற்றவர். அவர்களுக்குப் பாடமாக வைக்கப்பட்டிருந்த மோபிடிக் நாவலை அவரால் படித்து மதிப்பீடு செய்ய இயலவில்லை. இன்று அந்த மாணவர் திரைக்கலை பயின்று முதுநிலைப் பட்டம் பெற்றுள்ளதோடு மோபிடிக் மீது மிகுந்த விருப்பம் கொண்டவராக இருக்கிறார்
ஏன் பாடமாக வைக்கப்பட்ட ஒரு நாவலை மாணவர்களால் படிக்க முடியவில்லை. வகுப்பறையில் இலக்கியம் எப்படிக் கற்பிக்கப்பட வேண்டும் வாசிப்பு ஒரு மனிதனுக்கு எவ்விதம் முக்கியமானது. அது சமூகத்தில் என்ன விளைவுகளை ஏற்படுத்துகிறது என்பதைப் பற்றியே இந்த ஆவணப்படம் பேசுகிறது

மார்க் ப்ளம்பெர்க் என்ற திரைப்பட இயக்குநர் தனது வகுப்பறை நினைவுகளைப் பகிர்ந்து கொள்வதே படத்தின் பிரதான அம்சம்.
வாசிப்பின் அவசியத்தைப் பேசும் இந்த ஆவணப்படம் இன்னொரு வகையில் மோபிடிக் நாவலைக் கொண்டாடுகிறது. ஹெர்மன் மெல்வில் பற்றியும் அவரது கடலோடி அனுபவங்களையும் நாவல் எழுதப்பட்டவிதம், அதன் கதாபாத்திரங்களின் தனித்துவம். நாவலில் வெளிப்படும் மெய் தேடல் என விரிவாக இந்நாவலை ஆராய்ந்து வெளிப்படுத்துகிறார்கள்
ஆவணப்படத்தின் வழியே மெல்வில் ம்யூசியத்தை நாம் காணுகிறோம். அங்குள்ள புகைப்படங்களின் மூலமாக மெல்விலின் கடந்த காலம் விவரிக்கப்படுகிறது. மெல்விலின் கொள்ளுப்பேரன் பீட்டர் விட்டெமோர் நேர்காணல் செய்யப்படுகிறார். அவர் மோபிடிக்கை மதிப்பிடும் விதமும் தனது குடும்ப வரலாற்றை நினைவு கொள்வதும் சிறப்பாகப் பதிவு செய்யப்பட்டிருக்கிறது
நாவல் மாரத்தான் என மோபிடிக் நாவலை அதன் தீவிரவாசகர்கள் ஒன்று கூடி வாசிக்கிறார்கள். ஒரு நிமிடத்திற்கு 141.8 வார்த்தைகள் வீதம் 25 மணி நேரத்தில் இந்த நாவலை வாசித்து முடிக்கிறார்கள்.
இது போலவே மோபிடிக்கை நாடகமாக்கும் போது ஏற்பட்ட அனுபவத்தையும். கற்றல் திறன் குறைந்தவர்களுக்கு வாசிப்பு ஏற்படுத்தும் மாற்றங்களையும் ஆவணப்படத்தில் அழகாக விவரித்திருக்கிறார்கள்.
Poor Herman என்ற நாடகத்தின் மூலம் மெல்வில் மற்றும் அவரது குடும்பம் குறித்த மாற்றுப்பார்வைகளை முன்வைத்த விஷயமும் படத்தில் விவாதிக்கப்படுகிறது.

1851ல் வெளியான மோபிடிக் நாவல் 150 வருஷங்களைக் கடந்து இன்றும் வாசகர்களின் விருப்பத்திற்குரிய நாவலாக விளங்குகிறது. திரைப்படமாகவும் தொலைக்காட்சி தொடராகவும் மேடை நாடகமாகவும் பலமுறை நிகழ்த்தப்பட்டிருக்கிறது. நானே மோபிடிக் பற்றி விரிவான உரை ஒன்றை நிகழ்த்தியிருக்கிறேன். இப்படி உலகெங்கும் மோபிடிக்கின் ரசிகர்கள் அதைக் கொண்டாடிவருகிறார்கள்
இந்த ஆவணப்படம் இன்றைய இளந்தலைமுறை இது போன்ற செவ்வியல் நாவலை எப்படி வாசிக்கிறது. புரிந்து கொள்கிறது என்பதையே முதன்மையாக விவரிக்கிறது.
society is moving from literacy to digital memory என்று படத்தின் ஒரு காட்சியில் ஜான் கிளேரி குறிப்பிடுகிறார். தேவையற்ற தகவல்களை மூளையில் குப்பையாக நிரப்பி வைத்துக் கொள்ளும் நாம் உண்மையில் வாசிப்பின் வழியே சென்ற தலைமுறை அடைந்த இன்பத்தை. முழுமையான அனுபவத்தை இழந்துவிட்டோம் என்கிறார் கிளேரி. அது உண்மையே.
***
November 30, 2021
புதிய சிறுகதை
டிசம்பர் மாத அந்திமழை இதழில் எனது புதிய சிறுகதை மலைப்பாம்பின் கண்கள் வெளியாகியுள்ளது.
November 29, 2021
பையன் கதைகள்
வி.கெ. என் மலையாளத்தில் முக்கியமான எழுத்தாளர். அவரது பையன் கதைகள் தமிழில் சாகித்ய அகாதமி வெளியீடாக வந்துள்ளது. 2014ல் கவிஞர் ஸ்ரீபதி பத்மநாபா வி.கெ.என் பையன் கதைகளில் சிலவற்றை மொழியாக்கம் செய்து வெளியிட்டிருக்கிறார். அவர் மொழியாக்கம் செய்த கதை ஒன்றை நான் வாசிக்கும்படி அப்போது மின்னஞ்சலில் அனுப்பி வைத்திருக்கிறார். நானும் அவரைப் பாராட்டி பதில் எழுதியிருக்கிறேன். அந்த மின்னஞ்சலை இன்று பார்த்தபோது ஸ்ரீபதி சில ஆண்டுகளுக்கு முன்பு மறைந்து போன நினைவு மனதில் ஆழமான வலியை உருவாக்கியது. நிறையக் கனவுகளுடன் இருந்தவர். நாலைந்து முறை சந்தித்துப் பேசியிருக்கிறேன்.
விகெஎன்னின் நகைச்சுவை அலாதியானது. இந்தக் கதை அதற்குச் சிறந்த உதாரணம்
••

