S. Ramakrishnan's Blog, page 116
September 17, 2021
சோபியாவின் இரண்டு கதைகள்
“The Kreutzer Sonata” என்ற டால்ஸ்டாயின் புகழ்பெற்ற கதைக்கு எதிராக டால்ஸ்டாயின் மனைவி சோபியா ஒரு கதையை எழுதியிருக்கிறார். Whose Fault எனப்படும் அக்கதை போஸ்னிஷேவ்வால் சந்தேகத்தின் பேரில் கொல்லப்பட்ட மனைவியின் கண்ணோட்டத்தில் எழுதப்பட்டிருக்கிறது.

டால்ஸ்டாயின் கதையில் வரும் பெண் தனது சாயலில் உருவாக்கப்பட்டிருக்கிறாள் என்று கோபம் கொண்ட சோபியா இந்தக் கதையை எழுதியிருக்கிறார். உண்மையில் அப்படிச் செர்ஜி தனியேவ்,என்ற இசைக்கலைஞருடன் சோபியாவிற்கு நெருக்கம் இருந்தது அதை ரகசியக்காதலாக டால்ஸ்டாய் கருதியே இக்கதையை எழுதியிருக்கக் கூடும்.என்கிறார்கள். .
செர்ஜி தனியேவ் 1895– 97 யஸ்னயா போலியானாவில் இசை கற்பிக்க நியமிக்கப்பட்டிருந்தார். அந்த நாட்களில் சிறந்த இசைக்கலைஞரான சோபியாவுடன் ஆழ்ந்த நட்பு கொண்டிருந்தார்.
.சோபியா தனது நாட்குறிப்பில் இந்தக் கதை குறித்து எழுதியிருக்கிறார். வாசகர்கள் எல்லோரும் இந்தக் கதையை எங்களின் சொந்த வாழ்க்கையோடு இணைத்துப் படிக்கிறார்கள். இது தவறான எண்ணத்தை உருவாக்கக் கூடும். உலகத்தின் பார்வையில் என்னை அவமானப்படுத்துவது போலவே இக்கதை எழுதப்பட்டிருக்கிறது
சோபியா “Song Without Words” “Whose Fault?” என இரண்டு கதைகளை எழுதியிருக்கிறார். இரண்டும் தற்போது ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்யப்பட்டு வாசிக்கக் கிடைக்கிறது.

டால்ஸ்டாயோடு ஒப்பிட இந்தக் கதை வலுவற்றதாக உள்ளது. தனது தரப்பு நியாயத்தை முதன்மைப்படுத்தவே அவர் இக்கதையை எழுதியிருக்கிறார். அந்தக் கோபத்தை எழுத்தில் காணமுடிகிறது.
கணவரின் கதைக்கு எதிராக மனைவி ஒரு கதையை எழுதியிருப்பது தான் இதன் சுவாரஸ்யம். டால்ஸ்டாய் தனது மனைவி கதை எழுதியிருப்பது பற்றியோ, தனக்கு எதிராக எழுதப்பட்டது குறித்தோ வெளிப்படையாக எதையும் தெரிவிக்கவில்லை. ஆனால் அந்த மோதல் அவர்கள் உறவில் இடைவெளியை உருவாக்கியது உண்மை
டால்ஸ்டாயின் மகன் லெவ்வும் The Kreutzer Sonata” கதைக்கு எதிராக “Chopin’s Prelude,” என்றொரு கதையை எழுதியிருக்கிறான். தனது மகனின் கதையை வாசித்த சோபியா அவனுக்குத் திறமை போதவில்லை என்றே குறிப்பேட்டில் எழுதியிருக்கிறார்.
அலெக்ஸாண்டரா போபோஃப், தற்போது சோபியாவின் வாழ்க்கை வரலாற்றை விரிவாக எழுதியிருக்கிறார். இதில் சோபியாவிற்கும் டால்ஸ்டாயிற்குமான உறவின் விரிசலும் கசப்பான அனுபவங்களும் வெளிப்படையாக விவரிக்கப்பட்டிருக்கிறது,
இதில் வேடிக்கை என்னவென்றால் The Kreutzer Sonata” கதையைத் தனது தொகுப்பு எதிலும் டால்ஸ்டாய் சேர்த்து வெளியிடக்கூடாது என்று அரசாங்கம் தடுத்த போது அதற்கு எதிராக மன்னரை நேரில் சந்தித்து விண்ணப்பம் கொடுத்து டால்ஸ்டாய் தொகுப்பில் அந்தக் கதையை இணைக்கச் செய்தவர் சோபியா. இந்த முரண் தான் விசேசமானது.
டால்ஸ்டாயின் சர்ச்சைக்குரிய இக்கதை ஒரு ஒப்புதல் வாக்குமூலம் போலவே எழுதப்பட்டிருக்கிறது. போஸ்னிஷேவ் என்ற பிரபு தன் இளம்மனைவியின் ரகசியக்காதலைப் பற்றி அறிந்து அவளைக் கொலை செய்துவிடுவதே கதையின் மையம். இசைக்கலைஞரான இளைஞனுடன் தன் மனைவிக்கு ஏற்பட்ட தொடர்பை அவரால் ஏற்கமுடியவில்லை, அந்தக் கோபமே கொலைக்குக் காரணமாக அமைகிறது.

இந்த நிகழ்வை சோபியா தன்னைப் பற்றிய விமர்சனமாக எடுத்துக் கொண்டார். திருமணத்திற்கு முன்பு டால்ஸ்டாயிற்கு இருந்த காதலிகள் பற்றிச் சோபியா அறிவார். திருமணத்திற்குப் பிறகும் அவரது ரகசிய காதல் தொடரவே செய்தது. அதைக் குறித்து டால்ஸ்டாய் ஒரு குற்றவுணர்வும் கொள்ளவில்லை. ஆனால் சோபியாவிற்கும் தனியேவிற்கும் இடையில் ஏற்பட்ட நட்பை அவர் வெறுத்திருக்கிறார். அதன் பிரதிபலிப்பை இந்தக் கதையில் காணமுடிகிறது
ரஷ்யத் தணிக்கை துறையினரால் இந்தக் கதை தடைசெய்யப்பட்டதோடு ஆங்கிலத்தில் வெளியான போது தபால் துறை இதை ஆபாசமான கதை என்று விநியோகம் செய்ய மறுத்தது இந்தக் காரணங்களால் கதை சிறுவெளியீடாகக் கள்ளச்சந்தையில் மிகப் பரபரப்பாக விற்பனை செய்யப்பட்டது. புத்தகக் கடைகளில் இதை விற்பனை செய்யவும் தடைவிதிக்கப்பட்டது. இந்தக் கதை ஒரு குப்பை என்று எமிலிஜோலா கடுமையான விமர்சனம் செய்தார். அத்தோடு டால்ஸ்டாய் ஒரு பழைய காலத்துறவி போலப் பேசுகிறார் என்று நேரடியாகக் கண்டனம் செய்தார்.
சோபியா எழுதிய கதை அவரது வாழ்நாளில் வெளியாகவில்லை. நூறு ஆண்டுகளுக்குப் பிறகே அது வெளியிடப்பட்டது. 1994ல் இந்தக் கதை முதன்முறையாக ரஷ்யாவில் வெளியானது. அப்போது பெரிய கவனத்தைப் பெறவில்லை. 2010ல் மீண்டும் அது வெளியிடப்பட்டபோது அதற்குச் சிறப்புக் கவனம் கிடைத்தது.

சோபியாவின் கதை எனக்கு மைத்ரேயி தேவி எழுதிய.கொல்லப்படுவதில்லை. என்ற வங்க நாவலை நினைவுபடுத்தியது. தன்னைப் பற்றிப் பொய்யாகப் பிரெஞ்சில் எழுதப்பட்ட காதல்கதைக்கு மறுகதையாக இந்த நாவலை மைரேயி தேவி எழுதியிருப்பார்.
தான் படித்த செய்தி ஒன்றை நினைவில் கொண்டு தான் இந்தக் கதையை எழுதினேன் என்று டால்ஸ்டாய் தனது நாட்குறிப்பில் எழுதியிருக்கிறார். ஆனால் சோபியாவிற்கு அது தனது கதையின் மறுவடிவமாகத் தோன்றியிருக்கிறது.
தன்னைப் பற்றிய தவறான பிம்பத்தை உருவாக்கிய அந்தக் கதைக்குச் சோபியா தான் பிழைதிருத்தம் செய்தார் என்பது வேதனையான விஷயம். அன்றைய டயரிக்குறிப்பில் கதையைப் பிழை திருத்தம் செய்யும் போது மனதில் ஆழமான வேதனை உருவானது என்று எழுதியிருக்கிறார். அந்த வலியை டால்ஸ்டாய் கண்டுகொள்ளவேயில்லை.
“:
September 16, 2021
பிகாசோவின் சாகசங்கள்
The Adventures of Picasso என்ற ஸ்வீடிஷ் சர்ரியலிஸ்ட் திரைப்படத்தைப் பார்த்தேன். டேஜ் டேனியல்சன் இயக்கியது . இந்தப் படத்திற்கு a lunatic comedy என்று துணை தலைப்புக் கொடுத்திருக்கிறார்கள்.

பிகாசோவின் வாழ்க்கை வரலாற்றை நகைச்சுவையான நிகழ்வுகளாக உருவாக்கியிருக்கிறார்கள். கனவுத்தன்மை மிக்கக் காட்சிகளே படத்தின் தனிச்சிறப்பு.
ஓவியரின் வாழ்க்கையைப் பற்றிய படம் என்பதால் காட்சிப்படிமங்களை சிறப்பாக உருவாக்கியிருக்கிறார்கள். ஸ்பெயினில் பிகாசோவின் பிறப்பிலிருந்து படம் துவங்குகிறது. அவரது தந்தை மகன் பிறந்துள்ள சந்தோஷச்செய்தியைக் கூற வருவதும் அதைக் குடும்பம் சுருட்டு பிடித்தபடியே எதிர்கொள்வதும் வேடிக்கையாக உள்ளது.

