S. Ramakrishnan's Blog, page 113
October 22, 2021
மாயநிலத்தில் அலைவுறும் நிழல்
.அமெரிக்காவின் கொலராடோ பகுதியுள்ள Monument Valley க்குப் படப்பிடிப்பு ஒன்றுக்காகச் சென்ற எனது நண்பர் அங்கே இயக்குநர் ஜான் ஃபோர்டின் ஆவி இன்றும் சுற்றிக் கொண்டிருக்கிறது. ஒருவேளை இப்போதும் படம் எடுத்துக் கொண்டிருக்கிறதோ என்னவோ என்று சொன்னார்.

அவர் சொன்னது முற்றிலும் உண்மை, இந்தப் பள்ளத்தாக்கினை ஜான் ஃபோர்டு போல யாரும் படமாக்கியிருக்க முடியாது. இன்று அந்தப் பள்ளத்தாக்கு அவரது நினைவுச்சின்னமாகவே குறிப்பிடப்படுகிறது.

அமெரிக்கச் சினிமாவின் நிகரற்ற இயக்குநர் ஜான் ஃபோர்டு. சென்ற லாக்டவுன் நாட்களில் தொடர்ச்சியாக அவரது படங்களைப் பார்த்து வந்தேன். Stagecoach (1939), The Searchers (1956), The Man Who Shot Liberty Valance (1962),The Grapes of Wrath (1940). How Green Was My Valley போன்ற படங்களைக் காணும் போது எப்படி இந்தப் படங்களை இத்தனை பிரம்மாண்டமாக உருவாக்கினார் என்ற வியப்பு அடங்கவேயில்லை.
கண்கொள்ளாத அந்த நிலப்பரப்பினை ஒரு கதாபாத்திரமாக மாற்றியவர் ஜான் ஃபோர்டு. காலமற்ற வெளியினைப் போலவே அது தோற்றமளிக்கிறது. She Wore a Yellow Ribbon திரைப்படத்தில் அந்தப் பரந்த வெளியில் மேகங்கள் திரளுவதையும் மின்னல் வெட்டுடன் இடி முழங்குவதையும் நிஜமாகப் படமாக்கியிருக்கிறார்.
ஜான் ஃபோர்டு ஹாலிவுட் சினிமாவிற்குப் புதிய மொழியை உருவாக்கினார். குறைவான கதாபாத்திரங்களைக் கொண்டு அவர் உருவாக்கிய வெஸ்டர்ன் படங்கள் நிகரற்றவை. 4 முறை ஆஸ்கார் விருது பெற்றுள்ள ஃபோர்டு மாறுபட்ட களங்களில் படங்களை இயக்கியிருக்கிறார். How Green Was My Valley இதற்குச் சிறந்த உதாரணம். இப்படி ஒரு உணர்ச்சிப்பூர்வமான படத்தை இயக்கியவர் தான் Stagecoach எடுத்திருக்கிறார் என்பது வியப்பானது.

இவர் ஜான் வெய்னுடன் இணைந்து 14 படங்களை இயக்கியுள்ளார். இந்தப் படங்களின் வழியாகவே ஜான் வெய்ன் உச்ச நட்சத்திரமாக உருவாகினார்.
The Searchers – 1956 ம் ஆண்டு வெளியான திரைப்படம். அமெரிக்காவின் தலைசிறந்த படமாகக் கருதப்படும் இப்படம் தற்போது டிஜிட்டல் உருமாற்றம் பெற்று வெளியாகியுள்ளது. எத்தனை முறை பார்த்தாலும் ஈர்ப்பு குறையாத படமிது.
1868 ஆம் ஆண்டில், ஈதன் எட்வர்ட்ஸ் மேற்கு டெக்சாஸ் வனப்பகுதியில் உள்ள தனது சகோதரர் ஆரோனின் வீட்டிற்கு எட்டு ஆண்டுகளுக்குப் பிறகு திரும்புகிறார்.. ஈதன் உள்நாட்டுப் போரில் கலந்து கொண்ட போர்வீரர். நிறையத் தங்க நாணயங்களுடன் வீடு திரும்பும் ஈதன் அவற்றைப் பாதுகாப்பாக வைத்திருக்கும்படி ஆரோனிடம் தருகிறாள். அத்துடன் தனது பதக்கம் ஒன்றையும் மருமகள் டெபிக்கு அன்பளிப்பாகத் தருகிறார்.,
ஒரு நாள் ஈதனின் பக்கத்து வீட்டுக்காரர் லார்ஸ் ஜார்ஜென்சனுக்குச் சொந்தமான கால்நடைகள் திருடப்படுகின்றன. அவற்றை மீட்க, கேப்டன் கிளேட்டன், ஈத்தன் மற்றும் குழு கிளம்பிப் போகிறது., உண்மையில் அந்தக் களவு ஒரு சூழ்ச்சி என்பதையும் தன்னை ஆரோன் குடும்பத்திலிருந்து விலக்கி வைக்கவே இந்தச் சூழ்ச்சி நடந்திருப்பதையும் ஈதன் உணருகிறார். ஏதோ ஆபத்து நடக்கப்போகிறது என அவசரமாக வீடு திரும்புகிறார் ஈதன்.
இதற்குள் வீடு தீப்பற்றி எரிந்து கொண்டிருக்கிறது. பூர்வகுடி இந்தியர்களால் ஆரோன், அவரது மனைவி மார்த்தா மற்றும் மகன் பென் கொல்லப்பட்டிருக்கிறார்கள் ஆரோனின் மகள் , டெபி மற்றும் அவரது மூத்த சகோதரி லூசி கடத்தப்பட்டிருக்கிறார்கள்.
இறந்தவர்களுக்கான இறுதி நிகழ்வை முடித்துக் கொண்டு கடத்திச் செல்லப்பட்ட பெண்களை மீட்கப் புறப்படுகிறான் ஈதன்.

இந்தத் தேடுதல் என்னவானது என்பதை ஜான் ஃபோர்டு மிக அழகாகக் காட்சிப்படுத்தியிருக்கிறார்.
திருப்பத்திற்கு மேல் திருப்பம், பரபரப்பான துரத்தல் காட்சிகள். உண்மையைக் கண்டறிய ஈதன் மேற்கொள்ளும் முயற்சிகள் என அந்தக் குதிரைவீரனின் பின்னால் நாமும் செல்கிறோம்.
எதிரிகளால் கடத்தப்பட்ட பெண்களை மீட்பது என்ற இந்தப் படத்தின் கதைக்கருவின் பாணியில் அதன்பிறகு நிறைய ஹாலிவுட் படங்கள் உருவாக்கப்பட்டன.
ஆரம்பக் காட்சியில் அமைதிப்பள்ளதாக்கு போலத் தோன்றும் அந்த நிலப்பரப்பு மெல்ல அச்சமூட்டும் நிலவெளியாக மாறுகிறது. பூர்வகுடி இந்தியர்கள் கூட்டமாகக் குதிரையில் கிளம்பி வரும் காட்சியும் அவர்களை ஈதன் எதிர்கொள்ளும் இடமும் அபாரம்.
இந்தத் தேடுதல் வேட்டை முழுவதிலும் ஈதன் அமைதியாக இருக்கிறார். அதே நேரம் ஆவேசமாகச் சண்டையிடுகிறார். தனக்கென யாருமில்லாத அவரது கதாபாத்திரம் இன்று வரை ஹாலிவுட்டில் தொடர்ந்து வரும் பிம்பமாக மாறியுள்ளது. ஜான் வெய்ன் ஈதனாகச் சிறப்பாக நடித்திருக்கிறார்.
இந்தப் படத்தின் பாதிப்பினை The Revenant படத்தில் நிறையக் காணமுடிகிறது. டெப்பியை தேடும் பயணத்தின் ஊடே ஈதன் சந்திக்கும் நிகழ்வுகளும் ஐந்து ஆண்டுகளுக்குப் பின்பு அவளைக் கண்டுபிடிப்பதும் எதிர்பாராத அவளது முடிவும் அழகாகச் சித்தரிக்கப்பட்டுள்ளன.
ஜான் ஃபோர்டு இனவெறியுடன் பூர்வகுடி இந்தியர்களைப் படத்தில் சித்தரித்துள்ளார். ஒரு காட்சியில் ஈதன் இறந்து போன பூர்வ குடியின் கண்களைச் சுடுகிறார். அது அவர்களுக்கு வானுலக வாழ்க்கை கூடக் கிடைக்ககூடாது என்ற கசப்புணர்வின் அடையாளமாக உள்ளது என்ற விமர்சனம் இன்றும் முன்வைக்கப்படுகிறது. ஆனால் ஜான் ஃபோர்டு அன்றிருந்த பொது மனநிலையின் வெளிப்பாட்டினை தான் கொண்டிருக்கிறார். தனிப்பட்ட முறையில் அவர்களைத் துவேஷிக்கவில்லை. உண்மையாக அவர்களின் உலகைச் சித்தரித்திருக்கிறார் என்கிறார் இயக்குநர் மார்டின் ஸ்கார்சசி.

