நூற்றாண்டின் நினைவுகள்
Around India with a Movie Camera என்ற ஆவணப்படத்தைப் பார்த்தேன்

பிரிட்டனின் BFI தேசிய ஆவணக் காப்பகத்திலுள்ள இந்தியா பற்றிய ஆவணப்படங்களிலிருந்து 72 நிமிஷங்கள் ஓடக்கூடிய இந்தத் தொகுப்பினை உருவாக்கியிருக்கிறார் சந்தியா சூரி. 1899ல் இந்தியாவில் படமாக்கப்பட்ட காட்சிகளில் துவங்கி 1947 வரையிலான பல்வேறு வகைக் காட்சிப்பதிவுகளைத் தேடிச்சேகரித்து ஒன்றிணைத்திருக்கிறார்
இந்த ஆவணப்படத்தின் மூலம் பிரிட்டிஷ்காரர்கள் இந்தியாவில் எப்படி வாழ்ந்தார்கள். அன்றைய மகாராஜாக்கள் மற்றும் வைஸ்ராய்களின் ஆடம்பர வாழ்க்கை. இசை மற்றும் நடனக்கலைஞர்களின் உலகம். புலி வேட்டை, டெல்லியில் நடைபெற்ற தர்பார், மலையேற்றம், கிராமப்புற வாழ்க்கை , ஃபக்கீர்கள் மற்றும் நாடோடிகள் என நூற்றாண்டின் நினைவுகளைக் காணுகிறோம்.
அன்றைய பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் இந்தியாவையும் அதன் மக்களையும் எப்படிப் பார்த்தார்கள் என்பதற்கு இந்த ஆவணப்படம் ஒரு நேரடி சாட்சியம்.

இதில் சில காட்சிகள் தமிழகத்தில் படமாக்கப்பட்டிருக்கின்றன. குறிப்பாகப் புதுச்சேரி மாநிலத்திலுள்ள வில்லியனூரில் வசித்து வந்த வெள்ளைக்காரர்கள் எப்படித் தள்ளுவண்டியினைப் பயன்படுத்திப் பயணம் செய்தார்கள் என்பதைக் காட்டுகிறார்கள். ரிக்சா போல உள்ள வண்டியினைப் பின்னால் இருந்து ஆட்கள் தள்ளுகிறார்கள். அதில் ஏறிப்போகிறார்கள்.
வில்லியனூர் கோவில் முன்பாக ஒரு வெள்ளைக்கார அதிகாரிக்கு வரவேற்பு கொடுப்பதற்காகச் சதிர் நடனம் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. சதிராடும் பெண்களின் கம்பீரமும் அதைக் காணும் கிராமவாசிகளும் , உள்ளூர் பிரமுகரின் பருத்த தோற்றமும், இந்த வரவேற்பை விநோதமாகக் காணும் பிரிட்டிஷ் குடும்பத்தின் இயல்பையும் காணமுடிகிறது இது ஒரு அபூர்வமான பதிவாகும். சதிராடும் பெண்களைப் புகைப்படமாகக் கண்டிருக்கிறேன். ஆனால் ஆவணப்படமாகக் காணும் போது அவர்களை சமூகம் எப்படி நடத்தியிருக்கிறது என்பதை நன்றாக உணர முடிகிறது.
வெள்ளைக்கார்களுக்கு அன்றைய உள்ளூர் பிரமுகர்கள் எவ்வளவு அடிபணிந்து போயிருக்கிறார்கள், அதிகாரிகளைச் சந்தோஷப்படுத்த என்னவெல்லாம் செய்திருக்கிறார்கள் என்பதை இந்தக் காட்சித் தொகுப்பில் அறிய முடிகிறது. ‘
இந்தியா முழுவதுமிருந்த மகாராஜாக்களின் பகட்டான வாழ்க்கை, அவர்களைத் தேடி வரும் பிரிட்டிஷ் இளவரசனை உபசரிக்கும் விதம், தர்பாரில் பரிசுப்பொருட்களைக் காணிக்கையாக அளிப்பது, காலனிய ஆட்சியாளர்களைப் புலி வேட்டைக்கு அழைத்துப் போவது, உல்லாச நடனம், குடி விருந்து என இந்திய மேல்தட்டு வர்க்கத்தினர் எவ்வளவு தூரம் பிரிட்டிஷ் விசுவாசிகளாக இருந்தார்கள் என்பதை இந்தக் காட்சிப்பதிவுகள் வெளிப்படுத்துகின்றன
1899ல் நாம் காணும் வாரணாசியின் தோற்றம் வியப்பூட்டுகிறது. இன்றுள்ள பரபரப்புகள் பயணிகளின் அலைமோதும் கூட்டம் எதுவுமில்லை. இடிபாடுகளுடன் உள்ள படித்துறை, காட்டாறு போல ஒடும் கங்கை.
1906 ஆம் ஆண்டில் காணப்பட்ட அன்றாட வாழ்க்கையின் சித்தரிப்புகள் அன்றைய தினசரி வாழ்க்கையின் குறுக்குவெட்டுத் தோற்றத்தை காட்டுகிறது.