டோலோரஸ் என்ற இளம்பெண்ணைக் காப்பாற்றப் போய்ப் பிகாசோ செய்யும் முயற்சிகள் சார்லி சாப்ளினை நினைவுபடுத்துகின்றன.
பிகாசோவின் தந்தை ஒரு ஓவியர். ஆகவே மகனை மாட்ரிட்டிலுள்ள ஒவியப்பள்ளியில் சேர்க்கிறார். அங்கே பிகாசோ நிர்வாண ஓவியங்கள் வரையப் பழகுகிறார். அவரது ஒவியத்திறமையைக் கண்டு பாராட்டும் பரிசுகளும் கிடைக்கின்றன. இந்த வெற்றியை தொடர்ந்து மகனை பாரீஸிற்கு அனுப்பி வைக்கிறார் தந்தை
ரயிலில் பாப்லோ புறப்படும் காட்சியில் ரயில் உருவாக்கப்பட்டுள்ள விதம் அபாரம். இப்படி ஒரு கற்பனையை நாம் எதிர்பார்க்க முடியாது.
தனது அம்மா டோனா மரியாவின் உருவப்படத்துடன் வீடு திரும்பும் பாப்லோவை தந்தை உணர்ச்சிவசப்பட்டுப் பாராட்டுகிறார். திடீரென அவர் இறந்துவிடவே இறுதிச் சடங்குகள் நடக்கின்றன. ஆனால் அவர் உண்மையில் இறக்கவில்லை. சவப்பெட்டியிலிருந்து உயிர்பிழைத்து எழுகிறார். அபத்தநாடகம் போலவே முழுமையான காட்சியும் நடந்தேறுகிறது

பாப்லோ பாரிஸுக்கு செல்கிறார், அங்கே மொழி புரியவில்லை. மோசமான ஒரு அறையை வாடகைக்கு எடுத்துக் கொண்டு ஓவியம் வரைகிறார். அங்கீகாரம் கிடைக்கவில்லை. வருவாயும் இல்லை. ஒரு நாள ஆப்பிள் ஒன்றை அவர் ஓவியமாக வரைவதும் தற்செயலாக அங்கே வரும் அவரது தந்தை ஆப்பிளைக் கடித்துவிடவே அந்த ஓவியத்தை க்யூபிச முறையில் பிகாசோ வரைவதும் சரியான கிண்டல்
பின்னொரு நாள் பாப்லோவின் தந்தை அவரது ஓவியம் ஒன்றைக் கண்காட்சிக்குக் கொண்டு சென்று காட்சிப்படுத்துகிறார். அங்கே வரும் ஜெர்ட்ரூட் ஸ்டீன் மற்றும் ஆலிஸ் பி. டோக்லஸ் அதை ரசித்து விலைக்கு வாங்கிக் கொள்கிறார்கள். அவர்கள் இருவரையும் கடுமையாக கேலி செய்திருக்கிறார்கள்.
அதன்பிறகு பிகாசோ பாரிஸ் கலை உலகின் நட்சத்திரமாக உருவாகிறார்.. அன்றைய புகழ்பெற்ற ஓவியர்களுடன் நட்பு கொள்கிறார். கவிஞர் அப்போலினேர் மற்றும் ரூசோ அவருக்கு நெருக்கமான நண்பர்களாகிறார்கள்
ரூசோவிற்காக ஒரு சிறப்பு விருந்து ஒன்றை ஏற்பாடு செய்கிறார் பிகாசோ அதில் விநோதமான தோற்றங்களில் விருந்தினர்கள் வருகை தருகிறார்கள். சர்ரியலிசக் காட்சிகளில் இதற்கு நிகராகக் கண்டதேயில்லை..

முதல் உலகப்போர் ஆரம்பமாகிறது. இதில் பிகாசோ பாதிக்கப்படுகிறார். 1900ம் ஆண்டு பிறக்கும் போது வறுமையில் தனிமையில் பிகாசோ தன் அறைக்குள் அடைபட்டு நிற்கும் காட்சி படத்தில் இடம்பெறுகிறது. ஒரு நூற்றாண்டினை புரட்டிப் போட்ட கலைஞன் அந்த புத்தாண்டு துவங்கும் போது அடையாளமற்றவனாகவே இருக்கிறான்.
1918 ஆம் ஆண்டில், போர் முடிந்ததும், பாப்லோ மீண்டும் தனது தந்தையைச் சந்திக்கிறார், அவர் தலைமுடியை மீண்டும் வளர்க்கும் ஒரு புதிய ஷாம்பூவைக் கண்டுபிடித்து விற்பனை செய்து வருகிறார.. இதைப் பயன்படுத்தி பாப்லோவின் தலை வழுக்கையாகிறது. இதுவே பின்னாளையே அவரது புகழ்பெற்ற தோற்றமாக மாறுகிறது.
பாலே நடனக்குழுவிற்கான ஆடை மற்றும் அரங்க அமைக்கும் வாய்ப்பு பிகாசோவிற்குக் கிடைக்கிறது. இதற்கான லண்டன் செல்கிறார். அபத்த நிகழ்வுகளைக் கொண்ட அந்தப் பாலே வெற்றிபெறவில்லை. பிகாசோ மீண்டும் பாரீஸுக்குத் திரும்புகிறார். பின்பு அங்கிருந்து அமெரிக்கா புறப்படுகிறார்
அமெரிக்காவில் கலைப் பொருட்களுக்குத் தடை விதிக்கப்பட்ட காலம். இதனால் கள்ளச்சந்தையில் கலைப்பொருட்கள் விற்பனையாகின்றன. பிகாசோ ரகசியமாக ஒளிந்து வாழுகிறார். ஒருநாள் ஒவிய விற்பனையின் போது காவல்துறையால் கைது செய்யப்பட்டு மரணதண்டனை விதிக்கப்படுகிறார். அங்கிருந்தும் தப்பி ஐரோப்பா வருகிறார்
பிகாசோ எப்படி ஒவிய உலகின் அடையாள பிம்பமாக மாறினார் என்பதை வேடிக்கையும் விசித்திரமுமாக சொல்கிறார்கள்.
பிகாசோ மட்டுமின்றி அவரது சமகால ஓவியர்கள். விமர்சகர்கள். எழுத்தாளர்கள். அன்றைய அரசியல் நிகழ்வுகள் எனச் சகலத்தையும் படத்தில் கேலி செய்திருக்கிறார்கள். ரசிக்கும்படியான கேலியது. ஹிட்லரும் சர்ச்சிலும் ஒன்றாகப் படம் வரையும் காட்சி சிறப்பான கார்டூன் போலிருக்கிறது

கலை உலக செயல்பாடுகள் எல்லாவற்றையும் முடிந்தவரை அபத்தமான நிகழ்வாக ஆக்குவதே படத்தின் முக்கிய நோக்கமாக இருந்திருக்கிறது. . பிகாசோவின் விருந்திற்குப் பெரிய சிவப்பு பலூன் ஒன்றுக்குள் ஒளிந்து பிரான்ஸ் நாட்டு ஜனாதிபதி வருவது சிறந்த உதாரணம். Gösta Ekman பிகாசோவாகச் சிறப்பாக நடித்திருக்கிறார்.
திரைப்படத்தில் பத்து மொழிகள் பேசப்படுகிறது. ஸ்பானிஷ், பிரஞ்சு, ஸ்வீடிஷ், ஜெர்மன், பின்னிஷ், இத்தாலியன், ஆங்கிலம், ரஷ்யன், நார்வே மற்றும் லத்தீன் எனப் பிகாசோவின் பயணத்திற்கும் சந்திக்கும் மனிதர்களுக்கும் ஏற்ப மொழி மாற்றம் அடைகிறது. இதையும் பகடியாகவே உருவாக்கியிருக்கிறார்கள்.
•••
September 15, 2021
பார்வையாளர்கள் இல்லாத நாடகம்
லாக்டவுன் காரணமாக லண்டனின் நாடக அரங்குகள் செயல்படாத சென்ற ஆண்டில் பார்வையாளர்கள் இல்லாமல் நடிகர்கள் ஒன்று சேர்ந்து நாடகம் நிகழ்த்தியிருக்கிறார்கள். அப்படி நிகழ்த்தப்பட்ட ஆன்டன் செகாவின் Uncle Vanya நாடகத்தை முழுமையாக ஒளிப்பதிவு செய்து வெளியிட்டிருக்கிறார்கள். அந்தப் படத்தைப் பார்த்தேன்

இந்த நாடகம் இரண்டு முறை திரைப்படமாக வெளிவந்துள்ளது. திரைப்படத்தை விடவும் மேடைநாடகத்தை அப்படியே பதிவு செய்துள்ளது சிறப்பாக இருக்கிறது.
பார்வையாளர்கள் இல்லாமல் ஒளிபரப்பாகும் கிரிக்கெட் மேட்ச் போல இதுவும் நடந்தேறியிருக்கிறது.

தேர்ந்த நடிகர்கள். நூற்றுக்கும் மேற்பட்ட முறை இந்த நாடகத்தை நிகழ்த்தியிருக்கிறார்கள். ஆகவே அவர்களுக்கு அந்த நாடகம் சொந்த வாழ்க்கையின் பகுதி போன்றது.
பேராசிரியர் செரப்ரியாகோவின் எஸ்டேட்டில் ஒரு இலையுதிர் பிற்பகல் பிற்பகலில் துவங்குகிறது. அந்தப் பண்ணைக்குத் தனது இளம் மனைவியுடன் வருகை தருகிறார் செரெப்ரியாகோவ். அந்த எஸ்டேட்டில் டாக்டர் ஆஸ்ட்ரோவ் பேராசிரியரின் கீல்வாதத்திற்குச் சிகிச்சையளிக்கிறார். அவரை குடும்பத்தில் ஒருவராகவே நடத்துகிறார்கள். .
செரப்ரியாகோவின் முதல்மனைவி இறந்து போய்விடவே அவர் இளம்பெண்ணான யெலினாவை இரண்டாம் திருமணம் செய்து கொண்டிருக்கிறார்.
பேராசிரியரின் மகள் சோபியா எனப்படும் சோன்யா இளம்பெண். அவளுக்கு டாக்டர ஆஸ்ட்ரோவ் மீது காதல். அவளது காதலை உணர்ந்த போதும் ஆஸ்ட்ரோவ் அதை ஏற்கவில்லை. அவருக்கு யெலினா மீது ஆசை.

அவளுடன் ஊரை விட்டு ஒடிவிடுவதற்கு ஆசைப்படுகிறார். அவளோ வசதியான இந்த வாழ்க்கையை விட்டுப் போக விருப்பமின்றி டாக்டரின் காதலை ஏற்கத் தயங்குகிறாள். யெலினாவின் புத்திசாலித்தனம், அழகு இரண்டும் அவளது சமரசங்களினால் ஒடுக்கப்பட்டிருக்கிறது.
இந்தச் சூழலில் அந்த வீட்டின் காப்பாளராக உள்ள வான்யா மாமாவிற்குத் தன் வாழ்நாளை வீணடித்துவிட்டோம் என்ற எண்ணம் அதிகமாகிறது. அவருக்கு இப்போது வயது 47. கடந்த இருபத்தைந்து ஆண்டுகளாக அந்தப் பண்ணையைப் பராமரித்து வருகிறார். இதனால் பேராசிரியர் நகரில் சொகுசாகச் சகல சௌகரியங்களையும் அனுபவித்துக் கொண்டு வாழ முடிகிறது..
வான்யா மாமா திருமணம் செய்து கொள்ளாதவர். பெண்கள் மீது தனக்கு நாட்டமில்லை என்கிறார். அது ஒரு நடிப்பு என்று ஆஸ்ட்ரோவ் குத்திக்காட்டுகிறான். அது உண்மையே. மாமாவிற்கும் யெலினா மீது ரகசியமாகக் காதல் இருக்கிறது.
பேராசிரியரின் பண்ணையைப் பாதுகாப்பதில் தனது வாழ்க்கை வீணாகிவிட்டது. தனக்கு நியாயமாகக் கிடைக்க வேண்டிய மரியாதையும் பணமும் கிடைக்கவில்லை என்று வான்யா மாமா புலம்புகிறார்.