பையன் கதைகள்
மலையாளத்தில் : வி.கெ.என்.
தமிழில் : ஸ்ரீபதி பத்மநாபா
அமெரிக்காவில் ஸிராக்யூஸ் நகரத்தில் நடந்த புத்தகச் செமினாரில் இந்தியாவின் பிரதிநிதிகளாகக் கலந்து கொண்ட இரண்டு பிரபலங்கள்:
இட்டூப்பு முதலாளியும் பையனும்.
ஆங்கிலத்தைச் சரளமாகக் கையாள முடியாது என்கிற குறைபாடு பையனுக்கு இருந்தது. கருவூலத்தில் கிட்டத்தட்ட இருபது இங்கிலீஷ் சொற்களை மட்டுமே மூலதனமாக வைத்திருக்கும் இட்டூப்புக்கு இது எதுவும் பிரச்னையேயில்லை. கருத்துப் பரிமாற்றம் சுலபமாக நடந்தது. அவர் எங்கேயும் பிரகாசித்தார். தனித்துத் தெரிந்தார். கமிட்டிக் கூட்டங்களிலும் குழு விவாதங்களிலும் ஆராய்ச்சிக் குழுவிலும் பிரசங்க மேடையிலும் கலக்கித் தள்ளினார். தலைவரின் வாய்ச்சாதுர்யத்துக்கு முன்னால் செமினார் பலமுறை ஸ்தம்பித்து நின்றது.
என்ஜாய் என்கிற புதிய சொல்லை அவர் அமெரிக்காவுக்குக் கொண்டு போயிருந்தார்.
புத்தக விற்பனையின் டெக்னிக்குகளை விவாதிக்கிற அமர்வில் பேச இந்தியப் பிரதிநிதிகளைச் சேர்மன் அழைத்தார்.
இட்டூப்பு ரகசியமாகப் பையனிடம் கேட்டார்:
நீ பேசறியாடா?
பையன் சொன்னான்: வேண்டாம்.
இட்டூப்பு எழுந்தார்.
மி வாண்ட் ஸ்பீக். (நான் பேச விரும்புகிறேன்.)
உலகெங்குமிருந்து வந்திருந்த பிரதிநிதிகள் இந்தியக் கதாபாத்திரத்தை ஆர்வமாய்ப் பார்த்தார்கள். இட்டூப்பு வெள்ளமாகப் பிரசங்கித்தார்:
சேல்ஸ்-பெஸ்ட்-லைப்ரரி சீசன்-ஸ்கூல் சீசன்-ஃபிஃப்டி கமிஷன்-சேல் அன்ட் என்ஜாய்.
ஆழமான இந்தச் சொற்பொழிவின் பொருளை ஓரளவு இவ்வாறு தொகுக்கலாம்: புத்தகம் விற்பதற்குச் சிறந்த காலம் லைப்ரரிக்காரர்கள் மார்க்கெட்டுக்கு வருகிற சீசனும், பள்ளிகள் திறக்கும் காலமும்தான். இந்தக் காலத்தில் கொஞ்சமும் நேரத்தை வீணாக்காமல் பரபரப்பாய் விற்று லாபம் சம்பாதியுங்கள். ஐம்பது சதவீதம்கூடக் கமிஷன் கொடுக்கலாம். (குறிப்பு: என்ஜாய் என்றவார்த்தை இங்கே லாபம் என்று பொருள்படும்.)
இட்டூப்பு வார்த்தைகளை நேராகவும் தலைகீழாய்த் திருப்பியும் பிரயோகித்தார். புத்தகத்தை உயர்த்திக் காண்பித்தார். விற்பதைப் போல் அபிநயம் பிடித்தார். காசு வாங்கிப் பாக்கெட்டில் போடுகிற விதத்தையும் காண்பித்தார். சொற்பொழிவு முடிந்தபோது அரங்கில் கரகோஷம்.
இட்டூப்புப் பையனிடம் கேட்டார்: எப்டிடா இருந்துச்சு?
பையன் சொன்னான்: நீங்க கலக்கிட்டீங்க.
அப்ப நீ ஏறிப் பேசீருக்க வேண்டீதுதானேடா?
பையன் சொன்னான்: நீங்க இருக்கும்போது நான் சோபிக்க மாட்டேன்.
மாலை நேர செஷன் முடிந்தபோது செமினாரே பிரவாகமாக வந்து இட்டூப்பை மூடியது. மஹாராஜாக்களுடைய, மணிநாகங்களுடைய, அரைகுறை ஆங்கிலம் பேசுபவர்களின் நாடான இந்தியாவிலிருந்து வந்த இட்டூப்பை அவர்கள் வாரியெடுத்துக் கொண்டார்கள்.
அவருடைய கையைக் குலக்கி, தோளில் தட்டி, கையெழுத்து வாங்கினார்கள். டின்னருக்கும் லஞ்சுக்கும் காக்டெய்லுக்கும் அவரை அழைத்தார்கள். அல்லோ, அல்லோ என்றும் என்ஜாய் என்ஜாய் என்றும் இட்டூப்பு கூவினார்.
(இங்கே அல்லோ (ஹலோ) என்பதற்குச் சந்தோஷம் என்பதும் என்ஜாய் என்பதற்கு அழைப்பை ஏற்றுக்கொள்கிறேன் என்பதும் பதவுரை.)
டி.எஸ். எலியட்டின் கவிதைகளைப் பற்றி டைம்ஸ் லிட்டரரி சப்ளிமென்டில் கட்டுரை எழுதிய பையன் இந்த நேரம் முழுவதும் ஃபோயரின் ஒரு மூலையில் சப்ளீஸாக நின்றுகொண்டிருந்தான். கூட்டம் கலையத் துவங்கியபோது இட்டூப்புப் பையனைத் தேடி வந்தார்.
நீயேண்டா மூலையில வந்து நிக்கறே?
பையன் சொன்னான்: ஒண்ணுமில்ல.
ஒன் மூஞ்சியேண்டா சோந்துபோயிருக்கு?
பசிக்குது.
இட்டூப்பு சொன்னார்: வாடா. ம்ம ஓட்டலுக்குப் போயி கொஞ்சம் கஷாயமும் எறச்சியும் அடிக்கலாம்.
பையன் எதிர்ப்பைத் தெரிவித்தான்: அதெப்படி? ஏழு மணிக்கு ஹவாய் ஹோட்டல்ல காக்டெய்லுக்கு வர்றதா பஹாமாஸ் க்ரூப்கிட்ட நீ சொன்னதைக் கேட்டேனே?
இட்டூப்பு சொன்னார்: டே, நீ, இங்கிலிசு பேசி இங்கயே கெட. இவனுக கூடக் குடிச்சா நம்முளுக்கெல்லாம் என்னடா ஏறும்?
அப்ப நீ போகலியா?
இட்டூப்பு பையனின் கையைப் பிடித்து இழுத்தார்: நீயி வாடா. ம்ம ஓட்டலுக்குப் போலாம்.
வசந்த காலம். பனியும் கொடுங்குளிரும். இரவு விரைவாகவே வந்தது. அறையின் சாவிகளை வைத்திருந்த ஹோட்டல் பெண் குட்நைட் வெல்கம் எல்லாம் கூறியபடி சாவிகளை நீட்டினாள்.
இட்டூப்புப் பையனிடம் கேட்டார்: குட்டி எப்டிடா?
பையன் சொன்னான்: சரக்கெல்லாம் இல்ல.
அவனின் அறிவுப்புச் சரிதான். ஒரு சராசரி அமெரிக்கப் பெண். செம்பட்டை முடி. வெள்ளைத் தோல். தோலின் மேல் கறுப்புப் புள்ளிகள். மொத்தமாக அவளிடம் அனுகூலமாயிருந்தது அவளுடைய வயசு மட்டுமே. இருபது வசந்தங்களுக்கு மேல் போகாது. அப்படிப் போனால், பையன் நினைத்துக் கொண்டான்: அப்புறம் வசந்தங்களுக்கே அர்த்தமில்லை.
சாவியை வாங்கி எதிரில் லாபியிலிருந்த சோஃபாவில் அமர்ந்த பிறகு இட்டூப்பு கேட்டார்: ஒனக்கு குட்டிய பிடிக்கல, இல்லடா?
பையன் உணர்த்தினான்: அவ்வளவொண்ணும் நல்லாயில்ல.
இருந்தாலும், நம்முளுக்கு ஒராளு வேணுமில்லடா?
எதுக்கு?
குளுருதில்லடா?
என்ன குளிரு? ஏர் கண்டிஷன் செஞ்ச ஹோட்டல்ல மிதசீதோஷ்ண நிலைதானே?
இட்டூப்பு கோபித்தார்: டேய், நீயி சாகித்தியம் பேசினேன்னு வச்சுக்கோ! மித சீதோஷ்ணத்தில தனியாப் போத்திட்டுப் படுத்துக்கறதுக்காடா இம்மாந் தூரம் வந்திருக்கோம்?
வேறென்ன வேணும்?
குட்டிகிட்ட போயி கேளுடா.
பையன் சிரித்தான்: நீ கேட்டாலே போதும்.
இட்டூப்பு எழுந்தார்: ஒனக்குத் தகிரியம் பத்தாதுடா, வா.
பாருக்குப் போனார்கள். இட்டூப்பு இரண்டு பேர்பன் விஸ்கியும் இரண்டு கிலோகிராம் பன்றியிறைச்சியும் அடித்தார். பையன் இரண்டு விஸ்கியும் ஐநூறு கிராம் வாத்துமுட்டையும்.
இட்டூப்பு கேட்டார்: கிளம்பலாமாடா?
மீண்டும் லாபியையே வந்தடைந்தார்கள்.
பையன் சொன்னான்: நீ போகாம இருந்தது சரியில்ல. பஹாமாக்காரங்க உன்னை எதிர்பார்த்து நின்னுட்டிருப்பாங்க.
சாவி கவுன்ட்டரிலிருந்த பெண்ணின் மேல் கவனத்தைத் திருப்பி இட்டூப்பு சொன்னார்: அதுககிட்டப் போயி வேலயப் பாக்கச் சொல்லுடா.
பையன் சொன்னான்: சரி, ரூமுக்குப் போலாம்.
இட்டூப்பு கேட்டார்: ஒன்னால கேக்க முடியுமாடா?
யாருகிட்ட?
அந்தக் குட்டிகிட்ட.
முடியாது.
இட்டூப்பு சொன்னார்: அப்டின்னா, நாங்களே கேட்டுக்கறோம்.
பையன் தடுத்தான்: வேண்டா, இட்டூப்பு!
போடா!
இட்டூப்பு கவுன்டரை நோக்கி நடந்தார். அந்தப் பெண் சிரித்தபடி முன்னால் வந்தபோது தொண்டையைக் கனைத்துக் கொண்டு கெஞ்சுகிற குரலில் சொன்னார்:
சிஸ்டர் – இந்தியா ஹாட் – அமெரிக்கா கோல்ட் – வாண்ட் கம்பெனி – ஐ பே – ரூம் 635 – யெஸ் – கம் – நோ – சாரி.
கீர்த்தனைமாலையின் பரிபாஷை: அன்பே, இந்தியா சூடான தேசம். அமெரிக்காவோ குளிர் தேசம். எனக்குத் துணை தேவைப்படுகிறது. பணம் தருகிறேன். என்னுடைய ரூம்நம்பர் 635. சம்மதமென்றால் வாருங்கள். இல்லையென்றால் மன்னித்து விடுங்கள்.
பையன் விழித்து நிற்கையில் அந்தப் பெண் கன்னங்களில் மத்தாப்பூ பூக்க சிரித்து நாக்குக்குள் இட்டு உருட்டி விழுங்கும் அமெரிக்கன் ஆங்கிலத்தில் கேட்டாள்:
வை வோன்ட் யூ கால் மி ஆஃப்டர் எய்ட், படீ?
இட்டூப்பு கெஞ்சும் குரலில் பையனிடம் கேட்டார்: என்னடா சொல்லுது குட்டீ?
பையன் சொன்னான்: எட்டு மணிக்கப்புறம் அவளைக் கூப்டறதாம்.
இட்டூப்பு தலை வணங்கி அவளைத் தொழுதார். (நான் கூப்டறேன்.)
எட்டரை மணியளவில் பையன் தன் அறையில் மாலை நாளிதழை வாசித்துக் கொண்டிருந்தபோது டெலிபோன் ஒலித்தது. இட்டூப்பு!
டேய்…
என்ன?
குட்டி வந்திருக்குடா.
நல்லது.
வாடா.
நான் வரல.
உனக்கு வேண்டாமா?
வேண்டா.
ஏண்டா?
பையன் சொன்னான்:
பொறாமை.
****
நன்றி
ஸ்ரீபதி பத்மநாபா மலைகள் இணையஇதழ்
November 27, 2021
கவிதையின் இடம்.
The Ecco Anthology of International Poetry என்ற பன்னாட்டுக் கவிதைகளின் தொகுப்பை வாசித்தேன். இந்தியக்கவிதைகள் இதில் குறைவு. தமிழ்க் கவிதைகள் இல்லவே இல்லை. பெரும்பான்மை உலகக் கவிதைத் தொகுப்புகளிலும் இதே நிலை தான். காரணம் இதன் தொகுப்பாசிரியருக்கு இந்தியக் கவிதைகள் பற்றி எதுவும் தெரியாது. மேலும் தமிழ் கவிதைகளின் ஆங்கில மொழியாக்கம் வெளியாவதும் குறைவு என்பதால் நவீன தமிழ்க் கவிதையின் மகத்தான பங்களிப்பு இன்றும் உலகின் கவனத்தைப் பெறவேயில்லை.

Antonio Machado, Osip Mandelstam, Vladimir Mayakovsky, Czeslaw Milosz, Eugenio Montale, Nicanor Parra, Cesare Pavese, Octavio Paz , Fernando Pessoa , Vasko Popa Adam Zagajewski Jorge Luis Borges , Bertolt Brecht , Andre Breton , Joseph Brodsky , Cabral de Melo Neto, Ernesto Cardenal, Constantine P. Cavafy, Paul Celan , Aime Cesaire Rene Char Ruben Dario Faiz Ahmed Faiz, Federico Garcia Lorca, Zbigniew Herbert, Jacques Prevert Vladimir Holan, Miroslav Holub, Ko Un,Tomas Transtromer, Marina Tsvetaeva, Paul Valery, Cesar Vallejo, Wis1awa Szymborska போன்ற கவிஞர்களின் கவிதைகளைக் கொண்ட 600 பக்கங்கள் உள்ள இந்தத் தொகுப்பின் வழியே உலகின் முக்கியக் கவிஞர்கள் பலரையும் அறிந்து கொள்ளமுடிவதோடு இன்றைய கவிதை எதை முன்வைக்கிறது. அதன் மொழி மற்றும் வடிவம் எப்படி இருக்கிறது. இக்கவிதைகளின் தனித்துவமாக எதைக்குறிப்பிட முடியும் என்பதை அறிய முடிகிறது.
கவிதைத்தொகுப்பினை எடிட் செய்வது எளிதான வேலையில்லை. அதற்குத் தீவிரமான கவிதை வாசிப்பும் தனித்துவமிக்கப் பார்வைகளும் வேண்டும். இலியா காமின்ஸ்கி Words Without Borders இதழின் கவிதை ஆசிரியர். ஆனால் தேர்ந்த வாசகரில்லை. அவரது கவிதை ரசனை எளிய வாசிப்பு அனுபவத்திற்கு உட்படுவதாகவே இருக்கிறது.