மார்த்தா தொலைவில் ஈதன் வீடு திரும்பி வருவதைக் காணும் காட்சியை மிக நேர்த்தியாகப் படமாக்கியிருக்கிறார். சிறப்பான இசை. இரண்டு உயர்ந்த குன்றுகளுக்கு நடுவே ஒற்றை ஆளாக ஈதன் திரும்பி வருகிறார். மேகங்கள் அற்ற வானம். முடிவில்லாத மணல்வெளி. புதர்செடிகள். படியை விட்டு இறங்கி வரும் ஆரோன் முகத்தில் வெயில் படுகிறது. காற்றில் படபடக்கும் உடைகளுடன் டெபி வெளியே வருகிறாள். வாலாட்டியபடியே அவர்கள் நாயும் காத்திருக்கிறது. வீட்டிற்கு வரும் ஈதன் அன்போடு மார்த்தாவின் நெற்றியில் முத்தமிடுகிறார். அவர்கள் ஒன்றாக உணவருந்தும் காட்சியில் தான் எவ்வளவு சந்தோஷம்
இந்தச் சந்தோஷ நினைவு தான் ஈதன் பழிவாங்க வேண்டும் என்று நம்மைத் தூண்டுகிறது.

நிலக்காட்சி ஓவியரைப் போலவே தனது சட்டகத்தை உருவாக்குகிறார் ஜான் ஃபோர்டு. ஒளி தான் நிலத்தின் அழகினை உருவாக்குகிறது. காற்றும் ஒளியும் சேர்ந்து இப்படத்தின் காட்டும் ஜாலங்கள் அற்புதமானவை.
இத்தனை பிரம்மாண்டமான காட்சிகளை இன்று திரையில் காண முடிவதில்லை. நகரவாழ்வு சார்ந்த ஒற்றை அறை, அல்லது அலுவலகம். இடிபாடு கொண்ட பழைய கட்டிடம், நெருக்கடியான சாலைகள். ஷாப்பிங் மால்கள் எனப் பழகிப்போன இடங்களைத் திரும்பத் திரும்ப இன்றைய படங்களில் பார்த்துக் கொண்டிருக்கிறோம். நிலப்பரப்பு ஒரு கதைக்கு எவ்வளவு முக்கியமானது என்பதை அறிந்து கொள்வதற்கு ஜான் ஃபோர்டு படங்களை அவசியம் காண வேண்டும் என்பேன்
•••
October 20, 2021
மலர்களை நேசிக்கும் நாய்
மேரி ஆலிவரின் கவிதை ஒன்றை கவிஞர் ஷங்கர ராமசுப்ரமணியன் மொழியாக்கம் செய்து தனது வலைப்பக்கத்தில் பகிர்ந்துள்ளார். மிகவும் நல்ல கவிதை. விலங்குகளைப் பற்றிய மேரி ஆலிவரின் கவிதைகள் தனித்துவமானவை. இந்த கவிதையில் வரும் நாய் மலர்களைத் தேடிச் செல்கிறது. ரோஜாவைக் கண்டதும் நின்றுவிடுகிறது. வழியில் காணும் மலர்களை ஆராதிக்கிறது. மனிதர்கள் ஒரு மலரை ஆராதிக்கும் போது அடையும் உணர்வுகளை போலவே தானும் அடைகிறது எனலாமா,
ஒருவேளை நாம் தான் அப்படி புரிந்து கொள்கிறோமோ என்னவோ

உண்மையில் ஒரு நாயிற்கு மலர் அபூர்வமான பொருளாக தோன்றக்கூடும். அதை பறித்துத் தனதாக்கிக் கொள்ள வேண்டும் என்ற ஆசை ஒரு போதும் நாயிற்கு தோன்றாது. அது மலரை வாசனையின் உருவம் போலவே நினைக்க கூடும். மலரை தன் மூக்கால் உரசும் போது உலகம் இத்தனை மிருதுவானதா என வியந்திருக்கும். நம்மைப் போல நாய் மலர்களில் பேதம் காணுவதில்லை. ஒரு நாய் தன் மகிழ்ச்சியின் அடையாளமாகவே மலரை ஆராதிக்கிறது.
வாசிக்க வாசிக்க கவிதை ஒரு மலரைப் போலவே விரிந்து கொண்டே போகிறது. அபூர்வமான தருணங்களைப் பதிவு செய்யும் போது கவிதை உன்னதமாகிவிடுகிறது. மேரி ஆலிவரின் கவிதைகளும் அப்படியானதே.
லூக் – மேரி ஆலிவர்
தமிழில் ஷங்கர ராமசுப்ரமணியன்
மலர்களை நேசித்த
ஒரு நாய்
என்னிடம் இருந்தது.
வயல் வழியாக பரபரப்பாக
ஓடும்போதும்
தேன்குழல் பூ
அல்லது ரோஜாவுக்காக
நின்றுவிடுவாள்
அவளின் கருத்த தலையும்
ஈர மூக்கும்
ஒவ்வொரு மலரின் முகத்தையும்
பட்டிதழ்களோடு ஸ்பரிசிக்கும்.
மலர்களின் நறுமணம்
காற்றில் எழும்வேளையில்
தேனீக்கள்
அவற்றின் உடல்கள்
மகரந்தத் துகள்களால் கனத்து
மிதந்துகொண்டிருக்கும்
போது
அவள் ஒவ்வொரு பூவையும்
அனாயசமாக ஆராதித்தாள்
இந்த பூ அல்லது அந்தப் பூவென்று
கவனமாக
நாம் தேர்ந்தெடுக்கும்
தீவிரகதியில் அல்ல-
நாம் பாராட்டும் அல்லது பாராட்டாத வழியில் அல்ல-
நாம் நேசிக்கும்
அல்லது
நேசிக்காத வழியில் அல்ல—
ஆனால் அந்த வழி
நாம் ஏங்குவது-
பூவுலகில் உள்ள சொர்க்கத்தின் மகிழ்ச்சி அது-
அந்தளவு மூர்க்கமானது
அவ்வளவு விரும்பத்தக்கது.
***
October 19, 2021
சீனன் சாமி
வனம் இணைய இதழில் சித்துராஜ் பொன்ராஜ் சீனன் சாமி என்ற சிறுகதையை எழுதியிருக்கிறார். சமீபத்தில் நான் படித்த மிக முக்கியமான சிறுகதை.