ஒரு பெண் வீட்டுவாசலில் தனது கைக்குழந்தையைக் குளிப்பாட்டுகிறார், மூன்று வயது சிறுமிக்கு அவளது அம்மா புடவை கட்டிவிடுகிறாள். ராஜஸ்தானில் வாள்மீது நடந்தபடியே ஒரு இசைக்கலைஞர் பாடுகிறார். அவரைப் போலவே அவரது ஆறு வயது மகனும் வாள் மீது நடந்து காட்டுகிறான்.
லடாக்கில் நடந்த ஹெமிஸ் திருவிழாவில் நடனக் கலைஞர்கள் சுழன்றாடுகிறார்கள். திறந்த வெளியில் ஒரு ஆள் சவரம் செய்கிறான், வீட்டுவாசலில் கயிற்றுக்கட்டில் போட்டு சிலர் உறங்குகிறார்கள் . திறந்தவெளியில் ஒரு குடும்பம் சமைக்கிறது, இவையெல்லாம் பிரிட்டிஷ் காரர்களுக்கு ஆச்சரியமாக இருந்திருக்கிறது. அவற்றை பதிவு செய்து வேடிக்கை காட்சிகள் போல லண்டனில் காட்டியிருக்கிறார்கள்.
ஐந்தாம் ஜார்ஜ் மன்னரை வரவேற்க 1911 இல் நடைபெற்ற டெல்லி தர்பாரும் அதற்கு வருகை தந்த இந்திய மன்னர்களும். வீரர்களின் அணிவகுப்பும் முடிசூட்டு விழாவை எவ்வளவு பிரம்மாண்டமாக நடத்தியிருக்கிறார்கள் என்பதைக் காட்டுகிறது. அவ்வளவு பணமும் இந்தியர்களின் செல்வம். அதை ஏகபோகமாக பிரிட்டன் மன்னரும் அவரது குடும்பமும் அனுபவித்திருக்கிறார்கள்.
இந்திய மன்னர்கள் ஒவ்வொருவரும் தகுதிக்கு ஏற்ப ஜார்ஜ் மன்னருக்கு மரியாதை செலுத்த அழைக்கப்படுகிறார்கள். இதில் பரோடாவின் மகாராஜா கெய்க்வாட் மன்னருக்கு முதுகுகாட்டிச் செல்கிறார். இது மாமன்னரை அவமானப்படுத்தும் செயல் எனக்கூறி கெய்க்வாட்டினை மன்னிப்பு கேட்க வைத்திருக்கிறார்கள்

வெள்ளைக்காரப் பெண் காலணியோடு யானையின் மீதேறுவதும். ஒட்டகத்தில் ஏறி சவாரி செய்வதும் பல்லக்கில் ஆற்றைக் கடந்து செல்வதையும் ஆவணப்படுத்தியிருக்கிறார்கள். சொகுசான வாழ்க்கை. எடுபிடி வேலை செய்ய நிறைய ஆட்கள். மாளிகை போல வீடு. காலனிய அதிகாரிகளின் குடும்பத்தினர் ஆடம்பர வாழ்க்கை நடத்தியிருக்கிறார்கள்.