A Book of Luminous Things: An International Anthology of Poetry / Czeslaw Milosz என்ற தொகுப்பினை நோபல் பரிசு பெற்ற கவிஞர் செஸ்லாவ் மிலாஸ் உருவாக்கியிருக்கிறார். அது தான் உண்மையான கவிதைத்தேர்வு. மிக முக்கியமான தொகைநூல். அதில் அவர் கவிதைகளை வகைப்படுத்தியுள்ள விதமும் தேர்வு செய்த விதம் பற்றி எழுதியும் முக்கியமானது.
இலியா காமின்ஸ்கியின் இந்த தொகுப்பு Words Without Borders இணைய இதழில் வெளியான பல்வேறு கவிதைகளைப் பிரதானமாகக் கொண்டிருக்கிறது. ஆகவே இதில் மிகச்சிறந்த கவிதைகளின் எண்ணிக்கை குறைவே.
இந்தத் தொகுப்பினை வாசிக்கும் போது கவிதையின் பாடுபொருட்கள் காலந்தோறும் மாறிக் கொண்டேயிருப்பதைக் காண முடிகிறது.
அனுபவங்களைக் கையாளும் போது கவிதை பெரும்பாலும் அதன் சாரத்தை மட்டுமே முதன்மைப்படுத்துகிறது. உரைநடையைப் போல அனுபவ வெளியினையும் அனுபவம் நிகழும் மனிதர்களையும் துல்லியமாகச் சித்தரிக்க முற்படுவதில்லை. அது போலவே அனுபவத்தை நிகழ்காலத்தில் பதியச்செய்யவே கதை முனைகிறது. ஆனால் கவிதை ஒரு அனுபவத்தினைக் காலமற்ற வெளியில் பொருத்தி என்றைக்குமான அனுபவமாக உருமாற்ற முனைகிறது இன்று அந்த வேறுபாடுகள். சித்தரிப்புகள் மாறிவருவதைக் காணமுடிகிறது
உலகெங்கும் இன்று கவிதை கதை சொல்லுதலை நோக்கி நகர்ந்துள்ளது. நேரடி உரையாடலைப் போலவே கவிதை எழுதப்படுகிறது. அன்றாட வாழ்க்கையினைக் கவிதை அப்படியே பிரதிபலிப்பதைக் காணமுடிகிறது. இதைப் பலம் என்பதா இல்லை பலவீனம் என்பதா எனத்தெரியவில்லை.
சிக்கலான படிமங்கள். விநோதமான உருவகங்களிலிருந்து விடுபட்டு நேரடியான, எளிமையான, நவீன தொழிற்நுட்ப சாதனங்களின் தாக்கம் கொண்ட பிம்பங்களை, உவமைகளை மட்டுமே கவிதை வெளிப்படுத்துகிறது. இதன் காரணமாக ஒரு உடனடித்தன்மை கிடைக்கிறது. ஆனால் உடனடித்தன்மை கவிதைக்கான தில்லை என்ற மரபான எண்ணம் கைவிடப்பட வேண்டியது தானா என்ற கேள்வி எழுகிறது.
கவிதை மரபானது மூன்று முக்கியப் புள்ளிகளைக் கொண்டது. அதாவது mysticism, Love and eroticism சார்ந்தே உலகெங்கும் கவிதைகள் பிரதானமாக எழுதப்பட்டன.. ரொமாண்டிக் கவிஞர்களின் வருகைக்குப் பிறகு காமத்தின் இடத்தில் இயற்கையை வியத்தல் வைக்கப்பட்டது. ஆகவே தான் வேர்ட்ஸ்வெர்த்தின் கவிதைகளில் காமம் இடம்பெறவேயில்லை. அவர் சிரிப்பையும் காமத்தையும் கவிதையிலிருந்து வெளியேற்றிவிட்டார். அந்த இடத்தில் இயற்கையின் பிரம்மாண்டத்தை. இயற்கையை ஆழ்ந்து அவதானிப்பதை முன்வைத்தார். அது புதிய வகைக் கவிதைப் போக்காக உருமாறியது. ஆனால் இன்று கவிதை இயற்கையின் இடத்தில் உடலைக் கொண்டாடுவதை முன்வைத்திருப்பதைக் காண முடிகிறது. சர்வதேச கவிதைத் தொகுப்பில் நான்கில் ஒரு பகுதி பாலுணர்வு சார்ந்த எழுதப்படுகின்றவையே.
சமூகப்பிரச்சினைகளை முன்வைத்து எழுதப்படும் கவிதைகளில் கவிஞன் அதை எப்படி உள்வாங்கியிருக்கிறான்.எவ்வாறு வெளிப்படுத்துகிறான் என்பது முக்கியமானது. அதுவும் காட்சி ஊடகங்களின் வருகைக்குப் பிறகு ஒரு சமூகப்பிரச்சனையை கவிஞன் கையாளுவதற்கு தனியான எத்தனிப்பை மேற்கொள்ள வேண்டியிருக்கிறது. இதில் கவிதைக்கும் முழக்கத்திற்குமான வேறுபாடு முக்கியமானது. ஒரு செய்தியை எதிர்கொள்வது போலக் கவிதையை எதிர்கொள்ள முடியாது. கூடாது. கவிதை மொழியில் நிகழ்த்தப்பட்ட உயர்அனுபவம். அது பல அடுக்குகளை கொண்டது. செய்தியைப் போல குறிப்பிட்ட காலத்தோடு அது இணைக்கபட்டதில்லை. முடிந்து போவதில்லை.
பாஷா, ரியோகான், டூபூ, லி பெய். இஷா போன்ற ஜப்பானிய, சீனக் கவிஞர்கள் இன்று மிக அதிகம் வாசிக்கப்படுகிறார்கள். அவர்களின் கவிதை கொண்டாடப்படுகிறது. ஆனால் அவர்கள் கவிதை முன்வைத்த இயற்கையின் நுண்மைகள். ஆழ்ந்த மௌனம். செயலற்ற தன்மையின் தன்னியல்பு, இயற்கையோடு ஒன்று கலத்தல் போன்றவற்றை இன்றைய கவிதைகளில் காணமுடிவதில்லை.
மெய்தேடல் கொண்ட கவிதைகளையோ, தத்துவ வெளிப்பாடு கொண்ட கவிதைகளையோ ஏன் இன்றைய கவிஞன் அல்லது வாசகன் தேவையற்றதாகக் கருதுகிறான். அனுபவத்தின் ஆழ்நிலைகளை, தோற்றத்தைத் தாண்டி ஒன்றைப் புரிந்து கொள்வதில் ஏன் அக்கறையில்லாமல் போனது. தத்துவம் எழுப்பிய கேள்விகள். தேடல்கள். கவிதையின் வழியே புதிய நிலையை அடைந்தன என்பதே நிஜம். இன்றைய கவிஞன் தன்னை மெய் தேடல் கொண்டவனாகக் காட்டிக் கொள்ள விரும்புவதில்லை.
இன்றைய ஐரோப்பியக் கவிதைகளில் புத்தரும் புத்தரின் போதனைகளும் பல்வேறு விதங்களில் வெளிப்படுத்தப்படுகின்றன. அந்தப் புத்தர் மேற்குலகம் அறிந்து கொண்ட புத்தர். நம்மால் அந்தப் புத்த பிம்பத்தை உள்வாங்கிக் கொள்ள முடியவில்லை.

ஒவ்வொரு கவிஞனுக்கும் ஒரு poetic universe உண்டு. அவன் அந்த உலகினை தானே உருவாக்கி அதற்குள்ளாகவே சஞ்சரித்துக் கொண்டிருப்பான். தேவதச்சனின் கவிதைகளிலிருந்து அவரது பெயரை எடுத்துவிட்டாலும் அது தேவதச்சன் கவிதை தான் என்பதைக் கவிதை வாசகன் எளிதாகக் கண்டுபிடித்துவிடுவான். அது போன்றதே இந்தக் கவிதைப்பிரபஞ்சம். இதில் அவன் தனது சமகால வாழ்க்கையை மட்டும் உருவாக்குவதில்லை. மாறாக, வரலாற்றை. மறுக்கப்பட்ட நீதியை, சமூக அவலங்களை, தூய கற்பனையை எனப் பல்வேறு கட்டுமானங்களை உருவாக்குகிறான்.
உரைநடை ஆசிரியனை அவனது பால்யகாலமே வழிநடத்துகிறது. ஆனால் கவிஞனை வழிநடத்துவது அவனது இளமைப்பருவம். பெரும்பான்மை கவிஞர்கள் தனது இளமைக்கால அனுபவத்தின் வெளிப்பாடுகளை, நினைவுகளைத் தான் வாழ்நாள் முழுவதும் எழுதிக் கொண்டிருக்கிறார்கள்.
மொழிக்குள் வராத அனுபவங்களை மொழி வசப்படுத்த முயலுவது கவிதையின் சவால். அதை நவீன கவிதையின் சிறந்த கவிஞர்கள் பலர் சிறப்பாக வெளிப்படுத்திக் காட்டியிருக்கிறார்கள். ஆனால் இன்று அது போன்ற முயற்சிகள் குறைவே. யஹுதா அமிகாய் கவிதைகளில் பெரும்பான்மை பிரத்தியேக அனுபவங்களின் கவிதையாக்கமே .நவீன கவிதை சம்பிரதாயமான அர்த்தம் கொள்வதிலிருந்து விடுபட்டு புதிய புரிதலை யாசிப்பதாக இருந்தது. இன்றைய கவிதைகளை வாசிக்கும் போது மீண்டும் அது சம்பிரதாயமான நேரடி வாசிப்பினை நோக்கி நகர்ந்து வருவதாகவே உள்ளது
To kiss a forehead is to erase memory. என்ற மரினா ஸ்வெட்டேவாவின் வரியைப் போல அசலான கவிதைகளைத் தேடுகின்றவன் நான். இந்தத் தொகுப்பில் எனக்கு இருபதுக்கும் குறைவான கவிதைகளே மிக நெருக்கமாக இருந்தன.
I took poetry from everything ஜோர்ஜ் டி லிமாவின் கவிதை ஒன்று துவங்குகிறது. இப்படி எதைத் தீண்டினாலும் கவிதை அதன் நிறத்தை, வடிவை, உருமாற்றிவிடக்கூடியது. நினைவு கொள்வதற்காக பொருட்களுக்கு பெயரிடுகிறார்கள். அதே சொற்களைக் கொண்டு அந்த வழக்கமான அர்த்தத்தை மாற்றி புதிய அர்த்தங்களை கவிதை உருவாக்க முனைகிறது. ஒருவகையில் அது ரசவாதம்.
நவீன கவிதை என்ற சுதந்திரமான கவிதை வடிவம் உருவான போது அது முன்னெடுத்த விஷயங்களுக்கும் இன்றைய கவிதைகளுக்குமான இடைவெளியை, மாற்றங்களை, வளர்ச்சியை, பின்னடவைக் காணும் போது வியப்பாகவே இருக்கிறது.
காலத்தின் பின்னோக்கிப் போகப்போகச் சிறந்த கவிதைகளைக் கண்டறிய முடியும் என்பதே எனது வாசிப்பில் நான் கண்ட உண்மை. இந்தத் தொகுப்பிலும் அது போல ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பாக எழுதப்பட்ட கவிதைகளே இன்றைய வாழ்க்கையைப் பேசுவதாக எனக்குப்படுகிறது.
November 26, 2021
பள்ளத்தாக்கின் பேரழகு
பள்ளி வயதில் மெக்கனாஸ் கோல்ட் திரைப்படத்தைப் பார்த்தபோது தங்கம் தேடும் சாகசக்காரர்களின் கதையை விடவும் அவர்கள் குதிரையில் செல்லும் கிராண்ட் கேன்யன் பள்ளத்தாக்கின் பேரழகு என்னை அதிகம் வசீகரித்தது. இயக்குநர் ஜான் ஃபோர்டு இந்தப் பள்ளத்தாக்கினை மறக்கமுடியாத காட்சிகளாகத் தனது திரைப்படங்களில் பதிவு செய்திருக்கிறார். கௌபாய் படங்கள் என்றதும் மனதில் இந்த நிலக்காட்சி தான் ஒளிருகிறது.

அமெரிக்காவின் அரிசோனா பகுதியிலுள்ள கிராண்ட் கேன்யன் மாபெரும் செங்குத்துப் பள்ளத்தாக்கு. பூர்வ குடி இந்தியர்கள் வாழ்ந்து வரும் இந்த நிலப்பரப்பினைக் காணுவதற்காக இன்று உலகெங்குமிருந்து மக்கள் வருகிறார்கள். இயற்கையின் அற்புதங்களில் ஒன்றாகக் கேன்யன் கருதப்படுகிறது.
புகைப்படக்கலைஞர் பீட் மெக்பிரைட் அவரது நண்பர் எழுத்தாளர் கெவின் ஃபெடார்கோ இருவரும் இணைந்து கிராண்ட் கேன்யனின் முழுவதையும் நடந்தே கடந்திருக்கிறார்கள். முறையான பாதைகள் இல்லாத இந்தப் பள்ளத்தாக்கினுள் அவர்கள் மேற்கொண்ட சாகசப்பயணத்தை ஒரு ஆவணப்படமாக உருவாக்கியிருக்கிறார்கள்.
Into the Canyon என்ற அந்த ஆவணப்படம் 2019ல் வெளியாகியுள்ளது.
இந்த ஆவணப்படத்தின் வழியே நாமும் அந்த நண்பர்களுடன் இணைந்து கிராண்ட் கேன்யனுள் நடக்க ஆரம்பிக்கிறோம். இயற்கையின் பெருங்கரங்கள் செதுக்கி வைத்துள்ள பாறை அடுக்குகளைக் காணுகிறோம். மலையின் நிழல் ஆற்றில் விழுந்தோடுவதைக் காணுகிறோம். எங்கிருந்தோ ஒரு பறவை தனியே மலைமுகட்டைக் கடந்து போகிறது.
வேறுவேறு பருவகாலங்களில் இந்தப் பயணத்தை அவர்கள் மேற்கொண்டிருக்கிறார்கள். காரணம் ஒரே முறையில் இதைக் கடந்து செல்வது இயலாத காரியம். அதற்கான உடற்தகுதி மற்றும் குடிதண்ணீர் தட்டுபாடு. சீதோஷ்ணநிலை காரணமாகப் பயணம் செய்வது மிகவும் கடினம். அவர்களும் முதன்முறையாக அப்படியான ஒரு பயணத்தைத் தான் மேற்கொண்டார்கள். ஆனால் பாதியில் மயங்கி விழுந்து காலில் அடிபட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை செய்தபிறகு இப்படியான ஒரு திட்டத்தை முன்னெடுத்தார்கள்..
கிராண்ட் கேன்யனுள் ஓடும் கொலரோடா ஆற்றில் சுற்றுலாப் பயணிகளை அழைத்துச் செல்லும் வழிகாட்டியாக இருந்தவர் என்பதால் கெவின் அந்தப் பகுதி முழுவதையும் நன்றாக அறிந்திருந்தார்.
ஆனாலும் பாதைகள் இல்லாத பள்ளத்தாக்கினுள் நடந்து போவது பெரும் சாகசமாகவே அமைந்தது.
கிராண்ட் கேன்யனின் வியப்பூட்டும் அழகினையும் பிரம்மாண்டத்தையும் காணும் நாம் அது எப்படி வணிகக் காரணங்களுக்காக அழிக்கப்படும் சூழலில் இருக்கிறது என்பதையும் இதை எதிர்த்து நடக்கும் போராட்டங்களையும் அறிந்து கொள்கிறோம்.
மெக்பிரைட் மற்றும் கெவின் இருவரும் முந்தைய காலங்களில் உலகின் பல்வேறு இடங்களுக்கு ஒன்றாகச் சாகசப்பயணம் மேற்கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்குள் இருந்த நட்பும் புரிதலுமே இது போன்ற புதிய தேடுதலுக்குக் காரணமாக இருக்கிறது.
பயணம் மேற்கொள்ளும் முன்பு அவர்கள் தீவிரமாகத் தயாராகிறார்கள். உடலை உறுதியாக வைத்துக் கொள்வது தான் முதற்சவால். இது போலப் பல்வேறு வரைபடங்கள். வழிகாட்டிகளின் உதவியைப் பெற்றுப் பயணத்திட்டத்தை உருவாக்குகிறார்கள்.