சிங்கப்பூர் வரலாற்றையும் கடந்த கால நினைவுகளையும் மடிப்பு மடிப்புகளாகக் கொண்டு வியப்பூட்டும் ஒரு நிகழ்வைச் சிறுகதையாக்கியிருக்கிறார்.
மலைப்பாம்ப வச்சுக் கும்பிட்டா அதிர்ஷ்டம்னு சீனனுங்க சொல்லுவானுங்க,” என்றான் வீரா என ஒருவன் மலைப்பாம்பை பிடித்துக் கொண்டு வருவதில் கதை துவங்குகிறது.
மலைபாம்பை என்ன செய்வது என்பதைப்பற்றிய உரையாடலின் ஊடாகவே அவர்கள் நிரந்தர வேலையில்லாத மலேசிய கேஷுவல் லேபர்கள் என்பதும். சட்டவிரோதமாகக் குடியிருக்கிறார்கள் என்பதும் தெரிய வருகிறது.
மலைப்பாம்பு என்பது கதையில் குறியீடாக, அடையாளமாக, வரலாறாக, அதிகாரமாகக் கதையின் வழியே உருமாறிக் கொண்டேயிருக்கிறது. சித்துராஜின் மொழி சிங்கப்பூர் வாழ்விலிருந்து பிறந்த அசலான வெளிப்பாடாக உள்ளது.
இளஞ்சேரனின் கட்டைக் குரலில் புதிதாய் ஊற்றிவைத்த பீரின் அடியிலிருந்து கிளம்பும் குமிழ்களைப்போன்று கொப்புளிக்கும் நையாண்டி. என்ற வரி இதற்கொரு உதாரணம்
பிரிட்டிஷ் காரர்களால் அந்தக் காலத்தில் துறைமுகத் தொழிலாளர்களுக்காகக் கட்டப்பட்ட குடியிருப்புக்களையும் அதன் பகல் பொழுதையும் விவரிக்கும் சித்துராஜ் சட்டெனப் பயன்படாது என்று வீசி எறியப்பட்ட வீட்டு உபயோகப் பொருட்கள் யாருக்கோ பயன்படுகின்றன என்பதைத் தொட்டுக் காட்டி அப்படியே உருமாறிக் கொண்டிருக்கும் பயன்பாடுகளின் உலகை விவரிக்கிறார். இந்தத் தாவல் சிறப்பானது. எழுத்தாளன் இப்படித் தான் கதையின் வழியாகத் தனது பார்வைகளைப் பேச வேண்டும்.
கதையின் ஊடாக நாம் காலனிய வரலாற்றை, தோட்ட குடியிருப்புகளை, அதன் மறக்க முடியாத இனிய நினைவுகளை, சமகால நெருக்கடிகளைக் காணுகிறோம்.
வட ஜோகூர் காடுகளில் இருவரும் காட்டுப்பன்றிகளை வேட்டையாடி இனிப்புச் சுவையுடைய அந்த மாமிசத்தைச் சிறு கத்திகளால் அரிந்து காட்டின் நடுவிலேயே தீமுட்டி வாட்டித் தின்றிருந்த போதிலும்கூட வீரா முற்றிலும் வித்தியாசமானவன் என்று இளஞ்சேரனுக்குத் தோன்றியது என்ற வரிகளின் ஊடே ஒரு முழு வாழ்க்கையும் வந்து போகிறது.
செம்பனைத் தோட்டத்திற்குள் கனமான பூட்ஸுகளோடு ஜப்பானிய ராணுவ வீரர்கள் கறுப்பான துப்பாக்கிகளை முன்னால் நீட்டியபடி நுழையும் காட்சியைச் சட்டெனக் கதையின் போக்கிலே ஊடாட வைக்கிறார்.இந்தக் கதை ஏன் முக்கியமானது என்பதற்கு இதுவும் ஒரு காரணம்.
மறந்து போன வரலாற்றையும் பூர்வ வாழ்க்கையினையும் மலைப்பாம்பாக்கி விடுகிறார். அதே நேரம் மலைப்பாம்பு பற்றிக் கேலிகளும் நிதர்சனங்களும் அழகாக விவரிக்கப்படுகின்றன.
சீனர்கள் எதையும் விற்கக் கூடியவர்கள். தந்திரசாலிகள். அவர்கள் கதையின் முடிவில் மலைப்பாம்பைச் சீனன் சாமியாக்கிவிடுகிறார்கள்.
குடியேறிய இடங்களில் சீனர்கள் எப்படி அதிகாரத்தைத் தனதாக்கிக் கொண்டுவிடுகிறார்கள் என்பது மலைப்பாம்பின் வழியே சொல்லப்படுகிறது
கதையின் கருப்பொருள் துவங்கி கதையின் மொழி மற்றும் கதை வழியே வெளிப்படும் வரலாறு, நினைவுகள். சமகால நிகழ்வுகள். சட்டவிரோத குடியேற்றம் எனப் பல்வேறு ஊடு இழைகளைக் கொண்டு சிறப்பான கதையை எழுதியிருக்கிறார் சித்துராஜ்.
புதிய தமிழ்ச்சிறுகதையின் கதைவெளி இப்படித் தான் விரிவடைய வேண்டும். அற்புதமான கதையை எழுதிய சித்துராஜ் பொன்ராஜிற்கு எனது மனம் நிறைந்த பாராட்டுகள்
சீனன் சாமி – சித்துராஜ் பொன்ராஜ்
October 18, 2021
விகடன் தீபாவளி மலரில்
விகடன் தீபாவளி மலரில் எனது புதிய சிறுகதை வெளியாகியுள்ளது. காந்தியோடு தொடர்புடைய கதை. ஒவியர் ரவி அழகான ஒவியங்களை வரைந்திருக்கிறார்.
 
  உயிர்மை 200
உயிர்மை 200வது இதழ் வெளியாகியுள்ளது. தமிழின் முக்கிய படைப்பாளிகள் அனைவரும் கைகோர்த்து வந்துள்ள இந்த இதழ் குறிப்பிடத்தக்கது. இதில் வெளியாகியுள்ள தேவதச்சனின் கவிதைகள் அபாரமானவை.

நீண்ட இடைவெளிக்குப் பிறகு எனது சிறுகதை உயிர்மை இதழில் வெளியாகியுள்ளது. மனுஷ்யபுத்திரன் என்றும் என் அன்பிற்குரிய நண்பர். அவர் தொலைபேசியில் அழைத்துக் கதை கேட்டதும் உடனே அனுப்பி வைத்தேன்.

எனது கதைக்கு மனோகர் வரைந்துள்ள ஒவியம் அத்தனை பொருத்தமாக உள்ளது. மனோகருக்கு என் மனம் நிறைந்த பாராட்டுகள்.
மகிழ்ச்சியின் தூதுவன்
Autumn of the Magician என்ற ஆவணப்படத்தைப் பார்த்தேன் , டொனினோ குவாரா பற்றியது.

இவர் ஆந்த்ரேய் தார்க்கோவஸ்கியின் நெருக்கமான நண்பர். அன்டோனியோனி, பெலினி பிரான்செஸ்கோ ரோஸி, தியோ ஆஞ்சலோபோலஸ் படங்களுக்குத் திரைக்கதை ஆசிரியர். ஓவியர், கவிஞர், சிற்பி. கட்டிடக்கலைஞர், சமையற்கலைஞர். இசைக்கலைஞர், நாடகாசிரியர், தோட்டக்கலை நிபுணர், நாவலாசிரியர், பள்ளி ஆசிரியர், வேட்டைக்காரன், தியானி, நடிகர் எனப் பன்முகத்திறமை கொண்டவர். லியோனார்டோ டாவின்சியோடு தான் இவரை ஒப்பிட வேண்டும் என்கிறார்கள்.
மண்ணில் செய்து வைத்த பறவை உருவங்கள். ஒரு நாள் சிறகடித்துப் பறந்து சென்றுவிட்டன. இது வெறும் கற்பனையில்லை. மாயம். உங்களால் அன்பு செலுத்த முடியுமென்றால் பறவை பொம்மைகளுக்கும் உயிர் உண்டாகும் என்கிறார் டொனினோ.
தார்க்கோவஸ்கியுடன் நெருங்கிப்பழகிய டொனினோ அவர் இத்தாலியில் படம் இயக்குவதற்கு மிகவும் துணை செய்திருக்கிறார். இந்த நாட்களில் அவர்கள் மேற்கொண்ட பயணம் ஒரு Voyage in Time என்ற படமாக உருவாக்கப்பட்டிருக்கிறது

டொனினோ சில காலம் ரஷ்யாவில் வசித்திருந்திருக்கிறார். அப்போது தான் நேரில் கண்ட தார்க்கோவஸ்கி பற்றி ஒரு விஷயத்தை ஒரு நேர்காணலில் டொனினோ குறிப்பிடுகிறார். அதாவது ரஷ்யாவிலிருந்த தனது பூர்வீக நிலத்தில் விவசாயப்பணிகள் செய்வதில் தார்க்கோவஸ்கி மிகவும் விருப்பம் கொண்டிருந்தார். விவசாய வேலைகளில் அவருக்கு உதவி செய்வதற்குக் கிராமத்து விவசாயி ஒருவர் வருவது வழக்கம். ஒரு நாள் அவர் வேலைக்கு வரவில்லை. இரண்டு நாளின் பின்பு அந்த விவசாயியை தார்க்கோவஸ்கி நேரில் சந்தித்த போது இதைப்பற்றிக் கேட்டுக் கொள்ளவில்லை. விவசாயியும் ஏன் தான் வேலைக்கு வரவில்லை என்று காரணம் சொல்லவில்லை.
இதைப்பற்றி டொனினோ வியப்புடன் கேட்டதற்குத் தார்க்கோவஸ்கி சொன்ன பதில் அவரது திரைப்படங்களைப் புரிந்து கொள்வதற்கும் பொருத்தமானது.
“ரஷ்யாவில் இப்படித்தான் ஒருவர் திடீரென மன மாற்றம் கொண்டுவிடுவார். எதனால் அப்படி மனமாற்றம் கொண்டார் என்பதை அவர் யாருக்கும் தெரியப்படுத்த வேண்டியதில்லை“

தார்க்கோவஸ்கியின் கதாபாத்திரங்களில் இந்தத் தன்மை வெளிப்படுவதை உணர்ந்திருக்கிறேன். அந்த விவசாயி தனது நிலத்தில் வேலைக்கு வரவில்லை என்பதால் அவருடனிருந்த உறவை தார்க்கோவஸ்கி துண்டித்துக் கொள்ளவில்லை. முன்னைப் போலவே அவருடன் அன்பாகவே பழகியிருக்கிறார்.
எமிலியாவில் தானும் தார்க்கோவஸ்கியும் அமர்ந்து பேசிய இருக்கையில் இப்போதும் அவர் அரூபமாக அமர்ந்து பேசிக் கொண்டிருப்பதாகச் சொல்கிறார் டொனினோ
இந்தப் படத்தில் நாம் டொனினோவின் பன்முகத்தன்மையைக் காணுகிறோம்.
உண்மையில் அவர் ஒரு சிறிய தனித்துவமான கிரகம் ஒன்றைப் போலிருந்தார். சொந்த கிராமமான எமிலியாவில் விசித்திரங்கள் நிரம்பிய தனது உலகைத் தானே உருவாக்கிக் கொண்டார். அவரது நண்பர்கள் உலகின் புகழ்பெற்ற திரைப்பட இயக்குநர்கள். அவரைக் காண தலாய் லாமா வந்திருக்கிறார். ஓய்வான நாட்களில் குழந்தைகளுக்குப் பொம்மைகள். பட்டங்கள் செய்து கொடுத்து விளையாடுகிறவர். இப்படி டொனினோ குவாராவைப் பற்றிச் சொல்லிக் கொண்டே போகலாம். உண்மையில் அவர் ஒரு விசித்திரக்கலைஞர் இத்தாலியின் ஹோமர் என்று அழைக்கலாம் என்கிறார் கவிஞர் டேவிட் மிலானி.