சோபியாவும் வான்யா மாமாவும் சேர்ந்து தான் எஸ்டேட்டை நிர்வாகம் செய்கிறார்கள். . பல ஆண்டுகளாக,, எஸ்டேட் வருமானத்தைப் பேராசிரியருக்கு முறையாக அனுப்பி வந்தார் மாமா வான்யா. அதற்கு அவருக்குச் சிறிய சம்பளம் மட்டுமே தரப்பட்டது
நாடகத்தின் முடிவில் பேராசிரியர் அந்த எஸ்டேட்டை விற்க விரும்புவதாகச் சொல்லும் போது வான்யா மாமா கொந்தளிக்கிறார்.
வான்யா மாமா ஒரு குறியீடு. இவரைப் போன்ற மனிதர்கள் எல்லாக் குடும்பங்களிலும் இருந்தார்கள். அவர்கள் எப்போதும் தன் வாழ்க்கை வீணாகிவிட்டதாகப் புலம்பிக் கொண்டும். தங்கள் தியாகத்தைப் பற்றித் தானே பெருமை பேசிக் கொண்டும் இருந்தார்கள். அவர்களின் பிரதிநிதியாகவே வான்யா மாமா உருவாக்கப்பட்டிருக்கிறார்.
நாடகத்தின் ஒரு அங்கத்தில் இந்தச் சலிப்பான வாழ்க்கை போதும் என டாக்டரும் ஊரைவிட்டு வெளியேறிப் போக முற்படுகிறார். அவரது நல்ல மனைவியாகத் தான் இருப்பேன் என்று சோன்யா மன்றாடுகிறாள். டாக்டர் குடிக்கிறார். அவருக்குப் பணிவிடைகள் செய்கிறாள். அவரோ எப்படியாவது யெலினாவை அடைந்துவிட வேண்டும் என்று துடிக்கிறார்
செகாவின் சிறுகதைகளைப் போலவே போலித்தனமும் வீண் பெருமையும் பேசும் கதாபாத்திரங்கள். திருமணத்திற்குப் பிறகான காதல். வீழ்ச்சியின் சித்திரங்களை இந்த நாடகத்திலும் காணமுடிகிறது.
யாரும் படிக்காத ஆய்வுக்கட்டுரைகளை எழுதும் ஓய்வுபெற்ற பேராசிரியர் அலெக்சாண்டர் செரெப்ரியாகோவ் தன்னை அறிவாளியாக நினைக்கிறார். ஆனால் அவர் ஒரு முட்டாள் என்கிறார் வான்யா மாமா.

எல்லோரும் தங்கள் சந்தர்ப்பத்திற்காகக் காத்து கிடக்கிறார்கள். அனைவரும் சுயநலமானவர்களே. அவரவர் வட்டத்திற்குள் இருந்தபடியே உலகைக் காணுகிறார்கள். பிறரை மதிப்பிடுகிறார்கள். அந்த வீட்டிற்குள் ஒருவருக்குத் தெரியாமல் மற்றவர் ரகசியமாக நடந்து கொள்கிறார்கள். வம்பு பேசுகிறார்கள்.
நாடகத்தின் வான்யா மாமாவாக நடித்தவர் மிகச்சிறப்பாக நடித்திருந்தார். நாடகம் முடிந்தவுடன் பார்வையாளர்கள் இல்லாத போதும் நடிகர்கள் மேடையில் வந்து நின்று காலியான அரங்கினை வணங்கினார்கள். பின்பு அவர்கள் ஒப்பனை அறைக்குச் சென்று தனது ஒப்பனையைக் கலைத்துவிட்டு அவரவர் வீடு திரும்பக் காரை நோக்கிப் போகிறார்கள்
ஆளற்ற சாலை. அடைத்துச் சாத்தப்பட்ட கடைகள். லாக்டவுன் காலத்தின் இறுக்கமான சூழல். ஆனால் இதை எல்லாம் மறந்து அவர்கள் நூறு ஆண்டுகளுக்கு முன்பாக உள்ள ரஷ்ய வாழ்க்கையினை அனுபவித்து வீடு திரும்பினார்கள்
நடிகர்களின் வருகையில் துவங்கி அவர்கள் வீடு திரும்புவது வரையான காட்சிகளைப் பதிவு செய்திருப்பது பாராட்டிற்குரியது சிறந்த அரங்க அமைப்பு. ஒளியமைப்பு. இசை என முழுமையான கலை அனுபவத்தை உருவாக்குகிறார்கள்.
செகாவ் செக்கோவ் இறப்பதற்கு ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு, இந்த நாடகம் 1899 இல் முதன்முறையாகக் கான்ஸ்டான்டின் ஸ்டானிஸ்லாவ்ஸ்கியால் நிகழ்த்தப்பட்டது. அப்போது இந்த நாடகம் வெற்றிபெறவில்லை. எஸ்டேட் வாழ்க்கையை சொல்லும் இந்த நாடகம் முதலில் மாகாண அரங்குகளில் அரங்கேற்றப்பட்டது. நாடகத்தில் இடம்பெற்ற மகிழ்ச்சியற்ற கதாபாத்திரங்களை மக்கள் விரும்பவில்லை
நாடகங்களை மேடையில் பார்ப்பதை விடவும் அதன் பிரதிகளை வாசிப்பதையே அதிகம் விரும்புகிறேன் என்கிறார் போர்ஹெஸ். நாடகப்பிரதிகளை வாசிக்கும் பழக்கம் நம்மிடையே இல்லை. ஆனால் கிரேக்க நாடகங்களையும். ஷேக்ஸ்பியரையும், மோலியரையும், டெனிசி வில்லியம்ஸ் நாடகங்களையும் வாசிக்கும் போது அவை மிகச்சிறந்த இலக்கியப்பிரதிகளாகவே இருக்கின்றன.
வாழ்க்கை தனக்கு அநீதி இழைத்துவிட்டது என நினைத்துப் புலம்பும் வான்யா மாமாவின் நிலை வேடிக்கையும் துயரமும் ஒருங்கே கொண்டது. அபத்தமான சூழ்நிலையை எதிர்கொள்ளும் போது நகைச்சுவை ஒரு தப்பித்தலாகப் பயன்படுகிறது என்கிறார் செகாவ். இந்த நாடகத்திலும் அப்படியே நடைபெறுகிறது
••
September 13, 2021
ராஜபாளையத்தில்
கடந்த வாரம் ஒரு திருமண நிகழ்விற்காக ராஜபாளையம் சென்றிருந்தேன். நண்பர் பொன்னுச்சாமி மாலையில் சிறிய சந்திப்பு ஒன்றுக்கு ஏற்பாடு செய்திருந்தார். நிறைய இளைஞர்கள். இரண்டு மணி நேரம் நடந்த சந்திப்பில் வாசிப்பு. பயணம், வரலாறு என நிறைய கேள்விகேட்டார்கள். நீண்ட நாட்களுக்குப் பிறகு மொழிபெயர்ப்பாளர் சா. தேவதாஸ் அவர்களையும் சுதந்திர சிந்தனையை சார்ந்த நரேந்திரகுமார் மற்றும் நண்பர்களைச் சந்தித்து பேசியது மகிழ்ச்சி தந்தது.

திருமண நிகழ்வு முடிந்தவுடன் ராஜபாளையத்தில் நடைபெற்று வந்த மீனாட்சி புக் ஷாப் நடத்தும் புத்தகக் கண்காட்சிக்குச் சென்றிருந்தேன். அங்கே கலை இலக்கியப் பெருமன்றத்தின் தோழர்களுடன் ஒரு தேநீர் சந்திப்பு.

திருமண நிகழ்விற்கு இடையில் இரண்டு சந்திப்புகள் இலக்கிய உரையாடல்கள் என நேரம் போனதே தெரியவில்லை. புதிதாகப் படிக்க வந்துள்ள இளைஞர்களை சந்தித்து உரையாடுவதன் வழியே அவர்கள் என்ன படிக்கிறார்கள். எதை நோக்கி ஆர்வம் கொண்டிருக்கிறார்கள் என்பதை தெரிந்து கொள்ள முடிந்தது.

ஊர் திரும்பும் முன்பாக கோவில்பட்டிக்குச் சென்று கவிஞர் தேவதச்சனைச் சந்தித்து பேசிக் கொண்டிருந்தேன். இளம்வாசகர் ரமணா வந்திருந்தார்.
புத்தகக் கண்காட்சியில் அகிலனின் வாழ்க்கை வரலாற்று நூலை வாங்கினேன். அதைக் காரில் வரும்போது படித்துக் கொண்டு வந்தேன். அகிலன் புகழ்பெற்று இருந்த நாட்களில் அவரது பெயரைப் பயன்படுத்தி ஒரு ஆள் பலரது வீடுகளுக்கும் போய் உறவாடி, பணம் பெற்று நான் தான் அகிலன் என்று ஆட்டோகிராப் போட்டுக் கொடுத்து ஏமாற்றிவந்திருக்கிறான்.

ஒரு தொழிலதிபர் வீட்டிற்கு தன் மனைவியுடன் போய் தங்கிய அந்த டூப்ளிகேட் ஆசாமி சகல சௌகரியங்களையும் மரியாதைகளையும் அனுபவித்துவிட்டு கடனாகப் பணமும் வாங்கிக் கொண்டு கிளம்பி போயிருக்கிறார்.
விஷயம் அகிலனுக்கு தெரிய வந்தவுடன் யார் இந்த மோசடிப் பேர் வழி. இவரை எப்படி தடுத்து நிறுத்துவது என்று புரியாமல் குழம்பிப் போயிருக்கிறார்.
அந்த நாட்களில் புத்தகங்களின் அட்டையில் எழுத்தாளர் புகைப்படம் இருக்காது. ஆகவே அந்த போலியை பலரும் உண்மையான அகிலன் என்று நினைத்து மரியாதை செய்திருக்கிறார்கள்.
இந்த ஏமாற்றுபேர் வழிக்காகவே அகிலன் தனது கதைகள். புத்தகங்களில் தனது புகைப்படத்தை போட வேண்டும் என்று கட்டாயப்படுத்தியிருக்கிறார்
நிறைய இடங்களில் ஏமாற்றிய அந்த ஆசாமி முடிவில் ஒரு நாள் மாட்டிக் கொண்டான். போலீஸ் கைது செய்து சிறையில் அடைத்தது. அந்த வழக்கு நடந்த போது நான் தான் உண்மையான அகிலன் என்று அவரே நேரில் போய் சாட்சி சொல்லியிருக்கிறார். விநோதமான நிகழ்வு.
இதை ஏன் அகிலன் ஒரு நாவலாக எழுதவில்லை என்று தோன்றியது.
ஈரான் இயக்குநர் Abbas Kiarostami இயக்கிய Close-Up திரைப்படத்தின் கதையும் இதுவே. இந்தப் படத்தில் வருபவர் Makhmalbaf என்ற இயக்குநர் பெயரில் சுற்றித்திரியும் போலி ஆசாமி. படப்பிடிப்பிற்கான இடம் தேடுவது போல ஊர் சுற்றி ஏமாற்றுகிறான்.
அகிலன் நான்கு முறை ரஷ்யாவிற்குப் பயணம் செய்திருக்கிறார். அதைப் பற்றி கட்டுரைகள். தனி நூல் எதுவும் எழுதியிருக்கிறாரா என்று தெரியவில்லை.
தனது சொந்த ஊரான புதுக்கோட்டை பற்றியும் அந்த சமஸ்தானம் சுதந்திரத்திற்கு முன்பு இருந்த நிலையைப் பற்றியும் அகிலன் சிறப்பாக எழுதியிருக்கிறார்.
•••
மெய்ம்மைத்தேடிகள்
யாமம் நாவல் வாசிப்பனுபவம்
அரவின் குமார் – மலேசியா
யாமம் நாவலின் வாசிப்பனுபம் நினைவில் இருக்கும் இரவின் மணங்களைக் கொண்டு வரச் செய்தது. மழை பெய்த நாளிரவின் மணம், வெக்கையான இரவின் மணம், இறப்பு வீட்டு இரவின் மணம் எனப் பலவகையான இரவின் மணம் நினைவிலெழுந்தது. இரவின் மணமென்பது காண்போரின் மனத்துக்கேற்ப மணத்தை அணிந்து கொள்கிறது. அப்படி ஒவ்வொருவருக்கும் வெவ்வேறு மணத்தை அளிக்கும் இரவின் முடிவற்ற மணத்தை அணிந்து கொள்கிற மனிதர்களின் கதையாகவே யாமம் நாவல் அமைந்திருந்தது.