750 மைல் நீண்ட இந்தப் பயணத்தில் பலமுறை தவறி விழுந்து அடிபடுகிறார்கள். காயம் அடைகிறார்கள். ஆனால் வலியைப் பொருட்படுத்துவதில்லை. சில இடங்களில் குடிநீர் கிடைக்காமல் அல்லாடுகிறார்கள். வெயிலின் உக்கிரம் தாங்கமுடியாமல் மயங்கிப் போகிறார்கள். குளிரும் பனியும் மிகக் கடுமையாக இருக்கிறது. ஆனால் அவர்கள் தளர்ந்து போகவில்லை. தொடர்ந்து பயணித்துக் கேன்யனை முழுமையாகக் கடந்து போகிறார்கள்.
பயணத்தின் போது ஒரு இடத்தில் இந்த நிலப்பரப்பு நிசப்தத்தின் பெருங்கிண்ணம் போலிருக்கிறது என்று சொல்கிறார் கெவின். அது உண்மையான விஷயம்.. முடிவில்லாத அந்தப் பள்ளத்தாக்கினுள் காற்றின் ஓசையைத் தவிர வேறு சப்தங்களே இல்லை.
பாறைகளுக்குள் கயிறு போட்டு இறங்குவதும் ஏறுவதும் எளிதாகயில்லை. மலையுச்சியில் மிகச்சிறிய பாதையொன்றைக் கடக்கும் போது பாறையில் முளைத்துள்ள புதர்செடியிடம் ஹாய்.. எப்படியிருக்கிறாய் என்று நலம் விசாரிக்கிறார் பீட் மெக்பிரைட்
மலையுச்சியில் கூடாரம் அமைத்துத் தங்குகிறார்கள். பனிக்காற்றின் வேகத்தைத் தாங்க முடியவில்லை. விடிந்து எழுந்து பார்க்கும்போது கூடாரம் முழுவதும் பனி உறைந்திருக்கிறது. அவர்கள் சூரியனைப் பார்த்தவுடன் கைகளை உயர்த்தி வரவேற்று காதலியை அணைப்பது போல வெயிலை அணைத்துக் கொள்கிறார்கள்
இன்னொரு இடத்தில் அவர்கள் பாறை ஒன்றின் மீது இரவு தங்குகிறார்கள். நட்சத்திரங்கள் அடங்கிய வானம் ஒரு போர்வை போல அவர்கள் மீது கவிந்துள்ளது. தங்களின் கடந்த கால நினைவுகளைப் பகிர்ந்து கொள்கிறார்கள்.
உலகில் உருவான மாற்றங்கள் யாவும் மனிதர்கள் நடக்கத் துவங்கியதால் ஏற்பட்டதே என்கிறார் மெக்பிரைட். கிராண்ட் கேன்யன் பள்ளத்தாக்கின் மையப்பகுதி ஒரு மைல் ஆழமாகயிருக்கிறது. அதாவது எம்பயர் ஸ்டேட் பில்டிங் போல நான்கினை ஒன்றின் மீது ஒன்றாக அடுக்கி வைத்தால் மட்டுமே அதன் விளம்பினை அடைய முடியும் என்கிறார்கள்
ஆற்றின் பாதையை ஒட்டிச் செல்லும் போது ஒரு தவளை அவர்களை ஏறிட்டுப் பார்க்கிறது. யார் இவர்கள். இங்கே என்ன வேலை என்பது போல அதன் பார்வையிருக்கிறது. பிறகு தாவிக் குதித்து மறைந்துவிடுகிறது. அந்தக் காட்சியில் பிரம்மாண்டமான கேன்யனை விடவும் அந்தத் தவளையே பெரியதாகத் தோன்றியது
உணவு தட்டுபாடு காரணமாக அவர்கள் அவதிப்படும் போது யாரோ மலையேற்றம் செய்தவர் விட்டுப் போயிருந்த பாக்ஸில் வெண்ணெய் சாக்லேட் மற்றும் உணவுப்பொருட்களை எடுத்துக் கொள்கிறார்கள். என்றோ வரப்போகும் ஒருவருக்காக உணவை விட்டுச் செல்லும் மனிதனின் அன்பை நினைத்து நன்றி சொல்கிறார்கள்
சில இடங்களில் சாடிலைட் போன் வழியாக அவர்கள் புற உலகோடு தொடர்பு கொள்கிறார்கள். கடக்க முடியாத உயரங்களைக் கடக்க வழிகாட்டியின் உதவியை நாடுகிறார்கள். கேமிராவை பல இடங்களில் தன்னை நோக்கி திருப்பிப் பேசும் மெக்பிரைட் மிகக் குறைவான உபகரணங்களை மட்டுமே உடன் கொண்டு சென்றிருக்கிறார். அதை வைத்துக் கொண்டு அற்புதமான காட்சிகளைப் படமாக்கியிருக்கிறார்.
வேறுவேறு பருவ காலங்களில் கிராண்ட் கேன்யன் எப்படி ஒளிர்கிறது என்பதை அழகாகப் படமாக்கியிருக்கிறார்கள். அவர்கள் பள்ளத்தாக்கின் ஆழத்தில் நடந்து செல்லும் போது இரண்டு பூச்சிகள் போலவே தோற்றமளிக்கிறார்கள்.
வியக்கத்தக்க அந்த நிலப்பரப்பினைக் காணும் போது மனித வாழ்க்கை எவ்வளவு சிறியது என்பதை உணர முடிகிறது.
இந்தப் பயணத்தின் வழியே அவர்களின் நட்பின் பிணைப்பினையும் காலத்தால் அழியாத அழகு கொண்ட இயற்கையின் விந்தையும் ஒரு சேர காணுகிறோம். பூர்வ குடி மக்கள் இந்தப் பள்ளத்தாக்கினை புனிதமான இடமாகக் கருதுகிறார்கள். அதை வணங்குகிறார்கள்.
கேன்யன் பள்ளத்தாக்கின் ஒரு பகுதியில் யுரேனியம் கிடைப்பதாக அறிந்து சுரங்கம் தோண்டுகிறார்கள். அந்தக் கழிவுகள் ஆற்றில் கலந்தோடுகின்றன. நவாஜோ லேண்ட் பகுதியில் சுற்றுலா பயணிகளைக் கவர்ந்து இழுப்பதற்காகப் புதிய திட்டங்கள், தங்கும் விடுதிகள் உருவாக்க முனைகிறார்கள். இதன் காரணமாகக் கேன்யனின் சூழல் பாதிக்கப்படும் எனக் கருதும் நவாஜோ பூர்வ குடி மக்கள் பொது வாக்கெடுப்பு நடத்தி இந்தத் திட்டத்தைத் தோற்கடிக்கிறார்கள்.
ஆனாலும் ஒரு முனையில் மாறி மாறி ஹெலிகாப்டர்கள் வருவதும் போவதுமாக இருக்கின்றன. ஒரு நாளைக்கு ஐநூறுக்கும் மேற்பட்ட ஹெலிகாப்டர்களில் சுற்றுலாப் பயணிகள் வந்து போவதாகச் சொல்கிறார்கள். இதனால் கேன்யனின் இயற்கை அழகும் அமைதியும் கெட்டுவருவதாகச் சுற்றுச்சூழல் ஆய்வாளர்கள் கருதுகிறார்கள்.
மெக்பிரைட் வெற்றிகரமாகப் பயணத்தை முடித்துக் கொண்டு காரில் ஏறுவதற்கு முன்பு இவ்வளவு கடினமான பயணத்தில் கெவினால் தனக்குச் சிறிய பிரச்சனை கூட வரவில்லை. தன்னை முழுமையாகப் புரிந்து கொண்டதற்கு நன்றி என்கிறார். கெவினும் அப்படியே உணர்வதாகச் சொல்லிக் கட்டிக் கொள்கிறார். உணர்ச்சிப்பூர்வமான தருணமது,

இருவரும் நடப்பதில் ஆனந்தம் கொள்கிறார்கள். அது உடலையும் மனதையும் வலுவாக்குகிறது என்கிறார்கள். அதுவும் கிராண்ட் கேன்யன் போன்ற பள்ளத்தாக்கினை முழுமையாக நடந்து கடந்த்து வாழ்நாளில் கிடைத்த பேறு என்கிறார்கள். அது உண்மையே.
சுற்றுலா பயணியாக வானிலிருந்து இந்தப் பள்ளத்தாக்கினை காணுவது எவருக்கும் எளிதானது. ஆனால் இப்படிக் கடும் சிரமங்களுக்கு இடையே நடந்து கடந்திருப்பது தனித்துவமான சாதனையே.
If we can’t protect the Grand Canyon, what can we protect? என்ற கேள்வியுடன் இந்த ஆவணப்படம் நிறைவு பெறுகிறது. இது கேன்யனுக்கு மட்டுமான கேள்வியில்லை.
November 24, 2021
இரண்டு கவிஞர்கள்
வேறுவேறு காலகட்டத்தில் வாழ்ந்த இரண்டு கவிஞர்களின் வாழ்க்கையை ஒப்பு நோக்கும் போது அவர்கள் ஒன்று போலவே வாழ்ந்திருப்பதைக் காணமுடிகிறது. சீனாவின் புகழ்பெற்ற கவிஞரான லி பெய் மற்றும் உருதுக் கவி மிர்ஸா காலிப் இருவரும் தனது வாழ்நாளில் பெரும்பகுதியை அரசிடம் மன்றாடுவதற்காகச் செலவு செய்திருக்கிறார்கள். இருவருமே தாங்கள் வாழ்ந்த காலகட்டத்தில் மக்களால் கொண்டாடப்பட்ட கவிஞர்கள். தங்களை ராஜவிசுவாசியாகக் கருதியவர்கள். ஆனால் அவர்களின் நியாயமான ஆசை கடைசி வரை நிறைவேறவேயில்லை.