டொனியோ பாசிச ஆட்சியை எதிர்த்தவர். இதனால் நாடு கடத்தப்பட்டு 1944 இல் ட்ராய்ஸ்டார்பில் உள்ள ஒரு முகாமில் அடைக்கப்பட்டார். ஒரு வருடம் அந்த முகாமிலிருந்த நாட்களில் நிறையக் கவிதைகள் எழுதியிருக்கிறார்.
ஐரோப்பிய திரைக்கதை ஆசிரியர்களில் இவரே முதன்மையானவர். இவர் இணைந்து பணியாற்றிய இயக்குநர்கள் அத்தனை பேரும் உலகப்புகழ் பெற்றவர்கள். சர்வதேச அளவில் நிறைய விருதுகளைப் பெற்றிருக்கிறார். ஆர்மீனிய வம்சாவழியில் வந்த லோராவை திருமணம் செய்து கொண்டார். இருவருக்கும் இடையில் இருபது ஆண்டுகள் இடைவெளி இருந்த போதும் காதல் அவர்களை ஒன்று சேர்ந்தது.
.1989 ஆம் ஆண்டில், மாண்டெஃபெல்ட்ரோ பகுதியில் உள்ள பழைய மாலடெஸ்டா நகரமான பென்னாபில்லியில், அவர் நீண்ட கோடை விடுமுறையைக் கழித்தார். அங்கே வசித்த நாட்களில் அவர் உருவாக்கிய கலைக்கூடம் விசித்திரமானது.
இது போலவே எமிலியாவில் பெரிய தோட்டத்துடன் உள்ள அவரது வீடு ஒரு திறந்தவெளி கலைக்கூடம் போலவே உருவாக்கப்பட்டிருக்கிறது. அந்தத் தோட்டத்தில் நிறையச் சிற்பங்கள். அதில் பெலினியும் ஒரு சிற்பமாக உருவாக்கப்பட்டிருக்கிறார். தார்க்கோவஸ்கியோடு அமர்ந்து பேசிய இருக்கையில் வெயில் படருகிறது.

இயக்குநர் பரஜினேவ்வின் திரைப்படங்களை மிகவும் விரும்பிய டொனினோ அவர் உருவாக்கியது போலவே காட்டுப்படிமங்களை உருவாக்கக் கூடியவர். இருவரும் சந்தித்துக் கொண்ட போது நீண்டகாலம் பழகிய நண்பர்கள் போலவே உணர்ந்தார்கள். டொனினோ ஆர்மீனியாவில் காலம் வெளியாக மாறியுள்ளது என்கிறார்.
அரை நூற்றாண்டுக்கும் மேலாக நீடித்த திரை வாழ்க்கையில் 100க்கும் மேற்பட்ட திரைக்கதைகளை எழுதிய டொனினே மூன்றுமுறை ஆஸ்கார் விருதிற்குப் பரிந்துரை செய்யப்பட்டிருக்கிறார்
வெனிஸ் திரைப்படவிழாவில் வாழ்நாள் சாதனையாளர் விருது பெற்றிருக்கிறார்.
சந்தோஷத்தை உருவாக்குவதே தனது வேலை. சினிமா இலக்கியம் ஓவியம் சிற்பம் விளையாட்டு என எல்லாவிதங்களிலும் மகிழ்ச்சியைத் தான் பகிர்ந்து கொள்கிறேன். எனது விருப்பத்துடன் இணைந்து பயணம் செய்யும் நல்ல நண்பர்கள் எனக்குக் கிடைத்தார்கள். அதுவே எனது வெற்றிக்கான காரணம்.

இன்று என் நண்பர்களில் பலர் மறைந்துவிட்டார்கள். பெலினி இப்போது இல்லை. ஆனால் அவருடன் ஒன்றாகப் பேசி நடந்த வீதி அப்படியே இருக்கிறது. அன்டோனியோனி இல்லை ஆனால் அவருடன் பயணம் செய்த படகு அதே கரையில் நிற்கிறது. நானும் தார்க்கோவஸ்கியும் நிறையப் பேசினோம். விவாதித்தோம். அவரும் இப்போது இல்லை. அவருடன் இருந்த போது ஒளிர்ந்த சூரியன் அதே இடத்தில் இன்றும் ஒளிர்கிறது. நானும் ஒரு நாள் இயற்கையின் பகுதியாகி இருப்பேன். அப்போது இந்த வெளிச்சத்துடன் என்னையும் நினைவு கொள்வார்கள் என்கிறார் டொனினோ
அவர் உருவாக்கிய தோட்டமும் கலைக்கூடங்களும் இன்று முக்கியச் சுற்றுலா ஸ்தலங்களாக உருமாறியுள்ளன. டொனினோ கடைசிவரை ஒரு சிறுவனின் கனவுகளுடன் வாழ்ந்து வந்தார். அது தான் அவரது மகிழ்ச்சியின் அடையாளம் என்கிறார் அவரது மனைவி லோரா
டொனினோ பற்றி மூன்று ஆவணப்படங்கள் இணையத்தில் காணக்கிடைக்கின்றன. அவர் தார்க்கோவஸ்கியுடன் செய்த நேர்காணலும் உள்ளது.
படத்தின் வழியே இளமஞ்சள் வெயிலைப் போல இதமான நெருக்கம் தருகிறார் டொனினோ.
**
October 17, 2021
சுவரும் வானமும்
2020ல் வெளியான 200 Meters திரைப்படம் வெனிஸ் திரைப்படவிழாவில் சிறந்த திரைப்படமாகப் பார்வையாளர்களின் விருதைப் பெற்றுள்ளது. பாலஸ்தீனத்திற்கும் இஸ்ரேலுக்குமான பிரச்சனையைப் படம் புதிய கோணத்தில் சித்தரிக்கிறது

பாலஸ்தீன நகரமான துல்கர்மிலுள்ள முஸ்தபாவின் வீட்டில் படம் துவங்குகிறது. அவனது மனைவி சல்வா சமையலறையில் வேலை செய்து கொண்டிருக்கிறாள். ஆசையாக அவளை நெருங்கிக் கட்டிப்பிடிக்கிறான். அவளே குழந்தைகள் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் என்று விலக்கிவிடுகிறாள். அவன் தனது முதுகுவலியைப் பற்றிச் சொல்கிறான். இந்த உடல்நிலையோடு கட்டிட வேலை செய்து கஷ்டப்பட வேண்டாம் என்கிறாள் சல்வா. எத்தனை நாள் நீ தரும் பாக்கெட் மணியில் வாழுவது என்று ஆதங்கத்துடன் கேட்கிறான் முஸ்தபா.. அவளிடம் பதில் இல்லை. சல்வாவும் மூன்று குழந்தைகளும் ஒரு காரில் கிளம்புகிறார்கள்
இரவாகிறது. முஸ்தபா தன் வீட்டுப் பால்கனியில் நின்று தூரத்தில் தெரியும் வீடுகளைக் காணுகிறான். அதில் ஒரு வீட்டு ஜன்னலில் வெளிச்சம் காணப்படுகிறது. உடனே தன் வீட்டு விளக்கை எரியவிடுவதும் அணைப்பதுமாக ஒரு விளையாட்டில் ஈடுபடுகிறான். என்ன விளையாட்டு இது எனப்புரியாத போது தொலைபேசி அழைப்பு வருகிறது. அதில் அவனது பிள்ளைகள் பேசுகிறார்கள். அவர்களுக்குக் குட்நைட் சொல்கிறான்.
அப்போது தான் தொலைவில் உள்ள வீட்டில் அவனது மனைவி பிள்ளைகள் வசிப்பதை அறிகிறோம். முஸ்தபா இருப்பது பாலஸ்தீனத்தில் அவன் மனைவி பிள்ளைகள் வசிப்பது இஸ்ரேலில். இருவருக்கும் இடையில் இருநூறு மீட்டர் இடைவெளி. ஆனால் பெரிய தடுப்புச் சுவர் பிரித்திருக்கிறது.