170 ஆண்டுகளுக்கு முந்தைய சென்னையின் அமிர்சாகிப் பேட்டையில் அத்தர் வியாபாரி கரீமிலிருந்து கதை தொடங்குகிறது. 15 ஆம் நூற்றாண்டில் தன்னுடைய மெய்மைத் தேடலில் இரவின் மணத்தை அளிக்கும் யாமம் அத்தரின் வழிமுறையைப் பக்கீர் ஒருவரின் வாயிலாகக் கண்டுபிடிக்கிறார் மீர் காசிம். அதிலிருந்து அவர் குடும்பத்தின் மூத்த ஆண்வாரிசுகள் தலைமுறைதோறும் யாமம் அத்தரின் செய்முறையை அடைகின்றனர். அந்தப் பின்னணியிலே, இந்தியாவில் காலனியாதிக்கம் மெல்ல காலூன்றுகிறது. ஷாஜகானின் மகள் தாராவுக்கு ஏற்பட்ட தீப்புண்ணை வடுவின்றி ஆற்றப் பயன்படும் ஆங்கில மருத்துவத்துக்கான ஈடாக கிழக்கிந்திய கம்பெனிக்கான தடையில்லா வணிக உரிமை வழங்கப்படுகிறது. பிரான்சிஸ்டேவின் மனைவி கிளாரிந்தாவுக்கான சிகிச்சை செய்த மக்களின் வாழ்விடம் பறிக்கப்பட்டு மசூலிப்பட்டணம் எழுகிறது. அதன் நீட்சியாகவே சென்னைப்பட்டிணமும் உருவாகிறது. துரோகத்தின் சாயையிலே காலனியாதிக்கம் எழுகிறது.
தனக்கு ஆண்வாரிசு இல்லாததால், தன்னோடு அத்தர் செய்முறை முடிந்துவிடும் என கரீம் அஞ்சுகிறான். மூன்றாவது மனைவியாகச் சுரையா என்கிற 15 வயது சிறுமியைத் திருமணம் புரிகிறான். குதிரைப்பந்தயத்தில் ஈடுபட்டுச் செல்வமெல்லாம் இழந்து பெருங்குடிகாரன் ஆகி தலைமுறைதோறும் தொடர்ந்த அத்தர் வணிகத்தை விட்டுக் காணாமற்போகிறான். மெய்ம்மைத் தேடலின் முடிவாகக் கிடைத்த இரவின் மணத்தை விட்டு இன்னொரு நாளிரவில் தொலைத்து விட்டுச் செல்கிறான். அவன் மனைவிகளான ரஹ்மானி, வகிதா, சுரையா ஒருவருக்கொருவர் உதவியாகத் தனியாகச் சென்னையில் ஒண்டு குடித்தனமொன்றில் வாழ்கின்றனர். அத்தர் கடையில் வேலை செய்து வந்த சந்தீபா குடும்பத்துக்கு நெருக்கமானவனாக மாறி விடுகிறான். ஏழ்மையில் இருக்கும் சந்தீபாவும் ஆதரவற்ற பெண்களும் ஒருவரையொருவர் அன்பு செலுத்துகின்றனர். சென்னையில் ஏற்படும் காலராவால் ரஹ்மானியும் சந்தீபாவும் இறந்து போகிறார்கள். ரஹ்மானியின் குழந்தையை எடுத்துக் கொண்டு வகிதாவும் சுரையாவும் தங்கள் பிறந்தகத்துக்கே திரும்புகின்றனர். பலரின் இன்பத்துக்குக் காரணமாக இருந்த அத்தரின் சாட்சியாக வாசனைத் தோட்டத்தின் செங்கல்லொன்றை மட்டும் எடுத்துக் கொண்டு உப்பள வேலைக்குச் செல்கிறாள் வகிதா.
இந்த நாவலின் கதைமாந்தர்களின் உடலிலிருக்கும் இன்பத்தின் ஊற்றை இரவின் கண் கொண்டு யாமம் திறக்கச் செய்கிறது, லண்டனுக்குப் படிக்கச் செல்லும் திருச்சிற்றம்பலம் தன் மனைவி தையலை அண்ணன் பத்ரகிரி ஆதரவில் விட்டுச் செல்கிறான். இருவரின் உடலில் இருக்கும் காமத்தின் விழைவை யாமம் வளர்த்தெடுக்கிறது. தையல்நாயகியுடன் கூடி குழந்தையும் பெறுகிறான். பத்ரகிரியின் மனைவி விசாலம் பிரிந்து செல்கிறாள். தையலின் மனத்தில் தோன்றும் குற்றவுணர்வு நோயாக மாறுகிறது. குழந்தையும் இறந்தபின் அனைத்தையும் துறந்து சித்தியின் சிதைந்து போயிருக்கும் வீட்டில் தனியனாகக் குடியேறுகிறான். யாமம் விழைவு எனும் மணத்தையே அளிக்கிறதெனலாம். பங்காளிச் சண்டையில் சொத்தைப் பாதுகாக்க போராடும் கிருஷ்ணப்ப கரையாளர் எல்லாவற்றையும் விட்டுக்கொடுத்து இருந்த சொத்தையும் எலிசபெத் எனும் ஆங்கிலோ இந்திய பெண்ணுக்கு எழுதி வைக்கிறார். யாமம் அணிந்த எலிசபெத் கிடைத்த மேல்மலையைத் தேயிலைத் தோட்டமாக்குகிறாள்.
இதைத்தவிர, உலகின் மாயத்தைப் புரிந்து கொள்ள முயலும் பண்டாரத்தின் பாத்திரம் சித்தர் மரபின் நீட்சியாக இருந்தது. சிறுவயதிலே பண்டாரமாக மாறியிருக்கும் சதாசிவம் நாயொன்றில் பின்னால் அலைந்து திரிகிறார். இறைவனே நாயாக மாறி உலக விழைவுகள் அத்தனையிலும் சதாசிவத்தை அலைகழிய வைத்து மெய்ம்மைக்கான வழியைக் காட்டுவதாக அமைந்திருக்கிறது. ஓரிடத்தில் திருமணம் செய்து குழந்தை பெறச் செய்த பின் அனைத்தையும் உதறச் செய்வதும், சும்மா இருக்கச் செய்து வசை வாங்கச் செய்தும் உலகியல் விழைவுகள் அத்தனையிலிருந்தும் சதாசிவத்தை விலக்கி அழைத்துச் செல்கிறது. சதாசிவத்துக்கு நேரான பாத்திரம் திருச்சிற்றம்பலத்தின் பாத்திரம். மகத்தான கணித அறிவைக் கொண்ட திருச்சிற்றம்பலம் எந்நேரமும் கணிதத்திலே மூழ்கிக் கிடக்கிறான். அத்தனையும் உதறி இரவின் முன்னால் நடந்தவற்றுக்காக அழுகிறான். சூபி மரபின் நீட்சியாக வரும் பக்கீரும் காசிமும் சித்தர் மரபின் நீட்சியாக வரும் சதாசிவமும் கணிதக்கலையின் வாயிலான மெய்ம்மை அடைய முயலும் திருச்சிற்றம்பலமும் என மெய்ம்மைத்தேடிகள் அமைந்திருக்கிறார்கள்.
காலனித்துவச் சென்னையின் செய்திகள் நாவலில் சம்பவங்களாக அமைந்திருக்கின்றன. சர்க்கஸ், காலரா, நில அளவைப்பணி, புதிய குடிகளின் வருகை, பனிக்கட்டியின் மீதான வியப்பு என சென்னையின் பின்னணி அமைந்திருக்கிறது. அந்நிய ஆட்சியில் புதிய நகரொன்று மெல்ல எழுந்து வருவதன் சித்திரம் சிறப்பாக வெளிப்படுகிறது. இரவைப் போல நிதானமான மொழியில் வரலாறின் ஒழுக்கும் மெய்ம்மைக்கான தேடலும் மனித விழைவுகளும் நாவலில் பிணைந்திருக்கிறது.
September 12, 2021
நாற்பது ஆண்டுக்கால கேள்வி
வாழும் காலத்தில் சொந்த தேசத்தில் தடைசெய்யப்பட்ட ஒரு நாவலாசிரியன் தனது மறைவிற்குப் பிறகு உலகின் சிறந்த எழுத்தாளராகக் கொண்டாடப்படுவதும் அவரது நாவல்கள் லட்சக்கணக்கில் விற்பனையாவது புரிந்து கொள்ளமுடியாத புதிராகும்

நல்ல நாவல்கள் தனக்கான இடத்தைத் தானே தேடிக் கொள்கின்றன. யாரோ ஒரு தேர்ந்த எழுத்தாளர், பதிப்பாளர் வாசகர், அந்த நாவலைக் கண்டுபிடித்து உலகின் வெளிச்சத்திற்குக் கொண்டுவருகிறார். அப்படித் தான் சண்டோர் மராயிற்கும் நடந்தது
ஹங்கேரியின் குறிப்பிடத்தக்க நாவலாசிரியர் சண்டோர் மராய். (Sándor Márai)அவர் மறைந்து பனிரெண்டு ஆண்டுகளுக்குப் பின்பே அவரது நாவல்கள் ஆங்கிலத்தில் வெளியாகின. இன்று உலகின் சிறந்த நாவலாசிரியர்களில் ஒருவராகக் கொண்டாடப்படுகிறார்.
மராய் வாழும் போது ஹங்கேரியில் கம்யூனிஸ்ட்டுகள் அவரது புத்தகங்களைத் தடை செய்ததோடு நாவலின் பிரதிகளைத் தேடிப் பிடித்து அழித்தார்கள்.