பிரிட்டிஷ் அதிகாரிகளின் வேட்டைக்குத் துணை செய்யப் பழங்குடி மக்கள் ஒன்றுதிரட்டப்படுவது. காட்டிற்குள் யானையில் செல்லும் காட்சி, புலி வேட்டை, பழங்குடி மக்கள் அன்றிருந்த நிலை மற்றும் அவர்களின் வறுமை , குற்றப்பரம்பரை சட்டம், மதமாற்றம் எனக் காலனிய ஆட்சியின் முக்கிய நிகழ்வுகளை இந்த ஆவணப்படம் விவரிக்கிறது.
இந்தக் காட்சிகளின் வழியே நாம் அறிந்து கொள்ளும் ஒரே உண்மை, இந்தியாவை நாகரீகமற்ற மக்கள் வாழும் ஒரு இருண்ட உலகமாகக் காட்டவே பிரிட்டிஷ் அரசாங்கம் முயன்றிருக்கிறது என்பதே.
இன்னொரு புறம் ஆட்சியாளர்கள் எவ்வளவு சுகபோகங்களை அனுபவித்திருக்கிறார்கள். எப்படியெல்லாம் மக்கள் அடிமைப்படுத்தி வைத்திருந்தார்கள் என்பதையும் அறிந்து கொள்ள முடிகிறது.
எதற்காக இவற்றை ஆவணப்படுத்தியிருக்கிறார்கள். 1857ல் நடந்த சிப்பாய் எழுச்சிக்குப் பிறகு பிரிட்டிஷ் அரசாங்கம் புகைப்படம் எடுப்பதை நிர்வாகப் பணியின் ஒரு அங்கமாக மாற்றியது. குறிப்பாகச் சிப்பாய் எழுச்சியின் போது கொல்லப்பட்ட பிரிட்டிஷ் ராணுவ வீர்ர்கள். மற்றும் அதிகாரிகளை நினைவு கொள்ளப் புகைப்படங்கள் எடுக்கப்பட்டன. இறந்த இடங்களைப் புகைப்படமாக்கி அங்கே நினைவுச்சின்னம் உருவாக்கினார்கள்.
இந்திய நிலப்பரப்பு. இயற்கை வளம். சாலை வசதிகள்.பல்வேறு இனக்குழுக்களின் வாழ்க்கை முறை, திருவிழா, விளையாட்டுகள், பிறப்பு இறப்புச் சடங்குகள். கோவில்கள். நுண்கலைகள். உணவு தயாரிக்கும் முறைகள், அன்றைய மருத்துவம் எனச் சகல விஷயங்களையும் அரசாங்கம் புகைப்படமாகவும் காணொளியாகவும் பதிவு செய்து அதிலிருந்து தங்களுக்குத் தேவையான நிர்வாக உத்திகளை உருவாக்கிக் கொண்டார்கள்.
இது போலவே மகாராஜாக்கள் மற்றும் பிரிட்டிஷ் உயர் அதிகாரிகள் தங்களின் தனிப்பட்ட வாழ்க்கை, வேட்டை, நடனவிருந்துகள். விளையாட்டு. திருமண நிகழ்வுகளை ஆவணப்படமாக உருவாக்கியிருக்கிறார்கள். மதமாற்றத்தின் முக்கிய ஆவணமாகப் புகைப்படக்கலை இருந்திருக்கிறது. இதிலும் ஒரு கிறிஸ்துவ மதமாற்ற நிகழ்வு ஆவணப்படுத்தப்பட்டிருக்கிறது
அன்றைய இந்திய மக்களின் தோற்றம், மற்றும் செயல்பாடுகளை இன்றோடு ஒப்பிடும் போது நாம் எவ்வளவு வளர்ச்சி அடைந்திருக்கிறோம் என்பதைக் காண முடிகிறது. எவ்வளவு சுரண்டப்பட்டிருக்கிறோம் என்பதையும் புரிந்து கொள்ள முடிகிறது.
காந்தியின் தண்டி யாத்திரை காட்சிகள். இயக்குநர் பிமல்ராயினைப் பற்றிய காட்சி. நவகாளி காட்சிகள் என இடைவெட்டாக வரும் அபூர்வமான சித்தரிப்புகள் இந்த ஆவணப்படத்திற்குத் தனித்தன்மை ஏற்படுத்துகின்றன..
150க்கும் மேற்பட்ட ஆவணப்பதிவுகளில் இருந்தே சந்தியா சூரி இதனை உருவாக்கியிருக்கிறார். காலனிய இந்தியாவின் உண்மை முகத்தை இப்படம் வெளிச்சமிட்டுக் காட்டுகிறது.
.
S. Ramakrishnan's Blog
- S. Ramakrishnan's profile
- 657 followers