சல்வா தனது வேலை காரணமாக இஸ்ரேலின் மேற்கு கரை நகரில் வசிக்கிறாள். ஆனால் முஸ்தபா இஸ்ரேலில் நிரந்தரமாகக் குடியிருக்கத் தேவையான அடையாள அட்டையைப் பெறவில்லை. அதற்கான விருப்பமும் இல்லை என்பதால் பாலஸ்தீனத்தில் குடியிருக்கிறான்.
அவன் தன் அடையாளத்தை இழக்க விரும்பவில்லை. அவனது அம்மா படத்தின் ஒரே காட்சியில் தான் பேசுகிறாள். மற்றபடி அவள் ஒரு மௌனசாட்சியம் போலவே இருக்கிறாள். பாதுகாப்பு சோதனையின் போது அவன் விரல் ரேகை பொருந்தவில்லை. விரலைத் துடைத்து ஸ்கேன் செய்தாலும் ரேகை பொருந்த மறுக்கிறது. அவனது அகத்தில் உள்ள எதிர்ப்புணர்வின் அடையாளம் போலவே அந்தக் காட்சி சித்தரிக்கப்படுகிறது
உண்மையில் முஸ்தபா குற்றவுணர்ச்சி கொண்டிருக்கிறான். அரசியல் பிரச்சனையின் காரணமாகத் தனது குடும்பம் பாதிக்கப்பட்டிருக்கிறது. மனைவி பிள்ளைகளை வைத்துக் கொண்டு அல்லாடுகிறாள். தன்னால் அவர்களுக்கு உதவ முடியவில்லை என்ற குற்றவுணர்வு அவனிடம் காணப்படுகிறது.
இஸ்ரேலின் மேற்கு கரையிலுள்ள துல்கர்ம் நகரில் கதை நடக்கிறது. முஸ்தபா போல ஏராளமான பேர் எல்லையை ஒட்டி வசிக்கிறார்கள். அவர்களுக்கு முறையான அனுமதி அட்டை கிடைக்கவில்லை. பெறுவதும் எளிதானதில்லை.
இஸ்ரேலிய மேற்குக் கரை தடுப்புச்சுவர் எனப்படும் இந்தத் தடைச்சுவரை பயங்கரவாதத்திற்கு எதிரான சுவர் என்று இஸ்ரேல் விவரிக்கிறது. ஆனால் பாலஸ்தீனியர்கள் அதை இனவெறிச் சுவர் என்று அழைக்கிறார்கள். செப்டம்பர் 2000 இல் இந்தத் தடைச்சுவர் கட்டப்பட்டது. இஸ்ரேலின் மேற்குக் கரையின் பதினோறு மைலில் இந்தச் சுவர் உள்ளது. இந்தச் சுவரால் ஆயிரக்கணக்கான பாலஸ்தீனியர்கள் பாதிக்கப்படுகிறார்கள்.
தடுப்புச் சுவரின் மூலம் ஒரு குடும்பம் பிரிக்கப்படுகிறது. ஆனால் அவர்களைச் செல்போன் இணைத்துவிடுகிறது. படம் முழுவதும் செல்போன் மூலமே முஸ்தபா குடும்பத்துடன் உறவாடுகிறான். அது போலவே வெளிச்சம் அவர்களை ஒன்று சேர்க்கிறது.

மிக நீண்ட அந்தத் தடுப்புச் சுவர் படத்தில் முழுமையாகக் காட்டப்படுவதில்லை. இருளில் காணும் போது அதன் பிரம்மாண்டம் தெரியவில்லை. ஏரியல் வியூ காட்சியின் போது தான் அதன் உயர்ந்த தோற்றத்தைக் காணுகிறோம். அதுவும் ரமி தப்பிச்செல்ல ஏறும் போது தான் அது எவ்வளவு பெரியதாகக் கட்டப்பட்டிருக்கிறது என்பதை நெருக்கமாக உணருகிறோம்.
சுவரைக் காட்டும் போதெல்லாம் வானமும் கூடவே என் கண்ணில் பட்டது. சுவர் நம்மைப் பிரித்து வைத்திருக்கிறது. வானமோ சேர்த்து வைக்கிறது. ஒரே நிலவை. ஒரே சூரியனை. நட்சத்திரங்களைத் தான் இருவரும் காணுகிறார்கள். ஒரே இரவு தான் இருவருக்கும்.
ஒரு காட்சியில் தன்னுடன் வந்து பாலஸ்தீனத்தில் இருக்கலாமே என்கிறான் முஸ்தபா. தனது வேலை, பிள்ளைகளின் கல்வி இதற்காக இங்கே இருக்க வேண்டியுள்ளது. இதை விட்டுவிட்டு அங்கே வந்தால் நாம் எப்படி வாழுவது என்று கேட்கிறாள் சல்வா. அதற்கு முஸ்தபாவிடம் பதில் இல்லை.
தடுப்புச் சுவரைக் கடந்து இஸ்ரேலுக்குள் கள்ளத்தனமாக அழைத்துச் செல்லும் கடத்தல்காரர்கள் நிறையப் பணம் வாங்கிக் கொண்டு தந்திரமாக மக்களை அழைத்துப் போகிறார்கள். இதில் மாட்டிக் கொண்டால் சிறைவாசம்.
கட்டிட வேலை ஒன்றுக்காகத் தற்காலிக வேலை உத்தரவு பெற்று முஸ்தபா எல்லையைக் கடந்து போகும்போது பாதுகாப்புச் சோதனை கடுமையாக இருக்கிறது. அந்தக் காட்சியில் முட்டிமோதும் ஆட்களையும் கம்பிவேலியின் இடைவெளியில் ஏறி குதிப்பவர்களையும் காணும் சூழலின் நெருக்கடியை முழுமையாகப் புரிந்து கொள்ள முடிகிறது
பாதுகாப்புச் சோதனையில் அவனது விரல் ரேகை பொருந்த மறுக்கிறது. ஆனால் கையில் வைத்துள்ள உத்தரவு காரணமாக உள்ளே அனுமதிக்கப்படுகிறான்.

கட்டிட வேலையின் போது தேநீர் கொண்டுவருகிறவனின் கனவுகளும் அவர்கள் ஒன்றாக ஆடிப்பாடுவதும் அழகான காட்சி.
நண்பனுடன் கட்டிட வேலையைச் செய்துவிட்டு தன் குடும்பத்தைத் தேடிப்போகிறான் முஸ்தபா. தனது மகன் பள்ளியில் சகமாணவன் ஒருவனால் தாக்கப்பட்டதை அறிந்து வருத்தமடைகிறான். மனைவி இதைப் பெரிது பண்ண வேண்டாம் என்கிறாள். பாலஸ்தீனன் என்ற அடையாளம் காரணமாகவே தன் மகன் தாக்கப்படுகிறான் என்பது முஸ்தபாவிற்கு வேதனை அளிக்கிறது
வேலை முடிந்து எல்லை கடந்து தனது வீடு வந்து சேருகிறான். அடுத்தமுறை பணிக்குச் செல்லும் போது அவனது அடையாள அட்டையைப் புதுப்பிக்க வில்லை என்று இஸ்ரேலில் நுழைய அனுமதி கிடைக்கவில்லை
இந்நிலையில் மனைவி அவசரமாக அவனைத் தொலைபேசியில் அழைத்து மகன் விபத்தில் சிக்கி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாகச் சொல்கிறாள். பதற்றமான முஸ்தபா எப்படியாவது இஸ்ரேலினுள் செல்ல வேண்டும் எனத் துடிக்கிறான்

அவனிடம் முறையான அனுமதிச்சீட்டு கிடையாது. மருத்துவக் காரணங்களுக்கான அனுமதிச் சீட்டு பெறக் காத்திருக்க வேண்டும். வேறு வழியில்லாமல் கள்ளத்தனமாக அழைத்துப் போகிறவர்களின் உதவியை நாடுகிறான். அதிகப் பணம் கொடுக்கிறான்.
இருநூறு மீட்டர் தொலைவைக் கடக்க அவன் இருநூறு மைல்கள் பயணம் செய்ய வேண்டிய சூழல் உருவாகிறது.
இந்தப் பயணத்தில் அவனது காரில் ஜெர்மனியைச் சார்ந்த அன்னா என்ற ஆவணப்பட இயக்குநர் பயணம் செய்கிறாள். அவள் உண்மை நிகழ்வுகளை ரகசியமாகப் படம் எடுக்க முயல்கிறாள். முஸ்தபாவிற்கு ஆங்கிலம் நன்றாகப் பேச வரும் என்பதால் அவளுடன் உரையாடுகிறான். தன்னை அவள் படம் எடுக்கக் கூடாது என்று கண்டிப்பாகக் கூறுகிறான். சக பயணிகளாகக் கிஃபா , பதின்வயதுள்ள ரமி உடன் வருகிறார்கள். ரமி மீது முஸ்தபா காட்டும் அன்பு ஒரு சகோதரனைப் போலவே வெளிப்படுகிறது.
எல்லை கடந்து அழைத்துச் செல்கிறவர்கள் பணத்திற்காக என்னவிதமான வேலைகளைச் செய்கிறார்கள் என்பது திகைப்பூட்டுகிறது. பிரச்சனைக்கு மேல் பிரச்சனையைச் சந்திக்கும் முஸ்தபா எப்படியாவது தன் மகனை காண இஸ்ரேலுக்குள் போய்விட வேண்டும் என்று பொறுமையாகக் காத்திருக்கிறான். முடிவில் இந்தப் பயணம் எப்படிச் சாத்தியமானது என்பதை அழகாக விவரித்திருக்கிறார்கள்.
கடத்தல்காரர்களுடன் காரில் முஸ்தபா பயணம் செய்யும் போது மேற்கு கரையில் வாழும் பாலஸ்தீனியர்களின் வாழ்க்கை எப்படியிருக்கிறது என்பதை அறிந்து கொள்கிறோம்.