இத்தாலிய எழுத்தாளரும் பதிப்பாசிரியருமான ராபர்ட்டோ கலாஸ்ஸோவின் முயற்சியால் தான் மராயின் நாவல்கள் மறுபதிப்புக் கண்டன.
இருபது ஆண்டுகளுக்கு முன்பு ராபர்ட்டோ கலாஸ்ஸோ புதிய நூல்களின் மொழியாக்க உரிமைக்கான பட்டியலில் தடைசெய்யப்பட்ட தலைசிறந்த நூல் பட்டியலில் ஒரு பெயரைக் கண்டார். அதற்கு முன்பு கேள்விப்படாத பெயரது. அவர் ஹங்கேரிய நாவலாசிரியர் சண்டோர் மராய்.
அவரது நாவலைப் படிக்க விரும்பி அதன் பிரெஞ்சு மொழியாக்கப் பிரதியை வரவழைத்தார்.
வாசிக்கத் துவங்கியதுமே மராயின் மேதமையை உணரத்துவங்கினார். , மிக முக்கியமான இலக்கியப் படைப்பு என்பதை உணர்ந்து கொண்டவரா அதன் வெளியீட்டு உரிமையைப் பெறுவதற்கான முயற்சியை மேற்கொண்டார். மராயின் எல்லா நூல்களையும் இத்தாலியில் கொண்டுவர வேண்டும் என்று அவர் விரும்பினார். தொடர்ந்த முயற்சியின் பலனாக உரிமை கிடைத்தது.
இதன்பின்பு ஃப்ராங்க்ஃபர்ட் சர்வதேச புத்தகக் கண்காட்சியில் சண்டோர் மராயின் புத்தகங்களைப் பற்றிக் கலாஸ்ஸோ சிறப்பான உரையொன்றை நிகழ்த்தினார். இதன் பலனாக உடனடியாக ஆறு மொழிகளில் சண்டோர் மராயின் நூல்கள் வெளியிட ஒப்பந்தம் செய்யப்பட்டன. அப்படித் தான் அவரது ஆங்கிலப் பதிப்பு வெளியானது.
இத்தாலி மற்றும் ஜெர்மனியில் சண்டோர் மராயின் நாவல்கள் வெளியாகி விற்பனையில் பெரிய சாதனை படைத்தன. இதன் விளைவாக இருபத்திமூன்று மொழிகளில் அவரது நாவல்கள் மொழிபெயர்க்கப்பட்டன
சண்டோர் மராய் 1900 இல் ஹங்கேரியில் பிறந்தவர், பத்திரிகையாளராகப் பணியாற்றிய அவர் ஃபிரான்ஸ் காஃப்கா மீது மிகுந்த ஈடுபாடு கொண்டிருந்தார். காஃப்காவின் படைப்புகளை ஆராய்ந்து விரிவான கட்டுரை எழுதியிருக்கிறார். 1940களில் மராயின் நாவல்கள் விரும்பி வாசிக்கப்பட்டன.

948 இல் ஹங்கேரியில் ஏற்பட்ட கம்யூனிச ஆட்சியின் காரணமாக அவர் “முதலாளித்துவ எழுத்தாளர்” என்று கண்டனம் செய்யப்பட்டு நாடு கடத்தப்பட்டார். மராய் பணக்கார குடும்பத்தில் பிறந்தவர், செல்வ செழிப்பில் வளர்ந்தவர். ஆகவே கம்யூனிஸ்ட்டுகள் அவரை முதலாளித்துவத்தின் பிரதிநிதியாகக் கருதினார்கள்
தேசத்தை விட்டு வெளியேறி இத்தாலிக்கும் பின்பு அமெரிக்காவிற்கும் சென்ற மராய் ஹங்கேரிய கம்யூனிச ஆட்சிக்கு எதிராக நேரடியாகக் குரல் கொடுக்கத் துவங்கினார். இதன் காரணமாகவே இவரது நூல்கள் தடைசெய்யப்பட்டன.
பிரெஞ்சில் மொழியாக்கம் செய்யப்பட்ட இவரது நாவல்கள் இலக்கிய உலகில் அவருக்குப் புகழ்தேடி கொடுத்தன. தனிமையில் கசப்பான வாழ்க்கை அனுபவங்களுடன் வாழ்ந்த மராய் தனது 89 வயதில் தற்கொலை செய்து கொண்டார்.
இவரது Embers நாவல் மிக முக்கியமானது. இத்தனை அடர்த்தியான, கவித்துவமான மொழியில் எழுதப்பட்ட நாவலைக் கண்டதில்லை. மராயின் நாவலில் பக்கத்துக்குப் பக்கம் அடிக்கோடு போட வேண்டியதாகியது. இருபதாம் நூற்றாண்டின் சிறந்த ஐரோப்பிய நாவல் என்றே இதைக் குறிப்பிடுகிறார்கள்.
Embers நாவல் நீண்ட காலத்தின் பின்பு சந்தித்துக் கொள்ளும் இரண்டு நண்பர்களின் கதையைச் சொல்கிறது. ஆஸ்ட்ரோ-ஹங்கேரிய பேரரசின் ஓய்வுபெற்ற ஜெனரலான ஹென்ரிக், நாற்பத்தியோரு வருடங்களுக்குப் பிறகுத் தனது நண்பன் கொன்ராட்டின் வருகைக்காகக் காத்திருக்கிறார். அவர் மலையிலுள்ள அரண்மனை போன்ற வீட்டில் வாழுகிறார்.
அவர்கள் இருவரும் இராணுவப் பள்ளியில் ஒன்றாக பயின்றவர்கள். ஒரே அறையில் தங்கியவர்கள். ஹென்ரிக் வசதியான குடும்பத்தில் பிறந்தவர். ஆனால் கொன்ராட் வறுமையான குடும்பத்தில் பிறந்தவன். இப்படி வேறுபட்ட பின்புலம் கொண்டிருந்த போதும் இருவரும் மிகவும் நெருக்கமான நட்பு கொண்டிருந்தார்கள்.
அந்த நட்பினை ஹென்ரிக்கின் குடும்பமும் ஏற்றுக் கொண்டது.
இளம் வீரர்களாக அவர்கள் வியன்னாவில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பு ஒன்றில் தங்கியிருந்தார்கள். அந்த நகரின் இன்பங்களை தேடித்தேடி அனுபவித்தார்கள். வியன்னா என்பது நகரமில்லை. அது ஒரு இசை. மனதில் நிரம்பி வழியும் இசை என்கிறார் மராய்.
தனக்கு இந்த உலகிற்கும் ஒரு தொடர்புமில்லை என்பது போலக் கான்ராட் ஒரு துறவியைப் போல வாழுகிறான். தனது கடமையைச் சரியாக, முழு ஈடுபாட்டுடன் மேற்கொள்கிறான். இதனால் கான்ராட் வேகமாக வயதான தோற்றத்தை அடைகிறான். அவனது 25 வயதிலே வாசிப்பதற்குக் கண்ணாடி போட வேண்டிய தேவை ஏற்படுகிறது.
கான்ராட்டின் தோழியான கிறிஸ்டினாவை ஹென்ரிக் காதலித்தார். மூவரும் ஒன்றாகச் சுற்றினார்கள். எதிர்பாராத விதமாகக் கான்ராடின் நட்பு முறிந்து போகிறது. இதன்பிறகு அவர்கள் சந்தித்துக் கொள்ளவேயில்லை. நாற்பது வருஷங்கள் கடந்து போகின்றன. தற்போது அவர்கள் மீண்டும் சந்தித்துக் கொள்கிறார்கள்.
எதற்காக இந்தச் சந்திப்பு என நினி கேட்கிறாள். உண்மையை அறிந்து கொள்ள என்கிறார் ஹென்ரிக். என்ன உண்மை. எதனால் அதை அறிந்து கொள்ள முற்படுகிறார் என்று கதை வளர்க்கிறது.
இந்தச் சந்திப்பின் வழியே கடந்து போன தங்களின் வாழ்க்கையை, ஏற்பட்ட கசப்புணர்வுகளை, அவர்கள் மீண்டும் ஞாபகம் கொள்கிறார்கள். இழந்தவற்றை விசாரணை செய்கிறார்கள்.
வாழ்க்கையில் ஏன் இப்படியான நிகழ்வுகள் நடந்தேறின. ஏன் இந்த இடைவெளி உருவானது. ஏன் துரோகத்தால் நண்பர்கள் பிரிய நேரிடுகிறது என்று ஒரு இடத்தில் ஹென்ரிக் கேட்கிறார். அந்தக் கேள்வி மராயின் சொந்த வாழ்க்கையிலிருந்து எழும் கேள்வியாகும்.
கடந்தகாலத்தைச் சொற்களின் வழியாக மீட்டு எடுக்க முடியவே முடியாது. நினைவு கொள்ளவும் வருந்தவும் ஏக்கம் கொள்ளவும் மட்டுமே சொற்கள் துணை செய்கின்றன. எல்லா பதில்களும் தற்காலிக திருப்தியை தான் தருகின்றன. உண்மை என்பது சம்பவமில்லை. அதன் பின்னுள்ள மனநிலை. வெளிப்படுத்தமுடியாத உணர்வு.
இவ்வளவு தான் நம் வாழ்க்கையா. எதையோ நினைத்துக் கொண்டு உறவுகளைத் தொலைத்த நமது கடந்த காலம் மீட்க முடியாதது தானா என்று ஹென்ரிக் கேள்வி எழுப்புகிறார்.
இந்த மறுசந்திப்பின் வழியே அவர்கள் நட்பில் ஏற்பட்ட இடைவெளியை அழிக்க முயலுகிறார்கள். ஆனால் அந்த விரிசல் ஒட்டமுடியாதது என்பதை உணருகிறார்கள்.
இருவரும் அறிந்தே கிறிஸ்டினாவை ஏமாற்றியிருக்கிறார்கள் என்பதை அறிந்து கொள்கிறார்கள்.
கடந்தகாலம் ஏற்படுத்திய குற்றவுணர்விலிருந்து விடுபடுவதற்காகவே இந்தச் சந்திப்பை உருவாக்கிக் கொண்டிருக்கிறார்கள்.
கவிஞனாக விரும்பிய ஹென்ரிக் ஏன் ராணுவ அதிகாரியாக மாறினார். ஏன் கான்ராட் அவரைத் தனது வறுமையான குடும்பத்தினரைச் சந்திக்க அழைத்துச் சென்றான். பணக்காரன் ஏழை என்ற வித்தியாசங்களை நட்பு கடந்து சென்ற போதும் காதலித்த பெண் வழியே அவர்கள் ஏன் பிரிய நேர்ந்தது என்ற கேள்வியை நாவல் எழுப்புகிறது