உருதுக் கவிஞர் மிர்ஸா காலிப் 1857ல் நடைபெற்ற சிப்பாய் எழுச்சியை டெல்லியில் நேரில் கண்டிருக்கிறார். அதைப் பற்றித் தனது கடிதங்களில் குறிப்பிட்டிருக்கிறார். ஆனாலும் அவருக்கு அரசியலில் ஆர்வமில்லை என்பதால் தான் என்ன நிலைப்பாடு எடுத்தேன் என்பதைப் பற்றி எதுவும் எழுதவில்லை.
1997ல் காலிப் பிறந்தார். மொகலாய ஆட்சியின் கடைசி காலகட்டமது. அப்போது டெல்லி சிறிய நகரமாக இருந்தது. நகரின் முக்கியப் பிரச்சனை குடிநீர். அதற்காக ஷாஜகான் காலத்தில் உருவாக்கப்பட்ட கால்வாயில் தண்ணீர் வராமல் போனது. பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் அதைச் சரிசெய்தார்கள். நகரம் திட்டமிட்டு உருவாக்கப்பட்டது என்பதால் அங்கே பெரிய மாளிகைகளில் உயர்குடியினர் வசதியாக வாழ்ந்தார்கள். அன்று ஒன்றரை லட்சம் பேர் டெல்லியில் வசித்திருக்கிறார்கள். காலிப் ஆக்ராவிலிருந்து 1810ம் ஆண்டு டெல்லிக்குக் குடியேறியிருக்கிறார். 51 ஆண்டுகள் அவர் டெல்லியில் வசித்திருக்கிறார்.
1788ல் மன்னர் ஷாஆலம் கண்கள் குருடாக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். 1803ல் பிரிட்டிஷ் அதிகாரத்தின் கீழே டெல்லி வந்தது. பிரிட்டிஷ் ஓய்வூதியம் வாங்கும் நபராக மன்னர் உருமாறியிருந்தார்
ஐந்து வயதிலே தந்தையை இழந்த காலிப். மாமாவால் வளர்க்கப்பட்டார். மாமா அரசாங்க வேலையிலிருந்த காரணத்தால் அந்த வருமானத்தில் குடும்பம் செல்வாக்காக வாழ்ந்துவந்தது. மாமாவின் மறைவிற்குப் பிறகு பிரிட்டிஷ் ஓய்வூதியம் காலிப்பிற்கும் கிடைத்து வந்தது. ஆனால் அந்தப் பணம் அவருக்குப் போதுமானதாகயில்லை.
டெல்லி வாசியான காலிப் தன் வாழ்நாள் முழுவதும் தனக்குச் சேரவேண்டிய பராம்பரிய உரிமைகளை மீட்கவும் அரசிடமிருந்து உதவிப் பணம் பெறவும் போராடியிருக்கிறார்.
மிர்ஸா காலிப்பின் கவிதைகள் மிகவும் நுட்பமான அகவயத் தேடுதலையும் உலகியல் வாழ்வின் அர்த்தமற்ற தன்மைகளையும் பேசுபவை. ஆனால் தனிநபராக இந்த மனநிலைக்கு நேர் எதிராக அரசோடு உரிமைப்போராட்டம் நடத்தியிருக்கிறார்
காலிப்பின் வாழ்க்கை வரலாற்றை வாசித்தால் அதில் இந்த அலைக்கழிப்பும் அதில் அடைந்த தோல்விகளும் ஏமாற்றங்களும் தான் அதிகமிருக்கின்றன.
உலகியல் வாழ்க்கைக்கு அர்த்தமேயில்லை என்ற மனிதன் ஏன் தனக்கு அரசு தரவேண்டிய உதவிப்பணத்திற்காக இத்தனை மெனக்கெட்டிருக்கிறார் என்பது வியப்பளிக்கிறது
காலிப்பின் மூதாதையர்கள் மொகாலய ராணுவத்தில் முக்கியப் பதவிகளிலிருந்தவர்கள். இதன் காரணமாகச் செல்வாக்கான குடும்பமாக விளங்கினார்கள். ஆகவே தன் உடலில் ராஜவிசுவாசம் ஓடுகிறது என்ற எண்ணம் காலிப்பிடம் மேலோங்கியிருந்தது.
அன்று டெல்லியின் முக்கிய விருந்துகளில் காலிப்பின் கவிதைகள் பாடப்பட்டன. நகரின் முக்கியக் கவிஞராக அவர் பெருமைப்படுத்தப்பட்டிருந்தார். மொகலாய மன்னர்களின் வரலாற்றை உரைநடையில் எழுதும் பொறுப்பு அவருக்கு அளிக்கப்பட்டிருந்தது.
தங்கள் குடும்பத்திற்கு அரசிடமிருந்து கிடைத்து வந்த உதவித்தொகை குறைக்கப்பட்டதைத் தான் ஏற்றுக் கொள்ளமுடியாது என்று அறிவித்த காலிப் இதற்காகப் பிரிட்டிஷ் அதிகாரிகளிடம் முறையிடுவதற்காகக் கல்கத்தா பயணம் செய்தார்.

அந்த நாட்களில் தான் முதன்முறையாக நியூஸ் பேப்பர்கள் அறிமுகமாகின்றன. காலிப் கல்கத்தாவில் நியூஸ் பேப்பர் படித்ததைப் பற்றிக் கடிதத்தில் குறிப்பிடுகிறார். ஒருமுறை காலிப் வீட்டில் நடந்த சீட்டாட்டத்தைப் பற்றிக் கேள்விப்பட்ட பிரிட்டிஷ் அதிகாரி ஒருவர் அவரைக் கைது செய்து சிறையில் அடைத்துவிட்டான். ஆறுமாதகாலத் தண்டனை அறிவிக்கப்பட்டது. அந்தச் செய்தி பத்திரிக்கைகளில் வெளியாகி மும்பை வரை சென்று விட்டது. அந்தக் காலத்தில் இது போல டெல்லியில் நடக்கும் விஷயங்கள் வெளியுலகிற்குத் தெரியவே தெரியாது. ஆனால் பத்திரிக்கை செய்தி இப்படி வட இந்தியா முழுவதும் தன்னைப் பற்றிய மோசமான சித்திரத்தை உருவாக்கிவிட்டதை நினைத்து காலிப் வருத்தியிருக்கிறார்.
டெல்லி கல்லூரி துவங்கப்பட்ட போது பெர்சியன் கற்பிக்கும் ஆசிரியர் பணிக்கு மாத சம்பளம் நூறு தருவதாகச் சொல்லி மிர்ஸாவை அழைத்திருக்கிறார்கள்.. இந்த வேலைக்கான நேர்காணலுக்குத் தாம்சன் என்ற பிரிட்டிஷ் அதிகாரியைக் காண நேரில் சென்றார் மிர்ஸா
அவரிடம் மிர்ஸா காலிப் உங்களைக் காண வந்திருக்கிறார் என்ற தகவல் தெரிவிக்கப்படுகிறது. அவரும் வரச்சொல்லி உத்தரவிடுகிறார். ஆனால் மிர்ஸா காலிப் தன்னைத் தாம்சன் வெளியே வந்து வரவேற்று உள்ளே அழைத்துப் போகவில்லை. ஆகவே நான் அவரைச் சந்திக்க வேண்டிய அவசியமில்லை என்று கோவித்துக் கொண்டு கிளம்பிப் போய்விட்டார்.
மிர்ஸா பெரிய கவிஞராக இருந்தாலும் தற்போது வேலை கேட்டு வந்திருக்கிறார். அவரை எதிர்கொண்டு அழைப்பது முறையில்லை என்று தாம்சன் விளக்கம் அளித்திருக்கிறார். ஆனால் காலிப் ஆசிரியர் வேலை என்பது தனக்குக் கூடுதல் கௌரவம் மட்டுமே. பராம்பரியமாக நான் கௌரவமான குடும்பத்தைச் சேர்ந்தவன். டெல்லியின் முக்கியக் கவிஞன். ஆகவே என்னைப் பிரிட்டிஷ் அதிகாரி நேர்கொண்டு அழைக்காதது அவமானத்துக்குரிய விஷயமே என்று விளக்கம் கொடுத்திருக்கிறார்
இவ்வளவிற்கும் அந்தக் காலத்தில் காலிப்பின் கவிதைகளை ரசித்துக் கொண்டாடும் வெள்ளைக்கார அதிகாரிகள் பலர் இருந்திருக்கிறார்கள். அவர்கள் சில தருணங்களில் தேவையான உதவிகளைச் செய்திருக்கிறார்கள்.
கவிதையின் அரசனாகவே தன்னைக் கருதியிருக்கிறார் காலிப். ஆகவே அரசனைப் போலவே சுகவாழ்வு வாழுவதற்காக நிறையக் கடன்வாங்கியிருக்கிறார். சுவையான மாமிச உணவுகள். மிதமிஞ்சிய குடி. விலை உயர்ந்த ஆடைகள். விருந்துக் கொண்டாட்டங்கள் என்று செலவு செய்து கடனை திருப்பிக் கொடுக்கமுடியாமல் நிறையப் பிரச்சனைகளைச் சந்தித்திருக்கிறார்
உயர்வான வைன் கையில் இருக்கும் போது பிரார்த்தனை செய்வதற்குத் தேவையென்ன இருக்கிறது என்பதே மிர்ஸா காலிப்பின் கேள்வி. பிரெஞ்சு ஒயினில் கொஞ்சம் பன்னீர் கலந்து குடிப்பது அவரது வழக்கம். அந்த நாட்களில் பிரிட்டிஷ் அங்காடிகளில் உயர்வகை மதுவகைள் கிடைப்பது வழக்கம். அங்கேயும் கடன் சொல்லி ஒயின் வாங்குவதும் பணம் கிடைக்கும் போதும் திரும்பத் தருவதும் காலிப்பின் நடைமுறை. அந்த நாட்களில் மாதம் நூறு ரூபாய் ஒயின் வாங்குவதற்குச் செலவு செய்திருக்கிறார். அந்தக் காலத்தில் அவருக்கு மாதம் கிடைத்த அரசின் உதவித்தொகை 62 ரூபாய் மட்டுமே.
தனக்கு உரிய உரிமைகளை மீட்க அவர் கல்கத்தா சென்ற போது அங்கே அவரது நண்பராக இருந்த நவாப் அவர் தங்கிக் கொள்ள மாளிகை ஒன்றை அளித்திருக்கிறார். மூன்று பணியாளர்கள். பல்லக்கு எனச் சகல வசதிகளையும் அளித்திருக்கிறார். பிரிட்டிஷ் அதிகாரிகள் காலிப்பை கண்டுகொள்ளவேயில்லை. அவரது மனுவைப் பரிசீலனை செய்யாமல் இழுத்தடித்தார்கள். இதனால் கைப்பணம் கரைந்து போய்க் கடன் வாங்கிச் செலவு செய்தார் காலிப். முடிவில் தனது குதிரையை விற்று அந்தப் பணத்தில் சில மாதங்கள் கல்கத்தாவில் தங்கியிருந்தார். கடைசிவரை அவரது கோரிக்கை ஏற்கப்படவேயில்லை.
காலிப் பெரும்பாலும் மாலையில் குடித்துக்கொண்டே கவிதைகள் பாடுவார். அப்போது தோளில் போட்டுள்ள வஸ்திரத்தில் ஒவ்வொரு கவிதை முடிந்தவுடன் ஒரு முடிச்சு போட்டுக் கொள்வார். காலை விடிந்து எழுந்தவுடன் அந்த முடிச்சுகளை அவிழ்த்து விடும் போது அதே கவிதை மனதில் எழுவது வழக்கம். அதைக் குறிப்பேட்டில் எழுதிக் கொண்டுவிடுவார். விசித்திரமான எழுத்துமுறையது.
குடிப்பது போலவே சௌபர் எனப் பகடை உருட்டி ஆடும் விளையாட்டிலும் அவருக்குப் பெரும் விருப்பம் இருந்திருக்கிறது. இதில் நிறையப் பணம் இழந்திருக்கிறார்.
முதுமையில் பார்வையை இழந்த நிலையிலும் அவர் கவிதை பாடிக் கொண்டிருந்தார். வறுமையான சூழ்நிலை. 1869ல் அவர் இறக்கும் நாளில் கூடப் பணம் வந்து சேர்ந்துவிடும் என்பதற்காகவே அவர் காத்துக் கொண்டிருந்தார் என்கிறார்கள். காலிப்பின் கடிதங்கள் வழியாக அந்த நாளைய டெல்லி வாழ்க்கையின் சித்திரங்கள் மற்றும் பிரிட்டிஷ் அதிகாரத்தில் டெல்லியில் நடந்த பிரச்சனைகள். எதிர்வினைகள் பற்றிய செய்திகளை அறிந்து கொள்ள முடிகிறது.
உருது மொழி தான் மிர்ஸாவின் தாய்மொழி. ஆனாலும் கவிதைகள் எழுத வேண்டும் என்பதற்காகவே பாரசீக மொழியினைக் கற்றுத் தேர்ந்திருக்கிறார். உருதுவில் கவிதை எழுதுவதை விடவும் பாரசீகத்தில் கவிதை எழுதுவதே சிறந்தது என்ற எண்ணம் அவருக்குள்ளிருந்தது. அவரது காலத்தில் அரசசபையில் பாரசீக கவிஞர்களே அங்கீகரிக்கப்பட்டார்கள். அவர்களுக்கே வெகுமதிகள் அளிக்கப்பட்டன. ஆகவே தானும் பாரசீக கவிஞராக அறியப்படவே காலிப் விரும்பினார்
காலிப்பின் காலத்தில் அச்சு இயந்திரங்கள் அதிகம் பயன்பாட்டிற்கு வரவில்லை. ஆகவே அவரது கவிதைகளைப் பலரும் மனப்பாடமாகப் பாடுவதே வழக்கம். காலிப்பின் மரணத்திற்குப் பிறகே அச்சில் அவரது கவிதைகள் வெளியாகத் துவங்கின.

