அர்த்தமற்ற விசாரணை

உருது எழுத்தாளர் இஸ்மத் சுக்தாயின் வாழ்க்கையினையும் அவரது புகழ்பெற்ற லிஹாஃப் சிறுகதையினையும் ஒன்றிணைத்து உருவாக்கப்பட்டுள்ளது லிஹாஃப் திரைப்படம். இதை இயக்கியவர் ரஹத் ஹஸ்மி.

சர்ச்சைக்குரிய இந்தக் கதையை ஆபாசம் எனக் கருதி இஸ்மத் மீது நீதிமன்ற வழக்குத் தொடரப்பட்டது. இதற்காக அவர் லாஹுர் நீதிமன்றத்திற்குச் சென்று வந்தார். சதத் ஹசன் மண்டோ மீதும் இது போன்ற ஆபாச வழக்குத் தொடரப்பட்ட காரணத்தால் அவர்கள் இணைந்து லாஹுர் சென்று வந்தார்கள்.

இந்தப் படம் இஸ்மத் வீட்டிற்குப் போலீஸ் வருவதில் துவங்குகிறது. நீதிமன்ற ஆணையைக் கொண்டுவரும் காவலர்களிடம் சம்மனை தன்னிடம் தரும்படி ஷாஹித் கேட்கிறார். ஆனால் அவர்கள் அது இஸ்மத்திடம் தான் ஒப்படைக்கப்பட வேண்டும் என்கிறார்கள்.

இரண்டு வயது மகள் சீத்தாவுக்காகப் பாட்டிலில் சூடான பாலை ஊற்றி வைத்துச் சூடு ஆறுவதற்காகக் காத்திருந்த இஸ்மத் கீழே வந்து அந்த நீதிமன்ற ஆணையைப் பெற்றுக் கொண்டு படிக்கிறார். அதில் அவரது சிறுகதை லிஹாஃப் ஆபாசமானது என வழக்கு தொடரப்பட்டுள்ள விபரம் தெரிய வருகிறது.

Ismat Chughtai Vs The Crown என்ற ஆணயின் முதல் வரியைப் படித்ததும் அடக் கடவுளே… மேன்மை தங்கிய மன்னருக்கு என் மீது வழக்குத் தொடுக்கும் அளவுக்கு என்ன கோபம் வேடிக்கையாகக் கேட்டார் இஸ்மத்

தனது கதை ஆபாசமானதில்லை என்று நீதிமன்ற ஆணையை ஏற்க மறுக்கிறார் இஸ்மத். ஆனால் நண்பரான வழக்கறிஞர் மொஹ்ஸின் அப்துல்லா ஆலோசனைப்படி நீதிமன்ற ஆணையை ஏற்றுக் கொண்டு தான் ஜனவரியில் லாஹுர் நீதிமன்றத்தில் ஆஜராவதாகச் சொல்கிறார்.

செய்தித் தாள்களில் இந்த வழக்குக் குறித்த செய்திகள் வந்தவுடன் இஸ்மத்தின் கணவரும் அவரது குடும்பத்தினரும் இஸ்மத்தின் இச்செயலைக் கண்டித்தார்கள். விவாகரத்து செய்துவிடுவேன் என்று கூட ஷாஹித்.மிரட்டினார். அவளால் குடும்பத்திற்கு இழுக்கு என்று பலரும் திட்டினார்கள். இந்த மிரட்டல்களை எல்லாம் கண்டு இஸ்மத் அஞ்சவில்லை.

அவரது இந்தக் கதையைக் கண்டித்து ஆபாசமான வசைச் சொற்களைக் கொண்ட கடிதங்கள் வரத்துவங்கின இதனால் மனமுடைந்து போனார் இஸ்மத்.