வாழ்க்கையில் நாம் பிறரோடு பகிர்ந்து கொள்ளவே முடியாத ரகசியங்கள் சில இருக்கின்றன. அவை நண்பர்களிடமும் பகிர முடியாதவை. ஒரு மனிதன் தன் இதயத்திற்குள் மட்டுமே புதைத்து வைத்துக் கொள்ளவேண்டிய ரகசியங்கள். அவற்றை நாம் விரும்பினாலும் வெளிப்படுத்தவே முடியாது என்று கிறிஸ்டினா சொல்வது உண்மையே.
கிறிஸ்டினா வீட்டை விட்டு வெளியேறும் போது பாதிபடித்த புத்தகத்தை விட்டுச் செல்கிறாள். அது ஒரு குறியீடே.
பணிந்து போவதை ஒரு ஒழுக்க முறையாக அதிகாரம் நம் மனதில் ஆழமாகப் பதிய வைத்திருக்கிறது. அது தான் பலரையும் எந்தக் கேள்வியும் கேட்காமல் மன்னரை தெய்வமாக நினைக்க வைக்கிறது. கட்டளைகளுக்கு அடிபணியச் செய்கிறது. தேசசேவைக்கு அழைத்துச் செல்கிறது. இந்தப் பலவீனத்தைப் பெரும்பான்மை மக்கள் உணரவேயில்லை என்று ஒரு இடத்தில் ஹென்ரிக் சொல்கிறான். இதுவும் மராயின் ஒப்புதல் வாக்குமூலமே
நமது ஆசைகள், கனவுகளை உலகம் ஒருபோதும் புரிந்து கொள்ளாது. நாம் யாரை நேசிக்கிறோமோ அவர்கள் நம்மை அந்த அளவு நேசிப்பதில்லை. புரிந்து கொள்வதில்லை. இந்த உலகம் நாம் விரும்பும் படியாக இல்லை. துரோகத்தையும் புறக்கணிப்பையும் நாம் ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும். நாம் உலகை நம்புவது போல உலகம் நம்மை நம்புவதில்லை. இந்த உண்மையை நாம் ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும். என்று நாவலில் ஹென்ரிக் சொல்கிறார். இவை வாழ்க்கை அனுபவத்திலிருந்து வெளிப்படும் நிதர்சனங்கள்.
நம்மை நாம் அறிந்து கொள்வதேயில்லை. நமது நிறைகுறைகளை நாம் கண்டுகொள்ளும் போது வாழ்க்கை நமக்கு பதக்கங்கள் எதையும் தந்துவிடுவதில்லை. ஆனால் இந்தத் தேடல் நமக்காக நாம் முனைந்து செய்ய வேண்டிய காரியமாகும்.
உண்மையை விடவும் அதைப்பற்றி நினைப்பு முக்கியமானது. அந்த நினைப்பு நம்மைக் குற்றவுணர்வு கொள்ள வைக்கிறது. மீட்சியைத் தேடச் செய்கிறது. வாழ்க்கை நம்மைப் பற்றிய தீர்ப்பை வாசிக்காவிட்டாலும் நாம் ஒன்றும் அப்பாவியில்லை என்பதை நாம் அறிந்து தானே இருக்கிறோம்.
நமது செயல்கள் யாவும் தூய்மையானவையில்லை. அதில் கசடுகளும் இருக்கத்தானே செய்கிறது.
சொற்களால் மழையின் ஈரத்தைக் காகிதத்தில் உருவாக்கிட முடியாது. ஆனால் உணரவைக்க முடியும்.
நட்பு என்பது வெறும் உறவில்லை. அது ஒரு சட்டம். அதற்கெனக் கடமைகள் இருக்கின்றன. இந்தச் சட்டம் விசித்திரமானது. ஆனால் தொன்மையானது. நட்பை உயர்வாகக் கருதாத பண்பாடே கிடையாது.
இப்படி நாவல் முழுவதும் மறக்கமுடியாத வரிகள்
ஹென்ரிக் வீட்டில் பணிபுரியும் நினிக்கு 90 வயது கடந்துவிட்டது. ஒருவர் 90யைக் கடந்தபிறகு வயதாவதைப் பற்றிக் கவலைப்படுவதில்லை. ஐம்பது அறுபது வயதுகளில் முதுமையைப் பற்றிக் கவலைப்பட்டதைப் போலக் கவலை கொள்வதில்லை. அவளுக்கு 90 வயது என்பதே கூட ஹென்ரிக் தவிர வேறு யாருக்கும் தெரியாது. அவள் 75 ஆண்டுகள் அந்த வீட்டில் பணியாற்றியிருக்கிறாள். மௌனமான புன்னகையுடன் அவள் அந்த வீட்டிற்குள்ளே வளர்ந்திருக்கிறாள். அவளது திறமைகள் யாவும் அந்தக் குடும்பத்தின் வளர்ச்சிக்கு மட்டுமே பயன்பட்டிருக்கிறது. அவளுக்குச் சொந்த வாழ்க்கை என்ற ஒன்றேயில்லை. கடந்த இருபது ஆண்டுகளாக விருந்தாளிகள் யாரும் அந்த வீட்டிற்கு வந்ததேயில்லை. அவள் அந்த வீட்டினையும் கர்னலையும் முழுமையாகப் புரிந்து கொண்டிருக்கிறாள்.
கிறிஸ்டினாவின் மரணத்தைப் பற்றி இருவரும் பேசிக் கொள்ளும் போது அவளது கணவராக நீங்கள் அவளது இல்லாமையை உணரும் விதமும் ,அவளது தோழனாக நான் அந்த இன்மையை உணரும் விதமும் வேறு வேறானது. மரணம் எல்லாவற்றுக்கும் முடிவான பதிலைத் தந்துவிடுகிறது என்கிறான் கான்ராட்.
“All of a sudden the objects seemed to take on meaning, as if to prove that everything in the world acquires significance only in relation to human activity and human destiny”
என நாவலின் ஒரு இடத்தில் சொல்லப்படுகிறது. இது தான் நாவலின் திறவுகோல். நீண்டகாலத்தின் பின்பு அவர்கள் சந்தித்துக் கொள்ளும் போது பழைய பொருட்களும் அவர்களுடன் புத்துயிர்ப்புப் பெறுகின்றன. அதே போன்ற சூழலை மறுபடியும் உருவாக்க முனைகிறார்கள்.
There are very few people whose words correspond exactly to the reality of their lives என்று நாவலின் ஒரு இடத்தில் குறிப்பிடப்படுகிறது.
இப்படி மராயின் எழுத்திலும் அவரது வாழ்க்கை தன் முழுவீச்சோடு வெளிப்படுகிறது
•••
September 11, 2021
துப்பாக்கி முனையில் ஒரு பயணம்
இரண்டாம் உலகப்போரின் போது மலேயா மீது ஜப்பானியர் படையெடுத்த சமயத்தில் நடந்த உண்மை நிகழ்வினைப் பற்றிய படம் A Town Like Alice. நெவில் ஷட்டின் நாவலைப் படமாக்கியிருக்கிறார்கள்.

மலேசியாவில் வசித்த வந்த பிரிட்டிஷ்காரர்கள் 1942 இல் ஒரு நாள் ஜப்பானிய ராணுவத்தின் ஆக்கிரமிப்பு காரணமாக வெளியேறும்படியான சூழல் உருவாகிறது. சிங்கப்பூருக்குத் தப்பிப் போக முயல்கிறார்கள்.
கோலாலம்பூரில், ஜீன் பேஜெட் என்ற இளம்பெண் வேலை செய்த அலுவலகம் மூடப்படுகிறது. அவளது உயரதிகாரி ஹாலந்து உடனடியாக ஊரைவிட்டு வெளியேறும்படி சொல்கிறான். அவர்கள் ஒரு காரில் தப்பிப் போகிறார்கள். ஆனால் வழியில் கார் ரிப்பேராகி நின்று விடுகிறது. பிரிட்டிஷ் துருப்புகள் வந்த வேனில் அவர்கள் ஏற்றிக் கொள்ளப்படுகிறார்கள். தற்காலிக முகாம் ஒன்றில் தங்க வைக்கப்படுகிறார்கள். கப்பல் வந்தவுடன் சிங்கப்பூர் போகலாம் என்ற கனவுடன் அவர்கள் காத்திருந்த போது ஜப்பானிய ராணுவம் அவர்களைச் சுற்றி வளைக்கிறது. எதிர்ப்பவர்கள் சுடப்படுகிறார்கள்.
அங்கிருந்த ஆண்கள் தனியே பிரிக்கப்பட்டு லாரிகளில் ஏற்றி வதை முகாம்களுக்கு அனுப்பப்படுகிறார்கள்
பெண்கள் குழந்தைகள் தனியே பிரித்துக் கால்நடையாக நடத்தி அழைத்துச் செல்லப்படுகிறார்கள்.
35 பேர் கொண்ட அந்தப் பெண்கள் குழுவின் முடிவற்ற பயணமே படத்தின் மையக்கதை.

ஜப்பானிய ராணுவ அதிகாரி அவர்களை ஐம்பது மைல் தூரம் நடந்து செல்லும்படி முதலில் கட்டளையிடுகிறார். ஆனால் ஒவ்வொரு இடத்திலும் அவர்கள் துரத்தப்படுகிறார்கள். இப்படி முடிவேயில்லாமல் அவர்கள் அலைக்கழிக்கப்படுகிறார்கள்.
மைல் கணக்கில் நீளும் இந்தப் பயணத்தில் கரடுமுரடான சாலையில் நடந்து செல்கிறார்கள். வழியில் குடிநீர் கிடைப்பதில்லை. நல்ல உணவு கிடைப்பதில்லை. நடந்து நடந்து கால்கள் வீங்கி களைத்து விழுகிறார்கள். அவர்களைத் துப்பாக்கி முனையில் வீரர்கள் ஆடுமாடுகள் போல அடித்து நடக்க வைக்கிறார்கள்.
கிராமப்புற சாலையில் நீண்ட தூரம் நடந்து அவர்களின் புழுதி படிந்த தோற்றம் வேதனை தருகிறது. பலருக்கும் நடக்க முடியாமல் பாதங்கள் வீங்கிப் போகின்றன. ஹாலந்தின் மனைவி நோயுற்று வழியில் இறந்து போகிறாள். அவளது கைக்குழந்தையைக் காப்பாற்ற வேண்டிய பொறுப்பு ஜீனிடம் வந்து சேருகிறது.

குழந்தையுடன் அவள் பகலிரவாக நடக்கிறாள். வழியில் குழந்தைக்குத் தேவையான பால் கிடைப்பதில்லை.. தனது உடைகளைக் காலணியை அடகு வைத்து பால் பவுடர் வாங்க முயல்கிறாள். மொழி புரியாத கடைக்காரன் பால் பவுடர் தர மறுக்கிறான். அந்தக் கடைக்காரனின் மனைவி அவளது துயரைப் புரிந்து கொண்டவள் போலப் பால்பவுடர்களைத் தருகிறாள். குழந்தையோடு அவர்கள் நடந்து ஒரு துறைமுகத்தைச் சேருகிறார்கள். அங்கே கப்பலில் அவர்களை ஏற்றிப் போக மறுக்கிறார்கள். இன்னொரு துறைமுகத்தைத் தேடி இன்னும் நூறு மைல் நடக்கிறார்கள்
டஜன் கணக்கான பெண்கள் மற்றும் குழந்தைகள் ஏழு மாத காலம் இந்த யாத்திரையை ஓய்வில்லாமல் மேற்கொள்கிறார்கள். சேறு சகதியுமான சாலையில் பெண்கள் ஊன்றுகோலுடன் நடந்து செல்லும் காட்சி மறக்க முடியாதது

பயண வழியில் ஜப்பானியர்களுக்காக லாரியை ஓட்டி வரும் போர் கைதியான இருவர் ரகசியமாக அவளுக்கு உதவி செய்கிறார்கள். உணவு மற்றும் மருந்துகளைத் திருடிக் கொடுக்கிறார்கள்.
யுத்த கைதியான பெண்கள் இறுதியாக ஒரு மலேயா கிராமம் ஒன்றை அடைகிறார்கள். நிர்க்கதியான சூழலில் தவிக்கும் ஜீனை கிராமப்புற மக்கள் ஆதரித்துத் தேவையான உணவும் உடையும் இருப்பிடமும் தந்து காப்பாற்றுகிறார்கள். அந்தக் குழுவினர் கிராமத்திலே தங்கி வாழ ஆரம்பிக்கிறார்கள்.
யுத்தம் முடிந்தபிறகு தன்னுடைய உயிரைக் காப்பாற்றிய கிராமவாசிகளுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என நினைத்து மலேசியா திரும்பும் ஜீன் கிராமவாசிகளின் அடிப்படைத் தேவையான குடிநீர் கிணறு ஒன்றை ஏற்படுத்தித் தருகிறாள்
படம் இங்கேயிருந்து தான் துவங்குகிறது. யுத்த நினைவுகளின் வழியே தான் கடந்து வந்த வேதனையான காலத்தை ஜீன் ஞாபகம் கொள்கிறாள். .