காலிப் போலவே தன் வாழ்நாள் முழுவதையும் அரசுப்பணியில் சேர்ந்துவிட வேண்டும் என்பதற்காகவே சீனக்கவிஞர் லிபெய் போராடியிருக்கிறார். அந்த நாட்களில் அரசு அதிகாரியாக வேலை செய்வதே கௌரவமானது. உயர் குடும்பத்தின் அடையாளம். ஆனால் அதற்குப் பல்வேறு தேர்வுகள் உண்டு. ஒவ்வொரு மாகாணமாகச் சென்று அங்கு அரசு தேர்வுகளைச் சந்தித்து அதில் வெற்றி பெறாமல் தோற்றுப் போயிருக்கிறார். அரசு அதிகாரியின் மகளைத் திருமணம் செய்து கொண்டு மாமனார் வழியாக அரசாங்க பதவி பெற முனைந்திருக்கிறார். அதிலும் தோல்வியே ஏற்பட்டது.
கடைசிவரை அவருக்கு அரசாங்கப்பதவி அளிக்கப்படவேயில்லை. முடிவில் அவரை அரசின் முக்கியப் பதவியில் அமர்த்தி அதற்கான ஆணையை மன்னர் அனுப்பிய போது லிபெய் இறந்து இரண்டு ஆண்டுகளாகியிருந்தன.
காலிப், அல்லது லிபெய் இருவரும் அரசோடு போராடித் தோற்றவர்கள். அவர்கள் கவிதைகளில் வெளிப்படும் ஞானமும். தெளிவும் ஏன் தினசரி வாழ்க்கையில் இல்லாமல் போய்விட்டது. உலகம் அவர்களைப் புரிந்து கொண்டிருக்கிறது. ஆனால் வீடும் உறவும் புரிந்து கொள்ளவேயில்லை. உண்மையில் இரண்டு கவிஞர்களும் வாழ்வியல் பந்தயத்தில் தோற்றுப் போனவர்களே. அவர்கள் பாதிக் கற்பனையிலும் பாதி நிஜத்திலும் வாழ்ந்திருக்கிறார்கள்.
லிபெய் முறையாக வாள் சண்டை பயின்றிருக்கிறார். குதிரையேற்றம் சிறப்பாகச் செய்யக்கூடியவர். கணக்கு மற்றும் வரிவிதிப்பு குறித்து ஆழ்ந்து படித்திருக்கிறார். அவர் கவிதைகள் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றிருந்தன.
ஒருமுறை உதவி வேண்டி அவர் சந்திக்கச் சென்ற அரசு அதிகாரி ஒருவர் சாலையில் அவரைக் கடந்து போகும் போது தன்னைக் கண்டுகொள்ளவில்லை என்று மனம் நொந்து உதவி கேட்காமலே விலகிப் போய்விட்டிருக்கிறார். நீண்டகாலத்தின் பின்பு இதை அறிந்து கொண்ட அதிகாரி மனம் வருந்தி தன்னால் அவருக்கு அரசாங்க வேலை வாங்கித் தந்திருக்க முடியும். ஏன் இப்படி நடந்து கொண்டிருக்கிறார் என்று வருந்தியிருக்கிறார்.

சொந்த வாழ்க்கையில் நிறையத் தோல்விகளைச் சந்தித்த போதும் இருவரும் அதைப் பெரிதாக நினைக்கவேயில்லை. அதைப்பற்றிய புலம்பல்கள் எதுவும் அவர்களின் கவிதையில் வெளிப்படவில்லை. புறவாழ்க்கையின் இந்த நெருக்கடிகள். தோல்விகள் அவர்களின் அகத்தில் தீராத நெருப்பாக எரிந்து ஞானத்தை உருவாக்கியிருக்கிறது.
நாம் கவிதைகளின் வழியே இந்தக் கவிஞர்களைச் சந்திக்கிறோம். அவர்களுடன் உரையாடுகிறோம். அவர்களின் ஞானத்தைப் பெறுகிறோம். அவர்களின் வாழ்க்கை அடையாளப்படுத்துவதெல்லாம் புறக்கணிப்பின் ஊடாகவே கவிஞன் எப்போதும் வாழ்ந்து கொண்டிருக்கிறான் என்ற உண்மையை மட்டுமே.
November 21, 2021
கேள்வியும் பதிலும்.
The First City டெல்லியிலிருந்து வெளியாகும் கலை இலக்கிய இதழ். இதில் வெளியான நேர்காணல்களின் தொகுப்பு இரண்டு தொகுதிகளாக வெளித்துள்ளன. அவற்றைச் சில ஆண்டுகளுக்கு முன்பாகப் பழைய புத்தகக் கடை ஒன்றில் வாங்கினேன்.

இந்தியாவின் மிக முக்கியமான ஓவியர்கள். இசைக்கலைஞர்கள். திரைப்பட இயக்குநர்கள். எழுத்தாளர்கள். வரலாற்று ஆய்வாளர்கள். சூழலியல் அறிஞர்களின் நேர்காணல்கள் கொண்ட இந்தத் தொகுப்பு மிகச்சிறப்பானது..

The Paris Review Interviews தொகுதிகளுக்குப் பிறகு இவற்றையே அடிக்கடி எடுத்து வாசிப்பது வழக்கம். எழுத்தாளர்களின் நேர்காணலைப் பொருத்தவரை தி பாரீஸ் ரிவ்யூவிற்கு நிகரே கிடையாது. அவை எழுத்தாளனின் ஆளுமையை விரிவாக, நுட்பமாக வெளிப்படுத்துபவை. பாரீஸ் ரிவ்யூவில் நேர்காணல் வெளியாவது என்பது ஒரு எழுத்தாளனுக்குக் கிடைக்கும் பெரிய அங்கீகாரம். வில்லியம் பாக்னர். மார்க்வெஸ், போர்ஹெஸ். ஹெமிங்வே, மிலன் குந்தேரா, கால்வினோ, ஆக்டோவியா பாஸ், சாமுவேல் பெக்கட், டி.எஸ். எலியட். ஹென்றி மில்லர் போன்றவர்களின் நேர்காணல்கள் சிறப்பானவை.
நேர்காணல் செய்பவர் எவ்வளவு ஆழ்ந்து படித்திருக்கிறார்கள். எப்படி எழுத்தாளரை அணுகுகிறார் என்பதற்கு இந்தத் தொகுதிகளே சிறந்த உதாரணம்.
இதன்பிறகு The Last Interview என 25 நேர்காணல் தொகுதிகள் வெளியாகியுள்ளன. இதில் புகழ்பெற்ற எழுத்தாளர்களின் விரிவான நேர்காணல்கள் இடம்பெற்றுள்ளன. இந்த வரிசையில் பதினைந்து தொகுதிகளை வாங்கிப் படித்திருக்கிறேன். மிக நல்ல நேர்காணல்கள்.


தனது படைப்பில் வெளிப்படுத்தாத தனிப்பட்ட வாழ்க்கை மற்றும் சமூக அரசியல் பண்பாடு குறித்த எண்ணங்களை, பயண அனுபவங்களை, மறக்கமுடியாத நிகழ்வுகளை, வாசிப்பு அனுபவத்தைத் தனது நேர்காணலின் வழியே எழுத்தாளர்கள் பகிர்ந்து கொள்கிறார்கள். அதன் வழியே நாம் எழுத்தாளனின் இன்னொரு பக்கத்தை அறிந்து கொள்கிறோம்.
First City நேர்காணல்கள் விரிவானவையில்லை. இரண்டு மூன்று பக்க அளவு கொண்டவை. ஆனால் அதில் வெளிப்படும் அசலான பார்வையும் வாழ்க்கை மதிப்பீடுகளும் கலை இலக்கியம் குறித்த தெளிவான புரிதலும் இவற்றைத் திரும்பத் திரும்ப வாசிக்க வைக்கின்றன.
வேறுவேறு துறை சார்ந்த ஆளுமைகள் எந்தப் புள்ளியில் ஒன்று சேருகிறார்கள் என்பதை இது போன்ற நேர்காணல் தொகுப்பின் மூலம் அறிந்து கொள்ள முடிகிறது. குறிப்பாகப் பால்ய நினைவுகளைப் பகிர்ந்து கொள்ளும் போதும், தனது கனவுகளைப் பின்தொடர்ந்து செல்லும் அனுபவங்களைப் பற்றிப் பேசும்போதும் எல்லோரும் கவிஞனின் குரலில் தான் பேசுகிறார்கள்

இந்த நேர்காணல் தொகுப்பில் சதுர்வேதி பத்ரிநாத் மகாபாரதம் பற்றிய தனது வாசிப்பு அனுபவத்தை மிகச்சிறப்பாகப் பதிவு செய்திருக்கிறார். இவர் எழுதிய Women of the Mahabharata: The Question of Truth படித்திருக்கிறேன். மகாபாரதப் பெண்கள் பற்றிய சிறப்பான ஆய்வாகும்.
நேர்காணலில் தனது ஜப்பான் பயணத்தினைப் பற்றி விவரிக்கும் பத்ரிநாத் நிகழ்ச்சி அமைப்பாளர் தன்னிடம் உடன் யார் வருகிறார்கள் என்று கேட்டதாகவும் அதற்குத் தான் பனிரெண்டு பெண்களுடன் வருவதாகப் பதில் சொன்னதாகவும் சொல்கிறார்
ஜப்பானியர் குழப்பம் அடைந்துபோகவே தன்னோடு பயணம் செய்யும் பெண்கள் அத்தனை பேரும் மகாபாரதத்தில் வரும் கதாபாத்திரங்கள் என்று சொல்லிச் சிரித்திருக்கிறார். மகாபாரதப் பெண்களைத் தனது தோழிகளாகக் கருதும் பத்ரிநாத் அவர்கள் எப்போதும் தன்னுடனிருப்பதாகக் கூறுகிறார்
அவரது வயது 70 என்பதைப் பற்றி நேர்காணல் செய்பவர் குறிப்பிடும் போது பத்ரிநாத் வேடிக்கையாகச் சொல்கிறார்
இல்லை நான் எட்டாயிரம் வருஷம் கொண்டவன். அப்படித் தான் உணருகிறேன். வயதை உடலை வைத்து மட்டும் மதிப்பிட வேண்டும் என்று யார் சொன்னது என்று கேட்கிறார்.
இந்த நேர்காணலில் அவர் மகாபாரதம் குறித்த தனது ஆழ்ந்த புரிதலைச் சிறப்பாக வெளிப்படுத்தியிருக்கிறார்.
இவரைப் படிக்கும் போது மகாபாரதத்தில் பெண்கள் என்று எம்.வி. வெங்கட்ராம் ஒரு புத்தகம் எழுதியிருப்பது நினைவில் வந்து போனது. தான் எப்படி இந்தக் கதாபாத்திரங்களைத் தேர்வு செய்தேன் என்று எம்.வி.வெங்கட்ராம் தனது மகாபாரத வாசிப்பு அனுபவத்தை விரிவாக எழுதவில்லை. ஒருவேளை அவரை இது போல நேர்காணல் செய்திருந்தால் அதற்கான பதில் கிடைத்திருக்கக்கூடும்
இந்தத் தொகுப்பில் மசானபு ஃபுகோகோ அளித்துள்ள நேர்காணலில் இயற்கையை அவர் புரிந்து கொண்டுள்ள விதமும் இயற்கையோடு ஒன்றிணைந்து வாழும் முறையும் வியப்பளிக்கிறது.
அமிதாவ் கோஷ். இந்திரா கோஸ்வாமி, நிர்மல் வர்மா யு. ஆர். அனந்த மூர்த்தி போன்ற எழுத்தாளர்களின் நேர்காணலின் வழியே நவீனத்துவத்திற்குப் பிந்தைய சகாப்தத்தில் இலக்கியத்தின் செயல்பாடுகள் எதை நோக்கியதாக இருக்க வேண்டும் என்பது குறித்து பேசப்படுகின்றன.
ஒரு மனிதன் ஒரே நேரத்தில் பார்வையுள்ளவனாகவும் பார்வையற்றவனுமாக இருக்கிறான். பார்வை என்பது புறவயமான பார்த்தல் மட்டுமில்லை. எந்த ஒன்றில் ஒருவன் ஆழ்ந்து கற்று தேறியிருக்கிறானோ அதையும் பார்த்தல் என்கிறார்கள். அறியாத, பயிலாத, தெரியாத விஷயங்களைப் பொறுத்தவரை அது பார்க்கப்படாதவையே. இதையும் பத்ரிநாத் ஒரு கதை மூலம் விளக்குகிறார். இது போன்ற நேர்காணல் தொகுப்புகளும் அப்படி நாம் எதைப் பார்க்கிறோம். எதைப் பார்க்கவில்லை என்பதைச் சரியாக அடையாளப்படுத்துகின்றன.
**
November 20, 2021
குற்றவுணர்வின் மூன்று கிளைவழிகள்
A TALE OF THREE SISTERS என்ற துருக்கிப் படத்தைப் பார்த்தேன். 2019ம் ஆண்டு வெளியானது. சமீபத்தில் நான் பார்த்த படங்களில் மிகச்சிறப்பான ஒளிப்பதிவு கொண்ட படமிது. துருக்கியின் புகழ்பெற்ற இயக்குநரான நூரி பில்கே சிலானின் படங்களை எனக்கு மிகவும் பிடிக்கும். அவர் நிலக்காட்சிகளை தேர்ந்த ஓவியரைப் போலக் கையாளக்கூடியவர். ஆன்டன் செகாவின் மீது தீவிர ஈடுபாடு கொண்டவர். அவரது கதைகளிலிருந்தே தனது படத்திற்கான மையக்கருவை உருவாக்குகிறவர்.

