மாயநிலத்தில் அலைவுறும் நிழல்
.அமெரிக்காவின் கொலராடோ பகுதியுள்ள Monument Valley க்குப் படப்பிடிப்பு ஒன்றுக்காகச் சென்ற எனது நண்பர் அங்கே இயக்குநர் ஜான் ஃபோர்டின் ஆவி இன்றும் சுற்றிக் கொண்டிருக்கிறது. ஒருவேளை இப்போதும் படம் எடுத்துக் கொண்டிருக்கிறதோ என்னவோ என்று சொன்னார்.

அவர் சொன்னது முற்றிலும் உண்மை, இந்தப் பள்ளத்தாக்கினை ஜான் ஃபோர்டு போல யாரும் படமாக்கியிருக்க முடியாது. இன்று அந்தப் பள்ளத்தாக்கு அவரது நினைவுச்சின்னமாகவே குறிப்பிடப்படுகிறது.

அமெரிக்கச் சினிமாவின் நிகரற்ற இயக்குநர் ஜான் ஃபோர்டு. சென்ற லாக்டவுன் நாட்களில் தொடர்ச்சியாக அவரது படங்களைப் பார்த்து வந்தேன். Stagecoach (1939), The Searchers (1956), The Man Who Shot Liberty Valance (1962),The Grapes of Wrath (1940). How Green Was My Valley போன்ற படங்களைக் காணும் போது எப்படி இந்தப் படங்களை இத்தனை பிரம்மாண்டமாக உருவாக்கினார் என்ற வியப்பு அடங்கவேயில்லை.
கண்கொள்ளாத அந்த நிலப்பரப்பினை ஒரு கதாபாத்திரமாக மாற்றியவர் ஜான் ஃபோர்டு. காலமற்ற வெளியினைப் போலவே அது தோற்றமளிக்கிறது. She Wore a Yellow Ribbon திரைப்படத்தில் அந்தப் பரந்த வெளியில் மேகங்கள் திரளுவதையும் மின்னல் வெட்டுடன் இடி முழங்குவதையும் நிஜமாகப் படமாக்கியிருக்கிறார்.
ஜான் ஃபோர்டு ஹாலிவுட் சினிமாவிற்குப் புதிய மொழியை உருவாக்கினார். குறைவான கதாபாத்திரங்களைக் கொண்டு அவர் உருவாக்கிய வெஸ்டர்ன் படங்கள் நிகரற்றவை. 4 முறை ஆஸ்கார் விருது பெற்றுள்ள ஃபோர்டு மாறுபட்ட களங்களில் படங்களை இயக்கியிருக்கிறார். How Green Was My Valley இதற்குச் சிறந்த உதாரணம். இப்படி ஒரு உணர்ச்சிப்பூர்வமான படத்தை இயக்கியவர் தான் Stagecoach எடுத்திருக்கிறார் என்பது வியப்பானது.

