S. Ramakrishnan's Blog, page 111
October 18, 2021
விகடன் தீபாவளி மலரில்
விகடன் தீபாவளி மலரில் எனது புதிய சிறுகதை வெளியாகியுள்ளது. காந்தியோடு தொடர்புடைய கதை. ஒவியர் ரவி அழகான ஒவியங்களை வரைந்திருக்கிறார்.

உயிர்மை 200
உயிர்மை 200வது இதழ் வெளியாகியுள்ளது. தமிழின் முக்கிய படைப்பாளிகள் அனைவரும் கைகோர்த்து வந்துள்ள இந்த இதழ் குறிப்பிடத்தக்கது. இதில் வெளியாகியுள்ள தேவதச்சனின் கவிதைகள் அபாரமானவை.

நீண்ட இடைவெளிக்குப் பிறகு எனது சிறுகதை உயிர்மை இதழில் வெளியாகியுள்ளது. மனுஷ்யபுத்திரன் என்றும் என் அன்பிற்குரிய நண்பர். அவர் தொலைபேசியில் அழைத்துக் கதை கேட்டதும் உடனே அனுப்பி வைத்தேன்.

எனது கதைக்கு மனோகர் வரைந்துள்ள ஒவியம் அத்தனை பொருத்தமாக உள்ளது. மனோகருக்கு என் மனம் நிறைந்த பாராட்டுகள்.
மகிழ்ச்சியின் தூதுவன்
Autumn of the Magician என்ற ஆவணப்படத்தைப் பார்த்தேன் , டொனினோ குவாரா பற்றியது.

இவர் ஆந்த்ரேய் தார்க்கோவஸ்கியின் நெருக்கமான நண்பர். அன்டோனியோனி, பெலினி பிரான்செஸ்கோ ரோஸி, தியோ ஆஞ்சலோபோலஸ் படங்களுக்குத் திரைக்கதை ஆசிரியர். ஓவியர், கவிஞர், சிற்பி. கட்டிடக்கலைஞர், சமையற்கலைஞர். இசைக்கலைஞர், நாடகாசிரியர், தோட்டக்கலை நிபுணர், நாவலாசிரியர், பள்ளி ஆசிரியர், வேட்டைக்காரன், தியானி, நடிகர் எனப் பன்முகத்திறமை கொண்டவர். லியோனார்டோ டாவின்சியோடு தான் இவரை ஒப்பிட வேண்டும் என்கிறார்கள்.
மண்ணில் செய்து வைத்த பறவை உருவங்கள். ஒரு நாள் சிறகடித்துப் பறந்து சென்றுவிட்டன. இது வெறும் கற்பனையில்லை. மாயம். உங்களால் அன்பு செலுத்த முடியுமென்றால் பறவை பொம்மைகளுக்கும் உயிர் உண்டாகும் என்கிறார் டொனினோ.
தார்க்கோவஸ்கியுடன் நெருங்கிப்பழகிய டொனினோ அவர் இத்தாலியில் படம் இயக்குவதற்கு மிகவும் துணை செய்திருக்கிறார். இந்த நாட்களில் அவர்கள் மேற்கொண்ட பயணம் ஒரு Voyage in Time என்ற படமாக உருவாக்கப்பட்டிருக்கிறது

டொனினோ சில காலம் ரஷ்யாவில் வசித்திருந்திருக்கிறார். அப்போது தான் நேரில் கண்ட தார்க்கோவஸ்கி பற்றி ஒரு விஷயத்தை ஒரு நேர்காணலில் டொனினோ குறிப்பிடுகிறார். அதாவது ரஷ்யாவிலிருந்த தனது பூர்வீக நிலத்தில் விவசாயப்பணிகள் செய்வதில் தார்க்கோவஸ்கி மிகவும் விருப்பம் கொண்டிருந்தார். விவசாய வேலைகளில் அவருக்கு உதவி செய்வதற்குக் கிராமத்து விவசாயி ஒருவர் வருவது வழக்கம். ஒரு நாள் அவர் வேலைக்கு வரவில்லை. இரண்டு நாளின் பின்பு அந்த விவசாயியை தார்க்கோவஸ்கி நேரில் சந்தித்த போது இதைப்பற்றிக் கேட்டுக் கொள்ளவில்லை. விவசாயியும் ஏன் தான் வேலைக்கு வரவில்லை என்று காரணம் சொல்லவில்லை.
இதைப்பற்றி டொனினோ வியப்புடன் கேட்டதற்குத் தார்க்கோவஸ்கி சொன்ன பதில் அவரது திரைப்படங்களைப் புரிந்து கொள்வதற்கும் பொருத்தமானது.
“ரஷ்யாவில் இப்படித்தான் ஒருவர் திடீரென மன மாற்றம் கொண்டுவிடுவார். எதனால் அப்படி மனமாற்றம் கொண்டார் என்பதை அவர் யாருக்கும் தெரியப்படுத்த வேண்டியதில்லை“

தார்க்கோவஸ்கியின் கதாபாத்திரங்களில் இந்தத் தன்மை வெளிப்படுவதை உணர்ந்திருக்கிறேன். அந்த விவசாயி தனது நிலத்தில் வேலைக்கு வரவில்லை என்பதால் அவருடனிருந்த உறவை தார்க்கோவஸ்கி துண்டித்துக் கொள்ளவில்லை. முன்னைப் போலவே அவருடன் அன்பாகவே பழகியிருக்கிறார்.
எமிலியாவில் தானும் தார்க்கோவஸ்கியும் அமர்ந்து பேசிய இருக்கையில் இப்போதும் அவர் அரூபமாக அமர்ந்து பேசிக் கொண்டிருப்பதாகச் சொல்கிறார் டொனினோ
இந்தப் படத்தில் நாம் டொனினோவின் பன்முகத்தன்மையைக் காணுகிறோம்.
உண்மையில் அவர் ஒரு சிறிய தனித்துவமான கிரகம் ஒன்றைப் போலிருந்தார். சொந்த கிராமமான எமிலியாவில் விசித்திரங்கள் நிரம்பிய தனது உலகைத் தானே உருவாக்கிக் கொண்டார். அவரது நண்பர்கள் உலகின் புகழ்பெற்ற திரைப்பட இயக்குநர்கள். அவரைக் காண தலாய் லாமா வந்திருக்கிறார். ஓய்வான நாட்களில் குழந்தைகளுக்குப் பொம்மைகள். பட்டங்கள் செய்து கொடுத்து விளையாடுகிறவர். இப்படி டொனினோ குவாராவைப் பற்றிச் சொல்லிக் கொண்டே போகலாம். உண்மையில் அவர் ஒரு விசித்திரக்கலைஞர் இத்தாலியின் ஹோமர் என்று அழைக்கலாம் என்கிறார் கவிஞர் டேவிட் மிலானி.

டொனியோ பாசிச ஆட்சியை எதிர்த்தவர். இதனால் நாடு கடத்தப்பட்டு 1944 இல் ட்ராய்ஸ்டார்பில் உள்ள ஒரு முகாமில் அடைக்கப்பட்டார். ஒரு வருடம் அந்த முகாமிலிருந்த நாட்களில் நிறையக் கவிதைகள் எழுதியிருக்கிறார்.
ஐரோப்பிய திரைக்கதை ஆசிரியர்களில் இவரே முதன்மையானவர். இவர் இணைந்து பணியாற்றிய இயக்குநர்கள் அத்தனை பேரும் உலகப்புகழ் பெற்றவர்கள். சர்வதேச அளவில் நிறைய விருதுகளைப் பெற்றிருக்கிறார். ஆர்மீனிய வம்சாவழியில் வந்த லோராவை திருமணம் செய்து கொண்டார். இருவருக்கும் இடையில் இருபது ஆண்டுகள் இடைவெளி இருந்த போதும் காதல் அவர்களை ஒன்று சேர்ந்தது.
.1989 ஆம் ஆண்டில், மாண்டெஃபெல்ட்ரோ பகுதியில் உள்ள பழைய மாலடெஸ்டா நகரமான பென்னாபில்லியில், அவர் நீண்ட கோடை விடுமுறையைக் கழித்தார். அங்கே வசித்த நாட்களில் அவர் உருவாக்கிய கலைக்கூடம் விசித்திரமானது.
இது போலவே எமிலியாவில் பெரிய தோட்டத்துடன் உள்ள அவரது வீடு ஒரு திறந்தவெளி கலைக்கூடம் போலவே உருவாக்கப்பட்டிருக்கிறது. அந்தத் தோட்டத்தில் நிறையச் சிற்பங்கள். அதில் பெலினியும் ஒரு சிற்பமாக உருவாக்கப்பட்டிருக்கிறார். தார்க்கோவஸ்கியோடு அமர்ந்து பேசிய இருக்கையில் வெயில் படருகிறது.