முதற்காட்சியில் முஸ்தபா இயல்பான ஆசை கொண்ட கணவனாக அறிமுகமாகிறான். வேலைக்குச் செல்லும் போது எப்படியாவது தன் குடும்பத்தைத் தன்னுடன் வைத்துக் கொள்ள வேண்டும் என்று நினைப்பவனாக அடையாளப்படுத்தப்படுகிறான். ஆனால் கள்ளத்தனமாக எல்லைகடந்து போக முற்படும் போது அவனது இயல்பு மாறிவிடுகிறது. காரில் அவன் தன் உணர்ச்சிகளை வெளிக்காட்டுவதில்லை.
மனைவியோடு தொலைபேசியில் பேசிக் கொண்டே வருகிறான். நெருக்கடியான சூழலைச் சரியாகக் கையாளுகிறான். தன்னை அவர்கள் ஏமாற்றுகிறார்கள் என்ற நிலையில் தான் வெடித்து எழுகிறான்.
அவன் ஒருவன் தான் அன்னாவை நிஜமாகப் புரிந்து கொள்கிறான். அன்னாவிற்காக அவன் பரிந்து பேசும் இடம் சிறப்பானது. சுற்றுலாப் பயணி போல அறிமுகமாகி உண்மையைத் தேடும் ஆவணப்படக்கலைஞரான அன்னாவின் கதாபாத்திரம் நேர்த்தியாக உருவாக்கப்பட்டிருக்கிறது. அலி சுலிமான் முஸ்தபாவாகச் சிறப்பாக நடித்திருக்கிறார்
இயக்குநர் நைஃபேயின் வாழ்க்கையில் நடந்த உண்மை நிகழ்வுகளிலிருந்து படம் உருவாக்கப்பட்டிருக்கிறது.
இரவில் செல்லும் பயணக்காட்சிகளும். பாதுகாப்புச் சோதனையில் ஏற்படும் நெருக்கடிகளும் வெகு நேர்த்தியாகக் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. நாம் முஸ்தபாவின் கூடவே பயணம் செய்கிறோம். அவன் கண்களின் வழியாக இரவைக் கடந்து போகிறோம்.
கடைசிக்காட்சியில் முஸ்தபா வீட்டில் எரியும் வண்ணவிளக்குகளும் அவனது புன்னகையும் அவனது மாறாத நம்பிக்கை மற்றும் அன்பின் அடையாளமாக மாறுகிறது.
இயக்குநர் நைஃபேயின் முதற்படமிது. இஸ்ரேல் பாலஸ்தீனப் பிரச்சனை குறித்து நிறையப் படங்கள் வந்துள்ளன. ஆனால் இப்படி ஒரு தடுப்புச் சுவரை முன்வைத்து அதிகார அரசியலைப் பேசும் படம் ஒன்றை இயக்கியது மிகுந்த பாராட்டிற்குரிய விஷயம்.
October 15, 2021
வாழ்த்துகள்
கனலி இணையதளம் கலை இலக்கியம் சார்ந்து சிறப்பான முன்னெடுப்புகளைத் தொடர்ந்து செய்து வருகிறது.
இணைய இதழுடன் அச்சில் கனலி இருமாத இதழாக வெளிவரவுள்ளது.
கனலி விக்னேஷ்வரன் உள்ளிட்ட நண்பர்களுக்கு எனது மனம் நிறைந்த வாழ்த்துகள்
 
  மழைமான் – வாசிப்பனுபவம்
கலை கார்ல்மார்க்ஸ்

இந்தத் தொகுப்பில் மொத்தம் பத்துச் சிறுகதைகள் உள்ளன. ஒவ்வொரு கதையும், ஒவ்வொரு விதமாக உள்ளது. முன்னுரையில் எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் அவர்கள், ‘ஒவ்வொரு தொகுப்பும் ஒரு காலகட்டத்தில் எனக்கு இருந்த மனநிலையின் சாட்சி’ எனக் குறிப்பிடுகின்றார். மேலும், ‘முந்தைய கதைகளிலிருந்து அவரது கதைகள் வேறு திசையை நோக்கி பயணிக்கத் தொடங்கி விட்டதாகவும்’ குறிப்பிடுகின்றார்.
ஆம். அது முற்றிலும் உண்மை தான். இந்தத் தொகுப்பில் உள்ள ஒவ்வொரு கதையையும் படித்து முடிக்கும் பொழுது மனம் எங்கெங்கோ பயணித்து மிதந்தபடியே இருக்கின்றது.
இத்தொகுப்பிலுள்ள #புலப்படாத_பறவை என்ற சிறுகதையைப் படித்திடும் பொழுது, சித்தரஞ்சன் உடன் நானும் பயணப்பட்டேன், இரட்டை வரி காடையைக் காண்பதற்காகக் குலாமோடு சேர்ந்து நானும் அலைந்து திரிந்தேன், ஈரானி வரைந்த சித்திரம் எனக்குள்ளும் ஓவியம் ஒன்றை தீட்டிச் சென்றது, அய்டாவை எப்போது பார்ப்போம் என்று மனம் அடித்துக் கொண்டே இருந்தது.