குளிர்காலத்தில் லாஹுர் நீதிமன்றத்தில் இஸ்மத் ஆஜார் ஆகிறார். குறுக்குவிசாரணை நடைபெறுகிறது. மன்னிப்பு கேட்கும்படி கட்டாயப்படுத்தப்படுகிறார். ஆனால் இஸ்மத் மன்னிப்பு கேட்கவில்லை. இரண்டு ஆண்டுகள் நடந்த அந்த வழக்கில் கதையை ஆபாசமாகக் கருத இடமில்லை என்று நீதிபதி தள்ளுபடி செய்துவிட்டார். இந்த நிகழ்வுகளும் லிஹாஃப் சிறுகதையும் இடைவெட்டாகப் படத்தில் வந்து போகிறது. இஸ்மத்தாக நடித்திருப்பவர் தனிஷ்டா சாட்டர்ஜி

இந்தக் கதை மற்றும் நீதிமன்ற விசாரணையைப் பற்றி இஸ்மத் சுக்தாய் எழுதிய கட்டுரை தமிழில் வெளியாகியுள்ளது. ராகவன் தம்பி இதனைச் சிறப்பாக மொழியாக்கம் செய்திருக்கிறார்.

“ 1941-ல் நான் ‘லிஹாஃப்’ கதையை எழுதிய போது என்னுடைய சகோதரன் வீட்டில் தங்கியிருந்தேன். ஓர் இரவில் இந்தக் கதையை எழுதி முடித்தேன். விடிந்ததும் என்னுடைய அண்ணிக்கு அந்தக் கதையை வாசித்துக் காட்டினேன். அந்தக் கதையில் விவரிக்கப்பட்டுள்ள கதாபாத்திரங்களை அவரால் அடையாளம் காண முடிந்தாலும் அந்தக் கதை விரசமாக இருந்தது என்று அவர் நினைக்கவில்லை. பிறகு என்னுடைய அத்தை மகள் ஒருத்திக்குப் படித்துக் காட்டினேன். அவளுக்குப் பதினான்கு வயதிருக்கும். அந்தக் கதையில் சொல்லப்பட்டிருக்கும் விஷயத்தை அவளால் புரிந்து கொள்ள முடியவில்லை. அந்தக் கதையை நான் அதாப்-இ-லதீஃப் இதழுக்கு அனுப்பி வைத்தேன். அவர்கள் அதனை உடனடியாகப் பிரசுரித்தார்கள். ஷாஹித் அஹ்மத் தெஹ்லவி அப்போது என்னுடைய சிறுகதைகளை ஒரு தொகுப்பாகத் தொகுத்து வெளியிட முயன்று கொண்டிருந்தார். இந்த லிஹாஃப் கதையை அந்தத் தொகுப்பில் சேர்த்துக் கொண்டார். அந்தக் கதை 1942ல் பிரசுரிக்கப்பட்டது. எனக்கும் ஷாஹித்துக்கும் இடையில் நட்பு நெருக்கமாகி நாங்கள் திருமணம் செய்து கொள்ளலாம் என யோசித்துக் கொண்டிருந்த நேரத்தில் இந்தக் கதை வெளியானது. ஷாஹித்துக்கு இந்தக் கதை சுத்தமாகப் பிடிக்கவில்லை. நாங்கள் சண்டை போட்டுக் கொண்டோம். ஆனால் லிஹாஃப் தொடர்பான சர்ச்சைகள் பம்பாய் வரை வந்து சேரவில்லை. நான் ஸாக்கி மற்றும் அதாப்-இ-லதீஃ போன்ற இரு பத்திரிகைகளை மட்டுமே வரவழைத்துக் கொண்டிருந்தேன். ஷாஹித் அப்போது அத்தனை கோபமாக இல்லை. நாங்கள் திருமணம் செய்து கொண்டோம்.

1944 டிசம்பர் மாதத்தில் எங்களுக்குச் சம்மன் கிடைத்தது. ஜனவரி மாதம் கோர்ட்டில் ஆஜராகும்படி உத்தரவிட்டிருந்தார்கள். எங்களுக்கு அபராதம் மட்டும் விதிப்பார்கள். சிறை தண்டனை எல்லாம் கிடைக்காது என்று எல்லோரும் சொன்னார்கள். எனவே நாங்கள் மிகவும் பரபரப்பாக இருந்தோம். லாஹூரின் குளிருக்கான ஆடைகளை ஆயத்தப்படுத்திக் கொண்டோம்.