இயக்குநர் பரஜினேவ்வின் திரைப்படங்களை மிகவும் விரும்பிய டொனினோ அவர் உருவாக்கியது போலவே காட்டுப்படிமங்களை உருவாக்கக் கூடியவர். இருவரும் சந்தித்துக் கொண்ட போது நீண்டகாலம் பழகிய நண்பர்கள் போலவே உணர்ந்தார்கள். டொனினோ ஆர்மீனியாவில் காலம் வெளியாக மாறியுள்ளது என்கிறார்.
அரை நூற்றாண்டுக்கும் மேலாக நீடித்த திரை வாழ்க்கையில் 100க்கும் மேற்பட்ட திரைக்கதைகளை எழுதிய டொனினே மூன்றுமுறை ஆஸ்கார் விருதிற்குப் பரிந்துரை செய்யப்பட்டிருக்கிறார்
வெனிஸ் திரைப்படவிழாவில் வாழ்நாள் சாதனையாளர் விருது பெற்றிருக்கிறார்.
சந்தோஷத்தை உருவாக்குவதே தனது வேலை. சினிமா இலக்கியம் ஓவியம் சிற்பம் விளையாட்டு என எல்லாவிதங்களிலும் மகிழ்ச்சியைத் தான் பகிர்ந்து கொள்கிறேன். எனது விருப்பத்துடன் இணைந்து பயணம் செய்யும் நல்ல நண்பர்கள் எனக்குக் கிடைத்தார்கள். அதுவே எனது வெற்றிக்கான காரணம்.

இன்று என் நண்பர்களில் பலர் மறைந்துவிட்டார்கள். பெலினி இப்போது இல்லை. ஆனால் அவருடன் ஒன்றாகப் பேசி நடந்த வீதி அப்படியே இருக்கிறது. அன்டோனியோனி இல்லை ஆனால் அவருடன் பயணம் செய்த படகு அதே கரையில் நிற்கிறது. நானும் தார்க்கோவஸ்கியும் நிறையப் பேசினோம். விவாதித்தோம். அவரும் இப்போது இல்லை. அவருடன் இருந்த போது ஒளிர்ந்த சூரியன் அதே இடத்தில் இன்றும் ஒளிர்கிறது. நானும் ஒரு நாள் இயற்கையின் பகுதியாகி இருப்பேன். அப்போது இந்த வெளிச்சத்துடன் என்னையும் நினைவு கொள்வார்கள் என்கிறார் டொனினோ
அவர் உருவாக்கிய தோட்டமும் கலைக்கூடங்களும் இன்று முக்கியச் சுற்றுலா ஸ்தலங்களாக உருமாறியுள்ளன. டொனினோ கடைசிவரை ஒரு சிறுவனின் கனவுகளுடன் வாழ்ந்து வந்தார். அது தான் அவரது மகிழ்ச்சியின் அடையாளம் என்கிறார் அவரது மனைவி லோரா
டொனினோ பற்றி மூன்று ஆவணப்படங்கள் இணையத்தில் காணக்கிடைக்கின்றன. அவர் தார்க்கோவஸ்கியுடன் செய்த நேர்காணலும் உள்ளது.
படத்தின் வழியே இளமஞ்சள் வெயிலைப் போல இதமான நெருக்கம் தருகிறார் டொனினோ.
**
October 17, 2021
சுவரும் வானமும்
2020ல் வெளியான 200 Meters திரைப்படம் வெனிஸ் திரைப்படவிழாவில் சிறந்த திரைப்படமாகப் பார்வையாளர்களின் விருதைப் பெற்றுள்ளது. பாலஸ்தீனத்திற்கும் இஸ்ரேலுக்குமான பிரச்சனையைப் படம் புதிய கோணத்தில் சித்தரிக்கிறது

பாலஸ்தீன நகரமான துல்கர்மிலுள்ள முஸ்தபாவின் வீட்டில் படம் துவங்குகிறது. அவனது மனைவி சல்வா சமையலறையில் வேலை செய்து கொண்டிருக்கிறாள். ஆசையாக அவளை நெருங்கிக் கட்டிப்பிடிக்கிறான். அவளே குழந்தைகள் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் என்று விலக்கிவிடுகிறாள். அவன் தனது முதுகுவலியைப் பற்றிச் சொல்கிறான். இந்த உடல்நிலையோடு கட்டிட வேலை செய்து கஷ்டப்பட வேண்டாம் என்கிறாள் சல்வா. எத்தனை நாள் நீ தரும் பாக்கெட் மணியில் வாழுவது என்று ஆதங்கத்துடன் கேட்கிறான் முஸ்தபா.. அவளிடம் பதில் இல்லை. சல்வாவும் மூன்று குழந்தைகளும் ஒரு காரில் கிளம்புகிறார்கள்
இரவாகிறது. முஸ்தபா தன் வீட்டுப் பால்கனியில் நின்று தூரத்தில் தெரியும் வீடுகளைக் காணுகிறான். அதில் ஒரு வீட்டு ஜன்னலில் வெளிச்சம் காணப்படுகிறது. உடனே தன் வீட்டு விளக்கை எரியவிடுவதும் அணைப்பதுமாக ஒரு விளையாட்டில் ஈடுபடுகிறான். என்ன விளையாட்டு இது எனப்புரியாத போது தொலைபேசி அழைப்பு வருகிறது. அதில் அவனது பிள்ளைகள் பேசுகிறார்கள். அவர்களுக்குக் குட்நைட் சொல்கிறான்.
அப்போது தான் தொலைவில் உள்ள வீட்டில் அவனது மனைவி பிள்ளைகள் வசிப்பதை அறிகிறோம். முஸ்தபா இருப்பது பாலஸ்தீனத்தில் அவன் மனைவி பிள்ளைகள் வசிப்பது இஸ்ரேலில். இருவருக்கும் இடையில் இருநூறு மீட்டர் இடைவெளி. ஆனால் பெரிய தடுப்புச் சுவர் பிரித்திருக்கிறது.