இவர் ஜான் வெய்னுடன் இணைந்து 14 படங்களை இயக்கியுள்ளார். இந்தப் படங்களின் வழியாகவே ஜான் வெய்ன் உச்ச நட்சத்திரமாக உருவாகினார்.
The Searchers – 1956 ம் ஆண்டு வெளியான திரைப்படம். அமெரிக்காவின் தலைசிறந்த படமாகக் கருதப்படும் இப்படம் தற்போது டிஜிட்டல் உருமாற்றம் பெற்று வெளியாகியுள்ளது. எத்தனை முறை பார்த்தாலும் ஈர்ப்பு குறையாத படமிது.
1868 ஆம் ஆண்டில், ஈதன் எட்வர்ட்ஸ் மேற்கு டெக்சாஸ் வனப்பகுதியில் உள்ள தனது சகோதரர் ஆரோனின் வீட்டிற்கு எட்டு ஆண்டுகளுக்குப் பிறகு திரும்புகிறார்.. ஈதன் உள்நாட்டுப் போரில் கலந்து கொண்ட போர்வீரர். நிறையத் தங்க நாணயங்களுடன் வீடு திரும்பும் ஈதன் அவற்றைப் பாதுகாப்பாக வைத்திருக்கும்படி ஆரோனிடம் தருகிறாள். அத்துடன் தனது பதக்கம் ஒன்றையும் மருமகள் டெபிக்கு அன்பளிப்பாகத் தருகிறார்.,
ஒரு நாள் ஈதனின் பக்கத்து வீட்டுக்காரர் லார்ஸ் ஜார்ஜென்சனுக்குச் சொந்தமான கால்நடைகள் திருடப்படுகின்றன. அவற்றை மீட்க, கேப்டன் கிளேட்டன், ஈத்தன் மற்றும் குழு கிளம்பிப் போகிறது., உண்மையில் அந்தக் களவு ஒரு சூழ்ச்சி என்பதையும் தன்னை ஆரோன் குடும்பத்திலிருந்து விலக்கி வைக்கவே இந்தச் சூழ்ச்சி நடந்திருப்பதையும் ஈதன் உணருகிறார். ஏதோ ஆபத்து நடக்கப்போகிறது என அவசரமாக வீடு திரும்புகிறார் ஈதன்.
இதற்குள் வீடு தீப்பற்றி எரிந்து கொண்டிருக்கிறது. பூர்வகுடி இந்தியர்களால் ஆரோன், அவரது மனைவி மார்த்தா மற்றும் மகன் பென் கொல்லப்பட்டிருக்கிறார்கள் ஆரோனின் மகள் , டெபி மற்றும் அவரது மூத்த சகோதரி லூசி கடத்தப்பட்டிருக்கிறார்கள்.
இறந்தவர்களுக்கான இறுதி நிகழ்வை முடித்துக் கொண்டு கடத்திச் செல்லப்பட்ட பெண்களை மீட்கப் புறப்படுகிறான் ஈதன்.

இந்தத் தேடுதல் என்னவானது என்பதை ஜான் ஃபோர்டு மிக அழகாகக் காட்சிப்படுத்தியிருக்கிறார்.
திருப்பத்திற்கு மேல் திருப்பம், பரபரப்பான துரத்தல் காட்சிகள். உண்மையைக் கண்டறிய ஈதன் மேற்கொள்ளும் முயற்சிகள் என அந்தக் குதிரைவீரனின் பின்னால் நாமும் செல்கிறோம்.
எதிரிகளால் கடத்தப்பட்ட பெண்களை மீட்பது என்ற இந்தப் படத்தின் கதைக்கருவின் பாணியில் அதன்பிறகு நிறைய ஹாலிவுட் படங்கள் உருவாக்கப்பட்டன.
ஆரம்பக் காட்சியில் அமைதிப்பள்ளதாக்கு போலத் தோன்றும் அந்த நிலப்பரப்பு மெல்ல அச்சமூட்டும் நிலவெளியாக மாறுகிறது. பூர்வகுடி இந்தியர்கள் கூட்டமாகக் குதிரையில் கிளம்பி வரும் காட்சியும் அவர்களை ஈதன் எதிர்கொள்ளும் இடமும் அபாரம்.
இந்தத் தேடுதல் வேட்டை முழுவதிலும் ஈதன் அமைதியாக இருக்கிறார். அதே நேரம் ஆவேசமாகச் சண்டையிடுகிறார். தனக்கென யாருமில்லாத அவரது கதாபாத்திரம் இன்று வரை ஹாலிவுட்டில் தொடர்ந்து வரும் பிம்பமாக மாறியுள்ளது. ஜான் வெய்ன் ஈதனாகச் சிறப்பாக நடித்திருக்கிறார்.
இந்தப் படத்தின் பாதிப்பினை The Revenant படத்தில் நிறையக் காணமுடிகிறது. டெப்பியை தேடும் பயணத்தின் ஊடே ஈதன் சந்திக்கும் நிகழ்வுகளும் ஐந்து ஆண்டுகளுக்குப் பின்பு அவளைக் கண்டுபிடிப்பதும் எதிர்பாராத அவளது முடிவும் அழகாகச் சித்தரிக்கப்பட்டுள்ளன.
ஜான் ஃபோர்டு இனவெறியுடன் பூர்வகுடி இந்தியர்களைப் படத்தில் சித்தரித்துள்ளார். ஒரு காட்சியில் ஈதன் இறந்து போன பூர்வ குடியின் கண்களைச் சுடுகிறார். அது அவர்களுக்கு வானுலக வாழ்க்கை கூடக் கிடைக்ககூடாது என்ற கசப்புணர்வின் அடையாளமாக உள்ளது என்ற விமர்சனம் இன்றும் முன்வைக்கப்படுகிறது. ஆனால் ஜான் ஃபோர்டு அன்றிருந்த பொது மனநிலையின் வெளிப்பாட்டினை தான் கொண்டிருக்கிறார். தனிப்பட்ட முறையில் அவர்களைத் துவேஷிக்கவில்லை. உண்மையாக அவர்களின் உலகைச் சித்தரித்திருக்கிறார் என்கிறார் இயக்குநர் மார்டின் ஸ்கார்சசி.