மலேயா மக்களுக்கு உதவி செய்த பிறகு அவளைக் காப்பாற்றிய சார்ஜென்ட் ஜோ ஹார்மனைத் தேடி ஆஸ்திரேலியா செல்லும் ஜீன் அங்குள்ள வாழ்க்கை நிலையை அறிந்து கொள்கிறாள். இதன் மறுபக்கம் போல ஹார்மன் ஜீனை லண்டனில் தேடிக் கொண்டு வருகிறான். காலம் இவர்களைப் பகடையாக உருட்டி விளையாடுகிறது. இருவரும் எப்படி இணைந்தார்கள் என்பதே படத்தின் மீதக்கதை.
ஜீனின் மனவுறுதியும் அவள் தன்னிடம் ஒப்படைக்கப்பட்ட குழந்தையைக் காப்பாற்றும் முயற்சியும் குழுவை வழிநடத்தும் தைரியமும் அழகாக வெளிப்படுத்தப்பட்டுள்ளது.
பயணவழியில் அவர்கள் ஒவ்வொரு முறையும் ஏதாவது இடிந்த கட்டிடம் அல்லது ஒரு முகாமில் தங்க வைக்கப்படுகிறார்கள். அப்படிக் கைவிடப்பட்ட மாளிகை ஒன்றில் அவர்கள் தங்கும் போது ஆசை தீர குளிக்கிறார்கள். அந்தக் காட்சியில் பெண்களிடம் வெளிப்படும் சந்தோஷம் மறக்கமுடியாதது. துரத்தப்பட்டுக் கொண்டேயிருக்கும் அவர்கள் நான்கு மாதங்களுக்குள் நூற்றுக்கணக்கான மைல்களைக் கடந்து போகிறார்கள். பயண வழியில் பலர் இறக்கின்றனர்.
இந்த உண்மை சம்பவம் சுமத்ராவில் நடந்திருக்கிறது. அதை மலேசியாவில் நடப்பது போல நெவில் ஷட் நாவலில் எழுதியிருக்கிறார்.
ஜப்பானிய கேப்டன் சுகமோ செய்யும் சித்ரவதைகள் குரூரமானவை. பெண்களின் நெடும்பயணத்திற்குப் பாதுகாவலனாக வரும் ஜப்பானியன் மெல்ல அவர்களைப் புரிந்து கொள்வதும் அவனது மரணமும் அழகாகச் சித்தரிக்கப்பட்டுள்ளன

ஜப்பானிய ராணுவ அதிகாரி பார்வையிட வரும் போது அந்தப் பெண்கள் வணங்கி அவரை வரவேற்க வேண்டும் என்பது விதி. அவரது உத்தரவை யாரும் கேள்வி கேட்கக் கூடாது. மீறினால் கடுமையாகத் தண்டிக்கப்படுவார்கள். ஒரு பெண் எங்களை இப்படி எங்கே அழைத்துப் போகிறீர்கள். நீண்ட தூரம் எங்களால் நடக்க முடியாது என்கிறார். நீங்கள் இப்போது கைதிகள். நாங்கள் சொல்வது போலத் தான் கேட்க வேண்டும். இல்லாவிட்டால் உங்களைக் கொன்றுவிடுவேன் என்கிறான் ஜப்பானிய ராணுவ அதிகாரி. ஒரே நாளில் தங்கள் வாழ்க்கை இப்படித் திசைமாறிப்போய்விடும் என அறியாத பெண்கள் வேதனையுடன் குழந்தைகளை வெறித்துப் பார்க்கிறார்கள். எங்கே போகிறோம் எப்போது மீட்சி எனத் தெரியாத அந்தப் பயணம் யுத்தத்தின் குரூரத்தை அவர்களுக்கு முழுமையாகப் புரிய வைக்கிறது
போரில் கலந்து கொண்ட வீரர்களின் சாகசத்தையும் வீரமரணத்தையும் திரையில் கண்டுவந்த நமக்குப் போரின் இன்னொரு முகமாகப் பாதிக்கப்படும் பெண்கள் மற்றும் குழந்தைகளின் நிலையைக் காணும் போது போர் ஏற்படுத்தும் ஆழமான பாதிப்பைப் புரிந்து கொள்ள முடிகிறது. பெண்களின் போராடும் உணர்வு படத்தில் நேர்த்தியாக வெளிப்படுத்தப்பட்டிருக்கிறது. வர்ஜீனியா மெக்கென்னா ஜீனாகச் சிறப்பாக நடித்திருக்கிறார்.
இந்தப் படம் பார்த்துக் கொண்டிருக்கும் போது சேவியர் 1998 ஆம் ஆண்டு வெளியான படம் மனதில் வந்து போனது.. போஸ்னியப் போரின்போது செர்பியப் பெண்ணையும் அவரது கைக் குழந்தையையும் அழைத்துச் செல்லும் ராணுவ வீரனின் கதாபாத்திரம் ஜீனின் மறுவடிவம் போலத் தோன்றியது

முதற்காட்சியிலே ஜீன் அலுவலகத்திலிருந்து நேரடியாக வெளியேறிப் போகாமல் ஹாலந்தின் வீட்டிலிருந்து வரும் தொலைபேசி அழைப்பிற்கு இணங்க அவர்கள் வீட்டிற்குப் போகிறாள். அவள் பிறருக்காக உதவி செய்யக்கூடியவள். தனது பொறுப்புகளை அவள் ஒரு போதும் மறப்பதில்லை என்பதைத் துவக்கக் காட்சியில் சொல்லிவிடுகிறார்கள்
ஒரு ஜப்பானிய ராணுவ அதிகாரி அவளது அழகில் மயங்கி தனது ஆசைநாயகியாக இருந்துவிடும்படி அவளை அழைக்கிறான். ஜீன் அதை ஏற்க மறுக்கிறாள். வேறு ஒரு பெண் சம்மதிக்கிறாள். அவளைத் தனது ஜீப்பில் ஏற்றிக் கொண்டு அந்த அதிகாரி சந்தோஷமாகப் போகிறான். உயிர்பிழைக்க வேண்டும் என்ற ஆசை எப்படி அவனது ஆசைக்குப் பலியாகச் செய்தது என்பதைச் சிறு நிகழ்வின் வழியே உணர்த்திவிடுகிறார்கள்
நெருக்கடியின் போது தான் உண்மையான வலிமை ஒருவருக்குள்ளிருந்து வெளிப்படுகிறது. அந்த உண்மையை நாம் ஜீன் வழியாக அறிந்து கொள்கிறோம். அந்நியப்பெண்ணாக அறிமுகமாகி மெல்ல அவள் மலேயா பெண்ணாக மாறிவிடுகிறாள். இந்த மாற்றம் தோற்ற அளவில் மட்டுமின்றி மனதளவிலும் நடந்தேறுகிறது. அது தான் கதையின் தனிச்சிறப்பாக எனக்குத் தோன்றுகிறது
••
September 10, 2021
யானையின் சித்திரம்.
ஆ,மாதவனின் புனலும் மணலும் நாவலில் ஒரு அபூர்வமான காட்சி விவரிக்கப்பட்டிருக்கிறது. ஆற்றிலிருந்து மணல் எடுக்கும் தொழில் பற்றிய இந்த நாவல் சூழலியல் பிரச்சனையை அடையாளப்படுத்திய முன்னோடி நாவலாகும். திருவனந்தபுரத்திலுள்ள கோட்டையாறு என்ற ஆற்றிலிருந்து மணல் எடுக்கும் அங்குசாமியின் வாழ்க்கையோடு அந்தத் தொழிலில் ஈடுபடும் மனிதர்களையும் அவர்களின் வாழ்க்கை பாடுகளையும் மிக அழகாக மாதவன் எழுதியிருக்கிறார்.

இந்த நாவலில் ஆற்றில் மணல் அள்ளப்பட்ட காரணத்தால் பெரும் பள்ளம் ஏற்படுகிறது. மழைக்காலத்தின் ஒரு நாள் ஆற்றில் தண்ணீர் பெருகியோடும் போது குளிப்பதற்காக வந்த பெண் யானை ஒன்று இந்தப் பள்ளத்தில் சிக்கிக் கொள்கிறது. யானையின் கால் மணலில் மாட்டிக் கொண்டுவிடவே அதை மீட்க உதவி செய்ய வேண்டும் என்று பாகன் கூக்குரலிடுகிறான்
மக்கள் திரளுகிறார்கள். ஆண்யானை ஒன்றின் மூலம் கயிறு கட்டி பெண் யானையை மீட்க முயல்கிறார்கள். ஆனால் மீட்பது எளிதாகயில்லை.
ஆற்றில் குதித்து யானையின் காலடிக்குச் சென்று மணலை அகற்ற வேண்டும் என்று யோசனை சொல்கிறார்கள்.

யானையின் காலடியை நெருங்கிப்போய் மணலை அகற்ற முயன்றால் யானை மிதித்துக் கொல்லவும் கூடும். ஆகவே உயிர் போகும் ஆபத்து அதிகம். ஆயினும் துணிந்து இளைஞர் சிலர் ஆற்றில் குதித்து யானையை மீட்கிறார்கள்.
இந்தக் காட்சியினை மாதவன் மிகவும் நேர்த்தியாக, உணர்வுப்பூர்வமாக எழுதியிருக்கிறார்.