சீமா கைக்குழந்தையாக இருந்தாள். மிகவும் பலவீனமாக இருந்தாள். எப்போதும் கீச்சென்ற குரலில் தேம்பித் தேம்பி அழுது கொண்டிருப்பாள். அவளை நாங்கள் ஒரு குழந்தைகள் மருத்துவரிடம் அழைத்துப் போனோம். அவள் மிகவும் ஆரோக்கியமாக இருப்பதாக அவர் உறுதி அளித்தார். ஆனாலும் லாஹூரின் கடுமையான குளிரில் அவளை அழைத்துப் போவது சரியாக இருக்காது என்று நினைத்தோம். எனவே, குழந்தையை அஜ்மீரில் உள்ள சுல்தானா ஜாஃப்ரியின் தாயாருடைய பொறுப்பில் விட்டு விட்டு நாங்கள் லாஹுருக்குப் புறப்பட்டோம். ஷாஹித் அஹ்மத் தெஹ்லாவி மற்றும் என்னுடைய கதையை நகல் எடுத்த காலிகிராஃபரும் என்னுடன் டெல்லியிலிருந்து சேர்ந்து கொண்டார்கள். இந்த நகல் எடுத்த மனிதரையும் குற்றவாளிகளில் ஒருவராகப் பிரிட்டிஷ் அரசு சேர்த்து இருந்தது. அதாப்-இ-லத்தீஃ பத்திரிகைக்கு எதிராக வழக்குத் தொடுக்கப்பட்டு இருக்கவில்லை. அந்தக் கதையைத் தொகுப்பில் சேர்த்து இருந்த ஷாஹித் அஹ்மத் தெஹ்லவி குற்றவாளியாகச் சேர்க்கப்பட்டிருந்தார்.

ரயில்வே ஸ்டேஷனுக்கு எங்களை அழைத்துச் செல்ல சுல்தானா வந்திருந்தாள். அவள் லாஹூர் ரேடியோ நிலையத்தில் வேலை செய்து கொண்டிருந்தாள். லுக்மன் சாஹிப்பின் வீட்டில் தங்கியிருந்தாள். மிகப் பெரிய மாளிகை அது. லுக்மன் சாஹிப்பின் மனைவி குழந்தைகளுடன் தன் பெற்றோர்களைப் பார்க்க ஊருக்குப் போயிருந்தாள். எனவே அந்த மாளிகை முழுதும் எங்களுடைய கட்டுப்பாட்டிலிருந்தது.

மாண்ட்டோவும் லாஹூர் வந்தடைந்தார். அங்குப் பல இடங்களிலிருந்து எங்களுக்கு அழைப்புக்கள் குவிந்தன. அவர்களில் பலரும் மாண்ட்டோவின் நண்பர்கள். ஆனால் அவர்கள் அனைவரும் என்னைப் போன்ற ஒரு விசித்திரமான பிராணியைப் பார்ப்பதில் மிகவும் ஆர்வம் கொண்டிருந்தார்கள். நாங்கள் ஒரு நாள் கோர்ட்டார் முன்பு ஆஜரானோம். நீதிபதி என்னுடைய பெயரைக் கேட்டார். அந்தக் கதை நான் எழுதியதா என்றும் கேட்டார். நான் தான் அந்தக் கதையை எழுதினேன் என்று ஒப்புக் கொண்டேன். அவ்வளவுதான்.

எங்களுக்குப் பெருத்த ஏமாற்றமாக இருந்தது. எங்கள் வழக்கறிஞர் எப்போதும் எதையாவது பேசிக்கொண்டே இருந்தார். அவர் என்ன பேசுகிறார் என்பது எங்களுக்கு அதிகம் பிடிபடவில்லை. ஏனென்றால் அவர் பேசிக்கொண்டிருந்தபோது நாங்கள் எங்களுக்குள் குசுகுசுவென்று பேசிக்கொண்டிருந்தோம். விசாரணைக்கான அடுத்த தேதி அறிவிக்கப்பட்டது. நாங்கள் இப்போதைக்குப் போகலாம் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. மாண்ட்டோ, ஷாஹித் மற்றும் நான் ஒரு டோங்காவில் ஏறி கடைவீதிகளில் சுற்றிக் கொண்டிருந்தோம். கஷ்மீரி ஷால்கள் மற்றும் காலணிகளை வாங்கினோம்.

