கிழவனும் இளைஞனும்
பழமையான சீனக்கதை ஒன்றை வாசித்தேன்
மழைக்காலம் ஒன்றில் குடையோடு ஒரு இளைஞன் ஆற்றுப்பாலத்தைக் கடந்து சென்று கொண்டிருந்தான். அந்தப் பாலத்திலிருந்த ஒரு பிச்சைக்காரக் கிழவன் அவனைக் கண்டதும் தனது இடதுகாலில் அணிந்திருந்த செருப்பை ஆற்றில் தூக்கிவீசிவிட்டு அதை எடுத்துத் தரும்படி கேட்கிறான்

.இளைஞனும் கிழவன் மீது பரிதாபம் கொண்டு ஆற்றில் குதித்துச் செருப்பை மீட்டுக் கொண்டுவந்து கொடுக்கிறான்.
இப்போது பிச்சைக்காரன் புன்சிரிப்புடன் தனது வலதுகால் செருப்பை ஆற்றில் வீசி எறிந்து அதை எடுத்துக் கொண்டு வரச் சொல்கிறான்.
எரிச்சல் அடைந்த போதும் இளைஞன் ஆற்றில் குதித்து வலது கால் செருப்பையும் மீட்டுக் கொண்டுவந்து கொடுக்கிறான்.
எதற்காக இப்படி நடந்து கொள்கிறான் என்று பிச்சைக்காரனிடம் கேட்டதற்குப் பதிமூன்று ஆண்டுகளுக்குப் பிறகு வா சொல்கிறேன் என்று அனுப்பி வைக்கிறான் கிழவன்.

அது போலவே பதிமூன்று ஆண்டுகளுக்குப் பிறகு அந்த இளைஞன் அதே ஆற்றுப்பாலத்திற்குப் போகிறான். இப்போது ஆறு உருமாறியிருக்கிறது. புதிய கட்டிடங்கள். புதிய சாலைகள். நகரமே மாறியிருக்கிறது. புதிய பாலம் கட்டப்பட்டதால் இந்தப் பழைய பாலம் கைவிடப்பட்ட நிலையில் காணப்படுகிறது. பிச்சைக்காரக் கிழவனும் இறந்து போய்விட்டதாகச் சொல்கிறார்கள்
இந்த மாற்றங்கள் ஏற்படுத்திய திகைப்புடன் விடை தெரியாத பிச்சைக்காரனின் செயலை நினைத்தபடியே அவன் ஆற்றுப்பாலத்தின் மீது நடக்கிறான். அப்போது பிச்சைக்காரன் தனது செருப்பை வீசி எறிந்த போது ஏன் புன்னகை செய்தான் என்ற கேள்வி மனதில் எழுகிறது. அவனால் அதற்கு விடை காணமுடியவேயில்லை.
புரிந்து கொள்ள முடியாத சிறுசெய்கைகளின் வழியே உலகம் எதையோ கற்றுக் கொடுக்கிறது.
எதிர்பாராத சிறுசெயலை ஏன் இன்னும் நினைவில் வைத்துக் கொண்டிருக்கிறேன் என்று தனக்குத் தானே கேள்வி கேட்டுக் கொள்கிறான்.
புதிரான ஒரு செயலின் வழியே பிச்சைக்கார கிழவன் முன்னறியாத ஒரு மனிதனின் மனதில் வாழத் துவங்குகிறான்.
ஏன் பதிமூன்று ஆண்டுகள் கழித்துப் பிச்சைக்காரன் வரச்சொல்கிறான்.
காலமே அந்தக் கேள்விக்கான புதிரை அவிழ்த்துவிடும் என்பதால் தானா
கதை முடியும் போது நாம் அந்தப் புதிருக்கான விடையைக் கண்டறிவதில்லை.
இந்தக் கதையை மெய்த்தேடலுக்கான புதிராகச் சொல்கிறார்கள். உண்மையில் புனைவின் புதிராகவே இதைக் காணுகிறேன்.

நம் வாழ்வில் நடக்கும் சில நிகழ்வுகளை நாம் ஒரு போதும் புரிந்து கொள்ளவே முடியாது. சாவி தொலைந்து போன பூட்டினைப் போல அந்த நிகழ்வு இறுக்கமடைந்துவிடுகிறது.
விரும்பித் தொலைப்பது என்று மாறாத செயல். அது போலவே யாரோ ஒருவரால் மீட்டெடுக்கப்பட்டுத் திரும்ப ஒப்படைக்கப்படுவதும் இயல்பான நிகழ்வே. இந்த இரண்டுக்கும் இடையிலுள்ள புதிரை, விளக்கமுடியாத விசித்திர மனநிலையைத் தான் புனைவு கையாளத் துவங்குகிறது
அர்த்தமற்ற செயல்களைச் செய்யத்தூண்டுவதன் வழியே ஞானத்தை அடைவது என்பது மெய்த்தேடலின் ஒருவகை. அதையே இந்தக் கதை உருவாக்க முயலுகிறது.
கதையை வாசிக்கும் ஒருவன் நான்கு அனுபவங்களுக்கு உட்படுகிறான். ஒன்று உண்மையாக ஒரு பிச்சைக்காரனுக்கும் இளைஞனுக்கும் இடையில் நடக்கும் நிகழ்வு. இரண்டாவது அர்த்தம் புரியாத விளையாட்டு, கதை ஏன் ஆற்றுப்பாலத்தில் நடக்கிறது. ஏன் இளைஞன் விரும்பி அந்தச் செருப்பை மீட்டுத் தருகிறான் என்று கேள்வி உருவாக்கும் குழப்பம். மூன்றாவது நாம் ஏன் இளைஞனாக நம்மைக் கருதிக் கொள்கிறோம். ஏன் விளையாட்டுதனமிக்கப் பிச்சைக்காரனாக நம்மைக் கருதுவதில்லை என்பது. நான்காவது சிறிய அனுபவங்கள் ஏன் பெரிய படிப்பினையை உருவாக்கிவிடுகின்றன என்ற வியப்பு.. இந்த நான்கு நிலைகளில் சஞ்சரிப்பதுடன் உண்மையில் பதிமூன்று ஆண்டுகளுக்குப் பிறகு விடை தெரியும் என்று வாசகன் நம்புகிறான். அது தான் புனைவின் வெற்றி.
எந்த ஒன்றைக் காலத்தின் கைகளில் ஒப்படைத்துவிட்டாலும் வாசகனின் மனது நம்பத்துவங்கிவிடும். காத்திருக்கும். விடை தெரியாத போது மேலும் குழப்பம் அடையும்.
அன்றாட நிகழ்வுகள் நாம் நினைப்பது போன்று எளிமையானவையில்லை. அதற்குள் ஆழமான தளங்கள் இருக்கின்றன என்பதையே இந்தக் கதை வெளிப்படுத்துகிறது.
••
S. Ramakrishnan's Blog
- S. Ramakrishnan's profile
- 659 followers