சல்வா தனது வேலை காரணமாக இஸ்ரேலின் மேற்கு கரை நகரில் வசிக்கிறாள். ஆனால் முஸ்தபா இஸ்ரேலில் நிரந்தரமாகக் குடியிருக்கத் தேவையான அடையாள அட்டையைப் பெறவில்லை. அதற்கான விருப்பமும் இல்லை என்பதால் பாலஸ்தீனத்தில் குடியிருக்கிறான்.
அவன் தன் அடையாளத்தை இழக்க விரும்பவில்லை. அவனது அம்மா படத்தின் ஒரே காட்சியில் தான் பேசுகிறாள். மற்றபடி அவள் ஒரு மௌனசாட்சியம் போலவே இருக்கிறாள். பாதுகாப்பு சோதனையின் போது அவன் விரல் ரேகை பொருந்தவில்லை. விரலைத் துடைத்து ஸ்கேன் செய்தாலும் ரேகை பொருந்த மறுக்கிறது. அவனது அகத்தில் உள்ள எதிர்ப்புணர்வின் அடையாளம் போலவே அந்தக் காட்சி சித்தரிக்கப்படுகிறது
உண்மையில் முஸ்தபா குற்றவுணர்ச்சி கொண்டிருக்கிறான். அரசியல் பிரச்சனையின் காரணமாகத் தனது குடும்பம் பாதிக்கப்பட்டிருக்கிறது. மனைவி பிள்ளைகளை வைத்துக் கொண்டு அல்லாடுகிறாள். தன்னால் அவர்களுக்கு உதவ முடியவில்லை என்ற குற்றவுணர்வு அவனிடம் காணப்படுகிறது.
இஸ்ரேலின் மேற்கு கரையிலுள்ள துல்கர்ம் நகரில் கதை நடக்கிறது. முஸ்தபா போல ஏராளமான பேர் எல்லையை ஒட்டி வசிக்கிறார்கள். அவர்களுக்கு முறையான அனுமதி அட்டை கிடைக்கவில்லை. பெறுவதும் எளிதானதில்லை.
இஸ்ரேலிய மேற்குக் கரை தடுப்புச்சுவர் எனப்படும் இந்தத் தடைச்சுவரை பயங்கரவாதத்திற்கு எதிரான சுவர் என்று இஸ்ரேல் விவரிக்கிறது. ஆனால் பாலஸ்தீனியர்கள் அதை இனவெறிச் சுவர் என்று அழைக்கிறார்கள். செப்டம்பர் 2000 இல் இந்தத் தடைச்சுவர் கட்டப்பட்டது. இஸ்ரேலின் மேற்குக் கரையின் பதினோறு மைலில் இந்தச் சுவர் உள்ளது. இந்தச் சுவரால் ஆயிரக்கணக்கான பாலஸ்தீனியர்கள் பாதிக்கப்படுகிறார்கள்.
தடுப்புச் சுவரின் மூலம் ஒரு குடும்பம் பிரிக்கப்படுகிறது. ஆனால் அவர்களைச் செல்போன் இணைத்துவிடுகிறது. படம் முழுவதும் செல்போன் மூலமே முஸ்தபா குடும்பத்துடன் உறவாடுகிறான். அது போலவே வெளிச்சம் அவர்களை ஒன்று சேர்க்கிறது.

மிக நீண்ட அந்தத் தடுப்புச் சுவர் படத்தில் முழுமையாகக் காட்டப்படுவதில்லை. இருளில் காணும் போது அதன் பிரம்மாண்டம் தெரியவில்லை. ஏரியல் வியூ காட்சியின் போது தான் அதன் உயர்ந்த தோற்றத்தைக் காணுகிறோம். அதுவும் ரமி தப்பிச்செல்ல ஏறும் போது தான் அது எவ்வளவு பெரியதாகக் கட்டப்பட்டிருக்கிறது என்பதை நெருக்கமாக உணருகிறோம்.
சுவரைக் காட்டும் போதெல்லாம் வானமும் கூடவே என் கண்ணில் பட்டது. சுவர் நம்மைப் பிரித்து வைத்திருக்கிறது. வானமோ சேர்த்து வைக்கிறது. ஒரே நிலவை. ஒரே சூரியனை. நட்சத்திரங்களைத் தான் இருவரும் காணுகிறார்கள். ஒரே இரவு தான் இருவருக்கும்.
ஒரு காட்சியில் தன்னுடன் வந்து பாலஸ்தீனத்தில் இருக்கலாமே என்கிறான் முஸ்தபா. தனது வேலை, பிள்ளைகளின் கல்வி இதற்காக இங்கே இருக்க வேண்டியுள்ளது. இதை விட்டுவிட்டு அங்கே வந்தால் நாம் எப்படி வாழுவது என்று கேட்கிறாள் சல்வா. அதற்கு முஸ்தபாவிடம் பதில் இல்லை.
தடுப்புச் சுவரைக் கடந்து இஸ்ரேலுக்குள் கள்ளத்தனமாக அழைத்துச் செல்லும் கடத்தல்காரர்கள் நிறையப் பணம் வாங்கிக் கொண்டு தந்திரமாக மக்களை அழைத்துப் போகிறார்கள். இதில் மாட்டிக் கொண்டால் சிறைவாசம்.
கட்டிட வேலை ஒன்றுக்காகத் தற்காலிக வேலை உத்தரவு பெற்று முஸ்தபா எல்லையைக் கடந்து போகும்போது பாதுகாப்புச் சோதனை கடுமையாக இருக்கிறது. அந்தக் காட்சியில் முட்டிமோதும் ஆட்களையும் கம்பிவேலியின் இடைவெளியில் ஏறி குதிப்பவர்களையும் காணும் சூழலின் நெருக்கடியை முழுமையாகப் புரிந்து கொள்ள முடிகிறது
பாதுகாப்புச் சோதனையில் அவனது விரல் ரேகை பொருந்த மறுக்கிறது. ஆனால் கையில் வைத்துள்ள உத்தரவு காரணமாக உள்ளே அனுமதிக்கப்படுகிறான்.

கட்டிட வேலையின் போது தேநீர் கொண்டுவருகிறவனின் கனவுகளும் அவர்கள் ஒன்றாக ஆடிப்பாடுவதும் அழகான காட்சி.
நண்பனுடன் கட்டிட வேலையைச் செய்துவிட்டு தன் குடும்பத்தைத் தேடிப்போகிறான் முஸ்தபா. தனது மகன் பள்ளியில் சகமாணவன் ஒருவனால் தாக்கப்பட்டதை அறிந்து வருத்தமடைகிறான். மனைவி இதைப் பெரிது பண்ண வேண்டாம் என்கிறாள். பாலஸ்தீனன் என்ற அடையாளம் காரணமாகவே தன் மகன் தாக்கப்படுகிறான் என்பது முஸ்தபாவிற்கு வேதனை அளிக்கிறது
வேலை முடிந்து எல்லை கடந்து தனது வீடு வந்து சேருகிறான். அடுத்தமுறை பணிக்குச் செல்லும் போது அவனது அடையாள அட்டையைப் புதுப்பிக்க வில்லை என்று இஸ்ரேலில் நுழைய அனுமதி கிடைக்கவில்லை
இந்நிலையில் மனைவி அவசரமாக அவனைத் தொலைபேசியில் அழைத்து மகன் விபத்தில் சிக்கி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாகச் சொல்கிறாள். பதற்றமான முஸ்தபா எப்படியாவது இஸ்ரேலினுள் செல்ல வேண்டும் எனத் துடிக்கிறான்

அவனிடம் முறையான அனுமதிச்சீட்டு கிடையாது. மருத்துவக் காரணங்களுக்கான அனுமதிச் சீட்டு பெறக் காத்திருக்க வேண்டும். வேறு வழியில்லாமல் கள்ளத்தனமாக அழைத்துப் போகிறவர்களின் உதவியை நாடுகிறான். அதிகப் பணம் கொடுக்கிறான்.
இருநூறு மீட்டர் தொலைவைக் கடக்க அவன் இருநூறு மைல்கள் பயணம் செய்ய வேண்டிய சூழல் உருவாகிறது.
இந்தப் பயணத்தில் அவனது காரில் ஜெர்மனியைச் சார்ந்த அன்னா என்ற ஆவணப்பட இயக்குநர் பயணம் செய்கிறாள். அவள் உண்மை நிகழ்வுகளை ரகசியமாகப் படம் எடுக்க முயல்கிறாள். முஸ்தபாவிற்கு ஆங்கிலம் நன்றாகப் பேச வரும் என்பதால் அவளுடன் உரையாடுகிறான். தன்னை அவள் படம் எடுக்கக் கூடாது என்று கண்டிப்பாகக் கூறுகிறான். சக பயணிகளாகக் கிஃபா , பதின்வயதுள்ள ரமி உடன் வருகிறார்கள். ரமி மீது முஸ்தபா காட்டும் அன்பு ஒரு சகோதரனைப் போலவே வெளிப்படுகிறது.
எல்லை கடந்து அழைத்துச் செல்கிறவர்கள் பணத்திற்காக என்னவிதமான வேலைகளைச் செய்கிறார்கள் என்பது திகைப்பூட்டுகிறது. பிரச்சனைக்கு மேல் பிரச்சனையைச் சந்திக்கும் முஸ்தபா எப்படியாவது தன் மகனை காண இஸ்ரேலுக்குள் போய்விட வேண்டும் என்று பொறுமையாகக் காத்திருக்கிறான். முடிவில் இந்தப் பயணம் எப்படிச் சாத்தியமானது என்பதை அழகாக விவரித்திருக்கிறார்கள்.
கடத்தல்காரர்களுடன் காரில் முஸ்தபா பயணம் செய்யும் போது மேற்கு கரையில் வாழும் பாலஸ்தீனியர்களின் வாழ்க்கை எப்படியிருக்கிறது என்பதை அறிந்து கொள்கிறோம்.