பள்ளத்தினுள் சிக்கிய யானையின் பரிதவிப்பு. மீட்பவர்களின் போராட்டம். வேடிக்கை பார்ப்பவர்களின் ஆர்வம். இந்தப் பள்ளம் இருப்பதை அறியாமல் போன பாகனின் கவலை படிந்த முகம். யானையை மீட்பதை வேடிக்கை பார்க்கும் பெண்கள், சிறார்கள் என அந்தக் காட்சி முழுமையாக ஒரு ஆவணப்படம் போலச் சித்தரிக்கப்படுகிறது.
மீட்கப்பட்ட யானைக் காலை உதறி எழுந்து கரையேறும் போது தண்ணீரில் தடுமாறி விழுகிறது. அதில் தெறிக்கும் தண்ணீர் அங்கே நின்றிருந்தவர்களை நனைக்கிறது.
இந்தக் காட்சியினை வாசிக்கும் நம் மீதும் அந்த ஆற்றுத் தண்ணீர் அடிக்கிறது. கச்சிதமான வார்த்தைகள், தேர்ந்த நடை மூலம் அந்தக் காட்சியைக் கண்முன்னே உருக் கொள்ள வைக்கிறார் மாதவன்.
ஆற்றில் பள்ளம் ஏற்படக் காரணமாக இருந்த அங்குசாமி அதுவரை வேடிக்கை பார்த்துக் கொண்டு நிற்கிறார். ஆனால் யானை உருவாக்கிய அதிர்வில் தடுமாறி விழுந்து கையில் அடிபடுகிறார். அவரது குற்றத்திற்கான தண்டனை போலவே அந்தக் காட்சி அமைகிறது
நாவலில் மறக்கமுடியாத கதாபாத்திரம் பங்கி. அவள் அங்குசாமியின் வளர்ப்பு மகள். அவருக்குப் பங்கியைப் பிடிக்கவில்லை. அவளைப் பார்த்தாலே எரிந்து விழுகிறார். அவளோ அவரைத் தந்தையாகவே நினைக்கிறாள். அன்பு செலுத்துகிறாள். என்றாவது ஒரு நாள் தன் அன்பை அங்குசாமி புரிந்து கொள்வார் என்று நம்புகிறாள். நாவலின் முடிவில் பங்கி ஆற்றோடு போய்விடுகிறாள். சந்தோஷமே அறியாத பங்கியின் வாழ்க்கை அவலமானது. அவளது கதாபாத்திரம் மிகவும் அழகாகச் சித்தரிக்கப்பட்டுள்ளது.
பிழைப்பதற்காகக் கேரளா சென்ற அங்குசாமி எப்படிக் கொஞ்சம் கொஞ்சமாக கேரள மண்ணில் வேர் ஊன்றி அந்தஸ்து பெறுகிறார். மணல்காண்டிராக்டராக உயருகிறார் என்பதை ஒரு தளத்தில் விவரிக்கிறார் மாதவன். மற்றொரு தளத்தில் தங்கம்மையின் அழகில் மயங்கி அவளுடன் வாழுத்துவங்கி அவளது மகள் பங்கியின் வளர்ப்புத் தந்தையாகிறார் அங்குசாமி என்பதைச் சொல்கிறார்.
தங்கம்மைக்கு முன்னதாகப் போலீஸ்காரனுடன் கல்யாணம் ஆகியிருந்தது. அவளுடன் இரண்டு மாதங்கள் மட்டுமே அந்தப் போலீஸ்காரன் வாழ்ந்து இறந்து போய்விடுகிறான். அவன் இறந்து நான்கு வருடங்கள் ஆகிவிட்ட நிலையில் தான் அங்குசாமிக்கு அவள் மீது ஈர்ப்பு உருவாகிறது.
பெரிய பற்களும் கோரையான தலைமுடியும், குள்ளமான தோற்றமும் கொண்ட பங்கியை பார்த்தாலே அங்குசாமிக்குக் கோபம் வந்துவிடுகிறது. அவளோ கடின உழைப்பாளி. தந்தையின் பணிகளுக்கு உடனிருந்து உழைக்கிறாள். அவருக்கான பணிவிடைகளைச் செய்கிறாள். தான் ஒரு போதும் திருமணமே செய்து கொள்ள மாட்டேன் என்கிறாள் பங்கி. தாயை இழந்த அவளுக்கு வளர்ப்புத் தந்தையை விட்டால் வேறு துணை இல்லை.
யானையை மீட்கும் போது ஏற்பட்ட காயத்தில் அங்குசாமி வீட்டிலே இருக்கிறார். பங்கி அவருக்குத் தேவையான உதவிகள் அத்தனையும் செய்கிறாள். மெல்ல அவருக்குப் பங்கியின் மீதான வெறுப்புக் குறைகிறது. ஆனால் அகலவில்லை
ஆற்றின் வெள்ளம் வரும் போது அவர்கள் ஒரு நாட்டுப்படகில் போகிறார்கள். படகு கவிழ்ந்து போகிறது. உயிர்பிழைப்பதற்காகப் போராடுகிறார்கள். அப்போது அங்குசாமியின் கால்களைப் பங்கி பற்றிக் கொள்கிறாள். அவளை உதறித் தள்ளி அங்குசாமி கரையேறுகிறார். அவரது இந்தச் செயல் தான் பங்கியின் மரணத்திற்குக் காரணமாகிறது
மனிதர்கள் தங்களின் சுயலாபங்களுக்காக ஆற்றை அழிக்கிறார்கள். இதன் விளைவுகள் மோசமாக இருக்கும் என்பதை மாதவன் அழுத்தமாகத் தெரிவிக்கிறார்.
திருவனந்தபுரம் சாலைத் தெருவில் செல்வி ஸ்டோர் என்ற பாத்திரக் கடையை நடத்தி வந்தவர் ஆ.மாதவன். இரண்டு முறை அவரை நேரில் சென்று பார்த்திருக்கிறேன். தனது சிறுகதைகள் மற்றும் நாவல்கள் மூலம் வசீகரமான எழுத்தை உருவாக்கியிருந்தார் ஆ.மாதவன்.
சாலைத் தெருவின் சித்திரம் இந்த நாவலிலும் வருகிறது. சொல்லித் தீராத கதைகள் கொண்ட அந்த வீதியைத் தனது எழுத்துகளின் மூலம் அழியா சித்திரங்களாக்குகிறார் மாதவன்.
தமிழும் மலையாளமும் கலந்த நாவலின் உரையாடல்கள் இனிமையாக விளங்குகின்றன. கதாபாத்திரங்களின் நுண்மையான சித்தரிப்பும் ஆற்றின் போக்கையும் கரையோர வாழ்க்கையினையும் விவரிப்பதில் மாதவன் சிறப்பாகச் செயல்பட்டிருக்கிறார்.
புரிந்து கொள்ளப்படாத அன்பையும் உறவையும் அதிகம் எழுதியவர் ஆ.மாதவன். இந்த நாவலில் வரும் ஆறும் பாங்கியும் ஒன்று போலானவர்கள். இருவரும் உலகால் புரிந்து கொள்ளபடாதவர்கள். பயன்படுத்தப்பட்டவர்கள். இந்த நாவலை வாசிக்கும் போது மாதவனின் பாச்சி சிறுகதை மனதில் வந்து கொண்டேயிருக்கிறது. மிகச்சிறந்த கதையது. அதில் வரும் பாச்சி பாங்கியின் இன்னொரு வடிவமே
சிறந்த தமிழ் நாவல் வரிசையில் ஆ.மாதவனின் புனலும் மணலும் என்றும் தனியிடம் கொண்டிருக்கும்.
••
September 9, 2021
நாயனக்காரர்களின் வருகை
சஞ்சாரம் நாவல் குறித்த பார்வை
மதன்குமார்
நாவலின் பெயருக்கு ஏற்றாற்போல் இதில் வரும் கலைஞர்களும் இசையும் காலமும் சஞ்சாரம் செய்வதுடன் நம்மையும் அதனுடனே கொண்டு செல்கிறது.
இன்றளவும் மங்கள இசை என்றாலும் எந்த வித கோவில் திருவிழா, திருமணம், முக்கிய நிகழ்வுகள் எதுவென்றாலும் முதலில் ஞாபகம் வருவது நாதஸ்வர இசைதான். ஆனால் நாயனக்காரர்களைக் கலைஞர்களாகவோ நாதஸ்வரத்தை இசையாகவோ இப்போதெல்லாம் கருதுவதேயில்லை என்பதே வருத்ததிற்குரிய உண்மை. இதை மையமாகக் கொண்டு தான் நாவல் சஞ்சாரமாகிறது.

நாயனக்காரர்களின் இன்ப துன்பங்கள் (இன்பங்களைக் காட்டிலும் துன்பமே அவர்களை அதிகம் சூழ்கிறது), ஏமாற்றங்கள், வாழ்க்கை முறை, சமுக நிலை, பொருளாதாரம், இதைவிட ஒரு கலைஞனாக ஒருபோதாவது அங்கீகரிக்கப்படுவோமா என்ற அவர்களுக்குள் உள்ள ஏக்கம் இதை எல்லாம் கொண்டு நாவலை செதிக்கியிருக்கிறார் எஸ்.ரா
. நாயனக்காரர்கள் எப்படி எல்லாம் வரலாற்றில் இருந்திருக்கிறார்கள் அரச காலத்தில் எப்படிப் பேரும் பெறுமையும் பெற்று விளங்கினார்கள் இன்று எந்த நிலையில் இருக்கிறார்கள் என்று முன்னும் பின்னுமாகக் காலத்தின் ஊடே சஞ்சாரமாகிறது நாவல். இதனூடே ஊரோடி பறவைகளுக்கும் நாதஸ்வர இசைக்குமான தொடர்பு, கரிசல் மண்ணிற்கு நாயனக்காரர்களின் வருகை என்று ஒரு காட்சிகளும் விரிகிறது.
இதுமட்டுமின்றிக் கரிசல் மண்ணின் இயல்புகள் பண்புகள் அங்கு வாழ்ந்த மக்களின் பழக்கவழக்கங்களின் ஒன்றான திருடனுக்கு ஏழு வீட்டு சோறு போடுவதும் இன்றைய நிலையில் மக்களின் மாற்றங்களும், கரிசல் நிலத்தில் காற்று மற்றும் வெயிலின் ஆதிக்கம், புதியரகப் பருத்தி அறிமுகமும் அதனால் விவசாயத்தில் ஏற்படும் அழிவும், அங்குக் களைகளாக உள்ள சாதிய பிரிவினைகள், ஊருக்கும் மேச்சேரிக்கும் இடையே சாமியில் தொடங்கிச் சமூகத்தில் நிலுவும் அடக்குமுறை வன்முறை பிரிவினை அதனால் எழுப்பப்படும் சுவர், குழந்தைகளின் பள்ளிகளும் எதிரெலிக்கும் சாதிய அடக்குமுறை என்று அடித்தட்டு மக்களின் வாழ்க்கையை நாம் நேரில் காணும் உணர்வை ஏற்படுத்தியிருக்கிறார் (கர்ணன் படத்தில் வரும் சில காட்சிகள் இதிலிருந்து தான் உருவாக்கியிருக்கிறார்களோ என்ற எண்ணம் படிக்கும் போது மேலோங்கியது). சிறு பிள்ளையாய் இருக்கும் போது சிகரெட் அட்டைகளைத் தேடி தேடி எடுத்து வைத்து விளையாடிய நினைவலையையும் ஏற்படுத்தியிருக்கிறது இந்நாவல்.
நாயனக்காரர்கள் தேர்தல் நேரத்தில் எவ்வாறு எல்லாம் அலைகழிக்கப்படுகிறார்கள் எப்படி எல்லாம் அவமானம் படுத்தப்படுகிறார்கள், திருமண வீட்டில் ஒப்பந்தம் செய்யப்பட்ட பணத்தைத் தராமல் எப்படித் துரத்திவிடப்படுகிறார்கள், இவர்களை லண்டன் அழைத்துச் சென்று ஏமாற்றித் தரகர்கள் நன்றாக வாழ்வதையும் படிக்கும் போது சற்று மனம் கனத்துப் போகிறது. கலையை விருப்பம் இருக்கும் யார் வேண்டுமென்றாலும் கற்கலாம் என்பதற்கு ஒரு முன்னோடியாகவே நாயனக்காரர்கள் திகழ்கிறார்கள். தாழ்ந்த சமூகத்தில் பிறந்த கருப்பையா, வெளிநாட்டிலிருந்து வந்த வயிட், பார்வை இல்லாத தன்னாசி, போலியோவால் கால்கள் முடங்கிப் போன அபு என்று சாதி மதங்களைத் தாண்டி அனைவருக்கும் கற்றுக்கொடுத்து இருக்கிறார்கள். கதையில் வரும் ஊமை ஐயர் போன்ற ரசிகர்களும் மண்ணிலே இருக்கத்தான் செய்கிறார்கள்.
கோவில் திருவிழாவில் பக்கிரியை அடித்து அவமானபடுத்தப்படுவதால் ஆத்திரம் கொண்டு அங்குள்ள ஒரு பந்தலுக்குத் தீ வைத்துவிட்டு ரத்தினத்துடன் தப்பித்து ஊர் ஊராகச் சுற்றும் இந்த நாயனக்காரர்களின் நினைவுகளின் சஞ்சாரமே இந்த நாவல்.
நாமும் கரிசல் மண்ணிலும் நாயனக்காரர்களுடனும் ‘சஞ்சாரம்’ செய்யலாம் படித்து
.
மலையாளத்தில்
பஷீரின் திருடன் என்ற எனது குறுங்கதையை ஷாஜி மலையாளத்தில் மொழியாக்கம் செய்துள்ளார். Truecopythink இணைய இதழில் இந்தக் கதை வெளியாகியுள்ளது.
நன்றி ஷாஜி.


 
  S. Ramakrishnan's Blog
- S. Ramakrishnan's profile
- 658 followers
 