மார்த்தா தொலைவில் ஈதன் வீடு திரும்பி வருவதைக் காணும் காட்சியை மிக நேர்த்தியாகப் படமாக்கியிருக்கிறார். சிறப்பான இசை. இரண்டு உயர்ந்த குன்றுகளுக்கு நடுவே ஒற்றை ஆளாக ஈதன் திரும்பி வருகிறார். மேகங்கள் அற்ற வானம். முடிவில்லாத மணல்வெளி. புதர்செடிகள். படியை விட்டு இறங்கி வரும் ஆரோன் முகத்தில் வெயில் படுகிறது. காற்றில் படபடக்கும் உடைகளுடன் டெபி வெளியே வருகிறாள். வாலாட்டியபடியே அவர்கள் நாயும் காத்திருக்கிறது. வீட்டிற்கு வரும் ஈதன் அன்போடு மார்த்தாவின் நெற்றியில் முத்தமிடுகிறார். அவர்கள் ஒன்றாக உணவருந்தும் காட்சியில் தான் எவ்வளவு சந்தோஷம்
இந்தச் சந்தோஷ நினைவு தான் ஈதன் பழிவாங்க வேண்டும் என்று நம்மைத் தூண்டுகிறது.

நிலக்காட்சி ஓவியரைப் போலவே தனது சட்டகத்தை உருவாக்குகிறார் ஜான் ஃபோர்டு. ஒளி தான் நிலத்தின் அழகினை உருவாக்குகிறது. காற்றும் ஒளியும் சேர்ந்து இப்படத்தின் காட்டும் ஜாலங்கள் அற்புதமானவை.
இத்தனை பிரம்மாண்டமான காட்சிகளை இன்று திரையில் காண முடிவதில்லை. நகரவாழ்வு சார்ந்த ஒற்றை அறை, அல்லது அலுவலகம். இடிபாடு கொண்ட பழைய கட்டிடம், நெருக்கடியான சாலைகள். ஷாப்பிங் மால்கள் எனப் பழகிப்போன இடங்களைத் திரும்பத் திரும்ப இன்றைய படங்களில் பார்த்துக் கொண்டிருக்கிறோம். நிலப்பரப்பு ஒரு கதைக்கு எவ்வளவு முக்கியமானது என்பதை அறிந்து கொள்வதற்கு ஜான் ஃபோர்டு படங்களை அவசியம் காண வேண்டும் என்பேன்
•••
S. Ramakrishnan's Blog
- S. Ramakrishnan's profile
- 657 followers