முதற்காட்சியில் முஸ்தபா இயல்பான ஆசை கொண்ட கணவனாக அறிமுகமாகிறான். வேலைக்குச் செல்லும் போது எப்படியாவது தன் குடும்பத்தைத் தன்னுடன் வைத்துக் கொள்ள வேண்டும் என்று நினைப்பவனாக அடையாளப்படுத்தப்படுகிறான். ஆனால் கள்ளத்தனமாக எல்லைகடந்து போக முற்படும் போது அவனது இயல்பு மாறிவிடுகிறது. காரில் அவன் தன் உணர்ச்சிகளை வெளிக்காட்டுவதில்லை.
மனைவியோடு தொலைபேசியில் பேசிக் கொண்டே வருகிறான். நெருக்கடியான சூழலைச் சரியாகக் கையாளுகிறான். தன்னை அவர்கள் ஏமாற்றுகிறார்கள் என்ற நிலையில் தான் வெடித்து எழுகிறான்.
அவன் ஒருவன் தான் அன்னாவை நிஜமாகப் புரிந்து கொள்கிறான். அன்னாவிற்காக அவன் பரிந்து பேசும் இடம் சிறப்பானது. சுற்றுலாப் பயணி போல அறிமுகமாகி உண்மையைத் தேடும் ஆவணப்படக்கலைஞரான அன்னாவின் கதாபாத்திரம் நேர்த்தியாக உருவாக்கப்பட்டிருக்கிறது. அலி சுலிமான் முஸ்தபாவாகச் சிறப்பாக நடித்திருக்கிறார்
இயக்குநர் நைஃபேயின் வாழ்க்கையில் நடந்த உண்மை நிகழ்வுகளிலிருந்து படம் உருவாக்கப்பட்டிருக்கிறது.
இரவில் செல்லும் பயணக்காட்சிகளும். பாதுகாப்புச் சோதனையில் ஏற்படும் நெருக்கடிகளும் வெகு நேர்த்தியாகக் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. நாம் முஸ்தபாவின் கூடவே பயணம் செய்கிறோம். அவன் கண்களின் வழியாக இரவைக் கடந்து போகிறோம்.
கடைசிக்காட்சியில் முஸ்தபா வீட்டில் எரியும் வண்ணவிளக்குகளும் அவனது புன்னகையும் அவனது மாறாத நம்பிக்கை மற்றும் அன்பின் அடையாளமாக மாறுகிறது.
இயக்குநர் நைஃபேயின் முதற்படமிது. இஸ்ரேல் பாலஸ்தீனப் பிரச்சனை குறித்து நிறையப் படங்கள் வந்துள்ளன. ஆனால் இப்படி ஒரு தடுப்புச் சுவரை முன்வைத்து அதிகார அரசியலைப் பேசும் படம் ஒன்றை இயக்கியது மிகுந்த பாராட்டிற்குரிய விஷயம்.
October 15, 2021
வாழ்த்துகள்
கனலி இணையதளம் கலை இலக்கியம் சார்ந்து சிறப்பான முன்னெடுப்புகளைத் தொடர்ந்து செய்து வருகிறது.
இணைய இதழுடன் அச்சில் கனலி இருமாத இதழாக வெளிவரவுள்ளது.
கனலி விக்னேஷ்வரன் உள்ளிட்ட நண்பர்களுக்கு எனது மனம் நிறைந்த வாழ்த்துகள்

மழைமான் – வாசிப்பனுபவம்
கலை கார்ல்மார்க்ஸ்

இந்தத் தொகுப்பில் மொத்தம் பத்துச் சிறுகதைகள் உள்ளன. ஒவ்வொரு கதையும், ஒவ்வொரு விதமாக உள்ளது. முன்னுரையில் எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் அவர்கள், ‘ஒவ்வொரு தொகுப்பும் ஒரு காலகட்டத்தில் எனக்கு இருந்த மனநிலையின் சாட்சி’ எனக் குறிப்பிடுகின்றார். மேலும், ‘முந்தைய கதைகளிலிருந்து அவரது கதைகள் வேறு திசையை நோக்கி பயணிக்கத் தொடங்கி விட்டதாகவும்’ குறிப்பிடுகின்றார்.
ஆம். அது முற்றிலும் உண்மை தான். இந்தத் தொகுப்பில் உள்ள ஒவ்வொரு கதையையும் படித்து முடிக்கும் பொழுது மனம் எங்கெங்கோ பயணித்து மிதந்தபடியே இருக்கின்றது.
இத்தொகுப்பிலுள்ள #புலப்படாத_பறவை என்ற சிறுகதையைப் படித்திடும் பொழுது, சித்தரஞ்சன் உடன் நானும் பயணப்பட்டேன், இரட்டை வரி காடையைக் காண்பதற்காகக் குலாமோடு சேர்ந்து நானும் அலைந்து திரிந்தேன், ஈரானி வரைந்த சித்திரம் எனக்குள்ளும் ஓவியம் ஒன்றை தீட்டிச் சென்றது, அய்டாவை எப்போது பார்ப்போம் என்று மனம் அடித்துக் கொண்டே இருந்தது.