இரண்டாவது விசாரணை நவம்பர் 1946க்கு உத்தரவானது. ஷாஹித் அஹ்மத் தெஹ்லாவி மற்றும் என்னுடைய கதையை நகலெடுத்த காலிகிராஃபர் ஆகிய இருவரும் டெல்லியில் என்னுடன் சேர்ந்து கொண்டார்கள். நாங்கள் மூவரும் ரயில் வண்டியில் லாஹூர் கிளம்பினோம். அந்தக் கதையை நகல் எடுத்த காலிகிராஃபரைப் பார்த்தால் எனக்குப் பரிதாபமாக இருந்தது. ஒரு தவறும் செய்யாமலே அவன் பாவம் இந்த வழக்கில் இழுக்கப்பட்டிருக்கிறார். அவர் மிகவும் அமைதியானவனாக இருந்தார். எந்த வகையிலும் யாருக்கும் தீங்கு இழைக்க நினைக்காத ஜீவன். எப்போதும் குழப்பங்கள் நிறைந்த ஒரு முகத்தைப் பொருத்திக் கொண்டு வேலையைக் கவனித்துக் கொண்டு எளிமையாக வாழ்ந்து வருகின்றவன். அவரைப் பார்க்கும்போதெல்லாம் எனக்குக் குற்ற உணர்ச்சி அதிகரிக்கும். என்னுடைய சர்ச்சைக்குரிய கதையை நகல் எடுத்த ஒரே காரணத்துக்காக அவருக்கு இத்தனை சிரமமும் ஏற்பட்டிருக்கிறது. அவரைக் கேட்டேன். “நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? இந்த வழக்கில் நாம் வெற்றி பெறுவோமா?

என்னால் ஒன்றும் சொல்ல முடியாது. நான் உங்களின் அந்தக் கதையைப் படிக்கவில்லை”.

“ஆனால் நீங்கள் தானே அந்தக் கதையை நகல் எடுத்தீர்கள் ?”

“நான் ஒவ்வொரு வார்த்தையையும் தனித்தனியாக மட்டுமே பார்ப்பேன். அவற்றின் அர்த்தங்களின் மீது எப்போதும் கவனம் செலுத்தியது கிடையாது”.

“விநோதமாக இருக்கிறதே! அந்தக் கதைகள் அச்சான பிறகு கூட அவற்றைப் படிக்க மாட்டீர்களா?”

“படிப்பேன். ஆனால் என்னுடைய வேலையில் ஏதாவது தவறு இருக்கிறது என்று யாராவது சுட்டிக்காட்டினால் கண்டிப்பாகப் படிப்பேன்”

“ஒவ்வொரு வார்த்தையையும் தனித்தனியாகவா?”

“ஆமாம்”. அவன் ஒருவகையான தர்மசங்கடத்துடன் நெளிந்து பார்வையைத் தாழ்த்திக் கொண்டு பதிலளித்தார்.

அடுத்த முறை நீதிமன்றத்தில் பெரும் கூட்டம் கூடியிருந்தது. பல பேர் எங்களிடம் வந்து மன்னிப்புக் கேட்டு விடுங்கள் என்று அறிவுறுத்திச் சென்றார்கள். எங்கள் சார்பில் அபராதத்தைக் கட்டவும் பலர் தயார் நிலையில் வந்திருந்தார்கள். நீதிமன்றத்தில் பரபரப்பு சற்று மந்தமாகி இருந்தது. லிஹாஃப் கதையில் ஆபாசமான வார்த்தைகள் இருக்கின்றன என்று நிரூபிப்பதற்காக அழைக்கப்பட்டிருந்த சாட்சியங்களை என்னுடைய வழக்கறிஞர்கள் வெகுவாகக் குழப்பி இருந்தனர். அவர்களால் என்னுடைய கதையின் எந்த வார்த்தையின் மீதும் விரல் வைத்து ஆபாசமாக இருக்கிறது என்று நிரூபிக்க முடியவில்லை. நீண்ட நேரத்துக்குப் பிறகு சாட்சியங்களில் ஒருவன் சொன்னான், “இந்த ‘கட்டுண்ட காதலர்கள்’ என்ற சொற்றொடர் ஆபாசமாக உள்ளது” என்றான்.

