தாகூரின் குரலில்
இந்தியாவின் தேசிய கீதத்தை மகாகவி தாகூர் பாடும் காணொளி ஒன்றைக் கண்டேன். அவர் எழுதிய தேசியகீதத்தை அவரே பாடிக் கேட்பது அபூர்வமான தருணம். தாகூர் மெய்மறந்து பாடும் அழகும் ஜெயகே என உணர்ச்சிப்பூர்வமாகச் சொல்வதும் மனதைத் தொடுவதாக இருந்தது.

நான் பள்ளியில் படித்த காலத்தில் மாணவர்களே ஜன கண மன சேர்ந்து பாட வேண்டும். வெறுமனே உதடு அசைத்தால் ஆசிரியர் கண்டுபிடித்துவிடுவார். ஆகவே மாணவர்கள் தேசியகீதத்தை மனப்பாடம் செய்து வைத்திருப்பார்கள்.
பள்ளி ஆண்டுவிழாவின் போது மட்டும் மாணவிகள் மேடையில் நின்று தேசியகீதம் பாடுவார்கள். அவர்கள் பாடும் போது உணர்ச்சிவேகம் கூடுதலாக வெளிப்படுவதை உணர்ந்திருக்கிறேன்.
இன்று பெரும்பான்மை பள்ளிகளில் ஒலிப்பதிவு செய்து வைக்கபட்ட தேசியகீதமே ஒலிக்கிறது. மாணவர்கள் வெறுமனே நின்று கொண்டிருக்கிறார்கள். தனியே ஜனகணமன பாடச்சொன்னால் பலருக்கும் பாடலின் வரிகள் தெரியாது. பாடலின் பொருளோ, பாடல் தேசியகீதமாக தேர்வு செய்யப்பட்ட வரலாறோ எதுவும் தெரியாது.
தாகூர் இதை எப்படிப் பாடியிருப்பார் என்று யோசித்திருக்கிறேன். இன்று இந்தக் காணொளி மூலம் நெடுநாளைய ஆசை நிறைவேறியிருக்கிறது.
S. Ramakrishnan's Blog
- S. Ramakrishnan's profile
- 657 followers