இக்கதை Jordon’s Courser எனப்படும் அரிய வகை இரட்டை வரிக் காடையைத் தேடிச் சென்ற உண்மை சம்பவத்தின் புனைவு என்று ஆசிரியர் குறிப்பிடுகின்றார்.
சிலர் தேடித்தேடி முயன்றும் அறியப்படாத ஒன்று, வேறு யாரோ ஒருவருக்கு எளிதாகப் புலப்பட்டு விடுகிறது. ஆனால் அவர்களுக்கு அதன் மகத்துவம் தெரிவதில்லை. இக் கதையின் முடிவும் அதையே குறிப்பிடுகின்றது.
#விரும்பிக்_கேட்டவள் என்ற சிறுகதை பி.பி. ஸ்ரீனிவாசஸின் ரசிகை ஒருத்தியின் வாழ்க்கையை விவரிக்கிறது. படித்து முடிக்கும் போது மனம் கனக்கிறது. ஏதோ ஒரு நேர்காணலில் எஸ்.ரா. அவர்கள் இக்கதை நிகழ்வு குறித்துக் குறிப்பிட்டது போல் எனக்கு நினைவு. எனினும் இக்கதை படித்த பின்பு மனதில் இருள் ஒன்று வந்து அப்பிக் கொண்டது.
#அவன்_பெயர்_முக்கியமில்லை என்ற சிறுகதையில் ஒரு தம்பதியரின் வாழ்க்கை, படம் பிடிக்கப்பட்டுள்ளது.வாழ்க்கையில் கிடைக்கும் நிராசைகள், மகிழ்ச்சிக்காக ஏங்கும் மனம், சமூகச் சூழல், பெண் பாதுகாப்பு இவை அனைத்தையும் எஸ்.ரா அவர்கள் மனதை மயக்கும் வரிகளில் அழகுபட விவரித்து மனதை கரைக்கின்றார்.
#மழைமான் இச்சிறுகதைத் தொகுப்பின் தலைப்பைக் கொண்ட சிறுகதை. எல்லா மனிதர்களுக்குள்ளும் இருக்கும் குழந்தை தனம், சின்னச் சின்ன ஆசைகள், எத்தனை வயது கடந்தாலும் அது நம்மிலிலேயே கிடக்கிறது. அது மீண்டும் எழும் பொழுது நம் மனது என்ன நிகழ்வுகளைச் சந்திக்கின்றது என்பதை ரசனையாக இக்கதையில் கூறியுள்ளார், எஸ்ரா அவர்கள். இக்கதையைப் படிக்கும் பொழுது எவ்வொரு வாசகனுக்கும் அடிமனதில் உள்ள எண்ணற்ற ஆசைகள் மீண்டும் துளிர் விடத் தொடங்கிவிடும் என்பதே நிதர்சனம்.
#வெறும்_பிரார்த்தனை என்ற கதையைப் படிக்கும் பொழுது, எனக்கு உள்ளுக்குள் சிரிப்பு பீறிட்டது. உண்மை தான். இக்கதையில் வரும் அப்பா கதாபாத்திரம் போலப் பல்வேறு நபர்களை நாம் இச்சமூகத்தில் நித்தம் கண்டு வருகின்றோம். யாருக்காக வாழ்கின்றோம், எதற்காக வாழ்கின்றோம், தனக்காகத் தான் வாழ்கின்றோமா என எந்தச் சிந்தனையும் அற்ற மனிதர்களின் வாழ்க்கை எப்படி இருக்கும். இக்கதை அதற்கான ஒரு சிறு துளியாய்.
#எதிர்_கோணம் இக்கதையில் வரும் சவரிமுத்துவை போல எத்தனையோ நபர்கள் இன்னமும் கடந்தகால நிறைவேறாத ஆசைகள் மற்றும் அது அடைய வேண்டிய இலக்குகளுக்காகக் காத்திருக்கின்றார்கள். காலம் கடந்து விட்டாலும் ஒருவனின் சிறுபிள்ளைத்தனமான ஆழ்மன நிறைவேறாத ஆசைகள் இன்னமும் மூர்க்கத்தனமாகவே இருக்கும். அது மீண்டும் கிடைக்கும் தருணம் வந்தும் கிடைக்காமல் செல்லும் பொழுது மனம் படும் தத்தளிப்புகள் இவற்றை எஸ்.ரா. அவர்கள் மயக்கும் வார்த்தைகளில் விவரித்துள்ளார்கள்.
#இன்னொரு_ஞாயிற்றுக்கிழமை இக்கதை வேலைக்காக அலைகின்ற இளைஞர்களின் வாழ்க்கையில் ஞாயிற்றுக்கிழமை எப்படிக் கழிகின்றது. அவர்கள் அன்றைய தின உணவுக்காக என்னென்ன செய்கின்றனர் என்பதைத் தெளிவாகக் காட்டுகிறார் ஆசிரியர் அவர்கள். இதைப் படிக்கும் ஒவ்வொரு வாசகனின் மனதும் கரைந்து மனமற்ற வெற்று உடலாய் போய் விடுவது போல் ஆகின்றது. தாமோதரன், மீனாம்பாள் பாட்டியிடம் பெற்று வரும் பார்சலை பிரித்து, உள்ளே உள்ள கடிதத்தைப் படித்து முடிக்கும் பொழுது வாசகனையும் குற்ற உணர்ச்சி தொற்றிக் கொள்கின்றது.
#ஓலைக்கிளி – சூழல் என்பது ஒரு மனிதனை எப்படி எல்லாம் அலைக்கழிக்கின்றது. இளமையில் இருக்கும் துடிப்பும் மிடுக்கும், வயது ஆன பின்பு என்ன ஆகின்றது என்பதை இக்கதையில் வரும் சவட்டி கதாப்பாத்திரம் உணர்த்துகின்றது.
தான் செய்திடும் தவறுக்காக, ஒவ்வொரு முறையும் யாரிடம் தவறிழைத்தோமோ அவர்களுக்கே ஏதோ ஒரு வகையில கைமாறு ஒன்றை செய்து வருகின்றான் அவன். ஒரு மனிதன் தன்னை நம்பியவர்களுக்கு உதவிட எதுவும் செய்வான் என்பது சவட்டி கதாப்பாத்திரம் உணர்த்துகின்றது. ஒருவன் இன்னொரு வர் மனதில் தங்கி நிற்க வேண்டும் என்றால், அதற்கு அவர் மனதில் எதிர்மறையாக எதையும் விதைத்தாலேயே போதும் என்றும், அவர் நம்மை எக்காலமும் மறக்காமலேயே இருப்பார் என்றும் சவட்டி கதாபாத்திரம் சொல்வதை எவரும் மறுக்க முடியாதது தான்.
#மழையாடல் அம்மாவிற்கு நேர்ந்த வாழ்வியல் நிகழ்வினால் ஒரு பெண் துறவு பூண்டது சொல்லப்பட்டுள்ளது. என்றாலும், மழை எப்படி எல்லாம் ஒரு மனிதரோடும், அவர்களின் மனநிலையோடும் கலந்துள்ளது என்பதைப் படம் பிடித்துக் காட்டுகின்றது இச்சிறுகதை.
#தூய_வெளிச்சம் கோச்சடை என்னும் திருடன் அவனுக்குத் தொடர்பு இல்லாத ஒரு வீடு இடிக்கப்பட்டு வருவதைப் பார்த்து வருந்துகின்றான். தனது கடந்த காலத்தில் அந்த வீட்டிற்கு ஒருமுறை திருடச் சென்றுள்ளான். இருப்பினும் அந்த வீடு இவனுக்குள் ஏற்படுத்திய தாக்கம், அதன் பொருட்டுத் தன் வாழ்வில் நடந்த நிகழ்வு இவற்றையெல்லாம் எண்ணி ஏங்கும் ஒரு அற்புதமான கதை. இப்படி எல்லோருக்கும் ஏதோ ஒன்றை பறிகொடுக்கும் பொழுதுகளில், கடந்த காலக் காட்சிகள் உள்ளத்தைக் கசக்கியும், கண்ணீரையும் கொண்டு சேர்த்து விடுகின்றது. இதனை இச்சிறுகதையின் மூலம் அற்புதமாக ஆசிரியர் கூறியுள்ளார்.
எழுத்தாளர் எஸ்.ரா. அவர்களின் “மழைமான்” சிறுகதை தொகுப்பில் உள்ள ஒவ்வொரு சிறுகதையைப் பற்றியும் பத்துப் பக்கங்களுக்கு மேல் விவரித்திடலாம். அப்படிப்பட்ட மனித உணர்ச்சிகள் ஒவ்வொரு கதையிலும் கொட்டிக் கிடக்கின்றது. ஏற்கனவே முன்னுரையில் எஸ்.ரா. அவர்களே சொல்லியது போல, அவரை மட்டுமல்ல இக்கதைகள் அனைத்தும் வாசகர்களையும் வேறு திசைக்கு அழைத்துச் செல்கின்றது.
அனைவரும் படிக்க வேண்டிய அற்புதமான சிறுகதை தொகுப்பு.
ஆற்றல் மிகுந்த இடக்கை
மஞ்சுநாத்