எந்த வார்த்தை ஆபாசம்? ‘கட்டுண்ட’ என்பதா அல்லது ‘காதலர்கள்’ என்பதா? எது ஆபாசமாக இருக்கிறது?

“காதலன்’ என்று தயங்கியவாறு சொன்னான் அந்தச் சாட்சி.

“கனம் கோர்ட்டார் அவர்களே! ‘காதலன்’ என்ற வார்த்தை மிகப்பெரிய கவிஞர்களாலும் மிகவும் தாராளமாக உபயோகப்படுத்தப்பட்ட வார்த்தை.

நீதிபதி அவருடைய இருக்கைக்குப் பின்புறமாக உள்ள அவருடைய தனியறைக்கு என்னைக் கூப்பிட்டார். மிகவும் சகஜமான முறையில் சொன்னார், “உங்கள் எழுத்துக்கள் அத்தனையும் படித்து இருக்கிறேன். லிஹாஃப் உட்பட அத்தனை கதைகளையும் படித்து இருக்கிறேன். அவற்றில் அத்தனை ஆபாசம் கிடையாது. ஆனால் இந்த மாண்ட்டோவின் எழுத்துக்கள் எல்லாவற்றிலும் ஆபாசம் விரவி கிடக்கிறது”

“இந்த உலகமும் ஆபாசங்களால் நிறைந்து வழிகிறதே” என்று மிகவும் பலவீனமான குரலில் பதிலளித்தேன்.

“அதனைக் கிளறுவது மிகவும் அவசியமா?”

“அவற்றைக் கிளறினால் அவை அனைவரின் பார்வைக்கும் வருகிறது. அவற்றைச் சுத்தப்படுத்த வேண்டும் என்ற எண்ணம் மக்களிடையே தோன்றுகிறது”.

அதைக் கேட்ட நீதிபதி உரக்கச் சிரித்தார்.

அந்த வழக்குத் தொடரப்பட்ட போது நான் எந்த வகையிலும் கவலைப்படவில்லை. இப்போது இந்த வழக்கில் வெற்றியடைந்தபோதும் அது எனக்கு மகிழ்ச்சியை அளிக்கவில்லை.

நான் இன்னுமே ‘லிஹாஃப்’ என்ற கதையை எழுதியவளாகத்தான் அடையாளம் காணப்படுகிறேன். அந்தக் கதை எனக்கு வாழ்க்கையை வெறுக்கும் அளவுக்குப் பிராபல்யத்தை ஏற்படுத்திக் கொடுத்தது. என்னை அடிப்பதற்கான குண்டாந்தடியாகப் பல நேரங்களில் அந்தக் கதை பலருக்கு உதவியிருக்கிறது. அந்தக் கதைக்குப் பிறகு நான் எழுதிய அத்தனையும் அதன் பாரத்தில் நசுங்கிக் கூழாகிப் போனது.

(ஆங்கிலம் வழி தமிழில் – ராகவன் தம்பி – திண்ணை இணைய இதழ் )

நீதிமன்ற விசாரணை முழுமையாகத் திண்ணையில் வெளியாகியுள்ளது. இதில் விவரிக்கப்படும் விஷயங்களை அப்படியே திரைப்படத்தில் காட்சிப்படுத்தியிருக்கிறார்கள். வாசிக்கும் போது நாம் அடையும் நெருக்கத்தைப் படம் உருவாக்கவில்லை. இஸ்மத் என்னும் கலகக்காரியின் ஆளுமை படத்தில் சரியாக வெளிப்படவில்லை. நீதிமன்ற காட்சிகள் சலிப்பூட்டும் வகையில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