சிலானின் படங்களில் ஒளிப்பதிவு அபாரமாகயிருக்கும். குறிப்பாக இரவுக்காட்சிகளைக் குறைந்த ஒளியில் அவர் சித்தரிக்கும் விதம் ரெம்பிராண்டினை நினைவு கொள்வதாகயிருக்கும். ONCE UPON A TIME IN ANATOLIA படத்தில் வாகனங்களின் விளக்கொளிகள் மட்டுமே பயன்படுத்தப்பட்டிருப்பதும். வீட்டில் சந்திக்கும் பெண் கைவிளக்கேந்தி வரும் போது அவள் ஒரு விண்ணுலகத் தேவதை போலத் தோற்றம் அளிப்பதும் நிகரற்ற காட்சிகள்.
இந்தப் படத்தின் இயக்குநர் எமின் ஆல்பர் நூரியின் ரசிகர். கல்லூரி நாட்கள் துவங்கி அவரது படங்களை ஆழ்ந்து ரசித்துவந்தவர். அந்தப் பாதிப்பினை இப்படத்தில் துல்லியமாகக் காணமுடிகிறது. குறிப்பாகக் கைவிளக்கேந்தியபடியே இரவு நடந்து செல்லுபவர்களின் காட்சியும். பாறை ஒன்றின் அடியில் நெருப்பு மூட்டி அவர்கள் ஒன்றாகக் குடிக்கும் காட்சியும் உறைபனியின் ஊடாக ஊர் சித்தரிக்கப்படும் விதமும். வீட்டினுள் கசியும் மஞ்சள் ஒளியும் அசாத்தியமானது. ஒளிப்பதிவாளர் எம்ரே எர்க்மென் வண்ணங்களைத் தேர்ந்த ஓவியரைப் போலவே பயன்படுத்தியிருக்கிறார். நிலப்பரப்பை இத்தனை அழகுடன் திரையில் காணுவதும் மிகுந்த நெருக்கத்தை உருவாக்குகிறது.

THREE SISTERS என்ற தலைப்பைக் கேட்டவுடன் ஆன்டன் செகாவின் நாடகம் தான் நினைவிற்கு வந்தது. அதற்கும் இந்தப் படத்திற்கும் எந்தத் தொடர்புமில்லை. ஆனால் மூன்று சகோதரிகளின் வாழ்க்கையை முன்வைத்துச் செகாவ் எழுதிய நாடகம் போல மூன்று சகோதரிகளின் வாழ்க்கை நெருக்கடிகளை, அவர்களுக்குள் இருக்கும் ஆழமான பிணைப்பைப் படம் மிகச்சிறப்பாகக் காட்சிப்படுத்தியிருக்கிறது.
Cries and Whispers என்ற பெர்க்மெனின் படமும் மூன்று சகோதரிகளைப் பற்றியதே. பெண்களின் அகவுலகினையும் மனஉணர்வுகளையும் பெர்க்மென் போல சித்தரித்த இயக்குநரைக் காண இயலாது. ஒருவகையில் இந்த துருக்கி படத்திற்கும் Cries and Whispers என்ற தலைப்பு பொருத்தமாகவே தோன்றுகிறது.
நூரியின் Three Monkeys, Once Upon a Time in Anatolia, Winter Sleep மற்றும் The Wild Pear Tree 1980 போன்ற படங்களில் கதையை விடவும் அது சொல்லப்படும் விதம் தான் சிறப்பானது. பனி உருகுவது போல இயல்பாகக் கதை நகர்ந்து செல்லும். எதிர்பாராத திருப்பங்களை விடவும் ஆழமான நகர்வுகளையே அவர் முதன்மையாகக் கொண்டிருப்பார். அது போலேவே தான் எமின் ஆல்பரும் படத்தை இயக்கியிருக்கிறார்.
1980களில் வடகிழக்கு துருக்கியின் மலைப்பிரதேச கிராமம் ஒன்றை நோக்கி ஒரு கார் வருகிறது. பதிமூன்று வயதான ஹவ்வா தனது இளைய சகோதரனின் மரணத்தைத் தொடர்ந்து தனது வீட்டிற்குத் திரும்பி வருகிறாள். அவள் கையில் ஒரு பெட்டியோடு பதற்றமாகக் காரில் அமர்ந்திருக்கிறாள். தந்தை அவளை வரவேற்கிறார். துக்க நிகழ்வு காரணமாக வீடு திரும்பிய அவளை மீண்டும் படிக்க அனுப்பி வைக்காமல் வீட்டுவேலைக்கு அனுப்பிவிட நினைக்கிறார் தந்தை.

அவளின் மூத்த சகோதரி ரெய்ஹான் திருமணமாகி கணவருடன் வாழுகிறாள். கணவன் ஆடுமேய்க்கிறான். அவர்களுக்கு ஒரு குழந்தையிருக்கிறது. நகரிலுள்ள வசதியான வீடுகளுக்கு இவளைப் போல வீட்டோடு தங்கி வேலை செய்யும் பணிப்பெண்கள் தேவைப்படுகிறார்கள். அதற்காக ரெய்ஹான், நூர்ஹான் இருவரும் அனுப்பி வைக்கப்பட்டிருந்தார்கள். அவர்களுக்கு அந்த வேலை பிடிக்கவில்லை ஆகவே சண்டையிட்டுத் திரும்பி வந்துவிடுகிறார்கள்.
வீட்டிலிருக்கும் அக்கா, அவளது கணவன். கைக்குழந்தை. வயதான தந்தை. கோவித்துக் கொண்டு வரும் தங்கை படிப்பை முடித்து வரும் இளையவள் என அந்தச் சிறிய குடும்பம் அழகாகச் சித்தரிக்கப்படுகிறது. நூர்ஹான் வந்தவுடன் அவளுக்கும் ரெய்ஹானுக்கும் சண்டை துவங்கிவிடுகிறது. துரத்தி அடிக்க ஓடுகிறாள் ரெய்ஹான். தந்தை அவளைத் தடுத்து நிறுத்துகிறார். அன்றிரவே அந்தக் கோபம் வடிந்து நூர்ஹான் அக்காவிடம் மன்னிப்பு கேட்கிறாள். அவர்கள் நெருக்கமாகிவிடுகிறார்கள். எவ்வளவு அழகான காட்சியது.
வீட்டுவேலையிலிருந்து சண்டைபோட்டுக் கொண்டு வந்த நூர்ஹான் தனக்கு அந்த டாக்டரின் பிள்ளைகளைப் பிடிக்கவில்லை என்று திட்டுகிறாள். அதே வீட்டில் தான் ரெய்ஹானும் வேலைக்கு இருந்திருக்கிறாள் என்பதால் அவள் அதை ஏற்கவில்லை.
ரெய்ஹானின் வாழ்க்கையில் நடந்த அதிர்ச்சிகரமான உண்மை வெளிப்படும் விதமும் அவளது கடந்த கால நினைவுகளும் படத்தில் அழகாக விரிவு கொள்கிறது.
வீடு திரும்பிய நூர்ஹான் உடல்நலமற்று போகிறாள். பனிக்காலம் துவங்கி பாதை தெரியாமல் உறைபனி நிரம்பிவிடுகிறது. ஊரின் சாலைகள் மூடப்பட்டுவிடுகின்றன. இதனால் மருத்துவரை அழைத்துவரக்கூட வெளியே போக முடியவில்லை. இன்னொரு பக்கம் ரெய்ஹானின் வாழ்க்கை திசைமாற்றம் கொள்கிறது.

படத்தில் வரும் தந்தை அதிகம் பேசுவதில்லை. ஆனால் அவர் பெண்களுடன் கதை பேசுகிறார். விளையாட்டு காட்டுகிறார். அவரது நேசம் மொழியற்றது. அவருடன் மருமகன் சண்டையிடும் போது அவர் அடையும் ஆத்திரமும், டாக்டரை வரவேற்று உபசரிக்கும் விதமும் சிறப்பான வெளிப்பாடாகும்
மூன்று சகோதரிகளுக்குள் நடக்கும் உரையாடல் வெகு நிஜமாக எழுதப்பட்டிருக்கிறது. அதிலும் ரெய்ஹான் தனது கடந்தகாலத் தவறினைப் பற்றிச் சொல்வதும் அதை அறிந்து கொண்ட இளையவள் அதிர்ச்சியடைவதும் தேர்ந்த காட்சியாக உருவாக்கப்பட்டிருக்கிறது
அவர்களின் வாழ்க்கையின் முக்கியமான தருணத்தில் பனிக்காலம் துவங்குகிறது. அதன்பிறகு கதையின் போக்கும் பனிபோலவே உறைந்துவிடுகிறது. தானே அது உருகியோடுவது போல நிகழ்வுகள் நடக்கின்றன. அதுவும் குற்றமனதோடு வீடு திரும்பும் கணவன் வெய்செலை ரெய்ஹான் சந்தித்துப் பேசும் போது அவள் முகத்தில் வெளிப்படும் வெறுப்பு அபாரம்.
வெய்செல் படிப்பறிவில்லாதவன். எப்படியாவது நகரத்திற்குப் போய் வாழ வேண்டும் என்று நினைப்பவன். முட்டாள்தனமாகப் பேசக்கூடியவன். தன்னை ஏமாற்றி ரெய்ஹான் திருமணம் செய்து கொண்டிருக்கிறாள் என்பதை அவனால் தாங்கிக் கொள்ளமுடியவில்லை. கோபத்தில் நெருப்பை அவன் கிண்டிவிடும் காட்சியில் அவனது மனக்கொதிப்பு நன்றாக வெளிப்படுகிறது.

மூவரில் தனித்துவமிக்கவள் நூர்ஹான், அவளது மனம் ஊசலாடிக் கொண்டேயிருக்கிறது. தான் செய்தது சரியா தவறா என்று தன்னைக் குழப்பிக் கொள்கிறாள். தன்னை மன்னித்து அழைத்துக் கொண்டு போய்விடும்படியாக அவள் நெகாட்டியை கேட்கிறாள். தான் அவளை மன்னித்தாலும் தனது மனைவி அவளை மன்னித்து ஏற்றுக் கொள்ளமாட்டார் என்கிறார். அதை அவளால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. நோயாளியாகிறாள். அந்தக் குற்றவுணர்விலிருந்து அவளால் மீள முடியவில்லை
ஹவ்வா புதிய வேலைக்குப் போவதற்காகத் தயாராக இருக்கிறாள். அவளுக்கு வீட்டிலிருக்கப் பிடிக்கவில்லை. ஆனால் அவளுக்கு உலகம் தெரியவில்லை. அவள் நினைப்பது போல உலகம் அன்பாக நடத்தாது என்பதை மூத்த சகோதரிகள் அவளுக்கு உணர்த்த விரும்புகிறார்கள். ஆனால் ஹவ்வா அதைப் புரிந்து கொள்ளவில்லை.
மூவரில் ரெய்ஹான் விரும்பித் தவறுகள் செய்கிறாள். அதிலிருந்து வெளிவந்தபோதும் கடந்தகாலத்தின் நிழல் அவளைவிடுவதில்லை. அவளை இயக்குவது அவளது உடல். அதன் இச்சைகள் மட்டுமே. ஆனால் ஒரு பெண் துறவியைப் போலவே நூர்ஹான் நடந்து கொள்கிறாள். பாலுறவை அருவருப்பாகக் கருதுகிறாள். முள் முறிந்து போனது போலச் சிறு நிகழ்வு அவள் மனதை கசப்பாக்கிவிடுகிறது. இதே போலவே ஹவ்வா ஒரு விசித்திர கனவு காணுகிறாள். அதைப் பற்றி ரெய்ஹான் விசாரிக்கும் போது பேதைப் பெண்ணுக்கு உள் அர்த்தங்கள் புரிவதேயில்லை

டாக்டர் நெகாட்டி ஏன் இரவில் அங்கே தங்க நினைக்கிறார். அவர் அந்தப் பெண்களின் தந்தையோடு கூடிக்குடிக்கும் போது நகரவாழ்க்கையை விடவும் இப்படி மலைக்கிராமம் ஒன்றில் ஆடுமேய்க்கிறவனாக இருப்பது மேலானது என்கிறார். வெய்செலுடன் சண்டைபோட்டதற்காக மன்னிப்பு கேட்கிறார். அவரையும் குற்றவுணர்வு தான் வழிநடத்துகிறது
உண்மையில் குற்றவுணர்வின் மூன்று கிளைவழிகள் ஒரு புள்ளியில் சந்தித்துக் கொள்வது போன்றே படம் உருவாக்கப்பட்டிருக்கிறது.
தேர்ந்த ஒளிப்பதிவு சிறந்த இசை, சிறப்பான நடிப்பு. நிலவெளியின் பிரம்மாண்டம் அனைத்தும் ஒன்று சேர்ந்து இந்தப்படத்தை மறக்கமுடியாத அனுபவமாக்குகிறது.
November 19, 2021
அரண்மனை நாய்
எழுத்தாளர் கந்தர்வன் மிகச்சிறந்த சிறுகதைகளை எழுதியிருக்கிறார். இவரது சாசனம் என்ற சிறுகதையை இயக்குநர் மகேந்திரன் திரைப்படமாக்கியிருக்கிறார்.