சைக்கோ என்ற வகைமையில் வாழ்ந்து வந்தவர்களை வாழ்ந்து வருபவர்களை எவ்விதப் பொருளில் வகைப்படுத்துவது. வரலாறு அவர்களை ஒரு பட்டியலாக மட்டுமே வகைமைப்படுத்தியுள்ளது. மனநோயாளிகளாக அவர்கள் மீது கருனை கொள்வதற்கு எந்தவொரு முகாந்திரமும் இல்லை. அவர்களுக்கு மனம் இருக்கிறது. சாமானியன் மனதைவிட அது சிறப்பாகவே செயல்புரிகிறது. துடிப்பான வேகத்தோடு செயலாற்றும் ஒன்றிற்கு நோயின் சாயத்தைப் பூச முயல்வது அனர்த்தம் மட்டுமல்ல ஆபத்தும் கூட.
மனதின் செல்வாக்கிற்கு முழுமையாகக் கட்டுப்பட்டவர்களைச் சைக்கோவாகப் பொருள் கொள்வதில் ஒரு உடன்பாடு உள்ளது. இதைக் குறைந்தபட்ச உயிர்வாழ்தலுக்கான யாசக மனமல்ல. மனப்பிறழ்வற்ற அதிகாரம். தனது மன அடிமைத்தனத்தின் நீட்சியாக வளரும் ஆபத்தான கரம் அது. அதன் வல்லமை அசூரத்தனமானது. அது தனது பசிக்கு எதை வேண்டுமானால் உணவாக்கிக் கொள்ளும்.
நியாயம்-அநியாயம், தர்மம்-அதர்மம், நல்லது-கெட்டது, ஒழுங்கு -ஒழுங்கின்மை, இன்பம் – துன்பம், நீதி-அநீதி இந்த இரண்டுங்கெட்டான் கருத்தியல்களுக்கு அப்பாற்பட்டது அதிகார ஆட்சி பீடத்தின் தராசு. தேவைப்படும் போது தேவையானது உயரும். அதுவே உயர்வு. உயர்வானது. இவ்வகைக் கரம் கொண்ட அதிகார மனம் இரண்டு கட்டமைப்புகள் வழியே தன்னைப் பிரதிபலித்துக் கொள்கிறது. ஒன்று ஒழுங்கு முறைப்படுத்தப்பட்ட நியதியின் வெளிப்பாடு. மற்றொன்று ஒழுங்குமுறைக்கு அப்பாற்பட்ட நேர்மாறான சிதைவின் வெளிப்பாடு.
துரதிர்ஷ்டவசமாக இவ்விரண்டு கட்டமைப்புகளின் பிரமாண்ட கோரைப்பற்களும் சமூகத்தின் குருதியில் நீராட்டி கொள்வதில் முனைப்போடு செயல்பட்டுள்ளன. அதன் குருதி கரைப்படிந்த வரலாற்றின் சிவப்பு பக்கங்களின் பிரகாசத்தை இடக்கை நமக்குப் புரட்டி பார்வை புலனில் ஆழமாகக் காட்சிப்படுத்துகிறது.
யோக விஞ்ஞானத்தின்படி மனித உடலின் இடப்பாகத்தில் இருப்பது இடா வலப்பாகத்தில் இருப்பது பிங்கலா. இந்நாடிகள் சமநிலை அடையும்போது மிகப் பெரும் சக்தியோட்ட வழித்திறப்பின் பாதையான சுஸுமுனா திறந்து கொள்ளகிறது. ஆனால் சமூக ஞானத்தைப் பொருத்தவரை மேல்தட்டும் மற்றும் கீழ்தட்டும் எவ்வகையிலும் சமநிலை சாத்தியற்றதாக உள்ளது. அது ஒருபொழுதும் நிகழ்ந்ததும் கிடையாது என்பது தான் ஜீரணிக்க முடியாத உண்மை.
நிலவும் சூரியனும் ஒருபோதும் ஒன்றாகக் காட்சியளிப்பதில்லை. ஒருவேளை உதயத்திலோ அஸ்தமனத்திலோ சில நொடிகள் நிகழலாம். பின்பு ஏகபோகத்தின் ஒரு சார்பு ஆட்சியின் துவக்கத்தின் முன் அறிகுறியே அது.
ஈடில்லாத அதிகாரத்தின் ஆளுமை கொண்டவன் தன் மனதிடம் தினம் தினம் தோற்றுப்போகும் சூதாடி. சகிக்க முடியாத தோல்வியைத் தனது நிழலில் உள்ள எளியோர்கள் மீது பிரயோகிப்பது என்பது ஏதேச்சதிகாரத்தின் பசியாற்றும் குரூரம். ஆனால் இப்பசி ஒருபோதும் தீராத அகோரப்பசி. இது அரசனிடம் மட்டுமல்ல சமூக வரிசையில் ஒருபடி மேலே அமர்ந்துள்ள ஒவ்வொரு மனிதனிடமும் உள்ளது. வாய்ப்பு கிடைக்கும் போது தன் கீழ் இருப்பவர்கள் மீது குறி நீட்டி சிறுநீர் கழிப்பதை தங்கள் உரிமையாகவே கருதிக் கொள்கிறார்கள்.
ஒழுங்கு முறைப்படுத்தப்பட்ட நியதிகள் வெளிப்பாட்டின் சுயநல உதாரணப் புருஷனாக மிளிர்ந்த அப்துல் முஷாபர் மொகதீர் முகமது ஒளரங்சீப் பரத்துபட்ட இந்துஸ்தான்த்தை தனது உள்ளங்கையில் வைத்து ஆண்ட பேரரசர். இருந்த பொழுதும் அவரது மனம் ஒரு கைப்பாவையாக அவரைக் குனிய வைத்துச் சலாம் போட வைத்த கதையை இடக்கை பேசுகிறது.
பாதுஷா ஒளரங்கசீப் பலருக்கு தனது சிவப்பு முகத்தைத் தாரளமாகத் தரிசனம் தந்தபோதிலும் அவரது சாதாரண இறுதி ஆசைக்கான வரத்தை அவரது மகன் நிராகரித்து விடுகிறான். மனதின் கயமைத்தனத்தில் இன்பம் காணும் ஆட்சி துர்மரணத்தின் நிழலை மட்டுமே விதைக்கிறது.
ஒளரங்கசீப் பேரரசுக்குக் கப்பம் கட்டும் சத்கர் தேசத்தை ஆட்சி செய்து வந்தவன் சிற்றரசன் பிஷாடன். இவன் இரண்டாவது வகைக் கட்டமைப்பு கொண்டவன்.
ஒழுங்குமுறைக்கு அப்பாற்பட்ட நேர்மாறான சிதைவின் வெளிப்பாடு கொண்டவன். நடுநிசியில் தனது பட்டத்து யானையின் கண்களைச் சிதைத்து அதன் அலறலில் தூக்கமில்லாத தனது இரவுகளைத் தாலாட்டி கொள்பவன். இவனது நீதி பரிபாலனம் பல அப்பாவிகளின் நிஜவாழ்வு கதையின் சலிப்பை குறைத்து புனைவின் வசீகரிப்பை தரும் வல்லமை கொண்டது. இதனால் தான் காலா எனும் சிறைச்சாலை நகரம் கதைகளின் சொர்க்கபுரியாகத் திகழ்ந்தது. நல்லாட்சியும் நீதி வழுவாமையும் பொய்யமை கலந்த சரித்திர மாயைகள்.
தூமக்கேது போன்ற போன்ற எளிய மனிதர்கள் புனைவின் பின்னால் இருந்து நமது மனசாட்சியைக் கிளறச் செய்யும் ஒளிக்கதிர்கள். தேசமுழுவதும் பயனப்பட்டாலும் தூமக்கேது தனது மூலத்தை அடையாமல் நம்மைப் பரிதவிக்க விடுக்கிறான். அவன் விட்டுச் சொல்லும் ஒவ்வொரு புனைவு கதறலும் மாயக்கரம் கொண்டு நமது காதுகளைச் செவிடாக்கி விடுகிறது
ஒருவன் பேரரசனாக இருக்கலாம். சிற்றரசனாக இருக்கலாம். ஏன் நதிதிக்கரையில் சுற்றித்திரியும் சம்புவாகவும் இருக்கலாம். தங்களது செயல்களால் சேகரித்துக் கொள்ளும் நினைவலைகள் தன்னுருவம் கொண்டு விழிகளில் மிதந்து வரும் பிணம் போல் அவர்களது காட்சியின் சுயரூபத்தைத் தகர்க்கின்றன.
ஆண் உருவில் பெண்மை உணர்வை கண்டறிந்த ஒளரங்கசீப்பின் நெருக்கமான பணியாள் அஜ்யாவின் இறுதிக்காலமும், சதுரங்க ஆட்டத்தில் யாவரையும் தோற்கடித்துப் பிஷாடனின் அடிமைத் தோழனான மனிதரை போல் பேசும் அநாம் என்கிற குரங்கின் இறுதிக்காலமும் ஒன்று போலவே நிகழ்கிறது. இது நாயின் மலம் போன்ற அநீதியின் தூர்நாற்றத்தை தன் வாழ்நாள் முழுவதும் முகர்ந்து திரியும் தூமக்கேதுவின் துயரத்தை போன்றது.
துயரம் பொதுவானது பாகுபாடற்றது. சமநிலை கொண்டது. அது விரும்பாத இடைக்கையாக இருந்த போதிலும் உடலையும் சமூகத்தையும் விட்டு நீங்காமல் தொடர்ந்து செயலாற்றிக் கொண்டே இருக்கும்.
மல்லாங்கிணற்றிலிலிருந்து அகழ்ந்தெடுக்கப்பட்ட காலப்பொக்கிஷமான தங்க கதைச்சிமிழிலிருந்து கசியும் செந்தூரத்தின் துளிகளாக எஸ்.ரா வின் எழுத்து ஒரு நுண்ணோவியம் போல் நம்மை வியக்க வைக்கிறது. நமது பார்வையைக் கூர்மையாக்குகிறது. மாயபுனைவுகளில் நம்மை மயக்கும் அதே வேளையில் அதனுடன் சாரமாக்கப்பட்ட உண்மையின் தரவுகள் சங்கின் வழியாக நமக்குச் சிறிது சிறிதாகப் புகட்டவும் படுகிறது.
வரலாறு வியாப்பானதுமில்லை. உவப்பானதுமில்லை. அது நமது நிகழ் வாழ்வை கட்டமைத்து கொள்ளவும் மனதை நம் கட்டுப்பட்டில் வைத்துக்கொள்ள உதவும் மாயக்கருவி. இடக்கையோடு கை குலுக்குவது மரபு பிழை மரியாதை குறைவு என்ற கருத்தியல்களைக் கடந்து இடக்கையை உள மகிழ்வோடு வணங்குகிறேன்.
October 13, 2021
யாமம் – தெலுங்கு மொழிபெயர்ப்பு
எனது யாமம் நாவல் தெலுங்கில் வெளியாகியுள்ளது. இதனை மொழியாக்கம் செய்திருப்பவர் திருப்பதியைச் சேர்ந்த ஜில்லேல பாலாஜி.