லிஹாஃப் சிறுகதை வயதான நவாப்பின் இளம் மனைவிக்கும் அவளது பணிப்பெண்ணிற்குமான பாலுறவு வேட்கையைச் சித்தரிக்கிறது. , நவாப் அலங்காரமான பொருட்களைச் சொந்தமாக்கிக் கொள்வதில் விருப்பம் கொண்டவர். அப்படித் தான் பேகம்ஜானையும் திருமணம் செய்து கொள்கிறார். இதனால் அவளது குடும்பத்திற்கு நல்லது நடக்கிறது. அவள் தங்ககூண்டில் அடைக்கபட்ட பறவையைப் போல உணர்கிறாள்.

படத்தின் ஒரு காட்சியில் அவள் வீட்டிலிருந்து வெளியே செல்ல விரும்பும் போது வெளிக்காற்று எல்லோருக்கும் ஒத்துக்கொள்வதில்லை என்று நவாப் திருப்பி அனுப்பி வைக்கிறார். அவருக்குப் புறா பந்தயம், சேவற்சண்டை இதில் தான் ஆர்வம். அவளோ வீட்டிலுள்ள புத்தகங்களில் காதல்கதைகளையும், காதல்கவிதைகளையும் தேடிப் படிக்கிறாள். கற்பனை சுகத்தில் வாழுகிறாள். இதனால் அவளுக்கு உடல்நலமற்றுப் போகிறது. அவளுக்கு மசாஜ் செய்வதற்காக ஒரு பணிப்பெண் நியமிக்கப்படுகிறாள். அவளுடன் பேகம் ஜானுக்கு நெருக்கமான உறவு ஏற்படுகிறது.

படத்தில் நவாபின் வாழ்க்கை மற்றும் பேகம் ஜானின் தனிமை அழகாகக் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. நவாப் அவளை ஒரு அலங்கார பதுமையாக மட்டுமே நினைக்கிறார். அவள் ஒரு முறை அவரது முகத்திற்கு எதிராகவே தனது எதிர்ப்பை காட்டுகிறாள். அவருக்கு அவளது விரகமும் தவிப்பும் புரிந்தபோதும் அதைப் பொருட்படுத்துவதில்லை.

கதை ரப்போ என்ற சிறுமியின் கண்ணோட்டத்தில் சொல்லப்படுகிறது. அவள் ஒரு அறியாச்சிறுமி. அவளுக்கும் பேகம்ஜானுக்குமான நெருக்கத்தை இஸ்மத் மிக நுட்பமாக வெளிப்படுத்தியிருக்கிறார். சுக்தாய் அலிகாரில் தான் கேள்விப்பட்ட ஒரு பெண்ணை அடிப்படையாக வைத்துப் பேகம் கதாபாத்திரத்தை உருவாக்கினார் என்கிறார்கள். பின்னாளில் அந்தப் பெண்ணை நேரில் சந்தித்து பேசிய நிகழ்வையும் இஸ்மத் நினைவு கூறுகிறார்.

லிஹாஃப் சிறுகதை இரண்டு முறை படமாக்கப்பட்டிருக்கிறது. இது மூன்றாவது முறையாக இஸ்மத் வாழ்க்கையோடு இணைந்து உருவாக்கப்பட்டுள்ளது.

இஸ்மத்தின் வாழ்க்கையை இன்னும் விரிவாக, கலாபூர்வமாகப் படமாக்கியிருந்தால் முக்கியமான படமாக இருந்திருக்கும். வாழ்க்கை வரலாற்றுத் திரைப்படங்களுக்கு இன்று உருவாகியுள்ள வணிகவெற்றி இந்தப் படம் உருவாக காரணமாக இருந்திருக்கிறது. அதையும் இப்படம் அடையவில்லை என்பதே நிஜம்.

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on November 10, 2021 01:00
No comments have been added yet.


S. Ramakrishnan's Blog

S. Ramakrishnan
S. Ramakrishnan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow S. Ramakrishnan's blog with rss.