இக்கதை Jordon’s Courser எனப்படும் அரிய வகை இரட்டை வரிக் காடையைத் தேடிச் சென்ற உண்மை சம்பவத்தின் புனைவு என்று ஆசிரியர் குறிப்பிடுகின்றார்.
சிலர் தேடித்தேடி முயன்றும் அறியப்படாத ஒன்று, வேறு யாரோ ஒருவருக்கு எளிதாகப் புலப்பட்டு விடுகிறது. ஆனால் அவர்களுக்கு அதன் மகத்துவம் தெரிவதில்லை. இக் கதையின் முடிவும் அதையே குறிப்பிடுகின்றது.
#விரும்பிக்_கேட்டவள் என்ற சிறுகதை பி.பி. ஸ்ரீனிவாசஸின் ரசிகை ஒருத்தியின் வாழ்க்கையை விவரிக்கிறது. படித்து முடிக்கும் போது மனம் கனக்கிறது. ஏதோ ஒரு நேர்காணலில் எஸ்.ரா. அவர்கள் இக்கதை நிகழ்வு குறித்துக் குறிப்பிட்டது போல் எனக்கு நினைவு. எனினும் இக்கதை படித்த பின்பு மனதில் இருள் ஒன்று வந்து அப்பிக் கொண்டது.
#அவன்_பெயர்_முக்கியமில்லை என்ற சிறுகதையில் ஒரு தம்பதியரின் வாழ்க்கை, படம் பிடிக்கப்பட்டுள்ளது.வாழ்க்கையில் கிடைக்கும் நிராசைகள், மகிழ்ச்சிக்காக ஏங்கும் மனம், சமூகச் சூழல், பெண் பாதுகாப்பு இவை அனைத்தையும் எஸ்.ரா அவர்கள் மனதை மயக்கும் வரிகளில் அழகுபட விவரித்து மனதை கரைக்கின்றார்.
#மழைமான் இச்சிறுகதைத் தொகுப்பின் தலைப்பைக் கொண்ட சிறுகதை. எல்லா மனிதர்களுக்குள்ளும் இருக்கும் குழந்தை தனம், சின்னச் சின்ன ஆசைகள், எத்தனை வயது கடந்தாலும் அது நம்மிலிலேயே கிடக்கிறது. அது மீண்டும் எழும் பொழுது நம் மனது என்ன நிகழ்வுகளைச் சந்திக்கின்றது என்பதை ரசனையாக இக்கதையில் கூறியுள்ளார், எஸ்ரா அவர்கள். இக்கதையைப் படிக்கும் பொழுது எவ்வொரு வாசகனுக்கும் அடிமனதில் உள்ள எண்ணற்ற ஆசைகள் மீண்டும் துளிர் விடத் தொடங்கிவிடும் என்பதே நிதர்சனம்.
#வெறும்_பிரார்த்தனை என்ற கதையைப் படிக்கும் பொழுது, எனக்கு உள்ளுக்குள் சிரிப்பு பீறிட்டது. உண்மை தான். இக்கதையில் வரும் அப்பா கதாபாத்திரம் போலப் பல்வேறு நபர்களை நாம் இச்சமூகத்தில் நித்தம் கண்டு வருகின்றோம். யாருக்காக வாழ்கின்றோம், எதற்காக வாழ்கின்றோம், தனக்காகத் தான் வாழ்கின்றோமா என எந்தச் சிந்தனையும் அற்ற மனிதர்களின் வாழ்க்கை எப்படி இருக்கும். இக்கதை அதற்கான ஒரு சிறு துளியாய்.
#எதிர்_கோணம் இக்கதையில் வரும் சவரிமுத்துவை போல எத்தனையோ நபர்கள் இன்னமும் கடந்தகால நிறைவேறாத ஆசைகள் மற்றும் அது அடைய வேண்டிய இலக்குகளுக்காகக் காத்திருக்கின்றார்கள். காலம் கடந்து விட்டாலும் ஒருவனின் சிறுபிள்ளைத்தனமான ஆழ்மன நிறைவேறாத ஆசைகள் இன்னமும் மூர்க்கத்தனமாகவே இருக்கும். அது மீண்டும் கிடைக்கும் தருணம் வந்தும் கிடைக்காமல் செல்லும் பொழுது மனம் படும் தத்தளிப்புகள் இவற்றை எஸ்.ரா. அவர்கள் மயக்கும் வார்த்தைகளில் விவரித்துள்ளார்கள்.
#இன்னொரு_ஞாயிற்றுக்கிழமை இக்கதை வேலைக்காக அலைகின்ற இளைஞர்களின் வாழ்க்கையில் ஞாயிற்றுக்கிழமை எப்படிக் கழிகின்றது. அவர்கள் அன்றைய தின உணவுக்காக என்னென்ன செய்கின்றனர் என்பதைத் தெளிவாகக் காட்டுகிறார் ஆசிரியர் அவர்கள். இதைப் படிக்கும் ஒவ்வொரு வாசகனின் மனதும் கரைந்து மனமற்ற வெற்று உடலாய் போய் விடுவது போல் ஆகின்றது. தாமோதரன், மீனாம்பாள் பாட்டியிடம் பெற்று வரும் பார்சலை பிரித்து, உள்ளே உள்ள கடிதத்தைப் படித்து முடிக்கும் பொழுது வாசகனையும் குற்ற உணர்ச்சி தொற்றிக் கொள்கின்றது.
#ஓலைக்கிளி – சூழல் என்பது ஒரு மனிதனை எப்படி எல்லாம் அலைக்கழிக்கின்றது. இளமையில் இருக்கும் துடிப்பும் மிடுக்கும், வயது ஆன பின்பு என்ன ஆகின்றது என்பதை இக்கதையில் வரும் சவட்டி கதாப்பாத்திரம் உணர்த்துகின்றது.
தான் செய்திடும் தவறுக்காக, ஒவ்வொரு முறையும் யாரிடம் தவறிழைத்தோமோ அவர்களுக்கே ஏதோ ஒரு வகையில கைமாறு ஒன்றை செய்து வருகின்றான் அவன். ஒரு மனிதன் தன்னை நம்பியவர்களுக்கு உதவிட எதுவும் செய்வான் என்பது சவட்டி கதாப்பாத்திரம் உணர்த்துகின்றது. ஒருவன் இன்னொரு வர் மனதில் தங்கி நிற்க வேண்டும் என்றால், அதற்கு அவர் மனதில் எதிர்மறையாக எதையும் விதைத்தாலேயே போதும் என்றும், அவர் நம்மை எக்காலமும் மறக்காமலேயே இருப்பார் என்றும் சவட்டி கதாபாத்திரம் சொல்வதை எவரும் மறுக்க முடியாதது தான்.
#மழையாடல் அம்மாவிற்கு நேர்ந்த வாழ்வியல் நிகழ்வினால் ஒரு பெண் துறவு பூண்டது சொல்லப்பட்டுள்ளது. என்றாலும், மழை எப்படி எல்லாம் ஒரு மனிதரோடும், அவர்களின் மனநிலையோடும் கலந்துள்ளது என்பதைப் படம் பிடித்துக் காட்டுகின்றது இச்சிறுகதை.
#தூய_வெளிச்சம் கோச்சடை என்னும் திருடன் அவனுக்குத் தொடர்பு இல்லாத ஒரு வீடு இடிக்கப்பட்டு வருவதைப் பார்த்து வருந்துகின்றான். தனது கடந்த காலத்தில் அந்த வீட்டிற்கு ஒருமுறை திருடச் சென்றுள்ளான். இருப்பினும் அந்த வீடு இவனுக்குள் ஏற்படுத்திய தாக்கம், அதன் பொருட்டுத் தன் வாழ்வில் நடந்த நிகழ்வு இவற்றையெல்லாம் எண்ணி ஏங்கும் ஒரு அற்புதமான கதை. இப்படி எல்லோருக்கும் ஏதோ ஒன்றை பறிகொடுக்கும் பொழுதுகளில், கடந்த காலக் காட்சிகள் உள்ளத்தைக் கசக்கியும், கண்ணீரையும் கொண்டு சேர்த்து விடுகின்றது. இதனை இச்சிறுகதையின் மூலம் அற்புதமாக ஆசிரியர் கூறியுள்ளார்.
எழுத்தாளர் எஸ்.ரா. அவர்களின் “மழைமான்” சிறுகதை தொகுப்பில் உள்ள ஒவ்வொரு சிறுகதையைப் பற்றியும் பத்துப் பக்கங்களுக்கு மேல் விவரித்திடலாம். அப்படிப்பட்ட மனித உணர்ச்சிகள் ஒவ்வொரு கதையிலும் கொட்டிக் கிடக்கின்றது. ஏற்கனவே முன்னுரையில் எஸ்.ரா. அவர்களே சொல்லியது போல, அவரை மட்டுமல்ல இக்கதைகள் அனைத்தும் வாசகர்களையும் வேறு திசைக்கு அழைத்துச் செல்கின்றது.
அனைவரும் படிக்க வேண்டிய அற்புதமான சிறுகதை தொகுப்பு.
ஆற்றல் மிகுந்த இடக்கை
மஞ்சுநாத்