நூலின் பிரதி வேண்டுவோர் தேசாந்திரி பதிப்பகத்தை தொடர்பு கொள்ளவும்
விலை ரூ 250
தேசாந்திரி பதிப்பகம்
டி&1, கங்கை அப்பார்ட்மெண்ட்,
110, 80 அடி ரோடு, சத்யா கார்டன்,
சாலிக்கிராமம், சென்னை – 600 093,
தொலைபேசி: 044 2364 4947, +91 96000 34659.
desanthiripathippagam@gmail.com
October 12, 2021
மலையாளத்தில்
எனது யாமம் நாவல் மலையாளத்தில் வெளியாகியுள்ளது.
மலையாளத்தில் வாசிக்க விரும்புகிறவர்கள் இங்கே பெறலாம்
https://keralabookstore.com/book/yama...

யாமம்- வாசிப்பனுபவம்
சௌந்தர்.G
ஒரு நாவலுக்குள் , வரலாற்று தடயங்கள் , காலக்கணக்குகள், தத்துவார்த்த நிலைகள் , மனித அவலங்கள் , தீர்வும் , தீர்வற்ற முடிவுகள். என பல படிகள் கட்டமைக்கப்பட்டு , ஒரு உச்சத்தில், கதையை அந்தரத்தில் மிதக்க விடுவதோ , சரித்து கீழே தள்ளி, கைகட்டி அமர்ந்து வேடிக்கை பார்ப்பதோ, அந்த படைப்பாளியின் தேர்வாக இருக்கலாம்.
வாசகனுக்கு அந்த நாவல் மிச்சம் வைப்பது என்ன? என்பதுவே அந்த நாவலின் வெற்றி. தொடர்ந்து பேசப்பட்ட, அப்படியான நாவல் வரிசைகளில் முக்கியமான ஒன்று ‘யாமம்’.