ராமநாதபுர நினைவுகளையும் புதுக்கோட்டையைச் சுற்றிய செம்மண் நிலத்தின் வாழ்க்கையினையும் கந்தர்வன் அதிகம் எழுதியிருக்கிறார். அபூர்வமான கதாபாத்திரங்கள். வாழ்க்கைச் சூழல்களை விவரிக்கும் கதைகள். அரசு அலுவலகத்தில் நடக்கும் அதிகாரப்போட்டி. எளிய மனிதர்களின் போராட்டம், குடும்பத்தில் பெண்கள் படும் துயரம், வாழ்ந்து கெட்டவர்களின் வாழ்க்கை என கந்தர்வன் காட்டிய உலகம் அசலானது. நேர்மையாக எழுதப்பட்டது..

கந்தர்வனின் அரண்மனை நாய் என்ற சிறுகதை எனக்கு மிகவும் பிடித்தமானது.
மஹாராஜா ஒருவரின் வளர்ப்பு நாயைப் பற்றியது. கதை ஒரு பெட்டிக்கடைகாரனின் கண்ணோட்டத்தில் சொல்லப்படுகிறது.
மன்னர்களின் காலம் முடிந்து போய்ச் சிதிலமான அரண்மனையில், உடைந்து போன பல்லக்கு, கைவிடப்பட்ட குதிரைலாயம், தூசி படிந்த அறைகள் என வீழ்ச்சியின் இறுதி நிலை சித்தரிக்கபடுகிறது.. காரை பெயர்ந்து போன மண்டபத்தில் தனது துதிபாடிகளுடன் தர்பார் நடத்தும் அந்த மஹாராஜா சென்னையில் வசிக்கிறார்.
மஹாராஜாவிற்குப் பெரிய மீசை. கனமான உடம்பு. பூப்போட்ட ஜிப்பாவிற்கு மேல் கழுத்திலிருந்து வயிறு வரை தொங்கும் தங்க சங்கிலி, உள்ளங்கை அகலத்தில் ஒரு பதக்கம். அவரது காலடியில் ஒரு நாய் எப்போதும் அமர்ந்திருக்கிறது. அது தான் அரண்மனை நாய்.

மகாராஜாவிற்கு வாரிசு கிடையாது, அவ்வப்போது ஊருக்கு வருகை தந்து ஏதாவது ஒரு நிலத்தை விற்று பணமாக்கிக் கொண்டு நகரம் திரும்பி விடுவார். அந்தப் பணம் தீர்ந்தவுடன் திரும்ப ஊருக்கு வருவார். அவர் வரும்போது கூடவே அந்த நாயும் வந்து சேரும்.
அரண்மனை நாய் என்றால் சாதாரணமா
அந்த நாயிற்கு விசேச உணவுகள். அதை நடைப்பயிற்சிக்குக் கூட்டிச் செல்லும் சேவகன் மூச்சிரைக்கச் சங்கிலியைப் பிடித்துக் கொண்டு கூடவே ஓடுவான்
. காரில் மன்னருடன் தான் நாய் சவாரி செய்யும். அந்த நாயிற்கு ஒரு நாள் சாப்பிடப் பொறையைப் போட்டுவிடவே நாய் பெட்டிக்கடைக்காரனைப் பார்த்து பலமாகக் குரைத்தது. பொறை திங்கிற நாயா இது எனச் சேவகனும் கோவித்துக் கொண்டான்.
ஒரு நாய் மன்னர் இறந்து போகவே அந்த நாய் கைவிடப்படுகிறது. அதற்கு உணவு தர யாரும் தயாராகயில்லை. அரண்மனையிலிருந்து துரத்திவிடுகிறார்கள். அந்த நாய் பெட்டிக்கடைக்காரனின் வீட்டிற்கு வந்து சேருகிறது.
தன் வீடு தேடி வந்த நாயிற்கு என்ன தருவது என அவனுக்குத் தெரியவில்லை. அவன் மனைவி பழைய சோறும் கருவாட்டுக் குழம்பும் தருகிறாள். பசியில் நாய் வேகவேகமாக அதைச் சாப்பிடுகிறது. அந்த நன்றிக்காக அவர்களுக்கு வாலாட்டுகிறது.
ஒருவேளை சோற்றுக்காக இந்த நாய் தனக்கும் வாலாட்டுகிறதே என அவன் வியந்து பார்க்கிறான்.
அன்றிரவு அந்த நாய் அவனது பாயில் வந்து படுத்துக் கொள்கிறது. நாயின் அருகில் படுப்பதா என அவனுக்குக் கூச்சமாகியிருக்கிறது
மறுநாள் நாயை அரண்மனைக்குக் கூட்டிப்போகிறான்.
மகாராஜா நினைவாக நீயே அதை வைத்துக் கொள் என்கிறார்கள்.
அரண்மனை நாயை வேறு வழியில்லாமல் அவனே வளர்க்க வேண்டியதாகிறது.
அவன் பிள்ளைகள் அந்த நாயோடு ஆசையாக விளையாடுகிறார்கள். அதுவும் தான் ஒரு அரண்மனை நாய் என்பதை மறந்து அவர்கள் காலைச்சுற்றித் துள்ளுவதும் வாலை ஆட்டுவதுமாக இருக்கிறது
அரண்மனை நாய் வீடு வந்த சேர்ந்தவுடன் தங்கள் வீடே அரண்மனை ஆகிவிட்டது போலப் பிள்ளைகள் நினைக்கிறார்கள்
பெட்டிக்கடை செலவிற்கு வைத்திருந்த பணத்தில் அதற்கு மாட்டிறைச்சி வாங்கிப் போடுகிறான். நாய்க்குப் போடும் சோப். நாய் பிஸ்கட் என எல்லாமும் வாங்கி வந்து தருகிறான். இந்தச் செலவினால் அவன் கடனாளி ஆகிறான். நாளடைவில் அவனது பெட்டிக்கடை படுத்துவிடுகிறது. அவனும் நோயாளியாகிறான். ஆனால் நாயை விடவில்லை
அன்றாடம் பழைய கைலியோடு அவன் நாயைப் பிடித்துக் கொண்டு சாலையில் இருமிக் கொண்டு செல்வதைக் கண்ட பலரும் அவன் மீது இரக்கப்படுகிறார்கள்.
ஒரு நாள் அவன் மனைவி நாயைஅடித்துத் துரத்திவிடவே அவள் மீது கோபம் கொண்டு கைநீட்டி அடித்துவிடுகிறான். நாளுக்கு நாள் அந்த நாயை வைத்துச் சமாளிப்பது மிகவும் கஷ்டமாகிறது.
சரியான உணவு கிடைக்காமல் நாயும் மெலிந்து போகிறது. ஒரு நாள் மாருதி கார் ஒன்றில் வந்து சேரும் ஒரு ஆள் அந்த நாயைப் பார்த்து விலை விசாரிக்கிறான். கொடுப்பதா வேண்டாமா எனப் புரியாமல் அவன் நாயைப் பார்க்கிறான்.
நாயோ புதிதாகத் தன்னை வாங்க வந்துள்ளவனைப் பார்த்து வாலை ஆட்டுகிறது.
வாலாட்டுவது தனக்கா அல்லது வந்த ஆளுக்கா எனப்புரியாமல் அவன் திகைத்து நிற்பதுடன் கதை முடிகிறது

தமிழில் நாயைப் பற்றி அபூர்வமான சிறுகதைகள் எழுதப்பட்டுள்ளன. ஆன்டன் செகாவின் பச்சோந்தி சிறுகதை நாயைப் பற்றி எழுதப்பட்ட கதைகளில் மிகவும் புகழ்பெற்றது. கு.அழகிரிசாமியின் வெறும் நாய் மறக்கமுடியாத கதை. அந்த வரிசையில் வைத்துப் பேச வேண்டிய கதையிது
மகாராஜாவின் செல்லநாய் கைவிடப்பட்டுப் பெட்டிக்கடைக்காரன் வீட்டிற்கு வந்து நிற்பதும் அதை அவன் பிள்ளைகள் ஆசையாக வளர்ப்பதும் மறக்கமுடியாத காட்சி.
கதையில் எத்தனை அடுக்குகள். மகாராஜாவின் கடந்தகாலப்பெருமை மற்றும் அவரது இன்றைய வாழ்க்கை. பெட்டிக்கடைகாரனின் வாழ்க்கை. அவனது அப்பா மகாராஜா மீது கொண்டிருந்த விசுவாசம். மகாராஜாவின் மரணத்தை ஒட்டி நடக்கும் நிகழ்வுகள். நடுராத்திரியில் வீடு தேடி வரும் நாயிற்குப் பெட்டிக்கடைகாரன் மனைவி பழைய சோறு போடும் விதம். நாயின் மாற்றம். அந்த நாயை வளர்க்க பெட்டிக்கடைகாரன் படும்பாடு. முடிவில் அந்த நாயும் அவனுடன் வீழ்ச்சி அடைவது. அரண்மனை நாயின் விசுவாசம் மாறிக் கொண்டேயிருப்பது என இதழ் இதழாகக் கதை விரிவு கொள்கிறது.
அரண்மனை நாயை வளர்ப்பதால் தானே மகாராஜா ஆகிவிட்டது போலப் பெட்டிக்கடைகாரன் உணருகிறான். அது முக்கியமான தருணம். மெல்ல நாய் அவனை இழுத்துக் கொண்டு போக ஆரம்பிக்கிறது. அதற்காகக் கடன் வாங்கிச் செலவு செய்கிறான். உடல் நலிவுற்றுப் போகிறான்.
காலமாற்றம் ஏற்படுத்திய வீழ்ச்சியின் பாடலை கதை மிக அழகாக ஒலிக்கிறது.
கந்தர்வன் இது போல அபூர்வமான சிறுகதைகளை நிறையவே எழுதியிருக்கிறார். ஆனால் அவர் போதிய கவனமும் அங்கீகாரமும் பெறாமலே இறந்து போனது துரதிருஷ்டம்
கந்தர்வனுடன் நெருங்கிப் பழகியிருக்கிறேன். புதுக்கோட்டையில் அவர் வசித்த போது வீடு தேடிச் சென்று கோணங்கியும் நானும் பலமுறை சாப்பிட்டிருக்கிறோம். உரையாடி மகிழ்ந்திருக்கிறோம். எழுத்தாளர் சங்கம் நடத்திய இலக்கிய முகாமில் அவரும் ஷாஜகானும் சேர்ந்து இரவெல்லாம் சிரிக்க வைத்த நாளை எப்படி மறக்கமுடியும். கந்தர்வன் பற்றி கதாவிலாசத்தில் ஒரு கட்டுரை எழுதியிருக்கிறேன்.
கு.அழகிரிசாமியின் வாரிசைப் போலவே கந்தர்வன் தனது சிறுகதைகளை எழுதியிருக்கிறார். அதே நேரம் புதுமைப்பித்தனிடம் காணப்படும் கேலியும் கிண்டலும் கந்தர்வனிடம் சரளமாக வெளிப்படுகிறது.
காடுவரை என்ற கதையில் வரும் பெஞ்சமின் என்ற ஆங்கிலோ இந்தியரை, விதிகளுக்கு அப்பால் கதையில் வரும் ராமன் சாரை. தராசு கதையில் பர்மாவிலிருந்து திரும்பி வரும் அப்பாவை எப்படி மறக்கமுடியும்.
மகத்தான ஒரு படைப்பாளியை நாம் கொண்டாடத் தவறிவிட்டோம் என்பதே நிஜம்..
•••
S. Ramakrishnan's Blog
- S. Ramakrishnan's profile
- 658 followers