சைக்கோ என்ற வகைமையில் வாழ்ந்து வந்தவர்களை வாழ்ந்து வருபவர்களை எவ்விதப் பொருளில் வகைப்படுத்துவது. வரலாறு அவர்களை ஒரு பட்டியலாக மட்டுமே வகைமைப்படுத்தியுள்ளது. மனநோயாளிகளாக அவர்கள் மீது கருனை கொள்வதற்கு எந்தவொரு முகாந்திரமும் இல்லை. அவர்களுக்கு மனம் இருக்கிறது. சாமானியன் மனதைவிட அது சிறப்பாகவே செயல்புரிகிறது. துடிப்பான வேகத்தோடு செயலாற்றும் ஒன்றிற்கு நோயின் சாயத்தைப் பூச முயல்வது அனர்த்தம் மட்டுமல்ல ஆபத்தும் கூட.
மனதின் செல்வாக்கிற்கு முழுமையாகக் கட்டுப்பட்டவர்களைச் சைக்கோவாகப் பொருள் கொள்வதில் ஒரு உடன்பாடு உள்ளது. இதைக் குறைந்தபட்ச உயிர்வாழ்தலுக்கான யாசக மனமல்ல. மனப்பிறழ்வற்ற அதிகாரம். தனது மன அடிமைத்தனத்தின் நீட்சியாக வளரும் ஆபத்தான கரம் அது. அதன் வல்லமை அசூரத்தனமானது. அது தனது பசிக்கு எதை வேண்டுமானால் உணவாக்கிக் கொள்ளும்.
நியாயம்-அநியாயம், தர்மம்-அதர்மம், நல்லது-கெட்டது, ஒழுங்கு -ஒழுங்கின்மை, இன்பம் – துன்பம், நீதி-அநீதி இந்த இரண்டுங்கெட்டான் கருத்தியல்களுக்கு அப்பாற்பட்டது அதிகார ஆட்சி பீடத்தின் தராசு. தேவைப்படும் போது தேவையானது உயரும். அதுவே உயர்வு. உயர்வானது. இவ்வகைக் கரம் கொண்ட அதிகார மனம் இரண்டு கட்டமைப்புகள் வழியே தன்னைப் பிரதிபலித்துக் கொள்கிறது. ஒன்று ஒழுங்கு முறைப்படுத்தப்பட்ட நியதியின் வெளிப்பாடு. மற்றொன்று ஒழுங்குமுறைக்கு அப்பாற்பட்ட நேர்மாறான சிதைவின் வெளிப்பாடு.
துரதிர்ஷ்டவசமாக இவ்விரண்டு கட்டமைப்புகளின் பிரமாண்ட கோரைப்பற்களும் சமூகத்தின் குருதியில் நீராட்டி கொள்வதில் முனைப்போடு செயல்பட்டுள்ளன. அதன் குருதி கரைப்படிந்த வரலாற்றின் சிவப்பு பக்கங்களின் பிரகாசத்தை இடக்கை நமக்குப் புரட்டி பார்வை புலனில் ஆழமாகக் காட்சிப்படுத்துகிறது.
யோக விஞ்ஞானத்தின்படி மனித உடலின் இடப்பாகத்தில் இருப்பது இடா வலப்பாகத்தில் இருப்பது பிங்கலா. இந்நாடிகள் சமநிலை அடையும்போது மிகப் பெரும் சக்தியோட்ட வழித்திறப்பின் பாதையான சுஸுமுனா திறந்து கொள்ளகிறது. ஆனால் சமூக ஞானத்தைப் பொருத்தவரை மேல்தட்டும் மற்றும் கீழ்தட்டும் எவ்வகையிலும் சமநிலை சாத்தியற்றதாக உள்ளது. அது ஒருபொழுதும் நிகழ்ந்ததும் கிடையாது என்பது தான் ஜீரணிக்க முடியாத உண்மை.
நிலவும் சூரியனும் ஒருபோதும் ஒன்றாகக் காட்சியளிப்பதில்லை. ஒருவேளை உதயத்திலோ அஸ்தமனத்திலோ சில நொடிகள் நிகழலாம். பின்பு ஏகபோகத்தின் ஒரு சார்பு ஆட்சியின் துவக்கத்தின் முன் அறிகுறியே அது.
ஈடில்லாத அதிகாரத்தின் ஆளுமை கொண்டவன் தன் மனதிடம் தினம் தினம் தோற்றுப்போகும் சூதாடி. சகிக்க முடியாத தோல்வியைத் தனது நிழலில் உள்ள எளியோர்கள் மீது பிரயோகிப்பது என்பது ஏதேச்சதிகாரத்தின் பசியாற்றும் குரூரம். ஆனால் இப்பசி ஒருபோதும் தீராத அகோரப்பசி. இது அரசனிடம் மட்டுமல்ல சமூக வரிசையில் ஒருபடி மேலே அமர்ந்துள்ள ஒவ்வொரு மனிதனிடமும் உள்ளது. வாய்ப்பு கிடைக்கும் போது தன் கீழ் இருப்பவர்கள் மீது குறி நீட்டி சிறுநீர் கழிப்பதை தங்கள் உரிமையாகவே கருதிக் கொள்கிறார்கள்.
ஒழுங்கு முறைப்படுத்தப்பட்ட நியதிகள் வெளிப்பாட்டின் சுயநல உதாரணப் புருஷனாக மிளிர்ந்த அப்துல் முஷாபர் மொகதீர் முகமது ஒளரங்சீப் பரத்துபட்ட இந்துஸ்தான்த்தை தனது உள்ளங்கையில் வைத்து ஆண்ட பேரரசர். இருந்த பொழுதும் அவரது மனம் ஒரு கைப்பாவையாக அவரைக் குனிய வைத்துச் சலாம் போட வைத்த கதையை இடக்கை பேசுகிறது.
பாதுஷா ஒளரங்கசீப் பலருக்கு தனது சிவப்பு முகத்தைத் தாரளமாகத் தரிசனம் தந்தபோதிலும் அவரது சாதாரண இறுதி ஆசைக்கான வரத்தை அவரது மகன் நிராகரித்து விடுகிறான். மனதின் கயமைத்தனத்தில் இன்பம் காணும் ஆட்சி துர்மரணத்தின் நிழலை மட்டுமே விதைக்கிறது.
ஒளரங்கசீப் பேரரசுக்குக் கப்பம் கட்டும் சத்கர் தேசத்தை ஆட்சி செய்து வந்தவன் சிற்றரசன் பிஷாடன். இவன் இரண்டாவது வகைக் கட்டமைப்பு கொண்டவன்.
ஒழுங்குமுறைக்கு அப்பாற்பட்ட நேர்மாறான சிதைவின் வெளிப்பாடு கொண்டவன். நடுநிசியில் தனது பட்டத்து யானையின் கண்களைச் சிதைத்து அதன் அலறலில் தூக்கமில்லாத தனது இரவுகளைத் தாலாட்டி கொள்பவன். இவனது நீதி பரிபாலனம் பல அப்பாவிகளின் நிஜவாழ்வு கதையின் சலிப்பை குறைத்து புனைவின் வசீகரிப்பை தரும் வல்லமை கொண்டது. இதனால் தான் காலா எனும் சிறைச்சாலை நகரம் கதைகளின் சொர்க்கபுரியாகத் திகழ்ந்தது. நல்லாட்சியும் நீதி வழுவாமையும் பொய்யமை கலந்த சரித்திர மாயைகள்.
தூமக்கேது போன்ற போன்ற எளிய மனிதர்கள் புனைவின் பின்னால் இருந்து நமது மனசாட்சியைக் கிளறச் செய்யும் ஒளிக்கதிர்கள். தேசமுழுவதும் பயனப்பட்டாலும் தூமக்கேது தனது மூலத்தை அடையாமல் நம்மைப் பரிதவிக்க விடுக்கிறான். அவன் விட்டுச் சொல்லும் ஒவ்வொரு புனைவு கதறலும் மாயக்கரம் கொண்டு நமது காதுகளைச் செவிடாக்கி விடுகிறது
ஒருவன் பேரரசனாக இருக்கலாம். சிற்றரசனாக இருக்கலாம். ஏன் நதிதிக்கரையில் சுற்றித்திரியும் சம்புவாகவும் இருக்கலாம். தங்களது செயல்களால் சேகரித்துக் கொள்ளும் நினைவலைகள் தன்னுருவம் கொண்டு விழிகளில் மிதந்து வரும் பிணம் போல் அவர்களது காட்சியின் சுயரூபத்தைத் தகர்க்கின்றன.
ஆண் உருவில் பெண்மை உணர்வை கண்டறிந்த ஒளரங்கசீப்பின் நெருக்கமான பணியாள் அஜ்யாவின் இறுதிக்காலமும், சதுரங்க ஆட்டத்தில் யாவரையும் தோற்கடித்துப் பிஷாடனின் அடிமைத் தோழனான மனிதரை போல் பேசும் அநாம் என்கிற குரங்கின் இறுதிக்காலமும் ஒன்று போலவே நிகழ்கிறது. இது நாயின் மலம் போன்ற அநீதியின் தூர்நாற்றத்தை தன் வாழ்நாள் முழுவதும் முகர்ந்து திரியும் தூமக்கேதுவின் துயரத்தை போன்றது.
துயரம் பொதுவானது பாகுபாடற்றது. சமநிலை கொண்டது. அது விரும்பாத இடைக்கையாக இருந்த போதிலும் உடலையும் சமூகத்தையும் விட்டு நீங்காமல் தொடர்ந்து செயலாற்றிக் கொண்டே இருக்கும்.
மல்லாங்கிணற்றிலிலிருந்து அகழ்ந்தெடுக்கப்பட்ட காலப்பொக்கிஷமான தங்க கதைச்சிமிழிலிருந்து கசியும் செந்தூரத்தின் துளிகளாக எஸ்.ரா வின் எழுத்து ஒரு நுண்ணோவியம் போல் நம்மை வியக்க வைக்கிறது. நமது பார்வையைக் கூர்மையாக்குகிறது. மாயபுனைவுகளில் நம்மை மயக்கும் அதே வேளையில் அதனுடன் சாரமாக்கப்பட்ட உண்மையின் தரவுகள் சங்கின் வழியாக நமக்குச் சிறிது சிறிதாகப் புகட்டவும் படுகிறது.
வரலாறு வியாப்பானதுமில்லை. உவப்பானதுமில்லை. அது நமது நிகழ் வாழ்வை கட்டமைத்து கொள்ளவும் மனதை நம் கட்டுப்பட்டில் வைத்துக்கொள்ள உதவும் மாயக்கருவி. இடக்கையோடு கை குலுக்குவது மரபு பிழை மரியாதை குறைவு என்ற கருத்தியல்களைக் கடந்து இடக்கையை உள மகிழ்வோடு வணங்குகிறேன்.
S. Ramakrishnan's Blog
- S. Ramakrishnan's profile
- 658 followers
 