நாலைந்து கதைகளையும் வெவ்வேறு காலகட்ட வாழ்க்கையையும் சொல்லி சென்றுகொண்டிருக்கும் பொழுதே நாவல் முடிந்து விடுகிறது . எனினும் படித்து முடித்தபின் நாவலை பின்னோக்கி சென்று பார்த்தால் , அனைத்தும் இரவில் தொடங்கி அல்லது இரவில் ஒரு உச்சத்தை அடைந்து, முழுமை கைகூடி இருக்கும்.
இந்திய மரபில் மனித இருப்பை பற்றி பேசுகையில் , ஜாக்ரத்,{ விழிப்பு }ஸ்வப்ன{ கனவு } , சுஷுப்தி {உறக்கம்}, என்ற மூன்று நிலைகளையும் , ”துரியம்” எனும் பிரபஞ்ச இயக்கத்துடன் ஒன்றிய நிலையையும் குறிப்பிடுகிறது.
இந்த மரபார்ந்த பார்வை பெரும்பாலும் கவிகளால் கவிதைக்குள் அவ்வப்பொழுது எடுத்தாளப்படுவது , பாரதி முதல் நவீன கவிதைகள் வரை, வாசிக்கும் எவரும் அறியக்கூடியதே. எனினும் பெரும் நாவல்களுக்குள் , கதைகளுக்குள், மிக சொற்பமாகவே வெளிப்பட்டுள்ளது.
அந்த வகையில் ‘யாமம்’ முதல் மூன்று நிலைகளையும் நாவல் முழுவதும் பேசுகிறது . இச்சையும், பெரும்களியாட்டமும், மனிதர்களை மூன்று நிலைகளுக்குள்ளும் அலைக்கழித்து, முட்டி மோதி இறுதியில் எதுவுவே நிறைவை , அமைதியை , மகிழ்வை தராத, இருளில் கொண்டு விடுகிறது. அதற்கு இரவு எனும் காலம் கச்சிதமான கருவியாக இருக்கிறது .
நாவல், ”யாமம் ” எனும் நறுமணம் மிக்க ஒரு அத்தரை மையமாக கொண்டது ,
16ஆம் நூற்றாண்டு முதல் 19ம் நூற்றாண்டு வரை, தொடரும் ஒரு நறுமணம் மனிதர்களை கட்டிபோடுகிறது , அவர்களின் இச்சைக்கு, தூண்டுகோலாக இருக்கிறது , அவர்களின் வாழ்க்கை வழியாக ஊடுருவி , அவர்களின் உயர்வு ,வீழ்ச்சிகளில் சாட்சியென , ஒரு ஓரமாக நின்று கமழ்ந்து கொண்டிருக்கிறது .
பொதுவாக , குலதெய்வ வழிபாடு என்பது நம் மண்ணில் அதிமுக்கியமான ஒரு அங்கம். சிலருக்கு குலதெய்வம் தெரியவில்லையெனின், அல்லது அந்த தெய்வம் நம்மை கைவிட்டதெனில், தனது முன்னோர்கள் வாழ்ந்த ஊரில் ஒரு கைப்பிடி மண் எடுத்துவந்து துணியில் முடிச்சிட்டு வைத்தால், முன்னோர்கள் அல்லது ஏதேனும் ஒரு தெய்வம் கனவில் வந்து குலதெய்வத்தை காட்டிக்கொடுக்கும் என்பது இங்குள்ள நடைமுறை.
சிக்மண்ட் பிராய்ட் ”கனவுகளின் விளக்கம் ” நூலில் நம் அகம், புறம் அனைத்தும் எப்படி கனவுக்குள் ஊடுருவுகிறது, நம்மை கடடமைக்கிறது என விரிவாக பேசுகிறார்.
இந்நாவலின் அடிநாதமான ‘அத்தர் ”. கரீம் எனும் வாசனை திரவியம் தயாரிக்கும் ஒருவருக்கு கனவில் தோன்றி ஒரு மெய்ஞ்ஞானி’பக்கீர்’ சொல்லும் மறைஞான விஷயம். என்றே சொல்லப்படுகிறது. இந்த ஞானம் வழிவழியாக அவர் குடும்பத்திற்கு வழங்கப்பட்டது . கிட்டத்தட்ட குலதெய்வ வழிபாட்டிற்கு இணையான ஒன்று. ஆகவே அந்த தெய்வமே இந்த குடும்பத்தை கைவிடுவது, என தீர்மானிக்கிறது. ஆண்வாரிசு பிறப்பதை நிறுத்துகிறது. கரீமை தீய வழி நோக்கி செலுத்துத்திறது, குடும்பத்தை பிரிகிறது. மறைந்து விடுகிறது. இந்த மாபெரும் வளர்ச்சியிலிருந்து, ஒரு கல்யாண பந்தலை சரிப்பது போல, சரித்து விடும், இந்த ஆடலுக்கு முன் மனித அகங்காரம் , தன்முனைப்பு ,அறிவு, என அனைத்தும் இடிந்து விழுந்து, மண் மூடி போவதை கரீமின் கதை என நாவல் சொல்லிமுடிக்கிறது.
இதை அடுத்து சொல்லப்படும் கதை தாய்,தந்தை இன்றி சித்தியால் வளர்க்கப்படும் சகோதரர்கள் பத்ரகிரி ,திருச்சிற்றம்பலத்தின் கதை, கணிதமேதை ராமானுஜம் போல உடல், உயிர், உள்ளுணர்வு, என அனைத்திலும் கணிதம் மட்டுமே ஊறிப்போன திருச்சிற்றம்பலம், இளம்மனைவியை அண்ணனின் பாதுகாப்பில் விட்டுவிட்டு , மேற்படிப்புக்கும் , ஆய்விற்கும் லண்டன் செல்ல , உயிர்களின் அடிப்படை விசையான ‘காமம்’ மொத்தமாக இரண்டு குடும்பங்களின் வாழ்வை சிதைத்து போடுவதும் , முறையற்ற, எல்லையற்ற, காம நுகர்ச்சிக்கு ஆரம்பத்தில் எவ்வளவு தான் சமாதானமும், தன்னளவிலான நியாயங்களை, சொல்லிக்கொண்டாலும், விழைவுகள் அனைத்தும் இட்டுச்செல்வது மாபெரும் இருளை நோக்கி மட்டுமே. என்கிற புள்ளியில் அவர்கள் கதை முடிகிறது. இதில் கணித மேதையின் கனவில் இரண்டு நிகழ்ச்சிகள் நடக்கிறது ஒன்று அவன் காணும் ”கணித சூத்திரங்கள்” அதன் மூலம் மேற்குலகை வியப்பிற்கு உள்ளாக்குதல். இரண்டாவது அவனுடைய தந்தையின் குரல் ” செத்துப் போறதோட எல்லாம் முடிஞ்சு போறதில்லடா” எனும் வரிகளில் இந்த பிரபஞ்ச ஆடலின் தனிமனித ஜனன ,மரண தொடர்வரிசை சித்தத்தில் உறைகிறது. என்கிற இடத்தில எஸ் .ராவின் உள்ளிருந்து வேறு ஒரு குரல் ஒலித்துவிட்டு செல்கிறது .
அடுத்தது மத்திம வயதை கடந்து விட்ட, கிருஷ்ணப்பா , மற்றும் எலிசபெத்தின் கதை, தத்துவார்த்த கதைகளில் மேடை அலங்காரத்திக்காக சொல்லப்படும் கதை ஒன்று உண்டு. ஒரு பருந்து உணவை கவ்விக்கொண்டு பறக்க , அதை மற்ற பறவைகள் அனைத்தும் விரட்டி விரட்டி கொத்த, ஒரு கட்டத்தில் துன்பம் தாளாது, அலகில் கொத்தி இருக்கும் உணவை கீழே போடுகிறது , துரத்திய அனைத்து பறவைகளும்,அந்த இரையை நோக்கி பாய்கிறது, பருந்து நிம்மதியாக வானில் வட்டமிடுகிறது’ – இந்த கதை கிட்டத்தட்ட கிருஷ்ணப்பாவின் கதை,வெள்ளையர் காலத்திலேயே லட்சக்கணக்கான சொத்துக்கு அதிபதியான அவர்,பங்காளி சண்டையால் அலைக்கழிக்கப்பட்டு கோர்ட், வழக்கு, என தன் நிம்மதி அனைத்தயும் இழக்கிறார், அவருக்கு சொந்தமான காடும், மலையும் ஒரே நாளில் அத்தனை இன்னல்களில் இருந்து அவரை விடுதலை கொள்ள செய்கிறது.
நாவலை படித்து முடித்தபின் தோன்றியது, நமது மரபு முன்வைக்கக்கூடிய அறம் , பொருள் , இன்பம், வீடு , எனும் நாலு நிலைகளின், பரிணாம வளர்ச்சி மற்றும் வீழ்ச்சி மிகக்கச்சிதமாக கையாளப்பட்டு இருக்கிறது.
நாவலின் நான்காவது கதை பண்டாரத்தின் கதை, ஒரு நாயின் பின்னால் செல்வதை தன் ஆன்மீக பயணமாக , தேர்ந்த பின், அந்த நாய், பண்டாரத்தை அனைத்து கீழ்மைகளுக்கும் உள்ளாக்குகிறது, சந்நியாசியாக இருந்தவனை சம்சாரியாக மாற்றுகிறது , சம்சாரியானவனை மீண்டும் சுழற்றி அடித்து சித்தனாக மாற்றுகிறது, பரிகசித்து சிரிக்கிறது, அவன் வாழ்வின் அனைத்திலும் சாட்சியாக இருந்துவிட்டு, அவனையும் ஆன்ம நிலையை அடைய வைத்துவிட்டு மறைகிறது .
மேலே சொன்ன கதைகளில் , அறம் சார்ந்த உயர்வு மற்றும் வீழ்ச்சியை, பத்ரகிரி , திருச்சிற்றம்பலத்தின் கதையும் ,
பொருள் சார்ந்த உச்சங்களும் , வீழ்ச்சியும் , கரீமின், கதையிலும் ,
இன்பம் சார்ந்த உயர்வு, தாழ்வு கிருஷ்ணப்பாவின் கதையிலும், வீடுபேறு அல்லது ஆன்மிக உச்சங்கள் , அவலங்களை, பண்டாரத்தின் கதை என கச்சிதமாக பொருந்தியிருக்கிறார், நாவலாசிரியர் .
நுகர்தலுக்கும் அதன் மூலமாக மூளையில் ஏற்படும் தூண்டுதலுக்குமென செயல்படும் நரம்பு மண்டலம் சற்றே பழுதடைந்தாலும், ஒரு மனிதருக்கு முதலில் ஏற்படுவது , ”உணவில் ருசியின்மை, எதையும் உட்கொள்வதற்கான நாட்டமின்மை” என்கிறது நரம்பியல்.
எனில் நுகர்தல் என்பதே இங்குள்ள வாழும் ஆசைகள் அனைத்திற்கும் அடிப்படை, தாகத்திற்கு பருகும் நீரில் கூட நாம் அப்படியான ருசி-{வாசனை} ஒன்றை நாக்கின் அடியில் தேடுகிறோம் . நாவலில் வரும் ‘அத்தர்’ வெறும் வாசனை திரவியம் மட்டுமல்ல, காமத்தில் பெண் உடலில் ஆணுக்கும் , ஆண் மீது பெண் பொழிவதும். சூதாட்டத்தில் செல்வம் என கொட்டுவதும் , நஷ்டத்தில் துன்பம் என எழுவதும், வாசனையான அத்தரின் பல்வேறு வடிவங்களே.
எனெனில் வாசனை என்பது நம்மை நிலத்துடன் , காற்றுடன் பிணைத்து வைத்துள்ளது, நீங்கள் கையில் வைத்திருக்கும் பாட்டில், தரையில் கொட்டி வாசனை என பரவுகையில் தான் தெரிகிறது, அது அத்தர் என்றும் மூத்திரம் என்றும். நம்மை அவை மண்ணில் பிணைப்பவை , வெறுப்பும் விருப்பம் கொள்ள வைப்பவை.
இரவில் அதன் அடர்த்தி இன்னும் அதிகமாகிறது . இந்த நாவலை போல
***
S. Ramakrishnan's Blog
- S. Ramakrishnan's profile
- 657 followers
